Wednesday, December 31, 2008

பத்தாண்டு வாழ்த்துகள்.!

எந்தக்கடைக்கு (வலைப்பூக்களுக்கு) போனாலும் போன வர்ஷம் இன்னா பண்ணினோம்?னு கொசுவத்தி சுத்திக்கினுக்கிறாங்கோ.. அப்பால இன்னா பண்ணப்போறோம்?னு பிளான் பண்ணிக்கினுக்கிறாங்கோ.. புச்சு புச்சா ஒக்காந்து சிந்திச்சு அத்த நம்ம கையில சொல்லி கலாய்க்கிறாங்கோ.. பிராமிஸ் பண்ணிக்கிறாங்கோ.. பிராமிஸ் பண்ண மாட்டேங்குறாங்கோ.. ஒரே வாத்து மயம்..

இங்க மட்டுமில்லைங்க.. ஆப்பிஸ்லயும் கையப்புச்சி வாத்து சொல்லிகினேருக்காங்கோ.. SMS வந்துக்கினேருக்குது. இப்பதான் வர்ஷக்கடசி.. கடசிப்பதிவுன்னு உங்களை கலாய்ச்சேன்.. இந்தாப்புடி உன்னொண்ணு.. என் புத்தாண்டு வாத்துகளையும் புட்ச்சிக்கோ..

இன்னா தலைப்புல‌ பத்தாண்டுன்னு இருக்குது ஸ்பெல்லிங் மிஷ்டேக்குன்னு பாக்குறயா? இதுக்கு மின்னால ஒன்ன எனக்குத் தெரிமா? பத்து வர்ஷத்துக்கும்னு சேத்தின்னு வெச்சுக்கயேன்.. நல்லாரு.!

தொடரும் தாமதம்

நீங்கள் அலுவலகத்துக்கு/ கல்லூரிக்கு தினமும் லேட்டாக செல்கிறீர்களா? இதோ ஒரு மற்றுமொரு லேட் ஸ்டோரி. ஒரு நல்ல மாணவனுக்கு அல்லது ஊழியனுக்கு திறன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு ஒழுக்கமும் முக்கியம்தானே, பிற ஒழுக்கங்களை விட்டு விடுவோம்.. இன்று நாம் பேசவிருக்கும் தாமதமாக செல்தல் என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டால் அது ஒரு மிக முக்கியமான ஒழுக்கம்தானே..

ஒரு மாணவன் வீட்டிலிருந்து 20 கிமீ தூரமுள்ள‌ கல்லூரிக்கு தாமதமாக செல்லக்கூடாது என்பதால் 1 கிமீ தூரத்தில் அறை எடுத்து தங்குகிறான், அன்று அவனது வீட்டிற்கு வெளியேயான வாழ்க்கை துவங்குகிறது. அப்படியும் அவனால் முதல் நாள் முதல் வகுப்பிற்கு நேரத்தோடு செல்ல முடியவில்லை. 20 நிமிடம் தாமதமாகிறது. மறுநாளும் அவ்வாறே. அடுத்தடுத்த நாட்களும் அவ்வாறே. முதலில் வெளியே நிறுத்தப்படுகிறான். பின்னர் பிரின்ஸிபாலைப்பார், அதைச்செய், இதைச்செய் என அலைக்கழிக்கப்படுகிறான். அவன் தாமதமாக வருவது மட்டும் சரியானபாடில்லை. படிப்பில் அவனது திறன் சோதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அவன் தாமதமாக வருவதே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாட்களில் 5 நிமிடம் தாமதமான மாணவன் வெளியே நிற்க நேர்வதும், அவனுக்கு பின்னே வந்த இவன் உள்ளே வருவதும் சகஜமானது. இது சக மாணவர்கள், ஆசிரியர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது போல வேறெங்கும் நிகழ்ந்திருக்குமா? அப்படி இருப்பினும் அது சரியா?

அவன் பள்ளிப்பருவத்திலும் இதையேதான் செய்துகொண்டிருந்தான். அதற்காகவே பெற்றோரை பலமுறை அழைத்துச்சென்றிருக்கிறான். இப்போதும்நான்கைந்து நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமிருப்பினும், ஒவ்வொரு இடத்திலும் திறனுக்காக ஓரிருவராவது அவனை நினைவுகூர்ந்தாலும் அனைத்து இடங்களிலும் மாற்றமில்லாத அவனது லேட் சாதனை தொடரத்தான் செய்கிறது. மாலை நேரங்களில் நேரம்பாராது உழைப்பதை காரணமாக அவன் சொன்னாலும் அது ஏற்புடையதா?

அவன் எத்தனை முறைகள் ரயிலைத்தவற விட்டிருக்கிறான்? எத்தனை திருமணங்களுக்கு முகூர்த்தம் தவறி சென்றிருக்கிறான்? எத்தனை படங்கள் அவன் உள்வருமுன்னேயே டைட்டில் முடிந்து ஆரம்பித்திருக்கின்றன?

இப்போது, இனி அலுவலகத்துக்கு சீக்கிரமே செல்வது என தீவிரமாக உறுதி ஏற்கிறான் அவன், ஒவ்வொரு வருடமும் போலவே..

Sunday, December 28, 2008

பொய் சொல்லி விளையாடலாம், வாருங்கள்.!

சில பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் ஊழியர்களுக்கு வருடத்திற்கு ஒன்றிரண்டுமுறை ஏதாவது ஒரு சப்ஜெக்டில் பயிற்சி வகுப்பு நடக்கும். அது டெக்னிகலாகவோ அல்லது மேலாண்மை குறித்தோ அல்லது ஏதோ ஒரு சப்ஜெக்டிலோ இருக்கும். இவை பெரும்பாலும் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை நடக்கும். எப்படி சமூகத்தில் மக்களை மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், வறுமைக்கோட்டுக்கு கீழ் என்று பல்வேறாக பிரிக்கிறோமோ அதைப்போலவே நிறுவனங்களிலும் ஊழியர்களை பிரிக்கலாம்.

இந்த மேல்தட்டு ஊழியர்களுக்கு நடக்கும் பயிற்சி வகுப்புகளில் சில சுவாரசியங்கள் உண்டு. சில சமயங்களில் பயிற்சிக்கு வருபவர்கள் பயிற்சியாளர்களைவிடவும் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள், அதிக அனுபவம் இருக்கும், அவர்களை விடவும் உயர்பதவியிலும் இருப்பதுண்டு. இதனால் இவர்களை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்தமுடியாது, அதற்கு தேவையும் இல்லாமல் இவர்களும் ஒழுக்கமாகவே நடந்துகொள்வார்கள். பிரச்சினை என்னவெனில் இவர்கள் அலுவலகத்தில் எந்நேரமும் பரபரப்பாக பிரச்சினைகளுக்கு ஊடே இருப்பவர்கள். இவர்களின் செல்போனை வேறு அணைத்து வைக்கச்சொல்லிவிட்டு காலையிலிருந்து மாலை வரை ஏசி அறையில் ஒரே சேரில் கம்மென்று அசைய விடாமல் இருத்தி வைத்து பாடம் நடத்தினால் எப்படியிருக்கும்? இவர்களுக்கு பிரச்சினைகளின்றி அமைதியாக இருப்பது என்பது அதிர்ச்சியாக இருக்கும். அதிலிருந்து அவர்களை மீட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமாக சொல்லிக் கொடுப்பதுபோல குவிஸ், கேம்ஸ், வீடியோ என அவர்களை ஏமாற்றி நைசாக பாடம் நடத்துவார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதே ஒரு பெரிய மேலாண்மைக்கலை.

குறிப்பாக மதிய இடைவேளையில் ஒரு பிரச்சினை வரும். நன்கு சூப், சிக்கன், ஐஸ்கிரீம் என புல் கட்டு கட்டிவிட்டு வந்து மீண்டும் வகுப்பில் உட்கார்ந்தால் ஒவ்வொருவருக்கும் தூக்கம் அள்ளிக்கொண்டு போகும். அப்போது அவர்களின் கண்கள் மேலே செருகிக்கொண்டு தலை தட்டாமாலை சுற்றுவது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குர்ர்ர்... கிர்ர்ர்... என்று நமது கார்க்கி போல குறட்டைவிடாத குறையாக இருக்கும். அவர்களை மீண்டும் சப்ஜெக்டுக்குள் கொண்டு வருவதற்கென்றே சில பல சுவாரசியமான விளையாட்டுகளை வைத்திருப்பார்கள் பயிற்சியாளர்கள். அவை சில சமயங்களில் ஆட்டம் பாட்டம் அளவுக்குப்போய்விடும். அதிலிருந்து லைட்டாக ஒரு புதிரையும், ஒரு விளையாட்டையும் இப்போ பார்க்கலாம்.

ஏய்ய்.. இரு, இரு.. இதெல்லாம் எப்பிடி உனக்குத்தெரியும்? நீயும் அப்பிடியான ஒரு ஆளா? என்று கேட்காதீர்கள். நானெல்லாம் கீழ்நடுத்தரவர்க்கம். எங்கள் பயிற்சிகளிலெல்லாம் அரைமணிக்கொரு நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்பார்கள், இம்போசிஷன், ஹோம் வொர்க் என பின்னிவிடுவார்கள். ஸ்கூலில் கூட இப்பிடி ஹோம்வொர்க் பண்ணியதில்லை என்று நினைக்கும் அளவுக்கு ஆக்கிவிடுவார்கள். மேற்கண்ட அனுபவங்கள் எல்லாம் நர்சிம், அப்துல்லா போன்றோர் சொல்லி நான் கேள்விப்பட்டவையே.!

முதலில் புதிர் :
ஓர் பயிற்சி வகுப்பில் சுட்டது இது. கீழ்க்கண்ட முதல் படத்தில் குறிப்பிட்ட‌ அள‌வு செவ்வ‌க‌ப்ப‌குதி மூலைவிட்டம் இணைக்கப்பட்டு அதன் கீழ்ப்பகுதி நான்கு டிசைன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த டிசைன்கள் அப்படியே இரண்டாவது படத்தில் ஜஸ்ட் இடம்மாற்றம்தான் செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்ன ஆச்சரியம் ஒரு கிரிட் (குட்டிக்கட்டம்) மிச்சமாகிவிட்டதே. எப்படி?


குறிப்பு : சமீபத்தில்தான் இந்த புதிரை நான் அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஆனால் இது ஒன்றும் புதிய புதிர் அல்ல, தாத்தா காலத்து ஐட்டம் என்றான் ஒரு நண்பன். இதற்கு ஒரு பெயருண்டு, சொன்னால் கூகுளிட்டு தெரிந்துகொள்வீர்கள் என்பதால் அது வேண்டாம். தெரிந்தவர்கள் கம்மென்று அடுத்த விளையாட்டை விளையாடப்போகலாம் வாருங்கள்.

அடுத்து விளையாட்டு :

நான் என்னைப்பற்றி மூன்று அறிக்கைகள் தருவேன். அதில் ஒன்று நிச்சயமாக பொய். மற்ற இரண்டும் நிச்சயமாக உண்மை. பொய் எதுவென நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நம்மைப்பற்றிய சுவாரசியங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைத்தரும் கேம் இது.

நான் :

1. எனது கவிதைகள் ஒரு பிரபல இதழில் வெளியாயிருக்கின்றன.

2. நான் செய்து கொண்டது காத‌ல் திரும‌ண‌ம் அல்ல‌.

3. முதல்வர் கலைஞர் கருணாநிதியை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.

எந்த வாக்கியம் பொய் எனக் கண்டு பிடியுங்கள், பின்னூட்டமிடுங்கள். இந்தக்கடைசி பகுதியை மட்டும் தொடர் விளையாட்டாக்கி அறிக்கை விட நான் அழைக்கும் அன்பு நண்பர்கள்.. (இந்த டேக் மூன்று மூன்று பேராக போக வேண்டும் என விரும்புகிறேன்)

வடகரை வேலன்
கார்க்கி
நர்சிம்


Friday, December 26, 2008

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம் (நிறைவுப்பகுதி)

‘சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்’ முதல் பகுதியை நான் எழுதினாலும் எழுதினேன், நல்ல பேர் கிடைத்து சில பெரிய மனிதர்களின் (அதாவது டெக்னிகல் பெர்சுங்க) நட்பு கிடைத்தது ஒருபுறமிருக்க அடுத்த பகுதி எப்போ எப்போ என்று ரசிகர் பட்டாளத்தின் அன்புத்தொல்லை தாங்கமுடியவில்லை (நிஜமாங்க). இவனை இப்படியே டெக்னிகல் பாடம் நடத்த வெச்சு மற்ற சப்ஜெக்ட்லயிருந்து ஓரம்கட்டிடலாம்னு ஏதும் எனக்கெதிரா சதி நடக்குதோன்னு வேற சந்தேகமாயிருக்குது. இப்ப கூட பாருங்க மூன்று பகுதின்னு சொல்லிட்டு இரண்டாம் பகுதியையே நிறைவுப்பகுதியா ஆக்கினதுக்கு சண்டைக்கு வந்தாலும் வருவாங்க. நம்ம குறிக்கோள் அதில்லையே.. இப்படியே பத்தி எழுதி.. அப்புறம் சிறுகதை எழுதி.. நாவல் எழுதி.. குறும்படம் எடுத்து.. பெரும்படம் எடுத்து.. அப்புறம் அரசியல்ல இறங்கி.. அடுத்துதான் உங்களுக்கே தெரியுமே.!

சரி, ஆரம்பிச்சாச்சு.. சட்டுபுட்டுனு முடிச்சுடலாம். கொஞ்சம் டெக்னிகலா ஆழமா போகாம இந்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் முடிக்கமுடியாது. ஆகவே இந்தப்பகுதி ட்ரையா இருந்தா நான் பொறுப்பு கிடையாது. கவனமா கூடயே வாங்க, முதல் பகுதியை படிக்காதவங்க இருந்தா போய் படிச்சுட்டு வந்துடுங்க.. இப்போ விஷயத்துக்குள்ள போகலாம்.

சிக்ஸ் சிக்மாவின் பயன் என்ன என்பதை பார்த்தோம். இப்போது அதன் வழிமுறைகளை (கொஞ்சமாக) பார்க்கலாம். சிக்மா என்பது என்ன? அது ஒரு குறியீடு. இதை நாம் கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம். பரீட்சையில் நீங்கள் எவ்வளவு மார்க் வாங்கியுள்ளீர்கள் என்று நான் கேட்கிறேன். கூச்சமில்லாவிட்டால் 100க்கு 32 என என்னைப்போல டாண் என பதில் சொல்லிவிடுவீர்கள். அதாவது மார்க் என்பது என்ன? நீங்கள் எழுதின லட்சணத்துக்கு தகுந்தாற்போல வாத்தியார் தரும் மதிப்பு. நன்கு எழுதியிருந்தீர்களானால் நல்ல மார்க் கிடைக்கும். அதைப்போலவே ஒரு செயல் தொடர்ந்து சரியாக நடக்குமானால் சிக்மா எண் கூடிக்கொண்டே போகிறது.

சரி, பரீட்சைக்கு படிப்பது என்றால் என்ன? என்ன முழிக்கிறீர்கள்.? குண்டக்கன்னா குண்டக்க.. மண்டக்கன்னா மண்டக்க.. ‘படிப்பதுன்னா.. படிப்பது!’ என்று வடிவேலு மாதிரி சொல்கிறீர்களா.. அதேதான். ‘சிக்ஸ் சிக்மான்னா.. சிக்ஸ் சிக்மாதான்’ அது ஒரு வழிமுறையியல் (Methodology). 100 மார்க்கு வாங்கு வாங்குன்னு உங்க கணக்கு வாத்தியார் மண்டையிலேயே போட்டிருப்பாரே.. (எல்லா கணக்கு வாத்தியாருமே அப்படித்தான் இருப்பாங்க போல, அதான் எனக்கு எங்க தமிழ் வாத்தியாரை ரொம்ப பிடிக்கும். மார்க்கைப்பற்றி பேசவே மாட்டாரே) ஏன்? அதற்கு மேல் வாங்கமுடியாதுன்னு இப்போ குசும்பன் குசும்பா பதில் சொல்லுவார். அதேதான், அதற்கு மேல் வாங்க முடியாது. அதே போல அதிக பட்ச சிக்மா எண் 6. (இப்போதைக்கு ஆறு. எதிர்காலத்துல 7, 8 என இதை இன்னும் அதிகப்படுத்திவிடுவான்கள் நமது டெக்னிகல் புலிகள். இப்போதே சிக்மா 6ஐத்தாண்டிய செயல்கள் மிகச்சில உள்ளன, அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் நமக்கு) ஒரு செயல் உச்ச பட்ச திறனோட தவறின்றி நடக்கையில் அதன் சிக்மா எண் 6ஐ நோக்கிச்செல்கிறது.

இன்னிக்கு எல்லாத்துறைகளிலும் நடக்கும் செயல்கள் அனைத்தையும் பர்பெக்டாக நடத்தி சிக்மா 6ஐ அடையுங்கள் என்று நம்மையெல்லாம் நமது மானேஜர்கள் புண்ணாக்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு மெஷினை இயக்கி பொருட்கள் தயாரிப்பதாகட்டும், ஸாப்ட்வேர் எழுதுவதாகட்டும், கஸ்டமர் கம்ப்ளெயிண்ட் கால் க்ளோஸ் செய்வதாகட்டும், டெலிவரி செய்வதாகட்டும், போக்குவரத்து இயக்கமாகட்டும்.. விதிவிலக்கேயில்லாமல் அனைத்து செயல்களுக்கும் இது பொருந்தும்.

இவ்வாறாக செயல்கள், சிக்மா எண் 6ஐ அடைவதற்கு என்ன செய்யவேண்டும்? சின்னப்பிள்ளைக்கூட சொல்லிவிடும்.. சொல்லுங்க பார்க்கலாம்.. ம்.. அதேதான்.. அதில் நடக்கும் தவறுகளை களையவேண்டும், செயல் இன்னும் முன்னேற்றமடைய என்ன என்ன வழிகள் உள்ளதோ அதை அனைத்தையும் செய்ய வேண்டும். அதே சமயம் செயலை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று விளைபொருளின் விலையை கூட்டுமளவு அதிக பணம் செலவழியும் காரியங்களைப்பண்ணக்கூடாது. உதாரணத்துக்கு நீங்கள் கொசுவத்தி தயார் பண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் (நம்ப எல்லோரும் அடிக்கடி பண்ணுவதுதானே). நூறு கொசுவத்திகள் பண்ண ஆயிரம் ரூபாய் உற்பத்திச்செலவு ஆகுதுண்ணு வச்சுக்கலாம். 20% லாபம் வெச்சு 1200 ரூபாய்க்கு விற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். எல்லோரும் உங்களைப்போலவே 100 ரூபாய் முன்னப்பின்ன செய்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் மட்டும் என் செயலை சூப்பராக்குறேன் பார், வட்டக்கொசுவத்தியை உருண்டைக் கொசுவத்தியாக்கி காமிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு உற்பத்திச்செலவை 1000லிருந்து 990ஆக குறைப்பதற்கு பதிலாக 2000 ரூபாயாக ஆக்கிவிட்டீர்கள் என்றால் 2400 ரூபாய்க்கு வாங்க ஆளிருக்காது, போண்டியாயிருவீங்க.. அம்புட்டுதான்.!

இப்படியாக உங்கள் செயல்களை சரியான முறையில் ஆய்ந்து அதை முன்னேற்ற உதவும் வழிமுறைகளை சொல்லித்தருவதே ‘சிக்ஸ் சிக்மா வழிமுறையியல்’ (Six sigma methodology) எனப்படுகிறது. அது ஒன்றும் பெரிய வித்தையெல்லாம் இல்லை. எல்லோரும் பெரும்பாலும் ஏற்கனவே வெவ்வேறான இடங்களில் படித்த அல்லது தெரிந்த அல்லது செய்துகொண்டுள்ள Process study, Statistics tools, Probability, Cause & effect, Continues improvement, FMEA, 5S, கழுத, குருத.. இவையெல்லாமும்தான். என்ன ஒண்ணு எல்லாத்தையும் எங்கே எப்போ எப்படி பயன்படுத்துறதுங்கறதுதான் விஷயமே.

ஒரு மாசமா ஆக்சிலேட்டரை விட்டா எஞ்சின் நின்று போய் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சிக்னலில் அணைந்து போய்விடக்கூடாதே என ஆக்சிலேட்டரை சும்மானாச்சுக்கும் முறுக்கி உறுமிக்கொண்டிருப்பீர்கள். மெக்கானிக்கிடம் கொண்டுபோனால் ஒரு திருப்புளியைக்கொண்டு அரை நிமிடத்தில் ஒரு ஸ்க்ரூவை முறுக்கி சரிசெய்துவிட்டு 50 ரூபாய் கேட்பார். இந்த குட்டி ஸ்க்ரூவை முறுக்கியதற்கு 50 ரூபாயா என நீங்களும் முறுக்கிக்கொள்வீர்கள். அவரிடம் கேட்டால் ஸ்க்ரூவை முறுக்கியதற்கு 1 ரூபாய்தான், எங்கே பிரச்சினை எனவும் அதை எப்படி சரிசெய்வது எனவும் நான் தெரிந்துவைத்திருப்பதற்குத்தான் அந்த மீதி 49 ரூபாய் என்பார்.

சரி, சரி.. குட்டிக்கதையெல்லாம் போதும், ஒரே ஒரு சந்தேகம்.! எல்லாம் புரிஞ்சுது.. கடைசி வரைக்கும் ஒரு செயலின் தற்போதைய சிக்மா எண்ணை கணக்கிடுவது எப்படி என்று சொல்லவேயில்லையே...

ஆங்.. அஸ்க்கு புஸ்க்கு.!

Thursday, December 25, 2008

என் இனிய இயந்திரா.!

சென்ற மாதத்தின் ஓர் கடும் மழைநாள். திருவொற்றியூரில் ஒரு நண்பரை பார்க்கச்சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறோம். முந்தின நாள் கொஞ்சம் அடங்கியிருந்த மழையைப்பார்த்துதான் பைக்கிலேயே சென்று வரலாம் என திட்டமிட்டு வந்திருந்தோம். கிளம்பும் தருணத்தில் தூறலாக துவங்கிய மழை வலுக்கத்துவங்கியிருந்தது. ஏனோ டோல் கேட்டிலேயே கடற்கரைச்சாலை வழியை நோக்கித்திரும்பாமல் தண்டையார் பேட்டை வழியாக மிண்ட் நோக்கி வந்துகொண்டிருந்தோம். மழை வலுக்கத்தொடங்கியது. ரெயின் கோட்டுக்குள் தண்ணீர் புகுந்து ஈரமாகத்தொடங்கியிருந்தது. மணி மாலை 5. கண்ணன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்டா மழை வெறிக்குதான்னு பார்க்கலாம் என்றான். பாண்டியன் திரையரங்கம் அருகே நின்றோம். டீ குடித்துவிட்டு சிகரெட் பிடித்தோம். மழை நாளில் ஈரக்கைகளுடன் சிகரெட் நனையவிடாமல் புகைப்பது அழகான அனுபவம்.

நேரம் செல்லச்செல்ல மழை வலுத்துக்கொண்டிருந்ததே தவிர குறைகிற வழியை காணோம். நன்கு இருட்டியிருந்தது. ஏற்கனவே நனைஞ்சாச்சு, முழுக்க நனைஞ்சாலும் பரவாயில்லை கிளம்பிடலாம், இல்லேன்னா ரிஸ்க் என்றேன். கிளம்பினோம். மிண்ட் வருவதற்குள் ரெயின் கோட் பல்லிளிக்க முழுதும் தொப்பலாக நனைந்திருந்தோம். ஹெல்மட்டின் கண்ணாடி வழியாக பார்க்கமுடியாத அளவு மழை கொட்டியது. கண்ணாடியை தூக்கிவிட்டிருந்ததால் ஹெல்மட்டின் உட்புறமெல்லாம் நனைந்து ஊறி கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருந்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. வெப்பேரியின் தெருக்கள் எப்படியிருக்கும் என்று பயந்ததில் சென்ட்ரல் வழியை மறந்து மீண்டும் பாரிஸ் செல்ல முடிவெடுத்து இதுவரை சென்றிராத பெத்தநாயக்கன்பேட்டைக்குள் புகுந்தோம். தெருக்கள் அதற்குள் வெள்ளக்காடாயிருந்தன. கொத்தவால் சாவடிக்குள் புகுந்தபோது தெருக்கள் நிரம்பி வழிந்தன. வழிநெடுக டூ வீலர்களும், ஆட்டோக்களும் நீரில் சிக்கிக்கொண்டிருந்தன. வண்டி கால வாறிடுச்சுன்னா என்னடா பண்றது? டாக்சி எவனாவது வருவானா? வண்டிய எங்க நிறுத்தறது என்று கண்ணன் புலம்பத்துவங்கியிருந்தான்.

பாரிஸை நெருங்கியபோதுதான் தெரிந்தது பஸ்கள், ஆட்டோக்கள் எதுவுமே ஓடாத அளவில் பல சாலைகள் வெள்ளத்தால் தடைபட்டிருந்தன. ரிஸர்வ் வங்கிக்கு அடுத்த சிக்னலைத்தாண்டிய போது மலைத்தேன். சாலை முழுதும் ஆறாய் ஓடியது வெள்ளம். நிச்சயம் எஞ்சின் முழுகிவிடும். சில பெரிய கார்கள் மட்டுமே தைரியமாய் போய்க்கொண்டிருந்தன. குட்டிக்கார்கள், பைக்குகள் ரிஸ்க் எடுக்கத்தயாரில்லாமல் இருபுறமும் காத்துக்கொண்டிருந்தன. வெயிட் பண்ணலாமா? மழைவிடுவது போலில்லை. சும்மா நின்றுகொண்டிருப்பதை விட இறங்கிப்பார்த்துவிடலாம். வேண்டாம் வேண்டாம் என புலம்பிக்கொண்டிருந்தான் கண்ணன். இந்த ஒரு இடம்தான், இதை தாண்டிட்டோம்னா பீச் ரோட்ல பிராப்ளம் இருக்காது. நம்ப ஆளுடா இவன், சொன்னா தாமிரபரணியிலேயே குறுக்கால இறங்குவாண்டா.. ஆ.:ப்ட்ரால் இந்த சென்னை மழைவெள்ளம் என்றவாறே பெட்ரோல் டாங்கை அணைத்தேன். இறங்கிவிட்டோம். வெள்ளத்தில் இறங்கிய ஒரு டவேராவை நெருக்கமாக பின்தொடர்ந்தோம். அது இருபுறமும் மழையாக வாரியிறைத்த நீரில் நனைந்தோம். செகண்ட் கியரில் பிடியாய் பிடித்தேன். ம்..ம்.. இன்னும் கொஞ்சம்தான், கைவிட்டுடாதே தோழா.. சரியாக வெள்ளத்தைக்கடக்கவும் டுப்.. டுப்.. சத்தம் மாற எஞ்சின் நின்று போக வண்டி நின்றது. கண்ணன் கொலைவெறிப்பார்வை பார்த்தான். சைட் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வண்டியைத்தழுவியவாறே இறங்கினேன். பொறுடா.. ஒரு தம்மடிக்கலாமா? பக்கத்தில் ஏதும் கடைகளில்லை. ஷவர் போல மழை கொட்டிக்கொண்டிருந்தது. ஒரே நிமிடம்தான். மீண்டும் முயற்சிக்கலாம். முதல் கிக். புகைக்கு பதிலாக மோட்டார் பம்ப் போல சைலன்சரில் இருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. இரண்டாவது கிக். இன்னும் நீர். மூன்றாவது கிக். தோழன் உயிர்த்தான். கிர்ர்ர்..கிர்ர்ர்ர்ர்ர்..

கண்ணனைப் பார்த்தேன். “போலாமா.?”

Friday, December 19, 2008

ஐஸ்.! (100வது பதிவு)

    இன்று காலை வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்திற்குள் நுழைந்தேன். வழக்கமான அதே உடைதான், பாலிஷ் பார்த்து மாதங்கள் ஆகிவிட்ட அதே ஷூக்கள்தான். பிரச்சினைகளின் தீவிரம் இன்னும் குறையவில்லை, அந்த டென்ஷனும் முகத்திலிருக்கிறது. வியர்த்து வழிந்ததற்கான காரணம் பைக் பஞ்சராகிவிட்டதால் மெயின் ரோட்டிலிருந்து உள்ளே அரை கிலோமீட்டர் நடந்து வந்தேன். அறைக்குள் வந்த போது ஏசி வேலை செய்யவில்லை. சந்தைக்கடை போல பொருட்கள், ஆட்கள், பிரச்சினைகள். ..

    சிறிது நேரத்தில் டீ குடிப்பதற்காக வெளியே வந்தேன். ஒரு போன் வந்ததால் ஆ.:பீஸுக்கும் கேண்டீனுக்கும் நடுவிலிருக்கும் மரநிழலில் ஒதுங்கினேன்.ஒரு புதிய டெக்னீஷியன் என்னை நெருங்கி 'ஒரு கேஸ்டிங்கில் சந்தேகமா இருக்குது. நீங்க பாத்துட்டீங்கன்னா நல்லது' என்றார். சரி வாங்க போகலாம் என்று போனில் பேசிக்கொண்டே அவ‌ருட‌ன் சென்றேன். அவ‌ருக்கு 20 வ‌ய‌திருக்க‌லாம். அவ‌ர் என்னை மேலும் கீழும் பார்க்கிறார், லேசாக‌ புன்ன‌கைக்கிறார். இத‌ற்கு முன்ன‌ரும் க‌வ‌னித்திருக்கிறேன். தூர‌த்தில் இருந்து கூர்மையாக அவர் க‌வ‌னிப்ப‌தை நான் க‌வ‌னித்திருக்கிறேன். என்ன‌ பிர‌ச்சினை ந‌ம்மிட‌ம் இன்று? ஸிப் போடவில்லையா? செக் பண்ணிக்கொண்டேன். நேர‌மின்மையால் முடிகூட‌ வெட்டிக்கொள்ளாத‌தால் ரொம்ப‌தான் க‌ண்றாவியாகி விட்டோமோ? என்று நினைத்துக்கொண்டு அவ‌ரிட‌மே கேட்டுவிட்டேன், 'என்ன‌ த‌ம்பி, ஏன் சிரிக்கிறீங்க‌?'

"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"


ட‌மால்.!


டிஸ்கி 1: இந்த‌ க‌மெண்டை ப‌ல‌ப்ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்துக்கேட்ட‌ அதிர்ச்சியில்தான் அந்த‌ ட‌மால்.! அத்த‌னை பிர‌ச்சினைக‌ளிலிருந்தும் சில‌ விநாடிக‌ள் விடுத‌லையாகி ஐஸ்லாந்தில் வாழ்ந்தேன்.


டிஸ்கி 2: இது நூறாவ‌து ப‌திவு. விதவிதமான டாப்பிக்குகள் யோசித்து பின்னர் சமாதானமாகி எண்களுக்கு மயங்கவேண்டாம், வழக்கம் போலவே போகலாம் என இதை எழுதியிருக்கிறேன். வாழ்த்துங்க‌ள் ஆவ‌லாயிருக்கிறேன்.

டிஸ்கி 3: ந‌ம்ப‌ க‌டையைத்தான் அப்ப‌ப்ப‌ காத்தாட‌ விடுகிறீர்க‌ள் என்றால் விருந்துக்கு போன‌ இட‌த்தில் வ‌லைச்ச‌ர‌த்திலும் காத்தாட‌ விடுகிறீர்க‌ள். அங்கேயும் வ‌ந்துபோங்க‌ள், ந‌ன்றி.!

Tuesday, December 16, 2008

தென்ற‌லை ச‌ந்தித்தோம்..

தொலைபேசி எண்ணை தேடிப்பிடித்து வாங்கி அவ‌ரை அழைத்த‌போது அந்த‌க்குர‌லில் இருந்த‌ நிஜ‌ம் என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து. அவரது வீட்டுக்கு செல்ல‌ நினைத்த‌து மிக‌ச்ச‌ரியான‌ முடிவே என‌ ம‌கிழ்ந்தேன். போக்கிட‌மில்லாம‌ல் அவ‌ரை ச‌ந்திக்க முதலில் முடிவு செய்த‌ போது இருவ‌ருமே (நானும், கார்க்கியும்) சிறிது த‌ய‌க்க‌த்திலிருந்தோம். கார்க்கிக்கு எப்ப‌டியோ தெரிய‌வில்லை, என‌க்கு பெண் தோழிக‌ளே இருந்த‌தில்லை. குடும்பத்து பெண்க‌ளிட‌ம் த‌விர‌ பிற‌ருட‌ன் பேசிய‌து கூட‌ மிக‌க்குறைவே. பொதுவாகவே பெண்கள் என்றாலே ஒரு பயமும் உண்டு (அதுதான் உங்களுக்குத் தெரியுமே) மேலும் இந்த‌க்கால‌த்தில் சில தெரிந்த ஆண்க‌ளை பார்க்க‌ச்செல்லும்போதே சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் வாசலிலேயே வழியனுப்பப்பட்டுத் திரும்புகிறோம். ஒரு பெண்மணியை அதுவும் அவ‌ர் வீட்டுக்கே சென்று சந்திக்க வெறும் ச‌க‌ பிளாக‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌ம் போதுமான‌தாக‌ தோன்ற‌வில்லை என‌க்கு. இவ்வ‌ள‌வுக்கும் அவ‌ர‌து ப‌திவுக‌ளைக்கூட‌ முழுமையாக‌ ப‌டித்த‌தில்லை. (அடிக்க‌வ‌ர‌வேண்டாம் தோழி) இருப்பினும் எங்க‌ளுக்குத்தோன்றிவிட்ட‌து, செல்ல‌வேண்டும்.. அவ்வ‌ள‌வே. காரை அங்கே செலுத்தினோம்.

எந்த குழப்பமும் இல்லாம‌ல் காரோட்டி தெளிவாக‌ அப்பார்ட்மென்ட் வாச‌லில் ச‌ரியாக‌ நிறுத்திவிட்டார். இப்போதுதான் தோன்றிய‌து, அட‌டா.. குழ‌ந்தைக‌ள் இருக்கும் வீட்டுக்கு கையை வீசிக்கொண்டு வ‌ந்திருக்கிறோமே.! கொஞ்ச‌மாவ‌து ம‌ண்டையில் ஏதாவ‌து இருக்கிற‌தா என‌ ர‌மா அடிக்க‌டி திட்டுவ‌து நினைவுக்கு வ‌ந்த‌து. சரி, ப‌க்க‌த்தில் க‌டைக‌ள் இருப்ப‌து போல‌ தெரிய‌வில்லை, ப‌ர‌வாயில்லை போக‌லாம் என‌ முடிவு செய்து மேலே சென்றோம்.

ச‌ரியாக‌ வாச‌லிலேயே ஆஷிஷ் நின்று சிரித்த‌ப‌டி வ‌ர‌வேற்றான். முன்பே அவ‌னுக்கு த‌க‌வ‌ல் சொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும். வாச‌லில் உள்ளே நுழையும் போதே டைனிங் டேபிளில் ராம் உண‌வ‌ருந்திக்கொண்டிருந்தார். அது எப்ப‌டிடா ச‌ரியாக‌ அடுத்த‌வ‌ர்க‌ளை தொல்லைப‌ண்ற‌ மாதிரியே நாம் நடந்துக்குறோம்? பாதியிலேயே எழுந்து வ‌ந்து வ‌ரவேற்றார். அவ‌ரை மீண்டும் சாப்பிட‌ச்சொல்லி வ‌ற்புறுத்தி அனுப்பிவிட்டு சோபாவில் அம‌ர்ந்தோம். அம்ருதாவும், ஆஷிஷும் எங்க‌ளிட‌ம் பேசுவ‌தா வேண்டாமா என‌ குழ‌ப்ப‌த்திலிருந்தார்க‌ள். பின்ன‌ர் இப்ப‌டி முடிவெட்டி ப‌ல‌நாட்க‌ளாகி, ஷேவ்கூட‌ செய்துகொள்ளாம‌ல் அநியாய‌த்துக்கு இருவ‌ருமே பூச்சாண்டி ரேஞ்சுக்கு இருந்தால் குழ‌ந்தைகள் பயப்படாமல் என்ன செய்வார்கள். இதுவும் நாங்கள் முதலில் தயங்கியதற்கு ஒரு காரணம். முத‌ல் முறையாக‌ ஒருவ‌ர் வீட்டுக்குச் செல்லும்போது கொஞ்ச‌மாவ‌து பார்க்கிற‌மாதிரி செல்ல‌வேண்டாமா?

உள்ள‌றையில் ஒரு இள‌ம்பெண் க‌ணினியில் அம‌ர்ந்திருப்ப‌து தெரிந்த‌து. அவர் தென்றலின் சகோதரி என பின்னர் அறிந்தோம். தென்றல் வெளியே சென்றிருப்ப‌தாக‌வும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வ‌ந்துவிடுவார் என்ப‌தாக‌வும்‌ ராம் தெரிவித்தார். சொன்ன‌து போல‌வே சில‌ நிமிட‌ங்க‌ளிலேயே வ‌ந்தார். சிரித்த‌ முக‌மாக‌ வ‌ர‌வேற்றார். குடும்பம் மொத்தமே மிக அன்பாக‌ ந‌ட‌ந்துகொண்டார்க‌ள். இல‌ங்கை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பல்வேறு காலகட்டங்களில் இருந்த‌ வாழ்க்கை குறித்து ப‌கிர்ந்துகொண்டார். ஸ்டைலாக சிரித்தபடி பேசியது கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போல இருந்தது.

நிறைய‌ சினிமாக்க‌ள் குறித்து பேசினார். தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பரவலாக பேசினார். நான் த‌மிழ் மற்றும் சில ஆங்கில ப‌ட‌ங்க‌ள் த‌விர‌ வேறு ப‌ட‌ங்க‌ள் பார்த்த‌வ‌னில்லையாத‌லால் ம‌த்திய‌மாய் த‌லையாட்டிவைத்தேன். குறிப்பாக‌ தெலுங்குப்ப‌ட‌ங்க‌ளை அவ‌ர் சிலாகித்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. முத‌ல் முறையாக‌ ஒருவ‌ர் தெலுங்கு ப‌ட‌ங்களை புக‌ழ்ந்து நான் காண்கிறேன். மேலும் விஜ‌ய் ப‌ட‌ங்க‌ளை தங்கையுடன் சேர்ந்து கேலி செய்து கார்க்கியை வெறுப்பேற்றினார். நான் உள்ளூர‌ ம‌கிழ்ந்தேன். பின்ன‌ர் ஸ்னாக்ஸ் வ‌ந்த‌து. நாங்க‌ள் அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வ‌ந்த‌தால் அதை சாப்பிட‌ திண‌றினோம். பின்ன‌ர் ஒரு பெரிய்ய்ய்ய‌ க‌ப்பில் டீ வ‌ந்த‌து. இது ஒரு லிட்ட‌ர் பிடிக்குமா என‌ கார்க்கி காதில் கிசுகிசுத்தார். அதையும் முடித்து விடைபெற்றோம்.

தமக்கு ந‌ன்றாக‌ ம‌சாலா டீ போட‌த்தெரியும் என்ப‌தாக‌வும் (சரி, நம்பிவிட்டோம்), அன்று ம‌சாலா காலியாகிவிட்ட‌தால் வெறும் டீ த‌ர‌ப்ப‌ட்ட‌து என‌வும் புதுகைத்தென்றல் த‌ன‌து பதிவில் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை டீ காலியாகியிருந்தால் வெறும் ம‌சாலா ம‌ட்டும் த‌ந்திருப்பாரோ என‌ நினைத்துக்கொண்டேன். பாவ‌ம் ராம்.!


Sunday, December 14, 2008

ஹைதராபாத் அனுபவங்கள்

என்ன பெரிய 'மடகாஸ்கர்' அனுபவங்களா? என்று நக்கல் பண்ணாமல் மேலே போகவும். ஒரே பதிவில் மூன்று பதிவுகள் என்ற கான்செப்டில் இது எழுதப்படுகிறது. (அப்படின்னா, அவியல், பொரியல், கூட்டாஞ்சோறு, காக்டெயில்னு எக்கச்சக்கமா எழுதுறாங்களே அதுக்குப்பேரு என்னாங்கிறமாதிரியெல்லாம் கேட்கக்கூடாது)

********

செகண்ட் ஏசி

இந்த முறை வழக்கம் போலல்லாமல் ரயிலைத் தவறவிட்டுவிட்டேன். ஏற்கனவே பல பிரச்சினைகளில் உழன்று கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் பஸ்ஸில் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. பஸ்ஸில் தொலைதூரம் பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் பயமாக இருந்தது. இருப்பினும் 'நல்லாருக்கும் ஸ்லீப்பர் கோச், ஏசி, கிளம்புங்க..' என்று நண்பர் தூண்டியதால் டிக்கெட் எடுத்தேன். ஸ்லீப்பர் கோச்சுன்னு சொல்லிட்டு இருக்கையை சிறிது கூட பின்புறம் சாய்க்கமுடியாது நொந்த பழைய அனுபவங்கள் பயமுறுத்தின. கட்டணமோ கிட்டத்தட்ட ரயிலின் செகண்ட் ஏசி கட்டணம் அப்படியே. 85 ரூபாய் கட்டணத்தில் முதன்முதலில் சென்னைக்கு வந்தது ஞாபகம் வந்தது.

ஒருவழியாக பஸ்ஸில் ஏறியபோது ஆச்சரியப்பட்டுப்போனேன். அப்படியே ரயிலின் செகண்ட் ஏசி பெட்டியில் ஏறிவிட்டதைப்போன்ற உணர்வு. அடுக்குப்படுக்கைகள். அருமையான இன்டீரியர். கூடுதலாக ஒருவொருவருக்கும் தனித்தனியாக சிறிய LCD டிவி. தனியாக ஹெட்போன். அதில் போடப்பட்ட தெலுங்கு போக்கிரி படத்தை பார்த்துவிட்டு தூங்கிப்போனேன். டிரெயினில் கூட குலுக்கல்களை சமயங்களில் உணர்வோம். இதில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் ஏதோ அறைக்குள் தூங்கியதைப்போல‌ இருந்தது. விழித்தபோது சென்னை வந்திருந்தது.

கொசுறு : பக்கத்து சீட் ஆள் முதலில் போடப்பட்ட ஏதோ ஒரு மொக்கைப்படத்தை (கட்டம்போட்ட சட்டைபோட்ட 50 வயது இளம் ஹீரோ) வம்படியாக நிறுத்திவிட்டு போக்கிரி படத்தை போடவைத்தார். பெரிய மகேஷ்பாபு ரசிகர் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் டைட்டில் முடியும் முன்னரே ஆள் ஹெட்போனுடன் தூங்கிவிட்டிருந்தார். அவரது சமூக சேவையை நான் மெச்சினேன். நான் பார்த்த மூன்றாவது தெலுங்குப்படம் இதுதான், போக்கிரி.

********

சாலை ஒழுங்கு : சென்னை-ஹைதராபாத்

ஒரு வாரமாக ஹைதராபாதில் இருக்கையில் (இதற்கு முந்தைய அனுபவங்களிலும்) அதன் சாலை ஒழுக்கத்தை கவனிக்கிறேன். சென்னையை ஒப்பிடும்போது வாகன நெருக்கடி குறைவானதாகவே இருப்பினும் எங்கெங்கும் டிராபிக் ஜாம். சிக்னல்களை மதிக்காத வாகனங்கள். தாறுமாறாக ஓடும் டூ வீலர்கள். எப்படி இப்படியொரு சிட்டியே ஒழுங்கற்று இருக்கிறது என வருந்தினேன். ஒரு டூ வீலர் ஒரு இளம்பெண்ணை இடித்துத்தள்ளிய காட்சியையும் கண்டேன். சிக்னல் விழ சில விநாடிகள் இருக்கும் போதே கிளம்பிய வண்டிகளில் ஒன்று, வண்டிகள் கிளம்பியதைக்கண்ட பிறகும் சாலையை அபாயகரமாக கடந்த பெண் என இருவர் மீதிலுமே தவறு. பெரும்பாலான சிக்னல்களில் போலீஸ் இல்லையெனினும், இருந்தவர்களும் கூட டிராபிக்கை கவனியாமல் சாலையோரங்களில் பேசிக்கொண்டும், டீக்குடித்துக்கொண்டும் இருந்தனர்.

சென்னையில் காலையில் இறங்கி ஆட்டோ பிடித்தேன். இன்னும் காலை மணி எட்டுகூட ஆகியிருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை வேறு. காமராசர்சாலையில் அவ்வளவு போக்குவரத்து இல்லை. நேப்பியர் பாலத்துக்கு முந்தைய சிக்னலில் எனது ஆட்டோவும் சில பைக்குகளும் இயல்பாகவே நின்றன. குறுக்கே எந்த வாகனமும் போகவில்லை. எங்களுக்கு இடதுபுறம் இருந்த கேப்பில் ஒரு கார் வேகமாக வந்து போய்விடத்துணிந்து கோட்டைக்கடந்து சில அடிகளில் அவசரமாக நின்றது. அப்போதுதான் கவனித்தேன். கொஞ்சம் தொலைவில் ஒரு இளம் போலீஸ் நின்றிருந்தார். இடுப்பில் ஒரு வாக்கி டாக்கி செருகப்பட்டிருந்தது. ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் இருந்தார். இடத்தைவிட்டு ஒரு அடிகூட அவர் நகரவில்லை. அவரது முகபாவமும், வலதுகையும் மட்டுமே கச்சிதமாக அந்த காருடன் பேசின‌.

"ன்னா.. ன்னாடா? இம்மாம்பேரு நிக்கிறது தெர்ல.? போ பின்னால. நோ பாலுக்கு அம்பயர் பாக்குற மாதிரி பாப்பேன். முன்னாடி வீலு கோட்டுக்கு பின்னாடி இருக்குணும், போ பாக்கலாம்"

பெட்டிப்பாம்பாக அந்தக்கார் ரிவர்ஸ் கியரில் கோட்டுக்கு பின்னால் வந்தது.

********

பிரபல இளம்பதிவர்

கடைசி நாள் வேலைவெட்டியில்லாமல் மாலை வரை இருக்கவேண்டி வந்ததால் அந்த பிரபல இளம்பதிவரை விரும்பி அழைத்தேன். அவரும் பத்துமணி வாக்கில் வந்தார். 'நீண்ட நாட்களாக இங்கு நான் வந்துகொண்டிருந்தாலும் எங்கும் சென்றதில்லை, எங்காவது என்னை அழைத்துச்செல்லுங்கள்' என்றேன் அவரிடம். நல்லதொரு சனிக்கிழமை தூக்கத்தை கெடுத்த கோபமோ என்னவோ அவருக்கு? இவ்வாறாக பதில் தந்தார். 'சார்மினாரை போட்டோவில் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதேதான் நேரிலும். விசேஷமாக ஒன்றுமில்லை. மதிய வெயில் நேரம் சாகர் ஏரி அவ்வளவு உகந்ததல்ல. ராமோஜி பிலிம் சிட்டி நல்லாருக்கும், ஆனா அங்கே போனா சாய்ந்திரம் பஸ்ஸ புடிக்கமுடியாது, பரவால்லியா? பிர்லா மந்திர் போகலாம். உங்களுக்குதான் கோவில் பிடிக்காதே' 'ஏதோ குண்டு வெடித்த பார்க் இருக்குதாமே, அதைப்பார்க்கலாமே..' என்றேன். 'அங்கே மாலையில்தான் லேசர் ஷோ நடக்கும், மற்ற‌படி அங்கு ஒன்றுமில்லை' 'ஏதாவது சினிமாவுக்கு போலாமே, ஏதோ ஐமாக்ஸ்னு தியேட்டர் இருக்குதாமே?' 'படம் ஒண்ணும் சரியில்லையே வாரணம் ஆயிரம் பாத்தாச்சு, ட்ரான்ஸ்போர்ட்டர் எப்பிடி இருக்குதுன்னு தெரியல..' என்று இழுத்தார். 'அப்போ என்னதான் பண்ண‌லான்றீங்க.. நேத்தே நீங்க வருவீங்க, அடிக்கலாம்னு வாங்கிவெச்சேன். அடிச்சிகிட்டு இங்கேயே ஒக்காந்துடலாமா?'

ஈன்னு இளித்துக்கொண்டே 'நல்ல ஐடியா' என்றார்.

பி.கு : ஸாரி பார் தி நீள்பதிவு. ஓட்டுகளை மறக்காமல் குத்துங்கள். நாங்கள் என்ன அரசியல்வாதிகளா? ஒரு வாட்டி சொன்னால் பத்தாதா? ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதிருக்கிறதே..


Saturday, December 13, 2008

இளமைத்துள்ளலின் இலக்கணம்..

எத்தனையோ ரசனையான ஜோடிகளை காலங்காலமாக பார்த்துவந்திருக்கிறோம். சிவாஜி, பத்மினியில் தொடங்கி விஜய், திரிஷா வரையில் ரசித்திருக்கிறோம். நேற்று டிவியில் ஒரு காட்சியைக்காண நேர்ந்தது. முழு படம் கூட இல்லை, ஒருசில காட்சிகளே ஆனாலும் அத்தனை ஜோடிகளையும் பின்னுக்குத் தள்ளி காலத்தை வென்றார்கள் அவர்கள்.

இளமைத்துள்ளலின் விளக்கமாக அந்தக்காட்சிகள் என்றென்றும் கார்த்திக்கை நிலைநிறுத்தி வைத்திருக்கும். ஒரு தலைமுறை இளைஞர் கூட்டத்தையே கட்டிப்போட்ட கச்சிதம். கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்கிறார்களே அதுமட்டுமில்லாமல் பிஸிக்ஸ், பயாலஜி உட்பட அனைத்தும் நிரம்பி வழிய.. அந்தக்காட்சிகளில் இருந்த‌தைப்போன்ற உயிரோட்டம் பிரிதொரு படத்தில் நாம் கண்டதில்லை, இனியும் காண்போமா என்பதும் சந்தேகமே.


அந்த ஜோடி: கார்த்திக், ரேவதி
படம் : மௌனராகம்
இயக்குனர் : மணிரத்னம்

டிஸ்கி : இன்னும் அலுவலகத்தில் புயல் ஓயவில்லை ஆதலால் லைட் பதிவுகள் தொடர்கின்றன. ஆதரவு தொடரட்டும்.

Friday, December 12, 2008

சார் நான் லீவு.! ஆப்பிஸ்ல மண்டகப்படி நடக்குது..

தோழர்ஸ், ஆப்பிஸில் நொந்து நோக்காடாகிக் கொண்டிருப்பதால் இந்த வாரம் முழுதும் வரமுடியவில்லை. இன்னும் பிரச்சினை முடிந்தபாடில்லை. தொடர்ந்து ஆப்பிஸ்ல மண்டகப்படி நடந்துகொண்டிருப்பதால்.. மேலும் நாலு நாளைக்கு லீவு சொல்லிக்கிறேன். முந்தைய பதிவு ரொம்ப நல்ல பதிவென நான் நினைத்துக்கொண்டிருந்தால் அதற்கு வரவேற்பு சொல்லிக்கிறா மாதிரியில்லை. அதற்கு பின்னூட்டம் போடாதவர்கள் மருவாதியாக போய் பின்னூட்டிவிட்டு வரவும். புடிக்கலைன்னாலும் சொன்னாத்தானே தெரியும்.! அதற்கும் முந்தைய கும்மிப்பதிவு உங்களுக்கு பிடிக்கலைன்னாலும் சொல்லவேண்டியதுதானே. ஒரு ஆள் ஒரு தடவை கும்மி அடிச்சா தப்பா? அதற்கு வராதவர்கள் நேரில் பார்க்கும்போது கடித்துவைக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை. போய் கும்மியில்லாவிட்டாலும் அட்டென்டன்ஸாவது போடவும். போட்டால் பிழைப்பீர்கள், இல்லைன்னா கடி நிச்சயம். நாலு நாளா ஆளைக்காணோமேன்னு ஒருத்தரும் வருத்தப்பட்டாமாதிரியே தெரியலை.. (வினோத் மாதிரி நானும்..)அவ்வ்வ்வ்..

தற்காலிக தண்டனையாக இந்த மீள்பதிவு. உங்களுக்காக இந்தப்பதிவில் கூடுதல் ரசனையான(?) வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே இதை மீள்பதிவு என்பதை விட திருத்தப்பட்ட சிறப்புப்பதிவு என சொல்லலாம். நான் ஒரு மீள்பதிவு போட்டதுக்கே என்னிய சுத்தி வெச்சு ரவுண்டு கட்னீங்களே.. கார்க்கி மீள்பதிவா போட்டு தாக்கிட்டிருக்காரே.. அங்கே போய் மட்டும் ஈன்னு இளிக்கத்தெரியுதா.. ஒழுங்கா மருவாதியா இதையும் ப‌டித்து ஓட்டு போட்டு பின்னூட்ட‌ம் போட்டு விட்டு போக‌வும். ஜாக்கிர‌த‌.!

******

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -4

பொதுத்துறையோ, தனியார் துறையோ, சிறிய நிறுவனமோ, பெரிய கார்ப்பரேட்களோ, ஸா.:ப்ட்வேரோ, ஆட்டோமொபைலோ பணியிடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் கல்யாணம் ஆகாதவர்களும், ஆனவர்களும் கலந்தே பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். (என்ன அரிய கண்டுபிடிப்பு என ந‌க்கல் பண்ணாமல் மேலே போகவும், விஷயம் இருக்கிறது)

பொதுவாக நாம் ஒரு பிரச்சினையை அனுபவிக்கும்போது என்ன செய்கிறோம்? ஒரு படத்தைப் பார்க்கிறோம். பின்விளைவுகளை அனுபவிக்கிறோம். நண்பர்கள், வேண்டியவர்களிடம், 'போகாதே.. போனால் ரண்டு நாளைக்கு வயித்தாலே போகும்' அப்படினு எச்சரிக்கிறோம். ஆனால் இந்த கல்யாணம் ஆனவர்கள் என்ன செய்கிறார்கள்.. கல்யாணமாகாதவர்களை ஒருவிதமான பொறாமையோடேயே பார்த்துவிட்டு, இவனுக்கும் கல்யாணம் நடக்கும் இவனும் சீர் கெட்டு போவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டுஎதைப்பற்றியுமே எச்சரிக்கை செய்யாமல் எதுவுமே நடக்காததுபோல பாவனை செய்துகொண்டு ஒரு வித 'ஸாடிஸ்ட்' போல இருந்துவிடுகிறார்கள்.

யாருக்காவது கல்யாணம் என்றால் சந்தோஷமாக சிரித்து வாழ்த்துகிறார்கள், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கல்யாணத்துக்கும் ஒரு எட்டு போய்வந்துவிடுகிறார்கள். நன்றாக உற்றுக்கவனிப்போமேயானால் அந்தச்சிரிப்பின் பின்னால் ஒரு சைக்கோ ஒளிந்துகொண்டிருப்பதையும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்து உள்ளூர மகிழத்தான் கல்யாணத்துக்கும் போகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடியும். இதுவரை எனது மூன்று எச்சரிக்கை பாகங்களையும் படித்தவர்களுக்கு லேசாக ஒரு சந்தேகம் வந்திருக்கக்கூடும். இவ்வளவு சொல்றானே இந்த ஆளு, ஏதாவது விஷயம் இருக்குமோ என்று. (சந்தேகம் வராதவர்களும், இந்த எச்சரிக்கைப்பதிவுகளை வெறும் காமெடிப்பதிவுகளாகவும் நினைப்பவர்கள் பிற பதிவுகளைப் படிக்க போகலாம் என்றும் இனி இந்த எச்சரிக்கைப் பதிவுகளை படிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்)

அவ்வாறு வந்தவர்களுக்கு இன்னுமொரு காரணம் சொல்கிறேன், படித்துவிட்டு நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.அதே அலுவலக‌ச்சூழல். கல்யாணமாகாதவர்களை கவனியுங்கள். லேட்டாக வந்தாலும் சரியான நேரத்துக்கு வெளியேறிவிடுவார்கள். அவர்களுக்கென்று நிறைய வேலைகள் இருக்கும், யாராவது அவர்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கக்கூடும், அல்லது இவர்கள் யாருக்காவது வெயிட் பண்ணப்போகவேண்டியிருக்கும். ஷாப்பிங், சினிமா, பார்ட்டி என நிறைய கமிட்மென்ட்ஸ். இப்போது மெதுவாக கல்யாணம் ஆனவர்களைக் கவனியுங்கள். நிச்சயமாக ஆ.:பீஸ் நேரத்துக்கு முன்னமே வந்துவிடுவார்கள். உங்களுக்கு முன்னால் அவர்கள் கிளம்பியதை உங்களால் ஒரு நாள்கூட பார்த்திருக்கமுடியாது. கேட்டால் நாங்கள் என்ன யூத்தா? பெண்டாட்டி, பிள்ளைகுட்டி ஆகிவிட்டது. வேலை, சின்சியாரிட்டி, சம்பாத்தியம் என இருந்தால்தானே முடியும் என்று ஜல்லியடிப்பார்கள். (நிஜம்தானே.. என்று உங்களில் சிலர் பயத்துடன் ஒப்புக்கொள்வது கேட்கிறது)

ஏன்.?

யாராவது யோசித்ததுண்டா? இன்னும் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள். புதிதாக கல்யாணம் ஆனவர் யாரையாவது அவருக்குத் தெரியாமல் கண்காணியுங்கள். கல்யாணம் ஆனப்புதிதில் லேட்டாக வந்து ஜொள்ளுவிட்டுக்கொண்டே சீக்கிரமும் ஓடிப்போவார்கள். (அவர்களுடைய மானேஜர்களும் கண்டுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தெரியும், என்ன நடக்கப்போகிறதென்று.) நாளாக நாளாக இந்த அலுவலக நேரம் கூடிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் செக்யூரிட்டி, சீட்டுக்கே வந்து சார் ஆ.:பீஸ பூட்டணும் என்று (கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுவதைத்தான் டீஸன்டாக எழுதியிருக்கிறேன்) சொல்லும்வரை கிளம்ப மாட்டார்கள்.

ஏனென்று யோசித்து வையுங்கள். தேவைப்படுவோர்கள் இதையும் (எச்சரிக்கை ஒன்று, இரண்டு, மூன்று) படியுங்கள். அடுத்த எச்சரிக்கையில் சந்திக்கிறேன். (அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது. இருப்பினும் காரணங்களை நான் மட்டுமே கூறிக்கொண்டிருப்பதைவிட வாசகர்களையும் சிந்திக்கத்தூண்டுவது ஒரு எழுத்தாளருடைய சரி.. சரி.. பதிவருடைய கடமையல்லவா?)

Monday, December 8, 2008

திருநெல்வேலி மாவட்டம் ஒரு வன்முறைக்களமா?

மயங்கும் மாலைநேரம். சூரியன் இப்போதுதான் மறைந்திருக்கவேண்டும். மரங்கள் அந்த இடத்தில் சூழ்ந்திருந்ததால் அதற்குள்ளாகவே இருட்டத் துவங்கியிருந்தது. சேரன்மகாதேவி விலக்கில் பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன். என்னுடன் இன்னும் நாலைந்து பயணிகள் காத்திருந்தனர். அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை யாரும் பயன்படுத்துவது போல தெரியவில்லை. அதனருகில் ஒரு சிறிய குடிசையில் ஒரு டீக்கடையும் இருந்தது. அதன் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் உட்கார்ந்து அந்த வெளிச்சத்திலும் பேப்பர் படிக்க முய‌ன்று கொண்டிருந்தார்.

நானும் அதற்கு மறுபுறம் அமைந்திருக்கும் ஒரு சிறிய கோவிலின் பின்புறமுள்ள‌ சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இந்த இடத்தில் சமயங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்துக்கிடக்கநேரிடும். ஆகவே எப்போதுமே சேரன்மகாதேவி சென்று திரும்புகையில் ஏதாவது புத்தகத்தை எடுத்துவருவது என் வழக்கம். ஆனால் இப்போது வெளிச்சமில்லாததால் படிக்கமுடியாமல் என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கும் பல வருடங்கள் முன்னால் அம்மாவுடன் சேரன்மகாதேவி வந்துசெல்லும் போது இந்த காத்திருத்தலை கழிப்பதற்காக சில கூழாங்கற்களை சேகரித்து 'களச்சிக்கல்' விளையாடுவோம். பஸ் வந்து நாங்கள் செல்லும் போது அந்த கற்களை கோவிலின் பின்புறமுள்ள ஒரு கல்லின் அருகில் போட்டுவிட்டு வருவோம், அடுத்தமுறை வரும்போது விளையாடுவதற்காக. அந்தக்கற்கள் இப்போதும் கிடக்குமா என்று நாங்கள் கற்களை போடும் இடத்திற்கருகில் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அவரை நான் கவனித்தேன். தாமிரபரணியில் குளித்துவிட்டு இடுப்பில் ஈர வேட்டி மற்றும் தோளில் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். ஏதோ தெரிந்தவராக இருக்குமா என்பதற்காகத்தான் அவரை கவனித்தேன் . இல்லை. 35 வயதிருக்கலாம். நல்ல உயரமான திடமான உடல்வாகு. இடதுகையில் கைக்கொள்ளும் அளவில் அகத்திக்கீரையை வைத்திருந்தார். ஆடுகளுக்காக இருக்கலாம். வலது கையில் ஒன்றரை அடி நீளத்தில் ஒரு பளபளப்பான அரிவாள் தெரிந்தது. வயலுக்கு சென்றுவிட்டு ஆற்றில் குளித்து வீடு திரும்பும் ஆண்கள் கையில் அரிவாள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமே அல்ல. அங்கே அது மிக சாதாரணம். அந்தக்காட்சி ஒன்றும் என்னை அவ்வளவாக கவரவில்லை. மீண்டும் நான் கற்களை தேடத்துவங்கினேன்..

அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அரிய சம்பவம் நிகழ்ந்தது. அவர் வந்துகொண்டிருந்த நேரெதிர் திசையிலிருந்த அந்த டீக்கடை குடிசையிலிருந்து அதே போன்ற ஒன்றரை அடி நீள அரிவாளுடன் ஒரு இளைஞன் 'ஹோ..'வென ஒரு மாதிரி சத்தமாக கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓடினான். பாய்ந்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கு ஒரு இருபது வயதுதான் இருக்கும், அவனும் நல்ல திடகாத்திரமாக இருந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக்கொண்டார். முதல் வெட்டை அவர் தன் அதிவேக நடவடிக்கையால் தனது அரிவாளில் தாங்கிக்கொண்டார். 'டங்' என சத்தம் எதிரொலிக்கிறது. அவர்களிடமிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் நான் நிற்கிறேன். இந்த மெல்லிய இருளில் இரண்டு அரிவாளும் மோதிக்கொண்டதில் எழுந்த தீப்பொறியைக் கண்டேன். இரண்டாவது வெட்டை இருவருமே அனுமதிக்கவில்லை. இருவரும் சம பலத்தில் இருந்ததால் ஒருவரை ஒருவர் கைகளால் தள்ளிக்கொண்டதில் பத்தடி தூரத்தில் இருவரும் யார் முதலில் அரிவாளை வீசப்போகிறார்கள் என்று தத்தளித்துக்கொண்டிருந்தார்கள்.

இது ஒன்றும் சினிமா அல்ல, மணிக்கணக்காய் சண்டை போட.. யார் முதலில் தவறுகிறார்களோ அவர் இறப்பது நிச்சயம். சில விநாடிகள்தான்.. மேலும் சில வீச்சுகள் காற்றிலே போயின. அதற்குள் அந்தக்கடையின் உள்ளிருந்த சில ஆண்கள் ஓடிவந்தனர். பின்பக்கமாக அந்த இளைஞனை கொத்தாக தூக்கிப்பிடித்தனர். இப்போது மாட்டிக்கொண்ட அவனை வெட்டும் கோபத்திலிருந்த அவரையும் தனியாக பிரித்து தனித்தனி திசைகளில் இழுத்துச்சென்றுவிட்டனர்.நான் அப்பாடி என்று பெருமூச்சு விட்டு திரும்பிப் பார்க்கிறேன். என்னுடன் காத்திருந்த பயணிகள் பஸ் ஆசையை துறந்து விட்டு மேற்கு நோக்கி ஓடி அதற்குள் அரைகிலோமீட்டரை கடந்துவிட்டிருந்தனர். அந்த சம்பவம் குறித்து எனக்கு இன்னும் சில கேள்விகள் மனதில் உண்டு.

அந்த இளைஞன் அவர் அரிவாள் கொண்டு வராத இன்னொரு நாளைப்பார்த்து ஏன் அட்டாக் செய்யவில்லை? அல்லது மரங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு அவர் தாண்டிச்சென்ற‌ பின்னர் பின்பக்கமாக சென்று ஏன் தாக்கியிருக்கக்கூடாது? அவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்திருப்பார்களோ? பின்னர் அவர்கள் சமாதானமாகி விட்டார்களா? அல்லது பிரிதொரு சமயத்தில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டார்களா? அரிவாள்களுக்கு நடுவே புகுந்து அவர்களை பிரித்த நபர்கள் செய்தது வீரச்செயல்தானா? பின்னங்கால் பிடரியில் பட ஓடிய பொதுஜனம் செய்தது சரிதானா?

டிஸ்கி: திருநெல்வேலி மாவட்டத்தைக்குறித்தும் ஜாதி, வன்முறை, அரிவாள் என்பது குறித்தும் பல்வேறு கதைகளும், ஒரு போலியான தோற்றமும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் உண்மைக்குப்புறம்பான கற்பனைக்கதைளே. அன்புக்காக எதையுமே விட்டுத்தரும் நல்ல உள்ளங்களை எங்கேயும் விட அதிகமாக அங்கு காண இயலும். இப்போதும் எங்கள் வீட்டு கதவுகள் இரவிலும் மூடப்படுவதில்லை. திருடர் பயம் என்பதை நான் கதைகள் தவிர நிஜத்தில் அங்கே கேள்விப்பட்டதேயில்லை. காவல் தெய்வங்கள் மீதான பக்தியும், விளைநிலங்கள் மீதான நம்பிக்கையும், கடும் உழைப்பும் என் சிறு வயதில் பார்த்த அதே அளவில்தான் இன்னும் இருக்கிறது என நான் நம்புகிறேன். கடும் மூர்க்கமானவர்கள், தாக்குவதற்கு அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தில் முழு உடன்பாடில்லை. மூர்க்கத்தனமானவர்கள் வேறெங்கும் இல்லையா? அவர்கள் எங்குமே நிறைந்திருக்கத்தான் செய்கிறார்கள். பதிலடியாக தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் எங்கள் பகுதிகளில் ஜாதிக்கலவரங்கள் நடந்ததாக எப்போதாவது நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனது சிறு வயதில் இரண்டு வன்முறைச்சம்பவங்களை பார்த்த சாட்சியாகவும் நான் இருந்திருக்கிறேன். அதில் ஒரு சம்பவத்தைத்தான் மேலே நினைவு கூர்ந்துள்ளேன். பதிவுக்கும், டிஸ்கிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முரண் எனக்கொள்ளாமல் ஒரு பரபரப்பான சம்பவம் என்ற வகையில் மட்டுமே கொள்ளுங்கள். உண்மையில் திருநெல்வேலி மாவட்டம் ஒரு வன்முறைக் களமல்ல என்றே நான் நம்புகிறேன்நன்றி.

Saturday, December 6, 2008

வாருங்க‌ள், பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் முக‌த்தில் க‌ரிபூச‌லாம்!

சனி, ஞாயிறுகளில் பதிவு போடக்கூடாது, அப்படிப்போட்டால் கடை காத்துவாங்கிவிடும் என்று பதிவுலக பெரிசுகள் ஆரம்பத்திலேயே எச்சரித்திருக்கிறார்கள். இன்னொரு பிரபல பதிவரும் அதையே சொல்லிக்கொண்டிருப்பார். அவர் பெயர் பரிசல்காரன் ஸ்டைலில் சொல்லப்போனால்.. முதல் இரண்டெழுத்தில் நாலுபேர் ஏறிக்கொண்டு ஊர் சுற்றலாம். அவர்கள் எச்சரிக்கையையும் மீறி இன்று பதிவு போடலாம் என முடிவு செய்து விட்டேன். பின்னே என்னங்க? ஆபீஸிலயும் பிளாகை மூடிட்டானுங்க, பகல்ல எழுத முடியறதில்லை. சனிக்கிழமை சாய்ந்திரமாத்தான் வேலையெல்லாம் முடிஞ்ச நிம்மதியில மனசு .:பிரீயா இருக்குது. பல சிந்தனைகள் பீறிட்டுக்கொண்டு வருகின்றன. நமக்கு சிந்தனை பீறிடுவதே ஒரு அதிசயம் இல்லையா? அதற்கும் போய் அணைபோட்டுத் தடுத்தால் எப்படி?

ஆகவே இன்று பதிவெழுதப்போவது உறுதி. நீங்களும் இந்தப்பதிவிற்கு அதிக ஓட்டுகளும், பின்னூட்டங்களும் வாரித்தந்து, சூடான இடுகையில் வரவைத்து அந்த பிரபல பதிவர்கள் முகத்தில் கரிபூசுவீர்கள் என நம்புகிறேன். எப்போதும் பாருங்கள்.. உங்கள் நினைப்பாகவே இருக்கிறது. அடுத்து இவர்களுக்கு எதைப்பற்றி சொல்லித்தரலாம்? என்ன அறிவுரை சொல்லலாம்? பெண்களின் கொடுமைகளில் இருந்து இவர்களை எப்படி மீட்டெடுக்கலாம்? இதே சிந்தனைதான். 'சரி அதைவிடு, இன்னிக்கு என்ன எழுதப்போகிறாய், அதை எழுது முதலில். பில்டப் அப்புறம் பாத்துக்கலாம்.' என்கிறீர்களா?

முதலில் இந்தப்பதிவுக்கு ஒரு தலைப்பு யோசிக்கவேண்டாமா? தலைப்பு என்றவுடன் இன்னொன்று ஞாபகம் வருகிறது. சமீபத்தில் இன்னொரு பிரபல பதிவர் பதிவெல்லாம் ஈஸியாக எழுதிவிடுகிறேன். தலைப்பு வைப்பதுக்குள் தாவு தீர்ந்துவிடுகிறது என்று போனில் அழாத குறையாக கூறினார். நீங்கள் எப்படி இவ்வளவு பிரமாதமாக வைக்கிறீர்கள் என்று கேட்டார். அப்படிச்சொன்னவுடன் எப்படி மறுக்கமுடியும்.? அவருக்கு சில ஐடியாக்களை அள்ளித்தெளித்தேன். அவர் யாரென கேட்கிறீர்களா? எல்லா காதலன்களும் தன் காதலியின் பெயருடன் இவரது பெயரின் இரண்டாம் பகுதியை இணைத்துக்கொண்டு புனைப்பெயர் வைத்துக்கொண்டு திரிவான்கள். தமிழ் மீதான பற்றில் இவரும் அப்படித்தான் வைத்துக்கொண்டுள்ளார். என்னது அந்த ஐடியாக்கள் வேணுமா?

1.%$%^$^&^*^&(*)(*)*(**&^*^%%$^%&^%^*&*)_)(_(*&^&%^%$^$%^$^$&^%^*^
௨%&^%&^%(*&(())_(*&*^&*&*&^(*&^(&)(*_)(
3. $^%&^%*&^*^(*^&*&^*)*(&*&^%.. என்னுது போதுமா? சரி.

என்ன இன்னும் பதிவையே நான் ஆரம்பிக்கவில்லையா? கொஞ்சம் பொறுங்களேன். ஒரு பதிவரிடமிருந்து போன் வருகிறது.. பேசிவிட்டு வருகிறேன்... "ஹலோ..." "ஹலோ.. மாங்காய் போட்டு புளிக்குழம்பு வைக்கணுமாம், கொஞ்சம் ரெசிப்பி சொல்லுங்களேன் தாமிரா"
இப்போதே அவர் யாரென தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு ஒரு க்ளூ. மல்லிகை மலரை இப்படியும் சொல்லலாம். இப்பிடித்தான் ஒருமுறை என் வீட்டுக்கு வந்த ஒரு பிரபல பதிவர் எனக்கு நல்லா சமைக்கவரும் என்று கூறிவிட்டு 'ரெடி டூ மேக்' சமோசாவை எண்ணையில் பொறித்துவிட்டு எப்படி என் சமையல் என்றார். அவர் யாரென தெரியணுமா? அய்யய்யோ க்ளூ கொடுப்பது கஷ்டமாச்சே.. அவர் நண்பர்கள் மீது அதீத பாசம் கொண்டவர், சமூகக்கொடுமைகள் கண்டு அதீத கோபம் கொள்பவர்.

வீட்டுக்கு வந்த பதிவர் என்றவுடன் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. நானே ஒரு நைன்டி பார்ட்டி என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். நன்னா அடிப்பேன், நன்னா அடிப்பேன் என்று கூறிவிட்டு ஒரு பதிவர் பாட்டிலை பார்த்த ஆர்வத்தில் குப்பென்று அடித்துவிட்டு ஒரே ரவுண்டில் பிளாப்பியாகிவிட்டார். அவர் யாரா? கொலைவிழும்.. மீ த எஸ்கேப்பு.!

என்னுது பதிவா? இவ்வளவு பெரிசா எழுதியிருக்கேனே.. இதுக்கும்மேல பதிவு வேணும்னா நான் எங்க போவேன்.. அவ்வ்வ்..

டிஸ்கி : பதிவில் வந்த வரிகளையே ஞாபகப்படுத்துறேன். "....ழுதப்போவது உறுதி. நீங்களும் இந்தப்பதிவிற்கு அதிக ஓட்டுகளும், பின்னூட்டங்களும் வாரித்தந்து, சூடான இடுகையில் வரவைத்து அந்த பிரபல பதிவர்கள் முகத்தில் கரிபூசுவீர்கள் என நம்புகிறேன். எப்போதும் பாருங்கள்.. உங்கள் நினைப்பா..."

Thursday, December 4, 2008

சொல்லாமலே விடைபெறும் இளமை..

அவனுக்கு வயது 25. அவளுக்கு வயது 23. அப்போதுதான் குளித்திருப்பாளோ? உடையில் ஆங்காங்கே ஈரம். இன்னும் காயாத கூந்தல். படுக்கையில் கிடந்த காதலனை நெருங்குகிறாள். இடது கை அவன் தலையை சுற்றியிருக்க முகத்தோடு முகம் நெருங்கியிருக்க வலதுகை விரலினால் அவன் முகத்தில் கோலமிடுகிறாள். இருவரின் மூச்சுக் காற்றும் கலக்கிறது. இவன் தூங்கும் அழகுதான் என்னை கொல்கிறதே.. எழுந்தால் தொல்லை செய்வான். முத்தமிட்டே அவனை எழுப்புகிறாள்.

‍‍‍ஊஞ்சலாடிய‌ இளமையை யாரும் மறுக்கவே மாட்டீர்கள். மறக்கவே மாட்டீர்கள். இன்று உங்களுக்கு என்ன வயதாகிற‌து? எத்தனை வருடங்கள்? எத்தனை மாதங்கள்? எத்தனை நாட்கள்? என்ன இரண்டு மூன்றுதானே பார்த்தமாதிரி இருந்தது. எப்போது இத்தனை முடிகள் நரைத்துப்போயின? போன வருடம் எடுத்த போட்டோவில் கூட எவ்வளவு அழகாயிருந்தேன்? என்ன இந்த படத்தில் இருப்பது நான்தானா? கழுத்தின் சதை தளர்ந்து எவ்வளவு சுருக்கங்கள்? கன்னங்கள் தடித்திருக்கின்றனவா? சைட் வாக்கில் கண்ணாடியை பார்த்துக்கொண்டால் கொஞ்சம் இளமை மிச்சமிருப்பதைப்போல தோன்றுகிறது. இன்னும் பல சமிக்ஞைகள் தெரிகின்றன‌வே? எப்போது இந்த‌ மாற்ற‌ம் நிக‌ழ்ந்த‌து? இதை தடுத்து நிறுத்த‌முடியுமா? முடியாது.

இன்னும் 30 வ‌ய‌து ஆக‌வில்லையா? கால‌ம் த‌ன் லாவகமான கைக‌ளுட‌ன் உங்க‌ள் பின்னாலேயே வ‌ந்து கொண்டிருக்கிறான். எந்த‌ நேர‌மும் உங்க‌ள் ப‌ர்ஸ் காணாம‌ல் போய்விடும். முன்னதாக ஒன்று செய்துகொள்ளுங்கள். அப்படியே கொண்டாடிக்கொள்ளுங்கள் உங்கள் இளமையை. ஆடிப்பாடுங்கள், கூத்தாடுங்கள், துள்ளிக்குதியுங்கள், இணையை முத்தமிட்டு மகிழுங்கள், கூடிக்குலாவுங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருநாள் திடுமென அது காணாமல் போய்விடும். இளமை திருடுபோவதை த‌டுப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம். 30 வ‌ய‌தை தாண்டிய‌வ‌ரோ, இளைய‌வ‌ரோ? இளமையை கொஞ்ச‌ கால‌ம் நீடித்திருக்கச் செய்ய‌ ஒரு வ‌ழியுண்டு. ஆனால் அதைச் சொல்வது‌ மிக‌ எளிது. செய்வ‌து உல‌க‌ க‌டின‌ம். சொல்கிறேன், முடிந்தால் செய்துகொள்ளுங்க‌ள்.

25 வ‌ய‌துக்கு இன்னும் வ‌ர‌வில்லையா? உங்களுக்கு தின‌மும் 2 கிமீ ர‌ன்னிங். 25லிருந்து 30 வ‌ய‌து. உங்களு‌க்கு தின‌மும் 2 கிமீ ஜாக்கிங். 30தை தாண்டிவிட்டாயா? உங்களு‌க்கு தின‌மும் 2 கிமீ வாக்கிங். நான் நன்கு அறிவேன். நீங்க‌ள் கேட்க‌ப்போவதில்லை. உங்க‌ள் இள‌மையை ஒருநாள் திடுமென‌ ப‌றிகொடுத்துவிட்டு அவ்வ்வ்.. என‌ அழுது கொண்டிருக்கப் போகிறீர்க‌ள். ஆல் தி பெஸ்ட்.!

டிஸ்கி : திரும‌ண‌த்திற்கும் இத‌ற்கும் மிக‌ நெருங்கிய‌ தொட‌ர்பு உண்டு, அதை குறிப்பிட‌ ம‌ற‌ந்துவிட்டாய் என‌ சில‌ர் அழுதுகொண்டிருப்பதையும், திருமணமாகாத 20 க‌ளிலிருப்ப‌வ‌ர்க‌ள் கெக்கேபிக்கேவென‌ சிரித்துக்கொண்டிப்ப‌தையும் என்னால் கேட்க‌முடிகிற‌து.

.

Wednesday, December 3, 2008

எஸ்.. பாஸ் !

உங்களில் தொழில்தொடங்க ஆசை இருந்தும் அதற்கான தைரியம் இல்லாமல், அதற்கு கடும் உழைப்பு தேவைப்படும் என்று உணர்ந்த சோம்பேறித்தனத்தால் இன்னும் 'எஸ் பாஸ்!' போட்டுக்கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர்? (பணமில்லை என்று ஜல்லியடிக்க வேண்டாம்).

சுமார் பத்துவருடங்களுக்கும் மேலாக ஏழு நிறுவனங்களில் குப்பைகொட்டிவிட்டு இப்போது எட்டாவது நிறுவனத்தில் குப்பைகொட்டிக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் மதிப்புக்குரிய எட்டு பாஸ்களிடம் வேலைபார்த்திருக்கிறேனா? இல்லை, அதிகம். சில நிறுவனங்களில் பாஸ்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பாஸ்களிடம் வேலைபார்க்கும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.ஒன்று கரைக்கு இழுத்தால் இன்னொன்று தண்ணீருக்குள் இழுக்கும். அவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் குறித்து எனக்கு ஏதேனும் பிரமிப்பு இருந்ததா? அவர்களிடம் ஏதேனும் தனித்திறன் இருந்ததா? அவர்கள் எனக்கு பாஸாக இருக்க தகுதியானவர்கள்தானா? இது கொஞ்சம் ரிஸ்கியான பதிவு என்பதால் பெயர், சம்பவங்கள் குறிப்பிட்டால் அம்பேலாகிவிடும் ஆபத்திருப்பதால், நான் மேலோட்டமாகவே இந்தப்பதிவை முடித்துக்கொள்கிறேன்.

மறக்கமுடியாதஅற்புதமான பாஸ்களிடம் வேலைபார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வெகு சிலரே. இப்போது நினைத்தாலும் பிரமிப்பேன். ஒரு ஆட்டோமொபைல் சர்வீஸ் நிலையம். டூ வீலர் என்பது போல மனதில் சீன் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். 7 லோபெட் டிரைலர்கள், (இடைச்செருகல்: 40 டயர்கள், 10 ஆக்ஸில்கள் கொண்ட 100 டன் எடையை அனாயாசமாக இழுத்துச்செல்லும் டிரைலர்கள், இவற்றை சமயங்களில் துறைமுகங்களில் கப்பல்களின் நிலையை சற்று மாற்றியமைப்பதற்காக பயன்படுத்துவார்கள். பிரமாண்ட சரக்கு கப்பலை ஒரு கயிற்றில் இந்த வண்டியுடன் கட்டிவிடுவார்கள். திணறிக்கொண்டு அதை இந்த லாரி இழுத்துச்செல்லும் போது பார்த்தால் பிரமித்துப்போய்விடுவீர்கள்), பத்துக்கும் மேற்பட்ட கிரேன்கள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் பழுதுபார்க்கும் திறன்வாய்ந்த சர்வீஸ் நிலையம். கடைசி தொழிலாளி வரை அன்புடன் பழகி, பிறருக்கு வேலையை ஒதுக்கிவிட்டு மானேஜராக இருப்பினும் தினமும் தனக்கென சில சர்வீஸ் வேலைகளையும் ஒதுக்கிக்கொண்டு லாரிகளுக்கு அடியில் படுத்து உருண்டு கொண்டிருந்த அந்த என் முதல் பாஸ் இன்னும் மறக்க இயலாத 27 வயது இளைஞன். தொலைபேசியிலேயே சைட்களில் இருக்கும் மெக்கானிக்குகளுக்கு ஆலோசனை வழங்கும் திற‌ன். அந்த வயதிலேயே அந்த அளவு திறனும், அவ்வளவு பெரிய பதவியும் அவனிடம் எப்படி வந்தது.?

சென்னையில் ஒரு வாகன உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலையில் சூப்பர்வைசராக இருக்கிறேன். நான் வேலையில் இணையும் போது தொழிற்துறையில் ஏற்பட்ட தொழில்முடக்கம் காரணமாக நிறுவனமே மூடப்படும் பரிதாப நிலையில் இருந்தது. அங்கே நான் கண்ட அந்த பாஸின் வெறி, இரண்டே வருடங்களில் 20 லட்சத்திலிருந்த நிறுவனத்தின் வரவுசெலவை 20 கோடிக்கு எடுத்துச்சென்ற வேகம், துணிச்சல், உழைப்பு, சக பணியாளர்களிடம் காட்டிய நெருக்கம், கண்டிப்பு என அவன் ஒரு அற்புதம். பிரச்சினைகளுக்கு தீர்வாய் அவன் இருந்தான். என்ன செய்வது எனத்தெரியாமல் திணறி பிரச்சினைகளோடு அவனிடம் சென்றால் அவன் தரும் பல தீர்வுகளில் பிரமிக்கலாம். தினம் தினம் உற்பத்தித்திறனை அதிகரிக்க குட்டி குட்டியாய் கருவிகளையும், வழிகளையும் கண்டுபிடித்துக்கொண்டேயிருந்தான். எங்கு கற்றான் அதை? எப்படி வளர்த்தான் அந்த திறனை?

இன்னொரு மல்டிநேஷனல் நிறுவனம். சிரிப்பு அள்ளிக்கொண்டு போகும்.. COOOOOL.. எவ்வளவு பிரஷர் அவனுக்கு இருந்தது என நான் அறிவேன். எப்போதும் எப்படி இவனால் சிரித்துக்கொண்டிருக்க முடிகிறது. உங்கள் எக்ஸ்பீரியன்ஸுக்கு என்னிடம் ஏன் இதை கொண்டு வர்றீங்க.. நீங்க என்ன பண்ணினாலும், நான் பண்றதை விட பெட்டராத்தான் இருக்கும். நீங்களே பண்ணிடுங்க என்று கீழேயிருக்கும் ஊழியர்களை ஊக்குவித்த அழகென்ன? ஆங்கிலத்தை அருவி மாதிரி அவன் பொழிந்த அழகென்ன? இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டேயிருக்கலாமே? ஆறுமாதங்கள் கழித்தே அவன் தாய்மொழி தமிழல்ல என்று அறிந்த போது பிரமித்தேன். தமிழில் நிறம் குணம் திடம் மாறாமல் எப்படி அவனால் பேச முடிந்தது? ஏழு மொழிகளில் கவிதை எழுதும் அளவு புலமையும், எப்பேர்ப்பட்ட மனிதர்களையும், சூழலையும் எதிர்கொள்ளும் இயல்பும் எப்படி வாய்த்தது அவனுக்கு?

மேற்சொன்னது போல மேலும் சிலர். அவர்களுடன் பணிபுரியும் போதெல்லாம், இவனிடம் நாம் ரிப்போர்ட் செய்கிறோம் எனில் அதற்கான தகுதி இவனுக்கு இருக்கிறது. நம்மிலும் சிறந்தவன். இவனிடமிருந்து கற்கவேண்டும் என நினைத்துக்கொள்வேன். தவறு நிகழ்ந்து அவன் கண்டிக்க நேரும்போது அவனிடம் மன்னிப்பு கோர எந்தத்தடையுமில்லை என்னிடம் என உணர்ந்திருக்கிறேன். தவறில்லையெனில் வாக்குவாதம் நிகழ்த்தியிருக்கிறேன். அவர்களிடமிருந்து ஆணை வரும்முன் அதை நிறைவேற்றும் ஆவலுடன் இருந்திருக்கிறேன்.

ஆனால்...சமயங்களில் சில மொக்கைச்சாமிகளிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி, நொந்து, பேசா மடந்தையாகி.. பின்னும் சொல்லநேருகிறது..
"எஸ்.. பாஸ்.!"


.

Monday, December 1, 2008

தங்கமணியின் இம்சைகள் : டாப் 5

நேற்று ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்த கண்ணனுடன் ஒரு அருமையான செஷன் போச்சுது. வழக்கமா தங்கமணி குறித்த பதிவுகளெல்லாம் போடும்போது என்ன.. ரமாவ கிண்டல் பண்றியா, இந்த கிண்டல் வேலையெல்லாம் உட்டுட்டு ஏதாவது உருப்புடியா எழுதுற வழியப்பாரு என்பான். ஆனா அவன் ஆளோட என்ன பிரச்சினையோ என்னவோ தெரியல நேற்று "என்னடா பெரிய எழுத்தாளன் மாதிரி ஒரே சீரியஸ் பதிவா போட்டுகிட்டிருக்கியே, பழசெல்லாம் மறக்கக்கூடாது ராசா.. எது ஒனக்கு இம்மாம்(?) பேரு வாங்கிக்கொடுத்துதுனு நெனச்சுப்பாரு.. ரசிகர்களெல்லாம் எதிர்பார்த்துக்கிடப்பானுங்க.." என்று என்னை தூண்டிவிட்டுட்டு யாரையோ நினைச்சு "அவள.." என்று பல்லை நறநறவென கடித்தான்.

"அடப்பாவி எல்லாம் ஒழுங்காத்தேனே போய்க்கிட்டிருந்தது, அதுக்குள்ள மீராவோட என்ன பிரச்சினை?". அப்புறம் வழக்கம்போல இருவரும் புலம்பிக்கொண்டோம். கல்யாணம் பண்ணிக்கொண்டவர்களுக்கு எந்த குறைச்சலுமில்லாமல் இந்த லவ் பண்ணித் தொலைந்துகொண்டிருக்கும் பசங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்புடைய விஷயம்தான். நானும் ரமாவும் பிரிவிலிருப்பதால் கோபம் நீர்த்து காதல் துளிர்த்துக்கொண்டிருப்பதால் என்னால் அந்த சப்ஜெக்டை சரிவர இப்போதைக்கு எழுதமுடியாது, ஆனால் அவள் ஜனவரியில் திரும்பி வந்ததும் புத்துணர்ச்சியோடு ஆரம்பிப்பேன் என்று பலமுறை சொல்லியும் நண்பர்கள் சிலரின் சோகத்தையாவது நீங்கள் எழுதியாக வேண்டும் என்று ஒரே அன்புத்தொல்லை. ஆகவே இந்த டாப் 5. த‌ங்க‌ம‌ணியின் இம்சைக‌ளை ப‌ட்டிய‌லிட‌ ஆர‌ம்பித்தால் இந்த‌ ப‌திவு ம‌ட்டும‌ல்ல‌ இந்த‌ வ‌லைப்பூவே ப‌த்தாது என‌ நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். இது ஏதோ என்ன‌ள‌வில் உண‌ரும் விஷ‌ய‌ங்க‌ளே. 'யுனிக்'கான‌ அவ‌ஸ்தைக‌ள் என‌ ஒவ்வொரு ஆண்க‌ளுக்கும் த‌னித்த‌னியே அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும். அதை நீங்க‌ள் ஒப்பிட்டுக்கொள்ள‌லாம்.

5. சாப்பாடு

துறை சார்ந்த விஷயங்களில் எழுத என்னிடம் ஒரு விஷயம் உண்டு. அதாவது ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்கிறார்? அதே காரியத்தை இன்னொருவர் எப்படிச்செய்கிறார்? அதே நபர் அதே காரியத்தை இன்னொருமுறை செய்யும்போது எப்படிச்செய்கிறார்? (Gauge R&R) என்பதுகுறித்த தொழில்நுட்பம். அதை விரிவாக பின்னர் பார்க்கலாம். ரமா நேற்று சாம்பார் என்று அவள் கூறிக்கொள்ளும் ஒன்றை வைத்தாள். ஏதோ நல்லாத்தான் இருந்த‌து. அதே ரமாதான். அதே அடுக்களைதான், அதே இடுபொருட்கள்தான்.. இன்றும் சாம்பார் வைக்கிறாள். வாயில் வைக்கவே முடியவில்லை. நூறு நாட்கள் வைத்தாலும் அது நூறு விதமான சாம்பாராகத்தான் இருக்கும். தோசை என்ன பண்ணியது? அதைக்கூட ஒரு நாள் புளிப்பு, மறுநாள் சப்பு, ஒருநாள் உப்பு.. இந்த லட்சணத்தில் நீங்கள் சப்பாத்தியைப்பற்றியெல்லாம் கேட்கக்கூடாது.

4. தொண தொணப்பு

என்னங்க, ராஜி வீட்டு பங்ஷனுக்கு போனப்போ நாம எடுத்த போட்டோவில ஊதா கலர் ஸாரியில எடுத்த படம் நல்லாயிருந்துதுன்னு சொன்னீங்கல்ல, அத பெரிசாக்கி பிரிண்ட் போட்டு லேமினேட் பண்ணனும். சரிம்மா, நீ வந்தவுடன் பண்ணிரலாம். இல்லிங்க ஒடனே வேணும், பண்ணி கொரியர் பண்ணுங்க.. ரெண்டு நாளா வேலை ஜாஸ்தியா இருக்குது. சண்டே பண்ணி மண்டே அனுப்பி வைக்கிறேம்மா.. நான் ஏதாவது சொன்னா உங்களுக்கு உடனே வேலை வந்துடுமே.. இப்ப என்னங்கற? நாளைக்கே பண்ணித்தொலையிறேன். (3 மணி நேரம்கழித்து..) பிரிண்டுக்கு கொடுத்தாச்சா? இன்னும் ஆபீஸ்லதான்மா இருக்கேன். (5 மணி நேரம் கழித்து..) என்ன பண்ணினீங்க.. மணி எட்டாகுதும்மா நாளைக்கு பண்ணிடலாம் (மறுநாள் காலை 7 மணிக்கு..) ம‌ற‌ந்துடாதீங்க (11 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..(1 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..

அரை நாள் லீவு போட்டேன்.

3. ப‌ர்சேஸ்

இது யுனிவெர்சல் பிராப்ளம். செருப்பில் என்ன‌ய்யா இருக்கிற‌து? இர‌ண்ட‌ரை ம‌ணிநேர‌ம் ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள். ஆர‌ம்பிக்கும் போது ஆவ‌லோடு க‌ல‌ந்துகொண்டு விட்டு அப்புற‌ம் மெதுமெதுவாக‌ சேரோடு செட்டிலானேன். என்னங்க‌ இதுல‌ ஹீல்ஸ் இல்ல‌, இது இதைவிட‌ 50 ரூபா அதிக‌ம், இது டிசைன் ந‌ல்லாயில்ல‌.. என்ன‌ ப‌ண்ண‌லாம். எதையாவ‌து நீயே செல‌க்ட் ப‌ண்ணிக்கோம்மா என்ன‌ விட்டுடேன். சொல்லுங்க‌ங்க‌.. இது அழ‌காயிருக்கும்மா, எடுத்துக்கோ.. அதை ம‌றுத்துவிட்டு வேற‌ எடுத்துக்கொண்டாள். மூணாவ‌து நாள் ஊரிலிருந்து போன் வ‌ருகிற‌து. என்ன‌ங்க‌ செருப்பு வாங்கிக்கொடுத்தீங்க‌.. இதுல‌ ஹீல்ஸே இல்ல‌.. என‌க்கு இது வேணாம், இப்ப‌ போனா மாத்திக்கொடுப்பானா?

2. ல‌க்கேஜ்

வீடு நிறைய‌ பொருட்க‌ள், உப‌யோக‌ப்ப‌டுவ‌து, உப‌யோக‌ம‌ற்ற‌து, வீணான‌வை என‌ வீடு நிறைந்திருக்கிற‌து. வீட்டை மாற்றுவ‌தெல்லாம் பிர‌ம்ம‌ பிர‌ய‌த்த‌ன‌மாகிவிட்ட‌து இந்த‌ இர‌ண்டே வ‌ருட‌ங்க‌ளில். நான் வேலை விஷ‌ய‌மாக‌ வெளியூர் செல்கிறேன். இர‌ண்டு நாட்க‌ளுக்கு தேவையான‌ உடை, செபோன் சார்ஜர், பேஸ்ட்,பிரஷ், ஆபீஸ் பைல்க‌ள், தேவைப்ப‌ட்டால் லாப்டாப் அவ்வளவுதான். அத்‌த‌னையும் ஒரே ஒரு பேக்கில், முடிந்த‌து.
நானும் ர‌மாவும் ஊருக்குக்கிள‌ம்புகிறோம். இர‌ண்டே பேர்தான். இர‌ண்டு பிக் ஷாப்ப‌ர்ஸ், ஒரு பெரிய‌ பேக், ஒரு அகலமான பிளாஸ்டிக் பை, முடிந்தால் ஒரு கால் மூட்டை அரிசி அள‌வில் ஒரு கோணிப்பையில் பொருட்க‌ள் மூட்டைக‌ட்டிய‌ நிலையில். ர‌யிலில் இருந்து வெளியே ஆட்டோவுக்குள் வ‌ருவ‌த‌ற்குள் ட‌வுச‌ர் கிழிஞ்சுடும்.. என்ன‌தான் இருக்கின்ற‌ன‌ அந்த‌ப்பைக‌ளில்.?

1. ர‌ச‌னை

ஒங்க‌ளுக்கு ம‌ண்டையில‌ ஒண்ணுமே கிடையாதுங்க‌, ஒங்க‌ளை யாரு வாங்க‌ச்சொன்னா, நா வ‌ந்த‌ப்புற‌ம் வாங்கிக்க‌லாம்னு சொன்னேன்ல‌.. பெட் ஸ்ப்ரெட் வாங்கியிருக்கிற‌ ல‌ட்ச‌ண‌த்த‌ப்பாரு..

பால் வெள்ளையில், குட்டிகுட்டியாய் ம‌ல‌ர்ந்திருந்த‌ க‌றுப்புப்பூக்க‌ள் என்னை ப‌ரிதாப‌மாக‌ பார்த்த‌ன‌.

டிஸ்கி : இந்த‌ப்பாயிண்டுக‌ளுக்கு ஓர‌ள‌வு தொட‌ர்புள்ள‌ முந்தைய‌ ப‌திவுக‌ளின் இணைப்புக‌ள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ப‌டித்திராத‌வ‌ர்க‌ள் சென்று ப‌டித்து பின்னூட்ட‌மிட்டுச்செல்ல‌வும். இப்போது த‌மிழ்ம‌ண‌ ஓட்டு முக்கிய‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுவ‌தால் ர‌சித்த‌வ‌ர்க‌ள் ஓட்டுப்போட்டுவிட்டு செல்லவும். அப்படிச்செய்பவர்களுக்கு இன்றுமட்டும் ம‌னைவிமாரிட‌ம் எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ராம‌ல் இருக்க‌க்க‌ட‌வ‌தாக‌..

Friday, November 28, 2008

துயரம்.. தவிப்பு.. ஆறுதல்..

பதைபதைக்கச் செய்யும் மும்பை தீவிரவாத தாக்குதலில் மனம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தச்சூழலில் ஒரு சிறப்புக்காவல் படையின் கமாண்டோவாக இருக்கும் துடிப்பான ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கவேண்டிய வாய்ப்பு கிடைத்தது. நூறு கோடியைத்தாண்டும் ஜனத்திரள் நிறைந்த தேசத்தில் இதுபோன்ற வன்முறைக்கூத்தாடும் தன்னிலை இழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கலாம்? சில நூறுகள்? சில ஆயிரங்கள்? சில ஆயிரங்கள் என்று வைத்துக்கொண்டாலுமே சதவீதத்தில் 0.00001 என்ற அளவில்தான் இருக்கக்கூடும்.

எங்கிருந்து கிளம்புகிறார்கள்? அவர்களுக்கான வேர்கள் எங்குள்ளன? வளரும் நாட்டின் பொருளாதார மற்றும் பல்துறை வளர்ச்சிகளைக் காணச்சகியாத சில வெளிநாட்டு சக்திகள் (இதில் வெளி வேஷமிடும் சில முக்கிய பெரிய நாடுகளும் இருக்கலாம்) நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை திடத்தன்மையை குலைக்க‌ ச‌தித்திட்ட‌மிடுகின்ற‌ன. பெரும் பிரிவினைகளுக்கான கூறுகள் மிகுந்த‌, கடும் ஊழ‌ல் கோலோச்சும் ஒரு பெரிய‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் இந்த‌ அள‌வு ஆமை வேக‌த்திலான‌ வ‌ள‌ர்ச்சியே ஆச்ச‌ரிய‌மிகுந்த‌து. இது எதிர்பார்ப்புக‌ளில்லாத அனைத்து துறைகளிலும் இருக்கும் உழைக்கும் வ‌ர்க்க‌த்தின் சாத‌னை. இதையும் பொறுக்காத‌ கூட்ட‌த்தின் ச‌தித்திட்ட‌ங்க‌ளே இவை. அவ‌ர்க‌ள் மிக‌ எளிதாக‌ உள்நுழைய‌வும், திட்ட‌ங்க‌ளைத்துவ‌க்க‌வும் ஆர‌ம்பிக்க‌ வ‌ச‌தியாக‌ உள்நாட்டு ஓட்ட‌ர‌சிய‌லுக்காக‌வும், ப‌ண‌ அர‌சிய‌லுக்காக‌வும் ந‌ம‌து அர‌சிய‌ல்வாதிக‌ள் அணையாம‌ல் பாதுகாத்துவ‌ரும் இன‌ப்பிர‌ச்சினைக‌ள் மிக‌வும் உத‌வுகின்ற‌ன‌.

க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்னேறும் வாய்ப்புக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்நிக‌ழ்வுக‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌, அர‌சால் க‌ண்டுகொள்ளாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌ சிறு சிறு ம‌க்க‌ள் கூட்ட‌ங்க‌ளையே ம‌த‌த்தின் பெய‌ராலும், க‌ட‌வுளின் பெய‌ராலும் (அவ‌ர்க‌ளை போன்ற‌ க‌ள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளை ப‌ண‌த்தால் வாங்குவ‌து அரிதாக‌வே இருக்க‌க்கூடும்) மூளைச்ச‌ல‌வை செய்து தீவிர‌வாத‌த்துக்கான‌ க‌ருவிக‌ளை த‌யார் செய்கின்ற‌ன‌ அந்த‌ பெரும் ச‌க்திக‌ள். அந்த‌ சிறு கூட்ட‌ங்க‌ள் நாள‌டைவில் த‌னித்து இய‌ங்கும் திற‌ன் பெறுகின்றன. அவற்றிற்கென கொள்கைகள் உருவாகின்றன. தனிமனித ஈடுபாட்டின் காரணமாகவோ பெரும் சுயந‌லத்திற்காகவோ சில‌ பேரிய‌க்க‌ங்க‌ளாக‌ வ‌ள‌ர்கின்ற‌ன‌. ச‌ம‌ய‌ங்க‌ளில் அவை த‌னித்து இய‌ங்கும் வ‌ல்ல‌மையும் பெறுகின்ற‌ன‌. அது போன்ற‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ற்றை உருவாக்கிய‌ ச‌க்திக்கே எதிராக‌வும் செய‌ல்ப‌ட‌ அவை த‌ய‌ங்குவ‌தில்லை.

அந்த‌ இய‌க்க‌ங்க‌ளின் உயிரைத்துச்ச‌மாக‌ ம‌திக்கும் முத‌ல்வ‌ரிசை தீவிர‌வாதிக‌ள் இதுபோன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் ப‌க‌டைக்காய்க‌ளாய் முன்னிற்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளை எப்ப‌டித்த‌டுப்ப‌து? இவ‌ர்க‌ளைத்த‌டுப்ப‌து மிக‌க்க‌டின‌மான‌ விஷ‌ய‌ம். இது எல்லையில் நிக‌ழும் போரோ, இர‌ண்டு ப‌டைக‌ளுக்கு ந‌டுவே நாடுக‌ளுக்கிடையேயான‌ போரோ அல்ல‌. அங்கு முத‌ல் வ‌ரிசைப்ப‌டைக‌ள் எப்போதும் உஷார் நிலையிலும், க‌ண்காணிப்பிலும் இருக்கும். பெரும்பாலான அந்த‌ ச‌ண்டைக‌ளில் சில‌ கிலோமீட்ட‌ர்க‌ள் த‌ள்ளியிருக்கும் எதிர்ப‌டையின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை நுட்பமான க‌ருவிக‌ள் கொண்டு தெரிந்துகொண்டு பெரும் லாஞ்ச‌ர்க‌ள், பீர‌ங்கிக‌ள், விமான‌ங்க‌ள் கொண்டு போர் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ம‌னித‌ர்க‌ள் நேருக்கு நேராக‌ நின்று ச‌ண்டையிட்டுக்கொள்ளும் நிக‌ழ்வுக‌ள் மிக‌ அரிதே.

ஆனால் தீவிர‌வாதிக‌ள் அதுபோல‌ல்லாம‌ல் எண்ணிக்கையில் மிகச்சிறியதாக இருப்பதால் எளிதாக மிகுந்த‌ ஜ‌ன‌த்திர‌ளுக்குள் க‌ல‌ந்துவிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை பிரித்தெடுப்ப‌தோ, திட்ட‌ங்க‌ளை தெரிந்துகொள்வ‌தோ மிக‌வும் க‌டின‌மான‌ செய‌லாக‌ ஆகிவிடுகிற‌து. அவ‌ர்க‌ளின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், திட்ட‌ங்க‌ளையும் தெரிந்துகொள்வ‌தில் உள‌வுத்துறையின‌ர் முன்னெப்போதுமில்லாத‌ நுட்ப‌த்துட‌னும், முக்கிய‌த்துவ‌த்துட‌னும் செய‌ல்ப‌ட்டால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ளைத்த‌டுக்க‌முடியும். அல்ல‌து உல‌கெங்கும் தீவிர‌வாத‌ அமைப்புக‌ள் என்று அறிய‌ப்ப‌டும் அமைப்புக‌ளை, இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் ஊற்றக்க‌ண்ணாக‌ இருக்கும் இய‌க்க‌ங்க‌ளை த‌ய‌வு தாட்ச‌ண்ய‌மின்றி அழித்தொழிக்க‌ உல‌க‌நாடுக‌ள் க‌ர‌ம்கோர்க்க‌ வேண்டும். அது நிக‌ழ்வ‌தும் அரிதே.

மும்பையில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தீவிரவாத வெறியாட்டத்தை எடுத்துக்கொண்டோமானால், இது போரைப்போலல்லாமல் ஒரு செயலைப்போல (Operation) நடத்தப்பட்டுள்ளது. மிகுந்த கூட்டம் நிறைந்த ஒரு ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு (Open fire) நிகழ்த்தி அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதென்பது அநியாயமான ஒரு செயலாகும். எந்த முன்னறிவிப்போ, முன்னேற்பாடோ இல்லாமல் காவல் படையினர் இந்த சம்பவத்தை எதிர்கொள்வது மிகக்கடினம். அதுபோலத்தான் பலநூறு அறைகள் கொண்ட தாஜ் விடுதியில் ஒளிந்துகொண்டு விருந்தினர்களை கொன்று குவித்துவரும் சில தீவிரவாதிகளை பிடிப்பதும் மிகச்சவாலான விஷயமே. சில மணி நேரங்கள் போராடும் சக்திகூட அற்ற அந்த சில தீவிரவாதிகளை ஒரு பெரும்படையினரே இரண்டு நாட்களாக போராடிவருகின்றனர் என்றால் அந்தச்சூழலே காரணம். உளவுத்துறையின் அதிதீவிர முன்னறிதலே இவற்றிலிருந்து நம்மைக்காக்கும் சிறு உபாயம்.

சினிமாக்க‌ளில் வ‌ருவ‌து போல‌வும், வீடியோ கேம்க‌ளில் வ‌ருவ‌து போல‌வும் ஒரு க‌ட்டிட‌ம் தீவிர‌வாதிக‌ள் பிடிக்குள் சிக்குகிற‌து. அவ‌ர்க‌ளை மீட்க‌ க‌மாண்டோக்க‌ள் ஹெலிகாப்ட‌ரில் இருந்து விடுதியின் மேல்த‌ள‌த்தில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ துப்பாக்கிக‌ளுட‌ன் குதிக்கின்ற‌ன‌ர். இரண்டு வீரர்கள் அவர்களின் அடுத்த மூவ் குறித்து ஏதோ பேசிக்கொள்கிறார்கள், ஒருவர் விளிம்போடு ஒட்டிய நிலையில் உன்னிப்பாக டார்கெட்டை கவனித்துக்கொண்டிருக்கிறார். இந்த‌க்காட்சியை பார்த்த‌போது சில்லிட்டுவிட்டேன் நான். களத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?


ராணுவம், கப்பல்படை, விமானப்படை, தேசிய பாதுகாப்புப்படை, ரயில்வே இன்னும் பல முக்கிய சீருடைப்ப‌ணித்துறைகளிலும் தனித்தனியான துடிப்பான கமாண்டோ பிரிவுகள் உள்ளன. கமாண்டோக்களின் பணி மிகவும் சீரியது. அவர்கள் சூழலை மிக உன்னிப்பாக உள்வாங்கிக்கொள்வார்கள். புலன்கள் மிகவும் துல்லியமாக இருக்கும். துடிப்பானவர்கள். கடும் பயிற்சிபெற்றவர்கள். கமாண்டோ படைப்பிரிவிலிருந்து விலகும் வரை தொடர் பயிற்சியில் இருந்துகொண்டேயிருப்பார்கள். குழுவாக‌ இய‌ங்குவார்க‌ள். பெரும்பாலும் 20லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பர். தேசத்திற்காக, மக்களுக்காக என்ற உயரிய எண்ணம் இருப்பினும் தானிருக்கும் அந்தக்குழுவிற்காக, அதிலிருக்கும் தன் நண்பன் சக வீரனுக்காக என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கும். ஒரு குழுவின் ஒரு வீரன் அடிபட நேர்ந்தால் அந்தக்குழுவிற்கு கடும்வேகமும், உயிரையே துச்சமாக நினைக்கும் வெறியும் ஏற்படும். இந்த மும்பை மீட்புப்பணியிலும் துடிப்பான முன்வரிசை வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். அவர்களின் தியாகம் அளப்பரியது. சில நாட்களில் நாம் அவர்களை மறந்துபோகக்கூடும். இருப்பினும் அவர்களைப்போன்ற காக்கும் வீரர்கள்தான், மறைந்திருக்கும் இந்தக்கோழைக‌ள் சில ஆயிரம் பேர்களிடமிருந்து நம் நூறு கோடி பேரையும் காக்கவேண்டும்.

ஜெய் ஜவான்.!


டிஸ்கி : இந்த கொடும் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகளை விடவும் ஆபத்தானவர்கள், மீண்டும் பல்வேறு இடங்களில் தாக்குதல் என்று வதந்திகளை கிளப்பி மும்பையை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியவர்களும், வேடிக்கை பார்க்கவென ஆயிரக்கணக்கில் கூடி குழப்பத்தையும், ராணுவ நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலையும் விளைவித்தவர்களும்தான் என நான் நினைக்கிறேன்.

Thursday, November 27, 2008

கொஞ்சம் வீரமும் என் தாய்மாமனும்

     கீழே விழுந்துகிடந்த மாங்காய்களில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு கடித்து சாப்பிடத்துவங்கினேன். சில வேலையாட்கள் மாங்காய்களை பறித்துப்போட்டுக்கொண்டும், அதை கோணிகளில் சேகரித்துக்கொண்டும் இருந்தனர். கொஞ்சம் தள்ளி நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் செல்வன், என் தாய்மாமன். அவரின் மாந்தோப்புதான் இது. 

     அவர் நின்று கொண்டிருந்த இடம் அவ்வளவு தெளிவாக இல்லாமல் கொஞ்சம் புல் பூண்டுகளுடன் இருந்தது. இங்கே போரடிக்கிறது. இவருடன் வராமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். மாங்காயைக் கடித்துக்கொண்டே, எப்போது வீட்டுக்கு கிளம்புவாரோ என்று யோசித்துக்கொண்டே அவரை நெருங்கினேன். அப்போது ஏதோ கடித்ததைப் போல விருட்டென காலை உதறிக்கொண்டு குனிந்தார். அவர் இடது காலின் பெருவிரலுக்கு மேலாக சரியாக அந்த நரம்பு பகுதியில் ஏதோ குச்சி போல குத்திக்கொண்டிருந்தது. நன்கு கவனித்தபோதுதான் தெரிகிறது, அரையடி நீளமேயிருந்த மிகச்சிறிய பாம்புதான் அப்ப‌டி விரைப்பாக‌ க‌டித்த‌ப‌டி பிடியை விடாம‌ல் இருக்கிற‌து. கொஞ்சம் கூட பரபரப்பேயில்லாமல் அத‌ன் வாலைப்பிடித்து இழுத்து பிரித்து தூக்கி பார்த்துவிட்டு தூர‌ வீசுகிறார். என‌க்கு ப‌ட‌ப‌ட‌ப்பு அட‌ங்க‌வில்லை. "ந‌ல்ல‌ பாம்பு மாதிதான் தெரியிது. எதுக்கும் குச்சில்ல‌ ஏதாது க‌யிறு இருந்தா எடுத்துட்டு வா முருகா" என்றார். முருக‌ன் ஓடிப்போய் அடுத்த‌ சில‌ விநாடிக‌ளில் ஒரு மெல்லிய‌ நைலான் க‌யிறுட‌ன் வ‌ருகிறார். அதை வாங்கி இருவ‌ரும் சேர்ந்து க‌ணுக்காலுக்க‌ருகில் இருக்க்க்க்கி க‌ட்டிவிட்டு சாவ‌காச‌மாக‌ "கிள‌ம்ப‌லாமா?" என்றார். அட‌ப்பாவி சீக்கிர‌ம் ஆஸ்ப‌த்திரி போக‌ணுமே என‌ நினைத்துக்கொண்டே "ஆஸ்ப‌த்திரிக்கு போவேண்டாமா மாமா" என்கிறேன் நான். "போலாம் வா" என்றவாறே கிளம்பி பைக்கில் அங்கிருந்து சுமார் 5 கிமீ இருக்கும் வீட்டுக்கு சென்று வாசலிலேயே என்னை இறக்கி விட்டு விட்டு "யாருகிட்டயும் ஒளறிக்கிட்டிருக்காதே, நா ஆஸ்பத்திரிக்கி போயிட்டு கொஞ்ச நேரத்தில வந்துர்றேன்" என்று கிளம்பி போய்விட்டார். நானும் சீரியஸாக ஒண்ணுமில்லை போலும் என்று நினைத்துக்கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்கத்துவங்கினேன். மாலையில் ஒரு ஆள் வந்து "ஐயா ஆஸ்பத்திரில இருக்கார், ஒண்ணுமில்ல கால்ல ஏதோ பூச்சி கடிச்சிருச்சாம்" என்று சொன்னவுடன் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கு சென்றால் அவருக்கு படுக்கையில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தூங்கிக்கொண்டிருந்தார். காலில் கட்டு போடப்பட்டிருந்தது. கயிறு அவிழ்க்கப்பட்டிருந்தாலும் கட்டப்பட்ட இடத்திற்கு கீழே நல்ல கருநீலமாக கால் நிறம் மாறியிருந்தது. கட்டுக்கு மேலாகவும் லேசாக நிறம் பரவியிருந்தது. கூட்டத்தின் களேபரத்தால் விழித்தார் அவர். நான் அருகில் சென்று பயத்துடன் அவரைப்பார்த்தேன். அவரோ அவருடைய பிராண்ட் உரத்த சிரிப்புடன், 

"எலே, அது நெசமாவே நல்ல வெசப்பாம்புதான் போலிருக்குது" 

****** 

    இன்னொரு சந்தர்ப்பத்தில் சேரன்மகாதேவி ஆற்றில் குளித்துவிட்டு, அவர், நான் அவர் நண்பர்கள் சிலர் என‌ பாலத்திலிருந்து ஊரை நோக்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்துவந்தபோது "என்னிக்குதான் நீ சைக்கிள் ஓட்ட படிக்க‌ப்போறே? நீ ஓட்டு. நா புடிச்சிக்கிடுதேன்" என்றார் செல்வம். நானும் நிரம்ப ஆர்வத்துடன் வாங்கி ஏறி ஓட்ட ஆரம்பிக்க அவர் பின்னால் பிடித்துக்கொண்டே வந்தார். அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டேயிருந்தேன், அவர் பிடித்திருக்கிறாரா என்று. "பொடதியில் போட்டேன்னா தெரியும், ஒழுங்கா ரோட்ட பாத்து ஓட்டுலே" என்றார். முன்னே பார்த்து ஓட்ட ஆரம்பித்து சில நிமிடங்களில் தற்செயலாக அடக்கமுடியாமல் பின்னே பார்த்தால் சாவதானமாக அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டே எங்கோ நடந்து வந்துகொண்டிருந்தார். நான் விழுந்தாலும் ஓடி வந்து பிடிக்கும் தூரமே அல்ல அது. ஐயகோ... சைக்கிள் என் கட்டுப்பாட்டை மீறி கீழே குப்புற தள்ளியது. நடு ரோட்டில் குப்புற விழுந்துகிடந்தேன். கைகால்களில் சிராய்ப்புகள். கீழுதடு வெட்டுப்பட்டு ரத்தம் கொப்பளித்தது. அவ்வ்.. அழ ஆரம்பித்தேன். சிரித்துக்கொண்டே ஓடி வந்தவர் சைக்கிளை தூக்கிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார். 

  "இதுக்காடா அழுவாம் புள்ள.. பொம்பள புள்ளயா நீ? அவுங்கதான் சின்ன விசயத்துக்குல்லாம் ஈன்னு இளிவிக்கிட்டிருப்பாங்க.." என்று கேலி செய்து அவர் நண்பர்களுடன் சிரிக்க ஆரம்பித்தார். வலி போகவில்லை, ஆனால் அவமானம் தாங்காது என் அழுகை உடனே நின்றது. 

****** 

  ஒரு முறை அவருக்கு சொந்தமான ஒரு ப‌ழைய கட்டிடத்தின் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதைப்பார்வையிடச் சென்றார். முதல் மாடியின் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது அந்த மொத்த பால்கனியே இடிந்து அப்படியே தரையில் விழுந்தபோது அவரது இரண்டு கால்களும் இடிபாடுகளுக்குள்ளே சிக்கி இரண்டு பாதமூட்டுகளும் சிதைந்து நடக்க இயலாமல் போனது. வேறு யாருமெனில் வருடங்கள் எடுத்திருக்கும் அதிலிருந்து மீண்டு வர. மூன்றே மாதங்களில் ரேஸில் ஓடும் வெறியுடன் கால்களை சரியாக்கி மீண்டார். படுக்கையிலிருந்தபோது சிரிப்பும் கூத்துமாக கழிந்தன நாட்கள். வலியின் துளியையும் அந்தக்கண்களில் நான் கண்டதில்லை. 30 நாட்களில் சுவரைப்பிடித்துக்கொண்டு எழ முயற்சிக்கும் போதும் அவநம்பிக்கையோ, வருத்தத்தின் சாயலோ சிறிதுமின்றி முயற்சித்தார். "மாமாவை புடிச்சிக்கோ" என்று வீடே அதிர‌ச்சிரித்தார். 

வீரம் வீரம்னு சொல்றாங்களே ஒரு வேளை அது இதுதானோ?

Tuesday, November 25, 2008

லீன் என்றால் என்ன?

ஊருக்குப் போய்விட்டு நல்லபடியாக திரும்பியாயிற்று.வேலை விஷயமாக, சொந்த விஷயமாக என்று இரண்டு வாரங்களாக அலுவலகத்தில் இல்லாததால் ஒரு பெரிய வேலைப்பளு காத்திருக்கிறது. இருப்பினும் கடையும் நான்கு நாட்களாக காத்து வாங்கிக்கொண்டு கிடக்கிறது, அதையும் கவனிக்க வேண்டும். எழுதுவதற்காக நிறைய தங்கமணி மேட்டர்கள் மண்டைக்குள் கிடந்து குழம்பிக்கொண்டிருந்தாலும், லைட்டாக ஒரு பதிவு போடலாமே என்று ஒரு ஐடியா. துறை சார்ந்து நான் எழுதிய சில பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது நினைவுக்கு வருகிறது. குறிப்பாக "சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்" நல்ல வரவேற்பைப்பெற்றது. அதன் தொடர்ச்சியை எழுத சில நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். மொத்தமாக மூன்று பகுதியாக அதை எழுத திட்டமிட்டிருந்தேன். மீதி இரண்டு பகுதிகளையும் விரைவில் கண்டிப்பாக எழுதுவேன். இந்த 'லீன்' என்ற விஷயமும் கிட்டத்தட்ட 'சிக்ஸ்சிக்மா' வைப்போலவே தொழிற்துறையில் பரவலாக பேசப்பட்டு, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்தான். ஆகவே அதையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை.சொல்லப்போனால் இரண்டும் அக்கா, தங்கை போலத்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இதுவும் மெக்கானிகல் துறைக்கு மட்டுமே என்றில்லாமல் அனைத்து துறைகளிலுமே பயன்படுத்தத் தகுந்த‌தே. நிறைய தொடர்புகள் இருப்பதால் இதைத் தொடரும் முன்பு 'சிக்ஸ் சிக்மா' முதல் பகுதியை படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுவது நல்லது.


'லீன் என்றால் என்ன?'


சிக்ஸ் சிக்மாவைப்போல முறுக்கு சுற்றாமல் ஒரே வரியில் இதற்கு பதில் சொல்லிவிடலாம். "ஒரு செயலை (Process) நன்குஆராய்ந்து அதில் நிகழும் விரயங்களை (Wastages) கண்டு பிடித்து அதை நீக்கி/ அல்லது முடிந்த வரை குறைத்து அந்த செயலின் உற்பத்தித்திறனை(Productivity) உயர்த்துவதே 'லீன்' வழிமுறைகள் எனப்படுகிறது" இன்னும் நன்றாக சொல்லவேண்டுமெனில் பொது மருத்துவருக்கும், ஸ்பெஷலிஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப்போல பிற விரயங்களையும் லீன் கணக்கில் கொள்கிறது எனினும் "நேர விரயத்தை" குறைப்பதிலேயே லீன் ஸ்பெஷலிஸ்ட்டாக செயல்படுகிறது.


ஒரு உதாரணம் பார்க்கலாம்.
நான் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறேன். அங்கே இட்லி தயாரிப்பது ஒரு செயல். மாஸ்டர் கார்க்கிக்கு(இவர் இட்லி ஸ்பெஷலிஸ்ட்) மூன்று பங்கு மாவு, சட்டி பானைகள், அடுப்பு எல்லாம் தரப்படுகிறது.அவர் சரியாக 30 நிமிடத்தில் 150 இட்லிகளை தயாரிக்கிறார். (எனக்கு மேலும் 50 இட்லிகள் தேவைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? நான் அவருக்கு மேலும் பத்து நிமிடம் மற்றும் ஒரு பங்கு மாவு தரவேண்டும்.. சரிதானா? இது ஒரு சாதாரண செயல். இது உற்பத்தித்திறனில் விரிவாக்கம் (Expansion) செய்தலாகும். இதில் 'லீன்' எல்லாம் இல்லை.)


சோதனை :

எனது இன்னொரு மாஸ்டரான வெண்பூவை இட்லி சுட அழைக்கிறேன் (இவர் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட், இருப்பினும் லீனில் இது போன்ற சோதனைகளெல்லாம் செய்யப்படவேண்டும்).அவருக்கும் அதே அளவு மாவு, மற்றும் வசதிகள் தரப்படுகின்றன.என்ன ஆச்சரியம்? இவர் அதே மாவில் அதே 30 நிமிடத்தில் 152 இட்லிகளை தயாரித்துவிடுகிறார். புதிதாக சேர்ந்துள்ள மாஸ்டர் அப்துல்லாவும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படுகிறார். அவர் கார்க்கியைப்போலவே 150 இட்லிகளைத் தயாரித்தாலும் இன்னொரு ஆச்சரியமாக 28 நிமிடங்களில் வேலையை முடித்துவிடுகிறார்.

சோதனை முடிவுகள்:

கார்க்கியும், அப்துல்லாவும் வெண்பூவைப் போலில்லாமல் இரண்டு இட்லிகளுக்கான மாவை சிந்தியும் சிந்தாமலும் விரயம் செய்கிறார்கள். அப்துல்லாவைப் போலில்லாமல் வெண்பூவும், கார்க்கியும் சொந்தக்கதையை யோசித்துக்கொண்டோ, பராக்கு பார்த்துக்கொண்டோ 2 நிமிடங்களை விரயம் செய்கிறார்கள்.


இவையே லீனில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் கையாளும் வழிமுறைகளில் சிறப்பானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதையே அனைவரும் கடைபிடிக்கும் படி செயல்திட்டத்தை (Procedure) ஏற்படுத்தப்படவேண்டும். இடுபொருட்களில் எந்த பெரிய மாற்றமும் செய்யாமல் செயல்முறைகளில் சிறிய மாற்றங்களைச்செய்து விளைபொருட்களில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதே லீன் சிஸ்டம் எனப்படுகிறது.


மனிதர்களை எந்திரங்களாக கருதி அவர்களின் விநாடிகளைக்கூட அளவிடும் நேர அளவீடு (Time study),ஸ்பெஷலிஸ்ட்டுகளை இல்லாமல் செய்தல் (De-skilling) போன்ற விஷயங்களை இந்த லீனின் குறைபாடுகளாக காணும் மாற்றுக்கருத்துகளும் உண்டு.மொத்தத்தில் லீன் எனப்படுவது ஒல்லியாகவும் இல்லாமல்,குண்டாகவும் இல்லாமல் "கச்சிதமாக" இருப்பதையே குறிக்கிறது.


எளிய சந்தேகங்களையும்,மேலும் தெளிவான விளக்கங்களையும், தவறு இருப்பின் திருத்தங்களையும் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தலாம். வரவேற்கிறேன்.

Thursday, November 20, 2008

கொஞ்சம் மண்ணெண்ணையும் கொஞ்சம் சமூக சிந்தனையும்..

"கடும் தாகத்துடன் அந்த அறைக்குள் வந்த நான் நீரென நினைத்து அந்த வாட்டர் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை அவசரத்தில் குடித்து விருட்டென வாந்தியெடுத்தேன்."

மேற்சொன்ன வரிகள் ஒருவருக்கு நிஜமாகவே நடந்தவை. இதில் என்ன சிறப்பு இருக்கிறது? இது அனேகருக்கும் நடப்பதுதானே. வாருங்கள் ஏதாவது சிறப்பு இருக்கிறதா என பார்ப்போம்.

நல்ல வெயிலில் கடும் தாகம் மற்றும் களைப்புடன் அறைக்குள் நுழைகிறேன். தண்ணீர்க்குடம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. பாட்டில்கள் காலியாக கிடக்கின்றன. இடது பக்கத்து அறை பூட்டப்பட்டிருக்கிறது. வலப்பக்க அறை பூட்டப்படவில்லை. சும்மா திறந்திருந்த கதவை தள்ளியவுடன் திறந்துகொண்டன. யாரும் இல்லை. எங்கே போயிருப்பான்கள்? பக்கத்து கடைக்கு போயிருப்பான்கள். அல்லது கீழே நின்று தம்மடித்து கதையளந்து கொண்டிருப்பான்கள். இங்கேயாவது தண்ணியிருக்கிறதா? அவசரத்தில் தேடினேன். ந‌டு அறையில் பாயின் மேல் ஒரு பிஸ்லெரி வாட்ட‌ர் பாட்டிலில் அந்த‌ நீர்ம‌ம் இருக்கிற‌து. கொஞ்சங்கூட எனக்கு சந்தேகப்படத் தோன்றவில்லை. அது நீரா? பிற‌ ஏதுமா? என்று ஆராயும் அள‌வில் நான் நிதான‌மாக‌ இல்லை. அப்ப‌டியிருந்த‌து என் தாக‌ம்.

விருட்டென‌ போய் குனிந்து அதை எடுத்தேன். நிமிரும் முன்பாக‌வே மூடியை திற‌க்க‌ ஆர‌ம்பிக்கிறேன். என்ன‌ எங்கோ லேசான‌ கேஸ் க‌சியும் வாடை வ‌ருகிற‌தே? இந்த அறையில் கேஸ் கிடையாதே.. ந‌ன்கு நிமிர்ந்துவிட்டேன். மூடி முழுவதுமாய் திற‌க்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ந‌ன்கு வாடை வீசுகிற‌தே, இப்போது அறைக்குள் வ‌ரும்போது கூட‌ இல்லையே.. திடீரென‌ எப்ப‌டி? பாட்டில் வாய‌ருகே சென்று கொண்டிருக்கிற‌து. அய்ய‌ய்யோ க‌டும் கேஸ் லீக்.! கீழே இருக்கும் இரும்புப்ப‌ட்ட‌றையிலிருந்துதான் கேஸ் லீக் ஆகிற‌து. ஆப‌த்து.! உட‌னே எச்ச‌ரிக்க‌வேண்டும். சில‌ விநாடிக‌ள்தானே த‌ண்ணீரைக்குடித்துவிட்டு ஓடிப்போய் சொல்ல‌லாம். அய்யோ.. சிலிண்ட‌ர் வெடித்தே போய்விட்ட‌து...

.... FROOOOOOCSH....

வான‌வில்லை ஏற்ப‌டுத்திக்கொண்டு அறையிலேயே ம‌ண்ணெண்ணையை விசிறித்துப்பினேன். பாட்டிலை போட்டுவிட்டு வெளியே ஓடி வ‌ந்து ஓங்க‌ரித்து துப்பிக்கொண்டிருந்தேன். ம‌ட‌த்த‌ன‌மாக‌ ம‌ண்ணெண்ணையை குடித்துவிட்டு சில விநாடிகளுக்குள் என்னே ஒரு சோஷிய‌ல் சிந்த‌னை.. சை.!

சில துளிகள் உள்ளேயும் போய்விட்டது போல இருக்கிறது. வாய் முழுதும் ஒருமாதிரி சொல்லொணாத வண்ணம் குறுகுறுவென உறுத்திக்கொண்டிருந்தது. கையில் ம‌ண்ணெண்ணை ப‌ட்டாலே சோப்பு போடாம‌ல் போய்த்தொலையாது. வாயில் எப்ப‌டி சோப்பு போடுவ‌து? போடலாமா? இன்னும் கொஞ்சம் குமட்டிக்கொண்டு வருமோ? அப்புற‌ம் தைரிய‌ம‌ற்று அரைம‌ணிநேர‌ம் வாய்க்கொப்ப‌ளித்துக் கொண்டிருந்தேன்.

டிஸ்கி : அவ‌ச‌ர‌மாக‌ ஊருக்குப்போவ‌தால் (செவ்வாய்க்கிழ‌மைதான் ரிட்ட‌ர்ன்) க‌டையை காத்தாட விட்டுவிடாம‌ல் ப‌ழைய‌ ப‌திவுக‌ளை ப‌டித்துக்கொண்டிருக்க‌வும். வந்து பார்க்கும் போது ஹிட்ஸ் 25000த்தை தொட்டிருக்கவேண்டும். இதோ ஓடி வ‌ந்துவிடுவேன். யாருக்கெல்லாம் அல்வா வேண்டும்.?

Monday, November 17, 2008

தீராத காதலும் தாளாத காமமும்..

முன் குறிப்பு : ஒற்றை அன்றில் ஸ்ரீ, சாளரம் கார்க்கி, சரவணக்குமார் MSK.. போன்ற குட்டிப்பசங்களுக்குப் போட்டியாக இதோ சில காதல் கவிதைகள்.. இன்னும் நேரமின்மையால் முதல்முத்தம் வலைப்பூவை சரிபண்ணாமல் வைத்திருக்கிறேன். அதான் அப்பப்ப கவிதைப்படங்களையும் இங்கேயே மேட்னி ஷோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

தீராத காதலும் தாளாத காமமும்..

காலங்களைக் கடந்தும்
தூரங்களைக் கடந்தும்
தொடர்ந்து வருகிறாய்
தொட்டுச்சிரிக்கிறாய்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
மீண்டும்
உன்னிலிருந்து துவங்க‌
ஒரே ஆவலாயிருக்கிறது.!

***************

நீ என்னுள்ளே பதித்த தடயங்கள்
அத்தனையும்
காற்றிலே உடைந்து போய்விட்டன..
மீதம் ஏதுமில்லை,
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக நம் காதல்.!

***************

எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல..

**************

சம‌ய‌ங்களில்
நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து என்கிறாய்.

***************

புய‌லைப்போன்ற‌
வேக‌த்துட‌னும் ப‌ல‌த்துட‌னும்
முத்த‌மிட்டுத்துவ‌க்குகிறாய்.
நீரிலே மித‌க்கும் உன் சேலை போல‌
என் மீது இல‌வ‌ம்ப‌ஞ்சாய்
த‌ழைந்து நிறைவு செய்கிறாய்.!

Wednesday, November 12, 2008

தேன்குழம்பு

கொஞ்சம் கூட சந்தேகமே வேண்டாம், இது சமையல் குறிப்புதான். அதுவும் நான்வெஜ் சமையல் குறிப்பு. என்ன தாமிரா சமையல் குறிப்பெல்லாம் கொடுப்பாரா என அதிர்ச்சியடைய (சந்தோஷ?) அடைய‌ வேண்டாம். வேலைப்பளு மற்றும் கிளாஸ் காரணமாக சினிமா, சமையல், கவிதை மாதிரி லைட்டான பதிவுகளை போட்டு ஒரு பத்து நாளை ஒப்பேத்தலாம் என்ற ஐடியாவும் ஒரு காரணம். மற்றும் நாம் செய்வதை ஊருக்கும் சொல்லலாமே என்ற ஒரு நல்ல எண்ணமும்தான்.

(தங்கமணி வெரைட்டி கேட்டு ரொம்ப சலிச்சுக்கிறதா வெண்பூ ஒன்றும் போனெல்லாம் பண்ணி சமையல் குறிப்பு கேட்க‌வில்லை என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்). மேலும் பின்வரும் இந்த சமையல் குறிப்பை நீங்கள் வேரெங்கும் படித்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு. ஏனெனில் இது என் நண்பர் ஒருவர் ரசித்துக்கூற, ஜொள் விட்டவாறே நான் கேட்டு மகிழ்ந்தது. நேரே செய்முறைக்குப்போகலாம். இடுபொருட்களை அதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். அதைவேறு தனியாக லிஸ்ட் போட நேரமில்லை.

செய்முறை :

நேரே சிரமம் பார்க்காமல் பக்கத்திலிருக்கும் குளம் அல்லது ஊருணிக்கு செல்லுங்கள். குறிப்பாக கண்மாயில் சிறிய ஓடை அமைத்து, குழாய் பதித்து அயிரை மீன் பிடித்துக்கொண்டிருக்கும் அமைப்புடைய குளமாக விசாரித்துவிட்டு செல்லுங்கள். சென்னையிலிருப்பவர்களும் தமிழகத்துக்கு வெளியே இருப்பவர்களும் இந்த குறிப்பை படிப்பதில் பயனில்லை என‌ நினைக்கிறேன். நான் குறிப்பிடும் அயிரை மீன்கள் நெல்லை, மதுரை பக்கம் கண்டிப்பாக கிடைக்கும், இப்போ நல்ல சீசன் வேற.. கோவையிலும் கிடைப்பதாக சொல்கிறார்கள். பிற பகுதிகளைப்பற்றிய தகவலில்லை.

அப்படியே குழாயிலிருந்து தெறித்து விழுந்து இன்னமும் துள்ளிக்கொண்டிருக்கும் குட்டி அயிரை மீன்களை 20 அல்லது 30 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுங்கள். பெரும்பாலும் எடையெல்லாம் போடாம‌ல் கைய‌ள‌வில் அள்ளிக்கொடுப்பார்க‌ள். பாலிதீன் பேக்கில் அங்கேயே சிறிது நீர் நிர‌ப்பி வாங்கிக்கொள்ளுங்க‌ள். இந்த‌ மீனில் ஒரு சிற‌ப்ப‌ம்ச‌ம் உண்டு. அதுதான் கிளீனிங் வேலை. ம‌ண்டை, வால், செதிள்க‌ள் ப‌குதிக‌ளை நீக்குவ‌து, சுத்த‌ம் செய்வ‌து, துண்ட‌ங்க‌ள் ஆக்குவ‌து போன்ற‌ எந்த‌ வேலைக‌ளுமே கிடையாது. மொத்த‌ மீனே குட்டியூண்டுதான் இருக்கும். ஒரு சிம் கார்டில் 5 மீன்க‌ளை வ‌ரிசையாக‌ அடுக்கிவிட‌லாம். ஆக‌வே ம‌ண்டையையும், வாலையும் நீங்க‌ள் க‌ழித்தால் அங்கே மீன் என்ற‌ ஒன்று மிஞ்சுவ‌‌து ச‌ந்தேக‌மே. ச‌ரி க‌தையை விடுத்து சீக்கிர‌ம் ச‌மைய‌லுக்குப் போக‌லாம்.

வீட்டிற்கு வ‌ந்த‌தும் மீன்க‌ளை ஒரு ச‌ட்டியில் போட்டு லேசாக‌ கல் உப்பு போட்டு ஒரு பெய‌ருக்கு கிளீன் ப‌ண்ணி வ‌ழ‌வ‌ழ‌ப்பு போக‌ச்செய்து, ஏற்க‌ன‌வே த‌யார் செய்து வைத்துள்ள போதுமான அளவு தேங்காய் பாலில் போட்டுவிட‌வும். தேங்காய்ப்பாலில் விழுந்து ஆன‌ந்த‌மாக‌ நீச்ச‌லிடித்துக்கொண்டே அதைக்குடித்து மெல்ல‌ மெல்ல‌ மீன்க‌ள் ப‌ர‌லோக‌ம் போய்ச்சேர்ந்துவிடும்.

இப்போது ச‌ட்டியை அடுப்பில் வைத்து நேரே தாளிச‌த்திலிருந்து ஆர‌ம்பித்துவிடுங்க‌ள். எண்ணையை காய‌வைத்து க‌டுகு, உளுத்த‌ம்ப‌ருப்பு, க‌றிவேப்பிலையுட‌ன் ம‌ற‌க்காம‌ல் வெந்த‌ய‌ம் தேவையான‌ அள‌வு சேர்க்க‌வும். வெந்த‌ய‌ம் மிக‌ முக்கிய‌ம். ந‌ன்கு பொரிந்த‌வுட‌ன் பொடிப்பொடியாக‌ ந‌றுக்கிவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்க‌வும். (பெரிய‌ வெங்காய‌ம் க‌ண்டிப்பாக‌ கூடாது) பின்ன‌ர் ச‌ரியான‌ அள‌வில் வெட்டிவைக்க‌ப‌ட்டுள்ள‌ மாங்காய், த‌க்காளியை போட்டு க‌ரைத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சிறிது புளியை ஊற்ற‌வும். இப்போது தேங்காய்ப்பாலில் ஊற‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மீனை எடுத்து த‌னியே வைத்துவிட்டு அந்த‌ தேங்காய்ப்பாலில் சிறிது வெங்காய‌ம், சீர‌க‌ம் சேர்த்து அரைத்துக்கொள்ள‌வும். இதில் நீர‌ள‌வு அதிக‌மிருப்ப‌தாக நீங்க‌ள் நினைத்தால் முன்பே புளிக்க‌ரைச‌லில் நீர‌ள‌வை குறைத்திருக்க‌வேண்டும். க‌வ‌ன‌ம்.

இப்போது தேங்காய், வெங்காய‌ அரைச‌லை (க‌ரைத்து வைத்தால் க‌ரைச‌ல், அரைத்து வைத்தால் அரைச‌ல்தானே.. ஜோக் வேண்டாம், பீ சீரியஸ்..) ஊற்றி லேசாக‌ சூடேறிய‌தும் தேவையான‌ அள‌வு ம‌ஞ்ச‌ள், மிள‌காய், கொத்த‌ம‌ல்லிப் பொடிக‌ளையும், உப்பையும் போட்டு க‌ல‌க்க‌வும். இப்போது இன்னும் மீனை சேர்க்காத‌ போதே, மீன் குழ‌ம்பு வாச‌ம் அடுக்களையைத் தாண்டி ஹாலுக்கு போயிருக்கும். அடுத்துதான் முக்கியமான இறுதிக் க‌ட்ட‌ம். த‌ட்டில் மினுமினுப்பாக‌ குவித்துவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மீன்க‌ளை குழ‌ம்பில் போட்டு அரை நிமிடம் மூடி வையுங்கள். ஏற்க‌ன‌வே அயிரை மீனே குட்டி மீன் வ‌கையைச்சார்ந்த‌து, அதிலும் நீங்க‌ள் குள‌க்க‌ரைக்கே போய் இள‌ம் மீன்க‌ளாக‌ வாங்கி வ‌ந்திருப்ப‌தால் அரை நிமிடம்தான் ஒரே கொதிதான்.. இற‌க்கிவிடுங்க‌ள். இப்போது ம‌ண‌ம் உங்க‌ள் வீட்டைத்தாண்டி உங்க‌ள் தெருவையே அல்லது அப்பார்ட்மென்டையோ ம‌ய‌க்கும்வ‌ண்ண‌ம் ப‌ர‌வியிருக்கும். த‌வ‌ற‌விடாதீர்க‌ள், ஆவி ப‌ற‌க்க‌ சோற்றை போட்டு அப்போதே சாப்பிட்டுவிடுங்க‌ள். குளித்துவிட்டு சாப்பிட‌லாம் என‌ நினைத்து லேட் ப‌ண்ணுவீர்க‌ளானால் திரும்பி வந்து பார்க்கும்போது ச‌ட்டி காலியாயிருக்க‌க்கூடும், ஜாக்கிர‌தை.!

இந்த‌ ப‌க்குவ‌த்தில் யாராவ‌து இந்த தேன்குழம்பை ஸாரி, மீன்குழம்பை செய்து த‌ருவீர்க‌ள் எனில் போன் ப‌ண்ண‌வும், இப்போதே கிள‌ம்பிவ‌ர‌த்தயாராக‌ இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும்.!

டிஸ்கி : என் ர‌மா வெஜிடேரிய‌ன் என்ப‌தை அறிக‌.

Tuesday, November 11, 2008

நான் ரசித்த பாடல்கள்.. டாப் 5.

எனது இசையார்வத்தின் அதிகபட்ச உயரம் தமிழ் திரைப்பாடல்கள் மட்டுமே. டாப் 5 க்குள் அடக்கிவிடக்கூடிய விஷயமா இது.? அதுவும் எனக்கு பிடிக்கவேண்டுமானால் அந்தப்பாடல் இசை தவிர மேலும் சில ரசனையான விஷயங்களையும் கொண்டிருக்கவேண்டும். ஏராளமான பாடல்களுக்கிடையே சில விதி முறைகளை வைத்துக்கொண்டு நான் ரசித்த, ரசிக்கும் டாப் 5 பாடல்களைத் தருகிறேன். மிக முக்கியமான விஷயம் 2006க்கு பின்னர் வந்த பாடல்கள் மட்டுமே ஆட்டத்துக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரசனையான ஒளிப்பதிவு, ரகளையான ஹீரோ, ஹீரோயின், அற்புதமான இசை, கவிதைத்தனமான பாடல் வரிகள், உணர்வைத்தொடும் குரல், கொஞ்சம் காதல் என பல விஷயங்களையும் கணக்கில் கொண்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன். பிடித்தால் (பிடிக்காவிட்டாலும்) பின்னூட்டமிட்டு தெரியப்படுத்தவும்.

காற்றின் மொழி..


ப‌ட‌ம் : மொழி இய‌க்க‌ம் : ராதாமோக‌ன் ஜோடி : பிரித்விராஜ், ஜோதிகா ஒளிப்ப‌திவு : குக‌ன் இசை : வித்யாசாக‌ர் பாட‌ல் : வைர‌முத்து குர‌ல் : சுஜாதா

அக்க‌ம் ப‌க்க‌ம்..


ப‌ட‌ம் : கிரீடம் இய‌க்க‌ம் : விஜய் ஜோடி : அஜித், திரிஷா ஒளிப்ப‌திவு : திரு இசை : ஜிவி பிரசாத் பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : சாத‌னா ச‌ர்க‌ம்

காத‌ல் வைத்து..ப‌ட‌ம் : தீபாவளி இய‌க்க‌ம் : எழில் ஜோடி : ஜெய‌ம் ர‌வி, பாவ‌னா ஒளிப்ப‌திவு : ஜீவா இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : பா விஜய் குர‌ல் : விஜ‌ய் யேசுதாஸ்

முன்பே வா..


ப‌ட‌ம் : ஜில்லுனு ஒரு காதல் இய‌க்க‌ம் : கிருஷ்ணா ஜோடி : சூர்யா, பூமிகா ஒளிப்ப‌திவு : ஆர்டி ராஜசேகர் இசை : ஏஆர் ரகுமான் பாட‌ல் : வாலி குர‌ல் : ஷ்ரேயா கோஷல்

எங்கேயோ பார்த்த மயக்கம்..


ப‌ட‌ம் : யாரடி நீ மோகினி இய‌க்க‌ம் : மித்ரன் ஜவஹர் ஜோடி : தனுஷ், நயன்தாரா ஒளிப்ப‌திவு : சித்தார்த் இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : உதித் நாராய‌ண‌ன்

Monday, November 10, 2008

பாஸ்வேர்ட் உலகம்

என்ன உலகமடா இது?

என்னிடம் இருப்பது இரண்டு பேங்க் அக்கவுண்ட்கள். அதில் ஒன்றை நீண்டநாட்களாக உபயோகப்படுத்தாமலே இருந்தேன். (ஒரு அக்கவுண்டில் போடுறதுக்கே இங்கே பணத்தை காணவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டாவது வேற..) சமீபத்தில் நேர்ந்த பணநெருக்கடியில் அந்த பேங்க் அக்கவுண்டை திறந்துபார்க்கலாம், ஒரு நூறு இரநூறு தேறாதா என்று எண்ணி நெட்டைத்திறந்தால் ஐடி, பாஸ்வேர்ட் ஞாபகமில்லை. நானும் பர்ஸிலுள்ள குப்பைகளை கிளறிப்பார்க்கிறேன், தலையை தட்டிப்பார்க்கிறேன், தண்ணி குடித்துப்பார்க்கிறேன். இப்போது பயன்படுத்துகிற அத்தனை பாஸ்வேர்ட்களையும் போட்டுப்பார்க்கிறேன். நான்கைந்து முறைகளுக்கு மேல் தவறாக போட்டால் லாக் ஆகிவிடும் என்று ராஜன் வேறு பயமுறுத்தினார். ஆகவே முயற்சியை பாதியிலேயே நிறுத்தினேன். வீட்டில் போய் தேடிப்பார்க்கலாம்.
எதிலாவது எழுதிவைத்திருப்பேன்.

என்ன உலகமடா இது?

யோசித்துப்பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளில் எத்தனை ஐடிக்கள், பாஸ்வேர்ட்களை பயன்படுத்துகிறோம்? அலுவ‌ல‌க‌த்தில் நுழையும் போதே கார்ட் ப‌ஞ்ச்சிங்கில் துவ‌ங்குகிற‌து. ந‌ல்ல‌ வேளையாய் அங்கு பாஸ்வேர்ட் இல்லை. அத‌ற்கும் பாஸ்வேர்ட் இருந்தால் எத்த‌னை நாள் அலுவ‌ல‌க‌த்துக்குள் போகாம‌ல் வெளியேவே நிற்க‌வேண்டிய‌ சூழ‌ல் வ‌ந்திருக்குமோ?

சீட்டில் உட்கார்ந்த‌தும், க‌ம்யூட்ட‌ரைத்திற‌க்க‌ ஒரு ஐடி, பாஸ்வேர்ட். ஆ.:பீஸ் மெயிலை திற‌க்க‌ அடுத்த‌து. SAP திற‌க்க‌ அடுத்த‌து. முக்கிய பைல்களை திறக்க அடுத்தது. யாகூ மெயிலுக்கு ஒன்று. ஜிமெயிலுக்கு ஒன்று. ICICI க்கு ஒன்று. அத‌ற்குள், ப‌ணமாற்ற‌லுக்கு இன்னொன்று. பிளாக‌ருக்கு ஒன்று. அத‌ற்குள் த‌மிலிஷ், த‌மிழ் இன், க‌வுண்ட‌ர் போல‌ ப‌ல‌வ‌ற்றுக்கும் ப‌ல ஐடிக்க‌ள், பாஸ்வேர்டுக‌ள். விக‌ட‌னுக்கு ஒன்று. ர‌யில்வே டிக்கெட் புக் செய்ய‌ ஒன்று. அவ‌ச‌ர‌ ப‌ஸ்டிக்கெட் புக் செய்ய இன்னொன்று. சினிமா டிக்கெட் புக் செய்ய‌ இர‌ண்டு (ச‌த்ய‌ம் ஒன்று, ஐநாக்ஸ் ஒன்று) புக் செய்து ரொம்ப‌ நாளாகிவிட்ட‌தால் ஞாப‌க‌த்தின் ஆப‌த்தான‌ நிலையிலிருக்கிற‌து. LIC க்கு ஒன்று. அலுவ‌ல‌க‌த்தின் சிறப்பு வேலைக‌ளுக்காக எப்போதாவது ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் சில‌ பாஸ்வேர்ட்க‌ள். மேலும் சில‌ முக்கிய‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ஐடி, பாஸ்வேர்ட்க‌ள். இதில் பல இடங்களில் ஒரே பாஸ்வேர்டடை பயன்படுத்தினாலும், சில விஷயங்களில் சில நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்ட்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வேறு.

அலுவ‌ல‌கத்துக்கு வெளியே வ‌ந்தால், ATM-ல் பின் ந‌ம்ப‌ர், CVV ந‌ம்ப‌ர், நெட் யூச‌ர் ஐடி, பார்வேர்ட், மேலும் சில‌ ப‌ல‌ப‌ய‌ன் அட்டைக‌ளின் ந‌ம்ப‌ர்க‌ள்.... ந‌ம்ப‌ர், ந‌ம்ப‌ர்.... பாஸ்வேர்ட், பாஸ்வேர்ட்.....

"சார், உங்க‌ போன் ந‌ம்ப‌ர் என்ன‌?"

"நைன், செவ‌ன், சிக்ஸ்.. எயிட்....திரி...ம்ம்... ரிஸ்க் வேண்டாம் உங்க‌ ந‌ம்ப‌ர் குடுங்க‌ மிஸ்ட் கால் குடுத்திர்றேன்"

டிஸ்கி : ஒரு வ‌ழியாக‌ அந்த‌ இர‌ண்டாவ‌து அக்க‌வுண்டின் ஐடி பாஸ்வேர்ட் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு செக் ப‌ண்ணிய‌ பொழுது அதில் இருந்த‌ ப‌ண‌ம் ரூ.32. என்ன உலகமடா இது?

Friday, November 7, 2008

பெண்ணென்னும் பேரெழில்.!

நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104)

இந்தக்குறள் காமத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது என்று புரிபவர்கள், ஸாரி இங்கேயே விலகிவிடலாம். (அன்றைய காலங்களில் காமம் என்ற சொல் இன்றைய காதலுக்கு ஒப்பாக பயன்படுத்தப்பட்டதெனவும், காதல் என்பது அன்பு என்ற சொல்லுக்கு இணையாக பயன்படுத்தப்பட்டதெனவும், இங்கே நான் காமம் என்று குறிப்பது நாம் அந்தச் சொல்லுக்கு உருவேற்றி வைத்திருக்கும் இன்றைய அர்த்தத்தில்தான் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்)

உணவு, உறக்கம், கடமை மறந்து காதலன் காதலியை நினைத்துக்கிடக்கிறான். அது எதனால்? அதன் பயன் என்ன.? காலம், காலன், மனிதன் இவற்றை மீறி யாராவது அவள் அவனுக்குத்தான் என்ற உறுதியைத் தந்துவிடமுடியுமா? அப்புறமும் ஏன் இப்படிக்கிடக்கிறான்.? ஒருபொழுதில் இருவரும் சுகித்துக்கிடக்கிறார்கள். அதன் நினைவுகளில் நீந்திக்கிடக்கிறானா? அவள் உயிரோடு ஒப்புக்கொடுத்திருக்கிறாளே? அந்தக்கனமா? அவள் அருகிருந்தால் இந்த வெளியுலகு அவனுக்கு இயல்பாகத்தானிருக்கிறது.. அந்த‌ அன்போ? இவனுக்கான வார்த்தைகளை தேவ மொழிகளிலிருந்து திருடிக்கொண்டு வருகிறாள். காதோரம் கிசுகிசுக்கிறாள். அந்தப்போதையா?அருகில் செல்கையில் இதத்தையும், விலகிச்செல்கையில் வெப்பத்தையும் தரும் இந்த அற்புதத்தீயை எங்கே பெற்றாள் இவள்?

நேற்றிரவில் என் கன்னங்களில் நீர்..!


டிஸ்கி : "Warning to bachelors" தொகுப்பை எழுதிய தாமிரா ஊரிலில்லை எனவும் இது அவரது கோஸ்ட் எழுதியது எனவும் ஒப்புக்கொள்கிறோம்.

Tuesday, November 4, 2008

ரஜினிகாந்த் என்ற சக்தி

இன்றைய காலகட்டங்களில் ரஜினி பணத்துக்காவும், புகழுக்காகவும் சினிமாவில் நடிப்பதில்லை என்பதை அவரது பல்வேறு பேச்சுகளின் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளமுடிகிறது. பின் ஏன் நடிக்கிறார்? சூழலின் நிர்ப்பந்தம். இன்னும் முதல் குதிரையாக ஓடிவரும் ரஜினியை விட்டுவைப்பார்களா அவரை சூழ்ந்திருப்போரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும். முடிந்த வரை நட்பு, உறவு, நன்றிக்கடன் அல்லது ரசிகர்கள் ஆகியவற்றைக் காரணம்காட்டி அவரை நடிக்க நெருக்கடி தந்து சம்மதிக்கவைக்கிறார்கள். அப்புறம் ஏன் கோடி கோடியாய் சம்பளம் பெறுகிறார்? அவர் ஒன்றும் முட்டாளல்லர். அவர் காரணமாகவே கோடி கோடியாய் ஒரு சினிமா சம்பாதிக்கும் போது அதை அப்படியே மூன்றாம் மனிதனுக்கு தாரை வார்ப்பது எப்படி சரியாகும்.? ஆகவே பணத்தையும் பெற்றுக்கொள்கிறார். அவர் செய்வது மிகச்சரியானதே.

அவரது பேச்சுகள் மூலம் ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மனத்தில் தோன்றியதை அப்படியே அந்தந்த பொழுதில் பேசிவிடுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார். சிறிது கோபமும் இருக்கிறது. இந்த குணங்கள் எல்லா சாதாரண மனிதருக்கும் இருக்கக்கூடியதுதான், அதில் நிச்சயமாக தவறு இருக்கமுடியாது. ஆனால் ரஜினி போன்ற ஒரு பெரிய இடத்திலிருக்கக்கூடிய, மூச்சு விட்டாலே செய்தியாகிவிடக்கூடிய இடத்திலிருக்கும் ஒரு செலிபிரிட்டி பப்ளிக் பேச்சுகளில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். இதைப்பற்றிய புரிதலும் அவரது சமீபத்திய பேச்சுகளில் தெரிகிறது.

ஏன் அவரைப்பற்றி இவ்வளவு சர்ச்சைகள்?
பத்திரிகை மற்றும் பிற மீடியாக்கள் தங்கள் பசிக்கு விஐபிக்களை எந்நேரமும் தின்றுவிட காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது அனைவருக்கும் ஓரளவு புரிகிற விஷயமே. அதற்கு வாய்ப்பாக 'லட்டு' மாதிரி கிடைத்தவர்தான் ரஜினி. ஆனானப்பட்ட தில்லாலங்கடிகளின் பேச்சையே திரித்து வெளியிடும் வல்லமை பெற்ற மீடியாக்கள் ரஜினியின் பேச்சுகளை திரித்து வெளியிடுவது என்பது அவர்களுக்கு ஆகச்சுலபமான ஒன்று. ஏனெனில் அவர் பேசும்போது கேட்டால் அவர் உணர்ச்சிவசத்திலோ, கோர்வையாக பேச வராமலோ சில வார்த்தகளை தடுமாற்றத்தோடு பேசுவதை கவனித்திருக்கலாம். ஏனெனில் பப்ளிக்கில் பேசுவது என்பது ஒரு கலை, அதில் ரஜினி சிறிது வீக் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதை பேசும் போது அவரது உணர்வுகளோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதை விடுத்து எழுத்தில் பார்த்தோமேயானால் தவறாக புரிந்துகொள்ள ஏதுவாகும்.

அவர் அரசியலுக்கு வர எண்ணுகிறாரா? இதுவரை அப்படி ஒரு எண்ண‌ம் அவருக்கு இல்லை என்பது தெளிவு. அதற்கான தகுதியோ, அனுபவமோ இல்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவருக்கோ மிகத்தீவிரமான கடவுள் நம்பிக்கை உள்ளது. நேற்று உணவுக்கே கஷ்டப்பட்ட சிவாஜிராவ் இன்று மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ள ரஜினி. இந்த நிலையை கடவுள் தந்ததாக அவர் நம்புகிறார். ஆகவே அவரால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லமுடியவில்லை. அதைச்சொல்ல நான் யார்? கடவுள்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.

இவ்வளவு நாட்களாக இல்லாமல் இப்போது ஏன் அவருக்கு இந்த அரசியல் பிரவேச நெருக்கடி? இது உள்ளங்கை நெல்லிக்கனி. நம் தலைவரை விடவும் குறைவான ரசிகர் பலம் கொண்ட விஜயகாந்த், சரத்குமார் கட்சி ஆரம்பித்து இப்படி இயக்கமாக மாறிவிட்டார்கள் என்ற அவரது ரசிகர்களின் ஆதங்கம்தான். இன்னும் சொல்லப்போனால் அதில் தலைவரின் மீதான பாசம் என்பதைவிடவும் கொஞ்சம் சுயநலமே தூக்கலாக இருக்கும் என எண்ணுகிறேன். நேற்று ரசிகர்மன்றத்தலைவர் என்ற ஒரு நபர் இன்று கட்சியின் மாவட்ட நிர்வாகி, நேற்றைய மன்ற செயலாளர் இன்று வட்டச்செயலாளர். இதை ரஜினி ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் மன்றத்தலைவரானவர் இன்னும் அதே நிலைமையில் இருக்கிறார். 50 வயது தாண்டிய ஒரு நபர் இன்னும் நான் ரசிகர்மன்றதலைவர் என்று சொல்லிக்கொள்ளத்தயங்குகிறார். ஒரு சுய‌ ஆர்வத்தில்தான் ரஜினி மன்றத்தில் இணைந்தேன். ஆனால் இத்தனை வருட வாழ்க்கையில் இப்போது த‌னக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பதை உணர்கிறார். இதில் இணையாமல் இருந்திருந்தால் நான் முன்னேறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறார். ரஜினி இவ்வளவு புகழ் பெற்றிருக்கவில்லையெனில் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால்.? இந்த எண்ணத்தை ரஜினி விரும்பவில்லை எனில் அவர் அதை 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும். அதைச்செய்யவில்லை அவர், மாறாக அந்த எண்ணத்துக்கு தூபம் போடுவதைத்தான் செய்தார். உற்றுக்கவனித்தால் அது அவர் தவறல்ல என்பதையும், அந்தந்த படங்களின் இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ படத்தின் விளம்பரத்துக்காகவும், சுவாரசியத்துக்காகவும் அவரை பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஆகவே அவருக்கு பின்னர் வந்த விஜயகாந்தும், அவரது அவரது ரசிகர்களும் இன்று அடைந்துள்ள சமூக அந்தஸ்தையும் காணப்பொறுக்காமலே அவரது ரசிகர்கள் இந்த அளவில் நெருக்கடிக்கு அவரைத்தள்ளியிருக்கிறார்கள். இது ஒரு வகையில் தவறுதான், பேராசைதான். இன்றுவரை என்னை ஒரு சினிமா நடிகனாக மட்டுமே பாருங்கள் என்றுதான் அவ்ர் கூறிவந்திருக்கிறார்.

சமீபத்திய பேட்டியில்கூட "எங்களுக்காக‌ என்ன செய்தாய் தலைவா?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தடுமாறி சிந்தித்து கடைசியில், "உங்களுக்காக என் விருப்பத்தையும் மீறி, நீங்கள் விரும்பியபடி டான்ஸ் ஆடினேன், பறந்து பறந்து சண்டைபோட்டேன், காமெடி பண்ணினேனே.." என்று பரிதாபமாக கேட்கிறார். பாவமாக இருந்தது. நான் உனக்காக டிக்கெட் வாங்கி படம்பார்த்தேனே? நீ எனக்காக என்ன செய்தாய் என்று ஒரு நடிகரைப்பார்த்துக்கேட்டால் அவர் என்ன செய்வார்? அந்த படத்தில் நடித்ததுதான் அவர் உனக்காக செய்தது. அதற்கு மேல் ஒரு நடிகர் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறார்கள். தானே ஒரு உணர்ச்சிவயப்படுகின்ற ஆள், தன் ரசிகர்கள் நம்மைவிட உணர்ச்சிவசப் படுகிறவர்களாகவும், பிறரைப்பார்த்து ஆசைப்படுபவர்களாகவும், அதற்கான அறிவும் திறனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்களே என்று இப்போது ரஜினி சிந்திப்பவராகவே எனக்கு படுகிறார். இவர்களுக்காக அரசியலில் இறங்கி தோற்றால் அவமானத்தை ஏற்பதிலும், ஜெயித்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தை ரிஸ்க்கில் தள்ளுவதிலும் உள்ள ஆப‌த்தை ரஜினியும் அவரது ரசிகர்களும் இன்னும் சிந்திக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நான் ரஜினி ரசிகனுமல்லன், அவரை மீடியாக்களில் உற்றுக்கவனித்துக் கொண்டிருப்பவனுமல்லன். நான் இன்னொரு பிரபல நடிகரின் ரசிகனாகவே இருப்பினும் ரஜினியிடம் இருக்கும் தீராத கவர்ச்சியை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் அமிதாப்புடன் ஒப்பிடும்போது ரஜினியின் கவர்ச்சி இறுதிவரை அவரிடமிருந்து நீங்காத ஒரு வரமாகவே இருக்கும் எனவும் நம்புகிறேன். இது என் அரைகுறை கேள்வி ஞானத்தில், சுயமாக‌ எழுதப்பட்ட ஒரு கட்டுரை, அவ்வளவே.! ஏதும் மாற்றுக்கருத்து இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்.

Monday, November 3, 2008

ஒரு நெல்லிம‌ர‌மும் சில‌ வாடகைப் புத்தகங்களும்

கொஞ்சம் கொசுவத்தி சுத்தலாமா? நான் எப்போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்? என்னென்ன மாதிரி புத்தகங்கள்? ஏதாவது அழகான நினைவுகள்.? சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்.

சில தெருக்கள் தள்ளி இருந்த என் மாமா ஒருவரின் வீட்டில் அவரது அறை பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்களும், குங்குமம், கல்கி போன்ற இதழ்களுமாய் நிரம்பியிருக்கும். அவரும் வீட்டிலிருக்கும் எந்த நேரமும் சதா படித்துக்கொண்டேயிருப்பார். இதைப்பார்த்த நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து குங்குமம் வாங்கி புரட்டியபோது எதையும் படிக்க முடியாமல் படம் மட்டுமே பார்க்கமுடிந்தது. ஒருநாள் தற்செயலாக கிடைத்த சிறுவர்மலர் (தினமலர்) என்னை மிகவும் கவர்ந்தது. பின்னர் அதைத்தேடி லைப்ரரிக்கு சென்றேன். நாளித‌ழ், வார‌இத‌ழ் ப‌டிக்குமிட‌த்தையும் தாண்டி உள்ளே சென்று புத்த‌க‌ம் எடுக்க‌ உறுப்பின‌ராக‌வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

என் மாமாவிட‌ம் மூன்று உறுப்பின‌ர் அட்டைக‌ள் இருந்த‌ன‌. என் ப‌டிக்கும் ஆவ‌லைத்தூண்டும் பொருட்டு ஒன்றை நான் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ அனும‌தித்தார். இப்போது யோசிக்கும் போது தெரிகிற‌து அவ‌ர் அந்த‌ லைப்ர‌ரியின் பாதிக்கும் மேற்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ளை அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ப‌டித்து முடித்திருக்க‌க்கூடும். ஆனால் அதைவிட‌வும் என‌க்கு சிறுவ‌ர்ம‌ல‌ரே முக்கிய‌மாக‌ ப‌ட்ட‌து. அதில் வந்த படக்கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. 'உயிரைத்தேடி..' என்ற ஒரு படத்தொடர் வந்துகொண்டிருந்தது. அதன் சஸ்பென்ஸ் என்னை தூங்கவிடாமல் செய்தது. வெள்ளிக்கிழ‌மை நூல‌க‌ம் விடுமுறை. ஆக‌வே எங்க‌ள் வீட்டுக்கு அருகிலிருந்த‌ ஒரு ம‌ருத்துவ‌ரின் வீட்டுக்கு (அங்கு ம‌ட்டும்தான் பேப்ப‌ர் வ‌ந்துகொண்டிருந்த‌து, அவ‌ர் ம‌க‌னும் என‌து வ‌குப்புத்தோழ‌ன்) வெள்ளிய‌ன்று அதிகாலையே அவ‌ர்க‌ள் எழுந்து பேப்ப‌ரை எடுக்கும்முன்ன‌ரே போய் ப‌டித்துவிட்டு வ‌ருவேன். சில நாட்கள் அவர்கள் முந்திக்கொண்டு பேப்பரை எடுத்துவிட்டால் பரிதாபகரமாக காத்துக்கிடந்து படித்துவிட்டு வருவேன்.

வெள்ளிக்கிழமையானால் காலை ஆற‌ரைக்கே எழுந்து எங்கு செல்கிறான் என்று ஆச்ச‌ரிய‌மாக பார்த்த‌ என் த‌ந்தை பின்ன‌ர் எங்க‌ள் வீட்டுக்கும் பேப்ப‌ர் வ‌ர‌வ‌ழைத்தார். அதிலிருக்கும் சிறுக‌தைக‌ளை ப‌டித்துவிட்டு ப‌ள்ளியில் மாதம் ஒருமுறை ந‌டக்கும் மாண‌வ‌ர் ம‌ன்ற‌த்தில் கைக‌ளை க‌ட்டிக்கொண்டு க‌தை சொல்லி கைத்த‌ட்டு பெறுவேன். அதோடு என் மேடை அனுப‌வ‌ம் முத‌லும் கடைசியுமாக‌ முடிந்த‌து. என்ன‌வோ தெரிய‌வில்லை அதன் பின்ன‌ர் மேடையென்றாலே உத‌ற‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து. இன்றுவரை க‌லைநிக‌ழ்ச்சிக‌ளோ, விளையாட்டோ க‌ல‌ந்துகொள்வ‌தே கிடையாது. என‌க்கென்று சிறு வ‌ட்ட‌த்தை உருவாக்கி அதற்குள்ளேயே இருந்து ம‌கிழ்ந்தேன்.

பின்ன‌ர் எட்டா‌ம் வ‌குப்பு வ‌ந்த‌ போது சிறுவர் மலர் சிறிது போரடித்தபோது முத‌ல் முத‌லாக‌ அதே நூல‌க‌த்தில் இத‌ழ் பிரிவைத்தாண்டி உள்ளே சென்று என் மாமாவின் க‌ண‌க்கில் ஒரு புத்த‌க‌த்தை எடுத்தேன். அத‌ன் த‌லைப்பு ஞாப‌க‌மில்லை. எழுத்தாள‌ர் ல‌க்ஷ்மி. அந்த‌ முத‌ல் நாவ‌லே ம‌ற‌க்க‌முடியாத‌ ப‌டுசுவார‌சிய‌மான‌ நாவ‌லாக‌ அமைந்த‌து. (க‌தை : பிர‌ச‌வ‌த்துக்காக‌ ம‌னைவி தாய்வீடு சென்றிருக்கும்போது ந‌ண்ப‌னின் த‌வ‌றான‌ வ‌ழிகாட்டுத‌லில் ஒரு விலைமாதுவிட‌ம் செல்கிறான் ந‌டுத்த‌ர‌குடும்ப‌த்து ஹீரோ. அதை போட்டோ எடுத்து பெரும்பணத்துக்காக அவ‌னை பிளாக்மெயில் செய்கிறாள் அந்த‌ விலைமாது. மிகுந்த‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாகி ம‌னைவியின் ந‌கைக‌ள், சேமிப்பு, ஸ்கூட்ட‌ர் அனைத்தையும் இழ‌ந்து அந்த‌ ப‌ண‌த்தை கொடுக்கிறான். கொடுத்த‌ ம‌றுநாளே அந்த‌ விலைமாது ஒரு விப‌த்தில் இற‌ந்துபோய்விடுகிறாள். ஒரு நாள் லேட் செய்திருக்க‌க்கூடாதா என்று அந்த‌ ஹீரோவுக்காக‌ ப‌ரிதாப‌ப்ப‌ட்டேன்.)

அதன் பின்ன‌ர் ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம் எக்ஸ்பிர‌ஸாக‌ வேக‌மெடுத்தது. த‌மிழ்வாண‌னின் அத்த‌னை கிரைம் நாவ‌ல்‌க‌ளையும் வெறியோடு ப‌டித்தேன். எங்கள் நூலகத்தின் நூற்றுக்கணக்கான புத்தகங்களை மேய்ந்தேன். இந்த வகை என்றில்லாமல் அனைத்தையும் படித்து துவம்சம் செய்தேன். தேவன், எஸ்எஸ்வி, லக்ஷ்மி, ரமணிசந்திரன், பாலகுமாரன், ராஜேஷ்குமார், சுபா, பெயர்தெரியாத பல மூத்த, புதிய எழுத்தாளர்கள், குங்கும‌த்திலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ தொட‌ர்க‌தைக‌ளின் தொகுப்புகள் (சுஜாதா, பால‌குமார‌ன், க‌லைஞ‌ர் மு.க‌ருணாநிதி, சாண்டில்யன்) என‌ வெறியோடு ப‌டித்தேன்.

சுஜாதாவின் ஆ!, பேசும் பொம்மைக‌ள், ஜீனோ க‌லைஞ‌ரின் தென்பாண்டிச்சிங்க‌ம், பாயும்புலி ப‌ண்டார‌க‌வ‌ன்னிய‌ன், பொன்ன‌ர்ச‌ங்க‌ர் போன்ற‌ ப‌ல‌ நாவ‌ல்க‌ள் அந்த‌கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் ப‌டித்த‌வைதான். 'பொன்ன‌ர் ச‌ங்க‌ர்' நாவ‌லில் வ‌ரும் வீர‌ம், காத‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சிக‌ள் ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ சினிமா பார்த்த‌ உண‌ர்வைத்த‌ந்த‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் வீட்டில் அனைவ‌ரும் வீட்டிற்குள் ப‌டுக்க‌, நான் வ‌ராண்டாவில் ப‌டுப்பேன். அம்மாவின் திட்டுக்கு ப‌ய‌ந்து அனைவ‌ரும் தூங்கிய‌பின்ன‌ர் விள‌க்கைப்போட்டு ம‌ணிக்கண‌க்காக‌ ப‌டிப்பேன்.

சில‌ நாட்க‌ள் ந‌ள்ளிர‌வில் விழித்துக்கொள்ளும் அம்மாவிட‌ம் மாட்டிக்கொண்டு தாறுமாறாக‌ திட்டு வாங்கியிருக்கிறேன். சில‌ நாட்க‌ளில் அம்மா விழிக்கும் அர‌வ‌ம் கேட்டு விள‌க்கைப்போட்ட‌வாறே தூங்கிவிட்ட‌தைப்போல‌ ந‌டித்துவிடுவேன். அவ‌ர் எழுந்துவ‌ந்து "அவ‌னைப்(என் மாமா) போடுற‌ போடுல‌ இவ‌ன் திருந்துவான்" என்று திட்டிக்கொண்டே புத்த‌க‌த்தை எடுத்துவைத்துவிட்டு விள‌க்கை அணைத்துவிட்டு ப‌டுப்பார்.மீண்டும் விள‌க்கைப்போட‌லாமா என்று யோசித்த‌வாறே நீண்ட‌ நேர‌ம் விழித்துக்கொண்டு ப‌டுத்திருப்பேன்.

இவ்வாறாக‌ ஒன்ப‌தாம் வ‌குப்பிலிருந்து +2 வ‌ரை நான் புத்த‌க‌ம் ப‌டித்த‌ கால‌ம் பீக்கில் இருந்த‌து. இந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் கிடை‌க்கும் விடுமுறைக‌ளில் நான் செல்லும் த‌ல‌ங்க‌ள் இர‌ண்டு. ஒன்று சேர‌ன்மகாதேவியிலிருக்கும் என் சித்த‌ப்பா வீடு. இன்னொன்று அம்பாச‌முத்திர‌ம் அருகே இருக்கும் பிர‌ம‌தேச‌ம் (இந்த‌ ஊரில் இருக்கும் ஒரு பெரிய‌ சிவ‌ன் கோவிலை மைய‌மாக‌ வைத்துதான் 'ம‌ர்ம‌தேச‌ம்' என்ற‌ புக‌ழ்பெற்ற‌ டிவி தொட‌ர் வ‌ந்த‌து) என்ற‌ ஊரிலிருக்கும் என் ம‌தினியின் வீடு. என்னை விட‌ 10 வ‌ய‌தே மூத்த‌வ‌ர் எனினும் எனக்கு இன்னொரு தாயைப்போன்ற‌வ‌ர். அவ‌ர் பெய‌ரே 'தாய்'தான். வீட்டுக்கு பின்புற‌ம் உள்ள‌ தோட்ட‌த்தில் பல மரங்கள் உண்டு. அதில் ஒரு பெரிய‌ நெல்லிம‌ர‌ம் உண்டு. அதையொட்டி வ‌ய‌லுக்கு நீர்பாய்ச்ச‌ உத‌வும் ஒரு ஓடை செல்லும். இனிய‌ சூழ‌ல்.

அந்த‌ ஊரில் ஒருவ‌ர் சைக்கிளில் நிறைய‌ புத்த‌க‌ங்க‌ளை எடுத்துக்கொண்டு வீடு வீடாக‌ வாட‌கைக்கு கொடுத்துச்செல்வார். புத்த‌க‌த்தின் விலை 1 ரூபாய் என்றால் ஒருநாள் வாட‌கை 10 பைசா. நான் விடுமுறையில் வ‌ந்தால் அவர் மிகவும் ஆர்வமாகிவிடுவார். ஒரு புத்த‌க‌த்தை எடுத்துக்கொண்டு ப‌டிக்காம‌ல் வைத்துக்கொண்டிருப்ப‌வ‌ர் ம‌த்தியில் ஒரே நாளில் 5 புத்த‌க‌ங்க‌ளை எடுத்துக்கொண்டு, ப‌டித்துமுடித்து ம‌றுநாள் அவ‌ர் வ‌ருகையை பார்த்திருப்பேன். அவ‌ரிட‌ம்தான் ஏராள‌மான‌ ராணிமுத்து, க‌ண்ம‌ணி, கிரைம் நாவ‌ல்க‌ள் என‌ வாசித்து த‌ள்ளினேன். காலை உண‌வுக்குப்பின்ன‌ர் புத்த‌க‌ங்க‌ளோடு ஒரு சிறிய‌ கிண்ண‌த்தில் அள‌வாக‌ உப்பு, மிள‌காய்தூளை க‌ல‌ந்து எடுத்துக்கொண்டு பின்புற‌ம் நெல்லிம‌ர‌த்தில் ஏறி வ‌ச‌மாக‌ உட்கார்ந்துகொண்டால் (பொதுவாக நெல்லிமரங்கள் ஏறமுடியாத அளவு வீக்காகத்தான் இருக்கும். இது கொஞ்சம் பெரிது) கரகரவென நெல்லியைப்பறித்து தின்றவாறே படிக்க ஆரம்பித்தால் பிற‌கு ம‌திய‌ உண‌வுக்குதான் இற‌ங்குவேன். உண‌வுக்கு பின்ன‌ர் தொட‌ங்கினால் மாலை ப‌டிக்க‌முடியாத‌ அள‌வு இருள் சூழ்ந்த‌ பிற‌குதான் இற‌ங்குவேன்.

ப‌திவு ரொம்ப‌ நீள‌மாக‌ போய்க்கொண்டிருக்கிற‌தே முடித்துக்கொள்ள‌லாமா? பின்ன‌ர் க‌ல்லூரிக்கு செல்ல‌ ஆர‌ம்பித்த‌ பிற‌கு ப‌டிப்ப‌டியாக‌ குறைய‌ ஆர‌ம்பித்த‌ ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம் க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பு ஆன‌தைப்போல‌ இப்போது சித்தெறும்பாகி ஊர்ந்துகொண்டிருக்கிற‌து.

இந்த‌ ப‌திவின் சாராம்ச‌ம் பிடித்திருப்ப‌தால் இதை தொட‌ர்ப‌திவாக்க‌ விரும்புகிறேன். (உங்களுக்கு பிடிச்சிருந்ததா?) இர‌ண்டிர‌ண்டு பேராக‌ இந்த‌ டேக் தொட‌ர‌ட்டும். தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் இதே போன்று நீ...ள‌மாக‌ எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌தையும் சொல்லிக்கொள்கிறேன் (அவ்வ்வ்..)

நான் அழைக்கும் இருவ‌ர்..

ப‌ரிச‌ல்

பாபு