Sunday, May 31, 2009

யாரோ ஒருத்தி

நீ என்னுள்ளே விட்டுச்சென்ற
தடயங்கள் அத்தனையும் காற்றிலே
உடைந்து போய்விட்டன.. மீதம் ஏதுமில்லை
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக.. நம் காதல்.!

********

உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதற்றமடைவாயோ
என்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்.

********

மழை
பூக்கள்
கடல்
மரங்களடர்ந்த ரயிலடி
இவற்றைப்போலவே
இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய
கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.!

********

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.!

.

Wednesday, May 27, 2009

கண்ணன் கதைகள் : முன்னுரை

ஏற்கனவே ரமா : ஒரு எச்சரிக்கை, டெக்னிகல் பதிவுகள் என சில தொடர்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த லட்சணத்தில் ‘கண்ணன் கதைகள்’ என்ற புதிய தொடர் பதிவுகளுக்கான அவசியம் என்ன? கண்ணனை நேரில் கண்டவர்கள் ஓரளவு அவனது வியாக்கியானங்களைக் கேட்டிருக்கக்கூடும். நமது செட்டு செய்துகொண்டிருக்கும் அத்தனை மொக்கை வேலைகளையும் அவனாலும் திறம்பட செய்யமுடியும். அவ்வப்போது நமது பதிவுகளைப் படித்துவிட்டு கெக்கேபிக்கேவென சிரித்துவிட்டு ‘ஏண்டா இப்படி கேனை மாதிரி எழுதுறீங்க?’ என்பான். அப்போது கொஞ்சம் கடுப்பாகி ‘நீயும் கொஞ்சம் எழுதுறதுதானே, அப்பதானே தெரியும் முட்டை போடுற கோழியின் வலி’ என்பேன். அதற்கும் நக்கல் பண்ணிவிட்டு இதெல்லாம் என் வேலையில்லை என்று போனை வைத்துவிடுவான். ஏதோ நாமெல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கி இந்த வேலையை செய்துகொண்டிருக்கிற மாதிரி. ஏதோ நல்ல மூட்ல இருக்கும்போது மட்டும் எல்லாருமே எழுதவந்துட்டா அப்புறம் படிக்கிறது யாருடா என்று நல்ல பதில் சொல்வான். இந்த வாக்கியத்தை எந்த இடத்திலாவது நாம் பயன்படுத்த முடியுமா யோசித்துப்பாருங்கள். வெறுமே வலைப்பூவை வாசிப்பவர்கள்தான் அலட்சியமாக இதைச்சொல்லமுடியும்.

பிறிதொருநாள் 90 அடித்துக்கொண்டிருந்த போது ஒரு நாட் கொடுத்து இதை எழுது என்றான். ஏன் நீயே எழுதுறதுதானே என்றேன். ‘கூல் மாப்பி, எல்லாத்துக்கும் ஒரு வேளை வரணும்’ என்று பெரிய வித்வான் மாதிரி பதில் சொன்னான். சரி விடுங்க அவனிடம் ஸ்ட்ரைட்டா சிஎம் ஆவுற மாதிரி பிளான் ஏதாவது இருக்கும்.

நான் பாவம் இல்லையா? ஒரு பக்கம் தங்கமணி என்ற பெயரில் ஒரு சோதனை. இது போதாது என்று நண்பன் என்ற பெயரில் இன்னொரு இம்சை. இது பத்தாதுன்னு ஆஃபிஸ் வேற. ஒரு மனுஷனுக்கு இத்தனை சோதனை இருக்கக்கூடாது. என்னா பாடு.? முன்ன வந்தா கடிக்கிறது, பின்ன போனா உதைக்கிறது. ‘எதையும் தாங்கும் இதயம்’னு என்னை நானே அவ்வப்போது சொல்லிக்கொள்வேன். பின்ன இல்லையா? அறிவு இருந்தாலும் சமாளிக்கலாம். இல்லைன்னாலும் சமாளிக்கலாம். இருக்குதா இல்லையான்னே தெரியாம இப்படி ஒரு கூட்டம் என்னைச்சுற்றி. ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிவைத்தால் நீங்களாவது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பீர்கள் என்ற ஒரு நல்லெண்ணம்தான் இதையெல்லாம் எழுதக் காரணம். ஒரு பொது சேவை மாதிரின்னு வெச்சுக்கங்களேன். அதில் இதுவரை தொடாத சப்ஜெக்ட்தான் இந்த ‘கண்ணன் கதைகள்’.

பள்ளியிறுதிக்காலம், காதல்காலம், கவிதைக்காலம், கல்லூரிக்காலம், சினிமா மற்றும் புத்தகங்கள் என ரசனைக்காலம், மதுக்காலம், வேலைதேடுங்காலம், தேடியவேலைகளைத் தொலைத்தகாலம், ஊர்சுற்றிக்காலம், கல்யாணக்காலம், வெய்யக்காலம், காற்றடிகாலம், மழைக்காலம் என முடிந்த, தொடரும் பலவற்றிலும் இடையறாத வெற்றிகளைக் கொண்டாடவும் தோல்விகளைக் கூத்தாடிக்கொண்டாடவும் இருக்கும் ஒரு நட்பு. இதில் நான் அனுபவித்த இம்சைகள் ஏராளம்.

இப்படி ஒண்ணு எழுதப்போறேண்டா என்று சொன்னப்போ ‘என்ன அப்படியே நல்ல மாதிரி எழுதுடா, ஹீரோ மாதிரி இருக்கணும். இண்ட்ரொடக்ஷன் கதை வேணா நா ஐடியா கொடுக்கட்டுமா?’ என்றான். நான் வேண்டாம் என்றேன்.

‘ஏதாவது லேடிஸ்க்கு உதவுற மாதிரி ஆக்ஷன் ஓபனிங்கா இருக்கணும்’

வெளங்கிரும் என்று நான் சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன். வாரம், பத்துநாளுக்கு ஒருதடவை இந்த ‘கண்ணன் கதைகள்’ என்ற இம்சையும் தொடரலாம்.

.

Tuesday, May 26, 2009

பசுமை மாறாத கிருஷ்ணகிரி

திட்டமிடாத வாழ்க்கையின் அத்தனை சங்கடங்களையும், சிற்சில நன்மைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். திட்டமிட்டிருந்தால் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்திருக்கலாம். அழகாக ட்ரெயினில் 5 மணி நேரத்தில் போயிருக்க வேண்டிய தூரத்தை 8 மணி நேரம் நள்ளிரவில் பஸ் மாறும் அவஸ்தையுடன் அனுபவித்திருக்க வேண்டாம். முன்பே துணைக்கு யாரையாவது அழைத்துச்சென்றிருக்கலாம், இப்படி தனியே வங்குல சிக்கின எலி மாதிரி கும்க்கியிடம் சிக்கியிருக்கவேண்டாம்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நள்ளிரவில் பேருந்து நிலையம் வந்து அழைத்துச்சென்றது, முன்னமே வசதியான அறை ஏற்பாடு செய்திருந்தது, இரண்டு நாட்களும் எனக்காக சிரமம் மேற்கொண்டது என அவரது அன்புக்கு முதலில் ஒரு பெரிய நன்றி.!

எதிர்பார்த்தது போலில்லாமல் கிருஷ்ணகிரி மிகச்சிறிய ஊர்தான். ஒரு புறமிருந்து பைக்கில் இரண்டு நிமிடங்கள் பயணித்தால் ஊரின் அடுத்தப்பக்கம் வந்துவிடுகிறது. சொன்னதற்கு அதெல்லாம் இல்லை, டிஸ்ட் தலைநகராக்கும் என்று கும்க்கி பீற்றிக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை 8 மணிக்கெல்லாம் எல்லாக்கடைகளும் சாத்தி பந்த் நடக்கிறதோ என்ற தோற்றத்தை விளைவிக்கிறார்கள். சரி அதையெல்லாம் விடுங்கள். பசுமை பார்க்கணுமே.. அறுவடை முடிந்த காலத்திலும், பச்சைப்பசேலென்ற சுற்றமும் எங்கு பார்த்தாலும் பெரும் மரங்களும் என பசுமையான சுற்றுப்புறக் கிராமங்கள் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை நமக்கு. கிருஷ்ணகிரியுடன் முதல் அனுபவம் என்பதால் கண்டிப்பாக ஒகேனகல் செல்லவேண்டும் என்பதே பிரதான திட்டம்.

சனிக்கிழமை காலையிலேயே ஒகேனகல் கிளம்பினோம். இருவர் மட்டுமே, அவரின் புத்தம் புதிய ‘யுனிகார்ன்’ பைக்கில். போக்குவரத்து மிகக்குறைவான, பசுமரங்கள் அடர்ந்த, நல்ல சாலையில் பைக்கில் மணிக்கணக்காக செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது ஒரு சுகானுபவம். 80 கிலோமீட்டர்கள். கார் என்றால் நமது வழக்கப்படி ஏறியதும் ‘கொர்’ஆகிவிட்டிருப்போம். நல்ல வேளையாக பைக்கில் ரசித்துக்கொண்டே பயணித்தேன். போகும் வழியில் சின்னஞ்சிறு கிராமங்களைக்கடந்து சென்றோம். கிராமங்களின் பெயர்கள் வியப்பூட்டின. அதன் உச்சமாக ‘திகிலோடு’ என்ற கிராமத்தின் பெயர் இருந்தது. வழியெங்கும் கரும்பு, எள் என வயற்புறங்களும், மாந்தோட்டங்களும் நிறைந்திருந்தன. செல்லும் வழியில் பென்னாகரத்துக்கு முன்பே பாப்பாரப்பட்டி கிராமத்தில் பிரதான சாலை அருகிலேயே அமைந்துள்ள தியாகி ‘சுப்ரமண்யம் சிவா’ வின் நினைவிடத்தைக் காணநேர்ந்தது பாக்கியம். ஒரு வழியாக 12 மணியளவில் ஒகேனக்கல் அடைந்தோம்.

ஒகேனக்கல் அருவி அமைந்த இடம் இயற்கையின் மடி. பொதுவாக அருவி என்றால் மேலிருந்து கொட்டும். மக்கள் கீழிருந்து குளிப்பார்கள். இங்கே தலைகீழ். அருவியில் குளிக்கும் வசதியில்லாததால், மேலே அருவியாக விழப்போகும் நீரிலேயே மக்கள் குளித்துவிடுகிறார்கள். போனால் போகிறது என்று பக்கவாட்டில் இறங்கி அருவியின் ஒரு சிறு பகுதியில் குளிக்க செயற்கையாக வசதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக மஸாஜ் செய்துகொண்டோம். செய்தவர் தன் மனைவியை மனதில் கொண்டாரோ என்னவோ முதுகுலேயே ‘நங்கு நங்கென’ குத்துகிறார், மண்டையிலேயே வலிக்கும் படி சாத்துகிறார், கையை முறுக்கிப் பிழிகிறார், செவிட்டில் நாலு அறை விழவில்லை, அவ்வளவுதான் குறை. பக்கத்தில் ஒருவர் ஓவென அலறிக்கொண்டிருந்தார். பின்னர் நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக்கிடந்து விட்டு அருவிக்குச் சென்றால், மஸாஜ்காரர் பரவாயில்லை என்பது போல தண்ணீர் அவ்வளவு ஆத்திரத்தோடு நம்மை அடித்து துவைக்கிறது. அனுபவம் அருமை.! பின்னர் திரும்பினோம்.

ஆனால் இப்போதுதான் ஒரு சின்ன பிரச்சினை. ஷார்ட் கட்டில் அழைத்துச்செல்கிறேன் என்று கூறி அடர்ந்த கானகம் வழியே வண்டியை திருப்பினார் கும்க்கி. 120 கிமீ பயணிக்கவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார். இதோ கொஞ்ச தூரம்தான் என்று கூறியபோது மைல்கல் கிருஷ்ணகிரி 62 கிமீ என்று காட்டியது.

அன்றிரவு கும்க்கியின் நண்பர் பாலனை சந்தித்ததும் மறுநாள் கிருஷ்ணகிரியின் வளமைக்குக் காரணமான கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தைக் கண்டதும், இன்னொரு சிற்றேரியில் படகுச்சவாரி செய்ததும் மறக்க இயலாத அனுபவம். பச்சைத்தண்ணீர் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருக்கிறீர்களா? எந்த தொழிற்சாலைகளின் கைங்கர்யமோ நீர்த்தேக்கம் முழுமையும் பச்சைப்பெயிண்ட் போல காட்சிதருகிறது. பகிர இன்னும் நிறைய இருந்தாலும் பதிவின் நீளம் கருதி பிறிதொரு சமயத்தில் பார்க்கலாம். சில படங்கள் உங்கள் பார்வைக்கு..
1. கிருஷ்ணகிரி அனைக்குச் செல்லும் பாதை..

2. அணையில் பச்சைத்தண்ணீர்..

3. போட்டிங்கின் போது, அஜித் அல்ல ஆதி.!

4. ஒகேனகல் நீர்வீழ்ச்சியின் எதிர்புற மலைமீது கும்க்கி..

5. ஒகேனகல் நீர்வீழ்ச்சி..

6. சுப்ரமணியம் சிவா நினைவிடத்தில்..

7. பசுமரங்கள்.. 8. பழமரங்கள்..

.

Monday, May 25, 2009

ஆமா, நான் ஆதிமூலகிருஷ்ணன்தான்..

நேற்றோடு பதிவுலகம் வந்து ஒரு வருடம் முடிகிறது.. உங்களுக்கான சோதனைதான் இன்னும் முடிந்தபாடில்லை. இன்று 1 லட்சம் ஹிட்டுகளையும் தொட்டுக்கொண்டிருக்கிறேன் (சைடில் தெரிவது யுனிக் விசிட்டர்ஸ் கவுன்ட்). நண்பர்கள் பலரும் லட்சங்களை எப்போதோ கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தாலும் நம்மால் முக்கிதக்கி இப்போதுதான் முடிந்தது. 'அது சரி.. கூந்தல் இருக்கிறவள் அள்ளிமுடிகிறாள், நமக்கேன் அந்த ஆசை' என்று மகேஷ் கூறுவது கேட்கிறது. ஒரு பக்கமோ, அரைபக்கமோ இதே வாரத்தில் விகடனிலும் நம் கதையை பார்த்தாயிற்று. தாமிரா என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தபோது சில சமயங்களில் போனிலும், மெயிலிலும் 'உங்கள் கதையை விகடனில் பார்த்தேன், நீங்கள்தானே?' என்பார்கள். கூச்சத்தோடு இல்லை என்பேன். இனி கால்கள் வந்தால் குறையாத உற்சாகத்தோடு கூறுவேன், 'ஆமா, நான் அந்த‌ ஆதிமூலகிருஷ்ணன்தான்'. இன்னும் ஏதாவது பண்ணலாம் என்று சிறிது நம்பிக்கை துளிர்க்கிறது. பர்சனலாக நீண்டநாட்களாக முள்ளாக குத்திக்கொண்டிருந்த ஒரு பிரச்சினையும் மலராக மாறியது இதே வாரத்தில்தான். மகிழ்ச்சியிலிருக்கிறேன். அடுத்தடுத்து வேகமாகவும், தரமாகவும் இயங்கி, போட்டியை அதிகப்படுத்தி தூங்கவிடாமல் செய்துவரும் சகபதிவர்களுக்கு வாழ்த்துகூறி இந்த‌ உப்புமா ப‌திவை (நீ எழுதுறது எல்லாமோ உப்புமாதானேன்னு சொல்றதுக்குன்னு ரெண்டு பேர் இருப்பீங்களே.. ஊஹூம்ம். அப்படிச்சொல்லக்கூடாது. இரண்டு நாட்களாக ஊரிலில்லாததால் நேரமின்றி இந்த அவசர டுமீல் ப‌திவு) முடித்துக்கொள்கிறேன். ந‌ன்றி, வ‌ண‌க்க‌ம்.!

Friday, May 22, 2009

காதல் பொங்கல்.!

கொஞ்சம் நீண்ட பிரிவுக்குப்பின்னர் ரமா ஊரிலிருந்து திரும்பியிருப்பதால் எனக்கு ஆஃபீஸில் ஒரு வேலையும் ஓடவில்லை. எப்படா அஞ்சு மணியாகும் என காத்திருந்தேன். வளையம் வளையமாக கொசுவத்திகள் வந்துபோயின, ஓவர் காதலில் பொங்கிக் கொண்டிருந்தேன். யாராவது மாட்டியிருந்தால் கவிதை சொல்லியே சாகடித்திருப்பேன்..

என்ன சமைத்திருப்பாள்? (இதுதான் முதலில்ங்க, ஏன்னா நிலைமை அப்படி.! ஒரு மாசமா தக்காளி ரசமே கதின்னு இருந்த எனக்குல்ல தெரியும் அவளது முட்டைக்குழம்பு சுவை). அறை இப்போது வீடாகியிருக்கும்.

**********

உறங்குவதற்கு முந்தைய நிமிடங்களில் அவள் காதோரம் கொஞ்சலாய் கிசுகிசுத்துக் கொண்டிருந்தேன்.

எப்டிடி இத்தனை நாள் இருந்தே.. கல்லு மனசுடி உனக்கு.! ‘..ம்’ நேத்து ஒரு கவித பாத்தேன்டி.. ‘காதல் என்பது வெறும் வார்த்தைதான், ஒருத்தி அதை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் வரை’ எப்டி? சூப்பராயிருக்குதுல்ல.. எனக்கும்தான், நீயில்லாம ஒண்ணுமே ஓடலைம்மா.! ‘..ம்’ இப்டியே உன்ன பாத்துட்டே இருக்கலாம் போல இருக்குது.! ‘..ம்’ உன்னிய நினச்சு ஒரு கவித எழுதினேன்டி, யூத்ஃபுல் விகடன்ல வந்திருக்குது.. காலையில காமிக்கவா.? ‘..ம்’ ஊட்டிக்கு போலாமா நாம.. நா ஒரு வாரம் லீவு போடறேன்.. ஜாலியா போயிட்டு வரலாமா.? ‘..ம்’ எனக்கு உன்ன ரொம்ப தேடிருச்சுடி.. எப்பப்பாத்தாலும் உன் நினபாவே இருந்துது, ரெண்டு நாளா சாப்பாடே இறங்கல தெரியுமா? ‘..ம்’ கொஞ்சமாச்சும் என்ன தேடினயாம்மா, நீயெங்க தேடியிருக்கப்போற? ‘..ம்’ அப்பிடியே உன்ன கடிச்சு தின்றலாமான்னு வருது எனக்கு.! ‘..ம்’ கல்யாணத்தன்னிக்கு நடந்தது நாபகமிருக்கா உனக்கு, ரிசப்ஷனுக்கு பச்சை சேலை கட்டியிருந்த நீ.! ‘..ம்’

கொஞ்சமே கொஞ்சமாய் சத்தத்தைக்கூட்டி, ‘என்னடி உம், உம்னுகிட்டிருக்க? நா எவ்வளவு சீரியஸா சொல்லிட்டிருக்கேன்.?’

அவள் ஃபுல் வால்யூமில் இறைந்தாள், ‘ஏன் இப்பிடி.. ராத்திரி போல நிம்மதியா தூங்க விடாம காதுல வந்து பெனாத்திக்கிட்டிருக்கீங்க, ஊட்டிக்கு.. ஒரு வாரம் லீவு.. யாரு.. நீங்கதான? வெளங்கிரும். புளுபுளுக்காம தூங்கறீங்களா?’


(பி.கு : தற்செயலாகத்தான் கவனிக்கிறேன்.. ‘ரமாவின் காதோர புலம்பல்கள்’ போலவே இந்தப்பதிவு அமைந்திருப்பதை.! ரெண்டிலயும் விஷயமென்னவோ ஒண்ணுதான்.. எச்சரிக்கை.!)
.

Thursday, May 21, 2009

மிக்ஸ்டு ஊறுகாய் (21.05.09)

சில நாட்களாக இல்லறப் பிரச்சினைகளால் (இல்லறம் என்றாலே பிரச்சினைதானே என்கிறீர்களா?) கொஞ்சம் இறுக்கமாக உணர்ந்ததால் இணையம் பக்கம் வரவில்லை. வேலையிலும் கொஞ்சம் பிடுங்கல் ஜாஸ்திதான். ஆனால் பாருங்கள், சமீபத்தில் போன் செய்த ஒரு பிரபல பதிவர் ‘நீங்க மட்டுமில்ல தாமிரா, உங்க டீமே இப்படித்தான் கொஞ்ச நாளாவே டல்லாக இருக்குதே, என்னாச்சு?’ என்றார். அவரது அன்புக்கு நன்றி. டீமுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் ஃபார்முக்குத் திரும்புவோம். அதற்கு நல்லதொரு துவக்கமாய் விரைவில் மான்ஹாட்டனில் ஒரு மாலைப்பொழுதுக்கு ஸ்பான்சர் செய்ய அப்துல் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற நல்ல செய்தியை டீமுக்கு அறிவிக்கிறேன்.

øøøøøøøøøø

சென்ற வாரங்களில் ஆனந்தவிகடனில் நமது நண்பர்களின் படைப்புகளைப் பார்த்த உத்வேகத்தில் நானும் முயற்சித்திருந்தேன். பழம். விகடன் ஒரு கனவு. வலையுலகம் தந்த பரிசாகவே இதை நான் கருதுகிறேன். பயிற்சிக்கான இடமாக வலை இருக்கிறது. தவறுகளைத்திருத்த, உற்சாகம் தர நீங்கள் இருக்கிறீர்கள். இதுவே வெற்றிக்கான காரணம் என்பதை அறிகிறேன். முதல் படைப்பை விகடனில் பார்த்த மகிழ்ச்சி என்பது ஒப்பற்றது. தொடர்ந்து நன்முறையில் பயணிக்க எத்தனை உழைப்பு வேண்டும் என்ற நினைப்பே பயத்தைத் தருகிறது. நேற்று மாலையே ரெகுலராக விகடன் வாங்கும் பெட்டிக்கடைக்கு சென்று கேட்டபோது 'என்ன சார்? நாளைக்குதானே வரும்' என்றார். அது தெரியாதா எனக்கு? ஆனாலும் 'அதெப்படி வெளியூரிலெல்லாம் இன்னிக்கே கிடைக்கும் விகடன் இங்கே மட்டும் நாளைக்கா.? இதெல்லாம் நீங்க கேட்கறதில்லையா?' என்று சத்தம் போட்டு விட்டு வந்தேன். இன்று விகடன் வாங்கிப் பார்த்துவிட்டு 'இன்னும் நாலு புக்கு குடுங்க..' என்றபோது ஒரு மாதிரியாக பார்த்தார். அவர் கேட்காமலேயே 'எங்கதை வந்திருக்குது..அதான்' என்றேன் அசட்டு சிரிப்புடன். அவர் முறைத்ததில் இதுக்குதான் நேத்து அந்த அலம்பல் பண்ணினயா என்ற அர்த்தம் தெரிந்தது.

øøøøøøøøøø

நண்பர் பைத்தியக்காரன் ‘உரையாடல் : சமூக கலையிலக்கிய அமைப்பு’ சார்பில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறார், வலைஞர்களுக்காகவே.. மொத்தப்பரிசாக Rs.30000 மும், தேர்ந்தெடுக்கப்படும் 20 சிறுகதைகளுக்கு கிழக்குப் பதிப்பக புத்தகமாகும் பெருமையும் காத்திருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் ‘உரையாடல்’ சார்பில் வாழ்த்துகள்.! (போட்டி டஃப்பாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் இப்போதே கை உதறுகிறது. ஒனக்கெல்லாம் இது தேவையாடா ஆதி.! இருப்பினும் போட்டியில் கலக்குவது.. சே, கலங்குவது.. சே, கலப்பதுதான் முக்கியம் என்பதால்.. வேணாங்க பயத்துல வாய் ரொம்ப குழறுது).

øøøøøøøøøø

சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் ‘அன்பே சிவம்’ படத்தை எத்தனையாவதோ தடவையாக காண நேர்ந்தது. வழக்கம் போல ஏதோ ஒரு காட்சியில் துவங்கி பின்னர் சானல் மாற்ற இயலாமல் இறுதி வரை பார்த்தேன். இந்த தடவை நான் இது வரை உணராத இன்னொரு விஷயம் புலப்பட்டது படத்தில். அது பிசிறில்லாத, பட்டுக்கத்தரித்ததைப்போன்ற, ஆழமான, ரசனையான வசனங்கள். கொஞ்சம் பிரமிப்பாய் இருந்தது.

øøøøøøøøøø

சமீபத்திய ஒரு SMSன் தமிழாக்கம்.

காதல் என்பது வெறும் வார்த்தைதான், அதை சுமக்கமுடியாமல் சுமந்து ஒருத்தி உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் வரை.

.

போக்க யோகே (Poka Yoke)

என்னடா இது.? 'சம்பவாமி யுகே யுகே..' மாதிரி ஸ்லோகன் சொல்றேன்னு பார்க்கிறீங்களா? அதெல்லாம் இல்லை, இது இன்னுமொரு டெக்னிகல் ஜல்லி ஃப்ரம் ஜப்பான்.‌

உங்கள் தங்கமணி யாருக்கோ போன் செய்யத்துவங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் அவர் பேசக்கூடும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதனால் என்னென்ன பின் விளைவுகள் நேரலாம்? நீங்கள் டிவியை ம்யூட் பண்ணவேண்டிருக்கும். காஃபி கிடைக்காது. உங்கள் அடுத்த வேளை உணவு ஹோட்டலில் என்பது உறுதியாகலாம். இதனால் உங்களுக்கு நேர விரயம், உழைப்பு விரயம், தொலைபேசிக் கட்டணம், சாப்பாட்டுக்கான ஹோட்டல் செலவு, போய்வருவதற்கான பெட்ரோல் செலவு இப்படியாக ஒரு பட்டியல் நீண்டு கொண்டே போகும். அவரை விரைந்து போனை வைக்கும்படி செய்தால் இந்த அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நீங்கள் தப்பிக்கலாம். அவரை எப்படி போனை வைக்கச்செய்வது? உங்களால் அவரை திட்டி வைக்கச்சொல்லமுடியமா? அவ்வளவு வீரமான ஆணாக நீங்கள் இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கானது அல்ல, அப்படியே இருந்தாலும் கூட போன் உடைந்து சிதறுவது, பாத்திரங்கள் நெளிந்துபோவது, உங்கள் மண்டை வீங்கிப்போவது போன்ற சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படியானால் என்ன செய்யலாம்? பதில் உள்ளே..

உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் இருப்பவர்களை அவர்களது மானேஜர்கள் அடிக்கடி பிராண்டி வைக்கும் பல விஷயங்களில் ஒன்றான இந்த 'போக்க யோகே' என்றால் என்ன? ‌

'போக்க‌ யோகே' என்றால் த‌மிழில் 'ஃபெயில் சேஃபிங்' (Fail safing) ஸாரி.. 'த‌வ‌று நிக‌ழ்வ‌தைத் த‌டுத்த‌ல்' என்று அர்த்த‌மாகிற‌து. ஒரு செய‌லில் த‌வ‌று நிக‌ழ்வ‌தால் ஏராள‌மான‌ அள‌வில் நேர‌ விர‌ய‌ம், ம‌னித‌ உழைப்பு விர‌ய‌ம், இய‌ற்கை வ‌ள‌த்தின் விர‌ய‌ம் ம‌ற்றும் ப‌ண‌ விர‌ய‌ம் ஏற்ப‌டுகிற‌து. அது குண்டூசி த‌யாரிப்ப‌தானாலும் ச‌ரி, கார் த‌யாரிப்பானாலும் ச‌ரி. இந்த‌ விர‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றி விரிவான‌ ஒரு ப‌குதியை பின்ன‌ர் காண்போம். இந்த‌த்த‌வ‌றுக‌ளை ச‌மாளித்துக் கொண்டும், ச‌ரி செய்து கொண்டும், பொறுத்துக் கொண்டும் தொழிலுல‌க‌ம் இய‌ங்கிக் கொண்டிருக்கிற‌து. இதில் எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிற‌தோ அங்கெல்லாம் த‌வ‌றுக‌ளையே ந‌ட‌க்க‌விடாம‌ல் செய்துவிட்டால் எப்ப‌டியிருக்கும்?

அந்த‌ அடிப்ப‌டையில் தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌துதான் இந்த‌ Poka yoke எனும் 'Fail safing' வழிமுறை. இதுவே 'Mistake proofing', 'Fool proofing' போன்ற‌ மேலும் சில‌ பெய‌ர்க‌ளிலும் அழைக்க‌ப்ப‌டுகிற‌து. இது 'ஷிஜியோ ஷிங்கோ'(Shigeo shingo) என்ற‌ ஜ‌ப்பானிய‌ 'டொயோட்டா' நிறுவ‌ன‌ வ‌ல்லுன‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.
உல‌க‌ குவாலிடி துறையே த‌வ‌றுக‌ளை ச‌ரி செய்வ‌தை (Correction) விடுத்து த‌டுப்ப‌து (Prevention) எப்ப‌டி என்ப‌தில்தான் ம‌ண்டையை உடைத்துக் கொண்டுள்ள‌‌து இப்போது. அதற்கான சிறு ப‌ங்க‌ளிப்பையே இந்த‌ தொழில்நுட்ப‌ம் வ‌ழ‌ங்குகிற‌து.‌ இந்த‌ வ‌ழிமுறை என்ன‌ சொல்கிற‌து என்றால், ஒரு பொருள் த‌யாரிக்க‌ப்ப‌டும் செய‌லின் போதே த‌வ‌று த‌டுக்க‌ப்ப‌ட்டுவிட‌வேண்டும், த‌ப்பினால் உட‌னே க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு ஒரு தவறான பொருளுக்காக அடுத்த‌டுத்து நிக‌ழ‌விருக்கும் விர‌ய‌ங்க‌ளை த‌டுத்து நிறுத்திவிட‌வேண்டும்.

பதிவின் துவக்கத்தில் பார்த்த உதாரணத்துக்கு வாருங்கள். அதற்கான விடை Fail safing.. ஒரே நிமிடத்தில் போன் ஆட்டோமேடிக்காக துண்டிக்கப்படும் வசதி. அவர் தொடர்ந்து இரண்டு மூன்று முறைகள் டயல் செய்து பேசிவிட்டு கடுப்பாகி வைத்துவிடுவார். அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை. இதைப்போலத்தான் ஒரு ஃபெயில் சேஃபிங் வழிமுறை இருக்க வேண்டும்.

பைக்கில் சைட் ஸ்டாண்டை எடுக்காமல் மறந்து போய் எத்தனை தடவைகள் வண்டியை ஓட்டிச்சென்றிருக்கிறோம் நாம்? எவ்வளவு ஆபத்தானது இது? சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் ஒரு புதிய மாடல் பைக் சைட் ஸ்டாண்ட் எடுக்கப்படவில்லையெனில் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாக கேள்வியுற்றேன். அது ‘போக்க யோகே’வுக்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.

இதில் மூன்று நிலைகள் (Levels) உண்டு.
ஆளில்லாத, கேட்டில்லாத ரயில்வே கிராசிங். தொடர்ந்து விபத்துகள் நிகழ்கின்றன. அதைத் தடுப்பதற்கான ‘போக்க யோகே’ லெவல்கள்..

Level 1 : சிக்னல்கள் (அதைக்கண்டும் பொறுமையில்லாமல் வண்டியோடு ரயில் முன் போய் விழுவார்கள் நம்மவர்கள்)

Level 2 : உறுதியான இருப்பு கேட் (வண்டி வைத்திருப்பவர்கள் பொறுமைகாத்தாலும், நடந்து செல்பவர்கள் கேட்டை எகிறிக்குதித்து சரியாக ரயில் முன் பாய்வார்கள்)

Level 3 : வேறு வழியில்லை, ஓவர்ஹெட் பாலம். (100% சேஃப்)

இடம், பொருளாதாரம், அவசியம் மற்றும் சூழலுக்கேற்ப தேவையான லெவல்களை தேர்ந்தெடுக்கலாம். தவறுகளைக் களையலாம்.

இது தொழிற்சாலைகளுக்கு மட்டுமானது என்றில்லை, எங்கெல்லாம் தவறு நிகழ்கிறதோ அங்கெல்லாம் அவற்றைத்தடுக்க ஒரு சிறந்த வழிமுறையை நம்மால் தரமுடியும். என்ன.. கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.! அதுதானே பிரச்சினையேங்கிறீங்களா.? அதுவும் சரிதான்.

.

Friday, May 15, 2009

மையில்லாத கண்கள்


அம்மா கூட இல்லாத
ஒரு மதிய நேரத்தில்
உன்னை வீட்டிற்கு அழைத்து வருகிறேன்
பயம் தெரிந்தது உன் கண்களில்
இங்கே விட்டுச்செல்ல
உன் கூந்தலில் எந்த மலர்களும் இல்லை
சிதறி விழ உன் கரங்களில் கண்ணாடி வளைகளும் இல்லை
நீங்கிச்சென்ற பின்னும் ஒலிக்கும் கொலுசுகளுக்கும்
உனக்கும் சம்பந்தமில்லை
சுவர்களில் தடயமிட்டுச்செல்ல உன் கண்களும்
மை தாங்கியிருக்கவில்லை
விரித்த கூந்தல்
குங்குமம் பாராத நெற்றி
இறுக்கும் ஜீன்ஸ் என மாடர்ன் காதலி நீ...
மறக்காமல்
என் கன்னங்கள் கொண்ட
லிப்ஸ்டிக் கறைகளையும் கூட அழித்துவிட்டேன்
அப்படியும் மாலையில்
வீடு திரும்பிய அம்மா கேட்டாள்
என்னடா மல்லிகை வாசம் வருது...


Thursday, May 14, 2009

தக்காளி ரசம் செய்வது எப்படி?

அடடா.. நம்புங்க, இது நெசமாகவே சமையல் குறிப்புதான். ஏற்கனவே ‘தேன்குழம்பு’ என்ற சமையல் குறிப்புக்கு நீங்க தந்த வரவேற்பு நினைவிருக்கலாம்.

ஆண்கள் விடுதலைக்காக பல்வேறு விதமாக நாம் போராடி வரும் இவ்வேளையில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பல்வேறு விதமான தாக்குதல்களில் இருந்தும் நம் சிந்தனை மற்றும் தைரியம் இவற்றின் துணைகொண்டு திறம்பட தப்பி வந்தாலும் சமையல் என்ற பிரம்மாஸ்திரம் அவர்கள் கையில் இருப்பதால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. எப்படியாகிலும் அதையும் நாம் பெற்றாகவேண்டும். முதலில் ‘தேன்குழம்பு’ போன்ற சிறப்புக்குறிப்புகள் மட்டுமே வழங்கத் திட்டமிட்டிருந்தாலும் சங்க உறுப்பினர்கள் மேற்குறித்த காரணங்களைக் காட்டி சில அடிப்படைச் சமையல் குறிப்புகளையும் தந்தாக வேண்டிய சூழல் இருப்பதைத் தலைமைக்கு உணர்த்தினார்கள். திருமணமாகாதவர்கள் மட்டுமின்றி இரக்கமின்றி தங்கமணிகளால் தனித்துவிடப்பட்டு திருமணமாகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் வாசகர்களை மனதில் கொண்டு இந்தக்காரணத்துக்காகவே அவர்கள் மீண்டும் தங்கமணிகளிடம் சரண்டர் ஆகிவிடுவதைத் தடுக்கவே இந்தச்சேவை. ஆகவே.. இனி இது தொடரலாம்.

இந்த தக்காளி ரசம் மட்டுமின்றி எல்லாவிதமான சமையலிலுமே நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றுண்டு. அது பொருட்களை வாங்கி வருவதோ, சமைப்பதோ இல்லை. அது சமைத்தலுக்குப்பின்னர் பாத்திரங்களை ஒழுக்கமாக கழுவிவைப்பது மட்டுமே. இந்தப் பகுதி மட்டுமே மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். இதில் மட்டும் நாம் வெற்றிபெற்றுவிட்டால் எந்தப்பெண்ணுமே நம்மிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடப்பார்கள் என்பது நிச்சயம். நாம் திரும்பக்கூப்பிடுவது சந்தேகத்துக்குரியதாகும் பட்சத்தில் ‘அம்மா வீட்டிற்கு’ என்ற ஆயுதத்தை பிரயோகிக்கும் வாய்ப்பே இல்லாது போய்விடுவதை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும்.

இடுபொருட்களை செய்முறைகளிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். நேரே ரசத்துக்குப் போய்விடலாம்.

செய்முறை :

ஒரு பங்கு மிளகு, அதே அளவு சீரகம், இரண்டு பங்கு பூண்டுப்பற்கள், இரண்டு பங்கு கொத்தமல்லி விதைகள் (தனியா) இவற்றை ஒரே ஒரு சிறிய காய்ந்த மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் இட்டு மையாக இல்லாமல் கொஞ்சம் அரைகுறையாக அரைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக பத்து நிமிடங்களுக்கு முன்னரே ஊற வைத்திருந்த புளியை ஒரு கப் தேறுமளவுக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கரைசல் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். தனியே வைத்துக்கொள்ளுங்கள், பின்னர் சர்க்கரை சேர்த்துப் பானகமாக அருந்தலாம். மேலும் இரண்டு பழுத்த தக்காளிகளை வெந்நீரில் போட்டு அதன் தோலை நைஸாக உரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது வாணலியை சுடவைத்து சிறிது எண்ணைவிட்டு காய்ந்தபின் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைப் போட்டு தாளிதத்துடன் ஆரம்பித்துவிடுங்கள். இப்போது தீயை சிறிது குறைத்துக்கொண்டு மிளகு அரைசலை போடு வதக்குங்கள். ஜாக்கிரதை இந்தக்காரியங்கள் அனைத்துமே கவனமாக வேகமாக நிகழ வேண்டும். இப்போது உரித்து வைத்த தக்காளிகளை நறுக்கிவிடாமல் கையினாலேயே நசுக்கி வாணலியில் போடுங்கள். உடன் புளிக்கரைசலையும் டப்பென ஊற்றுங்கள். ‘சுரீரென’ புகையுடன் சத்தமெழும்பும். பயம் வேண்டாம். தீயை மிதப்படுத்திவிட்டு சரியான அளவு உப்பையும், காயத்தூளையும், மிக மிக குறைவாக போட்டோம் என்ற பெயருக்கு சிறிது மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி விடுங்கள். இப்போது சிறிது கொத்தமல்லி இதழ்களை தூவிடுங்கள். காரியமெல்லாம் முடிந்துவிட்டது, இப்போது அடுப்பையே கவனமாக பார்த்துக்கொண்டிருங்கள். ஒரே கொதிதான். கொதி வந்தவுடன் உடனே வாணலியை இறக்கிவைத்து சரியான அளவு தட்டை வைத்து இறுக்கமாக மூடிவைத்து விடுங்கள். சரியாக 5 நிமிடங்கள்தான்..

இனி இரண்டு அப்பளங்களையும், கொஞ்சம் தேங்காய் துகையலையும் வைத்துக்கொண்டு, சாதமிட்டுக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான் பாக்கி. முன்னதாக ரசத்தில் உப்பெல்லாம் சரி பார்க்க வேண்டாம். அப்படி பார்க்க நேர்ந்தால் சாப்பிடும் முன்னமே இருக்கும் ரசத்தையெல்லாம் நீங்களே உறிஞ்சிக்குடித்துவிட்டு முகம் வேர்க்க சர்வ நிம்மதியாக ஃபேன்க்கு அடியில் போய் உட்கார்ந்து கொள்வீர்கள். அப்புறம் சிறிது நேரத்தில் பசியெடுக்கக்கூடும்.

.

Wednesday, May 13, 2009

மிக்ஸ்டு ஊறுகாய் (13.05.09)

பதிவுக்கு ரெண்டு மூணு நாளு லீவு விட்டாலே அதாவது பிஸியாக இருந்தாலே எழுதுவதற்கு விஷயங்கள் சேர்ந்து போகுது, எழுதாத நாட்களிலும் வந்து எட்டிப்பார்த்துச் செல்லும் நூற்றுக்கணக்கான (இன்னும் பத்து வருஷத்துக்குள்ள ஆயிரக்கணக்கான அப்படின்னு சொல்லக்கூடிய நிலை வரும்னு நம்புறேன் மகேஷ்) உங்கள் மீது ஒரு தனி பாசமும், கொஞ்சம் கோபமும் வந்துவிடுகிறது. கோபம் எதுக்கா? பதிவு போட்டா மட்டும் நூற்றுக்கணக்கு என்பதை பத்துக்கணக்காக்கி விடுவதால்தான்.

()()()()()()()()

நண்பர்களின் படைப்புகள் பிரபல பத்திரிகைகளில் வரத்துவங்கியுள்ளதால் உள்ளூர எனக்கும் கொஞ்சம் கொலைவெறி எண்ணம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது இப்போது. ம்ஹூம்.. யாரைப்பற்றியும், எதற்காகவும் கவலைப்படத் தயாராகயில்லை நான். சரவணா அன்பைத் தொலைத்ததைப்போல நாம் இரக்கக்குணத்தைத் தொலைத்தால்தான் இது போல சிறுகதை முயற்சிகளில் இறங்கமுடியும் என்று தெரிகிறது. சிறுகதை எழுதுகிறேனோ இல்லையோ கூடிய சீக்கிரம் ‘குறும்படம் எடுப்பது எப்படி?’ என்ற பதிவைப்போல ஒரு ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பதிவு வெளியாகும் என்பது மட்டும் நிச்சயம்.

()()()()()()()()

இன்றுதான் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் இந்தத் தேர்தலில் விஜயகாந்த் அணி படுதோல்வியைச் சந்திக்கும் என்பதில் எனக்கு எள்முனையளவும் சந்தேகமில்லை. இதில் நிச்சயம் எதிரணியினரின் கூட்டுச் சதியிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. திமுகவும், அதிமுகவும் கூட்டாகத் திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன்பே விக்ரமனை தயார் செய்து மிகச்சரியாக தேர்தலுக்கு முன்பாக படம் ரிலீஸாகும் படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது கண்கூடு. இதையும் மீறி இன்று வாக்களித்துவந்த நண்பனைக்கேட்ட போது தேமுதிகவுக்கு வாக்களித்ததாய் சொன்னான். அதிர்ச்சியில் ஏன் என்று கேட்ட போது கண்ணீர் தளும்பச் சொன்னான், ‘அப்படியாவது விஜயகாந்தை சினிமாவை விட்டு துரத்திவிடமுடியாதா?’ நேற்று நானும் அவனும்தான் மரியாதை படம் பார்த்துவிட்டு வந்திருந்தோம்.

()()()()()()()()

குறுகிய காலத்திலேயே பதிவுலகில் மிக உயரம் சென்றவர், ஏற்கனவே பத்திரிகைகளில் பல்வேறு வடிவங்களில் படைப்புகள் வெளியாகியிருந்தாலும் மீண்டும் மும்முரமாக சிறுகதைப் பணிகளில் இறங்கியிருக்கிறார் இவர். வரும் விகடன் இதழில் இவரது கதை ஒன்று வெளியாக இருப்பதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கும் இவ்வேளையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத்தோழர் ‘பரிசல்காரனு’க்கு மனமுவந்த வாழ்த்துகளை நாம் இங்கே பதிவு செய்கிறோம். (வயது பிரச்சினையில் இங்கே ஒரு பனிப்போரே நிகழ்ந்துகொண்டிருப்பதால் நிஜ வயதை எழுதிவிடவேண்டாம் என்பது அவரது தனிப்பட்ட வேண்டுகோள். வேண்டுமானால் க்ளூ தருகிறேன். நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, பரிசல் தன் முதல் மகள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் குறிப்பிடத்தகுந்த ரேங்க் வாங்கிய செய்தியைக்கூற போன் செய்தார். வயதை நீங்களே கெஸ் செய்துகொள்ளுங்கள்)

()()()()()()()()

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கதவு தட்டப்படுகிறது. 8 வயதில் பக்கத்து வீட்டு பெண்குழந்தைகள் இரண்டு பேர். ‘அங்கிள், ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாட வர்றீங்கன்னு சொன்னீங்கள்ல, வர்றீங்களா இப்போ?’ வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்.

()()()()()()()()

சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!

.

Monday, May 11, 2009

ஆண்களால் உருவாகும் சமூகம் : Dr. ஷாலினி

நேற்று(10.05.09) நண்பர்களின் முயற்சியால் கிழக்கு பதிப்பகத்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை' என்ற த‌லைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கம் வெற்றிகரமானதாக அமைந்தது.
டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோர் உரையாற்றினர். ஏராளமான பதிவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிரபல பெண் பதிவர்களும் கலந்துகொண்டது கருத்தரங்கை முழுமையடையச் செய்தது. நிகழ்ச்சியைக் கருத்தரங்கம் என்பதை விடவும் இளம்பெற்றோருக்கான பயிற்சிப்பட்டறை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ருத்ரனும் ஷாலினியும் பல கருத்துகளையும், பயிற்சிகளையும் முன்வைத்தனர். மையக்கருத்தை விட்டு விலகாமல் ஷாலினி ஒரு தேர்ந்த பேச்சாளருக்குரிய லாவகங்களுடன் பேசி வியக்க வைத்தார்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் மனநிலை, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் ‘உட‌ல்’ குறித்த‌ விழிப்புண‌ர்வு, பாலிய‌ல் வ‌ன்முறையிலிருந்து காக்க‌ குழ‌ந்தைக‌ளை த‌‌யார் செய்வ‌து என‌ விரிவாக‌ நிக‌ழ்ச்சி அமைந்திருந்த‌து. ஒரே கேள்வி ப‌ல‌ கோண‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட்ட‌து, நான்கு வார்த்தைக‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ கேள்விகள் நாற்ப‌து வரிக‌ளில் கேட்கப்ப‌ட்ட‌து போன்ற‌வை சிறிது ச‌லிப்ப‌டைய‌ வைத்தாலும் இறுதியில் கேள்வி ப‌தில் ப‌குதியும் சிற‌ப்பாக‌வே நிகழ்ந்த‌து.

ஆண் குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றி Dr. ஷாலினி பேசிக்கொண்டிருந்த‌ போது சொன்ன‌ ஒரு க‌ருத்தை இங்கே பதிவு செய்வதை மிக அவசியமாய் கருதுகிறேன். அவரது பேச்சின் அடிநாதமாக ஆரோக்கியமான, வளரும் சமூகம் என்ற கருத்து இருந்தது, இது போன்ற பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை விளங்கச்செய்தது. ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். மிகுந்த‌ சிந்த‌‌னைக்குரிய‌ விஷ‌ய‌மாக‌ இது இருந்த‌து.

அப்புற‌ம் மேலும் சில‌ புதிய பதிவர்களை/ந‌ண்ப‌ர்க‌ளையும் ச‌ந்திக்கமுடிந்தது. உமாஷக்தி அக்கா, சந்தனமுல்லை அக்கா, ரம்யா அக்கா, அமித்துஅம்மா அக்கா, வித்யா அக்கா (ஒண்ணுமில்ல.. எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டது.. ஹிஹி..) போன்ற பெண் ப‌திவ‌ர்க‌ள் சிலரையும் நேரில் பார்த்து அறிமுக‌ம் செய்துகொண்ட‌து ம‌கிழ்ச்சியான‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து. நிக‌ழ்ச்சிக்கான‌ கார‌ண‌மாக‌ அமைந்த‌ அனைத்து தோழ‌ர்க‌ளுக்கும் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ வாழ்த்துகளும், ந‌ன்றிகளும்.
.

Friday, May 8, 2009

மே 8

கனவுகளில் மிதக்கும் ஒரு நாள்..

அந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது?

அலைபாயும் கூந்தல், யாரிடமும் இல்லாத உன் நிறம், அன்று நீ செய்து தந்த அந்த சிரிப்பு, கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே செல்வான் ஒவ்வொரு காதலனும். இங்கே அழகு முன்னிற்கிறது.

மடிந்திருக்கும் உன் காலரைச் சரி செய்வாள், படுக்கையில் காரணமின்றிப் புரளும் உன்னை எழுப்பிப் பசியறிவாள், ஒரு நிமிடம் ஒரு யுகமாய் காத்திருப்பாள், வலி மிகுந்த ஒரு நாளில் உறங்க மடி தருவாள், அரிதாய் காரணங்களில்லாத ஒரு அணைப்பும் ஒரு முத்தமும் உனக்குக் கிடைக்கலாம். இப்படியாக அன்பு முன்னிற்கும்.

விதம் விதமாய் அழைப்பு வருகிறது, கவிதை சொல்வதெல்லாம் பொய்யாக கண்களிலேயே கனல் தெறிக்கிறது, காற்றிலே மிதக்கும் வித்தையறிகிறேன், நூலாக அல்லது நாணாக தழைவாய் அல்லது முறுக்கேறுவாய். ஒவ்வொரு முறையும் இது புதிது, இது புதிது என அலற விடுவாய். முத்தமிடுதலின் முற்றிய நிலையையும் உன்னால் அறிகிறேன். இங்கே மோகம் முன்னிற்கும்.

இந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது?

என் கனவுகளில் மிதக்கும் இந்நாளில்..

உன்னுடன் வாழ்ந்து மடிந்தான் அவன். உன்னை வாழ்த்தி முடிக்கிறேன் நான்.

 

363763-bloody04

.

Wednesday, May 6, 2009

(ரமா தோன்றும்) ‘என்ன.. எங்கே.. எப்படி.?’

இந்த ஞாயிறுக்கிழமை வெளியே எங்கும் செல்லாமல், டிவி பார்க்காமல் நாள் முழுதும் ரமாவின் இஷ்டப்படி இருப்பதாய் வாக்கு தந்திருந்தேன் (கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த கொலைக்குத்து சண்டையில் சமாதானம் ஆகும் பொருட்டு தரப்பட்ட வாக்கு). எங்கு செல்வது, என்ன செய்வது என எதுவும் முடிவாகியிருக்கவில்லை. ஆனால் இருவரும் கிளம்பியிருந்தோம். (நீங்கள் நினைப்பது சரிதான். நான் 12 மணிக்கே ரெடியாகி ரமாவுக்காக 1.30 மணி வரை வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன் என்பதெல்லாம் மறை பொருள்ங்க.. அதையெல்லாமா ஒரு மனுஷன் எழுதிக்கொண்டிருப்பான்)

‘எந்த ஹோட்டல் போலாம்? என்ன சாப்பிடலாம் ரமாம்மா?’

‘உங்க இஷ்டம்ங்க..’

‘செட்டிநாட்? வெளச்சேரி காரைக்குடி.?’

‘இந்த ஹாட் சம்மர்ல சிக்கன், மட்டன்லாம் சரிப்பட்டுவராது..’

‘நார்த் இன்டியன்? துரைப்பாக்கம் டெல்லி தாபா?’

‘நாண், ரோட்டிலாம் எவ சாப்பிடுவா?’

‘சரி வெஜ்? அடையாறு சஞ்சீவனம்?’

‘ஐய்ய.. இப்ப யாருக்கு உடம்பு சரியில்ல, மெடிசின் சாப்பாடு சாப்பிடுறதுக்கு?’

 

‘சரி அத அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல எங்க போலாம் சொல்லு..’

‘உங்க இஷ்டம்ங்க..’

‘கிண்டி சில்ட்ரன் பார்க்?’

‘எத்தினி வாட்டி போறது அங்க.. வேற இடமே தெரியாதா உங்களுக்கு?’

‘சினிமா? சிட்டி சென்டர் இல்லன்னா, சத்யம்?’

‘சண்டே.. டிக்கெட் கிடைக்குமா? ரொம்ப கூட்டமா வேற இருக்கும்..’

‘பீச்?’

‘இந்த மதிய வெயில்ல யாரவது பீச்சுக்கு போவாங்களா? என்னங்க நீங்க.?’

 

‘சரி போற வழியில பாத்துக்கலாம். முதல்ல கிளம்புவோம். எதுல போலாம்?’

‘உங்க இஷ்டம்ங்க..’

‘பைக்?’

‘பைக்கா.. ம்ஹூம்.. முதுகு வலிக்கும்..’

‘பஸ்ல போலாமா?’

‘ஒவ்வொரு இடத்துலயும் யாரு பஸ்ஸுக்காக வெயிட் பண்றது? அதுக்கு போகாமயே இருக்கலாம்..’

‘டாக்ஸி? இல்லன்னா ஆட்டோ முருகனை கூப்பிடவா?’

‘ரொம்ப காஸ்ட்லி, வேலையிருந்தா பரவாயில்ல.. சும்மா சுத்துறதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு?’

 

‘இப்பவே ரொம்ப பசிக்குதுடி.. முதல்ல என்ன சாப்பிடலாம் சொல்லுடி..’

‘உங்க இஷ்டம்ங்க..’

 

பி.கு 1: ‘ஜேம்ஸ்பான்ட் தோன்றும்’.. ‘விவேக் துப்பறியும்’ இப்படி போடுற மாதிரி ‘ரமா தோன்றும்’னு தலைப்புலயே போட்டாதான் கூட்டம் வருது.. ஹிஹி.!

பி.கு 2: இது சமீபத்தில் வந்த ஒரு ஃபார்வேர்ட் மெயிலை லேஸாக தழுவி எழுதப்பட்ட ஒரு பதிவாகும். அதற்காக கற்பனை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.

.

Tuesday, May 5, 2009

விடுமுறைக்கால விடியோக்கள்

பொங்கல் சமயத்தில் நீண்ட விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது எடுத்த பலவிதமான விடியோக்காட்சிகளை ஒரு 5 நிமிடப் படமாக கோர்த்து வைத்திருந்தேன். திருநெல்வேலி மாவட்ட  கிராமங்களின்  துளி அழகு  இதோ உங்கள் பார்வைக்கு..

*பயப்பட வேண்டாம், இது குறும்படமல்ல..

*இது பாப்பாக்குடி எனும் எனது சொந்த ஊரில் எடுக்கப்பட்ட, சேரன்மகாதேவி மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் எடுக்கப்பட்ட இயற்கைக்காட்சிகளின் தொகுப்பாகும்.

அலுவலகங்களில் விடியோவைப் பார்க்க இயலாதவர்களுக்கான குறிப்புகள் :

பச்சை வயல்புறங்கள், மணியோசை ஒலிக்க கழனி சென்று திரும்பும் மாடுகள், நீண்டு, அடர்ந்த மரங்கள், தாமிரபரணியின் பல்வேறு நிலைகள், எல்லைச்சாமிகள், கண்மாயில் அயிரை மீன்கள் பிடிக்கும் காட்சி, வாத்து இரைதேடும் காட்சி, குரங்கு ஒன்று என் கையிலிருந்து பொரி வாங்கிக்கொள்ளும் காட்சி, வழக்கமான கொக்கு பறக்கும் காட்சிகள்.. இவற்றோடு மாட்டுப்பொங்கல் விழாவினைக்கொண்டாடும் ஒரு கிராமத்துக்குடும்பம்.

கருத்துகளை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்.

.

Monday, May 4, 2009

கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை - பாகம் 25

இனிய நண்பர்களே, முதலில் இந்தப் பதிவுக்கு வேறு தலைப்பு முடிவு செய்திருந்தாலும் இது இந்தப் பொருளில் எழுதப்படும் 25வது கட்டுரையாக சிறப்புப் பெறுவதால் மலரும் நினைவாக முதல் பதிவுக்கு வைக்கப்பட்ட அதே தலைப்பே வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வேளையில் முதல் பதிவையும், அதற்கான வரவேற்பையும் நினைத்துப்பார்க்கிறேன். இன்றிலிருந்து சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர்.. சரி சொல்லலை, இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டா எப்படி?

இன்றைய விஷயத்துக்குப் போகலாம். இது ஒரு கொசுவத்திப்பதிவு என்பதை அறிக..

எல்லா ஆண்களைப்போலவும் எனக்கும் கல்யாணத்துக்கு முன்னர் வரப்போகும் மனைவி குறித்த எந்தக் கனவும் இருக்கவில்லை. எப்படியும் சொதப்பத்தான் போகிறது, இதிலென்ன முன்னாடியே கனவு என்பதை அப்போதே ஓரளவு அறிந்திருந்தேன். ஆனாலும் சமையல் மட்டும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என விரும்பி இந்த ஒரு கண்டிஷனை மட்டும் வீட்டில் பெண்பார்க்கத் துவங்கியிருந்த போது ஸ்ட்ரிக்டாக சொல்லியிருந்தேன். (அந்த அளவு பாச்சிலர் வாழ்க்கையில் காய்ந்து போய் கிடந்திருந்தேன்) யார்தான் நாம் சொல்வதை காதில் வாங்கிக் கொள்கிறார்கள்? கல்யாணத்துக்கு மறுநாளே அந்தக்கனவு தகர்ந்தது.

சாப்பிடும் நேரத்தில், ‘என்னம்மா ரசம் மட்டும் வெச்சிருக்கீங்க.?’ என்று நான் கேட்க, அம்மா அமைதியாக விலகிப்போய்விட ரமாவைப் பரிதாபமாக பார்த்தேன்.

‘இதான்ங்க சாம்பார்..  நான் வச்சேன்.’ என்றாள் அமைதியாக.

பின் வந்த நாட்களில் பல அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தன.

*வாங்கி வந்த புதிய விகடனின் நடுப்பக்கத்தில் பஜ்ஜியை வைத்து நசுக்கினாள். (முன்பொருநாள் அட்டையில் கிறுக்கியதற்காக ஒரு நண்பனை செவிட்டிலேயே அடித்தது நினைவுக்கு வந்து தொலைத்தது)

*பீரோவில் நான் வைத்திருந்த சுஜாதா நாவல்களும், வைரமுத்து கவிதைகளும் சணலால் கட்டப்பட்டு பரணுக்கு இடம்மாற்றப்பட்டன. (அங்கே அவளது புதிய பட்டுப்புடவைகள் இடம்பிடித்தன என்பதை சொல்ல வேண்டுமா?)

*’வெயில்’ படம் பார்க்கலாம் என்று அழைத்த போது, ‘போக்கிரி’ படத்திற்கு டிக்கெட் எடுக்க வைத்தாள். (அதுக்கப்புறம் தியேட்டர் பக்கம் தலைவச்சும் நான் படுத்திருப்பேன்?)

*தோட்டத்திலிருந்த கொய்யா மரத்திலிருந்து பழுப்பதற்காக விட்டுவைக்கப்பட்டிருந்த காய்களை யாரையும் கேட்காமலே தட்டிப்பறித்து வந்தாள். (கேட்டால் பொறுப்பாக வீட்டு வேலைகள் செய்கிறேன் என்றாள்)

*ஏன் இத்தனை புத்தகங்கள் பரணை அடைச்சுக்கிட்டு இருக்குது? பழைய புக்குகாரன்கிட்ட போட்டுடவா? (நல்ல வேளையாக ஒருவார்த்தை கேட்டதால் உடனே அவளது கண்களில் படாத இடத்திற்கு புத்தகங்கள் மாற்றப்பட்டன)

*ஓர் நாளிரவில் ‘புக்கெல்லாம் படிக்கமாட்டியா ரமா?’ என்றேன். ‘படிச்சி என்ன கெடைக்கப் போவுது?’ என்றாள். (கரெக்ட்தான் என்று தலையாட்டி வைத்தேன்)

ஓர் நாள் என் சித்தி மீன் குழம்பு வைப்பதற்காக கிணற்றடியில் சுத்தம் செய்துகொண்டிருந்த போது மூக்கைப்பொத்திக்கொண்டு முன்வாசலுக்கு ஓடினாள் ரமா. நான் அதிர்ச்சியானேன். அடப்பாவிகளா? ஒரு வெஜிடேரியனை என் தலையில் கட்டிவைத்து பழிவாங்கிவிட்டார்களே என்று எல்லோர் மேலும் ஆத்திரமாகி பின் அமைதியாகி (வேறு வழி?) ரமாவை நெருங்கி, ‘என்னம்மா, இதெல்லாம் பிடிக்காதா.? நான் வெஜ் சாப்பிட மாட்டியா?’ என்றேன் பரிதாபமாக. அதற்கு அவள் வேகமாக,

‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’.

.

Friday, May 1, 2009

‘சிக்ஸ் பேக்’ வேண்டுமா?

நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்.!

நான் எனது 20 வயது வரை ஒல்லிப்பிச்சானாக இருந்ததேன். (இப்போது எப்படி என்று கேட்கக்கூடாது)  உடற்பயிற்சி செய்தால் மேலும் ஒல்லியாகிவிடுவோம் என்ற‌ ப‌ய‌த்தினால் உடற்பயிற்சி பக்கமே தலைவைத்தும் படுக்கவில்லை. தென்காசி அருகே வ‌னாந்திர‌த்தில் அமைந்திருந்தது எங்க‌ள் க‌ல்லூரி. நல்ல‌ காற்ற‌டி கால‌த்தில் தெம்பான‌ மாண‌வ‌ர்க‌ளே மேல்காற்றில் சாலையிலிருந்து க‌ல்லூரிக்கு 500 மீட்ட‌ர்தான், செல்ல‌ சிர‌ம‌ப்ப‌டுவார்க‌ள். என்னைப்போலுள்ள‌வ‌ர்க‌ள் நான்கைந்து பேராய் கையைப்பிடித்துக்கொண்டுதான் செல்வோம். ஒரு நாள் புளிய‌ம‌ர‌த்தைக் க‌ட்டிப்பிடித்துக்கொண்டு அரைம‌ணி நேர‌ம் கிட‌ந்த‌தெலாம் த‌னிக்க‌தை. ச‌ரி, இந்த‌ க‌ல்லூரிக்க‌தையை பிரிதொரு ச‌ம‌ய‌ம் சுவார‌சிய‌மாக (கள்ளு குடித்த அனுபவத்துடன்) பார்க்க‌லாம். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

மேலும் ப‌டிப்பு ப‌டிப்பு என்று இருந்துவிட்ட‌தாலும் (ஏழு பேப்ப‌ர்ஸ் அரிய‌ர்ஸ்) உட‌ற்ப‌யிற்சி ப‌ற்றிய‌ கவ‌ன‌மே இல்லாது போய்விட்ட‌து. விளையாட்டில் எனது ஆர்வமோ அதைவிட பிரமாதமாக இருந்தது. எறி பந்தோ, கில்லி தாண்டோ, பின்னர் கிரிக்கெட்டோ எனக்கு மிக ஆபத்தான விளையாட்டாக பட்டது. பின்னர்  வேலை வேலை என்று இருந்துவிட்ட‌தாலும் உட‌ற்ப‌யிற்சியைக் க‌வ‌னிக்க‌முடிய‌வில்லை.

ஒருவ‌ழியாக சென்னை வந்து அம்ப‌த்தூரில் கொஞ்ச‌கால‌ம் செட்டிலான‌ போது உட‌லின் மீது க‌வ‌ன‌ம் வ‌ந்த‌து. என்ன‌டா இன்னும் நாப்ப‌து கிலோவை தாண்ட‌வில்லையே.. ஒரு பிக‌ரும் திரும்பிக்கூட‌ பார்க்க‌மாட்டேங்குதே என்ற‌ க‌வ‌லை. ஹார்டை வுடு ம‌ச்சான், பீர்தான் உட‌ம்புக்கு ந‌ல்ல‌து என்ற‌ ந‌ண்ப‌னின் அறிவுரைப்ப‌டி பிய‌ர‌டிக்க‌த்தொட‌ங்கியும் ஒரு முன்னேற்ற‌த்தையும் காண‌வில்லை. அதன் பின்னர்..

யோகா

பின்ன‌ர் யோகா ப‌ண்ணினா ந‌ல்ல‌தாம்டா, உடம்பு தேறுமாம் பதஞ்சலி முனிவரே சொல்லிருக்காராம்டா என்று க‌ண்ண‌ன் சொல்ல‌ ந‌ம்பி இருவ‌ருமே பாடியிலுள்ள‌ ஒரு பெரிய‌வ‌ரிட‌ம் யோகா கிளாஸ் சேர்ந்தோம். அவ‌ருடைய‌ பெரிய‌ தொப்பையைப் பார்த்த‌வுட‌னே ச‌ந்தேக‌ப்ப‌ட்டேன், அது போல‌வே ஒரு ஆச‌ன‌த்தையும் அவ‌ர் செய்து காண்பிக்க‌வில்லை. மாறாக‌ புக்கைப்பார்த்து எங்க‌ளை செய்ய‌ச்சொல்லி பார்த்துக்கொண்டார். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் காலையில் ஆறு ம‌ணிக்கே வ‌ர‌ச்சொல்லி ப‌டுத்திவிட்டார். 15 நாட்க‌ளில் எங்க‌ளின் யோகா முடிவுக்குவ‌ந்த‌து.

ஜிம்

தொட‌ர்ந்து ஜிம் செல்வ‌து என்றும் அங்குள்ள பயிற்சியாளரிடம் நம் தேவையை சொல்லி அதற்கு தகுந்த உடற்பயிற்சியை செய்வது என்றும் தீர்மான‌மாயிற்று. உட‌னே ம‌ண்ணூர்பேட்டையிலுள்ள‌ ஒரு ஜிம்மில் இணைந்தோம். புதிதாக‌ ஷார்ட்ஸ், ஷூக்க‌ள் எல்லாம் வாங்கியாயிற்று. இங்கும் எங்களுக்கு காலை ஆறு மணி ஸ்லாட்டே தந்தார்கள். அல்லது மாலை ஏழு மணிதான் என்றார்கள். மாலையில் உடற்பயிற்சி செய்யலாமா என்ற சந்தேகத்தினை கேட்டுத்தீர்த்துக்கொண்டவுடன் மாலை நேரத்தையே தேர்ந்தெடுத்தோம். ரொம்ப‌ ஆர்வ‌த்துட‌ன் முத‌ல் நாள் சில‌ ப‌யிற்சிக‌ளை செய்தோம். ம‌றுநாள் காலைதான் எழுந்திருக்க‌ முடியாம‌ல் தொடையும் தோள்ப‌ட்டையும் விண் விண்ணென்று தெறித்த‌து. ப‌டிக‌ளில் இற‌ங்க‌முடிய‌வில்லை. முத‌ல் நாள் இப்ப‌டித்தான் இருக்குமாம், இருப்பினும் தொட‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌த்தில் மேலும் மூன்று நாட்க‌ள் சென்றோம். அவ்வ‌ள‌வுதான், நாலே நாள், ஜிம் இனிதே நிறைவ‌டைந்த‌து.

அதிகாலை ஓட்ட‌ம்

ஜிம்முக்காக‌ வாங்கிய‌ ஷூக்க‌ளை அவ்வ‌ப்போது பார்த்துக்கொள்வேன். எந்த‌ உட‌ற்ப‌யிற்சியைவிட‌வும் நீச்ச‌லும், ஓட்ட‌மும் மிக‌ச்சிற‌ந்த‌து என‌ ஒருநாள் ம‌ப்பில் க‌ண்ண‌ன் சொற்பொழிவாற்ற‌‌ புல்ல‌ரித்து ம‌றுநாளே காலையில் ஓடுவ‌து என்று தீர்மான‌மாயிற்று. எங்கே ஓடுவ‌து? அம்ப‌த்தூர் எஸ்டேட் குறுக்குச்சாலைக‌ள் சிற‌ப்பான‌வை. ஆனால் நாய்க‌ளுட‌ன் ந‌ம‌க்கு ஏற்க‌ன‌வே அனுப‌வ‌ம் இருக்கிற‌தே. என‌வே MTH சாலையிலேயே லூகாஸ்டிவிஎஸ் வரை ஓடுவ‌தென்று முடிவாயிற்று. ஆனால் ஆறு ம‌ணிக்கு மேல் ஓடினால், ம‌க்க‌ள் ச‌ந்தேக‌த்தில் விர‌ட்டிப்பிடிக்க‌க்கூடும் என்ப‌தாலும், டிராபிக் தொல்லை இருக்குமென்ப‌தாலும், உட‌ல்ந‌ல‌த்துக்காக‌ எந்த‌ தியாக‌த்தையும் செய்ய‌லாம் என்று முடிவு செய்து அதிகாலை 4.30க்கு ஆர‌ம்பித்து 5.30க்குள் வ‌ந்துவிடுவ‌தென்றும் தீர்மானித்தோம். அத‌ன் ப‌டி முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிப்போய் வ‌ந்தோம். மூன்றாம் நாள் 4.15 க்கு அலாரம் என்னவோ அடிக்கத்தான் செய்தது. ஆனால் நாங்கள் எழுந்த போது மணி 5.00. இருப்பினும் மனம் தளராமல் தேவர் ஒயின்ஸ் வரை ஓடிவிட்டு வந்தோம். நான்காம் நாள் கண்ணன், லேசா முடியல இன்னிக்கு ஒருநாள் லீவு உட்டுரலாம் என்றான். நானும் அந்த வார்த்தைக்குதான் காத்திருந்தவன் போல சந்தோஷமாக தலையாட்டிவிட்டு மகிழ்ச்சியாக எட்டு மணி வரை தூங்கி மகிழ்ந்தேன். அன்றோடு முடிந்தது அதிகாலை ஓட்டம்.

ஸ்கிப்பிங்

ஓடுவதிலுள்ள அத்தனை லாபங்களும் ஸ்கிப்பிங்கிலும் உள்ளது என்ற அரிய உண்மையை அடுத்து நாங்கள் கண்டுபிடித்தோம். மேலும் இதில் பல பிளஸ் பாயிண்டுகளும் உண்டு. ஜிம்மைப்போல பணம் கட்ட வேண்டாம், ஓட்டத்தைப்போல அதிகாலை எழுந்திருக்கவேண்டாம். பாதியில் வேன்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம் (ஓட்டத்தில் முடியாது, லூகாஸுக்கு போய் விட்டால் திரும்பிவர வேண்டுமே) நேரமும் நம் வசதியைப்பொறுத்தது, முதலில் வெளியே போக‌ வேண்டிய‌தில்லை. மாடியிலேயே வேண்டுமானால் ரூமுக்குள்ளேயே கூட செய்து கொள்ள‌லாம். முத‌லில் இருப‌து, முப்ப‌து என்று ஆர‌ம்பித்து இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்குள் ஆயிர‌ம் வ‌ரை போய்விட‌வேண்டும் என்று தீர்மான‌மான‌து. தேடிப்பிடித்து இர‌ண்டு ஸ்கிப்பிங் க‌யிறுக‌ளையும் வாங்கிவ‌ந்தோம். இந்த‌ உட‌ற்ப‌யிற்சி இடையிடையே லீவு விட்டுக்கொண்டு சு‌மார் ஒரு மாத‌ம் வ‌ரை செய‌ல்ப‌ட்டு பின்ன‌ர் நிறைவு பெற்ற‌து.

ஷ‌ட்டில் காக்

பின்ன‌ர் தீவிர‌மாக‌ சிந்தித்த‌ போது, வெறும் உட‌ற்ப‌யிற்சியாக‌ நாம் சிந்திப்ப‌தனால்தான் விரைவில் போர‌டித்துவிடுகிற‌து ப‌திலாக‌ சுவார‌சிய‌மான‌ விளையாட்டாக‌வும் அது இருந்தால் ந‌ன்றாக‌ இருக்கும் என்று சித்த‌ம் தெளிந்தோம். ப‌க்க‌த்து அறை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் விவாதித்தோம். உட‌ற்ப‌யிற்சியின் அவ‌சிய‌த்தை அவ‌ர்க‌ளுக்கு எடுத்துரைத்து அவ‌ர்க‌ளும் ஈடு ப‌ட்டால் ம‌ட்டுமே இது சாத்திய‌மாகும் என‌வும் கேட்டுக்கொண்டோம். (ஏனெனில் பேட்ஸ், வலை, பந்துகள் என பணம் சம்பந்தப்பட்டிருக்கிறதே.!) ச‌ம்ம‌திக்க‌வில்லை எனில் தண்ணிய‌டிப்ப‌து ச‌ம்ப‌ந்த‌மான‌ எந்த‌ வித‌மான‌ கொடுக்க‌ல் வாங்க‌லும், ஒத்துழைப்பும் நிறுத்த‌ப்ப‌டும் என்றும் எச்ச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்திட்டார்க‌ள். என்ன‌ விளையாட‌லாம் என‌ விவாதித்த‌போது கிரிக்கெட் என்று ஆர‌ம்பித்த‌ ஒருவ‌ன‌து மூக்கிலேயே குத்தி ஷ‌ட்டில் காக் என்று முடிவுசெய்தோம் (ஆப‌த்து குறைவாச்சே, ப‌ந்து மேலே ப‌ட்டாலும் வ‌லிக்காது). பின்ன‌ர் அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளில் ப‌ல‌த்த‌ வேலைப்ப‌ளு. ப‌க்க‌த்து காலிமனையை அனும‌தி வாங்கி (குப்பையும், முள்ளு மரமுமாய் இருப்பதைவிட இடம் சுத்தமாக இருக்கும் என்பதால் அவர்களுடைய குட்டிப்பையனையும் விளையாட சேர்த்துக்கொள்ளவேன்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தார்கள்) முள்ளுவெட்டுதல், சுத்த‌ப்ப‌டுத்துத‌ல், பணம் வசூலிப்பு, உப‌க‌ர‌ணங்கள் ப‌ர்சேஸ் என‌ ப‌ய‌ங்க‌ர‌ பிஸி. மூன்றாம் நாள் விளையாடத்துவங்கினோம், எப்ப‌டி விளையாடுவ‌து என்ற‌ விதிமுறைக‌ள் தெரியாத‌தால் நாங்க‌ளே வ‌குத்துக்கொண்டோம். இதில்‌ ஓர‌ள‌வு வெற்றி பெற்று சுவார‌சிய‌ம் தொற்றிக்கொள்ள‌ ம‌கிழ்ச்சியாய் விளையாட‌த்துவ‌ங்கினோம். ஆனால் சோதனையாக பொங்க‌ல் விடுப்பு வர‌ ஒரு 10 நாள் ஊருக்கு சென்றேன். ப‌ல‌ரும் சென்றார்க‌ள். திரும்பிவ‌ந்த‌போது எங்க‌ள் ஷ‌ட்டில் கோர்ட்டில் பில்டிங் க‌ட்டுவ‌த‌ற்கான‌ வான‌ம் தோடும் ப‌ணி துவ‌ங்கியிருந்த‌து.

அந்த சமயத்தில்தான் அதுவரை நான் சென்னையில் பார்த்திராத கிடைக்காத ஒரு அரிய விஷயமான ‘சுவையான’ உணவை இரண்டு தெரு தள்ளி புளியங்குடிகாரர் ஒருவர் நடத்திக்கொண்டிருந்த ஒரு மெஸ்ஸில் கண்டுபிடித்தோம். அதன் பின்னர் மூணு நேரமும் மூக்குப்பிடிக்க தின்பதே என் ஒரே உடற்பயிற்சியாயிற்று. அதுதான் இப்போதைய எனது சிக்ஸ் பேக் உடலுக்குக் (இப்போ இருப்பதுபோல) காரணம் என நினைக்கிறேன்.

கொஞ்ச‌ நாள் க‌ழித்து கேர‌ம் போர்ட் வாங்க‌லாம்டா, டைம் பாஸாகும், கேர‌ம் விளை‌யாண்டா விர‌லுக்கு ந‌ல்ல‌தாம் என்ற‌ க‌ண்ண‌னை நான் கொலைவெறிப்பார்வை பார்த்தேன். ‌

டிஸ்கி : தொடர்ந்து லீவு நாட்கள் வந்தா இப்படித்தான் மீள்பதிவெல்லாம் வரும்.. கண்டுக்காதீங்க..

.