Sunday, August 30, 2009

பார்வதி நாச்சியார்

“அவ்வொ.. ஆலங்குளம் முனிசீப்பா இருக்காவ்ளாம், சாவடி வாசல்ல வந்து நின்னா காங்கேயங்காள மாரிதில்லா இருக்குமாம். ஊரே கையெடுத்து கும்முட்டு போமாமே.. எல்லா அவ்வொ அய்யா சேத்துவெச்சிட்டு போன பேருன்னு நேத்திக்கு பூச்சாமி தாத்தா வந்திருந்தப்போ கதகதயா சொல்லிச்சு. பெரிய பள்ளிக்கொடத்துலல்லாம் படிச்சிருக்காவளாம். ஆனா ஒண்ணு தாயி.. கடுங்கோவக்கார ஆளாம். ஒரே நேரத்துல ரெண்டாள தூக்கிவீசிடுவாகளாம்ல.. அவ்ள தெடமாம்”

என்று செல்லம்மா சித்தி அவரைப்பற்றி முதன் முதலாக பார்வதியிடம் சொன்னபோது முதலில் பயம் வந்தாலும் பின்பு தேற்றிக்கொண்டாள். ‘இவ மாப்பிளயே பாக்கப்போலியாம், அதுக்குள்ள எல்லாந் தெரிஞ்சமாரி என்னத்தையாது ஒளறிக்கிட்டிருப்பா.. பாதிக்கி பாதி பொய்யி..’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள். தொடர்ந்து செல்லம்மா சித்தி,

“பேர நெனச்சாதான் சிரிப்பாணியா வருது.. ஆனக்குட்டி தேவராம்ல..” என்று சொல்லி சிரித்த போது அவள் மீது இவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. பின்னர் மாப்பிள்ளை பார்க்கச்சென்ற கும்பலே திரும்பி வந்து கதைகதையாக சொன்னபோது மகிழ்ச்சியும் பயமும் அலைபாய அமைதியிழந்து கிடக்கத்துவங்கினாள். பெரியம்மா தனியாக கூப்பிட்டு, “மாப்ள ராசா மாரி இருக்காரு, நீ குடுத்து வச்சவடி.. ஆனா என்ன ஒன் வாயாடித்தனத்த அங்க காமிச்சின்னா வாயக் கிழிச்சிடுவாரு” என்று சிரித்துக்கொண்டே நெட்டிமுறித்த போது அவள் வெட்கத்தில் சிவந்துபோனாள்.

பின்பு வந்த ஒரு நன்னாளில் இருபத்தொரு வயது ஆனைக்குட்டித்தேவரை அவள் மணந்துகொண்ட போது அவளுக்கு வயது பதினேழு. அந்தப்பகுதியில் யாருமே அதுவரை பார்த்திராத வகையில் நிகழ்ந்தது அவள் திருமணம். ஐம்பது ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு கறி சமைக்கப்பட்டது. ஊரெங்கும் அவள் திருமணத்துக்கு வந்திருந்த மாட்டுவண்டிகளால் நிரம்பியிருந்தன. நீண்ட தூரங்களிலிருந்தெல்லாம் யார் யாரோ வந்திருந்தனர். ஆனைக்குட்டியின் தந்தையாரின் நண்பர் ஒருவர் திருநெல்வேலியிலிருந்து காரில் வந்திருந்தார். அவர் வந்திருந்த பிளசர் காரைப்பற்றிதான் ஊரெங்கும் பேச்சு. அவளால் அதைப்பார்க்க முடியாவிட்டாலும் கமலா பார்த்துவிட்டு வந்து சாயந்தர நேரத்தில் பிரமிப்புடன் சொன்ன கதைகளை கேட்டுக்கொண்டாள்.

திருமண களேபரம் முடிந்து மூன்றாம் நாள் நிகழ்ந்த முதலிரவில்தான் முதல்முதலாக கணவனின் முகத்தைக்கண்டாள். மூர்க்கமான அந்த முதலிரவை அழுது கடந்தவள், பின்வந்த இரவுகளில் லயித்துக்கிடந்தாள். ஒருநாள் இரவில் அவளை அணைத்துக்கிடந்தவன் அவள் காதுகளில் கிசுகிசுத்தான்,

‘நம்முளும் அதுமாரி ஒரு காரு வேங்கலாமா?’

வயல் வெளிகளிலிருந்து அவளுக்காக கடலைச்செடி பிடுங்கி வந்தான். பிஞ்சு வெண்டைக்காய்களையும், வெள்ளரிக்காய்களையும் கொண்டுவந்தான். ஒருநாள் கூண்டு வண்டியில் பாபநாசம் அழைத்துச் சென்றான். அப்போது கிருஷ்ணனை உடன்வர‌ வேண்டாம் எனச்சொல்லிவிட்டு அவனே வண்டியை ஓட்டினான். பிரதான படித்துறையில் குளித்துவந்து கொண்டு வந்த கட்டுச்சோற்றை அங்கேயே வைத்து உண்டு மகிழ்ந்தனர். கூட்டமே இல்லாத அந்த நாளில் கோவிலுக்குள் அவனது பார்வையிலும், சில்மிஷங்களிலும் வெட்கித்துவண்டாள். அவனது செயல்களை இம்மி இம்மியாய் ரசிக்கத்துவங்கியிருந்தாள்.

பஞ்சாயத்துகளுக்காக இவனைத் தேடி தினமும் யாராவது வீட்டுக்கு வந்தவண்ணம் இருந்தனர். ஒருமுறை இருவர் கோபமிகுதியில் இவன் முன்பாகவே அடித்துக்கொள்ள எத்தனித்த போது அதில் ஒருவனது நெஞ்சை தன் வலது தோளால் முட்டி நிறுத்திய காட்சி அவன் வீரத்தின் ஒரு துளியாய் இருந்தது. கிராம முன்சீப்பாக இருந்த போதும் மிக ஆர்வத்தோடு தோட்டம், காடுகழனிகளில் ஈடுபட்டான். உழவு முடிந்து வந்த காளைகள் மாலை நேரங்களில் இவனைக்காண ..ம்மாவென அழைத்ததை வியந்தாள். அவ‌ளையும் வ‌ய‌ல் வேலைக‌ளில் ஈடுப‌டுத்தினான்.

ஊரெல்லாம் வாயாடிய அவள் பேச்சு எங்கு சென்றதென தெரியவில்லை. ஒரு முறை வந்த பெரியம்மா, “பாரேன்.. இந்தப்புள்ளய.. எங்க பாருவதியா இது?” என்று அதிசயித்துச் சென்றாள். முதல் வருடத்தில் அவள் அவனுடன் பேசிய வார்த்தைகளை கைவிரல்களில் எண்ணிவிடலாம். அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச்செய்தாள். முதல் குழந்தை முத்துப்பாண்டியைப் பெற்ற போது அவளுக்கு வயது பதினெட்டு.

“ம்க்க்..க்ம்.. ம்மா” இருமலுடன் கூடிய அந்த மெலிதான அழைப்பைக் கேட்டவுடன் விருட்டென எழுந்து கட்டிலருகே சென்று குனிந்தாள்.

“அய்யா.. இருக்கேன். என்ன வேணும்?” என்றாள் மெதுவாக.

“நா கூப்பிடுல.. சும்மாதா.. நீ ..ன்னும் தூங்கிலியா?” அவரின் கம்பீரமான குரல் ஒரு மழலையின் குரல்போல குழைந்து போயிருந்தது. அவர் பேசுவது அவளுக்கு மட்டுமே புரிந்தது. அவர் முகத்தைக் கவனித்தாள். நோயின் தீவிரத்தில் முகம் எவ்வளவு வற்றிப்போய்விட்டது. மெதுவாக புன்னகைத்தார். “போ.. படு” மீண்டும் படுத்துக் கொண்டாள்.

இப்போது நேரம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. நிச்சயம் நள்ளிரவைத் தாண்டியிருக்கும். கடந்த சில நாட்களாக தூக்கம் அவளைத் தொடுவதாகவே இல்லை. முதலில் அழுவதாகவும், பின்பு கணவனின் தைரியத்தைக் கைக்கொண்ட வைராக்கியம் பொருந்தியதாகவும் அவள் கண்கள் மாறி மாறி இரட்டைவேடம் போட்டுக்கொண்டிருந்தன. பளபளப்பான அந்த விழிகளில் தீராத பெருந்துயர் ஒன்றின் வேதனை உடனிருந்தது.

கிழக்குப்பக்கமாக இருந்த ஜன்னலில் இருந்து நிலவொளி வீட்டினுள் வந்து விழுந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் குழந்தைகள் வரிசையாக படுத்திருந்ததை கண்டாள். மூன்று பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் கலைந்து கிடந்தனர். தொட்டிலில் கடைசிப் பெண்குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. மொத்தம் ஏழு பிள்ளைகள். மூத்தவன் முற்றத்திலிருக்கும் வேப்பமரத்தின் அடியில் கிடக்கும் கல்மேடையில் உறங்கிக்கிடக்கிறான். அவனுக்கே இப்போது பதினான்கு வயதுதான் ஆகிறது. அவனுக்கு அடுத்தவளான தங்கம்மா சென்ற மாசியில்தான் பூப்படைந்திருக்கிறாள். கவலை குபுக்கென ஒரு துளி நீராய் வெளியாகி தலையணையை நனைத்தது.

இடப்புறமிருந்த கட்டிலிலிருந்து வந்துகொண்டிருந்த மெலிதான குறட்டைச்சத்தம் நின்று இப்போது அந்த வறட்டு இருமல் துவங்கியிருந்தது. கால்கைகளுக்குத் தேய்க்கவேண்டிய மருந்துகள் தீர்ந்துவிட்டிருந்தன. நாளைக்கு மீண்டும் அம்பாசமுத்திரம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நாள். எழுந்ததும் முதல் வேலையாக கிருஷ்ணனை வண்டிகட்டச் சொல்லவேண்டும். மெதுவாக இயல்பாக திரும்புபவளைப்போன்று திரும்பி கட்டிலை பார்த்துக்கொண்டாள். சலனமில்லாமல் படுத்திருப்பது தெரிந்தது. அவளுக்குள் அலையலையாய் துக்கம் எழும்பியது. எப்படி இருந்த மனிதர்?

அவள் வாழ்க்கையையே புரட்டிபோட்ட அந்த நாளும் அவள் நினைவில் ஏனோ இப்போது வந்துபோனது.

ருநாள் காலையில் குதூகலமாய் இரண்டு நண்பர்களுடன் வெளியே சென்ற ஆனைக்குட்டியை மாலையில் கொதிக்கும் காய்ச்சலுடன் நண்பர்கள் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்துவந்து கட்டிலில் கிடத்தியபோது அப்படி ஒன்றும் யாரும் அதிர்ச்சியடையவில்லை. வைத்தியர் வரவழைக்கப்பட்டார். உள்ளுக்கு மருந்து தந்து தூங்கவைத்துவிட்டுச் செல்லும் போது அவர், “ஒண்ணுமில்ல.. சாதா காய்ச்சதான்.. காலைலே சரியாப்போய்ரும்” என்று கூறிவிட்டுதான் சென்றார். விடிந்தும் விடியாத காலை வேளையில் வலதுகாலும், வலதுகையும் பக்கவாதத்தால் இழுத்துக் கொண்டுவிட வேதனையில் முனகிக் கொண்டு கட்டிலில் கிடந்த கணவனைக் கண்ட போது, அதிர்ச்சியில் கால்கள் தரையிலிருந்து நழுவ.. கீழே விழுந்துவிடாமலிருக்க சுவரைப்பிடித்துக்கொண்டு நின்ற பார்வதியின் இடுப்பில் நான்காவதாய் பிறந்த கந்தசாமியும், வயிற்றில் அடுத்துப் பிறக்க இருந்த காந்திமதியும் இருந்தனர்.

அன்று அவள் அழுத அழுகையின் ஓலம் அந்த ஆனைமலை அய்யனாருக்கே கேட்டிருக்கும்..

(தொடரும்..

சற்று பெரிதாகிவிட்டதால் இரண்டாக பிரிக்கப்படுகிறது. இறுதிப்பகுதி இன்றே.. சில மணி நேரங்கள் கழித்து..)
.

20 comments:

ஜானி வாக்கர் said...

அடுத்த பகுதியும் வரட்டும். வந்த வரை திருப்தி.

ஜானி வாக்கர் said...

ஹையா மீ த ஃபர்ஸ்ட்

கார்ல்ஸ்பெர்க் said...

Mee the Second!!!

அப்பாவி முரு said...

//மூன்று பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் கலைந்து கிடந்தனர்//

சின்ன பிள்ளைகள் தூங்கும் அழகை ஒரே வார்த்தையில் விவரிச்சது ஸூப்பர்...

அப்பாவி முரு said...

நல்ல கதை ஓட்டத்தில் ஒரு சந்தேகம்,

கேட்டுத்தான் ஆகணுமான்னு மனசு கிடந்தது அரிக்குது....


அதனால கேக்குறேன்...


ஆணைக்குட்டிக்கு பக்கவாதம் வந்தப்ப அஞ்சாவது குழ்ந்தை வயித்துல இருந்தது, அதுக்கப்புறம் பார்வதி ஏன் ரெண்டு குழந்தை பெத்துக்கிட்டாங்க?


இதுக்கான பதில் கதையோட தொடர்சில வருவதற்கு முன்னாடி அவசரகுடுக்கையா கேட்டுட்டேனோ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜானி, கார்ல்ஸ், முரு.!

முரு, உங்கள் கேள்விக்கு இறுதிப்பகுதியில் விடையிருக்கலாம்.

(ஏதும் பத்திரிகைக்கு முயற்சிக்கலாம் என்ற ஆசையில் எழுதி, மெயில் பாக்ஸில் தூங்கிக்கொண்டிருந்தது. உங்கள் அனைவரின் கருத்துக்கேட்கும் ஆசையில் இங்கே ஏற்றிவிட்டேன்.)

நாடோடி இலக்கியன் said...

அருமை.வட்டார வழக்கிற்கு மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

அடுத்த பகுதியும் வரட்டும்.

அ.மு.செய்யது said...

இந்த சிறுகதை எழுத நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறது.வட்டார மொழியில் எழுதுவதென்பது அவ்வளவு சுலபமில்லை இருப்பினும்
அது உங்களுக்கு இலகுவாக கைவந்திருக்கிறது.

"ஆடுமாடு" க்கு பிறகு,நான் அதிகம் ரசிக்கும் நெல்லைத்தமிழ் எழுத்தாளர் நீங்க தான்.

அடுத்த பகுதி வரை வெயிட்டீஸ்..பிறகு விமர்சனங்கள் !!

லவ்டேல் மேடி said...

நல்லாருக்கு ...!! " தொடரும் " ரொம்ப நாளைக்கு தொடராம சீக்கிரம் அடுத்த பதிவ போட்டுருங்க.....!!

லவ்டேல் மேடி said...

நல்லாருக்கு ...!! " தொடரும் " ரொம்ப நாளைக்கு தொடராம சீக்கிரம் அடுத்த பதிவ போட்டுருங்க.....!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இலக்கியன்.!
நன்றி செய்யது.! (ரொம்ப புகழறீங்க..ஹிஹி நல்லாருக்கு.!)

நன்றி லவ்டேல்.! (தொடரும் பக்கத்துலயே போட்டுருக்கேன்ல சில மணி நேரங்களில்னு.. அப்புறம் என்ன சீக்கிரம்? கதையை படிச்சீங்களா இல்லையா.. சந்தேகமாயிருக்குதே? ஹிஹி.. எங்க இந்தக்கேள்விக்கு பதில் சோல்லுங்க பார்ப்போம். பார்வதிக்கு எத்தனை ஆண்குழந்தைகள்?)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏற்கனவே வந்தவர்களும், இரண்டாம் பகுதிக்கு பதிலிடலாம் என இருப்பவர்களும் மறக்காமல் பதிலிடுங்கள்.. விமர்சியுங்கள். ரொம்ப ஆவலாகயிருக்கிறேன். இறுதிப்பகுதி 12.30 க்கு ஷெட்யூல் பண்ணியிருக்கேன்.!

நர்சிம் said...

இதைத்தான்...

லவ்டேல் மேடி said...

// எங்க இந்தக்கேள்விக்கு பதில் சோல்லுங்க பார்ப்போம்.//


அய்யய்யோ..... கேள்வியா....!!! சாரிங்க வாத்தியாரே..... நாளையில இருந்து உங்ககிட்டயே டியூசன் வந்துடுறேன்.....!!


// பார்வதிக்கு எத்தனை ஆண்குழந்தைகள்?) //


சரியாக சொல்பவர்களுக்கு குழுக்கள் முறையில் 10.............
ஆஆவ்வ்வ்வ்வ் .....!!!டிஸ்கி : " மொத்தம் ஏழு பிள்ளைகள்.. "

☼ வெயிலான் said...

இதான்.....

துபாய் ராஜா said...

அருமை ஆதி.நம்ம ஊருக்கே போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

"அவ்வொ,தாயி,தெரிஞ்சமாரி....." நெஞ்செல்லாம் இனிக்குது நெல்லைத்தமிழ்.

காட்சிகளை கண்முன் கொண்டு வந்த இயல்பான எழுத்துநடை.காதல் மற்றும் மற்றைய நிகழ்ச்சிகள் வர்ணனைகள் அருமை.

மொக்கைகளை குறைத்து கொண்டு இது போன்ற முயற்சிகளை தொடரவும்.

வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

பிரபல பத்திரிகையில் வந்திருக்க வேண்டிய கதை ஆதி!

இதன் முதல் வாசகன் நான்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மூன்று பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் கலைந்து கிடந்தனர். தொட்டிலில் கடைசிப் பெண்குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. //

மொத்தக்குடும்பத்தினர் பட்டியலையும் ஒரே வாக்கியத்தில் இட்டு நிரப்பியிருக்கிறீர்க்ள்.

முதல் பாரா அசத்தல்.

இறுதி பகுதியினை எதிர்நோக்கி ஆவலாய்.

ரெட்மகி said...

ஈகர்லி வெயிடிங்... :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நர்சிம், வெயிலான், ராஜா, பரிசல், அமித்துஅம்மா, ரெட்மகி.. அனைவருக்கும் நன்றி. அடுத்த பாகத்தில் (போட்டாச்சு) அனைவரின் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.