Saturday, July 5, 2008

முப்பது வயதைத் தாண்டிவிட்டீர்களா?

போன மாசம்தான் எனது முப்பதாவது பிறந்தநாளை நண்பர்கள் புடைசூழ (இரண்டே பேர்தான்) வேளச்சேரி யில் ஒரு அரசு மதுக்கூடத்தில் (வீட்டுக்காரி வீட்டில் இல்லாததால் ) விமரிசையாக கொண்டாடினேன். ஆனால் அதற்கும் என்னுடைய சந்தேகங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதாவென நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கொஞ்ச நாளாகவே கொட்டாவி விடும்போது இடது பக்க காது டப்' பென திறந்துகொள்கிறது. அப்படியானால் மற்ற நேரங்களில் மெதுவாக அடைக்கத்தொடங்கி அடுத்த கொட்டாவி வருவதற்குள் ஓரளவு அடைத்துவிடுகிறது என்றுதானே அர்த்தம்? செல்போனில் இடதுகாதில் பேசும்போது எங்கோ ஆழமாக கேட்பதால் போனை காதோடு நன்கு அழுத்தி வைத்து பேசவேண்டியிருக்கிறது. ஆனால் வலது காதிலோ அதே போன் தெளிவாக காது கூசும் அளவில் ஒலிக்கிறது. அப்படீன்னா இடது பக்கம் போச்சா.. அவ்வளவுதானா?

முன்னாடியெல்லாம் எட்டுமணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே வேலை செய்வேன். வேலை முடிந்த பிறகும் இரண்டு கிலோமீட்டர் நடந்தே வீட்டுக்கு வருவேன். போன வாரம் டூ வீலரை சர்வீசுக்கு விட்ட காரணத்தால் அலுவலகத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு நடந்தே வந்தேன். (பொதுவாக இந்த மாதிரி சூழலில் வேறு யார் வண்டியிலாவது தொற்றி விடுவது வழக்கம், அன்று யாரும் சிக்கவில்லை) ஒன்னரை கிலோமீட்டர்தாங்க.. ஏதோ மாரத்தான் ஓடியது போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. எங்கே உட்காரலாம் என கால்கள் வலியெடுக்க இடம் தேடினேன். ஆசுவாசப் படுத்திக்கொண்டு, பஸ் சில் போகலாமா ஷேர் ஆட்டோவில் போகலாமாவென யோசித்துக்கொண்டே ரோட்டைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மண்டையில் இன்னொரு விஷயம் உறைத்தது. முன்பெல்லாம் பஸ் மிகத்தொலைவில் வரும் போதே போர்டை வாசித்துவிடுவேன். இப்போது போர்டை பார்க்கிறேன்.. எழுத்துக்களுக்கு பதிலாக மங்கலாக பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. பஸ் பக்கத்தில் வர வர .. பூச்சிகள் மெது மெதுவாக எழுத்துக்களாக மாறின. அடப்பாவிகளா.. கண்ணும் போச்சா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நடந்த டூ வீலர் விபத்தில் (என்னுடைய ரெகுலர் வாசகர்களுக்கு (?) தெரிந்திருக்கலாம். -இப்போது நம் வலைப்பூவின் ஹிட் கவுண்டரை பார்த்துக்கொள்கிறேன்) வலது முட்டியில் லேசாக அடி. சுத்தமாக குணமாகிவிட்டது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் தரையில் சம்மணமிட்டு அமரும் போதெல்லாம் என்னை மறந்துவிடாதே என்பதைப்போல முட்டி வலித்துக் காட்டிக்கொண்டிருந்தது. சரி என்று டாக்டரை பார்க்கப்போனால் ரெண்டி மூணு சிட்டிங்குக்கு பிறகு 'நீங்கள் எதற்கு தேவையில்லாமல் சம்மணமிட்டு அமர்கிறீர்கள்?' என்று கேட்டுவிட்டு சில விஷயங்கள் அப்படித்தான் கண்ணன், நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடும் (இப்போ வீட்டுக்காரி இல்லையா அதுபோல என்று ஜோக் வேறு) அப்படியே அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியதுதான் என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டார்.

இன்னும் பல சந்தேகங்கள் உள்ளன. யாராவது முப்பது வயசைத் தாண்டியவர்கள் பதில் எழுதினால் மீதமுள்ளவைகளையும் கேட்டுத்தெரிந்து, தெளிந்து கொள்வேன்.

4 comments:

Vijay said...

என்னாதூஊ....ஊமையாஆ?....என்னாஆ?....கொஞ்ச சத்தமாதான் பேசேம்பா....என்னாது எழுதி இருக்கிங்களா? எங்க? பதிவுலயா? சின்னதா போஸ்டர் மாதிரி போட்ரத விட்டுட்டு..என்னபா கம்பியூட்டர்ல எல்லாம் எழுதிகிட்டு....ம்... ஆமா..சார், ஸ்கீரின் எங்க ...காணமே...(அட, தாமிரா ஏன் இப்பிடி ஓட்ராரு? காலு ஏதோ வலிக்குதுன்னு சொன்னாரேப்பா ..இவ்ளோ ஸ்பீடா ஓடுராரு? (ஏதோ நம்ப புண்ணியத்துல அவருக்கு ஒரு பிரச்சனையாவது சரியாச்சே. :P)

Thamira said...

நன்றி விஜய்.! (அப்போ முப்பதை தாண்டியாச்சுன்னு சொல்லுங்க.. எப்பவாச்சும் சந்திக்க நேர்ந்தால்' பேஸ்த் ' அடித்த நிலைக்கு தள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் -ஒருவேளை அறுபதை தாண்டி இருந்தீர்களானால் ..)

ரமேஷ் வைத்யா said...

அரசு மதுக்கூடங்களில் அசல்கள் அகன்று போலிகள் கோலோச்சத் தொடங்கிவிட்டன. இல்லையெனில் உனக்கு இத்தனை பிரச்னைகள் வந்திருக்காது. மூட்டு வலி, குஞ்சு நிமிரும்போது (குனிந்து நிமிர்தலின் சென்னை மொழி என்பதறிக) வலிக்கிறதா என்பதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.
உங்கள் வீட்டுத் தங்கமணியின் மெயில் ஐடி கொடுத்தால் இந்தப் பக்கத்தை அனுப்ப வசதியாக இருக்கும்.

Thamira said...

ரமேஷ்க்கு, வருகைக்கு நன்றி!

அய்யா புண்ணியவான்களே, உங்களை மாதிரி ஆட்கள் இது மாதிரி வலைப்பூக்களுக்கு வருவதே பெரிய விஷயம்.! வந்ததுதான் வந்தீங்க, மற்றவைகளையும்படித்து ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போக வேண்டியதுதானே.. டாப்பிக் எப்படி? நடை எப்படி? ன்னு .. நாங்களும் தெரிந்து கொள்வோமில்லையா இந்த மாதிரியே எழுதிக் கொண்டிருக்கலாமா.. அல்லது மூடிவிட்டு கிளம்பலாமான்னு.!

அப்புறம் அண்ணன் சுதேxxவின் தம்பிகள் நாங்கள், மதுக்கூடங்களைப் பற்றி எங்க கிட்டயேவா? தங்கமணியின் மெயில் ஐடி இருக்கட்டும்.. தங்களின் ஐடியை தாருங்கள் குனிஞ்சு நிமிரும் போதுவலிக்குதா இல்லியான்னு சொல்கிறேன்.