Friday, January 30, 2009

வலி

முத்துக்குமரன்,

உன் முடிவு ஏற்புக்குரியதே அல்ல எனினும் இத்தனை வீச்சையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தியது அதுதான். இதை நீ நிகழ்த்தாவிட்டால் உனது இந்த நீண்ட கட்டுரை எத்தனை பேரால் வாசிக்கப்பட்டிருக்கும்?அனைத்தையும் பார்த்துக்கொண்டும், படித்துக்கொண்டும் இரவுகளில் நிம்மதியாக உண்டு, உறங்கிக்கொண்டிருக்கும் நான் வெட்குகிறேன். உன்னைத்தின்ற தீயை உன் சிந்தனையில் காணமுடிகிறது. அது அனைவரையும் தொற்றட்டும். இன்னுயிரைத்தந்த இந்த பெரும் தியாகம் வரலாற்றின் பக்கங்களில் உன் பெயரை எழுதிவைக்கும்.

******

முத்துக்குமரனின் விட்டுச்சென்றுள்ள இறுதிச்செய்தி..

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...

உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99


அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....

Thursday, January 29, 2009

மசினகுடியில் நிகழ்ந்த ரகசிய பதிவர் சந்திப்பு (புகைப்படங்களுடன்)
கடல் மட்டத்திலிருந்து 2000 m உயரத்தில் சரிவான மலைச்சாலையில் அந்த 'டெம்போ டிராவலர்' பயணித்துக்கொண்டிருந்தது. அந்த மதிய நேரத்திலும் அதிகாலையோ என்று எண்ணும் நிலையில் வானிலை நிலவ, குளிர்காற்று சில்லிடச்செய்து கொண்டிருந்தது. ஒரு புறம் நீண்டு உயர்ந்திருந்த பெயர் தெரியாத மரங்களுடன் மலை. மறுபுறம் பச்சையின் அத்தனை கிளை வண்ணங்களையும் அள்ளித் தெளித்ததைப்போன்ற பசுமைப் பள்ளத்தாக்குகள். அந்த அடியாழங்களில் நாம் காண்பது இடப்புறம் இருப்பதைப்போன்ற பெரும் மரங்கள்தானா? அல்லது அவை சிறு புதர்களா? சுற்றித்திரிந்த வெண்மேகங்கள் பரவசப்படுத்தின. உதகையையும் தாண்டி அந்த வண்டி எங்கே சென்று கொண்டிருக்கிறது.? அதனுள்ளே ஒரு வளரும் இளம் எழுத்தாளர் ஆறு ரசிகர்களால் கடத்தப்பட்டு எங்கே கொண்டு செல்லப்படுகிறார்.?

ஆ..வ்வ்வ்.. சரி சரி அடிக்க வரவேண்டாம், விஷயத்துக்கு வருகிறேன்.

பயணம் இனிது, ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் பயணிப்பது அதனினும் இனிது, அதுவும் நோக்கமற்ற பயணம் இனிதோ இனிது, அதிலும் அந்த பயணம் இயற்கையின் மடியினை நோக்கியதாக அமைந்துவிட்டால் அற்புதம்.! அண்ணன் வடகரை வேலனின் முன்முயற்சியிலும் ஏற்பாட்டிலும் இது சாத்தியமானது. முதல் பாராட்டுக்குரியவர் அவர். நான் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்தால் கடைசி மணித்துளி வரை முழுமையாக வீட்டுப்பறவையாகவே இருக்க விரும்புவேன். பெரும்பாலும் அலுவலக, நண்பர்கள் தொடர்பில்லாமலே இருந்துவிடுவேன். பயணங்களிலும், நண்பர்களுடனான கொண்டாட்டங்களிலும் மிக விருப்பம் இருப்பினும் சென்னையில் இருக்கும் போது திட்டமிடக்கூடாதா என்றே புலம்பிக்கொண்டிருப்பேன். என்னை வலுவாக தொடர்ந்து சுற்றுலாவுக்கு அழைத்துவந்தவர் கும்க்கி. அவர் கட்டாயப்படுத்தியிருக்காவிட்டால் இந்த அழகான அனுபவத்தை நான் இழந்திருக்கக்கூடும். அவருக்கு என் அடுத்த நன்றி.
நான் கோவை வந்த இரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த போதும் அன்போடு காத்திருந்து அணைத்து வரவேற்று அன்பு செய்தார் பரிசல். உடன் வேலன். முன்பு ஒரேமுறை அதுவும் சில நிமிடங்களே பார்த்திருந்தாலும் ஒரு தம்பியின் மீதான பாசமாக இருந்தது அவர் என் மீது காட்டியது. சுற்றுலாவில் இணைந்து கொள்ளமுடியாத சூழலில் இருந்தாலும் இரயில் நிலையத்தில் காத்திருந்து சந்தித்த தமிழ்பிரியனின் நட்பு இணையற்றது
அடுத்த இரண்டு நாட்களில் நான் கொண்ட அனுபவம் புதிது. இந்த வலைப்பூவும், எனது எழுத்துக்களுமா இத்தனை நட்பையும், அன்பையும் பெற்றுத்தந்தது.? வலைப்பூவில் இயங்குவதற்காக பெருமை கொள்கிறேன். எனது சிறு முயற்சிக்கு இதை விட வேறென்ன ஊதியம் கிடைத்துவிடமுடியும்? அதுவும் சில காலமாக திசைமாறி எந்திரமயமாகிக்கொண்டிருந்த என் வாழ்வில்தான் வலைப்பூவினால் எத்தனை பெரிய மாற்று.!!

நோ செண்டிமெண்ட்ஸ்.. விஷயத்துக்குப்போகலாம். தமிழ்பிரியனை வழியனுப்பிவிட்டு குழு தங்கியிருந்த சஞ்சய்'யின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்ற போது கார்க்கி தூங்கிவழிந்தவாறே நெட்டில் மேய்ந்துகொண்டிருந்தார். விழிப்பதே கணினியின் முகத்தில்தான் போலிருக்கிறது. முந்தின நாளின் கிறக்கம் தணியாத கும்க்கி குளிக்கலாமா, வேண்டாமா என்பது போல சுயசிந்தனையில் இருந்தார். கிளம்ப ஆயத்தமாக இவ்வளவு .:பிரெஷ்ஷாக யாரிந்த அழகன் எனக்குப்போட்டியாக.? பிறகுதான் தெரிந்தது அது பின்வந்த சுற்றுலா முழுதிலும் அனைவரையும் ஆக்ரமித்த 'செல்வேந்திரன்', தயாராக இருந்த இன்னொருவர்? இந்த அமுல் பேபியைத்தான் தெரியுமே.. அழகான பெயரான், 'வெயிலான்'.


கண்டிப்பாக குளிக்கத்தான் வேண்டும் என வேலன் விதிமுறையிட்டுவிட்டதால் பாவம் கார்க்கியும் குளிக்கவேண்டியதாகப் போயிற்று. பின் ஒருவர் பின்னொருவராக கிளம்ப அந்த சுற்றுலா ஆரம்பமானது. கிளம்புகையில்தான் தெரிந்தது 'சஞ்சய்' கலந்துகொள்ளவில்லை என்பது. ஓட்டுனர் ரமேஷுடன் எட்டு பேராக துவங்கியது பயணம். அன்னபூர்ணாவில் காலையுணவு. பசி மிகுதியில் உணவும் மிகுதியாகி நிமிரமுடியாது போனேன். இன்னொருவரும் என் நிலையில். பெயர் வேண்டுமா?
நீண்ட பயணத்தின் இடைவேளையாக 'வ்யூபாய்ண்டில்' சிறிய இளைப்பாறுதல். குப்பை போடுவதாக எங்களை தவறாக எண்ணி அங்கிருந்த வனக்காவலர் எங்களைப்படுத்த, அனைவரும் வருத்தம் தெரிவித்து கிளம்புகையில் மாற்றுக்கருத்தை தெரிவித்து அவருடன் மோதக் கிளம்பினார் கும்க்கி. அந்த விஷயத்திலிருந்தே துவங்கியது, சந்திப்பு முழுமைக்குமான விவாதம். உதகையையும் தாண்டி எங்கே போகிறோம்?. அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் மசினகுடியை நோக்கி பயணமானோம். முன்னதாக தொட்டபெட்டா சிகரத்தில் சிறிது நேரம் இயற்கையை ரசித்தோம். அந்த இடத்தில் நான் எடுத்த ஒரு இயற்கைக்காட்சி அனைவரையும் பரவசப்படுத்தியது.


எனக்கே தெரியாமல் எனக்குள் உறங்கிக்கிடந்த புகைப்படத்திறமை(?) அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் என்னை படமெடுங்கள், என்னை படமெடுங்கள் என்று என்னைப் படுத்திவிட்டார்கள். (இந்தக்கட்டுரையில் ஆங்காங்கே சில கற்பனைச்செய்திகளும் உள்ளன என்பதை உங்களுக்கு இந்நேரத்தில் நினைவூட்டிக்கொள்ள விரும்புகிறேன்). அங்கே திரு.லதானந்த் அவர்களையும் சந்தித்தோம். அவர் தந்த ஒரு முக்கிய பரிசுப்பொருளையும் பெற்றுக்கொண்டோம். இயற்கையின் பேரழகில் வழியெங்கும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே பயணத்தைத்தொடர்ந்தோம்


பின்னர் திட்டப்படி நாங்கள் மசினகுடி விடுதியை அடைந்த போது இருள் சூழ்ந்திருந்தது. மிகவும் தாமதமாகவிட்டதால் சபாரி செல்ல இயலவில்லை. அடர்ந்த வனப்பகுதில் அமைந்திருந்தது அந்த விடுதி. பாதுகாப்புக்காக மின்வேலி அமைக்கப்படிருந்தது. இரவு நேரக்கொண்டாட்டங்களும், சீட்டாட்டமும் வெகுநேரம் தொடர்ந்தது. உணவு அருமையாக இருந்தது. மறுநாள் காலை சபாரியும் சில பல காரணங்களால் ரத்தானது. தாமதமாக தூங்கியும் காலையிலேயே மான்களைப்பார், மயில்களைப்பார் என வேலன் எழுப்பிவிட்டுவிட்டார். காலை நேரம் அந்தச்சூழல் அற்புதமாக இருந்தது. பச்சைப்பசுமை, மரங்கள், அருகே ஓர் சிறிய காட்டு ஓடை, தெள்ளிய நீர். பிரம்மாண்டமான மூங்கில் புதர்கள்.. இயற்கையின் எழில் கொஞ்சியது. கார்க்கியின் கலகலப்பு அனைவரையும் தொற்றியிருந்தது. செல்வேந்திரனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பரிசலின் பதிவில் தெரிந்திருப்பீர்கள். கொஞ்சம் அமைதியாக இருந்தாலும் வெயிலான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக தோன்றினார். மீண்டும் புகைப்படங்கள்.


சீக்கிரமே எழுந்ததால் பசி வயிற்றைக் கிள்ள காலை உணவு தாமதமாகி சோதனை ஏற்பட்டது. பிறகு உண்டு கிளம்பவே 10 மணியாகிவிட, இப்போது கிளம்பினால்தான் நான் எனது 8 மணி பஸ்ஸை பிடிக்கமுடியும் என்ற நிலைமை.மீண்டும் என்னாலேயே வேறு சில நிறுத்தங்களைத் துறந்து வண்டி கிளம்பியது. குளியலை மட்டும் மீளும் வழியில் உள்ள ஒரு அழகிய சிற்றாற்றில் வைத்துக்கொண்டோம். பளிங்கு போன்ற நீர், .:ப்ரீஸிங் குளிர். கார்க்கியும், செல்வேந்திரனும் குளிக்காமல் ஜகா வாங்க முயற்சிக்க இழுத்து உள்ளே போடப்பட்டார்கள். (அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது)


கட்டுரை மிக நீண்டு கொண்டிருப்பதால் விரைந்து முடித்துக் கொள்கிறேன். விடுபட்ட பகுதிகளையும், வசனப்பகுதிகளையும் பரிசல், வேலன், வெயிலான் எழுதுவார்கள் என நம்புகிறேன். அப்துல்லா, நர்சிம், வெண்பூ போன்ற சென்னை நண்பர்கள் இல்லாத ஒரே குறையுடன் கோவை வந்து சேர்ந்தோம். சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததால் உணவுப்பொட்டலம், தண்ணீர் பாட்டிலுடன் காத்திருந்த சஞ்சய் என்னை பஸ்ஸுக்குள் தள்ளி கதவை அடைத்து வழியனுப்பினார். சொல்லொணாத நிறைவுடன் சாப்பிடக்கூடத்தோன்றாத மனநிலையில் சென்னை வந்து சேர்ந்தேன். மீண்டும் இது போன்ற ஒரு சுற்றுலாவை நடத்த அனைவருமே பேசிக்கொண்டோம். அதற்காக காத்திருக்கிறேன்.
நீண்ட விடுமுறை, அழகான சுற்றுலா என களித்திருந்த நான் மறுநாள் கொஞ்சம் சோகமாகவே அலுவலகம் திரும்பினேன். கணினியைத் திறந்தபோது வேலனிடம் இருந்து மெயில் வந்திருந்தது, சுற்றுலாவுக்கான உனது ஷேர் இவ்வளவு என்று.. இன்னும் சோக‌மானேன்..!


.

Tuesday, January 27, 2009

தங்கமணி ரிட்டர்ன்ஸ்

நீண்ட(?) இடைவேளைக்குப் பின்னர் தாமிரா IS BACK. 

   கோடைகாலத்தில் வற்றிய கிணற்றின் உட்சுவர்கள் மழைக்காலத்தின் துவக்கத்தில் நீர் சுரக்கத் துவங்குவதைப்போல பிரிவினால் சுரக்கத் துவங்கியிருந்த காதல் கிணறு நிரம்பி வழியத் துவங்கிய நேரத்தில்தான் என் மனைவியைச் சந்தித்தேன். ரமாவிடமும் காதல் மெலிதாக துளிர்த்திருந்தது. முதல் நாள், காதல் வானிலே சிறகடித்திருந்தோம். 

  அந்நேரத்திலும் 'எத்தனை நாளைக்குடா இது.. அடங்குடா கைப்புள்ள..' என உள்ளிருந்த தாமிரா கெக்கலித்தான். அவன் சொன்ன நாள் கணக்கு கூட இல்லாமல் மணிக்கணக்கிலேயே அந்த நீர்க்குமிழ் உடைந்துபோனது. ஒருவரையொருவர் பிறாண்டிக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் கயிற்று மேல் நடப்பதுபோலவே இருக்குதே.. பின்னர் சமாதானமாகி விழாக்கால கொண்டாட்டங்களையும், விருந்துகளையும் முடித்துக்கொண்டு ஒரு வழியாக சென்னை கிளம்பினோம். எனக்கு அப்போதிருந்த மனநிலை பெயில் முடிந்து சிறை திரும்பும் கைதியின் ம‌ன‌ நிலைக்கு ஒப்பான‌தாக‌ இருந்திருக்கும் என‌ எண்ணுகிறேன். 

*இன்னுமா சிலிண்ட‌ர் வாங்கி வைக்க‌வில்லை, என்ன‌தான் ப‌ண்ணிக்கிட்டிருந்தீங்க.? 

*15 நாளா வெளிய கொடியிலயே இந்த சட்டை கிடந்திருக்கே.. உள்ள எடுத்துப்போட்டுட்டு வரணும்னு தோணவே தோணாதா ஒங்களுக்கு? 

*வண்டியை கவர் போட்டு வெச்சிட்டு வாங்கன்னு எத்தன தடவை போன்ல‌ சொன்னேன்.? 

*பேப்பர நிறுத்திட்டு வாங்கன்னு சொன்னேனா? இல்லையா? 

*இந்த வாட்ச்சுல கண்ணாடி உடைஞ்சிருக்கே.. என்ன பண்ணினீங்க.? 

...ர‌மா த‌ன் திருப்ப‌ணியை ஆர‌ம்பித்திருந்தாள். நான் வேலைக்குக் கிள‌ம்பிக்கொண்டிருந்தேன். 

Monday, January 19, 2009

நீரைப்போலவே நீயிருக்கிறாய்..

முன்குறிப்பு 1: முந்தைய பதிவில் விட்டுப்போன மேலும் சில பூக்கள், இயற்கைக்காட்சிகள், விடியோக்கள் சென்னை வந்ததும் பதிவேற்றப்படும். தந்த வரவேற்புக்கு நன்றி..

முன்குறிப்பு 2: கீழ் வரும் கவிதைகள் எனது முதல் முத்தம் வலைப்பூவில் துவக்கத்தில் பதிவேற்றப்பட்டவை. முதல் முத்தம் இன்னும் செப்பனிடப்படாமல் இருக்கிறது. புதிய கவிதைகளை போடலாம் எனில் கவிதைக் குறிப்பேட்டை சென்னையிலேயே விட்டுவந்துவிட்டேன்..

*****

காற்றுக்கும் மழைக்கும்
பல்வேறு வடிவங்கள்
உனக்கிருப்பதைபோலவே !

*****

ஒளி உன்னை ஊடுருவுகிறது
மலர்கள் உன்மீது மிதக்கின்றன
தென்றல் உன்னுடன் சலசலக்கிறது
வேட்கை தணிவிக்கிறாய்
நான் நீடித்திருக்க உயிர்ப்பொருளாகிறாய்..
நீரைப் போலவே நீயிருக்கிறாய் !

*****

இத்தனை வருடக் காத்திருத்தலுக்குப்பின் வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.

*****

நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!

*****

நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!

.

Friday, January 16, 2009

இடைக்கால நிவாரணம்

  ஜூன் '08 பிளாக் துவங்கியதிலிருந்து இணையம் பக்கம் வராமல் நான்கு நாட்கள் இருந்திருக்கிறேன், முதல் முறையாக. மேலும் ஒரு வாரத்துக்கு இது தொடர இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வேலைப்பளுவானாலும் இரண்டு நாட்களுக்கு மேலாக வராதிருந்தது இல்லை. பதிவிடாவிட்டாலும் பின்னூட்டங்களாவது இட்டிருக்கிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள். கடை காத்தாடிவிடக்கூடாது என்பதற்காக இந்த மின்னல் பதிவு. நன்றி.


  வெளியூர் அல்லது பிக்னிக் சென்று திரும்புபவர்கள் பெரும்பாலும் ரோஜாக்கள், அல்லது மாடர்ன் பூக்களை படம்பிடித்து வருவார்கள். ஒரு சேஞ்சுக்காக எனது கிராமத்தில் தென்பட்ட சில பூக்களை உங்களுக்காக பிடித்துத் தருகிறேன். இதன் பெயர்களையும், சிறப்புக்குறிப்புகளையும் நேரமில்லாததால் பின்னர் தருகிறேன். பெயர்களை நீங்களும் கணிக்கலாம், கூறலாம். மீண்டும் விடுமுறைகால வாழ்த்துகள், தற்காலிகமாக பை..பை.!


Monday, January 12, 2009

உங்கள் 'கலைங்ஙர்' தொலைக்காட்சியில்..

முதலில் ஒரு ஜோக் :

பல ஆண்டுகளுக்கு முன்னர் விகடனில் வந்த திரு. கோபுலுவின் ஜோக். இதற்காக கோபுலு வரைந்த படம் இன்னும் அழகு.

மனைவி : ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சர்க்கார் சட்டம் போட்டிருக்காங்களாமே.. இதுக்காக பெண்குலமே சர்க்காருக்கு கடமைப்பட்டிருக்கு..
கணவன் : அதே சர்க்கார் ஒரு பெண்ணையும் கூட திருமணம் செய்துகொள்ளக்கூடாது என சட்டம் போட்டிருந்தார்களானால் ஆண்குலமே சர்க்காருக்கு கடமைப்பட்டிருக்கும்.

இரண்டாவதாக ஒரு அறிவிப்பு :

தாமிரா அவர்கள் மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு நீண்ட விடுப்பு கிடைத்த மகிழ்ச்சியில் ஊரிலிருக்கும் சொந்தபந்தங்களை பார்த்துவிட்டு பொங்க‌ல் ம‌ற்றும் குடும்ப‌விழாக்க‌ளை கொண்டாடி ம‌கிழ்ந்துவிட்டு அங்கே டேரா போட்டிருக்கும் மனைவி, புள்ளைகுட்டிகளை அழைத்துக்கொண்டு வர திருநெல்வேலி செல்கிறார். அவர் மீண்டும் சென்னை வ‌ர‌ இர‌ண்டு வார‌ங்க‌ளாகி விடும். அத‌ற்குள் அவ‌ரை நீங்க‌ள் ம‌ற‌ந்துவிடாது இருக்கும்ப‌டி கேட்டுக்கொள்கிறார். மேலும் அவ‌ர் உங்க‌ளுக்கு த‌ன் மனங்கனிந்த இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு ம‌ற்றும் பொங்க‌ல் வாழ்த்துக‌ளை தெரிவித்துக்கொள்கிறார்.

அடுத்து ஒரு பொங்க‌ல் ப‌ரிசு :

நம்மையும் ரவுடியாக ஒப்புக்கொண்ட‌ அன்புத்தோழி 'அன்புட‌ன் அருணா' அவ‌ருக்குக்கிடைத்த‌ ப‌ட்டாம்பூச்சி விருதை நான் உட்ப‌ட‌ ப‌ல‌ருட‌ன் ப‌கிர்ந்துகொண்டுள்ளார். விதிமுறைக‌ள் மிக‌ எளிமையான‌வை. நாம் ர‌சிக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு ப‌கிர‌வேண்டும். விருதை வ‌லைப்பூவில் இட‌வேண்டும். கொடுத்த‌வ‌ர், கொடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர் அனைவ‌ருக்கும் இணைப்புக‌ள் த‌ர‌வேண்டும். பின்னூட்ட‌ அறிவிப்புகள் செய்ய‌ வேண்டும். ந‌ல்ல‌ காரிய‌ம்தானே.. செய்திட‌லாம். (ஆமா.. இந்த‌ ப‌ட்டாம்பூச்சியை உருவாக்கி உலாவ‌ விட்ட‌வ‌ர் யாருங்க‌.?). இதுவ‌ரை பெண்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கு பிடித்த‌ (நான் கார்க்கியை சொல்ல‌வில்லை) ப‌திவ‌ர்க‌ளையே சுற்றி வ‌ந்த‌ ப‌ட்டாம் பூச்சியை கொஞ்ச‌ம் க‌ர‌டுமுர‌டான‌ ஆண்க‌ள் ப‌க்க‌மும் திருப்ப‌லாம் என‌ எண்ணி கீழே த‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு விருதை அறிவிக்கிறேன். அவ‌ர்க‌ள் த‌யைகூர்ந்து ஏற்றுச்சிறப்பிக்கும்ப‌டி கேட்டுக்கொள்கிறேன். ந‌ன்றி.

1. ந‌ர்சிம்
2. அப்துல்லா
3. ப‌ரிசல்
4. வேலன்
5. ஒற்றைஅன்றில்
6. ச‌ர‌வ‌ண‌குமார்
7. ம‌கேஷ்

இறுதியாக 'க‌லைங்ங‌ர்' தொலைக்காட்சி.. :

எழுதும் போதும், அச்சிடும்/உள்ளிடும் போதும் ஏராள‌மான எழுத்துப்பிழைக‌ளைச் செய்கிறோம். குறிப்பாக‌ வ‌லையுல‌கில் எழுத்துப்பிழைக‌ள் மிக‌ ம‌லிந்துகிட‌க்கின்ற‌ன‌. பொறுமையோடு பிழைதிருத்தி வெளியிட‌ நேர‌மில்லாம‌ல் போகிற‌து ந‌ம‌க்கு. என‌து ப‌திவுக‌ளில் பிழைக‌ள் வ‌ராது பார்த்துக்கொள்ள‌ மிக‌ முய‌ல்கிறேன். இருப்பினும் சந்திப்பிழைக‌ள் ஆங்காங்கே தென்ப‌டுன்ற‌ன‌. க‌வ‌ன‌க்குறைவு பெரிய‌ த‌வ‌று, அறியாமை பெரிய‌ வெட்க‌க்கேடு. தாங்க‌ள் அனைவ‌ருமே இந்த‌த் த‌மிழ்ப்புத்தாண்டிலிருந்து இவ்விஷ‌ய‌த்தில் மிகக் க‌வ‌ன‌மோடு இருக்க‌ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துகிறேன்.

எப்ப‌டி 'ழ‌க‌ர‌ம்' த‌மிழின் சிற‌ப்போ அதைப்போல‌வே 'ஞ‌க‌ர‌மும்' மிக‌ச்சிற‌ப்பே. எழுதுவ‌தில் 'ஞ' கொஞ்ச‌ம் த‌ப்பித்துவிட்டாலும் ப‌ல‌ விஐபிக்க‌ளின் வாயில் சிக்கிக்கொண்டு 'க‌லைஞ‌ர்' என்ற‌ சொல் ப‌டும்பாடு சொல்லிமாளாது. மேடையில் ஒருவ‌ர் 'க‌லைஞ்ச‌ர்' என்பார். பக்கத்திலிருப்ப‌வ‌ர் ச‌ரியாக‌ சொல்வ‌தாக‌ நினைத்துக்கொண்டு 'க‌லைஞ்ஞ‌ர்' என்பார். அடுத்த‌வ‌ர் ரொம்ப‌ புத்திசாலியாகி 'க‌லைந‌ர்' என்பார். அவ‌ருக்க‌டுத்த‌வ‌ர் நீங்க‌ள் சொல்வ‌தெல்லாம் த‌வ‌று நான் சொல்கிறேன் பாருங்க‌ள் என்று 'க‌லைங‌ர்' என்பார். சில‌ர் இன்னும் அழுத்த‌மாக‌ 'க‌லைங்க‌ர்', இதில் 'க‌' ஒலி வ‌ருகிற‌தே என்று சிந்திக்கும் ம‌ற்ற‌வ‌ர் ச‌ரியாக‌ பிழை திருத்தி 'க‌லைங்ங‌ர்' என்றிடுவார். இவர்கள் அனைவருமே பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற துறைகள் சார்ந்த விஐபிக்கள். அப்ப‌ப்பா.. இதே நிலைதான் தொலைக்காட்சியிலும். த‌மிழ‌க‌மே கேட்கும் ப‌டி உர‌த்த‌ குர‌லில் அறிவிக்கிறார் ஒரு அறிவிப்பாளர். "...... ஊங்க‌ள் க‌லைங்ங்ங்ங‌ர் தொலைக்காட்ச்சியில்.. வ‌ரும் ஞாயிர‌ன்று....."

.

Friday, January 9, 2009

ஒனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு..

அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, பதிலாக‌ பரிதாபமாக அவரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வேறு யாரும் இந்த வார்த்தையை என்னை நோக்கி சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும், என் ஈகோ எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.

அவர் ஐம்பது வயதை தாண்டியவராக இருந்தார். மேலும் நான் சின்னப்பையனாக (அதாவது இளமையாக) அவருக்குத்தோன்றியிருக்கலாம். ஆகவே முதன்முறையாக அவர் முன்னால் உட்கார்ந்திருந்தபோதும், 'உங்களுக்கு' என்பதற்குப் பதிலாக 'உனக்கு' என்று கூறியபோதும் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. கண்ணாடியை கழற்றியவாறே "வேறெந்த பிரச்சினையுமில்லை, இதுக்கு மருந்தெல்லாம் தேவையில்லை, ஒழுங்கா காலையிலேயே எந்திருச்சு சுறுசுறுப்பா வாக்கிங், ஜாக்கிங் போகப்பாரு.. அப்பிடியே டயட்டையும் பாத்துக்கோ" என்று மிரட்டலாக சொன்னார். விட்டால் நாளைக்கு காலையிலே ஜாகிங் போனாயா? என்று போன் பண்ணிக்கேட்பேன் என்று சொல்வார் போல இருந்தது. வேகமாகத் தலையாட்டினேன்.

அலுவலகத்திலிருந்து முப்பது வயதைத் தாண்டியவர்களையெல்லாம் வருடாந்திர‌ 'மெடிக்கல் செக்கப்'புக்காக தார்க்குச்சி வைத்து குத்தி த‌ள்ளிக்கொண்டிருந்த‌ன‌ர். அந்த‌ பிரப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னையில் சென்ற‌ வார‌ம் செக்க‌ப்புக்கு சென்றிருந்தேன். எக்ஸ்ரே, ஸ்கான், ஈசிஜி மற்றும்பல சோதனைகளும் எழுதக்கூச்சமாக இருக்கும் சில சோதனைகளையும் செய்துவிட்டு அனுப்பிவிட்டனர், அரைநாள் ஆகிவிட்டது. இன்று சோதனை முடிவுகள் குறித்து மருத்துவருடன் க‌ன்ச‌ல்ட் செய்துகொண்டிருக்கிறேன். முப்ப‌து வ‌ய‌தைத்தாண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை இந்த‌ செக்க‌ப்பை செய்துகொள்வ‌து ந‌ல்ல‌து என‌ நினைக்கிறேன். ஆர‌ம்ப‌ நிலை நோய் அறிகுறிக‌ளை தெரிந்துகொண்டு, முன்னெச்செரிக்கையாக‌ இருந்துகொள்ள‌லாம். நோய்க‌ள் இல்லையென‌ உறுதி செய்து கொண்டால் த‌ன்ன‌ம்பிக்கை சிற‌க்கும். மேலும் நோய்க‌ள் முற்றி பாதிக்கப்பட்ட‌‌பின்ன‌ர் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் இன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் ம‌ருத்துவ‌ச்செல‌வுக‌ள் எவ்வ‌ள‌வு ப‌ய‌முறுத்துவ‌தாய் இருக்கின்ற‌ன‌ என்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள். இந்த‌ செக்கப்பை நமது ப‌ட்ஜெட்டுக்குள் அட‌ங்குவ‌து போல‌வே சில‌ பிர‌ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. அல்ல‌து வேறு காப்பீட்டுத்திட்ட‌ங்க‌ளில் வ‌ழியுள்ள‌தா என்ப‌தை அறிந்தோர் சொல்ல‌லாம். ப‌டிப்போருக்கு ப‌ய‌னுள்ள‌தாய் இருக்கும்.

ம‌ருத்துவ‌ருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு எழுந்த‌போது அவ‌ரைப்பார்த்து ச‌ந்தேக‌த்துட‌ன் கேட்டேன், "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". அவ‌ர் விருட்டென்று ப‌க்க‌த்திலிருந்த‌ ர‌த்த‌ம் உறிஞ்ச‌ ப‌ய‌ன்ப‌டும் கோணிஊசிய‌ள‌வு இருந்த‌ சிரிஞ்ச்சை கோப‌த்தோடு எடுத்தார். நான் வெளியே பாய்ந்தேன்.!

.

Thursday, January 8, 2009

கவிதை ஜாலம்

கவிதை எனக்கு மிகவும் பிடித்த எழுத்து வடிவம் என்று உறுதிபட கூறிவிட முடியாத அளவில் பிற வடிவங்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஆனால் கவிதைகளின் வீச்சு பிரமிக்கவைக்கும் அளவில் பேராற்றல் கொண்டதாய் இருக்கிறது. சமயங்களில் சில நல்ல கவிதைகளை வாசித்துவிட நேர்கையில், துக்கமோ மகிழ்ச்சியோ காதலோ எழுகின்ற உணர்ச்சிகளிலிருந்து அவ்வளவு எளிதில் நம்மால் மீண்டுவிடமுடிவதில்லை.
ஐந்நூறு பக்கங்களில் நாவலாக நீள வேண்டிய விஷயங்களை ஐந்து வரிகளில் அடக்கி அற்புதம் நிகழ்த்துகின்றனர் கவிஞர்கள். பேசிப்பேசித் தீராத விஷயங்களை அவ்வளவுதான், தீர்ந்துபோச்சுது என்று கூறி கெக்கலிக்கிறார்கள். மொழி வசமாகிக்கிடக்கிறது அவர்களிடத்தில். மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்து அல்லது சண்டையிட்டு நமது உணர்வுகளை நண்பனுக்கோ, மனைவிக்கோ கடத்துகிறோம், அப்படியும் அதை முழுமையாகச் செய்தோமா என்ற சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது. நினைப்பதை எப்படிச் சொல்வது எனத் தெரிவதில்லை, வார்த்தைகளுக்காக அல்லாடவேண்டியதாகிறது. என்ன செய்வது.? ஒரு அருமையான காதல் நிகழும்போதான மகிழ்ச்சியையும் சிரித்துதான் வெளிப்படுத்துகிறேன். ஒரு மொக்கை ஜோக்கிற்கான எதிர்வினையையும் சிரித்துதான் வெளிப்படுத்துகிறேன்.

இதோ தோழன் சரவணக்குமாரின் இந்தக்கவிதையை வாசியுங்கள்.. அன்பில்லாது வாழச்சொல்லிதான் இந்தச்சூழல் என்னைப்படுத்துகிறது, ஆனால் அன்பில்லாது என்னால் இருக்கமுடியுமா என்பதுதான் கேள்வியே..

அன்பை தொலைத்தலும், ஒரு நிகழ்வும்...

ஒரு வெறுப்பான தினத்தின் முடிவில்
என்னிடமிருந்த
எல்லையற்ற அன்பை
மலையுச்சியிலிருந்து தூக்கி எறிந்தேன்...

பொத்தென்று
விழுந்து சாகாமல்
பள்ளத்தாக்குகளில் மெல்ல மெல்ல
எதிரொலித்து வீழ்ந்ததை
கொடூர புன்சிரிப்போடு ரசித்துவிட்டு

வீடு
திரும்பிய போதுதான்
திறந்து கிடந்த கதவின் பின்மறைவில்
அப்பெரும் உருவை கண்டேன்..

பயத்தில் செய்வதறியாது
எங்கெங்கோ அலைந்து திரிந்து
குற்றுயிராய் எதிர்பட்ட
என் எல்லையற்ற அன்போடு
வீடு திரும்பிய போது
அப்பெரும் உருவத்தை காணவில்லை...


பெரிய எதிர்காலம் சரவணகுமாருக்காக காத்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது, இப்போதே வாழ்த்துச் சொல்லிக்கொள்கிறேன்.
சரவணக்குமாரின் மேலும் ஒரு அற்புதம் இங்கே..! அப்படியே என்னையும் நான் ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறேன். "இவ்வளவுக்குப் பிறகும் நீ தொடர்ந்து கண்டிப்பாக கவிதை எழுதித்தான் ஆகணுமா?"

Wednesday, January 7, 2009

மூணு கல்லு கிரைண்டர்

காலையில் லேட்டாக எழுந்து அவசர அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்த போது ரமாவிடமிருந்து போன். மணி 8.30.

'ஏதும் முக்கியமான விஷயமா? ஆபிஸ் போய்ட்டு கூப்பிடட்டுமாம்மா?'
'என்னோட பேசற‌துக்குன்னா உங்களுக்கு நேரமிருக்காதே?'
'காலைலே எட்டரைக்கு கூப்பிட்டுட்டு, என்ன விளாடுறியா?'
'எத்தனை நாள் 9.30, 10 மணிக்கு போயிருக்கீங்க.. இன்னிக்கு மட்டும் என்ன ஒழுங்கா ஆபிஸ்க்கு போற மாதிரி அவசரப்படுறீங்க?'
'அது வேற, இது வேறம்மா, எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது.. இன்னிக்கு முக்கியமான ஒரு வேல இருக்குது, போயாவணும்'
'அப்பிடி என்ன முக்கியமான வேல, போன வாரம் பூரா இதத்தான சொன்னீங்க..'
'சொன்னா புரியுமாடி உனக்கு?, இந்த வாக்குவாதம் பண்ணி டைம் வேஸ்ட் பண்றதுக்கு.. என்ன விஷயம்னே சொல்லிடலாம், சொல்லு என்ன?'
'ஆபிஸ்க்கு போய்ட்டே கூப்டுத்தொலைங்க'

‌மணி 10.10. மானேஜர் அறையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். சரியாகச்சொன்னால், அதாவது அவர் பேச நான் மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறேன். போன் வருகிறது. கட் பண்ணுகிறேன். ஐந்து நிமிடத்தில் அடுத்தும் போன் அழைக்கிறது. கட் பண்ணுகிறேன். ஒரே நிமிடத்தில் அடுத்தும் அழைக்கிற‌து. மூஞ்சி க‌டுப்பாக‌ இருந்தாலும் ஏதோ பெரிய‌ வ‌ள்ள‌ல் மாதிரி, 'முத‌ல்ல‌ போன‌ அட்ட‌ண்ட் ப‌ண்ணுங்க‌, அப்புற‌ம் பேசுவோம்' என்கிறார் மானேஜ‌ர்.

'ஏன்டீ படுத்துற? கட் பண்ணினா பிஸியா இருக்கேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். கொஞ்சம் நேரம் வெயிட் பண்ண மாட்டியா?'
'...'
'என்ன‌ம்மா விஷ‌ய‌ம்? சொல்லித்தொலையேன்'
'நீங்க‌ எப்ப‌தான் .:பிரீயாவுறீங்க‌ன்னு நானும் பாக்குறேன்' தொட‌ர்பு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌து. சை.!

12.30. சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மிக அருகே சக ஊழியர்கள். போன் வந்தது. 'சாப்பிட்டுட்டு இருக்கேன், பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடவா?'

01.10 நானே அழைத்தேன்.

'வேல நிறைய கெடக்குது. சொல்லும்மா, என்ன‌ விஷ‌ய‌ம்?'
'...'
'என்ன‌ கோவ‌மா?'
'வீட்டுக்கு கெஸ்ட் வ‌ந்திருக்காங்க‌, அப்புற‌மா பேசுறேன்'
'யாரு? சிஎம்மா வ‌ந்திருக்காங்க‌, வெளிய‌ வ‌ந்து பேசேன்டி, ஏம்மா இம்ச‌ ப‌ண்ற?'
'வீட்டுக்கு ஆள் வ‌ந்திருக்கும் போது எப்பிடி வெளிய‌ போக‌முடியும்? உங்க‌ளுக்கு ம‌ட்டும்தான் வேல‌யிருக்குமா?'
'நீதானே காலையில கூப்பிட்ட, என்ன‌ விஷ‌யம்னு சொல்லிட்டு போயேன்..' போன் க‌ட்டான‌து.

03.30 எக்செல்லில் 'வி லுக்க‌ப்'பில் ம‌ண்டை காய்ந்து கொண்டிருந்தேன். போன் வ‌ந்த‌து.

'ம்.. சொல்லும்மா'
'.:பிரியா இருக்கீங்க‌ளா?'
'இருக்கேன்.. சொல்லு'
'கோவ‌ப்ப‌ட‌க்கூடாது'
'அப்பிடி என்ன‌ விஷ‌ய‌ம்? சொல்லு'
'நா எங்க‌ சித்திகூட‌ ஜ‌ங்ஷ‌ன் போறேன். அப்பிடியே 'டேபிள்டாப் கிரைண்ட‌ர்' ஒண்ணு வாங்கிக்க‌ட்டுமா?'
'இதக்கேக்கதான் காலைலேருந்து இம்ச பண்ணிகிட்டிருக்கியா? ஏதோ எல்லாத்தியும் சொல்லிட்டுதான் வாங்குறமாதிரி. சரி, தாராள‌மா வாங்கிக்கோ.. ஆனா இங்க‌ வ‌ந்து வாங்கிக்க‌லாம்மா, இல்லின்னா தூக்கிட்டு வ‌ர‌ணும்லா, டிரெஸ் துணிம‌ணின்னா ப‌ர‌வால்ல‌..'
'நீங்களா சொமந்துகிட்டு வரப்போறீங்க, டிரெயின்லதான வரப்போகுது. நா அப்பிடித்தான் வாங்குவேன்!'Tuesday, January 6, 2009

சில பழைய படங்கள் பார்த்தேன் (ஏக் துஜே கேலியே உட்பட)

நாலு படங்கள், ஒவ்வொன்றைப் பற்றியும் நாலு வரிகள்.. சரிதானா, போகலாமா?

முதலில் திருப்பாச்சி

சமீபத்தில் ஒருநாள் ‘போகோ’ சானல் பக்கமிருந்து விளம்பர இடைவேளையில் சன் டிவி பக்கம் வந்தபோது திருப்பாச்சி ஓடிக்கொண்டிருந்தது. நல்ல வேளையாக துவக்கப்பாடல் முடிந்து ஏதோ காமெடி சீன் போய்க்கொண்டிருந்தது. ஏதோ கவர அப்படியே தொடர்ந்தேன். நகைச்சுவை, வசனங்கள், சென்டிமெண்ட் காட்சிகள் என போரடிக்காமல் தொடர்ந்தது. அதுவும் குறிப்பாக தங்கச்சி சென்டிமெண்ட் நமக்கும் உண்டென்பதால் பிடித்திருந்தது. ஒரு காட்சியில் ஒரு பாட்டி, தங்கையின் வளைகாப்புக்குகூட கலந்துகொள்ளமுடியாத சூழலில் வெளியூர் கிளம்பிக்கொண்டிருக்கும் விஜயை நோக்கி நிகழ்ச்சிக்கு இருக்கவேண்டுமென சொல்ல அவரோ அப்பா அம்மா எல்லோரும்தான் இருக்காங்களே என்பார். அதற்கு அந்தப்பாட்டி தளுதளுத்தவாறே “இருந்தாலும் இந்தச்சிறுக்கிக்கு தாயி, தாப்பன் எல்லாமே நீதானேய்யா..” என்பார். இங்கே கொஞ்சம் புல்லரித்தேன். இடைவேளை வரை நல்லா போய்க்கொண்டிருந்த படத்தில் பின்னர் டுபாக்கூர் ஆரம்பித்தது. ‘பட்டாசு’பாலு, ‘முட்டை’முருகன் என ஒரு டஜன் வில்லன்கள் தொடர்ச்சியாக வர அனைவரையும் வதம் செய்து சென்னையையே அவர் காப்பாற்றி படம் முடிகிறது. சுபம்.

அடுத்து வாரணம்ஆயிரம்

கண்களில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு, தாலாட்டும் இசை என பார்க்க ஆவலோடு இருந்த படம். இப்போதுதான் பார்க்க முடிந்தது. எதிர்பார்த்தது போலவே பாடல்களும் ஒளிப்பதிவும் அற்புதமாகத்தான் இருந்தன. ஆனால் படம் முடிந்தபின்னர்தான் இது ஒரு மொக்கைப்படமா? இல்லையா? என என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சூர்யாவின் திறனும், உழைப்பும் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக அவரை எண்ண வைக்கிறது. திருப்பங்களில்லாத அப்பா பையன் பாசக்கதைதான், ஆனால் ‘இயல்பான’ என்று சொல்லமுடியவில்லை. இதில் ஏன் ஒரே பாடலில் தொழில் செய்து சூர்யா பணக்காரராகிறார்? அப்பா சூர்யா ஏற்கனவே பணக்காரர் என்று காண்பித்தால் நீங்களோ நானோ சண்டைக்கு போகப்போறோமா? இவ்வளவுக்கும் பின்னர் தொழிலை அம்போவென விட்டுவிட்டு மிலிட்டிரிக்குப்போய் கமாண்டோவாகி விடுகிறார். மறுக்கும் அம்மாவிடம் இதுதான் எனது ஆம்பிஷன் என்று வேறு கூறுகிறார். இடையே காதல் தோல்வியில் டிரக் அடிமையாகி அப்பாவையே அடிக்கவேறு போகிறார். பின்னர் டில்லியில் குழந்தை காப்பாற்றல், வாள்சண்டை. கமாண்டோவான பின்னர் டுப் டுப்புவென்று துப்பாக்கி சண்டை வேறு. தீவிரவாதிகள் ஒவ்வொருவராக வீடியோ கேமில் வருவது போல திருப்பங்களில் வருகிறார்கள். இவர் சுடுகிறார், அட போங்கப்பா. எல்லா படங்களிலுமே துப்பாக்கி கொண்டு எதிரிகளை பொசுக்கித்தள்ளிவிடுவது என்ற குறிக்கோளுடன் கவுதம் இருப்பதாக தெரிகிறது. நம் நினைவில் நிற்பது அழகான காதல் காட்சிகள்தான்.

அடுத்து ஏகன்

அஜித்தை எழவிடாமல் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக திட்டமிட்டு இயக்குனர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு அடுத்த உதாரணம். எதிர்கட்சிகளின் சதி ஏதும் உள்ளதா என அஜித் தெளிவு பண்ணிக்கொள்வது நல்லது. இந்தப்படத்தில் ஒரு ஹீரோயின் (நயன்தாரா). அவர் ஒரு புரொபசர், ஆனால் கொஞ்சம் லூசு. அவரது கல்லூரியில் ஒரு முதல்வர் (ஜெயராம்), அவரும் லூசு. அவருக்கு ஒரு பியூன் (சத்யன்), அவரும் லூசு. ஹீரோவின் அப்பா ஒரு கமிஷனர் (நாசர்), அவரும் ஒரு லூசு. அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் (ஹனீபா), அவரும் ஒரு மகா லூசு. வெள்ளை டோப்பாவும், பளிச்சென்ற ஒட்டுத்தாடியும் வைத்த ஒரு வில்லன் (சுமன்), அவரும் லூசு. அவருக்கு ஒரு வலதுகை (ஸ்ரீமன்), அவரும் ஒரு மகா லூசு. படம் பார்த்து முடிக்கும் போது நாம் என்னவாகிறோம் என்பது இந்நேரம் உங்களுக்கே விளங்கியிருக்கும். இந்த லட்சணத்தில் ‘மாற்றாந்தாய்’ மனோபாவ வில்லி கேரக்டரில் நாம் மதிக்கும் சுஹாசினி வேறு. அவரை எப்படி அப்படியொரு கேரக்டரில் பொருத்திப்பார்க்க இயலும்.. சுத்தம்.

கடைசியாக ‘ஏக் துஜே கேலியே’

என்னடா இது இப்பிடி ஜம்ப் ஆவுறேங்கறீங்களா? ரொம்ப நாள் ஆசைங்க.. ஹிந்தி சுட்டுப்போட்டாலும் வராது நமக்கு, ஆனாலும் நம்ப கமல்ஜி நடித்தது. ஓகோன்னு ஓடிய படம். தெற்கின் புகழை வடக்கில் பரப்பிய படமல்லவா? எப்படித்தான் இருக்குதுன்னு பாக்கணும்னு ஆசை. இப்போதான் முடிஞ்சது. சமீபத்தில் ஒரு பதிவர் வீட்டுக்கு சென்றிருந்த போது ‘லவுட்டி’க்கொண்டு வந்த டிவிடி. அப்படியே தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்ததுங்க. இதில் வந்த பல காட்சிகளை ஏற்கனவே பல தமிழ் படங்களில் (இதற்கு முன்னரோ, பின்னரோ) பார்த்தாச்சு. வழக்கமான பாலசந்தர் படம். கமல்ஹாசன்தான் இளமை துள்ளலாக அள்ளிக்கொண்டு போகிறார். பைக் சாகசக்காரன் போல பைக்கில் கையை விட்டு ஓட்டுகிறார், நின்று கொண்டு ஓட்டுகிறார், படுத்துக்கொண்டு ஓட்டுகிறார். வித்தையெல்லாம் காண்பிக்கிறார். காதலுக்கு வீட்டின் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும் சுப சந்தர்ப்பத்தில் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருந்த வில்லன்கள் சரியாக உள்ளே புகுந்து ரதியை பலாத்காரம் செய்துவிட, கமல்ஹாசனையும் தாக்கிவிட இருவரும் கட்டிப்பிடித்தவாறே மலையிலிருந்து கடலில் விழுந்து பரிதாபமாக இறந்துபோகின்றனர். சுப முடிவாக இருந்தாலும் இந்தப்படம் நன்றாகத்தான் இருந்திருக்கும் என நான் நினைத்தேன். ஒருவேளை அன்றைய காலகட்டங்களில் எல்லா படங்களிலும் சுப முடிவு பார்த்து பார்த்து சலித்த ரசிகர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம். படத்தில் தவிர்க்க முடியாத விஷயம் பாடல்களும், லதா மங்கேஷ்கரும். அர்த்தம் விளங்காவிடினும் லதாவின் குரலில் “தேரே மேரே பீச்சு மே.. கேய்ஸா ஹெயே பந்தன்.. அன்ஞா..னா...” பாடலை கேட்கும் போது அற்புதமான அலையலையான உணர்வுகளால் உள்ளம் நிரம்புகிறது. இசைதான் எவ்வளவு அற்புதமானது.. அதிலும் லதா மங்கேஷ்கர் போன்ற ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் குரலும் சேரும் போது.. ரசவாதம்தான்.!

Monday, January 5, 2009

தமிழ்மணத்திற்கு ஒரு (ஜாலி)கண்டனம்!

தமிழ்மணம் விருதுகள் 2008 அறிவித்தவுடன் ஒரே குதூகலமாகி விட்டேன். பின்னே? எப்படியும் இந்த பதினைந்து நிமிட புகழை மேலும் ஒரு ஐந்து நிமிடம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பல்லவா? அதெப்படி விடமுடியும்? எப்படியும் இப்போதே பத்திரிகை வரை போய்விட்ட பதிவர்கள் இதில் போட்டியிட வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான் (லக்கி, பரிசல், நர்சிம் கவனிக்கவும்). மேலும் மூத்த பதிவர்களும் குட்டி பதிவர்களிடம் தோற்பது என்ற பயம் காரணமாக போட்டியை நிராகரிக்க வாய்ப்புள்ளது. பிறகு நமது பிரதான சப்ஜெக்ட்டில் போட்டி வேறு குறைவு என்பதால் எப்படியும் குழம்பிய குட்டையில் குறைந்தபட்சம் மூன்று பரிசுகளையாவது வென்றிடலாம் என திட்டமிட்டு வைத்திருந்தேன். பரிந்துரைக்கான அறிவிப்பு வெளியான உடனேயே இணைப்புக்கான மடலுக்காக காத்திருந்தேன்.

என‌க்கும் இதுபோன்ற‌ டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ளுக்கும் கொஞ்ச‌ம் ல‌டாய் இருப்ப‌தால் மெயில் வ‌ருமா என்று ச‌ந்தேக‌மாக‌ இருந்த‌து. ஏனெனில் நெட்டில் ர‌யில் டிக்கெட் புக் செய்யும் போது, கிரெடிட் கார்ட் எண் கொடுத்து எல்லாம் ச‌ரிபார்க்க‌ப்ப‌ட்டு டிக்கெட் வ‌ரும் நேர‌மாக‌ பார்த்து, ஒன்று "Internet Explorer can't find the webpage" என்று ஸ்கிரீனில் வ‌ரும். அல்ல‌து திகில் ப‌ட‌ம் பார்ப்ப‌து போல‌ விநாடிக‌ள் நிமிட‌ங்க‌ளாகி ம‌ணிக்கண‌க்காகிவிடுமோ என்று ப‌ய‌ந்துகொண்டே ஸ்கிரீனில் மணல் கடியாரத்தை பார்த்துக்கொண்டிருக்க‌ நேரிடும். நமது அதிர்ஷ்டத்தைப்பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே..

தமிழ்மணத்தை பொறுத்தவரை என்று எடுத்துக்கொண்டாலும் கூட ப‌ல‌ வார‌ங்க‌ள் முய‌ன்றும் த‌மிழ்ம‌ண‌த்தில் என் வ‌லைப்பூவை வ‌ர‌வைக்க‌முடியாம‌ல் அவ‌ஸ்தைப்ப‌ட்டுக்கொண்டிருந்தேன். பிற‌கு ஒருநாள் திடீரென தேவதை நான்கு கோடாரிகளுடன் தோன்றியது போல தமிழ்மணம் ஏழு டூல்பார்களுடன் என் ப‌திவில் தோன்றியது. அதைப்போக்க‌ ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளை தேட‌ வேண்டிவ‌ந்த‌து. ஆனால் நான் பயந்தது போல அப்ப‌டியெல்லாம் சோதிக்காம‌ல் ப‌ரிந்துரை மெயில் உட‌னேயே வ‌ந்துவிட்ட‌து.

அப்புற‌ம்தான் தெரிந்த‌து அந்த‌ அதிர்ச்சித்த‌க‌வ‌ல். நான் மிக‌வும் எதிர்நோக்கிய‌ "மொக்கைக‌ள், பொலம்பல்கள், ப‌திவெதிர் ப‌திவுக‌ள்" என்ற‌ பிரிவு இல்லாத‌தைக்க‌ண்டு அதிர்ச்சியுற்றேன். இர‌ண்டாவதும், தலையாயதுமான‌ "இல்ல‌ற‌ அனுப‌வ‌ங்க‌ள், த‌ங்க‌ம‌ணிக‌ள்/ர‌மாக்க‌ள் நினைவோடைக‌ள்" என்ற‌ த‌லைப்புமில்லாத‌து க‌ண்டு வேத‌னையுற்றேன். அய்யகோ.. இது என்ன சோதனை? நான் எந்த‌ பிரிவில் என‌து ப‌டைப்புக‌ளை போட்டிக்கு அனுப்புவேன்? பெரிய‌ண்ண‌ன் பினாத்த‌ல் சுரேஷ், அண்ண‌ன் ச்சின்ன‌ப்பைய‌ன், பெரிய‌க்கா புதுகைத்தென்ற‌ல் ஆகியோர் அனைவ‌ரும் எந்த‌ப்பிரிவுக‌ளில் போட்டியிடுவார்க‌ள்? அவர்களும் என்னைப்போல எந்த அளவு வேதனைக்குள்ளாயிருப்பார்கள் என புரிந்தது. சரி குறைந்த பட்சம் நமது சிறந்த படைப்புகளான‌ சிறுகதை* அல்லது காதலை பங்குபெறச்செய்யலாம் எனில் 01.11.08க்கு பிந்தைய படைப்புகள் ஏற்கப்படமாட்டாது என அறிவித்து தமிழ்மணம் சதிசெய்துவிட்டது. அதெப்படி இரண்டு மாதங்கள் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான படைப்புகளை போட்டியில் ஏற்றுக்கொள்ளாமல் போட்டித்தலைப்பை "விருதுகள் 2008" என்று வைக்கமுடியும்? சிந்திப்பார் இல்லையா?

நான் பரிசை வெல்லக்கூடாது என்ற எனக்கெதிரான தமிழ்மணத்தின் சதி உங்களுக்கெல்லாம் இந்நேரம் விளங்கியிருக்கும். முதலில் போட்டியை ப‌கிஷ்க‌ரித்துவிட‌லாம் என‌ எண்ணி தொட‌ர்ந்து வாச‌க‌ர்க‌ளையும், த‌மிழ்ம‌ண‌த்தையும் ப‌ழிவாங்க‌ முடிவு செய்து"அர‌சிய‌ல்/ச‌மூக‌ம்" ம‌ற்றும் "சுய‌தேட‌ல்/ப‌குத்த‌றிவு" போன்ற‌ ப‌குதிக‌ளிலேயே என‌து த‌ங்க‌ம‌ணி சிந்த‌னைக‌ளை வைத்துள்ளேன். அந்த‌ந்த‌ பிரிவுக‌ளிலேயே அதிக‌ வாக்க‌ளித்து நிறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவ‌ற்றை வெற்றி பெறச்செய்து என‌க்கெதிரான‌ ச‌தியை வேறோடு முறிய‌டிக்க‌ வேண்டுமாய் உங்க‌ளை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் நாட்களை மறவாதீர். ந‌ன்றி, வ‌ண‌க்க‌ம்.! அடுத்து அண்ண‌ன் வால்பையன் அவ‌ர்க‌ள் பிர‌ச்சார‌த்தை தொட‌ர்வார்க‌ள்.


*பின்குறிப்பு : முந்தைய‌ ப‌திவான‌ க‌ற்ப‌க‌ம் என்ற எனது இரண்டாவது சிறுக‌தை என‌து ப‌திவுக‌ளிலேயே மிக‌ அதிக‌ வ‌ர‌வேற்பைப் பெற்ற‌ ஒன்றாகும். இதுவ‌ரை ஞாயிற்றுக்கிழ‌மை ஒரு மொக்கைப்ப‌திவு போட்டால் கூட‌ குறைந்த‌ப‌ட்ச‌ம் 300 ஹிட்ஸ் பெற்ற‌ நான் முத‌ல் முறையாக‌ வெள்ளிக்கிழ‌மை வெளியிட்டும் 80 ஹிட்ஸ் கூட‌ பெற‌முடியாம‌ல் சாத‌னை நிக‌ழ்த்தியுள்ளேன். இத‌ன் மூல‌ம் க‌தை எழுதுவ‌த‌ற்கு என்னை எந்தளவுக்கு‌ நீங்கள் ஊக்குவிக்கிறீர்க‌ள் என்ப‌தை அறிய‌முடிகிற‌து.


Friday, January 2, 2009

கற்பகம்

பிரகாஷ் தனது திருமணம் குறித்த செய்தியைச்சொல்ல போனில் அழைத்தபோது சென்னைக்கு கிளம்பும் பரபரப்பிலிருந்தேன். அவனது திருமண தேதியை கேட்டுக்கொண்டேன். நல்ல வேளையாக நான் சென்னையில் இருக்கும் நாட்களில் ஒன்றாகவே இருந்தது. மெனக்கெட வேண்டியிருக்காது. கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். நமக்குள் எத்தனையோ முக்கியத்துவமுள்ள அல்லது முக்கியத்துவமற்ற பல ரகசியங்கள் கிடக்கின்றன. அவை எந்தெந்த சூழலில் நிகழ்ந்தவையோ அந்தந்த சூழலில் நம்மை நெருங்கியிருந்த மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம். கால ஓட்டத்தில் பல முக்கியத்துவமிழந்து நினைவின் ஆழத்திற்கு சென்று விடுகின்றன.

முதல் முதலாக அவளைப்பார்த்த நாள் எல்லோரையும் போலவே எனக்கும் நன்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு பிங்க் நிற தாவணியில் செல்வியுடன் பேசிக்கொண்டே அலுவலகத்திற்குள் வந்தாள். அவளது கண்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றில் முதன்முதலாக வேலைக்கு வரும் பயமும் சிறிது பதற்றமும் இருந்தது. செல்வியின் சிபாரிசிலேயே அவள் வேலைக்கு எடுக்கப்பட்டிருந்தாள்.

அங்கே பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் அனைவரும் பெரும்பாலும் சுடிதாரிலும் மிகச்சிலர் சேலையிலும் இருந்தனர். அவள் மட்டும் தாவணியில் இருந்ததால் வித்தியாசமாக இருந்தது. அவளுக்கும் அது வித்தியாசமாக தோன்றி மேலும் பதற்றமாக இருந்திருக்கவேண்டும். என்னிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது அவள் என்னை நிமிர்ந்தும் பார்த்திடவில்லை. அலைபாயும் விழிகளுடன் உறுதியற்ற ஒரு குரலில் குட்மார்னிங் சொன்னாள். நான் சிரித்துக்கொண்டே செல்வியின் அருகிலேயேயிருந்து ஒரு வாரத்திற்கு வேலை கற்றுக்கொள்ளும்படி பணித்துவிட்டு எனது பணியில் மூழ்கினேன். நான் அந்த நிறுவனத்தில் உயரதிகாரியாக எல்லாம் இல்லை எனினும் அந்தக்குழுவை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்தேன்.

மறுநாளில் இருந்து அவளும் சுடிதாரில் வரத்தொடங்கியிருந்தாள். பிற பெண்கள் பத்தே நாட்களில் இடமும் ஆட்களும் பழக்கப்பட்டு கொஞ்சம் சகஜமான பேச்சுக்களும், லஞ்ச் நேர அரட்டைகளும் என சுதந்திரமான‌ உணர்வுக்கு திரும்பிவிடுவார்கள். அவள் இருக்குமிடமே தெரியவில்லை. வேலையை கவனமாக கற்றுக்கொண்டு கடமையே கண்ணாக இருப்பது தெரிந்தது. யாருடனும் பேசிப்பழகுவதாகவும்‌ தெரியவில்லை. குறிப்பாக ஆண்கள் பக்கம் திரும்புவதாகவும் தெரியவில்லை. ஆண்கள் பிரிவிலிருந்து தேவைப்படும் உதவிகளையும், கருவிகளையும் சில சீனியர் பெண்களைக்கொண்டே பெற்று வேலையை கவனித்துக்கொண்டிருந்தாள். பலரும் அப்படித்தான் பணிபுரிந்துகொண்டிருந்தார்கள்.

செல்வி இல்லாத சமயங்களில் வேலைக்கான திட்டத்தை தெரிந்துகொள்ள என்னிடம் வரும் பெண்கள் நாணிக்கோணி தாளை வாங்கிச்செல்வார்கள். பல சமயங்களில் அவற்றை செயற்கையாக உணர்ந்திருக்கிறேன். சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளும் போதும் அவ்வாறே நடக்கும். ஆனால் செல்வி அப்படியல்ல. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என அங்கிருக்கும் ஆண்களுடன் சகஜமாக பழகிக்கொண்டிருந்தாள். தெளிவான பேச்சும், கச்சிதமாக வேலையை முடிக்கும் திறனும் வாய்த்தவள். அவளோ செல்வியைத்தவிர வேறு யாருடனும் பழகுவது போல தெரியவில்லை. ஆனால் சிறிய முன்னேற்றமாக‌ அவள் இப்போது எல்லோருடனும் சிரித்த முகமாக இருப்பதைக் காணமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தேன். சராசரிக்கும் குறைவான உயரம். கறுப்பு என்று சொல்லலாமா? மாநிறம் என்று சொல்வதா? ஒரு மிகச்சிறிய மூக்குத்தி வேறு அணிந்திருந்தாள். கூந்தல் அடர்த்தியாகவும் மிக நீளமாகவும் இருந்தது. எப்போதும் ஒற்றை ஜடையே பின்னிக்கொண்டிருந்தாள். செல்வி எனது மேஜைக்கு வரும்போது சில சமயங்களில் அவளும் இவள் தோளை ஒட்டியவாறு வருவதுண்டு. கண்கள் பளபளப்பாக ஒரு ஆர்வத்தில் மிதந்துகொண்டிருக்கும். உங்கள் பிரெண்ட் பேசமாட்டாங்களா என்று நான் செல்வியை கிண்டலாக கேட்கும் போது செல்வி சிரிப்பாள், அவள் மெலிதாக வெட்குவாள். அந்த வெட்கத்தை உணர்ந்தேன்.


இதுவரை ஒரு வார்த்தையும் அவளுடன் பேசியிருக்கவில்லை. மெலிதாக எங்கள் கண்கள் பார்த்துக்கொண்டன. எனது அறையில். அவர்களது அறையில். இடைவேளைகளில். வாயில்களில். அவள் எங்கிருந்து வருகிறாள்? முகவரி என்ன? குடும்பம் எப்படிப்பட்டது? அவள் என்ன எண்ணுகிறாள்? பெயரைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் என் கண்களை கண்டவுடன் கவிழ்ந்துகொண்ட அவளது கண்கள் மெல்ல போட்டியிடத்துவங்கியிருந்தது. அந்த பார்வை விளையாட்டை நான் மிக ரசித்தேன். அந்தக்கண்களை பார்த்துக்கொண்டே இருந்துவிடமாட்டோமா என தோன்றிக்கொண்டேயிருக்கும். ஊடாக அவளது மெலிதான சிரிப்பு என்னை என்னவோ செய்தது.

ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது துவங்கிய விளையாட்டின் விநாடிகள் நிமிடமாகியிருந்தன‌. யார் முதலில் கண்களைத் தழைப்பது என்ற சொல்லப்படாத போட்டி துவங்கியிருந்தது. கண்களாலேயே விழுங்கிவிடுவதைப்போல தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் நீரோடு நான்தான் அன்று முதலில் கண்களை தழைப்பதாக ஆயிற்று. அடுத்து வந்த சில நாட்களில் இந்தப்பார்வை விளையாட்டை பிரகாஷ் கவனித்துவிட்டான். கலக்கிட்டீங்க பாஸ், எக்கச்சக்கமாய் போட்டி அவங்களுக்கு.. நீங்க புடிச்சிட்டீங்க போல என்று பகடி செய்தான். அப்படி இல்லப்பா, சும்மாதான் என்று சமாளித்தேன். பின்னர் அவள் குறித்து பேசும்போதெல்லாம் உங்க ஆளு, உங்க ஆளு.. என்று கிண்டல் செய்யலானான். மேலும் அவள் குறித்த மேல் தகவல்களை அவனிடம் கேட்டேன். அறிந்துவந்து சொல்வதாய் சொன்னான். பிரிதொரு நாள் செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தாவணி குறித்து ஏதோ பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.. ஞாபகமில்லை...

தொடர்ந்து வந்த ஒரு புத்தாண்டு தினத்தில், இளநீல நிற‌ தாவணியில் வந்திருந்தாள்.

பிரகாஷிடம் அவன் திருமணத்திற்கு கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். "நான் சொல்ல மறந்திட்டேனா? உங்க ஆளுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாச்சே.. இன்னும் இங்கதான் ஒர்க் பண்றாங்க‌.."