Monday, August 31, 2009

பார்வதி நாச்சியார் (முடிவு)


அன்று அவள் அழுத அழுகையின் ஓலம் அந்த ஆனைமலை அய்யனாருக்கே கேட்டிருக்கும்...

..நாலாபுறமிருந்தும் சொந்தங்கள் திரள அன்றே தெரிந்த இடத்திலிருந்து கார் வரவழைக்கப்பட்டு ஆனைக்குட்டி அம்பாசமுத்திரம் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவனுக்கு வயது இருபத்தெட்டு. அடுத்து வந்த சில வாரங்களிலேயே அவனுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே புரிந்துபோயிற்று, இதனோடேதான் இனிவரும் வாழ்க்கை என. பார்வதி உணவென்பதையும், உறக்கமென்பதையும் மறந்திருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்காக அவளைப் போராடி உணவு உண்ணவைத்தது அவளது மாமியார் பிச்சம்மா நாச்சி. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஆனைக்குட்டி வீட்டிற்குள் கட்டிலிலும், வீட்டு முற்றத்தில் இருந்த வேப்பமரத்தினருகே போடப்பட்டிருந்த மர நாற்காலியிலும் வாழ்க்கையைத் துவங்கினான்.

இளமைத்துடிப்புடன் ஓடித்திரிந்த ஆனைக்குட்டி மிகுந்த வேதனை தந்த நாற்காலி வாழ்க்கையை ஏற்க சில மாதங்களாயிற்று. பின்னர் நிதர்சனத்தை புரிந்து கொண்ட ஆனைக்குட்டி பள்ளி செல்லும் பிள்ளைகள் மாலை நேரத்தில் மரநிழலில் விளையாடுவதைக் கண்டு ரசிக்கத்துவங்கினான். அவர்களின் சில விளையாட்டுகளில் அமர்ந்தவாறே பங்குகொண்டான். பாடங்கள் சொல்லித்தந்தான். மாலை நேரங்களில் தேடி வந்த நண்பர்களுடன் பேசி மகிழ்ந்திருக்கத் துவங்கினான். அவன் முகத்தில் மீண்டும் சிரிப்பைக் கண்டு கொஞ்சம் ஆறுதலை அடையும் போது பார்வதியின் கைகளில் ஐந்தாவது குழந்தை காந்திமதி சிரித்துக் கொண்டிருந்தாள். குழந்தையை மடியில் கிடத்தி ஒற்றைக்கையால் பிடித்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருக்க விரும்பினான். முந்தைய பிள்ளைகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு இந்தப் பிள்ளைக்குக் கிடைத்தது. நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவன் மடியில் பிள்ளையைக்கிடத்திவிட்டு பிற வேலைகளை கவனிக்கத்துவங்கினாள் பார்வதி. அவனது சகல தேவைகளையும் கவனிக்கும் தாயானாள் பார்வதி. குளிக்க வைத்தாள், உடையணிவித்தாள், உணவை ஊட்டினாள். ஐந்தோடு அவளுக்கு ஆறாவது பிள்ளையானான் ஆனைக்குட்டி.

சில மாதங்களுக்குப் பிந்தைய ஓர் நாளில் பிள்ளைகளை உறங்க வைத்துவிட்டு, கட்டிலில் படுத்திருந்த கணவன் உறங்கிவிட்டானா எனப் பார்க்க விழைந்தவளின் வலது கையை இடது கையினால் பற்றினான் ஆனைக்குட்டி. இந்த இறுக்கம் இந்தக்கைகளில் இப்போது எப்படி? இந்தப் பிடி அவளுக்குள் ஆயிரம் கதை பேசும் பிடியல்லவா? அதிர்ந்து நின்றாள் பார்வதி நாச்சியார். இது எப்படி சாத்தியமாகும்? அவனால் சாத்தியமாயிற்று. அவளால் சாத்தியமாயிற்று. அடுத்த மூன்றாவது மாதம் ஒரு மாலை வேளையில் அவள் வாந்தியெடுத்த போது வேப்பமர நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆனைக்குட்டி இடதுகையினால் எண்ணையைத் தொட்டு மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.

வயல்வெளிகளையும், தோட்டங்களையும் பார்வதி கவனிக்கத்துவங்கினாள். இருந்த இடத்திலிருந்தே அவளை ஆட்டிவைத்தான் அவன். தான் அறிந்ததையெல்லாம் அவள் அறிய வைத்தான். பருத்திக்காட்டின் மூன்றாவது பூச்சிக்கொல்லி மருந்தடித்தலின் அளவும், காலமும் என்ன?. புளியங்காய்கள் ஏன் சொத்தைப்பட்டுப் போய்விடுகின்றன? வாழைப்பராமரிப்பு எத்தனை சிரமமானது? மிளகாய் ஏன் நாம் பயிரிடுவதில்லை? தென்னைக்கு என்ன உரம்? அனைத்தும் அறிந்தாள். வீட்டை பன்னிரண்டு வயதான மூத்த பிள்ளை பார்த்துக்கொள்ள வயல்வெளிகளை அறிந்தாள். அவளின் சாட்டையாக அவன் இருந்தான். அவனை விடவும் சிறப்பாக அவள் விளைவித்த கரைவயலின் அறுவடை நாளின் போது உடனிருக்கமுடியாமல் ஆறாவது பிள்ளையை பெற்றெடுப்பதற்காக வீட்டில் கதறிக்கொண்டிருந்தாள். அந்த ஆறாவது பிள்ளையைப்பெற்ற மயக்கத்தில் அவளிருந்த அதே மாலையில் அறுவடை ஒன்றரை மடங்காய் வீடுவந்து இறங்கிக் கொண்டிருந்தது. பார்வதியை பிரமிக்கத்துவங்கியிருந்தான் ஆனைக்குட்டி. அவளது வீட்டிற்கும் காட்டிற்குமான அலைச்சல்களை ரசனையோடு கவனிக்கத் துவங்கியிருந்தான்.

அவனையும் மீறிய ஒரு கணிப்பு அவளுக்கிருந்தது. எதிர்காலம் பள்ளிக்கல்வியை முன்னிறுத்தும். பிள்ளைகளை பள்ளிக்கு வலிந்து அனுப்பினாள். கடிந்து அனுப்பினாள். அதையும் மீறி முத்துப்பாண்டி எட்டாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் தங்கிவிட்டு பின்னர் தாயோடு தோட்டத்தில் நின்றான். தங்கம்மா நாச்சியார் முன்னமே பள்ளி செல்வதை நிறுத்தியிருந்தாள். தாயின் தீவிரம் கண்ட பிற பிள்ளைகள் ஒழுங்காக பள்ளி செல்லத் துவங்கியிருந்தன.

பின்பு வந்த ஒரு மாசி மாதத்தின் ஒரு நள்ளிரவில் தண்ணீர் தர எழுந்தவளின் இடுப்பை அவன் இடது கையினால் வளைத்தபோது முதன்முறையாக தயங்கினாள். அவன் காதோடு புலம்பினாள்..

‘ஊரென்ன சொல்லும்?’

அவனும் புன்னகையுடனே பகிர்ந்தான், ‘சொல்லுதவள கூட்டியா.. பத்து மாசத்துல ரெட்டப்புள்ள குடுக்கேன்’

“பாவதி..” இந்த முறை தெளிவான அழைப்பில் விருட்டென எழுந்து கட்டிலினருகே சென்றாள்.

“இருக்கேன்யா.. தண்ணி வேணுமா? மருந்து தேச்சிவிடவா?”

“ஒண்ணும் வேண்டா.. பக்கத்துல வா..”

“..ம்..” மிக அருகே சென்றாள். என்றுமில்லாத தெளிவு அந்த முகத்தில் இன்று. முதன்முதலாக அவனைக்கண்ட போது பார்த்த அந்த பொலிவு.. இப்போது இந்த வற்றிய முகத்தில்.! அதே அழகான சிரிப்பு.

“பிள்ளையளெல்லாம் எழுப்பு.. நா.. பாக்குணும்”

வருவதறிந்த பார்வதிக்கு இதயமே நின்றுவிடும் போலிருந்தது. “தூங்குதுவளே.. காலையில பாத்துக்கிடக்கூடாதா?”

“எழுப்பேன்.. பாக்குணுங்கிறன்லா..”

தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்த பார்வதி பிள்ளைகளை எழுப்பினாள். நிற்க முடியாமல் பிள்ளைகள் தூங்கி வழிந்தன. முத்துப்பாண்டியும், தங்கம்மாவும் என்னவோ ஏதோவென விழித்துக்கொண்டனர். மற்றவை தூக்கம் கலையாமல் தாயின் சேலைத்தலைப்பை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தன. கடைசிப்பிள்ளையை பார்வதி கையில் வைத்திருந்தாள். சொல்லாமலே அணைந்து போகவிருந்த அரிக்கேன் விளக்கைத் தூண்டிவிட்டிருந்தாள். ஆனைக்குட்டி மெல்லிய சிரிப்புடன் இடதுகையால் பிள்ளைகளை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

“சும்மாதா கூப்புட்டேன்.. பாக்குணும் போலயிருந்துச்சு.. போய் படுக்கச்சொல்லு எல்லாத்தியும்...”

அனைவரையும் படுக்க வைத்தாள். பின்னர் அவனருகே வந்தாள். இவளது வலது கையைப் பிடித்த அவனது இடது கையில் வலுவில்லை. கட்டிலில் உட்காரச்சொன்னான். அவனது தோளருகே அமர்ந்தாள். எந்நேரமும் உடைந்துவிடக்கூடியதாய் அவள் இருந்தாள். அந்த‌ மெல்லிய‌ நில‌வொளியிலும் அவ‌ன‌து க‌ண்க‌ள் ப‌ள‌ப‌ள‌த்த‌ன‌. முக‌த்தோடு முக‌ம் நெருங்கிய‌போது, அவ‌ற்றில் இன்னும் ஒரு ஜென்ம‌ம் உன்னோடு இருக்க‌வேண்டும் என்ற‌ ஆசை ப‌ள‌ப‌ள‌த்த‌தைக் க‌ண்டாள். ஆனால் சொல்வ‌த‌ற்கு அவ‌னிட‌மோ, அவ‌ளிட‌மோ வார்த்தைக‌ள் ஒன்றுமில்லை. நரகம் இப்போது அவள் இருக்கும் இடமாய் அவளுக்குத் தோன்றியது. முத‌ல் முறையாக‌ அவ‌ன் க‌ண்க‌ளில் க‌ண்ணீரைக்கண்டாள். காதை நோக்கி வ‌ழிந்த‌ க‌ண்ணீரை த‌ன் க‌ன்ன‌த்தால் துடைத்தாள்.

“ஏங்ய்யா.. இப்பிடிலாம் பண்றீய..?”

“இப்ப எதுக்கு அழுவுத..? எப்பிடியா பட்டவ.. நீ? எனக்குஞ்சேத்து இருக்க வந்தவள்ளா நீ? பிள்ளையள ஆளாக்கி படிக்கவெச்சி கலியாணம்பண்ணி வெச்சி பேரம்பேத்தியள பாத்து.. அவ்வொ பிள்ளையளவும் பாத்துட்டுல்லா நீ வரணும்.. எத்தன பேத்துக்கு இப்பிடி சொல்லிட்டுப் போற குடுப்பின இருக்கும்? ஒனக்கு ஒண்ணும் அவசரமில்ல.. நீ நல்லாயிருப்பே..”

அந்த ‘நீ நல்லாயிருப்பே..’ என்ற வாழ்த்து நூறாண்டு தவமிருந்த பலனாய் கிடைத்த வரத்திற்கு ஒப்பானதாய் இருந்தது. அனைத்தும் புரிந்த பார்வதியின் கண்கள் அன்று சிந்திய கண்ணீர் அவனது முகமெங்கும் ஈரம்படரச்செய்தது. தொடர்ந்து விடிந்த காலையில் அவன் அவளோடு இல்லை. அவள் கால்கள் பின்னர் கடந்த பாதையில் மலர்கள் கிடக்கவுமில்லை. அவளது கண்கள் பின்னர் கண்ணீர் கண்டறியவுமில்லை.

சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் மடியில் விளையாடிக்கொண்டிருந்த காந்திமதி அதன் அம்மாவைத்தேடி அழத்துவங்கியிருக்க, முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த பேரனிடம் அதுவும் ஓர் ஆண்மகனிடம் யாரிடமும் இதுவரை சொல்லிருக்காத ஒரு கதையினை சொல்லி முடித்திருந்த போது அந்த பார்வதி ஆச்சியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தன. இந்தக்கதையை அவள் எங்கு துவங்கினாள்.. எங்கு முடித்தாள்.? இன்றைய பெண்களும் பேசத்தயங்கும் செய்திகளை பகிர்ந்துகொள்ள அவளைத்தூண்டியது எது? அந்த நெகிழ்ச்சி கணவன் விட்டுச்சென்ற பணிகளை செவ்வனே நிறைவேற்றியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியா.?

".. ஆனா அவ்வொ சொன்ன மாதி இன்னும் தெடமாத்தா இருக்கேன்.. இன்னும் தோட்டவேலய நானேதான் பாத்துக்கிடுதேன்.. ஒம்பிள்ளை கலியாணத்தையும் பாத்துட்டுதான் போவேனு நினைக்கேன்..”

சிரித்த‌ப‌டி தொட‌ர்ந்த‌வ‌ள்,

“அவ்வொ சொன்ன மாதி எல்லாத்தியும் பாத்துட்டேன்.. இன்னும் அவ்வுளுக்கு என்னிய கூப்பிட்டுக்கதான் ஆசையில்ல போலுக்கு.."

பனித்த கண்ணீரை தன் வெள்ளைச்சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.

.

Sunday, August 30, 2009

பார்வதி நாச்சியார்

“அவ்வொ.. ஆலங்குளம் முனிசீப்பா இருக்காவ்ளாம், சாவடி வாசல்ல வந்து நின்னா காங்கேயங்காள மாரிதில்லா இருக்குமாம். ஊரே கையெடுத்து கும்முட்டு போமாமே.. எல்லா அவ்வொ அய்யா சேத்துவெச்சிட்டு போன பேருன்னு நேத்திக்கு பூச்சாமி தாத்தா வந்திருந்தப்போ கதகதயா சொல்லிச்சு. பெரிய பள்ளிக்கொடத்துலல்லாம் படிச்சிருக்காவளாம். ஆனா ஒண்ணு தாயி.. கடுங்கோவக்கார ஆளாம். ஒரே நேரத்துல ரெண்டாள தூக்கிவீசிடுவாகளாம்ல.. அவ்ள தெடமாம்”

என்று செல்லம்மா சித்தி அவரைப்பற்றி முதன் முதலாக பார்வதியிடம் சொன்னபோது முதலில் பயம் வந்தாலும் பின்பு தேற்றிக்கொண்டாள். ‘இவ மாப்பிளயே பாக்கப்போலியாம், அதுக்குள்ள எல்லாந் தெரிஞ்சமாரி என்னத்தையாது ஒளறிக்கிட்டிருப்பா.. பாதிக்கி பாதி பொய்யி..’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள். தொடர்ந்து செல்லம்மா சித்தி,

“பேர நெனச்சாதான் சிரிப்பாணியா வருது.. ஆனக்குட்டி தேவராம்ல..” என்று சொல்லி சிரித்த போது அவள் மீது இவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. பின்னர் மாப்பிள்ளை பார்க்கச்சென்ற கும்பலே திரும்பி வந்து கதைகதையாக சொன்னபோது மகிழ்ச்சியும் பயமும் அலைபாய அமைதியிழந்து கிடக்கத்துவங்கினாள். பெரியம்மா தனியாக கூப்பிட்டு, “மாப்ள ராசா மாரி இருக்காரு, நீ குடுத்து வச்சவடி.. ஆனா என்ன ஒன் வாயாடித்தனத்த அங்க காமிச்சின்னா வாயக் கிழிச்சிடுவாரு” என்று சிரித்துக்கொண்டே நெட்டிமுறித்த போது அவள் வெட்கத்தில் சிவந்துபோனாள்.

பின்பு வந்த ஒரு நன்னாளில் இருபத்தொரு வயது ஆனைக்குட்டித்தேவரை அவள் மணந்துகொண்ட போது அவளுக்கு வயது பதினேழு. அந்தப்பகுதியில் யாருமே அதுவரை பார்த்திராத வகையில் நிகழ்ந்தது அவள் திருமணம். ஐம்பது ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு கறி சமைக்கப்பட்டது. ஊரெங்கும் அவள் திருமணத்துக்கு வந்திருந்த மாட்டுவண்டிகளால் நிரம்பியிருந்தன. நீண்ட தூரங்களிலிருந்தெல்லாம் யார் யாரோ வந்திருந்தனர். ஆனைக்குட்டியின் தந்தையாரின் நண்பர் ஒருவர் திருநெல்வேலியிலிருந்து காரில் வந்திருந்தார். அவர் வந்திருந்த பிளசர் காரைப்பற்றிதான் ஊரெங்கும் பேச்சு. அவளால் அதைப்பார்க்க முடியாவிட்டாலும் கமலா பார்த்துவிட்டு வந்து சாயந்தர நேரத்தில் பிரமிப்புடன் சொன்ன கதைகளை கேட்டுக்கொண்டாள்.

திருமண களேபரம் முடிந்து மூன்றாம் நாள் நிகழ்ந்த முதலிரவில்தான் முதல்முதலாக கணவனின் முகத்தைக்கண்டாள். மூர்க்கமான அந்த முதலிரவை அழுது கடந்தவள், பின்வந்த இரவுகளில் லயித்துக்கிடந்தாள். ஒருநாள் இரவில் அவளை அணைத்துக்கிடந்தவன் அவள் காதுகளில் கிசுகிசுத்தான்,

‘நம்முளும் அதுமாரி ஒரு காரு வேங்கலாமா?’

வயல் வெளிகளிலிருந்து அவளுக்காக கடலைச்செடி பிடுங்கி வந்தான். பிஞ்சு வெண்டைக்காய்களையும், வெள்ளரிக்காய்களையும் கொண்டுவந்தான். ஒருநாள் கூண்டு வண்டியில் பாபநாசம் அழைத்துச் சென்றான். அப்போது கிருஷ்ணனை உடன்வர‌ வேண்டாம் எனச்சொல்லிவிட்டு அவனே வண்டியை ஓட்டினான். பிரதான படித்துறையில் குளித்துவந்து கொண்டு வந்த கட்டுச்சோற்றை அங்கேயே வைத்து உண்டு மகிழ்ந்தனர். கூட்டமே இல்லாத அந்த நாளில் கோவிலுக்குள் அவனது பார்வையிலும், சில்மிஷங்களிலும் வெட்கித்துவண்டாள். அவனது செயல்களை இம்மி இம்மியாய் ரசிக்கத்துவங்கியிருந்தாள்.

பஞ்சாயத்துகளுக்காக இவனைத் தேடி தினமும் யாராவது வீட்டுக்கு வந்தவண்ணம் இருந்தனர். ஒருமுறை இருவர் கோபமிகுதியில் இவன் முன்பாகவே அடித்துக்கொள்ள எத்தனித்த போது அதில் ஒருவனது நெஞ்சை தன் வலது தோளால் முட்டி நிறுத்திய காட்சி அவன் வீரத்தின் ஒரு துளியாய் இருந்தது. கிராம முன்சீப்பாக இருந்த போதும் மிக ஆர்வத்தோடு தோட்டம், காடுகழனிகளில் ஈடுபட்டான். உழவு முடிந்து வந்த காளைகள் மாலை நேரங்களில் இவனைக்காண ..ம்மாவென அழைத்ததை வியந்தாள். அவ‌ளையும் வ‌ய‌ல் வேலைக‌ளில் ஈடுப‌டுத்தினான்.

ஊரெல்லாம் வாயாடிய அவள் பேச்சு எங்கு சென்றதென தெரியவில்லை. ஒரு முறை வந்த பெரியம்மா, “பாரேன்.. இந்தப்புள்ளய.. எங்க பாருவதியா இது?” என்று அதிசயித்துச் சென்றாள். முதல் வருடத்தில் அவள் அவனுடன் பேசிய வார்த்தைகளை கைவிரல்களில் எண்ணிவிடலாம். அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச்செய்தாள். முதல் குழந்தை முத்துப்பாண்டியைப் பெற்ற போது அவளுக்கு வயது பதினெட்டு.

“ம்க்க்..க்ம்.. ம்மா” இருமலுடன் கூடிய அந்த மெலிதான அழைப்பைக் கேட்டவுடன் விருட்டென எழுந்து கட்டிலருகே சென்று குனிந்தாள்.

“அய்யா.. இருக்கேன். என்ன வேணும்?” என்றாள் மெதுவாக.

“நா கூப்பிடுல.. சும்மாதா.. நீ ..ன்னும் தூங்கிலியா?” அவரின் கம்பீரமான குரல் ஒரு மழலையின் குரல்போல குழைந்து போயிருந்தது. அவர் பேசுவது அவளுக்கு மட்டுமே புரிந்தது. அவர் முகத்தைக் கவனித்தாள். நோயின் தீவிரத்தில் முகம் எவ்வளவு வற்றிப்போய்விட்டது. மெதுவாக புன்னகைத்தார். “போ.. படு” மீண்டும் படுத்துக் கொண்டாள்.

இப்போது நேரம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. நிச்சயம் நள்ளிரவைத் தாண்டியிருக்கும். கடந்த சில நாட்களாக தூக்கம் அவளைத் தொடுவதாகவே இல்லை. முதலில் அழுவதாகவும், பின்பு கணவனின் தைரியத்தைக் கைக்கொண்ட வைராக்கியம் பொருந்தியதாகவும் அவள் கண்கள் மாறி மாறி இரட்டைவேடம் போட்டுக்கொண்டிருந்தன. பளபளப்பான அந்த விழிகளில் தீராத பெருந்துயர் ஒன்றின் வேதனை உடனிருந்தது.

கிழக்குப்பக்கமாக இருந்த ஜன்னலில் இருந்து நிலவொளி வீட்டினுள் வந்து விழுந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் குழந்தைகள் வரிசையாக படுத்திருந்ததை கண்டாள். மூன்று பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் கலைந்து கிடந்தனர். தொட்டிலில் கடைசிப் பெண்குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. மொத்தம் ஏழு பிள்ளைகள். மூத்தவன் முற்றத்திலிருக்கும் வேப்பமரத்தின் அடியில் கிடக்கும் கல்மேடையில் உறங்கிக்கிடக்கிறான். அவனுக்கே இப்போது பதினான்கு வயதுதான் ஆகிறது. அவனுக்கு அடுத்தவளான தங்கம்மா சென்ற மாசியில்தான் பூப்படைந்திருக்கிறாள். கவலை குபுக்கென ஒரு துளி நீராய் வெளியாகி தலையணையை நனைத்தது.

இடப்புறமிருந்த கட்டிலிலிருந்து வந்துகொண்டிருந்த மெலிதான குறட்டைச்சத்தம் நின்று இப்போது அந்த வறட்டு இருமல் துவங்கியிருந்தது. கால்கைகளுக்குத் தேய்க்கவேண்டிய மருந்துகள் தீர்ந்துவிட்டிருந்தன. நாளைக்கு மீண்டும் அம்பாசமுத்திரம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நாள். எழுந்ததும் முதல் வேலையாக கிருஷ்ணனை வண்டிகட்டச் சொல்லவேண்டும். மெதுவாக இயல்பாக திரும்புபவளைப்போன்று திரும்பி கட்டிலை பார்த்துக்கொண்டாள். சலனமில்லாமல் படுத்திருப்பது தெரிந்தது. அவளுக்குள் அலையலையாய் துக்கம் எழும்பியது. எப்படி இருந்த மனிதர்?

அவள் வாழ்க்கையையே புரட்டிபோட்ட அந்த நாளும் அவள் நினைவில் ஏனோ இப்போது வந்துபோனது.

ருநாள் காலையில் குதூகலமாய் இரண்டு நண்பர்களுடன் வெளியே சென்ற ஆனைக்குட்டியை மாலையில் கொதிக்கும் காய்ச்சலுடன் நண்பர்கள் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்துவந்து கட்டிலில் கிடத்தியபோது அப்படி ஒன்றும் யாரும் அதிர்ச்சியடையவில்லை. வைத்தியர் வரவழைக்கப்பட்டார். உள்ளுக்கு மருந்து தந்து தூங்கவைத்துவிட்டுச் செல்லும் போது அவர், “ஒண்ணுமில்ல.. சாதா காய்ச்சதான்.. காலைலே சரியாப்போய்ரும்” என்று கூறிவிட்டுதான் சென்றார். விடிந்தும் விடியாத காலை வேளையில் வலதுகாலும், வலதுகையும் பக்கவாதத்தால் இழுத்துக் கொண்டுவிட வேதனையில் முனகிக் கொண்டு கட்டிலில் கிடந்த கணவனைக் கண்ட போது, அதிர்ச்சியில் கால்கள் தரையிலிருந்து நழுவ.. கீழே விழுந்துவிடாமலிருக்க சுவரைப்பிடித்துக்கொண்டு நின்ற பார்வதியின் இடுப்பில் நான்காவதாய் பிறந்த கந்தசாமியும், வயிற்றில் அடுத்துப் பிறக்க இருந்த காந்திமதியும் இருந்தனர்.

அன்று அவள் அழுத அழுகையின் ஓலம் அந்த ஆனைமலை அய்யனாருக்கே கேட்டிருக்கும்..

(தொடரும்..

சற்று பெரிதாகிவிட்டதால் இரண்டாக பிரிக்கப்படுகிறது. இறுதிப்பகுதி இன்றே.. சில மணி நேரங்கள் கழித்து..)
.

Saturday, August 29, 2009

மொக்கைப்பதிவுகள் 2008: டாப் 10.!

டாப் 10 என்று பார்த்ததுமே இன்னொரு பத்தா? என டென்ஷன் ஆகாமல் மேலே போகவும். விஷயம் இருக்கிறது..

வேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்துவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம்.? நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.

கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் :

*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ள‌ப்படவில்லை.
*ஒரே நபரின் பல பதிவுகள் பரிசீலனையில் இருந்தாலும் 10க்குள் ஒன்றுக்கு மேற்பட்டவை வந்தால் ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*தேர்வுக்குழுவில் நான் மட்டுமே இல்லை, எனினும் ரிஸ்க் கருதி பிறரது பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.
*இதில் லஞ்ச லாவண்யங்களுக்கு இடம்தரப்படவில்லை.
*சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவர்களின் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதிச்சுற்றில் நடுவர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

இனி டாப் 10..


10. ப‌த்தாவ‌து இட‌த்தில் அண்ண‌ன் த‌மிழ் பிரிய‌ன். சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு வெளியான‌ இந்த‌ப்ப‌திவு ஆனந்தவிகடனில் வெளியாக இருந்து கடைசி நேரத்தில் சுயமறுப்பாக வேண்டாம் என்று இருந்த பதிவு. சமீபத்தில் இதன் ரீமிக்ஸ்ஸாக‌ இன்னொரு ப‌திவு அவ‌ர் இட்டிருந்தாலும்
ஒரிஜின‌லுக்கான‌ம‌திப்பே த‌னி.

9. அடுத்த‌ இட‌த்தை வெல்ப‌வ‌ர் தோழ‌ர் ப‌ரிச‌ல். இந்த‌ப்ப‌திவில் த‌ன‌க்காக‌ இல்லாம‌ல் த‌ன‌து ச‌க‌ ப‌திவர் தோழர் அதிஷாவுக்கு உதவும்பொருட்டு‌ மென‌க்கெட்டு செய்த‌ சேவை புல்ல‌ரிக்க‌வைப்ப‌தாக‌ இருந்த‌து.

8 . அடுத்த‌ இட‌ம் கார்க்கிக்கு செல்கிறது. இவ‌ரின் தலைசிறந்த ப‌ல‌ ப‌டைப்புக‌ளில் தேர்ந்தெடுப்ப‌து சிர‌மாக‌ இருந்த‌தால் கும்ஸாக‌ இது த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ருக்கிடையே நிக‌ழ்ந்த‌ ராபிட் ப‌ய‌ர் இன்ட‌ர்வியூவை த‌ந்திருக்கிறார்.

7. சீட்டு விளையாட்டைப்பற்றி அண்ணன் வால்பையன் எழுதிய இந்த ஆராய்ச்சிப்பதிவு பெரும் புரட்சியை கிளப்பியது அப்போது. நீங்களும் இதைப்படித்து சூது பற்றி அறிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது உங்களைப்பார்த்து சூது வாது தெரியாதவன் என்று சொல்லிவிடக்கூடும்.

6. தான் பெண் பார்த்த அழகை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விதவிதமாக வாங்கிக்கட்டிக்கொண்ட அண்ணன் சஞ்சய்யின் இந்தப்பதிவு பிடிக்கிறது ஆறாவது இடத்தை.

5. எல்லோரும் ரொம்ப‌ சீரிய‌ஸா திங்க் பண்ணி ப‌தில் சொன்ன‌ ஒரு முக்கிய‌மான‌ தொட‌ர் ப‌திவில் தைரியமாய் முடிந்த‌ வ‌ரை மொக்கை போட்ட‌ வீராங்க‌னை அக்கா ஸ்ரீம‌தி வெல்கிறார் ஐந்தாவ‌து இட‌த்தை.!

4. உடல் நலமில்லாத ஒரு நேரத்தில், டாக்டரை பார்க்கச்செல்கிறார் நமது அனைவரின் அன்புக்குரிய அண்ணந்தம்பி அப்துல்லா. அப்போது அந்த டாக்டரை கலாய்த்த அனுபவம் பெறுகிறது அழகான இந்த நான்காவது இடத்தை.

3. ஆர‌ம்ப‌த்திலேயே அகிலாண்ட‌ நாய‌க‌னுக்கு அருமையாக குரல் கொடுத்து நமது அன்பை சம்பாதித்துக்கொண்ட அதிஷா அடுத்த இடத்தைப்பிடிக்கிறார். இதில் தெறிக்கும் JKR ஆத‌ர‌வுக்குர‌லைக‌வ‌னியுங்க‌ள்.

2. நமது கலாய்த்தல் திலகம் குசும்பன் அவர்கள் சக பதிவர்களை வைத்தே நமது அருமைத் தல.. நர்சிமை கலாய்த்த (இது கீழ்க்கண்ட மொக்கை இலக்கணத்தில் அடங்காவிட்டாலும்) இந்தப்பதிவுபெறுகிறது இரண்டாம் இடத்தை.! வாழ்த்துகள் குசும்பரே..

1. ஒரு மொக்கைக்கே அர‌ண்டு போகும் உங்க‌ளுக்கு ஒரு மொக்கை விருந்தே வைத்த‌ இந்த‌ப்ப‌திவுக்கே முத‌லிட‌ம் வ‌ழ‌ங்கி நானும் ர‌வுடிதான் என்ப‌தை பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.


பி.கு 1: நல்ல மொக்கைப்ப‌திவுக‌ள் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என‌ ச‌மீப‌த்தில் ஒரு மூத்த ப‌திவ‌ர் சொன்ன‌போது இந்த‌ விள‌க்க‌ம் கேட்க நேர்ந்த‌து. படித்தவுடன் வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சியில் சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25% ஆகிய‌ன‌ ஏற்ப‌ட‌வேண்டுமாம். ஏற்ப‌ட்ட‌தா?

பி.கு 2: இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதவர்கள் ச்சு..ச்சு.. அழக்கூடாது.! இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.

பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.

**************************************

சென்ற ஆண்டு டிசம்பரில் 'வலைச்சரம்' வலைப்பூவில் எழுதிய பதிவு ரிப்பீட்டு செய்யப்படுகிறது. ஆகவே இது ரிப்பீட்டு கணக்கில் சேர்க்கப்படாது. மேலும் இந்த லிஸ்டில் இடம்பெற்ற மொக்கைப்பதிவர்களை தூக்கி சாப்பிடும் வகையில் புதிய மொக்கைகளின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களைப்பற்றிய லிஸ்ட் விரைவில் வெளியிடப்படும். நன்றி. ஹிஹி...

.

Friday, August 28, 2009

நீ வெறும் பிளாகர்தான்..

என்ன விசேஷமோ தெரியவில்லை, ரமா இன்று பாயாசம் (என்ற பெயரில் ஒன்று) வைத்திருந்தார். மாலை வந்ததும் ஒரு கிளாஸ் தரப்பட்டது. குடித்துவிட்டு சும்மாயிருக்காமல் நான் சொன்ன கமெண்டில் கடுப்பானவர் "நக்கலா பண்றீங்க.. நைட்டுக்கு பால் கிடையாது. இதிலேயே தண்ணி ஊத்தி சுட வச்சு தருவேன். காலி பண்ணிட்டுதான் படுக்கிறீங்க.." வரவர நமக்கும் கொஞ்சம் வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு என்று நினைத்துக்கொண்டேன்.

**********

தங்கமணி, டெக்னிகல், கண்ணன் கதைகள் தலைப்புகளில் பல விஷயங்களை எழுத வைத்திருந்தாலும் நேரமில்லை. அவ்வப்போது வேறு விஷயங்களும் முன்னுரிமையில் வந்துவிடுகின்றன. கண்ணனிடம் புலம்பிக்கொண்டிருந்த போது கொஞ்சம் எரிச்சலில் சொன்னான், "என்னடா ஓவரா பில்ட்அப் பண்றே.. நீ இப்போ எழுதலைன்னு யாராவது அழுதாங்களா என்ன? நேரமிருக்கிறப்போ மெல்ல எழுது.. என்ன அவசரம். இல்லை மொக்கை போடத்தான் நேரமிருக்கிறது என்றால் செய். ஏன் இப்படி புலம்பல்? நீ வெறும்பிளாகர்தான், ஞாபகம் வச்சுக்கோ.." அவன் என்னவோ பிளாகர் என்ற சொல்லை அழுத்திச்சொன்னது போல எனக்குப்பட்டது. வேறெதுவும் அதில் உள்ளர்த்தம் இருக்கும்கிறீங்க..

**********

ஃபாலோயர்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. (அதையேன் கேட்குறீங்க.. 207ல் பிரேக் அடித்து அப்படியே நின்று வெறுப்பேற்றியது இப்போது தன் பழைய (ஆமை) வேகத்தில் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.. ஹிஹி..)

**********

இளவயதில் பிரிந்து, காதலாகி பருவத்தில் தேடியலைந்து காதலியை கண்டடைவதைப்போல அழகான கவிதையாய் மலரும் 'ஏர்டெல் டிஜிடல் டிவி' விளம்பரத்தின் கிளைமாக்ஸ் அதிர வைத்தது. அதுவும் சரிதான், பின்னே.. ஒரே கிளைமாக்ஸை இன்னும் எத்தனை நாட்கள்தான் பார்த்துக்கொண்டிருப்பது. வித்தியாசமான சிந்தனைதான் ரசனை.! அப்படியே சமீபத்தில் கவர்ந்த இன்னொரு விளம்பரம் 'கோஹினூர் ஜாஸ்மின்'. அழகு.!

**********
குட்டிக்கவிதை :

வெட்டுப்பட்ட இடங்களிலெல்லாம்
துளிர்த்துக்கொண்டேயிருக்கும்
முருங்கையைப்போன்றது
உனக்கும் எனக்கும் இடையேயான
காதல்.!

***********

போன பதிவின் கொடும்படத்தை ஸாரி குறும்படத்தை போட்டு கும்முகும்முனு கும்மிவிட்டீர்கள். அது இவ்வளவுக்கும் பாதியில் கைவிடப்பட்ட ஒரு படத்தில் சில காட்சிகள்தான். எடுத்த வரைக்கும் 30 நிமிடத்துக்கு மேல் வருகிறது. முழுதும் போட்டால் உங்கள் கதி என்னவாகும் என்பதை சற்று எண்ணிப்பார்க்கவும். இந்நிலையில் அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஹீரோ கார்க்கிதான் என முடிவாகிவிட்டது. ஒரு முக்கியமான அப்பா காரெக்டர் இருப்பதால் அதற்காக அனுஜன்யா, வடகரை வேலனை அணுகியதில் ரெண்டு பேரும் கடுப்பாகி ஃபோனை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்களாம்.

**********

ஒரு விளம்பரம் :

.

Thursday, August 27, 2009

வ‌சூல் ம‌ழை பொழிகிற‌து!

காலையில் லேட்டாக எழுந்து அவசர அவசரமாக பேப்பரைப்பார்த்துவிட்டு ரமா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு ஆ.:பீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது கண்ணனிடமிருந்து போன் வந்தது.

'என்னடா?' என்றேன்.
'பேப்பர் பாத்தியா?'
'பார்த்தேனே, ஏதாவது முக்கியமான விஷயமா? மிஸ் பண்ணிட்டேனா..'

இப்பிடித்தான் பேப்பர் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது டிஸ்கஸ்/இன்பார்ம் பண்ண‌ லைவ்வாக கூப்பிடுவான்.

'ஒண்ணும் இல்ல, கந்தசாமி விளம்பரத்த பாரு..'
மீண்டும் பேப்பரைத்திறந்தேன், விளம்பரத்தைத்தேடி.. பார்த்தேன்.

"இந்தப்படத்தின் சாதனை
கடலுக்குள் கடுகு போட்டு
தேடி கண்டு பிடிப்பதற்கு சமம்"


என்று எழுதியிருந்தார்கள்.
'அதுக்கென்ன இப்போ' என்றேன்.
'இல்ல, என்ன‌ அர்த்த‌ம்னு தெரிஞ்சுக்க‌லாம்னு..'
'க‌ட‌லுக்குள் போட‌ப்ப‌ட்ட‌ க‌டுகை எடுப்ப‌து எவ்வ‌ளவு பெரிய‌ சாத‌னையோ அதற்கு இணையான‌ சாத‌னை என்று அர்த்த‌ம்.'
'கடலுக்குள் போடப்பட்ட கடுகை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இப்படத்தில் என்ன சாதனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் என்றுதான் எனக்கு விளங்குது'
'காலைலேயே என்ன‌ வெறுப்பேத்துறியா, ஆ.:பீஸுக்கு கிள‌ம்ப‌லியா இன்னும்?'
'நான் ஏதாவது அறிவுப்பூர்வமா கேட்டால் மட்டும் உனக்கு உடனே கோவம் வந்துருமே, சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' என்று சொல்லிவிட்டு போனை க‌ட் பண்ணினேன்.

நான் சொல்வ‌து ச‌ரியா, இல்லை அவ‌ன் சொல்வ‌து ச‌ரியா என்று நீங்க‌ளே சொல்ல‌லாம். ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் கீழ்க்க‌ண்ட‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில் சொல்ல‌லாம்.

ப‌ட‌ம் வெளியான‌ இர‌ண்டாவ‌து நாளே 'வ‌சூல் ம‌ழை பொழிகிற‌து' என்று விள‌ம்ப‌ர‌ம் செய்கிறார்க‌ள். இத‌ற்கு 'எங்க‌ளுக்கு நிறைய‌ ப‌ண‌ம் கிடைத்திருக்கிற‌து, நீங்க‌ளும் வ‌ந்து ப‌ண‌ம் கொடுங்க‌ள்' என்றுதானே அர்த்த‌ம். ப‌திலாக‌ அத‌ன் உள்ள‌ர்த்த‌மான‌ 'நிறைய‌ கூட்ட‌ம் வ‌ருகிற‌து, ஆக‌வே இது ந‌ல்ல‌ ப‌ட‌ம் போல‌த்தான் தெரிகிற‌து, என‌வே நீங்க‌ளும் வ‌ந்து பாருங்க‌ள்' என்று ஏன் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌வ‌தில்லை?

இவ்வ‌ளவு செல‌வு செய்து க‌லைய‌ம்ச‌ம் மிக்க‌ ப‌ட‌ங்க‌ள் எடுப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ வாச‌க‌ங்க‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் மொக்கை ப‌ஞ்ச் வ‌ச‌ன‌ங்க‌ளையும், அதையும் மூன்று வ‌ரிக‌ளுக்கு ஏழு த‌வ‌று என்ற‌ அடிப்ப‌டையிலும் வெளியிடுவ‌து ஏன்? (குறைந்த‌ப‌ட்ச‌ம் அதை ப‌த்திரிகைக‌ள் கூட‌ க‌வ‌னிக்காம‌ல் யாருக்கோ வ‌ந்த‌ விருந்து போல‌ இருப்ப‌து ஏன்?)

உதார‌ணங்கள் :
1.(இரண்டாம் நாள் விளம்பரம்) இதுவறை கன்டிராத மாபெறும் வெற்ரி! அதிற‌டி வெற்றி! அடித‌டி வெற்றி!

2. கற்ப்புக்கு புதிய விளக்கம், தாய்ம்மார்க‌ள் கொன்டாடும் முன்றாவது நாள்!

3.இந்த ஆன்டின் இனையற்ற ஹிட்டு! இளஞர்கள் பேற்றும் 'மிய்யாவ்' பாடள்!

.

Tuesday, August 25, 2009

சமூக அநீதி (+குறும்படக் கொடுமை)

நான் ஐந்தாம் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது சிறுவர் மலரில் வரும் கதைகளை வாசித்துவிட்டு மாதம் ஒரு முறை நிகழும் மாணவர் மன்றங்களில் கையைக்கட்டிக்கொண்டு கதை சொல்வேன். இதைக்கண்ட ஒரு ஆசிரியர் கொஞ்சம் வலிந்து ஊக்கம் தந்து அதே போன்ற ஒரு கதையை நாடகமாக்கி மேலும் சில மாணவர்களையும் சேர்த்து ஒரு முறை நடிக்க வைத்தார். அப்போதைய நாட்கள் சரியாக நினைவிலில்லை என்பதால் அதுகுறித்து எழுதமுடியவில்லை. ஆனால் அப்போதில்லாத மேடைநடுக்கம் அடுத்தடுத்த வருடங்களிலேயே பற்றிக்கொள்ள ஒன்பதாம் வகுப்பின் போது ஒரு திருக்குறளைக்கூட பிரேயரின் போது சொல்லமுடியாமல் 'பெப்பே பெப்பே' எனுமளவுக்குப் போய்விட்டது.

இவ்வாறான நிலையில் +2 படிக்கையில் ஒரு விபரீதம் நிகழ்ந்தது. கோவில் விழாக்களில் கரகம், லைட் மியூஸிக் என்பன ஜரூராக நடக்கும் வேளைகளில் சில சமயங்களில் சினிமா ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கூடி நாடகம் நிகழ்த்துவதுமுண்டு. அது போலத்தான் அந்த சம்பவமும் நிகழ்ந்தது. உடன் படிக்கும் நண்பன் ஒருவனின் (தீவிர ரஜினி ரசிகன்) தீராத நடிப்பு, இயக்க தாகத்தால் ஊர் கோவில் திருவிழாவின் போது ஒரு நாடகம் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டது. அது எங்கள் ஊர் அல்ல. பக்கத்திலிருந்த நண்பனின் ஊர். என் தம்பி 10ம் வகுப்பு படிக்கும் போதே இன்னாரது மகன் என பக்கத்து ஊர்களில் எல்லாம் பிரபலம். என்னை எங்கள் ஊரிலேயே அவ்வளவாக யாருக்கும் தெரியாது (இன்றைக்கும் கூட). அவ்வளவு அமைதி (ஹிஹி).

கதை, வசனம், இயக்கம் மூன்றும் அவனேதான் (மொத்தமே அவ்வளவுதான்). இதுமாதிரி வேலைகள் எல்லாம் ரொம்ப சவாலானது. ஏனெனில் நிறைய தடங்கல்கள், எதிர்ப்புகள் இருக்கும். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். ஹீரோயினெல்லாம் கிடையாது. முதலிலேயே நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டதால் மேல்வேலைகளுக்கு உதவி செய்துகொண்டிருந்தேன். சம்பவ தினத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்னமே பக்கத்து கல்யாணமண்டபத்தில் உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு (அப்போதானே தம்மடிக்கமுடியும்) ரிகர்சல் நடந்துகொண்டிருந்தது. டான்ஸெல்லாம் உண்டு. கதையில் இதற்கென்றே காட்சிகள் வைக்கப்படும் (திணிக்கப்படும்). ஆரம்பத்தில் நண்பர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பிக்கும் காட்சியில் பின்னணியில் 'பழமுதிர்ச்சோலை..' பாடல் ஒலிக்க டான்ஸ் ஆடுவார்கள். இப்படியாக லவ் ஸாங், சோகப்பாடல் எல்லாம் உண்டு. ஒரு சண்டைக்காட்சி கூட உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்நிலையில் கடைசி நாள் அன்று இன்னொரு ஹீரோ ஊரில் பாட்டிக்கு உடம்பு சரில்லை என கல்தா கொடுத்துவிட்டு ஓடிவிட்டான். இயக்குனருக்கு கடும் கோபம் பிளஸ் சங்கடம். நாலு பேரு சுத்தி உட்கார்ந்து எனக்கு சோப்பு போட ஆரம்பித்தார்கள் (இல்லைன்னா ரகசியங்கள் வெளியிடப்படும்னு மிரட்டல் வேறு). பிறகு டான்ஸ் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்ற கண்டிஷன் பேரில் வேறு வழியில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். நான் நடிக்கவிருந்த அந்த இரண்டாவது ஹீரோ வேடம் ஒரு கால் ஊனமுற்ற இளைஞனது பாத்திரம். கதையே அவனது தாழ்வுமனப்பான்மையும், ஊரார் கேலியும் அதனால் அவன் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதும்தான். அந்த இன்னொரு ஹீரோ (இயக்குனர் நடிப்பது) இவனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கமுயன்று முடியாமல் கடைசியில் நண்பன் இறந்ததால் அதிர்ச்சியுற்று துக்கத்தில் ஊரைபார்த்து வசனம் பேசிவிட்டு அவனும் மருந்து குடித்து இறந்துவிடுவது போல டிராஜிடி கிளைமாக்ஸ். நாடகத்தின் பெயர் சொல்லலையே.. "சமூக அநீதி" (எப்பூடி?)

எனக்கு சும்மாவே ஞாபக சக்தி அதிகம். அவன் எழுதி வைத்துள்ள வசனங்கள் வேறு நாக்கு சுளுக்கிக் கொள்வது போல இருந்தன. ரிகர்சலுக்கும் நேரமில்லை. மாலை ஏழுமணிக்கு நாடகம் துவங்குகிறது. முகத்திலெல்லாம் அவ்வளவு நடிப்பை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. லைட்டிங் லட்சணம் அவ்வளவுதான். மேலும் மக்கள் அமர்ந்திருக்கும் தூரத்தில் யாரோ மேடையில் நிற்பது மட்டும்தான் தெரியும்.

இருப்பினும் மேடையேறியதும் வந்திருந்த கூட்டத்தைப்பார்த்து என் கால்கள் உதற ஆரம்பித்தன. ஏற்கனவே கால் ஊனமுற்ற பாத்திரம் என்பதால் இயல்பாக இருந்ததாக பின்னர் நண்பர்கள் கூறினார்கள். இடையில் பல இடங்களில் "டேய் வசந்த்.." என்பதற்குப்பதிலாக "டேய் மாடசாமி.." (இயக்குனரின் நிஜப்பெயர்)என்று சொதப்பினேன். மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

கிளைமாக்ஸ் என்ன ஆச்சுன்னு சொல்லணுமே. நான் சோக வசனம் பேசிவிட்டு பூச்சி மருந்தைக்குடித்துவிட்டு மேடையில் பொத்தென விழுந்தேன். (அப்பாடா நிம்மதி, நம் வேலை முடிந்தது) அடுத்து இயக்குனர் வந்து வீராவேசமாய் வசனம் பேசி சாக வேண்டும். ஆனால் அவனோ யாரிடமும் சொல்லாமல் (இயக்குனரல்லவா?) ஏற்கனவே திரைக்கதையில் இல்லாதபடிக்கு ராஜ்கிரண் போல என்னை மடியில் போட்டு தலையில் முட்டி முட்டி அழுது (எனக்கு வலி தாங்கலை) மக்களைப்பார்த்து "இப்படி ஒரு நல்லவனை கொன்றுவிட்டீர்களே.. பாவிகளா?" என்று தாறுமாறாக வசனம் பேசி கடைசியில் மருந்தைக்குடித்து என் மேலேயே பொத்தென விழுந்தான். நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் நடிப்பது?. திரை விழுந்ததுதான் தாமதம், அவனை விரட்டி விரட்டி மொத்தி என் ஆத்திரத்தை தணித்துக்கொண்டேன்.

அப்புறம் பின்னொரு நாள் அவன் வீட்டுக்கு சென்ற போது பக்கத்து வீட்டு பெண்கள் "அன்னிக்கு நாடகத்துல நடிச்சானே அந்தப்பையன்தானே இவன்.? காலு நல்லாயிருக்கே? நான் நிசமாவே காலு வெளங்காதுன்னுல்லா நினைச்சேன்.?" என்று புகழ்ந்த போது என் திறமையை நானே மெச்சிக்கொண்டேன்.

அதோடு நம் நடிப்பு பணிகள் மூட்டைகட்டப்பட்டன. பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் ஒரு குறும்பட முயற்சியில் இறங்கி அது பாதியில் கைவிடப்பட்டது (கார்க்கி நடித்த 'நீ எங்கே?' விற்குப் பிறகு நடந்தது அந்த அநியாயம்) உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அப்போதுதான் நம் நடிப்புக்கு மீண்டும் வேலை வந்தது. அதில் நடிக்க ஆள் கிடைக்காமல் நானே ஒரு பாத்திரத்தை (திருவோடு மாதிரின்னு வச்சுக்குங்களேன்) ஏற்கும் சூழல் வந்தது. சிட்டியில் வாழும் ஒரு நபர் கிராமத்துக்கு செல்லும் போது பக்கத்துக்கிராம பழைய நண்பனை சந்திப்பது போல காட்சி. அந்தப் படம் டிராப் செய்யப்பட்டதால் (ஹிஹி.. ஃபைனான்ஸ் பிரச்சினை) அந்தக்காட்சி மட்டும் எடிட் செய்து தரப்படுகிறது. அந்த நடிப்பு லட்சணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். (படத்தின் முழுக்கதையையும் சொன்னால் யாரும் சினிமாக்காரர்கள் திருடிவிடும் ஆபத்திருப்பதால் கதையை சொல்லமுடியாத நிலையில் இருக்கிறோம். ஸாரி..)
.

பின்குறிப்பு :

*இந்த நடிப்புக்கு யாராவது அவார்டு கொடுப்பதாக இருந்தால் மெயிலில் முன்னனுமதி வாங்கிக்கொள்ளவும்.

*படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது.

.

Thursday, August 20, 2009

ஒரு விளம்பரம்


பொதுச்சேவைகள் பிடிக்கும் என்று ஒரு பெருமைக்காக பொய் சொல்லிக்கொண்டாலும் மரம் நடுவது மட்டும் ஏனோ எனக்கு மிகவும் அவசியமானது என்று தோன்றிக்கொண்டேயிருப்பது மட்டுமில்லாமல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருப்பது உண்மை. ஆகவே இந்த 'சென்னை சமூக சேவை நிறுவனத்'தின் இந்த சேவை குறித்து கேள்விப்பட்டவுடன் அதன் நம்பகத்தன்மையைக்கூட சந்தேகிக்காமல் அதை விளம்பரப்படுத்த முயன்றிருக்கிறேன். இயன்றவர்கள், விருப்பமிருப்பவர்கள் தவறாது சேவையை பயன்படுத்துங்கள். நாம் நீடித்திருக்க ஒரு இலையை தளிர்க்கச்செய்யுங்கள்.!

.

Wednesday, August 19, 2009

விடியலைப்போன்ற உன் அழகுஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!

**********

காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்

**********

உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்

**********

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்

.

Monday, August 17, 2009

ஆஃபிஸ் மீட்டிங்கும் அரசியல் மீட்டிங்கும்

டாபிக்கை ஆரம்பிக்கும் முன், பெரிசா பில்டப் பண்ணினா தேடி வந்து ஒதைப்பேன்னு ஒரு முக்கிய பதிவர் மிரட்டியுள்ளதால் நேரடியாக விஷயத்துக்குப் போய்விடுவோம்.

10. ஆபிஸ் மீட்டிங்குக்கு கூட்டம் சேர்ப்பது எவ்வளவு கடினமோ அதே கடினம்தான் அரசியல் மீட்டிங்குக்கு ஆள் சேர்ப்பதும். என்ன ஒண்ணு, சைஸ்தான் வித்தியாசம்.

09. அங்கே பேப்பர் விளம்பரம், போஸ்டர், ஆட்டோ அலறல்கள் எனில் இங்கே இண்டர் மெயில்கள், ரிமைண்டர்கள் கடைசி நேர போன்கால்கள். அப்படியும் எதிர்பார்த்த அளவில் கூட்டம் சேராது.

08. அங்கே பிரியாணி, கோட்டர் என்றால் இங்கே பிஸ்கெட்ஸ், டீ. சமயங்களில் மிரட்டல்களும் உண்டு.

07. பேசுபவர்களை உற்றுக் கவனித்தோமானால் கொஞ்சம் பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது இரண்டிலுமே.. தேமே என்று இருந்துவிட்டு கடைசியில் கைதட்டிவிட்டு போய்விடுவது நல்லது.

06. இரண்டு மீட்டிங்குமே யாரோ ஒருத்தரின் பொழுதுபோக்குக்காகவே கூட்டப்படுகிறது. அவர் தன் சாதனைகளாக கருதுவதை பிறருக்கு விளக்கவே இந்தப்பாடு.

05. அல்லக்கைகள் சப்போர்ட் இரண்டுக்குமே ரொம்ப அவசியம்.

04. இரண்டிலுமே கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. குறைந்தபட்சம் கொட்டாவி நிச்சயம்.

03. எப்போதாவது அதிசயமாய் இங்கே திட்டமிடல், அங்கே தேர்தல் பிரச்சாரம் என நடத்தப்படும் மீட்டிங்குகளின் போது பேசுபவர்கள் கேட்பவர்களிடம் பணிந்து செல்வதும் உண்டு.

02. வாய்ஜாலம் மிக்கவர்கள் முன்னேற மிக நல்ல வாய்ப்பாக இருப்பது இவ்வாறான மீட்டிங்குகளே.

01. நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே.

Thursday, August 13, 2009

பொய்யோடு மகிழ்தல்

ஒரே ஆரவாரம்.. அமைதியாக இருந்த அந்த நீர்ப்பரப்பு மெல்ல மெல்ல அலைபாயத்துவங்கியது. நேரம் செல்லச்செல்ல அலைகள் பெரிதாக எழத்துவங்கின. கொஞ்ச நேரத்தில் பெருத்த இடியோசை, சூறாவளியின் பேரிரைச்சல், அருகிலிருந்த கொடித்தூண் சாய.. வெண்புகை சூழ, நூறடி உயரத்துக்கு நீர்த்தாரைகள் எழும்பின. ஓவென எங்கும் மக்களின் உற்சாக பேரிரைச்சல்.

சுனாமி.?

ஒன்றுமில்லை, மேற்சொன்ன காட்சி கிஷ்கிந்தாவில் தினமும் நிகழும் சுனாமிக்காட்சி.! ஜோக் சொன்னால் இப்ப என்ன என்று கேட்கிறவர்களும், கொஞ்சம் முதிர்ந்த மனநிலையும் கொண்டவர்கள் "ஹோஸ் பைப்பில் தண்ணிய பீச்சியடிச்சா அது சுனாமியா.?" என்று கேட்கக்கூடும். இதையே குழந்தை மனநிலையில் இருந்தால் மேற்சொன்ன மாதிரியும் அந்தக் காட்சியைக் காணலாம். அது குழந்தைகளுக்கான நிகழ்ச்சிதான், வளர்ந்த குழந்தைகளுக்கும் சேர்த்துதான். நான்கைந்து ஃபவுண்டன்களை ஒரு சேர பீய்ச்சி, வெண்புகை கிளப்பி சுனாமி போல ஒரு தோற்றத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக இருப்பது பேரிரைச்சலை உருவாக்கும் பெரிய பெரிய ஸ்பீக்கர்கள். சிறப்பு என்று சொல்ல இயலாவிட்டாலும் முயற்சியை பாராட்டலாம்.

மேலும் இன்னொரு சுவாரசியம், சிமுலேஷன் காட்சி. முன்னால் ஸ்பென்ஸர்ஸில் ஒரு சிறிய சிமுலேஷன் காட்சி அரங்கம் இருந்தது. இப்போது இல்லை என நினைக்கிறேன். திரையில் ஓடும் படத்திற்கேற்ப நாம் அமர்ந்திருக்கும் நாற்காலிகளும் ஆட குழந்தைகளுக்கு ஒரு குட்டி திரில்லிங் அனுபவம். அரதப்பழசான "பழுதுபட்ட தண்டவாளம், குகைகளுக்குள் ஓடும் ட்ராலியில் பயணம்" செய்யும் அதே படத்தைத்தான் இன்னும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் ரசிக்கமுடிகிறது.

எதையோ சொல்ல வந்து கிஷ்கிந்தா மார்கெட்டிங் வேலை பண்ணிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்.

பொய்கள்.!

உங்கள் லாஜிக்குகளையும், புத்திசாலித்தனங்களையும் குப்பையிலே கொண்டு போட்டுவிடலாம். பொய்களை அனுபவிக்கலாம். அது சுகமானது. ஒரு மாஜிக் நிபுணர் வித்தைகள் செய்து காண்பிக்கிறார். ஆவ்வ்வ்.. வென வேடிக்கை பார்க்கலாம். அவர் அதை அங்கே மறைத்து வைத்திருக்கிறார், முன்னமே இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்.. என்றெல்லாம் ஆராய்ச்சி எதற்கு? டிவியிலே 'டோராவின் பயணங்கள்' பார்க்கிறோம். புஜ்ஜிக்கு உதவ மூன்று தடவை "பேக் பேக்" என்று கத்த வேண்டும். நாம் கத்தினால்தான் Pack வெளிவரும். ஆம், நிஜம்தான். கத்தலாம், புஜ்ஜிக்கு உதவலாம்.

சுகமானதல்லவா அந்த உலகம்.

என் மாமா ஒருவர் இருக்கிறார். குழந்தைகளோடு விளையாடுகையில் குழந்தையாகவே மாறிவிடுவார். ஒரு காட்சி. ஐந்து சின்னக்குழந்தைகள். இவர். வட்டமாக அமர்ந்திருக்கின்றனர். கைகளில் ஒரு பக்கம் தரையில் உரசிய சுமார் 50 புளியமுத்துக்கள் இருக்கின்றன. அவற்றுடன் உரசப்படாத முழு முத்துக்களும் கலக்கப்படுகின்றன. ஒருவர் அவற்றை குலுக்கி நடுவில் வீசிவிட அனைவரும் வேகமாக உரசிய முத்துக்களை மட்டும் பொறுக்க வேண்டும். அதிக முத்துக்கள் எடுப்பவர் வெற்றியாளர்.

இந்த விளையாட்டை பக்கத்திலிருந்து பார்க்கவேண்டுமே.. அவ்வளவு குதூகலமாக இருக்கும். வட்டத்தின் நடுவில் அவ்வளவு கைகலப்பு நிகழும். குழந்தைக் கைகள் என்றும் பாராமல் அவரும் ஊடே முத்துக்களை எடுக்க போராடுவர். விட்டுக் கொடுக்கமாட்டார். சமயங்களில் வட்டம் கலைந்து அடிதடி நிகழும். கைகளில் உரத்து இடி வாங்கிய குழந்தைகள் ஓவென அழுதுகொண்டே எழுந்து பெண்களிடம் சென்று முறையிடத்துவங்கும். முத்துக்கள் கிடைக்காத குழந்தைகளும் ஆற்றாமையால் அழுகையை அடக்கமுடியாமல் அடிபட்டு அழுவதைப்போல பொய்யாக அழுதுகொண்டே எழுந்து செல்வார்கள். அற்புதமாக இருக்கும். உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.!

.

Wednesday, August 12, 2009

லோன் குடுங்கடா டேய்..

முந்தைய பயோடேட்டா பதிவுகள் ரெண்டும் ஓரளவு ஹிட்டாகிவிட்டன. அதே கிரிப்பில் ஆதி : பயோடேட்டா, பதிவர்கள் : பயோடேட்டா என மொக்கை போட்டு பிஸியாக இருக்கும் இந்த வாரத்தை ஒப்பேற்றிவிடலாம் என திட்டமிட்டிருந்தேன். அதன் பின்னூட்டத்திலேயே ஜானி என் பயோடேட்டாவை போட்டு கலாய்க்க, அண்ணாச்சி தனி பதிவாகவே பயோடேட்டா போட்டு ஆப்பு வைத்துவிட்டார். மேலும் அமுதாகிருஷ்ணன் பதிவர்கள் டேட்டாவை எழுதிவிட என் திட்டம் அம்பேலாகிவிட்டது. வேறு வழியில்லாமல் இதோ அவியல் கிண்டிக்கொண்டிருக்கிறேன்.

**********

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவுலக சிறுகதைத் திருவிழா கோலாகலமாக நடந்துமுடிந்திருக்கிறது. என்னதான் போட்டியில் நாம் பல்பு வாங்கினாலும், இந்த அரிய செயல் நடக்க காரணமானவர்களை பாராட்டாமல் போனால் எனக்குள்ளிருக்கும் எழுத்தாளன்(சிரிக்கக்கூடாது) என் மூக்கிலேயே குத்தும் ஆபத்திருக்கிறது. ஆகவே இன்னும் இதுபோன்ற பல நிகழ்வுகளை சாத்தியமாக்கி முன்னெடுத்துச்செல்ல அண்ணன்மார் பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம்சுந்தர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் அன்பு.

**********

வடகரை அண்ணாச்சி இன்று நம் பயோடேட்டாவை எழுத கோ இன்சிடெண்டாக கேபிள் சங்கரும் நம்மை கலாய்த்து இன்று பதிவெழுத அதனால் நம் கடைக்கு கூட்டம் கூட லாபம் நமக்கு. கேபிள் 2012ல் எடுக்கவிருக்கும் முதல் சினிமா இமாலய வெற்றி பெறக்கடவதாக. (தொடர்ந்து நர்சிம், பரிசல், கார்க்கி ஆகியோரும் என்னைப் பற்றி பாராட்டி இன்றே பதிவெழுத இருப்பதாக தகவல்கள் வருகின்றன, ஜாக்கிரதை.!)

**********

நாம் போகும் திசையில் மட்டும் பஸ்ஸே வராது என்பது போல தேவைப்படாத நேரங்களிலெல்லாம் போனிலும், நேரிலும் நொய்யி நொய்யி என்று படுத்தும் இந்த பாங்க்காரர்கள்.. ரெண்டு வாரமாக ஒரு சின்ன அமவுண்டை(2 மாச சம்பளம்தாங்க..) லோன் வாங்க முயன்று கொண்டிருக்கிறேன், படுத்துகிறார்கள். அலுவலகம் தவிர்த்து சென்னையில் அடிக்கடி வீடு மாறிக்கொண்டிருந்ததால் அட்ரஸ் இல்லாத ஆளாக கருதி அப்ளிகேஷன்களை ரிஜக்ட் செய்துவிடுகிறார்கள். கையெழுத்து கோணையாக இருக்கிறது (என் கையெழுத்தே அப்படித்தாண்டா இருக்கும்), ஸ்டேட்மெண்டில் பேரு இல்லை என காரணங்கள் வேறு. ஐந்து வருடங்களாக கிரிஸ்டல் கிளியர் பாங்கிங் ட்ரான்ஸ்சாக்ஷன்ஸ் வைத்திருந்தால் இப்படித்தான் படுத்துவீங்களா, அட போங்கப்பா.. லோனும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். (கைமாத்து குடுக்க தயாரக இருப்பவர்கள் போனில் அழைக்கலாம்.. ஹிஹி..)

**********

என்னது கவுஜயா.? ஊஹூம் அதெல்லாம் கிடையாது. பொன்மொழிதான் சொல்லுவேன். பல்வேறு காரணங்களில் ஆக்கப்பூர்வமாக செயலாற்றிக்கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்களைக் காண்கையில் ஞாபகம் வருவது இது.

"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது" - கமல்ஹாசன்.

.

Tuesday, August 11, 2009

ரமா : பயோடேட்டா

முன்குறிப்பு : ஒரு பதிவு ஹிட்டானா அந்த ஐடியாவை அவ்வளவு சீக்கிரம் விட்டுடமுடியுமா? தமிழ்சினிமாக்காரங்க மாதிரி அதே பிளேட்ட திருப்பித் திருப்பி போடுவோம்ல.. நாளைக்கும் கூட பயோடேட்டாதான்.. யாரோடதுன்னு சொல்லுங்க பார்ப்போம். (ஹிஹி.. உண்மையில் நேரமின்மை. அதான் இப்பிடி சிம்பிள் பதிவுகள்)

பெயர் : ரமா

புதிய பெயர் : சுபா அம்மா

வயது : அப்படின்னா.?

தொழில் : இம்சை

உபதொழில் : பர்சேஸ் பண்ணுவது

குணம் : கொஞ்சம் ஆங்காரம் கொஞ்சம் ரீங்காரம்

குரல் : எப்போதும் ஹை பிட்ச்

நண்பர்கள் : கீழ்வீட்டுக்காரர்கள் தக்காளிப்பழம் கடன் தரும் போது

எதிரிகள் : அவர்களே.. தண்ணீர் பிடித்து வைக்காத போது

பிடித்த வேலை : சமைப்பது அல்ல

பிடித்த உணவு : கண்டிப்பாக தாமிராவுக்கு பிடிக்காதது

பிடித்த உடை : கடைகளிலிருந்து இன்னும் வாங்கப்பட்டிருக்காத சேலைகள்

பிடித்த இடம் : அஞ்சப்பர், தாம்பரம்

விரும்புவது : டெபிட் கார்டு

விரும்பாதது : நல்லவேளையாய் கிரெடிட் கார்டு

பொழுதுபோக்கு : தாமிராவை ஒரு நாளைக்கு ஐந்துமுறை கடைக்கு அனுப்புவது

புரிந்தது : ஆண்கள் ஆபீஸில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்

புரியாதது : எதிலேயுமே திருப்தின்னா.?

எளிய செயல் : தாமிராவை கோபப்படுத்துவது

அதைவிட எளிய செயல் : அதை ஆற்றுப்படுத்துவது

சமீபத்திய எரிச்சல் : பழைய பேப்பர்காரன் 1 ரூபாய் ஏமாற்றியது

நீண்டகால எரிச்சல் : தாமிரா

சமீபத்திய சாதனை : முட்டைக்குழம்பு டேஸ்ட்டாக வைத்தது

நீண்டகால சாதனை : 'நா தப்புப்பண்ணிட்டேண்டா' என தாமிராவை அலறவைத்தது


பின்குறிப்பு : வீடு, அடுப்பு, குழந்தை என்று பெண்கள் விரிந்து / ஒடுங்கிப்போவதில் எனக்கும் தெளிந்த மனநிலை இல்லை எனினும் பெரும்பாலாலும் கற்பனையான இந்தப்பதிவை உள்நோக்கமில்லாத நகைச்சுவை நோக்கில் எடுத்துக்கொள்ளும் படி பெண்ணியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

.

Monday, August 10, 2009

சுபா : பயோடேட்டா


பெயர் : சுபா

வயது : ம்மா.. தவிர்த்து இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை

தொழில் : படுத்துவது

உபதொழில் : தோளில் மட்டுமே தூங்குவது

நண்பர்கள் : வெளியே தூக்கிச்செல்பவர்கள்

எதிரிகள் : தண்ணீரில் சலம்ப விடாதவர்கள்

பிடித்த வேலை : கையில் கிடைப்பதை எடுத்து கண்ணில் படுவதன் மேல் எறிவது (அதாவது செல்போனை டிவி மேல் எறிவது போன்ற)

பிடித்த உணவு : ஐஸ்கிரீம் (அதுவும் இரவில்)

பிடித்த உடை : எதுவும் இல்லை (அதாவது எதுவும் இல்லாமலிருப்பது)

பிடித்த இடம் : ஃபிரிட்ஜ்

விரும்புவது : கொட்டிக்கவிழ்ப்பது (பவுடர் டப்பா, உணவுக்கிண்ணம், தண்ணீர் பாட்டில் என எதையும் எப்போதும்)

விரும்பாதது : சாப்பிடுவது

பொழுதுபோக்கு : இரவு நேரங்களில் அலறி பிறரை எழுப்பிவிடுவது

பிடித்த பொருட்கள் : வாட்ச், செல்போன், ரிமோட், etc.,

பிடிக்காத பொருட்கள் : பொம்மைகள்

சமீபத்திய எரிச்சல் : கதவிடுக்கில் விரல் மாட்டிக்கொண்டது

நீண்டகால எரிச்சல் : பால்

சமீபத்திய சாதனை : முத்தம் கொடுக்கக் கற்றது

நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது

.

Friday, August 7, 2009

ட்ரெயின் லேட்டாவுது சார்..

சமீபத்தில் அண்ணாச்சி வடகரை வேலன் 'மக்கட்பதர்' என்று ஒரு பதிவில் சில கருத்துகளை எழுதியிருந்தார். அதைப்படித்ததும் இந்த கீழ்க்கண்ட விஷயம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்த 'ஓடினால்தான் ஆறு' பதிவில் அவரின் நோக்கத்தை முழுதும் அறியலாம்.

எங்கள் நிறுவனத்திலும் ஆன் ரோல், ஆஃப் ரோல் நடைமுறை உள்ளது. எங்கள் துறையில் குவிந்துகிடக்கும் ரிப்போர்ட்டுகளை கணினியில் எண்ட்ரி செய்வது, ஃபைல் பண்ணுவது, தேவைப்படும் போது தேடி எடுத்துத்தருவது, நகல் எடுப்பது போன்ற வேலைகளைச் செய்ய இரண்டு +2 படித்த பையன்கள் இருந்தனர். சமீபத்தில் ஒரு பையன் வேறு வேலை கிடைத்துப் போய்விட புதிய பையன் ஒருவனை அமர்த்தினோம். பெரிதாக இண்டர்வியூவெல்லாம் கிடையாது. வழக்கமான மேன் பவர் காண்ட்ராக்டரிடம் இருந்தே பெற்றுக்கொள்வோம்.

எந்த பிரஷரும் இல்லாத சுகமான வேலை. மானேஜர் டார்ச்சர் கிடையாது. டெக்னிகல் டென்ஷன் கிடையாது. ஃபிரீயா போன். ஃப்ரீயா இண்டர்நெட். அதெல்லாம் நாங்கள் ஒன்றும் பெரிதாக மறுப்பு சொல்லமாட்டோம். மணியடித்தால் சாப்பாடு. நடுக்கும் ஏசி ரூம். வாய்ப்பு கிடைத்து திறனையும் வளர்த்துக்கொண்டால் ஆன் ரோலுக்கான வாய்ப்பு (சிறந்த முன்னுதாரணங்கள் உண்டு எங்கள் நிறுவனத்திலேயே).

வந்தவனுக்கு முதல் நாள் மூச்சு முட்ட இரண்டு மணிநேரம் நிறுவனம் குறித்தும், பிராடக்ட் குறித்தும் கிளாஸ் நடத்தினார் ராஜன் (இதெல்லாம் தெரிஞ்சாதான் முழுமையா ஈடுபாட்டோடு வேலை செய்யமுடியும்னு எங்களுக்கு ஒரு நினைப்பு). எக்செல், வேர்ட் மட்டும் கொ்ஞ்சூண்டு தெரிந்திருக்கவேண்டும். முதலில் எல்லாம் தெரியும் தெரியும்னு மண்டையை ஆட்டிவிட்டு எக்செல் ஃபைலில் என்ன கட்டம் கட்டமாக இருக்கிறது என்று கேட்டு முதல் நாளே ராஜனை கடுப்பேத்தினான். டென்ஷனாகாமல் ஒருமணி நேரம் உட்கார வைத்து எக்செல் சொல்லித்தந்தார் ராஜன். மணி ஐந்தாகும் போது 'மிச்சத்தை நாளைக்கு பாத்துக்கலாம், கிளம்பவா சார்?' என்றான்.

மறுநாள் வேர்ட் தெரியுமா என்றதற்கு எங்கே தெரிந்தால் வேலை செய்யச்சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணத்தில் சேஃபாக, ஸ்டைலாக 'ஊஹூம் தெரியாது' என்றான். தலைவிதியே(பாவம், ஒரு பையனை வீட்டுக்கு அனுப்பவேண்டாமே, கொஞ்சம் முயற்சித்தால் பிக்கப் செய்துகொள்வானோ என்ற நல்லெண்ணத்தில்) என்று ராஜன் வேர்டும் சொல்லித்தந்தார். அப்புறம்தான் தெரிந்தது.. ஆங்கிலம் வாசிக்கக்கூட தெரியாது என்று. பேப்பரில் இருப்பதை கீ போர்டில் தேடித்தேடி அப்படியே குத்திக்கொண்டிருந்தான். ஏன் எழுத்துகள் வரிசையாக இல்லை என்று மட்டும்தான் கேட்கவில்லை. (அவ்வளவு கேள்விகள் கேட்டானா என்று கேட்காதீர்கள். அதுதான் உருப்புடுற ஆட்கள் செய்வதாயிற்றே. அவ்வளவு படுத்திவிட்டான் என்று சொல்லவந்தேன்.)

பிறகு கிருஷ்ணா கம்பெனி ஃபைலை எடு என்றால் கிருபா கம்பெனி ஃபைலை எடுத்தான். இன்னாரிடம் (முதல் மாடியில்) இந்த ஃபைலை வாங்கி வா என்றால் 'அவர் 5 நிமிசம் வெயிட் பண்ணச்சொன்னார், 5 நிமிசம் நின்னு பார்த்தேன். அவர் தரலை. வந்துட்டேன்' என்றான். 'ஜெராக்ஸ் மெஷினில் பேப்பர் இல்லை' என்றான் (பக்கத்தில் இருந்தால் எப்படி வைப்பது என்று தெரியவில்லை, சொல்லிக்கொடுத்தபின்னும்). 'உங்களுக்கு எவ்வளவு சார் சம்பளம்?' என்றான். பிரிண்ட் கொடுத்திருக்கேன் எடுத்துட்டு வா என்றால் 'டீக்கு டைமாயிருச்சு, வந்து எடுத்துத் தர்றேன்' என்றான். 'எப்பிடி சார் காண்டீன்ல சாப்புடுறீங்க? ஒரே மாதிரி போடுறானுங்க?'(வருஷத்துக்கு எட்டு இலக்கத்தைத்தாண்டி சம்பளம் வாங்கும் எங்கள் டைரக்டர் உண்பதும் அதே காண்டீன் உணவைத்தான்). அவசரமா அந்த ரிப்போர்ட்டை தேடு என்றால் 'என்ன அவசரம், நாளைக்கு எடுக்கலாமா? மணி நாலேமுக்கால் ஆவுது' என்றான்.

தினமும் காலையில் அரைமணிக்கும் மேலாக லேட்டாக வந்தான்.
ராஜன், "ஏம்ப்பா லேட்டு?"
"ட்ரெயின் லேட்டாவுது சார்"
"முந்தின ட்ரெயின்ல வரவேண்டியதுதானே?"
"அப்படின்னா நா எட்டு மணி ட்ரெயினையே பிடிக்கணும் சார்"
ராஜன் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் காலை மணி 6.

ஒரு கட்டத்தில் இந்த ரிப்போர்ட்டை எண்ட்ரி போட்டுக்கொடு அவசரம் என்ற போது, 'ரொம்ப டயர்டா இருக்குது (சாப்பிட்டுவிட்டு வந்த நேரம்).. நீங்களே போட்டுக்குங்க..' என்றான். ராஜன் என்னைப்பார்த்தார் பரிதாபமாக. பின்பு கேட்டார்,

"எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது கேகே.?"

அன்றுதான் வேறு வழியில்லாமல் அவனை வேலையை விட்டு தூக்க நேர்ந்தது.

.

Wednesday, August 5, 2009

இரை போட்டுத் தூங்கப்பண்ணிவிட்டாயா?

வெளியே தூறல் வலுக்கத்துவங்கியிருந்தது.

கண்களால் காணமுடியாத வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த அந்த உரைகல்லில் கடைசி இழுப்பை இழுத்து முடித்து திருப்தியுடன் முகத்துக்கு நேராக அதை தூக்கிப்பிடித்துப் பார்த்தார் சண்முகநாதன். அப்போது அது எதிர்பாராதவிதமாக அவரது கைகளில் இருந்து நழுவி கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்துபோனது. அது ஒரு பஞ்சமுக விளக்கின் தலைப்பாகம். உடைந்த‌ அதன் ஒரு பகுதியின் கூர்முனை அவரின் வலதுகால் பெருவிரலை பதம்பார்த்ததில் அடுத்த சில விநாடிகளிலேயே நகக்கண்ணிலிருந்து ரத்தம் கொப்பளிக்கத் துவங்கியது. அருணாப்பேரி அம்மனின் பக்தரான சண்முகநாதனுக்கு விரலில் ஏற்பட்ட வலியை விடவும் விளக்கு உடைந்துபோனதால் ஏற்பட்ட வலி அதிகமாக இருந்தது.

ஆசுவாசமாக நாற்காலியில் உட்கார்ந்தார். தென்காசி காசிநாடார் கடைக்கு நாளை தருவதாய் ஒப்புக்கொண்ட 10 விளக்குகளில் ஒன்பதுதான் தயாராகியிருந்தது. அவற்றை பாலிஷ் செய்து விட்டால் வேலைமுடிந்துவிடும். ஒரு இரண்டு மணி நேரம்தான், ஆனால் வேலை செய்யும் மனநிலையில் அவர் இல்லை. சின்னச்சின்ன காமாட்சி விளக்குகளுக்கான அச்சுகளில் உருகிய நிலையில் இருக்கும் பித்தளைக்குழம்பை ஊற்றத் தயாராகிக்கொண்டிருந்த மணிகண்டன் சண்முகநாதனுக்கு அருகில் வந்தான்,

“கால்ல நல்லா ரெத்தம் வருது பாருங்க.. டிஞ்சர் வேங்கிட்டு வரவா சார்.?”

“பரவால்ல மணி, நானே வீட்டுக்குக் கெளம்பலான்னுதான் பாக்கேன். போறவழியில பாத்துக்கிடுதேன். நீ ஒண்ணு பண்ணு. சொன்னமாரி குடுக்கலன்னா நல்லாருக்காது. காமாச்சி வெளக்க நாளைக்கு பாத்துக்கிடலாம்.. மோல்ட மாத்தி இந்த உடைஞ்சி போனதையே இன்னொண்ணு ஊத்திரு. அப்டியே எடுத்து கிரைண்டிங்கையும் முடிச்சுட்டேன்னா காலைல வந்ததும் பாலிஷ் போட்டு குடுத்தனுப்ப வசதியா இருக்கும்.. என்ன சொல்ற? நீ கெளம்ப கொஞ்சம் லேட்டாயிருமே.. பரவால்லையா?”

“பரவால்ல சார், நீங்க சொன்னமாரியே முடிச்சிரலாம்?”

“வேல முடிஞ்சதும் சாவிய நீயே கொண்டு போயிரு. வீணா வீட்டுக்கு அலையவேண்டாம். நாளைக்கு வரம்போது ரெண்டு பேரும் ஒண்ணா வந்துரலாம்..”

“மழ பேய்தே சார், எப்பிடி போப்போறீங்க? நா வேணா சைக்கிள்ள கொண்டுவந்து விட்டிறவா?”

“எப்பிடியும் நனையத்தான போறோம். நீ வேலையப்பாரு.. நா நடந்தே போய்கிடுதேன்”

வெளியே வந்து டியூஷன் சென்டரை நோக்கி நடக்கத்துவங்கினார். ‘வலுத்துத்தான் பெய்கிறது. தொப்பலா நனஞ்சிருவோம், பேசாம வீட்டுக்குப்போயிரலாமா?’ யோசனை ஒருபக்கம். ‘ம்ஹூம்.. வீட்ல செல்வியும் இல்ல, ஒரு மாசமாவப்போவுது அம்மா வீட்டுக்கு போனா எளவு வந்து தொலையுதாளா.? சென்டர்ல பிள்ளையள்லாம் போயிருச்சான்னு பாத்துட்டு போயிரலாம், மழ நிக்கலன்னா செண்டர்லயே இன்னிக்கு படுத்துக்க வேண்டிதுதான்’. நடக்க நடக்க கால் பெருவிரல் இன்னும் வலித்தது. ‘இந்த சுந்தர்பயலும் ஒழுங்கா வேலைக்கு வந்தான்னா இன்னும் கொஞ்சம் வேலையெல்லாம் எடுத்துச்செய்யலாம், மணி ஒருத்தன மட்டும் வெச்சி சமாளிக்கிறது கஷ்டமாயிருக்கே?’

சண்முகநாதனின் எண்ணங்கள் வீடு, விளக்குப்பட்டறை, கடை, ட்யூஷன் சென்டர், சங்கத்தின் பொறுப்பு என பலவற்றையும் சுற்றிவந்தது. அந்த மகிழ்வண்ணநாதபுரம் என்ற சிற்றூரில் மட்டுமல்ல சுற்றுவட்டார கிராமங்களிலும் சண்முகநாதன் மிகவும் அறியப்படுபவராய் இருந்தார். சண்முகநாதன் என்றால் கூட சிலர் யோசிக்கக்கூடும், ‘சம்முகம் சார்’ என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. நல்ல படிப்பாளி என்றும் மிக நல்லவர் என்றும் பெயரெடுத்திருந்தார். எந்நேரமும் சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும் என ஊரே அவரை அறிந்திருந்தது.

அவர் M.Sc கணிதம் முடித்து தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த காலத்தில் பொழுதுபோக்காகத்தான் அந்த டியூஷன் சென்டரை துவக்கினார். முதலில் இலவசமாக கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் மனதுக்குப்பிடித்தமான ஒரு வேலை அமையாததாலும் பக்கத்து கிராமங்களிலிருந்தும் பிள்ளைகள் வரத்துவங்கி, ஏராளமான பெற்றோர்களின் வேண்டுகோளுக்காகவும் சென்டரை தொடர்ந்து நடத்தவேண்டியதாயிற்று. அதன்பின்னரே பிள்ளைகளின் குடும்பச்சூழல் அறிந்து சிறு தொகையினை கட்டணமாகப் பெறத்துவங்கினார். வெறும் பாடங்களை மட்டுமல்லாது வாழ்க்கைக்கான ஊக்கத்தையும், சூட்சுமங்களையும் கற்றுத்தந்தார். அவரது மாணவர்கள் அவரை மிக நல்ல ஒரு தோழனாக உணர்ந்தனர். பெரும்பாலும் +2 விலேயே முடித்துக்கொள்வதாயும், அரிதாக சிலர் இளங்கலைப் படிப்புக்கு செல்வதாகவும் இருந்த அந்த கிராமங்களின் கல்வியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றதில் நிச்சயமாக சம்முகம் சாருக்கும் பங்கு உண்டு. அவரிடமிருந்து மாணவர்கள் சிலர் என்ஜினியரிங் கல்விக்கும், மருத்துவக்கல்விக்கும் செல்லத்துவங்கியபோது அந்தக்கிராமங்களின் தவிர்க்க இயலாத மனிதராக மாறிப்போனார் சண்முகநாதன்.

டியூஷன் சென்டர் துவங்கிய ஐந்தாவது வருடம் பெற்றோர் பார்த்து முடிவுசெய்த எட்டாம் வகுப்பு வரையே படித்திருந்த ‘செல்வி’யை மகிழ்வோடு திருமணம் செய்துகொண்டார். இன்று மூத்த பிள்ளை முருகானந்தம் முதல் வகுப்பு செல்கிறான். இடைப்பட்ட காலத்தில் வருமானம் கருதியும், காலை நேரத்தை பயனுள்ளதாக கழிக்க வேண்டியும் ஒரு விளக்குப்பட்டறையை துவங்கினார். குத்துவிளக்கு, மணிவிளக்கு, வாழைப்பூவிளக்கு, காமாட்சிவிளக்கு என விதவிதமான விளக்குகளை தயாரித்தார். அந்தச் சிறு நிறுவனம் பெரும் செல்வத்தை கொண்டுவரவில்லை எனினும் அவரின் சிறு தேவைகளையாவது பூர்த்தி பண்ணிக்கொண்டிருக்கிறது. மேலும் தரமான அந்த விளக்குகள் அவரது பெயரை அந்தக் கிராமங்களைத் தாண்டியும் எடுத்துச்சென்றன. பின்னர் அந்த பட்டறையில் உருவாகும் விளக்குகள், பூஜைப்பொருட்களை விற்பதற்காக ஒரு சிறு கடையையும் துவங்கினார்.

இவை தவிர, அருணாப்பேரியில் உடல்ஊனமுற்ற குழந்தைகளுக்காக இயங்கி வந்த ‘பால சேவா சங்கம்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கும் அடிக்கடி சென்று இயன்ற உதவிகளைச் செய்துவந்தார். நாளடைவில் அவர்களின் திட்டப்பணிகளின் ஆலோசனைக்கு வரவேற்கப்பட்டார். ஒரு நாள் அதன் நிறுவனர், சங்கத்தின் ‘பொருளாளர்’ பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டபோது இவரால் மறுக்க இயலவில்லை. எல்லா நாட்களும் வரவேண்டிய அவசியமிருக்காது என்ற காரணத்தால் அதையும் ஏற்றுக்கொண்டார்.

காலையில் பட்டறை, பின்னர் மதியம் வரை கடை, பிறகு நான்கு மணி வரை சங்கம். பின்னர் ஐந்துமணியிலிருந்து ஒன்பது மணி வரை டியூஷன் சென்டர். சுமார் அறுபது பிள்ளைகள், எல்லா வகுப்புகளிலிருந்தும். அவர் ஒருவரால் சமாளிக்கமுடியவில்லை. டியூஷனில் துவக்கத்தில் அவரிடமே படித்து இப்போது கல்லூரி சென்றுகொண்டிருக்கும் தெரிந்த இரண்டு பெண்களை டியூஷனில் உதவியாக வைத்துக் கொண்டார். அவர்கள் வந்த பின்னர் சிறு பிள்ளைகளை சிறப்பாக கவனிக்க முடிந்தமைக்காக மகிழ்ந்தார். சிறு பிள்ளைகள் வகுப்பைப் பார்த்துக்கொள்வது, எக்ஸாம்ஸ் நடத்துவது, பேப்பர்கள் திருத்துவது என அவர்கள் மிக உதவியாக இருந்தனர். இன்று போல இவரால் வரமுடியாத சூழல் ஏற்பட்டால் அவர்களால் சமாளிக்க முடிந்தது.

“என்ன சார், மழைல நடந்து போறீங்க.. வண்டி என்னாச்சு.?”

“வண்டி பஞ்சராயிட்டுது.. டியூஷன் சென்டர்ல கிடக்குது..”

“சென்டருக்குதான.? நா வேணா டிராப் பண்ணவா சார்.. ஏறிக்குங்க சார்..”

நண்பர் ஒருவர் வீட்டு மாடியில் கூரைவேய்ந்து துவக்கப்பட்ட அந்த டியூஷன் சென்டர் தற்போது சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டு ஒரு பெரிய ஹாலாக உருவாக்கப்பட்டிருந்தது. சண்முகநாதன் சென்டரை அடைந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. மழை இன்னும் விட்டபாடில்லை.

சாரதா மட்டும் பேப்பர் திருத்திக் கொண்டிருந்தாள்.

சில நாட்கள் இங்கேயே தங்கிவிடுவதால் தேவையான உடைகள், துண்டு, போர்வை முதலானவை அங்கே இருந்த ஒரு சிறு பீரோவில் வைக்கப்பட்டிருந்தன. சாரதா இவரைக்கண்டவுடன் எழுந்து அதிலிருந்த ஒரு துண்டை எடுத்துத் தந்தவாறே,

“வாங்க சார், என்ன சார் இப்பிடித்தொப்பலா நனைஞ்சிட்டிங்க.?”

“அதிருக்கட்டும், இன்னிக்கு முத்துலெச்சிமி வரமாட்டேன்னிருந்தாளெ.. நீ தனியா சமாளிச்சிட்டியா? எல்லாப் பிள்ளையளும் வந்திருந்துதுவளா?”

“மழைன்னதுனால எல்லாப்பிள்ளையளும் வரல்ல சார், பாதிபேருதான் வந்திருந்தாங்க.. அதுனால டெஸ்ட்டகூட நாளக்கி வெச்சுக்கலாம்னு விட்டுட்டேன். லெச்சிமி அஞ்சி மணிக்கு வந்துட்டு கொஞ்ச நேரம் இருந்திட்டுதான் போனா.. வீட்டுல விருந்தாளு வந்திருக்காங்களாம். மழ கொஞ்சம் வெறிச்சாமாரி இருந்துது அதான் எட்டர எட்டே முக்காலுக்கெல்லாம் எல்லாரையும் அனுப்பிச்சிட்டேன். நான் கொஞ்ச நேரம் நேத்திக்கு டெஸ்ட் பேப்பர திருத்தலாம்னு உக்காந்தேன். அதுக்குள்ள மழ திரும்பவும் பிடிச்சிருச்சி..”

“பேப்பர நாளைக்கு பாத்துக்கலாம்லா.. மழ வெறிச்சிருக்கும்போதே நீயும் பெயிருக்க வேண்டிதுதான.? பாரு இப்ப எப்பிடி வீட்டுக்குப்போவ.?”

“கொஞ்ச நேரம் பாக்கலாம் சார்.. வெறிச்சிரும்”

“உன் தல.. கீழ முனிசாமியண்ண வீட்ல குட வாங்கித்தாரன், முதல்ல கிளம்பு..”

“இல்ல சார்.. வீட்ல அம்மாவேற இல்ல, வீரவநல்லூர் சித்தி வீட்டுக்கு பெயிருக்கா. பஸ்ஸ விட்டுட்டேம்னா காலைலதான் வர்றேம்னிருக்கா. வீட்டுல ஒத்தையில இருக்கதுக்கு இங்கயே தங்கிறலாமானு பாத்தேன். ஒங்ககிட்ட ஒருவார்த்த கேட்டுக்கிட்டு..”

“என்ன இப்பிடி சொல்லுத.? எதுக்கும் கடேசி பஸ்ஸ பாத்துருவம், வர்றாங்களான்னு..”

“கால்ல என்ன சார் ரத்தம் வருது? என்னாச்சு சார்?”

“ஒண்ணுமில்லம்மா.. விளக்கு கால்ல விழுந்திருச்சு.. லேசாதான், இப்ப பரவால்ல..”

தலையை துவட்டிக்கொண்டு அங்கு கிடந்த ஒரு பாயை உதறி விரித்து உட்கார்ந்தார் சண்முகநாதன். இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள். சாரதாவின் பத்து வயதிலேயே அவளது அப்பா தென்காசியில் ஒரு விபத்தில் இறந்துபோனார். ஏற்கனவே ஏழ்மை நிலையில் இருந்த குடும்பம் அதன் பின்னர் இன்னும் பாதிக்கப்பட்டது. அவளது அம்மா காடுவேலைகளுக்குப் போய் இரண்டு பிள்ளைகளையும் படிக்கவைத்தாள். இவளது அண்ணன் டிப்ளமா படித்து முடித்து வேலைக்குத் திண்டாடிக் கொண்டிருந்தபோது இவர்தான் ஒரு நண்பர் மூலமாக சென்னையில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். கொஞ்சமேனும் நல்ல உணவை உண்ண ஆரம்பித்தது அவள் அண்ணன் சிறிதளவேனும் பணம் அனுப்ப ஆரம்பித்த பின்னர்தான். பிள்ளைகளின் படிப்புக்கும், வேலைக்கும் காரணம் சண்முகநாதன்தான் என்பதில் அவரை ஒரு தெய்வமாகவே மதித்துக் கொண்டிருந்தாள் சாரதாவின் அம்மா.

பல்வேறாக யோசித்துக் கொண்டேயிருந்ததில் அந்தப்பாயிலேயே தூங்கிப்போனார் சண்முகநாதன். ஒரு பெருத்த இடியோசையில் அவர் விழித்துக்கொண்ட போது மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ஐயோ தூங்கிவிட்டோமே இந்தப்பெண் என்ன செய்கிறாள் என எண்ணி விருட்டென எழுந்தவர் சாரதாவை தேடினார். மேஜையினருகே நின்றிருந்த சாரதா தாவணியை கழற்றி பிழிந்துகொண்டிருபதைக் கண்டதும் விருட்டென வேறு பக்கம் திரும்பினார் இவர். இவர் எழுந்ததை அறிந்த சாரதாவும் உடனே தாவணியை அவசர அவசரமாக அணிந்தாள்.

விநாடி நேரம் போதுமானதாக இருக்கிறது..

“என்ன பண்ணிட்டிருக்கே, எப்பிடி நனைஞ்சே.?”

“நீங்க தூங்கிட்டிங்களா? அம்மா வர்றாளான்னு பாக்க கீழ பெயிருந்தேன். கடைசி பஸ்லயும் அவ வரல.. மழை இன்னும் விடல.. அப்டியே உங்க காலுக்கு பிளாஸ்டரும் வாங்கிட்டுவந்தேன்”

“என்னிய எழுப்பிருக்கலாம்ல..” மெதுவாக திரும்பினார்.

“எழுப்பிப்பாத்தேன். அசந்து தூங்கிட்டிருந்திங்க..”

நனைந்திருந்தாள். ஈரத்தில் தாவணி நிறமற்றுப்போயிருந்தது. சண்முகநாதன் முதல்முறையாக தன்னையே வேறாய் உணர்ந்தார். பேசுகையில் அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் வேறெங்கோ அலைபாய்ந்தன அவர் கண்கள். என்ன மாதிரியான கருப்பு இவளது நிறம்? காதுகளில் பிளாஸ்டிக் கம்மல்களல்லவா அணிந்திருக்கிறாள். இவ்வளவு அடர்த்தியானதா இவளது கூந்தல்? கழுத்தில் நகைகள் ஏதுமில்லை. ஒரு சிவப்புக்கயிறு. அதன் முனையில் இருந்த ஒரு செப்பு நாணயம், இப்போது அவள் மார்போடு ஒட்டிக்கொண்டிருந்தது. அவரது பார்வை அவளது மெல்லிய வயிற்றிலும் அதற்குக்கீழும் பரவத்துவங்கியபோது சாரதா அந்தப்பார்வையின் வெப்பத்தைத் தாளமுடியாமல் மேஜைக்குப் பின்னாலிருந்த நாற்காலியில் அமர்ந்து தன்னை ஒடுக்கினாள்.

வெளியே மழை விடாது கொட்டிக்கொண்டிருந்தது. கதவுகள் இல்லாத சன்னல்கள் வழியே சாரலும்.. குளிர்காற்றும். சண்முகநாதனின் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

“அந்த பீரோவிலயிருக்க போர்வையை எடும்மா..”

அவள் எழுந்து அதை எடுத்த போது, “நீதான் நனைஞ்சிருக்கே.. குளிரும், போர்த்திக்கோ” என்றார்.

அவள், “இல்ல பரவால்ல சார்.. நீங்களே மூடிக்குங்க..” என்றபடியே அவரிடம் அதைத் தந்தபோது போர்வையோடு அவளது கையையும் சேர்த்துப் பிடித்து இழுத்தார். மனம் முழுதும் மறுப்பு இருப்பினும் பாயில் கிடந்த அவரின் மீது ஒரு கொடி போல சரிந்தாள் அவள்.

ஊரையே நீர்தெளித்து அலம்பியதைப்போல பளிச்சென்று இருந்தது மறுநாள் காலை. ஆனால் சண்முகநாதனின் மனது அவ்வாறு இல்லை, காலத்துக்கும் இனி அது அமைதி பெறுவது கடினம்தான். சென்டரிலிருந்து வீட்டை நோக்கி நடக்கத்துவங்கினார். அவர் வீட்டிற்குள் கால்வைத்த போதே தெரிந்தது, கடையத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்றிருந்த செல்வி வீடு திரும்பியிருந்தாள் இருபது நாட்களுக்குப் பின்னர்.

"ராத்திரிக்கே வந்திட்டேன்.. எங்க சென்டர்லயே படுத்திட்டியளா.?"

எந்த பதிலும் இல்லாததால், "என்ன ஆச்சு.. ஒடம்பு சரியில்லையா? இல்ல கோவமா?" கையைப்பிடித்தவள் அவர் மார்போடு நெருங்கினாள். நெருங்கியவளை மெதுவாக விலக்கினார் சண்முகநாதன்.

"காச்ச அடிக்கிற மாதிரி இருக்கு.. கொஞ்ச நேரம் படுக்கேன். துங்கிட்டமின்னா 10 மணிக்கி எழுப்பிவிடு" என்றவாறே கட்டிலை நோக்கிச்சென்றார். அப்போது போன் அழைத்தது. எடுத்தபோது உணர்ந்தார் எதிர்முனையில் மாணிக்கம் சென்னையிலிருந்து. பதிலுக்குக் காத்திராமல் படபடவென பொரிந்தான்..

"சார், நல்லாயிருக்கயளா சார்? காலையிலயே தொந்தரவு பண்ணிட்டனா சார்? பிள்ளைய நல்லாருக்கா சார்? சங்கத்துல சார் நல்லாருக்காங்களா சார்? ஒரு முக்கியமான விசயத்த சொல்லுததுக்குதான் கூப்புட்டேன் சார். எங்க அப்பா வழியில சொந்தக்காரங்களாம். போன வாட்டி ஊருக்கு வந்திருக்கும் போதே பையன பாத்துட்டேன் சார். திருநவேலி பக்கம் தச்சநல்லூர்லதான் வீடு. சைக்கிள் கட வச்சிருக்காராம் சார். பிஏ படிச்சிருக்காராம். நம்ம சாரதாக்குதான். சாதகத்த குடுத்துவச்சிருந்தென். நேத்திக்கி போன் பண்ணிருந்தாங்க சார். நல்ல எடமா தெரிது சார். அடுத்தவாரம் பொண்ண பாக்க வரலாமானு கேக்காங்க. இன்னிக்கி சொல்லுதேமின்னிருக்கேன் சார். என்ன சார் பண்ணுறது? எதுக்கும் ஒருவாட்டி எங்கம்மாவ கூட்டிகிட்டு ஒரு எட்டு பெயி பாத்துட்டு வந்துடுதியளா சார்?"

.

Tuesday, August 4, 2009

பிரியா நீ.?

எனக்கும் சுவையான உணவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நான் கடக்கமுடியாத ஒரு தூரமாகவே இத்தனை நாட்களும் இருந்துவந்திருக்கிறது, அது கல்யாணத்துக்கு முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி. நான் பிளஸ் டூ முடிந்ததுமே வீட்டைப்பிரிந்தவன். அதற்கு முன்பும் கூட அவ்வளவு விசேஷமாக ஒன்றும் கிடையாது. என் அம்மா வைக்கும் மீன்குழம்புக்கு இணையாக இன்றுவரை பிறிதொன்றை பார்க்கவில்லை எனினும் அவ்வளவு சிறப்பாக சொல்லிக்கொள்ளும்படி சமையலில் என் அம்மாவுக்கு ஆர்வமிருந்ததில்லை. பல நாட்கள் இரவு உணவு கடைகளிலேயே நிகழும். எனக்கும் 25 வயது வரை உணவின் மீது அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அதன்பின்னர் சிறிது சிறிதாக ஏற்பட்ட ஆர்வம் தீயென பற்றிக்கொண்டது. சுவையான உணவுக்காக அலைய ஆரம்பித்தேன். என்ன இருக்குதோ இல்லையோ நன்கு சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்று பெண்பார்க்கும் போது கண்டிஷனெல்லாம் போட்டேன். அதை யார் காதில் வாங்கிக்கொண்டார்கள்.? ஹும்.!

வீட்டில் வெறுத்து, ஆபீஸ் கேண்டீனில் வெறுத்து, சில ஹோட்டல்களில் வெறுத்து 'கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்.?' என்று சில‌ நாட்க‌ளில் வாய்விட்டு புல‌ம்பியிருக்கிறேன். இப்ப‌டியான‌ சூழ்நிலைக‌ளில் என்றாவ‌து ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ ர‌மா 'கூட்டாஞ்சோறு' செய்திருப்பாள். புல‌ம்பிக்கொண்டே ஏதோ ஒரு லோக்கல் ஹோட்ட‌லில் போய் அம‌ர்ந்தால் ஆப்ப‌மும் தேங்காய்ப்பாலும் ம‌ன‌தை நிறைக்கும். கேண்டீனில் கீரைக்க‌றியும், ர‌ச‌மும் என‌ புல்ல‌ரிக்க‌ வைப்பார்க‌ள். அன்றெல்லாம் எழுந்திருக்க முடியாத அளவு சாப்பிட்டுவைப்பேன். ஆனால் எல்லாமே அத்தி பூத்தாற்போல‌த்தான். சரி விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

ஹைத‌ராபாத் பிரியாணி, ஹைத‌ராபாத் பிரியாணி என்று வ‌ஸ்து ரொம்ப‌ .:பேம‌ஸாக‌ இருக்கிற‌தே.. நாமும்தான் அடிக்க‌டி ஹைத‌ராபாத் போகிறோமே.. இந்த‌முறை ச‌ரியாக‌ க‌டையை விசாரித்து வாங்கிவிட‌ வேண்டிய‌துதான் என்று முடிவு செய்திருந்தேன். முந்தைய‌ அனுப‌வ‌ங்க‌ள் அவ்வ‌ள‌வு சு‌க‌மில்லை. ஒருமுறை த‌ங்கியிருந்த‌ ஹோட்ட‌லில் இரவு உணவுக்காக ஆர்ட‌ர் செய்த‌போது (ஹைத‌ராபாத் ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று மெனுவில் இருந்த‌து) மிள‌காய் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ க‌டும் ம‌சாலா நிறைந்த‌ குறைந்த‌து நான்கு பேர் சாப்பிடும் அளவில் ஒரு ப‌டைய‌லை நிக‌ழ்த்திவிட்டு போனார் உப‌ச‌ரிப்பாள‌ர். அதைப்பார்த்தே வ‌யிறு நிறைந்துபோனேன்.

எப்ப‌டி திருநெல்வேலி அல்வா எனில் இருட்டுக்க‌டையோ அதைப்போல‌ இங்கு ஏதாவ‌து ஸ்பெஷ‌ல் க‌டை இருக்க‌க்கூடும் என‌ எண்ணிக்கொண்டேன். சில‌ரை விசாரித்த‌போது ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வித‌மாய் ப‌தில் சொன்னார்க‌ள். ஒருவ‌ர் பார‌டைஸ் ச‌ர்க்கிளில் உள்ள‌து என்றார். இன்னொருவ‌ர் பாலாந‌க‌ர் என்றார். இன்னொருவ‌ர் சாக‌ர் லேக் அருகில் என்றார். சிலருக்கு பிரியாணியா அப்பிடின்னா என்ன என்றார்கள். விள‌ங்கிரும் என்று விட்டுவிட்டேன்.

ஆகவே குறைந்தபட்சம் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு கடைகளில் ட்ரை பண்ணுவேன். அவ்வாறே இந்தமுறை ர‌யில்வேஸ்டேஷ‌னில் ஒரு க‌டையில் 'ஸ்பெஷ‌ல் சிக்க‌ன் பிரியாணி' வாங்கிக்கொண்டேன். சாப்பிடும் போது பார்ச‌லைத்திற‌ந்தேன். நான்கு பேர் சாப்பிடும் அள‌வு. நம்புங்கள், உப்பு உறைப்பில்லாத‌ வெள்ளை சாத‌ம். அடியாள‌த்தில் ஒரு முட்டையும், இர‌ண்டு பெரிய‌ சைஸ் சிக்க‌ன் 65 துண்டுக‌ளும் ஒளித்துவைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. இதுதான் பிரியாணி என்று இன்னும் என்னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. யாராவ‌து புண்ணிய‌வான் அடுத்தமுறையாவ‌து நான் அங்கே வ‌ரும்போது பிரியாணி வாங்கித்த‌ர‌ட்டும் என‌ வாழ்த்துங்க‌ள்.

டிஸ்கி : சென்ற‌ ர‌ம்ஜானுக்கு அப்துலுக்கு போன் ப‌ண்ணி பிரியாணி என்று இழுத்தேன். 'நான் சைவ‌ம்' என்று ஒரே வ‌ரியில் முடித்துக்கொண்டார். கிடைத்த‌ ஒரே இஸ்லாமிய‌த்தோழ‌ரும் (த‌மிழ் பிரிய‌ன்தான் துபாயில் இருக்கிறாரே..) சைவ‌ம் என்றால் நான் என்ன‌தான் செய்ய‌முடியும் சொல்லுங்க‌ள்.