Saturday, October 15, 2016

ரெமோ Vs றெக்க
கொஞ்ச நாட்களாக ஊரிலில்லாததால், நேற்றுதான் ரெமோ, றெக்க படங்களைப் பார்க்க நேர்ந்தது. அவை சொல்ல வரும் கருத்துகளையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ளாமல் படம் பார்த்தால் கூட அத்தனை போரடிக்கக்கூடிய, சவசவ என இழுவையான, அறுவையான, கடுப்பேற்றக்கூடிய படங்கள்தான் இரண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல!
ரஜினி, கமலுக்குப் பின்பான ஹீரோ வரவுகள் அனைவரிடமுமே எப்படியாவது ரஜினியாகிவிட வேண்டும் என்ற முனைப்புதான் இருக்கிறது. கமல்ஹாசன் போல ஆவது உண்மையில் எளிது. நல்லது. ஆனால், அதைவிடுத்து எல்லோருக்கும் குறி ரஜினியின் இடம்தான். அந்த மாசு இடம் தரும் போதை! ஆனால், அது அத்தனை எளிதான காரியமல்ல! அதற்கான தகுதியை, பயிற்சியை, ரசனையை வளர்த்துக்கொண்டோமா, இல்லையா என்பதையெல்லாம் யாரும் எண்ணிப்பார்ப்பதும் கிடையாது. அஜித், விஜய் இருவரின் பாதையுமே அதுதான். அதில் அவர்கள் இருவருமே ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள் எனலாம். ஆனால், அந்த நெருப்பில் விழுந்து மாய்ந்துபோன விட்டில் பூச்சிகள்தான் அதிகம். சிம்பு, விஷால், ஆர்யா, ஜீவா என உதாரணங்கள் ஏராளம். விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றோரெல்லாம் வேறேதாவது செய்துதான் தங்கள் இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாசு எல்லோருக்கும் கைகொடுப்பதில்லை. அதே வழியில் தப்பாமல் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது இப்போதைய சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஜோடி!
தமிழ்படத்துக்கு ரோப் ஃபைட்டை அறிமுகப்படுத்தியவனைக் கட்டி வைத்து உதைக்கலாம். அப்படிப் படுத்துகிறார்கள். றெக்க படத்தில், ராஜ்கிரண் போல இந்தப்பக்கம் ஒரு உஸ்ஸ், அந்தப்பக்கம் ஒரு உஸ்ஸ் என ஒரே குத்தில் ஃபைட்டர்களை பறக்க விடுகிறார் விஜய்சேதுபதி! ராஜ்கிரணாவது கையிலும், முகத்திலும் கிடுகிடுவென ஒரு கடுமையைக் காண்பித்துக்கொண்டிருப்பார். இவரோ வெயிலில் அலைந்துவிட்டு வந்து பேன் காற்றில் நிற்பது போல நிற்கிறார். ஸ்லோமோஷனில் இப்படி சண்டைக்காட்சிகளை எடுத்துவிட்டால் மாசு வந்துவிடுமென நினைக்கிறார்கள் போலும். முடியல! விஜய்க்கும், லட்சுமி மேனனுக்கும் இடையேயான காதல் காட்சிகளும், ரொமான்சும் தாங்கல! ரெண்டு டூயட்!! படுபாவி டைரக்டர் சார்.. உங்க மனசுல இரக்கமே கிடையாதா? ரொமான்சுக்கும், விஜய்சேதுபதிக்கும் பயங்கரமான வாய்க்காத்தகறாறு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் அடுத்த டைரக்டர் திலகங்களே! ஏதோ ஒரு பிளாஷ்பேக்கும், கொஞ்சம் செண்டிமெண்டும் வந்ததால், பிழைத்தோம்!
ரெமோ! ஓரிரு நகைச்சுவை காட்சிகள் எனில் பரவாயில்லை. படம் முழுதும் வரவிருக்கிற லேடி கெட்டப் என்றால் கொஞ்சம் சிந்திக்க மாட்டீர்களா ஐயா? சிவாவின் லேடி கெட்டப்பும், டப்பிங்கும் சகிக்கலை. இத்தனைக்கும் சிவா ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டும் கூட. வாய்ஸ் மாடுலேஷனை ரிப்பேர் பண்ண இன்னைக்கு டெக்னாலஜியெல்லாம் வேற இருக்குதாமே ஐயா!! றெக்கைய விட சவசவ என ஒரு கதை இதில். ஒரு பெண்ணைக் காதலிக்க வைக்கணும், அதுவும் பூரா ஏமாத்தி, பொய் சொல்லிச் சொல்லியே! எப்புடி.. நல்ல கதைல்ல.. அதுவும் கிளைமாக்சில் அந்தம்மா இவரைக் காதலிக்கத்தான் போகுது என்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த பாரெழவுதான். நியாயப்படி, நர்சு வேடத்தில் போய் மனசை மாத்தினதுக்காக அந்த நர்சைத்தான் ஹீரோயின் காதலிச்சிருக்கணும். பதிலாக, வானத்தில் பலூன் விட்ட சாதனைக்கான ஹீரோவைக் காதலித்துத் தொலைக்கிறார். அதைத் தவிர வேற எதுவுமே ஹீரோ செய்யவில்லை. எருமைச்சாணி போல இந்தப்படத்திலும் ஒரு டைரக்டர். படம் வேறு நன்றாக ஓடுகிறதாம்.. ஓடும்! ஓடத்தான் செய்யும்.. நம்மாளுகதான் எதுக்கு ஏன்னே தெரியாம இப்படித்தான் காரியம் பண்ணுவாங்க.. அப்பதானே நாலு பேரை பைத்தியமா அடிக்கலாம்.. அந்த டைரக்டர் இம்மா நேரத்துக்கு நம்மாலதான் படம் ஓடிகிட்டிருக்குன்னு நினைச்சு.. குமோனு இன்னொரு ஸ்கிரிப்ட் எழுதிகிட்டிருப்பார்.
ஒண்ணு மட்டும் நிச்சயம். ரஜினி மாதிரி ஆகிறாரோ இல்லையோ, அஜித், விஜயை விட சிவகார்த்திகேயன் தொடப்போற உயரம் அதிகம்னு மட்டும் நல்லா தெரியுது. எனக்கே இதைச் சொல்ல பிடிக்கலைன்னாலும், அதுதான் உண்மை. அதுக்கு ஒரு மூஞ்சி வேணும். அது இருக்கு இவர்கிட்ட! தைரியமா மாசு படங்கள் பண்ணலாம். எத்தனை டம்மி படங்கள் தந்தாலும், அஜித் போல ஒரு ஓபனிங் இருந்துகொண்டே இருக்கும்னு தோணுது. ஆனா, ரெமோ மாதிரி படங்கள் பண்ணாம, உண்மையில் நல்ல படங்களும் (நல்ல படங்கள்னா லிட்டரலா அப்படியே எடுத்துக்க வேண்டாம். ஆக்‌ஷன், காமெடினு உருப்படியா பண்றதை சொல்றேன்) பண்ணி அந்த இடத்துக்குப் போனா அவருக்கும் நல்லது, நமக்கும் மகிழ்ச்சி!
சிவகார்த்திகேயன் முன்னாடி விஜய்சேதுபதி மாசு படங்கள் பண்ணியெல்லாம் நிற்கவே முடியாது. மரியாதையாக இப்போதே விழித்துக்கொண்டு உருப்படியாக, சின்சியராக படம் பண்ணவில்லையெனில், போன இடம் புல்லு முளைத்துவிடும். விஜய்சேதுபதி மட்டுமல்ல, தனுஷ், விக்ரம், சூர்யா வகையறாக்களும் ஒழுக்கமாக படம் பண்ணுவது.. அவர்களுக்கு நல்லது! :-)

Monday, September 19, 2016

நாங்கள் ஆயில் பெயிண்ட் வரைந்த கதை!

வாட்டர் கலர் ஓவியங்களை மீண்டும் வரைய ஆரம்பித்திருக்கும் இந்தப் பொழுதில், பல வருடங்களுக்கு முன் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. நான் சென்னைக்கு வந்த 1998ல், அம்பத்தூரிலிருக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது ரஜினிகாந்த் எனும் ஒரு நண்பர் என்னோடு கொஞ்ச காலம் பணிபுரிந்தார். ஒத்த வயது, வாடாபோடா அளவுக்கு மிக நெருங்கிய நட்பு எனினும், ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்படி அழைக்க முடியாமல் ‘நீங்க நாங்க’ என்றே பழகுவதாகவே சில நட்புகள் அரிதாக அமைந்துவிடுகின்றன. மேற்படிப்பு/ வேறு வேலை எனும் காரணங்களால் அவர் விரைவிலேயே அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டாலும் அவர் சென்னையில் இருந்த மேலும் சில ஆண்டுகளுக்கு, எங்கள் நட்பு வாரயிறுதிகளில் தொடர்ந்தது. அதற்கு ஒரே காரணம், எங்கள் இருவருக்குமே ஓவியத்தில் இருந்த மிகுந்த ஈடுபாடுதான்! ஓவியத்தைப் பொறுத்தவரை இருவருமே இருந்தது ஒரே நிலைமையில்தான்! குடும்பச்சூழலும், பொருளாதார நிலைமையும் தகுந்த பயிற்சி வகுப்புகளுக்கு சென்று ஓவியம் கற்றுக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பளித்திருக்கவில்லை. இருவருமே சிறு வயதிலிருந்து சுயமாக வரைந்து பழகியவர்கள். எனக்கு பென்சில் போர்ட்ரெய்டுகள் வரைவதில் மிகவும் ஆர்வமுண்டு. குறிப்பாக பெண்கள். நிறைய பெண்களை வரைந்திருக்கிறேன். பெரும்பாலும் சரியாக வந்துவிடும், ஆனாலும் சொதப்பலாகி நிறைய குப்பைக்குப் போவதுமுண்டு. கற்கும் நிலையிலிருப்போருக்கு போர்ட்ரெய்டு அத்தனை எளிதான காரியமுமல்லதான். ரஜினிக்கோ போர்ட்ரெய்டு சுத்தமாக வரவில்லை. என் மேல் அதற்காக உரிமையோடு கோபித்துக்கொண்டதும் கூட உண்டு. ஆனால், நான் வியக்கும் வகையில் அவருடைய மற்ற ஓவியங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக கருப்பு, வெள்ளையில் அவர் உருவாக்கும் ஹைலைட்கள் பிரமிப்பாக இருக்கும். கோவில் சிலைகளை வரைந்தால் போட்டோ எடுத்ததைப் போலிருக்கும். ஷேடிங், பென்சில் வகைகள் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். இருவருமே, தங்களது ஓவியத்திறமைகளை பகிர்ந்துகொண்டு, பயிற்சி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் நினைத்துப் பழகவில்லை. ஆயினும் எங்கள் நட்புக்குக் காரணம் ஓவியம்தான். சென்னையின் பிரபல ஓவியக் கேலரிகளுக்கு சென்று, அங்குள்ள ஓவியங்களை ஏதோ பெரிய ஓவியர்களைப் போல உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்போம். ‘ஆதி, தூரத்திலிருந்து பார்த்தால் கடல் அலையடிக்குது.. எப்படிப் பண்ணியிருக்கான் பாருங்க அந்த ஆர்டிஸ்ட், ஆனா பக்கத்துல போய்ப் பார்த்தா சால்வெண்ட் எதுவும் யூஸ் பண்ணாம பெயிண்டை அப்படியே கொத்தனார் சாந்து அப்புறாப்பல அள்ளி அப்பி வைச்சிருக்கான். இந்த ஒரு படத்துக்கே கிலோ கணக்குல பெயிண்ட் ஆகியிருக்கும் போலியே..’ அப்படின்னு காதைக் கடிப்பார். இப்படியே பேசிக்கொண்டிருப்போம். மற்றபொழுதுகளில் ஏதாவது சினிமா, அது இதென அரட்டை அடித்துப் பொழுதுபோக்குவோம். எப்போதாவது சேர்ந்து படங்கள் வரைவதும் உண்டு. ஒரு நாள், ’பென்சில் போதும் ஆதி. நாமதான் பயங்கர திறமைசாலிகள் ஆயிட்டோமே! இனி, பெயிண்டிங்ல இறங்குவோம்’ என்றார். அதுவும், வாட்டர் கலர், அக்ரிலிக் போன்ற ஸ்டூடண்ட் சமாச்சாரமெல்லாம் வேண்டாம், இறங்கினா நேரா அது ஆயில்பெயிண்ட்தான் என இருவரும் தீர்மானித்தோம். வாட்டர்கலர் என்பது ஸ்டூடண்ட்ஸ் சமாச்சாரம் என்று அன்று நான் நினைத்துக்கொண்டிருந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஆனால், ஆயில் பெயிண்டிங்குக்கு என்ன ஆயிலை பயன்படுத்துவார்கள் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட எங்களுக்குத் தெரியாது. ஒரு வேளை, ’தேங்காயெண்ணை, விளக்கெண்ணெய் மாதிரி ஏதும் இருக்குமோ’ என்று ஜோக்கடித்த ஞாபகம் கூட இருக்கிறது. யாரைக் கேட்பது? அப்போது, இண்டெர்நெட் அத்தனைப் பழக்கத்துக்கு வரவில்லை, அல்லது நாங்கள் அந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை! நேரடியாக பெயிண்டிங் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கே போய் நைஸாக விசாரித்துக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டு அண்ணாநகர் போனோம். கெத்தை விட்டுடக்கூடாது, தெரிஞ்சது போலவே நடந்துகொண்டு அவன் சொல்வதிலிருந்தே பாயிண்டைப் பிடித்து பொருட்களை வாங்கி வருவதாக திட்டம். ஆயில் கலர்கள், பிரஷ்கள், கேன்வாஸ்கள் போன்றவற்றை விலை அதிகமானதாகப் பார்த்து இரண்டு செட்டுகள் வாங்கிக்கொண்டோம். விலை அதிகமென்றால் நல்லதாகத்தானே இருக்கும் எனும் லாஜிக்! இனி மீடியம் வாங்க வேண்டும்! மிக்ஸ் பண்ற ஆயில் கொடுங்க என்று கேட்டபோது, எவ்வளவு வேண்டும் என்றார் கடைக்காரர். எவ்வளவு கேட்பது என்று கூட தெரியவில்லை. என் முகத்தைப் பார்த்துக்கொண்டே, ‘ஒரு ரெண்டு லிட்டர் கொடுங்க’ என்று சொல்ல வாயைத் திறந்த ரஜினியை அமுக்கினேன். ரொம்ப சமாளிப்பதாய் நினைத்துக்கொண்டு ’இந்த பெயிண்டுக்கு எவ்ளோ தேவையோ அதைக் கொடுங்க’ என்று நான் சொல்லும்போதே ரீல் அந்துவிட்டது. கடைக்காரர் சிரித்துக்கொண்டே, ‘அது பெயிண்டர்ஸைப் பொறுத்து ஆகும் சார்’ என்று சொல்லிவிட்டு, ஒரு 50 ml பாட்டில் லின்சீட் ஆயிலை எடுத்துக்கொடுத்தார். லின்சீட் ஆயில் எனும் பெயரை டக்கென படித்து மனப்பாடம் செய்துவிட்டு, எவ்வளவு ஆச்சுனு கேட்கும்போதே.. கடைக்காரர்.. ஆயில் பெயிண்ட் பண்ண சால்வெண்டும் ரொம்ப முக்கியம்ங்க, வெளியில மறக்காம தின்னர் வாங்கிக்குங்க என்றார். மானம் போனாலும், பரவாயில்லை என அந்தச் செய்தியையும் வாங்கிக் காதுகளில் போட்டுக்கொண்டு வெளியே வந்து பெருமூச்சு விட்டுக்கொண்டோம். பின்னர், எங்கள் எஞ்சினியரிங் மூளையைப் பயன்படுத்தி, எந்தப் பெயிண்டையும் அப்படியே ராவாக அடிக்கமுடியாது. மிக்ஸிங் வேண்டும். மிருதுவாக்கவும், பரவும் தன்மைக்கும் ஒரு மீடியம் வேண்டும்.. தண்ணீர் இதோடு மிக்ஸ் ஆகாது. அதனால்தான் லின்சீட் ஆயில்! அப்படின்னா, சால்வெண்ட் எதுக்கு? பேலட், பிரஷ் போன்றவற்றை உடனடியாக கழுவுவதற்கு என்று புரிந்தது. அதோடு கலர், ஆயிலோடு கொஞ்சம் தின்னரையும் கலந்துகொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பெயிண்ட் உலர நேரமாகலாம் என்றும் கூட யோசித்தோம்.! எல்லாம் தயார், இனி வரைய வேண்டும்! ஆல் தி பெஸ்ட் சொல்லிக்கொண்டு, அவரவர் வீட்டுக்குப் போயாயிற்று. என்ன சூழலோ என்னால் உடனே களத்திலிறங்க முடியவில்லை. அன்றிரவே அரக்கப்பரக்க ஓடிவந்தார் ரஜினி! ‘ஆதி சம்திங் ராங். பெயிண்ட் காயவே இல்லை’ ‘எப்ப வரைஞ்சீங்க?’ ‘சாய்ங்காலம் வரைஞ்சது..’ அதிர்ச்சியாக இருந்தது. வாட்டர் கலர் அதிகபட்சம் ஒரு லேயர் 10 நிமிடத்தில் காய்ந்துவிடும். ஆயில் என்றால் ஒன்றிரண்டு மணி நேரத்திலாவது காயவேண்டாமா? இது ஏதோ சிக்கல்! ‘தின்னர் விட்டிங்களா? இல்லையா?’ ‘பர்ஸ்ட் லேயர் ரொம்ப டார்க்கா இருந்ததால, தின்னர் விட்டா மட்டும்தான் கலரே ஒரு ப்ளோவுக்கு வந்தது. அதனால நல்ல தாராளமா விட்டிருந்தேன்..’ ஒரு வேளை ரொம்ப தாராளமாக விட்டிருக்கக்கூடாதோ.. தின்னர் எவாப்ரேட் ஆகும். அதனால் அதை நிறையக் கலந்தது இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கமுடியாது என உறுதியாக சொன்னது எஞ்சினியரிங் அறிவு! ‘எதுக்கும் காலை வரைக்கும் பார்ப்போம்! நல்லா காத்து படறாப்பல வைங்க’! மறுநாள் காலையிலும் அது காயவில்லை. மாலை அவர் வீட்டுக்கே போய்விட்டேன். அவர்கள் வீட்டு நபர்கள் யாரிடமும் எந்த பரபரப்பையும் காண்பித்து விடாமல் கவனமாக இருவரும் நடந்துகொண்டோம். குடுகுடுவெனப் போய் பெயிண்டிங்கைப் பார்க்கும் ஆவலை அடக்கிக்கொண்டு அவர் அம்மாவிடம் நிதானமாக பேசிவிட்டு, காபியெல்லாம் வாங்கிக்குடித்துக் கொண்டிருந்தேன். மனதுக்குள் ஒரே பரபரப்பு! பிறகு, அவர் அறைக்குப் போய் பெயிண்டிங்கைப் பார்த்தேன். இந்தப் பிரச்சினையில், படத்தைச் சரியாக வரைந்திருக்கிறாரா என்று கூட பார்க்கவில்லை. தொட்டுப்பார்த்தால், பெயிண்ட் விரல்களில் வந்தது, தொட்ட இடத்தில், கேன்வாஸ் வெள்ளையாகத் வெளிப்பட்டது. தொட்டுத்தொட்டுப் பார்த்து அதுவே ஒரு டிசைனாக மாறியிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இரண்டாம் நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், பத்தாம் நாள்.. ஊஹூம்! பதினொராவது நாள். மாலையில் ஒரு டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த பெயிண்டிங்கை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தோம். திடுமென ஞாபகம் வந்து, கேட்டேன். ’ஆமா,அந்த பெயிண்டிங் என்னாச்சு ரஜினி?’ ‘அட விடுங்க.. இன்னும் பிசுபிசுத்துட்டு கிடக்கு அது!’ இப்போது இந்த இண்டெர்நெட் யுகத்தில், புரிகிறது எல்லாம்! ஆயில் பெயிண்டிங்கில் சரியான ஆயில், சால்வெண்ட் கலவை காயவே ஒன்றிரண்டு நாட்களாகும். கொஞ்சம் கலவை சரியில்லாவிட்டால், அல்லது படைப்புத் தேவைக்காக சால்வெண்ட், ஆயில் பங்கு வேறுபட்டால், ஓவியங்கள் காய ஓரிரு வாரங்கள் ஆகலாம். முழுமையான உலரும் காலம் உண்மையில் மாதங்களில் இருக்கும்! வெட் ஆன் வெட் முறையிலேயே பெரும்பாலும் ஆயில் பெயிண்டுகள் வரையப்படுகின்றன. அன்று நாங்கள் செய்தது எதுவுமே தவறில்லை. பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தெரியாததைத் தவிர! ரஜினி இன்று என்னோடு தொடர்பிலில்லை, ஆனால், இப்போது இதை நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வண்ணங்களோடு விளையாடிக் கொண்டுமிருப்பார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்! *
சமீபத்தில் வரைந்த ஒரு வாட்டர்கலர் ஓவியம். *

Sunday, July 24, 2016

கபாலி -விமர்சனம்


ரஜினியை எனக்குப் பிடிக்காது எனினும், கபாலி ஒரு வெற்றிகரமான, தரமான படமாக இருக்கவேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டேன்.

ரஜினியை ஏன் பிடிக்காது? ரஜினியின் திரை பிம்பத்தை யாருக்குத்தான் பிடிக்காது, நானும் விதிவிலக்கல்ல. எனக்கும் திரை ரஜினியை ரொம்பவே பிடிக்கும். ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், இந்தியத் திரையுலகில் வேறு யாருக்கும் வாய்க்காதது. சில அசாத்தியமான கதாபாத்திரங்களுக்கு உயிரூட்ட இப்படி ஒரு நடிகன், தேடினாலும் கிடைக்கமாட்டான்தான்.. ஆனால்?

காலம் எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் உச்சத்தில் கொண்டு போய் வைத்து அழகு பார்க்கும். அப்படி உச்சத்திற்குப் போனவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதை வைத்துத்தான் வரலாற்றில் அவர்கள் பெயர் எழுதிவைக்கப்படுகிறது. அரசியலுக்கு வந்தோ, கைக்காசைப் போட்டோ ஊர், உலகத்துக்கு உருப்படியாய் ஏதும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கும் வகையல்ல நான். ஆயினும், தான் இயங்கும் சூழலில் எத்தனை அறத்தோடு ரஜினி நடந்துகொண்டார்? திரைநுட்பங்களுக்கான கல்வி, பயிற்சியின்மை, தயாரிப்புக் குறைபாடுகள், கூட்டியக்கம், திரைமறைவு மாஃபியாக்கள், சிறிய படங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், விநியோகஸ்த வழிமுறைகள், தியேட்டர் குறைபாடுகள், கட்டணம் என தமிழ்த் திரைச்சூழலிலிருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுள், ஏதேனும் ஒன்றைச் சரி செய்ய, ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்கிறாரா என்பதுதான் என் கேள்வி!

ஒரு பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு சூபர்வைசர், இரவில் தனக்குக் கீழ் வேலை செய்யும் பத்து பணியாளர்களுக்காக நல்ல குடிதண்ணீரை, தனது நிர்வாகத்திடமிருந்து சற்றேனும் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டாவது கேட்டு வாங்கித் தருகிறான். பத்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு வாட்ச்மேன், ஆட்களின் வருகையை மட்டும் கண்காணிக்கும் தன் பணியையும் மீறி, தன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் வளாகத்துக்குள் யாரும் குப்பை போடாமல் கண்காணித்துக் கொள்கிறார்.

தமிழ்த் திரைத்துறைக்கு ரஜினி என்ன செய்தார் என்று கேட்பதை விட, குறைந்த பட்சம் தன் படங்கள் சார்ந்தாவது அறத்தோடு நடந்துகொண்டாரா என்று கேட்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்! மேற்சொல்லப்பட்ட குறைபாடுகள் அனைத்துக்கும் இவர் படங்களே ஊற்றாக அமைகின்றன என்று கூட சொல்லலாம். தன் படத்தை தயாரித்தவர்களை, விநியோகிப்பவர்களை, ரசிகர்களை, கட்டணச் சிக்கல்களை கூட கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாத, அல்லது விரும்பாத ஒரு நபராகத்தான் ரஜினி இருந்து வருகிறார். பிறகெப்படி பிடிக்கும்?

எனில், கபாலி, வெற்றிகரமான ஒரு படமாக வரவேண்டும் என ஏன் மிக விரும்பினேன்? ரஞ்சித்! ‘மெட்ராஸ்’ ரஞ்சித் ஒரு அசாத்தியமான இயக்குநர். ரஞ்சித் இன்னும் பல சிறப்பான படங்களைத் தருவார் என.. இப்போது, கபாலிக்குப் பிறகும் கூட எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ரஞ்சித்தை இந்தப்படம் இன்னும் உயரத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என விரும்பினேன், உள்ளூர அரசியல் பொதிந்துள்ள அவர் படங்களில், இன்னும் வீரியமாக வெளிப்பட அது களமமைத்துக் கொடுக்கும் என்பதால். கண்டெண்ட் மட்டுமல்லாது காட்சி மொழியும் கைவரப்பெற்ற கலைஞன் ஜெயிக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.

ஆனால், அது நடக்கவில்லை.

கபாலி? ரஞ்சித்துக்கு ரஜினியை வைத்துப் படம் பண்ணுமளவுக்கு அனுபவம் இல்லையோ என்பதுதான் என் ரசிக மனத்துக்குத் தோன்றும் முதல் சந்தேகம்! முதலானது ஸ்க்ரிப்ட். சிதைந்து கிடக்கும் கபாலியின் குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதா, மாஃபியாக் கும்பல்களுக்கிடையேயான போராட்டமா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையா என ஸ்க்ரிப்ட் எதை மையமாகக் கொண்டு இயங்குவது என்பதிலேயே தெளிவில்லை. எதுவுமே இயல்பாக ஒன்றிணையவே இல்லை. எல்லாவற்றிலும் போதாமை. ஒரு ஸ்டாரை வைத்து படம் செய்கையிலிருக்கும் நேரமின்மை, அழுத்தம் இவற்றை சரிவரக் கையாள இயலாமல், ‘மெட்ராஸி’லிருந்த அந்த அட்டகாசமான ஃப்ளோவை கோட்டை விட்டிருக்கிறார். அடுத்து நடிகர்கள். ரஜினியைத் தவிர்த்து ராதிகா ஆப்தே, தன்சிகா இருவரும்தான் பொருத்தமாக இருந்தனர். சிறப்பான நடிப்பும் கூட! ஆனால், இவர்களது கதாபாத்திரங்கள் கூட சிறப்புற வடிவமைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். தவிர, அத்தனை நடிகர்களும் மகா சொதப்பல், நாசர் உட்பட! முக்கால்வாசி படம் வரை ரஜினிதான் ஹீரோவா, அல்லது ஜான்விஜய் ஹீரோவா என்று தெரியாதபடிக்கு படம் முழுவதும் ரஜினியை விட அதிகமாக ஜான் விஜய்தான் இருக்கிறார். அதுவும் ரஜினி வரும் காட்சிகள் அனைத்திலும் வயிற்றைத் தள்ளிக்கொண்டு, பாதித் திரையை மறைத்துக்கொண்டு, டிவி சீரியல் போல வளவளவென பேசிக்கொண்டு.. சகிக்கவில்லை. தினேஷ், கலையரசனெல்லாம் ப்ப்பா! சீன வில்லன்களைக் கேட்கவே வேண்டாம், அழகாக மைதா மாவு பொம்மை போல இருக்கிறார்கள்.

காட்சி அழகியல் எல்லாம் எங்கு போயிற்றோ தெரியவில்லை. ரஜினிக்கு.. அதுவும் கேங்ஸ்டர் பாத்திரத்தில் பில்டப் எப்படி இருக்க வேண்டும்? இரும்புக் கதவுகள் விலகுகையில், டைட் குளோஸப்பில் ரிவீல் ஆகவேண்டிய ரஜினியை, அவசரக்குடுக்கை மாதிரி அதற்கு முன்பாகவே நான்கைந்து ஷாட்கள் அதுவும், கீ சப்ஜெக்டாக இல்லாமல் காண்பித்தாகிவிட்டது. டைட்டில் போடும் போது முழ நீளத்துக்கு என்ன கேங்? யார் கேங்ஸ்டர்? யாரார் என்ன செய்கிறார்கள்? பேர் என்னங்கிறது உட்பட ஓவர்லாப்பில் ரஞ்சித் சொல்லிவிடுகிறார். அடுத்த காட்சியிலேயே, ரஜினி சிறையிலிருந்து வந்ததும், ஜான்விஜய் ரஜினிக்கு அதையே கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப்போல சொல்கிறார். ’எல்லாம் 43 கேங் வைச்ச சட்டம்தான். கட்டை, கட்டி எல்லாம் அவங்க கண்ட்ரோல்லதான் இருக்கு, நாமல்லாம் ஜாக்கிரதையா இருந்துக்கணும்ணா’ என்கிறார். யார்கிட்ட?  கேங்லீடர் ரஜினிகிட்டேயே! ‘துப்பாக்கில்லாம் பாத்திருக்கியாண்ணா?’ என்று மட்டும்தான் கேட்கவில்லை.

உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரிந்ததும், ரஜினி பரபரப்பாக ராதிகாவை தேடிப்போகிறார். ஒரு முகவரி கிடைக்கிறது. ஒரு பில்டிங் வாசல்.. ட்ராலி ஷாட். கண்ணாடியை கழற்றுகிறார். அங்கு ராதிகா இல்லை. சரி அடுத்த முகவரி. அங்கும் ஒரு பில்டிங்.. மீண்டும் ட்ராலி ஷாட். மீண்டும் ரஜினி கண்ணாடியை கழற்றுகிறார். அங்கும் ராதிகா இல்லை. சரி அடுத்த முகவரி.. அடுத்த பில்டிங்.. மீண்டும் ட்ராலி ஷாட்.. மீண்டும் கண்ணாடி.. இதுவாய்யா உங்க பில்டப்பு?

அரசியல்? பெரிய ஏமாற்றம்! சரி, வசனங்களிலாவது வைத்துத்தொலைப்போம் என முடிவெடுத்தது போல, கிளி, கூண்டு, கோட்டு, டவுசர்னு என்னன்னவோ பேசுகிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் யார் யாரோ எப்போது வேண்டுமானாலும் பேசுகிறார்கள். கிளைமாக்சில் இரண்டு எதிரெதிர் கேங் லீடர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். பரபரப்பான காட்சிகளோ, சண்டையோ வரவேண்டிய இடத்தில், வில்லன் கிஷோர் வருகிறார். பல முறை கொல்ல முயற்சித்தும், கொல்ல முடியாத எதிரி அவர் எதிரிலேயே வந்து நிற்கும் காட்சி. ‘குறைப் பிரசவமானாலும், சுகப் பிரசவமாத்தானேடா பொறந்துகிடந்தோம்’னு வடிவேலு ஜோக்கில் வருவது போல, சண்டை போட வேண்டிய இடத்தில், சம்பந்தமில்லாமல் ’நாந்தாண்டா உயர்ந்த சாதி’ என்று வர்க்கப் பிரச்சினைகளை பேசுகிறார் கிஷோர்! இந்த லட்சணத்தில், கடைசியில் இலக்கிய கிளைமாக்ஸ் வேற!

’கபாலி ரஜினி படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை’ என்பதாக யாரோ பேஸ்புக்கில் எழுதியிருந்தார்கள். அதைத்தான் நானும் இவ்வளவு நேரம் சுத்தி சுத்தி எழுதியிருக்கிறேன். எது எப்படியோ, ரஜினியின் அழகான ஸ்டைலிஷ் ஷாட்களுக்காக, ஒரு தடவை பார்த்துவையுங்கள்!

Thursday, June 9, 2016

இறைவிதலைப்பும், விளம்பரங்களும் ஏதோ பெண்ணியம் பேசும் படம் என்றதொரு ஹைப்பை உருவாக்கிவைத்திருந்ததால் இயல்பாகவே, முன்னப்பின்ன இருந்தாலும் அவசியமானதொரு படம்தான் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஆனால் படம் அப்படி இல்லை.

எனக்கென்னவோ, இப்படித்தான் நடந்திருக்குமென தோன்றுகிறது. பெண்தெய்வ சிலைத்திருட்டு, வெளிநாட்டுக்குக் கடத்தல், அதனால் சில ஆண்களுக்குள் ஏற்படும் சிக்கல்கள், கிரைம், திரில்லர் என்பது போல ஒரு கதை பண்ணிவிட்டு அதற்கு ‘இறைவி’ என்ற தலைப்பை அகஸ்மாத்தாக வைத்துவிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தலைப்பில் பிடித்தது சிக்கல்! இந்தத் தலைப்போடு, ஆண்களுக்குள் ஏற்படும் சிக்கல்களுக்கான சஸ்பென்ஸ் பின்னணிக்குச் செல்லச்செல்ல.. ‘அட, இங்க பாருடா, களி செய்ய உக்காந்தா கூழ் ரெசிபியும் சேத்து கிடைக்குது’ என்ற ஆச்சரியத்துடன் பெண்ணிய மேட்டர் சிக்குகிறது. ஆச்சுடா என்பது போல டைட்டிலுக்கு முன்பான சில காட்சிகள், படம் முடிந்தபிறகு ‘மனிதி’ பாடல், அந்தப் பெண் ஓவியர் கேரக்டர், அங்கங்கே அண்டர்லைன் முதலானவற்றைச் சேர்த்து ‘இறைவிக்கு இறைவியுமாச்சு, பெண்ணியத்துக்கு பெண்ணியமுமாச்சு, படைப்பாளிக்கு படைப்பாளியுமாச்சு’ என்று திருப்தியாக படத்தை எடுத்துமுடித்துவிட்டார்!

முதலில் இந்தப் படத்தின் ஆண்கள் யாரும் பெண்ணியத்துக்கு எதிரானவர்களே அல்ல, கடைசியாக அண்டர்லைன் செய்யப்பட்டதால் வந்த ராதாரவி கேரக்டர் தவிர. அது கூட படத்தில் எங்குமே காட்சியாக்கப்படவில்லை. மேலும் அந்த காரெக்டர் தன் தவறுக்காக வருந்தி இறுதிக்காலத்தில் கோமாவில் கிடக்கும் மனைவியை கண்ணும் கருத்துமாய்க் கவனித்து, சிம்பதியை வேறு சேர்த்துக்கொள்கிறது. பிற முக்கிய காரெக்டர்களான எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபிசிம்மா, விஜய்சேதுபதியின் சித்தப்பாவாக வரும் ‘கிரேசி சீனு’ மோகன் உட்பட அத்தனை பேரும் தாம் சார்ந்த பெண்களை மதிப்பவர்களாக, நேசிப்பவர்களாவே இருக்கின்றனர். இவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஒரு பெண்ணியக் கதையை சொல்லமுடியும். இந்தக் காரெக்டர்கள், அவரவர் வாழ்வில் ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, அவரவர் குணப்பாங்கு சார்ந்து சில தவறுகளைச் செய்பவர்களாக இருக்கின்றனர். அதிலிருந்து உணர்ந்து மீண்டு வருவதும் கூட அவர்களின் முன்னெடுப்பாகவே இருக்கிறது. ஆக, கொஞ்ச நேரமே ஊடே வரும் இந்தப் பெண்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்? அச்சுப்பிசகாத நம் சமூகப் பெண்களைப் போலவே ஆண்களின் தோளில் ஏறி சவாரி செய்ய எண்ணுகிறார்கள். இந்த ஆண்களால் அந்தச்சவாரியில் சற்றே பிசகு ஏற்படுவதால், ‘ஆச்சுடா’ என்று ஏதாச்சும் பெண்ணிய நடவடிக்கைகள், முடிவுகள் மேற்கொள்கிறார்களா என்கிறீர்களா? அப்படியெல்லாம் இல்லை, சும்மனாச்சுக்கும் சினிமா டயலாக் பேசுகிறார்கள், அவ்வளவுதான்!

பெண்ணியத்தை விட்டுவிட்டு ஒரு திரில்லராக இந்தப்படம் எப்படி இருக்கிறது என்று பார்த்தாலும், சரியில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. இடைவேளையின் போது அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக கொடூரமாக ஒரு கொலையைச் செய்கிறார் சேதுபதி. அதுவும் அப்பட்டமாக காட்சிப்படுத்தப்படுகிறது. அதோடு கிளைமாக்சில் அற்பக் காரணங்களுக்காக தம்பி போல பார்த்துவந்த பாபியை அடித்தே கொல்கிறார். அந்தக் கேரக்டரின் டிசைன்தான் அப்படி என்று நினைத்தால் அதைவிட அற்பமாக அண்ணனாய் மதித்து வந்த சூர்யா கையால் சுடப்பட்டு இறக்கிறார். மேற்சொல்லப்பட்ட மனிதிகளுக்கு துன்பம் தருவதற்காகத்தான் இதெல்லாம்! சுபம்!

’இன்னைக்குல்லாம் யார் சார் சாதி பாக்குறா?’ பார்ப்பனீயம் ஒழிந்துவிட்டது என்று சொல்வது எப்பேர்ப்பட்ட உண்மையோ அப்பேர்ப்பட்ட உண்மைதான் பெண்களும் சமூகவிடுதலை பெற்றுவிட்டார்கள் என்று சொல்வதும்! தாய்க்காகவும், தாரத்துக்காகவும், தங்கைக்காகவும், தோலை செருப்பாத் தச்சுப்போட்டு உழைக்கும் ஆண்களை எனக்குத் தெரியும்யானு இந்தப் படத்தைப் பற்றிப்பேசுகையில் சம்பந்தமில்லாமல் ஆரம்பிக்கிறார்கள் சிலர். பெண் சமூகவிடுதலைக்கான தூரமும், காலமும் இன்னும் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. எளிதான காரியமாக இருந்திருந்தால் ஈரோட்டுக்காரனே செய்திருப்பான், அவனால் சில விலங்குகளை உடைக்க மட்டும்தான் முடிந்தது. இன்னும் கட்டுண்டு கிடப்பதாகவே கற்பனை செய்துகொண்டிருக்கும் பெண்களுக்கான நிஜ விடுதலையை, ஈரோட்டுக்காரனில்லை, வேறு எவன் வந்தாலும் தரமுடியாது. அது அவர்களின் விசாலமான பார்வையாலும், விடுதலையினால் விளைவதென்ன எனும் புரிதலாலும் மட்டுமே கிட்டும். கலையும், கல்வியும் அந்தப் பார்வையை, புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும், ஆனால் நம் சூழலில் அது அவ்வளவு லேசில் ஆகிற கதையல்ல!

Monday, June 6, 2016

18வது சென்னைப் புத்தகக் கண்காட்சி (2016)ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறும் இடத்தைப் பொறுத்தவரை ஏதாவது பஞ்சாயத்து இருந்துகொண்டேதான் இருக்கும் போலும். இந்த ஆண்டு தீவுத்திடல் என்றபோதே ஒரு மலைப்பு தோன்றியது நிஜம்தான். போரூர் எனும் வெளிநாட்டிலிருந்து விசாவெல்லாம் வாங்கிக்கொண்டு செல்லத் தயாராக வேண்டுமே என்ற மலைப்புதான், வேறென்ன? போலவே காட்சி நுழைவாயில் கடற்கரைச்சாலை மட்டுமே என்ற அறிவிப்பு எங்குமே கண்ணில் படவில்லை. நம்மைப் பற்றித் தெரியாதா, சரியாக அண்ணாசாலை தீவுத்திடல் வாயிலுக்கேச் சென்றேன்! நுழைவாயிலே இல்லையாம், இதில் ஜபர்தஸ்தாக புத்தகக்காட்சியின் தோரணவாயில் இருந்தது அண்ணாசாலை நுழைவிடத்தில்! அங்கேயும் கூட அறிவிப்பு எதுவுமே இல்லை. என்னைப்போலவே நூற்றுக்கணக்கான பைக்வாசிகள், கால்நடைக்காரர்கள், பத்தாத குறைக்கு பெண்டாட்டி பிள்ளைகளுடன் அண்ணாசாலை நுழைவு வழியாக அரைகிலோ மீட்டர் நடந்துசென்று, ’என்ன எங்கு பார்த்தாலும் காராக இருக்கிறது, புத்தகக் கண்காட்சியையே கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லையே’ என அதிர்ந்து திரும்பி, மீண்டும் அண்ணாசாலைக்கே வந்து போலீஸ்காரர்களிடம் ’கிணத்தைக் காணோமே’ என்கிற மாதிரி விசாரித்து பின் மீண்டும் கடற்கரைச்சாலைக்குப் பயணித்தைத் துவக்கினர்.

***

ஜனவரியின் அருமை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இத்தனைக்கும் சர்வ ஜாக்கிரதையாக மாலை 5 மணிக்கு மேல்தான் நுழைந்தேன் அரங்கிற்குள். மக்கள் வியர்த்து வழிந்த வண்ணமிருந்தனர். சில தெருக்களில் சுற்றியடித்து, ஓய்ந்துபோன நான் கூட ’மறந்துபோய் மதியப்பொழுதில் நுழைந்துவிட்டோமோ’ என, வியர்வையைத் துடைத்து கைக்குட்டையைப் பிழிந்துவிட்டு வாட்சைப் பார்த்தபோது மணி எட்டு.

***

1999 முதலாகத் துவங்கி ஒரு ஆண்டு கூட தவறாமல் வருகிறேன். இது எனக்கு 18வது ஆண்டு. அதுவும், சில ஆண்டுகளாக சர்வீஸ் துறையிலிருப்பதால் தவறவிட வாய்ப்பு மிக இருந்தும் எப்படியோ தப்பிவருகிறேன். துவக்க கால காயிதேமில்லத் கல்லூரி வளாகத்தின் போது ஆர்வமிகுதியில் ஒவ்வொரு அரங்காக சுற்றிவருவது, ஒவ்வொரு புத்தகமாக நோண்டிப்பார்ப்பது, விஐபிகளை விரட்டி விரட்டி வேடிக்கை பார்ப்பது (கனிமொழி மிக சுவாதீனமாக தன் தோழியருடன் உலாவிக்கொண்டிருப்பார்), சிக்கியவர்களிடம் கையெழுத்து வாங்குவது (ஜெயமோகன் புக்கில் சாருவிடம் கையெழுத்து வாங்கியதும் உண்டு) என்றெல்லாம் நடக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, வாக்கிங் செல்வதற்காகத்தான் கண்காட்சிக்கே செல்கிறேனோ எனத் தோன்றுகிறது. சுமார் 5 நீநீநீள நீளமான தெருக்களில் ஸிக்ஸாக்காக நடக்க ஆரம்பித்து எல்லைக் கோட்டைத்தொட்டால் கால்வலி பின்னுகிறது! இடையிடையே உயிர்மை, காலச்சுவடு, விகடன் போன்ற விஐபி ஸ்டால்கள் என குறிப்பிட்டு இல்லாமல், அகஸ்மாத்தாக ஏதாவது இரண்டு மூன்று கடைக்குள் புகுந்து, எதையாவது பார்த்து, இயன்றால் எதையாவது வாங்கவேண்டும், அவ்வளவுதான், நோக்கம்!

இம்முறை நாஞ்சிலின் கற்றது கைம்மண்ணளவு, காயத்ரியின் மயக்குறு மகள், தமிழ்ஸ்டுடியோ படச்சுருள் இதழ்த்தொகுப்பு, சுபாவுக்கு ஓவியம் பழக ஒரு புத்தகம் இவ்வளவுதான் என் தேர்வு. நிறைய வாங்கவேண்டும் என்ற ஆசை போகவில்லை, ஆனால், முதலில் நிறைய படிப்போம், பிறகு வாங்கிக்கொள்ளலாம் எனும் நிதானம் வந்திருக்கிறது.

***

கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் முத்து காமிக்ஸ் அரங்கம் நிறைய வெரைட்டிகளோடு நிறைந்திருக்கிறது. காமிக்ஸ் வாசக வட்டத்தை, ஏதோ அண்டர்கிரவுண்ட் ஆசாமிகளைப் போல அணுகும் சூழல் காலங்காலமாக இருப்பதால் கமுக்கமாகவே வாசக வட்ட சந்திப்பு நிகழ்ந்தது. உதாரணத்துக்கு ஏற்ப காமிக்ஸ் வாசகர்களை சலித்தெடுத்தால் தமிழகம் முழுக்க ஒரு ஆயிரம் பேர் தேறுவார்களா சந்தேகமே! மெனக்கெட்டு ரயில்பிடித்து வந்து சக தீவிரவாதிகளோடு ’3 எலிபண்ட்ஸ்’ அண்டர்கிரவுண்டில் ஆலோசனை நடத்துமளவு தீவிர வாசகர்கள் என்று பார்த்தால் ஒரு ஐம்பது பேர் இருக்கக்கூடும். சக பயணி, லயன் காமிக்ஸ் திரு.விஜயனுக்கு நன்றி!

***

எட்டு மணிக்கு அரங்கை விட்டு வெளியேறி, அக்கடாவென ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். ஒழுக்கத்துக்கும், நம் மக்களுக்கும் தூரம் அதிகம். இரண்டு பக்கமும், தின்பண்ட அரங்குகள், மெகா உணவரங்கம் என அந்த இடத்தையே குப்பை மேடாக்கிவைத்திருந்தார்கள். அந்நேரத்துக்கும் ஏதோ மேஜிக் ஷோ பார்க்கப்போவது போல, அரக்கப்பரக்க டிக்கெட் வாங்கிக்கொண்டு, இடது கையில் இல்லாள், வலது கையில் பிள்ளை என உள்ளே நுழைந்துகொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. பத்து ரூபாய் பார்க்கிங் டிக்கெட்டை ஏமாற்ற தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருந்தார் ஒரு நபர்! வெளியே செல்பவர்களில் பத்தில் ஒருவரிடம் மட்டுமே புத்தகங்கள் வாங்கிய பை இருந்தது. புத்தகக் காட்சி ஒன்றும் பொருட்காட்சி அல்ல, புத்தக நோக்கமில்லா கணவன், மனைவி, குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்து நெரிசலை ஏற்படுத்தாதீர்கள் ஐயா என்று முன்பொரு முறை எழுதிய ஞாபகம். அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். பட்டுக்குழந்தைகளை கட்டாயம் கூட்டி வாருங்கள். இலக்கியப் புத்தகமெல்லாம் ஓரமாய்க் கிடக்கட்டும். புத்தகத் தெருக்களுள் உட்கார அனுமதித்தால் அழகாக உட்கார்ந்துகொண்டு அழகழாய் குட்டிக்குழந்தைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாம். கெஞ்சலாய், கொஞ்சலாய், அழுகையாய், ஆர்பாட்டமாய், அலட்சியமாய் பிள்ளைகளைக் காண்பதே அழகு!

இரண்டரை வயதில் ஒரு வாண்டு இடுப்பில் உட்கார்ந்துகொண்டு, தலையணை சைஸில் ’மனப்பூதமும், மாங்கொட்டையும்’ என்பது போன்றதொரு தலைப்பில் ஒரு இலக்கியப் புத்தகத்தை வாங்கச்சொல்லி தன் பெற்றொரை அழவைத்துக்கொண்டிருந்ததை கண்நிறைய பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

*