Tuesday, January 6, 2009

சில பழைய படங்கள் பார்த்தேன் (ஏக் துஜே கேலியே உட்பட)

நாலு படங்கள், ஒவ்வொன்றைப் பற்றியும் நாலு வரிகள்.. சரிதானா, போகலாமா?

முதலில் திருப்பாச்சி

சமீபத்தில் ஒருநாள் ‘போகோ’ சானல் பக்கமிருந்து விளம்பர இடைவேளையில் சன் டிவி பக்கம் வந்தபோது திருப்பாச்சி ஓடிக்கொண்டிருந்தது. நல்ல வேளையாக துவக்கப்பாடல் முடிந்து ஏதோ காமெடி சீன் போய்க்கொண்டிருந்தது. ஏதோ கவர அப்படியே தொடர்ந்தேன். நகைச்சுவை, வசனங்கள், சென்டிமெண்ட் காட்சிகள் என போரடிக்காமல் தொடர்ந்தது. அதுவும் குறிப்பாக தங்கச்சி சென்டிமெண்ட் நமக்கும் உண்டென்பதால் பிடித்திருந்தது. ஒரு காட்சியில் ஒரு பாட்டி, தங்கையின் வளைகாப்புக்குகூட கலந்துகொள்ளமுடியாத சூழலில் வெளியூர் கிளம்பிக்கொண்டிருக்கும் விஜயை நோக்கி நிகழ்ச்சிக்கு இருக்கவேண்டுமென சொல்ல அவரோ அப்பா அம்மா எல்லோரும்தான் இருக்காங்களே என்பார். அதற்கு அந்தப்பாட்டி தளுதளுத்தவாறே “இருந்தாலும் இந்தச்சிறுக்கிக்கு தாயி, தாப்பன் எல்லாமே நீதானேய்யா..” என்பார். இங்கே கொஞ்சம் புல்லரித்தேன். இடைவேளை வரை நல்லா போய்க்கொண்டிருந்த படத்தில் பின்னர் டுபாக்கூர் ஆரம்பித்தது. ‘பட்டாசு’பாலு, ‘முட்டை’முருகன் என ஒரு டஜன் வில்லன்கள் தொடர்ச்சியாக வர அனைவரையும் வதம் செய்து சென்னையையே அவர் காப்பாற்றி படம் முடிகிறது. சுபம்.

அடுத்து வாரணம்ஆயிரம்

கண்களில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு, தாலாட்டும் இசை என பார்க்க ஆவலோடு இருந்த படம். இப்போதுதான் பார்க்க முடிந்தது. எதிர்பார்த்தது போலவே பாடல்களும் ஒளிப்பதிவும் அற்புதமாகத்தான் இருந்தன. ஆனால் படம் முடிந்தபின்னர்தான் இது ஒரு மொக்கைப்படமா? இல்லையா? என என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சூர்யாவின் திறனும், உழைப்பும் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக அவரை எண்ண வைக்கிறது. திருப்பங்களில்லாத அப்பா பையன் பாசக்கதைதான், ஆனால் ‘இயல்பான’ என்று சொல்லமுடியவில்லை. இதில் ஏன் ஒரே பாடலில் தொழில் செய்து சூர்யா பணக்காரராகிறார்? அப்பா சூர்யா ஏற்கனவே பணக்காரர் என்று காண்பித்தால் நீங்களோ நானோ சண்டைக்கு போகப்போறோமா? இவ்வளவுக்கும் பின்னர் தொழிலை அம்போவென விட்டுவிட்டு மிலிட்டிரிக்குப்போய் கமாண்டோவாகி விடுகிறார். மறுக்கும் அம்மாவிடம் இதுதான் எனது ஆம்பிஷன் என்று வேறு கூறுகிறார். இடையே காதல் தோல்வியில் டிரக் அடிமையாகி அப்பாவையே அடிக்கவேறு போகிறார். பின்னர் டில்லியில் குழந்தை காப்பாற்றல், வாள்சண்டை. கமாண்டோவான பின்னர் டுப் டுப்புவென்று துப்பாக்கி சண்டை வேறு. தீவிரவாதிகள் ஒவ்வொருவராக வீடியோ கேமில் வருவது போல திருப்பங்களில் வருகிறார்கள். இவர் சுடுகிறார், அட போங்கப்பா. எல்லா படங்களிலுமே துப்பாக்கி கொண்டு எதிரிகளை பொசுக்கித்தள்ளிவிடுவது என்ற குறிக்கோளுடன் கவுதம் இருப்பதாக தெரிகிறது. நம் நினைவில் நிற்பது அழகான காதல் காட்சிகள்தான்.

அடுத்து ஏகன்

அஜித்தை எழவிடாமல் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக திட்டமிட்டு இயக்குனர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு அடுத்த உதாரணம். எதிர்கட்சிகளின் சதி ஏதும் உள்ளதா என அஜித் தெளிவு பண்ணிக்கொள்வது நல்லது. இந்தப்படத்தில் ஒரு ஹீரோயின் (நயன்தாரா). அவர் ஒரு புரொபசர், ஆனால் கொஞ்சம் லூசு. அவரது கல்லூரியில் ஒரு முதல்வர் (ஜெயராம்), அவரும் லூசு. அவருக்கு ஒரு பியூன் (சத்யன்), அவரும் லூசு. ஹீரோவின் அப்பா ஒரு கமிஷனர் (நாசர்), அவரும் ஒரு லூசு. அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் (ஹனீபா), அவரும் ஒரு மகா லூசு. வெள்ளை டோப்பாவும், பளிச்சென்ற ஒட்டுத்தாடியும் வைத்த ஒரு வில்லன் (சுமன்), அவரும் லூசு. அவருக்கு ஒரு வலதுகை (ஸ்ரீமன்), அவரும் ஒரு மகா லூசு. படம் பார்த்து முடிக்கும் போது நாம் என்னவாகிறோம் என்பது இந்நேரம் உங்களுக்கே விளங்கியிருக்கும். இந்த லட்சணத்தில் ‘மாற்றாந்தாய்’ மனோபாவ வில்லி கேரக்டரில் நாம் மதிக்கும் சுஹாசினி வேறு. அவரை எப்படி அப்படியொரு கேரக்டரில் பொருத்திப்பார்க்க இயலும்.. சுத்தம்.

கடைசியாக ‘ஏக் துஜே கேலியே’

என்னடா இது இப்பிடி ஜம்ப் ஆவுறேங்கறீங்களா? ரொம்ப நாள் ஆசைங்க.. ஹிந்தி சுட்டுப்போட்டாலும் வராது நமக்கு, ஆனாலும் நம்ப கமல்ஜி நடித்தது. ஓகோன்னு ஓடிய படம். தெற்கின் புகழை வடக்கில் பரப்பிய படமல்லவா? எப்படித்தான் இருக்குதுன்னு பாக்கணும்னு ஆசை. இப்போதான் முடிஞ்சது. சமீபத்தில் ஒரு பதிவர் வீட்டுக்கு சென்றிருந்த போது ‘லவுட்டி’க்கொண்டு வந்த டிவிடி. அப்படியே தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்ததுங்க. இதில் வந்த பல காட்சிகளை ஏற்கனவே பல தமிழ் படங்களில் (இதற்கு முன்னரோ, பின்னரோ) பார்த்தாச்சு. வழக்கமான பாலசந்தர் படம். கமல்ஹாசன்தான் இளமை துள்ளலாக அள்ளிக்கொண்டு போகிறார். பைக் சாகசக்காரன் போல பைக்கில் கையை விட்டு ஓட்டுகிறார், நின்று கொண்டு ஓட்டுகிறார், படுத்துக்கொண்டு ஓட்டுகிறார். வித்தையெல்லாம் காண்பிக்கிறார். காதலுக்கு வீட்டின் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும் சுப சந்தர்ப்பத்தில் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருந்த வில்லன்கள் சரியாக உள்ளே புகுந்து ரதியை பலாத்காரம் செய்துவிட, கமல்ஹாசனையும் தாக்கிவிட இருவரும் கட்டிப்பிடித்தவாறே மலையிலிருந்து கடலில் விழுந்து பரிதாபமாக இறந்துபோகின்றனர். சுப முடிவாக இருந்தாலும் இந்தப்படம் நன்றாகத்தான் இருந்திருக்கும் என நான் நினைத்தேன். ஒருவேளை அன்றைய காலகட்டங்களில் எல்லா படங்களிலும் சுப முடிவு பார்த்து பார்த்து சலித்த ரசிகர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம். படத்தில் தவிர்க்க முடியாத விஷயம் பாடல்களும், லதா மங்கேஷ்கரும். அர்த்தம் விளங்காவிடினும் லதாவின் குரலில் “தேரே மேரே பீச்சு மே.. கேய்ஸா ஹெயே பந்தன்.. அன்ஞா..னா...” பாடலை கேட்கும் போது அற்புதமான அலையலையான உணர்வுகளால் உள்ளம் நிரம்புகிறது. இசைதான் எவ்வளவு அற்புதமானது.. அதிலும் லதா மங்கேஷ்கர் போன்ற ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் குரலும் சேரும் போது.. ரசவாதம்தான்.!

34 comments:

புதுகைத் தென்றல் said...

ஹிந்தி மை கூனா தான் தமிழில் ஏகன். ஹிந்தியில் அது சூப்பர் ஹிட். :)


ஏக் துஜே கேலியே எம்புட்டு தரம் பாத்தாலும் அலுக்காது. அந்த படத்தின் உங்கள் விமர்சனத்தை மிக ரசித்தேன்.

கும்க்கி said...

:-))

பாபு said...

நானும் இப்பதான், பாவை விளக்கு,ரத்ததிலகம் என்று dvd வாங்கி பார்த்துக்கொண்டிருந்தேன்.dvd க்கு பிடிக்கல போல.வாங்கி நாலு மாதம்தான் ஆவுது,அதுக்குள்ளே ரிப்பேர்.(samsung

கார்க்கி said...

நீங்க எழுதியதிச் இதுதான் பெஸ்ட் சூப்பர் டக்கர் அட்டகாசம் அருமை பஹூத் அச்சானு சொல்ற‌துக்கு ரெண்டு காரணம் இருக்கு. என்னனு தெரியுமில்ல?

சந்தனமுல்லை said...

ஏகன் விமர்சனம் ROTFL!!

ஏக் துஜே கேலியே..சான்சே இல்லை!
///இசைதான் எவ்வளவு அற்புதமானது.. அதிலும் லதா மங்கேஷ்கர் போன்ற ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் குரலும் சேரும் போது..//

மிக உண்மை!!

கும்க்கி said...

சே....மனசாட்சியே இல்லாத ஆளுங்கப்பா.....
கொஞ்சமாச்சும் கொளுகை முடிவுகளை மாத்தலாம்னு.."the day become i m a women" என்று அருமையான படத்த பார்க்கச்சொன்னா...

எப்படி உங்களுக்கு தமில் படம் பார்க்கின்ற தைரியம் வருகின்றது..?

கும்க்கி said...

தமிலு படங்கல பாக்க சொல்லொ இந்த கம்பூட்டர் கேம்ஸே மேலுன்னு உங்க கைல தோனலயா தோஸ்த்..?

Mahesh said...

திருப்பாச்சியும் ஏகனுக்கும் இந்த அளவு விமர்சனம் கூடா தேவையே இல்ல. அஜீத்துக்காக ரொம்ப பரிதாபப் படலாம்.

ஏக் துஜே கேலியே- நம்ம ஃபேவரிட்.
பாட்டுக அர்த்தம் புரியாதபோதே இவ்வளவு ரசிக்க முடியுதே... அர்த்தமும் புரிஞ்சு அதுக்கு எஸ் பி பி யும் லதாவும் குடுக்கற எமோஷன்ஸும் சேர்ந்து அனுபவிக்கும்போது... அந்த சுகம் தனி.

அத்திரி said...

//அஜித்தை எழவிடாமல் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக திட்டமிட்டு இயக்குனர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு அடுத்த உதாரணம். எதிர்கட்சிகளின் சதி ஏதும் உள்ளதா என அஜித் தெளிவு பண்ணிக்கொள்வது நல்லது//

ஹாஹாஹாஹாஹாஹா ))- - -

வித்யா said...

நான் கூட ஏகன் டிவிடி வாங்கிவச்சிருக்கேன். இன்னும் தைரியம் வரல. அப்புறம் அந்த படத்துல எல்லாருக்கும் பிரெண்ட்னு ஒரு பாட்டு வருமே. என் பையன் ஆடுற அளவுக்கு கூட அஜீத் ஆட மாட்டேங்கறார்:))

தாரணி பிரியா said...

திருப்பாச்சி படத்துல அண்ணன் தங்கை பாசத்தை பத்தி ஒரு குட்டி பாட்டு வருமே. (வரி மறந்து போச்சு) அது கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் ஒரு அண்ணன் இருந்து இருக்கலாமேன்னு தோண வெக்கற மாதிரி இருக்கும் அந்த வரிகள்

அடுத்து வாரணம் ஆயிரம் சூரியா, ஹாரிஸ், தாமரை எல்லாரையும் வேஸ்ட் செஞ்சு இருந்தாலும் இந்த படத்தை பாக்கறது அவ்வளவு அலுப்பு தர்ற விஷயமா இல்லை.

ஏகன் எனக்கு அஜீத் பிடிக்கும். ஆனா அதுக்காக இந்த படத்தை கொஞ்சம் பார்த்தா கூட பைத்தியம் பிடிச்சுடுமுன்னு டிரைலர்லேயே யோசிக்க வெச்ச படம். ஏதாவது நல்ல டைரக்டர் நல்ல கதைன்னு அமைஞ்சு அஜீத் திரும்ப வரணும் :(


ஏக் துஜே கேலியே ‍ புரியாமேயே பார்த்த படம். ரெண்டு பேரையும் சாகடிக்காம‌ இருந்து இருக்கலாம் அப்படின்னுரொம்ப நேரம் யோசிச்சு இருக்கேன். அப்புறம் பாட்டு எப்ப கேட்டாலும் சேனல் மாத்தாம கேட்க வெக்கற பாட்டுகள் ஆச்சே

தாரணி பிரியா said...

உங்க பதிவை படிச்சதும் சீரியல் பாக்கறதுக்கு பதிலா இந்த மாதிரி பழைய படங்களை தேடி பார்க்கலாமின்னு தோண ஆரம்பிச்சுருச்சு.

நாடோடி இலக்கியன் said...

கலக்கலா எழுதறீங்க தாமிரா.
வாழ்த்துகள்..!

//அஜித்தை எழவிடாமல் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக திட்டமிட்டு இயக்குனர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு அடுத்த உதாரணம். //

ஹி ஹி ஹி அருமை.

தாமிரா said...

ரொம்ப நாளாச்சு, எல்லோருக்கும் தனித்தனி பின்னூட்டங்களில் நன்றி சொல்லலாமா? நானும் எப்பதாம் மீ த 50 போடுறது.?

தாமிரா said...

நன்றி தென்றல்.! (ரதி ஹிந்திக்காரம்மா மாதிரியே இருப்பாங்களே, நிஜமாவே ஹிந்திதானா? ஆமா அந்த பாடலுக்கு என்ன அர்த்தம்?)

தாமிரா said...

நன்றி கும்க்கி.! (கேம்ஸ்க்கு பக்கத்துல எந்த மொழிப்படமுமே வரமுடியாது, அப்படியிருக்க, தமிழ் படமா?)

தாமிரா said...

நன்றி பாபு.! (பாவை விளக்கு,ரத்ததிலகம்// இம்மாம்பழைய படங்கள் பாத்தீங்கன்னா பிளேயர் ரிப்பேர் ஆகாம என்ன பண்ணும்?)

தாமிரா said...

நன்றி கார்க்கி.! (உங்கள மறந்துட்டேனே, இல்லன்னா பிளேட்ட திருப்பி போட்ருப்பேனே..சே!)

தாமிரா said...

நன்றி முல்லை.! (ஏக் துஜே கேலியே எம்புட்டு தரம் பாத்தாலும் அலுக்காது.// அந்த பாட்டை பத்து தரம் ரிப்பீட்டு போட்டு பார்த்தேன்ங்க..)

தாமிரா said...

நன்றி மகேஷ்.! (ஏகனுக்கும் இந்த அளவு விமர்சனம் கூட தேவையே இல்ல// அதெப்பிடி சொல்லலைன்னா உங்களுக்கு எப்பிடித்தெரியும்?)

தாமிரா said...

ந‌ன்றி அத்திரி.!

தாமிரா said...

ந‌ன்றி வித்யா.!

தாமிரா said...

ந‌ன்றி பிரியா.!

தாமிரா said...

ந‌ன்றி இல‌க்கிய‌ன்.! (கலக்கலா எழுதறீங்க தாமிரா// ஹிஹி..இப்பதான் தெரிஞ்சுதா.. ஊரே அல்லோலகல்லோல படுது.)

தாமிரா said...

ஹைய்யா.. மீ த 25.!

புதுகைத் தென்றல் said...

“தேரே மேரே பீச்சு மே.. கேய்ஸா ஹெயே பந்தன்.. அன்ஞா..னா.//

உனக்கு எனக்குமான இந்த பந்தம் எப்படி? தெரியாமலேயே ஏற்பட்டதா?

இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் அர்த்தம். ரதி ஹிந்திதான். ரத்தி அக்னிஹோத்ரி அவரது முழுப்பெயர். தமிழுக்கு கொண்டுவந்தது நம்ம பாரதி ராஜா.

Vinitha said...

சூப்பர் ஏகன் விமர்சனம் !

வால்பையன் said...

திருப்பாசி

பட்டாசு பாலுவை கொல்லும் போது ஒரு வசனம் பேசுவாரே!அது மாதிரி யாருமே இது வரைக்கும் பேசினதில்லையாமாம்

வால்பையன் said...

வாரணம் ஆயிரம்!
கேமரா கவிதை
திரைக்கதை கொஞ்சம் சொதப்பல்

வால்பையன் said...

ஏகன்
இன்னும் பார்க்கவில்லை!
எதாவது பிரயாணத்தின் போது பஸ்ஸில் போடுவார்கள், பார்த்து கொள்ளலாம்

வால்பையன் said...

ஏக் துஜே கேலியே

நான் கூட சமிபத்தில் பார்த்தேன், சில காட்சிகள் சிறு பிள்ளை தனமாக தோன்றினாலும், கதையோடு ஒன்றும் பொழுது அது தெரிவதில்லை

கும்க்கி said...

வால்பையன் said...
ஏக் துஜே கேலியே

நான் கூட சமிபத்தில் பார்த்தேன், சில காட்சிகள் சிறு பிள்ளை தனமாக தோன்றினாலும், கதையோடு ஒன்றும் பொழுது அது தெரிவதில்லை

எப்படி சமீபத்தில் டோண்டு மாதிரியா..?

Itsdifferent said...

Cut and paste from AV. if this is true, can the bloggers really create a awareness and a possible revolution to stop this nonsense at once?
நம் நாடு சுதந்திரமடைந்த காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே நமது ஒரே லட்சியமாக இருந்தது. இந்த நோக்கத்தை மனதில் வைத்தே விவசாயத் துறையில் பல புதிய திட்டங்களைத் தீட்டினோம். அணைகள் கட்டுவதில் ஆரம்பித்து, உணவுக் கிடங்குகளை அமைப்பதுவரை அப்போது நமக்கிருந்த ஒரே நோக்கம் ஒவ்வொரு இந்தியனும் பசித்த வயிறோடு தூங்கச் செல்லக்கூடாது என்பதுதான்.

ஆனால், இன்றைய நிலை என்ன? இந்தியா முழுக்க உள்ள கிராமங்களையும் ஏழை விவசாயிகளையும் பலி கொடுத்துதான் நம்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது! இந்தியா முழுக்க உள்ள 105 கோடி மக்களில் 83 கோடி பேர் வறுமையின் கொடுமைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆளாகலாம் என்கிற நிலையில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் மட்டும் 93%. இதில் 80% தொழிலாளர் விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்களைச் சார்ந்து இருப்பதாக ஒருங்கிணைப்படாத தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷன் சொல்கிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 48% நகர்மயமாகிவிட்டது என்கிறார்கள். 2020-க்குள் கிட்டத்தட்ட 70% நகர்மயமாகிவிடுமாம். இப்படி அசுர வேகத்தில் விளைநிலங்களை பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருந்தால், நமக்குத் தேவையான உணவு எங்கிருந்து கிடைக்கும்? கிராமங்களிலிருந்து சாரைசாரையாகக் கிளம்பி நகர்ப்புறத்தை நோக்கி வருகிறார்கள் மக்கள். ஏன்? கிராமத்தில் வேலை இல்லை. விவசாயம் கட்டுப்படியாகக்கூடியதாக இல்லை. சிறிய அளவில் நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு மட்டுமே 16,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதிலிருந்தே விவசாயத் துறையை நாம் எந்த அளவில் அக்கறையோடு கவனிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


கடந்த சில பத்தாண்டுகளாக விவசாயம் பற்றி நம் அரசாங்கத்தின் அணுகுமுறை முற்றிலும் மாறியிருக்கிறது. முன்பு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினோம். இன்று நமக்குப் பணம்தான் முக்கியம். பணம் கிடைக்க வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் வளர்க்கலாம் என்கிற அளவுக்குப் போய்விட்டோம். இப்போது தமிழகத்தில் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துவிட்டது. தானியங்களின் உற்பத்தி 40% குறைந்துவிட்டது. ராகி, கம்பு போன்ற சத்து தானியங்கள் ஏறக்குறைய அழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

உணவு உற்பத்திக்குப் பதிலாக நாம் என்ன செய்கிறோம்? பெட்ரோல் தயாரிக்கத் தேவையான 'ஜெட்ரோபா' என்னும் தாவரத்தை ஹெக்டேர் கணக்கில் வளர்க்கிறோம். அரசாங்கமும் அதைத்தான் வளர்க்கச் சொல்கிறது. அல்லது தேக்கு மரம் வளர்க்கிறோம்; பூக்களை வளர்க்கிறோம்; மலைப்பகுதிகளில் தேயிலை, காபி போன்ற பணப் பயிர்களை வளர்க்கிறோம். இப்படியே போனால் நம்மிடம் நிறைய பணம் இருக்கலாம். ஆனால், சாப்பிடுவதற்கு நிச்சயம் உணவு இருக்காது!

உணவு தானியத்தில் தன்னிறைவு என்ற நிலையை அடைவதற்குப் பதிலாக இரண்டு மிகப்பெரிய தவறுகளை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று ஏற்றுமதி, இன்னொன்று, இறக்குமதி. நம் விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையைக் கொடுக்க நாம் தயாராக இல்லை. ஆனால், இப்போது நமக்கு ரேஷனில் கிடைக்கும் பொருளின் விலையைவிடக் குறைவான விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த விலையை நம் விவசாயிகளுக்குக் கொடுத்தாலாவது அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்வார்கள். தவிர, அத்தியாவசியப் பொருட்களை எந்த அளவுக்குக் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கணக்குவழக்கும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. அத்தியாவசியமான உணவுப் பொருட்களை நாம் நிறைய ஏற்றுமதி செய்கிறோம். எதிர்காலத்தில் திடீரென ஏதாவது ஒரு விபரீதமான விளைவு ஏற்படுமெனில் அதைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிப் போவோம்.இதேபோல, நம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வாங்காமல், அதிக விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். தாய்லாந்து, இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான விலைக்கு அரிசி வாங்குகிறோம். பிலிப்பைன்ஸிலிருந்து தேங்காய் வாங்குகிறோம். தெற்காசிய நாடுகளிலிருந்து பருப்புகளை வாங்குகிறோம். ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை வாங்குகிறோம். வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்தால், உள்ளூரில் உற்பத்தியானதை கடலில் சென்று கொட்டவா முடியும்?

ஆக இந்த நிலைமை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? விவசாயிகளுக்கு வெறும் கடன் தள்ளுபடி மட்டும் போதாது. நீண்டகால நோக்கில் சில அடிப்படையான விஷயங்களை நாம் செய்தாக வேண்டும்.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுப்பதில் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு தோட்டத்திலும் சொட்டுப் பாசனம் அமைப்பது வரை பல வேலைகளை அரசாங்கம் உடனடியாகச் செய்தாகவேண்டும்.

நீடித்த வேளாண்மைக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்யவேண்டும். பி.டி.விதை உற்பத்திக்கு அரசாங்கம் எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் எல்லா பொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை நிச்சயம் கிடைக்கவேண்டும். உரத்துக்கு அளிக்கப்படும் மானியம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. இந்த மானியத்தையும் அதிகமாக்கவேண்டும்.

இந்த மாதிரியான அடிப்படையான விஷயங்களைச் செய்தாலே போதும், இந்தியா முழுக்க விவசாயம் செழிப்பாக இருக்கும். அந்த நேரத்தில் இந்தியா நிச்சயம் 9 சதவிகித வளர்ச்சியைக் கடந்திருக்கும்!

தாமிரா said...

நன்றி தென்றல்.!
நன்றி வினிதா.!
நன்றி வால்.!
நன்றி கும்க்கி.!
நன்றி இட்ஸ்.!