Friday, February 27, 2009

சில நன்றிகள்.!

தமிழ்மண விருதுகள்

ஒரு வழியாய் தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்ப அதிர்ச்சியாய் ‘சிக்ஸ் சிக்மா: ஓர் அறிமுகம்’ என்ற எனது பதிவு அதற்குரிய பிரிவில் முதலிடத்தை வென்றுள்ளது. சில முக்கிய பதிவர்கள் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்தது என் போன்றோர் வெல்ல வாய்ப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும் உண்மையைச் சொல்வதாக இருந்தால் முதலிரண்டு இடங்களை விடவும் டாப் 10ல் ஒரு பதிவாவது, குறிப்பாக நகைச்சுவைப்பிரிவில் வரவேண்டும் என்றே நான் விரும்பினேன். அது நிகழவில்லை. இருப்பினும் குசும்பன், சுகுணாதிவாகர், டுபுக்கு, அபிஅப்பா, கார்க்கி போன்ற எக்ஸ்பர்ட்டுகளிடமே தோற்றிருக்கிறேன் என்பது பெருமையே. அந்த இடத்தை அடைய திறனும், உழைப்பும் இன்னும் தீவிரமாக வேண்டும் என்பதையும், செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் உணரமுடிகிறது. மேலும் டாப் 10ல் இரண்டல்லது 3 இடங்களையும் பிடித்த பரிசல்காரன், அப்துல்லா, இராம், ராமலக்ஷ்மி, புதுகைத்தென்றல், ரிஷான், உண்மைத்தமிழன் போன்ற பல பதிவர்களையும் பொறாமை வழியும் கண்களோடு பார்த்துகொள்கிறேன். அதிலும் டாக்டர் புரூனோ மூன்று பிரிவுகளிலுமே முதலிடங்களை வென்று சாதனை படைத்து பிரமிக்கவைக்கிறார். தமிழ்மணம், முதல் பத்து இடங்களை வென்றவர்கள், பங்கு கொண்டவர்கள், வாக்களித்தோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நன்றி.

ஆஸ்கர் ரஹ்மான்

சரியான காலத்தை தவறவிட்டாலும் சில முக்கியவிஷயங்களை பகிர்ந்துகொள்ளாமல் அடுத்து பயணிக்கமுடியாது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஒரு சிறந்தபடம் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை எனினும், இந்தியாவில் உள்ள அவலங்களை மட்டுமே படைப்புகளாக்குவதிலும், அதையே சிறப்பானவை எனக்கொண்டாடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. மேலும் களம் தவிர்த்து இது முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப்படமே. ஆகவே ‘டைட்டானிக்’ 11 விருதுகளை வாங்கியதில் என்ன மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சிதான் ‘ஸ்லம்டாக்’ 8 விருதுகளை வாங்கும் போதும் ஏற்பட்டது. ஆனால் ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு உரிய செய்தி ஏதெனில் அதில் டெக்னிகல் பங்களிப்புகளைச் செய்த நமது கலைஞர்கள் மூன்று ஆஸ்கர்களை வென்றதுதான். அவர்கள் எந்த பிற தேச கலைஞர்களுக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகறிய ஓங்கி ஒலித்துவிட்டு வந்தது, நம்மை பெருமை கொள்ளச்செய்தது. நமது ஒளிப்பதிவாளர்கள் ஆங்கிலப்படங்களில் பணியாற்றினால் வருடாவருடம் ஆஸ்கரை நமக்கு ரிஸர்வ் செய்து விட வேண்டியதுதான். (அனைத்து தொழில்நுட்பங்களிலும் மிகச்சிறப்பாகவே இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன், கதை மற்றும் இயக்கத்தைத்தவிர.) இந்த அரிய ஆரம்பத்தினை செய்துவந்த ஏஆர் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி இருவருக்கும் நாம் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இணைய இணைப்பு

அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்திராத வகையில் நம்மை ‘மிதிச்சு நவுட்டி’க்கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக இணையத்தின் அருகில்கூட வர இயலவில்லை என்பதை அறிந்திருப்பீர்கள். மேலும் சில மாதங்களுக்கு இந்த இடைவெளி நீண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் துன்பத்திலும் ஒரு நற்செய்தியாய் வீட்டுக்கு ஒருவழியாய் இணைய இணைப்பு வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே மாலை நேரங்களில் மட்டும், ரமாவின் அனுமதி கிடைத்தால் தொடர்ந்து இயங்க வாய்ப்பிருக்கிறது. இந்த சிறிய இடைவெளியைக்கூட பொறுத்திருக்கமுடியாமல் தொலைபேசியிலும், மெயிலிலும் வந்து விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கும் (நான் எதிர்பார்த்து ஒரே ஒருவர்தான் இன்னும் விசாரிக்கவில்லை, அவரே பின்னூட்டத்தில் ஒப்புக்கொண்டுவிடவும். இல்லாவிட்டால் நானே பெயரைச் சொல்லிவிட நேரும். ஜாக்கிரதை.!), சில பல காரணங்களுக்காக தொடர்ந்து என் பதிவுகளுக்கு லிங்க் கொடுத்து பெருமைசெய்யும் அன்பு உள்ளங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றி.

அனுஜன்யா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை, ஆனால் ஒத்த ரசனை, அன்பு மனம். இந்த அரிய நட்புக்கூட்டத்தைத் தந்தது பதிவுலகம். அனுஜன்யாவின் சமீபத்திய சென்னை விசிட்டில் என்னையும் இணைத்துக்கொண்டு அன்பு செய்த அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.

டிஸ்கி :
ஒரு வேளை இரவுகளில் தொடர்ந்து பதிவுகள் படையெடுக்கலாம். சில தலைப்புகளை முன்பே தருகிறேன்.. சும்மா ஜாலிக்காக.. யாராவது காப்பியடிச்சீங்கன்னு தெரிஞ்சது தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு.! ‘செல்வேந்திரனுக்காக..’ ‘குறும்படம் எடுப்பது எப்படி?-இறுதிப்பகுதி’ ‘எஸ்.. 5எஸ்’ ‘சொல்லாத வார்த்தைகள்’ ‘கையளவு மொக்கை’ ‘ரமா எழுதும் கடிதம்’..... எதை முதலில் எழுதலாம் என நீங்களே சஜஸ்ட் பண்ணுங்கள்.

.

Sunday, February 22, 2009

நினைத்தாலே ந‌ட‌க்கும்.!

என்னடா இது நினைத்தாலே இனிக்கும் மாதிரி 'நினைத்தாலே ந‌ட‌க்கும்', புதுமையா இருக்கேன்னு நினைக்கிறீங்களா? அல்லது ஏதாவது 'சூ.. மந்திரகாளி' மேட்டர் என நினைக்கிறீர்களா? அதெல்லாமில்லைங்க.. இது ஒரு தன்னம்பிக்கை தரக்கூடிய பதிவு. படிச்சு முடிச்சுட்டு தன்னம்பிக்கை வந்ததான்னு மறக்காமச்சொல்லிட்டுப்போங்க.. முன்னாடியே ஒண்ணு சொல்லிடறேன்.. இந்த தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை, தும்பிக்கை பதிவெல்லாம் எனக்கு பிடிப்பதேயில்லைங்க.. அந்த மாதிரி பதிவுகளோ, புத்தகங்களோ நான் படிப்பதேயில்லை. அதுனால நான் அதப்பத்தி எழுதக்கூடாதுன்னு ஒண்ணும் சட்டமில்லையே.. பாருங்க அதான் சனிக்கிழமை இரவு போஸ்ட் பண்றேன்.

'மனம் போல் வாழ்வு' என்ற வார்த்தைகள் மிகவும் தடித்த எழுத்துகளில் ஃபிரேம் செய்யப்பட்டு அந்த பெரிய வீட்டின் ஹாலில் நுழைந்தவுடனே அனைவரது கண்களில் படும்படி மாட்டப்பட்டிருக்கும். அது என் தாத்தாவின் வீடு. நான் குழந்தையாக இருக்கும் போதிலிருந்து அதை கவனித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது அதன் அர்த்தம் விளங்கவில்லை. விளையாட்டுப்பிள்ளையாக இருந்தபோது 'அதென்ன? மனம்போன போக்கில் வாழ்வதா?' என்று கிண்டல் பண்ணி சிரித்துக்கொள்வேன். இப்போது கொஞ்சம் விளங்கத்துவங்கியுள்ளது...

படிப்பினால் என்ன பிரயோஜனம்? என்ற அரிய சிந்தனை படிக்கும் போதுதான் வரும்ங்க.. எனக்கும் அப்படித்தான். +2வில் அந்த சிந்தனை வந்ததால் அதைத்தவிர அனைத்திலும் கவனம். ஜஸ்ட் பாஸ் பண்ணினால் போதும் என்ற நினைப்பு. அதுதான் நடந்தது 40%. கல்லூரித்துவக்கத்தில் காதல் சிந்தனை. சிறப்பாக நடந்தது காதல். பாடங்களில் ஆரம்ப செமஸ்டர்களில் அதே 40%. காதலை காப்பாற்றவும், வேறு சிந்தனை மாற்றத்திலும் கடைசி வருடத்தின் தேர்வுகளின் சில நாட்களுக்கு முன்னால் ஞானோதயம். ஆபத்து.. 80% த்தை தாண்ட வேண்டும். நடந்தது, நம்புங்கள் 82%.

பெற்றோர்களின் மனப்போராட்டத்தில் காதலை மனதளவில் விட்டுத்தந்தேன். நடந்தது.. வாய்ப்பே இல்லாமல் விட்டுப்போயிற்று. ஏதாவது ஒரு வேலை, கொஞ்ச நாள் இந்த ஊரை விட்டுச்செல்லவேண்டும். நினைத்தேன்.. நடந்தது. ஊரைவிட்டு வந்தேன். நினைத்தது போலவே 'ஏதோ' வேலைதான். சிந்தனையற்ற சில வருடங்கள். ஒன்றுமே நிகழவில்லை.

ம்ஹூம்.. என்னடா இது? நமக்கு பின்னர் வந்தவனெல்லாம் பைக் வைத்திருக்கிறான். நாமும் வாங்க வேண்டும் என நினைத்தேன். நடந்தது. 2000 வாக்கில் நிகழ்ந்த செல்போன் புரட்சியின் போதே அதை வாங்க வேண்டும் என நினைக்கவுமில்லை. வாங்கவும் முடியவில்லை. பின்னர் தாமதமாக நினைத்தேன், வாங்கினேன். அடடா.. வயதாகிக்கொண்டே போகிறதே? கைநிறைய சம்பளம் வேணுமே.. நல்ல வேலை? நினைத்தேன். நடந்தது. கம்ப்யூட்டர் வேணுமே.. நடந்தது. திருமணம்? நடந்தது. என் நண்பர்களெல்லாம் எங்கே தொலைந்து போனார்கள்? மனம்விட்டு பழக ரசனையான நண்பர்கள் வேண்டுமே.. நினைத்தேன். கிடைத்தார்கள்.

நினைப்பதெல்லாமே நடந்தது.. நடக்கும், எண்ணிய எண்ணியபடி நடக்கும்.! எண்ணினால் மட்டுமே நடக்கும். சிறப்பானவற்றையே எண்ணியிருங்கள். சிறப்பாக வாழ்ந்திருங்கள். மனம் போல் வாழ்வு.!

டிஸ்கி : நாம் நம்மைப்பற்றி எண்ணுவது மட்டும்தான் நடக்கும். அடுத்தவர்களைப்பற்றி எண்ணிவிட்டு நடக்கலையே என்று என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது. குறிப்பாக 'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்' என்பது போன்ற எண்ணங்கள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

.

Thursday, February 19, 2009

கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : டாப் 10

இந்தப்பதிவுக்கு எதிர்பதிவு எழுதவில்லை எனில் நாளை இந்த சமூகம் என்னை நிற்க வைத்து கேள்வி கேட்கும் ஆபத்திருப்பதால் கொஞ்சம் பிஸியாக இருக்கும் நேரத்திலும் இதை எழுத நேர்கிறது.. இனி..

1. வார‌த்துக்கு ரெண்டு த‌ட‌வையாவ‌து பால் பொங்கி வ‌ழிவ‌து, மூணு தடவையாவ‌து ப‌ருப்பு அடிபிடிப்ப‌து என‌ உங்க‌ள் வேலையையும் உருப்ப‌டியா செஞ்ச‌தில்லை.. எப்போவாவ‌து இந்த‌ ஷ‌ர்ட்டை ம‌ட்டும் அய‌ர்ன் ப‌ண்ணிக்கொடேன்னு ஒரு சின்ன‌ வேலைத‌ந்தா அதையும் ஓட்டை போடுவ‌து என‌ உருப்ப‌டியா ஒரு வேலையுமே செஞ்ச‌தா ச‌ரித்திரம் இல்லையே.. அது ஏன்?

2. நாங்கள் மறக்கிறோமோ, நீங்கள் மறக்கிறீர்களோ நான்கு முறை க‌டைக்குப் போய் வ‌ந்த‌ பின்னும் ஐந்தாவ‌து முறையும் க‌டைக்கு இர‌க்க‌மில்லாம‌ல் அனுப்ப‌ முடிகிற‌தே.. அது எப்ப‌டி?

3. ஷாம்பூ இன்னும் நாலு நாளைக்குதான் வ‌ரும், .:பேஸ் வாஷ் காலியாகப்போகுதுன்னு எல்லாம் நல்லா பிளான் போட்டு நடக்குதே.. ஒரு மாதமாவது பேப்பர்காரரையும், கேபிள்காரரையும் இரண்டாவது தடவை அலையவைக்காமல் பணம் தந்ததுண்டா?

4. டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதோ, ச‌மைத்துக்கொண்டிருக்கும் போதோ உங்க‌ளுக்கு திடீரென‌ தோன்றும் அரிய‌ சிந்த‌னைக‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ நாங்க‌ள் ம‌ட்டும்தான் கிடைத்தோமா? ந‌ண்ப‌ர்க‌ளோ, ரிலேடீவ்ஸோ உங்க‌ளுக்கு கிடைய‌வே கிடையாதா?

5. உற‌வுச்சிக்க‌ல்க‌ள் நிறைந்த‌ சீரிய‌ல்க‌ளை பார்ப்ப‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல் அத‌ன் க‌தைக‌ளை இனிய‌ இர‌வுக‌ளில் எங்க‌ளோடு ப‌கிர்ந்துகொள்ள‌த்தான் வேண்டுமா? அதையும் க‌வ‌னத்தோடு க‌வ‌னிக்க‌வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்ப‌டி?

6. ஒரு இஞ்ச்சுக்கு ப‌வுட‌ர் அப்பிக்கொள்ளும் போதும், ப‌ட்டுப்புட‌வை க‌ட்டிக்கொள்ளும் போதும் உங்க‌ள் முக‌த்தில் இருக்கும் டென்ஷ‌ன், கான்சென்ட்ரேஷ‌ன், எங்க‌ளுக்கு ஒரு பிர‌ச்சினைன்னா ஏன் இருக்க‌ மாட்டேங்குது?

7. ஏதாவது முக்கிய அலுவலகச்சிக்கலை பற்றி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம மூஞ்சிய வெச்சுக்கறீங்க?

8. எங்க‌ வீட்டுக்குப்போய் இர‌ண்டு நாள் ஆவ‌த‌ற்குள் 'போலாம்.. போலாம்'னு அவ‌ச‌ர‌ப்ப‌டுத்துற‌ நீங்க‌ உங்க‌ வீட்டுக்குப்போய் இருப‌து நாள் ஆன‌பிற‌கு 'கிள‌ம்ப‌லாம்'னு சொன்னாலும்கூட‌ 'ஏங்க‌.. அவ‌ச‌ர‌ப்ப‌டுத்துறீங்க‌?'க‌ங்கிறீங்க‌ளே.. அது ஏங்க.?

9. நாங்க ரசிச்சு வாங்கி வருகிற புடவை, அதெப்படி உங்ககிட்ட ஏற்கனவே இருக்கிற கலர்லேயோ, டிஸைனிலேயோ அமைந்துவிடுகிறது? அதே மாதிரி என்னைக்காவது வாங்கிவருகிற மல்லிகைப்பூவில் கூட வாடிப்போச்சு, எண்ணிக்கை கம்மியா இருக்குதுன்னு எப்படிங்க‌ உங்களால் குறை சொல்ல முடியுது?

10. சினிமாவுக்கு கிள‌ம்பும் போது ம‌ட்டும் 'லேட்டாச்சு.. லேட்டாச்சு'ன்னு குதிக்கிறீங்க‌ளே.. திரும்பி வரும்போது ஹோட்டலுக்குப் போகலாமா, பீச்சுக்குப்போகலாமான்னு சிந்தனை வருகிறதே தவிர‌ 'வீட்டுக்குப்போக‌ணும் லேட்டாவுது'ன்னு குதிக்க‌ வேண்டாம், லேசாக‌ தோண‌க்கூட‌ மாட்டேங்குதே உங்க‌ளுக்கு.. ஏங்க?


.

Tuesday, February 17, 2009

ஐ மிஸ் யூ ரமா..

டியர்,

'மதுரக்கார மச்சானுக்கு' பாடல் இப்போதெல்லாம் டிவியில் ஒலிப்பதேயில்லை.. நித்யஸ்ரீயின் 'கானமழை'தான் பொழிகிறது பிளேயரில்..நீயில்லை ரமா..

முந்தைய தடவையின் 2.50 பாக்கியை நான் மற‌ந்து போவதால் தவறாது வந்துவிடுகிறார் அயர்ன் செய்து தருபவர்.. உடை எப்போதும் தயாராக இருக்கிறது.. நீயில்லை ரமா..

வீட்டின் பின்புறம் தவளைகளும், வீட்டினுள்ளே பல்லிகளும் பயம் மறந்து சுதந்திரமாக உலாவருகின்றன.. நீயில்லை ரமா..

த‌டையேதும் இல்லாம‌ல் தூக்கம் வரும் வரை புத்த‌க‌ங்க‌ள் வாசிக்க‌முடிகிற‌து.. நீயில்லை ர‌மா..

அலுவ‌ல‌க‌த்தில் எவ்வ‌ள‌வு நேர‌ம் தாம‌த‌மானாலும் எந்த‌ யோச‌னைக‌ளும் இல்லாம‌ல் இருக்க‌முடிகிற‌து.. நீயில்லை ர‌மா..

ஷாப்பிங் தொல்லையில்லை, தொணதொணப்பில்லை, வாக்குவாதமில்லை..
படுக்கும்போது லேசாக பசிப்பதைப்போல தோன்றினாலும் சாப்பிட எதுவுமே இருப்பதில்லை.. நீயில்லை ரமா..

க‌ண்க‌ள் ப‌னிக்கிற‌து.. ஐ மிஸ் யூடி..

(உன் வ‌ர‌வின் வ‌ழி பார்த்திருக்கும்)

அப‌லைக்க‌ண‌வ‌ன்.
.

Monday, February 16, 2009

குறும்படம் எடுப்பது எப்படி? (பகுதி 3)

பகுதி 1 பகுதி 2

முதலிரண்டு பாகங்களில் ஒரு குறும்படம் எடுப்பதற்கான அடிப்படைத்தேவைகள் என்ன? கதை, நடிகர்கள், லொகேஷன் போன்றவற்றை எப்படி முடிவு செய்வது? பின்னர் எப்படி ஷூட்டிங் நடத்துவது? நடிகர்களிடம் எப்படி உணர்ச்சிகளை கொப்பளிக்கச்செய்வது? அதற்கும் பின்னர் எடிட்டிங் மற்றும் பிற்சேர்ப்பு விஷயங்களைச் செய்வது எப்படி என்பதெல்லாம் குறித்து விளக்கமாக பார்த்தோம். இருப்பினும் அது தியரி மட்டுமே என்பதாகவும், செய்முறை உதாரணம் வேண்டுமென்பதாகவும் சில நண்பர்கள் விரும்பினார்கள். ஆகவே எப்படி ஒரு குறும்படம் எடுக்கப்படுகிறது என்பது குறித்த நமது சொந்த அனுபவத்தையே நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடருங்கள்..

முதலில் நமக்கு ஏன் இந்த விபரீத எண்ணம் தோன்றியது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சென்னை எனில் அலுவலகம், வீடு இவ்விரண்டு இடங்களுக்கும் செக்குமாடு போல சுற்றிக்கொண்டிருக்கவே நமக்கு நேரம் சரியாக இருக்கும். போதாததற்கு இப்போ பிளாக் வேறு இருக்கிறது. ஆனால் இத்தனை நீண்ட விடுப்பில் முழு சுதந்திரத்தோடு ஊருக்கு வந்திருக்கிறோம். பொங்கல் கொண்டாடி முடித்தாயிற்று. ரமாவை தாயார் வீட்டுக்கு அனுப்பியாயிற்று. என்ன பண்ணலாம்.? ஊரிலிருக்கும் பால்ய நண்பர்களில் பாதிப்பேரைக்காணவில்லை. மீதியிருப்போர் வயலுக்கும் வேலைக்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நண்பரிடமிருந்து வாங்கிச்சென்ற காமிராவில் வீடு, ஊரைச்சுற்றியுள்ள பூக்களையும், காட்சிகளையும் படம் எடுக்கத்தொடங்கினோம். அதையும் மீறி போரடிக்கத்துவங்கிய போதுதான் இந்த விபரீத எண்ணம் தோன்றியது. அன்றிலிருந்து 'இங்க லீவுல வந்திருக்கும்போதாவது வீட்ல இருந்தமா? ரெஸ்ட் எடுத்தமான்னு இல்லாம ரெண்டு பேரும் காமிராவை வெச்சுக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு கிடக்கிறீங்கன்னு..' என்று தினமும் அம்மாவிடம் பாட்டு வாங்கிக்கொள்ளுமளவு பிஸியாக ஆயாச்சு.

அரிதிலும் அரிதாக நமது தம்பியும் அதே போல நீள்விடுப்பில் வந்திருந்தது வசதியாகிவிட்டது. அவரும் மிக போரடித்து இருந்ததின் விளைவாக‌ காமிராமேன் மற்றும் அசிஸ்டெண்ட் இயக்குனர் என்ற பதவிகள் வழங்கப்பட்டன. இந்த பணிக்கு படத்தின் பெயராக முதலில் 'கற்பகம்' என்பதாக முடிவு செய்திருந்ததால் 'பிராஜக்ட் கற்பகம்' என்று பெயரிடப்பட்டது. (நமது காதல் நினைவுகளால் எப்படியாவது இப்படி ஒரு பெயரை படத்துக்காவது வைக்க முயற்சிப்போம், அது டிஸ்கஷனில் தோல்வியடைந்து பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிடும்) இனி..

டிஸ்கஷன் :

முந்தைய பாடங்களில் சொன்னது போலவே இதுதான் மிக சிக்கலான பகுதியாக இருந்தது எங்கள் பிராஜக்டில். பிறகு நானே மிகுந்த சிந்தனை வயப்பட்டு எங்களிடம் உள்ள வசதிகளை கணக்கில் கொண்டு ஒரு கதையை உருவாக்கினேன். சிரிப்புக்கதை இல்லை என்பதால் சிரிக்காமல் சீரியஸாக கேட்டுக்கொண்டு வரவும்.

ஒரு ஊரில் முத்து முத்து என்று ஒரு விவசாயி இருக்கிறான்.. (அதற்குள் என்ன சிரிப்பு?). அவன் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு குடும்பத்தொழிலான விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீடு, வாசல், தோட்டம், வயல்கள் என ஓரளவு வசதியான விவசாயிதான். அவனுடன் பத்தாங்கிளாசில் ஒன்றாக படித்த பக்கத்து ஊரைச்சேர்ந்த அவனின் நண்பன் தொடர்ந்து நன்கு படித்து முன்னேறி இப்போது சென்னையில் பணிபுரிந்துகொண்டிருக்கிறான். அவன் ஏதோ உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊருக்கு வருகிறான் மனைவி பிள்ளைகளுடன். (நல்லா கவனிக்கவும், பொங்கல் லீவெல்லாம் இல்லை) சரி இதெல்லாம் முக்கியமேயில்லை.. இது கதையின் பின்புலம்தான், இது ஸ்கிரீனில் வராது. இனிதான் கதையே..

சென்னையிலிருந்து வந்த முத்துவின் தோழன் (சுந்தர்) தனது 12 வயது மகளான பிரியாவுடன் பைக்கில் முத்துவின் ஊரைக்கடந்து இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்லக்கூடிய சூழல். அப்படியே நண்பனையும் பார்த்துவிட்டுப்போக திட்டமிட்டு நண்பன் வீட்டுக்கு வருகிறான். முன்பே திட்டமிட்டிருந்ததால் முத்துவின் 12 வயது மகனான கணேஷுக்கு பரிசாக ஒரு பெரிய ரிமோட் காரை வாங்கிக்கொண்டு வருகிறான். நண்பனைப்பார்த்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பிரியாவை கணேஷுக்கு பரிசளிக்கச்சொல்கிறான். அவளும் அதை அவனிடம் தந்து எப்படி விளையாடுவதென அவனுக்குச் சொல்லித்தந்து விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

சிறுவர்கள் விளையாட, பெரியவர்கள் இருவரும் நீண்ட பிரிவுக்குப்பின் நேர்ந்த சந்திப்பாதலால் தன்னை மறந்த மகிழ்ச்சியில் உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீண்டும் கிளம்ப இரண்டு மணி நேரமாகிறது. (இதுதான் கதை நிகழும் நேரம்) விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அப்படியே தோட்டத்திற்கு சென்று புளியமரத்தடியில் விளையாடுகிறார்கள். புளியமுத்துக்களை வைத்து ஒரு விளையாட்டை பிரியாவிற்கு சொல்லித்தருகிறான். அது அவளை மிகவும் கவருகிறது. பின்னர் வீடு திரும்புகிறார்கள். அதற்குள் சுந்தரும் ரெடியாகியிருக்க கிளம்ப ஆயத்தமாகிறார்கள். வண்டியில் ஏறி வண்டி கிளம்புகையில் தன்னிடமிருந்த சில புளியமுத்துக்களை கணேஷிடம் தருகிறாள் பிரியா. 'அவனோ இது உனக்குதான்' என்று தன்னிடமிருந்த மீத முத்துக்களையும் சேர்த்து திருப்பியளிக்கிறான். பிரியாவிடமும் கணேஷிடமும் ஒரு புதிய நட்பைப்பிரிகிற துக்கம் நிழலாட வண்டி கிளம்புகிறது.. (எப்புடி..? எந்த ரிமோட் காரும், புளியங்கொட்டைகளுக்கு ஈடு ஆகாது என்று கதையின் அடிநாதத்தை பிடித்துவிட்டீர்கள்தானே.? புல்லரித்திருப்பீர்களே..)

இரண்டு நாட்கள் டிஸ்கஷனுக்குப்பின்னர் நான் முதலில் திங்க் பண்ணிய கதை மேற்கண்டவாறு ஒருவழியாக ரெடியானது. கதையில் திருப்தியடைந்த அசிஸ்டென்ட் (தம்பி) திரைக்கதை, வசனத்தை நீயே பார்த்துக்கொள் என்று பிற ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று விட்டார். ஒரு டைரியில் அழகான கையெழுத்துடன் ஆரம்பிக்கப்பட்டு அடித்து அடித்து எழுதி சுமாரான‌ கையெழுத்துடன் தொடர்ந்து இறுதியில் கோழி கிறுக்கலில் திரைக்கதை, வசனம் எழுதிமுடிக்கப்பட்டது.

நடிகர் தேர்வு :

அடுத்து எங்களுக்கு சவாலாக அமைந்த விஷயம் நடிகர்கள் தேர்வு. மொத்தம் நாலே காரெக்டர்கள். 35 வயதில் கிராமத்து ஆள் ஒருவர், சிட்டி ஆள் ஒருவர், 12 வயதில் கிராமத்துப்பையன் ஒருவன், சிட்டி சிறுமி ஒருத்தி. ம்ஹூம் முடியலை.. தம்பியின் நண்பர் ஒருவரையும், அவரது அண்ணன் பையன் ஒருவனையும் கிராமத்து போர்ஷனுக்கு பிக்ஸ் பண்ணினோம். அவர்களும் சண்டேஸ் மட்டும்தான் கால்ஷீட் தரமுடியும் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்கள். ஆள் கிடைக்காத லட்சணத்தில் நடிப்புச்சோதனையெல்லாம் பண்ணவில்லை. அப்படியே பிக்ஸ் பண்ணிவிட்டேன். சிட்டி போர்ஷனுக்குதான் ஆளே கிடைக்கவில்லை. நான் நினைத்தமாதிரி முகமே கிடைக்கவில்லை. உறவுகளில் சிறுமிகள் சோதனையாக 10 வயதுக்கு கீழாகவோ 15 வயதுக்கு மேலாகவோ இருந்தனர்.


தொடரும்..

(ஸாரி பிரெண்ட்ஸ், 3 பாகத்தில் முடிச்சுடலாம்னுதான் நினைச்சேன்.. பாருங்க எவ்வளவு பெருசாப்போயிடுச்சுன்னு. அடுத்த பாகத்தில் கண்டிப்பாக முடிச்சுடுறேன்)

Friday, February 13, 2009

வெயிலில் வழிந்த காதல்..


அமிழ்த்துகின்ற காதலிலும் புரிகிறது
இது காலமல்ல‌
இருப்பினும்
நான் வெடித்துப்போகும் ஆபத்திருக்கிறது
உன் கண்கள் அழைத்தாலும்
மொழிகள்
என்னோடு கண்ணாமூச்சி
விளையாடிக் கொண்டிருக்கின்றன‌
அந்த மாலையின்
இளவெயில் வேளையில்
பின்புற வாசற்படியில் பேசிக்கொண்டிருக்கிறோம்
நான் அந்த வெயிலில் இருந்துதான்
கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தேன்
காதலைச் சொல்வதற்கான முதல் வார்த்தைகளை..
'எனக்கு உன்ன பிடிச்சிருக்கு'

பி.கு : எப்போவாவது வெளியிடும் குட்டிக் காதல் கவிதைகள் சிலபல வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த போது எழுதியவையே. இது காதலர்தின ஸ்பெஷலாக உங்களை மிரட்ட புதிதாக எழுதியதாகும். இதை 'யூத்ஃபுல்' விகடனில் வெளியிட்டு அவர்களும் வாசகர்களை மிரட்டியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி. நன்றிகள் விகடனுக்கு.. காதலர்தின வாழ்த்துகள் காதலிப்போருக்கு (கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே)..

.

Thursday, February 12, 2009

தமிழ்மணம் 'விருதுகள் 2208'


தமிழ்மணம் 'விருதுகள் 2008' ஆரம்பிச்சப்போ ரொம்ப ஆவலா கலந்துகிட்டவன் நான். முதல் அறிவிப்புல, 'முதல் கட்ட வாக்கெடுப்புக்கு ஏழே நாள்.. இதோ துவங்கிரும். மறுநாளே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அதுக்கு ஏழே நாள்தான். உடனே முடிவு.. ஜல்தி ஜல்தி.. பொங்கலுக்குள் விருதுகளும், பரிசுகளும்'னு ஒரே பரபரப்பு. என்னாங்கடா இது நம்மூரில இவ்வுளவு ஃபாஸ்டா ஒரு காரியமான்னு நானும் பிரமிச்சுப்போயிட்டேன்.

அப்புறம் பாத்தா வாக்கெடுப்பு துவங்கறதுக்குள்ளேயே இதோ அதோன்னு.. இழுத்தடிச்சு.. ஆரம்பிச்சு.. வாக்கெடுப்ப நீட்டிச்சு.. அப்புறம் நீ...ட்டிச்சு.. அறிவிப்பு வெச்சு, கடைசியில அதுவும் காணாமப்போயி.. நாட்கள் வாரமாகி வாரங்கள் மாதங்களாக.. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடக்குமா? ஆயிரம் சொன்னாலும் நம்ப படைப்பு வருதோ இல்லியோ.. டாப் 10 பட்டியல்னா ஒரு கிளுகிளுப்புதான் இல்லியா? யாரு யாரு இடம்பிடிச்சிருக்கான்னு பார்க்க ஆர்வம் இருக்காதா.? அடப்போங்கப்பா.. 2009 பொங்கலுக்குள்ளயாவது அடுத்த அறிவிப்பு வருமா?

டிஸ்கி :

சும்மானாச்சுக்கும்.. தமிழ்மணத்தை சீண்டி நாளாவுதுல்ல.. நமக்கு புடிச்ச பொழுது போக்கு இல்ல.. அதான்.! இன்னிக்கு போட்ட பதிவு அவ்வளவா ஹிட் ஆவலே..(எனக்கு ரொம்ப புடிச்ச மேட்டருங்க.. அதான் நமக்கு புடிச்சிருந்தா கவுத்திடுவீங்களே.. தெரியாததா எனக்கு) அதான் ஜாலியா இந்த மொக்கைப்பதிவு. (உடனே இது மட்டும்தான் மொக்கையா என்று சிலர் சண்டைக்கு வருவாங்களே.. சரிப்பா, இதுவும்.!)

.

லாரா கிராஃப்ட் : ஒரு சாதனைப்பயணம்

நான் அந்த சின்ன மலைக்குன்றிலிருந்து பார்த்தபோது தூரத்தில் மலைக்காடுகளின் ஊடே ஒளிந்திருந்த அந்த பாழடைந்த கோயிலும் அதன் முன்னே அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த சிவன் சிலையும் தெரிந்தது. இவ்வளவு தூரத்திலிருந்தே தெளிவாக தெரிவதிலிருந்து அந்த சிலை எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை உணரமுடிந்தது. பைனாகுலர்ஸ் மூலமாக பார்த்தபோது அந்தக்கோயிலை மறைத்தவாறு
ஒரு மிகவும் சிதிலமடைந்த மண்டபத்தை காணமுடிந்தது. மண்டபத்தின் சுவர்களிலும், மேற்புறத்திலும் செடிகொடிகள் அடர்ந்திருந்தன. சிதிலமடைந்திருந்த தூண்கள். நேரத்தைப்பார்த்துக்கொண்டேன். விரைந்து செல்லவேண்டும், நேரம் குறைவாகவே உள்ளது. நான் தேடிக்கொண்டிருப்பது அந்தக்கோயிலுக்கு அடியில்தான் புதையுண்டுள்ளதா? அடர்ந்த காடுகளுக்குள் விரைந்தேன். நான் மண்டபத்தை அடைந்தபோது சூரியன் சாயத்தொடங்கியிருந்தது. மண்டபத்தின் பிரமாண்ட கதவுகள் அடைபட்டிருந்தன. அருகிலிருந்த அந்த லிவரை இயக்கிப்பார்த்தேன். ம்ஹூம்.. முடியவில்லை. மண்டபத்தை எப்படித்தாண்டிச்செல்வது? தூரத்துக்குன்றிலிருந்து பார்த்தபோது பளீரென்ற நீல வானமும், பச்சைப்பசலேன்ற மரங்களுமாய் இயற்கை அழகு கொஞ்சிய இடம் இப்போது இருள் கவியத்துவங்கியதால் மர்மதேசமாக மாறத்துவங்கியிருந்தது. உள்ளுணர்வு எச்சரித்தது. ஆபத்து சூழ்ந்திருக்கிறது, விரைந்து மண்டபத்தை கடந்து கோயில் வாசலுக்கு செல்லும் வழியைத்தேடு. துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். க்ர்ர்ர்ர்ர்.. சற்றும் எதிர்பாராத விதமாய் ஒரு ஜாகுவார் அந்த பெரிய மரத்துக்குப்பின்னாலிருந்து பாய்ந்தது. விலகி தூர விழுந்தேன். எழுந்து துப்பாக்கியை எடுப்பதற்குள் இன்னொன்றும் கண்கள் பளபளக்க பாயத்தயாராக இருப்பதைக்கண்டேன். ம்ஹூம்.. இது சண்டைக்கான நேரமில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தூணில் கால்வைத்து அருகில் அதைவிட சற்று பெரிய தூணில் தாவி ஏறினேன். அதற்கும் அடுத்த தூணில் ஏறிவிட்டால் பாதுகாப்பாக இருக்கும். அட அந்ததூணில் இருந்து ஒரு மரத்துண்டு மண்டபத்தின் மேற்கூரைக்குசெல்கிறதே.. ஏறிவிட்டால் உள்புறமாக இறங்குவதற்கு வழி ஏதும் இருக்கிறதா எனப்பார்க்கலாம். இதிலிருந்து அந்தத்தூணுக்கு தாவிவிடமுடியமா? தூணின் உச்சத்திலிருந்து யோசித்துக்கொண்டிருந்தேன். கீழே தூணுக்கு அடியில் பசியுடன் ஜாகுவார்கள் உறுமிக்கொண்டே அலைந்துகொண்டிருந்தன..மேற்கண்ட பத்தி ஒரு கதை. இதைப்போன்ற ஒரு ரிஸ்கியான திரில் பயணத்தை தன்னந்தனியாக உங்களால் மேற்கொள்ளமுடியுமா?

என்னால் அதிகபட்சமாக ஒரு பௌர்ணமி நாளில் பைக்கில் தனியாக சென்னையில் இருந்து கிளம்பி மகாபலிபுரம் சென்று இரவு நேரத்தில் (எட்டுமணி) கடற்கரையில் அமர்ந்தவாறே நிலா பின்னணியில் கடற்கரைக்கோயிலை ரசித்துவிட்டு வரமுடியும். எட்டரைக்கெல்லாம் கிளம்பினால்தான் 11 மணிக்கு வீடு வந்து சேரமுடியும். இதற்கும் ஆர்சி புக், லைசென்ஸ், இன்ஷ்யூரன்ஸ், ஹெல்மெட் எல்லாவற்றையும் செக்பண்ணி எடுத்துக்கொண்டு, வண்டி கண்டிஷன், நமது கண்டிஷன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் கிளம்பவேண்டும். அப்படியும் வீடு வந்தவுடன் நிற்கமுடியாத அளவில் முதுகு வலிக்கும். நமது ஃபிட்டை நினைத்து புல்லரித்துக்கொண்டே தூங்கிவிடலாம். இதுதான் நம்மால் முடிந்த அதிக பட்ச சாதனை, திரில், அட்வென்சர் எல்லாம்.இந்த ட்ரெக்கிங், ட்ரெக்கிங் அப்பிடிங்கிறாங்களே அப்பிடின்னா என்ன.? நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய மனுஷங்க என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்.. சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு தொப்பையை வளர்த்துக்கொண்டு.. திரில்லிங்கா எங்காவது போய் வரலாமய்யா.. ஏற்பாடு பண்ணுங்களேன். பெருசுங்கதான் இப்பிடின்னா ஸ்ரீ, கார்க்கி போன்ற சின்னப்பசங்களோ சோம்பல்ஸ் திலகங்களாக இருக்கின்றன. (என்னை விட தொப்பை இந்த இருவருக்கும் அதிகமென்கிற வரலாற்று உண்மையை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.) ஆனால் ‘இன்னைக்கு செஷன் வச்சுக்கலாமா’ என்று போன் செய்தால் போதும். மாற்றுக்கருத்தே இருக்காது. ‘சைட்டிஷ் நோட் பண்ணிக்குங்க.. ஆறு மணிக்கெல்லாம் டாண் என்று வந்துடுவேன்’ என்பார்கள். அவ்வளவு சுறுசுறுப்பு. சரி, பேச்சு திசை மாறிப்போகிறது. விஷயத்துக்கு வருவோம்.மேற்சொன்ன கதை, “லாரா கிராஃப்ட் - டோம்ப் ரைடர் : அண்டர்வேர்ல்ட்” கம்யூட்டர் கேமில் வரும் ஒரு காட்சி. ஏற்கனவே நான் எழுதிய ‘கால் ஆஃப் டியூட்டி’ கேமைப்பற்றிய பதிவைக்கண்டிருப்பீர்கள். அதைப்போலவே இன்னொரு அற்புதமான கேம் இது. அது ஷூட்டர் வகையைச்சார்ந்தது. போர், வன்முறை என தவிர்க்க நினைப்பவர்கள் ‘டோம்ப் ரைடர்’ போன்ற அட்வென்சர் வகைகளை தேர்ந்தெடுக்கலாம். இதில் மேலும் மேலும் மெருகேறிவரும் கிராபிக்ஸ் சாதனைகளை கண்டு உணரலாம். லாராவின் டிஸைன், லாரா சுற்றுப்புறத்தோடு கொள்ளும் தொடர்பு (Interaction) பிரமிக்கத்தக்க அளவில் உள்ளது. விதம்விதமான அட்வென்சர்ஸ்.. நல்ல கோர்வையான கதை. தேவையான இடங்களில் Save points. பல இடங்களில் சுவாரசியமான புதிர்கள். குறைந்த பட்சம் 10 மணி நேரங்களில் முடித்துவிடக்கூடிய அளவில் எளிமை. நீங்களும் முயற்சித்துப்பாருங்கள். சினிமா வேறு. கேம் வேறு. டிவியை மொக்கையாக பார்த்துக்கொண்டிருப்பதைவிட மூளைக்கு சரியாக வேலைகொடுக்கும் கேம்கள் ஆயிரம் மடங்கு உயர்ந்தவை என கருதுகிறேன். உட்கார்ந்தே விளையாண்டாலும் அட்லீஸ்ட் மனதளவிலாவது ஒரு நீண்ட சாதனைப்பயணம் மேற்கொண்ட திருப்தி கிடைக்கும். வேறு வழி.?

.

Wednesday, February 11, 2009

குறும்படம் எடுப்பது எப்படி? -பகுதி 2


(படிக்காதவர்கள் பாக‌ம் 1ஐ பார்த்துவிட்டு வந்துவிடவும். இதுவும் யூத்ஃபுல்விகடனில் இணைப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌திவு. விக‌ட‌னுக்கு ந‌ன்றி.)

ஷூட்டிங் :

எல்லாம் தயாராகிவிட்டதால் அடுத்து ஷூட்டிங்தான்... முன்னதாக காட்சிகளைச்சொல்லி நடிகர்களை பிராக்டிஸ் பண்ணச் சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் முன்னிலையில் ரிகர்சல் பாருங்கள். நல்ல ஒரு சண்டேயாக பார்த்து நடிகர்களுடன் லொகேஷனுக்கு கிளம்புங்கள். உதாரணமாக பக்கத்தில் உள்ள பிளே கிரவுண்டில் ஷூட்டிங் என்றால் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ், வாட்டர் பாட்டில் சகிதம் கிளம்புங்கள். அதற்காக பிக்னிக் போகிற எபெஃக்ட் வேண்டாம். இதுக்குதான் சொன்னேன், ஷூட்டிங் ஸ்பாட் வீடாக இருந்தால் சாப்பாட்டு பிரச்சினை இருக்காது. மறக்காமல் திரைக்கதை, வசனம் எழுதிவைத்த டைரி எடுத்துக்கொள்ளுங்கள். காமிராவில் பாட்டரி ஃபுல்லாக சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மெமரி கார்ட், அல்லது டிவைஸின் கொள்திறன் எவ்வளவு என்பதையும் எவ்வளவு நேரம் தாங்கும் என்பதையும் முதலிலேயே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சாப்பாட்டுக்கு முன்னர் 40% ஷூட்டிங் முடிச்சுடணும்னு ஸ்ட்ரிக்டா இருங்க. நீங்கள் நடிகர்களுக்கு காட்சிகளை விளக்க, உங்கள் நண்பர் காமிராவைப் பிடிக்கட்டும். சினிமா மாதிரி ஆக்ஷன், கட் என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

                         (படமெடுக்குற இயக்குனரையே படமெடுக்கறாங்கப்பா)

   பொதுமக்களுக்கு நீங்கள் யாரோ நண்பர்கள் பேசிக் கொண்டிருப்பது போலவோ, போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போலவோ தோன்றும் படி நடந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் எந்த விதமான் பிற உபகரணுங்களும் (பெரிய ஸ்டாண்டுகள், விளக்குகள், பெட்டிகள், வண்டிகள், கூட்டம்) இல்லாமல் எப்படி ஷூட்டிங் செய்கிறார்கள் என்று உங்களை கேலி செய்து அவமானப்படுத்திவிடுவார்க‌ள்.

  அடுத்து உங்க‌ள் திரை‌க்க‌தை சொல்வ‌தைப்போல‌ வ‌ரிசைக்கிர‌ம‌மாக‌ காட்சிக‌ளை எடுக்க‌த்துவ‌ங்குங்க‌ள். அதே காட்சியை மீண்டும் மீண்டும் ந‌டிக்க‌ச்சொல்லி காமிராவை வேறு வேறு ஆங்கிளில் வைத்து எடுத்துக்கொள்ளுங்க‌ள். அப்போதுதான் எடிட்டிங்கில் ஜும்மா வேலைகள் காட்டி பிரமாதப்படுத்த வசதியாக இருக்கும். நீண்ட காட்சிகளாக இல்லாமல் குட்டிகுட்டி காட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்று பிறகு சொல்கிறேன். இப்போது உங்களுக்கு ஒரு பிரச்சினை துவங்கியிருக்கும். அதாவது பர்ஃபாமென்ஸ். நீங்கள் எவ்வளவு விளக்கமாக கூறினாலும் உங்கள் தம்பி (ஹீரோ) சோகமாக சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற‌ காட்சியில் சொதப்பிக்கொண்டிருப்பார். நான்கு நாள் தாடி வைத்துக்கொண்டு சிகரெட்டை ஒழுங்காக பிடித்தாலும், முகத்தில் சோகம் மட்டும் வராது. காமிராவை பார்க்காதே என்று எத்தனை தடவை சொன்னாலும் அரை நிமிடம் நடித்துவிட்டு எப்பிடிடா என்று நம்மை/காமிராவைப் பார்த்து வழிவார். எப்பிடியாவ‌து போராடி அவர் த‌ண்ணிய‌டிப்ப‌தை வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவ‌‌தாக‌ கூறி ப‌ய‌முறுத்தி அவரை சோக‌மாக்கி காட்சியை எடுங்க‌ள். அது சோக‌த்துக்குப் ப‌திலாக‌ கோப‌ உண‌ர்ச்சியாக‌ மாறியிருக்கும். க‌தையில் உண‌ர்ச்சி மாறினால் ப‌ர‌வாயில்லையா என்று யோசித்துக்கொண்டு எடுத்துத் தொலையுங்க‌ள். இப்போது உங்கள் அசிஸ்டென்ட் நண்பர் 'இவனைப் போட்டதுக்குப் பதிலா நானே நல்லா நடிச்சிருப்பேன்டா' என்பார். இந்த வசனத்தை உங்கள் பிராஜக்ட் முழுவதும் கேட்க வேண்டி வரும் என்பதால் டக்கென்று ஒரு ஐடியா பண்ணி ஒரு காரெக்டரில் நடிக்க அவரை கமிட் பண்ணி நடிக்கச்சொல்லி காமிராவை அவரைப் பார்த்து திருப்பிவிடுங்கள். மூஞ்சி வேர்த்து வழிக்கு வந்துவிடுவார்.

   இத‌ற்குள் எடுத்த‌ காட்சியை உட‌னுக்குட‌ன் ஓட‌ விட்டு கிளான்ஸ் பார்த்துக்கொள்ளுங்க‌ள். ஏனெனில் முகத்தை எடுக்கச்சொன்னால் மூக்குக்கு கீழே எடுத்து வைத்திருப்பார் உங்கள் அசிஸ்டென்ட். முழு உருவத்தை எடுக்கச்சொன்னால் மண்டை மட்டும் இருக்காது. அவர் ரொம்பப்படுத்தினால் காமிராவை நீங்களே பிடித்துக்கொண்டு ஃபீல்டை அவரை பார்க்கச்சொல்லுங்கள்.

   வேறு பைக்குக‌ள், சைக்கிள்க‌ள் ஃபீல்டில் இருந்தா க‌வ‌ன‌ம். டக்கென்று எடுத்துச்சென்றுவிடுவார்கள், நீங்கள் காட்சியை திரும்ப எடுக்கவேண்டிவரும். இப்ப‌டியே கொஞ்ச‌ நேர‌ம் போராடிக்கொண்டிருந்த‌தில் காமிராவில் பேட்ட‌ரி ப‌டுத்திருக்கும். எரிச்ச‌லில் வீட்டுக்குப்போய் சார்ஜ் போட்டுக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு, அப்ப‌டியே எடுத்த‌ கிளிப்பிங்ஸை அன்லோட் ப‌ண்ணிவிட்டு வ‌ர‌லாம் என‌ கிள‌ம்பிவிடுங்க‌ள், வேறு வ‌ழியில்லை. ந‌டிக‌ர்களை மாலை 4 ம‌ணிக்கு ரெடியாக‌ச்சொல்லி எச்ச‌ரித்துவிட்டு செல்லுங்க‌ள்.

   எல்லோரும் ரெடியானவுடன், 'நான்கு ம‌ணிக்கு வ‌ர‌முடியாதுடா. ஃப்ரெண்ட்ஸ் 'ச‌த்ய‌மில்' டிக்கெட் போட்டுருக்காங்க‌' என்பார் உங்க‌ள் த‌ம்பி. 'வெளாடுறியா.. மிதிச்சு ந‌வுட்டிருவேன் உன்ன..' என்று மிர‌ட்டி அழைத்துச்செல்லுங்க‌ள். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் வேறு கும்ப‌‌ல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் விஷ‌யத்தை சொல்லியும் சொல்லாம‌லும் அவ‌ர்க‌ளை கிளிய‌ர் ப‌ண்ணும் போது மணி ஐந்தாயிருக்கும். இப்போது உங்க‌ள் அசிஸ்டென்ட், 'பாருடா.. காலையிலே சூரிய‌ன் இவ‌ன் முக‌த்ல‌ ப‌ளிச்சுன்னு அடிச்சுது.. இப்போ ட‌ல்லா இருக்குது' என்று டெக்னிக‌ல் ச‌ந்தேக‌த்தை கிள‌ப்புவார். ப‌ர‌வாயில்லை, அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் சாதார‌ண‌ம் என்று ஷூட்டிங்கைத் துவ‌க்கிவிடுங்க‌ள். ஆறு மணிவ‌ரைதான் முடியும். பார்த்தால் 10% கூட‌ முடிந்திருக்காது.

   ம‌றுநாள் ம‌திய‌த்துக்கு மேல் அரை நாள் லீவு போட்டு வ‌ந்து மின்ன‌ல் வேக‌த்தில் முடித்துவிட்டால் என்ன‌ என்று தோன்றும். நான்கை‌ந்து பேர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் அது நிச்ச‌ய‌ம் முடியாது. பொறுமை ரொம்ப‌ அவ‌சிய‌ம். அடுத்த‌ ஞாயிறு பார்க்க‌லாம் என்று 'பேக்க‌ப்' செய்துவிடுங்க‌ள். அடுத்த‌ ஞாயிற‌ன்று ம‌ற‌ந்துபோய் உங்க‌ள் த‌ம்பி எழுந்த‌வுட‌ன் ப‌ள‌ப‌ள‌வென்று ஷேவ் செய்திருப்பார். அன்று அவ‌ர் போட்டிருந்த‌ ச‌ட்டையை ஒருவாரம் கழித்து இன்றுதான் சோப்பு நீரில் ஊற‌ வைத்திருப்பார் உங்க‌ள் த‌ங்க‌ம‌ணி. அவர்களை நம்பாத ஒரு வேலையிலும் கச்சிதமாக தலையிட்டு தொல்லைதர அவர்களை மாதிரி வேறொருவர் உளரோ.? உங்க‌ளுக்கு லேசாக‌ த‌லை சுற்றிக்கொண்டு வ‌ரும்.

    வேறு வ‌ழியில்லாம‌ல் அந்த‌க்காட்சியை மீண்டும் ஷூட் செய்வீர்க‌ள். அல்ல‌து அந்த‌க்காட்சியை ப‌ட‌த்திலிருந்தே தூக்கிவிடுவீர்க‌ள். இவ்வாறு உங்க‌ள் ப‌ட‌ப்பிடிப்பு இர‌ண்டு மாத‌ங்க‌ள் இனிதே ந‌ட‌க்கும்.


                          (பாலு மகேந்திராவா? அடிங்க்... நான் தான்)

எடிட்டிங் & பின்னணி :

   இது முத‌லில் எளிதாக‌ தோன்றினாலும் பின்ன‌ர் உங்க‌ள் மூளையை சூடாக்கி, முதுகைப் ப‌த‌ம்பார்க்கும் வேலையாகும். எடுத்து வைத்த ஷாட்கள் நூற்றுக்க‌ண‌க்கில் 'த‌ம்ப்நெயிலில்' பார்க்கும் போது ஒன்று போல‌வே தோன்றி எதை வைப்ப‌து எதை அழிப்ப‌து என‌ திண‌ற‌வைக்கும். ஒரே காட்சியை துண்டு துண்டாக‌ வெட்டி குழ‌ப்ப‌த்துக்கு ஆளாகுவீர்க‌ள். சேஃப்டிக்கு காப்பி காப்பியாக‌ போட்டு ஃபைல்ஸ் நிர‌ம்பி வ‌ழியும். பாதி வேலை ந‌ட‌ந்துகொண்டிருக்கும் போது 'போன‌ ஞாயித்துக்கிழ‌மை ஊதாக‌ல‌ர் பேண்டுல‌ எடுத்த‌ சீன் எங்க‌யிருக்கு? அதுதான் இருக்கிற‌துலேயே ந‌ல்லா வ‌ந்திருந்த‌து.. காங்க‌லியே?' என்று அசிஸ்டென்ட்டுட‌ன் ச‌ண்டை போடுவீர்க‌ள். டைரியில் உள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கும் ஷாட்க‌ளில் ந‌டிக‌ர்க‌ள் பேசியுள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மேயிருக்காது. எல்லாத்தியும் ம்யூட் ப‌ண்ணி புதுசா பேச‌ வ‌ச்சிடலாம் என‌ முடிவு செய்வீர்க‌ள். ஏதாவது பழைய/ அல்லது ஆங்கில படங்களின் பின்னணி இசையை 'லவுட்டி' குறைந்தபட்சம் இசையிலாவது தரத்தை சேர்த்துவிடுங்கள். ஒரே காட்சியில் ஷாட்கள் பளிச்சென்றும், இருளாகவும் டக்கென்று மாறுவது போல தோன்றினால் விட்டுவிடுங்கள். கலர் கரெக்ஷன் எல்லாம் நம்ம படத்துக்கு
 கொஞ்சம் ஓவர்.  ஒரு வ‌ழியாக‌ காலையில் ஆர‌ம்பித்த‌ வேலை இர‌வுக்குள்  முடிவுக்கு வ‌ரும்.

க‌டைசியில்,

'பிச்சைக்காரர்களின் கொடுமையான வாழ்க்கை, வில்லன்கள்.. முடிவில் ஒரு அகோரிச்சாமியார் அவர்களை கொன்று தின்கிறான்' என்று பிரமாண்டமாக நீங்கள் யோசித்துவைத்த கதை..  

  கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டுவிட்டு, நம் ஹீரோ  கடையில் போய் சிக்கன் 65 தின்கிறான்' என்று சிம்பிளாக வந்திருக்கும். கவலைப்படாதீர்கள்.. கோயிலுக்குப் போய் வரும் ஒருவன் எப்படி நான்‍வெஜ் சாப்பிடலாம் என்ற அரிய விவாதத்தை ந‌ம் ப‌ட‌ம் ஏற்ப‌டுத்த‌லாம். ந‌ல்ல‌ ம‌ன திட‌ம் உள்ள‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு மட்டும் ப‌ட‌த்தை போட்டுக் காட்டுங்க‌ள். விம‌ர்ச‌ன‌த்தை காதில் வாங்கிக் கொள்ளாம‌ல் அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இன்னும் முன்னெச்செரிக்கையுட‌ன் ஏற்பாடுக‌ளை க‌வ‌னிக்க‌த்துவ‌ங்குங்க‌ள்.

கிளைமாக்ஸ் :

    பட‌த்தின் கிளைமாக்ஸ் அப்ப‌வே முடிஞ்சு போச்சு. இது ப‌திவின் கிளைமாக்ஸ். 'குறும்படம்' எடுப்பதைப்பற்றி இன்னும் நிறைய‌ தெரிந்துகொள்ள‌‌ விரும்பினால் த‌குந்த‌ 'பார்ட்டி'க்கான ஏற்பாடுக‌ளுட‌ன் த‌னிமெயிலுக்கு வ‌ர‌லாம்.

தொட‌ரும்..


(இப்போ எதுக்கு தொட‌ரும்? அதான் முடிஞ்சு போச்சேங்கிறீங்க‌ளா? முத‌ல் பாக‌த்தின் முத‌ல் ப‌குதியைப் பாருங்க‌ள். இதைப்பற்றி எழுத ந‌ம‌க்கு என்ன‌ த‌குதியிருக்கிற‌து என்று கேட்டுள்ளார்க‌ள். ஆக‌வே நாம் குறும்ப‌ட‌ம் எடுத்த‌ நிஜ‌ அனுபவ‌த்தைச் சொல்ல‌ வேண்டாமா? அதுதான் அடுத்த‌ ப‌குதியில்..)

Tuesday, February 10, 2009

குறும்படம் எடுப்பது எப்படி? -பகுதி 1

  

   பரிசல், செல்வேந்திரன், வெயிலான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் விருட்டென எழுந்து ஒரே குரலில், “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர், எதிரணி வழக்கறிஞர் என்ன தகுதியிருக்கிறது என இந்த வழக்கில் இப்படியொரு அரிய வாதத்தை துவக்குகிறார் எனத் தெரியவில்லை. ஆகவே அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.

   நீதிபதி வடகரை வேலன், “அப்ஜக்ஷன் ஓவர் ரீல். தாமிரா புதியவராக இருந்தாலும், மிக இளமையானவராகவும் இருப்பதால் அவரை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையாகிறது. நீங்கள் துவங்குங்கள் தாமிரா”

  இப்போ அவுரு இளமையைப் பற்றி யாரு பேசினது? இப்பிடித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவாரய்யா இவுரு என்று முனகியவாறு தாமிராவை முறைத்தவாறே வெயிலான் அமர்கிறார். பார்வையாளர் பகுதியில் விசிலடிக்காத குறையாக அப்துலும், வெண்பூவும் அமர்ந்திருக்கின்றனர். வெண்பூ கையில் சமோசா பொட்டலம் இருக்கிறது.

 தாமிரா, “தேங்க்யூ யுவர் ஹானர்”... வழக்கு தொடர்கிறது.

************

  நமக்கு என்ன அடிப்படைத்தகுதி இருக்கிறது என்று இறுதியில் பார்த்துக்கொள்ளலாம். முதலில் விஷயத்துக்குள் போகலாம்.

 டெக்னிகல் :    முதலும் முக்கியமானதும் ஆன டெக்னிகல் தேவை என்று ஒன்று உள்ளது. அதுதான் காமிரா மற்றும் கம்ப்யூட்டர். ஆபீஸ் கம்ப்யூட்டரை நம்ப முடியாது. ஏனெனில் ஏற்கனவே பாதி நேரம் பிளாக்கை நோண்டிக்கொண்டிருப்பதால் நம்மைக் கட்டம் கட்டி வைத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இந்த வேலையையும் ஆபீஸில் திட்டமிட்டீர்கள் என்றால் முழு நேரமும் பொங்கலாகிவிட சீட்டு ‘டும்மா’வாகிவிடும்.

  ஆகவே வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ கம்ப்யூட்டரை பயன்படுத்த ஏற்பாடுசெய்துகொண்டுதான் களத்திலேயே இறங்கவேண்டும். எடுத்த கிளிப்பிங்குகளை வெட்டி ஒட்டி, பின்னணி இசை, ஒலி சேர்க்கப்போகிறோம் என்பதால் அதில் குறைந்த பட்சமாக ‘நீரோஸ்மார்ட்’டோ, ‘வின்மூவிமேக்கரோ’ இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு காமிரா. நம்மிடம் இருக்கும் சொம்பை ‘H3’ யில் போட்டோதான் புடிக்கமுடியும் என்பதால் எப்பிடியாவது ஆட்டையைப் போட்டு நண்பரிடமிருந்து ஒரு நல்ல ‘மூவிகேமை’ பத்து நாளைக்கு இரவல் வாங்கிவிடுங்கள். குறிப்பாக உங்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் சக ஊழியர்களை விசாரித்தால் தண்டத்துக்கு வாங்கி பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதை படம்பிடித்துவிட்டு தூசியடைய போட்டிருப்பார்கள். எதற்கு என்று கேட்டால் ஏதாவது சொல்லி சமாளியுங்கள். உண்மையைச்சொன்னால் அவர்களுக்கும் நடிக்க சான்ஸ் கொடுக்கவேண்டியது நேரலாம்.

  பார்ட்னர் : நடிகர்கள் தவிர பெரும்பாலும் கூட்டம் சேர்க்காதீர்கள். ஒரே ஒருவரை மட்டும் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்வது நலம். உங்கள் நெருங்கிய நண்பராக (மேலே கம்ப்யூட்டருக்கு நாடினோமே அவராக இருந்தால் நலம்) கொஞ்சம் சமோசா, டீ, செலவு பாராதவராக பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒண்ணும் திரைக்கதை அறிவோ, ஆர்வமோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தால் நீங்கள் அசிஸ்டெண்டாக மாறிவிடக்கூடிய ஆபத்திருக்கிறது. ஆனாலும் அவருடனும் அவ்வப்போது கதைவிவாதம் பண்ணுங்கள். நம்மைவிட உருப்படியான யோசனைகள் வந்தாலும் வரலாம்.

கதை : உண்மையிலேயே இந்த ஏரியா மிகவும் சிக்கலானது. உங்கள் மனதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நீங்காத கதை இருக்கும். அது வேண்டாம், அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். எப்படியாவது குப்புறப்படுத்து யோசித்தாவது ஒரு கதையை பிடித்துவிடுங்கள். வேறு யாரிடமும் நாம் காண்பிக்கப்போவதில்லை என்பதால் ஏதாவது பழைய எழுத்தாளர்களின் கதையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள் அவர்கள் கதையை நாம் எடுத்துமுடித்திருக்கும்போது நமக்கே குற்ற உணர்ச்சி வந்துவிடக்கூடாது. டிவியிலிருந்தோ, வார இதழ்களிலிருந்தோ சுடலாம் என்று பார்த்தால் அதைவிட நீங்கள் யோசித்துவைத்திருப்பதே நல்ல கதையாக தோணும்.

 கதையை முடிவு செய்யும் முன்னர் நான் கூறும் விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஹீரோ பிளைட்டில் இருந்து இறங்கி, பென்ஸ் காரில் கிளம்பி வீட்டுக்குப்போகிறார் என்பது போல காட்சிகள் இருக்கக்கூடாது. பட்ஜெட் தாங்காது. அதற்காக பஸ்ஸில் போகிறார் என்பதாகவும் வேண்டாம். அது முன்னதைவிடவும் ரொம்பக்கஷ்டம். காதல் கதையாக இருந்தால் நடிக்க ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். இல்லை உங்கள்/அல்லது நண்பரின் காதலி இருக்கிறார் என்றால் அவரின் அழகு உங்கள் கதைக்கு போதுமானதா என்பது சிக்கலாகிவிடும். மேலும் நீங்களோ, உங்கள் நண்பரோ ஹீரோவாக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். நமது பிரதான குறிக்கோள் இயக்கமே தவிர நடிப்பது அல்ல, ஏனெனில் அது எவ்வளவு சிரமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணத்துக்கு ஏதாவது விஷால் படத்தைப் பார்த்துக்கொள்ளவும். கவனம், அதைப்பார்த்து நாமும் நடித்தால் என்ன என்ற தைரியம் வந்துவிடக்கூடாது. பெரும்பாலும் ஆண்களும், தேவைப்பட்டால் குழந்தைகளும் வருவது போன்ற, மொத்தத்தில் நான்கைந்து கேரக்டர்கள் கொண்ட ஒரு கதையை அமைத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு கண்டிஷன் போட்டதால் பெரும்பாலும் கமர்ஷியல் கதையாக இல்லாமல், ஒரு ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு கதை வந்திருக்கும். ஒருவழியாக கதை முடிவு செய்தபின்னர் நண்பருடன் அமர்ந்து திரைக்கதை எழுதுங்கள். அதற்கும் முன்னதாக சில வெற்றிபெற்ற திரைப்படங்களின் திரைக்கதைப்புத்தகங்களை வாசித்துவிடாதீர்கள். பிறகு திரைக்கதை என்றால் என்ன என்ற பெருத்த சந்தேகம் வந்து விட்டால் கதை கந்தலாகிவிடும்.. அதோடு வசனங்களையும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

லொக்கேஷன் : பெரும்பாலும் உங்கள் வீடு, தோட்டம்(இருந்தால்), மொட்டைமாடி, அதிகபட்சம் உங்கள் தெரு இதற்குள்ளாகவே கதை நிகழும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மகாபலிபுரத்தில் சில காட்சிகள் வைத்துக்கொள்ளலாம். ஒரே நாளில் அந்தப்பகுதியை ஷூட்டிங் முடித்து வந்திடலாம் என குறுக்கு வழியில் சிந்திக்காதீர்கள். பின்னால் மேலும் இரண்டு தடவை போக வேண்டி வந்து பிராஜக்ட் பாதியிலேயே நின்று வருத்தப்படும்படி ஆகிவிடும்.

நடிப்பு : நான் சொல்லும் முன்னரே நண்பர்களையோ, உறவினர்களையோ அரை நாள்தான், ஒருநாள்தான் என்று கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க வைத்திருப்பீர்கள்.. நமக்கும் அவர்களை விட்டால் வேறு கதியில்லை என்றாலும் ரொம்ப இறங்கிப்போக வேண்டியதில்லை. முதலிலேயே 'கொஞ்சம் கோபப்படுங்கள், சோகமாக இருங்கள்' என்று நடிக்கச்சொல்லி சாம்பிள் பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் பின்னர் சிக்கலாகிவிடும். கொஞ்ச காட்சிகள் லாங் ஷாட்டில் ஒப்பேற்றிவைத்திருப்பீர்கள், பின்னர் குளோஸப் வரும்போது சொதப்பி, பாலாவைப்போல வேறு நடிகரைப் போட்டு ரீஷூட் பண்ண வேண்டியநிலை வந்துவிடும். கதையெல்லாம் அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. சொன்னால் ஓடிவிடக்கூடும். ஆகவே சொன்னதைச்செய்தால் போதும் என்று ஸ்ட்ரிக்ட் ஆன இயக்குனர் போல நடந்துகொள்ளுங்கள். குழந்தைகள் சினிமாவில் அழகாக நடிப்பதைப்பார்த்திருப்பீர்கள். நிஜத்தில் அது ரொம்ப கஷ்டம், படுத்திவிடுவார்கள். ஆகவே குழந்தை காரெக்டர் கதையில் இருந்தால் ஜாக்கிரதை.

ஷூட்டிங் : எல்லாம் தயாராகிவிட்டதால் அடுத்து ஷூட்டிங்தான்...

-தொடரும் (பயப்படவேண்டாம், மொத்தம் மூன்றே பகுதிகள்தான்). 

Saturday, February 7, 2009

என் பார்வையில் நான் கடவுள்.!

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரம் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நான் விரும்பிக்காத்திருந்த ஒரு படம். அதுதான் நம்ப பங்குக்கு ஒரு விமர்சனத்தை எழுதிவிடலாமேன்னு.. என்ன காசா.. பணமா.?

மைல் கல் படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டிய படம், காலம் காலமாக சொல்கிறோமே கதை இல்லை, கதை இல்லை என்று.. அதே சப்பை காரணத்தால் நூலிழையில் இடத்தைத் தவறவிடுகிறது. படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியும், இசையும், உருவாக்கமும் பிரமிக்க வைக்கிறது. வழக்கமாக நல்ல படங்களில் படத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இசையும், பாடல்களும் திணறுவதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே பாடல்களுக்கு ஈடு தர படம் திணறுவதைப்போல எனக்கு ஒரு எண்ணம்.

இதுவரை பார்த்திராத கதைக்களம். இன்னும் ஆழமான கதையை சொல்லியிருக்கலாமோ.? ஒரு அகோரி சூழல் காரணமாக தமிழகம் வருகையில், இங்கே மாற்றுத்திறன் கொண்டோரை கொடுமைப்படுத்தி, பிச்சையெடுக்க வைத்து தொழில் நடத்தும் இருவரை கொன்று (தண்டனை), அவர்களால் கொடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பார்வையிழந்த பெண்ணை கொன்று (விடுத‌லை) மீண்டும் காசி திரும்புகிறார். இப்ப‌டி நான் க‌தை சொன்னால் ந‌ல்லாயிருப்ப‌து போல‌ தோன்றுகிற‌தே..

பிர‌ச்சினை என்ன‌வென்றால் அவ‌ர் இவ‌ர்க‌ளையெல்லாம் எந்த‌ ஸ்ட‌டியும் ப‌ண்ணாம‌லேயே பார்த்த‌வுட‌ன் தெரிந்துகொள்வ‌துதான். ச‌ரி, அது அவ‌ர்க‌ளின் (நிஜ‌ சாமியார்க‌ள்**) த‌னித்திற‌ன் என்று வைத்துக்கொண்டாலும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு ஆயிர‌ம் பேரையாவது (ஒரு வாரம் விடுப்பில் வந்திருக்கும்போது) கொல்ல‌ வேண்டியிருக்கும் இல்லையா? அப்புறம் அவரை வரவைத்து அவர் மீது தமிழ் சினிமா டிபிக்கல் அம்மா பாசத்தை கொட்டி, அவர் மறுத்து, பின்னர் அவரது எள்ளலான ஒரே வசனத்தில் தெளிந்து, அவர் சுயம்பு என்பதை புரிந்து உஸ்ஸ்.. அவரது அப்பா அம்மா காரெக்டர்கள் இவ்வளவு சொம்பைத்தனமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டாம். ச‌ரி விடுங்க‌.. குற்ற‌ம் சொல்ற‌துன்னா ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுற‌ மாதிரி ஆச்சுதே..

ஒரு இய‌க்குன‌ரின் எல்லா ப‌ட‌ங்க‌ளுமே ந‌ம‌க்கு பிடித்திருக்க‌வேண்டும் என்றோ அவை த‌ர‌மான‌தாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தோ க‌ட்டாய‌மில்லை அல்ல‌வா? பாலா உண்மையிலேயே பாராட்டப்ப‌ட‌வேண்டிய‌வ‌ர். இதைப்போன்ற‌ வித‌வித‌மான‌ க‌தைக்க‌ள‌ங்க‌ளையும், நேர்த்தியான உருவாக்க‌த்தையும் கொண்ட‌ இன்னும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளை அவ‌ர் த‌ர‌ வேண்டும் என‌ வாழ்த்துவோம்.

என‌க்கு ப‌ர்ச‌ன‌லா என்ன‌ வ‌ருத்த‌ம்னா, ப‌ட‌த்தில் காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 'மாற்றுத்திற‌ன் ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ளை'ப்பார்க்கும் போதே ந‌ம‌க்கு அத‌ன் வீரிய‌ம் விள‌ங்கிவிடுகிற‌‌து. இதில் அவ‌ர்க‌ளை ஒரு கட்டத்தில் கொடுமைப்ப‌டுத்துவ‌து போல‌ காட்சிக‌ள் வேறு அமைக்க‌வேண்டுமா? 'அது நிஜ‌த்தில் ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து. நீங்க‌ள் காண‌ விரும்பாவிட்டால் அது இல்லை என்றாகிவிடாது' என்ப‌து ச‌ரிதான். இருப்பினும் பாலா போன்ற‌ இய‌க்குன‌ர்க‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளாலேயே தேவையான தாக்க‌த்தை ஏற்ப‌டுத்திவிட‌முடியும் என்றே ந‌ம்புகிறேன். இன்னொரு காட்சியில் வில்லன் ஒரு ஊன‌முற்ற‌ பெண்ணை க‌ல்லால் தாக்குவ‌து. அதை அவ்வ‌ள‌வு நீண்ட‌ நேர‌ம் காட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. மேலும் அந்த பெரிய கல்லால் அவ்வ‌ளவு தூரம் தாக்க‌ப்ப‌டும் பெண் உயிர்பிழைப்ப‌து அரிது என்ப‌தை யாரும் உண‌ர்வ‌ர். இவ்வ‌ள‌வுக்கும் அந்த‌ப்பெண்ணுக்கு அடுத்தும் காட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌. இந்த‌ இர‌ண்டு காட்சிக‌ளைத்த‌விர‌ வேறெதுவும் கொடூர‌க்காட்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.

ஆனால் இயற்கையினாலேயோ, மனிதர்களாலேயோ மிதமிஞ்சிய அளவில் உடல் பாதிக்கப்பட்ட 'மாற்றுத்திறன்' கொண்டோரை மிக அருகில் காணும் சகிப்புத்தன்மை வேண்டும். இது பெண்களுக்கான‌ படமில்லை, அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இப்போது பிற படங்கள் மட்டும் பெண்கள் என்ன குறைந்த பட்சம் ஆண்கள் பார்ப்பது போலவா வந்துகொண்டிருக்கின்றன? குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் பயமோ, குழப்பமோ அவர்களுக்கு நேரிடலாம் என்பதால் தவிர்க்கலாம்.


பூஜாவையும், ஆர்யாவையும் ப‌ற்றி சொல்லாவிட்டால் நிறைவாக‌ இருக்காது. பூஜா என‌க்கு மிக‌ப்பிடித்த‌ ந‌டிகை. அவருக்கு இவ்வ‌ள‌வு ந‌டிக்க‌ வாய்ப்புள்ள‌ அரிய‌ கார‌க்ட‌ர் கிடைத்த‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சியே. அவரால் முடிந்தவரை அவ‌ர‌து ப‌ணியை மிக‌ச்சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார் என்றே ந‌ம்புகிறேன். எக்ஸ்ட்ரீம் என்று சொல்ல‌ இய‌ல‌வில்லை. அனுபவமின்மை, காட்சிக்கு காட்சி வேறுபடும் மேக்கப் போன்ற பிற‌ கார‌ணிக‌ள் த‌டையாக‌ இருந்திருக்க‌லாம். ஆர்யா.. ல‌க்கிய்ய்யா.. இப்ப‌டியொரு ப‌ட‌த்திலும் ஒரு ப‌க்கா க‌ம‌ர்ஷிய‌ல் ஹீரோவைப்போல‌ அத‌க‌ள‌ம் ப‌ண்ண‌ வாய்ப்புள்ள‌ க‌தாநாய‌க‌ ரோல். உட‌ல்மொழி, ந‌டை, க‌ம்பீர‌த்திலேயே பின்னுகிறார். ஆக்ரோஷ சண்டைக்காட்சிகள். (கமர்ஷியல் படங்களுக்கான வீரியமான சண்டைகாட்சிகளை எப்படி எடுப்பது என கற்றுக்கொள்ளுங்கள் அஜித்களே, விஜய்களே.. அதாவது அந்தப்படங்களின் இயக்குனர்களே, சண்டைகாட்சிகள் அமைப்போரே..) பாராட்டுக‌ள் பாலாவுக்குதான். முட்ட‌ள‌வு த‌ண்ணீரில் ந‌ட‌ந்துவ‌ருவ‌து, பாலையில் ந‌ட‌ந்துவ‌ருவ‌து, இள‌ம் காளைபோல‌ பாறைக‌ளில் தூள்ளிப்பாய்வ‌து என‌ ஆண்மைத்த‌ன‌ம் அள்ளிச்செல்ல‌ ஆர்யாவுக்கு லைஃப்டைம் காரெக்ட‌ர். சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார்.

நாமும் அதே மாதிரி ஒரு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளூர ஒரு விபரீத ஆசை. வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் என் தொப்பையை ஏக்க‌த்துடன் பார்த்துக்கொண்டேன்.

டிஸ்கி :
** போலிச்சாமியார்க‌ள் ப‌ல‌ரும் (நல்லவர்களையும் கெட்டவர்களையும் இனம் காணும் திறம் கொண்ட) நிஜ‌ சாமியார்க‌ளோடு ப‌ட‌மெங்கும் உல‌வுகிறார்க‌ள். 'போலி' ச‌ரி தெரியும். அதென்ன‌ 'நிஜ‌?'.. தெர்ல‌பா.. ப‌ட‌த்தில் அகோரிக‌ளையும், சாமியார் வேட‌த்திலிருக்கும் திருட்டுப்ப‌ச‌ங்க‌ளையும் வேறுப‌டுத்த‌வே அப்ப‌டிச்சொன்னேன். என்னைப்பொறுத்த‌வ‌ரை 'போலி'ன்னா 'போலி', நிஜ‌ம்னா 'லூசு' அவ்வ‌ள‌வுதான் வித்தியாச‌ம்.

.

Thursday, February 5, 2009

தத்துவம் 0123.!

முதலில் வாழ்வின் சுமைகள் தெரியாத பள்ளிப்பருவம், விளையாடிக்களித்திருந்தோம். பிறகு உருகி வழியவிடும் காதலில் வழிந்துகிடந்தோம். பின்னர் மயங்கிக்கிறங்க வைக்கும் மதுவில் சரிந்திருந்தோம். அடுத்து காற்றிலே மிதக்கவைக்கும் காமத்திலே உவத்திருந்தோம். அதோடு பெண்மையின் பேறுகண்டு பிரமித்தோம். பின்னர் அதிகாலை மழை போன்ற மழலைக்காலத்தில் இனித்திருக்கிறோம். இனி ஏறிச்செல்லும் பொறுப்புகளில் அமிழ்ந்திருப்போம். பின்னர் கனிந்திருப்போம், நிழல் தேடி ஓய்ந்திருப்போம்.

ஏதாவது ஒரு பகுதியிலேயே தங்கிவிடுவோர் தேங்கிய நீராகிவிடுகிறார்கள், அல்லாமல் தெள்ளிய நீரோடையாய் அனைத்தையுமே தாண்டிவாருங்கள்..

மேலும், கூடுதலாக துவக்கத்திலிருந்து இறுதி வரை கருவிகளைப்போன்று சிலவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.. நல்லிசை, புத்தகங்கள், நட்பு, காதல்.. என இந்தப்பட்டியலும் பெரிதுதான்.. வாழ்க்கை இனிதானது. இதைப்போன்றதாகவே அனைவருக்கும் வாழ்க்கை அமைய இயன்றதைச்செய்திருக்கலாம், கூடிக்குலவியிருக்கலாம்.!

வாருங்கள், இப்போது கொஞ்சமாய் ரசித்திட‌லாம்.. கமலஹாசனையும் அமலாவையும், ரஜினிகாந்தையும் மாதவியையும்.!

டிஸ்கி:
வழக்கம்போல எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும், நேரமில்லாமல் வேலைப்பளு படுத்துகிறது. (அலோ.. யாரு? தன்ராஜா? நா ரொம்ப பிசி.!) மேலும் மொக்கைபோட்டு ரொம்ப நாளாவுதுன்னு கண்ணன் கடிந்துகொண்டான். அவன் வேண்டுகோளுக்காக நேற்று நள்ளிரவில் இசையருவியில் சில பாடல்களை கண்டு கொண்டிருந்த போது தோன்றிய அற்புதமான தத்துவமுத்து இது.! ஹிஹி.. கூல்டவுன்.. கூல்டவுன்.!

.

Tuesday, February 3, 2009

ஏடிஎம்மிற்குள் லட்சுமி பூஜை.!

மிகுந்த அவசரத்திலும் இன்று காலை அலுவலகம் செல்லும் வழியில் நான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM ல் பணம் எடுப்பதற்காக நின்றேன். மாதத்துவக்கம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆகவே மாதத்துவக்கத்தில் பணம் எடுப்பது அதுவும் குறிப்பாக பீக் நேரத்தில் எடுப்பதை தவிர்த்துவிடுவேன். இருப்பினும் இன்று ஒரு அவசர தேவை.

வெளியே நின்ற ஏழு பேருடன் எட்டாவதாக நின்று கொண்டேன். கியூவில் நிற்பதை இந்த வேக உலகில் எவ்வளவோ தவிர்த்து வந்துள்ளோம். இருப்பினும் இதுபோன்ற சிக்கல்கள் இன்னும் மீதமிருக்கின்றன. உள்ளே சென்றவர்கள் அவ்வளவு லேசில் வெளியாவதாக தெரியவில்லை. கண்ணாடிக்கதவுகள் என்பதால் உள்ளே என்ன செய்கிறார்கள் என்பதை ஓரளவு தெரிந்துகொள்ளமுடிந்தது.

ஒருவர் நிதானமாக அன்னநடையில் மெஷின் அருகே செல்கிறார். சென்றபிறகு, பேண்ட் பாக்கெட்டுக்குள் சிக்கிக்கொண்ட பர்ஸை மிக‌ சிர‌ம‌ப்ப‌ட்டு (க‌ண்டிப்பாக‌ உத‌விக்கு ஆள் தேவைப்ப‌ட்டிருக்கும்? இவ‌ர் ஒருநாளில் எத்த‌னை முறை பாக்கெட்டிலிருந்து பர்ஸை வெளியே எடுக்க‌க்கூடும்?) வெற்றிக‌ர‌மாக‌ எடுத்துமுடித்தார். பிற‌கு அடுத்த‌ போராட்டம், ப‌ர்ஸிலிருந்து கார்டை வெளியே எடுப்ப‌து. அதுவும் சுப‌மாக‌ முடிந்து கார்டை மெஷினில் திரும்பிவருமா என்ற ஒருவித‌ ச‌ந்தேக‌த்துட‌னே செருகினார். பின்ன‌ர் ஏதோ ஒவ்வொரு முறையும் மெஷின் ஏதோ வெவ்வேறு த‌க‌வ‌ல்க‌ளை கேட்ப‌தைப்போல‌ அது என்ன‌ கேட்கிற‌து என்ப‌தை நிதான‌மாக‌ வாசித்து முடித்து பின் ந‌ம்ப‌ரை அடிக்கிறார். மேலும் சில‌ போராட்ட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் ஒரு சீட்டு வெளியே வ‌ருகிற‌து. அதாவ‌து ப‌ண‌ம் எவ்வ‌ள‌வு இருக்கிற‌து என்ப‌தைத்தான் இவ்வ‌ள‌வு நேர‌ம் சோதித்திருக்கிறார், இனிமேல்தான் அடுத்த‌ ர‌வுண்டே போக‌ வேண்டும். பின்ன‌ர் மீண்டும் கார்டைச்செருகிய‌து, பின் ந‌ம்ப‌ரை அடித்து எவ்வ‌ள‌வு ப‌ண‌ம் எடுக்க‌ வேண்டும் என்ப‌தை முடிவு செய்து அதை அடித்து எடுத்துவிட்டு, அது ச‌ரியாக‌ இருக்கிற‌தா என‌ இர‌ண்டு முறை எண்ணிப்பார்த்து.... ஆவ்வ்வ்வ்வ்வ்.. கொட்டாவி விடுகிறீர்க‌ளா? ப‌ர‌ப‌ர‌ப்பான‌ காலை நேர‌த்தில் என்ன‌ தோன்றும் உங்க‌ளுக்கு? நிச்சயமாக அவர் பயன்படுத்திய நேரத்தில் இருப‌து மெஷின்களில் பணம் எடுத்திருப்பேன். கொலைவெறியாகிப்போனேன்.

சில அறிவுரைகள் அல்லது வேண்டுகோள்கள் :

1. இணைய வசதியுள்ளோர் பெரும்பாலான‌ முக்கிய‌ வ‌ர‌வு செல‌வுக‌ளை இணைய‌த்திலேயே முடித்துவிடுங்க‌ள்.

2. பீக் நேர‌த்தை ATM செல்ல‌ தேர்ந்தெடுக்காதீர்க‌ள்.

3. அப்படிச்சென்றால் முன்ன‌மே எவ்வ‌ள‌வு ப‌ண‌ம் இருக்கிற‌து, எவ்வ‌ள‌வு எடுக்க‌ப்போகிறோம் என்ப‌தை முடிவு செய்துகொண்டு செல்லுங்க‌ள்.

4. மெஷின் அருகே செல்லும்முன் கார்டை எடுத்து த‌யாராக‌ வைத்திருங்க‌ள்.

5. அது உங்க‌ள் முக‌வ‌ரிச்சான்று போன்ற‌வ‌ற்றையெல்லாம் கேட்ப‌தில்லை. கார்டை போட்ட‌வுட‌ன் பின் ந‌ம்ப‌ரை அடித்துவிடுங்க‌ள்.

6. அது சிக்ஸ் சிக்மாவையும் தாண்டிய‌ செய் நேர்த்தியுட‌ன் செய‌ல்ப‌டுகிற‌து. கோடி முறைக‌ளில் ஒரு முறை அது ஒரு நோட்டை அதிக‌மாக‌வோ, குறைவாக‌வோ த‌ர‌க்கூடும். ஆக‌வே எண்ணிப்பார்க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அப்படியும் ச‌ந்தேக‌ம் வ‌ந்தால் அடுத்த‌வ‌ருக்கு வ‌ழியை விட்டு விட்டு நீங்க‌ள் ஓர‌மாக‌ சேர்போட்டு அம‌ர்ந்து பணத்தை எண்ணிப்பார்க்க‌லாம்.

7. இர‌ண்டாவ‌து முறையாக‌ கார்டை செருகி க‌ண‌க்கு ச‌ரியாக‌ க‌ழிந்திருக்கிற‌தா என்று மெஷினை சோதிக்காதீர்க‌ள்.

8. அடுத்து ஆட்க‌ள் நின்று கொண்டிருக்கையில், ந‌ண்ப‌ருக்கு எப்ப‌டி ப‌ண‌ம் எடுப்ப‌து என்று ப‌யிற்சி வகுப்பு ந‌ட‌த்திக்கொண்டிருக்காதீர்க‌ள். காத‌லியிட‌ன் ரொமான்ஸ் ப‌ண்ணிக்கொண்டிருக்காதீர்க‌ள். ம‌னைவியை உள்ளே அழைத்துச்சென்று 'நான் இர‌ண்டு அழுத்துவேன், நீ பூஜ்ய‌த்தை அழுத்த‌ வேண்டும்' என்று விளையாடவோ, 'பாலுக்கு இவ்வளவு, மளிகைக்கு எவ்வளவு?' என்று க‌ண‌க்கிட்டுக்கொண்டிருக்க‌வோ செய்யாதீர்க‌ள்.

9. இறுதியாக‌, இங்கேயாவ‌து கொஞ்ச‌ம் சுறுசுறுப்பாக‌ இருங்கள்.

ப்ப்ப‌டுத்தாதீர்க‌ள்.. பிளீஸ்..!

.

Monday, February 2, 2009

குட்டிக்கிருஷ்ண வடக்கேகூட்டால நாராயண மேனன்

".:பர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம்" பிரச்சினை இருக்கா உங்களுக்கு? அட்லீஸ்ட் தெரியமா? வாங்க சொல்றேன் என் பிரச்சினையை..

   நானும் +2 வரைக்கும் படிச்சு, ஒரு டிப்ளமாவையும் முடிச்சு, பேச்சுலர் டிகிரிக்கும் போயி, மாஸ்டர் டிகிரியையும் வாங்கித்தொலைத்து.. இதுவரை ஏழு கம்பெனிகளில் ஆணிபிடுங்கி, எட்டாவது கம்பெனியிலயும் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்ங்க.. இத்தனை வருஷத்துல ஒரு முன்னூத்தி முக்காலே அரைக்கால் அப்ளிகேஷன்களையும் நிரப்பித் தள்ளியிருக்கேன்ங்க.. ஆனாலும் பாருங்க ஒரு பெரிய சந்தேகம்..  எவனைக்கேட்டாலும் ஈன்னு இளிச்சுட்டுப்போயிடறான்.. இல்லேன்னா அப்போதைக்கு ஒரு பதில சொல்லிட்டு போயிடறான்.

  அரசு, தனியார் என அனைத்திலுமே இந்த பிரச்சினை உள்ளது. அந்த விண்ணப்ப படிவங்களை டிசைன் பண்றவங்களுக்காவது இது  தெரியுமான்னு சந்தேகமாத்தான் இருக்குது. கேள்வி ரொம்ப அடிப்படையானது.. கேட்டா சிரிக்கக்கூடாது..

விண்ணப்பங்களில் பெயரை எழுதுவது எப்படிங்க?

  ஒரு விண்ணப்பத்துல Name மட்டும் இருக்குது, இன்னொண்ணுல Fisrt name மற்றும் Last nameனு இருக்குது. அடுத்த விண்ணப்பத்துல முதலில் Sur name பிறகு First name. அடுத்ததில் First name, Middle name, Last name என்று வரிசையாக. வேறொன்றில் First name பிறகு Second name. அடுத்தது வேறொரு வரிசையில்.. இவையெல்லாம் என்ன? எனக்கு எத்தனை பெயர்கள் உள்ளன? எனது நிஜமான பெயர்தான் என்ன?

  Name, First name, Second name, Middle name, Last name, Sur name இவையெல்லாம் என்ன?

  ஒரு வழியாக சமீபத்தில்தான் ஒரு சரியான நபரை பிடித்து வைத்து விசாரித்தேன். அவர் எதையும் ஆராய்ந்து தெளிபவர் என்பதால் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அதை உங்களுக்கும் தருகிறேன்.

  Name மற்றும் First name என்பவை நீங்கள் இப்போது உங்கள் பெயரென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அதேதான். அதாவது உங்கள் பள்ளிச்சான்றிதழ்களில் இருக்கும் பெயர், உங்கள் தந்தையாரின் இனிஷியல் நீங்கலாக.

  Second name அல்லது Middle name என்பது உங்கள் தந்தையாரின் முழு பெயர் ஆகும்.

 Last name அல்லது Sur name என்பது குழு பெயராகும் (அதாவது குடும்ப, இன, சாதிப் பெயர்கள்). இந்தப்பகுதியை தமிழர்களாகிய நாம் நம் தலைமுறையில் கூடுமானவரை தவிர்த்து வந்துவிட்டோம். இது ஒரு நல்ல காரியம் என்றும் கூறலாம். ஏனெனில் இந்தப்பகுதி வட மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் குழு அடையாள நோக்கில் இன்னும் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் எப்படி
 பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியாது எனினும் நம்மிடம் எவ்வளவு மோசமான பிரிவினைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை அறிவீர்கள். ராமலிங்கப்பிள்ளை, மாயாண்டித்தேவர், சுப்புணிஐயர், கனகுமுதலியார் என்ற பெயர்களை நீங்கள் இன்னும் மறந்திருக்க முடியாது.

   ஆகவே இனி Name மற்றும் First name மட்டும் கேட்கப்படும் இடங்களில் உங்கள் பெயரை மட்டும் எழுதுங்கள். ரொம்பவும் .:பீல் பண்ணினீர்கள் என்றால் தந்தையாரின் முதல் எழுத்தை புள்ளி வைத்து இறுதியாக சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது புள்ளி வைக்காமல் முழுப்பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

   Second name அல்லது Middle name கேட்கப்படும் இடங்களில் முன்னதாக Name பகுதியில் தந்தையாரின் இனிஷியலையோ, பெயரையோ தவிர்த்துவிட்டு அதை இந்தப்பகுதியில் முழுப்பெயராக சேர்த்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் பெயர் இட்லி என்றும் உங்கள் தந்தை பெயர் சாம்பார் என்றும் கொண்டால் இந்த முறைப்படி 'இட்லி சாம்பார்' என்று உங்கள் பெயர் அழகாக வந்துவிடும். பின்னர் Last name அல்லது Sur name கேட்கப்பட்டால்
 காலியாக விட்டுவிடுங்கள். சில இடங்களில் கட்டாயப்படுத்துவார்கள், முடியாது என சண்டை போடுங்கள். இன்னும் சில இடங்களில் இதில்தான் உங்கள் தந்தை பெயர் வரவேண்டும் என உங்களை குழப்பிவிடுவார்கள்.. அவர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குங்கள்.

  இதை நான் எழுதுகையில் பின்புறம் இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நண்பர் கேட்கிறார், "சிலர் தாயார் பெயரையும் இணைக்கவேண்டும் என்கிறார்கள், சிலர் தாய், தந்தை இருவரது பெயரின் முதல் எழுத்துகளையும் இரட்டை இனிஷியலாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் என்ன பண்ண வேண்டும்? அப்படியானால் என் பெயரை 'வடக்கே கூட்டால குட்டிக்கிருஷ்ண நாராயண மேனன்' என்று எழுதணுமா? அல்லது

 'குட்டிக்கிருஷ்ண வடக்கேகூட்டால நாராயண மேனன்' என்று எழுதணுமா?"

எனக்கு லேசாக தலையை சுற்றிக்கொண்டு வந்தது.