Tuesday, June 30, 2009

அழுக்கின் அழகு

அழுக்கின் அழகு (விகடனில் வந்த கதை)

ண்ணாடிகளே சுவராகப் பதிக்கப்பட்டு, பிரமாண்டமாக எழுந்து நின்றது அந்தப் பத்து மாடிக் கட்டடம். முகப்பில் இருந்த ஆங்கிலப் பெயர்ப் பலகை, அது ஒரு மென்பொருள் நிறுவனம் என்பதைக் கூறியது. அதன் இடப்புற வாசலில், இன்னும் கட்டட வேலைகள் நிறைவு பெறாமல் தொடர்ந்து கொண்டு இருந்தன. ஆண்களும் பெண்களுமாக செங்கல் லையும், சிமென்ட்டையும் கட்டடமாக உருமாற்றிக்கொண்டு இருந்தனர்.


இந்தப் பக்கம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி நேரம் துவங்கியிருந்தது. பிரதான வாசலில் கார்களும் பைக்குகளுமாகக் கடந்துகொண்டு இருந்தன. அடையாள அட்டைகள் ஊசலாட, காதுகளில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பொருத் திய அழகிய யுவன்களும் யுவதிகளும் பரபரப்பாக நடை பயின்றுகொண்டு இருந்தனர்.


ஸ்வப்னா இறுக்கமான ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அதைக் காட்டிலும் இறுக்கமான வெள்ளை நிற டாப்ஸ் அவளது அழகை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஜீன்சுக்கும் டாப்சுக்கும் இடையே இரண்டு விரற்கடை அகலத்தில் அழகு 'இடை'வெளி. காலில் கறுப்பு நிற ஹைஹீல்ஸ். சுருள் தலைமுடியை பாண்ட் செய்திருந்தது அவளுக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தந்தது. ஸ்லீவ்லெஸ் என்பதால் வழவழப்பான கைகளும், பளபளப்பான முகமும், 'ஒன்ஸ்மோர் பார்க்கலாமா மச்சான்?' என்று இளசுகளைச் சுண்டி இழுத்தன. ஸ்வப்னாவுக்கு எந்தக் குறையும் இல்லாத அழகில், அருகில் ஜீன்ஸ் குர்தா வர்ஷா.


“என்ன ஸ்வப்ஸ், இன்னிக்கு ஜொலிக்கிறே... என்ன விசேஷம். டாப்ஸ் புதுசா?”


“நத்திங் ஸ்பெஷல். டாப்ஸ் ஓ.கே-வா?" சிரித்தாள்.


“கிளாஸ்! நெக் ரொம்ப நெருக்கமா இருக்குது. இன்னும் கொஞ்சம் இறக்கமா இருந்தா, சூபர்ப். பசங்க தெறிச்சு ஓடிடுவாங்க!"


"அப்படியா சொல்ற... பண்ணிடலாம்!" - கண்ணடித்தாள். இருவரும் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந் தனர்.


அதே நேரம் இடதுபுறம் கட்டட வேலை நடந்துகொண்டு இருந்த தலத்தில்... நைந்து அழுக்கான சேலையில் இருந்தாள் சாந்தி. அவள் தலையில் கிழிந்த சாக்குத் துணி சும்மாடும், கைகளில் செங்கல் சட்டியும், கால்களில் பிய்ந்த ரப்பர் செருப்புகளும்... உடம்பு முழுக்க சிமென்ட்டும், செங்கற்தூளும் அப்பியிருந்தன!


"அண்ணே... செங்கல் சட்டியைத் தலைக்கு மேலே வெச்சுக்கிட்டு, ரெண்டு கையாலயும் பிடிச்சுத் தூக்கிட்டுப் போவ ஒரு மாதிரியா இருக்குது. சுத்தியும் ஆம்பளைங்களா இருக்காங்க. நாளைக்கு வீட்லேர்ந்து நானே எடுத்துட்டுவந்தி டுறேன். இன்னிக்கு ஒருநாள் மட்டும் மேல போட்டுக்கிடறதுக்கு ஒங்க பழைய சட்டை எதுனா இருந்தா குடுங்கண்ணே" - மேஸ்திரியிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் சாந்தி.


********


நன்றி : விகடன், ஓவியத்துக்காக திரு.ஷ்யாம்.

(பி.கு : சென்ற வார விகடனில் வெளியான இந்தக்கதை இதுவரை படித்திராத நண்பர்களுக்காக இங்கே மீண்டும். அப்புறம் இன்னொரு விஷயம்.. விகடன் நெட் பின்னூட்டங்களில் இந்தக்கதை குறித்து சூடான விவாதம் நிகழ்ந்தது, ஸாஃப்ட்வேர் பெண்களை இந்தக்கதை அவமதிப்பதாக. அதுகுறித்து எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமலே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸாஃப்ட்வேர் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ, சித்தாள் பெண்களனைவரும் சரியானவர்களென்றோ இந்தக்கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அது போன்ற எண்ணம் நமக்கும் இல்லையென்பதையும் இங்கே பதிகிறேன். அதையும் மீறி எதிர்வினையாற்றித்தான் தீருவேன் என்பவர்கள் ஆற்றலாம். அப்படியாவது நானும் ரவுடியாகிக்கொள்கிறேன்.)

Wednesday, June 24, 2009

சாக்லெட் நிற வீடுகள்

நான் இந்த பெரிய சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அலுவலைப் பொறுத்த வரையில் இதுவரை ஆறு நிறுவனங்கள் மாறியாயிற்று (மொத்தத்தில் நான் இப்போது பார்ப்பது 10வது வேலை). வீடுகளைப் பொறுத்தவரை பாச்சிலராக இருந்தவரை ஒரு நான்கு முறையும், அதன் பின்னர் ஒரு மூன்று முறையும் என ஏழு முறை மாறியாற்று. எனவே மாற்றம் என்பது என‌க்கு ஒன்றும் புதிதல்ல.

நிரந்தரமில்லாத பாச்சிலர் வாழ்க்கையில் மாறும் அறைகள் குறித்து 'மிதக்கும் அறைகள்' என்று எஸ்ரா (தானே?) எழுதியது நினைவுக்கு வருகிறது. அதில் அந்த வாழ்வின் அவலங்கள் மிகச்சிறப்பாக பதியப்பட்டிருக்கும். சரி நமது கதைக்கு வருவோம்.

இந்த முறை வீடு பார்ப்பது என்று முடிவானது சென்ற டிசம்பரில். ஜனவரி 1ல் நிறுவனம் புதிய முகவரியில் இயங்கும் என்று முதல் அறிவிப்பை சென்ற வருடம் துவக்கத்திலேயே அறிவித்துவிட்டார்கள். ஜூலை 1 ஆகியும் இன்னும் முடிவானபாடில்லை. அது சரி, தக்கணூண்டு வீடு மாற்றுவதற்கே நமக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. இதில் ஒரு பெரிய நிறுவனத்தையே சொன்ன நேரத்தில் ஷிப்ட் செய்வதென்றால் ஆவுற கதையா? எத்தனை மிஷின்ஸ், எவ்வளவு பனையளவு பிரேக்கர்ஸ், உதிரி பாகங்கள்.. போன மாதம் இயக்குனர் கூப்பிட்டு (என்னை மட்டுமாங்கிறீங்களா.. சேசே.. எல்லோரையும்தாங்க. ஹிஹி..) "க‌ர‌ண்ட் இருக்கோ இல்லையோ, உட்கார‌ சேர் இருக்குதோ இல்லையோ அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணித்தான் ஆவுணும். ஜூலை 1ந்தேதி போற‌து போற‌துதான். ம‌று பேச்சு கிடையாது மூச்.!" என்று கூறிவிட்டார். மறு பேச்சுமுள‌தோ? அத‌ன்பிற‌குதான் மூட்டை முடிச்சுகளை க‌ட்டும் வேலை தீவிரமாக‌ ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து. என்ன‌ விளையாடுறீங்க‌ளா? நா என்ன‌ க‌ம்பெனி ஷிப்ட் ப‌ண்ற‌தைப் பற்றியா சொல்றேன்னு சொன்னேன். எதைச்சொன்னாலும் கேட்டுக்கொண்டிருப்பீர்க‌ளே. வாங்க, வீடு பார்த்த‌ க‌தையைப் பார்க்க‌லாம்.

ஆக‌வே சென்ற‌ ஏப்ர‌ல் க‌டைசியிலிருந்தே வீடு பார்க்க‌த்துவ‌ங்கிவிட்டேன். முதலில் கண்ணனின் உதவியுடன் நானே ச‌னி ஞாயிறுக‌ளில் களத்தில் இற‌ங்கினேன். ந‌ம‌க்கு இந்த‌ அனுப‌வ‌ம் புதிதில்லை என்றுதான் முன்ன‌மே சொல்லிவிட்டேனே.. புரோக்க‌ர்க‌ளுட‌ன் சில‌ விரும்ப‌த்த‌காத‌ அனுப‌வ‌ங்க‌ள் இருப்ப‌தால் அதை நாம் விரும்புவ‌தில்லை. சிட்டியின் தொல்லைக‌ள் விட்டு வெளியே போக‌ப்போகிறோம் என்ற‌ ம‌கிழ்ச்சியில் கொஞ்ச‌ம் உற்சாக‌த்துட‌னே தேட‌ ஆர‌ம்பித்தேன்.

வித‌ம்வித‌மான‌ வீடுக‌ள். கொஞ்ச‌ம் அவுட்ட‌ர் என்ப‌தால் புரோக்க‌ர்க‌ளின் திருவிளையாடல் ந‌டைபெறாம‌ல் 'டூ லெட்' போர்டுக‌ளை நிறைய‌ காணமுடிந்த‌து. வீட்டிற்கு எங்காவ‌து சாக்லெட் நிற‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? இது போன்ற‌ அதிசய‌‌ங்க‌ளெல்லாம் ந‌ம‌க்குதான் ஸ்பெஷ‌லாக‌ நேரும் என‌ நினைக்கிறேன். சாக்லெட், பிங்க், ப‌ச்சை, சிவ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் என‌ அனைத்து நிற‌ங்க‌ளிலும் வீடுக‌ள். என்ன ஒரு ர‌ச‌னை.? நான் அப்பாவியாக‌ வெள்ளை நிற‌ வீடுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். வெள்ளை நிறத்தில் இருந்த‌ வீடுக‌ளோ கூடுக‌ள் என்று சொல்ல‌லாம் என்ப‌து போல‌ இருந்த‌ன‌. இந்த‌ முறை தீவிர‌மாக‌ இருந்தேன். கொஞ்ச‌ம் விசால‌மான‌, காற்றோட்ட‌மான‌ வீடு பார்த்தே தீருவ‌து என்று. இத்தனை நாட்கள் வாழ்ந்த ஒதுக்குப்புற‌மான‌, மிக‌ ஒடுக்க‌மான, காற்றில்லாத‌ என்று ம‌ன‌மே ஒடுக்க‌மாகிவிட்ட‌தோ என்ற‌ ப‌ய‌மே வ‌ந்துவிட்ட‌து.

பெரும்பாலான‌ வீடுக‌ள் முத‌லில் காம்ப‌வுண்ட் சுவ‌ருட‌ன் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ வீடாக‌ இருந்து பின்ன‌ர் பணத்தாசையால் வீட்டுச்சுவ‌ர்க‌ள் காம்ப‌வுண்டுட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டு L ஷேப் போர்ஷ‌ன்க‌ளாக‌ மாறியிருந்த‌ன‌. வித‌ம்வித‌மான‌ விதிமுறைக‌ள், நீங்க‌ள் அறியாத‌தா என்ன‌.? சில‌ வீடுக‌ளில் இருந்த‌து பெட்ரூமா அல்ல‌து பெட்ரூம் ஒன் பை டூவா தெரிய‌வில்லை. ஒரு வீட்டில் கிச்சன் சிறிதாக இருந்தது. 'வருஷம் பூரா ரமாவிடம் பாட்டு வாங்க நீ தயாரா?' என்று கண்ணன் பயமுறுத்தினான். வீடு ஓர‌ள‌வு ந‌ன்றாக‌ இருந்தால் சூழ‌ல் ப‌டு மோச‌மாக‌ இருந்த‌து, ஏதாவ‌து ஒரு ப‌க்க‌ம் அந்த ஏரியாவின் மொத்த‌ குப்பைக்கிட‌ங்கு, அல்ல‌து சாக்க‌டை.. இப்ப‌டி. அல்ல‌து நாம் டிந‌க‌ரில் வீடு பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்று திகைக்க‌வைக்கும் வாட‌கை.

ஒரு வீட்டில் எல்லாம் பேசி முடித்தபிறகு, 'சொந்தக்காரங்க அடிக்கடி வருவாங்களா? வந்தா தங்குவாங்களா?' என்ற கேள்வியும் தொடர்ந்த சில கருத்துகளையும் கேட்டபோது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வந்து இரண்டு நாட்கள் தங்கிச்செல்லும் என் பெற்றோர் நினைவுக்கு வந்தனர். அவர்களை விரட்டிவிடுமளவுக்கு என் மனம் இன்னும் பக்குவமடையவில்லையாதலால் அங்கிருந்து நடையைக்க‌ட்டினேன்.

இவ்வாறான‌ சூழ‌லில் வ‌லைத்தோழ‌ர் மூல‌மாக‌ கிடைத்த‌ ஒரு வீடு ம‌ன‌ம‌கிழ‌ச்செய்த‌து அனைத்து வ‌கைக‌ளிலும். என்ன ஒன்று.. அமைதியான கிராமத்துக்குப் போகப்போகிறோம் என்ற என் எண்ணத்தில்தான் கொஞ்சம் பிசகு. பழைய பெருங்களத்தூர் சிட்டியாக மாறி ரொம்ப நாளாகிறது என எண்ணுகிறேன். பகல் நேரத்தில் சாலையைக் கடக்கமுடியாதபடிக்கு அவ்வளவு டிராபிக். அதுசரி, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாலும் நமக்கு என்ன நடக்கும் தெரியாதா.?

ஆனால், வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?

.

Tuesday, June 23, 2009

நீங்கள் எப்போது புத்தகம் படிப்பீர்கள்?

அலுவலகக் கேண்டீனில் கம்ப்ளெயிண்ட் புக் என்று ஒரு வஸ்து இருக்கிறது. இதைப்போல பல இடங்களில் நாம் கேள்விப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அது பயன்படுத்தப்படாமல் வெறும் ஃபார்மாலிடிக்காகத்தான் இருக்கும். இங்கே அது செவ்வனே கவனிக்கப்படுகிறது என்று சமீபத்தில்தான் அறிந்தேன். ஒருநாள் சாப்பிட்டு ‘முடித்து’விட்டு அந்த புக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல தயிர் புளிப்பு, சாதம் வேகவில்லை, குழம்பில் உப்பில்லை, பழம் பழுக்கவில்லை போன்ற கமெண்டுகளைத்தாண்டி விதவிதமான சுவாரசியமான கமெண்டுகளையும் பார்க்கமுடிந்தது. சிலர் குறைகள் மட்டுமின்றி காரணமும் எழுதியிருந்தனர். ‘உளுந்துமாவு சரியாக அரைக்கவில்லை, ஆகவே இட்லி நன்றாகவே இல்லை’, ‘சாம்பார் என்றால் அதில் பருப்பு போடவேண்டும்’ இப்படியாக செல்கிறது அது. மறக்கமுடியாத இன்னொன்று, ‘பரோட்டா மிகவும் உறுதியாக உள்ளது’

***

பொருட்களின் பெயரை அவசரத்தில் மாற்றிச்சொல்வது என்பது நமது பேக்குத்தனத்தின் ஸ்பெஷல். சமீபத்திய உதாரணங்கள் : வீடு மாற்றும் களேபரத்தில் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை கழற்ற தம்பியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. ‘அந்த இன்ஸுலேட்டரை கழற்றி பத்திரமா வைய்யி’ (இன்ஸுலேட்டர் அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை). அடுத்து புதிய வீட்டில் மாட்டிய லைட் எரியாததால் அதை நோண்டிக்கொண்டிருந்த தம்பியிடம் அடுத்த அறிவுரை, ‘முதல்ல லைட்டரை வெச்சு கரண்ட் வருதா செக் பண்ணிக்க..’

***

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில் பெருங்குடி டாஸ்மாக்கில் எதையோ (மளிகைச்சாமான்னு சொன்னா நம்பவா போறீங்க..) வாங்குவதற்காக, அதுவும் மாலை 5.30 பீக் நேரத்தில் நின்றுகொண்டிருந்தபோது கண்ட காட்சி. கிட்டத்தட்ட சாக்கடை போலிருந்த அருகாமை குப்பை மேட்டில் நடுத்தர மதிப்பில் ஒருவர் மல்லாக்கப் படுத்துக்கிடந்தார். கிக் தெளிந்து எழும் நேரம் போலிருக்கிறது. கண்கள் இன்னும் விழிக்காவிட்டாலும் கால் மேல் கால் போடப்பட்டு ஸ்டைலாக கால் ஆடிக்கொண்டிருந்தது. கைவசம் காமிரா இல்லாமல் போய்விட்டது.

அதே நிகழ்ச்சியில் பாட்டிலுக்காக கூவிக்கொண்டிருந்தபோது கூட்டம் நெரித்துத் தள்ளிக்கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து மிக பாவமாக ஒரு குரல், “அண்ணாச்சி, ரொம்ப தாகமா இருக்குது.. ஒரே ஒரு பீர் குடுங்களேன்”. எங்காவது கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த குசும்பு பிடிச்சவரா இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

***

புதிய வீட்டில் இன்னும் கேபிள் மற்றும், இன்டெர்நெட் இணைப்பு வராததால் உருப்படியாக புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது ஆரம்பித்திருப்பது 'கால்டுவெல்'லின் திருநெல்வேலி சரித்திரம். முடித்தால் அதுகுறித்து ஒரு பதிவு போடலாம். முடிக்கிறேனா பார்க்கலாம்.

***

அன்பு நண்பர்களே.. உங்களில் பலர் உங்கள் வலைப்பூக்களில் எனது வலைக்கான இணைப்பைத் தந்திருக்கிறீர்கள். எனது முகவரியில் மாற்றமிருப்பதால் அவற்றில் கிளிக் செய்யும் போது இணைப்பு கிடைப்பதில்லை. இணைப்பின் முகவரியை சரி செய்து தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன். தொடரும் உங்கள் மேலான அன்புக்கு நன்றி. மேலும் நான் தந்துள்ள இணைப்புகளில் நீங்கள் உங்கள் தளத்தில் புதிய இடுகைகள் ஏற்றும் போது விரைந்து அப்டேட் ஆவதில்லை, இதுபோலவே நீங்கள் தந்துள்ள இணைப்புகளில் எனது புதிய இடுகைகளும் விரைந்து அப்டேட் ஆவதில்லை. என்ன பண்ணுவது என தெரியாமல் ‘முழித்துக்’கொண்டிருக்கிறேன்.

***

பி.கு : தொடர்ந்து ஒரே பெயரில் தொடர்பதிவு எழுதுவது போரடிப்பதால் (அவியல், குவியல் என நல்ல பெயர்கள் சிக்காததால் எப்படி போட்டு வாங்குகிறேன் பார்த்தீர்களா?) மிக்ஸ்டு ஊறுகாயும் இந்தப்பதிவிலிருந்து தவிர்க்கப்படுகிறது. இனி லேபிளில் மட்டுமே 'தொகுப்புப்பதிவு' என குறிக்கப்படும் (ரொம்ப முக்கியம்.!).

.

Friday, June 19, 2009

ஒரு மழைநாள் இரவு

சாமித்துரை, மூன்றாவது ரவுண்டைக் கையில் எடுத்தபோது நேரம் மாலை 7 மணி. அவன் கண்களில் வெறுப்பு பொங்கி வழிந்துகொண்டிருந்தது.

செம்பா அன்போடு கேட்டான், "போதும்டா, வீட்டுக்கு போவேண்டாமா? இதுக்கு மேலன்னா அம்மா கண்டுபிடிச்சிருவா"

"இல்ல மாமா, நா இன்னிக்கி கடைலயே படுத்துக்கிடுதேன்"

செம்பா உண்மையில் சாமித்துரையின் மாமா அல்ல. நண்பன். அவர்களுடன் அமர்ந்து மிக அமைதியாக மதுவருந்திக் கொண்டிருந்த மூக்காண்டியும் சேர்த்து மூவரும் அமர்ந்திருந்த இடம் மூக்காண்டிக்குச் சொந்தமான ஸ்டேஷனரி ஸ்டோர்ஸின் உட்புறம். ஷட்டர் முக்கால் பாகம் சார்த்தப்பட்டிருந்தது. ஞாயிறு ஆனதால் கடையை ஆறுமணிக்கெல்லாம் மூடிவிட்டு உட்புறமாக காரியத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

குற்றாலத்தில் பருவம் தீவிரமாக இருந்ததால் அன்றைய சாரல், சிறுமழையாகியிருந்தது வெளியே. ஷட்டரின் திறந்திருந்த கீழ்ப்பாகம் வழியே சாரல் உள்ளே வந்துகொண்டிருந்தது. ஷட்டருக்கு அருகேயிருந்த சில நோட்டுப்பார்சல்கள் மெலிதாக நனையத் துவங்கியிருந்தன. அதைக்கண்டதும் செம்பா மூக்காண்டியை நோக்கினான்.

"சட்டர புல்லா இழுத்துவுட்டுறவா மாப்ள.?"

நிஜத்திலும் மூக்காண்டி, செம்பாவின் சகோதரியை மணந்த மாப்பிள்ளைதான்.

"வேணாம். பொகை உள்ளயே சுத்தப்போவுது. அந்தப்பார்சல உள்ளதள்ளி இழுத்துப்போடு" இழுத்துப் போட்டுவிட்டு மீண்டும் வந்தமர்ந்து அவனது கிளாஸை கையில் எடுத்துக்கொண்டு சாமித்துரையை பார்த்தான்.

"என்னல இவ்ள டல்லா இருக்கே? ஏதா பிரச்சினையா?"

பதில் ஏதும் தோன்றாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் சாமித்துரை. பின்னர் மெதுவாக "ரொம்ப பிரச்சின பண்றார் மாமா அவுரு, ரொம்ப கஷ்டமா இருக்கு".

மீண்டும் அனைவரிடமும் அமைதி நிலவியது. செம்பாவே அமைதியை உடைத்தான்.

"உடுறா.. அப்படி என்ன பிரச்சின பண்றாரு? ரூவா பிரச்னைதான.. பாத்துக்கலாம். எவனுக்குதான் பிரச்னை இல்ல? மாப்ளய பாரு. இப்பதான் ஏதோ கட கொஞ்சம் ஓடிட்டிருக்குது. ஆனா பாரு பஸ்ஸ்டாண்ட மாத்தப் போறானுங்களாம். இங்க ஒரு நாதி வராது. என்ன பண்றதுன்னு முழிச்சிகிட்டிருக்கான். சமாளிப்பம்டா.. என்ன ஆயிரப்போவுது? உனக்கு ரிஸல்ட் அடுத்தமாசம் வந்திரும்ல. பெங்களூர்ல எங்க மச்சான்கிட்ட சொல்லிவெச்சிருக்கேன். வேல ஒடனே கிடைச்சிரும். அப்புறம் அம்மா, அக்கா ரெண்டே பேருதான? சமாளிச்சிரலாம். அந்தாளு எப்பிடியும் போறாரு.. உட்டுத்தள்ளு. இப்ப என்ன இப்பிடி மூஞ்சிய தூக்கி வெச்சுக்கிட்டிருக்கவா இங்க உக்காந்து தண்ணியடிச்சிக்கிட்டிருக்கோம்? வேறெதுனா பேசிக்கிட்டிருப்போம். வீட்டுக்கு ராத்திரி வரமாட்டேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டயா? ஆமா, அந்த புள்ள போன வாரம் கடைக்கு வந்தாளாமே.. உன்னிய பாக்குணும்னு சொன்னாளாம்.. மாப்ள சொன்னான். அப்ப நா இல்ல. பாத்தியா அவள.? என்ன சொன்னா? அதப்பத்தி சொல்லு முதல்ல..

" அவள் என்று செம்பாவால் குறிப்பிடப்பட்ட பெண் சாமித்துரையுடன் ஒன்றாக படித்த லலிதா. அவளைப்பற்றிய பேச்சு வந்ததும் கொஞ்சம் ஆறுதலாக தோன்றியது சாமித்துரைக்கு. ஆனால் அதிலும் பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சியான செய்தி ஒன்றுமில்லை அவனிடம்.

"போ மாமா, அதிலயும் பிரச்சினதான். மூக்காண்டிண்ணே முதல்லயே சொன்னான். ஒரே வயசுப்புள்ளய பாக்காதடா பிரச்சின வரும்னு. நா கேக்கலியே.. இப்ப அவ எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கிறா? எனக்கு என்ன மாமா வயசாவுது. அடுத்த மாசம் வந்தா 21 ஆவும். வீட்டு நிலம எப்பிடியிருக்குன்னு உனக்கே தெரியும். இப்ப போயி கல்யாணம்கிறா.. கேட்டா வீட்ல மாப்பிள பாக்கிறானுங்களாம். அழுவுதா.. என்ன பண்றதுன்னே தெரியல."

இப்போது மூக்காண்டி பேசினான்.

"ஏண்டா.. நல்லது சொன்னா எவன் கேக்குறிங்க? இப்ப அந்தப்பிள்ளைக்கு என்ன வயசாவுது.? உன்னியவிட ரெண்டு மாசம் மூத்தவ.. நீ இன்னும் வேலைக்கி போயி செட்டிலாயி உக்கார அஞ்சி வருசமாவது ஆயிரும். வடகரக்காரன் இதுவரைக்கும் அவள கல்யாணம் பண்ணிக்குடுக்காததே பெரிய அதிசியம். அதுவரைக்கும் அவள வீட்ல வச்சிக்கிட்டிருப்பான்னு நினைக்கிறியா? இதென்ன மெட்றாஸா? வேலைக்கி போயிகிட்டு அதுவரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கதுக்கு. இல்ல நீதான் பசவுள்ள பார்ட்டியா? இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு. இங்க உன் டப்பாவே டான்ஸாடிக்கிட்டிருக்குது.. போடா போக்கத்தவனே"

"என்னண்ணே இப்பிடிச்சொல்லுத.." உடைந்த குரலில். "வாயில ஏதா வந்துரும் பாத்துக்க. ஒழுங்கா மருவாதியா சொல்லுதத கேளு. அவள அவங்கப்பன் பாக்குற மாப்பிளயக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போவச்சொல்லு. நீ வேலைக்கிப்போயி உருப்புடுத வழியப்பாரு.. சும்மா லவ்வு கிவ்வுன்னு இளுவிக்கிட்டிருந்தீங்கன்னா, எங்கிட்ட வராதிங்க சொல்லிப்புட்டேன்"

சாமித்துரையின் கண்கள் லேசாக பனித்தன. செம்பா, மூக்காண்டியைப் பார்த்து,

"என்ன மாப்ள சத்தம்போடுத? சின்னப் பய.. எடுத்துச்சொன்னா கேட்டுக்கிடுவான், மெதுவாச்சொல்லு. அவுனுக்குத் தெரியாதா?"

மீண்டும் அவர்களிடையே அமைதி சூழ்ந்தது.நான்கு நாட்களுக்கு முன்னர் இதே இடத்தில் கையைப்பிடித்துக்கொண்டு மௌனமாக அழுதவளின் முகம் சாமித்துரையின் நினைவில் அலைபாய்ந்தது. அவனது பனித்த கண்களிலிருந்து தளும்பி ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டது.

"என்னல இது பொட்டப்புள்ள மாதிரி அழுதுக்கிட்டிருக்கான், இது சரிப்படாது. நா வீட்டுக்கு கிளம்புதேன், குமாரு வேற இல்ல இவன ஒத்தேல வெச்சிட்டு நீ போயிராத.. நீயும் இவங்கூடயே கடைல படுத்துக்கோ. பத்துமணிக்கு பாய் கடையை மூடுறதுக்கு மின்னாடி போய் சாப்பிட்டுட்டு வந்துருங்க, போம்போது சொல்லிட்டு போறேன்" என்று மூக்காண்டி, செம்பாவை நோக்கி சொல்லிக்கொண்டே கிளம்பினான்.

“இரு மாப்ள, அதுக்குள்ள கிளம்புறியே” என்று செம்பா, மூக்காண்டியை நோக்கி சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் ஒலித்தது.

எடுத்துப்பேசிய மூக்காண்டி அடுத்த விநாடியே, ரிசீவரை பொத்திக்கொண்டு, சாமித்துரையை நோக்கி சைகை காட்டியவாறே மெலிதாக ‘அவுருதான்..’ என்றான். கல்லூரி விட்டால் வீடு அல்லது இந்தக்கடை இதைத்தவிர சாமித்துரை வேறெங்கும் போவதில்லை என்பதால் கடைக்கு அவனுக்கு போன் வருவது சகஜம்தான். ஆனால் வீட்டிலிருந்து போன் அவசியமில்லாமல் வராது. ரிசீவரை வாங்கி பேசினான்.

“சொல்லுங்க..” என்றும் “ம்..” என்றும் பெரும்பாலும் அமைதியாகவும் பேசிக்கொண்டிருந்தவன் முடிக்கும் போது சிறிது கோபத்துடன், “உங்களுக்கு வேறென்ன வேலை.. தாராளமா செஞ்சுக்கோங்க.. நாங்க நிம்மதியா இருப்போம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

“என்னடா என்ன சொல்லுதாரு” என்று அவனைக் கேட்டான் மூக்காண்டி.

“அவுரு கெடக்காரு விடுண்ணே, நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்பறமா போயேன்”

மனதை மாற்றிக்கொண்ட மூக்காண்டி மீண்டும் அமர்ந்து அடுத்த ரவுண்டுக்கான தனது கிளாஸை நிரப்பத்துவங்கினான். மீண்டும் பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு சாப்பிடுவதற்காக அவர்கள் பாய் கடைக்கு வந்த போது மணி பத்தாகியிருந்தது. தூறல் இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியாத அளவில் மிக மெலிதாக இருந்தது. நல்ல குளிரை உணரமுடிந்தது. இவர்களுக்காகவே எடுத்து வைத்திருந்த பரோட்டாக்களை காதிர்பாய் மீண்டும் கல்லில் அடுக்கி சூடுபண்ணத் துவங்கினார். அதனுடன் மட்டன் சுக்கா. சாப்பிட்டுவிட்டு மூக்காண்டி கிளம்புகையில் இருவரையும் நோக்கி,

“நா கெளம்புறண்டா.. ரொம்ப நேரம்பேசிக்கிட்டு உக்காந்துராதீங்க, போய் படுங்க. காலையில 8 மணிக்கெல்லாம் வந்துருவேன். 7 மணிக்கெல்லாம் கடை தெறந்து வைங்க, நா வந்தப்புறம் போங்க.. என்னா..” என்று கூறிவிட்டு தனது பைக்கில் கிளம்பினான்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆளுக்கொரு சிகரெட் பிடித்துவிட்டு கடைக்கு வரவும் மீண்டும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

இந்தமுறை போனை எடுத்த சாமித்துரை போனை வைக்கும் போது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் பரவ செம்பாவை நோக்கினான். அவன் கேட்கும் முன்பே சொல்லத்துவங்கினான்.

“அப்பா.. மருந்தக் குடிச்சிட்டாராம்.. முத்தண்ணே போன் பண்றாரு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிட்டுருக்காங்களாம்..” விழிகள் திடுமென நீரைக் கோர்த்துக்கொண்டன.

“என்னல.. சொல்லுத.?” அதிர்ந்த செம்பா பரபரப்பானான்.

“கிளம்பு கிளம்பு.. எந்த ஆஸ்பத்திரினு கேட்டியா? மாப்ளைக்கு சொல்லணுமே, இன்னும் வீட்டுக்கு பெயிருக்கமாட்டான், அங்கன போய் போன் பண்ணிக்கிடலாம்” கடையை விறுவிறுவென பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினர். சாமித்துரை எந்நேரமும் அழத்தயாராக இருந்தான். செம்பா வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே,

“ஒண்ணும் ஆயிருக்காது. சும்மா எதுக்கெடுத்தாலும் இளுவிக்கிட்டிருக்கக்கூடாது. என்ன வந்தாலும் பாத்துப்புடணும், தைரியமா இருலே..

” வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த சாமித்துரை தவறிழைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்விலும், தந்தை மீதான உள்ளிருந்த பாசம் வெளியான நிலையிலும் அலைபாய்ந்து கொண்டிருந்தான். கடைசியாக தான் அப்படிப் பேசியிருக்கக்கூடாதோ? எத்தனைமுறை இப்படி மிரட்டியிருக்கிறார்.. இந்தமுறை இப்படி பண்ணிக்கொண்டுவிட்டாரே? அவர் சொல்லவந்ததை இன்னும் காதுகொடுத்து கேட்டிருக்க வேண்டுமோ? அவர் இல்லாமல் இனி என்ன செய்வது? அம்மா? அம்மாவை நினைத்துக்கொண்டதும் அழுகை பொங்கியது. அவர் செய்ததெல்லாம் மட்டும் நியாயமா? ஒன்றா இரண்டா.. ஐந்து லட்சத்துக்கு கடன் வாங்கி குடி, சீட்டாட்டம் எனத் தொலைத்தது.. கடன் தொல்லையில் மனைவி பிள்ளைகள் என்ன கதியானார்கள் என்று பார்க்காமல் ஒரு வருடம் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் ஓடிப்போய் பின்னர் திரும்பி வந்தது.. இடைப்பட்ட காலத்தில் கந்தமாமா மட்டும் இல்லாமலிருந்தால் என்னவாயிருக்கும்? சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போயிருக்கும். செம்பாவும், மூக்காண்டியும் இல்லாமலிருந்தால் இவன் படிப்பைத்தான் முடித்திருக்க முடியுமா? அக்கா திருமணம் குறித்து கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருப்பாரா? எத்தனை கடன்காரர்கள் வீட்டுக்கே வந்து தெருவே கேட்கும் படி கத்தி அவமானம் செய்துவிட்டுப்போனார்கள்? இப்போது இப்படி.. என்ன செய்வது? மனம் நொந்து போயிருந்தான் சாமித்துரை. பத்தாம் வகுப்புக்கு முன்னர் இருந்த வாழ்க்கையை நினைத்துப்பார்க்கிறான். எப்படி இருந்த அப்பா.? ஏன் இந்த வாழ்க்கை இந்த நான்கு வருடங்களில் இப்படி மாறிப்போனது? அவர் செய்த தவறுகளால் மட்டும்தானா? வண்டி அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

திகாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு அருகேயிருந்த அடைக்கப்பட்டிருந்த டீக்கடையின் வெளியில் கிடந்த பெஞ்சில் சாமித்துரை முழங்காலை மடித்து கால்களில் முகம் புதைத்து அமர்ந்திருந்தான். சாரல் இப்போது வலுக்கத்துவங்கியிருந்தது. அருகே கொஞ்சம் தள்ளி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தனர் செம்பாவும், மூக்காண்டியும். அப்போது இரவு ரோந்து வந்துகொண்டிருந்த போலீஸ் ஜீப் இவர்களைக்கண்டவுடன் மெதுவாகி சாமித்துரை பக்கம் வந்து நின்றது.

அதிலிருந்த இன்ஸ்பெக்டர் அருகிருந்த கான்ஸ்டபிளிடம், ‘இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டிருக்கானுவோ இங்க? குடிச்சிருக்கானுவளா பாரு.. வண்டியில ஏத்து’ என்று கூறியவாறே இவனை நோக்கி,

“எலேய்.. வா இங்க..” என்றார்.

சாமித்துரை தலையை தூக்கிப்பார்த்துவிட்டு மீண்டும் தலைகவிழ்ந்தான்.

“கூப்புட்டும் உக்காந்திருக்கதப் பாத்தியா.. அவன இழுத்துட்டு வா” என்றார் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை நோக்கி. அதற்குள் ஜீப்பை நோக்கி ஓடி வந்த மூக்காண்டி இன்ஸ்பெக்டரிடம் மெதுவாக சொன்னான்.

“ஒண்ணுமில்ல சார், அவுங்கப்பா போயிட்டாங்க. பாடி வீட்டுக்குள்ளதான் இருக்குது. சொந்தக்காரங்கல்லாம் இனிமதான் வரணும். என்ன பண்றதுனு தெரியல.. அதான் வாசல்ல உக்காந்திருக்கோம்..”

மழை இன்னும் வலுக்க ஜீப் மெதுவாக நகரத்துவங்கியது. .

('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)

Tuesday, June 16, 2009

தங்கமணி பதிவுகள் : ஒரு மீள்பார்வை

அண்ணன் பினாத்தல் சுரேஷ், அண்ணன் ச்சின்னப்பையன் மற்றும் ப‌ல முன்னோர்கள் காட்டிய வழியில் நாம் தொடர்ந்து இயக்கப்பணிகளை செவ்வனே நடாத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். இருப்பினும் இடைக்காலத்தில் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதுகாறும் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, அதில் உள்ள குறைபாடுகளைக் களைந்து இயக்கத்துக்கு மறுமலர்ச்சி ஊட்டவேண்டிய நேரம் இது என்பதை நாம் உணர்கிறோம். சங்க உறுப்பினர்கள் கொள்கைகளை மூச்சாக கொண்டு வெற்றிக்காகவும், விடுதலைக்காகவும் தொடர்ந்து ஓயாது உழைக்கவேண்டும் என்பதையும் இங்கே நாம் நினைவுறுத்துகிறோம்.

இதுகாறும் ஆற்றிய சாதனைகளை நினைவுகூர்வது, இரண்டாம் கட்டத்துக்கு பணிகளை வீச்சு குறையாமல் எடுத்துச்செல்லவே என்பதையும் நாம் அறிவோம். சமூகத்தின் வளர்ச்சிக்கு தூண்களாக இருக்கும் இளைஞர்கள் திருமணம் என்ற மாயையில் சிக்குவதில் இருந்து காக்கும் பொருட்டு 'திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை' என்ற தலைப்பில் இதுவரை நாம் 28 பதிவுகளை பதிந்திருக்கிறோம். இதுவ‌ரை இந்த‌ப்ப‌திவுக‌ளுக்கு ம‌ட்டுமே சுமார் 1200 பின்னூட்ட‌ங்க‌ளைப் பெற்றிருக்கிறோம்.

முதல் பதிவு ஜூலை12, 2008ல் 'கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -1' என்ற‌ த‌லைப்பில் வெளியான‌து. ஒரு புதிய‌ ச‌காப்த‌ம் கண்முன்னே உருவாவ‌தை கண்ட இளைஞ‌ர்க‌ள் அன்றே சுத‌ந்திர‌க்காற்றை சுவாசிக்கும் தூர‌ம் அதிக‌மில்லை என்ப‌தை உண‌ர்ந்த‌ன‌ர். தொட‌ர்ந்து எச்ச‌ரிக்கைகள் தொட‌ர்ந்த‌ன‌. எச்ச‌ரிக்கை 3'ல் இளைஞர்களின் மதுச்சுதந்திரம் எப்ப‌டியெல்லாம் பாதிக்க‌ப்ப‌டுகிற‌து என்ப‌தை உண‌ர்ந்தோம். பின்ன‌ர் தொட‌ர்ந்து திரும‌ண‌மாகிவிட்டால் வேறு வ‌ழியில்லையாத‌தால் அவ‌ர்க‌ளை கொஞ்ச‌மேனும் ஒரு குண்டூசி முனையள‌வாவ‌து திருத்த‌முடியுமா என்ப‌தையும் க‌ண்டோம்.

உண்மையைக் க‌ண்முன்னால் க‌ண்ட‌ இளைஞ‌ர்க‌ள் 'ஷோகேஸ் ம‌னைவிக‌ள்' ப‌டித்து அதிர்ந்து பின் தெளிந்த‌ன‌ர். பின்ன‌ர் ஓர் நாள் ஒரு பிர‌ப‌ல‌ எதிர்க‌ட்சி உறுப்பின‌ரின் ப‌திவுக்கு எதிர்ப‌திவு எழுதிய‌போது ('என் ர‌மாவுக்கு') நாடே கொந்த‌ளித்த‌து. அது ச‌ங்க‌ப்ப‌ணிக‌ள் உச்ச‌த்தில் இருந்த‌ பொற்கால‌ம். இதையும் மீறி க‌ல்யாண‌ம் ப‌ண்ணித்தான் கொள்வேன் என்று வெறி பிடித்த‌ இளைஞ‌ர்க‌ளுக்காக‌ நாம் 'பெண் பார்ப்ப‌து எப்ப‌டி' என்று வ‌ழிகாட்டினோம். பின்ன‌ர், நாம் போடும் ப‌ட்ஜெட் எப்ப‌டி சித‌றுகிற‌து? ந‌ம‌து வீட்டு ஷாப்பிங் லிஸ்ட் எப்ப‌டி இருக்கிற‌து? மூணு க‌ல்லு கிரை‌ண்ட‌ர் எப்ப‌டி வாங்குவ‌து? என்றேல்லாம் பார்த்தோம். இந்த காலகட்டத்தில்தான் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இளைஞர்கள் திருமனத்துக்குப் பின்னாலிருக்கும் உண்மை நிலையை உணர்ந்து அதிர்ந்து நின்றனர். நாடே ஸ்தம்பித்தது. புரட்சிகள் வெடித்தன.

மீண்டும் ஓர் நாள் அதே எதிர்க‌ட்சி ப‌திவ‌ர் எழுப்பிய‌ கேள்விக‌ளுக்கு 'ப‌தில் கேள்விக‌ள்' கேட்ட‌போது ப‌திவுல‌க‌மே அதிர்ந்த‌து. அதன் பின்னர் வெளியான‌ 25 வ‌து வெள்ளிவிழா ப‌திவு பெரும் வெற்றி பெற்ற‌து. அத‌ன் பின்ன‌ர்தான் ப‌ணிகளில் சிறிது தொய்வு ஏற்ப‌ட்ட‌து. இதோ மீண்டும் வெகுவிரைவில் புதிய புதிய திட்டங்களுடன் இரண்டாம் கட்ட போரை நாம் துவக்க இருக்கிறோம் என்று எதிரிகளுக்கு சூளுரைப்போம். நாம் தோல்விக‌ளில் இருந்து பாட‌ங்க‌ள் க‌ற்போம். மீண்டும் வீறு கொண்டு எழுவோம் என்ப‌தை இந்த‌ உல‌குக்கு ஓங்கி ஒலித்துவிட்டு இந்த உரையை நிறைவு செய்கிறேன். ஜெய் ஹனுமான்.!

உஸ்ஸ்ஸ்ஸ்.. சோடா குடுங்க‌ப்பா.!

Thursday, June 11, 2009

நன்றி நாஞ்சில் மரியதாஸ்.!

வாடகைக்கான வீடு தேடி இடது புறம் விளம்பரம் கண்டிருப்பீர்கள். இதை வைக்கும் போதே கொஞ்சம் அவநம்பிக்கைதான். பரந்துபட்ட உலகம் பூராவுமே வலைப்பூக்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கையை நீங்கள் அறிவீர்கள். இதில் குட்டியூண்டு சென்னையின் வெளிப்புறப்பகுதியில் வாழ்பவர்களின் உதவி நாடி வைக்கப்பட்ட ஸ்கோப் குறைவான ஒரு விளம்பரம்.

உண்மையில் இன்ப அதிர்ச்சி. இதுவரை ஐந்து ரெஸ்பான்ஸ்கள். அனைவரின் பெயர்களையும் கூறி சங்கோஜப்படுத்தாமல், உதவி வெற்றிகரமாக முடிந்த நாஞ்சில் நாதம்மரியதாஸின் பெயரை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்கிறேன். மெயிலுக்கு வந்து பின்னர் நேரில் சந்தித்த மரியதாஸ் சுட்டிக்காட்டிய அவரது குடும்பநண்பர் ஒருவரது வீடு எனக்கு மிக திருப்தியாக அமைந்தது.

இத்தனை வருட சிட்டி வாழ்க்கையின் இரைச்சல், நெருக்கடி இன்னபிற துன்பங்களிலிருந்து விடுதலை பெற எண்ணியிருந்தேன். பாச்சிலராகவும், குடும்பஸ்தனாகவும் இதுவரை வாழ்ந்த வாழ்வதற்குரிய வீடுகளாக இல்லாமல், கழிப்பதற்கான வீடுகளாக அமைந்த சூழலை எண்ணிப்பார்க்கிறேன். சிட்டியை விட்டு ஒரேயடியாக விலகிடவும் இல்லாமல், அதே நேரம் கிராமங்களுக்குரிய சூழலும் அமையாதா என எண்ணியிருந்தேன். பசுமரங்கள் சூழ, சிட்டி கல்ச்சர் இன்னும் தாக்கியிறாத, வசதியான ஒரு அழகிய வீடு கனவாகவே இருந்தது. இந்த சென்னை வந்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளைக் கடந்தபின்னர் நான் நினைத்த அத்தனை அம்சங்களுடன் ஒரு அழகிய வீடு அமைய காரணமாக அமைந்த நாஞ்சில் மரியதாஸுக்கு இங்கே என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நட்புகளைத் தந்த இந்த வலையுலகம், நாஞ்சிலைப்போன்ற இன்னும் முகம் தெரியாத நல்ல வாசக உறவுகளையும் தந்ததை எண்ணியெண்ணி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சி உங்களுக்கும் உரியது.

(இதில் வருத்தமான செய்தி ஏதெனில் நாஞ்சில் இவ்வளவு காலம் வலையுலகை கவனித்து வந்ததாகவும், இனி தானும் எழுதவிருப்பதாகவும் கூறியதுதான்.. ஹிஹி..)

புதிய வீடு, புதிய நிறுவனம் (அதாம்ப்பா பிளாண்ட்), புதிய மகிழ்ச்சி எனும் இவ்வேளையில் புதிய டெம்ப்ளேட், புதிய தளம் என வலைப்பூவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. என்ன புதுமை என்றாலும் வற்றாத புலம்பல்களுடன் அடுத்த பதிவு முதல் நீங்கள் சந்திக்கவிருப்பது www.aathi-thamira.com ல் என்ற செய்தியுடன் விடைபெறுகிறேன். நன்றி.

.

மிக்ஸ்டு ஊறுகாய் (11.06.09)

(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) நான் நடுவில் நின்றுகொண்டிருக்க சுற்றி பரிசல், வெண்பூ, கேபிள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
‘அவ்வ்.. பரிசல், உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ “26”
‘.. வெண்பூ, உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ “32”
‘.. கேபிள், உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ “94”
“ஆக, மொத்தமா சேத்து 152 பக்கமா... ச்ச்சீயேர்ஸ்..!”

ஹேப்பி விகடன் டே.! மேற்குறித்த நண்பர்கள் அனைவரும் குறித்த பக்கங்களை இந்த வார விகடனில் ஆக்ரமித்திருக்கிறார்கள். (யாரும் வாழ்த்துகள்னு பின்னூட்டம் போட்டீங்க.. பிச்சு..பிச்சு.! வாழ்த்து வாழ்த்துன்னு சொல்லி எழுதறவங்களுக்கும், படிக்கிறவங்களுக்கும் ரொம்ப போரடிக்குது. புதுசா ஏதாவது சொல்லுங்க பாக்கலாம்.)

$$$$$$$$$$

அட லூஸே..

ஏந்தான் எனக்கும் லூஸுக்கும் இப்படி ஒரு பொருத்தமோ தெரியவில்லை. ஆபிஸில் எனது போன் கனெக்ஷன் லூஸ். ஒயரை பிடிச்சிக்கிட்டே பேசணும். இருக்கிற சுமார் 60 சிஸ்டம்களில் எனது நெட்வொர்க் கேபிள் மட்டும் லூஸ். என்னடா இன்னிக்கு ஒரு மெயில் கூட வரலியே.. நிம்மதி என நினைத்தால்.. சரசரவென வீட்டுக்கு கிளம்புற நேரத்துல பத்து, பதினஞ்சு மெயில்கள் வந்து தலை கிறுகிறுக்க வைக்கிறது. நான் பிரிண்ட் கொடுத்தா மட்டும் வரவே வராது. பிரிண்டருக்கு பின்னால் கேபிளை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கவேண்டும். வீட்டுக்கு வந்தா போன் சார்ஜ் போட்டா ஏறவே ஏறாது. சார்ஜர் ஒரு லூஸு. படம் பார்க்கலாம்னு பிளேயர்ல ஒரு டிவிடியை போட முயற்சித்தால் ஓபனே ஆகாது. ஒரு வழியா ஓபனாகி போட்டுவிட்டாலோ திரும்ப வெளியே வரவே வராது. நைட்ல பாத்ரூம் லைட்ட போட்டா எரியவே எரியாது. சுச்சு போர்ட்ல குத்துகுத்துனு குத்தணும். காலையில வெளிய கிளம்பினா, இந்த ஆட்டோ லாக் பூட்டியே தொலைக்காது.. சை.!

$$$$$$$$$$

கைக்குழந்தையுடன்
நீ பேசிக்கொண்டிருந்தால் கூட
அது
‘பே..’ வென உன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி.?

$$$$$$$$$$

புரிதல் என்பதுதான் எத்தனை பெரிய விஷயம் இந்த வாழ்க்கையில்? இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ளாமல் வேலைகளை இழந்திருக்கிறேன். நட்புகளை இழந்திருக்கிறேன். காதலை இழந்திருக்கிறேன். இன்னும்.. இன்னும்.! உணர்வுகளை.. எண்ணங்களை வெளிப்படுத்த வார்த்தைகளில்லாமல் தேடித்தேடி கண்டு கொண்டு போதாதோ என்ற சந்தேகத்துடனே சேதி சொல்கிறேன். உங்களுக்கு பல சமயங்களில் புரிவதில்லை. புரியும் நேரங்களிலும் என் மீதான நம்பிக்கையில்லை உங்களுக்கு. அவற்றை உதறித்தள்ளுகிறீர்கள். மிகுந்த சோர்வாக உணர்ந்து பேசாமலே இருந்துவிடுகிறேன் பல சமயங்களில்.

$$$$$$$$$$

திருமணங்களுக்கு செல்கையில் பைத்தியம் பிடிக்காத குறைதான், என்ன கிஃப்ட் வாங்கிச்செல்லலாம் என்று. கொஞ்ச நாள் நைட் லாம்ப், கடிகார வகைகளை வாங்கிச்சென்ற போது, ‘அட பேக்கு, அது ஒண்ணுத்துக்கும் உதவாது. கொஞ்ச நாளில் பரணுக்குப்போய்விடும், அப்புறம் பழைய பிளாஸ்டிக்காரனுக்கு’. அப்புறம் புத்தகங்கள் தரலாம் என்ற ஐடியா. படித்த புத்தகங்களை (பழையது என்பதால்) தரமுடியாது. படிக்காத புத்தகங்களையும் (எப்படிப்பட்ட புத்தகம் என்பதே தெரியாமல்) தரமுடியாது. புதிய புத்தகங்களை படிக்காமல் தரவும் மனமிருக்காது. அப்புறம் ஏற்கனவே படித்த ஆனால் புதிய புத்தகங்கள் என முடிவாகி அதை கொஞ்ச காலம் தரத்துவங்கினேன். அதை வாங்குபவர்கள் படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் எனில் என்னவாகும் என்பதை அறிந்து அது நிறுத்தப்பட்டது. அப்புறம் மொய் எழுதப்பட்டது. ‘ஏண்டா பணம் குடுத்து அவங்களை அவமானப்படுத்துறீங்க.?’ என்று மொய் எழுத கையில் காசில்லாத ஓர் நாளில் கண்ணன் தத்துவம் பேச அதுவும் போச்சு. இன்னிக்கு ஒரு திருமண ரிசப்ஷனுக்கு சென்ற நான் வித்தியாசமாக திங்க் பண்ணி (மணமகன் கம்ப்யூட்டர் அதிகமாக புழங்குபவர் என்பதால்) பிளாங்க் டிவிடிக்கள் செட் ஒன்றை வாங்கி பரிசளித்தேன். எப்படி ஐடியா? புதிய ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.

.

Monday, June 8, 2009

"பிரபல" பதிவர் யாராவது இருக்கீங்களா?

அன்பு அத்திரி,

இந்தப்பதிவின் உள்ளீடு புரிந்துகொள்ளாத சிலரால் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தாலும், உங்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்படவில்லை, வெறும் நகைப்புக்காக என்றும் எடுத்துக்கொள்ளமுடியாது. அந்தத்தொனியில் நீங்கள் எழுதவும் இல்லை.

ஆகவே, சில விளக்கங்கள் சொல்லவிரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் இந்தத்தொடருக்கு அழைத்த அந்த இன்னொரு பதிவர் நான்தான். மாற்றுக்கருத்துகளைக்கூறும் போது பெயர் சொல்லப்பட்டிருக்கவேண்டும். நீங்கள் குறிப்பிடவில்லை. இங்கே (வலையுலகு) யாரும் ‘பிரபலம்’ என்ற சொல்லுக்கு நிஜமான வரையறையை வகுத்துவிடமுடியாது. விருப்பமிருந்தால் ஒரு மாதம் இயங்காமல் இருந்தாலே போதும், இருந்த இடம் தெரியாமல் விலகிப்போய்விடலாம். எழுத்து என்பதைத்தாண்டி நட்பை முக்கியமாக கருதி வலையுலகில் இயங்குபவர்களும் அதிகம், ஒத்த ரசனையுள்ள நட்பு கிடைப்பதால்.

மிகச்சுவாரசியமாக எழுதி வலையுலகில் கோலோச்சி பின்னர் இதை விடுத்துச்சென்றோர் பலர். படைப்புகள், பத்திரிகைகள், சினிமா என்று அடுத்தக்கட்ட நிஜ ‘பிரபலம்’ என்ற வார்த்தைக்கான இடத்தை நோக்கிச்செல்லும் உண்மையான நோக்கமும் சூழலும் இன்று எனக்குத்தெரிந்து மிகச்சிலருக்கே இருக்கிறது. பிறர் சில காலத்தில் சோர்வுற்று விலகிப்போவார்கள். என்னைப்போல குடும்பம், வேலைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் எதையாவது எழுதி புகழடையமுடியுமா? என்பதே பலரது நோக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் எழுத்தில் எந்த சாதனையையும் (என்ன பெரிய சாதனை? சாதனை? நாலு கதைகள் பத்திரிகைகளில் வருவது) செய்வது மிகுந்த கடினமான ஒன்றே. எந்தப்பிரிவில் நாம் இருக்கிறோம் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் சக தோழர்களை/ நட்புகளை புதியவர்கள் மற்றும் பிரபலமில்லாதவர்கள் என்ற காரணங்களுக்காக ஒதுக்கும் துர்மனம் எங்களுக்கு இல்லை என்றே நம்புகிறேன்.

நான் கேபிள் சங்கருக்காகவும், அப்துல்லாவுக்காகவும் சேர்த்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறெந்த புதிய பதிவரைவிடவும் எங்களுடன் அதிகமாக நேரில் நட்பு கொண்டுள்ளீர்கள். குடும்பம் மற்றும் வேலைச்சூழலை நன்கு உணர்ந்தவர். நாங்கள் யாரையும் புதியவர், ஏற்கனவே பிரபலமானவர் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை எனவும் அறிவீர்கள். அப்துல்லா எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிடுகிறாரோ இல்லையோ, பல புதியவர்களின் பதிவுகளை வாசித்து நன்றாக இருக்கும் போது பின்னூட்டமிடுகிறார். மெயிலில்/ போனில் அழைத்து பிறரும் அவற்றை படிக்க சிபாரிசு செய்கிறார். இது ஊரறியாதது. நாம் டீம், டீம் என்று சொல்கிறோமே, நமக்கு பின் வந்தவர்கள் யாருமே உருப்படியாக எழுதவில்லையா? என்ன திமிர் நமக்கு? நன்கு எழுதுபவர்களை நம் டீமில் இணைத்துக்கொள்ளவேண்டும். டீம் விரிவு படவேண்டும் என்று நர்சிமும், பரிசலும் ஓர் சந்திப்பில் தெரிவித்தார்கள்.

வாரம் ஒருமுறை வரும் விகடன் இதழையே படிக்கமுடியாமல் நேரமின்மையால் தவிர்த்துவருகிறேன். அந்தளவுக்கு பதிவுக்கு முக்கியத்துவம் தருகிறேன். ஏன்? புகழ் ஆசைதான். நேரமின்மையால் இங்கு இதுபோன்ற பல குழப்பங்கள் நேரலாம். மேலும் இந்தப்பிரச்சினையை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் நேரமின்மையால் அப்துலும் கேபிளும் ஒத்திப்போட்டிருக்கலாம். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டபடியால் பெயர் குறிப்பிடுவதில் தவறு நிகழ்ந்திருக்கலாம். முற்றிலும் அவர்கள் தவிர்த்திருந்தாலும் அதில் எந்த தவறும் இருந்திருக்கமுடியாது. நான் இந்தப்பதிவில் விருப்பமில்லை என்பதை உங்களிடம் தெரிவித்துவிட்டுதான் அதை திசைதிருப்பும் வண்ணம் நகைச்சுவையாக மாற்றியெழுதினேன். அதிலும் எனது அழைப்பை கார்க்கி ஏற்கவில்லை. அது எனக்கு என்ன மரியாதைக்குறைவா? மீண்டும் இந்தத்தொடரை எழுதும்போது அவரையேதான் அழைத்திருந்தேன். அதில் பாஸிடிவோ / நெகடிவோ எந்த உள்நோக்கமும் கிடையாது. இன்று அப்துல் வித்தியாசமாக பண்ணுகிறேன் பேர்வழி என்று ‘நான் சாதித்தபின் பதில் சொல்கிறேன்’ என்று சொல்லி வெறும் கேள்விகளை மட்டும் பதிவிட்டு இந்தத்தொடரை எழுதிய அனைவரையும் ‘பேஸ்த்’ அடிக்கச்செய்திருக்கிறார். அவருக்கு கண்டிப்பாக போனில் ‘டோஸ்’ உண்டு.

நான் அழைத்து எழுதாமல் இவ்வளவு நாட்களுக்குப் பின் பிறர் அழைத்து எழுத என்ன காரணம்? நான் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் எழுத என்ன காரணம்? எங்க ‘ரேஞ்ச்’ பதிவர்கள் அழைத்ததாலா? என்பதுதானே உங்கள் கேள்வி? எல்லோரும் எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து ஏற்படும் ஒரு ஆர்வம்தான். வேறெந்த உள்நோக்கமும் இல்லை. இந்தப்பதிவு ‘போர்’ என்ற என் சொந்தக்கருத்திலும் மாற்றமில்லை.. இதை நான் இந்தத்தொடரை எழுதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பரிசலின் பதிவில் பின்னூட்டமாகவும் தெரிவித்திருக்கிறேன். முதல் தடவையாக நான் பெரிதும் மதிக்கும், ஒரு பதிவைக்கூட தவறவிடாத வடகரை வேலனின் இந்தப்பதிவில் பல கேள்விகளுக்கு ஆவ்வ் என்று கொட்டாவி விட்டு விட்டு ஓடிவிட்டேன்.

மேலும் உங்கள் பதிவில் பின்னூட்டத்தில் நண்பர் கடையம் ஆனந்த் //அதிக நாட்களாக எழுதிக்கொண்டிருக்கின்ற போதும் எல்லோருடன் நட்பு பாராட்டுபவர் என்றைக்கும் சிறந்த பதிவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.// என்றும் // நீ வாங்குற 5 ,10-க்கு இந்த விளம்பரம் தேவையான்னு? அப்படி தான் இருக்கு இந்த பிரபல பதிவர்கள் கூத்து.// என்றும் // இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை கூட பதிவுகளில் கொடுக்க தெம்பு இல்லாதவர்கள்.// என்றும் கருத்துச்சொல்லியிருக்கிறார்.

முதல் பகுதிக்கான என் பதில் : எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர் ஒரு நல்ல நண்பர் மட்டுமே, சிறந்த பதிவராகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டாவது பகுதிக்கான என் பதில் : நீங்கள் பிரபலம் என்று கருதும் அனைவரையும் நோக்கியுமே இந்தக்கமெண்ட்டா? இப்படிப் பொதுவாகச் சொல்லலாமா? சற்று சிந்தியுங்கள். மூன்றாவது பகுதிக்கான என் பதில் : எழுதுவதற்காக பல்வேறு காரணங்களுக்காக புனைப்பெயர் வைத்துக்கொள்வதென்பது உலகவழக்கம். இதில், உண்மையான பெயரைக்கொடுக்க எந்தத் தெம்பு வேண்டும் என்கிறீர்கள்? ரெண்டு முட்டை உடைச்சுக்குடிச்சா அது வருமா?

ஒரு பின்னூட்டம் இவ்வளவு பெரிதாக இருப்பது எவ்வளவு பெரிய அநியாயம்? இன்றைய எனது நேரத்தை இந்தப்பதிவிலேயே செலவழித்துவிட்டேன். அழகிய ஒரு காதல் கதையை எழுத திட்டமிட்டிருந்தேன். எல்லாம் போச்சு உங்களால். ஹிஹி.. ஆகவே இதை தனிப்பதிவாகவே போட இப்போது முடிவு செய்கிறேன்.

அன்புடன் ஆதி.

.

Friday, June 5, 2009

ரேஸ்..

முன் குறிப்பு :இன்னும் வாசித்திராத தோழர்களுக்காக விகடனில்(27.05.09) வெளியான ஒருபக்கச் சிறுகதை இங்கே..

ரேஸ்..


இந்த இறுதிக்கட்டத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவேயில்லை. முந்தைய தகுதிச்சுற்றுகளில் தொடர்ந்து தோல்விகளை அடைந்ததும் ஒருகட்டத்தில் சலித்துப்போய்விட்டது. ஆனால் ராம் தந்த ஊக்கம் மறுக்கமுடியாதது. ஒரு வழியாக தகுதிச்சுற்றில் நூலிழையில் வெற்றி பெற்ற பரபரப்பான நிமிடங்களை நினைத்துப் பார்த்துக்கொண்டேன். அதில் ஜெயித்தது கனவு மாதிரி இருந்தது. அந்த வெற்றியினாலேயே இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கான கதவு திறந்தது.

புத்தம் புதிய நீல நிற ஃபோர்ட் காரை செலக்ட் செய்திருந்தோம். இதன் வேகமும், உறுதியும், கண்ட்ரோலும் இதற்கு முன்னர் வைத்திருந்த B&G காரை விடவும் அதிகபட்சமாக இருந்தது. இந்த GP இறுதிச்சுற்றில் உடன் வரப்போகும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 6. அவர்களின் காரின் உச்சபட்ச வேகம் மற்றும் திறன்களை அறிந்து கொள்ள நான் ஆசைப்பட்டாலும் அதற்கான வழி இல்லை. களத்தின் இறுதி நிமிடங்களில்தான் பார்க்க முடிந்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் பளபளவென மின்னின.

பக்கத்தில் ராம் பரபரப்பானான். ‘ஒரே சான்ஸ்தான் உனக்கு. விட்டிறாதே.. அதிலேயே முடிச்சிரணும் என்ன.?’

ஸ்டியரிங்கை இறுக்கிப்பிடித்தேன். எந்த விநாடிகளிலும் சிக்னலுக்கான கவுண்ட் ஆரம்பிக்கக்கூடும். இந்த் சக்யூடில் ட்ரையல் ரன் வேறு முன்னதாக அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் சாலை எப்படியிருக்குமோ என்ற சிறிய பதற்றம் வேறு இருந்தது. இது 12 கிமீ தூரம் கொண்ட சர்க்யூட், 3 லேப்ஸ், மொத்தம் 36 கிமீ தூரம். இதுவரை இந்த சர்க்யூட்டில் குறைந்த பட்ச சாதனை நேரம் 17நிமிடம், 04.54 செகண்ட்ஸாக இருக்கிறது. முறியடிக்கமுடியுமா? தகுதிச்சுற்றுகளில் இதே தூரத்தைக்கடக்க 17.30யிலிருந்து 18 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் இந்த புத்தம் புதிய ஃபோர்ட் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. இதன் உச்ச வேகம் மணிக்கு 184 கிமீ. இடையில் ஏதும் விபத்துகள் நேராமல் பார்த்துக்கொண்டாலே போதும். வெற்றி நமக்கே.

தூரத்தின் பச்சை விளக்கு ஒளிர, அதே விநாடியில் ட்ராக்கின் நடுவே இரண்டு கார்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்த இளம்பெண் கைகளை உயர்த்திப்பிடித்து குனிந்து சிக்னல் தரவும் ஏழு கார்களும் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுகளைப்போல சீறிப்பாய்ந்தன. சிறிது தூரத்திலேயே கார்கள் பிரதான சாலையை அடைந்தன.

வாவ்.. என்ன மாதிரியான சர்க்யூட் இது.. கொள்ளை அழகு.! இடதுபுறம் பச்சைப்பசேலென மரங்கள், மலைப்பகுதிகள். வலப்புறம் நீலக்கடல். தெளிந்த வானத்தில் மாலை நேர சூரியன். மூன்றாவது இடத்திலிருப்பதாய் மீட்டர் காட்டியது. 24ம் எண் கார் முன்னால் சென்று கொண்டிருப்பதைக் காண முடிந்தது. எப்படியும் இன்னும் சில விநாடிகளில் அவனை டேக் செய்துவிடமுடியும். இந்த பரபரப்பிலும் மனதுக்கு ரம்யமான அந்த சூழல் எனக்குப் பிடித்திருந்தது. அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

முதுகில் டப்பென ஒரு அறை விழவும், ஸ்டியரிங் பிடி நழுவி அந்த வேகத்தில் கார் தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு தாண்டி கடலுக்குள் பாய்ந்தது.

“ஏண்டா லீவு நாளுன்னா இந்த கம்யூட்டர் கேமையே கட்டிக்கிட்டு அழுவுறீங்க.. வெளியப்போயி விளையாடக்கூடாதா? இந்தா இந்தப்பயலுக்கு சைக்கிள் ஓட்டக் குடுக்கலாம்லாடா..”

அம்மா புலம்பிக்கொண்டே சென்றாள்.

.

Thursday, June 4, 2009

பரீட்சைப் பேப்பர்

ஒரே தொடர் பதிவை இரண்டு முறை எழுதிய ஆள் நானாகத்தானிருக்கும். முதல் தடவை திசை திருப்புகிறேன் பேர்வழி என்று வழக்கம் போல சொதப்பிவிட்டதால் இதோ மீண்டும் குசும்பனின் அழைப்பை ஏற்று பதில் தருகிறேன். இப்போதான் பரிசலின் பதிவின் இந்த தொடரைப் பற்றி மாற்றுக்கருத்து சொன்னாய். அதற்குள் நீயும் களத்திலா? என்று யாரும் நக்கல் பண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன்.1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ரொம்பப்பிடித்த தாத்தாவின் பெயர்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

+2 படிக்கையில் தந்தை, தேவையற்ற சூழலில் பணத்தை கையாண்டதற்காக திட்டினார். அப்போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சுவை மிகுந்த எதுவும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

பெரும்பாலும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அழகு.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது : கூல் மனது.

பிடிக்காதது : சோம்பல்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது : அன்பு.

பிடிக்காதது : கோபம்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்லை.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீலநிறக் கைலி.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

போகாதே.. போகாதே.. (தீபாவளி)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இளம்கருப்பு.

14.பிடித்த மணம்?

மல்லிகை.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

கார்க்கி : வெளிப்படையான நட்பு.
செல்வேந்திரன் : அன்பு, துணிச்சல், ஒழுக்கம்.
அதிஷா : நேரில் சொம்பை மாதிரி இருந்தாலும்
பல சமயங்களில் கிறங்கச்செய்யும் எழுத்து.

வெண்பூ : சிறுகதை மன்னன், டிவிஸ்டுகளின் திலகம்.
மகேஷ் : ரசனையான பின்னூட்டங்கள்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

குசும்பனின் பதிவில் பிடிக்காதது ஏதாவது இருக்கமுடியுமா என்ன?

17. பிடித்த விளையாட்டு?

விடியோ கேம்ஸ்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை, என்றாலும் கண்ணவிந்து போய்விட்டதால் வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் கூலர்ஸ்.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அழகுணர்ச்சியோடுள்ள அனைத்துப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பூ.

21.பிடித்த பருவ காலம் எது?

காற்றடிக்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

சில மாதங்களாகவே எதுவும் இல்லை. அடுத்து படிக்கவேண்டிய லைனில் இருக்கும் புத்தகங்கள் ‘அம்ருதா வெளியீடான முத்துக்கள் பத்து’ சீரிஸ் அனைத்தும்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

சராசரியாக ஒரு மாதம்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : காதலான கிசுகிசுப்பு.

பிடிக்காத சத்தம் : காலிங் பெல்லின் ஓலம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தில்லி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னும் வெளிவரலைன்னு நினைக்குறேன்.. ஹிஹி..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பிறர் நோக்கி எழுதப்படும் சுடுசொற்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கொஞ்சம் விகாரமான உள்மனம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

லட்சத்தீவுகள் (போனதில்லை).

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

ஏதுமில்லை. இல்லாவிட்டால் செய்யவிரும்பும் காரியம் 90.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

ரசனை.

Wednesday, June 3, 2009

மிக்ஸ்டு ஊறுகாய் (03.06.09)

தமிழ்மணத்தை சீண்டியோ, வம்பிழுத்தோ பதிவு போட்டு நாளாகிவிட்டதால் கொஞ்சம் ஹிட்ஸ் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் 'தமிழ்மணமே.. விருதுகள் 2008க்கான பரிசுகள் எங்கே.?' என்று ஒரு பதிவு போடலாம் என எண்ணியிருந்தேன். ('முடிவுகள் என்னாச்சு?' என்று ஒரு பதிவு எழுதியது நினைவிருக்கலாம்). அதைத் தகர்க்கும்படி இன்று தமிழ்மணத்திலிருந்து பரிசுக்கான தகவல் வந்தது. சென்னை 'நியூ புக்லேண்ட்'ஸில் விரும்பிய புத்தகங்களை குறித்த தொகைக்கு தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் மேல்விபரங்களும் வந்துள்ளன. தமிழ்மணத்தின் சேவைகளுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

&&&&&&&&&&

நாம் தொடர்ந்து எழுதும் நாட்களில் ஃபாலோயர்கள் வராமலேயிருப்பதிலும், எழுதாமல் கேப் விடும் நாட்களில் ஒன்றிரண்டு ஃபாலோயர்கள் இணைவதிலும் உள்ள ரகசியம் புரியாமல் மண்டை குழம்பிக்கிடக்கிறேன். தற்போது நிறைய புதிய நண்பர்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் பதிவுகளுக்கு பதில் மரியாதையாக சென்று பார்க்க பல சமயங்களில் நேரமிருப்பதில்லை. இருப்பினும் நல்ல படைப்புகளுக்கான நல்ல்ல்ல வாசகர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள் எனவும் நம்புகிறேன் (எப்பூடி.?). அதோடு நான் ஃபாலோயராக‌ இருந்து இணைப்பு த‌ந்துள்ள‌ ப‌திவ‌ர்க‌ள் என‌க்கு ஏதாவ‌து க‌ட்ட‌ண‌ம் த‌ரலாமா என‌ சிந்திக்க‌லாம். ஏனெனில் என் ப‌திவுக்கு வ‌ரும் ந‌ப‌ர்க‌ளை விட‌வும் இந்த‌ இணைப்புக‌ள் வ‌ழியாக‌ வெளியே செல்லும் ந‌ப‌ர்க‌ள் அதிக‌மாக‌ இருக்கிறார்க‌ள். அதெப்ப‌டி வ‌ருப‌வ‌ர்க‌ளை விட‌ செல்ப‌வ‌ர்க‌ள் அதிக‌மாக‌ இருக்க‌க்கூடும் என்று வெண்ணை மாதிரி கேட்காதீர்க‌ள். ஒரே ந‌ப‌ர் ப‌ல‌ லிங்குக‌ளை கிளிக் ப‌ண்ண‌லாம் அல்ல‌வா? என் ப‌திவுக்கு வ‌ந்த‌வுட‌னே திடுமென‌ வெளியேற‌ வ‌ழி தெரியாம‌ல் இந்த‌ இணைப்புக‌ள் வ‌ழியாக‌ ஓடிவிடுவார்க‌ள் போலிருக்கிற‌து. ந‌ம்ப‌ மாட்டீர்க‌ளா? இதோ ஸ்கிரீன் ஷாட்.

&&&&&&&&&&

கே டிவி பல புண்ணியங்களை அவ்வப்போது கட்டிக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க மாட்டீர்கள். சமீபத்தில் அவர்கள் ஒளிபரப்பிய, சத்யன் ஹீரோவாக நடித்த ‘இனியவளே’ படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு கொடுமையாகவும் படம் எடுக்கமுடியுமா என்று நான் அதிர்ந்தேன். அது சூர்யா நடித்த ‘ஸ்ரீ’, திருநாவுக்கரசு நடித்த ஏதோ ஒரு படம்.. இவைதான் தமிழின் உலகமகா மொக்கை என நினைத்துக் கொண்டிருந்த என் எண்ணத்தில் மண்ணையள்ளிப்போட்டது. வல்லவனுக்கு வல்லவன் உலகத்திலிருக்கிறான். குருவி படத்தின் ஸ்னாப்ஸிஸ் உங்களுக்காக எழுதியது நினைவிருக்கலாம். எனக்கு அந்தளவு தைரியம் இருக்குமானால் சமயம் கிடைக்கும்போது மிச்சமிருப்பவற்றையும் முயற்சிக்கிறேன்.

&&&&&&&&&&

அட சினிமாக்கார இயக்குனர்களே, தயாரிப்பாளர்களே, உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட ரசனையே கிடையாதுங்களாங்க.? ஸ்ரேயா, நமீதா போன்ற சகிக்கவே முடியாத நடிகைகளை எல்லாம் எத்தனை படங்களில் காண்பிக்கிறீர்கள். நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போன்ற இந்த பாவனாவை ஒன்றிரண்டு படங்களோடு ஓரங்கட்டிவிட்டீர்களே.. இந்தப்பாவம் உங்களைச் சும்மாவே விடாது.. பிடியுங்கள், இது என் சாபம்.!


&&&&&&&&&&

கடும் ஆஃபீஸ் டென்ஷன், ரமா ஒரு பக்கம், ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் பரபரப்புதான். நிம்மதியாக டிவி பார்த்துக்கொண்டிருந்த சில மணி நேரங்களும் இந்தப்பதிவுலகினால் தொலைந்து போயிற்று. நாளை என்ன எழுதப்போகிறோம்? நண்பர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன மாதிரி பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்? போச்சு.. 24 மணி நேரத்தையும் பிஸியாக்கிவிட்டீர்கள். இப்போதெல்லாம் 12.30க்கு படுக்கையில் விழுந்து மொபைலில் ஒரு அழகான மெலடியை ஆன் செய்துவிட்டு ஒரு வரியைக்கூட கேட்க முடியாமல் அடித்துப் போட்டதுபோல அடுத்த சில விநாடிகளிலேயே உறங்கிப்போகிறேன். இது கூட வரம்தான். நன்றி நண்பர்களே.!

.

Tuesday, June 2, 2009

கண்ணன் ஊதும் குழல்

புராணக்காலங்கள் தொட்டு பின்வந்த காலங்களிலும் தொடர்ந்து இன்று வரை ஆண்கள்தாம் பெண்கள் மீதான தம் காதலைப் போட்டு பிழிந்து சொட்டி வர்ணனைகளையும், ஏக்கங்களையும், புலம்பல்களையும் கவிதைகளாக்கி வைத்துப்போயிருக்கின்றார்கள், வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்பெண்களுக்கு எழுதுகிற அளவுக்கு சரக்கு அவ்வளவாகப் போறாதா? அல்லது அவர்கள் கொண்ட காதலின் லட்சணமே அவ்வளவுதானா என்பதெல்லாம் பட்டிமன்றம் வைத்து கண்டுபிடிக்கவேண்டிய விஷயம். நாம் இப்போது சொல்லவருவது அதுவல்ல, வேறு.

இப்படியாக உலக சூழல் இருந்தாலும் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சமே கொஞ்சமாக சில பெண்கள் போனால் போகிறது என்பது போல காதலைப் புலம்பி வைத்திருக்கிறார்கள்/புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரிதான விஷயம்தானே நமக்கு அற்புதமாகப் படுகிறது.. எனக்கும்தான், இந்த ஆண்கள், ‘தேவதைக்கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை.. நேரில் உன்னையே கண்டபின்னர்தான் நம்பிவிட்டேன்.. மறுக்கவில்லை..’ என்று என்னதான் நாற்பது வரிகளில் போட்டு பிழிந்தாலும் பெண்களின் ‘ரகசிய சிநேகிதனே..’ ஒரே வரி வீழ்த்திவிடுகிறது நம்மை.

தலைவி தலைவனை நினைத்து ஏங்குவதாய் அமைந்த பாடல்கள், கவிதைகள் நான் மிக ரசிக்கும் ஒரு விஷயமாகும். தேடித்தேடி ரசிப்பதுண்டு.

என்னதான் சோகமான பாடலாக இருந்தாலும் ‘என்னப்பாத்து எப்பிடிடா இப்படி கேக்கலாம்.?’ என்ற கோபம் தெறிக்கும் காதல் ‘சொன்னது நீதானா.. சொல்..’ ஒற்றை அன்றிலின் குரலாய் ஒலிக்கும், ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே..’ தூக்கமில்லாத இரவுகளைக் கடந்துகொண்டிருப்பவளின் ‘ஊருசனம் தூங்கிருச்சு..’ தவமாய் தவமிருக்கும் காதலியின் ‘அனல்மேலே பனித்துளி..’ இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் அமுதம் ம்யூசிக்கின் வெளியீடான ‘குழலூதும் கண்ணன்’ என்ற இசைக்குறுந்தகடைக் கேட்க நேர்ந்தது. அழகழகான 11 பாடல்கள்.. கானமழை பொழிந்திருக்கிறார் நித்யஸ்ரீ. அத்தனையும் கண்ணனை நினைந்து உருகும் கோபியரின் கவிதைகள். அற்புதமான இசை. வசீகரிக்கும் நித்யஸ்ரீ. நமக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும் 13 கிமீ தூரம் எனினும் நித்யஸ்ரீயின் குரலும், இசையும் நம்மையும் தலையாட்டிக்கொண்டே ரசிக்கவைக்கின்றன. குறிப்பிடத்தகுந்த செய்தி யாதெனின் அத்தனை பாடல்களுமே கண்ணன் குழலூதுவதைப்பற்றிய அழகழகான கவிதைகள். அற்புதமான தமிழிசை அனுபவம். கேட்டுப்பாருங்கள்.. கேட்டுப்பருகுங்கள்.!

குழலோசை கேட்க மனம் விழையுதடா..
ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..
நீ ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..
கோமளவாய் மடுத்து நீ ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..

.

Monday, June 1, 2009

சிறுகதை எழுதுவது எப்படி?‏

ஏற்கனவே குறும்படம் எடுப்பது எப்படி? ஊறுகாய் போடுவது எப்படி? வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் எடுப்பது எப்படி? போன்ற பல எப்படிகளை நாம் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து திரைக்கதை எழுதுவது எப்படி? என்பதுதான் நமது அடுத்த திட்டமாக இருப்பினும் அதை எழுதினால் கமல்ஹாசன் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் ‘திரைக்கதைப் பட்டறை’க்கு கூட்டம் குறைந்துவிடும் ஆபத்திருப்பதால் அதை பிறிதொரு சமயம் பார்க்கலாம். மேலும், அதற்கும் முன்னதாக சிறுகதையைத் ஒருவழி செய்வதுதான் பொருத்தமாக இருக்கக்கூடும். மேலும் இப்போதுதான் நமக்கும் கொஞ்சம் தகுதி வந்திருக்கிறது. இன்னும் குறிப்பாக ‘உரையாடல்’ சார்பில் நடத்தப்படும் பிரம்மாண்ட சிறுகதைப்போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் இந்தப்பதிவு வாசகர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்ணன் நினைவுறுத்தியதால் இது எழுதப்படுகிறது. (இந்த மாதிரி முன்னுரை மற்றும் பில்ட் அப் இல்லாமல் பதிவைத்துவக்குவது எப்படி? என்று யாராவது பதிவு எழுதலாம்).

இனி..

முன்தயாரிப்பு :

சிறுகதை எழுதுவது உண்மையிலேயே கொஞ்சம் சிரமமான வேலைதான் என்பது அனுபவத்தில் தெரியவருவதால் நம்மை கொஞ்சம் தெம்பாக தயார்செய்துகொள்வது அவசியம். நல்ல விடுமுறை நாளாக செலக்ட் செய்துகொள்ளுங்கள். அம்மாக்கள், தங்கமணிகள் தொல்லைகள் இல்லாமலிருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள். காலையிலேயே குளித்து சாமி கும்பிட்டு விபூதி பூசி ஃப்ரெஷ்ஷாக தயாராகிவிடுங்கள். முன்னதாக தம்பிள்ஸ் எடுப்பது, புஷ்அப்ஸ் எடுப்பது போன்ற சின்ன சின்ன பயிற்சிகள் எடுத்துக் கொள்வதும் நல்லது. பின்னர் டிபன் முடித்து (அளவோடு டிபன் பண்ணவும், ஏனெனில் சிறுகதை எழுதுவது தியானம் செய்வதற்கு ஒப்பானது. தூக்கம் வரும் ஆபத்து இருக்கிறது), பிளாஸ்கில் காஃபி, பிஸ்கெட்ஸ், ஸ்னாக்ஸ் மறக்காமல் ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் (நாம் எந்த வேலையைச் செய்வதாக இருந்தாலும் இது மிக அவசியமான ஒன்று என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்). ஒரு அழகான பெரிய டைரியும், ராசியான பேனா என்று ஒன்றை வைத்திருப்பீர்கள்தானே.. அதையும் எடுத்துக் கொள்ளுங்கள். டைரி இல்லையானால் அரைகுயர் பேப்பரும், பரீட்சைக்கு மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கிளிப்புடன் கூடிய பேடும் இருந்தால் இன்னும் சிறப்பு. இப்போது உபகரணங்களும், நீங்களும் தயார். அடுத்து எழுத வேண்டியதுதான் பாக்கி.

கரு உருவாக்குதல் :

இது இந்த இறுதி நேரத்தில் செய்யவேண்டிய காரியமில்லை. அதிரசத்துக்கு மாவு தயார் செய்வதைப்போல முன்னதாகவே செய்து முடித்திருக்க வேண்டிய ஒரு காரியம். அதாவது கதை எழுதப்போகிறோம் என்று முடிவானதுமே அது காதலா, கிரைமா, குடும்ப செண்டிமெண்டா, சைன்ஸ் பிக்ஷனா என்பதை முடிவு செய்து விட்டு அதில் இதுவரை யாரும் சொல்லாத எந்த புதுமையான விஷயம் அல்லது ட்விஸ்டை சொல்லப்போகிறோம் என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும். உதாரணமாக உங்களுக்குள் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதாசிரியர் ஒளிந்து கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே நீங்கள் ஆஃபிஸ் போகும் போதே உங்கள் பைக் டிராபிக்கில் சிக்கிக்கொள்ளாமல் ‘சொய்ங்’கென ஹெலிகாப்டர் (பைக்காப்டர் என்றும் சொல்லலாம்) மாதிரி பறப்பதாக கனவு கொண்டிருந்திருப்பீர்கள். ஆஃபிஸில் உங்கள் மானேஜர் அறைக்குள் போகும் போது உங்கள் பாஸின் வழுக்கை மண்டை மேல் ஒரு குட்டி ஆண்டெனா முளைத்திருப்பதைக் (சிரித்து கிரித்து வைத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்) காண்பீர்கள். சர்வ ரோக நிவாரணியாக உங்கள் பேனா, கடிகாரம், ஐடி கார்டு, பான் கார்டு, மொபைல் போன், 50MP காமிரா, லைட்டர், வீட்டு சாவி எல்லாமே ஒன்றிணைந்த ஒரு வஸ்துவை உங்கள் சட்டைப்பையில் வைத்திருப்பீர்கள். தூங்கும் போது மண்டையில் காதும், முகம் முழுக்க பத்து வாயும் கொண்ட பச்சை நிற வேற்றுகிரகவாசி வந்து எழுப்புவது போல கனவு காண்பீர்கள், எழுந்துபார்த்தால் உங்கள் தங்கமணிதான் எழுப்பியிருப்பார். இப்படியெல்லாம் கதைக்களத்தை முன்பே உங்கள் மனதில் ஊறப்போட்டு வலம்வந்திருக்க வேண்டும். அதிலொரு திகில் டிவிஸ்ட்டை நீங்கள் ஏற்படுத்தியிருப்பீர்கள். கல்யாணம் முடிந்தவர்கள் மனைவிமாரை மனதில் நினைத்துக்கொண்டாலே திகில் தன்னால் வந்துவிடும்.

கதை எழுதுதல் :

ஒரு வழியாக சைன்ஸ் பிக்ஷன் என்று (காதல் கதை என்று முடிவு செய்திருந்தாலும் சரிதான், ரெண்டும் ஒண்ணுதான்) கருவை முடிவு செய்துவிட்டதால் இனி கதையை எழுதிவிடவேண்டியதுதான். இதில் ஒரு சிக்கல், எங்கே ஆரம்பிப்பது என்பதுதான். கதையை படிக்க வருபவர்களை இந்தப்பக்கமே மீண்டும் வராதபடிக்கு அடித்து துரத்திவிடுவது நமது முதல் நான்கு வரிகள்தான். ஆகவே நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எப்படியாவது நல்லபடியாக ஆரம்பித்துவிட்டால் நடுவில் கொஞ்சம் ஒப்பேத்திவிட்டு கிளைமாக்ஸில் நாம் வைத்துள்ள டிவிஸ்டில் வாசகர்களை கவுத்திவிடலாம். ஆகவே நடு ராத்திரியில் முகத்தில் காது முளைத்த ரெண்டு வேற்றுகிரகவாசிகள் உங்களை தூக்கிச்செல்வதில் ஆரம்பிக்கப் போகிறீர்களா? நள்ளிரவில் உங்களுக்கு கொம்பு (அல்லது வால்) முளைப்பதில் ஆரம்பிக்கப்போகிறீர்களா? உங்கள் பீரோவுக்குள் பேனா உயரத்தில் நான்கு வேற்று கிரகவாசிகள் ஒளிந்திருப்பதில் ஆரம்பிக்கப்போகிறீர்களா? என்பதையெல்லாம் நன்கு சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள். அப்புறம் எப்படியாவது நாலு பக்கத்துக்கு எழுதி ஒப்பேத்திவிட்டு கிளைமாக்ஸுக்கு வாருங்கள். எல்லாம் எழுதிவிட்டு கனவு என்று முடித்தீர்களானால் கண்டிப்பாக உதை வாங்கப்போவது நிச்சயம். ஆகவே டுபாக்கூர் கதையை ஓவர் டுபாக்கூர் விடாமலும் டுபாகூர் இலக்கணங்களை மீறாமலும் முடித்துவையுங்கள். கடைசியாக மறக்காமல் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை கண்களில் விளக்கெண்ணெய் விட்டு எண்ணிக்கொள்ளுங்கள். சராசரியாக 250 வார்த்தைகள் இருந்தால் ஒரு பக்கக்கதை. 700 லிருந்து 900க்குள் இருந்தால் நார்மல் சிறுகதை. 1000த்தைத்தாண்டினால் ஒருத்தரும் சீண்டமாட்டார்கள்.

எல்லாம் முடிந்தது. இப்போது மீண்டும் மீண்டும் தைரியமாக நாலு தடவைகள் வாசித்துப் பாருங்கள். தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வருவது போல இருந்தால்.. தயவுசெய்து சோர்ந்து போய்விடாமல் பட்டென வலையில் ஏற்றிவிடுங்கள். மக்களும் அதை அனுபவிக்கட்டும். பின்னே.? நேரில் போய் யாரையாவது மூக்கில் குத்தினால் அவர்கள் நம்மை சும்மா விடுவார்களா என்ன.? இப்படித்தான் எதையாவது செய்து உள்மன ஆசைகளுக்கான வடிகாலை ஏற்படுத்திக் கொல்ல வேண்டும்.

.