Sunday, June 8, 2008

ரயில் நிலையத்தில் ஒரு பிரிவு

வழக்கம் போல இந்த முறையும் வேலை காரணமாய் நொந்து நூலாகிவிட்டு சென்னை திரும்புவதற்காக செகந்தராபாத் ஸ்டேஷன் வந்து சேர்ந்தேன். கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்டேன். என்னைப்போலவே நிறையப்பேர் சார்மினார் எக்ஸ்பிரஸ் -க்காக காத்திருந்தனர். இந்த முறை சாப்பாட்டுக்காக ரொம்ப கஷ்டப்பட்டதாலும், வேலை ஆறு நாட்களுக்கு மேல் நீடித்து படுத்திவிட்டதாலும் எப்போது சென்னை செல்வோம் என்று ஆகிவிட்டது. எப்படித்தான் இந்த சர்வீஸ் வேலைகளில் இருப்பவர்கள் வெளியூர்களில் வாரக் கணக்காக, மாதக் கணக்காக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ என நினைத்துக்கொண்டேன். முதல் பிளாட்பார்மில் உள்ள தூண்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள திட்டுக்களில் ஒன்றில் அமைதியாக உட்கார்ந்துகொண்டேன்.

அப்போது ஒரு அழகான ஜோடி, ஒரு மிக அழகான சிறுமியுடன் அருகில் வந்தார்கள். நிறைய லக்கேஜ்கள் எல்லாம் இல்லை. என்னருகே இடமிருந்ததால் அந்தப்பெண் உட்கார்ந்து கொள்ள அவன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அதனுடன் பேசிக்கொண்டிருந்தான். நிச்சயமாக அவர்கள் கணவன் மனைவிதான் என்பதும், அந்த சிறுமி அவர்களின் குழந்தைதான் என்பதும் புரிந்தது. அந்த சிறுமிக்கு மூன்று வயதிற்கு மேலிருக்கும் எனினும் அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்களைப் போல இருந்தனர். எளிமையான, திருத்தமான, ரசனையான உடைகள் அவர்களை மேலும் அழகாகக் காட்டியது.

தேவையில்லாமல் என் மனைவியும் அவளது ரசனையும் நினைவுக்கு வந்து ஏக்கப் பெருமூச்சு வெளியானதால் வேறுபக்கம் திரும்பிக்கொண்டு கவனத்தை திசைதிருப்பினேன். முடியவில்லை. அந்த குழந்தை அவனை விடாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தது. அவனும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். நன்கு ஷேவ் செய்து பளிச்சென இருந்தான். அவனது ஹேர் ஸ்டைல் மிக அழகாக இருந்தது. அவளோ அந்த சேலையில் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல இருந்தாள் . இப்படி அழகான ஜோடியைப் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒருவர் சொதப்பிவிடுவார்கள். இப்போது வண்டி வந்து விட்டதால் அதில் ஏறுவதிலும் சீட் தேடியமர்வதிலும் அவர்களை மறந்தேன்.

ஏறி அமர்ந்து ஜன்னல் வழியாக தற்செயலாக வெளியே பார்த்தால், அந்த குழந்தை இப்போது அழுது கொண்டிருந்தது. அதை அவள் இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு சமாதானப் படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். இருவரும் படியருகே நின்று கொண்டிருந்தார்கள். கூர்ந்து பார்த்தபோது அவனும் படிக்கட்டில் நின்றுகொண்டே குழந்தையை சமாதானப் படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது கேட்கும் தொலைவில் நான் இல்லை. பிரச்சினை என்ன என்பது புரிந்துவிட்டது. அவன் மட்டும்தான் சென்னை போகிறான். அவர்கள் வழியனுப்ப வந்திருக்கிறார்கள். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. வண்டி கிளம்பும் நேரம் ஆக ஆக அந்த பெண்ணின் முகம் சிரிப்பை இழந்து கொண்டிருந்தது. இப்போது அவன் குழந்தையை சமாதானப் படுத்துவதா அல்லது அவளை சாதானப் படுத்துவதா என்ற நிலைமையில் இருந்தான்.

வண்டி கிளம்பிவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் கட்டுக்கடங்காமல் ஒரு துளி கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.

மீண்டும் நான் என் மனைவியை நினைத்துக்கொண்டேன்.

2 comments:

Vijay said...

பீலிங்ஸூஊ?..ம்ம்...ம். செரி...செரி...வூட்டுகாரம்மா பதிவு ஏத்தினால்ல தெரியும் நம்ம வண்டவாளம்லாம்..தானிக்கி தீனி..சரியாத்தாங்க இருக்கும். யோசிச்சி பாருங்க..(ரும் போட்டு...ஜஸ் கியூப், வறுத்த முந்திரி எல்லாம் வச்சிகினு யோசிச்சா அது வேறமாதிரி தான் தோணும்.அதுக்கு நானு பொறுப்பு இல்ல...:P)

தாமிரா said...

நன்றி விஜய் !