Wednesday, July 30, 2008

தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?

விஷ‌ய‌த்துக்குள் போகும் முன் சில கருத்துக்க‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ வேண்டுமென‌ நினைக்கிறேன்.

1. நானும் எல்லோர் வ‌லைப்பூக்க‌ளுக்கும் சென்று ப‌டித்து, பதில்போட்டு ம‌கிழ்விக்க‌ வேண்டுமென‌ நினைக்கிறேன். ஆனால் செய்வ‌தில்லை.

2. க‌வ‌ரும் டைட்டில்க‌ளை ம‌ட்டும் ஓப‌ன் செய்து பார்க்கிறேன். அதிலும் பாதிக்குதான் ப‌திலிடுகிறேன்.

3. வ‌லைப்பூ வைத்துக்கொள்ளாம‌லும், ப‌தில் போடுவ‌தில் ஆர்வ‌மில்லாம‌லும் ப‌டித்துவிட்டு ம‌ட்டும் செல்ப‌வ‌ர்க‌ளே அதிக‌ ச‌த‌வீத‌ம் இருப்பார்க‌ள் எனவும் ந‌ம்புகிறேன்.

4. அத‌னால் மீன்க‌ளை தூண்டிலில் விழ‌வைக்க‌ டைட்டில்க‌ளை யோசிப்ப‌திலேயே பாதி நேர‌ம் போய்விடுகிற‌து என்ப‌தையும் ஒப்புக்கொள்கிறேன்.


ச‌ரி.. இப்போ விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

அனைத்து விஷய‌ங்க‌ளிலும் வேண்டாம், குறைந்த‌ ப‌ட்ச‌மாக‌ ஒன்றிர‌ண்டு விஷய‌ங்க‌ளிலாவ‌து ந‌ம‌து த‌ங்க‌ம‌ணிக‌ளை திருத்த‌ (அல்ல‌து நாம் நினைக்கும் ப‌டி மாற்ற‌) முடிய‌மா? என்ப‌து கேள்வி.

இந்த‌க்கேள்வியை இன்னும் எளிமையாக‌ மாற்றிக்கொள்வோம்.
த‌ங்க‌ம‌ணி வேண்டாம். குறைந்த‌ ப‌ட்ச‌ம் வெள்ளிம‌ணியையாவது (அதாங்க‌ க‌ல்யாண‌த்துக்கு முன்னால், க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌வேண்டும் என்ற உள் நோக்க‌த்தோடு ப‌ழ‌கும் பெண்ணைத்தான் சொல்கிறேன். அந்த‌ வார்த்தையை யூஸ் ப‌ண்ண‌ வேண்டாமேனு பார்க்கிறேன். க‌ண்ண‌ன் முத‌லில் வைர‌ம‌ணி என்று வைக்க‌லாம் என்றான், இதை எழுதி முடிக்குமுன் அவ‌ளுக்கு வெள்ளியே அதிக‌ம் என்கிறான்) ஒரு விஷ‌ய‌த்திலாவ‌து திருத்த‌முடிய‌மா?

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன் பாருங்கள்.

எங்க‌ள் ஆ.:பீஸில் க‌ல்யாண‌ம் ஆகாத‌ இளைஞ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் அதிக‌ம். அதில் ஒரு க‌ல‌க‌ல‌ப்பான‌ பேர்வ‌ழிதான் ஸ்ரீ. அன்றைக்கு பார்த்து மூஞ்சியே க‌ளையிழ‌ந்து அழுது வ‌டிந்து, சோக‌ம் அப்பியிருந்த‌து.

'என்னாச்சு ஸ்ரீ?'

'நீங்க‌ சொல்ற‌து நிஜ‌ம்தான் கேகே. வ‌ர‌வ‌ர‌ ஒரே இம்சையா இருக்குது, ச‌மாளிக்க‌வே முடிய‌ல‌'

'ஏ.. நான் என்ன‌ப்பா சொன்னேன்? என்ன‌ப்பா பிர‌ச்சினை..'

'சும்மா விளையாடாதீங்க‌ கேகே.. நா அவ‌ளைப்ப‌த்தி சொல்றேன்.'

'...'

"என்ன‌ சொன்னாலும் கேக்க‌ மாட்டேங்கிறா.. வீக் டேஸ்ல‌ எப்பிடி பாண்டிச்சேரி போக‌ முடியும் சொல்லுங்க‌?.. வாரம் ஒரு நாள் வர்றேங்கிறேன், ரெண்டு வாட்டியாவ‌து வ‌ர‌ணும்கிறா. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் இங்க‌ வ‌ந்த‌ப்புற‌ம் வேலைக்கு போலாம்கிறேன், இல்ல‌ இப்ப‌வே வேலைக்கு போவேங்கிறா. வீட்ல‌ க‌ல்யாண‌ப் பேச்ச‌ எடுக்க‌ட்டும் கொஞ்ச‌ம் பொறுங்கிறேன், இல்ல‌ இப்ப‌வே பேசுங்கிறா. பாருங்க‌ நேத்து ப‌ஸ்ல‌ செல்போனோட‌ ஹேண்ட்பேகை தொலைச்சுட்டு, இன்னிக்கு நைட்டே நீ வ‌ர்றே, புது போனோட‌ங்கிறா.. இன்னிக்கு டெஸ்பாட்ச் இருக்குது. நைட் லேட்டாகும். என்ன‌ ப‌ண்ற‌துன்னு முழிச்சிகிட்டிருக்கேன்.."

என் கேள்விக்கு இப்போது நானே ப‌தில் சொல்கிறேன். ச்ச்சத்திய‌மா முடியாது.!

(மாற்றுக் க‌ருத்து இருப்போர் ச‌ண்டைக்கு வ‌ர‌லாம்.)

டிஸ்கி : இது ஒரு கல்யாணமாகாதவரின் அனுபவம் என்பதால் 'கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை' சீரியஸில் சேர்க்கமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, July 28, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -3

கி.பி 2005 க்கு முன்னால்..


21.10.2001 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி.

ஒரு கனவைப் போல சென்னை அம்பத்தூரில் மிதந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான(?) பேச்சுலர் அறைகளில் ஒன்று. கார்த்திக் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் தலைமாட்டில் கிடக்கும் கறுப்பு நிற சிறிய செங்கல்லை போலிருக்கும் நோக்கியா செல்போனில் இசையாக ஒரு அழைப்பு அவனை எழுப்புகிறது.

'டேய் கார்த்தி.. இன்னுமா தூங்கிட்டுருக்கே.. தேவர் ஒயின்ஸுல நிக்கிறோம்டா. இங்க வந்துடுறியா, இல்ல வாங்கிட்டு வந்துரவா?' நிமிடத்தில் தூக்கம் கலைகிறது.

இங்கேயே வந்துடுங்க.யாரெல்லாம் கூட இருக்காங்க.கணேஷை எப்பிடியாச்சும் தேடிப்பிடிச்சு தூக்கிட்டு வந்துடுங்க.சிகரெட் பத்தலை, டச்சர் பத்தலைனு இம்சை பண்ணக்கூடாது,தேவையான அளவு வாங்கிட்டு வந்துடுங்க.சாப்பாடு இப்பவே வாங்க வேண்டாம். பத்துமணிக்கு மேல யாராவதுபோய் வாங்கிக்கலாம்.--என விசாரணைகளையும், விபரங்களையும் தெரிவிக்கிறான்.

உடன் எழுந்து கும்பல் வந்துசேரும் முன் ரெடியாகிவிடலாம் என எண்ணி அத்தியாவசிய பொருட்களை எடுத்து வைத்து அறையை தயார் செய்துவிட்டு குளித்து ரெடியாகிறான். கைலி, பனியனுடன் பால்கனிக்கு வருகிறான். மழை வரும் போலிருந்தது. வீசிய குளிர்ந்த காற்றில் கற்றையான கேசம் அலைபாய்கிறது.

பின் வந்த அந்த கொண்டாட்டம் நிறைந்த அந்த அருமையான இரவைப் பற்றி மேலும் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை என எண்ணுகிறேன்.

22.10.2001 திங்கட்கிழமை மாலை 3 மணி.

.:பேக்டரியில் வெர்னியர் காலிப்பருடன் அன்று தயாராகிகொண்டிருந்த அந்த முக்கியமான ஒரு கார் உதிரி பாகத்தை அளவிட்டுக்கொண்டிருக்கிறான் கார்த்திக். செல்போன் அழைக்கிறது. யாரென பார்க்கிறான். ப்ரொடக்ஷனில் இருக்கும் மானேஜர் உதய், சீனியர். அவனது டிபார்ட்மென்ட் இல்லையானாலும் அவனோடு அன்பாக பழகுபவர்.
'கார்த்திக் முக்கியமான வேலை ஏதும் இருக்கா, நான் .:ப்ரீயா இருக்கேன். வெளிய போலாமா.. ரொம்ப நாளாச்சு' என்கிறார். 'போலாம் சார், பிராப்ளம் இல்ல..'

சற்று நேரத்தில் அவனை பிக்‍-அப் செய்துகொண்டு உதயின் கார் கோயம்பேடு சிக்னலில் இருக்கும் 'இக்னைட்' பாருக்கு செல்கிறது.

23.10.2001 செவ்வாய்கிழமை மாலை 7 மணி.

கண்களில் விழும் அழகான முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டவாறே .:பேக்டரியின் வாசலில் சக சூப்பர்வைசர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறான். சிறிது நேரத்தில் அனைவருக்கும் ஒரு bye சொல்லிவிட்டு பைக் ஸ்டாண்டை நோக்கி செல்கிறான். செல்போன் அழைக்கிறது.
டேய் சொல்லு செல்லா.. எப்போ வந்தே ஊர்லேர்ந்து?இப்போவா? எங்க உன் ரூமுக்கா? நாளைக்கு வெச்சுக்கலாமா.. கொஞ்ச வேலையிருக்கு..நாளைக்கு திரும்பவும் ஊருக்கு போறியா, சரிடா.. வர்றேன்.. அஞ்சு நிமிஷத்துல அங்கேயிருப்பேன்

25.10.2001

புது வ‌ண்டி புக் ப‌ண்ணியிருக்கேன் கார்த்திக், கண்டிப்பா நீ வந்துறணும்.

26.10.2001

ஹாப்பி பர்த்டே முருகன்! கலெக்டர் நகர் 'அம்பாள்' தானே.. சரி சரி வர்றேன்.

27.10.2001

வேணாண்டா.. நான் அங்கேலாம் வரமுடியாது. ஒரு நாளைக்காக என்னை பாண்டிச்சேரிக்கு அலைக்காதே. நீதான் திங்கக்கிழமை வந்துடுவீல்ல, பாத்துக்கலாம். எதாவது வாங்கிட்டு வந்துடு.

28.10.2001 ஞாயிற்றுக்கிழ‌மை காலை 6 மணி

தூங்கிக்கொண்டிருந்த‌ கார்த்திக்கின் த‌லையைச்சுற்றி கொண்டுவ‌ந்த‌ பாட்டில்க‌ளை அடுக்கிவவைத்துவிட்டு, சிரித்து எழுப்பிவிட‌ முய‌ன்ற‌ ரூம் மேட் ராஜாவை உஷ்' சொல்லி அட‌க்கிவிட்டு ஒரு பாட்டிலை ம‌ட்டும் ஓப‌ன் செய்தான் செல்லா. ம‌ய‌ங்கியிருப்ப‌வ‌னின் முக‌த்தில் தண்ணீரை தெளிப்ப‌து போல‌ கொஞ்ச‌ம் கையில் ஊற்றி கார்த்திக்கின் முக‌த்தில் அடித்தான்.
எரிச்சலில் விருட்டென‌ எழுந்த‌ கார்த்திக்கின் கோபம், செல்லாவை க‌ண்ட‌தும் சிரிப்பாக‌ மாறி 'டேய்.. எரும‌, அதுக்குள்ள‌ வ‌ந்திட்டியா'
குளிக்காம‌ல் கொள்ளாம‌ல் அன்றைய‌ ஞாயிறு எப்ப‌டி போயிருக்கும் என்ப‌தையும் உங்க‌ளால் உண‌ர‌முடியும்.


கி.பி 2005 க்கு பின்னால்..


17.08.2006

பக்கத்து கேபின் ராஜன் கேட்டார் 'என்ன‌ வ‌ய‌சாச்சு கேகே உங்க‌ளுக்கு?' பதிலுக்கு கார்த்திக், 'அதுல‌ என்ன‌ ஆராய்ச்சி உங்க‌ளுக்கு இப்போ?''இல்ல‌.. ம‌ண்டையில‌ ஒத்த‌ முடிய‌ காங்க‌லியே, அதான் கேட்டேன்''சும்மா வெறுப்பேத்தாதீங்க‌ ராஜ‌ன்..'பாக்கெட்டிலிருந்த‌ சோனி எரிக்ஸ‌ன் அழைத்த‌து.'என்ன‌டா எத்தனை தடவை கூப்பிட்டாலும் வ‌ர‌வே மாட்டேங்கிறே?'

சரவணன் சலித்துக்கொண்டான் போனில்.'ஏண்டா நீங்க வேற படுத்துறீங்க.. வர்ற ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா வெச்சுக்கலாம். காலையிலேயே போன் பண்ணிடு. ஆமா ஈவினிங் சரிப்படாது, காலையிலேயேதான்'

20.08.2006

போன் அடித்தது. சரவணன்தான்.'சாரிடா.. இன்னிக்கு முடியாது போல‌ தெரியுது. கிரைண்ட‌ர் ரிப்பேராகி ப‌த்து நாளாச்சி, வெளில‌ தூக்கிட்டு போக‌ணும். இவ‌ளை டி‍-ந‌க‌ர் கூட்டிட்டு போறேன்னு ரெண்டு மாச‌மா ஏமாத்திட்டிருக்கேன். தொலைச்சுடுவா'

12.09.2006

'க‌ணேஷை பாக்க‌ போறேம்மா.. சாந்திர‌ம் வ‌ர‌ கொஞ்ச‌ லேட்டாகும்''என்ன‌ விளாடுறீங்க‌ளா? போன‌ மாச‌ம்தானே அவர் வீட்டுக்கு போயிட்டு த‌ண்ணிய‌டிச்சுட்டு வ‌ந்தீங்க‌.. ஒழுங்கா ஆறு ம‌ணிக்கெல்லாம் வீட்டுக்கு வ‌ந்துடுங்க‌. ஏதாவ‌து பேச‌ணும்னா அவ‌ரை ந‌ம்ப‌ வீட்டுக்கு வ‌ர‌ச்சொல்லுங்க‌'

30.09.2006

ஆ.:பீஸ் கேண்டீனில் ராஜ‌ன் கிசுகிசுப்பாக‌ கேட்டுக்கொண்டிருந்தார். 'என்ன‌ கேகே இன்னிக்கு போலாமா?' 'வேண்டாம் ராஜ‌ன், நீங்க‌ போயிட்டுவாங்க‌.. அடுத்த‌வார‌ம் வீட்ல‌ ஊருக்கு போறா, அண்ண‌னுக்கு பொண்ணுபார்க்கிறாங்க‌ளாம். எப்பிடியும் ப‌த்து நாள் க‌ழிச்சுதான் வ‌ருவா.. அப்ப‌ பாத்துக்க‌லாம்'

15.10.2006

க‌ணேஷ், ராஜ‌ன், ச‌ர‌வ‌ண‌ன் இன்னும் இருவ‌ர் என‌ ந‌ண்ப‌ர்க‌ள் சூழ்ந்திருக்க‌ கிழ‌க்கு ஓர‌ டேபிளில் உட்கார்ந்திருந்தான் கார்த்திக். கடற்கரையை பார்த்தவாறே 'மான்ஹாட்டனின்' மொட்டைமாடி. அம்ப‌த்தூரிலிருந்து க‌ஷ்ட‌ப்ப‌ட்டு செல்லாவையும் வ‌ர‌வைத்திருந்த‌தில் ஒரே ச‌ந்தோஷ‌ம். அருமையான‌ மாலை.

மூன்று ர‌வுண்ட் போயிருந்த‌ போது மேஜையிலிருந்த‌ கார்த்திக்கின் செல்போன் அழைத்த‌து. ..அன்பே அன்பே கொல்லாதே..
போனை பார்த்துவிட்டு அனைவ‌ருக்கும் ஒரு உஷ்' சொல்லிவிட்டு,

'சொல்லும்மா..''இல்லம்மா, வீட்ல‌தான் இருக்கேன்'

"என்னோட‌ சூட்கேஸ்ல‌ என் பைல் இருக்கும். அதிலிருந்து என் எம்ப்ளாய்மென்ட் கார்டை பார்த்து ந‌ம்ப‌ர் என்ன‌ன்னு சொல்லுங்க‌ளேன்"

எச்சரிக்கை -1

எச்சரிக்கை ‍-2

Friday, July 25, 2008

சிரிப்பாய் சிரிக்கும் கவிதைகள்

இந்த 'புலம்பல்கள்' பிளாக்கில் கவிதைகள் எழுதக்கூடாது என்பதை ஒரு முடிவாகவே வைத்திருந்தேன் (வரும் சிலரும் ஓடிப்போய்விட்டால்என்ன பண்ணுவது?). ஆனால் 'முதல் முத்தத்தை' எவ்வளவு ட்ரை பண்ணியும் 'தமிழ்மணத்தில்' ஏற்ற முடியவில்லை .. ரொம்ப படுத்துது.!

கவிதைகளை எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!

இதை கவிதை என்று ஒப்புக்கொள்கிறவர்கள் தயவு செய்து http://www.muthalmuththam.blogspot.com/- க்கு போகவும். அப்படியே பின்னூட்டமும் போட்டுவிட்டு போகவும். பிறர் மன்னிப்பார்களாக, இனி இந்த மாதிரி இந்த பக்கத்தில் தொல்லை செய்யமாட்டேன். ('கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை' க்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதால் பிற விஷயங்களுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.)

Tuesday, July 22, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -2

கல்யாணம் என்பது ரொம்ப அவசியமான ஒன்றுதானா?

"ஆம் / இல்லை / வேறு ஆப்ஷன் இல்லாததால் இருந்துவிட்டு போகட்டும்."

இவ்வாறு கல்யாணமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு ப‌திலைச் சொல்கிறார்க‌ள். ஆனால் க‌ல்யாண‌ம் ஆகாத‌வ‌ர்க‌ளோ ஒருவித‌ ம‌ய‌க்க‌த்துட‌ன் எப்போதும் "ஆம்" என்றே சொல்கிறார்க‌ள். (எவ்வ‌ள‌வு எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள‌மாட்டேன்கிற‌துக‌ள்) . ஒரு ந‌ண்பன் (கண்ணன் அல்ல) ஒருவ‌ன் அவ‌ன் க‌ருத்தாக‌வோ அல்ல‌து விவாத‌த்திற்காக‌வோ ஒரு கேள்வியை அடிக்க‌டி கேட்ப‌துண்டு. அது 'க‌ல்யாண‌த்தினால் உருப்ப‌டியான‌ இர‌வுக‌ளைத் த‌விர ஏதாகிலும் ப‌ய‌னுண்டா?'

நான் கீழே ஒரு சாம்பிள் லிஸ்ட் த‌ருகிறேன், பாருங்க‌ள்.

புத்த‌க‌ங்க‌ள், நட்பு, ஹோட்ட‌ல், சினிமா, ஷாப்பிங், ப‌ய‌ண‌ம், காத‌ல், அழ‌குண‌ர்ச்சி, ச‌மைய‌ல், வ‌ண்ண‌ங்க‌ள், எண்ண‌ங்க‌ள், சோம்ப‌ல், தூக்க‌ம், இசை, பொறுமை, க‌ட‌வுள், சிரிப்பு, ஒழுங்கு, வேக‌ம், ச‌த்த‌ம், முத்த‌ம், ப‌ண‌ம், ப‌ய‌ம், தைரிய‌ம், வெட்க‌ம், உற‌வுக‌ள், உண‌ர்வுக‌ள், உண‌வுகள்.. என‌ இது நீண்டுகொண்டே போகிற‌து. இத்தனையையும் பற்றிய இருவரது கருத்துக்களும் மோதவேண்டிய களமே திருமணம். (என்ன‌டா சொல்ல‌ வ‌ர்ரே.. ரித‌மிக்கா லிஸ்ட் போட்டுட்டா ஆச்சா?..ங்கிறீங்க‌ளா. ஒன்றிரண்டை விளக்க அனுமதியுங்கள்).

*டிவியில் 'மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான்.. மஸ்து ஜாஸ்திதான்..' என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென 'எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க இது..' என்பாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

*ஒரு ச‌ம‌ய‌ம் 'டூவீலரில் வ‌ர‌முடியாது, முதுகு வ‌லிக்கும். ஆட்டோ வேண்டாம், வீண்செல‌வு. ப‌ஸ்ஸில் வேண்டாம், ரொம்ப‌ கூட்டமாயிருக்கும்' என்பாள். பிறிதொரு ச‌ம‌ய‌ம் 'வீடுவீடுன்னே கிட‌க்கிறேனே.. எங்காவ‌து கூட்டிப்போயிருக்கீங்க‌ளா..?' என்பாள் நான்குபேர் இருக்கும் போது.

*'ஹோட்ட‌ல் சாப்பாடே வேண்டாம். ஹைஜீனிக் இல்லை' என்பாள். நீங்க‌ள் உள்ளூர‌ ம‌கிழ்வீர்க‌ள். ஆனால் உடல் ந‌ல‌மில்லாம‌ல் போகும்போதும், ப‌ய‌ண‌ங்க‌ளின் போதும் தெரியும் சேதி. ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள். (சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூடி சரியாக நிற்காம‌ல், முக‌மெங்கும் பாதி அரைபட்ட தேங்காய்,மிள‌காய் அப்பியிருக்க‌ அல‌றுவீர்க‌ள்)

* இரண்டு வகை கறிகள், குழம்பு, ரசம், தயிர் என மதிய உணவுக்கு அடுக்கிவைப்பாள். நீங்கள் விரும்பும் வத்தலோ, அப்பளமோ அவளுக்கு நினைவே வராது.

*'இன்னிக்கு ஆடிட் இருக்குது, அவசியமில்லாமல் போன் பண்ணாதே' என்று படித்து படித்து சொல்லிவிட்டு சென்றிருப்பீர்கள். ஏதோ நீங்கள் சொல்வதைத்தான் தினமும் வைப்பதைப்போல 'சாய்ங்காலம் என்ன குழம்பு வைக்கலாம்?' என்று மூன்று முறை போன் செய்து கேட்டுக்கொள்வாள்.

*உங்களுக்கு கடிதங்கள், பிரிஸ்கிரிப்ஷன்கள், ரெசிப்டுகள், முக்கிய பொருட்களின் பில்கள், பேங்க்,எல்ஐஸி,டாக்ஸ் பேப்பர்கள் முக்கியமானவைகளாக தோன்றும். அவளுக்கு அப்படித் தோன்றாது. சில சமயங்களில் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் குப்பையில் காணக்கிடைக்கும்.

*முட்டையோ, நான்‍வெஜ்ஜோ எல்லாம் ஒன்றுதான் என்பீர்கள் நீங்கள். அவள் அவற்றை தனியாக ட்ரீட் செய்ய தனித் தனி பிளாஸ்டிக் தட்டுகளை வைத்திருப்பாள்.

* நீங்களும் துவைத்த மற்றும் துவைக்காத துணிகளை தனித்தனியாகத்தான் ட்ரீட் செய்வீர்கள். அவள் உங்களை விடவும் இரண்டும் தொட்டுவிடவே கூடாது என்பதில் சர்வ நிச்சயமாக இருப்பாள்.

* சில சமயங்களில் கோபத்தில் இரைந்து கத்துவாள். சமயங்களில் காதிலேயே விழாதவாறு முனங்கிக் கொண்டிருப்பாள்.

*பார்த்துப் பார்த்து எஸ்ரா புத்த‌க‌ம் ஒன்றை வாங்கி வந்திருப்பீர்க‌ள். போனில் பேசிக்கொண்டே அத‌ன் அட்டையில் கிறுக்கிவைப்பாள்.

ச‌ரி போதும்..
மேற்கூறிய‌ லிஸ்ட்டில் அதிகபட்ச விஷயங்கள் உங்க‌ளுக்கிடையே ஒத்துப்போனால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இப்போது இர‌ண்டு கேள்விக‌ள்.

இவற்றுள் ஒன்று ஒத்துப் போக‌வில்லை என்றாலும் நீங்க‌ள் ம‌ன‌முடைந்து போவீர்க‌ளா?

ஒன்று கூட‌ ஒத்துப்போக‌வில்லை எனினும் ம‌ன‌ம் த‌ள‌ர‌மாட்டீர்க‌ளா?

இர‌ண்டாவ‌து கேள்விக்கு நீங்க‌ள் ஆம் என்று பதில் தந்தால்,
நீங்க‌ள் க‌ல்யாண‌த்துக்குத் த‌யார்.!

நான் த‌லையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, July 15, 2008

பயப்படாதீங்க.. ரெண்டே ரெண்டு வரி விமர்சனம் -தசாவதாரம்

அன்பான நண்பர்களே, திரை விமர்சனம் எழுதுவது நம் வலைப்பூவின் பிரதான நோக்கமில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். (அறிவுரைகள் கூறி உங்களையும் முடிந்தால் இந்த உலகையும் திருத்துவதுதான் நம் பிரதான நோக்கம் என்பதையும் அறிவீர்கள். குருவி விமர்சனம் ஒரு மீள முடியாத தாக்கத்தினால் எழுதப்பட்டது என்பதை அறிக!). ஆனால் சில நண்பர்களும் பல(?) வாசகர்களுக்கும் குருவியை படித்துவிட்டு தசாவதாரத்துக்கும் நீங்கள் எழுதியே ஆக வேண்டும் என என் கையைப் பிடித்து தொங்குவதால் இதை எழுத வேண்டியது நேர்கிறது. கண்ணனும் அவர்களோடு சேர்ந்துகொண்டு பிடிவாதம் பிடிக்கிறான்.

பலரும் மிகச்சிரமப்பட்டு படத்தின் நிறைகளைக் கண்டுபிடித்து பாராட்டிவிட்டதாலும், மிகப்பலரும் படத்தை நாராய்க் கிழித்து தொங்கவிட்டு விட்டதாலும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எழுப்பி இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.

கொஞ்சம் சிந்தியுங்கள்.! அனைத்தையும் மீறி கமலின் கடும் உழைப்பில் படம் ஒப்பேற்றப் பட்டுவிட்டது. ஆனால் இதே பத்து வேட ஐடியா மட்டும் வேறு யாருக்கோ முதலில் தோன்றி, ஆப்பிரிக்காவிலிருந்து மேக் அப் கலைஞர்களை (அமெரிக்காவிலிருந்து அடிக்கடி வரவைத்து போரடித்து விட்டதால்) வரவழைத்து அஜித்தை வைத்தோ அல்லது ரித்தீஷை வைத்தோ இந்த படத்தை எடுத்திருந்தால் உங்களையும் என்னையும் யாரால் காப்பாற்றியிருக்க முடியும்?

கீழ்ப் பாக்கம் நிரம்பி வழிந்திருக்காதா..?

(விரைவில் எதிர்பாருங்கள், கல்யாணம் ஆகாதவர்களுக்கான ஓர் எச்சரிக்கை -2)

Saturday, July 12, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -1

இந்தப் பதிவு நிச்சயமாக கல்யாணம் ஆனவர்களுக்காக அல்ல. (இது விளம்பர நோக்கத்திற்காக அல்ல என்பதை நம்புங்கள்). சிறையில் இருப்பவர்களுக்கு சிறை எப்படி இருக்கும் என்று விளக்கினால் போரடிக்கும்தானே. அதனால் அவர்கள் எனது முந்தைய பதிவுகளைப் படிக்கப் போகலாம். (வந்தவிங்கள சும்மா வுட்டுருவனா)
மேலும் திருமணத்திற்கு முன்பு பெற்றோருடன் இருப்பவர்களுக்கு இது எந்த அளவில் பொருந்தும் என்பதும் தெரியவில்லை. இது சென்னையில் தங்கி வீட்டைப்பிரிந்து வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்
ஆயிரக்கணக்கான ஜீவன்களுக்காக என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

கை நிறைய .. சாரி, விரல் நிறைய சம்பளத்துடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். (என்ன கொசுவத்தியா என திகைக்க வேண்டாம்.. நாலு வரிகளில் முடித்துவிடுகிறேன்). அப்போது அறைகளில் மூன்று அல்லது நான்கு நண்பர்களுடன் சேர்ந்துதான் தங்கியிருப்போம். அதனால் வாடகை மற்றும் பிற விஷயங்களுக்கு வசதி. பிராப்ளம் என்னன்னா குறைஞ்சது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புது அறைகளை தேட வேண்டிய நிலை எங்களுக்கு வந்துவிடும். ஏனென்பதை இப்போது விளக்கிக்கொண்டிருந்தால் கட்டுரை திசை மாறிவிடக் கூடுமென்பதால் அதை பிறிதொரு சமயம் கண்ணன் அனுமதித்தால் சொல்கிறேன்.

அந்த சமயங்களில் ஒரே ஒரு சூட்கேஸ் தாங்க.. சும்மா கிளம்பி போய்கினே இருப்பேன். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில பல புத்தகங்கள்! அதை தனியே ஒரு கம்புப் பை (ஜவுளிக்கடைகளில் கொடுப்பாங்களே.. அதே பைதான், யாராவது அதன் பேரை சொன்னால் நல்லா இருக்கும்) யில் போட்டுக்கொண்டு நடையைத் தட்டிவிடுவேன்.

இப்போது அதை கற்பனை பண்ணியும் பார்க்க முடியுமா?

சமீபத்தில் பெருங்குடியிலிருந்து மேடவாக்கத்துக்கு வீட்டை மாற்றியபோது (திரும்பவும் ஏனென்று கேட்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். அது ஒரு பெரீய்ய்ய்ய கதை) இரண்டு 407-கள்.! அப்படியும் பத்த வில்லையே..!

இரண்டு பேண்ட்கள், நாலு சட்டைகள், ஒரு .:பைல், சில புத்தகங்கள் என்றிருந்த என் அசையும் சொத்துக்கள் எப்படி இரண்டு 407-களையும் தாண்டி வளர்ந்து பூதாகரமானது? வீடு மாற்றுவதென்றாலோ, அல்லது சிவனே என்று போய் விடுவதென்றாலோ ஆகிற காரியமா? யாரால் இந்த நிலைமை?

ஒரே ஓர் பெண்!

அவர்தான் மதிப்புக்குரிய என் வீட்டுக்காரி.

ஒரு பெரிய மரத்தாலான கட்டில், ஒரு ஆறடி உயர பீரோ, இரண்டு ஆளுயர சூட்கேஸ், பழைய மாடல் (நகர்த்த முடியாத) கிரைண்டர் ஒன்று, (கல்யாணச் சீராக வந்தது. சரியான மறு விற்பனை விலை யார்தான் தருகிறார்கள் என்று பார்ப்போம், அது வரை வைத்திருப்பதாக சவால் !) புது மாடல் டேபிள் டாப் ஒன்று, இத்தாம் பெரிய டிவி ஒன்று என நான் லிஸ்ட் -ஐ நீட்டிக் கொண்டே போனால் உங்களுக்கு தூக்கம் வரும் வாய்ப்பிருப்பதால் என் தங்கமணி வைத்திருக்கும் சில முக்கியமான பொருட்களை பட்டியலிட்டு முடித்துக்கொள்கிறேன்.

இரண்டு .:பிளாஸ்க்குகள் (ஒன்று உடைந்தது, ஒருவேளை நேரம் கிடைக்கும் போது ரிப்பேர் பார்த்துவிடலாம்)

இரண்டு சுவர்க் கடிகாரம் (ஒன்று ரிப்பேர், அது அழகாக இருக்கிறது)

இரண்டு குடைகள் (ஒன்று கிழிந்தது, ஊருக்குப் போகும் போது யாருக்காவது கொடுக்கலாம்)

இரண்டு முறுக்கு பிழியும் உழக்குகள் (ஒன்று மரத்தாலானது, ஒன்று பித்தளை -இரண்டுமே எப்போதுமே பயன்படுத்தாதது)

இரண்டு விளக்குகள் (ஒன்று சிறிது, தினமும். ஒன்று பெரிது விஷேச நாட்களுக்காக)

நாற்பத்தேழு மீடியம் சைஸ் பிளாஸ்டிக் டப்பாக்கள் (உப்பு, புளி, மிளகாய் என சமையல் அறைப் பொருட்கள்.. சூடம், சாம்பிராணி, குங்குமம் என பூசையறைப் பொருட்கள்.. கோலப்பொடி, எறும்பு பொடி, சோப்புப் பொடி என பொதுவானவை.. உக்காந்து எண்ணிப் பார்த்தேங்க!)

உடைந்த பிளாஸ்டிக் வாளிகள், கிழிந்த அட்டைப் பெட்டிகள், பாலித்தீன் கவர்கள், காலியான ஷாம்பூ பாட்டில்கள்.. என அது முடிவுறாத உலகம்.!

கல்யாணம் அவசியம் பண்ணிக்கத்தான் போறீங்களா?

Saturday, July 5, 2008

முப்பது வயதைத் தாண்டிவிட்டீர்களா?

போன மாசம்தான் எனது முப்பதாவது பிறந்தநாளை நண்பர்கள் புடைசூழ (இரண்டே பேர்தான்) வேளச்சேரி யில் ஒரு அரசு மதுக்கூடத்தில் (வீட்டுக்காரி வீட்டில் இல்லாததால் ) விமரிசையாக கொண்டாடினேன். ஆனால் அதற்கும் என்னுடைய சந்தேகங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதாவென நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கொஞ்ச நாளாகவே கொட்டாவி விடும்போது இடது பக்க காது டப்' பென திறந்துகொள்கிறது. அப்படியானால் மற்ற நேரங்களில் மெதுவாக அடைக்கத்தொடங்கி அடுத்த கொட்டாவி வருவதற்குள் ஓரளவு அடைத்துவிடுகிறது என்றுதானே அர்த்தம்? செல்போனில் இடதுகாதில் பேசும்போது எங்கோ ஆழமாக கேட்பதால் போனை காதோடு நன்கு அழுத்தி வைத்து பேசவேண்டியிருக்கிறது. ஆனால் வலது காதிலோ அதே போன் தெளிவாக காது கூசும் அளவில் ஒலிக்கிறது. அப்படீன்னா இடது பக்கம் போச்சா.. அவ்வளவுதானா?

முன்னாடியெல்லாம் எட்டுமணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே வேலை செய்வேன். வேலை முடிந்த பிறகும் இரண்டு கிலோமீட்டர் நடந்தே வீட்டுக்கு வருவேன். போன வாரம் டூ வீலரை சர்வீசுக்கு விட்ட காரணத்தால் அலுவலகத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு நடந்தே வந்தேன். (பொதுவாக இந்த மாதிரி சூழலில் வேறு யார் வண்டியிலாவது தொற்றி விடுவது வழக்கம், அன்று யாரும் சிக்கவில்லை) ஒன்னரை கிலோமீட்டர்தாங்க.. ஏதோ மாரத்தான் ஓடியது போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. எங்கே உட்காரலாம் என கால்கள் வலியெடுக்க இடம் தேடினேன். ஆசுவாசப் படுத்திக்கொண்டு, பஸ் சில் போகலாமா ஷேர் ஆட்டோவில் போகலாமாவென யோசித்துக்கொண்டே ரோட்டைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மண்டையில் இன்னொரு விஷயம் உறைத்தது. முன்பெல்லாம் பஸ் மிகத்தொலைவில் வரும் போதே போர்டை வாசித்துவிடுவேன். இப்போது போர்டை பார்க்கிறேன்.. எழுத்துக்களுக்கு பதிலாக மங்கலாக பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. பஸ் பக்கத்தில் வர வர .. பூச்சிகள் மெது மெதுவாக எழுத்துக்களாக மாறின. அடப்பாவிகளா.. கண்ணும் போச்சா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நடந்த டூ வீலர் விபத்தில் (என்னுடைய ரெகுலர் வாசகர்களுக்கு (?) தெரிந்திருக்கலாம். -இப்போது நம் வலைப்பூவின் ஹிட் கவுண்டரை பார்த்துக்கொள்கிறேன்) வலது முட்டியில் லேசாக அடி. சுத்தமாக குணமாகிவிட்டது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் தரையில் சம்மணமிட்டு அமரும் போதெல்லாம் என்னை மறந்துவிடாதே என்பதைப்போல முட்டி வலித்துக் காட்டிக்கொண்டிருந்தது. சரி என்று டாக்டரை பார்க்கப்போனால் ரெண்டி மூணு சிட்டிங்குக்கு பிறகு 'நீங்கள் எதற்கு தேவையில்லாமல் சம்மணமிட்டு அமர்கிறீர்கள்?' என்று கேட்டுவிட்டு சில விஷயங்கள் அப்படித்தான் கண்ணன், நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடும் (இப்போ வீட்டுக்காரி இல்லையா அதுபோல என்று ஜோக் வேறு) அப்படியே அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியதுதான் என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டார்.

இன்னும் பல சந்தேகங்கள் உள்ளன. யாராவது முப்பது வயசைத் தாண்டியவர்கள் பதில் எழுதினால் மீதமுள்ளவைகளையும் கேட்டுத்தெரிந்து, தெளிந்து கொள்வேன்.