Monday, December 8, 2008

திருநெல்வேலி மாவட்டம் ஒரு வன்முறைக்களமா?

மயங்கும் மாலைநேரம். சூரியன் இப்போதுதான் மறைந்திருக்கவேண்டும். மரங்கள் அந்த இடத்தில் சூழ்ந்திருந்ததால் அதற்குள்ளாகவே இருட்டத் துவங்கியிருந்தது. சேரன்மகாதேவி விலக்கில் பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன். என்னுடன் இன்னும் நாலைந்து பயணிகள் காத்திருந்தனர். அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை யாரும் பயன்படுத்துவது போல தெரியவில்லை. அதனருகில் ஒரு சிறிய குடிசையில் ஒரு டீக்கடையும் இருந்தது. அதன் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் உட்கார்ந்து அந்த வெளிச்சத்திலும் பேப்பர் படிக்க முய‌ன்று கொண்டிருந்தார்.

நானும் அதற்கு மறுபுறம் அமைந்திருக்கும் ஒரு சிறிய கோவிலின் பின்புறமுள்ள‌ சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இந்த இடத்தில் சமயங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்துக்கிடக்கநேரிடும். ஆகவே எப்போதுமே சேரன்மகாதேவி சென்று திரும்புகையில் ஏதாவது புத்தகத்தை எடுத்துவருவது என் வழக்கம். ஆனால் இப்போது வெளிச்சமில்லாததால் படிக்கமுடியாமல் என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கும் பல வருடங்கள் முன்னால் அம்மாவுடன் சேரன்மகாதேவி வந்துசெல்லும் போது இந்த காத்திருத்தலை கழிப்பதற்காக சில கூழாங்கற்களை சேகரித்து 'களச்சிக்கல்' விளையாடுவோம். பஸ் வந்து நாங்கள் செல்லும் போது அந்த கற்களை கோவிலின் பின்புறமுள்ள ஒரு கல்லின் அருகில் போட்டுவிட்டு வருவோம், அடுத்தமுறை வரும்போது விளையாடுவதற்காக. அந்தக்கற்கள் இப்போதும் கிடக்குமா என்று நாங்கள் கற்களை போடும் இடத்திற்கருகில் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அவரை நான் கவனித்தேன். தாமிரபரணியில் குளித்துவிட்டு இடுப்பில் ஈர வேட்டி மற்றும் தோளில் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். ஏதோ தெரிந்தவராக இருக்குமா என்பதற்காகத்தான் அவரை கவனித்தேன் . இல்லை. 35 வயதிருக்கலாம். நல்ல உயரமான திடமான உடல்வாகு. இடதுகையில் கைக்கொள்ளும் அளவில் அகத்திக்கீரையை வைத்திருந்தார். ஆடுகளுக்காக இருக்கலாம். வலது கையில் ஒன்றரை அடி நீளத்தில் ஒரு பளபளப்பான அரிவாள் தெரிந்தது. வயலுக்கு சென்றுவிட்டு ஆற்றில் குளித்து வீடு திரும்பும் ஆண்கள் கையில் அரிவாள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமே அல்ல. அங்கே அது மிக சாதாரணம். அந்தக்காட்சி ஒன்றும் என்னை அவ்வளவாக கவரவில்லை. மீண்டும் நான் கற்களை தேடத்துவங்கினேன்..

அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அரிய சம்பவம் நிகழ்ந்தது. அவர் வந்துகொண்டிருந்த நேரெதிர் திசையிலிருந்த அந்த டீக்கடை குடிசையிலிருந்து அதே போன்ற ஒன்றரை அடி நீள அரிவாளுடன் ஒரு இளைஞன் 'ஹோ..'வென ஒரு மாதிரி சத்தமாக கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓடினான். பாய்ந்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கு ஒரு இருபது வயதுதான் இருக்கும், அவனும் நல்ல திடகாத்திரமாக இருந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக்கொண்டார். முதல் வெட்டை அவர் தன் அதிவேக நடவடிக்கையால் தனது அரிவாளில் தாங்கிக்கொண்டார். 'டங்' என சத்தம் எதிரொலிக்கிறது. அவர்களிடமிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் நான் நிற்கிறேன். இந்த மெல்லிய இருளில் இரண்டு அரிவாளும் மோதிக்கொண்டதில் எழுந்த தீப்பொறியைக் கண்டேன். இரண்டாவது வெட்டை இருவருமே அனுமதிக்கவில்லை. இருவரும் சம பலத்தில் இருந்ததால் ஒருவரை ஒருவர் கைகளால் தள்ளிக்கொண்டதில் பத்தடி தூரத்தில் இருவரும் யார் முதலில் அரிவாளை வீசப்போகிறார்கள் என்று தத்தளித்துக்கொண்டிருந்தார்கள்.

இது ஒன்றும் சினிமா அல்ல, மணிக்கணக்காய் சண்டை போட.. யார் முதலில் தவறுகிறார்களோ அவர் இறப்பது நிச்சயம். சில விநாடிகள்தான்.. மேலும் சில வீச்சுகள் காற்றிலே போயின. அதற்குள் அந்தக்கடையின் உள்ளிருந்த சில ஆண்கள் ஓடிவந்தனர். பின்பக்கமாக அந்த இளைஞனை கொத்தாக தூக்கிப்பிடித்தனர். இப்போது மாட்டிக்கொண்ட அவனை வெட்டும் கோபத்திலிருந்த அவரையும் தனியாக பிரித்து தனித்தனி திசைகளில் இழுத்துச்சென்றுவிட்டனர்.நான் அப்பாடி என்று பெருமூச்சு விட்டு திரும்பிப் பார்க்கிறேன். என்னுடன் காத்திருந்த பயணிகள் பஸ் ஆசையை துறந்து விட்டு மேற்கு நோக்கி ஓடி அதற்குள் அரைகிலோமீட்டரை கடந்துவிட்டிருந்தனர். அந்த சம்பவம் குறித்து எனக்கு இன்னும் சில கேள்விகள் மனதில் உண்டு.

அந்த இளைஞன் அவர் அரிவாள் கொண்டு வராத இன்னொரு நாளைப்பார்த்து ஏன் அட்டாக் செய்யவில்லை? அல்லது மரங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு அவர் தாண்டிச்சென்ற‌ பின்னர் பின்பக்கமாக சென்று ஏன் தாக்கியிருக்கக்கூடாது? அவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்திருப்பார்களோ? பின்னர் அவர்கள் சமாதானமாகி விட்டார்களா? அல்லது பிரிதொரு சமயத்தில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டார்களா? அரிவாள்களுக்கு நடுவே புகுந்து அவர்களை பிரித்த நபர்கள் செய்தது வீரச்செயல்தானா? பின்னங்கால் பிடரியில் பட ஓடிய பொதுஜனம் செய்தது சரிதானா?

டிஸ்கி: திருநெல்வேலி மாவட்டத்தைக்குறித்தும் ஜாதி, வன்முறை, அரிவாள் என்பது குறித்தும் பல்வேறு கதைகளும், ஒரு போலியான தோற்றமும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் உண்மைக்குப்புறம்பான கற்பனைக்கதைளே. அன்புக்காக எதையுமே விட்டுத்தரும் நல்ல உள்ளங்களை எங்கேயும் விட அதிகமாக அங்கு காண இயலும். இப்போதும் எங்கள் வீட்டு கதவுகள் இரவிலும் மூடப்படுவதில்லை. திருடர் பயம் என்பதை நான் கதைகள் தவிர நிஜத்தில் அங்கே கேள்விப்பட்டதேயில்லை. காவல் தெய்வங்கள் மீதான பக்தியும், விளைநிலங்கள் மீதான நம்பிக்கையும், கடும் உழைப்பும் என் சிறு வயதில் பார்த்த அதே அளவில்தான் இன்னும் இருக்கிறது என நான் நம்புகிறேன். கடும் மூர்க்கமானவர்கள், தாக்குவதற்கு அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தில் முழு உடன்பாடில்லை. மூர்க்கத்தனமானவர்கள் வேறெங்கும் இல்லையா? அவர்கள் எங்குமே நிறைந்திருக்கத்தான் செய்கிறார்கள். பதிலடியாக தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் எங்கள் பகுதிகளில் ஜாதிக்கலவரங்கள் நடந்ததாக எப்போதாவது நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனது சிறு வயதில் இரண்டு வன்முறைச்சம்பவங்களை பார்த்த சாட்சியாகவும் நான் இருந்திருக்கிறேன். அதில் ஒரு சம்பவத்தைத்தான் மேலே நினைவு கூர்ந்துள்ளேன். பதிவுக்கும், டிஸ்கிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முரண் எனக்கொள்ளாமல் ஒரு பரபரப்பான சம்பவம் என்ற வகையில் மட்டுமே கொள்ளுங்கள். உண்மையில் திருநெல்வேலி மாவட்டம் ஒரு வன்முறைக் களமல்ல என்றே நான் நம்புகிறேன்நன்றி.

21 comments:

Mahesh said...

வன்முறைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக்கும் எதுவும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தோனறவில்லை. எந்த இடத்தில்தான் வன்முறை இல்லை? வன்முறையெல்லாம் மக்களின் மனதில் இருக்கிறது. மதத்திலோ ஜாதியிலோ இடத்திலோ அல்ல என்பது என் எண்ணம்.

சந்தனமுல்லை said...

ஒருவேளை இதைத்தான் ராஜாக்கள் காலத்தில் வீரம்-ன்னு சொல்லியிருப்பாங்களோ!! பை தி வே, எனக்கும் திருநெல்வேலிக்காரர்கள் எல்லாம் மூர்க்கமானவர்கள் என்றுத் தோன்றவில்லை..அன்பு நெஞ்சங்களாகத்தான் அறிந்திருக்கிறேன், நிஜத்திலும் கதைகளிலும்!

Anonymous said...

திருநெல்வேலி வன்முறைக்களமல்ல என்பது சரிதான். ஆனால் அங்கு நடக்கும் வன்முறைகள் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலபடுத்தப் படுகின்றன. அப்படிப் பார்த்தால் தூத்துக்குடிதான் முதலில் வரவேண்டும்.

ஆனால் பிற இடங்களில் நடக்கும் கொலை மற்றும் வெட்டு குத்துச் சம்பவங்கள் தொழில் அல்லது முன் விரோதம் காரணமாக இருக்கும். இங்கு நடக்கும் சம்பவங்கள் இரு குழுக்கள் அல்லது இனங்களுக்கிடையேயான ஒன்று.

சிறு வயது முதல் போதிக்கப் பட்ட மேல்ச்சாதி கீழ்ச்சாதி வர்க்க பேதம் ரத்ததில் கலந்து விட்டது. இன்னும் சில தலைமுறைகளும் நல்ல வேலைவாய்ப்பு வசதியும் பெருகினால் இது மாறும்.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் வீரதீரப் பட்டமும் மரியாதையும் அதை நோக்கிச் செலுத்துகிறது.

எனக்குத் தெரிந்து பின்புறமாகத் தாக்குவது கிடையாது. கொலையுண்டவனுக்கு இன்னார்தான் தன்னைக் கொன்றவர் எனபது தெரியவேண்டும் என்பதாலேயே நேருக்கு நேர்.

நீறுபூத்த நெருப்பு போல அது கனன்று கொண்டேதான் இருக்கும், என்றாவது வெடிக்கும்.

பூமணி எழுதிய 'வெக்கை' நாவல் படியுங்கள் உங்கள் கேள்விகள் பெரும்பாலும் தீர்க்கப்படும்.

கார்க்கி said...

சாரி சகா.. பணமோ,பதவியோ,கெளரவமோ, சாதியோ, மதமோ எதற்காகவும் இன்னொரு மனிதனை அடிக்கும் வன்முறை ஆபத்தானது. வேண்டுமானால் தற்காப்புக்காக அடிப்பதை மன்னிக்கலாம். நெல்லை மட்டுமல்ல தமிழகத்தில் பல பகுதிகள் வன்முறை களங்களே. ஆனால் இவை விட‌ மோசமான பகுதிகள் இந்தியாவிலும் உண்டு. ஆனால் நீங்கள் உங்கள் ஊர் என்ற அடிப்படையில் அதை நியாயபடுத்த முனைவது ஒரு வித ஆபத்தான் செயல். மனிதனை பிரிக்கும் சாதி,மதம் போல ஊர்ப்பாசமும் ஆபத்தான் ஒன்று.காரணமே இல்லாமல் அவன் நம்ம ஊர் பையன் என்ற ரீதியில் அன்பு காட்டும்போது அதன் ஆபத்து உனரமுடியாது. ஏதாவ்து ஒரு பிரச்சனையில் நிச்சயம் அப்படி போன்றவர்கள் நியாயத்தின் பக்கம் நில்லாமல் ஊர்க்கார பையனுக்குத்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தருவார்கள். நான் முதலில் சொனது போல எந்த ஒரு ஐடென்ட்டியும் விரும்பாதவன் நான். அதில் ஊரும் ஒன்று.

டிசுகி : என் கருத்து. அவ்வளவே. பெரிதாய் எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.

சந்தனமுல்லை said...

ஸ்டெல்லா புரூஸ், அம்பையின் கதைமாந்தர்கள் அவ்வளவு அன்பானவர்கள்!

புருனோ Bruno said...

என் அனுபவத்தில் திருநெல்வேலியில் அடிபட்டு / குத்துப்பட்டு மருத்துவமனையில் சேருபவர்கள் (பெரும்பாலும்)“அவன்” அடித்தான் . வெட்டினான் என்று ஒரு பெயரை மட்டுமே கூறுவார்கள்

சென்னையிலோ ஒருவனை மரத்தில் கட்டி வைத்து 6 முதல் 8 பேர் மரக்கட்டையால் அடிப்பது அதிகமாக இருக்கிறது

--

திருநெல்வேலி பக்கம், முக்கிய பிரச்சனை - வரப்பு தகராறு

சென்னைப்பக்கம் - என் தங்கச்சியை கேலி செய்தான்

-

இது அனுபவம் மட்டும் தான்

தாமிரா said...

நன்றி மகேஷ்.! மிகச்சரியாக சொன்னீர்கள். இதைத்தான் டிஸ்கியில் சொல்லமுயன்றேன், தவறிவிட்டேன்.

நன்றி முல்லை.!

விரிவான கருத்துகளுக்கு நன்றி வேலன்.! உங்கள் கருத்துகளை ஒப்புகிறேன்.

ஸாரி கார்க்கி.! ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌த்தை சொல்ல‌முய‌ன்றேன், அத‌னால்தான் ஒவ்வொரு அசைவையும் வ‌ர்ணிக்க‌முய‌ன்றுள்ளேன். ஆனால் ஏற்க‌ன‌வே டிஸ்கியில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌ க‌ருத்துகளின்படி திருநெல்வேலியை பற்றிய த‌வறான‌ தோற்ற‌‌த்தை உருவாக்கிய‌ பல கட்டுக்கதைகள் செய்த அதே தவறை இந்த‌க்க‌ட்டுரையும் உருவாக்கிவிட‌க்கூடாதே என்ற‌ எண்ண‌த்தில்தான் டிஸ்கியில் விள‌க்க‌ம் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ வ‌ள‌ர்ந்த‌வ‌ன், இன்னும் க‌வ‌னித்துக்கொண்டிருப்ப‌வ‌ன் என்ற‌ முறையில் திருநெல்வேலியைப் ப‌ற்றி கருத்துக்கூற‌ என‌க்குத் த‌குதியிருப்ப‌தாக‌வே நான் க‌ருதுகிறேன். அது ஊர்ப்பாச‌த்தை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ இருப்ப‌தாக‌ நான் க‌ருத‌வில்லை. வேறு யாராவ‌து இதுபற்றி க‌ருத்துக்கூற‌லாம். மொழி, இனம், தேசம் போன்ற பற்றுகளைப்போலவே ஊர்ப்ப‌ற்றும் உள்ளூர‌ கொஞ்ச‌ம் இருந்தாலும் நான் அனைத்தையுமே வெறுப்ப‌வ‌னே.. நன்றி.

கருத்துகளுக்கு நன்றி டாக்டர் புரூனோ.!

தாமிரா said...

இருப்பினும் கார்க்கி.. தலைப்பு மட்டும் வாசகர்களைக் கவர்வதற்காகவே வைக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன், இருப்பினும் கொஞ்சமாவது தொடர்பிருப்பதால் மன்னிக்கலாமே.!

கார்க்கி said...

//இருப்பினும் கார்க்கி.. தலைப்பு மட்டும் வாசகர்களைக் கவர்வதற்காகவே வைக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன், இருப்பினும் கொஞ்சமாவது தொடர்பிருப்பதால் மன்னிக்கலாமே.//

தலைப்பு அவ்வாறு வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஒரு வேளை தவறென்றலும் அதில் பெரும் ப்ங்கு அவற்றை வளர்க்கும் வாசகர்களுக்குத்தான். மேட்டருக்கு வருவோம்.

மன்னிப்பதா? நல்ல பதிவு. ஆனா எனக்கு அதில் உடன்படில்லை என்பதே விஷயம்.

// 20 வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ வ‌ள‌ர்ந்த‌வ‌ன், இன்னும் க‌வ‌னித்துக்கொண்டிருப்ப‌வ‌ன் என்ற‌ முறையில் திருநெல்வேலியைப் ப‌ற்றி கருத்துக்கூற‌ என‌க்குத் த‌குதியிருப்ப‌தாக‌வே நான் க‌ருதுகிறேன்//

தகுதி பத்தி நான் பேசவே இல்லையே சகா.

//அது ஊர்ப்பாச‌த்தை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ இருப்ப‌தாக‌ நான் க‌ருத‌வில்லை. வேறு யாராவ‌து இதுபற்றி க‌ருத்துக்கூற‌லாம். மொழி, இனம், தேசம் போன்ற பற்றுகளைப்போலவே ஊர்ப்ப‌ற்றும் உள்ளூர‌ கொஞ்ச‌ம் இருந்தாலும் நான் அனைத்தையுமே வெறுப்பவ//

உங்களை ஓரளவுகு நானறிவேன் என்பதாலே இதை நான் உரிமையுடன் சொன்னேன். நிச்சயம் உங்களுக்கு ஊர்ப்பாசம் நிறைய உண்டு. உ‍ம்: அடடே மதி:)) .. என்னளவில் அதை நான் வெறுக்கிறேன் என்பதாலே அது தவறாகி விடாதல்லவா!!!!

தமிழ் பிரியன் said...

பொதுவாக தமிழகத்தின் வட பகுதிகளில் வாழ்பவர்களுக்கு தென் பகுதி என்றாலெ அது திருநெல்வேலி என்று தான் தெரியும். தமிழகத்தில் சாதி கலவரங்கள் ஆரம்பமாகி உச்சகட்டத்துக்கு சென்ற பகுதிகள் என்றால் அது தேனி, மதுரை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் தான். இப்போது அவை கூட அமைதியடைந்து விட்டன.

ஒரு மாவட்டத்தை குறிப்பிட்டெல்லாம் சொல்ல முடியாது...:)

ஆனா நாங்கல்லாம் கரிச காட்டு ரவுடிக... கட்டி வச்செல்லாம் வேடிக்கை பார்க்க மாட்டோம். துண்டு துண்டு வெட்டி ஆத்தில் போட்டு விடுவோம்ல..:(

அத்திரி said...

1993 மற்றும் 1998ல் சாதிகலவரம் நம்ம மாவத்துல நடக்கும் போது அமைதியாயிருந்த 3 ஊர்கள். 1. அம்பை 2. சேரன்மகா தேவி.3.தென்காசி. நெல்லையில சாதிக்கலவரம்னா நெல்லையை சுற்றியுள்ள பகுதிகள் முக்கியமா கல்லூர்,தேவர்குளம்,சங்கரன்கோயில்,மானூர் தான் அதிகமா இருக்கும். இப்பவும் அந்த ஏரியாக்கள் தான் நீரு பூத்த நெருப்பா இருக்கு. அதுக்கு காரணம் குறுகிய மனம் படத்த சாதி சங்க தலைவர்கள்.

எப்படினாலும் நம்ம ஊர் நல்ல ஊர்தான். இதுக்கு யாரோட சர்டிபிகேட்டும் தேவையில்லை.

அத்திரி said...

//ஆனா நாங்கல்லாம் கரிச காட்டு ரவுடிக... கட்டி வச்செல்லாம் வேடிக்கை பார்க்க மாட்டோம். துண்டு துண்டு வெட்டி ஆத்தில் போட்டு விடுவோம்ல..:(//

அதனாலதான் அண்ணாச்சிய நாடு கடத்திட்டாங்க போல

அத்திரி said...

யாராவது இருக்கீங்களா? கும்மி அடிக்கலாம்

Chuttiarun said...

வணக்கம்

நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

தாமிரா said...

ரெகுலர் கஸ்டமர்களைக்கூட காணோமே.. அவங்கவங்க பதிவுல போயி கலாய்ச்சுடவேண்டியதுதான். கடும் அலுவலக பிரச்சினையிலும் உங்களூக்காக ஆளு வச்சு பதிவு போட்டாலும் கண்டுக்க மாட்டீங்களே. ஆமா இன்னொண்ணு கவனிச்சீங்களா? தமிலிஷ்ல ஹிட்டானா தமிழ்மணத்துல ஹிட்டாவ மாட்டேங்குது. புர்லயே..

தாமிரா said...

கார்க்கி :என்னளவில் அதை நான் வெறுக்கிறேன் என்பதாலே அது தவறாகி விடாதல்லவா!!!!// தல சுத்துதுபா..

நன்றி தமிழ்பிரியன்.! (ஆத்தாடி, நான் பயந்துட்டேனே..)
நன்றி அத்திரி.! (நல்ல பதிவுல ‍‍*அப்பிடின்னு நா நெனைக்குறது* கும்மி நாட் அலவ்டு.! அப்பாலிக்கா போட்டா அளிச்சுப்புடிவேன், ஜாக்குறத..)

தாமிரா said...

ஊஹூம்.. இதுக்கு மேல இதுக்கு ஆளு வராது.. அடுத்த பதிவ போட்றவேண்டியதுதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரெண்டு பேரு கத்தி வெச்சிருந்தும் யாருக்கும் எதுவும் ஆகலை.

படிக்கிறதுக்கு நல்லா இருக்குது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமிரா said...
ஊஹூம்.. இதுக்கு மேல இதுக்கு ஆளு வராது..

ஏங்க,
நாங்கல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோங்க.
அதுக்குள்ள அடுத்த பதிவு அது இதுன்னு ஆள பயமுறுத்தாதீங்க.

ராம்.CM said...

நல்லா சொல்லிருக்கீங்க!..தாமிரா!. என் வாழ்வில் இது போன்ற சில சம்பவங்கள் நான் சந்தித்ததுண்டு.

ராமலக்ஷ்மி said...

//உண்மையில் திருநெல்வேலி மாவட்டம் ஒரு வன்முறைக் களமல்ல என்றே நான் நம்புகிறேன்நன்றி.//

நன்றி நன்றி.