Thursday, July 30, 2009

டயட்டு.. அப்பிடின்னா?

அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, பதிலாக‌ பரிதாபமாக அவரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வேறு யாரும் இந்த வார்த்தையை என்னை நோக்கி சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும், என் ஈகோ எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.

அவர் ஐம்பது வயதை தாண்டியவராக இருந்தார். மேலும் நான் சின்னப்பையனாக (அதாவது இளமையாக) அவருக்குத்தோன்றியிருக்கலாம். ஆகவே முதன்முறையாக அவர் முன்னால் உட்கார்ந்திருந்தபோதும், 'உங்களுக்கு' என்பதற்குப் பதிலாக 'உனக்கு' என்று கூறியபோதும் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. கண்ணாடியை கழற்றியவாறே "வேறெந்த பிரச்சினையுமில்லை, இதுக்கு மருந்தெல்லாம் தேவையில்லை, ஒழுங்கா காலையிலேயே எந்திருச்சு சுறுசுறுப்பா வாக்கிங், ஜாக்கிங் போகப்பாரு.. அப்பிடியே டயட்டையும் பாத்துக்கோ" என்று மிரட்டலாக சொன்னார். விட்டால் நாளைக்கு காலையிலே ஜாகிங் போனாயா? என்று போன் பண்ணிக்கேட்பேன் என்று சொல்வார் போல இருந்தது. வேகமாகத் தலையாட்டினேன்.

அலுவலகத்திலிருந்து முப்பது வயதைத் தாண்டியவர்களையெல்லாம் வருடாந்திர‌ 'மெடிக்கல் செக்கப்'புக்காக தார்க்குச்சி வைத்து குத்தி த‌ள்ளிக்கொண்டிருந்த‌ன‌ர். அந்த‌ பிரப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னையில் சென்ற‌ வார‌ம் செக்க‌ப்புக்கு சென்றிருந்தேன். எக்ஸ்ரே, ஸ்கான், ஈசிஜி மற்றும்பல சோதனைகளும் எழுதக்கூச்சமாக இருக்கும் சில சோதனைகளையும் செய்துவிட்டு அனுப்பிவிட்டனர், அரைநாள் ஆகிவிட்டது. இன்று சோதனை முடிவுகள் குறித்து மருத்துவருடன் க‌ன்ச‌ல்ட் செய்துகொண்டிருக்கிறேன். முப்ப‌து வ‌ய‌தைத்தாண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை இந்த‌ செக்க‌ப்பை செய்துகொள்வ‌து ந‌ல்ல‌து என‌ நினைக்கிறேன். ஆர‌ம்ப‌ நிலை நோய் அறிகுறிக‌ளை தெரிந்துகொண்டு, முன்னெச்செரிக்கையாக‌ இருந்துகொள்ள‌லாம். நோய்க‌ள் இல்லையென‌ உறுதி செய்து கொண்டால் த‌ன்ன‌ம்பிக்கை சிற‌க்கும். மேலும் நோய்க‌ள் முற்றி பாதிக்கப்பட்ட‌‌பின்ன‌ர் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் இன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் ம‌ருத்துவ‌ச்செல‌வுக‌ள் எவ்வ‌ள‌வு ப‌ய‌முறுத்துவ‌தாய் இருக்கின்ற‌ன‌ என்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள். இந்த‌ செக்கப்பை நமது ப‌ட்ஜெட்டுக்குள் அட‌ங்குவ‌து போல‌வே சில‌ பிர‌ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. அல்ல‌து வேறு காப்பீட்டுத்திட்ட‌ங்க‌ளில் வ‌ழியுள்ள‌தா என்ப‌தை அறிந்தோர் சொல்ல‌லாம். ப‌டிப்போருக்கு ப‌ய‌னுள்ள‌தாய் இருக்கும்.

ம‌ருத்துவ‌ருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு எழுந்த‌போது அவ‌ரைப்பார்த்து ச‌ந்தேக‌த்துட‌ன் கேட்டேன், "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". அவ‌ர் விருட்டென்று ப‌க்க‌த்திலிருந்த‌ ர‌த்த‌ம் உறிஞ்ச‌ ப‌ய‌ன்ப‌டும் கோணிஊசிய‌ள‌வு இருந்த‌ சிரிஞ்ச்சை கோப‌த்தோடு எடுத்தார். நான் வெளியே பாய்ந்தேன்.!

.

Tuesday, July 28, 2009

கொஞ்சம் தியரி படிக்கலாமா?

தொழிற்துறையில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டாக குவாலிடி என்ற ஒரு துறை உருவாகி, வளர்ந்து, பிறவற்றை வளர்த்து, பிராண்டி, முக்கியத்துவம் பெற்று, இன்றியமையாததாகி, இன்று விஸ்வரூபமெடுத்து திணறி, திணற வைத்துக் கொண்டிருக்கிறதே..

அப்படி என்ன அவசியம் இந்த குவாலிடிக்கு? குவாலிடி (Quality -தரம்) என்றால் என்ன?

சிம்பிள்... நுகர்வோர் (End user) பயன்படுத்த இயலாத ஒரு பொருள் உருவாகிவிட்டது என்றால் அங்கே குவாலிடி இல்லை என்று அர்த்தமாகிவிடுகிறது. இதேதான் ஒரு பொருள் என்ற‌ல்லாது ஒரு சேவை என்று வந்தாலும் திருப்தியற்ற சேவையில் குவாலிடி இல்லை என்றாகிறது. இதனால் என்ன.. அந்தப் பொருளைத் தூக்கிப்போட்டு விட்டு வேறு வாங்கிக்க வேண்டியதுதான் என்கிறார் ஒருவர். தயாரிப்பவருக்கே அது தெரியுமே.. சொன்னால் அவங்களே அடுத்து கவனமா இருந்துக்க மாட்டாங்களா என்கிறார் இன்னொருவர்.

பிறகு ஏன் இப்படியொரு துறை? ஏன் இத்தனை போராட்டம்?

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வேகமெடுக்கத்துவங்கிய எஞ்சினியரிங் இப்போது வரலாறு முன்னெப்போதும் கண்டிராத வேகத்தையும் , முன்னேற்றத்தையும் அடைந்திருக்கிறது. இன்னும் செல்லப்போகும் தூரம் கற்பனைக்குள் அடங்காது. சில ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கட்டிடம், எந்திரவியல், மின்னியல் என்றிருந்த எஞ்சினியரிங் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் துவங்கியது. ஸ்பெஷலைசேஷன் என்பது முக்கியத்துவம் பெறத்துவங்கிய போது எஞ்சினியரிங்கின் ஒவ்வொரு பிரிவுகளும் இரண்டிரண்டாக பிரிந்து செல்கள் பல்கிப் பெருகுவதைப்போல பெருகியது. இன்னும் பெருகிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் விரிவாக்கங்களும், ஆராய்ச்சிகளும், செயல்திட்டங்களும் இன்னும் ஆழமான எஞ்சினியரிங் அற்புதங்களைக் காண நம்மை கொண்டு செல்லும் என்பதில் வியப்பில்லை.

சிலவாக இருந்த பிரிவுகள் இப்போது சிவில், கன்ஸ்ட்ரக்ஷன், அக்ரிகல்ச்சர், மெகானிகல், மெட்டீரியல்ஸ், மைனிங், பிரிண்டிங், உற்பத்தி (Manufacturing), தொழிலகம், ஏரோநாடிகல், தயாரிப்பு (Production),ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் அறிவியல், தொலைத்தொடர்பு, கருவியியல், வேதியியல், எனர்ஜி, உணவியல், மருந்தியல், சூழலியல்.. இன்னும் இன்னும் என நுண்ணிய பிரிவுகளாக பிரிந்து பொறியாளர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. சிலந்திவலை போல எஞ்சினியரிங்கின் ஒவ்வொரு பிரிவுகளும் பின்னிப்பிணைந்து உள்ளன. இது பெரிது, அது உயர்ந்தது, இல்லையில்லை இதுதான் சிறந்தது என எந்தப் பிரிவுகளையும் சொல்லிவிடமுடியாது.

இப்போது நீங்கள் அணிந்திருக்கும் ஆடையை உருவாக்கித்தந்தது எது எனக்கேட்டால் உடனே சொல்லிவிடுவீர்கள். டெக்ஸ்டைல் எஞ்சினியரிங். சரிதான். ஆனால் அதுமட்டும்தானா? அது தனிப்பட்டதா? பல்வேறு பிரிவுகளின் துண்டுகள் இணைந்ததுதான் அது அல்லவா? பருத்தியை நூலாக மாற்றவும், நெய்யவும் பெரிய எந்திரங்களும், தொழிற்சாலையும் தேவைப்பட்டனவே (Mechanical, Industrial, Production). அவை இயங்க மின்சாரமும், அதைச்சார்ந்த கருவிகளும் (Electrical), கணினிக்கட்டுப்பாடுகளும் (Electronics, Computer, Software) தேவைப்பட்டன. அவற்றை நிறமேற்ற வேதியியல் (Chemical) பயன்பட்டது. இவை நேரடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகள் மட்டுமே, இன்னும் மறைமுகமாக என்று பார்த்தால் ஒவ்வொன்றையும் சொல்லி மாளாது.

மேலும் ஒவ்வொரு துறைகளின் அற்புதத்தையும், தொழில்நுட்ப புரட்சியையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். கடல்களுக்கு உள்ளேயும், உயர்ந்த மலை முகடுகளிலும் உறுதியான நீண்ட மலைக்க வைக்கும் பாலங்கள், கடலுக்குள் கண்ணாடிக்கட்டிடங்கள், பாலை நாடுகளில் செயற்கைக்கடல்கள் என சிவில் துறையின் அற்புதங்கள். அதிவேக ரயில்கள், விமானங்கள், வியக்கவைக்கும் கார்கள், 300 டன் வெயிட்டையெல்லாம் சாதாரணமாக இழுத்துச்செல்லும் பெரிய்ய லாரிகள் என ஆட்டோமொபைல் விந்தைகள், விமானங்களை, ராக்கெட்டுகளைக் கட்டும் தொழிற்சாலைகள், வானளாவிய எந்திரங்கள் என பிரமிக்கச்செய்யும் எந்திரவியல், வெட்டிப்பிளக்காமல் உடலின் உள்சென்று ஊடுருவும் மைக்ரோ கருவியியல், இன்னும் இன்னும்.. இவற்றையெல்லாம் யாவரும் நொடியில் அறிந்திடச்செய்யும் தகவல் தொழில்நுட்ப பிரமிப்பு என எஞ்சினியரிங்கின் வளர்ச்சி மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அளவுகோல்.

அட.. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோமே.. பேக் டு த பாயிண்ட் குவாலிடி.

முதலில் இழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் துவங்கிய குவாலிடியின் பயணம், விரயங்களைக் கட்டுப்படுத்துதல், வேக உற்பத்தி என்று பயணித்து வாடிக்கையாளர் திருப்தியை (Customer satisfaction) நோக்கமாக கொண்டு தொடர்ந்து இப்போது வாடிக்கையாளர் மகிழ்ச்சி (Customer ecstasy) என்று தன் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நீண்ட நெடும்பயணத்தில் பலவிதமான அறிவியல் வழிமுறைகள் (Methods), கருவிகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என பயன்படுத்தப்பட்டுள்ளன, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வழிமுறைகளும், சித்தாந்தங்களும் சுவாரசியமானவை. பல அரிய வெற்றிக்கதைகளுனூடே சில தோல்விக்கதைகளும் உண்டு. 5எஸ், லீன், சிக்ஸ் சிக்மா, போகே யோகே, CAPA, NVA போன்ற சில வழிமுறைகளையும் (Tools), கோட்பாடுகளையும் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இன்று இன்னொரு முக்கியமான என்னைக்கவர்ந்த ஒரு தத்துவத்தைக் காண்போம்.

ஏன் குவாலிடி என்பது அவசியமானது? பணவிரயம், உழைப்பு விரயம், நேரவிரயம் நேர்கிறது. பிறகு.?

உங்கள் வீட்டில் இப்போது இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பழங்கள், அரிசி, உணவுப்பொருட்கள், தண்ணீர் என உடனே சொல்லிவிடுவீர்கள். ம்.. அப்புறம்? என்கிறேன் நான். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்.. அதேதான்.! அத்தனையும்தான்..!!! நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் கணினித்திரைக்கான மூலப்பொருட்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் அத்தனையும் இயற்கையிலிருந்தே பெறப்பட்டன. கொஞ்சம் உங்களைச்சுற்றிலும் பாருங்கள். செங்கல், சிமெண்ட், புத்தகங்கள், மேஜை, அதன் மீதிருக்கும் டம்ளர், அதற்குள்ளிருக்கும் தேநீர் என இரும்பிலிருந்து துரும்பு வரை அத்தனையும் இயற்கையிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களின் மாறிய உருவம்தான். இப்போது சொல்லுங்கள். ஒரு சிறிய பேனா தரமற்றதாக இருந்து வீணாகும் போது இயற்கையை நமது கவனக்குறைவால் வீணடிக்கிறோம் என்று பொருளாகிறது அல்லவா?

இயற்கை மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளவே தன்னை ஈந்து நிற்கிறது, அதிலிருந்து ஒரு துளியும் வீண் செய்ய நமக்கு உரிமையில்லை. கச்சிதமாக நமது முழுமையான பயன்பாட்டுக்காகவும், மறு சுழற்சிக்குரியதாகவுமே நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் இருந்தாக வேண்டும். ஜப்பானிய தொழில்நுட்ப மேதை 'தா கு சி' (Ta gu chi) உணர்ந்து சொன்ன இந்த கோட்பாட்டிற்குப் பின்னர் குவாலிடி துறை தனக்கான தனித்துவமான கடமையை உணர்ந்தது. அதற்காகவும், இன்ன பிறவற்றிற்காகவும் தன் வழியில் செவ்வனே பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது குவாலிடி எஞ்சினியரிங் (Quality Engineering).

பி.கு : கொஞ்சம் நீளமாக போயிடுச்சோ.. ஸாரிபா. இதை தூங்கிவழியாமல் முழுசா படிச்சவுங்களுக்கு அடுத்த முறை நேரில் பார்க்கச்சொல்லோ ஒரு கோxxரும் கோழிபிரியாணியும் வாங்கித்தரப்படும். முன்னதாக பதிவிலிருந்து கேள்வி கேட்கப்படும்.

.

Monday, July 27, 2009

ஹிஹி.. நன்றிங்க.!

சமீபத்தில் நானும், அலுவலக நண்பர் கேகேவும் (பழைய பதிவுகளில் பார்த்திருப்பீர்கள்) அலுவல் வேலையாக வெளியே சென்றிருந்த போது அவர் எங்கோ செல்போனை தொலைத்துவிட்டார். காணாமல் போன ஐந்து நிமிடத்திலேயே அதை உணர்ந்து என் போனில் இருந்து அழைத்தோம். யாராலோ எடுக்கப்பட்டது.

பிளீஸ் சார் குடுத்துடுங்க, மிஸ் பண்ணிட்டோம் என்று நாங்கள் கேட்குமுன்பே நல்லவிதமாக பேசப்பட்டு நானே கொண்டு வந்து தந்துவிடுகிறேன், எங்கிருக்கீங்க சொல்லுங்க? என்றார் எடுத்தவர். இல்லையில்லை, நாங்களே வந்து வாங்கிக்கிறோம், நீங்க எங்கிருக்கீங்க சொல்லுங்க என்றோம்.

"செண்ட்ரல், ஜிஎச் பக்கத்துல.."

நாங்கள் தொலைத்தது தாம்பரத்தில்.

"அது அவ்வளவுதான், முடிந்துபோன கதை. விட்டுத்தள்ளுங்கள் கேகே"

"போன் போனா பரவாயில்ல எல்லா ஐடி, பாஸ்வேர்டெல்லாம் அதுல வச்சிருக்கேன். ஜிமெயில், ஆபிஸ் ஐடி, நெட் பேங்கிங் இன்னும் எல்லாம்"

"விடுங்க அதெல்லாம் பாஸ்வேர்டுன்னு அவனுக்கு தெரியவா போகுது" என்றேன்.

"பாஸ்வேர்ட்னு ஒரு போல்டர் கிரியேட் பண்ணி தெளிவா போட்டு வெச்சிருக்கேன்"

"கார்டு இல்லாம நெட்டில் ஒண்ணும் பண்ணமுடியாதில்லையா?" என்றேன்.

"அதுசரிதான், அவனால ஒண்ணும் பண்ணமுடியாதுதான். ஜிமெயில் போனா போவுது, ஆனா மற்ற பாஸ்வேர்டுகளுக்கு நான் என்ன பண்றது?" என்றார்.

ஜிமெயில் போனா போவுதா.? சட்.. நான் என் போனில் பாஸ்வேர்ட் போல்டரைத் திறந்தேன்.. அழிப்பதற்காக.!

**********

"ஈ..ந்த நாட்டிலே, ஈ..ந்த நாட்டிற்கு யாரால் சுதந்திரம் கிடைத்தது? யாருக்காக கிடைத்தது? நான் கேட்கிறேன், யாரால் சுதந்திரம் கிடைத்தது? மகாத்மா காந்தியால் கிடைத்தது. அவர் யார்? அவர் ஏ..ன்ன செய்தார்? அரையாடை கட்டினார். நான் கேட்கிறேன். அவர் ஏ..தற்காக அரையாடை கட்டினார்? அவர் ஏ..ன்ன காரணத்துக்காக அரையாடை கட்டினார்? ஏ..ன்ன நோக்கத்துக்காக அரையாடை கட்டினார்? அவர் ஏ..ன்ன..."

முடியல.. சானல் மாற்றினேன். சானல் தாவுகையில் நேற்று காலை இந்தக்கொடுமை கண்ணில் பட்டது. இழுத்து இழுத்து அரசியல் மேடை போல முழங்கிக்கொண்டிருந்தது டி.ஆர். இந்த ஆள் இன்னுமா பொழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்? அவர் முழங்கியது 'அரட்டை அரங்கம்'. இந்த நிகழ்ச்சி இன்னுமா நடந்துகொண்டிருக்கிறது?

ஹூம். ஆனாலும் நம் மக்களின் பொறுமைக்கும், ரசனைக்கும் அளவே இல்லைதான்.

**********

எப்படியோ ஒரு தரமான பதிவு (ஹிஹி..) எழுதிடறோம்னு வையுங்க, அதைப் பாராட்டி பின்னூட்டமோ மெயிலோ வந்தால் பிரச்சினை இல்லை. பதிலுக்கு நாமும் நன்றி சொல்லி எழுதிவிடலாம். ஆனால் சமயங்களில் நம் பதிவு அவர்கள் நெஞ்சைத் தொட்டுவிடுவதால் போன் போட்டே பாராட்டிவிடலாம் என எண்ணி அப்படியே போனும் செய்துவிடுகிறார்கள் (இது எப்போ நடந்ததுங்கிறீங்களா? உஸ்.. முதல்ல கதையை கேளுங்க). இங்கேதான் பிரச்சினை ஆகிவிடுகிறது. வழக்கமாக பதிவர்களுடன் போனில் பேச நேர்கையில் 'பதிவர் சந்திப்பா? என்னைக்கு? எப்போ? எங்கே?' என்பதாக இருக்கும். அல்லது 'என்ன இருந்தாலும் அவர் அப்பிடி எழுதிருக்கக்கூடாதுதான், ஆமா அவரு என்ன எழுதுனார்னு சொன்னீங்க?' அல்லது 'எங்க அடையார் சங்கீதாதானே, அதெல்லாம் சரியா வந்துடுவேன்' என்பது போன்ற விஷயங்கள்தான் பேசப்படும்.

சமீபத்தில் ஒரு பிரபல பதிவர் அழைத்தார்,

"ஆதி, எப்பிடியிருக்கீங்க?"

"நல்லாயி.." முடிக்கவில்லை அதற்குள்ளாக..

"வேற ஒண்ணுமில்ல, இன்னிக்கி போட்டிருக்கீங்களே ஒரு பதிவு. கலக்கிட்டிங்கங்க.."

சொதப்பிட்டீங்கங்க என்பதாய் காதில் விழுந்து உண்மையில் கலாய்க்கிறாரா, பாராட்டுகிறாரா என்பது தெரியாமல் மையமாய், "..ஹிஹி.."

"நிஜமாத்தான்ங்க.. அப்படியே பின்னீட்டிங்க.."

"அப்டியா சொல்றீங்க.." இன்னும் சந்தேகம்.

"எப்டிங்க இப்பிடியெல்லாம்.? அதான் பாராட்டலாமேன்னு கூப்புட்டேன்"

"..ஹி.."

"இன்னும் எங்கியோ போப்போறீங்க.."

அடுத்தவாரம் ஹைதராபாத் போற பிளான் இவருக்கு தெரிஞ்சிருக்குமோ? அசடு வழிய, "ஹிஹி.. நன்றிங்க.." என்பதாய் ஆகிவிடுகிறது. இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை.

.

Wednesday, July 22, 2009

கீழப்பாவூரில் நடந்தது என்ன?

கீழப்பாவூரில் நடந்தது என்ன? (கண்ணன் கதை 2)

இன்று எப்படியும் கீழப்பாவூருக்கு போய்விடுவது என்று காலையிலேயே முடிவு செய்தாயிற்று. எனக்குதான் கொஞ்சம் பயமாகவும், திரில்லாகவும் இருந்தது. உள்ளுக்குள் விருப்பம்தான், இருப்பினும் 'வேண்டாம் வேண்டாம் எதுக்குடா அதெல்லாம்?' என்று சும்மா பம்மாத்து காண்பித்துக்கொண்டிருந்தேன். கண்ணன் எனக்கு நிஜமாகவே விருப்பமில்லை என்று நினைத்துக்கொண்டு என்னை தாஜா செய்துகொண்டிருந்தான். நானும் கடைசியில் மனமின்றி ஒப்புக்கொள்வதைப்போல சரியென்று தலையாட்டினேன். யாராவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும்.

"தென்காசியிலயே வெளிய சுத்துனா நம்மள பாக்குறதுக்கு ஒரு நாதி கிடையாது, கீழப்பாவூர்லயா தெரிஞ்ச ஆள் வரப்போவுது?" என்றேன் நான்.

அதற்கு கண்ணன், "அட லூசே.. சுத்துபட்டி பதினாறு ஊர்லருந்தும் ஆள் வருவாங்கடா அங்க" என்று என் கிலியை அதிகப்படுத்தினான்.

அதற்காக திட்டத்தையா கைவிடமுடியும்? இரவு இரண்டாம் காட்சிக்கு செல்வதாய் முடிவு செய்யப்பட்டது. அப்படி எங்கதான் போறதுக்கு பிளான் போடப்பட்டது என்று கேட்கிறீர்களா? சென்னைக்காரர்களுக்கு புரியுற மாதிரி சிம்பிளாக சொல்வதென்றால் பழைய 'பரங்கிமலை ஜோதி' என்றால் போதும். அப்பேர்க்கொத்த இன்னொரு தலம்தான் 'கீழப்பாவூர் மணி', நெல்லை மாவட்டத்தின் மேற்குப்பகுதி வாழ் மக்களுக்கு சேவை செய்துகொண்டிருந்த ஒரு திரையரங்கம்.

பாவூர்சத்திரத்தில் நண்பன் ஒருவனின் அறையில் தங்குவதற்கு முன்னேற்பாடு செய்யப்பட்டு, அங்கிருந்து வாடகை சைக்கிளில் செல்வதாக திட்டம். காலையிலிருந்தே திரில் துவங்கியிருந்தது. சண்முகம் வேறு போலீஸ், ரெய்டு என்று இன்னும் கொஞ்சம் பயத்தை கிளப்பியிருந்தான். மாலையில் நிஜமாகவே திட்டத்தை கேன்சல் செய்துவிடலாமா என்கிற அளவில் பரபரப்பு கூடியிருந்தது. கண்ணன் உறுதியாக இருந்தான். பயத்தைப் போக்க அடுத்த திட்டமாக ஒரு குவார்ட்டரை வாங்கிவந்து நாலு பேரும் பூஜை பண்ணினோம். இதுவும் அவன் ஐடியாதான். அதற்கே எனக்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல தோன்றியது.

"வாணாம்டா.. இன்னொரு ரவுண்டு அடிச்சுட்டு இங்கியே படுத்துடலாம்டா" என்றேன்.

"மிதிச்சு நவுட்டிருவேன், ஒனக்கு ஊத்துனதே தப்பு. ஒழுங்கா மரியாதயா எந்திச்சிரு.. கெளம்புவோம்" என்றான். கிளம்பினோம்.

நானும் கண்ணனும் ஒரு சைக்கிள், சண்முகமும் அவன் நண்பனும் இன்னொரு சைக்கிள். தியேட்டரை அடைந்தபோது மணி 9.15. தியேட்டரில் ஒரு நாதியில்லை. வெளியே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைப் பார்க்கக்கூட எனக்கு வெட்கம் வெட்கமாய் வந்து தொலைத்தது. பக்கத்திலிருந்த ஒரு டீக்கடைக்குள் தஞ்சம் புகுந்தோம். சண்முகத்துக்கு இதில் ஏற்கனவே அனுபவமிருந்ததால் அவன் திட்டப்படியே எல்லாம் நிகழ்ந்தது.

"முந்துன ஷோ அப்பலயே முடிஞ்சிருக்கும், அதான் ஆளில்ல. செகன்ட்ஷோவுக்கு இந்தமாதிரி படத்துக்கு படம் போட்டப்புறம்தான் கரைட் டயத்துக்கு கூட்டம் வரும்" என்றான் அவன்.

எங்களை விட சின்னப்பசங்க ரெண்டு பேரு எங்கள மாதிரியே கடைக்குள் வந்து பம்மினர். நேரம் செல்லச்செல்ல எல்லா வயதிலும் ஆட்கள் ஒவ்வொருவராய் வரத்துவங்கினர். ஒருவழியாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று 10.10க்கு படம் துவங்கியபோது கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

ஒரு பழைய ஆங்கிலப்படம் ஓடத்துவங்கியிருந்தது. 30ஐத்தாண்டியிருந்த ஒரு தம்பதியினரின் வாழ்க்கைப்பிரச்சினை. அந்த ஹீரோ ஒழுங்காக ஆஃபீஸுக்கு போய் வந்துகொண்டிருந்தார். ஹீரோயினுக்கும் அவருக்கும் மனத்தாங்கல். ஹீரோயின் அழத்தயாராவதும் பின் தேற்றிக்கொள்வதுமாய் இருந்தார். இதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை. படம் முழுதும் பேசிக்கொண்டேயிருந்தார்கள். தியேட்டரிலோ மயான அமைதி. நான் கண்ணனைப்பார்த்தேன். சின்சியராக படத்தில் மூழ்கியிருந்தான். ஒரு மணி நேரம் வரை இதே நிலை.

ஒரே ஒரு காட்சியில் அந்த ஹீரோயின் உடைமாற்றும் நேரத்தில் லேசாக உடை விலகி கண்ணிமைக்கும் நேரம் அவரது உள்ளாடை தெரிந்தது. அதற்கே தியேட்டரில் உய்யென்று ஒரு உற்சாக அலை எழுந்து பின் ஓய்ந்தது. பின் சிறிது நேரத்தில் படம் நிறுத்தப்பட்டு விளக்குகள் போடப்பட்டன. இவ்வளவுக்கும் அந்தப்படம் முடியவேயில்லை. நான் முதலில் இடைவேளையாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் 'ஏதோ ரெய்டாம்' என்று முனகிக்கொண்டே கூட்டம் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறத்துவங்கியிருந்தது.

வெளியே வந்ததும் நான் கண்ணனைப் பார்த்துக்கேட்டேன், "கிளைமாக்ஸ்ல அவங்க ஒண்ணு சேர்ந்திருப்பாங்களாடா.?"

அவன் முகத்தில் ஈயாடவில்லை.. விட்டால் கோபத்தில் சண்முகத்தின் மூக்கிலேயே குத்துவான் போல தெரிந்ததால் எதுவும் பேசிக்கொள்ளாமல் அனைவரும் அமைதியாக அறைக்கு வந்து சேர்ந்தோம்.

.

Tuesday, July 21, 2009

ஆண்கள் ரசிக்கும் பெண்களின் 10

10. அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அருகே வந்து உரசிக்கொண்டு வழிந்துகொண்டு 'திட்டக்கூடாது.. திட்டமாட்டீங்கன்னா ஒண்ணு சொல்றேன்..' என்றபடியே சிரிக்கும் சிரிப்பு.

09. வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம்.

08. அரிதான இரவு நேர பால்கனி தருணங்களில் நீண்ட கெஞ்சல்களுக்குப்பிறகு கிடைக்கும் ஒற்றை சிகரெட்டுக்கான அனுமதி. 07. 'மையி வெச்சா எனக்கு நல்லாருக்குமாங்க?' பதிலை எதிர்பாராமல் ஒரு சிறுமியின் ஆசையோடு மெலிதாக மை தீற்றிக்கொள்ளும் கண்கள்.

06. 'எல்லா மண்ணாங்கட்டியும் நினைவிலிருக்குது, இத்தன பூக்கடை கண்ணு முன்னாடி இருந்தும் இந்தப் பூ வாங்குறது மட்டும் எப்படி மறந்துபோகுது இந்த மரமண்டைக்கு?' என்று அரற்றும் கோபம்.

05. ஸ்கேல் வைத்து அளந்து மடித்ததைப்போன்ற படுகச்சிதமான உன் முந்தானை மடிப்புகள்.

04. கடும் சண்டைக்குப் பின்வரும் இரவு உணவின் போது சுவற்றைப் பார்த்தவாறே நீ கேட்கும் 'மிளகாப்பொடி போதுமா? சட்னி அரைக்கணுமா?' மிளகாய் வார்த்தைகள்.

03. பட்டுச்சேலை வாங்கப்போனாலும், பிளாஸ்டிக் குடம் வாங்கப்போனாலும் கடைக்காரர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீ செய்யும் ஒரே மாதிரியான டார்ச்சர்.

02. 'ஒழுங்கா கம்ப்யூட்டர் கத்துக்கோ' வேலைகள் முடிந்து படுக்கும் நேரங்களில் வலுவாய் பிடித்து உட்கார வைத்து கற்றுத்தரும்போது, 'ப்ளீஸ்ங்க, நாளைக்கு பாக்கலாமே.. ஆவ்வ்வ்..' என்று வெளியாகும் கொட்டாவி.

01. ஸ்டிக்கர் பொட்டுகளே எப்போதும் உன்னை அழகு செய்துகொண்டிருந்தாலும் எப்போதாவது ஸ்டிக்கருக்குக் கீழே நீ தீற்றிக்கொள்ளும் குங்குமம்.

**********

இந்த டிரிபிள் ஷாட்டின் மற்ற இரு ஓசைகளுக்கு இங்கே செல்லுங்கள்.

.

Monday, July 20, 2009

நட்பூ.!


எந்த சப்ஜெக்ட் என்றாலும் தத்துவம் மற்றும் சென்டிமென்டுகளைப் புழிவது என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜிதான். நிஜத்தில் எனக்கும் உறவுகள், நட்புகளிடம் மிகுந்த சென்டிமென்ட்ஸ் உண்டு என்பதுதான் உண்மை.
நட்பு அரியது.
இடுக்கண் களைவது மட்டும்தான் நட்பா என்ன? உணர்வுகளும் ரசனையும் ஒன்றிப்போனால் நேரில் பார்த்திரவே செய்யாமலும் கூடத்தான் நட்பு பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் நண்பர்களை வலியோடு பிரிந்துவந்திருக்கிறோம். ஆனால் அவர்களுடனான நட்பு மட்டும் மனதோடு இருக்கத்தான் செய்கிறது. சரி.. எந்த கொசுவத்திக்கும் இடமளிக்காமல் நேரே விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். வலையுலகில் சச்சரவுகள், குழப்பங்கள் நேர்ந்து வருந்தியிருந்த இந்த நேரத்தில் விருதுகள் சீசன் துவங்கியிருப்பது ஆறுதல். இப்போதுதான் சுவாரசிய விருது கிடைத்த கையோடு இன்னொன்று திரு.ரங்கா உருவாக்கி புதுகைத்தென்றல் மூலமாக என்னை விரைந்துவந்து சேர்ந்திருக்கும் 'நட்பு விருது'. இப்படிப்பட்ட விருதுகள் தனிப்பட்டவர் அவரது விருப்பப்படி இன்னொருவருக்கு வழங்குவதாக அமைகிறது. தகுதிவாய்ந்த ஒரு குழுவாலோ, வாசகர்களாலோ தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டால் மட்டுமே அது நிஜமான தகுதியுடையதாக இருக்கும். தாங்கள் உருவாக்கிய இலச்சினை எவ்வளவு தூரம் பரவுகிறது என்று காணும் சுயநலம் இதில் கலந்துவிட்டால் அந்த விருதுகளுக்கும் மதிப்பு இருக்காது, அந்த இலச்சினைகளை வைத்துக்கொள்ள வலைப்பூவிலும் இடம் இருக்காது.

நட்புச்சங்கிலியை உருவாக்கும் வாய்ப்பிருப்பதால் இந்த விருதை தோழி புதுகைத்தென்றலிடமிருந்து மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதுடன் நானும் என் நண்பர்களுக்கு இவற்றை அளிக்கிறேன். சிறந்த/ சுவாரசிய படைப்புகள் என்றல்லாது நட்புக்கு இந்த விருது வாய்ப்பளிப்பதால் வலையுலகம் தாண்டியும் நட்பு ஏற்பட்ட பதிவர்களுக்கு இதை அளிக்கிறேன். அப்படிப்பார்த்தால் பலருடன் இனிய நட்புடன் பழகும் வால்பையன் போன்ற நண்பர்களுக்கு பல திசைகளிலிருந்தும் இந்த ஒற்றை விருது குவிந்துவிடும் வாய்ப்பிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நேசமனம் கொண்ட அன்பு அண்ணன் புதுகை அப்துல்லா
நல்ல புரிதல் கொண்ட அன்புத் தம்பி கார்க்கி
அனைவரிடமும் அன்பைக்காணும் அன்பு அண்ணன் பரிசல்காரன்
கள்ளமில்லா வெள்ளைமனம் கொண்ட அன்பு அண்ணன் வெண்பூ
காதல் வழியவழியப் பெருகும் அன்புத் தம்பி ஒற்றைஅன்றில் ஸ்ரீ
இடுக்கண் தேடிக்களையும் அன்பு அண்ணன் வடகரை வேலன்
பாசமும் பரிவும் நிறைந்த அன்பு அண்ணன் அனுஜன்யா
மயக்கும் சொல்லிலும் அன்பு கொண்ட அன்புத் தம்பி செல்வேந்திரன்
ஆர்வம் பொங்கிப்பெருகும் அன்பு அண்ணன் கேபிள்சங்கர்
இனம்புரியாத ஈர்ப்பினால் விழைந்த நட்பின் அன்புத் தோழன் அதிஷா

வலைப்பூ துவங்கிய காலத்திலேயே பழக்கம் ஏற்பட்டு உதவிகளையும், ஊக்கங்களையும் தந்த வலை தாண்டி நட்பு ஏற்பட்ட மேற்குறித்த நண்பர்களுக்கு இந்த நட்பு விருதை வழங்குவதில் மனம் மகிழ்கிறேன். இனிய தோழர் நர்சிம்முக்கு இந்த விருது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் நான் நேரில் பழகும் வாய்ப்பு கிடைத்த இனிய நண்பர்கள் முரளிகண்ணன், மகேஷ், வால்பையன், வெயிலான், கும்க்கி, குசும்பன், தராசு, ச்சின்னப்பையன், தமிழ்பிரியன், அத்திரி, ரம்யா என இன்னும் நான் வழங்க விரும்பும் பட்டியல் மிகப்பெரிதாகத் தொடர்கிறது எனினும் நானே அனைவருக்கும் வழங்கி பிறரின் வாய்ப்புகளை தடுப்பது நியாயமல்ல என்பதால் அவர்கள் அனைவருக்குமே என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

.

இந்தப்பதிவுக்கு தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடமாட்டீங்கன்னு தெரியும். அட்லீஸ்ட் மறக்காம வலது புறம் தேர்தலில் ஓட்டு போட்டுட்டுப் போங்க..

.

Friday, July 17, 2009

ஒரு தரமான பதிவு

எழுத வந்து ஒரு வருடமாகிவிட்டது, ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 200 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவும் ஆகியாச்சு (எவ்வளவு வாங்கிக்கட்டினாலும் உரைக்காதாப்பா உங்களுக்கு?), பல விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கியாச்சு (இது எப்போ நடந்தது?).. இப்பேர்ப்பட்ட நேரத்தில் நமக்கு பொறுப்பு கூடிவிட்டது என்பதை உணர்வதால் இனி முன்போல அவ்வப்போது கூட‌ மொக்கைப்பதிவுகள் போடமுடியாது போல தெரிகிறது. மீறிச்செய்தால் நாலு பேரின் கேள்விக்கு ஆளாகிவிடும் சூழல் தெரிகிறது. ஆகவே இனி தரமான பதிவுகள் மட்டும்தான் எழுதுவது என்று முடிவு செய்தாயிற்று. ஆகவே அப்படிப்பட்ட தரமான பதிவுகளை எப்படி எழுதலாம் என்ற ஒரு சின்ன முன்னேற்பாடுதான் இந்தப்பதிவு.

முதலில் நாம் அப்படியான பதிவுகள் ஏதாவது எழுதியிருக்கிறோமா என்ற வரலாறைத் திரும்பிப்பார்த்தோமானால் கடந்துவந்த பாதை காய்ந்து போய் கிடப்பதைக் காணமுடிகிறது. பிறகு ஏன் நம்மிடம் போய் அதை எதிர்பார்க்கிறார்கள்.?

அந்தப்படம் சரியில்லை, இந்தப்படம் நொள்ளை, ஏன் இந்த ஹீரோ ஷேவ் பண்றதேயில்லை என்றவாறு சினிமா குறித்து கருத்தோ, விமர்சனமோ எழுதலாம் என்று பார்த்தால் அதை யாரும் விரும்புவதில்லையாம் (பாருங்கள் வலது புறம் ஓட்டெடுப்பை.. பார்த்தாச்சா? அப்படியே கையோடு நீங்களும் ஓட்டு போட்டுவிடுங்கள்). ஆகவே அதுகுறித்து எழுதமுடியாது.

அனுபவம் என்ற பெயரில் சின்ன வயசு சம்பவங்கள், ஊர், கல்லூரி நினைவுகளை கொசுவத்தியாக சுத்த‌லாம் என்று பார்த்தால் இந்த சப்ஜெக்டில் நம்ப பதிவர்கள் பழம் தின்று கொட்டை போட்டுவிட்டார்கள். என்ன எழுதினாலும் முன்னமே யாரோ எழுதியதைப்போலவே இருக்கிறது. சரி படிக்கும் புத்தகங்களைப்பற்றி (அப்படியே படிக்கிறோம் என்று பீலா விட்டுக்கலாம்) எதையாவது எழுதிவைக்கலாம் (வேறென்ன விமர்சனம்தான்.. தடியெடுத்தவன்லாம் தண்டல்காரன்கிற மாதிரி பிளாக் இருக்கிறது. ச.தமிழ்செல்வனைக்கூட சக பதிவர் என்றோ, எஸ்ராவை சக எழுத்தாளர் என்றோகூட டப்பென்று சொல்லிவிடலாம். கேட்க யார் இருக்கிறார்கள்?) என்று பார்த்தால் எதையாவது படித்தால்தானே ஆச்சு? புத்தகமா.. பேப்பர்ல பிரின்ட் பண்ணி பைன்ட் பண்ணியிருப்பாங்களே அதுதானே? என்று கேட்கக்கூடிய நிலைமை.

சரி விடு. இருக்கவே இருக்கு தங்கமணி பதிவுகள், டெக்னிகல் பதிவுகள் என்று பார்த்தால் அட என்னப்பா இவன் கேஸட்டை திருப்பி திருப்பி போட்டுகிட்டிருக்கான் என்று முனகல் சத்தம் கேட்கிறது. எவ்வளவுதான் நைஸாக அரைத்தாலும் அரைச்ச மாவு என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். சரி நாம்தான் காதலைப் புழிவதில் கொஞ்சம் அனுபவம் வைத்திருக்கிறோமே அதில் இன்னும் கொஞ்சம் புழிந்தால் என்ன என்று யோசித்தால் வீட்டில் நிலைமை எப்படியிருக்கிறது.? போராட்டக்களத்தில் பூங்குயில் கூவுவதா? சான்ஸேயில்லை.

ஒரே வழி சிறுகதைதான். புனைந்து தள்ளிவிடலாம், ஒரு பய தரமற்ற பதிவுன்னு சொல்லமுடியாது. வேண்டுமானால் நல்லாயிருக்கு, நல்லாயில்லை அவ்வளவுதான் சொல்லமுடியும் அப்படின்னு யோசிச்சு சிறுகதை எழுதலாம்னு உட்கார்ந்தா அதுக்கு ஏதோ 'நாட்' வேணுமாமே. நானும் எவ்வளவோ ரோசனை பண்ணி பார்க்குறேன், அப்படி ஒண்ணு வந்து விழுந்து தொலைக்கமாட்டேங்குது. நான் என்ன பண்றது? சரிதான், பதிவர் வம்புதும்பு, கிசுகிசுக்கள், அறுவை ஜோக், பத்திரிகை செய்திகள், சுண்டல் செய்வது எப்படி போன்று மொக்கை போடலாம் என்று பார்த்தால் அவையெல்லாம் தரமான பதிவுகள் இல்லையாமே.. என்னதான் பண்றது? எழுத வந்து ஒரு வருடமாகிவிட்டது, ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 200 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவும்..... (திரும்பவும் முதல்லேர்ந்தா.. சை.!)

பி.கு : சில குறிப்பிடத்தகுந்த பதிவர்கள் அனானி மற்றும் ஹேக்கிங் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி வேதனையையும், பயத்தையும் தருகிறது. பலரும் கசந்த மனநிலையில் உள்ளனர். ஏற்கனவே குடும்ப, அலுவலகச்சூழலில் ஒவ்வாத நிலை இருக்கிறது. இதில் இது போன்ற நிகழ்வுகள் மேலும் சோர்வுறச்செய்கின்றன. அப்ப‌டியும் எழுதித்தான் ஆகணுமா? என்ற எண்ணம் எழுகிறது. நண்பர் ஒருவர் தரமான படைப்பு என்பதைத்தாண்டி, பின்னூட்டங்கள், ஹிட்ஸ் என 15 நிமிடப்புகழை நோக்கி நம்மை குறுக்கிக்கொள்ளலாகாது என்றிருக்கிறார் தனது சமீபத்திய பதிவில். அவரது கூற்று ஏற்புடையதே எனினும் என்னைப்பொறுத்தவரை இன்றைய தமிழ்ச்சூழலில் எழுத்து என்பதே கூட 15 நிமிடப்புகழ்தானோ என்று கருதுகிறேன். புகழ் நோக்கமாகத்தான் இத்தனைக்காரியங்களும் செய்யப்படுகின்றன.

இந்த மேற்குறித்த பதிவு நகைப்புக்காகவே எழுதப்பட்டிருந்தாலும்.. இனி கண்டதையும் எழுதுவதை கூடுமானவரை தவிர்த்து, வாசிக்கும் வழக்கத்தை அதிகரித்து வாரம் ஒன்றல்லது இரண்டு பதிவுகளாயினும் என்னளவில் தரம் என்ற சொல்லுக்கு நியாயம் செய்ய முயல்கிறேன். உள்நோக்கமில்லாத சிலரின் உண்மையான பாராட்டுகளே என்னை தொடர்ந்து கொண்டுசெல்கிறது. அனைவருக்கும் நன்றி.

.

இடைப்பட்ட நேரத்தின் எரிதல்

ரமாவுக்கு சினிமா பார்க்கும் வழக்கம் கிடையாது. டிவியும் கூட விரும்பிப் பார்ப்பதில்லை. இதனால் சில நன்மைகளையும் சில இடர்களையும் நான் உணர்ந்திருக்கிறேன். நாளைக்கு யாராவது முதல்முதலாக ஜோடியாக பார்த்த சினிமா எதுவென கேட்டு பதில் இல்லாத சூழலில் சிக்கிவிடக் கூடாதே என பயந்து நான் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற படம் "கண்டநாள் முதல்". பின்பொரு சமயம் கண்ணனின் தவிர்க்க இயலாத ஏற்பாட்டில் 'இம்சை அரசன்' பார்த்தோம். இந்த இரண்டுதான் நாங்கள் பார்த்த சினிமாக்கள். அப்படிப்பட்ட அவர் நேற்று டிவியில் வந்த ஒரு சினிமா விளம்பரத்தைக்கண்ட போது என்னைப்பார்த்து இப்படிக்கேட்டார்..

"என்னங்க, கம்பல்சரி படம் எடுக்கணும்னு எதாவது ரூல்ஸ் இருக்காங்க.? யாரையாவது வச்சு எப்படியாவது படம் எடுத்தே ஆகணும்னு எடுப்பாங்களோ.?"

**********

வழக்கமாக விருதுகளோ, தொடர்பதிவுகளுக்கான அழைப்புகளோ எல்லோரும் எல்லோருக்கும் வழங்கி வேறு யாருமில்லை என்ற நிலையில்தான் நம்மை வந்து சேரும். இந்தமுறை அப்படி தாமதமாகாமல் விரைந்தே வந்து சேர்ந்தது ஒரு விருது. செந்தழலால் உருவாக்கப்பட்ட அடுத்த பிளாகர் விருதை (நமக்கென்ன ஸ்டேட் இருக்கிறதா, சென்ட்ரல் இருக்கிறதா விருது வழங்க.? நமக்கு நாமே வழங்கிக்கிறதுதான்) நண்பர் அ.மு.செய்யது நமக்கு சில பெரிய கைகளோடு சேர்த்து வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி. வழக்கம் போல அதை நாமும் நமக்கு பிடித்தவர்களுக்கு (6 பேர், அப்பதான் சீக்கிரம் எல்லோரையும் வந்தடைந்துவிடும்) வழங்கவேண்டும். இதோ எனது பரிந்துரை. அனைவரும் தயைகூர்ந்து அன்போடு பெற்றுக்கொண்டு பிறருக்கும் வழங்குங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.**********

விதி வலியது. லிஸ்டில் இருக்கும் ஒரு படத்தைக் காணச்சென்று தியேட்டர் வாசலில் வைத்து அறிய நேர்ந்தது படத்தை மாற்றிவிட்டார்கள் என்று. அலைச்சலை வேஸ்ட் ஆக்கவேண்டாமென்று அரை மனசோடு பார்க்க முடிவு செய்த படம் வாமனன். வழக்கம் போல தவறான முடிவு. இயக்குனர் விரும்பும் வண்ணம் கேரக்டர்கள் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக புத்திசாலித்தனம், மொண்ணைத்தனம், கொள்கைத்தனம், சொம்பைத்தனம் என்று கடுப்படிக்கிறார்கள்.

யார் எவரென்றே தெரியாத ஹீரோவின் மீது அன்பைப்பொழியும் ஹீரோயின் மற்றும் அவரது அம்மா அவர் மீது கொலைப்பழி விழுந்ததும் என்ன செய்வார்கள்? அதிகபட்சம் விரட்டிவிடுவார்கள்தானே. இங்கே என்னவோ அவர்கள் கத்தி கூப்பாடு போடுகிறார்கள்.. 'ஐயோ படுபாவி, எங்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிட்டாயே, நம்பி மோசம் போனோமே' என்று கதறுகிறார்கள். நமக்கு என்னவோ நாம் ஏதும் தூங்கிவிட்டோமா? ஹீரோயினை ரேப் செய்துவிட்டாரோ ஹீரோ என சந்தேகம் வருகிறது.

இன்னொரு கேரக்டர் வருகிறது பாருங்கள்.. கொடுமைடா சாமி. தலைவாசல் விஜய் போலீஸ் கமிஷனராம். ஒரு அடியாளைப்போல வில்லன் அருகிலேயே நிற்கிறார். வில்லனுக்கு கோபம் வந்தால் அவரை 'போடா நாயே' என்று திட்டுகிறார். அடிக்க வருகிறார். பள்ளிப்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவார்களே அதுபோல தள்ளிவிடுகிறார். அவருக்குப்பக்கத்தில் மொட்டைத்தலையும், உள்பனியனும் போட்டு இன்னொரு அடியாள். அவருக்கு படம் முழுதும் எங்கு சென்றாலும் அதே காஸ்ட்யூம். சட்டையே அவரிடம் இல்லை போலிருக்கிறது. எல்லாம் தலையெழுத்து.

**********

குட்டிக்கவிதை

நிகழ்வுக்கு முன்னர் மிளிர்கிறாய்..
நிகழ்வுக்குப் பின்னர் ஒளிர்கிறாய்..
இடைப்பட்ட நேரத்திலோ.. எரிகிறாய்.!


**********

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்திய சிறுகதைப்போட்டியின் முடிவுகள் தவிர்க்க இயலாத காரணங்களால் ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகச்சரியாக 250 கதைகள் களத்தில் உள்ளன. எல்லோரையும் போல நானும் முடிவுகள் அறிய மிகுந்த ஆவல் கொண்டுள்ளேன். சிறிது ஏமாற்றம்தான் எனினும் கடும்பணி என்பதால் காத்திருக்கலாம், தவறில்லை. நண்பர்கள் சிலர் செய்ததைப்போல நானும் அனைத்து கதைகளையும் படிக்க ஆவல்கொண்டு முயன்றேன். சுமார் 60 கதைகள் வரை படித்தேன்.. முடியல.. நண்பர்களும் 80, 100 களில் தோல்வியை தழுவியதை அறியமுடிகிறது. நடுவர்களை நினைத்து கொஞ்சம் பரிதாபம் தோன்றினாலும் வாழ்த்துவோம் அவர்களை இந்த நற்பணிக்காக.

*

தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுகள் தவிர்த்து மறக்காமல் வலதுபுறம் தேர்தலிலும் ஓட்டுப்போட்டீர்கள்தானே..

Tuesday, July 14, 2009

நாடோடிப்பசங்க..

கொஞ்சம் தாமதமானாலும் சில நல்ல விஷயங்களை பாராட்டுவதில் தவறிவிடக்கூடாது என்பதனால் இந்தப்பதிவு. பார்க்கவேண்டிய லிஸ்டில் இருந்த 'பசங்க', 'நாடோடிகள்' இரண்டு படங்களையுமே சமீபத்தில்தான் காணமுடிந்தது.

பசங்க

இதுவரை தமிழ்சினிமா காணாத புத்தம் புதிய கதைக்களம். முதல் முறையாக தமிழில் ஒரு சிறுவர் சினிமா, பெரியவர்களுக்காகவும் கூட. பள்ளிப்பிள்ளைகளுக்கிடையே நிகழும் ஒரு யுத்தத்தினை மிக இயல்பாக நிகழ்த்தியிருக்கிறார்கள் திரையில்.


ஒரு கதாநாயக சிறுவன், ஒரு வில்லச் சிறுவன். அவர்களின் அடிப்பொடிகள். அவர்களின் இயல்பான பெற்றோர்கள், அவர்களின் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிகழும் ஒரு மெல்லிய காதல் என மற்றொரு அழகிய திரைப்படம். திரைக்கதை, வசனம், நடிப்பு இன்னும் அத்தனை அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தன.

இது போன்ற சொல்லப்படாத புதிய கதைகளைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். பாண்டிராஜ் நம்பிக்கை தருகிறார். வில்லச்சிறுவனின் நடிப்பு பிரமிப்பு தருவதாக இருந்தது. மிகச்சவாலான விஷயமே சிறுவர்களை நடிக்கவைப்பதுதான் என நினைக்கிறேன், அதில் நிறைவாய் செய்யவைக்க எத்தனை உழைப்பையும், பொறுமையையும் கைக்கொண்டாரோ இயக்குனர் பாண்டிராஜ்? அவருக்கு இதற்காகவே ஒரு பெரிய பாராட்டு. குறிப்பாக 'எப்பூடி?' சிறுவன் திரையில் வரும் காட்சிகள் அனைத்துமே கவிதை.! இன்னும் கொஞ்சம் வராதா என ஏங்க வைக்கும் காட்சிகள் அவை.

மிகச்சில குறைகள் இருந்தாலும் யாரும் தவறவிடக்கூடாத தரமான சினிமா 'பசங்க'.

நாடோடிகள்

இன்னுமொரு இயல்பான சினிமா. இயக்குனரின் இஷ்டத்துக்கு கேரக்டர்கள் மொண்ணைத்தனமாக ஆடாமல், அவர்களின் இயல்புக்குத்தக்க முடிவெடுப்பதும், நடந்துகொள்வதுமே ஒரு சினிமாவுக்கு உயிரோட்டத்தைத் தரமுடியும். அந்த வகையில் இந்தப்படம் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சிறு உதவியோ, பெரிய உதவியோ.. ஒருவர் இன்னொருவருக்கு உதவும் போது அந்த உதவிக்குப்பின்னால் எத்தனை உழைப்போ, சங்கடங்களோ, வலியோ இருக்கிறது என்பது பல சமயங்களில் உதவி பெறுபவரால் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. அதுவும் காதலுக்கு உதவுவதென்றால்..


இரண்டு மிகப்பெரிய பணபலம், அதிகாரபலம் மிக்க பெற்றோரின் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோரை எதிர்த்து திருமணம் நடத்திவைத்தால் அதை நடத்திவைப்போருக்கு உண்மையில் என்ன கஷ்டங்கள் நேரும்? கொஞ்சம் கூட சினிமாடிக் இல்லாமல் மிக இயல்பாக அவர்களின் வலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படி அவர்கள் இணைத்துவைத்த ஜோடிகள் காதல் முறிய பிரிய நேர்ந்தால்.? கதையை இயல்பாக சொல்வதென்று முடிவு செய்தபின்னும் கூட இவ்வளவு பரபரவென சொல்லமுடியுமா? யப்பா.. கமர்ஷியல் புண்ணியவான்களே, கொஞ்சம் கத்துக்கங்கப்பா சமுத்திரக்கனியிடமிருந்து.!

நடிப்பில் அனைவரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சம்போ சம்போ பாடலின் பீட் மிக நன்றாகத்தான் இருக்கிறது. படம் நெடுக வருகிறது அந்தப்பாடல். இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான். ஒரு கட்டத்தில் ஆமா சம்போ.. அதுக்கென்ன இப்போன்னு கேட்குற அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி அனைத்தும் சிறப்பே. பயமாக இருக்கிறது. தொடர்ந்து வெற்றி வந்து சேர்கையில் அடுத்து கும்மாங்குத்து, பல்லி சண்டைகள் என நமது ஹீரோக்கள் இறங்கிவிடுவார்கள். சசிகுமார் அந்தமாதிரியெல்லாம் இறங்கிவிடமாட்டார் என நம்புவோம். வாழ்த்துவோம்.

.
தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுகள் தவிர்த்து மறக்காமல் வலதுபுறம் தேர்தலிலும் ஓட்டுப்போட்டீர்கள்தானே..

மூன்று அலறல்கள்

இப்போது நாங்கள் முதல் மாடியில் வசித்துக்கொண்டிருக்கிறோம். கீழ் மற்றும் எதிர் வீடுகளிலிருப்போர் அதிர்ச்சியடையும் வண்ணம் திடீர் திடீர் என எங்கள் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது, பகல் நேரங்களிலும் நள்ளிரவு நேர‌ங்களிலும் கூட..

அலறுவது யார்? ஏன்?

*ஆசை ஆசையாய் வாங்கிவந்த புதிய பேனா கரகரவென தரையில் வைத்து கீறப்படுகிறது.

*மெயில் செக் பண்ணிக் கொண்டிருக்கப்படும் போது கீ போர்டில் சர்ரென பிஸ் அடிக்கப்படுகிறது.

*பல் தேய்த்துவிட்டு பேப்பர் பார்க்க பேப்பரை தேடினால் அதற்குள்ளாகவே சுக்கல் நூறாக கிழிக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் டாய்லெட் பேப்பராக பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

*பைக் சாவி வாசல் சாக்கடையில் கண்டெடுக்கப்படும் நிமிடங்களில்..

"ஆஆஆஆஆஆஆவ்வ்வ்.."

அலறுவது நான்.!

*சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது டிவி ரிமோட் கண்ட்ரோலர் புளிக்குழம்பு சட்டியில் திடுமென முக்கி வைக்கப்படுகிறது.

*ஒரு குடம் நன்னீரில் காகம் கதை போல ஒரு வெங்காயம், இரண்டு காரட்டுகள், ஒரு டூத்பிரஷ், ஒரு செல்போன், ஒரு சோப்பு இவை கண்டெடுக்கப்படுகிறது.

*பாட்டிலில் ஊற்றுவதற்கு முந்தைய விநாடிகளில் ஆறவைக்கப்பட்டிருந்த பால் மெத்தையில் கொட்டுப்படுகிறது.

*நள்ளிரவில் தோளில் கிடத்திய ஸ்டேன்டிங் நிமிடங்கள் மணிகளாய் மாறும் நேரங்களில்..

"ஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்"

அலறுவது ரமா.!

*தண்ணீரில் அளவளாவ அனுமதி மறுக்கப்படுகிறது.

*வலுக்கட்டாயமாக சாதம் திணிக்கப்படுகிறது.

*புத்தகங்கள், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், செல்போன்கள், சிடிக்கள் போன்றவற்றையெல்லாம் கேட்டவுடனேயே அக்செஸ் செய்துவிடமுடிவ‌தில்லை.

*எவ்வளவு கவனமாக நடந்தாலும் இந்தத்தரை வழுக்கி விழச் செய்துகொண்டேதான் இருக்கிறது.

*நள்ளிரவு இரண்டு மணிக்கு கதவைத்திறந்து உலாத்தமுடிவ‌தில்லை.

*காரணங்கள் வேண்டுமா என்ன, பொழுதே போகாத தருணங்களில்..

"ஈஈஈஈஈஈஈஈய்ய்ய்"

அலறுவது சுபா (தி ஜூனியர்).!

.

Update (14.07.09/ 12.50):

முதல் முறையாக ஒரு பதிவை அப்டேட் செய்கிறேன். இந்தப்பதிவுக்கு வந்த 'மயில்' விஜிராமின் ஒரு சுவாரசியமான க‌மென்டுக்காக..

மயில் : இதோட 7 ரிமோட், மூணு டிவி, கொறஞ்சது 100 லிட்டர் பால், ஒரு பிரிட்ஜ், (பின்னாடி ட்யுப் இழுத்து பிரிட்ஜ் புகைந்து போச்சு ), 2 மூணு சக்கர சைக்கிள், ஐம்பது ball , ஒரு பத்து கிலோ க்ரயான்ஸ், கலர், பிரஷ், ஒரு மூட்டை பென்சில், ரப்பர், அப்பறம் வீட்டு சுவர்க்கு வெள்ளை அடிக்க வருஷம் 15,000 ரூபாய், (முடியல, மூச்சு வாங்குது) எல்லாம் ரெடி பண்ணி வைங்க ஆதி....இன்னும் இருக்கு..
ஐய்யா... ஜாலி.!!
.

Monday, July 13, 2009

இடைத்தேர்தல்

நிஜமாகவே நான்கு நாட்களாக கொஞ்சம் பிஸியாக இருந்துவிட்டபடியால் இணையம் பக்கம் வரமுடியவில்லை. அடுத்து ஒரு தங்கமணி பதிவு ரெடியாக வைத்திருந்தாலும் போட ப‌யமாக இருக்கிறது. ஏனெனில் ரமா கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகில் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளார். அவர் வாசித்துவிடும் ஆபத்திருக்கிறது. மேலும் விழித்திருக்கும் நேரங்களில் ஜூனியருடனும், அவர் தூங்கும் நேரங்களில் ரமாவிடமும் போராடவே நேரம் சரியாக இருப்பதால் இனி முன்போல இயங்கமுடியமா என சந்தேகிக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

**********

தேர்தல் நடத்தி ரொம்ப நாளாகிவிட்டது. ஆகவே ட்ராப்டில் பதிவுகள் இல்லாத இந்நிலையில் இந்த பழைய பதிவைப்படித்துவிட்டு அப்படியே வலதுபக்கம் ஓட்டும் போட்டுவிட்டு செல்லுங்கள். இந்த வருட வாசகர் மனநிலை எவ்வாறு இருக்கிறது என பார்க்கலாம்..

**

பதிவுகள் குறித்த தேர்தல் முடிவுகள்.

ஒரு பத்து நாளா தளத்தில் கவனம் செலுத்தமுடியாதபடிக்கு வேலை இருந்தது. ஆனால் முடிந்தவரைக்கும் பிற வலைப்பூக்களில் மேய்ந்தேன். ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. கொட்டிக்கிடக்குது ஆயிரமாயிரமாய்.! வலைப்பூக்கள்தான் எத்தனை வகைகளடா அதில்தான் மொக்கைகள் எத்தனை வகைகளடா.. மேலும் எத்தனை விதமான சென்டிமென்ட்கள், எத்தனை விதமான அனுபவங்கள், எத்தனை விதமான ரசனைகள், எத்தனை விதமான கருத்துச்செறிந்த கட்டுரைகள்.

சிலர் நிஜமாகவே படிக்கப்படிக்க சுவையான பலவிதமான பதிவுகளைத் தருகின்றனர் (பெய‌ரைச்சொன்னால் சிலர் விட்டுப்போக‌ நேரிடலாம், அதனால் வருத்தம் வந்து சேரும். மேலும் நான் பார்த்தது கையளவே, இன்னும் கடலளவு பாக்கியிருக்கிறது). பலரோ தாங்கமுடியாத அளவில் பிளேடு போடுகிறார்கள், நாலு வரிகளுக்கு மேல் படிக்கவே முடியவில்லை. (அவற்றையெல்லாம் மொக்கையென்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. அந்த வார்த்தைக்கு இப்போ நல்லபடியான அர்த்தம் கிடைத்திருக்கிறது அல்லவா? சரி.. காக்கைக்கும் தன்பதிவு, பொன்பதிவு இல்லையா? அவர்கள் திருப்திக்கு அவர்கள் எழுதுகிறார்கள், இப்ப நீ இல்லையா? என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். பெயரைச் சொன்னால் வருத்தத்தோடு சேர்ந்து ஆட்டோவும் வரக்கூடும் என்பதால் தவிர்க்கிறேன்).

மேலும் சில‌ர் என்ன‌ எழுதினாலும், கூட்ட‌மும் பின்னூட்ட‌மும் அலைமோதுகிற‌து. சில‌ர் என்ன எழுதினாலும் சீண்ட‌ நாதியில்லை. அவ‌ர்க‌ளுக்கு நாலு பின்னூட்ட‌ம் வ‌ந்தால் ந‌ன்றி சொல்லி எட்டு பின்னூட்ட‌ம் போடுகிறார்க‌ள். சில பதிவுகளில் பதிவை விட பின்னூட்டம் சுவையாக இருக்கிறது. சிலர் எதிர்பார்க்காத நேரங்களில் பின்னூட்டமிட்டு உற்சாகத்தை ஏற்படுத்தி பின்னர் காணாமல் போய் காயவைக்கின்றனர். சில‌ர் முப்பது நாளில் மூணு ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் தரமற்றவை உண்டு). சில‌ர் மூணு நாளில் ‌முப்ப‌து ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் த‌ர‌மான‌வை உண்டு). சில‌ர் ரொம்ப‌ அட‌க்க‌ம். சில‌ரோ ஆர்ப்பாட்ட‌ம். பதிவுகளை சூடாக்குகிறேன் பார் என்று மொக்கைப் பேர்வழிகளெல்லாம் தனது சப்பைப்பதிவுகளுக்கு பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் 'ஏடாகூடமாய்' தலைப்பு வைத்து சாவடிக்கிறார்கள். அப்புறம் தொடர்பதிவு... சரி, ச‌ரி.. இந்த ஹிஸ்டரியெல்லாம் எதுக்கு இப்ப.. ஏற்கனவே தெரிஞ்சதுதானே, இப்ப‌ என்ன‌ங்கிறீங்க‌ளா?..

ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ந்துட‌றேன். நிறைய‌ பேர் த‌ன‌து த‌ள‌ங்க‌ளில் ஒரு ஓர‌மாய் த‌ன‌க்கு பிடித்த‌ விஷ‌ய‌ங்க‌ளில் தேர்த‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள் அமைதியான‌ முறையில். என‌க்கும் அதைப்பார்த்த‌தும் நாமும் ஒரு மெகா தேர்தல் ந‌ட‌த்தினால் என்ன‌ தோன்றி, "வாச‌க‌ர்க‌ளின் ம‌ன‌தைப்புரிந்து கொள்கிறேன் பார்" என்று ஒரு மூன்று கேள்விக‌ளைக் க‌ள‌த்தில் வைத்தேன். ஆனால் பாருங்கள். நான் அறிவித்த‌திலிருந்து (3 நாட்க‌ள் தேர்த‌லை நீட்டித்தும் கூட) பத்து நாட்களில் சுமார் 600 ஹிட்டுக‌ளும் குறைந்த‌ப‌ட்ச‌ம் 80 ஓட்டுக‌ளும்தான் வ‌ந்திருக்கின்ற‌ன. எவ்வளவோ கெஞ்சியும், மிரட்டியும் பார்த்துவிட்டேன். வந்தவர்கள் பெரும்பாலும் ஓட்டு போடவில்லையா? அல்லது வந்ததே இவ்வளவு பேர்தானோ என்று ஒரே சந்தேகமாக ஆகிவிட்டது. அப்புற‌ம்தான் யோசித்தேன் இது நிறைய‌ ஹிட்டுக‌ள் வாங்க‌க்கூடிய‌ யாராவ‌து பண்ணியிருக்க‌ வேண்டிய‌ வேலை என்று. ச‌ரி செய்துவிட்டு பிற‌கு சிந்திப்ப‌து ந‌ம‌க்கு என்ன‌ புதிதா? என்று ச‌மாதான‌ம் செய்துகொண்டேன்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம் என்று நினைத்துக்கொண்டு தேர்த‌ல் முடிவுக‌ளை பார்த்துக்கொள்ளுங்க‌ள். முத‌ல் கேள்வி சொந்த‌க்க‌தையாக‌ இருந்தாலும், பின்னிரு கேள்விக‌ள் உங்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌ட‌லாம்.! காமெடி,மொக்கை,க‌லாய்த்த‌ல் ப‌திவுக‌ளே 51% வாக்குக‌ள் பெற்று முத‌லிட‌ம் பிடித்திருக்கிற‌து என்ப‌து நாம் அறிய‌ வ‌ரும் ம‌கிழ்ச்சியான‌ சேதி. கூடுத‌லாக‌ 36% பேர் எப்போதுமே பின்னூட்ட‌மிடுவ‌தில்லை என்றும் 16% பேர் அத்திபூத்தாற்போல‌ பின்னூட்ட‌மிடுவேன் (ப‌ன்னிர‌ண்டு நாட்க‌ளுக்கு ஒருமுறை?) என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


.