Friday, January 2, 2009

கற்பகம்

பிரகாஷ் தனது திருமணம் குறித்த செய்தியைச்சொல்ல போனில் அழைத்தபோது சென்னைக்கு கிளம்பும் பரபரப்பிலிருந்தேன். அவனது திருமண தேதியை கேட்டுக்கொண்டேன். நல்ல வேளையாக நான் சென்னையில் இருக்கும் நாட்களில் ஒன்றாகவே இருந்தது. மெனக்கெட வேண்டியிருக்காது. கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். நமக்குள் எத்தனையோ முக்கியத்துவமுள்ள அல்லது முக்கியத்துவமற்ற பல ரகசியங்கள் கிடக்கின்றன. அவை எந்தெந்த சூழலில் நிகழ்ந்தவையோ அந்தந்த சூழலில் நம்மை நெருங்கியிருந்த மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம். கால ஓட்டத்தில் பல முக்கியத்துவமிழந்து நினைவின் ஆழத்திற்கு சென்று விடுகின்றன.

முதல் முதலாக அவளைப்பார்த்த நாள் எல்லோரையும் போலவே எனக்கும் நன்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு பிங்க் நிற தாவணியில் செல்வியுடன் பேசிக்கொண்டே அலுவலகத்திற்குள் வந்தாள். அவளது கண்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றில் முதன்முதலாக வேலைக்கு வரும் பயமும் சிறிது பதற்றமும் இருந்தது. செல்வியின் சிபாரிசிலேயே அவள் வேலைக்கு எடுக்கப்பட்டிருந்தாள்.

அங்கே பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் அனைவரும் பெரும்பாலும் சுடிதாரிலும் மிகச்சிலர் சேலையிலும் இருந்தனர். அவள் மட்டும் தாவணியில் இருந்ததால் வித்தியாசமாக இருந்தது. அவளுக்கும் அது வித்தியாசமாக தோன்றி மேலும் பதற்றமாக இருந்திருக்கவேண்டும். என்னிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது அவள் என்னை நிமிர்ந்தும் பார்த்திடவில்லை. அலைபாயும் விழிகளுடன் உறுதியற்ற ஒரு குரலில் குட்மார்னிங் சொன்னாள். நான் சிரித்துக்கொண்டே செல்வியின் அருகிலேயேயிருந்து ஒரு வாரத்திற்கு வேலை கற்றுக்கொள்ளும்படி பணித்துவிட்டு எனது பணியில் மூழ்கினேன். நான் அந்த நிறுவனத்தில் உயரதிகாரியாக எல்லாம் இல்லை எனினும் அந்தக்குழுவை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்தேன்.

மறுநாளில் இருந்து அவளும் சுடிதாரில் வரத்தொடங்கியிருந்தாள். பிற பெண்கள் பத்தே நாட்களில் இடமும் ஆட்களும் பழக்கப்பட்டு கொஞ்சம் சகஜமான பேச்சுக்களும், லஞ்ச் நேர அரட்டைகளும் என சுதந்திரமான‌ உணர்வுக்கு திரும்பிவிடுவார்கள். அவள் இருக்குமிடமே தெரியவில்லை. வேலையை கவனமாக கற்றுக்கொண்டு கடமையே கண்ணாக இருப்பது தெரிந்தது. யாருடனும் பேசிப்பழகுவதாகவும்‌ தெரியவில்லை. குறிப்பாக ஆண்கள் பக்கம் திரும்புவதாகவும் தெரியவில்லை. ஆண்கள் பிரிவிலிருந்து தேவைப்படும் உதவிகளையும், கருவிகளையும் சில சீனியர் பெண்களைக்கொண்டே பெற்று வேலையை கவனித்துக்கொண்டிருந்தாள். பலரும் அப்படித்தான் பணிபுரிந்துகொண்டிருந்தார்கள்.

செல்வி இல்லாத சமயங்களில் வேலைக்கான திட்டத்தை தெரிந்துகொள்ள என்னிடம் வரும் பெண்கள் நாணிக்கோணி தாளை வாங்கிச்செல்வார்கள். பல சமயங்களில் அவற்றை செயற்கையாக உணர்ந்திருக்கிறேன். சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளும் போதும் அவ்வாறே நடக்கும். ஆனால் செல்வி அப்படியல்ல. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என அங்கிருக்கும் ஆண்களுடன் சகஜமாக பழகிக்கொண்டிருந்தாள். தெளிவான பேச்சும், கச்சிதமாக வேலையை முடிக்கும் திறனும் வாய்த்தவள். அவளோ செல்வியைத்தவிர வேறு யாருடனும் பழகுவது போல தெரியவில்லை. ஆனால் சிறிய முன்னேற்றமாக‌ அவள் இப்போது எல்லோருடனும் சிரித்த முகமாக இருப்பதைக் காணமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தேன். சராசரிக்கும் குறைவான உயரம். கறுப்பு என்று சொல்லலாமா? மாநிறம் என்று சொல்வதா? ஒரு மிகச்சிறிய மூக்குத்தி வேறு அணிந்திருந்தாள். கூந்தல் அடர்த்தியாகவும் மிக நீளமாகவும் இருந்தது. எப்போதும் ஒற்றை ஜடையே பின்னிக்கொண்டிருந்தாள். செல்வி எனது மேஜைக்கு வரும்போது சில சமயங்களில் அவளும் இவள் தோளை ஒட்டியவாறு வருவதுண்டு. கண்கள் பளபளப்பாக ஒரு ஆர்வத்தில் மிதந்துகொண்டிருக்கும். உங்கள் பிரெண்ட் பேசமாட்டாங்களா என்று நான் செல்வியை கிண்டலாக கேட்கும் போது செல்வி சிரிப்பாள், அவள் மெலிதாக வெட்குவாள். அந்த வெட்கத்தை உணர்ந்தேன்.


இதுவரை ஒரு வார்த்தையும் அவளுடன் பேசியிருக்கவில்லை. மெலிதாக எங்கள் கண்கள் பார்த்துக்கொண்டன. எனது அறையில். அவர்களது அறையில். இடைவேளைகளில். வாயில்களில். அவள் எங்கிருந்து வருகிறாள்? முகவரி என்ன? குடும்பம் எப்படிப்பட்டது? அவள் என்ன எண்ணுகிறாள்? பெயரைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் என் கண்களை கண்டவுடன் கவிழ்ந்துகொண்ட அவளது கண்கள் மெல்ல போட்டியிடத்துவங்கியிருந்தது. அந்த பார்வை விளையாட்டை நான் மிக ரசித்தேன். அந்தக்கண்களை பார்த்துக்கொண்டே இருந்துவிடமாட்டோமா என தோன்றிக்கொண்டேயிருக்கும். ஊடாக அவளது மெலிதான சிரிப்பு என்னை என்னவோ செய்தது.

ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது துவங்கிய விளையாட்டின் விநாடிகள் நிமிடமாகியிருந்தன‌. யார் முதலில் கண்களைத் தழைப்பது என்ற சொல்லப்படாத போட்டி துவங்கியிருந்தது. கண்களாலேயே விழுங்கிவிடுவதைப்போல தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் நீரோடு நான்தான் அன்று முதலில் கண்களை தழைப்பதாக ஆயிற்று. அடுத்து வந்த சில நாட்களில் இந்தப்பார்வை விளையாட்டை பிரகாஷ் கவனித்துவிட்டான். கலக்கிட்டீங்க பாஸ், எக்கச்சக்கமாய் போட்டி அவங்களுக்கு.. நீங்க புடிச்சிட்டீங்க போல என்று பகடி செய்தான். அப்படி இல்லப்பா, சும்மாதான் என்று சமாளித்தேன். பின்னர் அவள் குறித்து பேசும்போதெல்லாம் உங்க ஆளு, உங்க ஆளு.. என்று கிண்டல் செய்யலானான். மேலும் அவள் குறித்த மேல் தகவல்களை அவனிடம் கேட்டேன். அறிந்துவந்து சொல்வதாய் சொன்னான். பிரிதொரு நாள் செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தாவணி குறித்து ஏதோ பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.. ஞாபகமில்லை...

தொடர்ந்து வந்த ஒரு புத்தாண்டு தினத்தில், இளநீல நிற‌ தாவணியில் வந்திருந்தாள்.

பிரகாஷிடம் அவன் திருமணத்திற்கு கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். "நான் சொல்ல மறந்திட்டேனா? உங்க ஆளுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாச்சே.. இன்னும் இங்கதான் ஒர்க் பண்றாங்க‌.."


20 comments:

சந்தனமுல்லை said...

sigh.....!!! படித்து முடித்து ஒரு நீண்ட பெருமூச்சு! The train stops at shamli என்ற பாடப்புத்தகத்தில் படித்தக் கதைதான் நினவுக்கு வந்தது!!

தாமிரா said...

முதல் பின்னூட்டமாய் எனது டிஸ்கியை போடுவதற்குள் படித்து எனக்கு நிம்மதி தருமளவு பின்னூட்டமும் போட்ட தோழி சந்தனமுல்லைக்கு நன்றி.

சிறுகதைகள் எழுதிப்பழக வேண்டும் என்பது என் ஆசை இவ்வளவு நாட்கள் பத்தி (போன்ற ஒன்றை) எழுதி வந்திருக்கிறேன். முதலில் முயற்சித்த 'ஒரு ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமை' சொதப்பலை மறந்திருக்கமாட்டீர்கள். இது இரண்டாவது முயற்சி. இது போன்ற முயற்சிகள் தொடரும் ஆபத்து உள்ளது. கவனமாக‌ இருக்கவும்.

மங்களூர் சிவா said...

மனசை தளரவிட்றாதீங்க அண்ணே திரும்ப முயற்சி பண்ணுங்க ஆனா சாக்கிறதை வீட்டம்மணிக்கு தெரிஞ்சிட போகுது!!

:)))

KaveriGanesh said...

தாமிரா,

நல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள்

அன்புடன்
காவேரி கணேஷ்
kaveriganesh.blogspot.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

இயல்பான வர்ண்ணைகளுடன்.... நல்ல நினைவுக் கோர்வை..

பிரகாஷ் கல்யாணத்துக்கு கற்பகம் வருவாங்களா...

நமக்குள் எத்தனையோ முக்கியத்துவமுள்ள அல்லது முக்கியத்துவமற்ற பல ரகசியங்கள் கிடக்கின்றன. அவை எந்தெந்த சூழலில் நிகழ்ந்தவையோ அந்தந்த சூழலில் நம்மை நெருங்கியிருந்த மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம். கால ஓட்டத்தில் பல முக்கியத்துவமிழந்து நினைவின் ஆழத்திற்கு சென்று விடுகின்றன.//

ம்ஹூம், ஒரு பெருமூச்சுடனும், சின்ன சிரிப்புடனும் தான் இதற்கு சரி என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்த நினைவுக்கோர்வைக்கு ஆண் பெண் பேதமில்லை. உறவுகளும் இல்லை, ஆனால் ஆழ்மனதில் அலையடித்துக் கொண்டிருக்கும், யாராவது இப்படி வாக்கியங்களால் கிளறினால், மறுபடியும் நினை லையை இழுத்து வந்து கால் நனைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கான திட்டத்தை தெரிந்துகொள்ள என்னிடம் வரும் பெண்கள் நாணிக்கோணி தாளை வாங்கிச்செல்வார்கள். பல சமயங்களில் அவற்றை செயற்கையாக உணர்ந்திருக்கிறேன். சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளும் போதும் அவ்வாறே நடக்கும்.
!?!
பாலகுமாரன் கதையின் நடை மாதிரி இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தங்கமணி ப்லாக் பக்கம் வருவாங்களா. ?

இல்ல எதுக்கும் ஒரு ஃசேப் சைடுக்கு கேட்டு வெச்சிருக்கேன்.

உங்களுக்கு விழுவதில் பாதி எங்களுக்கும் விழுந்தால்.......

நான் திட்டு ”விழு” “வதை” மட்டுமே குறிப்பிட்டேன்.

கார்க்கி said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
தங்கமணி ப்லாக் பக்கம் வருவாங்களா. ?

இல்ல எதுக்கும் ஒரு ஃசேப் சைடுக்கு கேட்டு வெச்சிருக்கேன்.//

அவ‌ரு ரொம்ப‌ உஷாருங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிறுகதைகள் எழுதிப்பழக வேண்டும் என்பது என் ஆசை. இது இரண்டாவது முயற்சி. இது போன்ற முயற்சிகள் தொடரும் ஆபத்து உள்ளது. கவனமாக‌ இருக்கவும்.

தொடருங்கள், இது போன்ற எதிர்பாராத ஆபத்துக்கள் நிறைந்ததுதான் வலைப்பூவுலகம் என்று தெரிந்துதான் கை வைத்துள்ளோம். இதே போன்ற ஆபத்து நாளை எங்களிடமும் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். so keep writing, keep on writing.

raghavan said...

நல்ல முன்னேற்றம் . தொடர்ந்து பழகுங்கள் .வெற்றி காத்திருக்கிறது .

ரேகா ராகவன்

தராசு said...

//சிறுகதைகள் எழுதிப்பழக வேண்டும் என்பது என் ஆசை இவ்வளவு நாட்கள் பத்தி (போன்ற ஒன்றை) எழுதி வந்திருக்கிறேன். முதலில் முயற்சித்த 'ஒரு ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமை' சொதப்பலை மறந்திருக்கமாட்டீர்கள். இது இரண்டாவது முயற்சி. இது போன்ற முயற்சிகள் தொடரும் ஆபத்து உள்ளது. கவனமாக‌ இருக்கவும்.//

அருமை தாமிரா,

"A journey of thousand miles starts with a small step"


உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

அத்திரி said...

//ஆரம்பத்தில் என் கண்களை கண்டவுடன் கவிழ்ந்துகொண்ட அவளது கண்கள் மெல்ல போட்டியிடத்துவங்கியிருந்தது. அந்த பார்வை விளையாட்டை நான் மிக ரசித்தேன். அந்தக்கண்களை பார்த்துக்கொண்டே இருந்துவிடமாட்டோமா என தோன்றிக்கொண்டேயிருக்கும். ஊடாக அவளது மெலிதான சிரிப்பு என்னை என்னவோ செய்தது.

ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது துவங்கிய விளையாட்டின் விநாடிகள் நிமிடமாகியிருந்தன‌. யார் முதலில் கண்களைத் தழைப்பது என்ற சொல்லப்படாத போட்டி துவங்கியிருந்தது. கண்களாலேயே விழுங்கிவிடுவதைப்போல தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் நீரோடு நான்தான் அன்று முதலில் கண்களை தழைப்பதாக ஆயிற்று.//


கண்களால் விளையாடுவது தனிக்கலை... ம்ம்ம்ம்......நல்லாவே விளையாயிருக்கீங்க..

அத்திரி said...

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்...

உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்???????????????

அத்திரி said...

சிறுகதைகள் எழுதிப்பழக வேண்டும் என்பது என் ஆசை இவ்வளவு நாட்கள் பத்தி (போன்ற ஒன்றை) எழுதி வந்திருக்கிறேன். முதலில் முயற்சித்த 'ஒரு ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமை' சொதப்பலை மறந்திருக்கமாட்டீர்கள். இது இரண்டாவது முயற்சி. இது போன்ற முயற்சிகள் தொடரும் ஆபத்து உள்ளது. கவனமாக‌ இருக்கவும்.

நீங்க எழுதுங்கண்ணே படிக்காம உட்ருவமா என்ன????

நானும் ஒரு சிறுகதை எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்

அத்திரி said...

//சிறுகதைகள் எழுதிப்பழக வேண்டும் என்பது என் ஆசை இவ்வளவு நாட்கள் பத்தி (போன்ற ஒன்றை) எழுதி வந்திருக்கிறேன். முதலில் முயற்சித்த 'ஒரு ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமை' சொதப்பலை மறந்திருக்கமாட்டீர்கள். இது இரண்டாவது முயற்சி. இது போன்ற முயற்சிகள் தொடரும் ஆபத்து உள்ளது. கவனமாக‌ இருக்கவும்.//

நீங்க எழுதுங்கண்ணே படிக்காம உட்ருவமா என்ன????

நானும் ஒரு சிறுகதை எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்

Anonymous said...

நல்லா எழுதியிருக்கீங்க. இன்னும் சில நகாசு வேலைகள் செய்தால் அருமையான சிறுகதையாக வந்திருக்கும்.

பத்தி பிரித்தல், உரைநடையில் கதை நகர்த்தல் போன்ற மேலதிக விபரங்களுக்கு, பரிசல்காரனைத் தொடர்பு கொள்ளவும்.

RAMYA said...

ஒரு நீண்ட காதல் காவியம் படித்த உணர்வு ஏற்பட்டது
அருமையா எழுதி இருக்கீங்க

இல்லே இது சிறுகதையா
இல்லை ????????????????

RAMYA said...

//
பிரகாஷிடம் அவன் திருமணத்திற்கு கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். "நான் சொல்ல மறந்திட்டேனா? உங்க ஆளுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாச்சே.. இன்னும் இங்கதான் ஒர்க் பண்றாங்க‌.."
//

அட பாவமே கடைசிலே
இப்படி முடிஞ்சி போச்சே!!
ஆமா தங்கமணி ப்லாக் பாப்பாங்களா
இல்லையா பின்னே அதான்

சரி சரி ........

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன கதை ச்சே கடை காத்து வாங்கியிருக்கு, உங்களுக்காஆஆஆஆஆ இந்த நிலைமை....

தாமிரா said...

ஹிட்ஸ்களில் சொதப்பினாலும் தமிழிஷ் வாக்குகள் மகிழ்ச்சியைத்தருகின்றன. நன்றி தோழர்களே.!

நன்றி மங்களூர்.! (நீங்க 'கத' எழுதுறதப்பத்திதானே சொல்றீங்க..)

நன்றி காவேரிகணேஷ்.!

நன்றி அமிஷு அம்மா.! (பாலகுமாரன் கதையின் நடை மாதிரி இருக்கு// பாலகுமாரன் மேல என்ன கோபம், ரொம்ப நல்லவராச்சே :)))

நன்றி கார்க்கி.! (கதையைப்பத்தி ஒண்ணும் சொல்லலியேப்பா?)

நன்றி ராகவன்.!

நன்றி தராசு.! (ரொம்பதான் தன்னம்பிக்கை ஊட்டுறீங்க‌)

நன்றி அத்திரி.! (நீங்க எழுதுங்கண்ணே படிக்காம உட்ருவமா என்ன?// உங்கள நம்பிதாண்ணே எழுதிக்கிட்டிருக்கேன். //நானும் ஒரு சிறுகதை எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்// அவ்வ்வ்.. எனக்கு பழிவாங்குற‌தெல்லாம் புடிக்காதுண்ணே)

நன்றி வேலன்.! (பரிசல்காரனைத் தொடர்பு கொள்ளவும்.// அண்ணன் ரொம்ப பிஸியா இருக்காரு போல.. புடிக்கவே முடியல)


நன்றி ரம்யா.! (ஒரு நீண்ட காதல் காவியம்// வாங்குன காசுக்கு என்னமா கூவுறீங்க.. தொட்டுட்டிங்க ரம்யா)

நன்றி அமிஷு.! (பாருங்களேன் இந்த அநியாயத்த.? எங்காவது உண்டுமா இந்த மாதிரி?)

Saravana Kumar MSK said...

இது என்ன அண்ணா, புது அவதாரமா.. அசாத்தியாமான எழுத்து நடை உங்களுடையது..