Tuesday, September 30, 2008

க‌டைசியாக‌ வாசித்த‌ 3 புத்த‌க‌ங்க‌ள்

இந்த சப்ஜெக்டில் சீரியஸா ஒரு பதிவு போடலாம்னு எனக்கு கொஞ்ச‌ நாளா ஒரு நெனப்பு. அப்பால ந‌ல்ல‌ ரோச‌னை ப‌ண்ணி பாத்துட்டு நமக்கு அதுலாம் வராதுனு முடிவு பண்ணி வழக்கமான ஸ்டைலிலேயே போட்டுரலாம்னு முடிவு ப‌ண்ணி அதையும் இன்னிக்கே போட்டுற‌லாம்னு முடிவு ப‌ண்ணி.. (சே.. எத்தனை.. முடிவு ப‌ண்ணி..)

நான் படிச்ச கடேசி 3 புத்தகங்கள் இதுதாம்ப்பா.. (அப்பிடினா இனிமே ப‌டிக்க‌மாட்டேன்னு அர்த்த‌ம் வ‌ருதில்லை? அப்ப‌ எப்பிடிதான் எழுதுற‌து.?)

1.விஞ்ஞானச் சிறுகதைகள்.
சுஜாதா
வெளியீடு : உயிர்மை ப‌க்க‌ங்க‌ள் : 464 விலை : Rs.225

விம‌ர்ச‌ன‌ம் : உஸ்ஸ்ஸ்.. யாருகிட்ட‌.?

2.நெடுங்குருதி
எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
வெளியீடு : உயிர்மை ப‌க்க‌ங்க‌ள் : 472 விலை : Rs.275

விம‌ர்ச‌ன‌ம் : வெயிலும், மழையும், காற்றும், பனியும் மாறி மாறி உச்சவேகத்தில் பொழிகிறது. வேம்பலை என்ற தென் தமிழகத்துக் கிராமமும் அதன் மனிதர்களும் தனி உலகமாய் நம் கண்முன்னே விரிகிறார்கள். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை மனிதர்களையும் நாம் காண்கிறோம். அவர்களின் துக்கமும் சந்தோஷமும் நம்முடையதைப்போல உடனிருந்து உணர்கிறோம். வேம்ப‌லையை இழந்து தவிப்ப‌வ‌ர்க‌ள் அதைக்க‌ண்டு ஆன‌ந்திக்க‌லாம், அத‌ன் புழுதித்தெருக்க‌ளில் ஓடி விளையாட‌லாம். வேம்ப‌லையைத் தெரியாத‌வ‌ர்க‌ள் சில‌ ப‌த்தாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் அவ‌ர்க‌ள் பெற்றோரோ அல்ல‌து அவ‌ர்க‌ளை பெற்ற‌வ‌ர்க‌ளோ வாழ்ந்த‌ இட‌த்தையும், வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள‌லாம், வாழ்ந்து பார்க்க‌லாம்.

3.காக்டெயில்
சுதேச‌மித்திர‌ன்
வெளியீடு : யுனைடெட் ரைட்ட‌ர்ஸ் ப‌க்க‌ங்க‌ள் : 222 விலை : Rs.90

விம‌ர்ச‌ன‌ம் : கையைப்புடிச்சி சும்மா விறுவிறுன்னு கதை நடக்குற இடத்துக்கே நம்மை இழுத்துக்கொண்டு போகும் நடை, ஜாலியான ஒரு தோழனைப்போல ரைட்டரும் உடன் வருகிறார். என் சிற்றறிவுக்கு எட்டியவரை பழம்பெரும் எழுத்தாளர் தேவன் வெற்றிகரமாக கையாண்ட எழுத்துநடை. பின்னர் பலரும் முயன்று முழு வெற்றி காணாது போன அந்த ஸ்டைல் சுதேசமித்திரனிடம் தளும்பி நிற்கிறது. கிளைமாக்ஸில் கொஞ்சம் பின்நவீனத்துவ ஸ்டைலில் மண்டை காயவைத்தாலும் நான் மிக ரசித்த நாவல் காக்டெயில். மேலும் நாவலின் அனைத்து பக்கங்களிலும் மது ஊற்றெடுத்து பெருகுகிறது. எத்தனை எத்தனை வகைகள்? எத்தனை எத்தனை இடங்கள்? மாற்றுக்கோணத்தில் எதை எதை.. எப்படி எப்படி அடிப்பது என்பதற்கான விரிவான கைடாகவும் இந்த நாவலை நாம் கொள்ளலாம்.

இவைய‌னைத்துமே சென்ற‌ ஜ‌ன‌வ‌ரி சென்னை புத்த‌க‌த்திருவிழாவில் வாங்கிய‌வை. இப்ப‌தான் ப‌டிச்சு முடிக்க‌ முடிஞ்சுது. இன்னும் ரெண்டு புக் இருக்குது, அதை முடிக்க‌வும் அடுத்த‌ ஜ‌ன‌வ‌ரி வ‌ருவ‌த‌ற்கும் ச‌ரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

Saturday, September 27, 2008

பூக்கோலமும்.. மாக்கோலமும்..

ஒரு ரசனையான மெயில் வந்தது. பொதுவாக பார்வெர்டட் மெயில்களை பதிவிட நான் விரும்புவதில்லை எனினும் இந்த ஒரு முறை விலக்கு கொடுக்கலாம் என தோன்றுகிறது. ஆகவே பிடிக்காதவர்கள் பொறுத்துக்கொள்ளவும். இதை உருவாக்கியவர்களுக்கு பாராட்டுகள். ஏற்கனவே யாராவது இதை பதிவிலிட்டிருந்தால் ஸாரி. இதைப்பார்த்தவுடன் நகைப்புடன் ஏக்கமும் வந்தது. பழைய அம்பத்தூர் பேச்சிலர் அறை என் நினைவுகளில் வந்து நிழலாடிச்சென்றது.

பெண்களிடும் பூக்கோலம்..


பேச்சிலர்ஸ் மாக்கோலம்..


டிஸ்கி : மாக்கோலம் என்பதை பெரிய கோலம் எனக்கொள்ளவும். அடுத்த பதிவை போட்டுவிட்டதால் என்னைப்போல முந்தைய பதிவை படிக்கவேண்டாம் என நினைக்காமல் அதை படிக்காதவர்கள் போய் படித்து பின்னூட்டமிடவும். மறக்காமல் லெப்டில் ஓட்டுப்போடவும்.

Friday, September 26, 2008

1996 : ஒரு காதல் கவிதை

ஒரு குட்டியூண்டு பதிவு போடணும்னு ஆசை. ஆனா வெயிட்டிங்ல இருக்கிற விஷயங்கள்லாம் ஜவ்வு மாதிரி ரொம்ப டைம் எடுக்கும். நம்ப 'முதல் முத்தம்' பதிவில் வேறு கட்டிட‌ வேலை நடந்துகொண்டிருப்பதால் ஒரு குட்டிக்கவிதை போடுறேன். கோச்சுக்காம படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுட்டு போயிடுங்க.. அப்பிடியே மறக்காம லெப்ட்ல ஓட்டும் போட்டுட்டு போங்க.. நாளைக்கு ஒரு பெரிய பதிவில் சந்திப்போம்.


எப்போதாவது இரவிலே விழித்துக்கொள்கிறேன்

இந்த வெள்ளை விடிவிளக்கு

உன் மேனியெங்கும் விழித்துக்கொண்டிருக்கிறது

இறக்கை போல முந்தானை உன் தோளிலிருந்து துவ‌ங்கி வழிகிறது

மீண்டும்

நான் உறங்குவதற்குள்

விடிந்துபோய்விடலாம்!

Thursday, September 25, 2008

ரமாவின் காதோர புலம்பல்கள்.

நேற்றிரவு படுக்கையில் விழுந்த போது மணி 10.45. ரமா அடுத்த ஐந்து நிமிடங்களில் கைகளில் ஒரு ரமணிசந்திரனை வைத்துக்கொண்டிருந்தவள் அதை மேஜையில் போட்டுவிட்டு வந்தாள். தலையணை உறைகள் மாலையில்தான் துவைத்துக்காய வைக்கப்பட்டிருப்பதனால் இரண்டு தலையணைகளை பாழாக்கவேண்டாம் (ஒரே நாளில்கூட பாழாகிவிடுமாம்) என்று என் தலையணையிலேயே வந்து ஒட்டிக்கொண்டாள். பின்னர் என் காதோரத்தில் நிகழ்த்திய உரையை இங்கே தந்திருக்கிறேன். எளிதாக பிரித்தரிய எனது வசனங்களை பிங்க் வண்ணத்தில் தந்திருக்கிறேன்.

"........என்னங்க, இன்னிக்கு சாய்ந்திரம் பால்காரன் பால் போடவேயில்லைங்க, என்னாச்சுன்னு தெரியலையே.. மறந்திருப்பானோ.? கரெக்டா கணக்கு வெச்சிருப்பாங்களா? நாம ஒருவேளை மற‌ந்துட்டோம்னா போட்டா மாதிரி சார்ஜ் பண்ணிடுவாங்களா?.. என்னங்க கேக்கிறன்ல.. இல்லம்மா அப்பிடிலாம் பண்ண மாட்டாங்க, கரெக்டா கணக்கு வெச்சிருப்பாங்க.. அதெப்பிடிங்க எத்தின வீட்டுக்கு பால் போடுவாங்க, எப்பிடி கணக்கு பண்ணுவாங்க?.. தெர்லம்மா.. ஆனா கரெக்டா பன்ணிடுவாங்க.. எதுக்கும் நானும் எழுதி வெச்சுக்கிறேன் ..ம்.. என்னங்க.. அடுத்த மாசம் என் பிற‌ந்த நாளைக்கு பட்டுசேலை வாங்கி தரேன்னு சொன்னீங்க, நாவகமிருக்கில்லை..?..ம்.. சரவணா வேண்டாம், ஆரெம்கேவியே போலாம்ங்க.. .. இல்ல போத்திஸ் போலாமா..?.. கேக்கிற‌ம்ல.. ஏதாவது ஒண்ணு போலாம்மா.. அப்பிடியே உங்களுக்கு ரெண்டு பனியன் எடுக்குணும்ங்க எல்லாம் கிழிஞ்சிபோச்சு.. ம்.. என்னங்க..என்னங்க.. சொல்லும்மா கேட்டுகிட்டுதானே இருக்கேன்.. நேத்தே சொல்லணும்னு நெனச்சேன்ங்க, மற‌ந்துடுச்சு.. சொல்லும்மா.. நம்ப புது .:பிளாஸ்க்கு வேல செய்யலிங்க, நேத்து வெந்நீர் ஊத்திவெச்சேன், ஒரு மணி நேரத்தில ஆறிடுச்சு.. ம்.. என்ன ம்? சொல்றேன்ல என்ன பண்றது? மாத்த முடியமா?.. ம்.. கேக்கிறேன்ல.. வாங்கி ரெண்டு மாசமாச்சி, இப்ப போனா உதைப்பாம்மா.. என்னங்க இப்பிடி சொல்றீங்க..நமக்கு ஏங்க எல்லாமே இப்பிடி தண்டமா போகுது?..ம்.. கண்ணன் அம்மா காலைலே போன் பண்ணினாங்க, போய் ரொம்ப நாளாச்சா.. கூப்பிட்டாங்க.. ம்.. சண்டே போலாமா?..ம்.. என்னங்க.. தூங்கிட்டீங்களா? சண்டே போலாமானு கேட்டேன்?.. ம்.. என்னங்க நம்ப ரெண்டு பேரும் இருக்கிற ஒரு படத்தை பெரிசு பண்ணனும்னு சொன்னேன்ல, மூணு காப்பி போடணுங்க..ம்.. அம்பை சித்தி ஒண்ணு கேட்டாங்க..குடுக்குணும்ங்க..ம்.. தீபாவளிக்கு போம்போது அவங்க வீட்டுக்கு ஒரு தடவ போணும்ங்க..ம்.. இன்னோரு விஷயம்ங்க..ம்..நேத்து நம்ப கிச்சனுக்குள்ள ஒரு குட்டி எலி வந்துடுச்சுங்க.. பயமாயிருக்குது, வெளிய போயிடுச்சா என்னன்னே தெரியல ம்.. ஞாயித்துக்கிழம செக் பண்ணிக்குடுங்க..ம்.. என்னுது உம்.? கேக்கிறேன்ல.. என்னுதுமா?.. என்னது நொன்னுதும்மா? ஏங்க‌ இப்பிடி பண்றீங்க.? காலையிலே ஒம்போது மணிக்கு எழுந்திருக்கிறீங்க.. முக்கா மணி நேரமா அப்பிடி என்னதான் பேப்பர்ல‌ படிப்பீங்க தெரியல, அப்பறமா அவசர அவசரமா குளிச்சுட்டு ஓடிடுறீங்க.. சாந்திரம் ஏழரைக்கு வரவேண்டியது, சாப்பிட்டு எட்டரைக்கு டிவி முன்னால உக்காந்தா ஜோக்கு பாக்கிறேன் ஜோக்கு பாக்கிறேன்னு பதினோரு மணி வரைக்கும் பாக்குறீங்க.. இப்பவாச்சும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா என்ன தூக்கம்..? ஏங்க‌ இப்பிடி பண்றீங்க.?.. என்ன என்னடி பண்ணச்சொல்றே.? டிக்கெட்டு எடுத்துக்குடுங்க நான் ஊருக்கு போறேன்.. நாளைக்கே எடுத்துடறேன்மா.. அதுன்னா உடனே சரிம்பிங்களே.? நிஜமா போயிடவா? போனா ஆறு மாசத்துக்கு வரமாட்டேன்.. இப்ப என்ன ஆச்சுனு ராத்திரி போல கத்திக்கிட்டிருக்கே? நானா கத்துறேன்.. நீங்கதான் கத்துறீங்க..!5%%#$!%^$ .. #(2%#$ $!%^$ .... #(2%#$..<>):<........"

மீண்டும் சமாதானமாகி நான் தூங்க எத்தனித்த போது மணி 12.50.

Wednesday, September 24, 2008

கண்ணீர் வரவழைத்த செய்தி.!

இன்று காலை தினகரன் நாளிதழின் கடைசி பக்கத்தை ஆக்ரமித்திருந்த செய்தி அது. ஒரு சிறிய விபத்தில் 'பிரைன் டெத்' ஆகி இறந்து போன தங்களின் இளம்மகனின் அத்தனை உடலுறுப்புகளையும் தானம் செய்ய முன்வந்த ஒரு டாக்டர் தம்பதியைப் பற்றிய செய்தி. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அதை வாசித்துமுடித்தேன். குறிப்பாக அவனின் இதயமும் தானம் செய்ய முடிவுசெய்யப்பட தேனாம்பேட்டை அப்பல்லோவிலிருந்து ஜேஜே நகர் மருத்துவமனையிலுள்ள மற்றொரு சிறுவனுக்கு அதைப்பொருத்த வேண்டிய சூழல். பாதிக்கப்பட்டவனை அங்கு கொண்டு செல்வதில் பிரச்சினை இருந்திருக்கவேண்டும். ஆனால் இதயம் எடுக்கப்பட்டதிலிருந்து சுமார் 20 நிமிடத்திற்குள் பொருத்தப்பட வேண்டுமாம்.

சென்னை போக்குவரத்து. சுமார் 20 கிமீ தூரம். தேனாம்பேட்டையிலிருந்து ஜேஜே நகர். 20 நிமிடங்கள். நடக்கக்கூடிய விஷயமா இது.? சென்னை போலீஸ் நடத்திக்காண்பித்திருக்கிறார்கள். போக்குவரத்து துறையின் ஒத்துழைப்போடு ப‌த்தே நிமிட‌ங்க‌ளில் ஜேஜே ந‌க‌ரை அடைந்து சாத‌னை புரிந்தன‌ர். அறுவைச்சிகிச்சையும் வெற்றிய‌டைந்து இவ‌ர்க‌ள் சாத‌னையை பெருமைக்குரிய‌தாக‌வும் ஆகியுள்ள‌து.


இத‌ய‌ம் உட்ப‌ட‌ வாய்ப்புள்ள‌ அத்த‌னை உட‌லுறுப்புக‌ளையும் தான‌ம் செய்ய‌ முன்வ‌ந்த‌ அந்த‌ டாக்ட‌ர் த‌ம்ப‌தியின‌ரின் சேவை உள்ள‌ம் பிர‌மிக்க‌ வைத்த‌து எனில் அதை நடத்திக்காண்பித்த சென்னை போலீஸின் வேக‌ம் புல்ல‌ரிக்க‌ வைத்த‌து.

இதுகுறித்த‌ மேலும் ஒரு பதிவு : ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள்

Monday, September 22, 2008

பரபரப்பான ஒரு மழைநாள்.!

சென்ற மாதத்தின் ஒரு துவக்கநாள். ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 70 கிமீ தூரத்தில் ஒரு நிறுவனம். இரண்டு நாட்களில் முடிந்துவிடவேண்டிய வேலை, நான் ஐந்தாவது நாளாக நின்றுகொண்டிருக்கிறேன். மதியம் 3 மணி. உச்சகட்ட வெறுப்பில் இருந்துகொண்டிருந்தேன். முதல் ரிடர்ன் டிக்கெட்டை கேன்சல் செய்து இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட முந்தைய நாள் சார்மினார் டிக்கெட்டும் கேன்சல் செய்யப்பட்டிருந்தது. சென்னை அலுவலகத்திலிருந்து அன்றைய இரவுக்கு புக் செய்யப்பட்டிருந்த விமான டிக்கெட்டும் மெயிலில் வந்துசேர்ந்த பாடில்லை. எனது ஒப்புதலுக்காக தயாராக இருந்திருக்க வேண்டிய பாகங்கள் கடைசிகட்ட தாயாரிப்பிலிருந்தன.

இதைப்போன்ற சூழல் ஒன்றும் எனக்கு புதிதில்லை எனினும் பலராலும் ஏற்பட்ட அனாவசியமான தாமதத்தில் கடுப்பாகிப்போயிருந்தேன். குறைந்தபட்சம் 4 மணிக்குள்ளாகவாவது இவர்கள் பாகங்களைத் தயார் செய்வார்களா? அதற்குள் சென்னையிலிருந்து எனது டிக்கெட் மெயில் செய்யப்படுமா? இவை நடந்தாலும் இங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு சென்று அறையை காலிசெய்து சரியான நேரத்தில் விமானநிலையத்தை அடைவேனா? அல்லது மறுபடியும் ஒருநாள் நீட்டிப்பு, டிக்கெட் கேன்சல் என முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டுமா? எரிச்சலிலும், கோபத்திலுமிருந்தேன்.

ஒருவழியாக முதலில் டிக்கெட் வந்துசேர்ந்தது. இரவு 08.15, IT2479, கிங்ஃபிஷெர். அப்போது மணி 04.35. எப்படிப்பார்த்தாலும் இரண்டரை மணி நேரமாவது வேண்டும். மழை துவங்கியிருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சம்பந்தப்பட்டவர்களிடம் மிகக்கடுமையாக நடந்துகொண்டேன். பணி முடிந்தவுடன் தயார் செய்யவேண்டிய ரிப்போர்ட்டுகளை ரெடியாக தயார்செய்து, கையெழுத்து மட்டும் போடாமல் வைத்திருந்தேன். பொறுப்பிலிருந்தவர் 'இதோ இதோ' என என்னை சமாளித்துக்கொண்டிருந்தார். ஒரு வழியாக குறிப்பிட்ட பாகங்கள் வேலை முடிந்து என்னிடம் தரப்பட்டபோது மணி 5.10. போட்டோக்களை எடுத்துக்கொண்டு, ரிப்போர்ட்டுகளில் கையெழுத்திட்டு வீசிவிட்டு, அடுத்த 5 நிமிடங்களில் காருக்குள் பாய்ந்தேன்.

ஹிந்தியோ, தெலுங்கோ சுட்டுப்போட்டாலும் வரமாட்டேன்கிறது.. ஒரே வார்த்தை டிரைவரிடம், "ஜல்தீ... ஆட் பஜே .:பிளைட்டு.."

அந்த ட்ரைவர் சூழலை நன்கு புரிந்துகொண்டிருந்தார். வழக்கமாக வேகம் 50ஐ தொட்டாலே, "நோ அர்ஜன்ட், ஸ்லோ.. ஸ்லோ.." என்பவன் இன்று என்னடா பறக்கிறான் என புரிந்துகொண்டார். அடுத்த சில நிமிடங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுக்கத்தொடங்கியது. மேலும் மாலை மெதுவாக சரிந்து இருள் வேறு கவியத்தொடங்கியது. இருள், கடும்மழை, வேகம், அவ்வப்போது அபாயகரமாக கடந்துசெல்லும் பெரிய லாரிகள். அபாயகரமான வேகம். "டேக் கேர், டேக் கேர்" என்று புலம்பிய‌வாறே முன் பக்கத்திலிருந்து பின் சீட்டிற்கு வந்து உட்கார்ந்துகொண்டேன்.

செகந்திராபாத்திலிருந்த ஹோட்டலை அடைந்தபோது மணி சரியாக 7.00. ரிச‌ப்ஷனில் பில்லை ரெடி பண்னச்சொல்லி இரண்டாவது .:ப்ளோரில் இருந்த அறைக்கு லி.:ப்டை தவிர்த்து ஓடினேன். அடுத்த சில நிமிடங்களில் என்னை காத்திருக்க வைக்காமல் ஹோட்டல் (ரெகுலர் கஸ்டமர்) ஊழியர்கள் என்னை அனுப்பிவைத்தனர்.

மீண்டும் கார் பயணம். மழை விட்டபாடில்லை. கூடுதலாக இப்போது டிராபிக். ஒவ்வொரு சிக்னலில் நிற்கும் போது வாட்சைப் பார்த்துக்கொண்டேன். அரைமணிநேர பயணத்திற்கு பின்னர் 'ஷார்ட் ரூட்' என்று ஏதோ ஒரு வழியில் போய் கார் டிரைவர் அவர் பங்குக்கு 10 நிமிடங்களை காலிசெய்துவிட்டு (மழை காரணமாக பிளாக் ஆகிவிட்டதாம்)மீண்டும் மெயின் ரோட்டுக்கு வந்து பயணத்தை தொடர்ந்தோம்.

கண்களை மறைக்கும் மழையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக விமான நிலையத்தில் நான் இறங்கியபோது மணி 7.55. இறங்கி ஓடினேன். கிங்பிஷர் கவுண்டரை அடைந்த போது ஒரு இஞ்சுக்கு மேக்கப்பும், கடும் லிப்ஸ்டிக்கும் அணிந்த மினுமினுப்பான அந்த ஊழியை, சர்வ சாதாரணமான குரலில், "ஸாரி, போர்டிங் க்ளோஸ்ட்" என்றாள். அவ்வளவு நேர சாகசப்பயணம் தோல்வியாகிவிட்டதே என கலங்கினேன். எனக்கு சாதாரணமாகவே யாரிடமும் கெஞ்சுதல் பிடிக்காது/ தெரியாது. அதுவும் பெண்களிடம்.? அதுவும் இங்கிலீஷில்.? ஒருசில வினாடிகள்தான். மீண்டும் மழை, டிராபிக், ஹோட்டல், டிக்கெட் .:பாலோஅப்.. விளங்கிடும். கெஞ்சத்துவங்கினேன். மேலும் சில ஊழியைகளும் அங்கு வர அவர்களிடமும் கொஞ்சத்துவங்கினேன். கடைசியில் மனமிறங்கி எங்கோ போன் செய்து கேட்டுவிட்டு ஐடியை சரிபார்த்துவிட்டு உள்ளே அனுப்பினாள். ஏற்கனவே ஒருமுறை வந்த அனுபவம் இருந்ததால் ஓடினேன், விட்டால் பிளைட்டுக்கே ஓடியிருப்பேன்.

ஒருவழியாக தனி ஒரு வெற்றி வீர‌னாக விமானத்திற்குள் நான் நுழைய கதவுகள் அடைக்கப்பட்டன. குட்டியூண்டு விமானம். டவுண் பஸ் போல நெருக்க‌மான சீட்கள், நிரம்பியிருந்தது.

எனது ஜன்னலோர சீட்டை கண்டு பிடித்து உட்கார்ந்து 'யப்பாடா..' என பெருமூச்சு விட்டபிறகுதான் கவனித்தேன். பக்கத்து சீட்டில் ஒரு சினிமா பிரபலம் உட்கார்ந்திருந்தது. இவ்வளவு நேரம் பட்டது பத்தாதுன்னு இந்தக்கொடுமை வேறயா.. என நினைத்துக்கொண்டே ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக்கொண்டு படிப்பது போல பாவனை செய்யத்துவங்கினேன்.

டிஸ்கி 1: சென்னை வந்தவுடன் நேரே மீனம்பாக்கம் போகாமல் ஏன் வங்கக்கடலுக்குள் போய் ஒரு யூ டர்ன் அடித்து வருகிறார்கள்? (டாப் ஆங்கிளில் சென்னையும், கடற்கரையும் பிரமாதம்ங்க. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கொள்ளை அழகு.)

டிஸ்கி 2: அந்த பிரபலம் யாரு? க்ளூ ‍‍-அவர் ஒரு இயக்குனர் கம் ந‌டிகர். ஒரு மொக்கைத்திலகம்.

Friday, September 19, 2008

விதம் விதமான பெண்கள்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் கண்ணனும் பேசிக்கொண்டிருக்கும் போது டாபிக் ரொம்ப சூடாகவும், ஆழமாகவும் போய்க்கொண்டிருந்தது. இனி அந்த உரையாடல்..

நான் : "பழம்னா புடிக்காதவங்க யாருடா இருக்கமுடியும்? நீ என்ன சொல்ல வர்றே?"

கண்ணன் : "எத்தனைவிதமான பழங்கள் இருக்கின்றன? சும்மா மண்டைய ஆட்டாம ரசனையோடு திங்க் பண்ணி பாருடா.. ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை விடு. நமக்கு நல்லா தெரியும் அதனோட டேஸ்ட்டும், பயனும். கொஞ்சம் வைடா திங்க் பண்ணு."

"சொல்லுடா.."

"காய்ச்சல்ல காய்ஞ்சு போயி கிடக்கும்போது ஆரஞ்சின், சாத்துக்குடியின் பயனை அறிவாய். அந்த சமயத்தில் அதை விட தேவாமிர்தமாய் வேறெதுவும் இருக்கமுடியுமா? வாழைப்பழத்தை விடு. கனிந்த வாழையின் பயன் நல்ல பசி நேரத்தில் தெரியும் நமக்கு."

"இப்ப என்ன அதுக்கு?"

"பொறுடா.. நல்ல வெரைட்டியா யோசி.! நாவல் பழம், ஒரு பழத்தை வாயில் போட்டுவிட்டு இன்னொன்றை உன்னால் தவிர்க்கமுடியமா? நான் பெட் கட்டுகிறேன். ஆ.:ப்ட்ரால் புளியம்பழம்.."

அவன் கொடுத்த உதாரனத்தில் நானும் அவன் மூடில் விழுந்து,"என்னடா புளியம்பழத்தை ஆ.:ப்ட்ரால்னு சொல்லிட்டே. நான் உயிரையே குடுப்பேன்"

"சீதாப்பழம், அன்னாசி, திராட்சை, பலா, மாம்பழம்.. சே மாம்பழம்ன உடனே எனக்கு டாப்பிக்கே மறந்துரும்.."

"ஆமாடா.. என்ன சொல்லவர்றே.?"

"அதே மாதிரிதாண்டா பெண்களும்.! நீ ஒரு மாம்பழத்த வெச்சுக்கிட்டு சூப்பர் சூப்பர்னு கத்திக்கிட்டிருக்கிறே? மற்றதை யோசிச்சே பார்க்க மாட்டீங்கிறீயேடா?"

"என்ன சொல்ல வர்றே நீ?" அதிர்ச்சியானேன் நான்.

"ஒரு வாட்டர்மெலனை எப்ப டேஸ்ட் பண்ணப்போறே? ஒரு பட்டர்.:ப்ரூடை எப்ப டேஸ்ட் பண்ணப்போறே? அட்லீஸ்ட் ஒரு எலுமிச்சை.."

"......."

"என்னடா இது பேத்தல் ரூல்ஸ்.! கல்யாணம்.? ஒருவனுக்கு ஒருத்தி.? என்ன சிஸ்டம் இது? யாரு கொண்டுவந்தது இதை?"

நான் புரிந்தும் புரியாமலும் முழித்துக்கொண்டிருந்தேன். ஒங்களுக்கு ஏதாவது புரியுதா?

டிஸ்கி : இந்தப்பதிவு அடல்ட்ஸ் ஒன்லி பதிவு ம‌ட்டுமே என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் ஒன்றும் பொறுப்பேற்க‌முடியாது.

Thursday, September 18, 2008

கல்யாணச்சாப்பாடு

கல்யாணச்சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாவுது நண்பர்களே. எங்கள் ஊர் பக்கம் கல்யாண‌ச்சாப்பாடு என்றாலே ஒரு தனி மவுசுதான். முதல் பந்தியில் ஓடிப்போய் இடம்பிடித்து கொஞ்சம் அரிசி கொட்டை கொட்டையாக இருந்தாலும் சும்மா ஆவி பறக்க சாதமும், கட்டியாக சாம்பாரும் பிசைந்து நானே இரண்டு முறை வாங்கிக்கட்டிக்கொள்வேன். ரசத்திற்கும் மோருக்கும் போகும் முன்னரே வயிறு புல்லாகி முழித்துவிட்டு, குறைந்த பட்சம் மோரை டம்ளரில் வாங்கிக்குடிப்பேன்.

வீட்டை விடவும், ஹோட்டல்களை விடவும் கல்யாணச்சாப்பாட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் என சொல்லத்தெரியவில்லை. ஆனால் அதன் சுவை நெஞ்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. வெட்டிப்போட்ட மிளகாயும், கறிவேப்பிலையுமாய் தாளித்த மோர் மணக்கும் பந்தியெங்கும். சென்னைக்கு குடியேறியபிறகு இதை அனுபவிப்பது கிட்டத்தட்ட இல்லை என்று ஆகிவிட்டது. கல்யாணத்திற்கு பிற‌கு வீட்டில் ரமா சமைக்கின்ற‌ உணவினை சாப்பிட சாப்பிட அந்த எனது எண்ணம் நெய்யிட்ட தீயாய் வளர ஆரம்பித்தது. ஆனாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? சமைக்கப்பட்ட உணவு மணக்கும், அதனால் பசியோடிருப்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதே எனக்கு மறந்துபோய் விட்டது.

சென்னை கல்யாணங்களின் விருந்து கிட்டத்தட்ட ஹோட்டல்களில் சாப்பிடுவது போலத்தான் இருக்கிறது. உட்கார்ந்தவுடன் ஒரு பேப்பரை விரித்து சடாரென அனைத்தையும் அளவுச்சாப்பாடு போல வைத்துவிட்டு போய்விடுகிறார்கள், ரசம் மோர் உட்பட. எதையுமே கேட்டு வாங்குவதற்கு விடுவதில்லை. 'டேய்.. எனக்கு அப்பளம் வைக்கவில்லை' என கத்த வாய்ப்பை தருவதில்லை. 'பாயாசத்த டம்ளர்ல கொடுங்கடா' என சத்தம்போடவிடாமல் ஏதோ ஒரு 'பாதாம் கீரை' கப்பில் வைத்துவிட்டு போய்விடுகிறார்கள். ரசனையே இல்லாமல் போய்விடுகிறது. ந‌ம‌க்கு ஒரு ஐட‌த்தை வைக்க‌ ஆளில்லாம‌ல் 'ஏய்.. அவிய‌ல், ஏய்.. த‌ண்ணி' என்று க‌த்திக்கொண்டே சாப்பிடும் சுக‌ம் இங்கே கிடைப்ப‌தில்லை.

க‌ட‌ந்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ஒவ்வொருமுறை ஊருக்கு போகும்போதும் அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஏதும் க‌ல்யாண‌ம் ந‌டைபெறுகிற‌தா என்று விசாரிப்ப‌தே என் வ‌ழ‌க்க‌மாயிருந்தும் இன்னும் அந்த‌ வாய்ப்பு கிடைக்க‌வில்லை என்ப‌தே உண்மை. ம‌ங்க‌ளூரின் க‌ல்யாண‌‌த்துக்கு போன‌போதும் இந்த‌ எண்ண‌ம் வ‌ந்து போன‌து உண்மை.

ஆனால் கல்யாணச்சாப்பாட்டிற்கு பதிலாக‌ 'க‌ல்யாண‌ தோசை' சாப்பிட்டுவ‌ந்தேன். அதில் ம‌ங்க‌ளூரின் த‌வ‌று ஏதுமில்லை என்ப‌தை நான் அறிந்திருக்கிறேன்.

டிஸ்கி 1 : நேரமின்மையால் சுருக்கமாக இந்தப்பதிவு முடிக்கப்படுகிறது. விரிவாக இது பின்னர் மீள்பதிவு செய்யப்படும். விருப்பமிருந்தால் ஒரு பின்னூட்டமிட்டுவிட்டு நீங்களும் இதை விரிவாக்கலாம். அனுமதி இலவசம். மொய் எழுதவேண்டிய அவசியமில்லை. நான் போட்டோ போட்டிருக்கும் இந்த சமயத்தில் 'ஆணி'யை காரணம் காட்டி பதிவிடாமலிருப்பது கயமைத்தனம் என்று நண்பரும் கண்ணனும் சுட்டிக்காட்டியதால் இந்த சுருக்கப்பதிவு வலையேற்றப்படுகிறது.

டிஸ்கி 2 : வலைப்பூ எந்நேரமும் 10000 ஹிட்ஸை தொடலாம் என்பதால், 10000மாவது ஹிட்டை செய்பவர் ஸ்கிரீன் ஷாட்டுடன் தொடர்புகொண்டால், விரைவில் வெளியாகவிருக்கும் தாமிராவின் "காதலிக்கவிருப்பவர்களுக்கான எச்சரிக்கை : பாகம் 1" முதல் பிரதி வெளியீட்டு விழா மேடையில் கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, September 15, 2008

தண்ணியடிப்பதை விட்டுவிட்டேன்

பத்து நாட்களுக்கு முன்னர் ரமா வீட்டிலில்லாத ஓர் நாள். அவள் வீட்டிலில்லை என்றாலே இன்று நைன்டிதான் எனக் காலையிலிருந்தே கற்பனைக்குதிரைகள் பறக்கத்துவங்கிவிடும். யாரைக் கூப்பிடலாம்? தனிமையிலேயே இனிமையை கண்டுவிட‌லாமா? கண்ணனை மட்டும் கூப்பிடலாம் என்றால் கோவை போயிருக்கிறான், வர ரெண்டு நாளாகும். ச‌ங்குவைக்கூப்பிட்டு ரொம்ப நாளாகுது. கூப்பிடலாமா? ம்ஹும் வேண்டாம். நாம 90 அடிக்கிறதுக்குள்ள 900 அடிச்சுட்டு இன்னும் வேணும் கிளம்புன்னுவான், 'நடு ராத்திரி டாஸ்மாக்கைத்தேடி' அப்பிடின்னு பதிவு போட வேண்டியதாகிவிடும்.

கிருஷ்ணாவை வரச்சொல்லிவிட்டு 'மான்ஹாட்டன்' போகலாமா என்று யோசனை வந்தவுடனே அதை தவிர்த்தேன். சரிப்படாது. அங்கே பர்ஸ் பழுத்துவிடுவது மட்டுமல்ல, அலைச்சல், ஆட்டோ என பல பிரச்சினைகள். அப்ப வேற வழியில்லை. தனி ஆவர்த்தனம்தான்.

ஆ.:பீஸிலிருந்து சீக்கிரம் கிளம்பலாம்னு பார்த்தா அன்னிக்குன்னு பார்த்து ஒரு கம்ப்ளைன்ட். கிளம்ப எட்டு மணிக்கு மேல ஆயிட்டுது.

ஒரு வழியா கிளம்பி வீட்டுக்கு போற வழியில இருக்குற டாஸ்மாக்குல நின்னேன். சோதனை ஆரம்பமாச்சு. கூட்டம் கடையை நெருங்கவிடாமல் தேனீக்கள் போல அப்பிக்கொண்டிருந்தது. ஐந்து நிமிடமாயிற்று. கூட்டம் குறைவதைப்போலவோ, யாராவது வாங்கிவிட்டு வெளியேறுவதைப்போலவோ தெரியவில்லை. ஷூக்கள், டக் இன் செய்யப்பட்ட எனது வெள்ளை சட்டை என என் தோற்றத்தையும், அங்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தையும் பார்த்துக்கொண்டேன். யோசித்துக்கொண்டிருந்தால் ச‌ரிப்ப‌டாது என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். ஒருவ‌ழியாக‌ @#/%$# போன்ற‌ ப‌ல‌ வார்த்தைக‌ளையும், வாச‌னைக‌ளையும் க‌ட‌ந்து க‌டைக்கார‌ரை நெருங்கினேன். ப‌ண‌த்தை கையில் வைத்துக்கொண்டு கோட்ட‌ர், கோட்ட‌ர் என‌ கூவிக்கொண்டிருந்தேன். என்னைப்போல‌வே ப‌ல‌ரும் கூவிக்கொண்டிருந்தனர். ஆனால் விற்ப‌னைப்பிர‌திநிதியோ யாருடைய‌ குர‌லையும் கேட்ட‌து போல‌வே தெரிய‌வில்லை. அவர் மிக‌வும் நிதான‌மாக‌ பின்புற‌மாக‌ திரும்பி இன்னொரு ஊழிய‌ரோடு பேசிக்கொண்டிருந்தார். கூட்ட‌மும் க‌த்துவ‌தை விடுவ‌தாக‌ தெரிய‌வில்லை, நானும்தான்.

கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர் 'ஏய் #$%/@!, எம்மா நேர‌மா கூவிக்கினுறோம், ஒரு கோட்ட‌ர் குடுறா' என்றார். இந்தக்குரலுக்கு அவர் திரும்பினார். நானும் ம‌கிழ்ந்தேன். ஆனால் அவ‌ரோ ப‌திலுக்கு, 'அடிங் # &&*%$#, பீரு ம‌ட்டும்தான் இருக்குனு எத்தினா த‌பா சொல்ற‌து, க‌ம்முனாட்டி' என்றார். என‌க்கு அதிர்ச்சியாகிவிட்ட‌து. ஐய‌ய்யோ, இவ்ளோ நேர‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுவிட்டு ஒண்ணும் வாங்காம‌ல் திரும்புவ‌தா, பிய‌ர் ந‌ம‌க்கு ஒத்துக்காதே! என்று அங்கேயே குழ‌ம்பிய‌வாறு யோசித்துக்கொண்டிருந்தேன். அத‌ற்குள், 'வாங்காத‌வ‌ன்லாம், தூர‌ப்போடா @#$%$#^&$' என்ற‌தும் வெளியே வ‌ந்தேன். வேறு க‌டைக்கு போலாம்னா இன்னும் அஞ்சு கிலோமீட்ட‌ர் போணுமே என்று யோசித்துவிட்டு திட்ட‌த்தை அரைம‌ன‌தோடு கைவிட்டேன். நாளைக்கு பாத்துக்க‌லாம் என்று முடிவு செய்துவிட்டு வ‌ண்டியை நோக்கி போனேன், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.. ஹெல்மெட்டை காண‌வில்லை.சுற்றுமுற்றும் பார்க்கிறேன், ஏராள‌மான‌ வ‌ண்டிக‌ள். உட‌னேயே புரிந்துவிட்ட‌து சான்ஸேயில்லை. முன்னர் எப்போதும் கையிலேதான் வைத்துக்கொண்டிருப்பேன். இப்போதுதான் முன்னைமாதிரி போலீஸ் ஹெல்மெட்டுக்கெல்லாம் பிடிப்ப‌தில்லையே, திருடுபோக‌ சான்ஸ் இல்லை என்று கொஞ்ச‌நாளாக‌வே வ‌ண்டியிலேயே வைத்துவிடுகிறேன். போச்சுது, மூட் அவுட்! எப்பிடியும் இன்னிக்கு அடிச்சே ஆக‌ணும், விடு வ‌ண்டியை கார‌ப்பாக்க‌த்துக்கு.

அங்கேயும் இத‌ற்கு ச‌ற்றும் குறைவில்லாத‌ அனுப‌வ‌த்திற்குப் பின்ன‌ர், ஏதோ முக‌ம்தெரியாத‌ ஒரு கோட்ட‌ரை வாங்கிவ‌ந்தேன். கேட்ட‌து எப்போதுமே கிடைக்காது எனினும் இன்று ரொம்ப‌ சோத‌னையாக‌ விஸ்கிகூட‌ கிடைக்காத‌து என்னை ரொம்ப‌வும் விர‌க்திய‌டைய‌ வைத்த‌து. ட‌ச்ச‌ராவ‌து ம‌ன‌துக்கு திருப்தியாக‌ வாங்கிக்கொள்வோம் என‌ 'க‌.:பே செட்டிநாட்டில்' நின்றேன். வ‌ழ‌க்க‌த்தைவிட‌ கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து. ஒரு 'பிங்க‌ர்பிஷ்' பார்ச‌ல் சொல்லிவிட்டு காத்திருந்தேன். 20 நிமிட‌ங்க‌ள். பின்ன‌ர் கூலாக‌ வ‌ந்த‌ ச‌ர்வ‌ர் 'ஸாரி ச‌ர், பிஷ் ஐட்ட‌ம் எதுவுமே இல்லை, வேறென்ன‌ வேண்டும்' என்றார். 'டாய்.. யாரைப்பார்த்து இல்லைன்னே, முதல்லேயே சொல்லவேண்டியதுதானே..' என்று குதிக்க‌ ஆர‌ம்பித்தேன். டாஸ்மாக்கில் காண்பிக்க‌ முடியாத‌ கோப‌த்தையெல்லாம் இங்கேதானே காண்பிக்க‌ முடியும். க‌டைசியில் மானேஜ‌ர் போன்ற‌ தோற்ற‌முடைய‌வ‌ர் வ‌ந்து ச‌மாதான‌ம் செய்த‌வுட‌ன் ச‌மாதான‌மானேன். பின்ன‌ர் 'சிக்க‌ன்65' சொன்னேன். ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், 35 நிமிட‌ங்க‌ள். வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்ட‌து. பின்ன‌ர் பில்லிங்கிலும் சோத‌னை. 'ஸாரி ச‌ர், 150 ரூபாய்க்கெல்லாம் கார்டு அக்செப்ட் ப‌ண்ண‌மாட்டோம்'. திரும்ப‌வும் ர‌க‌ளை.

சோடா வகையறாக்களை வாங்க வீட்டினருகே வழக்கமாக நூடுல்ஸ் வாங்கும் கடையில் நின்றேன். ம‌ணி 10.15. 'சோடா இல்ல‌ சார், வேறென்ன‌ வேணும்?'. வ‌ண்டியைத்திருப்பினேன். மேலும் சில கடைகள் அடைத்திருக்க ரெண்டு கிலோமீட்டரில் இன்னொரு கடை. 'கூலிங் இல்ல, ப‌ர‌வால்லையா.?' வாங்கிக்கொண்டேன்.

வீட்டுக்கு வ‌ந்த‌ போது ம‌ணி 10.30. ப‌சித்த‌தில் வாங்கிவ‌ந்த‌ சிக்க‌னை கொஞ்ச‌ம் சாப்பிட‌லாம் என‌ பார்ச‌லைத்திற‌ந்தேன். ஆனிய‌ன், லெம‌ன் ஏதுமில்லாம‌ல் சில‌ க‌ருகிய‌ சிக்க‌ன் துண்டுக‌ள் முழித்துக்கொண்டிருந்த‌ன‌, ப‌ழிவாங்கிவிட்டான்க‌ள். ஒரு துண்டை எடுத்து தின்று பார்த்தேன். ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ துப்பிவிட்டு ஏதாவ‌து ஊறுகாயாவ‌து தேறுமா என‌ அடுக்க‌ளைக்குள் புகுந்தேன். ஊறுகாயைத்தேடிக் க‌ளைத்தேன்.

முக‌ம், கைகால் அல‌ம்பி ரெடியாகிவிட்டு .:பிரிட்ஜைத் திற‌‌ந்தேன். .:ப்ரீஸ‌ர் காலியாக‌ இருந்த‌து. பின்ன‌ர்தான் க‌வ‌னித்தேன் ஐஸ்டிரேக்க‌ள் கழுவி காய‌வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன .:பிரிட்ஜின் மீதே. அட்லீஸ்ட் த‌ண்ணீர்? ம்ஹும். ப‌ர‌வாயில்லை ப‌த்து நிமிஷ‌ம் வெயிட் ப‌ண்ண‌லாம். த‌ண்ணீரை பாட்டில்க‌ளில் பிடித்து .:பிரீஸ‌ருக்குள்ளேயே போட்டேன், சோடா பாட்டிலையும் உள்ளே போட்டு .:பிரிட்ஜின் க‌த‌வைச்சாத்தினேன்.

க‌ர‌ண்ட் க‌ட் ஆன‌து, இருள் சூழ்ந்த‌து.

விதை போல விழுந்தவன்

அரசியல் உள்ளிட்ட சில பல தலைப்புகளில் பதிவோ ஆராய்ச்சியோ இப்போதைக்கு பண்ணுவதாக திட்டமேதும் இல்லை (அப்பாடா என்று பெருமூச்சு விடுவது கேட்கிறது).

இருப்பினும் தமிழகத்தின் தன்னிகரில்லாத ஒரு பெரும் தலைவனின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தில் குட்டியூண்டாவது பங்குபெறும் பேரார்வத்தில் நிகழ்ந்த ப‌திவு இது.

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றியெழுதிய அந்தப்பேரறிஞனைப்பற்றி கவிக்கோ அப்துல்ரகுமான் இவ்வாறு எழுதுகிறார்.


ஒரு ரத்த நதிக்கரைக்குப் பூக்களோடு வந்தவன் நீ

நீயோர் இசைத்தட்டு, ஊசிகள் உன்னைக்கீறியபோதும் இசைபாடியவன் நீ

அழுகின்ற போதும் மேகம்போல அழுதவன் நீ

விழுகின்ற போதும் விதையைப்போல் விழுந்தவன் நீ!

பேரறிஞர் குறித்த‌ மேலும் ஒரு அழகான பதிவுக்கு 'லக்கி'யிடம் செல்லவும்.

Friday, September 12, 2008

கொசுக்களுடன் ஒரு யுத்தம்

அனைத்து ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. கொசுவிரட்டி (வேப்பரைஸர்) ஆன் செய்யப்பட்டிருந்தது. மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. (என்ன.. திகில் கதையும் நல்லா வரும்போல இருக்கே ராசா..). இருப்பினும் நேற்று என்னவென்று தெரியவில்லை, நள்ளிரவில் கொசுத்தாக்குதல் மிக அதிகமாக இருந்தது. என்ன காரணம் என்று புரியவில்லை, வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்தாள் ரமா.

அதுதான் கொசுமருந்து என நான் அழைக்கும் ஓடமாஸ். எடுத்து ஒரு இடம் பாக்கியில்லாமல் மேனியெங்கும் பூசிக்கொண்டோம். இதனால் ஒரு பிரச்சினை என்னவெனில் தூங்க மட்டும்தான் முடியும். மீண்டும் தூங்க முயற்சிக்கையில் ஓடமாஸ் குறித்த ஒரு .;பிளாஷ்பேக் (கொசுவத்தி?) நினைவுக்கு வ‌ந்தது. கேட்க நீங்கள் தயாராக இருக்கும் போது நான் சொல்லாவிட்டால் எப்படி?

ஆறேழு வருடங்களுக்கு முன்னர், அம்பத்தூரில் ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக இருந்தபோது இரண்டாவது ஷிப்டில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பணிபுரிவேன். சுமார் முப்பது ஆபரேட்டர்கள், மூன்று சூப்பர்வைஸர்கள். மாலை ஆறு மணியிலிருந்து இரவு இரண்டு மணிவரை பணி. முடிந்ததும் அனைவரும் கம்பெனிக்குள்ளேயே ஆங்காங்கே படுத்துறங்கிவிடுவோம். அப்போதே வீடு செல்லலாம் எனில் பக்கத்திலிருந்து வருபவர்களுக்கு நாய்கள் தொல்லை, தூரத்திலிருந்து வருபவர்களுக்கு கூடுதலாக‌ போலீஸ் தொல்லை (இப்போது ஐடி கார்டு வந்துவிட்டதாம்). எனது அறை பக்கத்தில் ஒரு கிலோமீட்டர்தான். ஆகவே ஆரம்பத்தில் ஒரு நாள் 'நாய்க்கெல்லாம் பயப்படுவதா? அதுவும் நானா.. ஹிஹி..' என்று வீரவசனம் பேசிவிட்டு இரவே கிளம்பினேன். என் வீரத்தைப்பார்த்து இன்னொரு நண்பரும் கிளம்பினார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அலறிப்புடைத்துக்கொண்டு ஆறேழு நாய்கள் கொலைவெறியுடன் துரத்த இன்னொரு கம்பெனிக்குள் அடைக்கலம் புகுந்தோம். அங்கு நல்ல அறிவுரைகள் கிடத்தன, நண்பனின் கொலைவெறியை சமாளித்தது தனி கதை. ஆகவே அதன்பின் அந்த முயற்சியை கைவிட்டு நானும் கம்பெனியிலேயே இரவு தங்கத்துவங்கினேன், கவனிக்கவும் 'தூங்க' அல்ல 'தங்க'. அங்கு ஒரு புதிய சோதனை. கொசுக்கள்.

சாதாரண காலங்களிலேயே சமாளிக்கமுடியாமல் திணறுவோம். அது ஒரு கொசுக்காலம். ஷிப்ட் முடிந்த பின்னர் படையெடுத்துவரும் கொசுக்களை விரட்ட எத்தனையெத்தனையோ முயற்சிகள்.

ஓரிடத்தில் ஒவ்வொரு சேர்களுக்கு அடியிலும் ஒரு டப்பாவில் ஏதேதோ புகையும் சமாச்சாரங்களை போட்டுக்கொண்டு சேர்களில் நான்கு பேர் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் அந்த டப்பாவின் மீதே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் உயிர் நீத்தவர்களின் தலைமாட்டில் ஒரு தீபம் வைத்திருப்பதைப்போல பல கொசுவத்திகளை உடம்பைச்சுற்றிலும் வைத்துவிட்டு ஆடாமல் அசையாமல் படுத்திருப்பார்கள், இதில் ஒரு ஆபத்து லேசாக புரண்டாலும் போச்சு. சிலர் தூக்கமாவது ஒண்ணாவது என்று கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓரிடத்தில் நிற்காமல் உலாத்திக்கொண்டிருப்பார்கள், கால்வலித்து நிற்கும் போது புகைபிடித்து ஒருவர் மீது ஒருவர் ஊதிக்கொள்வார்கள் (புகைபிடிப்பதில் இப்படியும் ஒரு நன்மை). இன்னும் சிலர் உற்பத்திப்பொருட்களை பேக் செய்ய வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர திக்கான பாலிதீன் பைகளுக்குள் நுழைந்துகொண்டு கழுத்துவரை மூடிக்கொண்டு வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் கடிக்கும் கொசுவை விரட்டிவிட்டு டப்பென்று கையை உள்ளுக்கு இழுத்துக்கொள்வார்கள்.

பலநாட்கள் இந்த சித்திரவதைகளை நானும் அனுபவித்துக்கொண்டிருந்தேன். இமைகளுக்கு தூக்கமென்பதே இம்மியளவும் கிடையாது. நாளுக்கு நாள் கொசுக்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் கூட்டப்பட்ட மானேஜ்மென்ட் கூட்டத்தில் தொழிலாளர்கள் சார்பில் இந்த பிரச்சினையை பேசி பலத்த கைத்தட்டல் வாங்கினேன். (பாராளுமன்றத்தில் எம்பிக்கள் பேசுவது போல) ஆனால் பலன் ஒன்றுமில்லை.

கடைசியில் ஒருநாள் ஓடமாஸ் விளம்பரத்தைக் கண்ணுற்று ஆகா இப்படி ஓர் விஷயம் இருப்பது தெரியாமல் போய்விட்டதேயென்று அன்று பல ட்யூபுகள் வாங்கிக்கொண்டு போனேன். என் திட்டம் ஜெயித்தது. ஓடமாஸை உடலெங்கும் (ஒரு குண்டுமணி இடம் பாக்கியிருக்கக்கூடாது, உள்ளங்கால் உட்பட நல்ல திக்காக .:பேர்&லவ்லி போல‌) பூசிக்கொண்டேன். எங்களுக்கு உற‌ங்க மிக வசதியான ஒரு இடம் இருந்தது. அதுதான் கொசுக்கள் முழுதும் ஆக்கிரமித்துக்கொண்ட அட்டைக்குடோன். அதை நினைத்து நினைத்து புலம்புவோம். இப்போது ஆயுதம் தரித்திருப்பதால் தைரியமாக கொசுக்குடோனுக்குள்ளேயே ஸாரி, அட்டைக்குடோனுக்குள்ளேயே நுழைந்தேன்.
பரபரப்பான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. உடலெங்கும் ஓடமாஸ் பூசிக்கொண்டிருந்ததால் என் உடம்பிலிருந்து ஒரு அரையடி தூரத்தில் கொசுக்கள் பேரிரைச்சலுடன் அலைபாய்ந்து கொண்டிருந்ததும், நேரம் செல்லச்செல்ல அந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்ததும் பயங்கர திரில் அனுபவமாய் இருந்தது. அங்கிருந்த‌
அட்டைகளை விரித்து (மிக வசதியானது, மெத்தைபோல) நிம்மதியாக உறங்கிக்காட்டினேன். இதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் 2.30 மணி நேரத்திற்கு பின்னர் எழுந்து இன்னொரு கோட்டிங் பூசிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் தெரியும் சேதி.

அன்றிலிருந்து சிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் அதைவென்று காட்டிய வீரன் என அனைவராலும் புகழப்பட்டேன்.

Thursday, September 11, 2008

மங்களூர் சிவா திருமணம்! (ஒரு லைவ் ரிபோர்ட்)

அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து குளித்து ஒரு இடத்துக்கு நான் கிளம்புவது அரிதிலும் அரிது என்பதால் இன்று காலையில் ரமாவை வியப்பில் ஆழ்த்திவிட்டு சிவாவின் திருமணத்திற்கு காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். பெருங்குடியிலிருந்து வடபழனி. பதிவர்களை முதன்முதலாக பார்க்கப்போகிறோம் என்ற ஆவலோ, ட்ரா.:பிக் குறைவாக இருந்ததோ 7.10க்கெல்லாம் வடபழனி முருகன் கோவில் வாசலில் நின்றிருந்தேன்.

அங்கிருந்த கூட்டத்தைப்பார்த்தபோது என்ன சென்னையே கிளம்பி சிவாவின் திருமண‌த்திற்கு வந்துவிட்டதாவென மலைத்தேன். அவ்வளவு கூட்டம், கோவில் நிர‌ம்பி வழிந்தது. பின்னர் அறிவிப்பு ப‌லகையை பார்த்தபோது தெரிந்தது, இன்று மட்டும் சுமார் 150 திருமணங்கள் அங்கு நடந்துகொண்டிருப்பதாக.

எனக்கு தெரிந்த ஒரே பதிவர் (அதுவும் போனில்தான் சில தடவைகள் பேசியிருக்கிறோம்) புதுகை அப்துல்லாவை அழைத்தபோது மனிதர் சிரித்த சிரிப்பிலேயே இப்போதான் கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. இருப்பினும் 20 நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறியதால் காத்திருந்தேன். பின்பு 7.30க்கு அழைத்த போது ட்ரா.:பிக்கில் மாட்டிக்கொண்டதாய் சொன்னார். இது சரிப்படாது என்று தைரியமாய் சிவாவையே அழைத்தேன். அவர் குறிப்பிட்ட ஒரு ச‌ந்நிதிக்கு வாருங்கள் என்று சொல்லி போனை வைத்தார்.

அதுதான் கடைசியாக அவர் அட்டென்ட் செய்த போனாக இருக்கவேண்டும். நல்ல வேளையாக போன் செய்தேன், இல்லையென்றால் அருகிலிருந்து கொண்டே திருமணத்தை மிஸ் செய்திருப்பேன். அதன் பின் அவர் குறைந்த பட்சம் அரைமணிக்கு எந்த போனையும் அட்டென்ட் செய்யவில்லை. குறிப்பிட்ட சந்நிதியில் எனக்கு மேலும் ஒரு சோதனை காத்திருந்தது. அந்த இடத்தில் மட்டும் சுமார் ஒரு 7 புதுமண ஜோடிகள் நின்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஜோடியை சுற்றிலும் ஒரு பத்து பன்னிரெண்டு உறவினர்கள். மீண்டும் அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை.

ஏன் இந்த பதிவர்கள் ப்ரொபைலில் போட்டோக்களை இடுவதில்லை என்று கோபம் கோபமாக வந்தது. (அதற்கான காரணமும் அப்புறம் விளங்கியது) என்னடா இது சோதனை? நமக்கே சவாலா என்றபடி முகத்தைப்பார்த்து குத்துமதிப்பாக கண்டுபிடித்து ஒரு ஜோடியின் அருகே போய் நின்றுகொண்டேன். என் ஊகம் சரியே.!(மணமகளின் சிரித்த முகத்தையும், மணமகனின் திரில் முகத்தையும் வைத்துக்கண்டுபிடித்தேன்) எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஒரு இடத்தில் இரண்டு திருமணம் நடந்தாலே சரியாக தப்பான ஜோடிக்கு மொய் வைத்துவிட்டு வருபவன் நான். அருகிலிருந்தவரிடம் மணமகனின் பேரைக்கேட்டபோது சிவா என்றார். வேலை பார்க்கும் ஊரையும் கன்பர்ம் செய்துகொண்டேன்.

வேறு யாரும் பதிவர்கள் அருகில் இருப்பார்களோ என்ற சந்தேகத்தோடே நின்றுகொண்டிருந்தேன். யாரும் இருந்திருக்கவில்லை என்று பின்னர் தெரிந்துகொண்டேன். தாலிகட்டும் போது அருகிருந்த ஒரே பதிவர் நான்தான். (உய்.. உய்.. விசிலடிங்கப்பா) அட்சதையிட்டு மகிழ்ந்தேன். பூங்கொடி சிரித்த முகமாயிருந்தார். நேரம் செல்லச்செல்ல சிவாவிம் முகமும் மலரத்துவங்கியது (பதற்றம் நீங்கியிருக்கவேண்டும்). வைபவம் நிகழ்ந்த பின்னர் உறவினர்களோடு நானும் முதலாவதாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டேன். பின்னர் அவர்கள் அருகிலேயே கொஞ்சம் தள்ளி கண்பார்வையிலேயே நின்று கொண்டேன்.(அதெப்படி சாப்பிடாமல் செல்வது?) கூட்டம் மணமக்களையும் சேர்த்து நெருக்கித்தள்ளியது.

சிறிது நேரத்தில் எங்களருகிலேயே அதிஷாவின் ஒரு பதிவில் போட்டோவில் பார்த்த முகம் ஒன்று இங்குமங்கும் அலைந்துகொண்டிருப்பது கண்டேன், அவர் டோன்டு ராகவன். அவரைப்பிடித்து சிவாவிடம் ஒப்படைத்தேன். பின்னர் சஞ்சய் வந்தார். (பெயர்களை பின்னர் அறிந்துகொண்டேன்). அதன் பின்னர் புதுகை அப்துல்லா வந்தார். (பரிசலின் பதிவில் அவர் படம் இருந்ததால் ஓரளவு கண்டுகொண்டேன். அதில் .:பாரின் ரிடர்ன் போல இருப்பவர் நேரில் பரமக்குடி ரிடர்ன் போல இருக்கிறார்.)

பின்னர் வெண்பூ வந்தார். (மனைவி, குழந்தையுடன் வந்திருந்து சிறப்பு செய்த‌ ஒரே பதிவர் இவர்தான்). முன்னமே வந்ததாகவும், கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் சொன்னார். பின்னர் G3, மற்றும் இம்சை அரசி ஜோடி வந்தது. அவர்களுடன் கவிஞர் ஸ்ரீ வந்திருந்தார். அசத்தலான தாடியும், ஹேர்ஸ்டைலும் என செம யூத் அவர் ஒருவர்தான். பின்னர் ஆரம்பத்தில் எது நிகழ வாய்ப்பில்லை எனவும் ந‌டக்ககூடாது எனவும் நினைத்தேனோ அது நிகழ்ந்து கொண்டிருந்தது. அதுதான் 'பதிவர் சந்திப்பு'.

தொடர்ந்து அந்த மினி பதிவர் சந்திப்பு (மொத்தம் எத்தனை பேர் என்பதை கூட்டிப்பார்த்துவிட்டு மினியா, மெகாவா என அதிஷாதான் சொல்லவேண்டும்) சரவணபவனில் தொடர்ந்தது. ஒருவருக்கொருவர் அறிமுகப்'படுத்தி'க்கொண்டனர். பின்னர் உண்மைத்தமிழன் வந்தார். டோன்டு சார் எல்லோரையும் மடக்கிப்பிடித்து பிளாக் முகவரியை வாங்கிக்கொண்டிருந்தார். நான் என்னுடையது ரொம்ப நீளமானது, நானே உங்க பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுகிறேன் வாருங்கள் என்று கூறி தப்பித்தேன்.

புதுகையும் சஞ்சய்யும் கிண்டலும் கேலியுமாக கலகலப்பாக இருந்தனர். வெண்பூ கலகலப்பில் கலந்துகொள்ளமுடியாமல் செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தார். (குறைந்த பட்ச இடைவெளியில் நின்றுகொண்டிருத்தல் மற்றும் காதுகொடுத்துக்கொண்டிருத்தல்). என்னை அனைவரும் நீங்களா நீங்களா என்பது போல கேட்டுக்கொண்டார்கள். எழுத்தைப்பார்த்து வேறுமாதிரி எதிர்பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். குள்ளமாக (எப்போதும் அரையடிக்கு ஷூ போட்டுக்கொண்டிருப்பேன், கோவில் என்பதால் கழட்டவேண்டியதாக போயிற்று) தொப்பையுடன் பார்த்தவுடன் சப்பென்று ஆகிவிட்டதோ என்னவோ. (இந்த இடத்தில் என்னைவிடவும் இரண்டு மடங்கு பெரிதான வெண்பூவின் தொப்பையை குறிப்பிட்டாகவேண்டும்).

பின்னர் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். அதுவரை பேசாமலிருந்த இம்சை அரசி 'உங்கள் மனைவியை ஒருநாள் சந்திக்கவேண்டும்' என்று மிரட்டினார். சரியென்று தலையாட்டிவிட்டு வந்தேன். பின்னர் சரவணபவன் தோசையை உண்டுவிட்டு (சஞ்சய் மணவீட்டார் போல அனைவரையும் நன்கு கவனித்துக்கொண்டார்) அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு சிவாவிடமும் விடைபெற்று மறக்காமல் கி.:ப்ட்டையும் தந்துவிட்டு கிளம்பி, சென்னையின் டிரா.:பிக்கில் நீந்தத்துவங்கினேன்.

(டிஸ்கி : எனது படப்பொட்டியை கொண்டுபோகாததால் படங்கள் தரமுடியவில்லை, மன்னிக்கவும். வேண்டுமெனில் சிவா தவிர கேமிரா கொண்டுவந்த ஒரே ஒருவரான சஞ்சய்யை அணுகவும்)

Tuesday, September 9, 2008

பொண்ணு பாக்க போறீங்களா.?

இன்னும் தங்கம் வீடு திரும்பவில்லை என்பதால் கண்ணனுடன் சேர்ந்து கொண்டு பக்கத்தில் ஒரு டாஸ்மாக்கில் ஒரு நைன்டி அடிக்கலாம் என்று திட்டமிட்டு அதன்படி நேற்று சென்றோம். பதிவிலிட‌ எக்கச்சக்கமான விஷயங்கள் (Topics) இருந்தாலும் எதை முதலில் எழுதுவது என்பதில்தான் நமக்கு சிக்கல் வரும், பிறரைப்போல விஷயமே கிடைக்காமல் எல்லாம் அல்லாடுவதில்லை (பரிசல், அப்துல் கவனிக்க..).

ஆகவே அதுகுறித்து கண்ணனிடம் டிஸ்கஸ் செய்வது வழக்கம். முழுசாக அவன் பேச்சைக்கேட்டாலும் போச்சு, டவுசர் கிழிஞ்சுடும்..

'பதிவு ஹிட் ஆகி ரொம்ப நாளாவுது, ஏதாச்சும் சினிமா பத்தி டாப்10, டாப்5 இந்த மாதிரி ஏதாவது போடு. நீ வெச்ச தேர்தல்ல சினிமா பத்தின பதிவுகளுக்கு ஒரு ஓட்டுகூட‌ விழலன்னு பாக்கிறியா.. அது டுபாக்கூரு.'

'ஏண்டா அதெல்லாம் வேண்டாம்னுதானே இருக்கோம், அப்புறம் என்ன திரும்பவும்..'

'அஜித் மாதிரி ஆச்சுது உன் நெலம. நமக்கு இப்ப தேவை நல்ல படம் கிடையாது. ஒரு ஹிட். நான் சொன்னா மாதிரி நீ போடேன் முதல்ல, ஹிட்டாவும் பாரு..'

சரியென்று தலையாட்டிவிட்டு டாபிக்கை மாத்தினேன்.
'ஆமா, அசோக் நகர்லேர்ந்து இருந்து ஒரு பொண்ணு வந்துதே, ஜாதகம் பொருந்துச்சாமா.?'

'அது ஊத்திக்கிச்சு, அக்கா நேத்துதான் போன் பண்ணினா ஆனா தாம்பரத்தில ஒரு பொண்ணு இருக்குதாம், ஜாதகம் நல்லாருக்குது ஆனா அவ வேலைக்கு போகலையாம். அப்பாவும் பரவால்லன்னுட்டாங்க. வர்ற வெள்ளிக்கிழமை வரச்சொல்லிருக்கானுங்க‌, சாந்திரம் நாலு மணிக்கு மேலதான் போறோம்.. அக்கா நாளைக்கு வந்துடுவா, நீ வர்றியா எப்பிடி?'

'சரி முடியுதானு பாக்கிறேன்'

அப்புறமா பேச்சு வளந்து அவனுக்கு சில அறிவுரைகள் சொல்லவேண்டியதா போச்சுது.. அது உங்களுக்கும் தேவைப்படும்ங்கிறதால இங்கே..

1.ஏற்கனவே ஜாதகம், ஸ்டேடஸ் எல்லாம் சரியா இருக்கப்போயிதானே பொண்ணு பார்க்க போறோம். அதனால பொண்ணு எப்படி இருந்தாலும் ஓகே சொல்லிடணும், புடிக்கலைன்னு சொன்னா அந்த பொண்ணோட மனசு என்ன பாடுபடும்? என்று உதாரண புருஷத்த‌னமாக எல்லாம் யோசிக்கவேண்டாம். அந்தப்பெண் பார்க்கவரும் உங்களையே அதற்குள்ளாக கண‌வனாக மனதில் வரிந்துகொண்டெல்லாம் இருக்கமாட்டாள். புடிக்கவில்லை எனில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். 5 நிமிஷத்தில் அந்த பிரச்சினை முடிந்துவிடும், ரெண்டு பேரும் தப்பிவிடுவீர்கள்.

2.மிக நெருங்கிய உறவினர்களைத்தவிர (அப்பா, அம்மா, உடன்பிறப்புகள்) யாரையும் அழைத்துப்போகவேண்டாம். குறிப்பாக நெருங்கிப்பழகியிறாத, குணமறிந்திறாத நபர்கள் வேண்டாம். உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் ச‌ம்பந்தம் நிகழ்ந்துவிடும், அல்லது பிடித்திருந்தால்கூட முறிந்துபோகக்கூடும்.

3.மெனக்கெட்டு முடிவெட்டி, .:பேஷியல் பண்ணி, ட்ரெஸ் பண்ணி என.. பேக்குத்தனமாக ஆகிவிடாதீர்கள். அந்தப்பெண் பயந்துவிடப்போகிறாள். தினமும் ஆபீஸ் போவதுபோல கிளம்பிச்செல்லுங்கள்.

4.ரொம்ப நாகரீகத்தனமாக பேசிப்பார்க்க பெருசுங்க அனுமதி தந்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். அதனால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. பத்து வருடங்களானாலும் புரிந்து கொள்ளமுடியாத ஒரு விஷயத்தை பத்து நிமிடத்திலா புரிந்துகொள்ளப்போகிறீர்கள்?

5.அவர்கள் தரும் உணவுப்பண்டங்களை அளவோடு வாங்கி முழுதும் சாப்பிட்டுவிடுங்கள். மிச்சம் வைத்து வெறுப்பேற்றாதீர்கள் அல்லது மொக்கு மொக்கென்று மொக்கி மலைப்படைய வைக்காதீர்கள்.

6.குறிப்பாக தொப்பையை மறைக்க ஸ்பெஷல் பெல்ட் போட்டுத்தொலைக்காதீர்கள்.

7. பொண்ணு அழகாயிருந்து பிடித்திருந்தால் டப்பென்று ஓகே சொல்லிவிடுங்கள். ஏனென்றால் கிடைப்பது அரிது. மேலும் எல்லா அழகான பெண்களாலும் நமக்கு தீது நேர்வதில்லை மற்றும் எல்லா சுமாரான பெண்களாலும் நமக்கு நன்று நேர்வதுமில்லை. விதி வலியது.

போதுமா..? சரி விட்டுவிடுகிறேன். அடுத்து நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைப்பட்டநேரத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என பதிவு போடலாம்னு இருக்கேன்.. வேணுமா? வேண்டாமா?

காதலிக்கும் போதைப்பற்றி (போது=பொழுது) எழுதுங்கள் என்று ரசிகர் கூட்டம் கேட்டாலும், இப் போதைக்கு அதை எழுதமுடியாது என்றும் அது பின்னாளில் பெரிய ஆளானபிறகு 800 பக்கத்திற்கு நாவலாக எழுத ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.


Saturday, September 6, 2008

தங்கமணியை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு போகலாமா?

தங்கமணியுடன் பேசி இன்றோடு நான்கு நாட்க‌ளாகின்றன‌. நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டில் ஒரு சண்டை நிகழ்ந்தேறியது. வழக்கத்தைவிடவும் அதிக வார்த்தைப்பிரயோகம் நிகழ்ந்ததில் கோபம் தலைக்கேறி ரிமோட்டையெல்லாம் தூக்கிப்போட்டு உடைத்து (டிவியை உடைத்தால் பர்ஸ் கிழிந்துவிடும் என்பது அந்த கோபத்திலும் தெளிவாக உறைக்கிறது) அதகளம் பண்ணியாயிற்று. நேற்றே கோபம் நன்கு தணிந்துவிட்டாலும் அவளே பேசட்டுமே என்று காத்திருந்தேன். ஆனால் அது நடப்பதாய் தெரியவில்லை.

ஆரம்ப காலங்களில் சண்டை வரும்போது சில நிமிடங்களிலும் பின்னர் சில மணிநேரங்களிலும் கோபம் மறந்து சமாதானமாகிவிடுவோம். பின்னர் கொஞ்ச காலம் இரவு நேரங்களில் சமாதானமாகிவிடும். ஆனால் நாட்கள் மாதங்களாக‌, மாத‌ங்க‌ள் வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ ச‌மாதான‌ இடைவெளி நீண்டுகொண்டே போய் இப்போது நான்கு நாட்க‌ளில் வ‌ந்து நிற்கிற‌து. என்ன‌ ப‌ண்ண‌லாம் என்று தீவிர‌மாக‌ யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு முறை சண்டை நிகழும் போதும் நாம் ப‌ல‌ வ‌ழிக‌ளிலும் ச‌மாதான‌ முய‌ற்சிக‌ளை மேற்கொள்கிறோம். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மான‌த்தைத்துற‌ந்து, சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ப‌ர்ஸைத்திற‌ந்து. ச‌ண்டையிட்டு மூட் அவுட்டாகி இருக்கும் ச‌ம‌ய‌ங்க‌ளில் ப‌ல‌ரும் இந்த‌ அறிவுரையை கேட்டிருப்போம். 'எப்போதும் வீட்டிலேயே அடைஞ்சி கிட‌க்குறாங்க‌ளே, எங்கியாவ‌து வெளியே கூட்டிட்டுப்போங்க‌.. ரிலீ.:பா இருக்கும். அதோட‌ ச‌ண்டையும் சமாதா‌னம் ஆன மாதிரி ஆச்சுது.' நானும் ப‌ல‌ த‌ட‌வைக‌ள் இதைக்கேட்டிருக்கிறேன். இப்போது அதை சிந்திக்க‌த்துவ‌ங்கினேன். நாமும் இந்த‌ ஆ.:பீஸில் பார்த்த‌ முக‌ங்க‌ளையே எத்த‌னை நாட்க‌ள்தான் பார்த்துக்கொண்டிருப்ப‌து, லீவு போட்டு நிறைய‌ நாட்க‌ளாகிவிட்ட‌ன‌, நான்கு நாட்க‌ள் கிள‌ம்பிவிட‌ வேண்டிய‌துதான். திட்ட‌மிட்டேன். எங்கே போக‌லாம்? 'ம‌லைப்பிர‌தேச‌மா போனா ந‌ல்லாயிருக்கும், குளிர்ப்பிர‌தேச‌ம் இன்னும் ந‌ல்ல‌து' ப‌ட்ஜெட்டையும் பார்க்க‌ வேண்டிய‌துள்ள‌தே.! க‌டைசியில் ஊட்டி என்று முடிவுசெய்து, கோவைக்கு டிக்கெட்டையும் இன்டெர்னெட்டிலேயே முன்ப‌திவு செய்தேன்.

புக் செய்துவிட்டு எப்படி லீவு போட‌லாம், என்ன‌ கார‌ண‌ம் சொல்ல‌லாம்.. உண்மையை சொல்ல‌லாமா என்று யோசித்த‌வாறே வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ராஜ‌ன் கேபினுக்குள் வ‌ந்தார்.

'என்ன‌ ராஜ‌ன்.. ஒருவார‌ம் லீவு போட்டுருந்தீங்க‌ அதுக்குள்ள‌ வ‌ந்துட்டீங்க‌..'

'நீ வேற‌ கேகே, ஆஸ்ட‌ர் ரிப்போர்ட்ட‌ அனுப்பிச்சியா, இல்லியா?'

'அனுப்பிச்சு மூணு நாளாவுது அத‌ விடுங்க‌ ராஜ‌ன், என்ன‌ சீக்கிர‌ம் வ‌ந்துட்டீங்க‌ அத‌ச்சொல்லுங்க‌ முத‌ல்ல‌..'

'உட‌மாட்டியே, அது.. வீட்டுக்காரியையும் கூட்டிக்கிட்டு கொடைக்கான‌ல் போனேன்ப்பா, அதான் உங்கிட்ட‌ சொல்லிட்டுதானே போனேன்'

'அதான் தெரியுமே, விஷ‌ய‌த்துக்கு வாங்க‌'

'போன‌ இட‌த்துல‌ பிர‌ச்சினையாயிருச்சு, போன‌ மொத‌ நாளே ச‌ண்டை வ‌ந்துருச்சி, உட‌னே கிள‌ம்ப‌ணும்னுட்டா.. வ‌ர்ற வ‌ழியில‌ ம‌துரையிலேயே அவுங்க‌ வீட்டுல‌ இருந்துகிட்டு வ‌ர‌மாட்டேங்கிறா.. கிட‌ன்னு உட்டுட்டு வ‌ந்துட்டேன், கொஞ்ச‌ நாளைக்கு போட்டாதான் ச‌ரியா வ‌ருவா..'

'அங்க் போன‌ எட‌த்துல‌ ஏன் பிர‌ச்சினை ப‌ண்ணுனீங்க‌..'

'சும்மா வெறுப்பேத்தாத‌, நானா பிர‌ச்சினை ப‌ண்ணுனேன்? மூணு நாளா அங்க‌ த‌ங்க‌லாம்னு பிளான். முத‌ நாளே அங்குள்ள‌ ஒரு ந‌ர்ஸ‌ரியில‌ ரோஜா செடிக‌ளைப்பாத்துட்டு வாங்க‌ணும்னா, ச‌ரி போகும்போது வாங்கிக்க‌லாம், இப்பவே வாங்குனா எங்க ஹோட்டல்லேயா வச்சுக்கமுடியும்னேன். கேட்டாதானே.. அப்பிடியே பேச்சு வ‌ள‌ந்துடுச்சு.'

இந்த பிரச்சினை எப்படி பெரிய சண்டையா மாறியது என நான் கேட்கவில்லை. இப்போ நான் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

"க‌ன்ப‌ர்ம் டிக்கெட்ட‌ கேன்ச‌ல் ப‌ண்ணினா எவ்வ‌ள‌வு க‌ழிப்பாங்க‌? கிரெடிட் கார்டுல‌ புக் ப‌ண்ணிருக்கேனே.. கேன்ச‌ல் ப‌ண்ணினா ஒழுங்கா ப‌ண‌ம் திரும்பி வ‌ந்துடுமா ராஜ‌ன்?"

(டிஸ்கி :சமீபத்தில் ஒரு பதிவர் தங்கமணி மற்றும் குழந்தையுடன் ஊட்டிக்கு சுற்றுலா போய் வந்தார். அதற்கும் இந்தப்பதிவுக்கும் சம்பந்தமில்லை.)

Friday, September 5, 2008

பதிவுகள் குறித்த தேர்தல் முடிவுகள்.

ஒரு பத்து நாளா தளத்தில் கவனம் செலுத்தமுடியாதபடிக்கு வேலை இருந்தது. ஆனால் முடிந்தவரைக்கும் பிற வலைப்பூக்களில் மேய்ந்தேன். ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. கொட்டிக்கிடக்குது ஆயிரமாயிரமாய்.! வலைப்பூக்கள்தான் எத்தனை வகைகளடா அதில்தான் மொக்கைகள் எத்தனை வகைகளடா.. மேலும் எத்தனை விதமான சென்டிமென்ட்கள், எத்தனை விதமான அனுபவங்கள், எத்தனை விதமான ரசனைகள், எத்தனை விதமான கருத்துச்செறிந்த கட்டுரைகள்.

சிலர் நிஜமாகவே படிக்கப்படிக்க சுவையான பலவிதமான பதிவுகளைத் தருகின்றனர் (பெய‌ரைச்சொன்னால் சிலர் விட்டுப்போக‌ நேரிடலாம், அதனால் வருத்தம் வந்து சேரும். மேலும் நான் பார்த்தது கையளவே, இன்னும் கடலளவு பாக்கியிருக்கிறது). பலரோ தாங்கமுடியாத அளவில் பிளேடு போடுகிறார்கள், நாலு வரிகளுக்கு மேல் படிக்கவே முடியவில்லை. (அவற்றையெல்லாம் மொக்கையென்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. அந்த வார்த்தைக்கு இப்போ நல்லபடியான அர்த்தம் கிடைத்திருக்கிறது அல்லவா? சரி.. காக்கைக்கும் தன்பதிவு, பொன்பதிவு இல்லையா? அவர்கள் திருப்திக்கு அவர்கள் எழுதுகிறார்கள், இப்ப நீ இல்லையா? என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். பெயரைச் சொன்னால் வருத்தத்தோடு சேர்ந்து ஆட்டோவும் வரக்கூடும் என்பதால் தவிர்க்கிறேன்).

மேலும் சில‌ர் என்ன‌ எழுதினாலும், கூட்ட‌மும் பின்னூட்ட‌மும் அலைமோதுகிற‌து. சில‌ர் என்ன எழுதினாலும் சீண்ட‌ நாதியில்லை. அவ‌ர்க‌ளுக்கு நாலு பின்னூட்ட‌ம் வ‌ந்தால் ந‌ன்றி சொல்லி எட்டு பின்னூட்ட‌ம் போடுகிறார்க‌ள். சில பதிவுகளில் பதிவை விட பின்னூட்டம் சுவையாக இருக்கிறது. சிலர் எதிர்பார்க்காத நேரங்களில் பின்னூட்டமிட்டு உற்சாகத்தை ஏற்படுத்தி பின்னர் காணாமல் போய் காயவைக்கின்றனர். சில‌ர் முப்பது நாளில் மூணு ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் தரமற்றவை உண்டு). சில‌ர் மூணு நாளில் ‌முப்ப‌து ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் த‌ர‌மான‌வை உண்டு). சில‌ர் ரொம்ப‌ அட‌க்க‌ம். சில‌ரோ ஆர்ப்பாட்ட‌ம். பதிவுகளை சூடாக்குகிறேன் பார் என்று மொக்கைப் பேர்வழிகளெல்லாம் தனது சப்பைப்பதிவுகளுக்கு பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் 'ஏடாகூடமாய்' தலைப்பு வைத்து சாவடிக்கிறார்கள். அப்புறம் தொடர்பதிவு... சரி, ச‌ரி.. இந்த ஹிஸ்டரியெல்லாம் எதுக்கு இப்ப.. ஏற்கனவே தெரிஞ்சதுதானே, இப்ப‌ என்ன‌ங்கிறீங்க‌ளா?..

ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ந்துட‌றேன். நிறைய‌ பேர் த‌ன‌து த‌ள‌ங்க‌ளில் ஒரு ஓர‌மாய் த‌ன‌க்கு பிடித்த‌ விஷ‌ய‌ங்க‌ளில் தேர்த‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள் அமைதியான‌ முறையில். என‌க்கும் அதைப்பார்த்த‌தும் நாமும் ஒரு மெகா தேர்தல் ந‌ட‌த்தினால் என்ன‌ தோன்றி, "வாச‌க‌ர்க‌ளின் ம‌ன‌தைப்புரிந்து கொள்கிறேன் பார்" என்று ஒரு மூன்று கேள்விக‌ளைக் க‌ள‌த்தில் வைத்தேன். ஆனால் பாருங்கள். நான் அறிவித்த‌திலிருந்து (3 நாட்க‌ள் தேர்த‌லை நீட்டித்தும் கூட) பத்து நாட்களில் சுமார் 600 ஹிட்டுக‌ளும் குறைந்த‌ப‌ட்ச‌ம் 80 ஓட்டுக‌ளும்தான் வ‌ந்திருக்கின்ற‌ன. எவ்வளவோ கெஞ்சியும், மிரட்டியும் பார்த்துவிட்டேன். வந்தவர்கள் பெரும்பாலும் ஓட்டு போடவில்லையா? அல்லது வந்ததே இவ்வளவு பேர்தானோ என்று ஒரே சந்தேகமாக ஆகிவிட்டது. அப்புற‌ம்தான் யோசித்தேன் இது நிறைய‌ ஹிட்டுக‌ள் வாங்க‌க்கூடிய‌ யாராவ‌து பண்ணியிருக்க‌ வேண்டிய‌ வேலை என்று. ச‌ரி செய்துவிட்டு பிற‌கு சிந்திப்ப‌து ந‌ம‌க்கு என்ன‌ புதிதா? என்று ச‌மாதான‌ம் செய்துகொண்டேன்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம் என்று நினைத்துக்கொண்டு தேர்த‌ல் முடிவுக‌ளை பார்த்துக்கொள்ளுங்க‌ள். முத‌ல் கேள்வி சொந்த‌க்க‌தையாக‌ இருந்தாலும், பின்னிரு கேள்விக‌ள் உங்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌ட‌லாம்.!

காமெடி,மொக்கை,க‌லாய்த்த‌ல் ப‌திவுக‌ளே 51% வாக்குக‌ள் பெற்று முத‌லிட‌ம் பிடித்திருக்கிற‌து என்ப‌து நாம் அறிய‌ வ‌ரும் ம‌கிழ்ச்சியான‌ சேதி. கூடுத‌லாக‌ 36% பேர் எப்போதுமே பின்னூட்ட‌மிடுவ‌தில்லை என்றும் 16% பேர் அத்திபூத்தாற்போல‌ பின்னூட்ட‌மிடுவேன் (ப‌ன்னிர‌ண்டு நாட்க‌ளுக்கு ஒருமுறை?) என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்க‌ள்.


Thursday, September 4, 2008

கடலுக்குள் கடுகைப்போட்ட சாதனை!

காலையில் லேட்டாக எழுந்து அவசர அவசரமாக பேப்பரைப்பார்த்துவிட்டு ரமா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு ஆ.:பீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது கண்ணனிடமிருந்து போன் வந்தது.

'என்னடா?' என்றேன்.
'பேப்பர் பாத்தியா?'
'பார்த்தேனே, ஏதாவது முக்கியமான விஷயமா? மிஸ் பண்ணிட்டேனா..'

இப்பிடித்தான் பேப்பர் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது டிஸ்கஸ்/இன்பார்ம் பண்ண‌ லைவ்வாக கூப்பிடுவான்.

'ஒண்ணும் இல்ல, தசாவதாரம் விளம்பரத்த பாரு..'
மீண்டும் பேப்பரைத்திறந்தேன், விளம்பரத்தைத்தேடி.. பார்த்தேன்.

"இந்தப்படத்தின் சாதனை
கடலுக்குள் கடுகு போட்டு
தேடி கண்டு பிடிப்பதற்கு சமம்"


என்று எழுதியிருந்தார்கள்.
'அதுக்கென்ன இப்போ' என்றேன்.
'இல்ல, என்ன‌ அர்த்த‌ம்னு தெரிஞ்சுக்க‌லாம்னு..'
'க‌ட‌லுக்குள் போட‌ப்ப‌ட்ட‌ க‌டுகை எடுப்ப‌து எவ்வ‌ளவு பெரிய‌ சாத‌னையோ அதற்கு இணையான‌ சாத‌னை என்று அர்த்த‌ம்.'
'கடலுக்குள் போடப்பட்ட கடுகை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இப்படத்தில் என்ன சாதனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் என்றுதான் எனக்கு விளங்குது'
'காலைலேயே என்ன‌ வெறுப்பேத்துறியா, ஆ.:பீஸுக்கு கிள‌ம்ப‌லியா இன்னும்?'
'நான் ஏதாவது அறிவுப்பூர்வமா கேட்டால் மட்டும் உனக்கு உடனே கோவம் வந்துருமே, சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' என்று சொல்லிவிட்டு போனை க‌ட் பண்ணினேன்.

நான் சொல்வ‌து ச‌ரியா, இல்லை அவ‌ன் சொல்வ‌து ச‌ரியா என்று நீங்க‌ளே சொல்ல‌லாம். ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் கீழ்க்க‌ண்ட‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில் சொல்ல‌லாம்.

ப‌ட‌ம் வெளியான‌ இர‌ண்டாவ‌து நாளே 'வ‌சூல் ம‌ழை பொழிகிற‌து' என்று விள‌ம்ப‌ர‌ம் செய்கிறார்க‌ள். இத‌ற்கு 'எங்க‌ளுக்கு நிறைய‌ ப‌ண‌ம் கிடைத்திருக்கிற‌து, நீங்க‌ளும் வ‌ந்து ப‌ண‌ம் கொடுங்க‌ள்' என்றுதானே அர்த்த‌ம். ப‌திலாக‌ அத‌ன் உள்ள‌ர்த்த‌மான‌ 'நிறைய‌ கூட்ட‌ம் வ‌ருகிற‌து, ஆக‌வே இது ந‌ல்ல‌ ப‌ட‌ம் போல‌த்தான் தெரிகிற‌து, என‌வே நீங்க‌ளும் வ‌ந்து பாருங்க‌ள்' என்று ஏன் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌வ‌தில்லை?

இவ்வ‌ளவு செல‌வு செய்து க‌லைய‌ம்ச‌ம் மிக்க‌ ப‌ட‌ங்க‌ள் எடுப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ வாச‌க‌ங்க‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் மொக்கை ப‌ஞ்ச் வ‌ச‌ன‌ங்க‌ளையும், அதையும் மூன்று வ‌ரிக‌ளுக்கு ஏழு த‌வ‌று என்ற‌ அடிப்ப‌டையிலும் வெளியிடுவ‌து ஏன்? (குறைந்த‌ப‌ட்ச‌ம் அதை ப‌த்திரிகைக‌ள் கூட‌ க‌வ‌னிக்காம‌ல் யாருக்கோ வ‌ந்த‌ விருந்து போல‌ இருப்ப‌து ஏன்?)

உதார‌ணங்கள் :
1.(இரண்டாம் நாள் விளம்பரம்) இதுவறை கன்டிராத மாபெறும் வெற்றி! அதிற‌டி வெற்றி! அடித‌டி வெற்றி!
2. கற்ப்புக்கு புதிய விளக்கம், தாய்ம்மார்க‌ள் கொன்டாடும் மூன்றாது நாள்!3.இந்த ஆன்டின் இனையற்ற ஹிட்டு! இளஞர்கள் பேற்றும் 'நாக்க‌ ந‌க்க' பாட்டு!

Monday, September 1, 2008

கால் ஆ.:ப் டியூட்டி -4

இது நிஜமாகவே தங்கமணியைப்பற்றிய பதிவு அல்ல. ஏதாவது சொல்வானா என்று எதிர்பார்ப்பவர்கள் ஏமாறக்கூடும். எனக்கு நிரம்பவும் பிடித்தமான ஒரு விஷயத்தைப்பற்றி சொல்லப்போகிறேன். அது கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் மாய உலகத்தைப்பற்றியது. எனக்கும் என் தம்பிக்கும் ரொம்ப காலமாகவே கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றால் மிகவும் ஆர்வம். வெறி என்று கூட சொல்லலாம். எங்கேயாவது சென்டர்களிலோ, நண்பர்கள் வீட்டிலோ கிடைக்கும் கொஞ்ச நேர ‌வாய்ப்பில் திருப்தியுறாமலே விளையாடிவிட்டு வருவோம். கேம்ஸ்களே லோட் செய்யாமல் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களை 'இவனெல்லாம் கம்ப்யூட்டர் வெச்சுக்கலைனு யார் அழுதா?' ன்னு மனசுக்குள்ளேயே திட்டிவிட்டு வருவோம்.

பொறுப்புகள் இருந்தமையால் அவ்வளவு சீக்கிரம் எங்களால் வாங்கிவிட முடியவில்லை. இதற்காகவே பிளான் செய்து தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தோம். முதலில் பிளேஸ்டேஷன் 2 வாங்க முடிந்தது, அருமையான அனுபவம். ஆனாலும் வெரைட்டி கிடைக்காததால் மீண்டும் கம்ப்யூட்டருக்கான நாளை எண்ணிக்கொண்டிருந்தோம். சென்ற வருடம் அந்த நாளும் வந்து மிக நல்ல தரத்தில் செலவைப்பார்க்காமல் வாங்கி வந்தோம். வந்ததிலிருந்து விதம்விதமான கேம்ஸ்களை லோட் செய்து விளையாடி மகிழ்ந்தோம். இணையதள‌ இணைப்பு கூட மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் இருக்கிறேன். ஆனால் கேம்கள் மீது அப்படியொரு ஈடுபாடு.

Tombraider, Farcry, Resident evil, Crysis, Bioshock, Pearlhorbor, NBA, Criket, Football, RFB, WIC, Surf-up, Shrek, Burnout, Railroad, Flight simulator.. என விதவிதமான கேம்கள். ஷூட்டர், ரேஸ், விளையாட்டு, அட்வென்சரஸ் என விதவிதமான கதைக்களங்கள்.

இவற்றில் மறக்க இயலாத, நான் மிக ரசித்த கேம் எது என உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இதை எழுதுகிறேன். எல்லோருக்குமே இந்த சப்ஜெக்ட் பிடிக்குமா தெரியவில்லை. வன்முறை என்று வாதாடுகிறவர்களும் இருக்கிறார்கள். எனக்கும் ஓரளவு அதில் ஒப்புதலிருந்தாலும் வேறுபல முக்கிய‌ விஷயங்களும் இருக்கின்றன என்றே கருதுகிறேன்.
கால் ஆ.:ப் டியூட்டி -4


ஷூட்டர் வகையைச்சார்ந்த இது மற்ற கேம்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்னைக்கவர்ந்த சிறப்பம்சங்கள் என்ன?

1. அதிஅற்புதமான கிரா.:பிக்ஸ் காட்சியமைப்புகள்.
2. மிக அழகான திரைக்கதை.
3. புத்திசாலித்தனமான சக வீரர்கள் மற்றும் எதிரிப்படை.
4. தேவையான இடங்களில் SAVE POINTS.
5. விதவிதமான சாகசங்கள்.
6. மொத்தமாக 10 லிருந்து 15 மணி நேரத்தில் முடித்துவிடக்கூடிய அளவில் சிறிய கேம்.

இவற்றைத்தவிர இன்னும் பல சிறப்பம்சம்கள். மேற்கூறிய விஷயங்கள் இதுவரை நான் எந்த கேம்களிலும் பார்த்திராதவை. இத்தகைய கேம்களில் ஏதோவொன்றை நோக்கிய அல்லது இலக்கில்லாத பயணமாகவே பெரும்பாலான கதைகள் அமைக்கப்படுகின்றன, அதைப்போலில்லாமல் இதில் மிகத்தெளிவான ஒரு கதைக்களம்.

சில சமயங்களில் சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகத்தைக்கொடுக்கிறது. கொட்டும் மழையில் ஹெலிகாப்டரிலிருந்து கப்பலில் குதிக்கும் காட்சியில் துவங்கி, .:பிளாஷ்பேக்கில் தரையோடு தரையாக முட்டளவு புல் வளர்ந்திருக்கும் வனாந்திரத்தில் நாம் பதுங்கியிருக்க நம் அருகிலேயே நம்மைக்கவனிக்காமல் செல்லும் ஒரு பெரிய படை, ஜீப்பில் சேஸிங், கிளைமாக்ஸில் குண்டு வெடித்து தூக்கியெறியப்பட்ட நிலையிலும் சக வீரனால் (கேப்டன்) தள்ளிவிடப்படும் ஒரு சிறு துப்பாக்கியால் தீவிரவாத கும்பலின் தலைவனை சுட்டு வீழ்த்துவது என கதையோடு இணைந்து பின்னணி கிராபிக்ஸ் காட்சிகள் உச்சத்தைத்தொட்டிருக்கின்றன. பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.

பிற கேம்களைப்போல எந்த நேரமும் சுட்டுக்கொண்டிருக்காமல் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் சுவாரசியம் குன்றாமல் நம்மைக் கட்டிப்போடுகின்றன. சக பாத்திரங்களின் உடலசைவுகள் ஏறக்குறைய‌ மனிதர்களைப்போலவே இருக்குமளவில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் புகுந்து விளையாடியிருக்கிறது.

கேரக்டர்களின் இன்டெலிஜன்ஸ் இதுவரை பார்த்திராத ஒன்று. உதாரணமாக கிரிக்கெட்டில் ரன் எடுக்க ஓடும் பேட்ஸ்மேன், ஓடிவிட்டு ஒரு பொம்மையைப்போல அதே திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருப்பான். பந்தை எடுக்க ஓடும் கீப்பரோ செஷன் முடிந்துவிட்டால் அவன் இடத்துக்கு வராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பான். ஷூட்டர் கேம்களில் உதாரணமாக உள்பக்கம் கதவில்லாத‌ அறையிலிருந்து எதிரிகள் வந்துகொண்டேயிருப்பார்கள், லாஜிக் இடிக்கும். கேரக்டர்கள் சுவரிலோ, பொருட்களிலோ உரசிக்கொண்டு நேர்கோட்டில் பயணிப்பார்கள். இதில் சக வீரர்களும், எதிர் வீரர்களும் ஒளிந்து கொள்ளும் பாங்கு, அட்டாக் செய்யும் லாவகம் பிரமிக்கச்செய்கிறது.

கடைசியாக.. விளையாடும் நேரம், சில கேம்களில் நாட்கணக்கில் விளையாடினாலும் விடைதெரியாமலே முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும். சிலவற்றில் சில இடங்களை தாண்ட முடியாதவாறு சிக்கலில் மாட்டி மேலும் தொடர்ந்து விளையாடமுடியாமல் போகும். இதில் அப்படியெல்லாம் இல்லை. தேவையான இடங்களில் வழிகாட்டுதல்கள், save பாயிண்ட்ஸ் என தெளிவான விளையாட்டு.

கால் ஆ.:ப் டியூட்டி -4, ஒரு ட்ரெய்னிங் ஆபரேஷன், அழகாய் பிரிக்கப்பட்ட மூன்று மெயின் ஆபரேஷன்கள் (ஒவ்வொன்றிலும் மூன்றல்லது நான்கு சப்‍செஷன்கள்) என நிறைவான பிரம்மிக்கத்தக்க நெஞ்சைவிட்டகலாத‌ ஆக்ஷ‌‌ன் அனுபவம்.