Wednesday, August 27, 2008

த‌ங்க‌ம‌ணியும் மாமியாரும் :போர் -1

அன்பான மாமியார்களையும் மருமகள்களையும் எங்கேயாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆமாம், உங்களைப்போலவே நானும் டிவி பேட்டிகளிலும் (அவர்கள் அழகாகவும் இருப்பார்கள்), கதைகளிலும், சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். அந்த மருமகள், மாமியாரை 'அம்மா' என்றழைப்பார். மாமியாரோ மருமகளை பாசமொழுக வாத்சல்யமாக பார்ப்பார். சேரில் ஒருவர் அமர, அவர் தோளைத்தொட்டவாறு மற்றொருவர் நிற்க போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.

ஆனால் நான் கேட்பது நிஜ வாழ்வில் நேரில் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? என்ன முழிக்கிறீர்கள்..

(இடையில் ஒரு டிஸ்கி : நமது சப்ஜக்டை விட்டுவிட்டு ரம்பா, சினிமா அதுஇது என பாதைமாறி போனதில், கண்ணன் நேற்றிரவு ஒரு நைன்டியை போட்டுவிட்டு வந்து மொத்துமொத்தென மொத்திவிட்டான். ஆகவேதான் உடனடியாக சப்ஜக்டுக்கு திரும்புகிறோம்.)

இந்த முறை என் கதையை விடுத்து, நண்பன் ஒருவனின் (சுந்தர் -செல்வி) கதையைப்பார்ப்போம். ஒவ்வொன்றாக அலசலாம், முதலில்..பொதுவாக மாமியார், மருமகள் இருவருக்கும் எப்போது சண்டை துவங்குகிறது? நாளாக‌ நாளாக‌ ஒருவ‌ர் குண‌ங்க‌ள் ம‌ற்றொருவ‌ருக்கு தெரிய‌வ‌ர‌ மெதுவாக‌ துவ‌ங்குகிற‌தோ.. என்று மெதுவாக‌ சிந்திக்கிறீர்க‌ளா, இல்லை. திரும‌ண‌ம் முடிந்த‌வுட‌னேயே மின்ன‌ல் வேக‌த்தில் துவ‌ங்கிவிடுகிற‌து. நண்பன் கதையில் மறுநாளே 'மறுவீட்டுக்கு' போய்வந்தவுடனே ஆரம்பித்துவிட்டது.

அவர்க‌ள் எத‌ற்காக‌ ச‌ண்டை போடுகிறார்க‌ள்? ப‌ண‌ம், காசு, ந‌கை, ந‌ட்டு.? இல்ல‌வேயில்லை, அப்ப‌டியிருந்தால்தான் லாப‌ம் என்று நினைத்துக்கொள்ள‌லாமே.! 'ம‌றுவீட்டுக்கு' போய்வ‌ந்த‌ ஜோடியுட‌ன், ப‌ழ‌ங்க‌ளும், சில‌ எவ‌ர்சில்வ‌ர் பானைக‌ளில் தின்ப‌ண்ட‌ங்க‌ளும் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம். சுந்தர் மறுவீட்டுக்கு போய்வந்தபோது உடன் 15 தார் வாழைப்ப‌ழ‌ங்க‌ளும், 450 கைச்சுற்று முறுக்குக‌ளும், 200 அதிர‌ச‌ங்க‌ளும் மேலும்சில‌ ப‌ண்ட‌ங்க‌ளும் வ‌ந்திருந்த‌ன‌. இவ‌ற்றை ம‌றுநாள் உற‌வின‌ர்க‌ள், தெருவின‌ர்க‌ளுக்கு (வசதியான பார்ட்டியாகவோ, சின்ன ஊராகவோ இருப்பின் ஊருக்கே) த‌ந்து எங்க‌ள் ம‌ரும‌க‌ள் கொண்டுவ‌ந்த‌து இது, ல‌ட்ச‌ண‌த்தைப் பார்த்துக்கொள்ளுங்க‌ள் என்று அறிவித்து ம‌கிழ்வார்க‌ள்.

ஆனால் சிக்க‌ல் பாருங்க‌ள், வ‌ந்த‌ 15 வாழைத்தார்க‌ளில் 10க்கும் மேற்ப‌ட்ட‌வை காயாக‌வே இருந்த‌ன‌, மேலும் அந்த‌க்காய்க‌ளும் விர‌ல் த‌டிம‌னுக்கே இருந்த‌ன‌. பேச‌ப்ப‌ட்ட‌ 500 முறுக்குக‌ளில் 450 ம‌ட்டுமே இருந்த‌ன‌, அவ‌ற்றிலும் 200க்கும் மேற்ப‌ட்ட‌வை இர‌ண்டாக‌வும், சில‌ எண்ணிக்கையில் எடுக்க‌முடியாத‌ அள‌வில் நொறுங்கிப்போயும் இருந்த‌ன‌. அதிர‌ச‌மோ க‌றுப்பாக‌வும், மெலிந்தும் இருந்த‌து. வெற்றிலை வ‌ர‌வேயில்லை (ப‌திலாக‌ 50 ரூபாய் ப‌ண‌ம் வ‌ந்திருந்த‌து). இத்த‌னை பெரிய‌ குறையை எப்ப‌டி ஒரு மாமியாரால் பொறுத்துக்கொள்ள‌முடியும்? இது த‌வ‌றுத‌லாக‌ ந‌ட‌ந்துவிட்ட‌தா? அல்ல‌து நாம் சீட்டிங் செய்ய‌ப்ப‌ட்டோமா என்று அவ‌ருக்கு ப‌ல‌த்த‌ ஐய‌ம், உள்ள‌க்குமுற‌ல், ஐயோ நாளை யாருக்கும் ஏதும் கொடுக்காவிட்டால் ப‌க்க‌த்துவீட்டு ப‌த்மா 'உன் ம‌ரும‌க‌ள் ஏதும் கொண்டுவ‌ர‌வில்லையா' என்று கேலி செய்வாளே, இந்த‌ப்பொருட்க‌ளை கொடுத்தால் அதைவிடவும் மோசமாக இந்த ஊரே சிரிக்குமே.! என்ன‌ செய்வது என்று அவர் தத்தளிக்கிறார். மாம‌னார் என்ன‌ சொல்கிறார்.. 'ஏம்மா டென்ஷ‌னாவுறே? முருக‌ன் க‌டையில‌ 10 தாருக்கு ந‌ல்ல‌ நாட்டுப்ப‌ழ‌மா சொல்லிட‌லாம், முறுக்குக்கு பாண்டிய‌ அனுப்பிச்சு இன்னிக்கே வாங்கிட்டு வ‌ர‌ச்சொல்லிட்டா போச்சு. ஏற்க‌ன‌வே 80 ரூபா அவுட்டு, இந்த‌ 1 ரூபாயில‌ என்ன‌ ஆயிர‌ப்போவுது' என்று வாய்தவறி இய‌ல்பாக‌ செல‌வையும் சேர்த்து சொல்லிவிடுகிறார். உடனே 'அந்த சிறுக்கி (சம்பந்தி), இப்பிடி ஏமாத்திட்டாளே' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் மாமியார்.

அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ இந்த‌ க‌ளேப‌ர‌ம் ம‌ரும‌கள் செல்வி காதுக்கு போகிற‌து. வ‌ந்து நின்ற‌வ‌ள், வ‌ந்த‌ ரெண்டாவ‌து நாளேவா? என்ன‌ ப‌ண்ண‌லாம், எங்கு ஆர‌ம்பிக்க‌லாம் என‌ யோசிக்க‌த்துவ‌ங்குகிறாள்.

ந‌ம‌து ஹீரோ சுந்தரோ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் த‌ம் அடித்துவிட்டு, இர‌ண்டாம் இர‌வுக்கான‌ க‌ன‌வுக‌ளுட‌ன் (ஏன்னா நேற்றுதான் சொத‌ப்பியிருப்பானே) வீட்டுக்குள் நுழைகிறான்.

'காந்த‌ல் போட்டு மூணு நாளாகியும் அந்த‌ப்ப‌ழ‌ம் ப‌ழுக்க‌ல‌ன்னா எங்க‌ம்மா என்ன‌ ப‌ண்ணுவாங்க‌? முறுக்க‌ வ‌ண்டில‌ ஏத்தும்போதே நான் க‌வ‌னிச்சேன், சின்ன‌ மாமாதான் த‌ட‌முடானு ஏத்துனாங்க‌.. பின்ன‌ உடையாம‌ என்ன‌ செய்யும்?' என்று முடிந்த‌ வ‌ரை அமைதியாக‌ வாத‌ம் செய்து கொண்டிருந்தாள். சுந்த‌ர் உள்ளே நுழைந்த‌தும் மேலும் கொஞ்ச‌ம் அமைதிய‌டைகிற‌து. (புது மாப்பிள்ளை என்ப‌தால் ஒரு ம‌ரியாதைதான், இது மாயை மாதிரி.. எந்த‌ நேர‌மும் க‌லைந்துபோக‌லாம்.) அதற்குள் விஷயம் சம்பந்தி வீட்டுக்கு எட்டி, நஷ்ட ஈடாக ரூபாய் 200 வந்துசேர்ந்தது.

ஆனால் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் எதிர்த்தே பேசியிராத‌ ந‌ம் பெற்றோரை நேற்று (உண்மையிலேயே நேற்று)வ‌ந்த‌வ‌ள் எதிர்த்து பேசுவ‌தா? என்று க‌லாசார‌ அதிர்ச்சியில் அதிர்ந்துபோனான் சுந்த‌ர். செல்வியும் அன்றிர‌வு 'இதுபோல‌ இனி பேசுவ‌தில்லை' என‌ உறுதிய‌ளித்த‌தும், அடுத்த‌ நிமிட‌மே கோப‌ம் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் ப‌ற‌ந்த‌து. ஆகா‌ ந‌ம் பேச்சுக்கு என்ன‌ ம‌ரியாதை என‌ நினைத்து உள்ள‌ம் குளிர்கிறான்.

அடுத்துவ‌ந்த‌ சில‌ நாட்க‌ளில் வாழ்க்கையின் ப‌ல‌ ர‌க‌சிய‌ங்க‌ளையும் அவ‌னுக்கு அவ‌ன் அம்மாவும், செல்வியும் இணைந்து புரிய‌வைத்த‌போது ஒரே வார‌த்தில், ப‌த்து வ‌ய‌து ஏறிய‌தைப்போல‌ உண‌ர்ந்தான் சுந்த‌ர். திரும‌ண‌மாகி ப‌த்தாவ‌து நாள் ந‌ண்ப‌ர்க‌ளின் ம‌த்தியில் உகார்ந்திருந்தவன் போதையில் அழத்துவ‌ங்கினான். க‌ண்க‌ளில் க‌ண்ணீர் தாரை தாரையாய் வ‌ழிந்த‌து. அப்போது நான் சொன்னேன் 'தைரியமா இருடா மாப்ள‌, இப்ப‌ நா இல்ல‌..?சொன்னாதாண்டா பார‌ம் குறையும், என்ன‌டா ந‌ட‌ந்துச்சி.?'

அவ‌ன் : அவ்வ்வ்வ்வ்வ்......

Monday, August 25, 2008

வெகுளித்தனமான ரம்பா.!

டிவியில் எந்த சானலைத் திருப்பினாலும் போட்டி போட்டு பாடறாங்க அல்லது பேசுறாங்க அல்லது காமெடிங்கிற பேர்ல அறுக்கறாங்க அல்லது ஆடுறாங்க.. இதைதவிர வேறு நிகழ்ச்சிகள் எந்த டிவியிலாவது ஏதாவது வருகிறதா (சினிமாவையும் சீரியல்களையும் தவிர்த்து) என மனதைரியம் உள்ளவர்கள் பார்த்துவிட்டு சொல்லலாம். இவுங்க போட்டி போடுறது அவுங்களுக்குள்ள ஜெயிக்கிறதுக்காக என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மக்களை டிவி பார்க்கும் கெட்ட பழக்கத்திலிருந்து மீட்க அரசும், தனியார் டிவிக்களும் திட்டமிட்டு ரகசியமாக கூட்டு சேர்ந்து போடும் போட்டியே அது. அதில் ஓரளவு அவர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலேயும் தவறாமல் மூன்று மூன்று நடுவர்கள் (அவர்களை 'ஹானரபிள் ஜட்ஜ்' என்றுதான் அனைவரும் அழைக்கிறார்கள். ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஜ‌ட்ஜூக‌ளுக்கெல்லாம் கிடைக்கும் ம‌ரியாதை என்ன‌ ம‌ரியாதை? அதையெல்லாம் தூசு என்று சொல்லும‌ள‌வில் இவ‌ர்க‌ளின் தேஜ‌ஸும், அதிகார‌மும் நிக‌ழ்ச்சிக‌ளில் தூள் ப‌றக்கிறது. ஒரு டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜ‌ட்ஜ் ஒருவர் நிக‌ழ்ச்சியைப் பார்த்துவிட்டு, நாமெல்லாம் என்ன‌த்தை ப‌டித்துக்கிழித்தோம் என்று புல‌ம்பிய‌ப‌டி வேலையை ரிஸைன் செய்துவிட‌லாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.) இருப்பார்க‌ள். நாம் குறிப்பாக‌ இந்த‌ ஆடுற‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி பார்க்க‌லாம். ப‌ங்கு பெறும் ஜோடிக‌ள் (க‌ன்டெஸ்டென்ட்) ஆடி முடித்த‌வுட‌ன் ஜ‌ட்ஜ்க‌ளின் முடிவை எதிர்நோக்கி பாவ‌மாக‌ நிற்பார்க‌ள். அவ‌ர்க‌ள் ஆடிய‌து இவ‌ர்க‌ளுக்கு பிடித்திருந்த‌தோ அவ‌ர்க‌ள் பிழைத்தார்க‌ள்..! நீங்க‌ள் இதுவ‌ரை கேள்விப்ப‌ட்டிராத‌ வார்த்தைக‌ளிலெல்லாம் பாராட்டு ம‌ழையாக‌ பொழிவார்க‌ள்.

கிழிகிழினுகிழிச்சுட்டீங்க, பின்னிட்டீங்க‌, சூப்ப‌ரிட்டீங்க‌, வ‌றுத்திட்டீங்க‌, மார்வ‌ல‌ஸ், அவுட்ஸ்டான்டிங், மைன்ட்புளோயிங், ஸ்டேஜ்புளோயிங், ரூ.:ப்புளோயிங், .:பைய‌ரிங், ராக்கிங்..

என்ட்ரில‌ உள்ள‌ வ‌ரும்போது உங்க‌ சுண்டுவிர‌ல்ல‌ கொசு க‌டிச்சுது, அத‌ப்பாத்துட்டேன் நான். ஆனாலும் அதைப்பொறுத்துக்கிட்டு ஆடினீங்க‌.. எக்ஸெல‌ண்ட்.! குர‌ங்கு மாதிரி த‌வ்வும் போது உன்னோட‌ எக்ஸ்பிரெஷ‌ன் க‌ல‌க்க‌ல்டா, அந்த‌க்கும்மாங்குத்து ஸ்டெப்ஸ் போடும் போது அவ‌ கால‌ மிதிச்ச‌ப்பாத்தியா.. சூப்ப‌ர்டா.. என்ன‌ம்மா உன‌க்கு வ‌லிச்சிருக்குமே.. அதையும் பொறுத்துக்கிட்டு நீ அவ‌னுக்கு ஈடு குடுத்து த‌வ‌க்கா மாதிரி துள்ளி துள்ளி ஆடுனே பாத்தியா.. கிழிச்சிட்டீங்க‌..ரெண்டு பேரும். என்னா மாதிரி கொரியோகிரா.:பி பின்னீட்டிங்க‌டா.!

ஆட்ட‌ம் பிடிக்க‌வில்லையோ, அவ்ளோதான்..

என்ன‌ ஆச்சு? ஸோ பேட்.! உங்க‌கிட்ட‌ நிறைய‌ திற‌‌மை இருக்குது, அதை நீங்க‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வே இல்லை. அன்னிக்கு ப்ளூ க‌ல‌ர் ட்ர‌ஸ்ல‌ குடுத்தீங்க‌ளே ஒரு பெர்.:பாமென்ஸ், அதெல்லாம் ஒரு ஆர்டின‌ரி டான்ஸ‌ர்ஸ் குடுக்கிற‌ பெர்.:பாமென்ஸே இல்லை, அப்பிடி ஆடுன‌ நீங்க‌ளா இன்னிக்கு..?

ரெண்டாவது சாங்ல மூணாவது வரியில வாய‌ அசைக்க‌வேயில்ல‌..ட்ரெஸ் யாரு செல‌க்ஷ‌ன்? ம்? ஊதா டாப்ஸுல‌ ப‌ச்சைக்கோடு, ஒரே க‌ல‌ர் டிஸ்ட‌ர்ப‌ன்ஸ்..செட் பிராப்ப‌ர்டிய‌ யூஸ் ப‌ண்ண‌வேயில்லை. க‌டைசி பாட்டுக்கு அங்க‌ ஒரு பாறாங்க‌ல் இருந்துது பாத்தியா? அதை அவ‌ த‌ல‌மேல‌ நீ போட்டுருக்க‌ணும். கிளாஸா இருந்துருக்கும். (இப்ப‌டி ஒருவ‌ர் சொல்லிக்கொன்டிருக்கும் போதே இன்னொரு ஜ‌ட்ஜ் 'ஏழாவ‌து வ‌ரியை பாடும் போது கொட்டாவி வ‌ந்த‌து, ஆனா அட‌க்கிக்கிட்டாரு' என்று எடுத்துக்கொடுப்பார்.)

இது பிராப்ப‌ர்டி ர‌வுண்டுடா.. குடைய‌ வெச்சு அப்பிடி ஆட‌க்கூடாது, ந‌ட்டுக்கா நிப்பாட்டி நீ அது மேல‌ ஏறி நின்னுருக்க‌ணும்.கான்செப்ட் புரிய‌வேயில்ல‌. நீ குளிக்க‌ போம்போது அவ‌ன் எட்டிப்பாக்கிறான், ச‌ரியா.? இது என‌க்கு புரிஞ்சுடுச்சு.. ஆனா ஆடிய‌ன்ஸுக்கு புரியாதே..

என்னோட‌ மார்க் ஒம்போதே முக்கால்.

இவ்வாறாக‌ க‌ன்டெஸ்ட‌ன்டுக‌ளும், ஜ‌ட்ஜுக‌ளும் ப‌டுத்துறது ப‌த்தாதுனு ஒரு ஜோடி இதை தொகுத்து வ‌ழ‌ங்குவ‌தற்காக‌ இருப்பார்க‌ள். அடுத்து அவ‌ச‌ர‌மாக‌ பாத்ரூம் போக‌ப்போவ‌தைப்போல‌ சொம்பை இங்கிலீஷில் (ம‌ற‌ந்தும் த‌மிழ் பேச‌மாட்டார்) கொள‌ கொள‌வென‌ தொகுத்து வ‌ழ‌ங்குவார்.

மேலும் ஒரு கொடுமையாக‌ 5 நிமிட‌த்துக்கு ஒருமுறை 10 நிமிட‌த்துக்கு விள‌ம்ப‌ர‌ இடைவேளை (பிரேக்) வ‌ரும். (பொழுது போகாத‌ பொம்முவைப்போல‌ க‌டிகார‌த்தை வைத்துக்கொண்டு க‌ண‌க்கு ப‌ண்ணினேன். 120 நிமிட‌ நிக‌ழ்ச்சியில் 85 நிமிட‌ம் விள‌ம்ப‌ர‌ம் வ‌ருகிற‌து.)

நான் கொஞ்ச‌ம் கூட‌ மிகைப்ப‌டுத்தாம‌ல் சொல்லியிருக்கிறேன், பார்க்காதவர்கள் மேலும் தெரிந்துகொள்ள‌ டிவியை நாட‌வும். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

இப்பிடியா ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கேற்ப‌வ‌ர்க‌ள், ஜ‌ட்ஜுக‌ள் உட்பட அனைவரும் பெரும்பாலும் ஸ்டீரியோ டைப்பில் இய‌ங்குவார்க‌ள். இடையிடையே அழுகாச்சி நாட‌க‌ங்க‌ள் ந‌ட‌க்கும், சென்டிமென்ட் வ‌ச‌ன‌ங்க‌ள் இட‌ம்பெறும். செய‌ற்கைத்த‌ன‌மாக‌ இருக்கும்.

ஆனால்.. இவ்வ‌ள‌வு கொடுமையிலும் ஒரு ஆறுத‌லாக‌, நான் பார்த்த‌வ‌ரையில் ஓர‌ள‌வு இய‌ல்பாக‌வும், வெகுளித்த‌ன‌மாக‌வும், வெட்க‌த்தோடும், சிரித்த‌முக‌மாயும் க‌மென்டுக‌ளையும், தீர்ப்பையும் வ‌ழ‌ங்கும் ஜ‌ட்ஜாக‌ ர‌ம்பாதான் தெரிகிறார். அதோடு ஒருமுறை அவ‌ர் அனைவ‌ர் மாதிரியும் மிமிக் செய்து காண்பித்த‌போது அவ‌ர‌து ந‌கைச்சுவை உண‌ர்வும் மிளிர்ந்த‌து.

வடை பெறுகிறேன்.. நன்றி.!

ஆ.:பீஸ் கேண்டீனில் முன்னை மாதிரி இல்லை இப்போது. எல்லாத்துக்கும் டோக்கன் சிஸ்டம்தான். சில சமயங்களில் நாம் ஒரு *** நிறுவனத்தில்தான் வேலை செய்கிறோமா? இல்லை மன்னார் அன்ட் கம்பெனியானு சந்தேகம் வருது. இதில் என்ன அநியாயம் என்றால் சாப்பாடு, டீ டோக்கன் தவிர ஊழியர்கள் ஏதும் விஷேசம் என்றால் கேண்டீனில் வைத்து தரும் பொது பார்ட்டிக்கும் டோக்கன் சிஸ்டம்தான்.இன்று காலை அதுபோல ஒரு எக்ஸ்ட்ரா ஒரு டோக்கன் கைக்கு வந்தது.

பலரும் இது போன்ற சமயங்களில் பிரசன்ட் ஆகாதோரின் டோக்கனை பயன் படுத்தி டபுள் ட்ரீட் பெறுவதுண்டு. இன்று ராஜன் வந்து மதியமே வெளியில போறேன் கேகே, இந்த டோக்கனை நீங்க வெச்சுக்கங்க என்றார். வாங்கிக்கொண்டேன். இன்று ட்ரீட்டில் வடையும், சமோசாவும் இருந்தது. வாங்கும் போது ராஜனை நினைத்துக்கொண்டேன்.

'ராஜன், உங்களால் இன்று நானும் எக்ஸ்ட்ராவாக ஒரு வடை பெறுகிறேன்.. நன்றி.!'

டிஸ்கி : இந்த மொக்கைப்பதிவு நிஜமா நல்லவனின் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன். அதைப்போன்று ஒரு ஐடியா முதலில் இருந்தது என்றும் ஜோஸப்பின் பதிவில் இனி யாரையும் மீண்டும் வருமாறு கொஞ்சப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தலைப்பை சிறிது மாற்றி ஜல்லியடித்திருக்கிறேன் என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். மேலும் எங்கள் ஆ.:பீஸில் எல்லாவற்றுக்கும் டோக்கன் என்பதும் உண்மையே.

Friday, August 22, 2008

என் ரமாவுக்கு...

எந்தக் கோயிலுக்கு போனாலும் நான் உனக்கு எல்லா சந்நிதிகளையும் காண்பிக்க வேண்டுமே என கவனமாக‌ இருக்கிறேன். நீ வாசலில் கிடக்கும் செருப்பின் மீதான கவனமாகவே இருக்கிறாய்.

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மாலைப்பொழுதில் வட்டமான கேக்கோடு வருகிறேன் நான். என் பிறந்தநாளின் போது பிற நாட்களைப்போலவே பல்தேய்த்த பின்தான் காபி தருவேன் என்கிறாய்.

மூன்று வருடங்களாக உனக்கு உடல்நலமில்லாத ஒவ்வொரு தடவையும் சீக்கிரமாகவே ஆ.:பீஸிலிருந்து வந்து மருத்துவமனைக்கு அழைத்துப்போயிருக்கிறேன். நேற்று நான் வயிற்றுவலி என்ற போது இஞ்சி குடியுங்கள், சரியாகிவிடும் என்கிறாய்.

உனக்கு மஞ்சள், சிவப்பு நிறங்கள் பிடிக்குமென்பது எனக்குத்தெரியும். ஆனால் எந்த நிறத்தில் நான் புடவை வாங்கிவந்தாலும் உனக்கு பிடிக்கவில்லை என்கிறாய்.
உன்னைப்பற்றித்தெரிந்தே நான் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவருவதில்லை. நீ என்னைப்பற்றித்தெரியாமலே யாரையும் வீட்டுக்கு அழைத்துவருவதில்லை.

.:ப்ரீயாக டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதும் பக்கத்திலே ஜூஸ் வைத்துக்கொள்கிறாய் நீ. ஆ.:பீஸிலிருந்து டயர்டாக வந்தாலும் நானேதான் .:பிரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நீ வேலைக்கு செல்வதில்லை ஆயினும் அடுக்களையில் நான் அடிக்கடி வேலை செய்கிறேன். எனக்காக துவைத்துப்போட்ட உள்ளாடையைக்கூட எடுத்துவைப்பதில்லை நீ.

ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது நான் அணிந்திருக்கும் ஒரே ஒரு மோதிரத்தையே உற்றுப்பார்க்கிறாய். உன் பர்ஸிலிருக்கும் சில ஆயிரங்கள் உனக்கு ஞாபகம் வருவதேயில்லை.

நீயும் நானும் இருக்கும் போது டிவியில் சீரியல் ஓடிக்கொண்டேயிருக்கிறது. போகோ பார்க்கலாம் என்றால் நீயில்லாத தனிமை கிடைக்கவேமாட்டேன் என்கிறது.

என்னுடையது மட்டுமல்ல உன்னுடையதும் சேர்த்து மளிகை பில் துவங்கி பிரிஷ்கிரிப்ஷன் வரை பத்திரமாக எடுத்துவைப்பேன் நான். ஆனால் என‌து செக்புக்கை கூட எடுத்துப்பார்த்துவிட்டு அலட்சியமாக காபியில் ஈ விழுந்துவிடாமலிருக்க டம்ளரை மூடிவைப்பாய் நீ.

கத்திரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி என உனக்கு பிடித்த எல்லாமும் உணவில் இருக்கும். எனக்கு வெண்டைக்காய் ரொம்பப்பிடிக்கும் என்று சொன்ன பிறகும் அதை xxx கூட‌ தின்காது என்பாய்.

நாம் எங்கேயாவது வெளியே கிளம்பும் போது உனக்காக அத்தனை தடவைகளும் நான் முன்னமே காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு நாள் பயணத்தை ரத்து செய்யலாமா என்று கேட்டதற்கு எவ்வளவு மூர்க்கமானாய் நீ.

பீரோவில் உன் பட்டுப்புடவைகள் அடுக்கிவைக்கப்பட்டு இடமில்லாமல் என் துணிகள் பக்கத்தில் 'பிக் ஷாப்பரில்' உட்கார்ந்திருக்கின்றன பல்லிகளோடு.

உன்னோடு அமர்ந்து எத்தனை முறை தேங்காய் துருவித்தந்திருப்பேன். ஒருமுறை கூட உங்கள் விருப்பத்தைச்சொல்லுங்கள் என்று நீ கேட்டதேயில்லை.

நித்தம் நித்தம் இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுவதில்லை. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.

ர‌மா....

ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...
அப்போதுதான் என் வலிகள் உனக்கும் தெரியும்!


இருந்த காதல் முழுவதையும் உன் மீதே கொட்டிவிட்டு காத்துக்கிடக்கும் அப‌லைக்கணவன்.. தாமிரா.

******
நான் இந்த எதிர்/தொடர் பதிவுகள் எழுத‌வேண்டும் என்று அவ்வளவாக நினைப்பதில்லை. ஆனால் பரிசலின் பதிவைப்பார்த்ததிலிருந்து கை சும்மாவே இருக்காமல் இதை எழுதித்தொலைத்துவிட்டது. நம்மைப்பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே! (பரிசல் மட்டும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்)

Wednesday, August 20, 2008

நானும் தமிழ் மணமும்

தொடர்ந்து நாலு நாளாய் பதிவு போடுறேமே, ஒரு நாளு ரெஸ்ட் குடுக்கலாமேனு (உங்களுக்குதான்) பாத்தா ஒரு முக்கியமான விஷயம், சொல்லலைன்னா தூக்கம் வராது (சரி பதிலுக்கு நாளைக்கு வேணா லீவு உட்டுடுறேன்)சுருக்கா சொல்லிடுறேன் பயப்படாதீங்க‌.

இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும் போதே 'முதல் முத்தம்'னு இன்னொண்ணும் ஆரம்பிச்சேன். அது ஸ்பெஷலா கவுஜ‌‍-க்கு மட்டுமே.(இதிலேயே கவுஜயவும் போட்டு ஏதோ அறிவுரை கேக்க வர்ற மத்தவுங்களையும் டார்ச்சர் பண்ணவேண்டாமேனும், வேணுங்கறவுங்க தனியா போய் படிச்சுகிடட்டுமேனும் ஒரு நல்ல எண்ணம்தான்). இந்த பதிவை தமிழ் மணத்துல ஏத்தினப்போ(ஆரம்பிச்சு ரெண்டு மாசம் கழிச்சு) எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. ஆனா பாருங்க தலையால தண்ணி குடிச்சுபாத்தும் 'முதல் முத்தம்' பதிவை தமிழ் மணத்துல ஏத்த முடியலை. நானும் டெம்பிளேட் மாத்திப்பாக்குறேன், டூல் பாரை பத்து தபா ஒட்டிப்பாக்குறேன், ம்ஹூம்.. ஒண்ணியும் முடியலை. யாரோ ந‌ம‌க்கு எதுரா ச‌தி ப‌ண்ணுறாங்க‌ளா, அல்ல‌து ம‌க்க‌ளை காப்பாத்த‌ த‌மிழ் ம‌ண‌ந்தான் ஏதோ பிளான் ப‌ண்ணுதானு என‌க்கு ஒரே ட‌வுட்டு. க‌டைசியில‌ 'சீச்சீ.. இந்தக்கவுஜ‌ புளிச்சுப்போச்சு'னு உட்டுட்டு அத்த‌ ம‌ற‌ந்துட்டேன் (போன‌ மாச‌மே).

ஆனா திடீர்னு இப்போ த‌மிழ் ம‌ண‌த்துல‌ ந‌டுவால‌ புது ப‌திவாட்ட‌ம் ந‌ம்ப‌ க‌வுஜ‌ ஒண்ணு ந‌வுந்துக்கிட்டிருக்குது, என்ன‌டானு பாத்தா 'முத‌ல் முத்த‌ம்'. இப்போ ஒரே கொழ‌ப்ப‌மா இருக்குது, அத்த‌ அப்டேட் ப‌ண்ண‌லாமா, வேண்டாமானு. ஒரு வேளை அதையும் நான் அப்டேட் ப‌ண்ண‌ ந‌ம்ப‌ ரெகுல‌ர் க‌ஷ்ட‌ம‌ர்க‌ள் அத‌ப்பாத்துட்டு, ந‌ம்ப‌ மெயின் க‌டைக்கு வ‌ராம‌ல் க‌வுஜ‌யோனு நினைச்சு தெரிச்சு ஓடிப்பூடுவாங்க‌ளோனு ப‌ய‌மாயிருக்குது. யாராவ‌து க‌ருத்து சொல்லுங்க‌, கேட்டுக்கிடுதேன்.

வேணுமானா இப்பிடி ப‌ண்ண‌லாமா? மாச‌ம் ஒருக்கா க‌வுஜ‌ய‌ அப்டேட் ப‌ண்ணுறேன். (அதெப்பிடி உட்டுருவேன்னு நினைச்சீங்க‌ளா, ஹி..ஹி..) என்ன‌ சொல்றீங்க‌?

Tuesday, August 19, 2008

நொந்து போன நூடுல்ஸும் நானும்

11.08.08 காலை 8 மணி.
'காலையில டி.:பன் பண்ண முடியாத நேரத்தில யூஸ் ஆகும், சாய்ந்திரம் வரும்போது நூடுல்ஸ் வாங்கிட்டு வாங்க..'
'சரிம்மா'

11.08.08 மாலை 7 மணி.
'டெய்லி சொல்லணுமாங்க உங்களுக்கு. எப்படி மறக்குது உங்களுக்கு?'
'நாளைக்கு வாங்கிடலாம்மா'

12.08.08 மாலை 7 மணி.
'என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க.. இது பாஸ்தா, நான் கேட்டது நூடுல்ஸ்.'
'பாக்க அழகா இருந்துச்சு, ஒரு சேஞ்சா இருக்க‌ட்டுமேனு..'
'இத‌ xxx கூட‌ திங்காது'
'ச‌ரிம்மா, நா சாப்டுக்க‌றேன். உன‌க்கு நூடுல்ஸ் நாளைக்கு வாங்கிட்டு வ‌ந்துட‌றேன்'

13.08.08 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இதைப்போய் வாங்கிட்டு வ‌ந்திருக்கீங்க‌.. 20 ரூபா த‌ண்ட‌ம். இதுல காய்கறிலாம் சேந்திருக்குதுனு நினைக்கிறேன். நான் கேட்ட‌து 5 ரூபா பாக்கெட் பிளெய்ன் நூடுல்ஸ்.'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

14.08.08 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இது? வேற‌ பிராண்ட் போய் வாங்கியிருக்கீங்க‌, நல்லாவேயிருக்காதே.! மேகிதான் ந‌ல்லாயிருக்கும்'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

15.08.08 காலை 10 ம‌ணி.
'ஏங்க‌ த‌ண்ட‌த்துக்கு நாலு பாக்கெட் வாங்கியிருக்கீங்க‌. ஒண்ணு போறாதா?'
'என்ன‌ விளையாடுறயாடி.. நானும் பாத்துட்டேயிருக்கேன். என்ன‌ ப‌ண்ணிணாலும் குறை க‌ண்டுபிடிச்சுகிட்டு.. இனிமே எதாவ‌து வாங்க‌ச்சொன்னே ம‌ரியாதை கெட்டுப்போயிரும் உன‌க்கு. எதுனாலும் நீயே போயி வாங்கிக்கோ, @#@#&%#@ #$@ #% @#'
'*&^%$#$#% @#@#&%#@ #$@ '
'$#$#% @#@#&%'
'ம்ம்ம்..ஊம்..ம்.. ஹும்'
'இப்ப‌ என்னாச்சுன்னு இப்பிடி ஒப்பாரி வெக்கிறே..'

15.08.08 காலை 11 ம‌ணி.
'சாருக்கு மேகி நூடுல்ஸ் எடுத்துக்குடுப்பா, எத்த‌னை பாக்கெட் சார்.?'
'நூடுல்ஸ் வேணாம்பா.. க‌ருப்ப‌ட்டி இருக்குதா?'
'இல்லையே சார்'
'இங்கே வேறெங்க‌ கிடைக்கும்னு தெரியுமா?'

Sunday, August 17, 2008

எழுதுவது ஒரு வாதை :மனுஷ்யபுத்திரன்

ஓரிரு முறைகள் மனுஷ்யபுத்திரன் தனது பேட்டிகளின் போது எழுதுவது ஒரு வாதை நிறைந்த அனுபவம் என்று கூறியிருக்கிறார். அவர் எந்த அரிய அர்த்தம் பொதிந்து அதை சொன்னாரோ எனக்கு தெரியாது, என் சிற்றறிவு அதை எவ்வாறு விளங்கிக் கொள்கிறது என்பதைப்பார்க்கலாம்.

ஆ.:பீஸில் மீட்டிங் மையக்கருத்தை தாண்டிப்போய்க்கொண்டிருக்கும் போது நாம் வேறெதையாவது சிந்திக்கத்துவங்குகிறோம். இது குறித்து கண்ணனிடம் டிஸ்கஸ் செய்யலாம் என நினைக்கிறோம், அது குறித்து உருப்படியாக எழுதலாமே என நினைக்கிறோம். அரைமணி நேரம் கழித்து சீட்டுக்கு வந்தபின்னர் அதைப்பற்றி மறந்துவிடுகிறோம். எப்படி யோசித்தாலும் நினைவு வரமறுக்கிறது. அந்த அளவில் அது மொக்கை மேட்டரா? அல்லது உண்மையிலேயே உருப்படியான விஷயத்தைத்தான் மறந்துவிட்டோமா?குளிக்கும் போது, சாப்பிடும் போது, எதையாவது குறித்து படிக்கும் போது,பயணங்களின் போது அல்லது விளக்கை அணைத்துவிட்டு படுத்தபின் என்பது போன்ற சமயங்களில் ஏதாவது உருப்படியான விஷயங்கள் தோன்றுகின்றன. ஆனால் எழுத அமர்ந்தால் எதுவும் நினைவுக்கு வருவதில்லை. சரி அதுபோன்ற சமயங்களில் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணி தயாராகவே இருக்கிறோம், சில சமயங்களில் எடுத்தும் வைக்கிறோம். பின்னர் எழுத அமரும் போது அந்தக் குறிப்புகளைப்பார்த்தால் மொக்கையாக இருக்கிறது. இதையா எழுதவேண்டும் என்று நினைத்தோம் என்று தோன்றுகிறது.

சில சமயங்களில் நல்ல ஐடியாவும் கிடைத்து எழுதவும் ஆரம்பித்துவிடுகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். எழுதிக்கொண்டிருக்கும் போதே இதன் இந்தப்பகுதியில் (இடையில் அல்லது இறுதியில் அல்லது ஹைலைட்டாக) இன்ன விஷயமோ அல்லது இன்ன வரிகளோ இருந்தால் பிரமாதமாக அமையும் என்று எண்ணுகிறோம். ஆனால் அந்தப் பகுதி வருவதற்குள் அந்த விஷயம், மறந்து போய்விடுகிறது அல்லது நீர்த்துப்போய்விடுகிறது. சக்கையாக எழுதிவைக்கிறோம். அதற்கும் சில சமயங்களில் பாராட்டு கிடைக்கிறது. அப்படியானால் நாம் சிந்தனை செய்ததை அப்படியே எழுதியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என எண்ணுகிறோம்.

இதையெல்லாம் தவிரவும் நாம் எழுத அமரும் போதுதான் கரண்ட் போய்விடுகிறது. மானேஜர் கூப்பிடுகிறார். மனைவி புளி வாங்கிவர கடைக்கு அனுப்புகிறாள். நண்பன் தண்ணியடிக்கக் கூப்பிடுகிறான். விருந்தாளிகள் வருகிறார்கள்.

இப்பேர்க்கொத்த மொக்கை பிளாகராக இருக்கும் எனக்கே இப்படியெல்லாம் எழுதுவது ஒரு வாதையாக இருக்கும் போது, மனுஷ்யபுத்திரனுக்கோ அல்லது பெரிய எழுத்தாளர்களுக்கோ எழுதுவது என்பது எப்பேர்ப்பட்ட வாதையாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

அடுத்ததாக என் மனைவி ஐஸ்கிரீம் செய்த கதையை எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

Thursday, August 14, 2008

PIT -க்கு நான் கொடுத்தது

முதலில் நமக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு என்றுதான் தேமே என்று என் வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எல்லோரும் ஆர்வமாய் கலந்து கொள்வதைப்பார்த்து ஆசை எழ இதோ என் புகைப்படங்களையும் ஏற்றிவிட்டேன். பார்த்து கருத்துக்களை சொல்லிவிட்டுப்போகவும்.

1. காமிரா வாங்கிய புதிதில் விபரீதமான கோணங்கள், விபரீதமான லைட்டிங் என பரிசோதனை செய்துகொண்டிருந்த‌ போது ஒரு நண்பனை இரவில் குறைந்த வெளிச்சத்தில் கிளிக்கியது.

2. சென்ற தீபாவளியின் போது தம்பி மத்தாப்பை கொளுத்தி ஆரவாரம் செய்த போது கிளிக்கியது.
3. ஒரு உணவகத்தில் மேஜை மீது ஏறி மருமகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது கிளிக்கியது.
4. வீட்டு வாசலில் இருந்த பூச்செடியில் ஒரு மதிய நேரத்தில் தேனீக்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த போது கிளிக்கியது, தேனீயைத்தவிர எல்லாம் தெரிகிறது. இதைத்தான் போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன். (என்னே உன் ரசனை என்கிறீர்களா?)

Wednesday, August 13, 2008

பெண் பதிவர்களிடம் ஒரு மன்னிப்பு!

கல்யாணமாகாதவர்களுக்கு எச்சரிக்கைகள், தங்க மணிகளை திருத்தமுடியுமா போன்ற பதிவுகளை எழுதியதால் பெண் பதிவர்களும், வாசகிகளும் கடும் கோபத்தில் இருப்பதாகவும் எங்கேனும் பார்த்தால் உதைக்க‌ திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் முக்கியமான ஒரு பதிவர் சொல்லக்கேட்டு அதிர்ச்சியானேன். இந்த ஆண் பதிவர்கள் உதவாக்கரைகள் என்றும் இவர்களை நம்பி அஜாக்கிரதையாக இருந்துவிடாதே என்றும் அவர் மேலும் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டு சென்றார்.

உட்கார்ந்து யோசித்ததில் பேசாமல் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவே போட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று இப்பதிவை எழுதுகிறேன். ஆகவே மன்னியுங்கள் தோழிகளே.!

இப்போது இந்த ஸ்பெஷல் பதிவுக்காக, ஏன் ஒரு ஆண் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறேன் கேளுங்கள். கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கத்தான், உட்கார்ந்து ரூம் போட்டு யோசித்து பல யோசனைகளை சொல்லவேண்டும். (அப்படியும் கேட்கமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.) கல்யாணம் செய்து கொள்வதற்கு ஒன்று சொன்னாலே போதும் ஒரு சோறு ப‌த‌ம் போல‌.

தலையணையை முதுகுக்கு கொடுத்து பெட்டில் சாய்ந்து இந்த பேப்பரை மடித்துப்பிடித்து படித்துக்கொண்டிருக்கிறோம். (தினமும்தான் படிக்கிறோம் பேப்பரை, என்னத்தைத்தான் தெரிந்துகொள்கிறோம்னுதான் தெரியலை)காலை மணி எட்டாகப்போகுது. தங்கமணி நம்மைத்தாண்டி இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் போய்க்கொண்டு வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். காலை டி.:பன் நமக்குப் பிடித்த பொங்கலும், சாம்பாரும் ரெடியாகிக்கொண்டிருப்பதைப் போலத்தெரிகிறது.

பேப்பரில் கவனத்தைத் திருப்பும் போது, ஹாலில் இருந்து கிச்சன் செல்லும் தங்கம் நம்மருகே நிற்கிறது. வலது கையால் நெற்றியையும், இடது கையால் தாடையையும் பிடிக்கிறாள். அவள் விரல்கள் நமது கன்னங்களை அழுத்தி உதடுகளை மேல்நோக்கிப் பிடிக்கிறது. அவளும் குனிகிறாள். நிதானமாக, அழுத்தமாக, ஆழமாக எச்சில் படிய முத்தம் தந்து 'கா.:பி வேணுமா, பூஸ்ட்டாங்க?' என்று கேட்கிறாள்.

நாம் பொய்யான‌ கோப‌த்தோடு 'பேப்ப‌ர் பாக்கும் போது இடைஞ்ச‌ல் ப‌ண்ணாத‌ன்னு எத்த‌னை த‌ட‌வை சொல்ற‌து?' என்று க‌டிகிறோம். அதைப்புரிந்த‌ த‌ங்க‌மும் ப‌திலுக்கு பொய்யான‌ கோப‌த்தோடு 'காலைலேயே வ‌ந்த‌ம்பாரு.. என்னிய‌..xx..அடிச்சுக்க‌ணும்' என்று ந‌க‌ர்கிறாள்.

பேப்ப‌ரை வீசி விட்டு கிச்ச‌னுக்குள் விரைகிறோம், அந்த‌ப் பொய் கோப‌த்தையும் ச‌மாதான‌ம் செய்ய..! மேலும் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று ஜொள் விடாம‌ல் க‌ல்யாண‌ம் செய்துகொள்கிற‌ வ‌ழிய‌ப்பாருங்க‌ப்பா..!

(டிஸ்கி : இந்த‌ அனுப‌வ‌ம் என்னோட‌துன்னு நினைக்கும் அப்பாவிக‌ளைப் பார்த்து நான் சிரிக்கிறேன்)

Monday, August 11, 2008

ஷோகேஸ் மனைவிகள்.!

கல்யாணம் ஆகாதவங்கல்லாம் இங்கே கிட்டே வாங்கோ,(ஆனவங்க தூரப்போயிடுங்க, அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்க மாட்டேன். அப்பாலிக்கா அழக்கூடாது) ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டியிருக்கிறது. நாம எல்லோரும் எங்கேயாச்சும் வெளியே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறோம். ஷாப்பிங் காம்ப்ளெஸ்களில், பஸ் நிலையங்களில், ரயில்வே ஸ்டேஷன்களில், சிலர் ஏர்ப்போர்ட்களில் என பல இடங்களில் நாம் ஒரு அழகான காட்சியை சில சமயங்களில் காண நேர்கிறது.

அது, ஒரு அழகான இளைஞன் நின்று கொண்டிருப்பான் (பெரும்பாலும் அவனுக்கு மீசை இருக்காது). அவனருகே ஒரு அழகான இளம்பெண் நின்றுகொண்டிருப்பாள். (உங்களுக்கு சேலை பிடிக்குமென்றால் இளநீலத்தில் முந்தானை அலைபாயும் சேலையணிந்திருப்பாள். உங்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் ஓகே என்றால் அநியாயத்துக்கு ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் அணிந்திருப்பாள். ச‌ம‌ய‌ங்க‌ளில் டீ ஷ‌ர்ட்டுக்கு ப‌திலாக‌ டாப்ஸும் அந்த‌ டாப்ஸுக்கும் ஜீன்ஸுக்கும் ந‌டுவே கேப்ஸும் இருக்கும்.)

இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையே ஒரு பெண் குழ‌ந்தை நின்று கொண்டிருக்கும் (அது அழகான மிடியில் கடத்திக்கொண்டுபோய் கொஞ்சிக்கொண்டிருக்கலாம் போன்று அநியாய‌த்துக்கு அழ‌காக‌ இருக்கும்). அவ‌ர்க‌ளைப்பார்த்த‌துமே அவ‌ர்க‌ள் ஜோடி என்ப‌தும் அந்த‌க்குழ‌ந்தை அவ‌ர்க‌ளோட‌துதான் என்பதும் புரிந்து போகும். இப்போதான் க‌ல்யாண‌ம் ஆன‌மாதிரியிருக்காங்க‌.. ஆனா குழ‌ந்தையைப்பாரேன்.. என்று வாயில் ஈ நுழைவ‌து தெரியாம‌ல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பீர்க‌ள். உள்ம‌ன‌தில் உங்க‌ளுக்கு நாமும் க‌ல்யாண‌‌ம் செய்துகொண்டு, இதுபோல‌.. என்று காட்சிக‌ளும் க‌ற்ப‌னைக‌ளும் எழும்.

ஸாரி..

அவ‌ற்றை ம‌ற‌ந்துவிடுங்க‌ள், நீங்க‌ள் ஏமாந்து போக‌க்கூடும். பெரும்பாலும் அவ‌ர்க‌ள் விதிவில‌க்கில் வ‌ரும் ஷோகேஸ் ஜோடிக‌ள். நிஜ‌ம் எப்ப‌டி இருக்கிற‌தென்று உங்க‌ளுக்கு தெரிய‌வேண்டுமென்றால் நிறை கேஸ் ஸ்ட‌டி ப‌ண்ற‌ பொறுமையும், நேர‌மும் உங்க‌ளுக்கு வேண்டும். உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் 'ப‌ரிச‌ல்கார‌ன்' வீட்டுக்கு போக‌லாம்.

அல்ல‌து பெட்ட‌ர் ஆப்ஷ‌ன்.. என் வீட்டுக்கு வ‌ர‌லாம்!

(டிஸ்கி : க‌ல்யாண‌‌ம் ஆகாத‌வர்க‌ளுக்கு ஓர் எச்ச‌ரிக்கை என்ற‌ த‌லைப்புக்கு கூட்ட‌ம் வ‌ர‌மாட்டேங்குதுன்னு நினைக்குறேன். அத‌னால் சீரிய‌ஸ் எழுத‌ற‌தை வுட்டுட்டு..‍*அத்த‌ சீனிய‌ருங்க‌ளே பாத்துக்க‌ட்டும்*.. த‌னித்த‌னி த‌லைப்புல‌யே எழுத‌லாம்னு இருக்கேன். ஆனா மேட்ட‌ரை அவ்ளோ சீக்கிர‌‌ம் வுட்டுற‌ மாட்டேன், க‌வ‌லைப்ப‌ட‌வேண்டாம்.)

Friday, August 8, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -4

பொதுத்துறையோ, தனியார் துறையோ, சிறிய நிறுவனமோ, பெரிய கார்ப்பரேட்களோ, ஸா.:ப்ட்வேரோ, ஆட்டோமொபைலோ பணியிடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் கல்யாணம் ஆகாதவர்களும், ஆனவர்களும் கலந்தே பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். (என்ன அரிய கண்டுபிடிப்பு என ந‌க்கல் பண்ணாமல் மேலே போகவும், விஷயம் இருக்கிறது)

பொதுவாக நாம் ஒரு பிரச்சினையை அனுபவிக்கும்போது என்ன செய்கிறோம்? ஒரு படத்தைப் பார்க்கிறோம். பின்விளைவுகளை அனுபவிக்கிறோம். நண்பர்கள், வேண்டியவர்களிடம், 'போகாதே.. போனால் ரண்டு நாளைக்கு வயித்தாலே போகும்' அப்படினு எச்சரிக்கிறோம்.

ஆனால் இந்த கல்யாணம் ஆனவர்கள் என்ன செய்கிறார்கள்.. கல்யாணமாகாதவர்களை ஒருவிதமான பொறாமையோடேயே பார்த்துவிட்டு, இவனுக்கும் கல்யாணம் நடக்கும் இவனும் சீர் கெட்டு போவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டுஎதைப்பற்றியுமே எச்சரிக்கை செய்யாமல் எதுவுமே நடக்காததுபோல பாவனை செய்துகொண்டு ஒரு வித 'ஸாடிஸ்ட்' போல இருந்துவிடுகிறார்கள். யாருக்காவது கல்யாணம் என்றால் சந்தோஷமாக சிரித்து வாழ்த்துகிறார்கள், பிஸியாக இருந்தாலும் கல்யாணத்துக்கும் ஒரு எட்டு போய்வந்துவிடுகிறார்கள். நன்றாக உற்றுக்கவனிப்போமேயானால் அந்தச்சிரிப்பின் பின்னால் ஒரு சைக்கோ ஒளிந்துகொண்டிருப்பதையும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்து உள்ளூர மகிழத்தான் கல்யாணத்துக்கும் போகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடியும்.

இதுவரை எனது மூன்று எச்சரிக்கை பாகங்களையும் படித்தவர்களுக்கு லேசாக ஒரு சந்தேகம் வந்திருக்கக்கூடும். இவ்வளவு சொல்றானே இந்த ஆளு, ஏதாவது விஷயம் இருக்குமோ என்று. (சந்தேகம் வராதவர்களும், இந்த எச்சரிக்கைப்பதிவுகளை வெறும் காமெடிப்பதிவுகளாகவும் நினைப்பவர்கள் பிற பதிவுகளைப் படிக்க போகலாம் என்றும் இனி இந்த எச்சரிக்கைப் பதிவுகளை படிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்)
அவ்வாறு வந்தவர்களுக்கு இன்னுமொரு காரணம் சொல்கிறேன், படித்துவிட்டு நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அதே அலுவலக‌ச்சூழல். கல்யாணமாகாதவர்களை கவனியுங்கள். லேட்டாக வந்தாலும் சரியான நேரத்துக்கு வெளியேறிவிடுவார்கள். அவர்களுக்கென்று நிறைய வேலைகள் இருக்கும், யாராவது அவர்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கக்கூடும், அல்லது இவர்கள் யாருக்காவது வெயிட் பண்ணப்போகவேண்டியிருக்கும். ஷாப்பிங், சினிமா, பார்ட்டி என நிறைய கமிட்மென்ட்ஸ்.

இப்போது மெதுவாக கல்யாணம் ஆனவர்களைக் கவனியுங்கள். நிச்சயமாக ஆ.:பீஸ் நேரத்துக்கு முன்னமே வந்துவிடுவார்கள். உங்களுக்கு முன்னால் அவர்கள் கிளம்பியதை உங்களால் ஒரு நாள்கூட பார்த்திருக்கமுடியாது. (நிஜம்தானே.. என்று உங்களில் சிலர் பயத்துடன் ஒப்புக்கொள்வது கேட்கிறது)

ஏன்.?

யாராவது யோசித்ததுண்டா? இன்னும் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள். புதிதாக கல்யாணம் ஆனவர் யாரையாவது அவருக்குத் தெரியாமல் கண்காணியுங்கள். கல்யாணம் ஆனப்புதிதில் லேட்டாக வந்து சீக்கிரம் ஓடிப்போவார்கள். (அவர்களுடைய மானேஜர்களும் கண்டுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தெரியும், என்ன நடக்கப்போகிறதென்று.) நாளாக நாளாக இந்த அலுவலக நேரம் கூடிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் செக்யூரிட்டி, சீட்டுக்கே வந்து சார் ஆ.:பீஸ பூட்டணும் என்று (கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுவதைத்தான் டீஸன்டாக எழுதியிருக்கிறேன்) சொல்லும்வரை கிளம்ப மாட்டார்கள்.

ஏனென்று யோசித்து வையுங்கள். தேவைப்படுவோர்கள் இதையும் (எச்சரிக்கை ஒன்று, இரண்டு, மூன்று) படியுங்கள். அடுத்த எச்சரிக்கையில் சந்திக்கிறேன். (அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது. இருப்பினும் காரணங்களை நான் மட்டுமே கூறிக்கொண்டிருப்பதைவிட வாசகர்களையும் சிந்திக்கத்தூண்டுவது ஒரு எழுத்தாளருடைய சரி.. சரி.. பதிவருடைய கடமையல்லவா?)