Friday, October 31, 2008

அப்டியே ஷாக்காயிட்டேன்.!

சமீபத்தில் ஒரு நாள் நண்பரின் காரில் வெளியே சுற்றிவிட்டு திரும்ப வீட்டுக்கு வருகையில் வீடு வரை வரமுடியாமல் டைடல் பார்க்கிலேயே இறக்கிவிட்டு போய்விட்டார். அவருக்கு என்ன அவசரமோ? இருப்பினும் எனக்கு லேசாக உள்ளுக்குள் கோபம் வந்தது. யாரையுமே நம்பக்கூடாது. நமது பைக்கை எடுத்துக்கொண்டு வந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்குமா? என்று வெளியாகிய குமுறலை அடக்கிக்கொண்டேன். எத்தனை நாள் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டிருப்பார். ஒருநாள் பாதிவழியில் இறக்கிவிடுவதற்கு காரணம் ஏதாவது இருக்கும் என நினைத்து என்னை தேற்றிக்கொண்டேன்.

ஆட்டோ பிடித்து விடலாமா? ரமா நினைவுக்கு வந்தாள். இத்தனை பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் இருக்கும் போது ஒரு ஆளுக்காக ஆட்டோ பிடிப்பது என்பது ஊதாரித்தனம். இரண்டல்லது மூன்று பேரென்றாலோ, உடல் நலமில்லாதபோதோ, ஏதோ மிக‌ அவ‌ச‌ர‌மென்றாலோ அதில் ஒரு நியாய‌மிருக்கிற‌து. ப‌ல்லை ந‌ற‌ந‌ற‌வென்று க‌டித்தாள்.

ஷேர் ஆட்டோவை நினைத்தாலே வ‌யிற்றைக்க‌ல‌க்கிய‌து. ஒரு ஆள் ம‌டியில் இன்னொரு ஆளை உட்கார‌வைத்து புளிமூட்டையைப்போல‌ அடைத்து கிட்ட‌த்த‌ட்ட பாதி ஆட்டோ காசை வேறு பிடுங்கிவிடுகிறார்க‌ள். ப‌ஸ்? அப்ப‌டியே லேசா .:பிளாஷ்பேக் மலர்ந்தது. சென்னை வ‌ந்த‌ புதிதில் ஒரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் கிண்டியிலிருந்து 47D, 147 ஆகிய‌ பேருந்துக‌ளில் ப‌ய‌ணித்து அம்ப‌த்தூர் சென்ற‌தும், அப்ப‌டியே என‌து ச‌கிப்புத்த‌ன்மைக்கு அக்னிப‌ரீட்சை ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தும் நினைவுக்கு வ‌ந்த‌து.

இப்ப‌டி யோச‌னையிலேயே ரோடை கிராஸ் பண்ண சிக்னலுக்காக நின்‌ற‌போது ஒரு புத்த‌ம்புதிய‌ MTC ப‌ஸ் வ‌ந்து சிக்ன‌லில் நின்ற‌து. யோசிக்காம‌ல் ப‌ட்டென‌ ஏற முய‌ற்சித்த‌போதுதான் க‌வ‌னித்தேன், க‌த‌வுக‌ள் லாக் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌ன. ஏமாற்றத்தோடு அந்த‌ ட்ரைவரை பார்த்ததில் ஏதோ மனமிறங்கி கதவுகளைத்திறந்தார். உள்ளே ஏறிய‌துமே அப்ப‌டியே ஷாக்காயிட்டேன். என் அலுவ‌ல‌க‌த்தில் கூட‌ என்றுமே நான் உண‌ர்ந்திராத அளவில் ஏசி குளிர். த‌க‌த‌க‌வென‌ இன்டீரிய‌ர். அருகிலிருக்கும் LCD யில் பின்புற‌ டிராபிக்கை டிரைவ‌ர் க‌வ‌னிக்கிறார். ஹைடெக்கான‌ டாஷ்போர்டு. சொகுசு இருக்கைக‌ள். (வெளியூர் பேருந்துகள் பிச்சை வாங்கவேண்டும்) கூட்ட‌மில்லாத‌ த‌ன்மை. இன்னொரு ஷாக். சாதார‌ண‌ ப‌ஸ்க‌ளில் இங்கிருந்து பெருங்குடிக்கு 3 ரூபாய் இருக்குமா? இதில் 6 ரூபாய் இருக்க‌லாம் என‌ நினைத்தேன். கையிலிருந்த‌ அட‌க்க‌மான‌ பிரின்ட‌ரில் ச‌ர‌க்கென‌ 18 ரூபாய்க்கு டிக்கெட்டை பிரின்ட் செய்து கொடுத்தார்.

நாம் சென்னையில்தான் இருக்கிறோமா என்ற‌ அதிர்ச்சியில் திற‌ந்த‌ வாய் மூட‌வில்லை. அத‌ற்குள் பெருங்குடி வ‌ந்துவிட்ட‌து.

******

ச‌மீப‌த்தில் அந்த‌ பிர‌ப‌ல‌ வார‌ இத‌ழின் தீபாவ‌ளி சிற‌ப்பித‌ழை வாங்கினேன். க‌வ‌னிக்க‌வும். தீபாவ‌ளி ம‌ல‌ர் அல்ல‌, சிற‌ப்பித‌ழ்.

மொத்த‌ம் : 148 ப‌க்க‌ங்க‌ள்

விள‌ம்ப‌ர‌ங்க‌ள் : 38.5 ப‌க்க‌ங்க‌ள்

சினிமா ம‌ற்றும் அதைச்சார்ந்தவை : 37 ப‌க்க‌ங்க‌ள்

(இதைத்த‌விர‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 10 ப‌க்க‌ங்க‌ளிலாவ‌து சினிமா, ம‌ற்றும் ந‌டிக‌ர்க‌ள் குறித்த‌ ப‌ட‌ங்க‌ள், துணுக்குக‌ள் என‌ இட‌ம்பெற்றிருந்த‌ன‌. அவ‌ற்றை முழு ப‌க்க‌மாக‌ க‌ன்சிட‌ர் செய்ய‌வில்லை)

த‌விர‌ மீத‌மிருந்த‌ ப‌க்க‌ங்க‌ளில் க‌ணிச‌மான‌ மொக்கைப்ப‌க்க‌ங்க‌ள் த‌விர்த்தும், சில‌ உருப்ப‌டியான‌ க‌ட்டுரைகள் (நில‌வைத்தொட்டு வா, காற்றில் க‌ரையும் உயிர்க‌ள்), நாஞ்சில்நாட‌ன், அஜ‌ய‌ன்பாலாவின் உருப்ப‌டியான‌ ப‌கிர்த‌ல்க‌ள் ஆகியவற்றைக்க‌ண்டு என‌க்கு ம‌கிழ்ச்சியே.!

******

ச‌மீப‌த்தில்தான் JKR'ன் நாய‌க‌ன் ப‌ட‌ம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த‌து. எதிர்பார்த்த‌ சில‌ பில்ட் அப் காட்சிக‌ள், பில்ட் அப் வ‌ச‌ன‌ங்க‌ள், பாடல்கள், சண்டை‌க்காட்சிக‌ளைத் த‌விர்த்துப்பார்த்தால் இத்த‌னை சுவார‌சிய‌மான‌ திரைக்க‌தையும், எதிர்பாராத‌ திருப்ப‌ங்க‌ளையும், இய‌ல்பான‌ காரெக்ட‌ர்க‌ளையும் கொண்ட‌ ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தைப்பார்த்து ரொம்ப‌ நாட்க‌ளாகிற‌து என்றுதான் தோன்றிய‌து. இந்த‌ விஜ‌ய், அஜித் எல்லாம் இதைப்போன்ற‌ இய‌ல்பான‌ (அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ளுக்கு(?) வேண்டிய‌ ஆக்ஷ‌ன் காட்சிக‌ளும் இருக்கிற‌து) திரை‌க்க‌தைக‌ளில் ந‌டிப்பார்க‌ளேயானால் ப‌ட‌மும் பிச்சுக்கும், ந‌ம‌க்கும் ந‌ல்ல‌ திருப்தி. செய்வார்க‌ளா?

Thursday, October 30, 2008

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்

துறை சார்ந்து ஏற்கனவே எழுதிய 'நூறு வித்தியாசங்கள்' என்ற பதிவு நான் எதிர்பார்த்ததையும் விட நல்ல வரவேற்பைப்பெற்றது. அந்த மகிழ்ச்சியில் முடிந்தவரையில் அவ்வப்போது சுவாரசியமான சிற்சில துறை சார் விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்திருக்கிறேன். அவ்வாறாக இது இரண்டாவது பதிவு. முதலில் அடிப்படையிலிருந்து படிப்படியாக முன்னேறிக்கொண்டு வரலாம் என நினைத்தேன். முதல் பதிவு Quality Engineering ன் பாலபாடம். ஆனால் சிக்ஸ் சிக்மா ரொம்ப லேட்டஸ்ட். ஏனிப்படி? பின்னர்தான் யோசித்தேன் நாம்தான் என்ன வாத்தியாரா? அல்லது நீங்கள்தான் எல்லாவற்றையும் வரிசைக்கிரமமாக‌ படித்துவிட்டு ஏதும் பரீட்சை கிரீட்சை எழுதப்போகிறீர்களா? துறை சார் விஷயங்களை எதற்காக எழுதுகிறோம்? அதே துறையிலிருப்போரிடம் ஒரு அறிவுப்பகிர்தலாகவும், பிறருக்கு சுவாரசியமான புதிய செய்தியாகவும் இருக்கக்கூடும் என்பதால்தான் அல்லவா? ஆகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவாரசியமான விஷயங்களை மட்டும் பார்க்கலாம். சரிதானா?

இந்த 'சிக்ஸ் சிக்மா' என்றால் என்ன? எஞ்சினியரிங் துறைகள் மட்டுமல்லாமல் சகல துறைகளிலும் இன்று இந்த வார்த்தையை பலரும் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார்களே.? ஆனால் எவனைக்கேட்டாலும் நேரடியாக பதில் சொல்லாமல் சுத்தி சுத்தி முறுக்கு பிழியறான்களே.? அப்படி என்ன வித்தை இது?

'என்றால் என்ன?' என்ற கேள்வியை விட்டு விட்டு முதலில் 'இதனால் என்ன லாபம்?' என்ற கேள்வியைப் பார்க்கலாம். நாம் தூங்கி விழித்ததில் இருந்து இரவு மீண்டும் தூங்கப்போகும் வரை வீட்டுக்காரியங்கள், அலுவலகக்காரியங்கள் என பல செயல்களை (Process) செய்கிறோம். சரியாகச் சொல்லப்போனால் தூங்குவதும் கூட ஒரு செயலே.! ஒரு தொழிலாளி ஒரு மெஷினை ஓட்டி பொருளைத்தயாரிப்பதும் ஒரு செயல். ஒரு முதலாளி மீட்டிங் ஏற்பாடு செய்து உங்களை திட்டி தீர்ப்பதும் ஒரு செயல். அவரது அழகான செகரட்டரி போன்கால்களை அட்டன்ட் செய்வதும் ஒரு செயல். நாம் பிளாக் எழுதி கிழித்துக்கொண்டிருப்பதும் ஒரு செயல். சரிதானா?

ஒவ்வொரு செயலுக்கும்(Process) ஒரு நோக்கம்(Aim), இடுபொருட்கள்(Input), விளைபொருட்கள்(Output) ஆகியன உண்டு. ஒவ்வொரு செயலும் ஒரு பயனை (Result) எதிர்பார்த்து செய்யப்படுகிறது. அந்த பயன் முழுமையாக கிட்டியதா என்பதுதான் பிரச்சினையே.. அந்த பயனை நாம் 100% என்று வரையறுத்தால் அந்த செயல் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே கேள்வி. நீங்கள் ஒரு செயலைச்செய்கிறீர்கள். எத்தனை சதவீதம் வெற்றி பெற்றால் மகிழ்வீர்கள்? ஒரு 80%? 90%? பெரும்பாலோனோர் 95% வெற்றியடைந்தாலே திருப்தியடைகிறார்கள் என்பது கணிப்பு. நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என வைத்துக்கொள்வோம். (நானெல்லாம் 60% நடந்தாலே போதும்டா சாமின்னு சந்தோஷமாயிருவேன்).

இப்போது ஒரு சின்ன கேள்வி. ஒரு விமானம் எழுவதும் (Take-off), இறங்குவதும் (Landing) இரண்டு செயல்கள். நமது சென்னை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 விமான எழுதல்கள் (Take-offs) நிகழ்கிறது. 95% சதவீத செயல் வெற்றி போதும் எனில்........... ஒரு நாளைக்கு 10 விமான விபத்துகள்.!

கற்பனை செய்தும் பார்க்கமுடியமா நம்மால.?

அதிக‌ பட்சமாக 99% வெற்றி என்று கொண்டாலே ஒரு நாளில் 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகும். சென்னையில் மட்டும் 2 விபத்துகள் எனில் நாடெங்கும்.? உலகமெங்கும்.? (ஒரு நாளில் உல‌க‌ம் முழுதும் சுமார் 80987 விமான‌ங்க‌ள் Take off ஆகின்ற‌ன‌) அப்படியானால் என்ன செய்வது? 100% வெற்றி வேண்டும் நமக்கு.! ஆனால் நூறு சதவீத வெற்றி சாத்தியமா? சாத்தியமில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியானால் நூறை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிட்டத்தில் நெருங்கிவிடவேண்டும்.

'சிக்ஸ் சிக்மா' நமக்கு தருவது 99.9997% வெற்றி.

டிஸ்கி : ஆரம்பிக்கறதுக்குள்ளாகவே பதிவு முடிஞ்சு போச்சே.. இதே போதும் போலவும் தோன்றுகிறது. பின்னூட்டக்கருத்துகளைப் பொறுத்தே இரண்டாம் பாகம் போகலாமா? வேண்டாமா என்று முடிவு செய்வேன்.

Tuesday, October 28, 2008

ஒரு ஜூலை மாத‌த்து ஞாயிற்றுக்கிழ‌மை (முடிவு)

முத‌ல் ப‌குதி

அறைக்குள் ஆட்கள் வரப்போவது போன்ற அரவம் கேட்க கண்களை மூடிக்கொண்டேன். மெதுவாக ஆட்கள் உள்ளே வந்ததை உணரமுடிந்தது. இரண்டு பேரிருக்கலாம். ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள். ஒரு பெண் குரல். ஒரு ஆண் குரல். மிக மெதுவாகவும், மிகக்குறைவாகவும் அவர்கள் பேசிக்கொண்டதால் சரியாக அர்த்தம் விளங்கவில்லை. பயத்தில் என் நெஞ்சு வேகமாக துடித்தது எனக்கே கேட்டது. கண்களை மூடிக்கொண்டு நடிப்பதால் எந்த பயனுமில்லை எனவும் அதைவிடவும் ஆட்கள் யாரென பார்த்துக்கொண்டாலாவது ஏதாவது ஐடியா கிடைக்கும் என தோன்றியது. மெதுவாக விழித்தேன்.

அந்த ஆண் எனக்கு முதுகைக்காட்டியும் அந்தப்பெண் என்னை நோக்கியும் நின்றுகொண்டிருந்தனர். அந்தப்பெண்ணின் முகம் கொடூரம் நிறைந்ததாய் மிகப்பயங்கரமானதாக இருந்தது. அடுத்த நிமிடமே அந்த பெண் என்னைப்பார்த்துவிட்டாள். அதை அந்த ஆணிடம் சுட்டிக்காட்டி என்ன அதற்குள் விழித்துவிட்டானே என்பது போல கேட்டாள். இருவரும் என்னை நோக்கினார்கள். நான் உச்ச கட்ட பயத்தில் அவர்களை நோக்கி கைகளாலேயே கெஞ்சி என்னை விட்டு விடும்படி சைகை செய்தேன். அவர்கள் அதை அலட்சியம் செய்துவிட்டு மீண்டும் மிக மெல்லிதாக பேசிக்கொண்டார்கள்.

அந்த ஆண் என் பார்வைக்கு எட்டாத‌ என் த‌லைக்கு பின்புற‌மிருந்த‌ மேஜையிலிருந்து ஒரு ஊசியை எடுத்து அதில் ஏதோ ஒரு ம‌ருந்தை எடுத்து என் தோள்பட்டையில் போட ஆரம்பித்தான் ஒரு டாக்ட‌ரின் லாவ‌க‌த்தோடு. இவ‌ன் ஒரு டாக்ட‌ரா? ந‌ம்ப முடிய‌வில்லை. இருக்க‌லாம். அப்போது ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ ஒருவ‌ன் க‌த்திக்கொண்டே அந்த‌ அறைக்குள் ஓடி வ‌ந்தான்.

ம‌றுநாள் சென்னையின் பிர‌ப‌ல‌ நாளித‌ழ்க‌ளில் கீழ்க்க‌ண்ட‌ செய்தி வெளியாகியிருந்த‌து.

சென்னை எஞ்சினீய‌ர் ராய்ப்பூரில் உயிருக்கு ஆப‌த்தான‌ நிலையில் மீட்பு

ஜூலை 17 : தொட‌ர்ந்து த‌மிழ‌க‌ம் ம‌ற்றும் கேர‌ளாவிலிருந்து காணாம‌ல் போய்க்கொண்டிருக்கும் இள‌ம்பெண்க‌ளை க‌ண்டுபிடிப்ப‌த‌ற்காக‌ அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ சிற‌ப்புக்காவ‌ல் ப‌டையின‌ர் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ பீகார், ச‌ட்டீஸ்க‌ர் உள்ளிட்ட‌ மாநில‌ங்க‌ளில் தீவிர‌ தேடுத‌ல் வேட்டையில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். இந்த தேடுதலின் போது எதிர்பாராத‌வித‌மாக‌ பிலாய் ந‌க‌ரின் ஒரு ஹோட்டலில் உட‌லுறுப்புக‌ளுக்காக‌ ஆட்க‌ட‌த்த‌லில் ஈடுப‌ட்டிருந்த‌ ஒரு கும்ப‌லையும், அவ‌ர்க‌ளிட‌ம் சிக்கிக்கொண்டிருந்த‌ நான்கு இளைஞ‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌தின்மூன்று சிறுவ‌ர்க‌ளையும் மீட்ட‌ன‌ர்.

இவ‌ர்க‌ளில் சென்னை அண்ணாந‌க‌ரைச் சேர்ந்த‌ ர‌ம‌ண‌ன் (27) என்ற‌ எஞ்சினீய‌ரும் ஒருவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இவ‌ர் ப‌ணி நிமித்த‌மாக‌ பிலாய் சென்றிருந்த‌போது இந்த‌ கும்ப‌லிட‌ம் சிக்கிக்கொண்ட‌தாக‌ தெரிகிற‌து. இவர் ஆப‌த்தான‌ நிலையில் சென்னை கொண்டுவரப்பட்டு அரசு பொது ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சைய‌ளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிறார்...

ஒரு ஜூலை மாத‌ ஞாயிற்றுக்கிழ‌மை.

யாரோ கழுத்தைப்பிடித்து இறுக்குவதைப்போல போல உணர்ந்தேன். மூச்சு விட முடியவில்லை.. கத்த முனைந்தேன். குரல் எழும்பவேயில்லை.. கைகளை கட்டிலில் அடித்துக்கொண்டு விழித்தேன். சே.. கனவு.

இப்போது மெதுவாக எழ முயன்றேன், ம்.. இப்போதும் முடியவில்லை. சத்தமெழுப்ப முயன்றேன். நிஜமாகவே ஒரு முனகலைக்கூட எழுப்பமுடியவில்லை. அதிர்ந்து போனேன். இது கனவில்லையா.? கைகால்களை அசைக்கமுடிந்தது. ஆனால் எழமுடியவில்லை. முயன்றால் முடியுமோ? கழுத்துப்பகுதிதான் இருப்பது போலவே தெரியவில்லை. சுத்தமாக உணர்ச்சியின்றியிருந்தது. தலையை தூக்கமுடியவில்லை. மிக லேசாக இடது வலதாக அசைக்கமுடிந்தது. மீண்டும் வாயைத்திறந்து குரலெழுப்ப முயன்றேன். இல்லை. ஒரு முனகல் சத்தம் கூட எழவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிற‌து எனக்கு? எங்கே இருக்கிறேன்? தாக்கப்பட்டிருக்கிறேனா? கழுத்துப்பகுதி முழுதும் மரத்துப்போகும்படி ஏதாவது ஊசி போடப்பட்டிருக்கிறதா? பயம் உடலெங்கும் ஊர்ந்தது. அழுகை வந்தது. நான் கட்டிப்போடப்படவில்லை. கைகளால் முகத்தைத்தொட்டுப்பார்க்கமுடிந்தது. வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்.

இது எந்த இடம்? ஏதாவது செய்யமுடியுமா? பயத்தில் சிந்திக்கவே முடியவில்லை. ஏதோ ஒரு லாட்ஜ் அறை போல இருக்கிறது. இருள். மெல்லிய இரவுவிளக்கின் ஒளி எங்கிருந்தோ வந்துகொண்டிருந்தது. சூழலே மிகத்தவறாக, சமூக விரோத செயல்கள் நடக்கும் இடம் போல உணரமுடிந்தது. நம்மைக்கடத்தி வைத்திருக்கிறார்கள். கட்டி வைப்பதற்கு பதிலாக கழுத்துப்பகுதியை என்னவோ செய்து எழுந்து போகமுடியாதபடியும், கத்தமுடியாதபடியும் ஆக்கிவைத்திருக்கிறார்கள். யார்? என்ன பண்ணப்போகிறார்கள்? கைகளால் கழுத்தை தொட்டுப்பார்த்தேன். கைகளால் உணரமுடிந்தது, கழுத்தால் உணரமுடியவில்லை. காயங்கள் இருப்பது போல தெரியவில்லை. தலைப்பகுதி, நெற்றி, முகத்தை ஓரளவு உணரமுடிந்தது. கேள்விகள் பயங்கரமாக என்னிலிருந்து கிளம்பிக்கொண்டேயிருந்தது. பயத்தில் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

கடைசியாக என்ன நினைவிலிருக்கிறது? இப்போ என்ன நேரம்? செல்போன் எங்கே? இரண்டு கைகளாலும் இரண்டுபுறமும் முடிந்தவரை தேடினேன். எதுவுமே அகப்படவில்லை. தலையை சாய்த்து படுக்கையில் என்ன இருக்கிற‌து என பார்க்கமுடியவில்லை. சீலிங்கை நோக்கியவாறு மிகச்சரியாக மல்லாக்க படுக்கவைக்கப்பட்டிருந்தேன். கட்டிலுக்கு நேரேயில்லாமல் .:பேன் சிறிது வலப்புறமாக ஒதுங்கியிருந்தது, மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. இங்கு எப்படி வந்தோம்? எளிய ஒரு பேக்குடன் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து கிளம்பினோம். சனிக்கிழமை மதியம்.. இன்று என்ன கிழமை?.. நாக்பூரில் இறங்கி ஒரு பிரைவேட் பஸ்ஸில் ராய்ப்பூரை நோக்கி கிளம்பினேன். இறங்கவேண்டிய பிலாயில் ஞாயிறு அதிகாலையே இற‌ங்கிய‌தும் நினைவிருக்கிற‌து. இத‌ற்கு முன்பே சில‌ த‌ட‌வைக‌ள் ப‌ணி நிமித்த‌மாக‌ ராய்ப்பூருக்கு வ‌ந்திருந்தாலும், ராய்ப்பூருக்கு முன்பே பிலாயில் இற‌ங்குவ‌து இதுவே முத‌ல் முறை. நாத‌ன் ஒரு ஹோட்ட‌ல் பெய‌ரை த‌ங்குவ‌தற்கு சொல்லியிருந்தார். அங்கே அந்த‌ அதிகாலை நேர‌த்தில் அந்த ஹோட்டலில் அறைக‌ள் இல்லை என்று சொல்லிவிட்ட‌தால் வேறு ஏதோ அந்த‌ நேர‌த்துக்கு அறை இருந்த‌ கொஞ்ச‌ம் ஒதுக்குப்புற‌மான‌ ஒரு ஹோட்ட‌லில் அறை எடுத்து த‌ங்கினேன். முந்தின‌ நாளில் ஹை‌வேஸ் உண‌வ‌க‌த்தில் உண்ட‌ உண‌வு வ‌யிற்றை ஏதோ செய்த‌ப‌டியிருந்த‌தாலும், நிர‌ம்ப‌வும் சோர்வாக‌ உண‌ர்ந்த‌தாலும் அப்ப‌டியே அறையில் நுழைந்த‌வுட‌ன் ப‌டுக்கையில் நுழைந்த‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.

அந்த‌ அறைதானா இது.? நிச்ச‌ய‌மாக‌ இல்லை.க‌ண்க‌ள் செருகிக்கொண்டு வ‌ந்த‌து. என்ன‌ ந‌ட‌க்கிற‌து? ப‌சியும் ம‌ய‌க்க‌மும் என்ன‌வோ செய்த‌து. அது நாம் வ‌ந்த‌ அதே ஞாயிறு இர‌வுதானா? அல்ல‌து மேலும் நாட்க‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன‌வா? ஏதாவது செய்யவேண்டும். கால்க‌ளை ந‌க‌ர்த்தி ப‌டுக்கை விளிம்பை அழுந்தப்பிடித்தவாறே எழ‌ முய‌ன்றேன். ம்.. வீண் முய‌ற்சி. க‌ண்டிப்பாக‌ த‌ரையில் பொத்தென‌ விழுந்துவிடுவோம். வேறென்ன‌ செய்ய‌லாம்? மணி என்ன‌ இப்போது என்று தெரிந்துகொள்ளும் ஆவ‌லை அட‌க்க‌முடிய‌வில்லை. இய‌லாமையும், ப‌ய‌மும் என்னை வீழ்த்திய‌து. சென்னையிலிருந்து கிள‌ம்பியதிலிருந்தில் யாருக்கும் போன் செய்ய‌வில்லை என்ப‌தை உண‌ர்ந்தேன். என்ன‌ முட்டாள்த‌ன‌ம்? நாம் எங்கிருக்கிறோம் என‌ யாருக்கும் தெரியாது. வீட்டிற்கு நாக்பூர் சென்றிருக்கிறோம் என்று ம‌ட்டும்தான் தெரியும். அம்மாவை நினைத்துக்கொண்டேன். தாம்ப‌ர‌த்தில் பார்த்த‌ பெண்ணின் ஜாத‌க‌ம் ஒத்துப்போன‌தில் அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ ஒரு ம‌கிழ்ச்சி. அடுத்த‌ வார‌ம் பெண் பார்க்க‌ போவ‌தாக‌ பிளான் செய்திருந்தோமே.? நல்லபடியாக ஊருக்குப்போய் சேர்ந்துவிடுவோமா? நாம் இப்போது பிலாயில் இருப்ப‌து யாருக்குத்தெரியும்.? ஆ.:பீஸுக்கு. அவ‌ர்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்? குறைந்த‌ ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்துதான் அவ‌ர்க‌ளுக்கு உறைக்கும். வீட்டிற்கு கேட்பார்க‌ள். பிலாய் க‌ம்பெனிக்கு கேட்பார்க‌ள். பின்ன‌ரே போலீஸுக்கு போக‌க்கூடும். அவ‌ர்க‌ள் நான் சென்னையிலிருந்து கிள‌ம்பினேனா என்ப‌தையே ச‌ந்தேக‌க்க‌ண்ணோடு பார்க்க‌த்துவ‌‌ங்கிவிட்டால் அவ‌ர்க‌ள் பிலாய் வ‌ரை வ‌ந்து சேர்வ‌து எப்போது? அப்ப‌டியே புல்ல‌ரித்த‌து. ப‌ய‌த்தில் உத‌டுக‌ள் உல‌ர்ந்த‌ன‌.

ச‌த்த‌மில்லாம‌ல் என் க‌ண்க‌ள் ம‌ட்டும் அழுதுகொண்டிருந்த‌ன.எழுந்திருக்க‌வே முடியாத, பேசவே முடியாத‌ நிலைமையில் இந்த‌ இர‌வில் எப்ப‌டி யார‌து உத‌வியை கோருவ‌து? உயிர் பிழைப்பேனா? அறைக்குள் யாரோ வ‌ரும் அர‌வ‌ம் கேட்ட‌து.

தொட‌ரும்..

(இது தொட‌ர்க‌தைய‌ல்ல‌.. அடுத்த‌ ப‌குதியிலேயே முடித்துவிடுவேன். நேர‌மின்மையால் தொட‌ரும் போடுகிறேன். முதல் சிறுகதை என்பதால் ஆர்வமாயிருக்கிறேன், ம‌ற‌க்காம‌ல் பின்னூட்ட‌த்தில் க‌ருத்து தெரிவியுங்க‌ள். காத‌ல், நகைச்சுவைக்க‌தைக‌ளே நான் முடிவு செய்திருந்தாலும், முத‌ல் க‌தை நானே எதிர்பாராமல் கிரைம் க‌தையாக‌ போய்விட்ட‌து.)

Saturday, October 25, 2008

எக்ஸ்க்ளூஸிவ் : வெண்பூ பேட்டி

கி.பி. 2012

ஒரு பிரபல தமிழ் வார இதழின் தீபாவளி சிறப்பு மலருக்காக அந்த பத்திரிகையின் நிருபர் பிரபல சிறுகதை எழுத்தாளர் வெண்பூவுக்கு போன் செய்கிறார்.

"சார், பேட்டி கேட்டிருந்தோமே, எங்க வெச்சுக்கலாம்? உங்க வீட்டுக்கே வந்துடவா?"

"நோ, நோ.. வெளியே ஏதாச்சும் ஹோட்டலிலே சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே?"

நிருபர் யோசித்தவாறே, "எங்கன்னு நீங்களே.." என்று இழுத்தார்.

"அடையாரில் 'அப்துல் பிரியாணி மஹல்', அல்லது கிண்டி 'ஆம்பூர் அன்லிமிடட் சிக்கன் பிரியாணி' போகலாம். பில்லு நீங்களே செட்டில் பண்ணிடுங்க.. என்ன சொல்றீங்க?"

பேஸ்த்தடித்த நிருபர் போனிலேயே மண்டையை ஆட்டுகிறார். அது தெரியாததால் வெண்பூ மீண்டும், "என்னாச்சு சத்தத்தையே காணோம்?"
இப்போது திணறலோடு நிருபர், "சரி சார்.." என்கிறார். அவருக்கு பட்ஜெட் குறித்த கவலையிருக்கலாம்.

ம்பூர் பிரியாணி பேல‌ஸின் ஒரு டேபிள், சிக்க‌ன், ம‌ட்ட‌ன், காடை என‌ வித‌ வித‌மான‌ பிரியாணிக‌ளால் அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன. எழுத்தாளரும் நிருபரும் எதிரெதிரே அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

வெண்பூ ச‌ர்வ‌ரிட‌ம், "இன்னும் ஒரு வான்கோழி பிரியாணி ம‌ட்டும் கொண்டுவாங்க‌ போதும். நான் ட‌ய‌ட்ல‌ இருக்கேன்" என்று கூறிவிட்டு நிருப‌ரை நோக்கி திரும்பி..

"ஆர‌ம்பிக்க‌லாமா?" என்றார்.

"ஆர‌ம்பிங்க‌ சார்.."

"ஹ‌லோ, நான் பேட்டியை சொன்னேன்"

அதற்குள்ளாகவே த‌லைசுற்றிக்கொண்டு வ‌ந்த‌து நிருப‌ருக்கு. டேப்பை ஆன் செய்துவிட்டு பேட்டியை ஆர‌ம்பிக்கிறார்.

நிருப‌ர் : முதலில் பர்சனல் கேள்விகள் சார். உங்க‌ளுக்கு பிடித்த‌ உண‌வு?

வெண்பூ : சாப்பாட்டில் அவ்வ‌ள‌வாக‌ என‌க்கு ஆர்வ‌மில்லை. எப்போவாவ‌து கொஞ்ச‌மா இது மாதிரி பிரியாணி சாப்பிடுவ‌து பிடிக்கும்.

நிரு : உங்க‌ள் ம‌னைவி, குழ‌ந்தைக‌ள்.?

வெண் : அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணிதான் பிடிக்கும்.

நிரு : இல்ல‌ சார் அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னு கேட்டேன்.

வெண் : பைய‌ன் ஹைதராபாத்தில் 'பிரியா வித்யால‌யா'வில் 4 ங்கிளாஸ் ப‌டிக்கிறார். ம‌னைவி ஹ‌வுஸ் வை.:ப்தான். பிரியாணி ந‌ல்லா ப‌ண்ணுவாங்க‌.

நிரு : உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் குறித்து?

வெண் : ந‌ர்சிம், ப‌ரிச‌ல்கார‌ன் போன்ற‌ பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ளும் என் இனிய‌ ந‌ண்ப‌ர்க‌ள்தாம். நாங்க‌ள் ஒரே க‌ல்லூரியில் ப‌யின்றோம். தாமிரா என்ப‌வ‌ர் தாம்ப‌ர‌த்தில் பிரியாணி க‌டை வைத்திருக்கிறார். இவ‌ரும் எங்க‌ளின் க‌ல்லூரித்தோழ‌ர்தான். ஆனால் பாருங்க‌ள், க‌டை வைத்திருக்கிறாரே த‌விர‌ அவ‌ருக்கு பிரியாணி என்றால் பிடிக்க‌வே பிடிக்காது.

நிரு : நீங்க‌ள் எழுத‌வ‌ராவிட்டால் என்ன‌ பண்ணிக் கொண்டிருந்திருப்பீர்க‌ள்?

வெண் : ஹி..ஹி..

நிரு : 'சிக்க‌ன் பிரியாணியும் சில‌ முட்டைக‌ளும்' என்ற‌ உங்க‌ள் சிறுக‌தை, பிர‌ப‌ல‌ சிறுக‌தைப்போட்டியில் வென்ற‌தைக்குறித்த‌ உங்க‌ளின் க‌ருத்து.?

வெண் : ஆக்ஷுவ‌லா அது ஒரு பெக்கூலிய‌ர் சூழ்நிலையில் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌தை. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் ஒரு மூன்று மாத‌ங்க‌ள் இத்தாலியில் வேலை நிமித்தமாக சிக்கிக்கொண்ட‌ போது பிரியாணியையே பார்க்க‌முடியாம‌ல் இருந்த‌து. அப்போதுதான் வேலையையே விட்டு விட்டு முழுநேர‌ எழுத்தாள‌ராக‌ வேண்டும் என்று சிக்க‌ன் மீது ஆணையிட்டு இந்தியா வ‌ந்து சேர்ந்தேன். அந்த‌ க‌தைக்கு கிடைத்த‌ வ‌ர‌வேற்பை நீங்க‌ளே அறிவீர்க‌ள்.

நிரு : (த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌தால்) இத்தோடு நிறுத்திக்க‌லாமா?

வெண் : இல்ல‌ இப்ப‌தான‌ ஆர‌ம்பிச்சிருக்கோம், இங்க‌ முய‌ல் பிரியாணி ந‌ல்லாருக்கும். ட்ரை ப‌ண்றீங்க‌ளா?

நிரு : சார் நான் பேட்டியை சொன்னேன்..

..என்ற‌வாறே ம‌ய‌ங்கி விழுகிறார்.

டிஸ்கி : நேற்றைய‌ அறிவிப்பின் ப‌டி பேட்டி வெளியிட‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ஆனால் பெரும் தொழில்நுட்ப‌க்கோளாறு கார‌ண‌மாய் (அலுவலகத்தில் இன்று முழுதும் நெட்வொர்க் இல்லை) 'தாமிராவின் சிறுக‌தை' வெளியிட‌முடிய‌வில்லை. மேலும் தீபாவ‌ளி கார‌ண‌மாய் நாளையும், திங்க‌ள்கிழ‌மையும் க‌டை (ஆ.:பீஸ்) லீவு என்ப‌தால் செவ்வாய் அன்று சிறுக‌தை வெளியாகும். பொறுத்துக்கொள்ள‌வும். வாச‌க‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இனிய‌ தீபாவ‌ளி வாழ்த்துக‌ள்.!

Friday, October 24, 2008

ரமா இல்லாத வீட்டின் லட்சணம்.!

நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த ஞாயிறன்று காலை 10.30 மணிவரை நிம்மதியாக தூங்கிஎழுந்தேன். எழுந்த பிறகுதான் வீட்டை கவனித்தேன். ரமா ஊருக்குப்போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒருவழியாகியிருந்தது. இன்றும் சில வேலைகளை செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டு இருந்துவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று உணர்ந்தேன். வெளியே போய் சாப்பிட்டுவிட்டு வந்து வேலைகளை திட்டமிடத்துவங்கினேன்.

ஆபரேஷன் எறும்புகள் :

ரமா ஊருக்கு செல்வது இந்த எறும்புகளுக்கு எப்படித்தான் தெரியுமோ தெரியவில்லை. சாரை சாரையாய் வந்துவிடுகின்றன. பார்சல் வாங்கிவந்து வைத்துவிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு சாப்பிடலாம் என்றால் அதற்குள் பார்சலை பிரித்து மேய ஆரம்பித்துவிடுகின்றன. எந்த ஒரு உணவுப்பண்டத்தையும் வெளியே வைக்க நீதியில்லை. விட்டால் கையில் வைத்திருக்கும்போதுகூட வந்து பிடுங்கிக்கொள்ளும் போல ஆகிவிட்டது. துணிமணி, பெட் எங்கெங்கு காணினும் எறும்புக‌ள். நல்ல வேளையாக பழங்கள் எறும்புக்கு பிடிக்காமல் போனது நம் அதிர்ஷ்டம். அத்த‌னை பேரையும் அடித்துத்துர‌த்திவிட்டு வீட்டை பெருக்கி சுத்த‌ம் செய்தேன். மீண்டும் வ‌ராத‌ வ‌ண்ண‌ம் எறும்புப்பொடிக‌ள், சாக்பீஸ்க‌ள் கொண்டு வீட்டிற்கு அர‌ண் அமைத்தேன்.

ஆப‌ரேஷ‌ன் கிச்ச‌ன் :

ர‌மா ஊர் சென்ற‌ ம‌றுநாளே கிளாஸ் இருக்கிற‌து என்று எவ்வ‌ள‌வோ சொல்லியும் கேட்காம‌ல் க‌ண்ண‌ன், பாபுவையும் கூட்டி வ‌ந்துவிட்டான். கிச்ச‌னை யூஸ் ப‌ண்ண‌க்கூடாது, ர‌மாவுக்கு தெரிந்துவிடும் என்று சொல்லியும் கேட்காம‌ல், அதெப்படி தெரியும் நீ சொல்லாமல்? என்று சொல்லி சைட் டிஷ் ப‌ண்ணுகிறேன் பேர்வ‌ழி என்று ஒரு வாண‌லி, மூன்று த‌ட்டுக‌ள், மேலும் சில‌ பாத்திர‌ங்க‌ள் என‌ ஸிங்கில் கொட்டிவிட்டு போய்விட்டான். வாங்கி வ‌ந்த‌ சிக்க‌னை பேக்கிங்கிலேயே வைத்து சாப்பிட‌லாம் என்றால் ஊஹூம் த‌ட்டுதான் சிற‌ந்த‌து என்று விள‌க்க‌ம் வேறு. நாலைந்து நாட்க‌ள் ஆகிவிட்டதாலும் த‌ண்ணீர் நின்ற‌தாலும் சில‌ கிண்ண‌ங்க‌ளில் சில‌ துரு புள்ளிக‌ள் ஆர‌ம்பித்திருந்த‌ன‌. ஸ்காட்ச் பிரைட் மூல‌ம் ந‌ன்கு அழுத்தித்தேய்த்தேன். இன்னும் சில‌ நாட்க‌ள் போட்டிருந்தால் தூர‌ போட‌ வேண்டிய‌தாயிருக்கும். அத்த‌னையையும் முடிந்தவரை க‌ழுவி க‌வுத்தினேன். அப்ப‌டியும் வ‌ந்து க‌ண்டு பிடித்துவிடுவாளோ என்று ப‌ய‌மாக‌யிருந்த‌து.

.:பிரிட்ஜுக்குள் என்ன‌ இருக்கிற‌தென‌ சோதித்தேன். அன்று மிச்ச‌மான‌ ஒரு சோடா பாட்டில், ஒரு வாட்ட‌ர் பாட்டில் அவ்வ‌ள‌வுதான். வேறெதுவுமில்லை. ஒரு பாட்டில் த‌ண்ணிருக்காக‌ .:பிரிட்ஜை நான் ஓட்டிக்கொண்டிருப்பது கலைஞருக்கோ ஆற்காட்டாருக்கோ தெரிந்தால் நேர‌டியாக‌ வ‌ந்து கைது ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்வார்க‌ள் என்று ப‌ய‌ந்து போய் பாட்டிலை வெளியே எடுத்துவிட்டு ஆ.:ப் செய்தேன்.

ஆப‌ரேஷ‌ன் எலி :

இது ஒரு புதுமையான‌ ஆப‌ரேஷ‌ன். எலிக‌ள் அல்ல‌ எலிதான். ர‌மா ஊருக்கு செல்லும் முன் இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்ன‌ர் எப்ப‌டியோ ஒரு குட்டி எலி வீட்டுக்குள் வ‌ந்துவிட்ட‌து. அதை விர‌ட்டும் த‌லையாய‌ க‌ட‌மையை ர‌மா த‌ந்து விட்டு போயிருந்தாள். ஆச்சா, ஆச்சா என்று போனில் குடைச்ச‌ல் வேறு. ந‌ம‌க்கு பொய் வேறு பொருந்துகிற‌ மாதிரி சொல்ல‌வ‌ராதா, அத‌னால் இன்று அதை விர‌ட்டி விடுவ‌து என்று முடிவுசெய்தேன். ஒரு வேளை பொய் சொல்லி அவ‌ள் வ‌ரும் வ‌ரை விர‌ட்ட‌ முடியாம‌ல், அவ‌ள் வ‌ந்த‌தும் எலி ந‌ல்ல‌ வ‌ள‌ர்ந்து குஜாலாக‌ கிச்ச‌னில் வைத்து அவ‌ளுக்கு ஹாய் சொல்லிய‌து என்று வைத்துக்கொள்ளுங்க‌ள். என் நிலைமையை நினைத்துப்பாருங்க‌ள். ஆனால் அந்தோ ப‌ரிதாபம், இந்த‌ ஆப‌ரேஷ‌ன் ப‌ல‌ பிர‌ய‌த்த‌ன‌ங்க‌ளுக்குப் பின்னும் தோல்வியில் முடிந்த‌து. க‌ட்டிலுக்கு கீழே, பீரோவுக்கு பின்னால், கிச்ச‌ன் ஷெல்புக‌ளுக்குள் என்று மின்னலாக இடம்மாறி அது என்னை டிரில் வாங்கிய‌து. வேர்த்துக்கொட்டிய‌துதான் மிச்ச‌ம். அடுத்த‌வார‌ம் க‌ண்ண‌னை வ‌ர‌ச்செய்து கூட்டு ஆப‌ரேஷ‌னில் இற‌ங்க‌ வேண்டும் என‌ முடிவு செய்தேன்.

பின்ன‌ரும் துணி துவைத்த‌ல், அல‌மாரியை சுத்த‌ம் செய்து புத்த‌க‌ங்க‌ளை அடுக்குத‌ல் போன்ற‌ ப‌ல‌ ஆப‌ரேஷ‌ன்க‌ளை நான் முடித்து (பெண்டு) நிமிர்ந்த‌போது மானாட‌ ம‌யிலாட‌வே துவ‌ங்கிவிட்ட‌து.

***** விளம்பரம்*****

நாளை தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவும‌ல‌ர்.!

ப‌டிக்க‌த்த‌வ‌றாதீர்க‌ள்.! இர‌ண்டு ப‌திவுக‌ள்... அதே விலை..!

சிற‌ப்பு சிறுக‌தை எழுதுப‌வ‌ர் : தாமிரா

எக்ஸ்குளூசிவ் பேட்டி : வெண்பூ

Thursday, October 23, 2008

ஹைதராபாத் பிரியாணி

எனக்கும் சுவையான உணவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நான் கடக்கமுடியாத ஒரு தூரமாகவே இத்தனை நாட்களும் இருந்துவந்திருக்கிறது, அது கல்யாணத்துக்கு முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி. நான் பிளஸ் டூ முடிந்ததுமே வீட்டைப்பிரிந்தவன். அதற்கு முன்பும் கூட அவ்வளவு விசேஷமாக ஒன்றும் கிடையாது. என் அம்மா வைக்கும் மீன்குழம்புக்கு இணையாக இன்றுவரை பிறிதொன்றை பார்க்கவில்லை எனினும் அவ்வளவு சிறப்பாக சொல்லிக்கொள்ளும்படி சமையலில் என் அம்மாவுக்கு ஆர்வமிருந்ததில்லை. பல நாட்கள் இரவு உணவு கடைகளிலேயே நிகழும். எனக்கும் 25 வயது வரை உணவின் மீது அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அதன்பின்னர் சிறிது சிறிதாக ஏற்பட்ட ஆர்வம் தீயென பற்றிக்கொண்டது. சுவையான உணவுக்காக அலைய ஆரம்பித்தேன். என்ன இருக்குதோ இல்லையோ நன்கு சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்று பெண்பார்க்கும் போது கண்டிஷனெல்லாம் போட்டேன். அதை யார் காதில் வாங்கிக்கொண்டார்கள்.? ஹும்.!

வீட்டில் வெறுத்து, ஆபீஸ் கேண்டீனில் வெறுத்து, சில ஹோட்டல்களில் வெறுத்து 'கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்.?' என்று சில‌ நாட்க‌ளில் வாய்விட்டு புல‌ம்பியிருக்கிறேன். இப்ப‌டியான‌ சூழ்நிலைக‌ளில் என்றாவ‌து ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ ர‌மா 'கூட்டாஞ்சோறு' செய்திருப்பாள். புல‌ம்பிக்கொண்டே ஏதோ ஒரு லோக்கல் ஹோட்ட‌லில் போய் அம‌ர்ந்தால் ஆப்ப‌மும் தேங்காய்ப்பாலும் ம‌ன‌தை நிறைக்கும். கேண்டீனில் கீரைக்க‌றியும், ர‌ச‌மும் என‌ புல்ல‌ரிக்க‌ வைப்பார்க‌ள். அன்றெல்லாம் எழுந்திருக்க முடியாத அளவு சாப்பிட்டுவைப்பேன். ஆனால் எல்லாமே அத்தி பூத்தாற்போல‌த்தான். சரி விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

ஹைத‌ராபாத் பிரியாணி, ஹைத‌ராபாத் பிரியாணி என்று வ‌ஸ்து ரொம்ப‌ .:பேம‌ஸாக‌ இருக்கிற‌தே.. நாமும்தான் அடிக்க‌டி ஹைத‌ராபாத் போகிறோமே.. இந்த‌முறை ச‌ரியாக‌ க‌டையை விசாரித்து வாங்கிவிட‌ வேண்டிய‌துதான் என்று முடிவு செய்திருந்தேன். முந்தைய‌ அனுப‌வ‌ங்க‌ள் அவ்வ‌ள‌வு சு‌க‌மில்லை. ஒருமுறை த‌ங்கியிருந்த‌ ஹோட்ட‌லில் இரவு உணவுக்காக ஆர்ட‌ர் செய்த‌போது (ஹைத‌ராபாத் ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று மெனுவில் இருந்த‌து) மிள‌காய் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ க‌டும் ம‌சாலா நிறைந்த‌ குறைந்த‌து நான்கு பேர் சாப்பிடும் அளவில் ஒரு ப‌டைய‌லை நிக‌ழ்த்திவிட்டு போனார் உப‌ச‌ரிப்பாள‌ர். அதைப்பார்த்தே வ‌யிறு நிறைந்துபோனேன்.

எப்ப‌டி திருநெல்வேலி அல்வா எனில் இருட்டுக்க‌டையோ அதைப்போல‌ இங்கு ஏதாவ‌து ஸ்பெஷ‌ல் க‌டை இருக்க‌க்கூடும் என‌ எண்ணிக்கொண்டேன். சில‌ரை விசாரித்த‌போது ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வித‌மாய் ப‌தில் சொன்னார்க‌ள். ஒருவ‌ர் பார‌டைஸ் ச‌ர்க்கிளில் உள்ள‌து என்றார். இன்னொருவ‌ர் பாலாந‌க‌ர் என்றார். இன்னொருவ‌ர் சாக‌ர் லேக் அருகில் என்றார். சிலருக்கு பிரியாணியா அப்பிடின்னா என்ன என்றார்கள். விள‌ங்கிரும் என்று விட்டுவிட்டேன்.

ஆகவே குறைந்தபட்சம் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு கடைகளில் ட்ரை பண்ணுவேன். அவ்வாறே இந்தமுறை ர‌யில்வேஸ்டேஷ‌னில் ஒரு க‌டையில் 'ஸ்பெஷ‌ல் சிக்க‌ன் பிரியாணி' வாங்கிக்கொண்டேன். சாப்பிடும் போது பார்ச‌லைத்திற‌ந்தேன். நான்கு பேர் சாப்பிடும் அள‌வு. நம்புங்கள், உப்பு உறைப்பில்லாத‌ வெள்ளை சாத‌ம். அடியாள‌த்தில் ஒரு முட்டையும், இர‌ண்டு பெரிய‌ சைஸ் சிக்க‌ன் 65 துண்டுக‌ளும் ஒளித்துவைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. இதுதான் பிரியாணி என்று இன்னும் என்னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. யாராவ‌து புண்ணிய‌வான் அடுத்தமுறையாவ‌து நான் அங்கே வ‌ரும்போது பிரியாணி வாங்கித்த‌ர‌ட்டும் என‌ வாழ்த்துங்க‌ள்.

டிஸ்கி : சென்ற‌ ர‌ம்ஜானுக்கு அப்துலுக்கு போன் ப‌ண்ணி பிரியாணி என்று இழுத்தேன். 'நான் சைவ‌ம்' என்று ஒரே வ‌ரியில் முடித்துக்கொண்டார். கிடைத்த‌ ஒரே இஸ்லாமிய‌த்தோழ‌ரும் (த‌மிழ் பிரிய‌ன்தான் துபாயில் இருக்கிறாரே..) சைவ‌ம் என்றால் நான் என்ன‌தான் செய்ய‌முடியும் சொல்லுங்க‌ள்.

Sunday, October 19, 2008

சினிமா அனுபவம் குறித்த தொடர்பதிவின் எனது பகுதி.

சினிமா குறித்த இந்த தொடர்பதிவிற்கு என்னையும் அழைத்த கார்க்கி மற்றும் சந்தனமுல்லைக்கு என் நன்றி.! நேரே கேள்விகளுக்கு போகலாம். மற்றவை டிஸ்கியில்..

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

என் அம்மாவின் மடியிலமர்ந்து தியேட்டரில் பார்த்த சினிமாக்கள் என் நினைவிலில்லை. எங்கள் ஊருக்கு முதன்முதலாக டிவி வந்தது 1985க்கு கொஞ்சம் முன்னர் என நினைவு. வாங்கியது என் தந்தையாரின் நண்பர் என்பதால் அவர் வீட்டில் நல்ல உரிமை இருந்தது. அப்போது டிவியில் கண்ட சிவாஜி கணேசன் நடித்த 'வணங்காமுடி' நான் கண்ட நினைவிலிருக்கும் முதல் படமாக இருக்கலாம். மகிழ்ச்சியாக உணர்ந்து பள்ளித்தோழர்களிடம் கதை சொன்னது நினைவிலுள்ளது. பின்னர் எங்கள் வீட்டில் டிவி வாங்க 5 வருடங்களுக்கும் மேலானது. அது எங்கள் ஊரின் முதல் கலர் டிவி என்பது கூடுதல் பெருமை.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம்.. சத்யமில்.!

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பார்க்காத படம் எதுவும் டிவியில் வந்தால் பார்க்கவேண்டும் என நினைப்பேன். ஆனால் முடியாமல் சிறிது நேரத்திலேயே சானல் மாறிவிடுகிறேன். சமீபமாக உட்கார்ந்து ஓரளவு பார்த்த படமெனில் 'பட்ஜெட் பத்மநாபன்'. ஆரம்பத்தில் நகைச்சுவைக்காக பார்க்க ஆரம்பித்து முழுதும் பார்த்து முடித்தேன். பிரபு பணத்தை தொலைத்துவிட்டு கலங்கிநிற்கும் காட்சியில் நானும் கலங்கிவிட்டேன். இப்போதெல்லாம் லேசான சென்டிமென்ட்டிற்கே (ஆனால் உருப்படியான) புல்லரித்துவிடுகிறது. பிரபுவின் சில பழைய படங்களை நினைத்துக்கொண்டேன். அக்னி நட்சத்திரத்தில் அவரது ஸ்டைல் மனதை விட்டகலாத ஒன்று. 'பொன்மனம்' என்றொரு படம். அதன் கிளைமாக்ஸில் கைக்குழந்தையுடன் அவர் தனித்துவிடப்படும் காட்சியில் அவரது நடிப்பு நெகிழவைத்த ஒன்று.‌

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஹேராம்.! இப்படத்தின் கலை, மற்றும் கதை சொல்லப்பட்டவிதம் அத்தனையும் பிரமிக்கவைத்தது. எனது பேவரைட் சினிமாக்கள் இன்னும் பல உண்டு. பிறிதொரு சமயம் சொல்கிறேன்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

வெறுப்பேற்றிய சம்பவங்கள் மிக உண்டெனினும் மிகவும் தாக்கிய என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லை.

தமிழ் சினிமா இசை?

இசை குறித்த அறிவும் ஆர்வமும் மிகக்குறைவே. நாக்க முக்க போன்ற டப்பாங்குத்து பாடல்களை அறவே வெறுக்கிறேன். நல்ல கவிதை நயமுள்ள காதல் பாடல்களை மிக ரசிக்கிறேன். தற்போதைய பாடல் : யாரடி நீ மோகினி 'எப்போதோ பார்த்த மயக்கம்..'

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழி கிட்டத்தட்ட இல்லை. ஹிந்தியில் 'ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்' போன்ற மிகச்சில படங்கள் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பிரமாண்ட, ஆக்ஷன், பிக்ஷன் படங்கள் நான் மிக ரசிக்கும் ஒன்று. பிறர் கூறியது தவிர்த்து 'ட்ரூ லைஸ்' நான் மிக ரசித்தபடம். நண்பர்களின் டிவிடி புண்ணியத்தில் கிடைக்கும் பழைய புதிய கலைப்படங்களையும் ரசித்துப்பார்ப்பேன். கலைப்படங்கள் மிக மெதுவானவை என யாராவது நினைப்பீர்களானால் மாற்றிக்கொள்ளுங்கள், சமீபத்தில் பார்த்து வியந்த விறுவிறுப்பான படம் 'Father'. (சினிமா அறிவு குறைவு. ஆகவே டெக்னிகல் தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும். இந்தப்படம் ஆங்கிலம் அல்ல, ரஷ்யன், பிரஞ்சு என்று சண்டைக்கு வரவேண்டாம்)

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சந்தனமுல்லை :அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!// ரிப்பீட்டு.!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிறப்பாக ஒன்றுமில்லை. இப்போது போலவே பத்து பேரரசுவும், ஒற்றை அமீரும் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வருஷம்தானே. தனிப்பட்டமுறையில் நிம்மதியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். நிம்மதியாக வீடியோ கேம் விளையாடுவேன்.

டிஸ்கி : இந்த‌ தொட‌ருக்கு அனைவ‌ரும் ஐந்து பேரை அழைத்திருக்கிறார்க‌ள். என‌க்கு மொத்த‌மே ஒரு ப‌த்துபேரைத்தான் ந‌ன்கு தெரியும். இதில் அனைவ‌ரும் ஒருவ‌ருக்கொருவ‌ர் அழைத்துக்கொண்டாயிற்று. மேலும் சில‌ர் ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ த‌ட‌வைக‌ள் அழைக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிறார்க‌ள். ஆக‌வே நான் வித்தியாச‌மாக‌ ஒன்று செய்கிறேன். வலையுலகிற்கு வந்து ஓரிரு மாதங்களே ஆகும் மிகப் புதிய‌ 5 பேரை அழைக்கிறேன். புதியவர்களுக்கு வாய்ப்ப‌ளிப்போம் ச‌ரிதானா?.

சிம்பா

எஸ்கே

ரோஜா காதலன்

மணிகண்டன்

அத்திரி

Thursday, October 16, 2008

பிராஸஸ், மீன், சிக்மா...

முதலில், பயிற்சி வகுப்புதானே.. எத்தனை பார்த்திருக்கிறோம் என்ற தெனாவெட்டில்தான் சென்றேன். கடைசி பெஞ்சை புடிச்சிக்கலாம். அங்க நமக்கு கம்பெனி குடுக்க ரெண்டு பேரு உட்கார்ந்திருப்பார்கள். ஆபீஸ் டென்ஷன் இல்லாததால் ரொம்ப கூலாக முதல் நாள் போட்ட 180யின் (ராத்திரி 1.30 வரைக்கும் செஷன் சென்றதால் 90 என்பது 180 ஆகிறது) விளைவாக கண்கள் சொக்கினாலும் ரொம்ப கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த எழுதவிருக்கும் பதிவுகள் குறித்து சிந்தித்து குறிப்பெடுத்து வைக்கலாம். கிடைக்கும் மூன்று இடைவேளைகள் தவிர மேலும் இரண்டு தடவைகள் இடையே எழுந்து 'தம்'முக்காக போய்விடலாம். ஆபீஸுக்கு போகாமல் 4 மணிக்கே வீட்டுக்கு போயிடலாம். மதிய உணவு சும்மா ஜிலுஜிலுனு வெரைட்டியாக வெட்டலாம் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டே சென்றேன்.

பரங்கிமலை அருகே ஒரு நட்சத்திர விடுதியில் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மதிய உணவு தவிர வேறெதுவுமே நான் நினைத்ததைப்போல நடக்கவில்லை. இன்றோடு நான்கு நாட்கள் முடிந்துள்ளது. இன்னும் ரெண்டு நாட்கள். பின்னர் இதைப்போலவே நவம்பரிலும் ஒரு வாரம். பத்தாதென்று நீங்கள் இல்லாமல் இங்கே ஒண்ணுமே நடக்கமாட்டேங்குது தல, எப்ப வருவீங்க.. எப்ப வருவீங்க.. அப்பிடினு ஆபீஸிலிருந்து (இன்னொரு ஆள் கல்யாணம்னு லாங் லீவுல போயிட்டான்) கால் மேல கால். ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்துக்கு டிக்கெட் போட்டு வைத்துக்கொண்டு தயாராயிருக்கிறார்கள்.

அது கிடக்கட்டும், பயிற்சிக்கு வாருங்கள். அப்படியே சண்டக்கோழி படத்தில் ட்யூஷன் போய்திரும்பும் மீரா ஜாஸ்மினின் அங்கலாய்ப்பை நினைவு கூறுங்கள். "ஒரே நாளில் இந்த வாத்தியாருங்க எல்லாத்தையும் மண்டையில திணிக்கப்பார்க்குறாங்கப்பா, எவன் கண்டுபிடிச்சான் இந்த கிளாஸு, எக்ஸாம், ரிஸல்ட்டுனு.. அய்யய்யய்ய.." என் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான்.

பத்தே பயனாளிகள், இரண்டு ஆசிரியர்கள். பத்து நிமிட பயிற்சிக்கு பின்னர் 15 கேள்விகள். ஒரு நிமிடம் கவனிக்காவிட்டாலும் மானம் போய்விடும் சூழல். வ‌குப்பு போலில்லாமல் கலந்துரையாடல் போல வேறெதையும் சிந்திக்கவிடாத மிக நெருக்கமான பயிற்சி. பத்தாதுன்னு ரெண்டு மணி நேரம் தாங்குற மாதிரி வீட்டுப்பாடம் வேற (இது கொஞ்சம் ஓவருங்க..). காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை என் காதில் விழுவதெல்லாம்...

ம்யு, சிக்மா, ப்ராஸஸ், மீன், டீவியேஷன், டெல்டா, மெஷர்ஸ், ரிஜக்ஷன், n=(2*s/v)....

எனது தங்கமணியில்லாத நாட்கள் எப்படி வேஸ்ட்டாக போய்க்கொண்டிருக்கிறது பாருங்கள், யாராவது பரிதாபப்படுங்கப்பா..

Monday, October 13, 2008

காதல்

வழக்கம் போல இந்த முறையும் வேலை காரணமாய் நொந்து நூலாகிவிட்டு சென்னை திரும்புவதற்காக செகந்தராபாத் ஸ்டேஷன் வந்து சேர்ந்தேன். கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்டேன். என்னைப்போலவே நிறையப்பேர் சார்மினார் எக்ஸ்பிரஸ் -க்காக காத்திருந்தனர். இந்த முறை சாப்பாட்டுக்காக ரொம்ப கஷ்டப்பட்டதாலும், வேலை ஆறு நாட்களுக்கு மேல் நீடித்து படுத்திவிட்டதாலும் எப்போது சென்னை செல்வோம் என்று ஆகிவிட்டது. எப்படித்தான் இந்த சர்வீஸ் வேலைகளில் இருப்பவர்கள் வெளியூர்களில் வாரக் கணக்காக, மாதக் கணக்காக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ என நினைத்துக்கொண்டேன். முதல் பிளாட்பார்மில் உள்ள தூண்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள திட்டுக்களில் ஒன்றில் அமைதியாக உட்கார்ந்துகொண்டேன்.

அப்போது ஒரு அழகான ஜோடி, ஒரு மிக அழகான சிறுமியுடன் அருகில் வந்தார்கள். நிறைய லக்கேஜ்கள் எல்லாம் இல்லை. என்னருகே இடமிருந்ததால் அந்தப்பெண் உட்கார்ந்து கொள்ள அவன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அதனுடன் பேசிக்கொண்டிருந்தான். நிச்சயமாக அவர்கள் கணவன் மனைவிதான் என்பதும், அந்த சிறுமி அவர்களின் குழந்தைதான் என்பதும் புரிந்தது. அந்த சிறுமிக்கு மூன்று வயதிற்கு மேலிருக்கும் எனினும் அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்களைப் போல இருந்தனர். எளிமையான, திருத்தமான, ரசனையான உடைகள் அவர்களை மேலும் அழகாகக் காட்டியது. தேவையில்லாமல் என் மனைவியும் அவளது ரசனையும் நினைவுக்கு வந்து ஏக்கப் பெருமூச்சு வெளியானதால் வேறுபக்கம் திரும்பிக்கொண்டு கவனத்தை திசைதிருப்பினேன். முடியவில்லை.
அந்த குழந்தை அவனை விடாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தது. அவனும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். நன்கு ஷேவ் செய்து பளிச்சென இருந்தான். அவனது ஹேர் ஸ்டைல் மிக அழகாக இருந்தது. அவளோ அந்த சேலையில் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல இருந்தாள் . இப்படி அழகான ஜோடியைப் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒருவர் சொதப்பிவிடுவார்கள்.

இப்போது வண்டி வந்து விட்டதால் அதில் ஏறுவதிலும் சீட் தேடியமர்வதிலும் அவர்களை மறந்தேன். ஏறி அமர்ந்து ஜன்னல் வழியாக தற்செயலாக வெளியே பார்த்தால், அந்த குழந்தை இப்போது அழுது கொண்டிருந்தது. அதை அவள் இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு சமாதானப் படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். இருவரும் படியருகே நின்று கொண்டிருந்தார்கள். கூர்ந்து பார்த்தபோது அவனும் படிக்கட்டில் நின்றுகொண்டே குழந்தையை சமாதானப் படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது கேட்கும் தொலைவில் நான் இல்லை. பிரச்சினை என்ன என்பது புரிந்துவிட்டது. அவன் மட்டும்தான் சென்னை போகிறான். அவர்கள் வழியனுப்ப வந்திருக்கிறார்கள். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது.

வண்டி கிளம்பும் நேரம் ஆக ஆக அந்த பெண்ணின் முகம் சிரிப்பை இழந்து கொண்டிருந்தது. இப்போது அவன் குழந்தையை சமாதானப் படுத்துவதா அல்லது அவளை சாதானப் படுத்துவதா என்ற நிலைமையில் இருந்தான்.
வண்டி கிளம்பிவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் கட்டுக்கடங்காமல் ஒரு துளி கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.

மீண்டும் நான் என் மனைவியை நினைத்துக்கொண்டேன்.

டிஸ்கி : முந்தைய பதிவில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒருவர் கூட இந்த பழைய பதிவுகளுக்கு வரவில்லை. ஆகவே எச்சரித்தைப்போலவே எனது முதல் மீள்பதிவு இது. மெதுவாக மேலே சென்று கொண்டிருக்கும் ஹிட்ஸ் கிரா.:பை கீழே நாமே இறக்கி விடவேண்டாம் என்பதாலேயே இந்த சுயந‌ல மீள்பதிவு. பயப்படவேண்டாம், இது தொடராது.

Friday, October 10, 2008

எவர்கிரீன் : கமல்ஹாசன்

ஒரு முக்கியமான விஷயம் இருந்தாலும் முதலில் தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம்.! பொது மக்களுக்கும் பதிவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இவர்களின் ரசனை வேறு என்றார்கள் சில நண்பர்கள். ஆகவே முதல் பிரிவில் ரஜினி முதலில் வருவதற்கும், இரண்டாவது பிரிவில் விஜய் முதலில் வருவதற்கும் வாய்ப்பு குறைவே என்றார்கள். ஆனால் அந்த கூற்றை பொய்யாக்கும் படி இரண்டாவது பிரிவில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் பட்டத்தை வெல்கிறார். முதல் பிரிவிலும் கமல்ஹாசன் முதலிட‌த்தைப்பிடிக்க வெறும் மூன்று ஓட்டுகளே அதிகம் வாங்க முடிந்தது. ஒட்டு மொத்தமாக முதலிடத்தை ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்திலேயே விஜயிடமிருந்து பறிக்க முடிந்தது. ஆகவே ஏகோபித்த மக்களின் உணர்வுகளையே பதிவுலகமும் பிரதிபலிக்கிறது என நாம் உணரலாம்.

இறுதியாக 78 வாக்குகள் பெற்று ஒற்றை ஓட்டு வித்தியாசத்தில் கமல்ஹாசன் 'ஆல் டைம் பேவரிட்' பட்டத்தை சூட்டிக்கொள்கிறார். முதல் பிரிவில் மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் ரஜினி இரண்டாமிடத்திலும் (மொத்தத்தில் மூன்றாவது இடம்), அதிக வாக்குகள் வித்தியாசம் என்றாலும், எதிர்பார்த்தது போலவே 20 வாக்குகள் பெற்று கார்த்திக் மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள். அர்ஜுன், பிரபு, சரத் ஆகியோர் பரிதாபமாக டெபாஸிட் இழக்கிறார்கள்.


இரண்டாவது பிரிவில் 77 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்திலும், ரஜினியை இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து மொத்தத்தில் இரண்டாமிடத்தையும் பிடிக்கிறார் விஜய். அஜித், சூர்யா தவிர யாரும் இந்த பிரிவில் தலைகாட்ட முடியாதபடிக்கு ஓட்டு வாங்கி தோற்கிறார்கள். சூர்யா இரண்டாமிடம் (49), அஜித் மூன்றாமிடம் (29). பிரஷாந்த், ஜெயம்ரவி, ஜீவா, பிரசன்னா, விஷால் ஆகியோர் சொதப்பல் ஓட்டுகள் வாங்கினாலும், சூப்பர்ஸ்டார் மருமகன் என்ற பிளஸ் கூட வேலை செய்யாமல் தனுஷ் ஒரு ஓட்டு கூட வாங்காமல் பரிதாபமாக வெளியேறுகிறார். இவரே நம் அனைத்து தேர்தல்களிலும் 'டக்' அடித்த ஒரே நபர் பெருமையை பெறுகிறார். (பொல்லாதவன் நல்லாருந்திச்சுங்க..)


*****

இப்போ அந்த முக்கிய விஷயத்துக்கு வாருங்கள்.

அலுவலகத்தில் நம் ஆணிபுடுங்கும் திறனை மெச்சி ஒரு சிறப்பு பயிற்சிக்கும் (சிஸ்டமேடிக்காக ஆணி புடுங்குவது எப்படி?)அதையொட்டிய பிராஜக்டுக்கும் தேர்வுசெய்யப்பட்டுள்ளேன். அடுத்த வாரம் முழுதும் கிளாஸ். பின்னர் நவம்பர் இறுதியில் மீண்டும் ஒரு வாரம். இடைப்பட்ட காலத்தில் பிராஜக்ட். ஆகவே குறிப்பிட்ட இரண்டு வாரங்கள் வலையுலகம் வருவது மிக சிரமம். தவிர இடப்பட்ட காலத்தில் வந்தாலும் எந்தளவு படிக்க, பதிவிட முடியும் என தெரியவில்லை. (பரிசல், வெண்பூ, அப்துல், தமிழ்.. கண்ண தொடச்சுக்குங்க, அழுவாதீங்க.. என்ன பண்றது நம்ப கையில என்ன இருக்குது? கார்க்கி மற்றும் சிலர் சந்தோஷத்தில் குதிப்பது தெரிகிறது..).

இருப்பினும் முடிந்த அளவு எட்டிப்பார்ப்பேன். இங்கே சென்னையில்தான் பயிற்சி என்பது சிறு ஆறுதல். தங்கம் வீட்டிலில்லாத சமயத்தில் வீட்டிலும், வலையிலும் குஜாலாக இருக்கலாம் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பேரிடி. இருப்பினும் நைட் நைன்டிக்கு பிரச்சினை இருக்காது என்றே நம்புகிறேன் (அப்துல், கும்கி கவனிக்கவும்). முழு வீச்சோடு மீண்டும் வருவேன். அதற்குள் யாராவது மறந்தது மாதிரி தெரிந்ததோ.. தொலைத்துவிடுவேன்.. ஜாக்கிரதை.!

இப்போதைக்கு ஆரம்பத்தில் நான் எழுதி எனக்கு மிகப்பிடித்த கூட்டம் வராத சில பதிவுகளை இங்கே தருகிறேன். மீண்டும் வரும்வரை இவற்றையும், இன்னும் பிறவற்றையும் படித்துக்கொண்டிருக்கவும். படித்து பின்னூட்டமிடவும். பின்னூட்டம் நினைப்பது போல வராவிட்டால் மீள்பதிவாகும் ஆபத்து இருப்பதை உணர்க.

ரயில் நிலையத்தில்..

தேங்காயெண்ணையும்.., அதன் தொடர்ச்சியும்..

எழுத்தாளர்களுடன்..

(மீண்டும் சொல்கிறேன். நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை, எப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்றுதான் சொல்கிறேன், நிறைய குட்டிப்பதிவுகளுக்கு வாய்ப்பு இருக்கலாம். ஏதும் முக்கியமான‌ விஷயங்கள் இருந்தால் மெயிலில் தெரிவியுங்கள்)

Thursday, October 9, 2008

பதிவுலக அரசியல்

ஏடிஎம் ஸ்லிப் போன்ற சிறிய துண்டுத்தாள்களில் அடுத்து எழுத வேண்டிய பதிவு பற்றிய சிறு நினைவுக்குறிப்புகளை நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்திருப்பேன். நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவ்வப்போது புதிய சில விஷயங்கள் முன்னுரிமை பெற்று எழுத வேண்டியதாகிவிடுகிறது. இன்று அலுவலகம் விடுமுறை என்பதால் நெட் கிடையாது. தங்கத்தை ஒருவழியாக நேற்று ஊருக்குப் பேக் செய்தாயிற்று. டிவி அல்லது கேம் அல்லது கண்ணனுடன் அவுட்டிங்.. இதுதான் முதலில் இருந்த இன்றைய பிளான். கண்ணன் பகலில் முடியாது சாய்ந்திரம்தான் என்று கூறி சொதப்பிவிட்டான். டிவியைப் போட்டேன். நானும் எவ்வளவோ பொறுமையாகத்தான் பார்க்கத்துவங்கினேன்.. முடியல.. போட்டி போட்டுக்கொண்டு மொக்கைப்படங்களை போட்டு நம் சேனல்கள் கொலவெறியோடு தாக்குதல்களை காலையிலேயே துவக்கியிருந்தன. இரவு வரை இப்படிதான் இருக்கும் எனவும் இடையிடையே விளம்பரங்கள் போட்டு எச்சரிக்கை வேறு செய்தார்கள்.

வேறு வழியில்லை சாப்பிட்டுவந்து கேமில் உட்கார்ந்துவிட வேண்டியதுதான் என நினைத்து வெளியே வந்தால் சர்ப்ரைஸாக பக்கத்து தெருவிலிருக்கும் iway திறந்திருந்தது. வேலைகளையும், சாப்பாட்டையும் முடித்துவிட்டு போய் உட்கார்ந்தேன். இன்று பதிவு எதுவும் போடக்கூடாது (லீவு நாள் என்பதால் காத்தாடிவிடக்கூடாது என்ற பயம்தான்). பிற கடைகளை முடிந்த அளவு மேய்வது மற்றும் பின்னூட்டமிடுவது என முடிவு செய்து ஆரம்பித்தேன். தமிழ் மணத்தை திறந்து கண்ணில் பட்ட இணைப்புகள் அனைத்தையும் கிளிக்கி படிக்கத்துவங்கினேன். ரெண்டு மணிநேரம். ..முடியல.. 5% தவிர டிவியே எவ்வளவோ தேவலாம் போல மொக்கைப்போட்டு தாளித்துவிட்டார்கள். பின்னர் வழக்கம் போல ரெகுலர் கடைகளுக்கே போய் படித்தும் பின்னூட்டமிட்டும் திரும்பினேன்.

இன்னும் கண்ணன் வருவதற்கு நேரமிருக்கிறது. அதற்குள் ஒரு பதிவு போட்டாலென்ன? என்ன எழுதலாம். வழக்கமான மைல்டான பதிவுகள் தவிர சீரியஸான ஒன்றிரண்டு விஷயங்களும் எப்போதாவது எழுத வேண்டுமென்றும் பிளான் வைத்திருக்கிறேன். எழுதினால் எங்கே நீங்களும் சீரியஸாகி விடுவீர்களோ என்றுதான் பயந்துகொண்டு தள்ளிப்போட்டு வருகிறேன். அதில் ஒரு விஷயம்தான் பதிவுலக அரசியல். (மேலே பார்த்துக்கொள்கிறேன்.. அடப்பாவி அதுக்குள்ளாகவே ஒரு பதிவு அளவு எழுதிவிட்டாயேடா? நீளமா எழுதினா தெறிச்சு ஓடிடுவாங்க.. தெரியும்தானே.. இந்த லட்சணத்துல சீரியஸ் டாபிக் வேறயா விளங்கிடும்).

சீச்சீ.. சீரியஸ் டாபிக்கே வாணாம்.. அந்தப்பழம் புளிக்கும். ஆகவே மைல்டாகவே அந்த விஷயத்தைப்பற்றி நான் நினைப்பதைச் சொல்லிவிடுகிறேன். (சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும், மெயில்களையும் பார்த்தபிறகு தோன்றிய சப்ஜெக்ட் இது)

* சினிமா தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அதி தீவிர மீடியா. மேலும் ஏராளமான பணம் புரளக்கூடிய துறை. ஆனால் நம்மூரில் எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய படைப்புகளுக்கும் உள்ள வரவேற்புதான் நல்லா தெரியுமே நமக்கு. ஆகவே சிலர் தவிர்த்து பிறர் சினிமாவுக்குத்தாவுகிற வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். அல்லது யாருக்கும் தெரியாவண்ணம் ஏங்கிக்கொள்கிறார்கள். அல்லது ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்கிறார்கள். ஒருவழியாக அதை அடைந்தவர்கள் பெருமை பேசிக்கொள்கிறார்கள். காரணம் இலக்கியச்சேவையா? எந்தத்துறையிலும் வாய்க்காத அளவில் நிரம்ப நிரம்ப புகழ், நிரம்ப நிரம்ப பணம். அதில் என்ன தவறு இருக்கிறது?

* பதிவுலகம் எப்படியிருக்கிறது? பத்திரிகைகளுக்கு தாவ நேரம் பார்த்துக்கொண்டு உறுமீனுக்காக‌ போல காத்துக்கொண்டிருக்கிறது. (எனக்கு ஒரு குட்டி மீன் கிடைச்சாக்கூட போதும்). எழுத்தாளர்களுக்கு எப்படி சினிமாவோ அதைப்போலவே பதிவர்களுக்கு பிரின்ட் மீடியா. அல்லது முதலில் வில்லன், அப்புறம் ஹீரோ, அப்புறம் சிஎம் என்பது போலாகவும் இருக்கலாம். காரணம் இலக்கியச்சேவையா? முதலில் குமுதத்தில் ஐந்து பக்க சிறுகதை, பின்னர் உயிர்மையில் 200 பக்க நாவல், பின்னர் விகடனில் எட்டு பக்க பேட்டி. எப்பேர்ப்பட்ட கனவு அது. அதில் என்ன தவறு இருக்கிறது? சிலர் பிரின்ட் மீடியாவை விடவும் வலையுலகம் பிரம்மாண்டமானது. இதன் எதிர்கால சாத்தியங்கள் அளப்பறியதாக இருக்கும் என்கிறார்கள். ஊகங்களால் பயனில்லை.

* வேறெந்த கலைகளை விடவும் அதிகபட்சமாய் மக்களை அடைவதில் சினிமாவும் எழுத்தும் முன்னிற்கிறது. ஆகவேதான் அதைப்பற்றி மேலே பார்த்தோம்.ஆனால் பிற கலைகளை விடவும் எழுத்துத்துறை பற்றி மட்டும்தான் நாம் விவாதிக்க முடியும் (நாம் செய்வதைப்பற்றிதானே பேச முடியும்). மேலே "அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று சொன்னோமே, அது சுயநலமாக அல்லவா இருக்கிறது. அப்படியானால் இலக்கியச்சேவையை யார்தான் செய்வது. அது சுயமாக இயங்கும். சமூகத்தின் (பெரும்பாலான மக்களின்) நேர்மையான ரசனையை ஒட்டியதாகவே இலக்கியம் இருக்கமுடியும். ஒன்றை விடுத்து இன்னொன்று ஆளாகிவிடமுடியாது. சமூகத்தின் அத்தனைத் தளங்களிலிருந்தும் படைப்பாளிகள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள், வருகிறார்கள், வருவார்கள். அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த ரசனையையும், இலக்கியத்தையும் தீர்மானிப்பார்கள்.

அய்யய்யோ கிரைம் நாவல் பிச்சிக்கிட்டு போகுதே?

அய்யய்யோ போக்கிரி படம் வசூல் அள்ளுதே?

அய்யய்யோ மொக்கைப்பதிவு இப்பிடி ஹிட்டாவுதே?

((புலம்பினா ஒண்ணியும் நடக்காது. நீ மட்டும் 'என்னா ரசனை இது? நா எழுதுன பின்நவீனத்துவ கவுஜய ஒர்த்தனும் படிக்கமாட்றானுவோ'னு புலம்பிகினுருந்தா.. உன் ரசனை சராசரிக்கு உசந்தது, ஸாரிபா.. மாறுபட்டதுனு வெச்சிகோனு நா சொல்லிருவேன். உன் வேலையை மட்டும் பார். நேரம் வரும்போது பின்ந‌வீனத்துவம் தன்னால முன்னால வரும். அப்பாலயும் வந்து புதுசா 'பின்னாடிநவீனத்துவத்துல' ஒரு கவுஜ எழுதிவெச்சுகினு இதை குறை சொல்லிக்கினுருப்பே..))

* எழுத்தாளர்களைப்பற்றி எழுதும் போது பொறாமை வேண்டாம். கிண்டல் வேண்டாம். எழுத்தில் தகுந்த மரியாதை தருவோம். உனக்கு பிடிக்காதா அவரை, அவரைப்பற்றி படிக்கவேண்டாம். மாற்றுக்கருத்தை மரியாதையான முறையில் தெரிவிக்கலாம். (இதையே அரசியல்வாதிகளைப் பற்றியும், பிற துறையினரையும் பற்றி எழுதும்போது கடைபிடிக்கலாம்). தகுந்த நேரம் வரும்போது நாமும் எழுத்தாளராகக்கூடும். மாறாக மாறுபட்ட சாத்தியங்களால் அவர்களைவிடவும் நாம் மேலேறிச்செல்ல அவர்கள் நம்மைப்பற்றி இதைப்போலவே எழுதவேண்டிய சூழல் ஏற்படும். இதையே சக பதிவர்களுக்கிடையேயான கருத்துமோதலிலும் கைக்கொள்ளலாம். தகாத வார்த்தைகளைக்கூறி சகதி வாரியிறைப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இனிய சொற்களிலும் மாற்றுக்கருத்தை தெரிவிக்கமுடியும். ஆகவே கனியிருப்ப காய்களைக்கொள்ள வேண்டாம்.

ஒரே மொக்கைப்பதிவுகளாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா?..

சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள், ரெண்டு படம் நல்லாயிருந்தா பத்து படம் நமக்கு பிடிக்க மாட்டேங்குது. பிடிச்ச படத்திலேயும் ஏதோ பாட்டோ, சீனோ மொக்கையாக‌ போயிடுது. ஒரு இயக்குனரையே எடுத்துக்குங்க ஒரு படத்துல அள்ளிக்கொண்டு போய்விடுகிறார், இன்னொன்றில் காத்துவாங்கிவிடுகிறார். விகடன் எடுத்துக்கங்க.. ரெண்டு பகுதி நல்லாருக்குது. ரெண்டு பகுதி மொக்கையாக இருக்குது. அதுவும் யாருக்கோ பிடிக்கும். ஒரு எழுத்தாளர எடுத்துக்கங்க, ஒரு கதை இப்பிடி இன்னொன்று உண்டுமா? என்ற அளவில் இருக்கிறது. அடுத்த கதையில் பேஸ்த் அடிக்கவைக்கிறார். அதை மாதிரிதான் பதிவுலகமும் என எனக்கு பிடிக்காத பதிவுகளைப் பார்த்துக்கொள்ளும்போது நினைத்துக்கொள்கிறேன். எல்லா வலைப்பூக்களுமே சிறப்பாக இருக்கவேண்டியது என்ற அவசியமுமில்லை, ஒரே பதிவரின் எல்லா பதிவுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற‌ அவசியமுமில்லை.

என்னாபா இது எங்கியோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்திட்டேனே.?பொழச்சுப்போங்க.. இத்தோட விடுறேன்.

இணைப்பு :
அவர்
: நிறைய குரங்குகளை வைத்து கவுதம் மேனன் படமெடுத்தா என்ன பேர் வைப்பார்? இவர் : 'வானரம் ஆயிரம்'

குமுதம், விகடனில் இது போல மொக்கை ஜோக்குகளைப்பார்க்கும் போது எனக்கு நானே இது போல ஜோக் சொல்லி மகிழ்ந்துகொள்வேன். இப்போதான் நீங்கயிருக்கீங்களே.

Monday, October 6, 2008

ஆறு அல்ல நூறு வித்தியாசங்கள்.!

இங்கே கீழே தரப்பட்டிருக்கும் படத்தைக்கவனியுங்கள். படத்திலிருக்கும் இரண்டு பொருட்களுக்கும் உங்களால் நூறல்ல.. குறைந்தது ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் ஒரு மெக்கானிகல் எஞ்சினியராகவோ அல்லது அந்த துறை குறித்த தொடர்போ இல்லாதவராகவோ இருப்பின் கண்டுபிடிப்பது மிகச்சிரமம். ஆனால் நிஜத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் இந்த இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ளது. வாருங்கள் இந்த சுவாரசியமான விஷயத்தை மிகச்சுருக்கமாக சொல்லமுயல்கிறேன்.


கீழே உள்ள படத்தினைக்கவனியுங்கள். அந்தப்பொருளின் ஒரு பகுதியை குறிப்பிட்டுக்காட்டியுள்ளேன். அந்தப்பகுதியில் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? ...

பொருளின் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இடத்தில் உதாரணமாக சுற்ற‌ளவு (Diameter) 50 mm என்று கொள்க. இந்தப்பொருள் ஒரு கடைசல் எந்திரத்திலோ (Lathe) அல்லது வேறு ப‌ல‌ எந்திர‌ங்க‌ளின் துணைகொண்டோ உருவாக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். இந்த‌ப்பொருள் ஒரு காரில் பொருத்த‌ப்ப‌ட‌க்கூடிய‌ ஒரு உதிரிபாக‌ம் என‌க்கொள்வோம். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள். குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ அந்த‌ இட‌த்தின் சுற்ற‌ள‌வு 50 mm இருக்க‌வேண்டும் என்ப‌து காரை வ‌டிவ‌மைத்த‌வ‌ரின் முடிவு. ஆனால் பொருளை உருவாக்குப‌வ‌ர்க‌ள் ச‌ரியாக‌ 50 mmல் அனைத்து பாக‌ங்க‌ளையும் உருவாக்க‌முடிய‌மா? முடியாது. ச‌ரியாக‌ சொல்ல‌ப்போனால் அவர்களால் ஒரே ஒரு பாக‌த்தைக்கூட‌ மிக‌ச்ச‌ரியாக‌ 50 mmல் உருவாக்க‌முடியாது. ஏனென்ப‌தை க‌டைசியில் விள‌க்குகிறேன்.

அத‌னால் வ‌டிவ‌மைப்ப‌வ‌ர் என்ன சொல்கிறார் எனில், "உன்னால 50mmல பண்ணமுடியாதுனு எனக்கு தெரியும், அதுனால நீ என்ன‌ ப‌ண்ற. கொஞ்சம் முன்ன‌பின்ன‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை ப‌ண்ணிக்கொடு" என்கிறார். ஆனால் எவ்வ‌ள‌வு முன்ன‌ இருக்க‌லாம் எவ்வ‌ள‌வு பின்ன‌ இருக்க‌லாம் என்ப‌தையும் சொல்லிவிடுகிறார். அவர் சொல்வ‌த‌ற்கும் மேலேயோ, அல்ல‌து கீழேயோ போனால் அந்த‌ பொருள் ப‌ய‌ன‌ற்றுவிடுகிற‌து. உதார‌ண‌மாக‌ மேற்சொன்ன‌ பொருளில் +0.1 அல்ல‌து ‍-0.1 என்று அவர் 'விரிக்கப்பட்ட அளவை'த்தருகிறார் (Tolerence) ஆகவே அந்த சுற்றளவு 49.9 லிருந்து 50.1க்குள் எந்த இடத்திலிருந்தாலும் சரி என்று ஒப்புக்கொள்ளப்பட்டு தர அனுமதி செய்யப்படுகிறது.
ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால் ஒரு பொருள் 49.981 ஆகவும் இன்னொரு பொருள் 50.007 ஆகவும் இருக்கிறது. இதைப்போலவே பொருளின் பிற அளவுகளான உயரம், தடிமன், அதிலிடப்பட்டுள்ள‌ துளைக‌ளின் அள‌வு, செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இரும்பின் த‌ர‌ம், உடையும் த‌ன்மை, அத‌ன் வ‌ழுவ‌ழுத்த‌ன்மை (Finish) என‌ நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ த‌ன்மைக‌ளில் (Parameters) இர‌ண்டு பொருட்க‌ளுமே வேறுப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு பொருளிலேயே இத்த‌னை வேறுபாடுக‌ள் இருப்பின் நூற்றுக்க‌ண‌க்கான‌ பொருட்க‌ளைக்கொண்டு செய்ய‌ப்ப‌டும் இர‌ண்டு கார்க‌ளுக்கிடையேயான‌ வேறுபாடுக‌ளை நீங்க‌ள் க‌ற்ப‌னை செய்துபார்த்துக்கொள்ள‌லாம். ஆனால் பார்ப்ப‌த‌ற்கு இர‌ண்டு கார்க‌ளும் ஒன்று போல‌வே தோற்ற‌ம‌ளிக்கின்றன.

இப்போது இரண்டு கேள்விகள் :
ஏன் ஒரு பொருளை மிக‌ச்ச‌ரியாக‌ 50 ல் உருவாக்க‌முடியாது?
50.007 என‌ ஒரு அள‌வைப்ப‌ற்றி குறிப்பிட்டுள்ளீரே.. விள‌க்க‌முடிய‌மா?

இந்த‌ இர‌ண்டு கேள்விக‌ளுமே ஒன்றிற்கொன்று தொட‌ர்புடைய‌து. முத‌லில் இர‌ண்டாவ‌தைப்பார்ப்போம். 1 mm என்ப‌து 1 மீட்டரின் 1000ல் ஒரு பங்கு, அதாவது நாம் ப‌ள்ளியில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ அடிஸ்கேலின் சிறிய இர‌ண்டு கோடுக‌ளுக்கு இடைப்ப‌ட்ட‌ ப‌குதி. இந்த‌ 1 mmஐ 1000 ப‌ங்கு வைப்போமானால் கிடைப்ப‌தே ஒரு மைக்ரான் அதாவ‌து 0.001 mm. இந்த‌ அள‌வுக‌ளிலும் இத‌ற்கும் மேலும் ஆழ‌மாக‌ நாங்க‌ள் பொருளை சோத‌னை செய்து பிரிக்கிறோம். இப்போது உங்க‌ளுக்கு முத‌ல் கேள்விக்கும் விடை கிடைத்திருக்கும். மேலும், உதார‌ண‌மாக‌ இர‌ண்டு பொருட்க‌ளுமே 50.007 இருந்தால் என‌ நீங்க‌ள் இழுத்தால்.. இன்னும் ஆழ‌மாக‌ சோத‌னை செய்து ஒரு பொருள் 50.00712 ஆக‌வும் இன்னொரு பொருள் 50.00731 என‌வும் க‌ண்டுபிடிக்க‌லாம்.

அட‌ப்பாவிக‌ளா.. இவ்வ‌ள‌வு நுட்ப‌மாக‌ அள‌விட‌ முடிய‌மா? இல்ல‌ க‌தை வுடுறியா? என்று சந்தேகப்படுகிறீர்களா? நிஜ‌ம்தான். சாதார‌ண‌மாக‌ புள்ளியைத்தாண்டி மூன்று இல‌க்க‌ங்க‌ள் வ‌ரை அள‌விடுவ‌து வாக‌ன‌ உதிரிபாக‌ உற்ப‌த்தித் தொழிற்சாலைக‌ளில் மிக‌ மிக‌ சாதார‌ண‌ம். ஐந்து இல‌க்க‌ங்க‌ள் வ‌ரை அள‌விட்ட‌ அனுப‌வ‌ம் என‌க்கு உண்டு. இத‌ற்கும் மேலே உள்ள‌தா என‌ என‌க்கு தெரிய‌வில்லை. இதைப்ப‌டிக்கும் பிஸ்த்துக‌ள் யாராவ‌து சொல்ல‌லாம்.

ப‌ள்ளி க‌ல்லூரிக‌ளில் இர‌ண்டு த‌ச‌ம‌ இட‌ங்க‌ள் வ‌ரை அள‌விட‌க்கூடிய‌ திருக‌ள‌வி, வெர்னிய‌ர் ஆகிய‌வ‌ற்றை பார்த்திருப்பீர்க‌ள். நாங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மூன்று இட‌ங்க‌ள் வ‌ரை அள‌விட‌ ப‌ய‌ன்ப‌ட‌க்கூடிய‌ மானி இதோ கீழே..
டிஸ்கி 1: அய்யய்யோ.. எங்காவது வழிதவறி வந்துவிட்டோமா? இது தாமிரா பதிவுதானா என அதிர்ச்சியடைகிறீர்களா? அதிர்ச்சியடைய வேன்டாம், இது நம் பதிவுதான்.

டிஸ்கி 2: அனைத்து ப‌திவ‌ர்க‌ளும் அவ‌ர‌வ‌ர் துறையைப்ப‌ற்றி அடிக்க‌டி ப‌திவெழுத‌ வேண்டும், அப்போதுதான் அறிவுப்பகிர்தலுக்கு (Knowledge sharing) வழிவகுக்கும் என‌ ப‌திவ‌ர் ந‌ர்சிம், சென்ற‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் கேட்டுக்கொண்ட‌தாலும் என்னைத்த‌னியே கூப்பிட்டு மிர‌ட்டிய‌தாலும் இதை எழுதினேன். ஆக‌வே பாராட்டுக‌ளும், க‌ண்ட‌ன‌ங்க‌ளும் அவ‌ருக்கே செல்ல‌வேண்டும்.
டிஸ்கி 3: தொட‌ர்வ‌தா வேண்டாமா என‌ நீங்க‌ளே சொல்ல‌லாம் (அடிக்க‌வ‌ராதீர்க‌ள்.. சும்மா ஒரு பேச்சுக்குதான்)

டிஸ்கி 4: மன்னியுங்கள்.. அடுத்து வ‌ரும் ப‌திவும் துறை சார்ந்த‌ ப‌திவுதான். துறை : குடும்ப‌ம். ச‌ப்ஜெக்ட் : த‌ங்க‌ம‌ணி.
ஸ்ஸ்,. அலோ.. எந்திரிங்க, எந்திரிங்க‌.. அப்துல், பதிவு படிச்சிட்டிருக்கும் போது இப்பிடிலாம் தூங்கக்கூடாது, பரிசல் எழுப்பி விடுங்க..!

Sunday, October 5, 2008

ஞாநிக்கு என் பதில்

நேற்று நான் எழுதிய சென்னை பதிவர் சந்திப்பு குறித்த பதிவில் ஞாநி (நிஜ ஞாநிதானே.. பதிவுலகில் யாரையும் எதையும் நம்பமுடியவில்லை, எதற்கும் பதில் சொல்லிவிடுகிறேன்) வருத்தத்துடன் ஒரு பின்னூட்டம் அளித்திருந்தார். அதற்கு பதிலூட்டமாய் அங்கேயே நான் ஒரு பதில் தந்துள்ளேன். அதை ஞாநி பார்க்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக நான் கருதுவதால் அது இங்கே..

அவரின் பின்னூட்டம் இதுதான் :

gnani said... யாரும் என்னை அழைக்கவில்லை. ஒரு வலைப்பூவில் தகவல் பார்த்துவிட்டு நானாகவேதான் வந்தேன். என்னுடனான விவாதத்திலிருந்து நான் கழற்றிக் கொள்ளவில்லை. அது இன்னொரு சமயம் தனியே அதற்கென்றே வைத்துக் கொள்ளலாம் என்றுதான் சொன்னேன். தவிர அப்படிப்பட்ட விவாதத்தை கடற்கரை திறந்த வெளியில் கேட்பவர் கவனம் குலையாமல் நடத்த இயலாது. நான் திடீரென்று செல்ல வேண்டி வந்ததற்குக் காரணம் தற்காலிகமாக என் வீட்டில் தங்க இருக்கும் ஒரு பெண், பூட்டிய வீட்டு வாசலில் பெட்டியுடன் எனக்காகக் காத்திருப்பதாக தகவல் வந்ததினால்தான். இருந்த கொஞ்ச நேரத்தில், லக்கி லுக், ரோசா வசந்த் இன்னும் சிலருடன் கை குலுக்கினேன். ஜ்யொவோராம்சுந்தர் வலை உலகம் பற்றிய என் கருத்தைக் கேட்டதற்கு பதில் சொன்னேன். தாமிராவிடம் பெயர்க் காரணம், அவர் வேலை பற்றியெல்லாம் விசாரித்தேன். குப்பனுடன் பேசினேன். மும்பையில் எங்கிருந்தேன் என்ற டோண்டுவின் கேள்விக்கு பதில் சொன்னேன். என் தளத்தில் பிடிஎஃப் பைல்கள் போடுவதைப் பாராட்டிய பாலபாரதியுடன் அதன் காரணம் சொன்னேன். பழைய நண்பர் சுகுணா திவாகருடன் அவர் விகடனில் இப்போது வேல செய்வது பற்றி விசாரித்தேன். டாக்டர் புருனோவின் மருத்துவக் குறிப்புகளுக்கு அவரைப் பாராட்ட எண்னியபோது தொலைபேசி அழைப்பு வந்து உடனே செல்லவேண்டியதாகிவிட்டது. எனவே நழுவினேன், கழன்றேன், யார் அழைத்தார்கள் போன்ற பதப்பிரயோகங்கள் பொருத்தமற்றவை. நன்றி.

அதற்கு என் பதில் :

அன்புள்ள ஞாநி,

நீங்கள் என் மரியதைக்குரிய எழுத்தாளர். நீங்கள் விவாதத்திலிருந்து கழன்றதாக நான் கூறவில்லை. அதைத்தவிர்த்ததற்கு தகுந்த பதில் கூறியதாகவே குறிப்பிட்டுள்ளேன். உங்களை அழைத்தது யார் என்று அடைப்புக்குள் கேட்டது அவரை பாராட்டத்தானே தவிர கிண்டல் செய்யும் நோக்கம் சிறிதுமில்லை. அழைக்காமலே நீங்கள் வருவதென்பது எங்களை பெருமை செய்யும் விஷயமே. அதை அறியாத மூடனல்ல நான். பதிவு முழுதுமே எனது பார்வையிலும் கொஞ்சம் (அதிகமாகவே) சுயபுராணம் பாடுவதாகவும் அமைந்துள்ளதை கவனித்திருப்பீர்கள். காரணம் வேறென்ன புகழ் ஆசையும் எழுத்தைக்கையாளும் அனுபவமின்மையும்தான். மெல்லிய நகைச்சுவை என் எழுத்தில் இழையோடுவதாக நானே நினைத்துக்கொண்டதன் விளைவுதான் இந்தப்பதிவும் எழுதப்பட்டுள்ள இப்படியான‌ நடையும். இது போன்ற பதிவுகளையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமான விஷயமே. மூத்தோர்களைக்குறித்து எழுதும்போது இன்னும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நான் கற்ற பாடம். நன்றி.!

இருப்பினும் பதிவின் எந்த வரிகளாவது உங்களை வருந்தச்செய்திருக்குமானால் அதற்காக நானும் உண்மையிலேயே வருந்துகிறேன்.

அன்புடன்

தாமிரா.

டிஸ்கி : ஹைய்ய்யா.. நானும் பெரியாளுங்களுக்கு பதில் சொல்ற அளவுக்கு பெரியாளாயிட்டேன்.. உய்..உய்.. (பாருங்கள்.. இங்கேயும் இந்த‌ ந‌கைப்புக்கான‌ வ‌ரிக‌ளை எழுதாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.)

Saturday, October 4, 2008

சென்னை பதிவர் மாநாடு 04.10.08 (ஒரு லைவ் ரிபோர்ட்)

இதுவே பெரும்பாலும் இன்றைய பதிவர் சந்திப்பு குறித்த முதல் பதிவாக இருக்கக்கூடும். ஏனெனில் இன்னும் மாநாடு நடந்துகொண்டிருக்கலாம். ரமாவின் தொந்தரவினால் சீக்கிரமே கிளம்பவேண்டியதாகிவிட்டது. இருப்பினும் டோன்டு ராகவன் போன்ற பதிவர்களின் வேகம் நாம் ஏற்கனவே அறிந்திருப்பதால் இதையே முதல் பதிவு என்று உறுதியாக சொல்ல தயங்குகிறேன். இன்றே பதிவிட்டு ஹிட்ஸை அள்ளிவிடவேண்டும் என்ற உள்நோக்கம் ஒரு புறம் இருந்தாலும், தேர்தல் ரிசல்ட்டை அறிந்துகொள்ளும் ஆவலோடு இருக்கும் உங்களை ஏமாற்ற மனமில்லாமலே நாளை போடலாம் என நினைத்த பதிவை இன்றே அடித்துக்கொண்டிருக்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வாருங்கள். இன்று மாலை 4 மணிக்கு வெண்பூவுக்கு போன் செய்து அவர் வருவதை உறுதிசெய்துகொண்டேன். பின்னர் தெரிந்த மேலும் ஒரு பதிவரான ஸ்ரீயை அழைத்தபோது பிஸி என்றார், வேறு யாரை என‌க்கு தெரியும்? வாருங்கள் பாஸ் என்ற போது, 'உங்களுக்குதான் யாரையும் தெரியாது, ஆனால் உங்களை அனைவருக்கும் தெரியும். போனவுடன் அனைவரும் உங்களை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், தைரியமாய் போய் வாருங்கள்' என்று டைமிங் ஜோக்கடித்தார். சிரித்துவிட்டு கிளம்புகிற வழியைப்பார்த்தேன்.

சம்பவ இடத்தை அடைந்த போது மணி 6.15. அதிஷா நம்பரை அழைத்தபோது 'அருகிலேயேதான் நின்று கொண்டிருக்கிறோம், கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் பாஸு' என்றார். அவர் பாஸ் என்றது என் காதில் பேக்கு என்று விழுந்த மாதிரி இருந்தது. பார்த்தால் அதிஷா (இருப்பதிலேயே இவருக்குதான் வயசு குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்), லக்கி(பெரியார் டி ஷர்ட் அருமை), குப்பன்யாஹூ, பாலபாரதி, ஜ்யோவ்ராம் (இவரை மிக இளமையாய் எதிர்பார்த்தேன்), கென் (இவரை வயதானவராய் எதிர்பார்த்தேன்), டோன்டு ராகவன், ஜிங்காரோ, கார்க்கி மற்றும் பலரென (அனைவரின் பெயரையும் டோன்டு சாரின் பதிவில் பார்த்துக்கொள்ளவும். நமக்கு மெமரி டிஸ்க் ரிப்பேர்) சுமார் 15 பேர் அதற்குள்ளாகவே வந்திருந்தார்கள். அனைவருக்கும் கைகொடுத்து அறிமுகம் செய்துகொண்டு கார்க்கியின் அருகே அமர்ந்துகொண்டேன். கார்க்கியை ஏற்கனவே ஒருமுறை ஹைதராபாத்தில் சந்தித்திருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் டாக்டர் புரூனோ, நர்ஸிம், முரளிகண்ணன் (இது கொஞ்சம் பெரிய படிப்பு படிச்ச குரூப்புனு நினைக்கிறேன்) என மேலும் பத்து பேர் கூடினர்.

பின்னர் எதிர்பாராத‌ அழைப்பாளராக ஞாநி வந்தார். (அழைத்தவர் யாருப்பா அது?). எல்லோரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர். கூட்டமும் அமைதியாயிற்று. பின்னர் சில நிமிடங்களில் அந்த அமைதியை குலைத்து நர்ஸிம் ஞாநியிடம், "உங்கள் மீது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுப்பொருளை மாற்றுக்கருத்துக்கூறி கவனத்தை ஈர்ப்பவர் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்தை கூற முடியமா?" என்று கேட்டு பேச்சுக்கான ஒரு நல்ல ஆரம்பத்தை துவக்கினார்.

ஆனால் ஞாநியோ "இந்தப்பொருளில் விவாதிக்க நான் தயாராகவேயிருக்கிறேன். ஆனால் இங்கு அல்ல, பிரிதொரு சந்திப்பில் வைத்துக்கொள்ளலாம். இங்கு அதை ஆரம்பித்தால் உங்கள் அஜென்டா கெட்டுப்போகலாம், மேலும் இன்று நான் ஒரு பார்வையாளனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று கழன்றுவிட்டார். பின்னர் ஒருவருக்கொருவர் முனகத்துவங்க ஒருபுறமாய் புரூனோ, ஜ்யோவ்ராம், லக்கி, பாலபாரதி ஆகியோர் சிகரெட்டுக்கு பொது இடத்தில் வந்த தடையைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இதற்குள் மேலும் சில பதிவர்களும் (புதிய?), வாசகர்களும்(?) கூடியிருந்தனர். எதிர்பார்க்கப்பட்ட பொட்டிக்கடை மட்டும் இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை. விவாதம் அனைவரும் ஒருபுறம், புரூனோ ஒருபுறம் என நியாயமில்லாமலும், மிகச்சூடாகவும் இருந்தது. ஐந்தே நிமிடம்தான் ஞாநி இது பெயராது என்று நினைத்தாரோ என்னவோ "பை" சொல்லிவிட்டு ஓடிவிட்டார்.

கார்க்கியும் நானும் குசுகுசுவென பேசிக்கொண்டோம். வெண்பூதான் டிமிக்கி கொடுத்துவிட்டாரே. கார்க்கி டென்ஷனாக‌ 'என்ன இந்த சப்பை சப்ஜக்டை எடுத்துப்பேசி, ஞாநியை விரட்டிவிட்டார்களே, அவர் பதிவர்களை பற்றி என்ன நினைப்பார்?' என்று கொதித்தார். நான் 'அவருக்கு நல்லா தெரியும், அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டார், நீங்க கூலாவுங்க' என்று அமைதிப்படுத்தினேன்.
பின்னர் ஒரு குரூப் தம்மடிக்கும் இடம்தேடிச் செல்ல, ஜிங்காரோ, கார்க்கி, நான் மூவரும் தம்மடிப்பதைப்போல கடற்கரைக்கு அலைகளை வேடிக்கைப்பார்க்க கிளம்பினோம் (மூவருமே தம் அடிக்கக்கூடியவர்கள் எனினும் யாருக்குமே தைரியம் இல்லை).

ஐந்தே நிமடத்தில் திரும்பினோம். சிலர் கிளம்பியிருந்தனர். மேலும் சிலர் வந்திருந்தனர். சூழலே மொத்தமாக மாறியிருந்தது. பொட்டிக்கடையும் வந்திருந்தது. சிறு சிறு கும்பல்களாக சிரிப்பும், அறிமுகமும், கலாய்த்தலுமாய் இப்போதான் மனதுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. லக்கி, பொட்டிக்கடையுடன் சிறிது நேரம், முரளிகண்ணன் குரூப்பில் சிறிது நேரம், மேலும் புதியவர்களிடம் சிறிது நேரம் என அளவளாவிக்கொண்டிருந்த போது முதல் அழைப்பு ரமாவிடமிருந்து வந்தது. மணி 7.50. அதிஷா அனைவரிடமும் கலகலப்பாக இருந்தார், ஒருவருக்கொருவரை அழைத்துவந்து அறிமுகம் செய்து வைத்தார். இதற்குள் பொட்டிக்கடை சார்பில் அனைவருக்கும் குச்சி ஐஸ் கிடைத்தது.

8.00 மணிக்கு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிய போது அதிஷா வலுக்கட்டாயமாக மேலும் ஒரு பத்து நிமிடங்கள் பொறுங்கள், ஒரு முக்கிய பதிவர் வெளியூரிலிருந்து வந்துகொண்டிருக்கிறார் என்று என்னை நிறுத்தினார். சரியாக 8.15க்கு அந்த பதிவர் வந்தபோது நான் மிக ஆச்சரியமானேன். அவர் வடகரை வேலன். மகிழ்ச்சியோடு அவரிடமும் பேசிவிட்டு விடைபெற்றேன்.

கடைசி வரை பஜ்ஜி, போன்டாவைப்பற்றி யாருமே பேச்சையெடுக்கவில்லையே என்று யோசித்தவாறே நான் வண்டியை நிறுத்தியிருந்த இடத்துக்கு நடக்கலானேன்.

டிஸ்கி : எனது படப்பொட்டி தற்செயலாக என் தம்பியிடம் மாட்டிக்கொண்டதால் இந்த முறையும், மங்களூர் திருமணத்தைப்போல புகைப்படங்கள் தரமுடியவில்லை. ஸாரி. இன்னொரு சமயம் இப்படி வாய்ப்பை தவறவிடாமல் போட்டோ தர முயல்கிறேன். விஷயம் என்னவெனில் வேறு யாருமே போட்டோ எடுத்ததுபோலவே தெரியவில்லை. ஆகவே பிறரிடமாவது போட்டோக்கள் பார்க்கலாம் என நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

Friday, October 3, 2008

நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்.!

நேரில் எனைக்காணும் குறிப்பாக என் தொப்பையை காணும் புதிய நண்பர்கள் நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறீர்களோ என்று கேட்பது வழக்கம். என்ன அர்த்தத்தில் கேட்பார்களோ எனக்குத்தெரியாது. பொறாமையில் கேட்கிறார்கள் என்று நான் நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வளவு சுறுசுறுப்பாக உடற்பயிற்சியிலும், விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினேன் என நினைவுகூறப்போகிறேன் உங்களுக்காக..

எனது 25வது வயது வரை 40 கிலோவைக்கூட தாண்ட முடியாமல் பரிசல்காரனின் தம்பி போல இருந்த நான், பின்னர் உடனடியாக இரண்டல்லது மூன்று வருடங்களில் வெண்பூவின் அண்ணன் போல ஆகியது ஒரு பெரிய கதை. சுருக்கமாகவே சொல்கிறேன், வாருங்கள்.

முன்பே சொன்னபடி 20 வயது வரை ஒல்லிப்பிச்சானாக இருந்ததாலும், உடற்பயிற்சி செய்தால் மேலும் ஒல்லியாகிவிடுவோம் என்ற‌ ப‌ய‌த்தினால் உடற்பயிற்சி பக்கமே தலைவைத்தும் படுக்கவில்லை. தென்காசி அருகே வ‌னாந்திர‌த்தில் அமைந்திருந்தது எங்க‌ள் க‌ல்லூரி. நல்ல‌ காற்ற‌டி கால‌த்தில் தெம்பான‌ மாண‌வ‌ர்க‌ளே மேல்காற்றில் சாலையிலிருந்து க‌ல்லூரிக்கு 500 மீட்ட‌ர்தான், செல்ல‌ சிர‌ம‌ப்ப‌டுவார்க‌ள். என்னைப்போலுள்ள‌வ‌ர்க‌ள் நான்கைந்து பேராய் கையைப்பிடித்துக்கொண்டுதான் செல்வோம். ஒரு நாள் புளிய‌ம‌ர‌த்தைக் க‌ட்டிப்பிடித்துக்கொண்டு அரைம‌ணி நேர‌ம் கிட‌ந்த‌தெலாம் த‌னிக்க‌தை. ச‌ரி, இந்த‌ க‌ல்லூரிக்க‌தையை பிரிதொரு ச‌ம‌ய‌ம் சுவார‌சிய‌மாக (கள்ளு குடித்த அனுபவத்துடன்) பார்க்க‌லாம். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

மேலும் ப‌டிப்பு ப‌டிப்பு என்று இருந்துவிட்ட‌தாலும் (ஏழு பேப்ப‌ர்ஸ் அரிய‌ர்ஸ்) உட‌ற்ப‌யிற்சி ப‌ற்றிய‌ கவ‌ன‌மே இல்லாது போய்விட்ட‌து. விளையாட்டில் எனது ஆர்வமோ அதைவிட பிரமாதமாக இருந்தது. எறி பந்தோ, கில்லி தாண்டோ, பின்னர் கிரிக்கெட்டோ எனக்கு மிக ஆபத்தான விளையாட்டாக பட்டது. பின்னர் தைரியம் வந்து ஸ்கூல் பைனலிலும், கல்லூரியிலும் பிறர் விளையாடும் கால்பந்தையோ, கிரிக்கெட்டையோ தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். இன்டோர் கேம்களிலும் கேரம் போர்டையும், செஸ்ஸையும் தவிர வேறெதுவையும் கேள்வி கூட பட்டதில்லை (இப்போ மட்டும் என்ன வாழுது?). கேரம் போர்டெல்லாம் வாங்கும் அளவு நாலெட்ஜ் வீட்டில் யாருக்கும் இருக்கவில்லை. செஸ் போர்ட் மட்டும் என் மாமா ஒருவர் வாங்கித்தர அதை வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு சிறு பிள்ளைகளை ஏமாற்றி விளையாடுவேன் அவ்வளவுதான். கல்லூரி முடிந்து, பின்ன‌ர் வேலை வேலை என்று இருந்துவிட்ட‌தாலும் உட‌ற்ப‌யிற்சியைக் க‌வ‌னிக்க‌முடிய‌வில்லை.

ஒருவ‌ழியாக சென்னை வந்து அம்ப‌த்தூரில் கொஞ்ச‌கால‌ம் செட்டிலான‌ போது உட‌லின் மீது க‌வ‌ன‌ம் வ‌ந்த‌து. என்ன‌டா இன்னும் நாப்ப‌து கிலோவை தாண்ட‌வில்லையே.. ஒரு பிக‌ரும் திரும்பிக்கூட‌ பார்க்க‌மாட்டேங்குதே என்ற‌ க‌வ‌லை. ஹார்டை வுடு ம‌ச்சான், பீர்தான் உட‌ம்புக்கு ந‌ல்ல‌து என்ற‌ ந‌ண்ப‌னின் அறிவுரைப்ப‌டி பிய‌ர‌டிக்க‌த்தொட‌ங்கியும் ஒரு முன்னேற்ற‌த்தையும் காண‌வில்லை. ஜிம்முக்கு போலாண்டா என்ற‌வ‌னைப்பார்த்து கொலைவெறிப் பார்வை பார்த்தேன்.

யோகா

பின்ன‌ர் யோகா ப‌ண்ணினா ந‌ல்ல‌தாம்டா, உடம்பு தேறுமாம் பதஞ்சலி முனிவரே சொல்லிருக்காராம்டா என்று க‌ண்ண‌ன் சொல்ல‌ ந‌ம்பி இருவ‌ருமே பாடியிலுள்ள‌ ஒரு பெரிய‌வ‌ரிட‌ம் யோகா கிளாஸ் சேர்ந்தோம். அவ‌ருடைய‌ பெரிய‌ தொப்பையைப் பார்த்த‌வுட‌னே ச‌ந்தேக‌ப்ப‌ட்டேன், அது போல‌வே ஒரு ஆச‌ன‌த்தையும் அவ‌ர் செய்து காண்பிக்க‌வில்லை. மாறாக‌ புக்கைப்பார்த்து எங்க‌ளை செய்ய‌ச்சொல்லி பார்த்துக்கொண்டார். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் காலையில் ஆறு ம‌ணிக்கே வ‌ர‌ச்சொல்லி ப‌டுத்திவிட்டார். 15 நாட்க‌ளில் எங்க‌ளின் யோகா முடிவுக்குவ‌ந்த‌து.

ஜிம்

தொட‌ர்ந்து ஜிம் செல்வ‌து என்றும் அங்குள்ள பயிற்சியாளரிடம் நம் தேவையை சொல்லி அதற்கு தகுந்த உடற்பயிற்சியை செய்வது என்றும் தீர்மான‌மாயிற்று. உட‌னே ம‌ண்ணூர்பேட்டையிலுள்ள‌ ஒரு ஜிம்மில் இணைந்தோம். புதிதாக‌ ஷார்ட்ஸ், ஷூக்க‌ள் எல்லாம் வாங்கியாயிற்று. இங்கும் எங்களுக்கு காலை ஆறு மணி ஸ்லாட்டே தந்தார்கள். அல்லது மாலை ஏழு மணிதான் என்றார்கள். மாலையில் உடற்பயிற்சி செய்யலாமா என்ற சந்தேகத்தினை கேட்டுத்தீர்த்துக்கொண்டவுடன் மாலை நேரத்தையே தேர்ந்தெடுத்தோம். ரொம்ப‌ ஆர்வ‌த்துட‌ன் முத‌ல் நாள் சில‌ ப‌யிற்சிக‌ளை செய்தோம். ம‌றுநாள் காலைதான் எழுந்திருக்க‌ முடியாம‌ல் தொடையும் தோள்ப‌ட்டையும் விண் விண்ணென்று தெரித்த‌து. ப‌டிக‌ளில் இற‌ங்க‌முடிய‌வில்லை. முத‌ல் நாள் இப்ப‌டித்தான் இருக்குமாம், இருப்பினும் தொட‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌த்தில் மேலும் மூன்று நாட்க‌ள் சென்றோம். அவ்வ‌ள‌வுதான், நாலே நாள், ஜிம் இனிதே நிறைவ‌டைந்த‌து.

அதிகாலை ஓட்ட‌ம்

ஜிம்முக்காக‌ வாங்கிய‌ ஷூக்க‌கை அவ்வ‌ப்போது பார்த்துக்கொள்வேன். எந்த‌ உட‌ற்ப‌யிற்சியைவிட‌வும் நீச்ச‌லும், ஓட்ட‌மும் மிக‌ச்சிற‌ந்த‌து என‌ ஒருநாள் ம‌ப்பில் க‌ண்ண‌ன் சொற்பொழிவாற்ற‌‌ புல்ல‌ரித்து ம‌றுநாளே காலையில் ஓடுவ‌து என்று தீர்மான‌மாயிற்று. எங்கே ஓடுவ‌து? அம்ப‌த்தூர் எஸ்டேட் குறுக்குச்சாலைக‌ள் சிற‌ப்பான‌வை. ஆனால் நாய்க‌ளுட‌ன் ந‌ம‌க்கு ஏற்க‌ன‌வே அனுப‌வ‌ம் இருக்கிற‌தே. என‌வே MTH சாலையிலேயே லூகாஸ்டிவிஎஸ் வரை ஓடுவ‌தென்று முடிவாயிற்று. ஆனால் ஆறு ம‌ணிக்கு மேல் ஓடினால், ம‌க்க‌ள் ச‌ந்தேக‌த்தில் விர‌ட்டிப்பிடிக்க‌க்கூடும் என்ப‌தாலும், டிராபிக் தொல்லை இருக்குமென்ப‌தாலும், உட‌ல்ந‌ல‌த்துக்காக‌ எந்த‌ தியாக‌த்தையும் செய்ய‌லாம் என்று முடிவு செய்து அதிகாலை 4.30க்கு ஆர‌ம்பித்து 5.30க்குள் வ‌ந்துவிடுவ‌தென்றும் தீர்மானித்தோம். அத‌ன் ப‌டி முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிப்போய் வ‌ந்தோம். மூன்றாம் நாள் 4.15 க்கு அலாரம் என்னவோ அடிக்கத்தான் செய்தது. ஆனால் நாங்கள் எழுந்த போது மணி 5.00. இருப்பினும் மனம் தளராமல் தேவர் ஒயின்ஸ் வரை ஓடிவிட்டு வந்தோம். நான்காம் நாள் கண்ணன், லேசா முடியல இன்னிக்கு ஒருநாள் லீவு உட்டுரலாம் என்றான். நானும் அந்த வார்த்தைக்குதான் காத்திருந்தவன் போல சந்தோஷமாக தலையாட்டிவிட்டு மகிழ்ச்சியாக எட்டு மணி வரை தூங்கி மகிழ்ந்தேன். அன்றோடு முடிந்தது அதிகாலை ஓட்டம்.

ஸ்கிப்பிங்

ஓடுவதிலுள்ள அத்தனை லாபங்களும் ஸ்கிப்பிங்கிலும் உள்ளது என்ற அரிய உண்மையை அடுத்து நாங்கள் கண்டுபிடித்தோம். மேலும் இதில் பல பிளஸ் பாயிண்டுகளும் உண்டு. ஜிம்மைப்போல பணம் கட்ட வேண்டாம், ஓட்டத்தைப்போல அதிகாலை எழுந்திருக்கவேண்டாம். பாதியில் வேன்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம் (ஓட்டத்தில் முடியாது, லூகாஸுக்கு போய் விட்டால் திரும்பிவர வேண்டுமே) நேரமும் நம் வசதியைப்பொறுத்தது, முதலில் வெளியே போக‌ வேண்டிய‌தில்லை. மாடியிலேயே வேண்டுமானால் ரூமுக்குள்ளேயே செய்து கொள்ள‌லாம். முத‌லில் இருப‌து, முப்ப‌து என்று ஆர‌ம்பித்து இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்குள் ஆயிர‌ம் வ‌ரை போய்விட‌வேண்டும் என்று தீர்மான‌மான‌து. தேடிப்பிடித்து இர‌ண்டு ஸ்கிப்பிங் க‌யிறுக‌ளையும் வாங்கிவ‌ந்தோம். இந்த‌ உட‌ற்ப‌யிற்சி இடையிடையே லீவு விட்டுக்கொண்டு சு‌மார் ஒரு மாத‌ம் வ‌ரை செய‌ல்ப‌ட்டு பின்ன‌ர் நிறைவு பெற்ற‌து.

ஷ‌ட்டில் காக்

பின்ன‌ர் தீவிர‌மாக‌ சிந்தித்த‌ போது, வெறும் உட‌ற்ப‌யிற்சியாக‌ நாம் சிந்திப்ப‌தனால்தான் விரைவில் போர‌டித்துவிடுகிற‌து ப‌திலாக‌ சுவார‌சிய‌மான‌ விளையாட்டாக‌வும் அது இருந்தால் ந‌ன்றாக‌ இருக்கும் என்று சித்த‌ம் தெளிந்தோம். ப‌க்க‌த்து அறை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் விவாதித்தோம். உட‌ற்ப‌யிற்சியின் அவ‌சிய‌த்தை அவ‌ர்க‌ளுக்கு எடுத்துரைத்து அவ‌ர்க‌ளும் ஈடு ப‌ட்டால் ம‌ட்டுமே இது சாத்திய‌மாகும் என‌வும் கேட்டுக்கொண்டோம். (ஏனெனில் பேட்ஸ், வலை, பந்துகள் என பணம் சம்பதப்பட்டிருக்கிறதே.!) ச‌ம்ம‌திக்க‌வில்லை எனில் தண்ணிய‌டிப்ப‌து ச‌ம்ப‌ந்த‌மான‌ எந்த‌ வித‌மான‌ கொடுக்க‌ல் வாங்க‌லும், ஒத்துழைப்பும் நிறுத்த‌ப்ப‌டும் என்றும் எச்ச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்திட்டார்க‌ள். என்ன‌ விளையாட‌லாம் என‌ விவாதித்த‌போது கிரிக்கெட் என்று ஆர‌ம்பித்த‌ ஒருவ‌ன‌து மூக்கிலேயே குத்தி ஷ‌ட்டில் காக் என்று முடிவுசெய்தோம் (ஆப‌த்து குறைவாச்சே, ப‌ந்து மேலே ப‌ட்டாலும் வ‌லிக்காது). பின்ன‌ர் அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளில் ப‌ல‌த்த‌ வேலைப்ப‌ளு. ப‌க்க‌த்து காலிமனையை அனும‌தி வாங்கி (குப்பையும், முள்ளு மரமுமாய் இருப்பதைவிட இடம் சுத்தமாக இருக்கும் என்பதால் அவர்களுடைய குட்டிப்பையனையும் விளையாட சேர்த்துக்கொள்ளவேன்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தார்கள்) முள்ளுவெட்டுதல், சுத்த‌ப்ப‌டுத்துத‌ல், பணம் வசூலிப்பு, உப‌க‌ர‌ணங்கள் ப‌ர்சேஸ் என‌ ப‌ய‌ங்க‌ர‌ பிஸி. மூன்றாம் நாள் விளையாடத்துவங்கினோம், எப்ப‌டி விளையாடுவ‌து என்ற‌ விதிமுறைக‌ள் தெரியாத‌தால் நாங்க‌ளே வ‌குத்துக்கொண்டோம். இந்த‌ ஓர‌ள‌வு வெற்றி பெற்று சுவார‌சிய‌ம் தொற்றிக்கொள்ள‌ ம‌கிழ்ச்சியாய் விளையாட‌த்துவ‌ங்கினோம். ஆனால் சோதனையாக பொங்க‌ல் விடுப்பு வர‌ ஒரு 10 நாள் ஊருக்கு சென்றேன். ப‌ல‌ரும் சென்றார்க‌ள். திரும்பிவ‌ந்த‌போது எங்க‌ள் ஷ‌ட்டில் கோர்ட்டில் பில்டிங் க‌ட்டுவ‌த‌ற்கான‌ வான‌ம் தோடும் ப‌ணி துவ‌ங்கியிருந்த‌து.

அந்த சமயத்தில்தான் அதுவரை கிடைக்காத ஒரு விஷயமான சுவையான உணவை இரண்டு தெரு தள்ளி புளியங்குடிகாரர் ஒருவர் நடத்திக்கொண்டிருந்த ஒரு மெஸ்ஸில் கண்டுபிடித்தோம். அதன் பின்னர் மூணு நேரமும் மூக்குப்பிடிக்க தின்பதே என் ஒரே உடற்பயிற்சியாயிற்று. அதுதான் நான் குண்டானதுக்கு (இப்போ இருப்பதுபோல) காரணம் என நினைக்கிறேன்.

கொஞ்ச‌ நாள் க‌ழித்து கேர‌ம் போர்ட் வாங்க‌லாம்டா, டைம் பாஸாகும், கேர‌ம் விளை‌யாண்டா விர‌லுக்கு ந‌ல்ல‌தாம் என்ற‌ க‌ண்ண‌னை நான் கொலைவெறிப்பார்வை பார்த்தேன். ‌

எங்க வீட்டு ஷாப்பிங் லிஸ்ட்!

அரிசி, பருப்பு, மளிகை எல்லாம் பெரும்பாலும் பக்கத்து மளிகைக்கடையிலேயே முடிந்துவிட்டாலும் அது தவிர மற்றொரு லிஸ்ட்டும் உண்டு, மாதம் ஒருமுறை அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை. இந்த மாதத்திற்கான அந்த லிஸ்ட்டில் பொதுப்பிரிவைத் தவிர்த்து ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து கீழே தருகிறேன், பாருங்கள்.!

(என‌க்கான‌வை)

லை.:ப்பாய்

பிளேடு

ஷூபாலிஷ் பிளாக்

(ர‌மாவுக்கான‌வை)

ஹ‌மாம் ந‌ல‌ங்குமாவு

பேன்டீன் ஷாம்பூ(பெரிது)

கார்னிய‌ர் அல்ட்ராடாக்ஸ் க‌ன்டிஷ‌ன‌ர்

கார்னிய‌ர் ஆன்டிஏஜிங் க்ரீம்

இமாமி பேரெவ‌ர் பேர்ன‌ஸ்

பான்ட்ஸ் பேஸ்வாஷ்

ஏவான் ஸ்கை

அஸ்வினி ஹேராயில்

பான்ட்ஸ் மாஜிக்

லாக்மே செர்ரி

லாக்மே டிபைன் பிளாக்

லாக்மே ஸ்பிரிட் N231

...என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

டிஸ்கி 1: இதில் சில பொருட்களை என்ன‌ என்று தெரியாத‌ அப்பாவிக‌ள் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌ த‌குதியில்லாத‌வ‌ர்க‌ள் என‌ நான் அறிவிக்கிறேன்.

டிஸ்கி 2: சில‌ விவ‌ர‌ம் தெரிந்த‌ அம்ம‌ணிக‌ள் லிஸ்ட்டை பார்த்துவிட்டு இது க‌ற்ப‌னை, பொருட்பிழை இருக்கிற‌து என்று கூறி, உதார‌ண‌மாக‌ இமாமி பேரெவ‌ரும், கார்னிய‌ர் ஆன்டி ஏஜிங் இர‌ண்டையும் ஒருவ‌ர் வாங்குவ‌த‌ற்கு வாய்ப்பு குறைவு என்று வாதிட‌லாம். அவ‌ர்க‌ளைப்பார்த்து நான் சிரிக்கிறேன்.