Wednesday, March 25, 2009

மனதை கொள்ளை கொண்ட ‘அருந்ததீ’

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த போது பல இடங்களில் பிரம்மாண்டமான சினிமா விளம்பர பேனர்களைக் கண்டேன். தமிழைத்தவிர வேறு மொழி ஒன்றுமே அவ்வளவாக மண்டையிலோ வாயிலோ நுழையாது நமக்கு. அதனால்தான் தமிழ்பிரியன் போன்ற பன்மொழி வித்தக நண்பர்களைக் கண்டால் பொறாமையில் உள்ளம் ததும்பும். அந்த பேனர்கள் மிகவும் வசீகரமாக, உயிரோட்டமாக இருந்தன. ‘ஆ பிச்சர்கா நாம் என்னுலு?’ என்றேன் கார் டிரைவரிடம். அவர் என்னை ஒருமாதிரியாக பார்த்துக் கொண்டே ‘அருந்ததி.. சூப்பர் ஹிட் மூவி’ என்று எக்ஸ்ட்ரா தகவலும் தந்துவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். ஏற்கனவே போஸ்டர் பார்த்து படத்துக்கு சென்று வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவம் இருந்தாலும் இந்த போஸ்டர்கள் அப்படியிருக்க முடியாது என்று தோன்றியது. அது இப்போது நிஜமாகிவிட்டது.

எனக்கு ஃபேண்டசி படங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். விதம் விதமான கதைக்களங்களுடன் வரும் ஆங்கிலப்படங்களை மிக விரும்பிப் பார்ப்பேன். ‘ஜுமான்ஜி’ படம் வெளியாகியபோது அதைப்பற்றி கேள்விப்பட்டு திருநெல்வேலியிலிருந்து உறவினர்களை பார்க்கச்செல்லும் சாக்கில் மதுரை சென்று படம் பார்த்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. சரி அருந்ததிக்கு வாருங்கள். சமீபத்தில் நாமெல்லாம் நன்கறிந்த பிரபல பதிவரும், இலக்கியவாதியுமான ஒருவரை சந்தித்தபோது ‘அருந்ததி’ படம் பற்றி சிலாகித்தார். மேலும் பலரும் கொண்டாடும் இந்தப்படம் உண்மையில் கொண்டாட்டம்தானா.? ஆம்.!

ஏற்கனவே ஆர்வமிகுதியில் இருந்த என்னை மேலும் நண்பர்கள் தூண்டிவிட்டதனால் நேற்று திருவான்மியூர் சென்றிருந்தேன் அருந்ததியைக்காண. படத்தின் கதையை இதற்குள் எல்லோருமே அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் கேபிள் சங்கரின் பதிவைக் காணலாம். துல்லியமாக அறியவிரும்புபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவைக் காணலாம். நாம் வேறென்ன ரசிக்கத்தகுந்த விஷயங்கள் படத்தில் இருந்தன என்பதை என் பார்வையில் பார்க்கலாம் வாருங்கள்.

என்னதான் லாஜிக் இல்லாத மறுபிறவி டுபாக்கூர் கதை என்றாலும் அதற்கென்றும் சில லாஜிக்ஸ் இருக்கின்றன. அது சில இடங்களில் மீறப்பட்டிருக்கிறது. சில காட்சிகள் நீளமாக இருப்பதாய் தோன்றுகிறது. பல காட்சிகள் பிரபல ஆங்கில, பிற படங்களில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அளவுக்கதிகமாக படம் நிறைய ரத்தவெள்ளம். இதையெல்லாம் தவிர்த்திருந்தால் இன்னும் கொண்டாடியிருக்கலாம்.

இருப்பினும் பரபரப்பான காட்சிகள், ஒளிப்பதிவு, அனுஷ்கா, கிராஃபிக்ஸ், பின்னணி இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என பல விஷயங்களும் படத்தைக் கொண்டாடக் காரணமாகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கலாம். எனக்கு எப்படிப்பட்ட காட்சியாயிருந்தாலும் அதில் இழையோடியிருக்கும் அழகுணர்ச்சியும் / பர்ஃபெக்ஷனும்தான் முக்கியம். அது இதில் சிறப்பாக வந்திருக்கிறது. அனுஷ்காவின் பெர்ஃபாமென்ஸும் அவரைக்காட்டும் காமிராவும் படத்தின் ஹைலைட். அனுஷ்காவின் அகன்ற விழிகள் நம்முடன் கதைபேசுகின்றன. பல காட்சிகளில் இசை உடன் சேர இந்தக்கூட்டணி நம்மை புல்லரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒரு காட்சி, நல்ல மந்திரவாதியான அன்வர், அருந்ததியிடம் ‘நீ மறுபிறவி எடுத்திருக்கிறாய்’ என்று பரபரப்பாக சொல்லிக்கொண்டிருக்க அதை அருந்ததி மறுத்துக் கொண்டிருக்க அதை நிரூபிக்க பேசிகொண்டே அங்கிருந்த ஒரு வாளை எடுத்து அருந்ததியை நோக்கி வீசுகிறார் அன்வர். அப்போது பின்னணி இசை அலற, காமிரா பரபரப்பாக பாய.. நாம் சீட் நுனிக்கே வந்துவிடுகிறோம். அப்போது ‘அருந்ததி’ அந்த வாளை பிடித்து விட்டு ஒரு போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.. அடடா.. (ஒரு விநாடி நம் மொக்கை ஹீரோக்களை மனதுக்குள் நினைத்துக்கொள்கிறேன். அடப்பாவிகளா.. உங்களை என்ன கலைப்படங்களா எடுக்கச் சொல்கிறோம்? இந்த மாதிரியாவது பண்ணுங்ககளேன்னுதானே சொல்கிறோம்) என்ன அழகு.. என்ன வீரம்.! பின்னர் வில்லனை சிறைபிடிக்கையில் வரும் நாட்டியத்தில் கால்கள் தரையில் பாவாமல் அவர் தரும் அற்புதமான மனதை மயக்கும் காட்சிக்கோவைகள்.

aru

அதே போல கிளைமாக்ஸில் வில்லனை வதம் செய்கையில் அனுஷ்காவின் ஆவேசமான முகம் என்றென்றைக்கும் என் மனதில் நிற்கும். அந்த ஸ்டில்லை உங்களுக்காக நெட்டில் தேடிப்பார்த்த போது கிடைக்கவில்லை. அதற்கு மிக அருகில் இருக்கும் ஒரு காட்சியை தந்திருக்கிறேன். சில இடங்களில் குறிப்பாக பாடல்காட்சிகளில் மொழி படுத்துவதால் படம் தெலுங்கில் இன்னும் கனஜோராக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். காதுல பூதான்.. ஆனால் மறக்க இயலாத பாட்டிக்கதை.! எதுக்கும் ஜாக்கிரதையாக மாட்னி ஷோ பாருங்கள். இரவுக்காட்சியென்றால் ஜக்கம்மா கனவில் வரக்கூடும்.

.

நீரின்றி அமையாது உலகு..

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

(குறள் :16)

மேற்குறித்த குறளுக்கு விளக்கமே தேவையில்லை. ஆழமாக சிந்தித்தால் இதன் தாக்கம் பிரமிப்பையும், பயத்தையும் தரும். இன்று உலகம் நோக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவாலும் அதுதான். குடிநீரின் தேவை. 72 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே பயன்படுத்தத்தக்க நீர் உள்ளது. அதிலும் நம்மால் அடையமுடிவது 1 சதவீதம் மட்டுமே.

தரமான குடிநீர் இல்லாததால் உலகெங்கும் இறந்துபோகும் குழந்தைகள் ஒரு நாளைக்கு எத்தனை பேர் தெரியுமா? 4500.! மலைக்க வேண்டாம், இன்னும் சில பத்தாண்டுகளில் உலகின் மிக அரிதான பொருளாய் மாறப்போவது தண்ணீர். பொருளாதரம், வாழ்வியல் குறித்த விஞ்ஞானிகளின் சில ஊகங்கள் நம்மை மிகவும் பயமுறுத்துவதாய் இருக்கின்றன. சிறுதுளிப் பெருவெள்ளம் என்பதை நம்புவோம். நம்மால் ஒரு துளி நீர்கூட வீணாகாமல் இருக்க இன்று உறுதியேற்போம்.

தனியொரு மனிதன் தவறாமல் செய்ய இயலக்கூடிய விஷயங்களை நினைவில் கொள்வோம் :

  • ஒரு விநாடிக்கு ஒரு துளி நீரென்றால் ஒரு வருடத்தில் வீணாகும் நீர் 10000 லிட்டர். ஒழுகும் குழாய்களை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
  • தனிமனித தேவைக்கான குளியல், பல்துலக்குதல், காலைக்கடன்களின் போது நீரை மிகச்சரியாக பயன்படுத்துங்கள்.
  • தோட்டம், செடிகளுக்கு சரியான அளவு நீரை அதிகாலையில் அல்லது மாலை நேரத்தில் ஊற்றுங்கள். அப்போது தோட்டமல்லாத தரைப்பரப்புகளில் நீரை சிந்தாமலிருங்கள்.
  • நடைப்பாதை, மற்றும் பிற துடைப்பத்தால் சுத்தம் செய்ய இயலும் இடங்களில் நீரை பயன்படுத்தாதீர்கள்.
  • இன்னும் பல இடங்களிலும் எதிர்காலச் சந்ததியினரை மனதில் கொண்டு சிந்தித்துச் செயல்படுங்கள்.

Water

இன்று உலக தண்ணீர் தினம்.

.

Monday, March 23, 2009

த்ரீ இன் ஒன்.. (23.03.09)

எப்போதுமே எந்தக்காரியத்தையுமே மிக மெதுவாகவும், தாமதமாகவும் செய்வதே என் வழக்கம். இதனால் பலமுறை ரயிலைத்தவற விட்டிருக்கிறேன்.. வாய்ப்புகளையும்.! வழக்கமாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்பதாய் எழுதிக் கொண்டிருந்தவன் நட்சத்திர வாய்ப்புக்காக ஒரு நாளில் இரண்டு பதிவுகள் என்று திட்டமிட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு பதிவு போடுவதற்கே நாக்கு வெளியே வந்துவிடும். எப்படி ஒரு நாளில் இரண்டு பதிவு போடுவது என்ற பயமும் வந்தது. புதுகைத்தென்றலே துணை என்று களத்தில் இறங்கி, ஆச்சரியகரமாக அதை கிட்டத்தட்ட நிறைவேற்றவும் செய்துவிட்டேன். ஒருநாள் மட்டும் பதிவிட இயலாது போய்விட்டது. ஒரு மீள்பதிவையும் கணக்கில் சேர்த்தால் 10 பதிவுகள் இட்டிருக்கிறேன் (இதைக் கணக்கில் கொள்ளாமல்). மிகுந்த பாராட்டுகளையும், புதிய நண்பர்களையும் பெற்றுத்தந்த சில நல்ல(?) பதிவுகளும் அதில் இருந்தது எனக்கு கூடுதல் மகிழ்வைத்தந்தது. ‘மோகம் 30 நாள்’, ‘நீ நான் அவள்’, ‘தேர்த்திருவிழா’ போன்றவை நல்ல பெயரைத் பெற்றுத்தந்தன. ‘யேய்.. சைலன்ஸ்’, ‘ரமா எனும் சுனாமி’ ஆகியவை மிகுந்த ஹிட்டுகளைப் பெற்றுத்தந்தன. ஆனால் ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற பதிவுக்கு நான் பெண்களிடமிருந்து கருத்துகளை மிகவும் எதிர்பார்த்தேன். அது நடக்காதது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தந்தது. மற்றபடி ஓரளவு சிறப்பாகவே நட்சத்திரவாரத்தை கடந்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இத்தனை பதிவுகள் போட்டு டயர்டாகிவிட்டதால் நாலு நாளைக்கு வலைப்பூவுக்கு விடுப்பு விடலாம் என்றிருக்கிறேன் (என்ன மகிழ்ச்சிதானா?) மீண்டும் ஒருமுறை தமிழ்மணத்துக்கு நட்சத்திர வாய்ப்புக்காக என் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

********

என் பதிவுகளில் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு எழுவதுண்டு. சமயங்களில் அப்படி ஏதும் இல்லை என்று நான் உணரும் போது நாமெல்லாம் அவசியம் எழுதித்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணமும் கூடவே ஏற்படும். சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதுகுறித்துக் கருத்துக்கேட்டேன். ‘உள்ளடக்கத்தை / செய்தியைப் பற்றி அதிகம் கவலை தேவையில்லை நண்பரே.. படிப்பவரை தொடர்ந்து தன்பால் ஈர்த்து வைத்துக்கொள்வதே படைப்பின் வெற்றியும், பிரதானமான விஷயமும் ஆகிறது. அது வசீகரமான மொழிநடையினாலேயே சாத்தியமாகிறது’ என்றார். உள்ளடக்கத்தைப் பற்றி இவ்வாறு அவர் கூறியதும் உண்மையில் மிக மகிழ்ந்துபோனேன். தொடர்ந்து தயங்காது எழுதுவது என்றும் முடிவு செய்தேன்.. (ம்ஹூம்.. அவர் யாரென்றெல்லாம் சொல்லமுடியாது. அவருக்கு ஒரு ஆபத்து வருவதை நான் விரும்பவில்லை)

********

என்ன இந்த ‘த்ரீ இன் ஒன்’ முழுதுமே பதிவுகள் குறித்ததாய் அமைந்துவிட்டது? இந்தப்பகுதியும் பதிவு குறித்ததுதான்.  சரி ‘பதிவுகள் ஸ்பெஷல்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுவரை பதிவை வெளியிடும் முன்னர் அதை யாரிடமும் காண்பித்து கருத்துக் கேட்டதில்லை நான். முதல் முறையாக சூழல் காரணமாகவும், பதிவின் சப்ஜெக்ட் காரணமாகவும் சமீபத்தில் ஒரு பதிவு குறித்து கருத்து கேட்க நேர்ந்தது. ஸ்பீக்கர் போனில் என்னை வைத்துக் கொண்டே அவர் அதை அவரது மனைவியிடம் காண்பித்து விவாதித்து கருத்துக் கூறினார். அதன்படி பதிவில் நான் சிறு மாற்றமும் செய்தேன். விஷயம் அதுவல்ல.. இது போல ஆரோக்கியமான விவாதம் நிகழ்த்துமளவில் ஒரு திறன்மிக்க தோழியை மனனவியாய் பெற்ற அவரின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன். நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல.? நீண்டநாட்கள் கழித்து பொறாமை என்ற ஒரு உணர்வு எழுந்தது என் நெஞ்சில்..

டிஸ்கி : பெயர் முற்றிலுமாக ஆதிமூலகிருஷ்ணன் என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்  கொள்கிறேன். தொடர்ந்த ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி.

.

Sunday, March 22, 2009

கவிதைகள் ஜாக்கிரதை.!

டிஸ்கி : தவிர்க்கவேயியலாத ஒரு காரணத்தால் நேற்று இணையம் பக்கம் வர இயலவில்லை. அதனால் நட்சத்திர நாள் ஒன்று காலியாகிவிட்டது. இன்றும் பிஸி என்பதாலும் வேறு பதிவு ஸ்டாக் இல்லாததாலும் முதல்முத்தம் கவிதைப்பக்கத்துக்காக வைக்கப்பட்டுள்ள சில கவிதைகளைத் தந்து எஸ்கேப்பாகிறேன். ஒழுங்காக பாராட்டி பின்னூட்டமிட்டுச் செல்லவும். ஓட்டு கூட போடலாம், தப்பில்லை.

கவிதைகள் ஜாக்கிரதை.!

flower 1

காதல் மழையாக
பொழிவதால்தான்
பூக்கள் இதழ்விரிகின்றன
காதல் இங்கிருந்து வெளியேறும் போது
அதனுடனேயே
பூக்களும் வெளியேறிவிடும்.

********

ladies finger

காதலைச் சமன்செய்யும்
பொறாமையும் உன் மீது உண்டு
பச்சைப்பெட்டியில் வெள்ளைமுத்துக்கள் என்றபடியே
குழந்தைகளின் உலகில்
எளிதில் நுழைந்துவிடுகிறாய்
அது எப்போதுமே முடிவதில்லை என்னால்.!

********

Girl 2

காலங்களைக் கடந்தும் பயணிக்கிறாய் நீ..
எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
மீண்டும்
உன்னிலிருந்து தொடங்க
ஒரே ஆவலாயிருக்கிறது.!

********

love make

கண்ணில்லாதவன் போலத்தான்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..
பிரமித்துப் போய்விட்டேன்.!

.

Friday, March 20, 2009

யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.!

என்னை தொடர்ந்து நீங்கள் வாசிப்பவராக இருந்தால் எனது கோபம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆக்ரோஷமாக ரமாவுடனும், கண்ணனுடனும் மோதிய எனது வீரசாகசங்களையும் கோப‌தாபங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ரமா ஒருநாள் என் ஷர்ட்டை அயர்ன் பண்ணித்தராத கோபத்தில் அவள் சேலை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அயர்ன் பண்ணிவைத்துவிட்டேன். இன்னொருநாள் நான் வாங்கிவந்த கத்தரிக்காயில் சொத்தையிருந்ததால் திட்டிய ரமாவிடம் கோபப்பட்டு கடைகடையாக ஏறி இறங்கி ரெண்டு கிலோ சொத்தையில்லாத கத்தரிக்காய் வாங்கிவந்தேன். மற்றொருநாள் பூரி செய்ய நேரமில்லை என்று அவள் சொன்னதால் கோவத்தில் நானே மாவு பிசைந்து இருபத்துமூன்று பூரிகள் சுட்டு சாதனை செய்தேன். இப்படி என் கோப, வீரச்செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வாறாக‌ வீட்டில் மட்டுமல்ல ஆபிஸ்லயும் நான் ஒரு பயங்கரக் கோவக்காரன்தான். 'ஏன் இன்னிக்கு அஞ்சி நிமிஷம் லேட்டு?'ன்னு எங்க மானேஜர் கேட்டுட்டாருன்னா பயங்கரமா கோவப்பட்டு மறுநாள் அரைமணி நேரம் முன்னாடியே வந்துடுவேன். 'ஏன் பிப்ரவரி ரிப்போர்ட்டை இன்னும் அவருக்கு அனுப்பலை.?' என்று கேட்டால் கோவப்பட்டு பிப்ரவரி 2008 லிருந்து ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணி உடனே மூணுவாட்டி மெயில் பண்ணிவிடுவேன். அதுமாதிரி வெளியூர் போயிருக்கும்போது ட்ரெயின் டிக்கெட் கன்பர்ம் ஆகலைன்னா பிளைட்ல வரமுடியாதுன்னு கோவப்பட்டு பஸ்லயே வந்து மறுநாள் டைமுக்கு ஆபிஸுக்கும் போயிடுவேன். ஒருநாள் காபி மிஷின் ரிப்பேர் ஆனபோது கோவத்தில் அன்னிக்கு பூரா காபியே குடிக்கலைன்னா பாத்துக்கங்களேன்..

இதெல்லாம் தவிர்த்து சக ஊழியர்களிடம் மட்டும் கொஞ்சம் அன்போடு நடந்துகொள்வேன். இப்படித்தான் நேற்று எனது அறையில் லஞ்சுக்கு அழைக்கவந்த சக ஊழியர் படை அரட்டையில் ஈடுபட்டிருந்தது. அலுவலகமா? சந்தைக்கடையா என்பது போல இரைச்சல். ஒரு முக்கிய போன்கால் வந்ததால் அதை நான் அட்டெண்ட் பண்ணிக்கொண்டிருக்க எனக்காக வெயிட் பண்ணும் நேரத்தில்தான் இந்தக்கூச்சல்.. ஏற்கனவே செல்போன் பேசிப்பேசி இடதுபக்க காதே ஓட்டையாகிவிட்டதோ என்று சந்தேகமாக உள்ளது. இந்த லட்சணத்தில் எனது அறையிலிருந்த போனில் ஏதோ பாதாள உலகத்தை தொடர்பு கொள்வது போல எதிராளியின் குரல் அடியாளத்தில் இருந்து கேட்கும். காதுக்குள்ளேயே திணித்துவிடுவதைப்போல போனை அழுத்திப்பிடித்து பேசிக்கொண்டிருந்தேன். இந்தச்சூழலில்தான் இந்த மகா இரைச்சல்.. வந்த கடும் கோபத்தில்..

"யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.!" என்று கத்தினேன்..

வழக்கமாக சட்டென அமைதியாகிவிடும் சூழல்.. இன்று கெக்கேபிக்கேவென சிரிக்கத்துவங்கியது.. நான் முழித்துக்கொண்டிருந்தேன்.

.

பெரியாரைப் பிழையாமை

சமீபத்தில் இணையத்தில் அலைந்துகொண்டிருந்த போது தற்செயலாக பிரபல மனநல மருத்துவர் ஷாலினியின் ஒரு பதிவை பார்க்க நேரிட்டது.. அந்தப்பதிவில் மிக நேர்மையாக அவரின் கருத்து பதியப்பட்டிருந்தாலும் தொடரும் பெரியாரைப் பற்றிய அவரின் புரிந்துகொள்ளலுக்கான முயற்சியையும் அது தெளிவாக கூறியிருந்தது. இப்போதைய நமது பதிவு அதைப்பற்றியதல்ல..

எப்படி ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல பெரியாரைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும் அவர்கள் எங்கு அவரை தெரியத்துவங்குகிறார்களோ அதைத் தாண்டிச் செல்ல முடியாத அளவில் அவரது பிரமாண்டம் அவர்களை விழுங்கிவிடுகிறது என்பதே நாம் அதிசயிக்கும் இன்றைய செய்தி.

உலகமெங்கும், தேவைப்படும் தருணங்களில் புரட்சியாளர்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றனர். இங்கே அப்படித்தோன்றிய ஒரு அற்புதம்தான் ஈவேரா. வாழும்முறைகளால், எண்ணங்களால், உணர்வுகளால் நோய் பீடிக்கப்பட்டிருந்த தன்மையை அறிந்த சிந்தனாவாதி அவன். ஒரு சமூகத்தையே தளையிலிருந்து மீட்டெடுக்கும் சக்தி தனியொருவனுக்கு வாய்த்திருக்கிறதென்றால் அது தெய்வ சங்கல்பமில்லையா...

ஹாஹாஹாஹ்ஹ்ஹாஹா.. .. ..

இப்போது அவன் இதைக்கேட்டு மேற்கூறிய வார்த்தைகளுக்காக என்னை அவன் அணிந்திருந்த செருப்பாலேயே அடித்திருந்தால் நான் எவ்வளவு பாக்கியசாலி. ஆரியம் செய்த சமூக விழுங்குதலை அவன் மூலம் அறிந்தவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவே வாழ்நாளை செலவழிக்க வேண்டியதாயிற்று. அவர்களைப் பொறுத்தவரை அவன் அதைமட்டுமே சொன்னவன். பிரம்மாண்டமான தடயங்கள் உருவாக்கப்பட்டு கட்டுக்கதைகளுக்கிடையே சிக்க வைக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தை கடவுள் மறுப்பு என்ற பெயராலே உடைக்கும் வல்லமை யாருக்கு வாய்த்தது? அதை அவன் மூலமாக உணர்ந்தவர்கள் அவனிடம் அதை மட்டுமே பார்த்தனர். உலகெங்கும் பெண்கள் அடிமைப்பட்டுக்கிடக்க இங்கே அதை உரத்துச் சொன்னவன் அவன். அதோடு மட்டுமில்லாது அவர்களின் விடுதலைக்கான முதல் தளையை உடைத்தவன் அவன். அப்படி அவனைக் கண்டால் அப்படியேதான் காணமுடியும். விஸ்வரூபம் அவன். புரட்சிவீரன் அவன். அவன் சிந்தனையின் கால் சுண்டுவிரலையே பார்த்துக் கொண்டிருப்பவன் நான்..

அடுப்பை ஊதிக் கொண்டிருந்தீர்கள்.

பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருந்தீர்கள்.

நான்காவதாய், எட்டாவதாய் வாழ்க்கைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்.

கட்டிக்கொண்டவனின் வயது ஒன்பதா, அறுபத்தொன்பதா என்பதை கல்யாணம் முடிந்த பிறகே தெரிந்துகொண்டீர்கள். அப்போதும் அவன் முகம் பார்க்க மூன்று நாட்களாயிற்று உங்களுக்கு.

பருவமடையும் முன்பே விதவையாக ஒதுக்கிவைக்கப்பட்டீர்கள்.

தமிழையும் வாசிக்கத்தெரியாத ஊனம் கொண்டிருந்தீர்கள்.

உங்களை மீட்டெடுத்தவன் இன்று உங்கள் முன்னாலிருக்கும் தகப்பனல்ல.. சகோதரனல்ல.. கணவனல்ல.. அவர்களை இவ்வாறு திருந்தச்செய்தவன் யார்? அவன் பெண்விடுதலைக்காக என்ன செய்தான் என்பதை பெண்களே நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். ‘பதவிக்காக..’ அவனது தம்பிமார்கள் இன்று திசைமாறி போயிருக்கலாம்.. அவர்கள் அவன் கொண்ட நெருப்பை நீங்கிச்சென்றவர்கள். அந்த நெருப்பு காலமெலாம் உறங்காத ஒன்று. அதை நீங்கள் கைப்பற்றுங்கள். விடுதலையை இன்னும் தீவிரப்படுத்துங்கள். செயற்கரிய செய்த வனை கூத்தாடிக் கொண்டாடுங்கள்.. உண்மையில் அவன் உங்களை மீட்க வந்த தேவதூதன்.!

periyar

த்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இவை தமிழ்ச் சொற்களும் அல்ல!

-பெரியார் (451973, விடுதலை)

.

Thursday, March 19, 2009

மோகம் 30 நாள்.!

டிஸ்கி : எனக்கே கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. தலைப்பு கொஞ்சம் டூ மச்சாக இருக்கிறதோ? அதுவும் நட்சத்திர வாரத்தில்.! நமக்கு ஒழுங்கா நூறடி ரோட்டிலேயே சலம்பாம நடக்கத்தெரியாது. இந்த லட்சணத்துல கயித்து மேல பயணமா? பார்ப்போம்..


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(குறள் : 1092)

என்ன சொல்கிறது வள்ளுவம்? தலைவன் அறியாமல் அவனை விழுங்கும் தலைவியின் சிறு பார்வை மட்டுமே காமத்தின் பாதியளவு கூட இல்லை.. அதை விடவும் பெரிது என்கிறது. வெறும் பார்வைக்கு மட்டுமே இவ்வளவு எனில்.. அடுத்து.. அதற்கடுத்து.. எவ்வளவு பெரிய விஷயம் இது.!

‘இத்தப்போயி எவண்டா 30 நாள்னு சொல்லிக்கினான்? கையில கெடச்சான்னா தாராந்துடுவான் மவனே.?’

‘லூஸ்ல வுடு மாமே.. இதுல வேறெதுனாக் கீதானு பாக்குணும்.. ஏதா பொடி வெச்சி சொல்லிட்டிருப்பானுங்கோ..’ என்று கண்ணன் என்னை அமைதிப்படுத்தினான்.

என்ன இந்த காமம்? 60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.? இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.?

நேற்று நான் 90யை நெருங்கிக்கொண்டிருந்த போது 270யை தாண்டிக்கொண்டிருந்த கண்ணனின் சொற்பொழிவு இதோ..

‘மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா? ஆவுதுன்னு வெச்சுக்கோ.. அன்னிக்கிருந்தே கணக்குல வெய்யி.. ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.. நுப்பதாவது நாளே உண்டாயிட்டான்னு வெச்சுக்கோ.. போச்சா.. அப்பாலிக்கு டாக்டரு, டெஸ்ட்டுக்குன்னு அலைவியா? அவன் முத மூணு மாசம் வாணாம், கடேசி மூணு மாசம் வாணாம்பானா? நடுவாலிக்கா நீயே பக்கத்துல போக மாட்டியா.. புள்ள பொறந்தப்பொறவு எவுனும் சொல்லாமலே மூணு மாசம் போ மாட்டியா? அப்பாலிக்கா ரெண்டாவுது இப்ப வாணானு அவ சொல்லுவாளா.? அப்போ அதச்செய்யி, இதச்செய்யாத, அதப்பண்ணு, இதப்பண்ணாத ஒரு பெரிய லிஸ்டே இருக்குமா? என்னத்த.. அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்போயிருமா? இன்னொண்ணு பிளான் பண்ணினன்னு வெய்யி அடுத்தால இன்னும் மூணு வருசம் ஓடிருமா? எல்லாம் முடிஞ்சு பாக்கும் போது நீ ஓஞ்சி போயிடுவயா? இப்ப கணக்குப் பாரு.. எவ்ளோ நாளு.. அந்த முத முப்பது நாளுதானே.. அதான் மோகம் நுப்பது நாளு.. அதுனால ‘போனா வராது, விடிஞ்சா இருக்காது.’ கவனமா இருந்துக்கோ.. அப்பயே ஜாலி பண்ணிக்கோன்றேன் நா.. இப்டிதான் நா திங்க்  பண்ணிகினுருக்கேன்.. நீ இன்னா சொல்ற.?’

விட்டால் ஆன்மீக உரையைத் தொடரக்கூடும் என்பதால் கைத்தாங்கலாக அவனை படுக்க வைத்துவிட்டு நானும் சோபாவிலேயே சரிந்தேன்..

இவன் கூறும் நாள்கணக்குதான் அந்த பழமொழிக்குப் பொருத்தமாக இருக்கிறது.  எனினும் இன்னொரு கோணமும் இருக்கிறது.  அது ‘தேவை’  என்ற பசி நோக்கில் மட்டுமே இருக்குமானால் முப்பது நாளென்ன, மூன்றே நாட்களில் கூட வடிந்துபோகலாம். ஆனால்  ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..  பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. 

kaamam

ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன்.

.

Wednesday, March 18, 2009

நீ, நான்.. அவள்.! (150வது பதிவு)

டிஸ்கி : இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு. இதுவரை எழுதியதில் உருப்படியானது எனக் கேட்டால் ஒரு பதினைந்தாவது தேறுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. அந்தப் பதினைந்தில் முதலிடம் எதற்குத் தருவீர்கள் என்று என்னை யாராவது கேட்டால் இதற்குத்தான் என்பேன். இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தைப் பயன்படுத்தி இன்னும் நிறைய வாசகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், புதிய நண்பர்களுக்காகவும் இதை மீள்பதிவு செய்கிறேன். ஏற்கனவே வாசித்தவர்களையும் கவரும் நோக்கில் சில திருத்தங்களையும் செய்துள்ளேன். நன்றி.

மங்கையராய் பிறப்பது குறித்து பாரதி அதிசயத்திருக்கிறான். மேலோட்டமாக எதையும் சொல்லியவனில்லை அவன். உணர்வுப்பூர்வமாக சிந்தித்துப்பார்த்திருக்கக்கூடும். ஆண்களிடம் சிக்கி காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்டு ஒரு கட்டத்தில் சிந்தனையே மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பெண்ணினமாய் பிறக்க எந்த நியாயத்தினை கண்டு கொண்டான் அவன்.? பெண்களின் இந்த வேதனை நீதியற்ற திட்டமிட்ட செயல். மொழி, இனம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மனிதர்கள் காலங்காலமாய் தன்னைத்தானே ஒடுக்கிக்கொண்டும் அழித்துக்கொண்டும் உள்ளனர். அதைப்போன்றதே பெண்ணடிமைத்தனமும். அடிமைத்தனம் எல்லை தாண்டும்போது புரட்சி தோன்றும் என்பது விதி. அதுவே இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் இன்னும் சில காலங்களில் தங்களை மீட்டெடுப்பார்கள். அதுவல்ல போற்றுதலுக்குரிய விஷயம். பிறகு எதை பாரதி குறித்திருக்கக்கூடும்?

ரசவாதம் என்பது என்ன.?

ஏதோ மகிழ்ச்சி அல்லது துக்கம்.. அதை வெளிப்ப‌டுத்த‌ வார்த்தைக‌ள‌ற்றுப் போகிற‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில். சிந்த‌னை தோற்று இப்ப‌டியே இருந்துவிட‌மாட்டோமா.. காத‌ல் போல‌.. தியான‌ம் போல.. என்று தோன்றுகிறது. வேறெதுவும‌ற்று ஒற்றைச்சிந்த‌னையில் மன‌ம் காற்றிலே மித‌க்கிற‌து. யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத‌ வார்த்தைக‌ளில்லாத‌ உண‌ர்ச்சிப் பெருக்கு என்று வைத்துக்கொள்ள‌லாமா?

அப்ப‌டியொரு வாய்ப்பைப்பெறுகிறாள் பெண். அதன் உச்சமாக த‌ன்னுள்ளேயே அதை நிக‌ழ்த்துகிறாள். அதை அவ‌ளால் ம‌ட்டுமே உண‌ர‌முடிகிற‌து. அவ‌ளே நினைத்தாலும் கூட‌ அதை யாருட‌னும் ப‌கிர்ந்து கொள்ள‌முடிய‌வில்லை. காத‌ல் பெருக்கில் சில சமயங்களில் சொல்ல‌ முய‌ன்று தோற்றுக்கொண்டேயிருக்கிறாள். அதை உண‌ரும் வ‌ர‌ம் ஆணுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. ப‌ரிதாப‌த்துக்குரிய‌வ‌ன் அவ‌ன். அவளோ சில‌ உயிர்த்துளிக‌ளில் இருந்து உயிரை சமைக்கத்துவங்குகிறாள். த‌னிமையில் சிரித்துக்கொள்கிறாள். சிலிர்த்துக்கொள்கிறாள். ம‌கிழ்ச்சியையும் சிரித்துதானே வெளிப்ப‌டுத்த‌வேண்டிய‌துள்ள‌து. குறுகுறுவென‌ உண‌ர்கிறாள். சிரிப்பு அள்ளிக்கொண்டு போகிற‌து..

த‌ன்னையே வேறாக‌ உண‌ர்கிறாள். அதுவ‌ரை உண‌விலே விருப்ப‌ம் கொள்ளாது தன்னை அழகிய மேனியளாய் வைத்திருந்த‌வ‌ள் த‌ன்னை தீராத‌ ப‌சிக்காரியாக‌ மாற்றிய‌து எதுவென‌ சிந்திக்க‌ த‌யாரா‌க‌யில்லாம‌ல் உண‌வை உண்டுகொண்டேயிருக்கிறாள். உண்டுமுடித்து கைக‌ழுவிக் கொண்டிருக்கும்போதே ப‌சியின் அடுத்த‌ கிள‌ர்ச்சியை உண‌ர்கிறாள் ஒருத்தி. அதுவ‌ரை எள்ளல்களைக் க‌ண்டுகொள்ளா‌து உண்டும‌கிழ்ந்த‌வ‌ள், உண‌வின்றிக்கிட‌க்கிறாள் இன்னொருத்தி நாட்க‌ண‌க்காய்.. நீரும்கூட‌ அடுத்த‌நிமிடமே ஒவ்வாது வாந்தியாக வெளியேறுகிற‌து. அடிவ‌யிற்றிலிருந்து கிள‌ம்பும் புல்ல‌ரிப்பு தலை வ‌ரை கிறுகிறுக்க‌ச்செய்கிற‌து. சாய்ந்துகொள்ள‌ க‌ண‌வ‌ன் தோள் தேடுகிறாள். கொடுப்ப‌வ‌ன் கொஞ்ச‌மாயேனும் பாக்கிய‌ம் செய்த‌வ‌ன்.

வ‌யிறு மேடுறுகிற‌து. த‌ன்னையே அதிச‌யித்துக்கொள்கிறாள், அற்ப‌ விஷ‌ய‌ங்க‌ளும் ஆர்வ‌த்தை தூண்டுகிற‌து. காந்த‌ள்ம‌ல‌ர் எப்ப‌டியிருக்கும் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து. த‌க்காளி ஊறுகாய் எப்ப‌டியிருக்கும்? ஆரஞ்சு ஏன் இப்படி புளிக்கிறது? இர‌ண்டு கால்க‌ளிலும் கார‌ண‌மேயில்லாம‌ல் அரிப்பெடுக்கிற‌து. அவ‌ள் கைக‌ளைத்த‌டுத்து அந்த‌க்கால்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ள்பூசி ம‌கிழ்கிற‌வ‌னுக்கு சொர்க்க‌த்தின் க‌த‌வுக‌ளில் முத‌ல் தாள் திற‌க்கிற‌து. அதிகாலை விழிக்கும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ள் ஏன் இன்னும் உற‌ங்கிக்கொண்டிருக்கிறாள். இவ‌ள் என்ன நேற்று நான் கண்ட என் ம‌னைவிதானா? இவ‌ள் முக‌ம் நான் இதுவ‌ரை க‌ண்ட‌து போலில்லையே, சாள‌ர‌ங்க‌ள் அடைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ அறையில் இவ‌ள் முக‌த்துக்கு ம‌ட்டும் எங்கிருந்து வ‌ருகிற‌து இந்த‌ ஒளி.?

எட்டும‌ணிவ‌ரைக்கும் இன்ப‌மாய் தூங்கு‌ப‌வ‌ளுக்கு என்ன‌வாயிற்று இன்று? நால‌ரை ம‌ணிக்கே என் கால்விர‌ல் ந‌க‌ங்க‌ளை முத்த‌மிட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாளே. அவ‌ள் கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம்பெற்ற‌வ‌ள். நீ அதிச‌ய‌த்துக்கொண்டே கிட... அற்ப‌ மானுட‌ன் நீ.! வேண்டுமானால் த‌வ‌மிருந்து சில‌ வ‌ர‌ங்க‌ளைப்பெற்றுக்கொள். அவ்வ‌ள‌வே உன‌க்கு வாய்த்த‌து. ஒவ்வொரு நாளும் வ‌ள‌ர்த்தெடுக்கிறாள். கால்க‌ளின் அரிப்பு நின்ற‌பாடில்லை. சிறிது வீக்க‌மும் தெரிகிற‌தே.. இன்னும் தலைசுற்றிக்கொண்டு வருகிறதே.. உமா இப்ப‌டியெல்லாம் சிர‌ம‌ப்ப‌ட‌வேயில்லையாமே.. ம‌ல்லாந்து ப‌டுக்கச்சொல்லி முதுகு வ‌லிக்கிற‌‌து. என் செல்ல‌த்துக்கு மூச்சு திண‌றுமோ? வ‌ல‌ப்புற‌மே சாய்ந்துப‌டுக்கிறாள். சில நிமிடங்களிலேயே எழ‌வேண்டும் போல‌யிருக்கிற‌து. ஒருக்க‌ளித்து எழுகிறாள். ப‌டுக்க‌வேண்டும் போல‌யிருக்கிற‌து.

இன்னும் எவ்வ‌ள‌வு தூர‌ம்தான் இந்த‌ வ‌யிறு வ‌ள‌ரும்? சுருக்க‌ங்க‌ள‌ற்ற ப‌லூனின் மேற்ப‌ர‌ப்பாய் தொட‌வும் ப‌ய‌மாயிருக்கிற‌து. அவ‌ள் உன்னை முத்த‌மிட்டு சிரிக்கிறாள். க‌ட்டிக்கொள் என்கிறாள். க‌ட்டிக்கொள்.. அது தேவ‌தை தானாக‌வே வ‌ழ‌ங்கும் வ‌ர‌ம். அந்த‌ மார்ப‌க‌ங்க‌ள் முன்ன‌ர் போல‌ இல்லையே.. கொஞ்ச‌ம் ப‌ய‌மாக‌வும் இருக்கிற‌‌து. ப‌ய‌ப்ப‌டாதே.. அவ‌ள் உன்னை அழைத்துச்செல்வாள்.

ஒரு பொன்நாளில் க‌த‌ற‌க்க‌த‌ற‌ பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். தேவ‌தை இப்போது அவ‌ளிட‌மிருந்து கொஞ்ச‌ம் இட‌ம்மாறி அவ‌ள் பிள்ளையைச்சேருகிற‌து. இப்போதும் பெருமை அவ‌ளுக்கே.. தேவ‌தையை பெற்ற‌வ‌ளாகிறாள். நீ அனைத்தையும் வேடிக்கைதான் பார்க்க‌முடியும். பிர‌ச‌வ‌ப்ப‌டுக்கையில் நைந்துகிட‌க்கும் அந்த‌ப்பெண்ணிட‌ம் இப்போது உன் ம‌னைவியைப்பார்ப்பாய். தேவதை அடையாளங்களற்ற அவளை கொஞ்ச‌ம் ப‌த‌ற்ற‌ம் த‌ணிந்து நெருங்கும் தைரிய‌ம் வ‌ரும் உன‌க்கு. சொர்க்கத்தின் மற்றொரு தாளும் திற‌க்க‌வேண்டுமெனில் அவ‌ளில் காய்ந்த‌ உத‌டுக‌ளில் முத்த‌மிட்டுக்கொள்.

வ‌லிக்குமோ என்று ப‌ய‌ந்துகொண்டிருந்த‌வ‌ளின் மார்புக‌ளிலிருந்து தானாக‌வே பால் க‌சியும். க‌ண்க‌ள் திற‌க்காத‌ சிசுவின் மென்மையான‌ உத‌டுக‌ளா அவ‌ளைக்காய‌ம் செய்ய‌ப்போகிற‌து.? வெட்குவாள்.. எப்போது க‌ற்றாள் இவ‌ள்.? குழந்தையை அரவ‌ணைக்க.. அவ‌ளின் கைக‌ளில் அது சிரிப்ப‌தைப்போலுள்ள‌து. மூன்றாம் நாள் வெந்நீர் குளித்துவ‌ருகிறாள். நீ கொஞ்ச‌ம் பெருமூச்சு விட்டுக்கொள்வாய். ஆட்க‌ளில்லாத‌ போது அருகில‌ழைத்து பிள்ளையை ம‌டியிலிட்டு உன் தோள் சாய்வாள். உன‌க்கு ம‌ற்றொரு வாய்ப்பு.

Couple%20and%20baby

வேலையை கார‌ண‌ம் காட்டி பிள்ளையின் மாத‌ வ‌ளர்ச்சியை க‌ண‌க்கிட்டுக்கொண்டிருப்பாய் நீ. அவ‌ள் பிள்ளையின் நொடிக‌ளோடு வாழ்ந்துகொண்டிருப்பாள். ம‌ல‌த்தை க‌ழுவிமுடியாம‌ல் துடை‌த்தெடுப்பாள். அது க‌ண்விழிக்கும் ஒவ்வொரு முத‌ல்நொடியிலும் இவ‌ள் முக‌ம் அதைப்பார்த்திருக்கும். பாலின் அள‌வை எப்போது க‌ண்டுகொண்டாள் இவ‌ள்? குடித்துக்கொண்டிருக்கும் குழ‌ந்தையை மார்பிலிருந்து பிடுங்கியெடுப்பாள். இன்னும் கொடுத்தாலென்ன‌ என்பாய் நீ. அல‌ட்சிய‌மாய் சிரிப்பாள். உனக்கு குழ‌ந்தை அழுவ‌து ம‌ட்டும்தான் தெரிகிற‌து. பரபரப்பாகிறாய். அவ‌ளுக்கு அத‌ன் அர்த்த‌ம் விள‌ங்குகிற‌து. அந்த‌ அழுகை மொழியினை எப்போது அறிந்தாள் இவ‌ள்?

எப்போது விக்க‌லெடுக்கிற‌து? எப்போது தும்ம‌ல் விழுகிற‌து? எப்போது எத்த‌னை சொட்டுக‌ள் எந்த‌ ம‌ருந்தென‌ தெரிகிற‌து அவ‌ளுக்கு.. எப்போது முக‌ம் பார்க்கிறாள் அந்த‌ குட்டித்தேவ‌தை? எப்போது கைகால்க‌ளை அசைக்கிறாள்? எப்போது கை நீட்டுகிறாள்? எப்போது முத‌ல்முறையாக‌ புர‌ள்கிறாள்? ஒரு பொருளை கைக‌ளால் எடுப்ப‌து எப்போது? விர‌ல்க‌ளால் எடுப்ப‌து எப்போது? ஒலிக்குறிப்புக‌ளை எப்போது உண‌ர‌த்துவ‌ங்குகிறாள்? எது அவ‌ளைச் சிரிக்க‌ச்செய்கிற‌து? ஏன் அந்த‌ முக‌ம் அழுகையை ஆர‌ம்பிக்க‌ எத்த‌னிக்கிற‌து? உன் குர‌லில் என்ன‌ மாய‌ம் வைத்திருக்கிறாய்.. அந்த‌ அழுகையையும் சிரிப்பாக‌ மாற்றுகிறாய். உணவு அவளை உறுத்துகிறதா? உடை அவளை உறுத்துகிறதா? காற்று அவளை உறுத்துகிறதா? தூசு அவளைத்தொடமுடியுமா? ஒரு குட்டி எறும்பும் அவளை நெருங்கமுடியுமா? எப்போது உறங்குவாள்? எப்போது விழிப்பாள்? நீ இரவுகளில் தூங்குகிறாயா? சில மாதங்கள் ஆகிவிட்டனவே.. கடிக்கிறாளா? இப்போது உன் மார்புகள் வலிக்கின்றனவா? அவளின் அடுத்தடுத்த உணவுகள் என்னென்ன? எப்போது உட்காரத்துவங்குவாள்? எழுவாள்? நடப்பாள்?

யார் இன்னும் தேவ‌தையாக‌ வாழ்கிறீர்க‌ள்? அவ‌ளா? நீயா? இருவ‌ருமேவா? அப்ப‌டியானால் நான் யார்? நான் என்ன‌ செய்ய‌வேண்டும்.?

என்னிட‌ம் ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கின்றன..
விடையாக‌ நீ ஒருத்தி இருக்கிறாய் .!

.

ரமா எனும் சுனாமி

‘மனுஷி ஒரு அஞ்சி நிமிசம் நிம்மதியா இருக்கமுடியுதா இந்த வீட்ல.. எங்கியாவது போய் ஒழியலாமான்னு இருக்குது..’ என்று ஆரம்பித்திருந்தது புலம்பல்கள்.. எந்த நேரமும் அர்ச்சனையாக நம்மை நோக்கித் திரும்பிவிடும் ஆபத்திருப்பதை ஊகித்தேன்.

என்ன காரணமாக இருக்கும் என யோசித்தேன்.. பிடிபடவில்லை. ஏதாவது வாங்கிவரச் சொல்லியிருந்தாளா? மறந்துவிட்டோமா? இல்லையே.. வழக்கத்தைவிட சீக்கிரமாகவே அலுவலகத்திலிருந்தும் திரும்பிவிட்டோமே.. எங்காவது போவது போல பிளான் எதுவும் இருக்கவில்லை. இந்த மாத கோட்டாவான ஐநாக்ஸுக்கும் போன வாரமே போய் வந்தாச்சு. ஏதாவது வீட்டு வேலை பெண்டிங்கில் வைத்திருக்கிறோமா?

பின்புற சாக்கடை அடைப்பை நேற்றே குத்திவிட்டு கிளீன் பண்ணியாச்சு. அவளுடைய பிஞ்சுபோன செருப்பை போன வாரமே தச்சு கொண்டு வந்தாச்சு. எலி பிஸ்கெட்டும் வாங்கித் தந்தாச்சு. கொசுவலைக்கு ஆணியடித்தல், ஷெல்ஃபை கிளீன் செய்தல், டூப்ளிகேட் சாவி, டாய்லெட் பல்பை மாற்றுதல், கிரைண்டர் குளவிக்கு கைப்பிடி மாற்றுதல் என எல்லாவற்றையுமே பண்ணி முடிச்சாச்சே.. ஏதாவது மறந்துட்டோமோ?

‘குடிக்க ஏதாவது தர்றியாம்மா?’

‘ஹார்லிக்ஸ் தீந்து போச்சுன்னு நேத்தே சொன்னேனா இல்லியா?’

‘இப்ப வாங்கிட்டு வந்திடவா? நாளைக்கு வாங்கிக்கலாமா.? என்னமா டென்ஷனா இருக்கே? காபியாது தர்றியா?’ என்று தைரியமாக பக்கத்தில் சென்றேன்.

‘என்னது நொன்னமா? காபி தர்றேன்.. போய் டிவி முன்னால போய் உக்காந்து உங்க வேலைய பாருங்க..’

அமைதியாக இருப்பது புத்திசாலித்தனமா? சமாதானப் படுத்த முயலலாமா? குழப்பமாக இருந்தது.. சரியாக முடிவெடுக்கமுடியாவிட்டால் சிக்கலாகிவிடக்கூடும். எத்தனை முறை அனுபவப்பட்டிருக்கிறோம்.. நைசாக ஹாலுக்குப் போய் டிவி முன்னால் உட்கார்ந்து ‘சிரிப்பொலி’யை தேடினேன்.

‘போங்கன்னா என்னமோ ஒழின்னு போயிடுவீங்களே..’ என்றவாறே அருகே டக்கென்று காபியை வைத்தாள். அமைதிகாத்தேன். ம்ஹூம்.. இது நேரமல்ல.. என் காதில் விழும்படியும் அதேநேரம் சண்டையாகவும் இல்லாமல் பிற வேலைகளை பார்த்தவாறே புலம்பல் தொடர்ந்தது..

‘காலையில எட்டு மணிக்கு போனா ராத்திரி எட்டு மணிக்கு வர்றது.. வாரத்துக்கு ரெண்டு நாளு ஆபிஸ்ல பார்ட்டி, பிரெண்ட பாக்க போறேம்னு எங்கியாவது போய் ஒழிஞ்சிட்டு பதினோரு மணிக்கு வர்றது..வந்து டிவிய கட்டிக்கிட்டு மாரடிக்கவேண்டியது.. மாசத்துக்கு ரெண்டு நாள் ஹைத்ராபாத்துக்கு போயிர வேண்டியது. இங்க நா ஒருத்தி எதுக்கு இருக்கேன்னே தெரியல.. துணி தொவைக்க வேண்டியது, சமையல் பண்ண வேண்டியது, பாத்திரம் தேய்க்க வேண்டியதுன்னு இதே வேல.. இருவத்துநாலு மணிநேரமும்.. என்ன மிஷினா நா.? அஷ்டலச்சுமி கோயிலுக்கு கூட்டிட்டு போங்கன்னு எத்தன தடவை சொல்லிட்டிருக்கேன். மேட்சிங் இல்லாம யாரு சேலை எடுக்கச்சொன்னது? நா கேட்டேனா.. அந்த ப்ளு கலர் ஸாரிக்கு பிளவுஸ் எடுக்கணும். என்னிக்கு நடக்குப் போவதோ? ராத்திரிக்கு என்ன வேணும்?’

‘என்ன புதுசா கேள்வி.. தோசை இருக்கும்ல..’

‘மாவெல்லாம் இல்ல.. மதியம் பண்ணின சோறுதான் இருக்கு..’ அப்புறம் என்ன கேள்வின்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டு ‘சரிம்மா..’ என்றேன்.

அப்புறமும் நிற்காமல் அர்ச்சனை தொடர்ந்தது.. கொஞ்சம் நேரம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு அருகில் சென்றேன்.. ‘என்ன பிரச்சினை சொல்லும்மா..’ என்று கையைப் பிடித்து இழுத்தேன். பலத்த பீடிகைக்குப்பின்னே மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்..

‘எங்க கல்லூ சித்தப்பாவோட அண்ணன் இருக்காங்கல்ல.. அவுங்க பொண்ணோட நாத்தனாரோட வீட்டுக்காரர் இருக்கார்ல.. அவுங்க வீடு எங்க வீட்டுக்கு அடுத்த தெருவுலதான் இருக்கு.. நாம ரெண்டு பேரும் கூட அங்க ஒரு நாள் போயிருக்கோமே.. அவுரு தங்கச்சிக்கு அடுத்த மாசம் கல்யாணமாம்.. நா ஊருக்கு போணும்ங்க.. நீங்க கல்யாணத்தன்னிக்கு வாங்க, ரெண்டு பேரும் ஒண்ணா வந்துடலாம்.. போறது.. நா இப்பவே போயிடுதேன்.’

ஆஹா.. இதுக்குதான் இவ்வளவு பீடிகையா.. கடுப்பானேன். ‘அப்படி வா வழிக்கு, இதுக்குதான் இந்த வரத்து வந்தியா? போன மாசம்தானே ஒரு வாரம் ஊர்ல இருந்திட்டு வந்தே.. அதுக்குள்ள இன்னொரு வாட்டியா.. அதுவும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே போய் என்னடி பண்ணப்போறே.? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..#$%^&*(&^%$!#%’

‘(*&^%)(#$(^%&*  #$%#$)(^%  !$%^&^^*(..’

அதன் பின் வந்த புயல் வேக வசனங்களும், சண்டைக்காட்சிகளும் நாகரீகம் கருதி சென்ஸார் செய்யப்படுகிறது. பின்னர் ஊருக்கு டிக்கெட் புக் பண்ணிய பிறகுதான் அந்த சுனாமி ஓரளவு அடங்கியது என்பதை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.

.

Tuesday, March 17, 2009

தேர்த்திருவிழா

அது விஸ்வரூபமான திருவாரூர்த்தேரோ.. நெல்லையப்பரின் ஆழித்தேரோ அல்ல.. திருக்கடுக்கை முன்றீஸ்வரரின் குட்டித்தேர்தான். நெல்லை மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்களில் இது போன்ற தேர்கள் தேர்நிலையிலேயே தங்கி விட்ட அவலத்தை இன்றும் காணலாம். இன்னும் சில காலங்களில் அவற்றில் பெரும்பாலானவை மரத்துண்டுகளாக சித‌றி மண்ணோடு மறைந்து போகலாம். ஒரு பெரியார்ப் பிரிய‌னுக்கு ஏன் இந்த தேர்களைப்பற்றிய கவலை?

திருவிழாக்கள்.

கொண்டாட்ட‌ங்க‌ள் ம‌க்க‌ளை உயிர்ப்போடும் ஒற்றுமையோடும் வைத்திருப்ப‌த‌ற்கான‌ கருவிக‌ள். கோயில் திருவிழாக்க‌ள் அவ‌ற்றில் மிக‌ முக்கிய‌மானவை. ஒவ்வொரு கிராமங்க‌ளிலும் ஒவ்வொரு கார‌ண‌ காரிய‌த்துக்காக‌, ப‌ல்வேறு திருவிழாக்க‌ளின் போதும், ப‌ல்வேறு கால‌ இடைவெளிக‌ளில் தேர்வ‌ல‌ம் கொண்டாட‌ப்ப‌டுகிற‌து. வ‌ருட‌ம் ஒருமுறை.. அல்லது நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை என அது இடத்துக்கு இடம் வேறுப‌ட‌லாம். மேற்குறித்த‌ முன்றீஸ்வ‌ர‌ரின் தேர் நான் மேலே சொன்னதைப்போல தேர்நிலையிலேயே தங்கிவிடவில்லை. இன்ற‌ள‌வும் வ‌ருட‌ம் ஒருமுறை கோலாக‌ல‌மாக‌ ஊர்வ‌ல‌ம் வ‌ந்துகொண்டுதான் இருக்கிற‌து.

ஒவ்வொரு விழா நிறைவுறும் போதும் அடுத்த கொண்டாட்டத்தை எதிர்பார்த்துக் கிடக்கும் வயது. தீபாவளியில் பட்டாசுக் கொண்டாட்டம். தொடரும் கார்த்திகையில் சொக்கப்பனை எனும் சுவாரசியம். தமிழர் பெருமையோடு கையில் காசும் புரளும் பொங்கல். ஆவேசம் மிகுந்த கருப்பன் கொடைவிழா. புரட்டாசி சனிக்கிழமை தோறும் சுண்டலும், சர்க்கரைப் பொங்கலுமாக பெருமாள் கோவில் திருவிழா. பயணம் செய்து வருடந்தவறாது பங்குனி உத்திரத்தில் பார்க்கவேண்டிய ஆனைமலை அய்யனார்.. இப்படி வருடம் முழுதும் விழாக்கள் நிறைந்திருக்கின்றன இன்னும் இன்றும் கிராமங்களில்..

இவ்வாறான விழாக்களில் ஒன்றுதான் 11 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் மாசித்திருவிழா. ஊரில் நிறைந்திருந்த 11 வகை சாதியாருக்கும் ஒவ்வொரு நாள். இதைப்போன்ற விழாக்கள் சாதிகளை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவிக்கொண்டிருக்கின்றனவா என்பதைப் பற்றிப் பேச  இப்போது நாம் விரும்பவில்லை. இதிலும் ஒரு சுவாரசியம்.. சாதிக்கட்டு 10 நாட்களுக்கே. 11வது நாள் தொழில் முனைவோருக்கு. இருப்பது 10 நாட்கள் ஆனால் சாதிகள் 11. எட்டாவது நாளை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இரண்டு சாதியினர் பங்கிட்டுக்கொள்கின்றனர் காலங்காலமாக. அன்று மட்டும் இறைவனுக்கு இரண்டு வேளை பூசனைகள். ஒவ்வொரு நாளும் அந்தந்த சாதியினரின் ஆர்வத்துக்கேற்றபடி கரகம், பாட்டுக்கச்சேரி, கோவில் வாசலில் திரை கட்டி சினிமா திரையிடுதல் என்று கொண்டாட்டங்கள் களைகட்டும். ஒரு காலகட்டத்தில் சினிமா மோகத்தில் அத்தனை நாட்களிலுமே சினிமா பார்க்க நேரிட்டது.. பெரும்பாலும் ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’ அதுவும் வருடாவருடம் அதே படங்கள். சாமியின் சப்பரம் கோவில் திரும்பிய பின்னரே இரவு 11 மணிக்கு துவங்கும் படங்களையும் பொறுமையோடு காத்திருந்து பார்த்தனர் மக்கள். 11 வது நாள் தொழிமுனைவோராதலால் இரண்டு புதிய படங்களையும், அரைமணிநேரம் தாங்குமளவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் காணலாம்.

குறிப்பிடத்தகுந்த 9ம் நாள் தேரோட்டம். அது அந்நாளுக்குரிய சாதியினருக்கு என்று மட்டுமல்லாமல் அனைவரும் பங்கு பெற கோலாகலமாக அரை கிமீ பயணம் செய்து மீண்டும் நிலை வந்து சேரும் தேர்.

june14c

பல வருடங்களுக்கு முந்தைய அந்த ஒரு நாளில் வழுவும் அரைக்கால் சட்டையை ஒரு கையால் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் தேரை மிக வலுவுடன் இழுத்துக் கொண்டிருந்தேன்.. நான் இழுப்பதாலேயே தேர் நகர்வதாய் ஒரு எண்ணம். அனைவரும் கயிற்றை கீழே வைத்துவிட்டால் அந்தக்கயிற்றைக்கூட நகர்த்த முடியாது தனியொருவரால்..

இன்றும்  அங்கே அந்த தேர்பவனி நிகழ்கிறது. இங்கே நான் 10 மணிக்கு விழித்தெழுந்து எனது ஞாயிற்றுக்கிழமைக்கு யாரும் உலை வைத்துவிடக்கூடாதே என்ற பயத்துடன் செல்போனைக் கவனித்தபடியே டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

.

சவால்கள் நிறைந்த பதிவுலகம் (+ஒரு முக்கிய பின்குறிப்பு)

எழுதுவது மிகக் கடினமான விஷயம்.. வாசிப்பது அதனினும் கடினமான விஷயமாக இருக்கிறது.. இன்றைய வேகமான சூழலில்.! தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். நாம் மட்டும் எழுதி மற்றெல்லோரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பத்திரிகை, இதழ்களில் எழுதும் வாய்ப்பு என்பது நன்றாக எழுதும் திறன் மிக்கவர்களுக்கோ அல்லது செல்வாக்குப் படைத்தவர்களுக்கோ கிடைக்கும் ஒன்றாக இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டாலே அவர் கவிஞர் அல்லது எழுத்தாளர் என்ற அடைமொழிக்குரியவர்களாகிவிடுகின்றனர். ஆயிரமாயிரம் பிரதிகளில் படைப்புகள் அச்சாகி, அதை விலை கொடுத்து வாங்கும் வாசகர் கரங்களை அவர்களின் படைப்புகள் சென்றடைந்துவிடுகின்றன. மறுகேள்விக்கு இடமில்லாமல் அந்த படைப்பு வாசகர்களால் பெரும்பாலும் வாசிக்கப்பட்டுவிடுகிறது. பின்விளைவுகளையும், நீடித்த வெற்றியையும் பற்றி நாம் இப்போது பேச வரவில்லை. முதலில் படைப்புகளை வாசகர்களை படிக்க வைத்தால்தானே பின்னர் வெற்றியைப் பற்றி பேசமுடியும்.?

முதலில் எழுத்தாளர்களுக்கான, பத்திரிகைக்களுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது இன்றைய சூழலில். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் வலையுலகத்தின் வாசகர் எண்ணிக்கை மிகக்குறைவானதாகவே இருக்கிறது. பத்திரிகைகளைப் போல எந்த சிரமமும் இல்லாமல் யாரது படைப்புகளும் களம்காண எந்தத் தடையுமில்லை. நூலகத்தில் குவிந்துகிடக்கும் புத்தகங்களைப் போல ஒவ்வொரு வலைப்பூவும் ஒரு குட்டிப்புத்தகமாய் வலையுலகில் குவிந்துகிடக்கிறது. பத்திரிக்கை உலகத்தோடு ஒப்பிடுகையில் நினைத்தும் பார்க்க இயலாத போட்டி இங்கே. ஒவ்வொரு மனிதனிடமும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த குறைந்த வாசகர் கூட்டத்தில், மிகுந்த போட்டிக்கிடையே எப்படி படைப்புகளை வாசகர்களை படிக்கச்செய்வது.?

செய்தி, சிந்தனை, சம்பவங்கள், நகைச்சுவை என விஷயம் எதுவாக இருப்பினும் உள்ளடக்கம், படைப்பின் அளவு, தலைப்பின் வசீகரம், வாசகரை தொடர்ந்து வாசிக்கச்செய்யும் நடை, புதுமை என எழுத்தாளர்களுக்குக்கூட இல்லாத அளவு ஒவ்வொரு விஷயமும் பதிவர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்த்தாக உள்ளது..

நல்ல தரமான உள்ளடக்கம், வசீகரமான நடை, அழகான தலைப்பு அத்தனை இருந்தும் படைப்பின் நீளம் மலைக்கவைப்பதாய் இருந்தால் (ஒரு பத்திரிகைச் சிறுகதையின் நான்கில் ஒருபங்கு) பதிவு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. பிறவற்றில் சிறப்பாக இருந்து ஒரு நல்ல வசீகரமான தலைப்பு இல்லாமல் போனாலும் படைப்பு தோல்வியைத் தழுவுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பானதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.!

முக்கியமான டிஸ்கி : இப்படிப் பலமாக சிந்தித்ததன் விளைவுகளை நமது மூத்த பதிவர்களான ஜ்யோவ்ராம் சுந்தர், முரளிகண்ணன், சஞ்சய்காந்தி, மாதவராஜ், அனுஜன்யா, அதிஷா போன்றோரின் தலைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

.

Monday, March 16, 2009

பிரபல பதிவர்கள் (நிஜ) பேட்டி

நட்சத்திரவார சிறப்பு பதிவுக்காக பிரபல பதிவர்களில் சிலரை நேரில் திரட்டி சந்திப்பு நிகழ்த்தி கலந்துரையாடலை வெளியிட வேண்டுமென்பது திட்டம்.. அதான் உங்களுக்குத் தெரியுமே உள்ளுவது மட்டும்தான் உயர்வுள்ளல்.. இறுதியாக நேரில் சிக்கியவர்களிடம் நேரிலும், தப்பியவர்களை போனிலும், மெயிலிலும் பிடித்து வலுக்கட்டாயப் பேட்டி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே கேள்வித்தாள் தரப்பட்டு சுருக்கமான பதில் தர கேட்டுக்கொள்ளப்பட்டது. பதிவின் நீளம் கருதி மூன்று கேள்விகளுக்கு மட்டும் அவர்கள் தந்த பதில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது..

கேள்வி 1 :

உங்கள் முதல் காதலியை இப்போது சந்தித்தால் என்ன செய்வீர்கள் அல்லது எப்படி ஃபீல் பண்ணுவீர்கள்?

செல்வேந்திரன் : முதல் காதலியை இப்போது சந்தித்தால், பால்யத்தில் நான் கொண்டிருந்த ஒருதலைக் காதலைச் சொல்லிச் சிரிப்பேன்.

முரளிகண்ணன் : கோபப்படுவேன். பின் சொல்வேன்.. “ மதியம் கட்டி கொடுத்த சாப்பாட்டில உப்பு கம்மி” என்று.

வடகரை வேலன் : ஒன்னும் பண்ணமுடியாது ஏன்னா அவளுக்கும் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு. நல்ல வேளை இவளைக் கல்யாணம் பண்ணலன்னு நெனைப்பேன்; திருவாரூர்த் தேர் மாதிரி இருக்கா இப்ப.

அனுஜன்யா : 'வணக்கம் டீச்சர்' என்று கைகூப்பி வணங்குவேன். ஆம், மல்லிகா டீச்சர்தான் என் முதல் காதலி

கேபிள்சங்கர் : நான் பார்க்கும் போது அழகாய் இருந்தவள் இப்போது விடுதலைபுலிகளின் ஆளுயர குண்டு போலிருக்க, மனசுக்குள் “ ஐ.. எஸ்கேப்”
நேரில் ”என்ன இளைச்சு போயிட்ட..”

வெயிலான் : சினிமா நடிகைகள் தவிர வேறு எனக்கு காதலியே இல்லை. சீரியசா.

ச்சின்னப்பையன் : அப்போவே நான் ஜொள்ளு விட்டுக்கிட்டு 'ஐ அவ்வ் வூ'ன்னு சொன்னேன். நீதான் சரியா கேக்காமே 'ப்பூபூப்பூ'ன்னு சிரிச்சிட்டு போயிட்டே.. இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது. எங்கிருந்தாலும் வாழ்க!!! (ஏம்பா.. குஷி விஜய் மட்டும்தான் குழந்தையா இருக்கும்போதே லவ் பண்ண முடியுமா என்ன?)

மகேஷ் : இப்பவும் சந்திச்சுகிட்டோ / பேசிக்கிட்டோதான் இருக்கேன். அவங்களும் அவங்க கணவரும் என்னுடைய பிரதான நண்பர்களா இருக்காங்க. நட்பு இன்னமும் ஆழமாகியிருக்கு. நல்ல புரிதல் இருக்கு.

குசும்பன் : என் முதல் காதலியை தினம் மாலை சந்திக்கிறேன், சில சமயம் ஆபிஸ் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் சீக்கிரம் சந்திக்கப்போய்விடுவேன். ஆமாண்ணே என்னா முழிக்கிறீங்க செஞ்சதே ஒரு காதல் எழுதிய எல்லா பரிட்சையையும் இரு முறை சில சமயம் அதுக்கு மேலே எழுதும் படி ஆன எனக்கு காதல் எனும் தேர்வில் மட்டும் முதல் அட்டெம்டிலேயே பாஸ் ஆகிட்டேன் பாஸ்! என்ன செய்ய விதி வலியது! ஆகையால் முதல் காதலிதான் என் மனைவி! எப்படி பீல் பண்ணுவீர்கள்? துபாயில் இதுக்காக ரூம்போட்டா அழமுடியும், அப்படியே கிடைக்கிற இடத்தில் அழுதுக்கவேண்டியதுதான்:)

கேள்வி 2 :

பதிவெழுத வராவிட்டால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்? (இப்ப செய்துகொண்டிருக்கிற அதே..ஆணியைத்தான் பிடுங்கிக்கொண்டிருப்பீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் கேட்பது உங்கள் எழுத்தார்வத்துக்காக..)

செல்வேந்திரன் : பதிவெழுத வழியற்று இருந்தால் இயன்றவரை பத்திரிகைகளுக்கு எழுதிப்பார்த்துவிட்டு... எதுவும் இடம்பெறாமல் இந்தப் பழம் புளிக்குமென வாசித்தலோடு ஆர்வத்தைத் தணித்திருப்பேன். தமிழ் பிழைத்திருக்கும்.

முரளிகண்ணன் : பதிவுலகுக்கு வரும் முன் பெரியதாக எதுவும் எழுதியதில்லை. (இப்போதும் தான்) . இது எனக்கு மிகப்பரிய வாய்ப்பு கொடுத்தது என்பதில் இரண்டாம் கருத்து இல்லை.

வடகரை வேலன் : அச்சகம் இருப்பதால் ஒரு மாத இதழ் தொடங்கலாமா என்ற யோசனையில் இருந்தேன். அப்புறம் எப்படித்தான் என்னை வெளிப்படுத்துவது?

அனுஜன்யா : பின்னூட்டங்களில் தன்நிகரில்லா நாயகனாகி இருப்பேன். ஒரு ஆயிரம் பேரைத் 'தொடரும்' பேர்வழி ஆகியிருப்பேன்.

கேபிள்சங்கர் : ஏற்கனவே செய்து கொண்டிருந்த திரைக்கதை/வசனம் மட்டும் எழுதும் ஆணியை பிடிங்கி கொண்டிருந்திருப்பேன். பதிவெழுதுவதால் என்னை போன்ற சோம்பேறிகளுக்கு ஒரு நல்ல எழுத்து பயிற்சியாகிறது என்பதை மறுக்க முடியாது.

வெயிலான் : நிறைய வலைப்பதிவுகளை படித்து பார்க்கும் போது மிக மோசமாக இருக்கும். அதற்கும் நல்ல பதிவு, சூப்பர்னு பின்னூட்டங்கள் இருக்கும். அட! இதை விட நாம நன்றாக எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் எழுத வந்தேன். அந்த பின்னூட்டங்களெல்லாம், பரிசல் மாதிரி ஆட்கள் படிக்காமல் போட்ட பின்னூட்டங்கள் என்று பின்னர் தான் தெரிந்தது. எழுத வராவிட்டால், இன்னும் நிறைய புத்தகங்கள், வலைப்பதிவுகள் படித்துக் கொண்டிருப்பேன். அப்படி படித்திருந்தால், உங்க அளவுக்கு பெரிய எழுத்தாளரா ஆயிருப்பேனோ என்னவோ?

ச்சின்னப்பையன் : ஹிஹி.. வேறென்ன.. வேலையில் அனுப்பும் மின்னஞ்சல்களில் கூடவே ஒரு ஜோக், கவிதை(!) எழுதி அனுப்புவேன். வாரா வாரம் நடக்கும் 'status' மீட்டிங்கை 'நொறுக்ஸ்'னு பேர் மாத்தியிருப்பேன். பதிவுலே எழுதுற மொக்கையை பக்கத்துலே வேலை பாக்கறவங்களுக்கு போட்டு, அவங்களை 'விட்டாப் போறுண்டா சாமி'ன்னு ஓடுமாறு செய்திருப்பேன்.

மகேஷ் : இல்லாட்டாலுமே "லெட்டர்ஸ் டு தி எடிட்டர்" நிறைய (மாசம் ஒண்ணுங்கறது 'நிறைய' இல்லையா? ) எழுதுவேன். 99% வெளிவராது. ஒண்ணு ரெண்டு வந்தாலும் நிறைய எடிட் பன்ணி வரும். புக் ரிவ்யூக்கள் எழுதணும்னு ரொம்ப நாள் ஆசை. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து ஒரு புத்தகம் எழுதணும்னு ஆசை. காத்து கவிதை படிச்சீங்க இல்ல? அதே மாதிரி இன்னும் நிறைய கவிதைக எழுதி உங்களையெல்லாம் ஃபுல்லரிக்க வெக்கணும்னு ஆசை.

குசும்பன் : பதிவெழுத வராவிட்டால் ரெட் இஃப் போலில் சென்னை சாட் ரூமில் சோனியா, சந்தியா என்ற பெயரில் உலாவி எவனையாவது தலை கிறு கிறுக்க விட்டுக்கிட்டு இருப்பேன்! ஆனா ஒன்னு பாஸ் சொந்த பெயரில் போய் பாருங்க ஒரு நாதாரியும் திரும்பாது, ஏதாவது பொண்ணு பெயரில் போய் பாருங்க! ASL plz? வானா செக்ஸ் சாட்? ஹாய் ஸ்வீட்டி! (வீட்டுல பொண்டாட்டிய கூட அப்படி கொஞ்சி இருக்க மாட்டானுங்க) என்று எம்புட்டு வித விதமான அழைப்புகள்! செம ஜாலியா இருக்கும் இதுக்கு முன்பு அதுதான் பொழப்பு! பொழுது போகனுமுல்ல:)

கேள்வி 3 :

நிஜத்தில் உங்களுக்கு நன்கு பழக்கமான அல்லது உறவினர்களில் விஐபி யாராவது உண்டா? அவரைப்பற்றி கூறுங்கள்.. (பெயர் சொல்ல விருப்பமில்லாவிட்டால் க்ளூ தரலாம்)

செல்வேந்திரன் : அப்படி யாரும் இல்லை.

முரளிகண்ணன் : முன் இல்லை. இப்பொழுது விரைவில் வி ஐ பி ஆகப்போகும் சிலருடன் நெருக்கமாக பழகிக் கொண்டு இருக்கிறேன்

வடகரை வேலன் : இந்தப் பேட்டி எடுக்கும் ஆதிமூலகிருஷ்ணனைத் தெரியும். அவரு எதிர்கால வி ஐ பி.

அனுஜன்யா : பலபேர். முதலாவதாக அனில் கும்ப்ளே. பெங்களூரில் கிரிக்கெட் விளையாடியதில். அப்புறம், VIP என்பதால் அவர் பெயரைச் சொல்ல முடியாது. ஆயினும், என் பதிவில் சில பதிவுகளில் அவர் பெயர் தென்படும். நிச்சயம் 'நெருக்கமான' உறவுதான். ஹி ஹி.. மூன்றாவதாக ஒரு பிரபலம். பெயர் சொல்ல முடியாத நிலை. ஏனெனில் அவருக்குப் பெயர் மாற்றிக்கொள்வது ஒரு ஹாபி. அதற்காக நண்பர்களை கலாய்ப்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். சில சமயம் பின் நவீனப் பதிவுகளும், கவிதைகளும் எழுதுவார். போதுமா?

கேபிள்சங்கர் : என்னுடய் உறவு முறையில் நிறைய வி.ஐ.பிக்கள் இருக்கிறார்கள். என்னையும் சேர்த்து..
1. பிரமிட் நடராஜன் (பிரமிட் சாய்மீரா நிறுவனர்)
2. மோகன் நடராஜன்.( கல்யாணமாலை)
3. மீரா கிருஷ்ணன் ( செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர், நடிகர்)
இவர்களை பற்றி விளக்கம் வேண்டாமென நினைக்கிறேன்.

வெயிலான் : உறவினர்களில் விஐபி யாரும் இல்லை. நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் இங்கு வாங்க. படங்கள் இருக்கின்றன.

ச்சின்னப்பையன் : எனக்கு நன்கு பழக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவருமே எனக்கு விஐபிதான். அவர்கள் அனைவரிடமும் விஐபி சூட்கேஸ் இருக்குன்றது கூடுதல் தகவல். இன்னொரு விஷயம். அவங்க எல்லோருக்கும் தெரிஞ்ச விஐபி ஒருத்தர் இருக்காரு. ஒரு க்ளூ தர்றேன்... அவரோட முதல் எழுத்து 'ச்'.. கடைசி எழுத்து 'ன்'...

மகேஷ் : எங்க அப்பாவே ஒரு விஐபிதான். 1977 - 1980 தமிழ்நாடு அக்வாடிக்ஸ் சேம்பியன்ஷிப் (டைவிங்) தங்கப்பதக்கம் வாங்கினவரு. வேற விஐபி யாரும் சொந்தமோ நட்போ இல்ல :(

குசும்பன் : என் அம்மா இந்திராகாந்தியுடன் நல்ல பழக்கம், ஆமாங்க அம்மா அவுங்களை இரு முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள் குடும்ப நண்பர் எஸ்.டி.எஸ் மூலம் அவர்களை சந்தித்து இருக்கிறார்கள் போட்டோ வீட்டில் இருக்கு.. சின்னபுள்ளயா இருக்கிறப்ப அம்மா சொல்லுவாங்க நீயும் இந்திரா காந்தி கூட போட்டோ எடுத்து இருக்கிற பாரு என்று சொல்லிட்டு அவுங்க வயிற்றை காட்டி நீ இங்கதான் இருக்க என்பார்கள்:) அந்த அளவுக்கு ரொம்ப பழக்கமுங்க! எழுத்தாளர் பாலபாரதி, எழுத்தாளர் யுவகிருஷ்ணா, ஆசிப்மீரான், இவர்கள் கூட ரொம்ப பழக்கமுங்க!:) அவ்வளோ ஏன் ஆதிமூலகிருஷ்ணன் கூட எனக்கு ரொம்ப பழக்கம் என்றால் பார்த்துக்குங்களேன்!

அன்புடன் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.!

எஸ்.. 5 எஸ்.!

முன்குறிப்பு 1 : எதிர்பாராத ஒரு தருணத்தில் நட்சத்திர வாய்ப்பை வழங்கி பெருமைப்படுத்திய தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றி.. இந்த நேரத்தில் இதுபோன்ற அடையாளங்களும், அதிக ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்ற விஷயங்களும் தொடர்ந்து எழுத ஊக்கமாக அமைகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஊக்கமே வெற்றிக்கான காரணமாக அமைகிறது. அது நீங்கள் தருவது. சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள் ஆயிரம்..

முன்குறிப்பு 2 : எப்படியும் இன்னும் ஒருவாரகாலத்துக்கு முடிந்தவரை மொக்கைதான் போடப்போகிறோம். அதனால் இன்று மட்டும் கொஞ்சம் டெக்னிகல் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

5 S என்றால் என்ன?

நேரமாக நேரமாக டென்ஷன் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அழுகையே வந்துவிடும் போலயிருந்தது. குளித்து அவசர அவசரமாக கிளம்பியதில் வேர்த்து கன்னங்களில் வியர்வை வழிகிறது. கசகசப்பு. அரைமணி நேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை பைக் சாவி.. கோபத்தில் ரமாவைக் கத்தினேன். ‘எங்கே போய்த் தொலைந்தது?’ இடுப்பில் கைவைத்துக் கொண்டு பதிலுக்குக் கத்தலாமா, அல்லது உதவி செய்யலாமா என்ற குழப்பத்தில் என்னைப் பார்க்கிறாள் ரமா.

வீட்டையே தலைகீழாக புரட்டிப் பார்த்தாயிற்று. டாய்லெட்டில் கூட செக் பண்ணியாச்சு. ‘அங்கே எப்படிங்க போகும்? இன்னிக்கு ஒரு நாள் ஆட்டோவில் போய்த் தொலைங்க.. சாய்ங்காலம் தேடி எடுத்து வைக்கிறேன்’

ஏன் இந்த நிலை? மேலும் இந்தத்தேடலில் ஷெல்ஃபில் இருந்து ஒரு குப்பைக்கூளமே தரைக்கு இறங்கியிருந்தது. மேஜையின் இரண்டு ட்ராயர்களும் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன. இதற்குள்ளாகவா இவ்வளவு பொருட்கள் இருந்தன? இவையெல்லாம் என்ன? எதற்காக காலங்காலமாக இங்கே தூங்கிக் கொண்டிருக்கின்றன? இந்த ஷெல்ஃபிலும், மேஜையிலுமே இவ்வளவு பொருட்கள் என்றால் இந்தப்பரணில் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டிகளில் என்னென்னவெல்லாம் இருக்கும்?

1. பிரித்தெடுங்கள் (Sorting - Classify) அத்தனையையும்.. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், விஷயமும் இந்த இயற்கையிலிருந்தே பெறப்பட்டன. அது எதுவாயினும் அதை பயனுள்ளதாக்குங்கள், முழுதுமாக பயன்படுத்துங்கள். பயன்படுத்தப்பட்ட, காலங்கடந்த விஷயங்களை / முடிந்து போன விஷயங்களின் எச்சங்களை உடனே அப்புறப்படுத்துங்கள். உடைந்து போன கடிகாரங்கள், மேஜை விளக்குகள், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நீங்கள் பெறப்போவது என்ன? நிஜமான பிரித்தெடுத்தலை நீங்கள் செய்வீர்களானால் இவ்வளவு இடம் இருந்ததா இந்த வீட்டில் என அதிர்வீர்கள்.

2. பிரித்தெடுத்தலில் தேவையற்ற விஷயங்களை நீக்கியதோடு தேவையான பொருட்களை ஒருவித ஒழுங்கோடு ‘இது இங்கே..’ என்ற கோட்பாட்டுடன் வைத்துள்ளீர்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம். இதை எப்போதுமே மீறாதீர்கள். இனி சாவியைத்தேட வேண்டிய அவசியம் இருக்காது உங்களுக்கு. இதுவே ஒழுங்கு (Straighten - Configure) எனப்படுகிறது.

3. தேவைப்படும் இடங்களையும், பொருட்களையும் தேவையான இடைவேளையில் தவறாது சுத்தம் (Shine - Clean) செய்யுங்கள்.

4. யார், எதை, எப்படிச் செய்வது என்பதை திட்டமிட்டு வழிமுறைப்படுத்திக் (Systemize - Conformity) கொள்ளுங்கள். அது வெளிப்படையானதாக இருக்கட்டும்.

5. மேற்கண்ட நான்கு விதிகளையும் தவறாது (Sustain - Custom and practice) கடைபிடியுங்கள். விதிமீறல்களையும், வழுவல்களையும் நீங்களும் செய்யாதீர்கள். பிறரும் செய்யாமல் கண்காணியுங்கள்.

இப்போது தெரிந்திருக்கும் 5S என்பது ஒரு தொழில்நுட்பம் (Technical) அல்ல.. ஒரு சித்தாந்தம் (Philosophy) அவ்வளவே.. இது ஜப்பானியர்களிடமிருந்து உலகெங்கும் பரவிய ஒரு செய்தி. S என்ற ஒலிக்குறிப்பில் ஆரம்பமாகும் ஐந்து ஜப்பானிய சொற்களிலிருந்து உருவானதே இது. அதன் மிக நெருங்கிய அர்த்தம் தரும் ஐந்து ஆங்கிலச் சொற்களே மேலே நீங்கள் கண்டது. இதை நாம் ஜப்பானியர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.. வள்ளுவம் காட்டாத சித்தாந்தம் ஏதும் இருக்கிறதா என்ன.?

சரி ஒருவழியாய் 5S தெரிந்துகொண்டாயிற்று.. என்ற மகிழ்வுடன் நீங்கள் அலுவலகம் சென்றால் அங்கு உங்கள் மானேஜர் ‘ஹிஹி.. நாம் ஃபாலோ செய்யவேண்டியது 5S அல்ல.. 5C’ என்று உங்களைக் கலவரப்படுத்த முயல்வார். பயப்படாதீர்கள், அது சும்மா டுபாக்கூர்.. இதையே வேலைகெட்ட ஒருவன் வேறு சொற்களால் அலங்கரித்துச் சொன்னதுதான் அது. (நம் இயக்குனர்கள் தெலுங்குப்படத்தை அப்படியே ஷாட் தப்பாமல் தமிழில் எடுத்துவிட்டு இயக்குனர் என்று பெயரைப் போட்டுக் கொள்வதில்லையா.. அது போல..) ஒவ்வொரு S உடனும் C என்று ஆரம்பிக்கும் சொல்லை இணைத்துள்ளேன் பாருங்கள். அவைதான் 5C.. அவ்வளவுதான்.!

.

Friday, March 13, 2009

ஒரு கிராமத்து மது விருந்து..

அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமம். அந்தந்த சீசன்களில் வாழை, பருத்தி, கடலை, மிளகாய் என வளம் செழித்துக்கிடக்கும் ஊர். மேலும் மா, தென்னை என ஆற்றோரத் தோப்புகள் வேறு. எனது பள்ளி நாட்களின் விடுமுறைக்காலங்கள் பெரும்பாலும் இந்த பிரமதேசம் அல்லது சேரன்மகாதேவியிலேயே கழிந்தன.

அப்போது நான் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தேன். பிரமதேசத்தில் எனது பெரியத்தை மகனுக்குத் திருமணம். அதற்காகச் சென்றிருந்தேன். மாப்பிள்ளை என் அத்தான் எனினும் இரண்டு வயதே மூத்த ஒரு நல்ல தோழனும் கூட.. நிறைய கெட்ட பழக்கங்களைப் பழக்கித் தந்தவனை வேறெப்படி சொல்வது? நல்ல படிப்பாளியும் கூட.. நான்காம் வகுப்பில் நான்கு வருடம் படித்த திறன் மிக்கவன். நான் பிளஸ் டூ. என்னைவிட இரண்டு வயதே மூத்தவன் எனில் 20 வயதுதான் இருக்கும் பிறகெப்படி திருமணம்? இதெல்லாம் ரொம்ப சாதாரணம் இங்கே.. இதுவே லேட்டு என ஆச்சி அடம்பிடித்தமையால்தான் இந்த திருமண ஏற்பாடே நடந்தது. மணப்பெண்ணும் இன்னொரு வழியில் எனக்கு நெருங்கிய சொந்தமே. என்னை விட இரண்டு வயது இளையவள். அவளும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடம் படித்த திறமைசாலி.

படிப்பைப்பற்றி சொல்லும் போது இன்னொன்று ஞாபகம் வருகிறது. கொசுவத்திக்குள்ளே கொசுவத்தி. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாக எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்கும் அளவு தேறியிருந்தேன். அந்த சமயத்தில் ஒருமுறை பிரமதேசம் சென்றிருந்த போது அத்தான் பள்ளிக்குச் சென்றுவரவேண்டிய சூழல். பள்ளி விடும் நேரம், சிறிது காத்திருக்க நேரிட்டது. மாமாவுக்கு தெரிந்த ஆசிரியர் என்பதால் என்னை யாரென்று கேட்டு அறிமுகமாக வகுப்புக்குள்ளே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு.. மாணவர்களெல்லாம் சீரியஸாக ஆனா, ஆவன்னா எழுதிக்கொண்டிருக்க.. திடீரென ஆசிரியர் என்னிடம் தமிழ் புத்தகத்தை கொடுத்து வாசிக்கச்சொல்ல நான் கடகடவென வாசிக்கத்துவங்கினேன். மாணவர்கள் வாய்பிளக்க ஆசிரியர் என்னை பாராட்டிவிட்டு அனைவரிடமும்,

'யேய் இங்கப்பாருங்கடா.. இவன் மூணாப்புதான் படிக்கான், எப்பிடி படிக்கான் பாத்தீங்களாடா.. இவன மாதி படிக்குணும் எல்லாரும், என்னா..?' என்றார்.

நான் உற்சாகத்தில் கைகட்டிக்கொண்டு பாராமலேயே ஏ பி சி டி யெல்லாம் சொல்லி அவர்களை மேலும் மலைக்கவைத்தேன். சில மாணவர்கள் என்னை கடுப்பாக பார்த்தனர். சரி..பழைய கதையை விட்டு விஷயத்துக்கு வருவோம்.

அப்போதெல்லாம் விருந்தினர் பலரும் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து விழாவினை சிறப்பித்துச் சொல்வார்கள். திருமணம் முடிந்த மறுநாள். என் பெற்றோர் ஊர்திரும்பிவிட நான் அங்கேயே தங்கியிருந்தேன். மதிய உணவுக்கு கிடா வெட்டப்பட்டு சமையல் நடந்துகொண்டிருந்தது. வீட்டுப்பெண்கள் வேலைகளில் மும்முரமாக இருக்க புதுப்பெண்ணும் கால் கொலுசு கலகலக்க தரையதிர சுவாதீனமாக பழகிய இடம் போல தங் திங்கென வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்தாள். பெரியவர்கள் சிலர் பேசிக்கொண்டிருக்க சிலர் வெளியே சென்றிருந்தனர். நான் என்ன பண்ணுவது என தெரியாமல் போரடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

'யண்ணே.. காப்பி யேணுமாண்ணே?' என்றாள் தங்கையாகிய புதுமணப்பெண்.

'வேணாம்மா'

'சோடாவது குடிக்கியா.. நேத்திக்குள்ளது. எம்புட்டுகானு சும்மா கெடக்குது பாரு'

'வேணாம்மா'

'என்னண்ணே சித்தி இன்னிக்கே ஊருக்குப் பேயிட்டா? இருன்னா கேக்கமாட்டேண்டா.. நீயாது ரெண்டு நா இருப்பேல்லண்ணே' வாயாடி. அதிகாரம் தூள் பறந்தாலும் அதனுள்ளிருக்கும் அன்பு அற்புதமானது.

'எனக்கு ஸ்கூல் லீவுதானம்மா.. இருப்பேன். அதுக்குள்ள அத்தான் எங்க போனான்? ஆளயே காங்கல.. வயலுக்கு கியலுக்கு பெய்ட்டானா?'

இதற்கு பக்கத்தில் வந்து கிசுகிசுப்பாக பதில் சொன்னாள், 'அவ்வொ, பாண்டி, சித்தப்பா எல்லாரும் மச்சு ஊட்டுக்குள்ளதான் இருக்காவொ.. நீ அங்க போவாதண்ணே..' என்று சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க போய்விட்டாள்.

இப்போதுதான் கவனிக்கிறேன், மச்சு வீட்டிற்குள்ளிருந்து அத்தானின் நண்பர் ஒருவர் இறங்கி போய்க்கொண்டிருந்தார். உடனே மேலே ஏறினேன். என்னைக்கண்டதும் அத்தானும், பாண்டியும் கெக்கேபிக்கே வென சிரித்தார்கள். முறுக்கு, மிக்சர் சகிதம் ஒரு ஃபுல் பாட்டில் உட்கார்ந்திருக்க பீடி பற்றவைத்துக் கொண்டு ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார்கள்.

'நா கீழ யாரயும் காங்கலயேனு தேடிட்டிருக்கேன். இங்கன ஒங்க்காந்து என்ன பண்ணிட்டிருக்கிய எல்லாரும்? என்ன சித்தப்பா காலைலேயேவா.?' என்றேன்.

'வா வா வந்து ஒக்காரு..' என்று என்னையும் கையைப்பிடித்து உட்காரவைத்தார்கள். எனக்கும் ஒரு கிளாஸில் ஊற்றினார்கள்.

'ஏ வேணாம்பா.. எல்லாரும் இருக்காங்க.. மாமாக்கு தெரிஞ்சிடப்போது..' என்றேன்.

'யாரு..? மாமாக்கு? போய் குச்சில்ல பாரு.. எங்களுக்கு மின்னாடியே போட்டுட்டு போய் சாஞ்சாச்சி.. எல்லாரும் அடிச்சிருக்கான்.. ஒருத்தனுக்கும் தெரியாது.. சும்மா அடி.. பொம்பளைய பக்கத்துல மட்டும் போவாத'

எனக்கும் ஆசை வர, 'பாட்டில்ல கொஞ்சமாத்தான இருக்கு ஒங்களுக்கு?' என்றேன்.

'அந்தக் குதிலுக்குள்ள பாரு..'

அருகே இருந்த நெற்குதிருக்குள் பார்த்தேன்.  நெருக்கிக்கொண்டு நான்கைந்து ஃபுல் பாட்டில்க‌ள் ப‌டுத்திருந்த‌ன‌. துவ‌ங்கினேன். அப்போதெல்லாம் ப‌ழ‌க்க‌மே இல்லாத‌தால், ஒன்ற‌ரை ர‌வுண்டிலேயே த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌து. பின்ன‌ர் ப‌ல‌ரும் அந்த‌ அறைக்குள் வ‌ந்து போவ‌தையும், அனைவ‌ருக்கும் இந்த‌ மூவ‌ரும் க‌ம்பெனி கொடுத்துக் கொண்டிருப்ப‌தையும் லேசாக‌ க‌ன‌வு போல‌ உண‌ர்ந்தேன்.

பின்ன‌ர் ம‌திய‌ உண‌வுக்கு கீழே இற‌ங்கிய‌ போது நான் அடித்த‌து தெரிய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அத்தான் ம‌ற்றும் பாண்டியின் ந‌டுவாக‌வே வ‌ந்தேன். தேவையே இல்லாம‌ல் கேஷுவ‌லாக‌ இருக்கிறேன் என்று நிரூபிக்க‌ ப‌ல‌ரையும் பார்த்து இளித்து வைத்தேன். அப்ப‌டியும் சாப்பாடு போடும் போது புதுப்பெண் க‌ண்டுபிடித்துவிட்டாள்.

அருகிருப்போர் கேட்காதவாறு கிசுகிசுப்பாக 'ஒன்னிய‌ மேல‌ போவாத‌ன்னு சொன்ன‌ம்லாண்ணே.. நீயும் அவுங்க‌ளோட‌ சேந்து கூத்த‌டிச்சிருக்கியோ.. இரு ஒன‌க்கு வெச்சிக்கிடுதேன்.. நாள‌க்கி சித்தி வார‌ம்னுருக்கால்ல..' என்று க‌றியை அள்ளி வைத்த‌ க‌ர‌ண்டியை முக‌த்துக்கு நேரே காட்டிய‌ போது, க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.

.

Thursday, March 12, 2009

தாமிரா இனி.. ஆதிமூலகிருஷ்ணன்

நல்ல வாசிப்பனுவமும் / தொடர்ந்த வாசிப்பனுபவமும் இல்லாமல் எழுதாதீர்கள் எழுதாதீர்கள் என்று அண்ணன்மார்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்..  இல்லையெனில் நல்ல பேர் கிடைப்பது ரொம்ப சிரமம் என்கிறார்கள்.. அது நிஜம்தான் போலிருக்குது. ஆமாங்க.. என் கதையில் அது நிஜமாகப் போய்விட்டதே.!

வாசிப்பனுபவம் இல்லாததால் இவ்வளவு நாட்கள்  எழுதி எழுதி நல்ல பேர்தான் இன்னும் கிடைத்தபாடில்லையெனிலும் ஒரு நல்ல ‘பெயர்’ கூட கிடைக்காமல் சிக்கலாகிவிட்டது. ‘தாமிரா’ என்ற வசீகரமான இந்த பெயரை நான் எனக்கு வைத்துக் கொண்டபோது அது விதவிதமான உணர்வுகளையும், திருப்தியையும் தந்தது. அப்போது எழுத்துத்துறையிலும், சினிமாத்துறையிலும் பரவலாக  இயங்கிக்கொண்டிருக்கும் திரு. தாமிராவை நான் அறிந்திருக்கவில்லை. ஆனந்தவிகடனில் தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருபவரும், தமிழ் சினிமாவில் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘ரெட்டைச்சுழி’ என்ற படத்தை இயக்கிவருபவருமான தாமிராவை நல்ல வாசிப்பனுபவம் இருந்திருக்குமானால் நான் அறிந்திருக்கக்கூடும், இந்த சூழல் ஏற்பட்டிருக்காது. முதலில் இந்தச் சிக்கலை அறிய வந்தபோது வருத்தமும், குழப்பமும் ஏற்பட்டது. ஆனால் பல்லாண்டுகளாக கலைத்துறையில் இயங்கி வருபவரது புகழ் இடம்மாறி என்னை வந்துசேரத் துவங்கியபோது அதன் சங்கடத்தை உணர்ந்தேன். (என்னைச் சேரவேண்டிய கண்டனம் அவருக்குச் சென்றதா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்). இந்தச்சூழலிலும் தொலைபேசியில் அழைத்து அன்புடன் பேசிய தாமிராவின் கண்ணியம் பாராட்டுக்குரியது. அவரும் தாமிரபரணிக்கரையினிலிருந்தே வந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அவருக்கு நம் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறான சூழலில் நான் பெயர் மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மேலும் தாமதம் செய்வது இருவருக்கும் நல்லதல்ல என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் பெயர் மாற்றும் வைபவத்தில் நண்பர்கள் சிலரையும் கலந்தாலோசித்தேன். காதுகுத்தி, கிடா வெட்டாத குறையாக பெயர்சூட்டும் வைபவம் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு முந்தைய நாளிரவில் நிகழும் நண்பர் குழுவின் கொண்டாட்டங்களைப் போல கொண்டாடித் தள்ளிவிட்டார்கள். என்னென்ன விதவிதமான பெயர்கள் என்கிறீர்கள்.. எடுத்து விட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். நமது நண்பர்களின் கற்பனா திறனை சினிமா உலகம் இழந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். ‘ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும்’ என்று ஒருவர் கூறி புல்லரிக்க வைக்க நான் அவரை முறைத்தேன். ‘உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல.. கொசுவத்தியை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது கொசுவை விரட்டும் என்று சொல்றதுதானே’ என்றேன்.

ஒருவர் இப்போ குட்டி பத்மினி இல்லையா அதுமாதிரி குட்டித் தாமிரா என்று வைத்துக் கொள்ளலாம் என்கிறார், இன்னொருவர் தாமிராக்குட்டி என்கிறார். அடுத்தவர் நம் தாமிரா அவரை விட குறைந்தவர் இல்லை.. ஏன் குட்டி? பெரிய தாமிரா என்று வைக்கலாம் என்கிறார். இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன் என்று நாம் கூறவும் ஊர் பெயர், பெற்றோர் பெயர் என் நிஜப்பெயர் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து ஆசுபதாலன் என்கிறார் ஒருவர். ஊஹூம்.. நல்ல இலக்கியப்பெயராக வைக்கலாம் என்று திருநெல்லை பாணபத்திர செம்பா புலவர் (செம்பு=தாமிரா) என்கிறார் இன்னொருவர். நான் இதை கொஞ்சம் நகைச்சுவையாக கூறினாலும் எனக்காக விதவிதமாக மெனக்கெட்ட நண்பர்களின் அன்பு உண்மையில் பெருமைகொள்ளச் செய்தது. இந்தக்கதையைப் பேசினால் ஒரு நாவலே எழுத வேண்டியிருக்கும் என்பதால் மேல்கதையை பிறிதொரு சமயம் பார்க்கலாம்.

DSC04211

இறுதியாக நண்பர்கள் எல்லோரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டபடி இனி எனது சொந்தப் பெயரான ஆதிமூலகிருஷ்ணன் என்பதையே எனக்குரிய எழுத்துக்கான அடையாளமாகவும் மனப்பூர்வமாக ஏற்கிறேன். தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்குகிறேன். நன்றி.

டிஸ்கி : வலையுலகில் புதிய பெயருக்கு போதுமான அறிமுகம் நிகழும் வகையில் மேலும் ஒரு வார காலத்துக்கு “தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்” என்று தொடர்ந்து பின்னர் ஆதிமூலகிருஷ்ணன் என்பதை முழுமையாக ஏற்க இருக்கிறேன்.. 

108 அறிவுரைகளையும் தாண்டி சென்று கொண்டிருப்பதால் வேலையோடு வேலையாக வலைப்பூவின்  தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது. பிடித்திருக்கிறது என்று பின்னூட்டம் போட்டுச்செல்லவும்.  ஒத்துழைப்பு நல்கிய / நல்கிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றி சொன்னால் அது சிறுமை.

.

Wednesday, March 11, 2009

தொலைந்து போன ‘பொன்னர் சங்கர்’

குங்குமம் வார இதழில் இருந்து கலெக்ட் செய்யப்பட்டு அழகாக ர‌சனையாக பைண்ட் செய்யப்பட்ட அந்த 'பொன்னர் சங்கர்' புத்தகத்தை மாமாவிடமிருந்து கெஞ்சி வாங்கினேன். அவர் இதைப்போன்ற பல புத்தகங்களை வைத்திருந்தாலும் அங்கேயே வீட்டிலேயே வைத்து படிக்க அனுமதித்திருந்தார். அவரில்லாத போதும் அவரின் அலமாரியின் சாவியைப் பெறும் அளவில் உரிமை பெற்றிருந்தேன். ஆனால் வெளியே கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆகவேதான் சூழல் கருதி அந்தக் கெஞ்சல்.

கல்லூரியின் அருகில் தங்கியிருந்த அறைக்கு கொண்டுவந்தேன். இரண்டு நாட்களில் ஒரே மூச்சில் படித்து முடித்து அந்த கேரக்டர்களின் நினைவுகளோடே பல நாட்களை கடத்திக் கொண்டிருந்தேன். அதன் காதல் காட்சிகளும், வீர தீரங்களும் ஒரு திரைப்படம் போல நெஞ்சத்தில் விரியும். இந்த சுகானுபத்தில் திளைத்துக் கொண்டிருந்த போது ஒரு நண்பர் அதை இரவல் கேட்க.. இன்பம் பரவுக என்ற எண்ணத்தில் தந்தேன். என் ஞாபக சக்தியில் இடி விழ.. சில வாரங்கள் கழித்து புத்தகம் எங்கே என்று தேடத்துவங்கியபோது யார், எப்போது வாங்கினார்கள் என்று மறந்து போக.. எல்லோரையும் விசாரிக்க விசாரிக்க ஏமாற்றமே.. என் மாமா சாண்டில்யனின் 'கடல்புறா' புத்தகத்தாலேயே தலையில் ஒரு போடு போடுவதாக கனவு வேறு. கேட்காத ஆள் கிடையாது. கல்லூரி பியூன் முதற்கொண்டு விசாரித்தாயிற்று. இன்று வரை யார் அதை வாங்கியது என்று தெரியவில்லை.

மெதுமெதுவாக இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லியபோது ஆழமாக பார்த்துவிட்டு 'சரி, விடு.. பாத்துக்கலாம்' என்றார். அவர் திட்டியிருந்தால் கூட மனது ஆறியிருக்கும். அதன் பின்னரும் கூட அவர் சேகரித்திருக்கும் புத்தகங்களை உரிமையோடு எடுக்கவும் படிக்கவுமாக இருக்கும் ஒரே ஆள் இன்று வரை நான் மட்டும்தான். அவர் கலைஞரின் எழுத்துகளை எவ்வளவு காதலித்தார் என்பது எனக்குதான் தெரியும். அன்றே மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்தேன்.

kalaingar2

அதை சுமார் பதின்மூன்று வருடங்கள் கழித்து கொஞ்ச காலத்துக்கு முன்பாகத்தான் நிறைவேற்றினேன். பாரதி பதிப்பகம் செம்பதிப்பாக வண்ணப்படங்களுடன் தரமான தாளில் வெளியிட்ட தடிமனான 'பொன்னர் சங்கரை' வாங்கி என் மாமாவிடம் தந்த போது சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார். பதின்மூன்று வருடங்களாக மனதில் இருந்த ஒரு விஷயத்துக்கு பாதி ஆறுதல் அன்றுதான் கிடைத்தது.

டிஸ்கி : பரிசலின் இரவல் புத்தக நினைவுகளை படித்த‌தால் நினைவுக்கு வந்த ஒரு சம்பவம் இது. செல்வேந்திரனின் வித்தியாசமான நினைவுகளையும் இங்கே.. காணலாம்.

.

Tuesday, March 10, 2009

அலுவ‌ல‌க‌ மீட்டிங்கை ச‌மாளிப்ப‌து எப்ப‌டி?

ச்சின்னப்பையன் பிஸியாக வேலை செய்யும் அழகைப்பார்த்து ரொம்ப பொறாமையாக இருக்குதுங்க.. நமக்கும் அந்த மாதிரி ஒரு வேலை கிடைக்காதா என்று.! ரிசஷனுக்கும் நமக்கும் ஒன்றும் பெரிய சம்பந்தமில்லை எனினும் எதிர்பாராது நிகழ்ந்த பெரிய நிர்வாக மாற்றத்தால் ஏதோ புதிதாக வேலைக்கு சேர்ந்த மாதிரி ஓடி ஓடி வேலை செய்றதா இருக்குங்க.. ஒரு மெயில் கூட செக் பண்ணமுடியலன்னா பாத்துக்குங்களேன். எங்காவது இந்த மாதிரி அநியாயம் உண்டுமா? அட்லீஸ்ட் ஒரு ஒன் பாத்ரூம் போக எவ்வளவு நேரம் ஆகப்போகுது? ஆனாலும் இவ்ளோ பிஸியா இருக்கக்கூடாதுங்க..

வீட்டிற்குப் போனால் நாளைக்கு என்ன‌ ப‌திவு போட‌லாம் என்ற‌ எண்ண‌த்துக்குப் ப‌திலாக‌ இப்போதெல்லாம் நாளைக்கு மீட்டிங்கை எப்ப‌டி ச‌மாளிக்க‌லாம் என்ற எண்ண‌ம்தான் ந‌ம்மை ஆக்ர‌மிக்கிற‌து. மீட்டிங் பூத‌ம் க‌ன‌விலும் வ‌ருகிற‌து. இந்த‌ டென்ஷ‌னில் அழ‌காக‌ யோசித்து வைத்திருந்த‌ ப‌திவுக‌ளுக்கான‌ விஷ‌ய‌ங்க‌ளெல்லாம் ஃப‌னால் ஆகிவிட்ட‌து.

ஆக‌வே முக்கியப் பிரச்சினையான அலுவலக மீட்டிங்கை எப்ப‌டிச் ச‌மாளிக்க‌லாம்? என்ப‌து குறித்து இன்று பார்க்க‌லாம். வ‌ழ‌க்க‌ம்போல‌ டாப் 5 ம‌ட்டும்.

5. ஸாஃப்ட் காப்பி தேவைப்படும் இடங்களில் ஹார்ட் காப்பிகளையும், ஹார்ட் காப்பி தேவைப்படும் இடங்களில் ஸாஃப்ட் காப்பிகளையும் கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் மீட்டிங்கின் இடையிடையே பிரின்ட் எடுக்க வெளியே போகமுடியும். அந்த நேரத்தில் இவர்கள் போரடித்து நம்ம விஷயத்தை விட்டுவிட்டு டாபிக் மாறிவிடுவார்கள்.

மைனஸ் பாயின்ட் : மீட்டிங் முடிந்த‌ பிற‌கு மானேஜரிடம் பல்ப் வாங்க நேரிடலாம்.

4. எல்லோரும் வருவதற்கு முன்பே ஹாலுக்குள் போய் புரொஜக்டரில் ஏதாவது ஒயரை பிடுங்கிவிட்டு, மீட்டிங் ஆரம்பித்த பிறகு 'ஐயய்யே.. படம் தெரியமாட்டேங்குது' என்று ஐடி ஆட்களை கூப்பிட்டு அங்கேயே ரிப்பேர் பார்க்க வைத்து நேரத்தை கடத்துங்கள்.

மைனஸ் பாயின்ட் : ஐடி ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

3. மீட்டிங்கில் உங்கள் நேரம் வரும்போது த‌லையை சுத்தி, சுத்தி மூக்கைத் தொடுங்க‌ள். வேறு யாருக்கும் தெரியாத‌ தேவையே இல்லாத‌ உங்க‌ள் டிபார்ட்மென்ட் விஷ‌ய‌ங்க‌ளை எப்படியாவது உள்ளே நுழைத்து க‌தைய‌டியுங்க‌ள். அடுத்த மீட்டிங்கிற்கு கூப்பிடமாட்டார்கள்.

மைனஸ் பாயின்ட் : அடுத்த அப்ரைசலில் ஆப்பு வர வாய்ப்புள்ளது.

2. மீட்டிங்கில் இருக்கும் போது பிற‌ருக்கு தெரியாம‌ல் உங்க‌ள் ச‌க‌ ரேங்கில் இருக்கும் ந‌ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தெரிவ‌து போல‌ கொட்டாவி விடுங்கள். அவ‌ர்க‌ளுக்கும் கொட்டாவி ப‌ர‌வி சிக்க‌லில் மாட்டிக்கொள்வ‌தை ர‌சிக்க‌லாம்.

மைன‌ஸ் பாயிண்ட் : ப‌ல‌ரும் தூங்கிவிடும் ஆப‌த்துள்ள‌து.

1. எவ‌ர்கிரீன் ஐடியா.. வ‌யிற்றுவ‌லி! ம‌ட்ட‌ம் போட்டு விடுங்க‌ள். இல‌வ‌ச‌ இணைப்பாக‌ வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஜாலியாக பிளாகிங் ப‌ண்ண‌லாம்.

மைன‌ஸ் பாயிண்ட் : எல்லா மீட்டிங்குக‌ளிலிருந்தும் த‌ப்பிக்க‌ முடியாது.

டிஸ்கி : கொஞ்ச நாளாக கட்டுமான விஷயங்கள் தொடர்பாக நமது கவிதைக்கடையான 'முதல் முத்தத்'தை மூடி வைத்திருந்ததை அறிவீர்கள். அந்த வேலைகள் ஓரள‌வில் முடிந்துவிட்டபடியால் வியாபாரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலே இடது புறம் படத்தை கிளிக் செய்து அங்கேயும் சென்று பின்னூட்டமிட்டு கடை கல்லாகட்ட வாழ்த்திச்செல்லவும்.


.

Sunday, March 8, 2009

ரசனைக்காரன்

நூற்றாண்டுத் தளைகளை அறுத்தெறிய, உரிமைகளை.. சிந்தனைகளை நிலைநாட்டிட சகோதரிகளுக்கு மனமுவந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்.!

ஒரு சின்ன பின்னிணைப்பாக இந்தப்படம். எவ்வளவு கிரியேட்டிவ்வான ஒரு படைப்பு இது. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த தொடர் மெயில் இது. இதை உருவாக்கிய ரசனைக்கார என்ஜினியரின்  காதலி எவ்வளவு லக்கி.. இல்ல.?

noname

டிஸ்கி : பின்னித்தொடரும் மெயில்களை பதிவிட நமக்கு விருப்பமில்லை, நோக்கமும் இல்லை ஆயினும் சில ரசனையான விஷயங்களை பகிர்ந்துகொள்ளாமலிருக்க முடியவில்லை. ஏற்கனவே அறிந்திருப்போர் பொறுத்தருள்க.

Friday, March 6, 2009

த்ரீ இன் ஒன்..

 

நான் அந்த விஷயத்தை சொன்னபோது கண்ணன் விழுந்து விழுந்து சிரித்தான். ஒண்ணுமில்லைங்க.. நேற்று நான் ரொம்ப சூப்பரா ஒரு பதிவு எழுதியிருந்தேன்ங்க.. (அப்பிடியான்னு ஆச்சரியப்படக்கூடாது). அதை ஒரு பெரிய பின்நவீனத்துவ ரேஞ்சுக்கு உருவகப்படுத்தி நம்ப 'ரெகுலர் கஸ்டமர்களெ'ல்லாம் போட்டு வறுத்துட்டாங்க.. புர்ல புர்லன்னு பொலம்பல் வேறு. எனக்குன்னா ஒரே அழுவாச்சியா போச்சுது.

அதெப்படி புரிலன்னு சொல்லலாம், அதை விளக்கி இன்னொரு பதிவுப்போடப்போறேன்னு சொன்னதுக்குதான் கண்ணன் அப்படிச் சிரித்தான்.

'இன்னாடா நீ வேற கடுப்பேத்துற.. இப்ப என்ன.. அந்தக்கதையை விளக்கமா சொல்லப்போறேன்னுதானே சொல்றேன் அதுக்கு என்ன இளிப்பு?'

'போடா போய் புள்ள‌குட்டிய படிக்கவைய்டா.. நீ எழுதுன எல்லாமே எல்லாருக்குமே புரிஞ்சா மாதியும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டா மாதியும், இது மட்டும் ஜஸ்ட் மிஸ்ஸான மாதியுமில்ல பேசுற.. புர்ஞ்சுதோ, புர்லயோ அடுத்து என்ன மொக்க போடலான்னு பாப்பியா? அத விட்னு வெளக்குறாராமாம்..'

******

சமீபத்தில் நர்சிம் எழுதிய 'பின்பற்றுபவர்கள்.. முன்பற்றும் பரிசல்' என்ற பதிவில் மூத்த(ஹிஹி) பதிவர் உண்மைத்தமிழன் ஒரு பின்னூட்டமிட்டுள்ளார்.

'வால்பையன், பரிசல், நர்ஸிம், அப்துல்லா, வெண்பூ, தாமிரா, வெயிலான், கார்க்கி, புதுகைத் தென்றல் என்ற இந்தக் குழுமத்தின் வளர்ச்சியும், எழுச்சியும்தான் வலைப்பதிவுலகத்தின் மிக முக்கியமான காலக்கட்டம். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சிறந்து விளங்க ஆசைப்படாமல், தங்களது கூட்டணியை முன்வைத்தே அனைத்துப் பதிவுகளையும் படைத்ததுதான் சிறப்பு...'

என்று நீ..ள்கிறது அந்த பின்னூட்டம். எனக்கு இந்த பின்னூட்டம் மிகவும் மகிழ்வைத் தந்தது. இந்த குழுவில் இன்னும் சிலரை அவர் குறிப்பிடாது விட்டிருந்தாலும் அது அவர்களையும் கண்டிப்பாக குறிப்பதாகவே நான் கருதுகிறேன். இந்த புகழ்ச்சி ஊக்கத்தைத் தருகிறது. நன்றி உண்மைத்தமிழன்.

ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றுக்கருத்து எனக்கு இருக்கிறது. அவர் சொன்னதைப்போல கூட்டணியின் நட்பை விட்டுத்தராமல் குழுவாகவே இயங்கி வந்தாலும், அவரவருக்குரிய தனித்தன்மையை நிரூபிக்கவும் போராடிவருகிறோம் என்றும், பொறாமையில்லாத பிறர் வெற்றியையும் தனதாய் மகிழ்கிற மனமிருக்கும் அதே வேளையில் கடும் போட்டியும் ஒவ்வொருவருக்கிடையேயும் இருக்கிறது என்றும் அது எங்களை மேலும் செதுக்குவதாக அமையும் என்றும் நான் எண்ணுகிறேன். சரிதானே தோழர்ஸ்.?

நேரமின்மையால் எங்களுக்குப்பிறகு வந்த பதிவர்களை கூர்ந்து கவனிக்கமுடியாமல் இருக்கிறேன். நண்பர்களாவது அதைச்செய்து இந்தக்குழுவில் புதியவர்களை இணைத்து இன்னும் போட்டியை வலுவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

******

சமீபத்தில் டிவியில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. டைட்டில் முடிந்து காட்சி ஆரம்பிக்கிறது. ஹீரோ அறிமுகம். ஒரு பெரிய ஆற்றங்கரையில் தண்ணீரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். பக்கத்தில் ஒரு மீனவர் மீன் பிடித்துச் செல்கையில் அவரை மறித்து அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி அந்த மீன்களை மீண்டும் ஆற்றிலேயே விடுகிறார். (ஷூட்டிங்கில் எவ்வளவு நேரம் ஆகியதோ.. அதற்குள் எல்லா மீன்களும் இறந்து சொத் சொத்தென தண்ணீரில் விழுந்தன). மீனவர் புல்லரித்துப் போய் ‘ஏன் தம்பி பணம் கொடுத்து வாங்கி மீனை தண்ணீரிலேயே விடுறீங்க?’ என்று கேட்க, ‘உனக்கு மீனை விற்றால் மகிழ்ச்சி, இந்த மீன்களுக்கு தண்ணீரில் இருந்தால் மகிழ்ச்சி. எனக்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தால் மகிழ்ச்சி’ என்று வசனம் வேறு. இது பரவாயில்லை.. இனிதான் விஷயமே..

அடுத்த காட்சி. ஹீரோயின் அறிமுகம். ஒரு ஏல நிறுவனம் கூண்டுக்குள்ளிருக்கும் ஜோடிப்புறாவை ஏலம் விட ஹீரோயின் அதை பெரிய விலை கொடுத்து வாங்கி வெளிவந்து அந்தக் கூண்டைத் திறந்து புறாக்களை பறக்கவிடுகிறார்.(நல்ல வேளையாக புறாக்கள் பறக்கின்றன.) பக்கத்திலிருப்பவர் ‘ஏன்மா இப்படி பண்ற?’ என்று கேட்க அதே மகிழ்ச்சி வசனம் ரிப்பீட்டு. ஹீரோ கொஞ்ச தூரத்தில் இருந்து புல்லரித்தவாறே கவனித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு அதற்கு மேலும் அதைப்பார்க்க துணிவில்லாததால் சானல் மாறினேன்.

மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. பார்த்தது கையளவு, பார்க்காதது உலகளவு (என்னது? மொக்கைதான்).

.

Thursday, March 5, 2009

ஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..

lovers

எதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது.  அந்த மொட்டை மாடியின் விளிம்புச்சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் அவ‌னுக்கு 23 வ‌ய‌து இருக்கலாம். நில‌வு இவ்வ‌ள‌வு வெளிச்ச‌மாக‌வும் கூட‌ இருக்குமா? இந்த‌ வெளிச்ச‌த்தில் த‌டையின்றி புத்த‌கம் வாசிக்க‌லாம் போல‌ இருக்கிற‌தே? இந்த‌ ம‌ய‌க்கும் ம‌ண‌ம் எங்கிருந்து வ‌ருகிற‌து?

அவ‌ள் சாப்பிடக் கீழே போக‌லாம் என்று அவ‌னை அழைத்த‌போது மெலிதாக‌ ம‌றுத்தான். கொஞ்ச‌ம் நேர‌ம் ஆக‌ட்டும். அவ‌னுக்குப் ப‌சியில்லை.. இர‌வு முழுதும் இப்ப‌டியே இருந்துவிட்டாலும் கூட‌ அவ‌னுக்கு ப‌சியெடுக்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே. இன்னொரு விதத்தில் இந்த மகிழ்ச்சியை இழக்க அவனுக்கு மனமில்லை. இந்த குளிர்ந்த இரவில், தென்றல் தீண்டியதால் அலைபாயும் கூந்தலுடன் அவனருகே இருக்கும் அவளுடன் கழியும் இந்த பொழுதை, கீழே சென்றால் மீண்டும் தொடர இயலாமல் போகலாம். உண்மையில் அவ‌ளுக்கும் ப‌சியில்லை. அவ‌னுட‌ன் மிக‌ மெலிதாக கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த‌ நேர‌த்தின் அரிய‌ த‌ன்மையை அறிந்திருந்தாள்.

மேக‌ங்க‌ளே இல்லாத‌ வான‌ம். என்ன‌ இன்று இந்த‌ முழு நிலா இவ்வ‌ள‌வு பெரிதாக‌ இருக்கிற‌து? இவ‌ள் இந்த நிலவொளியில் நின்று கொண்டிருக்கும் இந்த‌க் காட்சியை வ‌ரையும‌ள‌வில் ந‌ம‌க்கு திற‌னிருக்கிற‌தா என்று அவனுள் ஒரு எண்ண‌ம் வ‌ந்து சென்ற‌து. தொட்டுக்கொள்ள‌முடியாத‌ இடைவெளி அவ‌ர்க‌ளுக்கிடையே இருந்த‌து. ஆனால் மெலிதாக‌ பேசிக்கொள்வது தெளிவாக கேட்கும் இடைவெளியாக அது இருந்த‌து.

அவ‌ளுக்கு 20 வ‌ய‌து நிர‌ம்பியிருக்கலாம். அரிதாக‌ இன்று இந்த‌ நீல‌நிற‌ தாவ‌ணியை அணிந்திருக்கிறாள். இவ‌ன் வ‌ந்திருப்ப‌தால் கூட‌ இருக்க‌லாம். மாலையில் வ‌ந்த‌வ‌ன் இன்று இர‌வு த‌ங்க‌ நேரிடும் என்று அவ‌னும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ளும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ள‌து தாவ‌ணியின் நிற‌ம் இந்த‌ இர‌வோடு க‌ல‌ந்திருந்த‌து. க‌றுப்பு வெள்ளை ஓவிய‌ம் போல‌ இருந்தாள்.  அந்த‌ச்சூழ‌லிலேயே எந்த‌ வ‌ண்ண‌ங்க‌ளும் க‌வ‌ன‌ம் க‌லைப்ப‌தைப்போல‌ இல்லாதிருந்த‌தை உண‌ர்ந்தான். நிமிட‌ங்க‌ளாக‌ மௌன‌ம் நில‌விக்கொண்டிருந்த‌து. க‌டைசியாக‌ என்ன‌ பேசினாள்? அவ‌ன் கைக‌ளை மார்புக்குக் குறுக்காக‌ இறுக்கிக்க‌ட்டிக்கொண்டு பெருமூச்சொன்றை வெளிப்ப‌டுத்தினான். என்ன‌ என்ப‌தைப்போல‌ அவ‌ள் அவ‌னைப் பார்த்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் ப‌ளப‌ள‌வென‌ மின்னுகிற‌து. அந்த‌க்க‌ண்க‌ளில் குறிப்பு எதுவும் உள்ள‌தா? 

ஏன் இவ‌ன் மீது என‌க்கு இந்த‌ ஈர்ப்பு? அவ‌ளுக்குள்ளும் இவ‌ன் ம‌ன‌தின் அதே எண்ண‌ங்க‌ளே ஓடிக்கொண்டிருந்த‌து. எது இவ‌ன்பால் என்னை ம‌ய‌க்கி இழுக்கிற‌து. புரிய‌வில்லை அவ‌ளுக்கு. யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும்
வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு? ச‌மாதான‌மாக‌வில்லை அவ‌ள் ம‌ன‌து.

'சாப்பிட‌ப்போக‌லாம் பாஸ்கி'  என்றபடி அவள் அவ‌ன் கைக‌ளைப் ப‌ற்றினாள்.

.

Wednesday, March 4, 2009

நடிகர்கள் Vs பதிவர்கள்

  

 இது சும்மா ஒரு ஜாலி ஒப்பீடு.! இதில் நடிகர்கள் என்பவர்கள் தமிழ் சினிமா ஹீரோக்கள் எனக்கொள்க..

1. அங்கே பெரும்பாலானவர்கள் பாட்டு, ஃபைட்டு, டூயட் என கமர்ஷியல் மொக்கை போடுபவர்களே.! இங்கேயும் பெரும்பாலானவர்கள் மொக்கைப்பதிவர்களே.!

2. அவர்கள், வேறொருவரின் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதைப்போலவே (சமயங்களில் அதையே) படம் பண்ணுபவர்கள். இவர்கள் வேறொருவரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அதையே தொடர்பதிவு, எதிர்பதிவு என போட்டுத் தாக்குபவர்கள்.

3. இருவருமே கற்பனை வறட்சியில் என்ன பண்ணுவது எனத் தெரியாமல்  முழித்துக்கொண்டிருப்பவர்கள். எந்த ஆங்கிலப்படத்தில் இருந்து, நாவல்களில் இருந்து, பத்திரிகைச்செய்திகளிலிருந்து படத்தை, பதிவை உருவாக்கலாம் என சிந்தித்துக்கொண்டேயிருப்பார்கள். ஹிட் ஃபார்முலா இருவருக்குமே இன்னும் தெரிந்தபாடில்லை.

4. விரும்பியோ, விரும்பாம‌லோ இர‌ண்டு ப‌க்க‌முமே சூப்ப‌ர்ஸ்டார்க‌ள் உண்டு. சமயங்களில் இரண்டு ஸ்டார்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வமுதுண்டு.. இரண்டு பக்கமுமே.!

5. தொட‌ர்ந்து ஃபிளாப்க‌‌ள் கொடுத்தாலும் ப‌ழைய‌ ஹிட்டைப்ப‌ற்றி பேசிப்பேசியே முடிந்த‌ வ‌ரை ஒப்பேற்றுவார்க‌ள்.. இருவ‌ருமே.!

6. அங்கே எஸ்டாபிளிஷ் ஆன‌வ‌ர்க‌ளுக்கு ஓப‌னிங் மாஸ் இருக்கும். ர‌சிக‌ர் கூட்ட‌ம் ஒருவார‌ம் வ‌ரை ப‌ட‌த்தைத் தாங்கிப்பிடிப்பார்கள், இறுதி வெற்றி பப்ளிக் கையில் இருக்கிறது. இங்கே ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்ஸ் 200 ஹிட்ஸ் வ‌ரை தாங்கிப்பிடிப்பார்க‌ள், இறுதி வெற்றி வாச‌க‌ர்க‌ள் கையில் இருக்கிற‌து.

7. அங்கே எக்குத்த‌ப்பாக‌ விள‌ம்ப‌ர‌ம் செய்து ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒப்பேற்றிவிடுவார்க‌ள். இங்கேயும் கேட்சியான‌ த‌லைப்பால் திர‌ட்டிக‌ளில் ரீச்சாகி ஹிட்டாகும் வாய்ப்புள்ள‌து.

8. அங்கே வாரிசுக‌ள் ஆட்சி உண்டு. இங்கேயும் சீனிய‌ர்க‌ளின் முழு ஆசிபெற்ற‌வ‌ர்க‌ள் உண்டு. அங்கேயும் ரிட்டையர்ட் ஆகாமல் படுத்தும் பெருசுகள் உண்டு. இங்கேயும் வயதான சில பெருசுகள் உண்டு

9. அங்கே கதைன்னா என்னா, இயக்கம்னா என்னா, சினிமான்னா என்னான்னு தெரியாமலே காலந்தள்ளுபவர்கள் நிறைய.. இங்கேயும் எழுத்துன்னா என்னா, அதன் வீரியம் என்னான்னே தெரியாதவர்கள் நிறைய.. (அப்பிடின்னா என்னா?)

10. அவ‌ர்க‌ள் இவர்கள் ப‌திவுக‌ளை விம‌ர்சிப்ப‌தேயில்லை.. இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ப‌ட‌ங்க‌ளை விம‌ர்சித்துக்கொண்டேயிருக்கிறார்க‌ள்.!

Tuesday, March 3, 2009

மதிப்பற்ற செயலை நீங்கள் செய்கிறீர்களா?

‘மதிப்புள்ள காரியங்களை மட்டுமே செய்ய முயலுங்கள்’ என்று புதிய மேலாளர் நேற்று எங்களை நிற்க வைத்து அறிவுரை கூறியபோது ‘அப்படியானால் இவ்வளவு நாள் நாங்கள் மதிப்பில்லாத காரியங்களையா செய்துகொண்டிருந்தோம்?..விட்டேனா பார், அதெப்படி எங்களைப்பார்த்து இவ்வளவு நாட்கள் மதிப்பில்லாத காரியங்களைச் செய்து வந்ததாக கூறலாம்?’ என்று எங்களுக்கு கோபமெல்லாம் வரவில்லை. ஏனெனில் கொஞ்சம் முன்கதையாக சில விஷயங்களை விளக்கினால் அவர் சொன்னது சரிதான் என்பதை உணரமுடியும். முன்னதாக அவர் சொன்ன மதிப்பு (Value) என்பதை நீங்கள் மரியாதை (Respect) என்று அர்த்தம் கொள்ளவில்லைதானே?

இவ்வளவு நேரத்துக்கு இது ஒரு துறை சார்ந்த பதிவு என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் நினைப்பது சரிதான்.. உங்களிடம் நல்ல மதிப்பு, மரியாதை மட்டுமல்லாமல் தமிழ்மண விருதையும் வாங்கித் தந்த துறை சார்ந்த பதிவுகளை கொஞ்ச நாளாக கண்டு கொள்ளாமலே இருந்ததை கண்ணன் சுட்டிக்காட்டியபோது ‘அப்படியெல்லாம் ஒன்றும் திட்டமிட்டுச் செய்யவில்லை, மாசம் ரெண்டு எச்சரிக்கை, ரெண்டு அனுபவங்கள், ரெண்டு மொக்கை, ஒரு சினிமா, ஒரு துறை சார்ந்த பதிவுன்னு கரெக்டாதானே போய்க்கினுருக்குது’ என்று சொன்னேன். அதற்கு அவன்.... சரி வெட்டிப்பேச்சு வேண்டாம்.. இந்தப் பதிவே வெட்டிச்செயல்கள் குறித்ததுதான்.

‘நுண்ணிய செயல்காணும் திட்டம்’ (Micro level process mapping), ‘மதிப்பற்ற செயல்கள்’ (NVA - Non Value added Activities) போன்ற பல வார்த்தைகளைக்கூறி உங்கள் அலுவலகத்திலும் மானேஜரோ, ட்ரெய்னரோ அவ்வப்போது ‘வார்த்தைஜாலம்’ காட்டிக்கொண்டிருப்பாங்களே.. ‘என்ன எழவுடா இது? அவ்வப்போது எதுனா புதுசா தெரிஞ்சிக்கினு வந்து நம்பள கலாய்க்கிறதே இவுனுக பொழப்பாப்போச்சிது’ன்னு நீங்களும் பொலம்பியிருப்பீங்களே.. வாங்க என்னன்னு பார்ப்போம். எனது முந்தைய டெக்னிகல் பதிவுகளை படித்திராதவர்கள் எதற்கும் முன்னாடியே சைட் லேபிளில் போய் ‘டெக்னிகல்’ என்பதை கிளிக் செய்து படித்துவிட்டு வந்துவிடுவது நல்லது. ஏனெனில் சில பல பழக்கப்பட்ட வார்த்தைகளை விளக்கவேண்டிய அவசியமில்லாமல் தொடர்ந்து உபயோகிக்க வசதியாகயிருக்கும்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருக்குறான்.. சை.! ஒரு ஊர்ல ஒரு கொசுவத்தி கம்பெனி இருக்குது. அங்கு என்ன செயல்கள் நடக்கின்றன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ‘கொசுவத்தி தயாரிப்பு என்ற செயல் நடக்கிறது’ என்பீர்கள். நோ நோ.. அது பத்தாது எனக்கு. டீடெயிலா சொல்லணும்.. பர்சேஸ்க்கு ஒரு டீம் இருக்குது. அவர்கள் போய் கொசுவத்திக்கு தேவையான கெமிக்கல்ஸ், மற்றும் இதர பொருட்களை வாங்கி வருகிறார்கள். அதை ஸ்டோர்ஸில் இருப்போர் வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டு தினம் தேவைப்படும் அளவை தயாரிப்புக்கு தருகிறார்கள். தயாரிப்பில் இருப்போர் மெஷின்களையும் கருவிகளையும் பயன்படுத்தி அதை கொசுவத்திகளாக மாற்றுகிறார்கள். குவாலிட்டியில் இருப்போர் கொசு சாகிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க கொசுவத்தியை கொளுத்தி வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். டெஸ்பாட்ச்சில் இருப்போர் அதை அழகாக பேக்கிங் செய்து வைக்கிறார்கள். விற்பனைப்பிரிவில் இருப்போர் எப்படியாவது அந்த கொசுவத்தியின் புகழைப்பாடி மயக்கி கஸ்டமர்களை அழைத்து வருகிறார்கள். பைனான்ஸில் இருப்போர் ராஜா மாதிரி வரவு செலவுகளைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ராஜா (முதலாளி) லாபத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். அடேங்கப்பா.. ஒரு கொசுவத்தி கம்பெனியிலேயே எவ்வளவு வேலை நடக்கிறது என்கிறீர்களா? ம்ஹூம்.. நீங்கள் செய்தது ஒரு பறவைப் பார்வை(Bird view)யில் செயல்களைக் காணுதல்(Process mapping). எனக்கு இதுவும் பத்தாது.. இன்னும் கூர்ந்து கவனித்து துல்லியமாக எத்தனை செயல்கள் (Micro level process mapping) நடக்கிறது என சொல்லவேண்டும்.

உதாரணமாக ஒரே ஒரு காரியத்தைப் பார்ப்போம். கொசுவத்தி ரெடியாக இருக்கிறது வண்டியில் ஏற்றவேண்டியதுதான் பாக்கி. பில்லை அதனுடன் அனுப்பவேண்டும். பில்லை(Invoice) தயாரிப்பவரிடம் ஒரு லிஸ்ட் இருக்கும். எந்த மாடல் கொசுவத்தி என்ன விலை என்று.. அதை செக் பண்ணி அவர் பில்லை தயாரிப்பார். பின்னர் அது கையெழுத்துக்காக பைனான்ஸுக்கு போகும்.. அங்கு ஒருவர் உட்கார்ந்து கொண்டு விலை சரியா என்று செக் பண்ணுவார். பிறகே கையெழுத்தாகும். பிறகு வண்டியில் ஏற்றும் போது இன்னொருமுறை பில்லை டெஸ்பாட்சில் இருப்பவர் செக் பண்ணுவார். அவரின் பணி பில் இருக்கிறதா, ஆர்டர் பண்ணிய அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதாகத்தான் இருக்கவேண்டுமே தவிர விலை சரியாக இருக்கிறதா என லிஸ்ட்டை வைத்துக்கொண்டு பார்ப்பதாக இருக்கக்கூடாது. அப்படி அவரும் அந்த வேலையைச்செய்தால் எதற்காக ஒரே காரியத்தை மூன்று பேர் செய்ய வேண்டும் என்பதே இங்கு எழும் மிக முக்கியமான கேள்வி.

அந்த மூவரில் இருவர் செய்வது நிறுவனத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராத பயனற்ற, மதிப்பற்ற (NVA) செயலாகும். மூலப்பொருள் விலை, தயாரிப்புச்செலவு, பணியாள் ஊதியம், வந்தது, போனது எல்லாமும் பொருளின் இறுதி விலையில் வைக்கப்படுகிறது. அப்படியானால் நீங்கள் செய்யும் செயலின் மதிப்பு என்பது பொருளின் விலையில் ஒரு பகுதியாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேவையற்ற காரியத்தை செய்துவிட்டு அதற்கான விலையையும் கஸ்டமரின் தலையில் கட்டுகிறீர்கள் என்பதே இதன் சாராம்சம். இந்த சப்ஜெக்ட் கடலைக்காடு போன்றது. நாம் ஒரு செடியை மட்டுமே பிடுங்கியுள்ளோம். தேவைப்பட்டால் சமயம் வரும்போது மீண்டும் தோண்டலாம்..

.

Sunday, March 1, 2009

பதிவர்களின் புதிர் புகைப்படங்கள்

1. இந்த அழகான கைகள் யாருடையது?

DSC04607 

2. செதுக்கிய தாடியும், அலைபாயும் கூந்தலுமாக இந்த யூத் பதிவர் யார்?

DSC02251

3. இசையில் மூழ்கியிருக்கும் இந்தக்காதுகள் யாருடையது?

DSC03920

4. ஒளி நிறைந்திருக்கும் இந்தக்கண்கள் யாருடையது?

DSC03948

5. தங்கம் ஜொலிக்கும் இந்த விரல்களுக்கு சொந்தக்காரர் யார்?

DSC03980

6. மங்கி குல்லாவை மங்கியை விடவும் அழகாக அணிந்திருக்கும் இவர் யார்?

DSC04070

7. கானகத்தின் நீரோடையில் கைகளாலேயே மீன்பிடிக்க முனையும் இவர் யார்?

DSC04095

8. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. இந்த அழகான ஹேர்ஸ்டைல் யாருடயது?

DSC04597

பரிசு : எட்டு பேரையும் சரியாக கண்டுபிடிப்போர் அடுத்த மான்ஹாட்டன் பார்ட்டிக்கு அழைக்கப்படுவார்.

ச்சின்ன க்ளூ..: இத்தனை அரிய புகைப்படங்களையும் படமாக்கியது உங்கள் தாமிரா..

DSC03508

டிஸ்கி : லைவ் ரைட்டரில் எழுதவும், போட்டோக்களை அப்லோட் செய்யவும் பழகிக்கொண்டிருப்பதால் இந்த மொக்கைப்பதிவு அதுவும் ஞாயிற்றுக்கிழமையில்.. இதெல்லாம் நமக்கு சாதாரணம்தானே..!