Saturday, October 4, 2008

சென்னை பதிவர் மாநாடு 04.10.08 (ஒரு லைவ் ரிபோர்ட்)

இதுவே பெரும்பாலும் இன்றைய பதிவர் சந்திப்பு குறித்த முதல் பதிவாக இருக்கக்கூடும். ஏனெனில் இன்னும் மாநாடு நடந்துகொண்டிருக்கலாம். ரமாவின் தொந்தரவினால் சீக்கிரமே கிளம்பவேண்டியதாகிவிட்டது. இருப்பினும் டோன்டு ராகவன் போன்ற பதிவர்களின் வேகம் நாம் ஏற்கனவே அறிந்திருப்பதால் இதையே முதல் பதிவு என்று உறுதியாக சொல்ல தயங்குகிறேன். இன்றே பதிவிட்டு ஹிட்ஸை அள்ளிவிடவேண்டும் என்ற உள்நோக்கம் ஒரு புறம் இருந்தாலும், தேர்தல் ரிசல்ட்டை அறிந்துகொள்ளும் ஆவலோடு இருக்கும் உங்களை ஏமாற்ற மனமில்லாமலே நாளை போடலாம் என நினைத்த பதிவை இன்றே அடித்துக்கொண்டிருக்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வாருங்கள். இன்று மாலை 4 மணிக்கு வெண்பூவுக்கு போன் செய்து அவர் வருவதை உறுதிசெய்துகொண்டேன். பின்னர் தெரிந்த மேலும் ஒரு பதிவரான ஸ்ரீயை அழைத்தபோது பிஸி என்றார், வேறு யாரை என‌க்கு தெரியும்? வாருங்கள் பாஸ் என்ற போது, 'உங்களுக்குதான் யாரையும் தெரியாது, ஆனால் உங்களை அனைவருக்கும் தெரியும். போனவுடன் அனைவரும் உங்களை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், தைரியமாய் போய் வாருங்கள்' என்று டைமிங் ஜோக்கடித்தார். சிரித்துவிட்டு கிளம்புகிற வழியைப்பார்த்தேன்.

சம்பவ இடத்தை அடைந்த போது மணி 6.15. அதிஷா நம்பரை அழைத்தபோது 'அருகிலேயேதான் நின்று கொண்டிருக்கிறோம், கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் பாஸு' என்றார். அவர் பாஸ் என்றது என் காதில் பேக்கு என்று விழுந்த மாதிரி இருந்தது. பார்த்தால் அதிஷா (இருப்பதிலேயே இவருக்குதான் வயசு குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்), லக்கி(பெரியார் டி ஷர்ட் அருமை), குப்பன்யாஹூ, பாலபாரதி, ஜ்யோவ்ராம் (இவரை மிக இளமையாய் எதிர்பார்த்தேன்), கென் (இவரை வயதானவராய் எதிர்பார்த்தேன்), டோன்டு ராகவன், ஜிங்காரோ, கார்க்கி மற்றும் பலரென (அனைவரின் பெயரையும் டோன்டு சாரின் பதிவில் பார்த்துக்கொள்ளவும். நமக்கு மெமரி டிஸ்க் ரிப்பேர்) சுமார் 15 பேர் அதற்குள்ளாகவே வந்திருந்தார்கள். அனைவருக்கும் கைகொடுத்து அறிமுகம் செய்துகொண்டு கார்க்கியின் அருகே அமர்ந்துகொண்டேன். கார்க்கியை ஏற்கனவே ஒருமுறை ஹைதராபாத்தில் சந்தித்திருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் டாக்டர் புரூனோ, நர்ஸிம், முரளிகண்ணன் (இது கொஞ்சம் பெரிய படிப்பு படிச்ச குரூப்புனு நினைக்கிறேன்) என மேலும் பத்து பேர் கூடினர்.

பின்னர் எதிர்பாராத‌ அழைப்பாளராக ஞாநி வந்தார். (அழைத்தவர் யாருப்பா அது?). எல்லோரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர். கூட்டமும் அமைதியாயிற்று. பின்னர் சில நிமிடங்களில் அந்த அமைதியை குலைத்து நர்ஸிம் ஞாநியிடம், "உங்கள் மீது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுப்பொருளை மாற்றுக்கருத்துக்கூறி கவனத்தை ஈர்ப்பவர் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்தை கூற முடியமா?" என்று கேட்டு பேச்சுக்கான ஒரு நல்ல ஆரம்பத்தை துவக்கினார்.

ஆனால் ஞாநியோ "இந்தப்பொருளில் விவாதிக்க நான் தயாராகவேயிருக்கிறேன். ஆனால் இங்கு அல்ல, பிரிதொரு சந்திப்பில் வைத்துக்கொள்ளலாம். இங்கு அதை ஆரம்பித்தால் உங்கள் அஜென்டா கெட்டுப்போகலாம், மேலும் இன்று நான் ஒரு பார்வையாளனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று கழன்றுவிட்டார். பின்னர் ஒருவருக்கொருவர் முனகத்துவங்க ஒருபுறமாய் புரூனோ, ஜ்யோவ்ராம், லக்கி, பாலபாரதி ஆகியோர் சிகரெட்டுக்கு பொது இடத்தில் வந்த தடையைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இதற்குள் மேலும் சில பதிவர்களும் (புதிய?), வாசகர்களும்(?) கூடியிருந்தனர். எதிர்பார்க்கப்பட்ட பொட்டிக்கடை மட்டும் இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை. விவாதம் அனைவரும் ஒருபுறம், புரூனோ ஒருபுறம் என நியாயமில்லாமலும், மிகச்சூடாகவும் இருந்தது. ஐந்தே நிமிடம்தான் ஞாநி இது பெயராது என்று நினைத்தாரோ என்னவோ "பை" சொல்லிவிட்டு ஓடிவிட்டார்.

கார்க்கியும் நானும் குசுகுசுவென பேசிக்கொண்டோம். வெண்பூதான் டிமிக்கி கொடுத்துவிட்டாரே. கார்க்கி டென்ஷனாக‌ 'என்ன இந்த சப்பை சப்ஜக்டை எடுத்துப்பேசி, ஞாநியை விரட்டிவிட்டார்களே, அவர் பதிவர்களை பற்றி என்ன நினைப்பார்?' என்று கொதித்தார். நான் 'அவருக்கு நல்லா தெரியும், அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டார், நீங்க கூலாவுங்க' என்று அமைதிப்படுத்தினேன்.
பின்னர் ஒரு குரூப் தம்மடிக்கும் இடம்தேடிச் செல்ல, ஜிங்காரோ, கார்க்கி, நான் மூவரும் தம்மடிப்பதைப்போல கடற்கரைக்கு அலைகளை வேடிக்கைப்பார்க்க கிளம்பினோம் (மூவருமே தம் அடிக்கக்கூடியவர்கள் எனினும் யாருக்குமே தைரியம் இல்லை).

ஐந்தே நிமடத்தில் திரும்பினோம். சிலர் கிளம்பியிருந்தனர். மேலும் சிலர் வந்திருந்தனர். சூழலே மொத்தமாக மாறியிருந்தது. பொட்டிக்கடையும் வந்திருந்தது. சிறு சிறு கும்பல்களாக சிரிப்பும், அறிமுகமும், கலாய்த்தலுமாய் இப்போதான் மனதுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. லக்கி, பொட்டிக்கடையுடன் சிறிது நேரம், முரளிகண்ணன் குரூப்பில் சிறிது நேரம், மேலும் புதியவர்களிடம் சிறிது நேரம் என அளவளாவிக்கொண்டிருந்த போது முதல் அழைப்பு ரமாவிடமிருந்து வந்தது. மணி 7.50. அதிஷா அனைவரிடமும் கலகலப்பாக இருந்தார், ஒருவருக்கொருவரை அழைத்துவந்து அறிமுகம் செய்து வைத்தார். இதற்குள் பொட்டிக்கடை சார்பில் அனைவருக்கும் குச்சி ஐஸ் கிடைத்தது.

8.00 மணிக்கு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிய போது அதிஷா வலுக்கட்டாயமாக மேலும் ஒரு பத்து நிமிடங்கள் பொறுங்கள், ஒரு முக்கிய பதிவர் வெளியூரிலிருந்து வந்துகொண்டிருக்கிறார் என்று என்னை நிறுத்தினார். சரியாக 8.15க்கு அந்த பதிவர் வந்தபோது நான் மிக ஆச்சரியமானேன். அவர் வடகரை வேலன். மகிழ்ச்சியோடு அவரிடமும் பேசிவிட்டு விடைபெற்றேன்.

கடைசி வரை பஜ்ஜி, போன்டாவைப்பற்றி யாருமே பேச்சையெடுக்கவில்லையே என்று யோசித்தவாறே நான் வண்டியை நிறுத்தியிருந்த இடத்துக்கு நடக்கலானேன்.

டிஸ்கி : எனது படப்பொட்டி தற்செயலாக என் தம்பியிடம் மாட்டிக்கொண்டதால் இந்த முறையும், மங்களூர் திருமணத்தைப்போல புகைப்படங்கள் தரமுடியவில்லை. ஸாரி. இன்னொரு சமயம் இப்படி வாய்ப்பை தவறவிடாமல் போட்டோ தர முயல்கிறேன். விஷயம் என்னவெனில் வேறு யாருமே போட்டோ எடுத்ததுபோலவே தெரியவில்லை. ஆகவே பிறரிடமாவது போட்டோக்கள் பார்க்கலாம் என நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

34 comments:

விஜய் ஆனந்த் said...

:-))))....

அத்திரி said...

ஆஹா அண்ணாச்சி வந்தாரா? மிஸ் பண்ணிட்டேன். என்ன பண்றது நைட் ஷிப்ட் .அடுத்த முறை கண்டிப்பாக கலந்துக்கிறேன். அப்புறம் உங்க எல்லா பதிவிலையும் உங்க தங்கமணியை குறை சொல்றீங்களே நேரா சொல்லிட வெண்டியதுதானே????!!!

ஜி said...

:)) இந்தியா சுதந்திரம் வாங்குனதுல இருந்தே, இந்த பதிவர் மாநாட்டுல இதத்தான் பண்ணிட்டு இருக்காங்களா??

- மற்றொரு மாநாடு கண்ட மற்றொரு பதிவர் :)))

நசரேயன் said...

நல்ல தொகுப்பு

பரிசல்காரன் said...

நல்ல தொகுப்பு.

அடுத்தமுறை நானும் வருவேன்!!!

ரங்கன் said...

தகவலுக்கு நன்றி. ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்வது என்ற அளவில்தான் பதிவர் சந்திப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சந்திப்புக்கு முன்னரே ஒரு நிகழ்சி நிரலைத் தயார் செய்துகொள்ளுங்களேன்? உரையும் விவாதமும் என சந்திப்பு மேலும் ஆர்வமூட்டுவதாயும் பொருளுடையதாயும் இருக்கும்.

இது போன்ற பதிவர் சந்திப்பு படிக்கும் அன்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கும்க்கி said...

நல்ல தகவல்..முயன்றும், வர இயலவில்லை..தங்கள் பதிவில் போட்டோக்களை எதிர்பார்த்தேன்...

gnani said...

யாரும் என்னை அழைக்கவில்லை. ஒரு வலைப்பூவில் தகவல் பார்த்துவிட்டு நானாகவேதான் வந்தேன். என்னுடனான விவாதத்திலிருந்து நான் கழற்றிக் கொள்ளவில்லை. அது இன்னொரு சமயம் தனியே அதற்கென்றே வைத்துக் கொள்ளலாம் என்றுதான் சொன்னேன். தவிர அப்படிப்பட்ட விவாதத்தை கடற்கரை திறந்த வெளியில் கேட்பவர் கவனம் குலையாமல் நடத்த இயலாது. நான் திடீரென்று செல்ல வேண்டி வந்ததற்குக் காரணம் தற்காலிகமாக என் வீட்டில் தங்க இருக்கும் ஒரு பெண், பூட்டிய வீட்டு வாசலில் பெட்டியுடன் எனக்காகக் காத்திருப்பதாக தகவல் வந்ததினால்தான். இருந்த கொஞ்ச நேரத்தில், லக்கி லுக், ரோசா வசந்த் இன்னும் சிலருடன் கை குலுக்கினேன். ஜ்யொவோராம்சுந்தர் வலை உலகம் பற்றிய என் கருத்தைக் கேட்டதற்கு பதில் சொன்னேன். தாமிராவிடம் பெயர்க் காரணம், அவர் வேலை பற்றியெல்லாம் விசாரித்தேன். குப்பனுடன் பேசினேன். மும்பையில் எங்கிருந்தேன் என்ற டோண்டுவின் கேள்விக்கு பதில் சொன்னேன். என் தளத்தில் பிடிஎஃப் பைல்கள் போடுவதைப் பாராட்டிய பாலபாரதியுடன் அதன் காரணம் சொன்னேன். பழைய நண்பர் சுகுணா திவாகருடன் அவர் விகடனில் இப்போது வேல செய்வது பற்றி விசாரித்தேன். டாக்டர் புருனோவின் மருத்துவக் குறிப்புகளுக்கு அவரைப் பாராட்ட எண்னியபோது தொலைபேசி அழைப்பு வந்து உடனே செல்லவேண்டியதாகிவிட்டது. எனவே நழுவினேன், கழன்றேன், யார் அழைத்தார்கள் போன்ற பதப்பிரயோகங்கள் பொருத்தமற்றவை. நன்றி.

ஊர் சுற்றி said...

// பார்த்தால் அதிஷா(இருப்பதிலேயே இவருக்குதான் வயசு குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்)//

அதிஷா வேற 'மின்னஞ்சலில் வந்த ஒரு காதல் கடிதம்!!' னெல்லாம் பதிவிட்டுகிட்டிருக்காரு. நீங்க இப்படியெல்லாம் சொன்னா... அதிஷாகிட்ட இருந்து அடுத்த பதிவு எப்படி வரப்போகுதோ! ஆத்தீ....

நானே அதிஷாவ அண்ணே-னு கூப்புடுறேன். நான்தாங்க அந்த ஊர் சுற்றி. நம்மளையும் கொஞ்சம் கவனிங்க!

குசும்பன் said...

ஹி ஹி சந்திப்புக்கு போய் சாப்பிடாம வரும் உங்களை எல்லாம் எந்த லிஸ்டில் சேர்ப்பது?

ஜோசப் பால்ராஜ் said...

பஜ்ஜி, போண்டா, அல்வா போன்றவை இல்லாமல் நடந்ததால் இதை பதிவர் சந்திப்பாக சிங்கை பதிவர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளாது என்பதை அறிவிக்கிறோம்.

ஜோசப் பால்ராஜ் said...

தானாகவே இந்த சந்திப்புக்கு வந்த பத்திரிக்கையாளர் ஞானி அவர்களுக்கு வாழ்த்துக்கள். பல பதிவுகளுக்க்கு இடும் பின்னூட்டங்களின் மூலம் இவரும் பதிவுகளைப் படிக்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது. இவர் மேல் குற்றம் சொல்லி எழுதப்படும் பதிவுகளுக்கும் பதில் அளித்து ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்தலாமே? நானே இவர் எழுதியவற்றை விமர்சித்து பதிவிட்டுள்ளேன். ஏன் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்தக்கூடாது?

தாமிரா said...

இது அப்பிடி ஒண்ணும் ஹாட் பாபிக் இல்லையா.? நாந்தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ? அவ்வ்வ்.... டோன்டு சார் தவிர வேறு யாரும் பதிவு போட்டா மாதிரியே தெரியவில்லை. பண்ணிய பிறகு இப்பிடி புலம்புறதே என் பிழைப்பா போச்சு.! பதிலிட்ட அனைவருக்கும் ந‌ன்றி.!

தாமிரா said...

அன்புள்ள ஞாநி,

நீங்கள் என் மரியதைக்குரிய எழுத்தாளர். நீங்கள் விவாதத்திலிருந்து கழன்றதாக நான் கூறவில்லை. அதைத்தவிர்த்ததற்கு தகுந்த பதில் கூறியதாகவே குறிப்பிட்டுள்ளேன். உங்களை அழைத்தது யார் என்று அடைப்புக்குள் கேட்டது அவரை பாராட்டத்தானே தவிர கிண்டல் செய்யும் நோக்கம் சிறிதுமில்லை. அழைக்காமலே நீங்கள் வருவதென்பது எங்களை பெருமை செய்யும் விஷயமே. அதை அறியாத மூடனல்ல நான். பதிவு முழுதுமே எனது பார்வையிலும் கொஞ்சம் (அதிகமாகவே) சுயபுராணம் பாடுவதாகவும் அமைந்துள்ளதை கவனித்திருப்பீர்கள். காரணம் வேறென்ன புகழ் ஆசைதான். மெல்லிய நகைச்சுவை என் எழுத்தில் இழையோடுவதாக நானே நினைத்துக்கொண்டதன் விளைவுதான் இந்தப்பதிவும் எழுதப்பட்டுள்ள நடை. இது போன்ற பதிவுகளையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமான விஷயமே. மூத்தோர்களைக்குறித்து எழுதும்போது இன்னும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நான் கற்ற பாடம். நன்றி.!

இருப்பினும் பதிவின் எந்த வரிகளாவது உங்களை வருந்தச்செய்திருக்குமானால் அதற்காக நானும் உண்மையிலேயே வருந்துகிறேன்.

நல்லதந்தி said...

அய்யா சாமி ஞானி போன்ற பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இணைய பதிப்புகளைப் படிக்கிறாங்களாம்.ரொம்பப் பெருமையா இருக்கு!.இனிமே கொஞ்சம் விஷயமிருந்தாத் தான் பதிவு எழுதணும்!.விஷயமில்லாமே மொக்கைப் போடக்கூடாது.நான் சொன்னது சரியா? தப்பா? எனக்குத் தெரியலை!

குப்பன்_யாஹூ said...

சென்னை வலைபதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
சென்னை வலை பதிவர் சந்திப்பு உத்தமர் Gandhi சிலையின் அருகில், vivekanandhar இல்லம் அருகில், நடிகர் திலகம் சிவாஜியின் சிலை எதிரில், பாரதியார் உலவிய திருவல்லிகேணி பகுதியில், மிக அருமையாக நடந்து ஏறியது.
பதிவுலக ஜாம்பவான்க்ள மிக விரிவாக பதிவு potullargal. ஜோடி என் ஒன்றில் சங்கீதa என்ன நிற உடையில் வருவார் என்று காண வேண்டிய மிக முக்கிய அலுவல் இருந்ததால் நான் பாதியிலே ஜூட் ஆகி விட்டேன்
அக்டோபர் ௨ ஆம் தேதி புதிய பதிவு தொடக்கி உள்ள ஞானி என்ற ஒரு புதிய பதிவரும் கலந்து கொண்டார். பதிவரோடு பதிவராக எந்த பாகுபாடும் இல்லாமல் பழ்கிய பேசிய ஞானி போற்றுதலுக்கு உரியவர்.
தன்னை பற்றியே அதிகம் செய்திகள் வர வேண்டும் என்று வலை உலகத்தில் நாம் எல்லாரும் விரும்ப - ஞானி அவர்கள், தன்னை பற்றி செய்தி வேண்டாம், தன்னை சிறப்பிக்க வேண்டாம், தானும் ஒரு சக பதிவர் என்று சொல்லி, செய்து காட்டிய எளிமை தான் , காந்தி சிலை அருகில் நாங்கள் கற்ற மிக முக்கிய பாடம்.


Gnaani your comments also nice, well done sir.

வெண்பூ said...

தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் சந்திப்பிற்கு வரமுடியவில்லை. இத்தனை நண்பர்களை சந்திப்பதை தவற விட்டது மனம் நிறைய வருத்தங்களை நிறைத்துள்ளது :(

Ŝ₤Ω..™ said...

சந்திப்பு மகிழ்வைத் தந்தது.. பதிவு நிறைவைத் தருது..

சந்திப்பு மகிழ்வைத் தந்தது.. பதிவு நிறைவைத் தருது..
நிழற்படங்கள் எடுக்கும் முன் நீங்கள் தான் போய்விட்டீர்கள்..
படங்கள் எனது பதிவில்.. www.sensiblesen.com

மேலும் படங்கள் picasa வில் உள்ளது.. மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.. email id plzzzzzz

தாமிரா said...

பதில் தந்த விஜய், அத்திரி, ஜி (ரசனையான பதில்), நசரேயன், பரிசல், ரங்கன், கும்கி (யோவ் நீங்க எப்ப எழுத ஆரம்பிக்கப்போறீங்க? ரொம்ப ஆர்வமாயிருக்கேன்), ஊர்சுற்றி, குசும்பன், ஜோஸப் (போண்டா கிடக்கலியே ஜோஸப்..) ஆகிய அனைவருக்கும் நன்றி.!

rapp said...

me the 20TH

கார்க்கி said...

//பார்த்தால் அதிஷா (இருப்பதிலேயே இவருக்குதான் வயசு குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்),//

இதை நான் வண்மையாக க‌ண்டிக்கிறேன்.. அப்போ நான்????

//(மூவருமே தம் அடிக்கக்கூடியவர்கள் எனினும் யாருக்குமே தைரியம் இல்லை)//

என்ன சகா? மறந்துட்டிங்களா, இல்ல ஏதாவ்து உள்குத்தா? நான் எப்பவும் தம்மடிக்க மாட்டேன் என தாமிரா மீது ஆணையிட்டு சொல்கிறேன்..

தாமிரா said...

மேலும் பதில் தந்த நல்லதந்தி, குப்பன், வெண்பூ (வுடுங்க தல.. ன்னோரு தபா பாத்தா போச்சி), சென் ஆகியோருக்கும் நன்றி.!

rapp said...

ஒன்னுமே சாப்பாடப் பத்தி இல்ல, இது ஒரு மிகப் பெரிய குறையாகக் கருதுகிறேன். நான் என்னைக்காவது சென்னை வரும்போது கூப்டா, நண்பர்கள் எல்லாரும் மறுக்காம வரவும். வயிற்றுக்கு சிறிது ஈயப்பட்டவுடந்தான் செவியப் பத்தின விஷயமே கன்சிடர் செய்யப்படும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............................

தாமிரா said...

நன்றி ராப், கார்க்கி (உங்கள யாராவது கேட்டாங்களா இப்ப.? பெரிய எழுத்தாளர்கள்லாம் இப்பிடிதான் சுவாரசியத்துக்கு கற்பனையை கலந்துப்பாங்க.. பெரியாளாக உட மாட்டீங்களே).

தாமிரா said...

இந்த விஷயத்தில் உங்களை செம்ம்மையா ஆதரிக்கிறேன் ராப்..!

பொடியன்-|-SanJai said...

இப்போ தான் படிச்சேன்.. வந்திருக்கலாம் போல இருக்கு.. :(

நல்லா இருங்கய்யா.. :)

சந்தனமுல்லை said...

சுவாரசியம்!!

நானும் ஒருவன் said...
This comment has been removed by the author.
தாமிரா said...

நன்றி முல்லை.!
நன்றி பொடியன்.! (உங்களை எதிர்பார்த்தேன். என்னாச்சு? ஏன் வரலை..)

புதுகை.அப்துல்லா said...

யோவ்! அப்துல்லா அண்ணே இல்லாம எங்கயும் போகாதீங்க போகாதீங்கன்னு ஆயிரம் வாட்டி எங்க ரமா அண்ணி சொல்லியும் கேக்க மாட்டேங்குறீரே!!! இனிமே நா இல்லாம எங்கயும் போயிட்டு அப்புறம் வந்தவுடனே பதிவும் போட்டு வயித்தெறிச்சல கிளப்பக்கூடாது :)))

வால்பையன் said...

விஷயத்தை நகைசுவையாக சொல்வது ஒரு கலை,
ஞாநி நமது நட்புக்கே புதிது என்பதால் புரிதல்களில் சிக்கல் இருக்கலாம்.
அதாவது உங்களுக்கு, எல்லோரையும் கலாய்ப்பது போல் இங்கேயும் கலைத்து விட்டீர்கள். வலையுலகத்திற்கு வந்த பின் அவரும் புரிந்து கொள்வார்.

உங்கள் தனிதிறமையே இந்த நகைச்சுவை தான், அதில் எந்த குறையும் வைக்காதீர்கள்

தாமிரா said...

வாங்க அப்துல்.! நன்றி வால்பையன்.!

முரளிகண்ணன் said...

அசத்தல் தாமிரா

ஸ்ரீ said...

Ella functionukkum oru live reporta thala? I missed a gud meet :(