Thursday, November 27, 2008

கொஞ்சம் வீரமும் என் தாய்மாமனும்

     கீழே விழுந்துகிடந்த மாங்காய்களில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு கடித்து சாப்பிடத்துவங்கினேன். சில வேலையாட்கள் மாங்காய்களை பறித்துப்போட்டுக்கொண்டும், அதை கோணிகளில் சேகரித்துக்கொண்டும் இருந்தனர். கொஞ்சம் தள்ளி நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் செல்வன், என் தாய்மாமன். அவரின் மாந்தோப்புதான் இது. 

     அவர் நின்று கொண்டிருந்த இடம் அவ்வளவு தெளிவாக இல்லாமல் கொஞ்சம் புல் பூண்டுகளுடன் இருந்தது. இங்கே போரடிக்கிறது. இவருடன் வராமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். மாங்காயைக் கடித்துக்கொண்டே, எப்போது வீட்டுக்கு கிளம்புவாரோ என்று யோசித்துக்கொண்டே அவரை நெருங்கினேன். அப்போது ஏதோ கடித்ததைப் போல விருட்டென காலை உதறிக்கொண்டு குனிந்தார். அவர் இடது காலின் பெருவிரலுக்கு மேலாக சரியாக அந்த நரம்பு பகுதியில் ஏதோ குச்சி போல குத்திக்கொண்டிருந்தது. நன்கு கவனித்தபோதுதான் தெரிகிறது, அரையடி நீளமேயிருந்த மிகச்சிறிய பாம்புதான் அப்ப‌டி விரைப்பாக‌ க‌டித்த‌ப‌டி பிடியை விடாம‌ல் இருக்கிற‌து. கொஞ்சம் கூட பரபரப்பேயில்லாமல் அத‌ன் வாலைப்பிடித்து இழுத்து பிரித்து தூக்கி பார்த்துவிட்டு தூர‌ வீசுகிறார். என‌க்கு ப‌ட‌ப‌ட‌ப்பு அட‌ங்க‌வில்லை. "ந‌ல்ல‌ பாம்பு மாதிதான் தெரியிது. எதுக்கும் குச்சில்ல‌ ஏதாது க‌யிறு இருந்தா எடுத்துட்டு வா முருகா" என்றார். முருக‌ன் ஓடிப்போய் அடுத்த‌ சில‌ விநாடிக‌ளில் ஒரு மெல்லிய‌ நைலான் க‌யிறுட‌ன் வ‌ருகிறார். அதை வாங்கி இருவ‌ரும் சேர்ந்து க‌ணுக்காலுக்க‌ருகில் இருக்க்க்க்கி க‌ட்டிவிட்டு சாவ‌காச‌மாக‌ "கிள‌ம்ப‌லாமா?" என்றார். அட‌ப்பாவி சீக்கிர‌ம் ஆஸ்ப‌த்திரி போக‌ணுமே என‌ நினைத்துக்கொண்டே "ஆஸ்ப‌த்திரிக்கு போவேண்டாமா மாமா" என்கிறேன் நான். "போலாம் வா" என்றவாறே கிளம்பி பைக்கில் அங்கிருந்து சுமார் 5 கிமீ இருக்கும் வீட்டுக்கு சென்று வாசலிலேயே என்னை இறக்கி விட்டு விட்டு "யாருகிட்டயும் ஒளறிக்கிட்டிருக்காதே, நா ஆஸ்பத்திரிக்கி போயிட்டு கொஞ்ச நேரத்தில வந்துர்றேன்" என்று கிளம்பி போய்விட்டார். நானும் சீரியஸாக ஒண்ணுமில்லை போலும் என்று நினைத்துக்கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்கத்துவங்கினேன். மாலையில் ஒரு ஆள் வந்து "ஐயா ஆஸ்பத்திரில இருக்கார், ஒண்ணுமில்ல கால்ல ஏதோ பூச்சி கடிச்சிருச்சாம்" என்று சொன்னவுடன் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கு சென்றால் அவருக்கு படுக்கையில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தூங்கிக்கொண்டிருந்தார். காலில் கட்டு போடப்பட்டிருந்தது. கயிறு அவிழ்க்கப்பட்டிருந்தாலும் கட்டப்பட்ட இடத்திற்கு கீழே நல்ல கருநீலமாக கால் நிறம் மாறியிருந்தது. கட்டுக்கு மேலாகவும் லேசாக நிறம் பரவியிருந்தது. கூட்டத்தின் களேபரத்தால் விழித்தார் அவர். நான் அருகில் சென்று பயத்துடன் அவரைப்பார்த்தேன். அவரோ அவருடைய பிராண்ட் உரத்த சிரிப்புடன், 

"எலே, அது நெசமாவே நல்ல வெசப்பாம்புதான் போலிருக்குது" 

****** 

    இன்னொரு சந்தர்ப்பத்தில் சேரன்மகாதேவி ஆற்றில் குளித்துவிட்டு, அவர், நான் அவர் நண்பர்கள் சிலர் என‌ பாலத்திலிருந்து ஊரை நோக்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்துவந்தபோது "என்னிக்குதான் நீ சைக்கிள் ஓட்ட படிக்க‌ப்போறே? நீ ஓட்டு. நா புடிச்சிக்கிடுதேன்" என்றார் செல்வம். நானும் நிரம்ப ஆர்வத்துடன் வாங்கி ஏறி ஓட்ட ஆரம்பிக்க அவர் பின்னால் பிடித்துக்கொண்டே வந்தார். அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டேயிருந்தேன், அவர் பிடித்திருக்கிறாரா என்று. "பொடதியில் போட்டேன்னா தெரியும், ஒழுங்கா ரோட்ட பாத்து ஓட்டுலே" என்றார். முன்னே பார்த்து ஓட்ட ஆரம்பித்து சில நிமிடங்களில் தற்செயலாக அடக்கமுடியாமல் பின்னே பார்த்தால் சாவதானமாக அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டே எங்கோ நடந்து வந்துகொண்டிருந்தார். நான் விழுந்தாலும் ஓடி வந்து பிடிக்கும் தூரமே அல்ல அது. ஐயகோ... சைக்கிள் என் கட்டுப்பாட்டை மீறி கீழே குப்புற தள்ளியது. நடு ரோட்டில் குப்புற விழுந்துகிடந்தேன். கைகால்களில் சிராய்ப்புகள். கீழுதடு வெட்டுப்பட்டு ரத்தம் கொப்பளித்தது. அவ்வ்.. அழ ஆரம்பித்தேன். சிரித்துக்கொண்டே ஓடி வந்தவர் சைக்கிளை தூக்கிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார். 

  "இதுக்காடா அழுவாம் புள்ள.. பொம்பள புள்ளயா நீ? அவுங்கதான் சின்ன விசயத்துக்குல்லாம் ஈன்னு இளிவிக்கிட்டிருப்பாங்க.." என்று கேலி செய்து அவர் நண்பர்களுடன் சிரிக்க ஆரம்பித்தார். வலி போகவில்லை, ஆனால் அவமானம் தாங்காது என் அழுகை உடனே நின்றது. 

****** 

  ஒரு முறை அவருக்கு சொந்தமான ஒரு ப‌ழைய கட்டிடத்தின் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதைப்பார்வையிடச் சென்றார். முதல் மாடியின் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது அந்த மொத்த பால்கனியே இடிந்து அப்படியே தரையில் விழுந்தபோது அவரது இரண்டு கால்களும் இடிபாடுகளுக்குள்ளே சிக்கி இரண்டு பாதமூட்டுகளும் சிதைந்து நடக்க இயலாமல் போனது. வேறு யாருமெனில் வருடங்கள் எடுத்திருக்கும் அதிலிருந்து மீண்டு வர. மூன்றே மாதங்களில் ரேஸில் ஓடும் வெறியுடன் கால்களை சரியாக்கி மீண்டார். படுக்கையிலிருந்தபோது சிரிப்பும் கூத்துமாக கழிந்தன நாட்கள். வலியின் துளியையும் அந்தக்கண்களில் நான் கண்டதில்லை. 30 நாட்களில் சுவரைப்பிடித்துக்கொண்டு எழ முயற்சிக்கும் போதும் அவநம்பிக்கையோ, வருத்தத்தின் சாயலோ சிறிதுமின்றி முயற்சித்தார். "மாமாவை புடிச்சிக்கோ" என்று வீடே அதிர‌ச்சிரித்தார். 

வீரம் வீரம்னு சொல்றாங்களே ஒரு வேளை அது இதுதானோ?

26 comments:

தமிழ் பிரியன் said...

வீரம் வெளஞ்ச மண்ணுக்கு சொந்தக்காரக..:)

பரிசல்காரன் said...

நல்லா எழுதியிருக்கீங்க தாமிரா...

உண்மையாவே அடுத்தவன்கிட்ட மல்லுக்கட்டறதில்லை.. இதுதான்யா வீரம்!!

அத்திரி said...

கலக்க ஆரம்பிச்சிட்டீங்க....

கலக்குங்க


நம்ம ஊர் எப்படி இருக்கு

விஜய் said...

தாமிரா, அதெல்லாம் நம்மூர் மக்கள் ரத்தத்துலயே ஊறிப்போயிருக்குல்லா. தாமிரபரணித் தண்ணியைக் குடிச்சு வளர்ந்த யார் கிட்ட வீரம் இல்லை.

சேரன்மகாதேவி! அழகான ஊர். தாமிரபரணி ஆற்றிற்கு மேலே விளிம்புச் சுவரே இல்லாத பாலம். (இப்போ கட்டிட்டாங்களா??) அதிலிருந்து ஒரு தடவையாவது ஆற்றில் டைவ் அடிக்கணும் என்று ஆசை. இன்றளவும் நிறைவேற வில்லை.

cable sankar said...

சரியான் வீரரூ உங்க மாமா. ரசிக்க தகுந்த் கேரக்டரும் கூட. அது சரி நான் எழுத சொன்ன விஷயம் என்ன ஆச்சு. அப்படியே வந்து நம்ம பக்கத்தை விசாரிக்கறது..http://cablesankar.blogspot.com/2008/11/blog-post_24.html

வித்யா said...

பாம்புடனான உங்கள் மாமாவின் என்கெளண்டர் சூப்பர்:) அந்த பாம்ப அடிச்சாங்களா இல்லையா??

தாமிரா said...

அன்பு நண்பர்களே, தாய்மாமன் உறவு மிகச்சிறப்பான ஒன்று என்பதை அறிவீர்கள். அவர்களின் தாக்கம் அளப்பரியது. அதைப்பற்றி ஏதாவது எழுதலாம் என்றுதான் அமர்ந்தேன். ஆனால் ஏதோ வீரம் அது இது என திசைமாறி போய்விட்டது பதிவு. மீண்டும் அது குறித்து எழுதுவேன். பாராட்டுகளுக்கு நன்றி.!

தாமிரா said...

நன்றி தமிழ்.! (இன்னுமா டெஸ்ட் பண்ணிகிட்டிருக்கீங்க, தமிழ் மணம் சரியாகி ரொம்ப நாளாவுது. எப்பதான் பதிவு போடறதா உத்தேசம்?)

நன்றி பரிசல்.! (உங்களுக்கு இந்த பதிவு புடிக்கும்னு கெஸ் பண்ணினேன்)

நன்றி அத்திரி.!

நன்றி விஜய்.! (தாமிரபரணி ஆற்றிற்கு மேலே விளிம்புச் சுவரே இல்லாத பாலம்.// எனக்கு தெரிஞ்சு 20 வருஷமா விளிம்பு சுவர் இருக்குது. ஒங்களுக்கு வயசு 50தை தாண்டிருச்சோ?)

நன்றி கேபிள்.! (ஸாரிங்க.. ஒடனே எழுதிப்புடறேன்)

நன்றி வித்யா.! (அடிக்கவில்லை, தூக்கிப்போட்டாருன்னு எழுதிருக்கேனே..)

தாமிரா said...

கேபிள் சங்கர்.., எந்த பதிவுக்கு தொடர் எழுத அழைத்தீர்கள் என்றே தெரியவில்லை. உங்கள் பதிவுக்கு வந்து தேடி சலித்துவிட்டேன். அதற்குள் ஆயிரம் பதிவுகள் போட்டுவிட்டீர்கள் போல தெரிகிற‌து.

கபீஷ் said...

Me the 10th

ராஜ நடராஜன் said...

முதலில் தாய்மாமனுக்கு வாழ்த்துக்கள்.
சைக்கிள்ன்னு சொன்னவுடனே பள்ளிகூடமாவது கிள்ளிக்கூடமாவதுன்னு சைக்கிளே கதியாக் கிடந்த நாட்கள் நினைவுக்கு வருது.சைக்கிள்ப் பழக துணைக்கு எவனையாவது கூப்பிட்டா அவன் என்னைப் பழக்குறத விட அவனைப் பழக்குறதுல ஆர்வம் காட்டுறுதால சைக்கிளை வாடகைக்கு வாங்கி உருட்டிகிட்டே போய் ரோட்டுல சைக்கிள் சீட் எட்டுற மாதிரி இருக்குற எடத்துல நிறுத்தி வச்சி குதிரை ஏறினா துவக்குத்துல முரண்டு புடிச்சி என்னை இடிச்சுத் தள்ளி பெடல் கடிச்சு வச்சு ரத்தம் வந்து பாழாய்ப்போன சைக்கிள் ஆசை அப்பவும் விடுதா என்ன?அப்புறம் இரண்டு கையும் விட்டு ஓட்டும் அந்தக் காலங்கள்....ஆஹா....ஆஹா...

சந்தனமுல்லை said...

சுவாரசியம்!

Mahesh said...

அடேங்கப்பா !!!

முரளிகண்ணன் said...

சுவராசியமான கேரக்டர்

Saravana Kumar MSK said...

சுவாரஸ்யமான மனிதர்.. :)

Saravana Kumar MSK said...

நல்லா எழுதியிருக்கீங்க தாமிரா அண்ணா..

cable sankar said...

//கேபிள் சங்கர்.., எந்த பதிவுக்கு தொடர் எழுத அழைத்தீர்கள் என்றே தெரியவில்லை. உங்கள் பதிவுக்கு வந்து தேடி சலித்துவிட்டேன். அதற்குள் ஆயிரம் பதிவுகள் போட்டுவிட்டீர்கள் போல தெரிகிற‌து.//

உங்களை தொடர் எழுத அழைத்த பதிவு இதுதான் தலைவா..
http://cablesankar.blogspot.com/2008/11/other-side-of-police-man.html

பாபு said...

இந்த மாதிரி ஆளுங்க பக்கத்துல நாம இருந்தாவே போதும் இல்லையா

புதுகை.அப்துல்லா said...

// தாமிரபரணித் தண்ணியைக் குடிச்சு வளர்ந்த யார் கிட்ட வீரம் இல்லை.
//

நம்ப தாமிரா அண்ணே???

:))))

விலெகா said...

ரொம்ப நல்லா இருக்குங்க:))))

Anonymous said...

கொஞ்சம் கொஞ்சம உம்ம எழுத்து மெருகேறுதுவே. இத விட்டுட்டு மொக்க போடப் போறம்னு குறுக்க திரும்புதியளே.

"பொடதியில் போட்டேன்னா தெரியும், ஒழுங்கா நல்ல பதிவா எழுதுலே” உங்க செல்வம் மாமா மாதிரி உரிமையோட சொல்லுதேம் அம்புட்டுத்தாம் பாத்துக்கிடு.

தாமிரா said...

நன்றி கபீஷ்.!
நன்றி நடராஜன்.!
நன்றி முல்லை.!
நன்றி மகேஷ்.!
நன்றி முரளி.!
நன்றி சரவணா.!
நன்றி பாபு.!
நன்றி அப்துல்.!
நன்றி வேலன்.! ( உம்ம எழுத்து மெருகேறுதுவே// பெருமை.!)

cheena (சீனா) said...

அன்பின் தாமிரா

கொசுவத்தி நல்லாச் சுத்தி இருக்கீங்க

தாய் மாமன் இயல்பாக இருக்கிறார். இப்படித்தான் இருக்க வேண்டும். நாம் கர்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கிறது.

நல்வாழ்த்துகள்

rapp said...

:):):)

rapp said...

me the 25th:):):)

தமிழ்ப்பறவை said...

நல்ல பதிவு தாமிரா...
வெகு இயல்பாக எழுதி இருக்கிறீர்கள். தாய்மாமனின் வீரம் உங்களிடமும் இருப்பதால்தான் தைரியமாக தங்கமணி பதிவுகள் எழுதுகிறீர்கள் போலும்.