Friday, November 28, 2008

துயரம்.. தவிப்பு.. ஆறுதல்..

பதைபதைக்கச் செய்யும் மும்பை தீவிரவாத தாக்குதலில் மனம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தச்சூழலில் ஒரு சிறப்புக்காவல் படையின் கமாண்டோவாக இருக்கும் துடிப்பான ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கவேண்டிய வாய்ப்பு கிடைத்தது. நூறு கோடியைத்தாண்டும் ஜனத்திரள் நிறைந்த தேசத்தில் இதுபோன்ற வன்முறைக்கூத்தாடும் தன்னிலை இழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கலாம்? சில நூறுகள்? சில ஆயிரங்கள்? சில ஆயிரங்கள் என்று வைத்துக்கொண்டாலுமே சதவீதத்தில் 0.00001 என்ற அளவில்தான் இருக்கக்கூடும்.

எங்கிருந்து கிளம்புகிறார்கள்? அவர்களுக்கான வேர்கள் எங்குள்ளன? வளரும் நாட்டின் பொருளாதார மற்றும் பல்துறை வளர்ச்சிகளைக் காணச்சகியாத சில வெளிநாட்டு சக்திகள் (இதில் வெளி வேஷமிடும் சில முக்கிய பெரிய நாடுகளும் இருக்கலாம்) நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை திடத்தன்மையை குலைக்க‌ ச‌தித்திட்ட‌மிடுகின்ற‌ன. பெரும் பிரிவினைகளுக்கான கூறுகள் மிகுந்த‌, கடும் ஊழ‌ல் கோலோச்சும் ஒரு பெரிய‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் இந்த‌ அள‌வு ஆமை வேக‌த்திலான‌ வ‌ள‌ர்ச்சியே ஆச்ச‌ரிய‌மிகுந்த‌து. இது எதிர்பார்ப்புக‌ளில்லாத அனைத்து துறைகளிலும் இருக்கும் உழைக்கும் வ‌ர்க்க‌த்தின் சாத‌னை. இதையும் பொறுக்காத‌ கூட்ட‌த்தின் ச‌தித்திட்ட‌ங்க‌ளே இவை. அவ‌ர்க‌ள் மிக‌ எளிதாக‌ உள்நுழைய‌வும், திட்ட‌ங்க‌ளைத்துவ‌க்க‌வும் ஆர‌ம்பிக்க‌ வ‌ச‌தியாக‌ உள்நாட்டு ஓட்ட‌ர‌சிய‌லுக்காக‌வும், ப‌ண‌ அர‌சிய‌லுக்காக‌வும் ந‌ம‌து அர‌சிய‌ல்வாதிக‌ள் அணையாம‌ல் பாதுகாத்துவ‌ரும் இன‌ப்பிர‌ச்சினைக‌ள் மிக‌வும் உத‌வுகின்ற‌ன‌.

க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்னேறும் வாய்ப்புக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்நிக‌ழ்வுக‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌, அர‌சால் க‌ண்டுகொள்ளாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌ சிறு சிறு ம‌க்க‌ள் கூட்ட‌ங்க‌ளையே ம‌த‌த்தின் பெய‌ராலும், க‌ட‌வுளின் பெய‌ராலும் (அவ‌ர்க‌ளை போன்ற‌ க‌ள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளை ப‌ண‌த்தால் வாங்குவ‌து அரிதாக‌வே இருக்க‌க்கூடும்) மூளைச்ச‌ல‌வை செய்து தீவிர‌வாத‌த்துக்கான‌ க‌ருவிக‌ளை த‌யார் செய்கின்ற‌ன‌ அந்த‌ பெரும் ச‌க்திக‌ள். அந்த‌ சிறு கூட்ட‌ங்க‌ள் நாள‌டைவில் த‌னித்து இய‌ங்கும் திற‌ன் பெறுகின்றன. அவற்றிற்கென கொள்கைகள் உருவாகின்றன. தனிமனித ஈடுபாட்டின் காரணமாகவோ பெரும் சுயந‌லத்திற்காகவோ சில‌ பேரிய‌க்க‌ங்க‌ளாக‌ வ‌ள‌ர்கின்ற‌ன‌. ச‌ம‌ய‌ங்க‌ளில் அவை த‌னித்து இய‌ங்கும் வ‌ல்ல‌மையும் பெறுகின்ற‌ன‌. அது போன்ற‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ற்றை உருவாக்கிய‌ ச‌க்திக்கே எதிராக‌வும் செய‌ல்ப‌ட‌ அவை த‌ய‌ங்குவ‌தில்லை.

அந்த‌ இய‌க்க‌ங்க‌ளின் உயிரைத்துச்ச‌மாக‌ ம‌திக்கும் முத‌ல்வ‌ரிசை தீவிர‌வாதிக‌ள் இதுபோன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் ப‌க‌டைக்காய்க‌ளாய் முன்னிற்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளை எப்ப‌டித்த‌டுப்ப‌து? இவ‌ர்க‌ளைத்த‌டுப்ப‌து மிக‌க்க‌டின‌மான‌ விஷ‌ய‌ம். இது எல்லையில் நிக‌ழும் போரோ, இர‌ண்டு ப‌டைக‌ளுக்கு ந‌டுவே நாடுக‌ளுக்கிடையேயான‌ போரோ அல்ல‌. அங்கு முத‌ல் வ‌ரிசைப்ப‌டைக‌ள் எப்போதும் உஷார் நிலையிலும், க‌ண்காணிப்பிலும் இருக்கும். பெரும்பாலான அந்த‌ ச‌ண்டைக‌ளில் சில‌ கிலோமீட்ட‌ர்க‌ள் த‌ள்ளியிருக்கும் எதிர்ப‌டையின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை நுட்பமான க‌ருவிக‌ள் கொண்டு தெரிந்துகொண்டு பெரும் லாஞ்ச‌ர்க‌ள், பீர‌ங்கிக‌ள், விமான‌ங்க‌ள் கொண்டு போர் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ம‌னித‌ர்க‌ள் நேருக்கு நேராக‌ நின்று ச‌ண்டையிட்டுக்கொள்ளும் நிக‌ழ்வுக‌ள் மிக‌ அரிதே.

ஆனால் தீவிர‌வாதிக‌ள் அதுபோல‌ல்லாம‌ல் எண்ணிக்கையில் மிகச்சிறியதாக இருப்பதால் எளிதாக மிகுந்த‌ ஜ‌ன‌த்திர‌ளுக்குள் க‌ல‌ந்துவிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை பிரித்தெடுப்ப‌தோ, திட்ட‌ங்க‌ளை தெரிந்துகொள்வ‌தோ மிக‌வும் க‌டின‌மான‌ செய‌லாக‌ ஆகிவிடுகிற‌து. அவ‌ர்க‌ளின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், திட்ட‌ங்க‌ளையும் தெரிந்துகொள்வ‌தில் உள‌வுத்துறையின‌ர் முன்னெப்போதுமில்லாத‌ நுட்ப‌த்துட‌னும், முக்கிய‌த்துவ‌த்துட‌னும் செய‌ல்ப‌ட்டால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ளைத்த‌டுக்க‌முடியும். அல்ல‌து உல‌கெங்கும் தீவிர‌வாத‌ அமைப்புக‌ள் என்று அறிய‌ப்ப‌டும் அமைப்புக‌ளை, இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் ஊற்றக்க‌ண்ணாக‌ இருக்கும் இய‌க்க‌ங்க‌ளை த‌ய‌வு தாட்ச‌ண்ய‌மின்றி அழித்தொழிக்க‌ உல‌க‌நாடுக‌ள் க‌ர‌ம்கோர்க்க‌ வேண்டும். அது நிக‌ழ்வ‌தும் அரிதே.

மும்பையில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தீவிரவாத வெறியாட்டத்தை எடுத்துக்கொண்டோமானால், இது போரைப்போலல்லாமல் ஒரு செயலைப்போல (Operation) நடத்தப்பட்டுள்ளது. மிகுந்த கூட்டம் நிறைந்த ஒரு ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு (Open fire) நிகழ்த்தி அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதென்பது அநியாயமான ஒரு செயலாகும். எந்த முன்னறிவிப்போ, முன்னேற்பாடோ இல்லாமல் காவல் படையினர் இந்த சம்பவத்தை எதிர்கொள்வது மிகக்கடினம். அதுபோலத்தான் பலநூறு அறைகள் கொண்ட தாஜ் விடுதியில் ஒளிந்துகொண்டு விருந்தினர்களை கொன்று குவித்துவரும் சில தீவிரவாதிகளை பிடிப்பதும் மிகச்சவாலான விஷயமே. சில மணி நேரங்கள் போராடும் சக்திகூட அற்ற அந்த சில தீவிரவாதிகளை ஒரு பெரும்படையினரே இரண்டு நாட்களாக போராடிவருகின்றனர் என்றால் அந்தச்சூழலே காரணம். உளவுத்துறையின் அதிதீவிர முன்னறிதலே இவற்றிலிருந்து நம்மைக்காக்கும் சிறு உபாயம்.

சினிமாக்க‌ளில் வ‌ருவ‌து போல‌வும், வீடியோ கேம்க‌ளில் வ‌ருவ‌து போல‌வும் ஒரு க‌ட்டிட‌ம் தீவிர‌வாதிக‌ள் பிடிக்குள் சிக்குகிற‌து. அவ‌ர்க‌ளை மீட்க‌ க‌மாண்டோக்க‌ள் ஹெலிகாப்ட‌ரில் இருந்து விடுதியின் மேல்த‌ள‌த்தில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ துப்பாக்கிக‌ளுட‌ன் குதிக்கின்ற‌ன‌ர். இரண்டு வீரர்கள் அவர்களின் அடுத்த மூவ் குறித்து ஏதோ பேசிக்கொள்கிறார்கள், ஒருவர் விளிம்போடு ஒட்டிய நிலையில் உன்னிப்பாக டார்கெட்டை கவனித்துக்கொண்டிருக்கிறார். இந்த‌க்காட்சியை பார்த்த‌போது சில்லிட்டுவிட்டேன் நான். களத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?


ராணுவம், கப்பல்படை, விமானப்படை, தேசிய பாதுகாப்புப்படை, ரயில்வே இன்னும் பல முக்கிய சீருடைப்ப‌ணித்துறைகளிலும் தனித்தனியான துடிப்பான கமாண்டோ பிரிவுகள் உள்ளன. கமாண்டோக்களின் பணி மிகவும் சீரியது. அவர்கள் சூழலை மிக உன்னிப்பாக உள்வாங்கிக்கொள்வார்கள். புலன்கள் மிகவும் துல்லியமாக இருக்கும். துடிப்பானவர்கள். கடும் பயிற்சிபெற்றவர்கள். கமாண்டோ படைப்பிரிவிலிருந்து விலகும் வரை தொடர் பயிற்சியில் இருந்துகொண்டேயிருப்பார்கள். குழுவாக‌ இய‌ங்குவார்க‌ள். பெரும்பாலும் 20லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பர். தேசத்திற்காக, மக்களுக்காக என்ற உயரிய எண்ணம் இருப்பினும் தானிருக்கும் அந்தக்குழுவிற்காக, அதிலிருக்கும் தன் நண்பன் சக வீரனுக்காக என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கும். ஒரு குழுவின் ஒரு வீரன் அடிபட நேர்ந்தால் அந்தக்குழுவிற்கு கடும்வேகமும், உயிரையே துச்சமாக நினைக்கும் வெறியும் ஏற்படும். இந்த மும்பை மீட்புப்பணியிலும் துடிப்பான முன்வரிசை வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். அவர்களின் தியாகம் அளப்பரியது. சில நாட்களில் நாம் அவர்களை மறந்துபோகக்கூடும். இருப்பினும் அவர்களைப்போன்ற காக்கும் வீரர்கள்தான், மறைந்திருக்கும் இந்தக்கோழைக‌ள் சில ஆயிரம் பேர்களிடமிருந்து நம் நூறு கோடி பேரையும் காக்கவேண்டும்.

ஜெய் ஜவான்.!


டிஸ்கி : இந்த கொடும் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகளை விடவும் ஆபத்தானவர்கள், மீண்டும் பல்வேறு இடங்களில் தாக்குதல் என்று வதந்திகளை கிளப்பி மும்பையை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியவர்களும், வேடிக்கை பார்க்கவென ஆயிரக்கணக்கில் கூடி குழப்பத்தையும், ராணுவ நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலையும் விளைவித்தவர்களும்தான் என நான் நினைக்கிறேன்.

Thursday, November 27, 2008

கொஞ்சம் வீரமும் என் தாய்மாமனும்

     கீழே விழுந்துகிடந்த மாங்காய்களில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு கடித்து சாப்பிடத்துவங்கினேன். சில வேலையாட்கள் மாங்காய்களை பறித்துப்போட்டுக்கொண்டும், அதை கோணிகளில் சேகரித்துக்கொண்டும் இருந்தனர். கொஞ்சம் தள்ளி நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் செல்வன், என் தாய்மாமன். அவரின் மாந்தோப்புதான் இது. 

     அவர் நின்று கொண்டிருந்த இடம் அவ்வளவு தெளிவாக இல்லாமல் கொஞ்சம் புல் பூண்டுகளுடன் இருந்தது. இங்கே போரடிக்கிறது. இவருடன் வராமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். மாங்காயைக் கடித்துக்கொண்டே, எப்போது வீட்டுக்கு கிளம்புவாரோ என்று யோசித்துக்கொண்டே அவரை நெருங்கினேன். அப்போது ஏதோ கடித்ததைப் போல விருட்டென காலை உதறிக்கொண்டு குனிந்தார். அவர் இடது காலின் பெருவிரலுக்கு மேலாக சரியாக அந்த நரம்பு பகுதியில் ஏதோ குச்சி போல குத்திக்கொண்டிருந்தது. நன்கு கவனித்தபோதுதான் தெரிகிறது, அரையடி நீளமேயிருந்த மிகச்சிறிய பாம்புதான் அப்ப‌டி விரைப்பாக‌ க‌டித்த‌ப‌டி பிடியை விடாம‌ல் இருக்கிற‌து. கொஞ்சம் கூட பரபரப்பேயில்லாமல் அத‌ன் வாலைப்பிடித்து இழுத்து பிரித்து தூக்கி பார்த்துவிட்டு தூர‌ வீசுகிறார். என‌க்கு ப‌ட‌ப‌ட‌ப்பு அட‌ங்க‌வில்லை. "ந‌ல்ல‌ பாம்பு மாதிதான் தெரியிது. எதுக்கும் குச்சில்ல‌ ஏதாது க‌யிறு இருந்தா எடுத்துட்டு வா முருகா" என்றார். முருக‌ன் ஓடிப்போய் அடுத்த‌ சில‌ விநாடிக‌ளில் ஒரு மெல்லிய‌ நைலான் க‌யிறுட‌ன் வ‌ருகிறார். அதை வாங்கி இருவ‌ரும் சேர்ந்து க‌ணுக்காலுக்க‌ருகில் இருக்க்க்க்கி க‌ட்டிவிட்டு சாவ‌காச‌மாக‌ "கிள‌ம்ப‌லாமா?" என்றார். அட‌ப்பாவி சீக்கிர‌ம் ஆஸ்ப‌த்திரி போக‌ணுமே என‌ நினைத்துக்கொண்டே "ஆஸ்ப‌த்திரிக்கு போவேண்டாமா மாமா" என்கிறேன் நான். "போலாம் வா" என்றவாறே கிளம்பி பைக்கில் அங்கிருந்து சுமார் 5 கிமீ இருக்கும் வீட்டுக்கு சென்று வாசலிலேயே என்னை இறக்கி விட்டு விட்டு "யாருகிட்டயும் ஒளறிக்கிட்டிருக்காதே, நா ஆஸ்பத்திரிக்கி போயிட்டு கொஞ்ச நேரத்தில வந்துர்றேன்" என்று கிளம்பி போய்விட்டார். நானும் சீரியஸாக ஒண்ணுமில்லை போலும் என்று நினைத்துக்கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்கத்துவங்கினேன். மாலையில் ஒரு ஆள் வந்து "ஐயா ஆஸ்பத்திரில இருக்கார், ஒண்ணுமில்ல கால்ல ஏதோ பூச்சி கடிச்சிருச்சாம்" என்று சொன்னவுடன் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கு சென்றால் அவருக்கு படுக்கையில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தூங்கிக்கொண்டிருந்தார். காலில் கட்டு போடப்பட்டிருந்தது. கயிறு அவிழ்க்கப்பட்டிருந்தாலும் கட்டப்பட்ட இடத்திற்கு கீழே நல்ல கருநீலமாக கால் நிறம் மாறியிருந்தது. கட்டுக்கு மேலாகவும் லேசாக நிறம் பரவியிருந்தது. கூட்டத்தின் களேபரத்தால் விழித்தார் அவர். நான் அருகில் சென்று பயத்துடன் அவரைப்பார்த்தேன். அவரோ அவருடைய பிராண்ட் உரத்த சிரிப்புடன், 

"எலே, அது நெசமாவே நல்ல வெசப்பாம்புதான் போலிருக்குது" 

****** 

    இன்னொரு சந்தர்ப்பத்தில் சேரன்மகாதேவி ஆற்றில் குளித்துவிட்டு, அவர், நான் அவர் நண்பர்கள் சிலர் என‌ பாலத்திலிருந்து ஊரை நோக்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்துவந்தபோது "என்னிக்குதான் நீ சைக்கிள் ஓட்ட படிக்க‌ப்போறே? நீ ஓட்டு. நா புடிச்சிக்கிடுதேன்" என்றார் செல்வம். நானும் நிரம்ப ஆர்வத்துடன் வாங்கி ஏறி ஓட்ட ஆரம்பிக்க அவர் பின்னால் பிடித்துக்கொண்டே வந்தார். அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டேயிருந்தேன், அவர் பிடித்திருக்கிறாரா என்று. "பொடதியில் போட்டேன்னா தெரியும், ஒழுங்கா ரோட்ட பாத்து ஓட்டுலே" என்றார். முன்னே பார்த்து ஓட்ட ஆரம்பித்து சில நிமிடங்களில் தற்செயலாக அடக்கமுடியாமல் பின்னே பார்த்தால் சாவதானமாக அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டே எங்கோ நடந்து வந்துகொண்டிருந்தார். நான் விழுந்தாலும் ஓடி வந்து பிடிக்கும் தூரமே அல்ல அது. ஐயகோ... சைக்கிள் என் கட்டுப்பாட்டை மீறி கீழே குப்புற தள்ளியது. நடு ரோட்டில் குப்புற விழுந்துகிடந்தேன். கைகால்களில் சிராய்ப்புகள். கீழுதடு வெட்டுப்பட்டு ரத்தம் கொப்பளித்தது. அவ்வ்.. அழ ஆரம்பித்தேன். சிரித்துக்கொண்டே ஓடி வந்தவர் சைக்கிளை தூக்கிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார். 

  "இதுக்காடா அழுவாம் புள்ள.. பொம்பள புள்ளயா நீ? அவுங்கதான் சின்ன விசயத்துக்குல்லாம் ஈன்னு இளிவிக்கிட்டிருப்பாங்க.." என்று கேலி செய்து அவர் நண்பர்களுடன் சிரிக்க ஆரம்பித்தார். வலி போகவில்லை, ஆனால் அவமானம் தாங்காது என் அழுகை உடனே நின்றது. 

****** 

  ஒரு முறை அவருக்கு சொந்தமான ஒரு ப‌ழைய கட்டிடத்தின் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதைப்பார்வையிடச் சென்றார். முதல் மாடியின் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது அந்த மொத்த பால்கனியே இடிந்து அப்படியே தரையில் விழுந்தபோது அவரது இரண்டு கால்களும் இடிபாடுகளுக்குள்ளே சிக்கி இரண்டு பாதமூட்டுகளும் சிதைந்து நடக்க இயலாமல் போனது. வேறு யாருமெனில் வருடங்கள் எடுத்திருக்கும் அதிலிருந்து மீண்டு வர. மூன்றே மாதங்களில் ரேஸில் ஓடும் வெறியுடன் கால்களை சரியாக்கி மீண்டார். படுக்கையிலிருந்தபோது சிரிப்பும் கூத்துமாக கழிந்தன நாட்கள். வலியின் துளியையும் அந்தக்கண்களில் நான் கண்டதில்லை. 30 நாட்களில் சுவரைப்பிடித்துக்கொண்டு எழ முயற்சிக்கும் போதும் அவநம்பிக்கையோ, வருத்தத்தின் சாயலோ சிறிதுமின்றி முயற்சித்தார். "மாமாவை புடிச்சிக்கோ" என்று வீடே அதிர‌ச்சிரித்தார். 

வீரம் வீரம்னு சொல்றாங்களே ஒரு வேளை அது இதுதானோ?

Tuesday, November 25, 2008

லீன் என்றால் என்ன?

ஊருக்குப் போய்விட்டு நல்லபடியாக திரும்பியாயிற்று.வேலை விஷயமாக, சொந்த விஷயமாக என்று இரண்டு வாரங்களாக அலுவலகத்தில் இல்லாததால் ஒரு பெரிய வேலைப்பளு காத்திருக்கிறது. இருப்பினும் கடையும் நான்கு நாட்களாக காத்து வாங்கிக்கொண்டு கிடக்கிறது, அதையும் கவனிக்க வேண்டும். எழுதுவதற்காக நிறைய தங்கமணி மேட்டர்கள் மண்டைக்குள் கிடந்து குழம்பிக்கொண்டிருந்தாலும், லைட்டாக ஒரு பதிவு போடலாமே என்று ஒரு ஐடியா. துறை சார்ந்து நான் எழுதிய சில பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது நினைவுக்கு வருகிறது. குறிப்பாக "சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்" நல்ல வரவேற்பைப்பெற்றது. அதன் தொடர்ச்சியை எழுத சில நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். மொத்தமாக மூன்று பகுதியாக அதை எழுத திட்டமிட்டிருந்தேன். மீதி இரண்டு பகுதிகளையும் விரைவில் கண்டிப்பாக எழுதுவேன். இந்த 'லீன்' என்ற விஷயமும் கிட்டத்தட்ட 'சிக்ஸ்சிக்மா' வைப்போலவே தொழிற்துறையில் பரவலாக பேசப்பட்டு, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்தான். ஆகவே அதையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை.சொல்லப்போனால் இரண்டும் அக்கா, தங்கை போலத்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இதுவும் மெக்கானிகல் துறைக்கு மட்டுமே என்றில்லாமல் அனைத்து துறைகளிலுமே பயன்படுத்தத் தகுந்த‌தே. நிறைய தொடர்புகள் இருப்பதால் இதைத் தொடரும் முன்பு 'சிக்ஸ் சிக்மா' முதல் பகுதியை படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுவது நல்லது.


'லீன் என்றால் என்ன?'


சிக்ஸ் சிக்மாவைப்போல முறுக்கு சுற்றாமல் ஒரே வரியில் இதற்கு பதில் சொல்லிவிடலாம். "ஒரு செயலை (Process) நன்குஆராய்ந்து அதில் நிகழும் விரயங்களை (Wastages) கண்டு பிடித்து அதை நீக்கி/ அல்லது முடிந்த வரை குறைத்து அந்த செயலின் உற்பத்தித்திறனை(Productivity) உயர்த்துவதே 'லீன்' வழிமுறைகள் எனப்படுகிறது" இன்னும் நன்றாக சொல்லவேண்டுமெனில் பொது மருத்துவருக்கும், ஸ்பெஷலிஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப்போல பிற விரயங்களையும் லீன் கணக்கில் கொள்கிறது எனினும் "நேர விரயத்தை" குறைப்பதிலேயே லீன் ஸ்பெஷலிஸ்ட்டாக செயல்படுகிறது.


ஒரு உதாரணம் பார்க்கலாம்.
நான் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறேன். அங்கே இட்லி தயாரிப்பது ஒரு செயல். மாஸ்டர் கார்க்கிக்கு(இவர் இட்லி ஸ்பெஷலிஸ்ட்) மூன்று பங்கு மாவு, சட்டி பானைகள், அடுப்பு எல்லாம் தரப்படுகிறது.அவர் சரியாக 30 நிமிடத்தில் 150 இட்லிகளை தயாரிக்கிறார். (எனக்கு மேலும் 50 இட்லிகள் தேவைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? நான் அவருக்கு மேலும் பத்து நிமிடம் மற்றும் ஒரு பங்கு மாவு தரவேண்டும்.. சரிதானா? இது ஒரு சாதாரண செயல். இது உற்பத்தித்திறனில் விரிவாக்கம் (Expansion) செய்தலாகும். இதில் 'லீன்' எல்லாம் இல்லை.)


சோதனை :

எனது இன்னொரு மாஸ்டரான வெண்பூவை இட்லி சுட அழைக்கிறேன் (இவர் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட், இருப்பினும் லீனில் இது போன்ற சோதனைகளெல்லாம் செய்யப்படவேண்டும்).அவருக்கும் அதே அளவு மாவு, மற்றும் வசதிகள் தரப்படுகின்றன.என்ன ஆச்சரியம்? இவர் அதே மாவில் அதே 30 நிமிடத்தில் 152 இட்லிகளை தயாரித்துவிடுகிறார். புதிதாக சேர்ந்துள்ள மாஸ்டர் அப்துல்லாவும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படுகிறார். அவர் கார்க்கியைப்போலவே 150 இட்லிகளைத் தயாரித்தாலும் இன்னொரு ஆச்சரியமாக 28 நிமிடங்களில் வேலையை முடித்துவிடுகிறார்.

சோதனை முடிவுகள்:

கார்க்கியும், அப்துல்லாவும் வெண்பூவைப் போலில்லாமல் இரண்டு இட்லிகளுக்கான மாவை சிந்தியும் சிந்தாமலும் விரயம் செய்கிறார்கள். அப்துல்லாவைப் போலில்லாமல் வெண்பூவும், கார்க்கியும் சொந்தக்கதையை யோசித்துக்கொண்டோ, பராக்கு பார்த்துக்கொண்டோ 2 நிமிடங்களை விரயம் செய்கிறார்கள்.


இவையே லீனில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் கையாளும் வழிமுறைகளில் சிறப்பானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதையே அனைவரும் கடைபிடிக்கும் படி செயல்திட்டத்தை (Procedure) ஏற்படுத்தப்படவேண்டும். இடுபொருட்களில் எந்த பெரிய மாற்றமும் செய்யாமல் செயல்முறைகளில் சிறிய மாற்றங்களைச்செய்து விளைபொருட்களில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதே லீன் சிஸ்டம் எனப்படுகிறது.


மனிதர்களை எந்திரங்களாக கருதி அவர்களின் விநாடிகளைக்கூட அளவிடும் நேர அளவீடு (Time study),ஸ்பெஷலிஸ்ட்டுகளை இல்லாமல் செய்தல் (De-skilling) போன்ற விஷயங்களை இந்த லீனின் குறைபாடுகளாக காணும் மாற்றுக்கருத்துகளும் உண்டு.மொத்தத்தில் லீன் எனப்படுவது ஒல்லியாகவும் இல்லாமல்,குண்டாகவும் இல்லாமல் "கச்சிதமாக" இருப்பதையே குறிக்கிறது.


எளிய சந்தேகங்களையும்,மேலும் தெளிவான விளக்கங்களையும், தவறு இருப்பின் திருத்தங்களையும் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தலாம். வரவேற்கிறேன்.

Thursday, November 20, 2008

கொஞ்சம் மண்ணெண்ணையும் கொஞ்சம் சமூக சிந்தனையும்..

"கடும் தாகத்துடன் அந்த அறைக்குள் வந்த நான் நீரென நினைத்து அந்த வாட்டர் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை அவசரத்தில் குடித்து விருட்டென வாந்தியெடுத்தேன்."

மேற்சொன்ன வரிகள் ஒருவருக்கு நிஜமாகவே நடந்தவை. இதில் என்ன சிறப்பு இருக்கிறது? இது அனேகருக்கும் நடப்பதுதானே. வாருங்கள் ஏதாவது சிறப்பு இருக்கிறதா என பார்ப்போம்.

நல்ல வெயிலில் கடும் தாகம் மற்றும் களைப்புடன் அறைக்குள் நுழைகிறேன். தண்ணீர்க்குடம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. பாட்டில்கள் காலியாக கிடக்கின்றன. இடது பக்கத்து அறை பூட்டப்பட்டிருக்கிறது. வலப்பக்க அறை பூட்டப்படவில்லை. சும்மா திறந்திருந்த கதவை தள்ளியவுடன் திறந்துகொண்டன. யாரும் இல்லை. எங்கே போயிருப்பான்கள்? பக்கத்து கடைக்கு போயிருப்பான்கள். அல்லது கீழே நின்று தம்மடித்து கதையளந்து கொண்டிருப்பான்கள். இங்கேயாவது தண்ணியிருக்கிறதா? அவசரத்தில் தேடினேன். ந‌டு அறையில் பாயின் மேல் ஒரு பிஸ்லெரி வாட்ட‌ர் பாட்டிலில் அந்த‌ நீர்ம‌ம் இருக்கிற‌து. கொஞ்சங்கூட எனக்கு சந்தேகப்படத் தோன்றவில்லை. அது நீரா? பிற‌ ஏதுமா? என்று ஆராயும் அள‌வில் நான் நிதான‌மாக‌ இல்லை. அப்ப‌டியிருந்த‌து என் தாக‌ம்.

விருட்டென‌ போய் குனிந்து அதை எடுத்தேன். நிமிரும் முன்பாக‌வே மூடியை திற‌க்க‌ ஆர‌ம்பிக்கிறேன். என்ன‌ எங்கோ லேசான‌ கேஸ் க‌சியும் வாடை வ‌ருகிற‌தே? இந்த அறையில் கேஸ் கிடையாதே.. ந‌ன்கு நிமிர்ந்துவிட்டேன். மூடி முழுவதுமாய் திற‌க்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ந‌ன்கு வாடை வீசுகிற‌தே, இப்போது அறைக்குள் வ‌ரும்போது கூட‌ இல்லையே.. திடீரென‌ எப்ப‌டி? பாட்டில் வாய‌ருகே சென்று கொண்டிருக்கிற‌து. அய்ய‌ய்யோ க‌டும் கேஸ் லீக்.! கீழே இருக்கும் இரும்புப்ப‌ட்ட‌றையிலிருந்துதான் கேஸ் லீக் ஆகிற‌து. ஆப‌த்து.! உட‌னே எச்ச‌ரிக்க‌வேண்டும். சில‌ விநாடிக‌ள்தானே த‌ண்ணீரைக்குடித்துவிட்டு ஓடிப்போய் சொல்ல‌லாம். அய்யோ.. சிலிண்ட‌ர் வெடித்தே போய்விட்ட‌து...

.... FROOOOOOCSH....

வான‌வில்லை ஏற்ப‌டுத்திக்கொண்டு அறையிலேயே ம‌ண்ணெண்ணையை விசிறித்துப்பினேன். பாட்டிலை போட்டுவிட்டு வெளியே ஓடி வ‌ந்து ஓங்க‌ரித்து துப்பிக்கொண்டிருந்தேன். ம‌ட‌த்த‌ன‌மாக‌ ம‌ண்ணெண்ணையை குடித்துவிட்டு சில விநாடிகளுக்குள் என்னே ஒரு சோஷிய‌ல் சிந்த‌னை.. சை.!

சில துளிகள் உள்ளேயும் போய்விட்டது போல இருக்கிறது. வாய் முழுதும் ஒருமாதிரி சொல்லொணாத வண்ணம் குறுகுறுவென உறுத்திக்கொண்டிருந்தது. கையில் ம‌ண்ணெண்ணை ப‌ட்டாலே சோப்பு போடாம‌ல் போய்த்தொலையாது. வாயில் எப்ப‌டி சோப்பு போடுவ‌து? போடலாமா? இன்னும் கொஞ்சம் குமட்டிக்கொண்டு வருமோ? அப்புற‌ம் தைரிய‌ம‌ற்று அரைம‌ணிநேர‌ம் வாய்க்கொப்ப‌ளித்துக் கொண்டிருந்தேன்.

டிஸ்கி : அவ‌ச‌ர‌மாக‌ ஊருக்குப்போவ‌தால் (செவ்வாய்க்கிழ‌மைதான் ரிட்ட‌ர்ன்) க‌டையை காத்தாட விட்டுவிடாம‌ல் ப‌ழைய‌ ப‌திவுக‌ளை ப‌டித்துக்கொண்டிருக்க‌வும். வந்து பார்க்கும் போது ஹிட்ஸ் 25000த்தை தொட்டிருக்கவேண்டும். இதோ ஓடி வ‌ந்துவிடுவேன். யாருக்கெல்லாம் அல்வா வேண்டும்.?

Monday, November 17, 2008

தீராத காதலும் தாளாத காமமும்..

முன் குறிப்பு : ஒற்றை அன்றில் ஸ்ரீ, சாளரம் கார்க்கி, சரவணக்குமார் MSK.. போன்ற குட்டிப்பசங்களுக்குப் போட்டியாக இதோ சில காதல் கவிதைகள்.. இன்னும் நேரமின்மையால் முதல்முத்தம் வலைப்பூவை சரிபண்ணாமல் வைத்திருக்கிறேன். அதான் அப்பப்ப கவிதைப்படங்களையும் இங்கேயே மேட்னி ஷோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

தீராத காதலும் தாளாத காமமும்..

காலங்களைக் கடந்தும்
தூரங்களைக் கடந்தும்
தொடர்ந்து வருகிறாய்
தொட்டுச்சிரிக்கிறாய்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
மீண்டும்
உன்னிலிருந்து துவங்க‌
ஒரே ஆவலாயிருக்கிறது.!

***************

நீ என்னுள்ளே பதித்த தடயங்கள்
அத்தனையும்
காற்றிலே உடைந்து போய்விட்டன..
மீதம் ஏதுமில்லை,
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக நம் காதல்.!

***************

எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல..

**************

சம‌ய‌ங்களில்
நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து என்கிறாய்.

***************

புய‌லைப்போன்ற‌
வேக‌த்துட‌னும் ப‌ல‌த்துட‌னும்
முத்த‌மிட்டுத்துவ‌க்குகிறாய்.
நீரிலே மித‌க்கும் உன் சேலை போல‌
என் மீது இல‌வ‌ம்ப‌ஞ்சாய்
த‌ழைந்து நிறைவு செய்கிறாய்.!

Wednesday, November 12, 2008

தேன்குழம்பு

கொஞ்சம் கூட சந்தேகமே வேண்டாம், இது சமையல் குறிப்புதான். அதுவும் நான்வெஜ் சமையல் குறிப்பு. என்ன தாமிரா சமையல் குறிப்பெல்லாம் கொடுப்பாரா என அதிர்ச்சியடைய (சந்தோஷ?) அடைய‌ வேண்டாம். வேலைப்பளு மற்றும் கிளாஸ் காரணமாக சினிமா, சமையல், கவிதை மாதிரி லைட்டான பதிவுகளை போட்டு ஒரு பத்து நாளை ஒப்பேத்தலாம் என்ற ஐடியாவும் ஒரு காரணம். மற்றும் நாம் செய்வதை ஊருக்கும் சொல்லலாமே என்ற ஒரு நல்ல எண்ணமும்தான்.

(தங்கமணி வெரைட்டி கேட்டு ரொம்ப சலிச்சுக்கிறதா வெண்பூ ஒன்றும் போனெல்லாம் பண்ணி சமையல் குறிப்பு கேட்க‌வில்லை என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்). மேலும் பின்வரும் இந்த சமையல் குறிப்பை நீங்கள் வேரெங்கும் படித்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு. ஏனெனில் இது என் நண்பர் ஒருவர் ரசித்துக்கூற, ஜொள் விட்டவாறே நான் கேட்டு மகிழ்ந்தது. நேரே செய்முறைக்குப்போகலாம். இடுபொருட்களை அதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். அதைவேறு தனியாக லிஸ்ட் போட நேரமில்லை.

செய்முறை :

நேரே சிரமம் பார்க்காமல் பக்கத்திலிருக்கும் குளம் அல்லது ஊருணிக்கு செல்லுங்கள். குறிப்பாக கண்மாயில் சிறிய ஓடை அமைத்து, குழாய் பதித்து அயிரை மீன் பிடித்துக்கொண்டிருக்கும் அமைப்புடைய குளமாக விசாரித்துவிட்டு செல்லுங்கள். சென்னையிலிருப்பவர்களும் தமிழகத்துக்கு வெளியே இருப்பவர்களும் இந்த குறிப்பை படிப்பதில் பயனில்லை என‌ நினைக்கிறேன். நான் குறிப்பிடும் அயிரை மீன்கள் நெல்லை, மதுரை பக்கம் கண்டிப்பாக கிடைக்கும், இப்போ நல்ல சீசன் வேற.. கோவையிலும் கிடைப்பதாக சொல்கிறார்கள். பிற பகுதிகளைப்பற்றிய தகவலில்லை.

அப்படியே குழாயிலிருந்து தெறித்து விழுந்து இன்னமும் துள்ளிக்கொண்டிருக்கும் குட்டி அயிரை மீன்களை 20 அல்லது 30 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுங்கள். பெரும்பாலும் எடையெல்லாம் போடாம‌ல் கைய‌ள‌வில் அள்ளிக்கொடுப்பார்க‌ள். பாலிதீன் பேக்கில் அங்கேயே சிறிது நீர் நிர‌ப்பி வாங்கிக்கொள்ளுங்க‌ள். இந்த‌ மீனில் ஒரு சிற‌ப்ப‌ம்ச‌ம் உண்டு. அதுதான் கிளீனிங் வேலை. ம‌ண்டை, வால், செதிள்க‌ள் ப‌குதிக‌ளை நீக்குவ‌து, சுத்த‌ம் செய்வ‌து, துண்ட‌ங்க‌ள் ஆக்குவ‌து போன்ற‌ எந்த‌ வேலைக‌ளுமே கிடையாது. மொத்த‌ மீனே குட்டியூண்டுதான் இருக்கும். ஒரு சிம் கார்டில் 5 மீன்க‌ளை வ‌ரிசையாக‌ அடுக்கிவிட‌லாம். ஆக‌வே ம‌ண்டையையும், வாலையும் நீங்க‌ள் க‌ழித்தால் அங்கே மீன் என்ற‌ ஒன்று மிஞ்சுவ‌‌து ச‌ந்தேக‌மே. ச‌ரி க‌தையை விடுத்து சீக்கிர‌ம் ச‌மைய‌லுக்குப் போக‌லாம்.

வீட்டிற்கு வ‌ந்த‌தும் மீன்க‌ளை ஒரு ச‌ட்டியில் போட்டு லேசாக‌ கல் உப்பு போட்டு ஒரு பெய‌ருக்கு கிளீன் ப‌ண்ணி வ‌ழ‌வ‌ழ‌ப்பு போக‌ச்செய்து, ஏற்க‌ன‌வே த‌யார் செய்து வைத்துள்ள போதுமான அளவு தேங்காய் பாலில் போட்டுவிட‌வும். தேங்காய்ப்பாலில் விழுந்து ஆன‌ந்த‌மாக‌ நீச்ச‌லிடித்துக்கொண்டே அதைக்குடித்து மெல்ல‌ மெல்ல‌ மீன்க‌ள் ப‌ர‌லோக‌ம் போய்ச்சேர்ந்துவிடும்.

இப்போது ச‌ட்டியை அடுப்பில் வைத்து நேரே தாளிச‌த்திலிருந்து ஆர‌ம்பித்துவிடுங்க‌ள். எண்ணையை காய‌வைத்து க‌டுகு, உளுத்த‌ம்ப‌ருப்பு, க‌றிவேப்பிலையுட‌ன் ம‌ற‌க்காம‌ல் வெந்த‌ய‌ம் தேவையான‌ அள‌வு சேர்க்க‌வும். வெந்த‌ய‌ம் மிக‌ முக்கிய‌ம். ந‌ன்கு பொரிந்த‌வுட‌ன் பொடிப்பொடியாக‌ ந‌றுக்கிவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்க‌வும். (பெரிய‌ வெங்காய‌ம் க‌ண்டிப்பாக‌ கூடாது) பின்ன‌ர் ச‌ரியான‌ அள‌வில் வெட்டிவைக்க‌ப‌ட்டுள்ள‌ மாங்காய், த‌க்காளியை போட்டு க‌ரைத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சிறிது புளியை ஊற்ற‌வும். இப்போது தேங்காய்ப்பாலில் ஊற‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மீனை எடுத்து த‌னியே வைத்துவிட்டு அந்த‌ தேங்காய்ப்பாலில் சிறிது வெங்காய‌ம், சீர‌க‌ம் சேர்த்து அரைத்துக்கொள்ள‌வும். இதில் நீர‌ள‌வு அதிக‌மிருப்ப‌தாக நீங்க‌ள் நினைத்தால் முன்பே புளிக்க‌ரைச‌லில் நீர‌ள‌வை குறைத்திருக்க‌வேண்டும். க‌வ‌ன‌ம்.

இப்போது தேங்காய், வெங்காய‌ அரைச‌லை (க‌ரைத்து வைத்தால் க‌ரைச‌ல், அரைத்து வைத்தால் அரைச‌ல்தானே.. ஜோக் வேண்டாம், பீ சீரியஸ்..) ஊற்றி லேசாக‌ சூடேறிய‌தும் தேவையான‌ அள‌வு ம‌ஞ்ச‌ள், மிள‌காய், கொத்த‌ம‌ல்லிப் பொடிக‌ளையும், உப்பையும் போட்டு க‌ல‌க்க‌வும். இப்போது இன்னும் மீனை சேர்க்காத‌ போதே, மீன் குழ‌ம்பு வாச‌ம் அடுக்களையைத் தாண்டி ஹாலுக்கு போயிருக்கும். அடுத்துதான் முக்கியமான இறுதிக் க‌ட்ட‌ம். த‌ட்டில் மினுமினுப்பாக‌ குவித்துவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மீன்க‌ளை குழ‌ம்பில் போட்டு அரை நிமிடம் மூடி வையுங்கள். ஏற்க‌ன‌வே அயிரை மீனே குட்டி மீன் வ‌கையைச்சார்ந்த‌து, அதிலும் நீங்க‌ள் குள‌க்க‌ரைக்கே போய் இள‌ம் மீன்க‌ளாக‌ வாங்கி வ‌ந்திருப்ப‌தால் அரை நிமிடம்தான் ஒரே கொதிதான்.. இற‌க்கிவிடுங்க‌ள். இப்போது ம‌ண‌ம் உங்க‌ள் வீட்டைத்தாண்டி உங்க‌ள் தெருவையே அல்லது அப்பார்ட்மென்டையோ ம‌ய‌க்கும்வ‌ண்ண‌ம் ப‌ர‌வியிருக்கும். த‌வ‌ற‌விடாதீர்க‌ள், ஆவி ப‌ற‌க்க‌ சோற்றை போட்டு அப்போதே சாப்பிட்டுவிடுங்க‌ள். குளித்துவிட்டு சாப்பிட‌லாம் என‌ நினைத்து லேட் ப‌ண்ணுவீர்க‌ளானால் திரும்பி வந்து பார்க்கும்போது ச‌ட்டி காலியாயிருக்க‌க்கூடும், ஜாக்கிர‌தை.!

இந்த‌ ப‌க்குவ‌த்தில் யாராவ‌து இந்த தேன்குழம்பை ஸாரி, மீன்குழம்பை செய்து த‌ருவீர்க‌ள் எனில் போன் ப‌ண்ண‌வும், இப்போதே கிள‌ம்பிவ‌ர‌த்தயாராக‌ இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும்.!

டிஸ்கி : என் ர‌மா வெஜிடேரிய‌ன் என்ப‌தை அறிக‌.

Tuesday, November 11, 2008

நான் ரசித்த பாடல்கள்.. டாப் 5.

எனது இசையார்வத்தின் அதிகபட்ச உயரம் தமிழ் திரைப்பாடல்கள் மட்டுமே. டாப் 5 க்குள் அடக்கிவிடக்கூடிய விஷயமா இது.? அதுவும் எனக்கு பிடிக்கவேண்டுமானால் அந்தப்பாடல் இசை தவிர மேலும் சில ரசனையான விஷயங்களையும் கொண்டிருக்கவேண்டும். ஏராளமான பாடல்களுக்கிடையே சில விதி முறைகளை வைத்துக்கொண்டு நான் ரசித்த, ரசிக்கும் டாப் 5 பாடல்களைத் தருகிறேன். மிக முக்கியமான விஷயம் 2006க்கு பின்னர் வந்த பாடல்கள் மட்டுமே ஆட்டத்துக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரசனையான ஒளிப்பதிவு, ரகளையான ஹீரோ, ஹீரோயின், அற்புதமான இசை, கவிதைத்தனமான பாடல் வரிகள், உணர்வைத்தொடும் குரல், கொஞ்சம் காதல் என பல விஷயங்களையும் கணக்கில் கொண்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன். பிடித்தால் (பிடிக்காவிட்டாலும்) பின்னூட்டமிட்டு தெரியப்படுத்தவும்.

காற்றின் மொழி..


ப‌ட‌ம் : மொழி இய‌க்க‌ம் : ராதாமோக‌ன் ஜோடி : பிரித்விராஜ், ஜோதிகா ஒளிப்ப‌திவு : குக‌ன் இசை : வித்யாசாக‌ர் பாட‌ல் : வைர‌முத்து குர‌ல் : சுஜாதா

அக்க‌ம் ப‌க்க‌ம்..


ப‌ட‌ம் : கிரீடம் இய‌க்க‌ம் : விஜய் ஜோடி : அஜித், திரிஷா ஒளிப்ப‌திவு : திரு இசை : ஜிவி பிரசாத் பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : சாத‌னா ச‌ர்க‌ம்

காத‌ல் வைத்து..ப‌ட‌ம் : தீபாவளி இய‌க்க‌ம் : எழில் ஜோடி : ஜெய‌ம் ர‌வி, பாவ‌னா ஒளிப்ப‌திவு : ஜீவா இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : பா விஜய் குர‌ல் : விஜ‌ய் யேசுதாஸ்

முன்பே வா..


ப‌ட‌ம் : ஜில்லுனு ஒரு காதல் இய‌க்க‌ம் : கிருஷ்ணா ஜோடி : சூர்யா, பூமிகா ஒளிப்ப‌திவு : ஆர்டி ராஜசேகர் இசை : ஏஆர் ரகுமான் பாட‌ல் : வாலி குர‌ல் : ஷ்ரேயா கோஷல்

எங்கேயோ பார்த்த மயக்கம்..


ப‌ட‌ம் : யாரடி நீ மோகினி இய‌க்க‌ம் : மித்ரன் ஜவஹர் ஜோடி : தனுஷ், நயன்தாரா ஒளிப்ப‌திவு : சித்தார்த் இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : உதித் நாராய‌ண‌ன்

Monday, November 10, 2008

பாஸ்வேர்ட் உலகம்

என்ன உலகமடா இது?

என்னிடம் இருப்பது இரண்டு பேங்க் அக்கவுண்ட்கள். அதில் ஒன்றை நீண்டநாட்களாக உபயோகப்படுத்தாமலே இருந்தேன். (ஒரு அக்கவுண்டில் போடுறதுக்கே இங்கே பணத்தை காணவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டாவது வேற..) சமீபத்தில் நேர்ந்த பணநெருக்கடியில் அந்த பேங்க் அக்கவுண்டை திறந்துபார்க்கலாம், ஒரு நூறு இரநூறு தேறாதா என்று எண்ணி நெட்டைத்திறந்தால் ஐடி, பாஸ்வேர்ட் ஞாபகமில்லை. நானும் பர்ஸிலுள்ள குப்பைகளை கிளறிப்பார்க்கிறேன், தலையை தட்டிப்பார்க்கிறேன், தண்ணி குடித்துப்பார்க்கிறேன். இப்போது பயன்படுத்துகிற அத்தனை பாஸ்வேர்ட்களையும் போட்டுப்பார்க்கிறேன். நான்கைந்து முறைகளுக்கு மேல் தவறாக போட்டால் லாக் ஆகிவிடும் என்று ராஜன் வேறு பயமுறுத்தினார். ஆகவே முயற்சியை பாதியிலேயே நிறுத்தினேன். வீட்டில் போய் தேடிப்பார்க்கலாம்.
எதிலாவது எழுதிவைத்திருப்பேன்.

என்ன உலகமடா இது?

யோசித்துப்பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளில் எத்தனை ஐடிக்கள், பாஸ்வேர்ட்களை பயன்படுத்துகிறோம்? அலுவ‌ல‌க‌த்தில் நுழையும் போதே கார்ட் ப‌ஞ்ச்சிங்கில் துவ‌ங்குகிற‌து. ந‌ல்ல‌ வேளையாய் அங்கு பாஸ்வேர்ட் இல்லை. அத‌ற்கும் பாஸ்வேர்ட் இருந்தால் எத்த‌னை நாள் அலுவ‌ல‌க‌த்துக்குள் போகாம‌ல் வெளியேவே நிற்க‌வேண்டிய‌ சூழ‌ல் வ‌ந்திருக்குமோ?

சீட்டில் உட்கார்ந்த‌தும், க‌ம்யூட்ட‌ரைத்திற‌க்க‌ ஒரு ஐடி, பாஸ்வேர்ட். ஆ.:பீஸ் மெயிலை திற‌க்க‌ அடுத்த‌து. SAP திற‌க்க‌ அடுத்த‌து. முக்கிய பைல்களை திறக்க அடுத்தது. யாகூ மெயிலுக்கு ஒன்று. ஜிமெயிலுக்கு ஒன்று. ICICI க்கு ஒன்று. அத‌ற்குள், ப‌ணமாற்ற‌லுக்கு இன்னொன்று. பிளாக‌ருக்கு ஒன்று. அத‌ற்குள் த‌மிலிஷ், த‌மிழ் இன், க‌வுண்ட‌ர் போல‌ ப‌ல‌வ‌ற்றுக்கும் ப‌ல ஐடிக்க‌ள், பாஸ்வேர்டுக‌ள். விக‌ட‌னுக்கு ஒன்று. ர‌யில்வே டிக்கெட் புக் செய்ய‌ ஒன்று. அவ‌ச‌ர‌ ப‌ஸ்டிக்கெட் புக் செய்ய இன்னொன்று. சினிமா டிக்கெட் புக் செய்ய‌ இர‌ண்டு (ச‌த்ய‌ம் ஒன்று, ஐநாக்ஸ் ஒன்று) புக் செய்து ரொம்ப‌ நாளாகிவிட்ட‌தால் ஞாப‌க‌த்தின் ஆப‌த்தான‌ நிலையிலிருக்கிற‌து. LIC க்கு ஒன்று. அலுவ‌ல‌க‌த்தின் சிறப்பு வேலைக‌ளுக்காக எப்போதாவது ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் சில‌ பாஸ்வேர்ட்க‌ள். மேலும் சில‌ முக்கிய‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ஐடி, பாஸ்வேர்ட்க‌ள். இதில் பல இடங்களில் ஒரே பாஸ்வேர்டடை பயன்படுத்தினாலும், சில விஷயங்களில் சில நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்ட்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வேறு.

அலுவ‌ல‌கத்துக்கு வெளியே வ‌ந்தால், ATM-ல் பின் ந‌ம்ப‌ர், CVV ந‌ம்ப‌ர், நெட் யூச‌ர் ஐடி, பார்வேர்ட், மேலும் சில‌ ப‌ல‌ப‌ய‌ன் அட்டைக‌ளின் ந‌ம்ப‌ர்க‌ள்.... ந‌ம்ப‌ர், ந‌ம்ப‌ர்.... பாஸ்வேர்ட், பாஸ்வேர்ட்.....

"சார், உங்க‌ போன் ந‌ம்ப‌ர் என்ன‌?"

"நைன், செவ‌ன், சிக்ஸ்.. எயிட்....திரி...ம்ம்... ரிஸ்க் வேண்டாம் உங்க‌ ந‌ம்ப‌ர் குடுங்க‌ மிஸ்ட் கால் குடுத்திர்றேன்"

டிஸ்கி : ஒரு வ‌ழியாக‌ அந்த‌ இர‌ண்டாவ‌து அக்க‌வுண்டின் ஐடி பாஸ்வேர்ட் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு செக் ப‌ண்ணிய‌ பொழுது அதில் இருந்த‌ ப‌ண‌ம் ரூ.32. என்ன உலகமடா இது?

Friday, November 7, 2008

பெண்ணென்னும் பேரெழில்.!

நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104)

இந்தக்குறள் காமத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது என்று புரிபவர்கள், ஸாரி இங்கேயே விலகிவிடலாம். (அன்றைய காலங்களில் காமம் என்ற சொல் இன்றைய காதலுக்கு ஒப்பாக பயன்படுத்தப்பட்டதெனவும், காதல் என்பது அன்பு என்ற சொல்லுக்கு இணையாக பயன்படுத்தப்பட்டதெனவும், இங்கே நான் காமம் என்று குறிப்பது நாம் அந்தச் சொல்லுக்கு உருவேற்றி வைத்திருக்கும் இன்றைய அர்த்தத்தில்தான் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்)

உணவு, உறக்கம், கடமை மறந்து காதலன் காதலியை நினைத்துக்கிடக்கிறான். அது எதனால்? அதன் பயன் என்ன.? காலம், காலன், மனிதன் இவற்றை மீறி யாராவது அவள் அவனுக்குத்தான் என்ற உறுதியைத் தந்துவிடமுடியுமா? அப்புறமும் ஏன் இப்படிக்கிடக்கிறான்.? ஒருபொழுதில் இருவரும் சுகித்துக்கிடக்கிறார்கள். அதன் நினைவுகளில் நீந்திக்கிடக்கிறானா? அவள் உயிரோடு ஒப்புக்கொடுத்திருக்கிறாளே? அந்தக்கனமா? அவள் அருகிருந்தால் இந்த வெளியுலகு அவனுக்கு இயல்பாகத்தானிருக்கிறது.. அந்த‌ அன்போ? இவனுக்கான வார்த்தைகளை தேவ மொழிகளிலிருந்து திருடிக்கொண்டு வருகிறாள். காதோரம் கிசுகிசுக்கிறாள். அந்தப்போதையா?அருகில் செல்கையில் இதத்தையும், விலகிச்செல்கையில் வெப்பத்தையும் தரும் இந்த அற்புதத்தீயை எங்கே பெற்றாள் இவள்?

நேற்றிரவில் என் கன்னங்களில் நீர்..!


டிஸ்கி : "Warning to bachelors" தொகுப்பை எழுதிய தாமிரா ஊரிலில்லை எனவும் இது அவரது கோஸ்ட் எழுதியது எனவும் ஒப்புக்கொள்கிறோம்.

Tuesday, November 4, 2008

ரஜினிகாந்த் என்ற சக்தி

இன்றைய காலகட்டங்களில் ரஜினி பணத்துக்காவும், புகழுக்காகவும் சினிமாவில் நடிப்பதில்லை என்பதை அவரது பல்வேறு பேச்சுகளின் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளமுடிகிறது. பின் ஏன் நடிக்கிறார்? சூழலின் நிர்ப்பந்தம். இன்னும் முதல் குதிரையாக ஓடிவரும் ரஜினியை விட்டுவைப்பார்களா அவரை சூழ்ந்திருப்போரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும். முடிந்த வரை நட்பு, உறவு, நன்றிக்கடன் அல்லது ரசிகர்கள் ஆகியவற்றைக் காரணம்காட்டி அவரை நடிக்க நெருக்கடி தந்து சம்மதிக்கவைக்கிறார்கள். அப்புறம் ஏன் கோடி கோடியாய் சம்பளம் பெறுகிறார்? அவர் ஒன்றும் முட்டாளல்லர். அவர் காரணமாகவே கோடி கோடியாய் ஒரு சினிமா சம்பாதிக்கும் போது அதை அப்படியே மூன்றாம் மனிதனுக்கு தாரை வார்ப்பது எப்படி சரியாகும்.? ஆகவே பணத்தையும் பெற்றுக்கொள்கிறார். அவர் செய்வது மிகச்சரியானதே.

அவரது பேச்சுகள் மூலம் ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மனத்தில் தோன்றியதை அப்படியே அந்தந்த பொழுதில் பேசிவிடுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார். சிறிது கோபமும் இருக்கிறது. இந்த குணங்கள் எல்லா சாதாரண மனிதருக்கும் இருக்கக்கூடியதுதான், அதில் நிச்சயமாக தவறு இருக்கமுடியாது. ஆனால் ரஜினி போன்ற ஒரு பெரிய இடத்திலிருக்கக்கூடிய, மூச்சு விட்டாலே செய்தியாகிவிடக்கூடிய இடத்திலிருக்கும் ஒரு செலிபிரிட்டி பப்ளிக் பேச்சுகளில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். இதைப்பற்றிய புரிதலும் அவரது சமீபத்திய பேச்சுகளில் தெரிகிறது.

ஏன் அவரைப்பற்றி இவ்வளவு சர்ச்சைகள்?
பத்திரிகை மற்றும் பிற மீடியாக்கள் தங்கள் பசிக்கு விஐபிக்களை எந்நேரமும் தின்றுவிட காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது அனைவருக்கும் ஓரளவு புரிகிற விஷயமே. அதற்கு வாய்ப்பாக 'லட்டு' மாதிரி கிடைத்தவர்தான் ரஜினி. ஆனானப்பட்ட தில்லாலங்கடிகளின் பேச்சையே திரித்து வெளியிடும் வல்லமை பெற்ற மீடியாக்கள் ரஜினியின் பேச்சுகளை திரித்து வெளியிடுவது என்பது அவர்களுக்கு ஆகச்சுலபமான ஒன்று. ஏனெனில் அவர் பேசும்போது கேட்டால் அவர் உணர்ச்சிவசத்திலோ, கோர்வையாக பேச வராமலோ சில வார்த்தகளை தடுமாற்றத்தோடு பேசுவதை கவனித்திருக்கலாம். ஏனெனில் பப்ளிக்கில் பேசுவது என்பது ஒரு கலை, அதில் ரஜினி சிறிது வீக் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதை பேசும் போது அவரது உணர்வுகளோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதை விடுத்து எழுத்தில் பார்த்தோமேயானால் தவறாக புரிந்துகொள்ள ஏதுவாகும்.

அவர் அரசியலுக்கு வர எண்ணுகிறாரா? இதுவரை அப்படி ஒரு எண்ண‌ம் அவருக்கு இல்லை என்பது தெளிவு. அதற்கான தகுதியோ, அனுபவமோ இல்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவருக்கோ மிகத்தீவிரமான கடவுள் நம்பிக்கை உள்ளது. நேற்று உணவுக்கே கஷ்டப்பட்ட சிவாஜிராவ் இன்று மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ள ரஜினி. இந்த நிலையை கடவுள் தந்ததாக அவர் நம்புகிறார். ஆகவே அவரால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லமுடியவில்லை. அதைச்சொல்ல நான் யார்? கடவுள்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.

இவ்வளவு நாட்களாக இல்லாமல் இப்போது ஏன் அவருக்கு இந்த அரசியல் பிரவேச நெருக்கடி? இது உள்ளங்கை நெல்லிக்கனி. நம் தலைவரை விடவும் குறைவான ரசிகர் பலம் கொண்ட விஜயகாந்த், சரத்குமார் கட்சி ஆரம்பித்து இப்படி இயக்கமாக மாறிவிட்டார்கள் என்ற அவரது ரசிகர்களின் ஆதங்கம்தான். இன்னும் சொல்லப்போனால் அதில் தலைவரின் மீதான பாசம் என்பதைவிடவும் கொஞ்சம் சுயநலமே தூக்கலாக இருக்கும் என எண்ணுகிறேன். நேற்று ரசிகர்மன்றத்தலைவர் என்ற ஒரு நபர் இன்று கட்சியின் மாவட்ட நிர்வாகி, நேற்றைய மன்ற செயலாளர் இன்று வட்டச்செயலாளர். இதை ரஜினி ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் மன்றத்தலைவரானவர் இன்னும் அதே நிலைமையில் இருக்கிறார். 50 வயது தாண்டிய ஒரு நபர் இன்னும் நான் ரசிகர்மன்றதலைவர் என்று சொல்லிக்கொள்ளத்தயங்குகிறார். ஒரு சுய‌ ஆர்வத்தில்தான் ரஜினி மன்றத்தில் இணைந்தேன். ஆனால் இத்தனை வருட வாழ்க்கையில் இப்போது த‌னக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பதை உணர்கிறார். இதில் இணையாமல் இருந்திருந்தால் நான் முன்னேறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறார். ரஜினி இவ்வளவு புகழ் பெற்றிருக்கவில்லையெனில் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால்.? இந்த எண்ணத்தை ரஜினி விரும்பவில்லை எனில் அவர் அதை 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும். அதைச்செய்யவில்லை அவர், மாறாக அந்த எண்ணத்துக்கு தூபம் போடுவதைத்தான் செய்தார். உற்றுக்கவனித்தால் அது அவர் தவறல்ல என்பதையும், அந்தந்த படங்களின் இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ படத்தின் விளம்பரத்துக்காகவும், சுவாரசியத்துக்காகவும் அவரை பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஆகவே அவருக்கு பின்னர் வந்த விஜயகாந்தும், அவரது அவரது ரசிகர்களும் இன்று அடைந்துள்ள சமூக அந்தஸ்தையும் காணப்பொறுக்காமலே அவரது ரசிகர்கள் இந்த அளவில் நெருக்கடிக்கு அவரைத்தள்ளியிருக்கிறார்கள். இது ஒரு வகையில் தவறுதான், பேராசைதான். இன்றுவரை என்னை ஒரு சினிமா நடிகனாக மட்டுமே பாருங்கள் என்றுதான் அவ்ர் கூறிவந்திருக்கிறார்.

சமீபத்திய பேட்டியில்கூட "எங்களுக்காக‌ என்ன செய்தாய் தலைவா?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தடுமாறி சிந்தித்து கடைசியில், "உங்களுக்காக என் விருப்பத்தையும் மீறி, நீங்கள் விரும்பியபடி டான்ஸ் ஆடினேன், பறந்து பறந்து சண்டைபோட்டேன், காமெடி பண்ணினேனே.." என்று பரிதாபமாக கேட்கிறார். பாவமாக இருந்தது. நான் உனக்காக டிக்கெட் வாங்கி படம்பார்த்தேனே? நீ எனக்காக என்ன செய்தாய் என்று ஒரு நடிகரைப்பார்த்துக்கேட்டால் அவர் என்ன செய்வார்? அந்த படத்தில் நடித்ததுதான் அவர் உனக்காக செய்தது. அதற்கு மேல் ஒரு நடிகர் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறார்கள். தானே ஒரு உணர்ச்சிவயப்படுகின்ற ஆள், தன் ரசிகர்கள் நம்மைவிட உணர்ச்சிவசப் படுகிறவர்களாகவும், பிறரைப்பார்த்து ஆசைப்படுபவர்களாகவும், அதற்கான அறிவும் திறனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்களே என்று இப்போது ரஜினி சிந்திப்பவராகவே எனக்கு படுகிறார். இவர்களுக்காக அரசியலில் இறங்கி தோற்றால் அவமானத்தை ஏற்பதிலும், ஜெயித்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தை ரிஸ்க்கில் தள்ளுவதிலும் உள்ள ஆப‌த்தை ரஜினியும் அவரது ரசிகர்களும் இன்னும் சிந்திக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நான் ரஜினி ரசிகனுமல்லன், அவரை மீடியாக்களில் உற்றுக்கவனித்துக் கொண்டிருப்பவனுமல்லன். நான் இன்னொரு பிரபல நடிகரின் ரசிகனாகவே இருப்பினும் ரஜினியிடம் இருக்கும் தீராத கவர்ச்சியை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் அமிதாப்புடன் ஒப்பிடும்போது ரஜினியின் கவர்ச்சி இறுதிவரை அவரிடமிருந்து நீங்காத ஒரு வரமாகவே இருக்கும் எனவும் நம்புகிறேன். இது என் அரைகுறை கேள்வி ஞானத்தில், சுயமாக‌ எழுதப்பட்ட ஒரு கட்டுரை, அவ்வளவே.! ஏதும் மாற்றுக்கருத்து இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்.

Monday, November 3, 2008

ஒரு நெல்லிம‌ர‌மும் சில‌ வாடகைப் புத்தகங்களும்

கொஞ்சம் கொசுவத்தி சுத்தலாமா? நான் எப்போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்? என்னென்ன மாதிரி புத்தகங்கள்? ஏதாவது அழகான நினைவுகள்.? சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்.

சில தெருக்கள் தள்ளி இருந்த என் மாமா ஒருவரின் வீட்டில் அவரது அறை பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்களும், குங்குமம், கல்கி போன்ற இதழ்களுமாய் நிரம்பியிருக்கும். அவரும் வீட்டிலிருக்கும் எந்த நேரமும் சதா படித்துக்கொண்டேயிருப்பார். இதைப்பார்த்த நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து குங்குமம் வாங்கி புரட்டியபோது எதையும் படிக்க முடியாமல் படம் மட்டுமே பார்க்கமுடிந்தது. ஒருநாள் தற்செயலாக கிடைத்த சிறுவர்மலர் (தினமலர்) என்னை மிகவும் கவர்ந்தது. பின்னர் அதைத்தேடி லைப்ரரிக்கு சென்றேன். நாளித‌ழ், வார‌இத‌ழ் ப‌டிக்குமிட‌த்தையும் தாண்டி உள்ளே சென்று புத்த‌க‌ம் எடுக்க‌ உறுப்பின‌ராக‌வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

என் மாமாவிட‌ம் மூன்று உறுப்பின‌ர் அட்டைக‌ள் இருந்த‌ன‌. என் ப‌டிக்கும் ஆவ‌லைத்தூண்டும் பொருட்டு ஒன்றை நான் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ அனும‌தித்தார். இப்போது யோசிக்கும் போது தெரிகிற‌து அவ‌ர் அந்த‌ லைப்ர‌ரியின் பாதிக்கும் மேற்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ளை அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ப‌டித்து முடித்திருக்க‌க்கூடும். ஆனால் அதைவிட‌வும் என‌க்கு சிறுவ‌ர்ம‌ல‌ரே முக்கிய‌மாக‌ ப‌ட்ட‌து. அதில் வந்த படக்கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. 'உயிரைத்தேடி..' என்ற ஒரு படத்தொடர் வந்துகொண்டிருந்தது. அதன் சஸ்பென்ஸ் என்னை தூங்கவிடாமல் செய்தது. வெள்ளிக்கிழ‌மை நூல‌க‌ம் விடுமுறை. ஆக‌வே எங்க‌ள் வீட்டுக்கு அருகிலிருந்த‌ ஒரு ம‌ருத்துவ‌ரின் வீட்டுக்கு (அங்கு ம‌ட்டும்தான் பேப்ப‌ர் வ‌ந்துகொண்டிருந்த‌து, அவ‌ர் ம‌க‌னும் என‌து வ‌குப்புத்தோழ‌ன்) வெள்ளிய‌ன்று அதிகாலையே அவ‌ர்க‌ள் எழுந்து பேப்ப‌ரை எடுக்கும்முன்ன‌ரே போய் ப‌டித்துவிட்டு வ‌ருவேன். சில நாட்கள் அவர்கள் முந்திக்கொண்டு பேப்பரை எடுத்துவிட்டால் பரிதாபகரமாக காத்துக்கிடந்து படித்துவிட்டு வருவேன்.

வெள்ளிக்கிழமையானால் காலை ஆற‌ரைக்கே எழுந்து எங்கு செல்கிறான் என்று ஆச்ச‌ரிய‌மாக பார்த்த‌ என் த‌ந்தை பின்ன‌ர் எங்க‌ள் வீட்டுக்கும் பேப்ப‌ர் வ‌ர‌வ‌ழைத்தார். அதிலிருக்கும் சிறுக‌தைக‌ளை ப‌டித்துவிட்டு ப‌ள்ளியில் மாதம் ஒருமுறை ந‌டக்கும் மாண‌வ‌ர் ம‌ன்ற‌த்தில் கைக‌ளை க‌ட்டிக்கொண்டு க‌தை சொல்லி கைத்த‌ட்டு பெறுவேன். அதோடு என் மேடை அனுப‌வ‌ம் முத‌லும் கடைசியுமாக‌ முடிந்த‌து. என்ன‌வோ தெரிய‌வில்லை அதன் பின்ன‌ர் மேடையென்றாலே உத‌ற‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து. இன்றுவரை க‌லைநிக‌ழ்ச்சிக‌ளோ, விளையாட்டோ க‌ல‌ந்துகொள்வ‌தே கிடையாது. என‌க்கென்று சிறு வ‌ட்ட‌த்தை உருவாக்கி அதற்குள்ளேயே இருந்து ம‌கிழ்ந்தேன்.

பின்ன‌ர் எட்டா‌ம் வ‌குப்பு வ‌ந்த‌ போது சிறுவர் மலர் சிறிது போரடித்தபோது முத‌ல் முத‌லாக‌ அதே நூல‌க‌த்தில் இத‌ழ் பிரிவைத்தாண்டி உள்ளே சென்று என் மாமாவின் க‌ண‌க்கில் ஒரு புத்த‌க‌த்தை எடுத்தேன். அத‌ன் த‌லைப்பு ஞாப‌க‌மில்லை. எழுத்தாள‌ர் ல‌க்ஷ்மி. அந்த‌ முத‌ல் நாவ‌லே ம‌ற‌க்க‌முடியாத‌ ப‌டுசுவார‌சிய‌மான‌ நாவ‌லாக‌ அமைந்த‌து. (க‌தை : பிர‌ச‌வ‌த்துக்காக‌ ம‌னைவி தாய்வீடு சென்றிருக்கும்போது ந‌ண்ப‌னின் த‌வ‌றான‌ வ‌ழிகாட்டுத‌லில் ஒரு விலைமாதுவிட‌ம் செல்கிறான் ந‌டுத்த‌ர‌குடும்ப‌த்து ஹீரோ. அதை போட்டோ எடுத்து பெரும்பணத்துக்காக அவ‌னை பிளாக்மெயில் செய்கிறாள் அந்த‌ விலைமாது. மிகுந்த‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாகி ம‌னைவியின் ந‌கைக‌ள், சேமிப்பு, ஸ்கூட்ட‌ர் அனைத்தையும் இழ‌ந்து அந்த‌ ப‌ண‌த்தை கொடுக்கிறான். கொடுத்த‌ ம‌றுநாளே அந்த‌ விலைமாது ஒரு விப‌த்தில் இற‌ந்துபோய்விடுகிறாள். ஒரு நாள் லேட் செய்திருக்க‌க்கூடாதா என்று அந்த‌ ஹீரோவுக்காக‌ ப‌ரிதாப‌ப்ப‌ட்டேன்.)

அதன் பின்ன‌ர் ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம் எக்ஸ்பிர‌ஸாக‌ வேக‌மெடுத்தது. த‌மிழ்வாண‌னின் அத்த‌னை கிரைம் நாவ‌ல்‌க‌ளையும் வெறியோடு ப‌டித்தேன். எங்கள் நூலகத்தின் நூற்றுக்கணக்கான புத்தகங்களை மேய்ந்தேன். இந்த வகை என்றில்லாமல் அனைத்தையும் படித்து துவம்சம் செய்தேன். தேவன், எஸ்எஸ்வி, லக்ஷ்மி, ரமணிசந்திரன், பாலகுமாரன், ராஜேஷ்குமார், சுபா, பெயர்தெரியாத பல மூத்த, புதிய எழுத்தாளர்கள், குங்கும‌த்திலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ தொட‌ர்க‌தைக‌ளின் தொகுப்புகள் (சுஜாதா, பால‌குமார‌ன், க‌லைஞ‌ர் மு.க‌ருணாநிதி, சாண்டில்யன்) என‌ வெறியோடு ப‌டித்தேன்.

சுஜாதாவின் ஆ!, பேசும் பொம்மைக‌ள், ஜீனோ க‌லைஞ‌ரின் தென்பாண்டிச்சிங்க‌ம், பாயும்புலி ப‌ண்டார‌க‌வ‌ன்னிய‌ன், பொன்ன‌ர்ச‌ங்க‌ர் போன்ற‌ ப‌ல‌ நாவ‌ல்க‌ள் அந்த‌கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் ப‌டித்த‌வைதான். 'பொன்ன‌ர் ச‌ங்க‌ர்' நாவ‌லில் வ‌ரும் வீர‌ம், காத‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சிக‌ள் ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ சினிமா பார்த்த‌ உண‌ர்வைத்த‌ந்த‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் வீட்டில் அனைவ‌ரும் வீட்டிற்குள் ப‌டுக்க‌, நான் வ‌ராண்டாவில் ப‌டுப்பேன். அம்மாவின் திட்டுக்கு ப‌ய‌ந்து அனைவ‌ரும் தூங்கிய‌பின்ன‌ர் விள‌க்கைப்போட்டு ம‌ணிக்கண‌க்காக‌ ப‌டிப்பேன்.

சில‌ நாட்க‌ள் ந‌ள்ளிர‌வில் விழித்துக்கொள்ளும் அம்மாவிட‌ம் மாட்டிக்கொண்டு தாறுமாறாக‌ திட்டு வாங்கியிருக்கிறேன். சில‌ நாட்க‌ளில் அம்மா விழிக்கும் அர‌வ‌ம் கேட்டு விள‌க்கைப்போட்ட‌வாறே தூங்கிவிட்ட‌தைப்போல‌ ந‌டித்துவிடுவேன். அவ‌ர் எழுந்துவ‌ந்து "அவ‌னைப்(என் மாமா) போடுற‌ போடுல‌ இவ‌ன் திருந்துவான்" என்று திட்டிக்கொண்டே புத்த‌க‌த்தை எடுத்துவைத்துவிட்டு விள‌க்கை அணைத்துவிட்டு ப‌டுப்பார்.மீண்டும் விள‌க்கைப்போட‌லாமா என்று யோசித்த‌வாறே நீண்ட‌ நேர‌ம் விழித்துக்கொண்டு ப‌டுத்திருப்பேன்.

இவ்வாறாக‌ ஒன்ப‌தாம் வ‌குப்பிலிருந்து +2 வ‌ரை நான் புத்த‌க‌ம் ப‌டித்த‌ கால‌ம் பீக்கில் இருந்த‌து. இந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் கிடை‌க்கும் விடுமுறைக‌ளில் நான் செல்லும் த‌ல‌ங்க‌ள் இர‌ண்டு. ஒன்று சேர‌ன்மகாதேவியிலிருக்கும் என் சித்த‌ப்பா வீடு. இன்னொன்று அம்பாச‌முத்திர‌ம் அருகே இருக்கும் பிர‌ம‌தேச‌ம் (இந்த‌ ஊரில் இருக்கும் ஒரு பெரிய‌ சிவ‌ன் கோவிலை மைய‌மாக‌ வைத்துதான் 'ம‌ர்ம‌தேச‌ம்' என்ற‌ புக‌ழ்பெற்ற‌ டிவி தொட‌ர் வ‌ந்த‌து) என்ற‌ ஊரிலிருக்கும் என் ம‌தினியின் வீடு. என்னை விட‌ 10 வ‌ய‌தே மூத்த‌வ‌ர் எனினும் எனக்கு இன்னொரு தாயைப்போன்ற‌வ‌ர். அவ‌ர் பெய‌ரே 'தாய்'தான். வீட்டுக்கு பின்புற‌ம் உள்ள‌ தோட்ட‌த்தில் பல மரங்கள் உண்டு. அதில் ஒரு பெரிய‌ நெல்லிம‌ர‌ம் உண்டு. அதையொட்டி வ‌ய‌லுக்கு நீர்பாய்ச்ச‌ உத‌வும் ஒரு ஓடை செல்லும். இனிய‌ சூழ‌ல்.

அந்த‌ ஊரில் ஒருவ‌ர் சைக்கிளில் நிறைய‌ புத்த‌க‌ங்க‌ளை எடுத்துக்கொண்டு வீடு வீடாக‌ வாட‌கைக்கு கொடுத்துச்செல்வார். புத்த‌க‌த்தின் விலை 1 ரூபாய் என்றால் ஒருநாள் வாட‌கை 10 பைசா. நான் விடுமுறையில் வ‌ந்தால் அவர் மிகவும் ஆர்வமாகிவிடுவார். ஒரு புத்த‌க‌த்தை எடுத்துக்கொண்டு ப‌டிக்காம‌ல் வைத்துக்கொண்டிருப்ப‌வ‌ர் ம‌த்தியில் ஒரே நாளில் 5 புத்த‌க‌ங்க‌ளை எடுத்துக்கொண்டு, ப‌டித்துமுடித்து ம‌றுநாள் அவ‌ர் வ‌ருகையை பார்த்திருப்பேன். அவ‌ரிட‌ம்தான் ஏராள‌மான‌ ராணிமுத்து, க‌ண்ம‌ணி, கிரைம் நாவ‌ல்க‌ள் என‌ வாசித்து த‌ள்ளினேன். காலை உண‌வுக்குப்பின்ன‌ர் புத்த‌க‌ங்க‌ளோடு ஒரு சிறிய‌ கிண்ண‌த்தில் அள‌வாக‌ உப்பு, மிள‌காய்தூளை க‌ல‌ந்து எடுத்துக்கொண்டு பின்புற‌ம் நெல்லிம‌ர‌த்தில் ஏறி வ‌ச‌மாக‌ உட்கார்ந்துகொண்டால் (பொதுவாக நெல்லிமரங்கள் ஏறமுடியாத அளவு வீக்காகத்தான் இருக்கும். இது கொஞ்சம் பெரிது) கரகரவென நெல்லியைப்பறித்து தின்றவாறே படிக்க ஆரம்பித்தால் பிற‌கு ம‌திய‌ உண‌வுக்குதான் இற‌ங்குவேன். உண‌வுக்கு பின்ன‌ர் தொட‌ங்கினால் மாலை ப‌டிக்க‌முடியாத‌ அள‌வு இருள் சூழ்ந்த‌ பிற‌குதான் இற‌ங்குவேன்.

ப‌திவு ரொம்ப‌ நீள‌மாக‌ போய்க்கொண்டிருக்கிற‌தே முடித்துக்கொள்ள‌லாமா? பின்ன‌ர் க‌ல்லூரிக்கு செல்ல‌ ஆர‌ம்பித்த‌ பிற‌கு ப‌டிப்ப‌டியாக‌ குறைய‌ ஆர‌ம்பித்த‌ ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம் க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பு ஆன‌தைப்போல‌ இப்போது சித்தெறும்பாகி ஊர்ந்துகொண்டிருக்கிற‌து.

இந்த‌ ப‌திவின் சாராம்ச‌ம் பிடித்திருப்ப‌தால் இதை தொட‌ர்ப‌திவாக்க‌ விரும்புகிறேன். (உங்களுக்கு பிடிச்சிருந்ததா?) இர‌ண்டிர‌ண்டு பேராக‌ இந்த‌ டேக் தொட‌ர‌ட்டும். தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் இதே போன்று நீ...ள‌மாக‌ எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌தையும் சொல்லிக்கொள்கிறேன் (அவ்வ்வ்..)

நான் அழைக்கும் இருவ‌ர்..

ப‌ரிச‌ல்

பாபு

Saturday, November 1, 2008

எனது பட்ஜெட்.!

நேற்றிரவே சம்பளம் வந்துவிட்டதாக‌ எஸ்எம்எஸ் வந்தது. பலவாறாக சிந்தனைகள் பறந்தது. ரமா வேறு ஊரில் இல்லை. என்ன பண்ணலாம்?

கிரெடிட் கார்ட் நம்பர் 1 ஐ இந்த மாதத்தோடு ஒழித்துக்கட்டிவிட்டு கட் பண்ணிப்போட்டுவிடவேண்டும். கிரெடிட் கார்ட் நம்பர் 2 வில் மினிமம் மட்டுமே கட்டமுடியும். ராஜனிடம் வாங்கிய கைமாத்தை ரெண்டு மாசமாக கொடுக்கவில்லை, அதை முதலில் கொடுக்கவேண்டும். எல்ஐசி 1 மற்றும் 2. வண்டி டுபுடுபுவென வித்தியாசமாக சத்தம் போடுகிறது, என்னவென்று பார்க்கவேண்டும். இந்த மாசமாவாது அம்மா அக்கவுண்டில் கொஞ்சம் போடணும். சின்ன ரஸ்கல் நம்பளவிட கம்மியா சம்பளம் வாங்கினாலும் ஒழுங்கா வீட்டுக்கு குடுத்துடுறானே? ஷூ இப்பிடி வழுக்குதே, புதுசு வாங்குணுமே.. இந்த மாசம் ஊருக்கு வேற போகணும். அப்புறம் வழக்கம்போல வீட்டு வாடகை, கரண்ட் பில், தண்ணீர், பேப்பர், கேபிள் (பால், மளிகை கிடையாது).. வேறென்ன.? ம்.. மிச்சத்துல‌ இந்த மாசம் ஒரு ரெண்டு செஷனுக்காவது தேத்தமுடியமா? ம்....

"ஒரு வார்த்த‌ கேட்க‌ ஒரு வ‌ருச‌ம், காத்திருந்தேன்.." ரிங் டோன். வேற‌ யாரு? ர‌மாதான்.

'என்ன‌ங்க‌, வ‌ந்துடுச்சா?' 'ம்'

'வாட‌கை இன்னிக்கே குடுத்துடுங்க‌' 'ச‌ரி'

'க்ரெடிட் கார்டுக்கும், எல்ஐசிக்கும் முத‌ல்ல‌ போட்டுடுங்க‌' 'ச‌ரி'

'பேப்ப‌ர், அயர்ன், கேபிளுக்கு கேஷ் எடுத்து ரெடியா வெச்சுக்குங்க‌' 'ச‌ரி'

'மிச்ச‌த்த‌ என் அக்க‌வுண்ட்ல‌ போட்டுருங்க‌' '.....'

'என்ன‌ ச‌த்த‌த்தையே காணோம்?' 'இல்ல‌ம்மா, ஷூ..?'

'ச்சு.. அதெல்லாம் நா வ‌ந்த‌ப்புற‌ம் பாத்துக்க‌லாம்' '.....'

'என்ன‌?' 'இல்ல‌ம்மா.. ராஜ‌ன்ட்ட‌ கொஞ்ச‌ம் கைமாத்து வாங்கியிருந்தேன்..'

'என‌க்கு தெரியாம எப்ப‌ வாங்கினீங்க‌?' 'போன‌ மாச‌ம்'

'என்ன‌ விளாடுறீங்க‌ளா, எதுக்காக‌ வாங்கினீங்க?' '.....'

'கேக்கிறேன்ல..' 'அதெல்லாம் உன‌க்கெதுக்கு.. போடி.. எல்லா‌த்தியும் உங்கிட்ட எழுதி ஒட்டிக்கிட்டிருக்க‌முடியாது'

'#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'..........

(இவ்வாறாக எதிர்க‌ட்சிக்கும், ஆளும் க‌ட்சிக்கும் இடையேயான‌ ப‌ட்ஜெட் மீதான‌ விவாத‌ம் தோல்வியில் முடிந்த‌து)