Monday, November 3, 2008

ஒரு நெல்லிம‌ர‌மும் சில‌ வாடகைப் புத்தகங்களும்

கொஞ்சம் கொசுவத்தி சுத்தலாமா? நான் எப்போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்? என்னென்ன மாதிரி புத்தகங்கள்? ஏதாவது அழகான நினைவுகள்.? சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்.

சில தெருக்கள் தள்ளி இருந்த என் மாமா ஒருவரின் வீட்டில் அவரது அறை பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்களும், குங்குமம், கல்கி போன்ற இதழ்களுமாய் நிரம்பியிருக்கும். அவரும் வீட்டிலிருக்கும் எந்த நேரமும் சதா படித்துக்கொண்டேயிருப்பார். இதைப்பார்த்த நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து குங்குமம் வாங்கி புரட்டியபோது எதையும் படிக்க முடியாமல் படம் மட்டுமே பார்க்கமுடிந்தது. ஒருநாள் தற்செயலாக கிடைத்த சிறுவர்மலர் (தினமலர்) என்னை மிகவும் கவர்ந்தது. பின்னர் அதைத்தேடி லைப்ரரிக்கு சென்றேன். நாளித‌ழ், வார‌இத‌ழ் ப‌டிக்குமிட‌த்தையும் தாண்டி உள்ளே சென்று புத்த‌க‌ம் எடுக்க‌ உறுப்பின‌ராக‌வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

என் மாமாவிட‌ம் மூன்று உறுப்பின‌ர் அட்டைக‌ள் இருந்த‌ன‌. என் ப‌டிக்கும் ஆவ‌லைத்தூண்டும் பொருட்டு ஒன்றை நான் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ அனும‌தித்தார். இப்போது யோசிக்கும் போது தெரிகிற‌து அவ‌ர் அந்த‌ லைப்ர‌ரியின் பாதிக்கும் மேற்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ளை அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ப‌டித்து முடித்திருக்க‌க்கூடும். ஆனால் அதைவிட‌வும் என‌க்கு சிறுவ‌ர்ம‌ல‌ரே முக்கிய‌மாக‌ ப‌ட்ட‌து. அதில் வந்த படக்கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. 'உயிரைத்தேடி..' என்ற ஒரு படத்தொடர் வந்துகொண்டிருந்தது. அதன் சஸ்பென்ஸ் என்னை தூங்கவிடாமல் செய்தது. வெள்ளிக்கிழ‌மை நூல‌க‌ம் விடுமுறை. ஆக‌வே எங்க‌ள் வீட்டுக்கு அருகிலிருந்த‌ ஒரு ம‌ருத்துவ‌ரின் வீட்டுக்கு (அங்கு ம‌ட்டும்தான் பேப்ப‌ர் வ‌ந்துகொண்டிருந்த‌து, அவ‌ர் ம‌க‌னும் என‌து வ‌குப்புத்தோழ‌ன்) வெள்ளிய‌ன்று அதிகாலையே அவ‌ர்க‌ள் எழுந்து பேப்ப‌ரை எடுக்கும்முன்ன‌ரே போய் ப‌டித்துவிட்டு வ‌ருவேன். சில நாட்கள் அவர்கள் முந்திக்கொண்டு பேப்பரை எடுத்துவிட்டால் பரிதாபகரமாக காத்துக்கிடந்து படித்துவிட்டு வருவேன்.

வெள்ளிக்கிழமையானால் காலை ஆற‌ரைக்கே எழுந்து எங்கு செல்கிறான் என்று ஆச்ச‌ரிய‌மாக பார்த்த‌ என் த‌ந்தை பின்ன‌ர் எங்க‌ள் வீட்டுக்கும் பேப்ப‌ர் வ‌ர‌வ‌ழைத்தார். அதிலிருக்கும் சிறுக‌தைக‌ளை ப‌டித்துவிட்டு ப‌ள்ளியில் மாதம் ஒருமுறை ந‌டக்கும் மாண‌வ‌ர் ம‌ன்ற‌த்தில் கைக‌ளை க‌ட்டிக்கொண்டு க‌தை சொல்லி கைத்த‌ட்டு பெறுவேன். அதோடு என் மேடை அனுப‌வ‌ம் முத‌லும் கடைசியுமாக‌ முடிந்த‌து. என்ன‌வோ தெரிய‌வில்லை அதன் பின்ன‌ர் மேடையென்றாலே உத‌ற‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து. இன்றுவரை க‌லைநிக‌ழ்ச்சிக‌ளோ, விளையாட்டோ க‌ல‌ந்துகொள்வ‌தே கிடையாது. என‌க்கென்று சிறு வ‌ட்ட‌த்தை உருவாக்கி அதற்குள்ளேயே இருந்து ம‌கிழ்ந்தேன்.

பின்ன‌ர் எட்டா‌ம் வ‌குப்பு வ‌ந்த‌ போது சிறுவர் மலர் சிறிது போரடித்தபோது முத‌ல் முத‌லாக‌ அதே நூல‌க‌த்தில் இத‌ழ் பிரிவைத்தாண்டி உள்ளே சென்று என் மாமாவின் க‌ண‌க்கில் ஒரு புத்த‌க‌த்தை எடுத்தேன். அத‌ன் த‌லைப்பு ஞாப‌க‌மில்லை. எழுத்தாள‌ர் ல‌க்ஷ்மி. அந்த‌ முத‌ல் நாவ‌லே ம‌ற‌க்க‌முடியாத‌ ப‌டுசுவார‌சிய‌மான‌ நாவ‌லாக‌ அமைந்த‌து. (க‌தை : பிர‌ச‌வ‌த்துக்காக‌ ம‌னைவி தாய்வீடு சென்றிருக்கும்போது ந‌ண்ப‌னின் த‌வ‌றான‌ வ‌ழிகாட்டுத‌லில் ஒரு விலைமாதுவிட‌ம் செல்கிறான் ந‌டுத்த‌ர‌குடும்ப‌த்து ஹீரோ. அதை போட்டோ எடுத்து பெரும்பணத்துக்காக அவ‌னை பிளாக்மெயில் செய்கிறாள் அந்த‌ விலைமாது. மிகுந்த‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாகி ம‌னைவியின் ந‌கைக‌ள், சேமிப்பு, ஸ்கூட்ட‌ர் அனைத்தையும் இழ‌ந்து அந்த‌ ப‌ண‌த்தை கொடுக்கிறான். கொடுத்த‌ ம‌றுநாளே அந்த‌ விலைமாது ஒரு விப‌த்தில் இற‌ந்துபோய்விடுகிறாள். ஒரு நாள் லேட் செய்திருக்க‌க்கூடாதா என்று அந்த‌ ஹீரோவுக்காக‌ ப‌ரிதாப‌ப்ப‌ட்டேன்.)

அதன் பின்ன‌ர் ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம் எக்ஸ்பிர‌ஸாக‌ வேக‌மெடுத்தது. த‌மிழ்வாண‌னின் அத்த‌னை கிரைம் நாவ‌ல்‌க‌ளையும் வெறியோடு ப‌டித்தேன். எங்கள் நூலகத்தின் நூற்றுக்கணக்கான புத்தகங்களை மேய்ந்தேன். இந்த வகை என்றில்லாமல் அனைத்தையும் படித்து துவம்சம் செய்தேன். தேவன், எஸ்எஸ்வி, லக்ஷ்மி, ரமணிசந்திரன், பாலகுமாரன், ராஜேஷ்குமார், சுபா, பெயர்தெரியாத பல மூத்த, புதிய எழுத்தாளர்கள், குங்கும‌த்திலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ தொட‌ர்க‌தைக‌ளின் தொகுப்புகள் (சுஜாதா, பால‌குமார‌ன், க‌லைஞ‌ர் மு.க‌ருணாநிதி, சாண்டில்யன்) என‌ வெறியோடு ப‌டித்தேன்.

சுஜாதாவின் ஆ!, பேசும் பொம்மைக‌ள், ஜீனோ க‌லைஞ‌ரின் தென்பாண்டிச்சிங்க‌ம், பாயும்புலி ப‌ண்டார‌க‌வ‌ன்னிய‌ன், பொன்ன‌ர்ச‌ங்க‌ர் போன்ற‌ ப‌ல‌ நாவ‌ல்க‌ள் அந்த‌கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் ப‌டித்த‌வைதான். 'பொன்ன‌ர் ச‌ங்க‌ர்' நாவ‌லில் வ‌ரும் வீர‌ம், காத‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சிக‌ள் ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ சினிமா பார்த்த‌ உண‌ர்வைத்த‌ந்த‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் வீட்டில் அனைவ‌ரும் வீட்டிற்குள் ப‌டுக்க‌, நான் வ‌ராண்டாவில் ப‌டுப்பேன். அம்மாவின் திட்டுக்கு ப‌ய‌ந்து அனைவ‌ரும் தூங்கிய‌பின்ன‌ர் விள‌க்கைப்போட்டு ம‌ணிக்கண‌க்காக‌ ப‌டிப்பேன்.

சில‌ நாட்க‌ள் ந‌ள்ளிர‌வில் விழித்துக்கொள்ளும் அம்மாவிட‌ம் மாட்டிக்கொண்டு தாறுமாறாக‌ திட்டு வாங்கியிருக்கிறேன். சில‌ நாட்க‌ளில் அம்மா விழிக்கும் அர‌வ‌ம் கேட்டு விள‌க்கைப்போட்ட‌வாறே தூங்கிவிட்ட‌தைப்போல‌ ந‌டித்துவிடுவேன். அவ‌ர் எழுந்துவ‌ந்து "அவ‌னைப்(என் மாமா) போடுற‌ போடுல‌ இவ‌ன் திருந்துவான்" என்று திட்டிக்கொண்டே புத்த‌க‌த்தை எடுத்துவைத்துவிட்டு விள‌க்கை அணைத்துவிட்டு ப‌டுப்பார்.மீண்டும் விள‌க்கைப்போட‌லாமா என்று யோசித்த‌வாறே நீண்ட‌ நேர‌ம் விழித்துக்கொண்டு ப‌டுத்திருப்பேன்.

இவ்வாறாக‌ ஒன்ப‌தாம் வ‌குப்பிலிருந்து +2 வ‌ரை நான் புத்த‌க‌ம் ப‌டித்த‌ கால‌ம் பீக்கில் இருந்த‌து. இந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் கிடை‌க்கும் விடுமுறைக‌ளில் நான் செல்லும் த‌ல‌ங்க‌ள் இர‌ண்டு. ஒன்று சேர‌ன்மகாதேவியிலிருக்கும் என் சித்த‌ப்பா வீடு. இன்னொன்று அம்பாச‌முத்திர‌ம் அருகே இருக்கும் பிர‌ம‌தேச‌ம் (இந்த‌ ஊரில் இருக்கும் ஒரு பெரிய‌ சிவ‌ன் கோவிலை மைய‌மாக‌ வைத்துதான் 'ம‌ர்ம‌தேச‌ம்' என்ற‌ புக‌ழ்பெற்ற‌ டிவி தொட‌ர் வ‌ந்த‌து) என்ற‌ ஊரிலிருக்கும் என் ம‌தினியின் வீடு. என்னை விட‌ 10 வ‌ய‌தே மூத்த‌வ‌ர் எனினும் எனக்கு இன்னொரு தாயைப்போன்ற‌வ‌ர். அவ‌ர் பெய‌ரே 'தாய்'தான். வீட்டுக்கு பின்புற‌ம் உள்ள‌ தோட்ட‌த்தில் பல மரங்கள் உண்டு. அதில் ஒரு பெரிய‌ நெல்லிம‌ர‌ம் உண்டு. அதையொட்டி வ‌ய‌லுக்கு நீர்பாய்ச்ச‌ உத‌வும் ஒரு ஓடை செல்லும். இனிய‌ சூழ‌ல்.

அந்த‌ ஊரில் ஒருவ‌ர் சைக்கிளில் நிறைய‌ புத்த‌க‌ங்க‌ளை எடுத்துக்கொண்டு வீடு வீடாக‌ வாட‌கைக்கு கொடுத்துச்செல்வார். புத்த‌க‌த்தின் விலை 1 ரூபாய் என்றால் ஒருநாள் வாட‌கை 10 பைசா. நான் விடுமுறையில் வ‌ந்தால் அவர் மிகவும் ஆர்வமாகிவிடுவார். ஒரு புத்த‌க‌த்தை எடுத்துக்கொண்டு ப‌டிக்காம‌ல் வைத்துக்கொண்டிருப்ப‌வ‌ர் ம‌த்தியில் ஒரே நாளில் 5 புத்த‌க‌ங்க‌ளை எடுத்துக்கொண்டு, ப‌டித்துமுடித்து ம‌றுநாள் அவ‌ர் வ‌ருகையை பார்த்திருப்பேன். அவ‌ரிட‌ம்தான் ஏராள‌மான‌ ராணிமுத்து, க‌ண்ம‌ணி, கிரைம் நாவ‌ல்க‌ள் என‌ வாசித்து த‌ள்ளினேன். காலை உண‌வுக்குப்பின்ன‌ர் புத்த‌க‌ங்க‌ளோடு ஒரு சிறிய‌ கிண்ண‌த்தில் அள‌வாக‌ உப்பு, மிள‌காய்தூளை க‌ல‌ந்து எடுத்துக்கொண்டு பின்புற‌ம் நெல்லிம‌ர‌த்தில் ஏறி வ‌ச‌மாக‌ உட்கார்ந்துகொண்டால் (பொதுவாக நெல்லிமரங்கள் ஏறமுடியாத அளவு வீக்காகத்தான் இருக்கும். இது கொஞ்சம் பெரிது) கரகரவென நெல்லியைப்பறித்து தின்றவாறே படிக்க ஆரம்பித்தால் பிற‌கு ம‌திய‌ உண‌வுக்குதான் இற‌ங்குவேன். உண‌வுக்கு பின்ன‌ர் தொட‌ங்கினால் மாலை ப‌டிக்க‌முடியாத‌ அள‌வு இருள் சூழ்ந்த‌ பிற‌குதான் இற‌ங்குவேன்.

ப‌திவு ரொம்ப‌ நீள‌மாக‌ போய்க்கொண்டிருக்கிற‌தே முடித்துக்கொள்ள‌லாமா? பின்ன‌ர் க‌ல்லூரிக்கு செல்ல‌ ஆர‌ம்பித்த‌ பிற‌கு ப‌டிப்ப‌டியாக‌ குறைய‌ ஆர‌ம்பித்த‌ ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம் க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பு ஆன‌தைப்போல‌ இப்போது சித்தெறும்பாகி ஊர்ந்துகொண்டிருக்கிற‌து.

இந்த‌ ப‌திவின் சாராம்ச‌ம் பிடித்திருப்ப‌தால் இதை தொட‌ர்ப‌திவாக்க‌ விரும்புகிறேன். (உங்களுக்கு பிடிச்சிருந்ததா?) இர‌ண்டிர‌ண்டு பேராக‌ இந்த‌ டேக் தொட‌ர‌ட்டும். தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் இதே போன்று நீ...ள‌மாக‌ எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌தையும் சொல்லிக்கொள்கிறேன் (அவ்வ்வ்..)

நான் அழைக்கும் இருவ‌ர்..

ப‌ரிச‌ல்

பாபு

44 comments:

வால்பையன் said...

//கொஞ்சம் கொசுவத்தி சுத்தலாமா?//

வேண்டாமென்றால் விடவா போகிறீர்கள்

வால்பையன் said...

//நான் எப்போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்?//

எப்பொது படிக்க ஆரம்பித்தீர்கள் என்று சொன்னால் இந்த கேள்விக்கு நானே பதில் சொல்வேன்

வால்பையன் said...

//என்னென்ன மாதிரி புத்தகங்கள்?//

எழுத்து குறைவாக
படங்கள் அதிகமாக இருக்குமே

வால்பையன் said...

//ஏதாவது அழகான நினைவுகள்.?//

அதிலையுமா

வால்பையன் said...

//சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்.//

இது தான் சுருக்கமா?

வால்பையன் said...

//இதைப்பார்த்த நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.//

என்னான்னு புரிஞ்சிகறது.
அதனாலா தான் நீங்க ஆறாவது படிச்சிங்களா?

வால்பையன் said...

//அவரிடமிருந்து குங்குமம் வாங்கி புரட்டியபோது//

கீழே விழுந்து கொட்டி போச்சா?

வால்பையன் said...

//எதையும் படிக்க முடியாமல் படம் மட்டுமே பார்க்கமுடிந்தது. //

இப்ப வரைக்கும் அது தொடருமே

வால்பையன் said...

//'உயிரைத்தேடி..' என்ற ஒரு படத்தொடர் //

ஒருவித வைரஸினால் எல்லோரும் பாதிக்கப்பட ஒரு சிலர் மட்டும் உயிர் பிழைப்பார்களே அதுவா?

வால்பையன் said...

//சில நாட்கள் அவர்கள் முந்திக்கொண்டு பேப்பரை எடுத்துவிட்டால் பரிதாபகரமாக காத்துக்கிடந்து படித்துவிட்டு வருவேன்.//

நான் பேப்பர் வீட்ட்ற்க்கு முன் இருக்கும் சலூனில் படித்தேன், வெள்லி அன்உ விடுமுறை விடுவதால், எங்கள் காம்பவுண்டில் இருக்கும் நண்பர்களுடன் காசு சேர்த்து வாரா வாரம் வெள்ளி அன்று மட்டும் தினமலர் வாங்குவோம்.
பின்னாளில் நிறய வார பத்திரிக்கைகளும் வாங்க ஆரம்பித்தோம். பெரியவர்களும் காசு கொடுக்க ஆரம்பித்தார்கள்

வால்பையன் said...

தயவுசெய்து யாரும் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைக்கவேண்டாம்
அழைத்தாலும் எழுத மாட்டேன்.

வெண்பூ said...

நல்ல நினைவுகள் தாமிரா.. எவ்ளோ படிச்சிருக்கீங்க? என்னோட படிப்பெல்லாம் இதுல 10% கூட வராது.. :(

என்னை யாராவது இந்தத் தொடர் எழுத கூப்பிட்டாக்கூட எனக்கு எழுத ஒண்ணும் இருக்காதுன்றதுதான் நிஜம்.

அருமையான பதிவு தாமிரா.. உங்களைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்.

விஜய் ஆனந்த் said...

அண்ணே....உங்கள நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு...அபார ஞாபக சக்திண்ணே உங்களுக்கு!!!!

விஜய் ஆனந்த் said...

அப்படியே,படித்த பாட புத்தங்கள் (ஏதாவது கண்டிப்பா இருக்கும்!!!)பற்றியும் ஒரு பதிவிட வேண்டுகோள் விடுக்கிறேன்!!!

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
நல்ல நினைவுகள் தாமிரா.. எவ்ளோ படிச்சிருக்கீங்க? என்னோட படிப்பெல்லாம் இதுல 10% கூட வராது.. :(

என்னை யாராவது இந்தத் தொடர் எழுத கூப்பிட்டாக்கூட எனக்கு எழுத ஒண்ணும் இருக்காதுன்றதுதான் நிஜம். //

நா படிப்புல சூரப்புலியாக்கும்....வெட்டி வேலையெல்லாம் பண்ண மாட்டேன்னு, சொல்லாமல் சொன்ன வெண்பூ ஐயாவின் நுண்ணரசியலை ரசிக்கிறேன்!!!!

தமிழ்ப்பறவை said...

நல்ல நினைவூட்டல் பதிவு தாமிரா...நான் சிறுவர் மலர் 3ங் கிளாஸுலேயே ஆரம்பிச்சுட்டேன்.எங்க வீட்டுல தி.மு.கன்றதால 'தினகரன்'தான் வாங்குவாங்க.அப்புறம் எங்களோட(தம்பியும்) தொல்லை தாங்காம வெள்ளிக்கிழமை மட்டும் தினமலர் வாங்க ஆரம்பிச்சாங்க.அப்ப படிக்கப் படிக்க நிறையப் பக்கம் இருக்கிறமாதிரி இருக்கும். 9,10 படிக்க ஆரம்பிச்சப்போ ப‌க்கம் ரொம்பக் கம்மியா இருக்கிற மாதிரி ஃபீலிங்.
சிறுவர்மலர்ல எனக்குப் பிடிச்ச விஷயம் புராணத் தொடர்கதைகளுக்கு வர்ற ஓவியங்கள்தான். இன்னும் ஓவியர் பேரு எனக்குத் தெரியலை.ஆனா நமக்குள்ள இருக்கிற சாமிகள்,தேவர்கள்,முனிவர்கள் கதாபாத்திர உருவங்களுக்கு அவர்தான் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
//த‌மிழ்வாண‌னின் அத்த‌னை கிரைம் நாவ‌ல்‌க‌ளையும் வெறியோடு ப‌டித்தேன். //
எனக்கென்னமோ தமிழ்வாணனின் கதைகள் சப்பென்று தோன்றியதால் ஒன்றிரண்டுடன் கை கழுவி விட்டேன்.
பி.கே.பி யை விட்டுட்டீங்களே..(டீ ஷர்ட் வசனங்கள்)...
நினைவுகளைத் தூண்டி விட்டதற்கு நன்றி தாமிரா...

T.V.Radhakrishnan said...

பிரமாதம்...நானும் அப்படித்தான்...எல்லோர் எழுத்துக்களையும் படிப்பேன்..தாமிரா..வண்ணதாசன் படித்திருக்கிறீர்களா? அவர் கதைகளை படியுங்கள்..அவரும்..நானும் ஒன்றாக அரசு வங்கியில் வேலை செய்திருக்கிறோம்...அப்போது எங்கள் தோழமை..அடடா..அந்த பொற்காலம் திரும்ப வராது

விலெகா said...

பெரிய பதிவு அதனாலே தூங்கி எந்திருச்சி, இந்த பின்னூட்டதையும் போட்டுட்டேன்:--)))))

விலெகா said...

ப‌திவு ரொம்ப‌ நீள‌மாக‌ போய்க்கொண்டிருக்கிற‌தே முடித்துக்கொள்ள‌லாமா? பின்ன‌ர் க‌ல்லூரிக்கு செல்ல‌ ஆர‌ம்பித்த‌ பிற‌கு ப‌டிப்ப‌டியாக‌ குறைய‌ ஆர‌ம்பித்த‌ ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம் க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பு ஆன‌தைப்போல‌ இப்போது சித்தெறும்பாகி ஊர்ந்துகொண்டிருக்கிற‌து.

காலேஷ்ல உங்களுக்கு பொண்ணுங்களே பார்க்கிறதுக்கே நேரம் பத்தாது,இதுல எங்கிட்டு படிக்கிறது:--)))))

தமிழ் பிரியன் said...

தாமிரா... கொசுவர்த்தியை நல்லா சுத்தி விட்டுட்டீங்க... நாமலும் பழச கிளறிட வேண்டியது தான்,, :)

முரளிகண்ணன் said...

தாமிரா, பெரிய பதிவாய் இருந்தாலும் ஒரே மூச்சில் படிக்கும்படி இருக்கிறது

கார்க்கி said...

இது ஜம்போ காயில் போல இருக்கு.. நானெல்லாம் பள்ளி தேர்விலே 10 மார்க் கேள்விகளை வெறுப்பவன்.. ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைங்க..

Saravana Kumar MSK said...

பெரிய படிப்பாளியா நீங்க.. கலக்கறீங்க போங்க..

அருண்மொழிவர்மன் said...

தாமிரா, நல்ல பதிவு...

விரிவாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்... ஒவ்வொரு வயதிலும் எமது புத்தக ரசனை எம்மையறியாமலேயே மாறும். அதனால் வாசித்த புத்தகங்களாஇ பட்டியலிட்டால் நல்லா இருக்கும்

பாபு said...

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைக்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?
பெரிய தலைங்க நிறைய இருக்கே?
சரி அப்துல்லா மாதிரி ,நீங்களும் நம்மள தூக்கி விட ட்ரை பண்றீங்க ,எழுத முயற்சிக்கிறேன்

நன்றி

விஜய் said...

தலை, நீங்க நம்மூர்காரரா???

யப்பா படிச்சுத் தள்ளியிருக்கீங்க. பள்ளிப் பருவத்தில் இவ்வளவு படிக்காம காலத்தை கழிச்சுட்டோமே என்ற குற்ற உணற்சியை ஏற்படுத்திட்டீங்க.

சந்தனமுல்லை said...

வாவ்..பெரிய படிப்பாளிதான் போல நீங்க! அந்த மொபைல் லைப்ரரி ரொம்ப சுவாரசியம்..:-)
//எழுத்தாள‌ர் ல‌க்ஷ்மி//
அவங்களோட இன்றைய நிலைப் பத்தி கானா ஒரு பதிவு போடிருந்தார் பார்த்தீங்களா? :(

பரிசல்காரன் said...

தொடர்பதிவா...ஓகே. எனக்குப் புடிச்ச மேட்டரா இருக்கு! எழுதிடுவோம்!

Mahesh said...

நல்லாருக்கே மேட்டரு... மக்களே கொஞ்ச நாள் பாப்பேன்... யாரும் கூப்படலேன்னா நானே எழுதிடுவேன்.... அப்பறம் அய்யோ அம்மான்னு கத்தி பிரயோசனம் இல்ல :))))

தாமிரா said...

நன்றி வால்பையன்.!

நன்றி வெண்பூ.! (என்ன.. இப்படி படிச்சிருந்தும் இன்னும் இப்படி பேக்கு மாதிரி இருப்பதை நினைச்சு ஆச்சரியப்படுகிறீர்களா?)

நன்றி விஜய்.! (நான் விழுந்து விழுந்து சிரித்தேன் விஜய். அய்யோ அய்யோ.. எனக்கு ஞாபக சக்தியாம்.. அப்பிடின்னா கிலோ என்ன விலைங்க.?)

ந‌ன்றி த‌மிழ்ப்ப‌ற‌வை.!

ந‌ன்றி TVR.! (வ‌ண்ண‌தாச‌ன் ப‌டித்த‌தில்லை. இன்னும் நிறைய‌ ப‌டிக்க‌வேண்டும் என்ற‌ ஆசை உண்டு. செய்வேனா என்றுதான் தெரிய‌வில்லை)

ந‌ன்றி விலெகா.! (நான் ப‌டித்த‌து ஆண்க‌ள் க‌ல்லூரி. அந்த‌ சோக‌ அனுப‌வ‌த்தை த‌னிப்ப‌திவாக‌ போடுவேன் ஒருநாள்)

ந‌ன்றி த‌மிழ்.!

தாமிரா said...

ந‌ன்றி முர‌ளி.!

ந‌ன்றி கார்க்கி.! (ஒட‌ம்பு எப்பிடி இருக்குது?)

ந‌ன்றி MSK.!

ந‌ன்றி அருள்மொழிவ‌ர்ம‌ன்.! (இன்னும் நீள‌மாக‌ வ‌ந்திருக்க‌வேண்டிய‌ ப‌திவுதான். ஆனால் பாருங்க‌ள், இத‌ற்கே காத்தாடிவிட்ட‌து.. முந்தைய‌ ப‌ட்ஜெட் ப‌திவுக்கு 500 ஹிட்ஸ், இத‌ற்கு 100 வ‌ந்திருந்தாலே அதிக‌ம்தான்)

ந‌ன்றி பாபு.! (உங்க‌ளை தூக்கி விட‌ நான் என்ன‌ மேலேயிருக்கிறேனா? அல்ல‌து நீங்க‌ள்தான் ப‌ள்ள‌த்தில் ப‌துங்கியிருக்கிறீர்க‌ளா? சு‌ம்மா க‌லாய்க்காம‌ல் ப‌திவு போட‌ற‌ வேலையை பார்க்க‌வும்)

ந‌ன்றி விஜ‌ய்.!

ந‌ன்றி முல்லை.! (அந்த‌ 10 பைசா ப‌த்த‌க‌ம் நினைவுக்கு வ‌ந்த‌தால் தான் இந்த‌ மொத்த‌ பதிவே டெவ‌ல‌ப் ஆன‌து)

ந‌ன்றி ப‌ரிச‌ல்.! (உங்க‌ளை கேட்காம‌லே உங்க‌ள் பேரை போட்ட‌தால் ப‌ய‌ந்துகினேயிருந்தேன் (போன் பேட்டரி இல்லாமல் ஆ.:ப் ஆகித்தொலைத்துவிட்டது). ஏற்றுக்கொண்டதற்கு ந‌ன்றி த‌ல‌..)

ந‌ன்றி ம‌கேஷ்.! (சிரித்தேன் ம‌கேஷ். நீங்க‌ள் உட்ப‌ட‌ ந‌ம்ப‌ செட் (பெரிய‌ சேவிங் செட்?) அனைவ‌ரையுமே அழைக்க‌ விருப்ப‌ம். ஆனாலும் நானே அழைக்காம‌ல் இது தொட‌ர‌ வேண்டும் என‌ விரும்பினேன். அழைப்பு வ‌ரும். எழுதுங்கள், ஆவ‌லாக‌யிருக்கிறேன்)

கும்க்கி said...

:)))

கும்க்கி said...

ந‌ன்றி கார்க்கி.! (ஒட‌ம்பு எப்பிடி இருக்குது?)
அவர் என்ன சொல்லிட்டாருன்னு இப்படி மெரட்டுறீங்க?
ஹைதராபாத் பக்கம் வராமயா போய்டுவீங்க..

கும்க்கி said...

ஆரம்பம்..பின் தொடர்வு எல்லாம் சரி..அடுத்த கட்டத்திற்க்கு நகரவேயில்லையா?

கும்க்கி said...

சின்ன பட்டியல்:
அம்புலி மாமா
பால மித்ரா
முத்து காமிக்ஸ்
சாண்டில்யன்
கல்கி
மாயா ஜால கதைகள்
இத்யாதி........

(சிறிய தலைமுறை இடைவெளி)

ராணி முத்து
குமுதம்
ஆனந்த விகடன்
குங்குமம்
அசோகனின் பாக்கெட் நாவல்கள்
ராஜேஷ் குமார்
ராஜேந்திர குமார்(ஙே)
பட்டுக்கோட்டை பிரபாகர்
இத்யாதி...............


சிறிய தலைமுறை இடைவெளி

நகுலன்
தி.ஜானகிராமன்
வண்ணதாசன்
வண்ணநிலவன்
நாஞ்சில் நாடன்
பூமனி
ஷோபா ஷக்தி
சுந்தர ராமசாமி
ஆதவன் தீட்சண்யா
ஜெயமோகன்
பிற...


சிறிய தலைமுறை இடைவெளி

பேரா.முத்துமோகன்
பேரா.தொ.பரமசிவன்
அ.மார்க்ஸ்
ரவிக்குமார்
பிரேம்-ரமேஷ்
தொடர்ச்சி..........

(அனேகம் விடுபட்டுவிட்டது)

வாசிப்பு இப்படி தொடர்ந்திருக்களாம்

கும்க்கி said...

நடுவில் பேய்க்கதை மன்னன் பி.டி.சாமி விடுபட்டுவிட்டது.
(ஏங்க...என்ற குரல் கேட்ட்தும் நினைவு வந்துவிட்டது.)

தாமிரா said...

நன்றி கும்க்கி.! (ஒன்றிரண்டு படைப்புகளேயானாலும் நீங்கள் குறிப்பிட்ட அனைவரையுமே படித்திருக்கிறேன். ஆனால் பொதுவாக சொன்னால் உங்களின் மூன்றாவது லிஸ்டிலேயே உழன்று கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை)

பாபு said...

பதிவு எழுதுவிட்டேன் ,ஆனால் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை,நாளை திரும்ப முயற்சிக்கிறேன்

அத்திரி said...

பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள். இந்த தொடர் பதிவை என்னை ???????பாபு எழுதச்சொல்லி இருக்கிறார். முதலில் ஞாபகம் வந்தது உயிரைத் தேடி தொடர்தான். நீங்க எழுதிட்டீங்க.

rapp said...

super:):):)

Anonymous said...

//'பொன்ன‌ர் ச‌ங்க‌ர்' நாவ‌லில் வ‌ரும் வீர‌ம், காத‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சிக‌ள் ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ சினிமா பார்த்த‌ உண‌ர்வைத்த‌ந்த‌து//

ஒரிஜினல் பொன்னர் சங்கர் கதையில இந்த மாதிரி காதல் காட்சிகள் கிடையாதுங்க தாமிரா. கலைஞர் ஒரு கிக்குகாக சேத்துக்கிட்டதுதான். பெண்களோட சேந்தா வீரம் போயிரும்னு இருந்தவங்க பொன்னர் சங்கர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான கொசுவத்தி.

என் ஞாபகங்களையும் கிளறிவிட்டது.

. அம்மாவின் திட்டுக்கு ப‌ய‌ந்து அனைவ‌ரும் தூங்கிய‌பின்ன‌ர் விள‌க்கைப்போட்டு ம‌ணிக்கண‌க்காக‌ ப‌டிப்பேன். சில‌ நாட்க‌ள் ந‌ள்ளிர‌வில் விழித்துக்கொள்ளும் அம்மாவிட‌ம் மாட்டிக்கொண்டு தாறுமாறாக‌ திட்டு வாங்கியிருக்கிறேன்

நானும் வாய்க்கப்பெற்றிருக்கிறேன் இந்த அனுபவத்தை

தாமிரா said...

நன்றி பாபு.!
நன்றி அத்திரி.!
நன்றி ராப்.!
நன்றி அம்மிணி.!
நன்றி அமிஷு அம்மா.!

Anonymous said...

//நடுவில் பேய்க்கதை மன்னன் பி.டி.சாமி விடுபட்டுவிட்டது.
(ஏங்க...என்ற குரல் கேட்ட்தும் நினைவு வந்துவிட்டது.)//

OMG!!!!!!

KUMKI......
wat a great joke.....

//எழுத்தாள‌ர் ல‌க்ஷ்மி//
அவங்களோட இன்றைய நிலைப் பத்தி கானா ஒரு பதிவு போடிருந்தார் பார்த்தீங்களா? :(
can u plz post the link?