Wednesday, September 30, 2009

குருவி - விமர்சனம்

பதிவெழுதத் துவங்கிய போது எழுதிய எனக்கு மிகவும் பிடித்தமான குருவி சினிமா விமர்சனம் நேரமின்மையாலும் புதிய நண்பர்களுக்காகவும் இங்கே மீண்டும் மீள்பதிவாக..

**********

சமீபத்தில் குருவி என்று ஒரு சினிமாவை திருவான்மியூரில் ஒரு தியேட்டரில் பார்த்தேன். பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து அந்த படத்தைப்பற்றிய சிந்தனையிலிருந்து மீளவேமுடியவில்லை. எப்பேர்ப்பட்ட ஒரு தாக்கம்.

படத்தில் ஹீரோ அறிமுகமாகிற ஆரம்பக்காட்சி. பலமாக சிந்தித்திருப்பார்கள் போல தோன்றுகிறது. தரையிலிருக்கும் சாக்கடை மூடியையே அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கேமெரா அந்த மூடியையே எல்லா ஆங்கிளிலும் சுற்றிவருகிறது. திடீரென மூடியை திறந்துகொண்டு ஒரு பந்தைப்போல ஹீரோ வெளியே பறந்துவருகிறார். மீண்டும் அதனுள்ளேயே விழுந்துவிடுவாரோ என்று நாம் பயந்துகொண்டிருந்தால் நல்லவேளையாக குழியிலிருந்து கொஞ்சம் தள்ளி லேண்ட் ஆகிவிடுகிறார். அது சாக்கடை குழியில்லை என்று நிரூபிப்பதற்காக ஒரு கேரக்டர் தண்ணீர் குழாயை ரிப்பேர் பார்த்தால் இப்படியல்லவா பார்க்கவேண்டும் என ஆச்சரியமாக வசனம் பேசுகிறது. இப்படியாக படம் ஆரம்பிக்கிறது.

ஒரு பெரிய வீடு. பெரிய குடும்பம். நிறைய பெண்கள். ஹீரோவைத்தவிர வேறு ஆண்கள் யாருமில்லை. இத்தனை பெண்கள் எப்படி என்றால் ஹீரோவின் அப்பாவுக்கு மூன்று மனைவிகளாம். மற்றவர்களை சகோதரிகள் என்று கொள்வோம். ஹீரோவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள், அவர்களை சகோதரிகளின் பிள்ளைகள் என்று கொள்வோம். ஆனால் அவர்களின் கணவர்கள் எங்கே என்று கேட்கக்கூடாது. அப்படி ஒரு கேரக்டர்கள் இருப்பதாகப் படவில்லை. ஒருவேளை தேவைப்படாமல் இருந்திருக்கலாம். நமக்கு என்ன சந்தேகம் என்றால் எந்த கேரக்டர்தான் தேவையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். ஆட்டமும் பாட்டமுமாய் சந்தோஷமான சூழ்நிலை. ஆனாலும் பணக்கஷ்டமாம். கேட்டால் அப்பா ஓடிப்போய்விட்டாராம்.

திடீரென ஒரு பேங்கிலிருந்து அப்பா கிளியரன்ஸ் க்காக போட்ட ஒரு செக் திரும்பி வருகிறது. (அப்படியானால் அவர் தொலைந்து எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும் என கணக்கிட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்று பிறகு சொல்கிறேன்.)
ஹீரோ அதை வைத்துக்கொண்டு அவரது அப்பாவுக்கு பணம் தரவேண்டியவர் யார் என அறிந்து கொண்டு , மேலும் அவர் எங்கிருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறார். (இதற்காக வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டரையும் பயன்படுத்துகிறார்). அது மலேசியாவிலிருக்கும் வில்லன்தான் என்பதால் ஒரு நண்பரையும் கூட்டிக்கொண்டு மலேசியா செல்கிறார்.

எத்தனை பேர் வில்லன்கள் என்பதையும் அவர்கள் வாழ்வது மலேசியாவிலா அல்லது ஆந்திர மாநிலம் கடப்பாவிலா என்பதையும் அறிந்துகொள்வது மிகுந்த சிரமம் என்றாலும் குறைந்தபட்சம் எத்தனை வில்லன்கள் என்பதையாவது கூற முயற்சிக்கிறேன். மலேசியாவில் ஒரு வில்லன், பெயர் எக்ஸ் என வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு ஒரு மகள் (அவர்தான் ஹீரோயின் என்பதை நான் சொல்லும் முன்பே நீங்கள் யூகித்திருந்தால் மேல்கொண்டு இந்த கட்டுரையை படிக்கவேண்டிய அவசியமில்லை) . எக்ஸ்க்கு ஒய் என்று ஒரு மருமகன். ஏனென்றால் மகளை திருமணம் செய்துகொடுக்க வேண்டுமே. இருவருமே தடிமாடு மாதிரியிருந்தும் ஹீரோ அறிமுகமாகி , வந்து ஹீரோயினுக்கு அவர் மேல் ஒரு அபிப்பிராயம் வந்து பிரச்சினை வரும் வரை ஏன் மகளுக்கு கல்யாணம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள் இந்த வில்லன்கள் என்பது எனக்கு புரியவே மாட்டேங்கிறது. இந்த ஒய்யும் முக்கியமான வில்லன்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோக கடப்பாவில் இசட் என்ற ஒரு அரசியல்வாதி இருக்கிறார். இவரும் எக்ஸ்சும் உறவினர்கள் என்பதை அறிக. யார் பெரிய வில்லன் என்பதில் அவர்களுக்குள்ளாகவே போட்டிஎன்பது ஒரு தனி சுவாரசியம். அவருக்கு ஒரு அடியாள். (என்ன அடியாளைஎல்லாம் கணக்கில் எடுக்கிறாய் என்று கோபிக்கவேண்டாம். ஏனெனில் அவர் பொறுப்பில்தான் ஒரு கல்குவாரி இருக்கிறது, அதில்தான் ஹீரோவின் அப்பா சிறைபட்டிருக்கிறார். மேலும் மெயின் வில்லன்களை எல்லாம் ஒருகட்டத்தில் துவைத்து எடுக்கும் ஹீரோ இவரிடம் ஒருமுறை நல்ல மொத்து வாங்குகிறார்).

சரி, கதைக்கு வாருங்கள். மலேசியா செல்லும் ஹீரோ ஒரு ஹோட்டலில் (அது ஹோட்டலா அல்லது வில்லனின் ஆபீசா என்பது தெரியவில்லை) ஒய் யை சந்திக்கிறார். நல்ல போதையில் இருக்கும் ஒய், செக்கை கிழித்து ஹீரோவை வெளியே துரத்திவிடுகிறார். வெளியே வந்தவுடன் நண்பருடன் கலந்து ஆலோசித்துவிட்டு (நண்பருக்கு பணத்தை வாங்கும் எண்ணமே இருப்பதாக தெரியவில்லை. எப்போ தண்ணியடிக்கலாம் என்றே அலைந்துகொண்டிருக்கிறார் ) பூவா தலையா போட்டுப்பார்த்துவிட்டு பணத்தை வாங்க நேர்மையான வழியை விட அராஜக வழியே சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார். உங்களுக்கு வேறு படங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

மீண்டும் ஹோட்டலுக்கு உள்ளே செல்லும் ஹீரோ இம்முறை ஒய் யையும் அடியாட்களையும் அடி அடியென்று அடித்து துவைத்துவிடுகிறார். பந்து ஒன்றை சுவருக்கும் சீலிங் கிற்கும் எத்திவிடுவதைப்போல அவர்களை பந்தாடுகிறார். (சும்மா பந்தாடுகிறார் என்றால் நீங்கள் உணரமாட்டீர்கள்) . இவ்வளவுக்கும் அடியாட்கள் துப்பாக்கிஎல்லாம் வைத்திருக்கிறார்கள். திடீரென எக்ஸ் உள்ளே வந்துவிடவும் ஹீரோ ஒரு புகை மாதிரி ஏதோ ஒன்றை கிளப்பிவிட்டுவிட்டு ஓடிவிடுகிறார். (அவரையும் அங்கேயே வைத்து அடித்திருந்தால் பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும். ஏன் ஓடிவிடுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. இவ்வளவுக்கும் பிற்பகுதியில் ஒரே குத்துவாங்கி மரணப்படுக்கைக்கே போய்விடுகிறார் எக்ஸ்.)

இந்த இடத்தில் எக்ஸ் சைப் பற்றி ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். அவரைப் பற்றி பேசினால் டாக்சிக்காரர்கள் பணம் வாங்காமல் ஓடிவிடுகிறார்கள், மலேசியாவே அவர் பேரைக்கேட்டால் நடுங்குகிறது. அவர் பெண் ஒரு முறைகூட சென்னை வந்ததில்லை. அவர் என்னடாவென்றால் கடப்பா வந்து பார் பார்க்கலாம். அது என் கோட்டைடா என்று ஹீரோவுக்கு சவால் விடுகிறார். ஹீரோவும் சவாலை ஏற்றுக்கொண்டு கடப்பாவுக்கே போய் ஒரு குத்துவிடுகிறார். அதோடு ஐசியு வில் அட்மிட் ஆகி வீல்சேரில் வாழ்க்கை நடத்துகிறார் வில்லன். இந்த கதையை பிறகு பார்க்கலாம். மீண்டும் மலேஸியாவுக்கு வாருங்கள்.

எக்ஸ் வந்தவுடன் வெளியே ஓடி விடும் ஹீரோ எங்கு தங்குறாரோ என்ன செய்கிறாரோ தெரியாது அன்றிரவோ மறுநாள் இரவோ வில்லன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஹீரோயினுக்கும் ஒய் க்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது வில்லன் வைரம் கடத்துவதை தெரிந்து கொண்ட ஹீரோ (யாரோ ஒருவருடன் வைர பிசினஸ் பேசிக்கொண்டிருக்கிறார் வில்லன்- அதை ஒட்டுக் கேட்டுவிடுகிறார் ஹீரோ ) பணத்தை விடவும் வைரத்தை கடத்திவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்து ஒரு வைரத்தைக் திருடிவிடுகிறார். அவ்வளவு கூட்டத்திலும் ஹீரோயினைத்தவிர யாரும் அவரைப்பார்க்கவில்லை. ஆனால் திருடுவதற்காக மாடி விட்டு மாடி குதிப்பதைப்பார்த்த பார்த்த ஹீரோயின் சாகசத்தில் மயங்கி காதலிக்கத் துவங்கிவிடுகிறார். ஆனாலும் ஐயோ பாவம் ஹீரோ திருடுவதற்காக ஒரு தொப்பியும் கண்களில் சின்னதாக ஒரு ஸ்கார்ப்பும் கட்டியிருந்ததால் ஹீரோவை ஹீரோயினுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. ஆனாலும் என்ன? காதல்தான் வந்துவிட்டதே. எப்படியோ ஹீரோவுக்கு சென்னை என்று தெரிந்துகொண்டு ஹீரோயினும் அதே பிளைட்டில் சென்னை கிளம்பிவிடுகிறார். கஸ்டம்ஸ் சில் இருந்து தப்பிக்க வைரத்தை ஹீரோயின் பைக்குள் போட்டுவிடுகிறார் ஹீரோ. ஹீரோயினை கஸ்டம்ஸ் பிடிக்காதா என்றெல்லாம் கேட்கக்கூடாது. இதன்காரணமாக சென்னை வந்தவுடன் ஹீரோயின் பின்னாலேயே சுற்றவேண்டிவருவதால் காதல் காட்சிகளுக்கு லீட் கிடைக்கிறது.

"மொழா மொழான்னு யம்மா யம்மா " -வென்று ஒரு காதல் பாடல். தமிழிசை மீது காதல் கொண்டவர்கள் பாவம். வெறிபிடித்து மனப்பிறழ்வு ஏற்படலாம். சரி மீண்டும் படத்துக்கே வருவோம்.

வைரத்தையும் காணாமல் மகளையும் காணாமல் வில்லன் எக்ஸ் சென்னை கிளம்பி நேரே ஹீரோ வீட்டுக்கு வந்துவிடுகிறார். ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஹீரோவுக்கு போன்செய்கிறார். காதல் செய்து கொண்டிருந்த ஹீரோ உணர்வு பெற்று வீட்டுக்கு திரும்புகிறார். குழந்தையை துப்பாக்கிமுனையில் பிடித்துக்கொண்டு ஹீரோவிடமிருந்து வைரத்தை வாங்கிக்கொண்டு மேலும் அவரை ஒரு லிப்ட்டில் அடைத்துவைத்து (சுற்றி படி வைத்துக்கட்டி கம்பிகளால் செய்யப்பட்ட ஒரு லிப்ட். கட்டட வேலைக்கு பயன்படுமே அதுமாதிரி. ஆனால் இந்த லிப்டை சுற்றி எந்த கட்டடிமும் இல்லை.) அவரது அப்பாவைத் தாமும் இசட் டும் சேர்ந்து கடப்பாவில் ஒரு கல் குவாரியில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதையும் சொல்கிறார். மேலும் அவரை துப்பாக்கியால் சுடாமல் பாதுகாப்பான தூரத்திற்கு வந்து அடியாட்கள் மூலமாக லிப்டை மேலே தூக்கி பிறகு கம்பியை அறுத்து லிப்டை கீழே விழச்செய்கிர்றார். லிப்டில் மாட்டிய ஹீரோ என்ன ஆனாரோ என நாம் பதைக்கும் போது லிப்ட் நேரே பூமியைத்துளைத்துக்கொண்டு பக்கத்தில் எங்கோ ஆற்றிலோ, கடலிலோ (திருவல்லிக்கேணியில் நடப்பதால் அனேகமாக மெரீனா கடற்பகுதியாகத்தான் இருக்கவேண்டும்.) போய்ச்சேருகிறது. அப்போது லிப்ட் கதவை மிதித்து தூள் தூளாக்கி விட்டு நீந்தி வெளியே வருகிறார். (இதை ஏன் முன்பே செய்யவில்லை கேட்காதீர்கள் - லிப்ட்டை அறுத்துவிட அடியாட்களுக்கு ஆகும் நேரத்தில் சிறைக்குள் மாட்டிய சிங்கம் போல என்ன செய்வதென தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார் ஹீரோ).

அவர் வருவதற்குள் போரடித்துப் போய் ஹீரோ இறந்துவிட்டதாக கற்பிதம் பண்ணிக்கொண்டு வில்லன் கடப்பாவுக்கே போய் விடுகிறார். மேல் வேலையாக கடப்பாவிலேயே ஹீரோயினுக்கும் ஒய் க்கும் திருமண ஏற்பாடுகளை கவனிக்கிறார். வெளியே வந்த ஹீரோவோ அப்பாவையும் ஹீரோயினையும் மீட்பதற்காக கடப்பாவுக்கு பயணிக்கிறார்.

இந்த இடத்தில் ஹீரோவின் அப்பாவைப் பற்றி சொல்லியாகவேண்டும்.
அவர் பல வேலையாட்களை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய மெஷினையும் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று ஆழ் கிணறு தோண்டும் வேலையை செய்பவர். அதற்காக ஒருமுறை நூற்றுக்கும் அதிகமான ஆட்களையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடப்பா செல்கிறார். (எதற்காக இவ்வளவு ஆட்கள், மற்றும் குழந்தைகள் என்பதை யாராவது சொன்னால் தேவலை.- மேலும் ஒரு கண் தெரியாத இளம்பெண் வேறு). அப்படி அவர் செல்லும் இடம் எக்ஸ் மற்றும் இசட்டினுடைய கல் குவாரி. பாறைகளை உடைத்துக்கொண்டிருக்கும் போது அந்த பாறைகள் வைரப்பாறைகள்என்று கண்டுபிடிக்கிறார். வில்லன்கள் மகிழ்ந்து கொண்டாட அவரோ இது அரசுக்கு சொந்தமானது என்று நியாயம் பேசுகிறார். உடனே வில்லன்கள் குவாரியை சுற்றி வேலி கட்டி யாரும் வெளியே போகமுடியாது எனவும், அவர்கள்தான் வைரத்தை எடுத்துத் தரவேண்டும் எனவும் கூறிவிடுகிறார்கள். மேலும் மீறினால் சுட்டுத் தள்ளிவிடுவோம் என்று கூறி துப்பாக்கியுடன் காவலுக்கு ஆள் வைக்கிறார்கள். உதாரணத்துக்கு அங்கேயே எதிர்த்துப் பேசும் சிலரை சுட்டுப் பொசுக்கி விடுகிறார்கள். அவர் சும்மா இருக்காமல் என் மகன் ஒரு நாள் வருவான். அவன் வந்து உங்களையெல்லாம் சும்மா விடமாட்டான் என்று தரையில் அடித்து சத்தியம் செய்கிறார். உடனே அவரை ஸ்பெஷலாக கவனித்து அடைத்துவைக்கிறார்கள்.

இப்படி மகனைப் பற்றி அப்பா வீர வசனம் வில்லனிடம் பேசிக்கொண்டிருக்க மகனோ அப்பா ஓடிப்போய்விட்டார் எனவும் வந்தால் உதைக்கவேண்டும் எனவும் காத்துக்கொண்டிருக்கிறார். சரி, அவர்தான் ஓடிப்போய்விட்டார், ஆனால் அவருடன் சென்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைப் பற்றியும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. (அவர்களுடைய உறவினர்களும் கூட கூட்டமாக எல்லோரும் ஓடிப்போய் விட்டார்கள் என நினைத்துக்கொண்டுவிட்டார்கள் போல தெரிகிறது) குறைந்த பட்சம் கடைசியாக அப்பா எங்கே எப்போது வேலைக்காக சென்றார் என்று கூட ஹீரோ சிந்தித்ததாக தெரியவில்லை. வில்லன் நேரில் வந்து நான்தான் உங்க அப்பாவை அடைத்துவைத்திருக்கிறேன் என்று சொல்லவேண்டியதிருக்கிறது சரி கடப்பா சென்றுகொண்டிருக்கும் ஹீரோவிடம் வாருங்கள்.

என்ன ? .. வேண்டாமா.. சரி, வேண்டாம்! நிறுத்திக் கொள்கிறேன். அவர் கடப்பா சென்று யாருக்கும் தெரியாமல் அடிமைகளோடு அடிமையாய் சேர்ந்துகொண்டது,(அப்பாவை கண்டுபிடிக்க வேண்டுமே..), அப்பாவின் உதவியாளர்களைச் சந்தித்து ஆராய்ந்து அப்பாவைக்கண்டுபிடித்தது, கல்குவாரி இன் சார்ஜ் -இடம் முதலில் மொத்து வாங்கி பின்னர் அவரை ஜெயித்து மக்களை விடுவித்தது, திருமணத்தை நிறுத்தி ஒய் -ஐ மொத்திவிட்டு ஹீரோயினை காப்பாற்றியது, எக்ஸ் -ஐ ஒரே குத்தில் படுக்கைக்கு அனுப்பியது, இசட்டை ஒழித்துக்கட்டி மேலும் அவரது தேச துரோக ரகசியங்களை லேப்டாப் மூலமாக தெரிந்துகொள்வது, இசட்ஒழிந்ததை அறிந்த எக்ஸ் படுக்கையிலிருந்து மீண்டும் எழுந்து வந்து உதைவாங்கியது, அந்த கிளைமாக்ஸ் சண்டையில் ஒரு ஐம்பது பேரை கோடரியால் வெட்டிக்கொலை செய்வது, பின்னர் வழக்கம் போல போலீஸ் வருவது,(சாதா போலீஸ் அல்ல, சிபிஐ) அந்த அதிகாரி பரவாயில்லை, கீப் இட் அப் என்று ஹீரோவின் தோளைத்தட்டிக்கொடுப்பது.. இதை எல்லாம் நீங்கள் தியேட்டரிலேயே போய் பார்த்துக்கொள்ளுங்கள். ..

பின்னே.. நான் வேண்டாம் என்று அறிவுரை சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள்?

பி.கு:
இப்பேர்ப்பட்ட படத்தை தயாரித்தது கலைஞர் குடும்பத்து கலைவாரிசு என்பதை அறிக. பாவம் கலைஞர்!
எத்தனை பாலா, அமீர்கள் வந்தாலும் இந்த தரணி, பேரரசுகளை ஒண்ணும் பண்ண முடியாது என்றுதான் நினைக்கிறேன். பாவம் தமிழ் சினிமா.!

.

Tuesday, September 29, 2009

ஈ எஸ் பி

எங்கள் வீட்டு ஹாலில் சுவருடன் ஒட்டிய ஒரு பெரிய அழகிய ரேக்ஸ் உள்ளது. அதை ஷோகேஸ் மாதிரியோ, புத்தக அலமாரியாகவோ பயன்படுத்தலாம். அதன் மேல் தளம் நீள அகலத்தில் நல்ல விசாலமானதாக இருந்தது. புத்தகங்களுக்கு தனியாக ரேக்ஸ் இருந்ததாலும் பூஜை அறை என்று தனியாக ஒன்று இல்லாததாலும் நிச்சயமாக இது சாமி படங்களையும், விளக்கையும் வைத்துக்கொள்ளத்தான் பயன்படப்போகிறது என எண்ணினேன். வீடு ஷிஃப்ட் பண்ணும்போது ரமா ஊரிலிருந்ததால் வசதியாக அந்த ரேக்கில் என்னிடமிருந்த ஒரு பெரிய பெரியாரின் படத்தை ஒட்டி அழகுபடுத்திக்கொண்டேன். நான் எண்ணியது போலவே ரமா வந்தவுடன் விளக்கு, பூஜைப்பொருட்கள் பெரியாருக்கு முன்பாக இடம்பிடித்தன. ரமா சில விஷயங்களில் ஆச்சரியகரமாக ஒப்புதல் தந்துவிடுவார். பெரியார் படம் உங்களுக்கு, சாமி படம், விளக்கு எனக்கு.. இடைஞ்சல் பண்ணாமல் இருந்தால் சரிதான் என்று சொல்லிவிட்டார். வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தால் முதல் பார்வையில் பெரியார் படத்துக்குதான் பூஜை நடக்கிறது என தவறாக புரிந்துகொண்டுவிடுவார்கள்.

ரமா அப்படி ஒன்றும் பெரிய பக்திமான் இல்லைதானாயினும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென பக்தி பெருகியதாலோ என்னவோ வீட்டிலே சரஸ்வதி பூஜை கொண்டாட சரஸ்வதி படம் இல்லையென்பதை அறிந்து (வீட்டில் இருந்தவை இரண்டு விளக்குகளும், ஒரு பிள்ளையார் படமும்தான்) உடனடியாக வாங்கி வர பணித்தார் (கவனிக்கவும் பணிந்தார் இல்லை பணித்தார். பணித்தல் என்பதற்கு கட்டளையிடுதல் என்பது பொருளாகும்).

நல்லவேளையாக தாம்பரம் போக வேண்டிய அவசியமில்லாமல் பக்கத்திலேயே ஒரு கடை இருந்தது. அங்கே பத்து வருஷத்துக்கு முந்தைய டிஸைன்களில் சாமி படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. சரஸ்வதி தவிர அனைத்து கடவுளர்களும் தொங்கிக்கொண்டிருந்தனர். அடடா, வேறு கடை பார்க்கவேண்டுமா என நினைத்தபோது கடைக்காரர்,

'சைஸ் மட்டும் பாருங்க சார், ரெண்டே நிமிஷத்தில் படத்தை மாத்திக் கொடுத்துர்றேன்' என்றார்.

'அப்பாடி' என்று வேண்டிய சைஸை சொல்லிவிட்டு, அவரது ஃபைலில் இருந்து கையில் வீணையுடன் வெள்ளைத்தாமரைப்பூவில் அமர்ந்திருந்த ஒரு அழகிய சரஸ்வதி படத்தையும் செலக்ட் செய்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். (வரும்போதே ரமா அடையாளம் சொல்லியிருந்தார். செந்தாமரையில் அமர்ந்துகொண்டு கையிலிருந்து கோல்ட்காயின் வரவைக்கிறது லட்சுமி, அதுவே வெள்ளைத்தாமரையில் கைகளில் வீணையுடன் இருந்தால் சரஸ்வதி).

கடைக்காரர் படத்தை மாற்றும் செயலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் ஆணிகளைப் பிடுங்கும் அழகிலேயே தெரிந்துவிட்டது, இது ரெண்டு நிமிடத்தில் நடக்கக்கூடிய வேலையல்ல என்று. அவ்வளவு நிதானம், பர்ஃபெக்ஷன். ஆணிகளை பிடுங்குதல், படத்தைச் சரியாக கத்தரித்தல், கண்ணாடியை மூன்று கட்டமாக சுத்தம் செய்தல், பேக் செய்வது, மீண்டும் பினிஷ் செய்தல் என ஒவ்வொன்றையும் தனித்தனி கருவிகள் கொண்டு வேலை நடந்துகொண்டிருந்தது. அப்போது ஏனோ தெரியவில்லை.. மனதில் தோன்றியது, இந்தக்கண்ணாடி உடையப்போகிறது.

வேலை முடிய அரைமணி நேரம் ஆனது. முடிந்து படத்தைக்கையில் வாங்கும் போதே நினைத்தேன். இதை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். நன்கு பேப்பரில் சுற்றப்பட்டு கவரில் வைக்கப்பட்டிருந்தது. வழக்கத்தைவிடவும் கவனமெடுத்துக்கொண்டேன். வீட்டுக்கு கொண்டு சென்று ரமாவிடம் கொடுத்தேன். அவர் அதைப்பிரித்த போது.. நம்புங்கள் கண்ணாடி உடைந்துபோயிருந்தது.

'ஒரு வேலையை ஒழுங்கா பார்க்க துப்பிருக்கா? இப்டி உடைச்சு கொண்டுவந்திருக்கீங்க.. நீங்க வரும்போது உடைச்சீங்களா? இல்லை உடைஞ்சதை கடக்காரன் உங்க தலையில கட்டிவிட்டுட்டானா?'

ரமா புலம்பத்துவங்கியிருக்க அவரது அர்ச்சனை என் காதில் விழவேயில்லை.. நான் ஒரு பெரும் வியப்பிலிருந்தேன்.
.

Friday, September 25, 2009

சோர்விலன்

"2393 காலிங் 2472 ரோஜர் ஓவர்"

"ரிப்போர்டிங் 2472 ஓவர்"

"H2003461 ரிப்பீட் H2003461.. சாம்பிள்ஸ் பெயிலியர். லைன் ஸ்டாப்பேஜ். பெக்கூலியர் சிச்சுவேஷன். ஜிஎம் ஆன் தி வே டு தி ஸ்பாட்.. ரிப்பீட் ஜிஎம் ஆன் தி வே டு ஸ்பாட். ஓவர்"

"அய்யய்யோ என்னால தனியா சமாளிக்கமுடியாது ஓவர், முடிஞ்சா நீங்களும் வாங்க ஓவர்"

"ரோஜர் அண்ட் அவுட். ஓவர்"

******

மண்டை காயும் அலுவலக பிரச்சினைகளில் வருடக்கணக்கில் உழல்வதால் ஒரு அயர்ச்சி ஏற்பட்டுவிடுவது தவிர்க்க இயலாதது. ஆனால் அவ்வப்போது ஏதாவது சுவாரசியமாக நடந்துகொண்டேதானிருக்கிறது. அலுவலக விஷயங்களோடு வடிவேலு, கவுண்டமணி ஜோக்குகளை மிக்ஸ் செய்து சிரித்துக்கொண்டே பிரச்சினைகளை எதிர்கொள்வது கொஞ்சம் பதற்றம் தணிக்கும், அயர்ச்சியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இயலும். ஒவ்வொரு அலுவலகச்சூழலும் வித்தியாசமென்பதால் அந்த நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்வது கொஞ்சம் சிரமமானதென்பதை நீங்களும் அறிவீர்கள்.

மேலும் புதிய நபர்களோடு, கலகலப்பான இளைஞர்களோடு வேலை பார்ப்பது நம்மை இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள ஒரு சிறந்த வழி. சமீபத்தில் எங்கள் குழுவோடு இணைந்த ஒரு கலகலப்பான இளம் எஞ்சினியரோடு நான் நடத்திய உரையாடல்தான் மேலே நீங்கள் காண்பது. செல்போன்களில் பேசிப்பேசியே காது ஓட்டையாகிப்போனதால் பெரும்பாலும் எங்கள் நிறுவனத்தில் செல்போனின் ஸ்பீக்கர் போன் வசதியை பயன்படுத்தி ஒரு வாக்கிடாக்கியைப் போல பயன்படுத்துவது இப்போது அதிகமாகிவருகிறது. அந்தப் புதியவரின் பழக்கமும் அதுதான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இதே பிரச்சினையை நான் கையாண்டிருந்தால் அது இப்படியிருந்திருக்கும்..

"ராஜன், நா கேகே பேசுறேன்"

"சொல்லுங்க"

"3461 ரிஜக்டாயிப்போச்சு, லைன் நிக்கிது, பாஸ் வாறாரு.. பாத்துக்குங்க"

"சரி"

சுறுசுறு விறுவிறுன்னு வேலையை பார்க்கும் அதே நேரம் போரடிக்காமல் சிரித்தமுகமாக, கலகலப்பாக சூழலையும் மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டு வேலை பார்ப்பதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். எப்படி இருக்கமுடிகிறது இப்படி இவர்களால்? அது வரம்.! சின்னச்சின்னதாக வேலைகள் இருக்கும் என்பதால் பெரும்பாலும் மறக்காமலிருக்க சின்னூண்டு பாக்கெட் டைரியில் எழுதிவைத்துக்கொள்வது எங்கள் கம்பெனியில் வழக்கம், பலருக்கும். அவரும் அப்படித்தான். ஆனால் அதையே அவர் இப்படிச்சொல்கிறார் நேற்று..

"ஹோ..யா.. ஹோ..யா.. க ஜி னி... க ஜி னி..!!
பாருங்க ஸார், மறந்து போயிரும்னு எழுதிவச்சு எல்லாம் வேலை பாக்கவேண்டியிருக்குது ஸார்.. லைன்ல நாலு நாள் வேலையை ஒரே நாள்ல வாங்குறாங்க ஸார்.. அவ்வ்வ்வ்...
ஹோ.. யா.. க ஜி னி..!!"

.

Wednesday, September 23, 2009

காய்ந்துபோன சில ஆரஞ்சுகள்

ரமாவும், தாமிராவும் பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் நினைப்பது சரிதான், ரமா டிவி பார்த்துக்கொண்டிருந்தார், தாமிரா காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார். சுபா தாமிராவின் முதுகில் ஸ்கெட்ச் பேனாவால் முட்டை முட்டையாக வரைந்துகொண்டிருந்தான். பேனாவை பிடுங்கினால் ஊருக்கே கேட்பது போல ஊளையிட்டு வைப்பான், எப்படியோ விளையாடிக்கொண்டிருந்தால் சரிதான் என்று விட்டுவைத்திருந்தார்கள் இருவரும்.

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் என்ன தாமிரா அதிசயமாக வீட்டுவேலைகள் செய்துகொண்டிருக்கிறார்? மதியம் அவரது நண்பர் ஒருவர் குடும்பத்துடன் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். இது அவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இது போன்ற நேரங்களில்தான் அவரை நல்ல வேலை வாங்க முடியும் என்பது ரமாவுக்கு நன்கு தெரியும் என்பது நமக்கு தெரியும். முதல் நாள் மாலையே கால் கிலோமீட்டர் நீள‌த்திற்கு எழுதப்பட்ட ஷாப்பிங் லிஸ்டை எடுத்துக்கொண்டு பைக்கில் ஷாப்பிங் போய் வந்தாயிற்று. கடைகடையாக அலைய மனவலு இல்லாததால் சூப்பர் மார்கெட் போகத்தான் அவர் விரும்புவார். ஆனால் ரமாவின் லிஸ்டோ சூப்பர் மார்கெட்டையும் திணறச்செய்யும் சக்தி வாய்ந்தது என்பதும் அவருக்குத்தெரியாதது அல்ல. எப்பேர்ப்பட்ட கடையாக இருப்பினும் அங்கே கிடைக்காத பொருள் லிஸ்டில் இருக்கும்.

உதாரணமாக பத்தி, கற்பூரம், சந்தனம், விளக்குத்திரி வரிசையில் அவர் கேட்கும் தூள் சாம்பிராணி இருக்காது. அவன் கம்ப்யூட்டர் சாம்பிராணி வைத்திருப்பான். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழ வரிசையில் அவர் கேட்ட கொய்யாப்பழம் மட்டும் இருக்காது. ஹார்லிக்ஸ், போர்ன்விடா, பூஸ்ட் வரிசையில் அவர் கேட்ட மால்டோவா மட்டும் இருக்காது. மளிகைச்சாமான்களில் ஐந்து வகை புளி பாக்கெட்டுகள் இருந்தாலும் அவர் கேட்ட மான் மார்க் புளி இருக்காது. அதனால் எப்படித்திட்டமிட்டு கடைக்குப்போனாலும் ஐந்து கடைகளாவது ஏறி இறங்காமல் வேலை நடக்காது. இவ்வாறாக போய் ஒரு சிறிய பெட்டிக்கடைக்காரர் டிவிஎஸ்50யில் ஒரு லாரியைப் போன்ற தோற்றத்துடன் பொருட்கள் வாங்கிவருவதைப்போல வண்டியின் இடது, வலது, ஹான்டில்பார்கள், பில்லியன் அனைத்திலும் மூட்டைகளாக வைத்து கொண்டு வந்தாயிற்று. அப்படியும் லிஸ்ட்டில் ஒரு மூலையில் முக்கியமான பொருள் மிஸ்ஸாகி இரண்டாவது தடவையும் அவர் கடைக்குப்போகவேண்டி வந்தது. சரி இன்னிக்குப் பிரச்சினைக்கு வாருங்கள்.

ஒருவழியாக சமையல் முன்னேற்பாடுகள் முடிந்து சமையல் துவங்கும் நேரத்தில், குறித்த நேரத்துக்கு சற்று முன்னதாகவே அழைக்கப்பட்ட பிரபல பதிவர் தங்கமணி, குழந்தை சகிதமாக வந்துவிட்டதால் நைஸாக ரமாவிடம் சமையலைத் தொடர பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் கொஞ்சம் கோபம் கொப்பளிக்கும் கண்களுடன் சமையலைத் தொடர, தாமிரா அவ்வளவு நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்ததைப்போல பாவனை செய்துவிட்டு வந்தவர்களுடன் உரையாடத்துவங்கினார்.

இரண்டு தங்கமணிகளும் கிச்சனில் உரையாடலைத்துவங்கி சமையல் வேலையைக் கவனிக்க, ஏதாவது சிக்கலான விஷயப்பரிமாற்றம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயம் உள்ளூர ஊர.. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இரண்டு ரங்கமணிகளும் ஹாலில் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளே கிச்சனில்..

"அக்கா.. வீட்ல நீங்கதான் சமைப்பீங்களா? எங்க வீட்லயும் நாந்தான் சமைப்பேன்க்கா, அவர் ஒரு வேலையும் செய்யமாட்டார்"

"என்ன பண்றதுக்கா? நம்ம தலையெழுத்து அப்படி. நீங்க வேலைக்கும் போறீங்களாமே. அவர் சொன்னார்.."

"ஆமாக்கா.. வர்றதுக்கு 7 மணியாயிடும்.."

"பிள்ளையை எப்பிடி பார்த்துக்கறீங்க.."

"அதுக்குதானே மாமியாரை கூட வச்சிருக்கேன்.."

"ஆமா, எதுக்கு இவ்வளவு பழம் வாங்கிட்டு வந்தீங்கக்கா.. ஏற்கனவே நிறைய கிடக்குது"

"இருக்கட்டும்க்கா.. ஆனா எங்க வீட்லயும் இப்பிடித்தான் பழமெல்லாம் வாடிக்கிட்டு கிடக்குது. என்ன பண்ணுவீங்க.. மொத்தமா ஜூஸ் போட்டுக்கொடுப்பீங்களா?"

"ஜூஸா? அதை யாரு பண்ணிக்கிட்டு.. அதையெல்லாம் காலிபண்றதுக்கு கைவசம் ஐடியா இருக்குது?"

"என்ன பண்றதுக்கா?"

"சொல்றேன். உங்க வீட்ல வழக்கமா எத்தனை மணிக்கு சாப்பிடுவீங்க?"

"1 மணிக்கு"

"இங்கேயும் கிட்டத்தட்ட 1 மணிதான். இப்ப மணி 1.20.. இந்தாங்க இந்தக்காபியை குடிங்க, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.."

ஹாலிலிருந்து தாமிராவின் குரல், "என்னாச்சும்மா.. ரெடியா?"

"கொஞ்சம் பொறுங்கங்க, ரெடியாயிரும்"

இப்போது புதிய தோழி ரமாவைப்பார்த்து கேட்கிறார், "ரெடியாயிருச்சுல்ல.. கொண்டுபோயிரலாமா?"

"ஊம்.. கொஞ்சம் பொறுங்க.. பாருங்க வேடிக்கையை.."

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இரண்டு ரங்கமணிகளின் முன்னாலும் சில ஆரஞ்சுகள் உருண்டுகொண்டிருக்க, உரித்து விழுங்கிக்கொண்டே சுவாரசியமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

"இப்ப.. தெரிஞ்சுதா காஞ்சுபோன பழங்களை எப்படி காலிபண்றதுன்னு?"

.

Monday, September 21, 2009

எப்படி இப்படில்லாம்..

'காஞ்சிவரம்' சினிமாவின் முதல் காட்சி. ஒரு மழைநாளில் ஏதோ கிராமத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் ஒரு முதிய கைதி இரண்டு போலீஸ்காரர்கள் துணையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்தக்காரெக்டரில் நடித்தவர் டினு ஆனந்த் (பிரபல இந்தி நடிகர், இயக்குனர் - நாயகன் படத்தில் கமலஹாசனை இறுதியில் சுட்டுவீழ்த்தியவர்).. அது பிரகாஷ் காரெக்டர் என்றும் பிளாஷ்பேக்கில் அவர் வருவார், அவரது வயதான தோற்றத்தில் டினு நடித்திருக்கிறார் என்று நினைத்தேன்... ஆம் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ரொம்ப நேரமாய். பின்னர் அதுவும் பிரகாஷ்ராஜ்தான் என தெரியவந்தபோது சிறிது அயர்ந்துபோனேன். அவரது மிகச்சிறப்பான நடிப்பு மட்டுமல்ல அந்தப்படமும் ஒரு மிகச்சிறப்பான ஒரு சமூகப்பதிவு.

தமிழகத்திலிருந்து நான்காவது நபராக சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நம் நல்வாழ்த்துகள். இதனாலெல்லாம் அவர் விஜய்களிடமும், விஷால்களிடமும் உதை வாங்குவது குறைந்துவிடாது என்றுதான் நினைக்கிறேன். நடத்துங்கள். ஹிஹி..

***************

எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகவேண்டும், தமிழிஷில் என் எல்லா பதிவுகளுக்கும் சரியாக 14±1 ஓட்டு கிடைக்கிறது (உ.போ.ஒ விமர்சனம் தவிர). ஒவ்வொரு முறையும் ஒரே ஆட்களும் இல்லை. சில மாற்றங்களும் இருக்கின்றன. கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல்.. எப்பிடி இப்படில்லாம்? போடுபவர்களுக்கு நன்றி. இதுவாவது பரவாயில்லை. தமிழ்மணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் துவக்கத்திலிருந்தே என்னால் ஓட்டுப்போட முடியவில்லை. டெக்னிகல் சிக்கல். அது பரவாயில்லை, ஆனால் தவறாமல் எல்லா பதிவுகளுக்கும் தமிழ்மணத்தில் நான் பெறும் ஓட்டு எத்தனை தெரியுமா? போய்ப்பாருங்கள்.. ஒண்ணே ஒண்ணுதான். எனக்குத்தெரிஞ்சாவணும், யாரந்த புண்ணியவான்?

****************

சமீபத்தில் அலுவலக நண்பரின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்கு நண்பர் குழாமே உணவு பறிமாறுவது உட்பட அனைத்து வேலைகளையும் செய்துகொண்டிருந்தார்கள். நானும் அதில் கலந்து அப்பளம் வைத்தல், ஊறுகாய் வைத்தல், ஐஸ்கிரீம் குச்சி வைத்தல் போன்ற கடின வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருந்தேன். பல வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் விசேஷ வீடுகளில் இந்த வேலைகளைச் செய்தது. இப்போது எல்லாமே கேட்டரிங்காரர்களே செய்துவிடுவதால் எதிர்பாராது கிடைத்த இந்த அனுபவத்தால் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

***************

ஒரு ஃப்ளோவில் 250வது பதிவை கணக்கில் வைக்க மிஸ் பண்ணிட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் அது ஒரு ரிப்பீட்டுப்பதிவாக அமைந்துவிட்டது தெரிந்தாலும்.. மகிழ்ச்சிதான். விதைபோல விழுந்தவன்.

****************

ஈரம் : விமர்சனம்

ஹீரோ ஆதி அந்தப்படத்தின் ஸ்டில் காமெராமேனுக்கு கோயில் கட்டிக்கும்பிடலாம், அவ்வளவு அழகாக அவரை போஸ்டர்களிலும், விளம்பரங்களிலும் காணமுடிந்தது. படத்திலும் ஓகேதான் என்றாலும் அவருக்கு இன்னும் கொஞ்சம் சரியாக முடிவெட்டிவிட்டிருக்கலாம்.பல இடங்களில் படம் கொஞ்சம் படுத்துகிறது. விறுவிறு கதையில் சும்மா கிளப்பியிருக்கவேண்டாமா? வழவழான்னு ஹீரோவின் லவ் போர்ஷன், தொடர்கொலைகள் பண்ணுமளவில் நந்தாவின் காரெக்டர் அறிமுகப்படுத்தப்படாதது என பல தொங்கல்கள். ஹீரோவை படமாக்கிய அழகில் அவர் ஏதாவது பண்ணுவார்.. பண்ணுவார் நினைத்துக் கொண்டேயிருக்கிறோம், அவரது ஹையர் அஃபிஷியல்ஸைப்போல நாமும். அவர் பண்ணினாத்தானே ஆச்சு.? மைல்டா சப்போர்ட் பண்ணியவங்களையே தண்ணீர், சிவப்புக்கலர் என போட்டுப்பார்க்கும் ஆவி, மெயின் வில்லனை போலீஸில் பிடிச்சுக்கொடுக்கிறது. கிளைமாக்ஸ் டிவிஸ்ட் அவலை நினைத்து இடித்த உமி. ரொம்பவே இங்கிலீஷ் படம் பார்த்தா இப்பிடித்தான் ஆகும்.

என்னதான் இருந்தாலும் வித்தியாசமான படமாக இருப்பதால் பக்கத்தில் ஏதாவது தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தால் மிஸ் பண்ணாமல் போய் பார்த்துவிடுங்கள். கொஞ்சம் நல்லது இருந்தாலும் பாராட்டியாக வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

****************

எல்லோரும் குறைந்தது ஆறு மாசமாவது தாங்குமா, ஒரு வருஷம் வந்தா சந்தோஷம்ங்கிற நினைப்பிலேயே செருப்பு வாங்குவீர்கள் என நம்புகிறேன். ஆனாலும் நமக்கு ஒரு சேஞ்ச் தேவைப்படுகிறது, செருப்பாக இருப்பினும் அளவுக்கு மீறி உழைத்தால் எரிச்சல்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய செருப்பு இன்னும் பிய்ந்துபோகாமல் என்னை படுத்திக்கொண்டிருக்கிறது ஐயா.. நம்புவீர்களா? என்னதான் பெரும்பாலான நேரங்களில் ஷூ அணிந்திருந்தாலும் 5 வருஷம் கொஞ்சம் ஓவர்தான் இல்லையா? நானே கடுப்பில் இருக்கிறேன். அந்த செருப்புகள் என்ன மேக் என என்னிடம் கேட்காதீர்கள்.!

.

Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் - விமர்சனம்

இதுவும் தமிழ்சினிமா காலங்காலமாய் கண்டுகொண்டிருக்கும் நடக்க இயலாத, அநீதிக்கு எதிராக ஹீரோ ஆக்ஷன் அவதாரம் எடுக்கும், ரசிகனுக்கு சுகமான இன்னொரு ஃபேன்டஸி ஹீரோயிஸ‌க்கதைதான்.

ஆனால் நமது ஆச்சரியம் யாதெனின் அதே கதையை, இது வரை நீங்கள் பார்த்திருக்கமுடியாத கோணத்தில், பல்லி சண்டைகள், குத்து டான்ஸ், மொக்கை ஹீரோயின் இவை எதுவுமே இல்லாமல் சொல்ல‌முடியுமா என்பதுதான். கமல்ஹாசன், சக்ரி டோலெட்டி கூட்டணி அதை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. சமீபத்தில் இவ்வளவு விறுவிறுப்பான சினிமாவைக் கண்டதாக நினைவில்லை. படம் கிளைமாக்ஸை நெருங்கியிருக்கையில் ஒரே ஒரு வருத்தம்தான், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்று.

கமலின் சமீபத்திய படங்கள் என்னதான் பிடித்திருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன அதிருப்தி நிலவும்.. அதை கொஞ்சம் அப்படிப் பண்ணியிருக்கலாமோ, இதை இப்படிப் பண்ணியிருக்கவேண்டாமோ என்று. இதில் அப்படியில்லாமல் முழு மகிழ்ச்சியை உணர்ந்தேன். குறிப்பாக இந்தப்படத்தில் பாடல்கள் இல்லை. (டிவியில் கூட இந்த சினிமா பாடல்களை கொஞ்சம் சகித்துக்கொண்டு பார்த்துவிடலாம், முடியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது ரிமோட். ஆனால் தியேட்டரில்? பாடல்களுக்கும், குத்து டான்ஸுக்கும் பயந்துதான் நான் தியேட்டர்களுக்கு சமீபகாலமாக போவதேயில்லை).

கதையை இதற்குள் பல விமர்சனங்களிலிருந்து தெரிந்துகொண்டிருப்பீர்கள். ஏற்கனவே பலரும் குறிப்பிட்டபடி படத்தின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஆர்ட் ஆகியன ஆகச்சிறந்தவை. சில லாஜிக் பிரச்சினைகளை இனி படம் பார்க்கச் செல்ப‌வர்களின் சுவாரசியம் கருதி குறிப்பிடவேண்டியதில்லை என நினைக்கிறேன். மேலும் தற்போதைய பிற தமிழ் சினிமாக்களின் உலக லாஜிக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்தப்படத்தில் மீறப்பட்டுள்ளவற்றை கொசுவின் கால் சுண்டுவிரலளவில் கொள்ளலாம்.

க‌ம‌ல் ப‌ட‌த்தில் பொதுவாகக் கிடைக்கும்‌ ம‌ற்றொரு விருந்து, க‌ம‌ல் ஏற்கும் பாத்திர‌ங்க‌ள் த‌விர்த்த‌ பிற‌ பாத்திர‌ங்க‌ளின் அமைப்பு ம‌ற்றும் அதில் வ‌ரும் ஆர்ட்டிஸ்டுக‌ளின் ப‌ர்ஃபாமென்ஸ். இதிலும் அது கிடைக்க‌த்த‌வ‌ற‌வில்லை. க‌ம‌ல்ஹாச‌ன், மோக‌ன்லால், ல‌ட்சுமி இவ‌ர்க‌ள் சிற‌ப்பாக‌ ப‌ண்ண‌வில்லையென்றால்தான் நாம் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌வேண்டும். அவ‌ர்க‌ள் அனுப‌வ‌ம் அப்ப‌டி. (ரித‌ம் ப‌ட‌த்தில் கிளைமாக்ஸில் மீனாவிட‌ம் ம‌ன்றாடும் ல‌ட்சுமியை நினைவு கூறுங்க‌ள். அது திற‌னையும் தாண்டிய‌ அனுப‌வ‌த்தில் வரக்கூடிய‌ ப‌ர்ஃபெக்ஷ‌ன்)

மோக‌ன்லாலின் கீழ்‌நிலை அதிகாரிக‌ளாக‌ வ‌ரும் ப‌ர‌த்ரெட்டி, க‌ணேஷ்‌வெங்க‌ட்ராம், ஆகியோர் அச‌ர‌வைக்கின்ற‌ன‌ர். அதுவும் கணேஷின் ஸ்டைலும் ஃபிட்டும் பார்க்கையில் பொறாமை எழுகிறது. இருவரும் இதற்குள் விஜய், அஜித்களுக்கு வயிற்றில் புளிகரைத்திருப்பார்கள் என்பது நிச்சயம். மேலும் சின்னச்சின்ன‌ காரெக்ட‌ர்க‌ளில் அனுஜா, சிவாஜி, பாஸ்க‌ர், ப்ரேம், ஆன‌ந்த்கிருஷ்ண‌மூர்த்தி (ச‌திலீலாவ‌தியில் க‌ம‌லின் வாரிசு), ஸ்ரீமன் என‌ ஒவ்வொருவ‌ரும் க‌ச்சித‌ம். நம்பிக்கை தரும் புது வரவான இய‌க்குன‌ர் ச‌க்ரி த‌சாவ‌தார‌த்தில் கோவிந்தின் அமெரிக்க‌ ந‌ண்ப‌ராக‌ வ‌ந்து ஃப்ளெட்ச‌ரிட‌ம் அடிப‌ட்டு இற‌ந்துபோகும் காரெக்ட‌ரில் வ‌ந்த‌வர், நிஜ‌த்திலும் க‌ம‌லின் ந‌ண்ப‌ர் என்ப‌தும் ச‌ல‌ங்கை ஒலியில் க‌ம‌லை அவுட் ஆஃப் போக‌ஸில் புகைப்ப‌ட‌ம் எடுத்து க‌டுப்பேற்றும் குட்டிப்பையனாக வந்தவர் என்ப‌தும் கூடுத‌ல் த‌க‌வ‌ல்.

எல்லாக் கமல் படங்களிலும் இருக்கும் நுண்ணியமாய் கவனித்து ரசித்துத்திளைக்க வேண்டிய‌ காட்சிகள் இதிலும் விரவிக்கிட‌க்கின்றன. மிஸ் பண்ணிவிடாதீர்கள். கமலும் கூட தப்பமுடிந்திராத அல்லது அவருக்கும் கூட அவசியப்படுகின்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் விசில் சத்தம் ரெண்டு நாட்களில் ஓய்ந்துவிடும். பின்னர் சென்று நிதானமாக நல்லதொரு தியேட்டராக‌ போய் பார்த்து அனுபவியுங்கள் இந்த எக்ஸ்பிரஸ் வேக திரைப்படத்தை.

அது க‌லைஞ‌ரின் குர‌லா இல்லையா? தீவிர‌வாதிக‌ள்னா இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ட்டும்தானா? காம‌ன் மேன் எப்ப‌டி பிரெட் சாப்பிட‌லாம்? ந‌ஸ்ருதீன் ப‌ர்ஃபாமென்ஸ்க்கு முன்னால் ஹிஹி.. என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம். கேட்டுக்கொள்ளுங்கள்.

சிலமணி நேரங்களில் நிகழும் கதை, மிகச்சில காட்சிக்களங்கள் என்றிருப்பதால் விரைவிலேயே பணிகள் நிறைவு பெற்றிருக்கும் என நம்பலாம். இது போன்றும் கதைகளை தேர்வுசெய்தால் பசியோடிருக்கும் ரசிக யானைக்கு இன்னும் கொஞ்சம் தீனி போடலாம். செய்வாரா கமல்?

அப்புற‌ம் முக்கியமான‌தொரு செய்தி. A time and tide waits for none.. கமல்ஹாசனுக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது. முகமும் கண்களும் காட்டிக்கொடுக்கின்றன. இந்தப்படத்திலும் வயதானவரைப்போல அவர் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார் என்று என்னையே நான் ஏமாற்றிக்கொண்டேன்.

இருப்பினும், Age is something that doesn't matter, If you are a wine..தான் இல்லையா?

.

Wednesday, September 16, 2009

இன்னொரு முகம்

சில பல வருடங்களுக்கு முன் நம் கலைத்தாகத்துக்கு கவிதைகளும், ஓவியமும்தான் வடிகால். இப்போதான் நீங்க இருக்கீங்களே.! அதனால் இப்போது அதெல்லாம் பண்ணுவதில்லை. நானும் இதுவரை என் பல திறமைகளை உங்களிடம் காட்டி மிரட்டியிருக்கிறேன் அல்லவா? இந்த ஓவியத்திறமை மட்டும் பாக்கியிருந்தது. அதையேன் பாக்கிவைக்கவேண்டும் என்று பழைய நோட்டுப்புத்தகங்களை புரட்டி நண்பர்கள் லவுட்டிக்கொண்டு போனவை, கிழிந்து போனவை, தொலைந்து போனவை (2005ல் என்னைக்கவர்ந்த பெண் செலிபிரட்டிகளை நான் வரைந்து வைத்திருந்த என் ஓவிய நோட்டை சென்னை கோவை பேருந்தில் தவறவிட்டது என் வாழ்நாள் சோகம்) போக மிச்சமிருந்த படங்களில் ஒன்று உங்கள் பார்வைக்கு.. 2003ல் வரைந்தது. இதில் இருக்கும் கூடுதல் ஸ்பெஷலை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.


பி.கு : எப்படி கவிதைன்னா காதல் மட்டும்தான் என்பது போல படம் என்றால் கார்ட்டூனோ, ஓவியமோ, போர்ட்ரெய்டோ பெண்கள் மட்டும்தான் என்பது நம் கொள்கை. யோசித்துப்பார்க்கிறேன்.. இயற்கைக்காட்சிகளோ, ஆண்களோ இதுவரை வரைந்ததேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.
.

Tuesday, September 15, 2009

யாரு என் வரலாறு கூறுவது.?

'ஆறு தன் வரலாறு கூறுதல்' என்ற தலைப்பில் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தத்தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அமிர்தவர்ஷினிஅம்மாவுக்கு நன்றி. நமக்குதான் கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியாதே, அதான் தலைப்பை இப்படி குரங்கு வேலை பார்த்து வச்சிருக்கேன். உண்மையில் இந்தத்தொடரை ஆரம்பித்த மயூரன் இதற்கு தந்த தலைப்பு 'வலை பதிய வந்த கதை'. இதுவும் சுகமான ஒரு சுயபுகழ்தலுக்கான வாய்ப்பு என்பதால் தொடர் அறுபடாமல் செல்கிறது என நினைக்கிறேன். வழக்கமாக நான் தொடருக்கு அழைத்தால் ஒருவரும் அதை தொடராமல் அப்படியே ஒழிஞ்சுபோயிரும். (ஹிஹி.. நண்பர்களுக்கு நம்மீது அவ்வளவுதான் மருவாதி). இந்தத்தொடரை மட்டும் நான் அழைக்கப்போகும் நபர்கள் தொடர்கிறார்களா என்று கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பேன். நடக்கலன்னா தெரியும் சேதி.!

இனி சுயபுராணம்..

2007 ஜனவரி வாக்கில் பழக்கமான ஒரு எழுத்தாளர், இன்னும் புத்தகமாகியிராத தனது எழுத்துகள், உரைகளை பிளாகில் போட்டுள்ளதாகவும், நேரமிருக்கும் போது படியுங்கள் என்றும் கூறிவந்தார். எனக்கு அலுவலக விஷயங்களை தெரிந்துகொள்ள இருக்கும் ஆவல் பிற விஷயங்களில் இருப்பதில்லை. அதுவும் புரியாத விஷயங்கள் என்றால் கடுப்பாக இருக்கும். ஆகவே அதென்ன பிளாக்கு ஒயிட்டுனு.. கடுப்பாகி விட்டுவிட்டேன்.

கொசு விரட்டிக்கொண்டிருந்த பின்னொரு அலுவலக நாளில் அதைப்படிக்கலாமே என்று பிளாகினுள் வந்தேன். அன்று அந்த பிளாகின் மேல் வலது மூலையில் கிரியேட் பிளாக் பட்டனைக்கண்டேன். இன்று இதோ நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

பிளாக் கிரியேட் பண்ணுவது அவ்வளவு எளிதாக இருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை, முதலில் பத்திரிகைகள் சீண்டாமல், என் டைரியில் தூங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை போடலாம் என்றுதான் நினைத்து 'முதல்முத்தம்' என்ற பிளாகை ஆரம்பித்தேன். (இன்னிக்கு அந்தக்கடை கவனிக்கப்படாமல் சாத்துற நிலையில் இருக்குது). தொடர்ந்து வந்த சில வாரங்களில் 'குருவி' என்ற ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு வந்த ஆற்றாமையில் ஆரம்பித்ததுதான் 'அலிபாபாவும் 108 அறிவுரைகளும்'. அந்த வகையில் விஜய்க்குதான் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். முதலில் சில பதிவுகள் எழுதிவிட்டு வாசிக்க நாதியில்லாமல் மூடிவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்து பல வாரங்களுக்குப் பிறகுதான் தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகள் குறித்து அறிய வந்து அவற்றில் இணைத்தேன். அதன் பிறகே ஹிட்ஸும், பின்னூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தன.

அப்துல்லா, மங்களூர் சிவா, வெண்பூ, பரிசல், கார்க்கி போன்ற இன்றைய பிரபலங்களும் நான் பதிவுலகம் வந்த அதே சமயத்தில்தான் பதிவுலகம் வந்தனர். அவர்களே ஆரம்பத்தில் மிகுந்த உற்சாகம் தந்து ஊக்கப்படுத்தியவர்கள். பின்னர் நர்சிம், அனுஜன்யா, வேலன், கேபிள் என நட்பு வட்டம் பெருகியது. அனைவரும் குழுவாக செயல்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு இருப்பினும் அதுவல்ல உண்மை. பதிவுலகம் தாண்டிய நட்பு ஏற்பட்டிருப்பது உண்மையானாலும் ஒருவருக்கொருவர் தீராத போட்டியாகத்தான் கருதிக்கொண்டிருக்கிறோம். நன்கு எழுதும் புதியவர்களைக்காணும் போது இதோ இன்னுமொரு போட்டியென்ற பயமும் மகிழ்ச்சியும்தான் கொள்கிறோம்.

என்ன பேச்சு திசைமாறுது? நம்ப விஷயத்துக்கு வாங்க.. அடுத்து 'திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை'ப் பதிவைத்துவங்கிய போது ஒரு பெரிய வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து எச்சரிக்கைகளும், மொக்கைகளுமாய் தொடர்ந்தேன். பின் கொஞ்சம் கவிதை, சினிமா என தொடர்ந்து அதன் பின் கதைகள், துறைசார்ந்த பதிவுகள் அறிமுகமாயின. இதில் துறை சார்ந்த பதிவுகள் கொஞ்சம் புதிய வாசகர்களையும், வலைக்கு ஒரு புதிய வண்ணத்தையும் தந்தது. தொடர்ந்து மொக்கைகளும், சில புதிய பதிவுகளுமாய் பயணம் ஒரு லட்சம் ஹிட்ஸையும், குறிப்பிடத்தகுந்த ஃபாலோயர்ஸையும் அடைந்தபோது ஒரு சிக்கல் வந்தது. அது தாமிரா என்ற பெயருக்கான சிக்கல். ஏற்கனவே பாப்புலராகியிருக்கும் திரைத்துறையைச்சார்ந்த தாமிரா இருப்பதால் என் நிஜப்பெயருக்கு மாறினேன். அதே சமயம் தமிழ்மண நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. பின்னர் எனது 'சிக்ஸ் சிக்மா' பதிவு தமிழ்மணத்தின் 2008க்கான தொழில்நுட்பத்துக்கான முதல் பரிசை வென்றது ஒரு மகிழ்வான தருணம். விகடன் வாய்ப்புகளும் வந்தன. பெயரைத்தொடர்ந்து வலையில் டெம்ப்ளேட் மாற்றம், டொமைன் மாற்றம், வலைப்பெயர் மாற்றம் என தொடர்மாற்றங்களும் நிகழ்ந்தது (ரொம்ப ஓவராயிருக்குதுல்ல.. ஹிஹி). சரி போதும், நிறுத்திக்கலாம்.

டெக்னிகல் சைட் என்று பார்த்தால் முதலில் நிறைய விட்ஜெட்ஸ் வைத்திருந்து அதனால் வலை பாதிக்கப்படுவது தெரிந்ததால் இப்போது பெரும்பாலும் தவிர்க்கிறேன். துவக்கத்தில் தமிழ் எழுத 'அழகி' உபயோகித்து இப்போது பெரும்பாலும் 'ஈகலப்பை (தமிழா)' மட்டுமே பயன்படுத்துகிறேன். ஆன்லைன் என்றால் எப்போதும் 'tamileditor.org' யில் எழுதுகிறேன். இடையில் பதிவேற்ற சிலகாலம் 'வின் லைவ் ரைட்டர்' பயன் படுத்திக்கொண்டிருந்தேன். இப்போது அதில் கொஞ்சம் சிக்கல் இருப்பதால் நேரடியாக பிளாகரிலேயே போட்டுக்கொண்டிருக்கிறேன். வாரத்துக்கு சராசரியாக 4 பதிவுகள் என்ற கணக்கில் பதிவுகள் எழுதிவருகிறேன். அதற்கே நேரம் கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. நண்பர்களைப்படிக்கவும், பின்னூட்டமிடவுமே கிடைக்கும் நேரம் செலவாகிவிடுகிறது. பதிவுலகம் வந்தவுடன் புத்தகங்கள் படிப்பது, சினிமா பார்ப்பது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனது எழுதும் ஆர்வத்துக்கு வடிகாலாக அமையும் அதே நேரம், பத்திரிகைகளுக்கான வாய்ப்பையும், ஆச்சரியங்களில் ஆழ்த்தும் அரிய நட்பையும் ஏற்படுத்தித்தரும் 'வலைப்பூ' என் வாழ்வின் ஒரு இனிய திருப்பம் என்பது ம்றுக்கமுடியாது. இந்த மகிழ்ச்சிக்கதையை தொடர இனிய நண்பர்கள்


..ஆகியோரை அழைக்கிறேன்.
.

விதை போல விழுந்தவன்

அரசியல் உள்ளிட்ட சில பல தலைப்புகளில் பதிவோ ஆராய்ச்சியோ இப்போதைக்கு பண்ணுவதாக திட்டமேதும் இல்லை (அப்பாடா என்று பெருமூச்சு விடுவது கேட்கிறது).

இருப்பினும் தமிழகத்தின் தன்னிகரில்லாத ஒரு பெரும் தலைவனின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தில் குட்டியூண்டாவது பங்குபெறும் பேரார்வத்தில் நிகழ்ந்த ப‌திவு இது.

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றியெழுதிய அந்தப்பேரறிஞனைப்பற்றி கவிக்கோ அப்துல்ரகுமான் இவ்வாறு எழுதுகிறார்.

ஒரு ரத்த நதிக்கரைக்குப் பூக்களோடு வந்தவன் நீ

நீயோர் இசைத்தட்டு, ஊசிகள் உன்னைக்கீறியபோதும் இசைபாடியவன் நீ

அழுகின்ற போதும் மேகம்போல அழுதவன் நீ

விழுகின்ற போதும் விதையைப்போல் விழுந்தவன் நீ!

.

Monday, September 14, 2009

சிறுகதைப்பட்டறைப் புகைப்படங்கள்

வழக்கமாக நிகழும் பதிவர் சந்திப்புகளில் நான் எடுக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் என் கணினியிலேயே தூங்கிக்கொண்டிருக்கும். யாராவது ஓரிரு புகைப்படங்கள் இமெயில் செய்யச்சொன்னாலும் கூட சரி சரியென்று சொல்வேனே தவிர இவரிடம் கேட்பதைவிட குட்டிச்சுவரில் போய் முட்டிக்கொள்ளலாம் என கேட்பவர்கள் எண்ணுமளவுக்கு ஆக்கிவிடுவேன்.

இந்தமுறை அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாது என முடிவு செய்து சென்னையில் நிகழ்ந்த 'உரையாடல்' சிறுகதைப்பட்டறையின் போது எடுத்த ஏறத்தாள அனைத்து புகைப்படங்களையும் பதிவேற்றிவிடுவது என முடிவு செய்து ஒவ்வொரு படமாக உட்கார்ந்து சைஸ் ஏற்புடையதாக்கி ஒருவழியாக பிளாகரிலேயே (லைவ் ரைட்டரில் ஏதோ பிரச்சினை) முட்டி மோதி ஏற்றியாயிற்று. எழுத்தாளர்கள், பிளாகர் சீனியர்ஸ், ஜூனியர்ஸ் என கலந்து கட்டி பதிவாகியிருக்கும் புகைப்படங்களில் முடிந்தவரை பெயர் குறிப்பிட முயற்சித்திருக்கிறேன். நேற்றைய பட்டறை குறித்த பதிவில் பிரதான பேச்சாளர்களின் படங்களை கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
1. Pudhinan, Tamilan

2. ??, Kirbal, ??

3. Muralikumar

4. Vadakarai Velan

5. ??, Ulavan, ??

6. Athisha

7. Yathra

8. Yuvakrishna (Lukylook)

9. Saravanan, ??, Muralikumar, Senthil

10. Cable shankar

11. Muraikannan

12. Tamilpriyan

13. Parisalkaran

14. ??

15. Nanjilnatham, Vaalpaiyan

16. Sa. Devadas

17. Rejovasan, ??

18. Cheral, Krishnaprabhu, Ulavan, ??

19. Kumky, Unmaiththamilan, Veyilan

20. Yvan chandrasekar

21. Pon.Vasudevan, Athimoolakrishnan

22. Athimoolakrishnan

23. Sa. Muthuvel

24. R.V.Chandrasekar, ??, ??

25. Pon. Vasudevan, Cable shankar

26. Vannauthupoochiyar, Thandora


27. Vadakarai Velan, Veyilan, Narsim

28. Karki, Parisalkaran

29. Pa. Ragavan, Paithiyakaran, Jyovram Sundar

பின் குறிப்பு : பெயர்கள், புகைப்படங்கள் நண்பர்களின் அனுமதியில்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. யாருக்காவது ஆட்சேபணை இருப்பின் அதற்காக வருந்துகிறேன். பின்னூட்டத்தில் தெரிவித்தால் நீக்கப்பட்டுவிடும். நான் பெயர் குறிப்பிடத் தவறிய பதிவர்கள் தெரிவித்தால் இணைத்துவிடுகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.

.

'உரையாடல்' சிறுகதைப்பட்டறை : ஓர் அனுபவம்

முழுநாள் நிகழ்ச்சி என்பதால் வழக்கம்போல அல்லாமல் சில நாட்களுக்கு முன்னரே அலுவலக சம்பந்தமாக ஒரு 'பயிற்சி வகுப்பு' இருக்கிறது என்று ரமாவிடம் தெளிவாக பொய் சொல்லிவைத்திருந்தேன். இருப்பினும் அந்த நாள் வரும்முன் எங்கே நானே உண்மையை உளறிவிடுவேனோ என்றும் பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்படியேதும் நடக்காமல் திட்டம் நிறைவேறியது. அருகிலிருக்கும் நண்பர் நாஞ்சிலும் வீட்டில் இதே போன்ற பொய்யை டிட்டோவாக சொல்லிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்திருக்கிறார் என்று பின்னர் தெரிந்துகொண்டேன். அதுசரி, வீட்டுக்கு வீடு காலிங்பெல். 7 மணிக்கெல்லாம் இருவரும் கிளம்பினோம்.

இருவரும் தாமதமாகிவிட்டதே என்ற அவசரத்தில் தாம்பரத்தில் வண்டியைப் போட்டுவிட்டு ட்ரெயினில் (ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் ஸ்டாண்டிங்தான்பா.. 7.45 அதிகாலைதானே) பயணித்து 'ரீஜென்சி' விடுதி அரங்கை அடைந்தபோது மணி 8.45. அதுதானே பார்த்தேன்.. தமிழ்நாட்டில்தானே இருக்கிறோம். சுமார் 15 பேர்தான் கூடியிருந்தனர். பின்னர் திட்டமிட்டபடி நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்து நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு துவங்கியது. பிரபல பதிவர்கள் பலர் கூடியிருந்த அதே நேரம் புதியவர்கள் பலரையும் காணமுடிந்தது. நிதானமாக அனைவரையும் அறிமுகம் செய்துகொள்ளத்தான் முடியவில்லை. பதிவெழுதாவிட்டாலும் வலையுலகை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் (ஹிஹி.. வாசகர்கள்) சிலரும் கலந்துகொண்டதை அறியமுடிந்தது. மதுரை, கோவை, திருப்பூர் (தனியாக திருப்பூர்னு சொல்லலைன்னா உதைப்பாங்க) போன்ற தொலைதூரங்களிலிருந்து பிரபல பதிவர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர். உமாசக்தி, ராமச்சந்திரன் உஷா, விதூஷ் ஆகிய பெண் பதிவர்களும் கலந்துகொண்டனர்.

DSC06693

முதலில் தனது சிறுகதை அனுபவம் குறித்து பாஸ்கர் சக்தி உரையாடினார். அவர் எழுதிய 'தக்ளி' கதையின் அனுபவம் குறித்து விளக்கமாக நினைவுகூர்ந்தார். எனது பள்ளிக் காலங்களில் அந்தக் கதையை படித்த நினைவு. யாரோ பழம்பெரும் எழுத்தாளர் எழுதியதாக இருக்கும் என்ற நினைப்பிலிருந்த நான் அது பாஸ்கர் சக்தி என்றறிந்து வியப்புற்றேன். தொடர்ந்து கேள்வி-பதில் பகுதியை அவர் எதிர்கொண்டார். நினைத்தது போலவே வெறுப்படைய வைக்கும் மொக்கைக்கேள்விகள், பதிலைப் புரிந்துகொள்ளாமல் வரும் ரிப்பீட்டுக்கேள்விகள் என கொஞ்சம் சிரமப்பட்டார். நல்ல வேளையாக அவருக்குப் பின் வந்த மற்ற எழுத்தாளர்களுக்கு இந்த நிலை நேரவில்லை, அந்த 'சித்தூர் சிறுகதையம்மன்'தான் அவர்களைக் காப்பாற்றியிருக்கவேண்டும்.

DSC06700

(பாஸ்கர் சக்தி)

தொடர்ந்து யுவன் சந்திரசேகர் இலக்கணங்களுக்குள், கட்டுகளுக்குள் அடங்காத தனது சிறுகதைகள் குறித்து உரையாடினார். நான் அவரது சிறுகதைகளை படித்திருக்காவிட்டாலும் (மற்றவர்களையெல்லாம் கரைத்துக் குடித்துவிட்டாயடா கண்மணி) அந்தப்பெயர் கவர்ச்சியோ, அவரது கவிதைகளை பிரபல இதழ்களில் கண்டதாலோ அவர் பெயருக்கென்று ஒரு கற்பனை இருந்தது என்னிடம். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரபல எழுத்தாளரை அறிமுகம் செய்துகொண்ட போது முந்திரிக்கொட்டைத்தனமாக 'நீங்கள்தானே யுவன் சந்திரசேகர்?' என்று கேட்டு மூக்கிலேயே குத்துவாங்கிய நிகழ்ச்சி நினைவில் வந்துபோனது. தனது உறுதியான, ஆளுமையான பேச்சால் கூட்டத்தை பசி நேரம் தாண்டியும் கட்டிப்போட்டார். எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை பற்றிய பேச்சு வந்த போது கொஞ்சம் ஆவேசமாகவே கோபத்தைக்காட்டினார். அதுதான் பிரதானம், அதை முதலில் சரிசெய்து கொண்டு பின்னர் வைத்துக்கொள்ளலாம் உங்கள் படைப்புப் புண்ணாக்குகளை என்றார், நியாயம்தான். விட்டால் தவறாக எழுதுபவர்களை தேடி வந்து உதைப்பார் போலிருந்தது. (இதில் எத்தனை சந்திப்பிழைகள் உள்ளனவோ, அவர் படிக்க நேர்ந்தால்.. அவ்வ்வ்வ்). கேள்வி-பதிலின் போது கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் தூள் பறந்தது.

DSC06773

(யுவன் சந்திரசேகர்)

நல்லதொரு மதிய உணவுக்குப் பின்னர் உலக சிறுகதைகள் மீதான ஒரு அறிமுகத்தைத் தந்தார் சா. தேவதாஸ். நல்ல அழகான கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போன்ற தமிழ்ப்பேச்சு அவருடையது. அவருடைய உலகளாவிய சிறுகதை வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்புக்கு அவர் எவ்வளவு வாசித்திருக்கவேண்டும் என்ற எண்ணம் பிரமிப்பைத்தந்தது. (இன்னும் உள்ளூர் சிறுகதைகளையே உருப்படியாக வாசித்திராத நானெல்லாம் என்றைக்கு உலக சிறுகதைகளை.. வாசித்துக் கொண்டாடி.. ஹூம்).

DSC06811

(சா.தேவதாஸ்)

பின்னர் 'பவர்பாயிண்ட்' பிரசண்டேஷனுடன் துவக்கநிலை எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கான சிறுகதைகளை எப்படி எழுத வேண்டும், தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்று தன் பகுதியை துவங்கினார் பா.ராகவன். கல்கி மற்றும் குமுதத்தில் பல ஆண்டுகள் கதைத்தேர்வுப் பணியை அவர் எவ்வாறு செய்தார் என்பதையும், உதவி ஆசிரியர்களின் மனநிலையும், கொடும்பணியும் எவ்வாறு இருக்கும் என்பதையும் நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தார். முதலில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, டிபிகல் கதைகளை எழுதுவதில் தேர்ந்த பின்னர் பிற கட்டுடைப்பு முயற்சிகளை செய்துபார்க்கலாம் என்பதை வலியுறுத்தினார். அதற்கும் பிரதானமாக ஏன் எழுதுகிறோம் புகழுக்காகவா? பணத்துக்காகவா? பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சிக்காகவா? என்பதில் ஒரு தெளிவு வேண்டும் என்றார். இந்த வரிசையில் பணத்துக்காகவா? என்ற கேள்வி வந்ததும் தமிழ்ச்சூழலில் எழுதி பணம் சம்பாதிக்கமுடியம் என்பதில் நம்பிக்கையில்லாத பலரும் (அனைவரும்) நகைக்க எத்தனித்தனர். ஆனால் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் பின்னர் மெலிதாக குறிப்பிட்டார் பா.ராகவன்.

DSC06821

(பா.ராகவன்)

இறுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொதுவாக மறக்க இயலாத நல்லதொரு அனுபவமாகவும், தொடர்ந்து சிறுகதைகள் எழுத முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையையும் இந்த பட்டறை எனக்குத்தந்தது. மேலும் ஒரு மெகா சைஸ் பதிவர் சந்திப்பாகவும் அமைந்தது. டோண்டு, உண்மைத்தமிழன், லக்கி, அதிஷா, பரிசல், பொன்.வாசுதேவன், வடகரை வேலன், கார்க்கி, முரளி, வால்பையன், கேபிள்சங்கர், வெயிலான் போன்ற பிரபல பதிவர்களை ஒரே நேரத்தில் காணமுடிந்த அதே நேரம் நிறைய புதியவர்களையும் (பெயர்களை எழுதினால் கம்பெனி தாங்காது) பார்த்து மகிழமுடிந்தது.

இவ்வரிய நிகழ்வை நிகழ்த்திக்காட்டிய பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் இணைக்கும், அதற்கு உறுதுணையாக நின்ற 'கிழக்கு' பத்ரி, நர்சிம் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

The 4

(பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம்சுந்தர், பத்ரி, நர்சிம்)

சுமார் 7 மணிக்கு விழா இனிதே நிறைவு பெற்றது. பின்னர் அனைவரும் கிளம்ப அன்றே ஊருக்குக்கிளம்ப வேண்டிய ஒரு பதிவர்குழுவுடன் இணைந்து செண்ட்ரல் அருகிலிருந்த ஒரு உணவகத்துக்குச்சென்றேன் (கொண்டுசெல்லப்பட்டேன் என்றும் சொல்லலாம்). ரமாவை மனக்கண்ணில் நிறுத்திக்கொண்டதால் என் கைகள் பெப்ஸி பாட்டிலை மட்டுமே கைக்கொண்டது. ஹாஃப் காலியான நிலையில் (ஹிஹி.. பியர் பாட்டில்தான்) ஒரு பிரபல பதிவர் என்னனப்பார்த்து நீங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் என்றார் கொஞ்சம் சீரியஸாகவே. கார்க்கியின் புட்டிக்கதைகளில் வரும் ஏழு காரெக்டர் யாருடைய இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டது என்ற ரகசியம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு விளங்கத்துவங்கியது.

.

Thursday, September 10, 2009

ஆடிட் ஷெட்யூல் வந்தாச்சு..

"ஆடிட் ஷெட்யூல் வந்தாச்சு.. நாளைக்கு காலையில 10 மணிக்கே முதலில் உங்களுக்குதான் தெரியுமில்ல? என்ன எல்லாம் ரெடியா?" என்று பக்கத்து டிபார்ட்மென்டை பார்த்து வயிற்றில் புளியைக் கரைக்கும் வண்ணம் கேள்வி கேட்கும் போது நக்கல் புடிச்ச ஒருவர், "நாங்க இப்பதான் ISO 8500 வரை வந்திருக்கோம்.. காலைக்குள்ளே 9000 கிட்ட வந்திடுவோம்" என்பார்.

இதைப்போன்ற நகைச்சுவைகள் தொழிற்துறைகளில் மிகவும் சாதாரணமானது. அந்த 8500 என்றும் ஒரு ISO வகுப்பு (Standard) இருப்பதை இருவருமே அறியாதவரைக்கும்தான் அது நகைச்சுவை. அதைப்பற்றி ஒரு சின்ன பார்வையை பார்க்கும் முன்னதாக ஆடிட்டிங் திருவிழாவைப்பற்றி பார்ப்போம்.

ஆடிட்டுக்கு முதல் நாள் ஏதோ பொங்கலுக்கு வெள்ளையடிப்பது போல வேலை நடந்துகொண்டிருக்கும். எப்போதுமே பார்க்கமுடியாத எம்டி வேறு வந்து பொது மீட்டிங் ஏற்பாடு செய்து "ஊம்.. ஜாக்கிரதை.!" என்று பயங்காட்டிவிட்டு போயிருப்பார். ரெகுலர் வேலைகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு உள்ளுக்குள் பயத்துடன் பரபரப்பாக பழைய ரெக்கார்டுகளை நோண்டுவது, போலி ரிப்போர்ட்டுகளை தயார் செய்வது, மெஷின்கள், கருவிகளின் ரிப்போர்ட்டுகளை சரி பார்ப்பது, பிறவற்றை ஒழுங்கு செய்வது என விடிய விடிய வேலை நடக்கும்.

ஆனால் மறுநாள் ஆடிட்டின் போதோ எதுவும் தெரியாதது போல ஸ்டைலாக ரெகுலர் வேலைகளை பார்ப்பது போல நடித்துக்கொண்டிருப்பார்கள். பக்கத்து டிபார்ட்மென்டில் நடந்துகொண்டிருக்கும் ஆடிட்டிங் விபரங்களை நிமிடத்துக்கு நிமிடம் லைவ் டெலிகாஸ்ட் போல ஒருவர் நைஸாக வெளியே வந்தோ/ போனிலோ சொல்லிக்கொண்டிருப்பார். சேவாக் விக்கெட் விழுந்ததும் ஒண்ணு போச்சே என்று அலறுவதைப்போல முதல் NC (ஒவ்வாதவை-Non Conformity) வந்ததும் பிறர் கதிகலங்குவர். ஆடிட்டர் அப்படி.. இப்படி.. இன்னிக்கு ஆப்புதான்டி உங்களுக்கு என்று ஆடிட் முடிந்தவர்கள் வந்து கிலி ஏற்படுத்திச்செல்வார்கள். இப்படியாக திருவிழாக்கோலமாக அந்த ஒருநாளோ, இரண்டு நாட்களோ அமையும். ஆடிட் முடிந்ததும் ரெண்டு நாள் லீவு போட்டு ரெஸ்ட் எடுப்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

அப்படி என்னதான் இருக்கிறது அதில்? இந்த ISO நியதிகள் (Standards) முக்கியமானதுதானா? அப்படி என்றால் என்ன? வெவ்வேறு எண்களை குறிப்பிட்டு கன்ஃப்யூஸ் செய்கிறார்களே? அவையெல்லாம் என்ன?

கான்செப்ட் மிக எளிதானது. உங்களுக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது. டிவி என்று கொள்ளலாம். ஏறக்குறைய எல்லாமே ஒரே அளவு, ஒரே விலை, ஒரே வாரன்டி காலம் என இருக்கின்றன. எதைத்தேர்வு செய்வீர்கள்? கூடுதலாக ஏதோ ஒன்று தேவைப்படுகிறது இல்லையா.? சூழலுக்கு பாதிப்பில்லாமல் அது தயாரிக்கப்பட்டதா? நம்மால் புரிந்துகொள்ள இயலாத அதன் உள்பாகங்கள் சிறப்பானவைதானா? நீண்ட நாட்களுக்கு தரமான சேவையை அது வழங்குமா? இவற்றையெல்லாம் யாராவது சோதித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்தானே.. அதைச்செய்வதுதான் சான்றிதழ்கள் வழங்கும் நிறுவனங்களின் பணி. அந்த சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் டிவியை வாங்குவதென நாம் முடிவு செய்யலாம்.

ஹிஹி.. இதெல்லாம் சில ஐந்தாண்டுக‌ளுக்கு முந்தைய நிலை. இப்போ இதைச்சொல்லிவிட்டு எஸ்கேப்பானால் நீங்கள் மூக்கிலேயே குத்துவீர்கள் என தெரியும். இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா நுகர்பொருள் தயாரிப்பாளர்களுமே இந்தச் சான்றுகள் பெற்றிருந்தால்தான் சந்தையில் இருக்கமுடியும், அந்த அளவில் அவை அடிப்படைத் தேவை என்று ஆகிவிட்டன. அப்படியானால் இப்போது இரண்டு டிவி தயாரிப்பாளர்களும் சான்றிதழ் பெற்றிருக்க, நீங்கள் எப்படி டிவியைத் தேர்வு செய்வீர்கள்? அதெல்லாம் சொல்லமுடியாது. அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதற்குள்ளாகவே பதிவு இம்மாம் பெரிதாக ஆகிவிட்டது. இன்னும் சொல்லவந்ததையே சொல்லவில்லை.. இப்போ உங்களுக்கு ISO பற்றி தெரியவேண்டுமா? இல்லையா?


ISO (சர்வதேச நியதிகள் நிறுவனம் -International Organization for Standardization) என்பது ஸ்விட்ஸர்லாந்த், ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இது கொசுவுக்கெல்லாம் குடை பிடிப்பது போல "குண்டூசி முதல் கப்பல் உள்ளான பொருட்கள் தயாரிப்பு, மற்றும் அனைத்து சேவைகள், அரசு உள்ளிட்ட நிறுவன இயக்கம்" என இந்த பூமிப்பந்தின் கிட்டத்தட்ட அனைத்து செயற்கைப்பொருட்களும் எவ்வாறு இருக்கவேண்டும், செயல்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்ற‌ ஒப்பீட்டு வரையறைகள், நியதிகள், முறைப்படுத்தும் வழிமுறைகள் (Standards) உருவாக்கும் தலையாய பணியைச்செய்கிறது. இது உலகெங்கும் கிளைகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய வலைப்பின்னல் ஆகும். இதைப்போலவே IEC (International Electrotechnical Commission), ITU (International Telecommunication Union) ஆகிய இன்னும் சில பெரும் நிறுவனங்களும் செயல்படுகின்றன. சில பிரிவுகளில் இவை இணைந்தும் இயங்குகின்றன. இவை தவிர்த்து இன்னும் பல சிறு, குறு நிறுவனங்களும், ஸ்பெஷலைஸ்டு ஏரியாக்களை கைகளில் வைத்திருக்கும் நிறுவனங்களும் உண்டு.

இந்திய அரசு சார்ந்த நிறுவனம் BIS (Bureau of Indian Standards) என்பதும் இவ்வாறான ஒரு நிறுவனம்தான். இதுவும் IS (கவனிக்க ISO அல்ல IS) எனும் ஒரு பெரும் நியதிகள் தொகுப்பை நமக்கு வழங்குகிறது. மேலும் ISI, HALLMARK போன்ற முத்திரைகளும் BIS நமக்கு வழங்கும் சேவைகள்தான். சரி போதும். ஒரே நாளில் ரொம்ப தெரிந்துகொண்டால் மண்டை சூடாகிவிடும். இப்போதைக்கு ISO வை மட்டும் பார்க்கலாம்.

ISO நியதிகள் (Standards) பெரும்பாலும் Referral standards (ஒப்பீட்டு நியதிகள்) ஆகவும், சில Procedures (வழிமுறைகள்) ஆகவும் பயன்படுகின்றது. Referral Standards என்பவை ஒரு பொருள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. உதாரணமாக நீங்களும் நானும் CD தயாரிக்கும் நிறுவனங்கள் வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நான் வட்டமாக CD க்கள் தயாரித்தால், வித்தியாசமாக தயாரிக்கிறேன் பேர்வழி என்று நீங்கள் சதுரமாக தயாரித்தால் என்ன நடக்கும்? அதற்கென்று இருக்கும் அளவுகளில்தான் (Outer Diameter, Inner Diameter, Thickness, Material properties etc) அவை தயாரிக்கப்படவேண்டும். அதைப்போல என் பைக்கின் டயர் பழுதுபட்டு அதை நான் மாற்ற வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட வகைக்கு என்று ஒரு அளவு இருக்கிறது. MRF ஆக இருந்தாலும் சரி, TVS ஆக இருந்தாலும் சரி அந்த வகை டயர் ஒரே அளவுகளில்தான் தயாரிக்கப்படவேண்டும். (அதற்காக அவர்கள் இருவருமா உட்கார்ந்து பேசுவார்கள்? ஆகவேதான் பொதுவான நியதிகள். அனைவரும் அதை பின்பற்றலாம் அல்லவா?) பொருட்களின் பயன்பாட்டைப்பொறுத்து இந்த விதிமுறைகள் பொருந்தும், இதுவே கொசுவத்தியாக இருந்தால் நான் வட்டமாகவும், நீங்கள் சதுரமாகவும் செய்யலாம் தவறில்லை. அங்கு வேறொரு விதிமுறை கட்டாயம் பின்பற்றப்படவேண்டியது வரும். அது அதில் உள்ள கெமிக்கல்களின் அளவு. கொசுவைக் கொல்கிறேன் பேர்வழி என்று ஆட்களுக்கு புகைபோட்டுவிடக்கூடாது இல்லையா.?

இவ்வாறாக ISO 1 ல் துவங்கி ISO 80000 வரை Standards பட்டியல் நீள்கிறது. எல்லா எண்களிலுமே Standards இல்லை எனினும் (காலப்போக்கில் திரும்பப்பெறப்பட்டவை மற்றும் பிற காரணங்கள்) இந்தப் பட்டியல் மிகப்பெரியதுதான்.

உதாரணமாக சில..
ISO 1 (பொருட்களின் வெப்ப அளவீடுகள்) ISO 2 (துணியிழைகள் குறித்தவை)
ISO 216 (தாள்களின் அளவுகள்)
ISO 732 (புகைப்படச்சுருள் அளவுகள்)
ISO 1789 (ஆம்புலன்ஸ் வண்டிகள் குறித்தவை)
ISO 3632 (குங்குமப்பூவின் தரம்)
ISO 9001 (தர மேலாண்மை)
ISO 9407 (காலணிகளின் அளவுகள்)
ISO 15930 (PDF கோப்புகள் குறித்தவை)
ISO 22716 (அழகு சாதனம்/பொருட்கள்)
ISO 80000 (அளவுகள் மற்றும் அளவைகள்)

இந்த வரிசையில்தான் ISO 9001 வருகிறது பாருங்கள். இது பிறவற்றைப்போலில்லாமல் வழிமுறையியல் பற்றி பேசுகிறது. இதனடிப்படையில் இயங்கும் நிறுவனங்கள் இந்த சான்றிதழைப்பெற ISO வின் அனுமதி பெற்ற உலகளாவிய BVQI, DNV, SGS, LLOYD'S போன்ற சோதனை நடத்தி சான்றிதழ் தரும் (Certification bodies) நிறுவனங்களிடம் (இவர்கள் ஒழுங்கானவர்கள்தானா என்று பார்க்கவே ISO/IEC 17021:2006 என்று ஒரு தனி நியதி இருப்பது தனி கதை) விண்ணப்பித்து முதலிரண்டு பாராக்களில் பார்த்த கூத்துகளை சிறப்புற நடத்தி வெற்றிபெற்றுப் பெறலாம். அப்படியென்ன செய்யவேண்டும் என இந்த ISO 9001 சொல்கிறது?

ரொம்ப சிம்பிள். ISO 9001 நம்மை எதுவுமே செய்யச்சொல்லவில்லை. நாம்தான் நம் வேலைகளை இப்படியிப்படி செய்யப்போகிறோம், பொருட்களின் தரத்தை, செயல்களின் தரத்தை இவ்வாறு உறுதிசெய்யப்போகிறோம், சூழல் பாதிப்புகளை, கழிவுகள் வெளியேற்றத்தை இவ்வாறு செய்யப்போகிறோம், அதற்கான சாட்சிகள் இன்னின்ன என்பதான அனைத்து விஷயங்களையும் (ஒரு குண்டுமணியைக்கூட விடக்கூடாது) முதலிலேயே முடிவு செய்து ஒரு செயல்திட்டம் (Quality Procedure) ஒன்றை (ISO 9001 சுட்டும் டெம்ப்ளேட்டில்) வரைந்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் இதை 'அறிவுரை நிபுணர்' (Consultant- ஹிஹி.. எதற்கெல்லாம் நிபுணர் பாருங்கள்) பண்ணிக்கொடுத்துவிடுவார். அப்படிப்பண்ணாமல் நாமே செய்வதுதான் நன்மை பயக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்ட திட்டப்படி நம் நிறுவனம் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் இயங்கியபின்னர் நாம் சோதனைக்கு தகுதிபெற்றுவிடுகிறோம். பின்னர் விண்ணப்பித்து 'பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.. இதுதான் எங்கள் ப்ரொசிஜர். அது படி வேலை செய்றோமான்னு செக் பண்ணிக்குங்க' என்று சொல்ல வேண்டியதுதான். அவர்களும் பார்த்துவிட்டு திருப்தியாகிவிட்டார்களானால் சான்றிதழ் கிடைக்கும். அந்த சான்றிதழ் 3 வருடம் செல்லுபடியாகும். வருடம் ஒருமுறை இடைக்கால சோதனையும் உண்டு. முடிவுகாலத்திற்குப் பின்னும் தொடர விரும்பினால் நீட்சிக்கு விண்ணப்பிக்கவேண்டியதுதான்.

இந்த ISO 9001 (QUALITY MANAGEMENT SYSTEM) -ஐப் போல மேற்குறித்த பெரிய பட்டியலில் ISO 14001 (ENVIRONMENT MANAGEMENT SYSTEM), ISO 22000 (FOOD SAFETY MANAGEMENT SYSTEM) என இடையிடையே வழிமுறைகளைத்தரும் நியதிகளும் பலவுண்டு. தொழிற்சாலைக்குத் தகுந்த சான்றிதழ் வேண்டுவோர் தேவையானவற்றை விண்ணப்பித்துப்பெறலாம்.

இதில் பிறவற்றிற்கு இல்லாத சிறப்பு ISO 9001 க்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. இது அனைத்து வகையான தொழில்முனைவோருக்கும் பொருந்தக்கூடியதான 'தர மேலாண்மை' குறித்ததால் அனைத்து துறையினரும் இதைப்பெற முடியும். அரசு, தனியார் துறைகள் என்ற பாகுபாடின்றி தொழிற்சாலைகள், ஹாஸ்பிடல்ஸ், மளிகைக்கடைகள், காவல்நிலையம், திரையரங்கம்.. அவ்வளவு ஏன் ஒரு பப்ளிக் டாய்லெட் கூட பெறமுடியும்.

இதே போல ISO 14001 என்ன சொல்கிறது என்று பார்ப்போமானால்... (யாருப்பா அது தலை தெறிக்க ஓடுறது?.. ஓடாதீங்க, நில்லுங்க.. பாடம் நடத்தலை. நிறுத்திட்டேன். டெக்னிகல் பதிவு கேட்டோம்தான், அதுக்காக இப்பிடியா கேப்பு விடாம தாக்குவீங்க? ங்கிறீங்களா.. அந்த பயம் இருக்கட்டும். இனி யாராவது கேப்பீங்க துறைசார்ந்த பதிவு வேணும்னு.?)
.......

(பி.கு : ISO நியதிகளின் பட்டியல் தவிர்த்து கட்டுரை எனது சொந்த அனுபவத்தில் எழுதப்பட்டது. ஏதும் தவறான தகவல்கள் இருப்பின் தயவுகூர்ந்து திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்)
.

வல்லவன்

மேஜை மீதிருந்த டம்ளரை எடுத்தேன், சட்.. ஸ்லிப் ஆகி தண்ணீர் கொட்டிவிட்டது. அம்மா பார்த்தால் திட்டுவாள். மேஜை மீது நிறைய சிடிக்கள் இருந்தன. அப்பா எதற்கு இவ்வளவு சிடிக்கள் வாங்கிவைத்திருக்கிறார்.? எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் போல இருந்தது. அவற்றையெல்லாம் எடுத்து கீழே வைத்து பொறுமையாக உட்கார்ந்து கவர்களை திறந்து சிடிக்களை எடுத்துப்பார்த்துவிட்டு வெளியே வைத்தேன். திரும்பவும் அந்தந்த கவர்களில் போடலாம் என்று பார்த்தால் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அதற்குள் வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்தேன். பக்கத்து வீட்டு ஆன்டி. அம்மாவை பார்க்க வந்திருக்கிறாள். என்னைப்பார்த்ததும் 'ஹாய்' என்று சொல்லி ஹிஹிஹ்ஹி என்று இளித்தாள். அதற்குள் கிச்சனிலிருந்து அம்மா வந்துவிட்டதால் நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தேன்.

கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம். இதென்ன எந்த நேரமும் யாராவது பொலபொலன்னு பொலம்பிக்கிட்டே இருக்காங்க.. ஒண்ணுமே புரியமாட்டேங்குதே. சானல் மாத்தலாம்னா இந்த ரிமோட்டை காணோம். எங்கேயோ ஒளிச்சுவைச்சிருக்கானு நினைக்கிறேன். இதையாவது அம்மாகிட்ட கேக்கலாமா? வேண்டாம். வந்து கத்துவா.

அட.. இப்போதான் கவனிக்கிறேன். இந்தப்பேனா இங்கேக்கிடக்குதா? எடுத்து எதையாவது எழுதிக்கொண்டிருக்கலாம். டிவி அருகே இருந்த பேனாவை எடுத்து மூடியைத் திறந்து டீப்பாயில் கிடந்த பேப்பரில் எழுத ஆரம்பித்தேன். இந்தப்பேனா சரியில்லையே, பேப்பரில் வழுக்கிக்கொண்டே போகிறது. சரியாக எழுதவும் மாட்டேங்குது. தூர வீசிவிட்டு பெட்ரூமுக்குள் போனேன். அதற்குள் அம்மாவின் குரல் கேட்டது, "சாப்பாடு ரெடியாயிடுச்சு, சாப்பிடுறியாடா?". இவள் தொல்லை வேற.. அந்த டாக்டர் அன்னிக்கு வெயிட் பார்த்துட்டு கம்மியா இருக்கேன்னு சொன்னாலும் சொன்னார், கண்டதையும் பண்ணி வச்சுக்கிட்டு சாப்பிடு, சாப்பிடுன்னு உயிரை வாங்குறா. நான் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். என் பதிலை அவள் எதிர்பார்த்தது போலவும் தெரியவில்லை.

ரொம்ப போரடிக்குதே.. என்ன பண்ணலாம்? போய் குளிக்கலாமா? ஆஹா.. குளிப்பதுதான் எவ்வளவு சுகம். போயிடவேண்டியதுதான். பாத்ரூமுக்குள் போனேன். சட், நல்லவேளை, கதவைப்பிடித்துக்கொண்டேன். இல்லாவிட்டால் விழுந்திருப்பேன். ஏன் இந்தத்தரை இவ்வளவு வழுக்குகிறது? சே.. நல்ல வேளை வாளியில் தண்ணீர் பிடித்துவைத்திருக்கிறாள். ஒரு மக்கில் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக்கொண்டேன். ஹ்ஹ்ஹ்ஹ் என்ன குளிர். அடுத்த மக்கை ஊற்றுவதற்குள் எப்படித்தான் தெரிகிறதோ.. இதோ வந்தேவிட்டாள்.. விருட்டென என்னைதூக்கி வெளியே கொண்டுவந்தாள்.

"எந்த நேரமும் தண்ணியிலயே விளையாடிக்கிட்டு.. என்ன சேட்டை? பொறு உன்னிய என்ன பண்றேன்னு?"

அழுகை அழுகையாக வந்தது. என்னை இடைஞ்சல் பண்றதவிட உனக்கு வேற வேலையே இல்லையா? என்று கேட்க நினைத்து இப்படிக் கத்தினேன்,

"ஊவ்வ்… வெவ்வ்வ்.. ஈய்ய்ய்ய்ங்ங்ங்ங்.."

.

Wednesday, September 9, 2009

வெட்ட வெட்டத் துளிர்க்கும்..


வினிதாவின் மீதான கோபம் இன்னும் அடங்கவில்லை அவனுக்கு. என்ன திமிர் அவளுக்கு.? இவ்வளவு விட்டுக்கொடுத்து நடந்துகொண்டும் கூட‌ கொஞ்சமும் நல்லெண்ணமில்லாமல் எப்படிப்பட்ட வார்த்தைகளை சடாரென வீசிவிடுகிறாள். காலையில் அலுவலகம் கிளம்புகையில் நிகழ்ந்த வாக்குவாதத்தில் மனம் வெறுத்துப்போயிருந்தான் ராஜேஷ். வழக்கமாக சில மணி நேரங்களில் தணிந்துவிடும் கோபம் இன்று இதோ வீட்டுக்கு கிளம்பும் நேரம் வரை தணியவில்லை.

சாதாரண ஒரு பிரச்சினை. காலையில் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் ஒன்றரை வயது பிள்ளையைக் கையில் கொடுத்து, பால் பாட்டிலையும் பெட்டில் வைத்துவிட்டு, "இந்தப்பாலை கொடுத்துக்கொண்டிருங்கள், சட்னியை அரைச்சுட்டு வாங்கிக்கொள்கிறேன்" என்று பதிலை எதிர்பாராமல் கிச்சனுக்குள் போய்விட்டாள் வினிதா.

இன்று 9 மணிக்கு ரிவ்யூ மீட்டிங் இருக்கிறது. லேட்டானால் அந்த கடுவனிடம் மாட்டிக்கொண்டு விழிக்கமுடியாது. இது போன்ற அவசர நேரத்தில்தான் இப்படி ஏதாவது வெறுப்பேற்றுவாள். வேண்டுமென்றே செய்கிறாளோ?

ஆசிஷ் "..ம்மே ..ம்மே" என்று துவங்கிய அழுகையுடன் கிச்சனை நோக்கி கைகளைக் காட்டிபடி அவளிடம் செல்ல பரபரத்துக்கொண்டிருந்தான். எந்நேரமும் அது பலத்த அழுகையாக மாறிவிடக்கூடும். எரிச்சல் எரிச்சலாக வந்தது அவனுக்கு. காலடியில் இறக்கிவிட்டுவிட்டு சட்டையை போட அவன் முயன்ற அதே நேரம் பெட்டில் வைக்கப்பட்டிருந்த சரியாக மூடியிருக்காத பாட்டிலை த‌ள்ளிவிட்டிருந்தான் ஆசிஷ். புதிய வெள்ளை விரிப்பில் பால் முழுதும் ஆறாகியிருந்தது. அதன் பின் துவங்கிய வாக்குவாதம் வார்த்தைப் பிரயோகங்களால் கடும் சண்டையாக மாறியிருந்தது. அரை மணி நேரமுடிவில் ஓவென அழ ஆரம்பித்திருந்தாள்.

இப்போ வீட்டுக்கு போகலாமா? வேறங்காவது போய்த்தொலையலாமா? எப்படியும் ஊருக்கு போன் பண்ணி அப்பாவிடம் புலம்பியிருப்பாள். என்ன பண்ணலாம்? ஏதாவது பாருக்குப்போகலாம் என முடிவு செய்தவன்.. நோ நோ சின்னக்குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டு என்ன இது? கடைசி நேரத்தில் மனம் மாறி வீடு நோக்கி வண்டியை செலுத்தினான்.

அவளிடம் எத்தனை நாளானாலும் பேசவே கூடாது. அதுதான் தண்டனை அவளுக்கு. நினைத்துக்கொண்டே வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். டிவியை சத்தமாக வைத்துக்கொண்டே இடுப்பிலிருந்த ஆசிஷுக்கு ஏதோ உணவை ஊட்டிக்கொண்டிருந்தாள் வினிதா. "ப்பே..ப்பே.." என்று ஏதோ டிவியைப் பார்த்து சத்தமிட்டுக்கொண்டிருந்த ஆசிஷ் இவனைகண்டதும் விருட்டென திரும்பி இரண்டு கைகளையும் நீட்டியவாறே,

"அ..ப்..பா.." என்றான். முதன்முறையாக தெளிவாக வந்துவிழுந்தது வார்த்தை.

மனம் நெகிழ பிள்ளையை வாங்க விழைந்து அப்ப‌டியே வினிதாவையும் சேர்த்து அணைத்தான் ராஜேஷ்.
.

Monday, September 7, 2009

7.10 pm மூன்றாவது பிளாக்

செய்தி வந்த அடுத்த விநாடியே பாய்ந்து வெளியேறினேன். காரை யாரோ எடுத்துப்போயிருக்கவேண்டும். பைக்கை எடுத்துக்கொண்டு விரைந்தேன் சைட்டுக்கு. ஒரே பதற்றமாக இருந்தது, கொஞ்சம் வெறுப்பாக வந்தது. 'சே.. இதென்ன எவ்வளவு சொன்னாலும் ஒழுங்கா வேலையை பார்க்காம இப்படியெல்லாம் ஆக்கிடுறான்களே.. இன்னும் முந்துன கேஸே முடிஞ்சபாடில்ல' ஒரு உயிர் போனதுக்காக வருத்தப்படுவதா? பின்விளைவுகள் குறித்து எரிச்சல் படுவதா? என்று புரியாமல் குழப்ப மனநிலையில் இருந்தேன். மணியைப் பார்த்தேன் மாலை 7.40.

ஸ்பாட்டில் நெருங்கிய போது மணி 8.00. இறங்கியவுடனே விபத்து நிகழ்ந்த பிளாக்கை நோக்கி விரைந்தேன். அதற்குள் எதிரே வந்த மணியை நோக்கி இரைந்தேன், "என்ன சொன்னாலும் புரியாதா உங்களுக்கு? இன்னிக்கு ஞாயித்துக்கிழமை, 6 மணிக்கே வேலையை முடிச்சுட்டு போய்த் தொலைங்கன்னுதானே சொல்லிட்டுப்போனேன்" அவரை பதில் சொல்லவிடாமல் தொடர்ந்து இரைந்துகொண்டே அவர் பின்தொடர ஸ்பாட்டை நோக்கிச் சென்றேன். "மூணாவது பிளாக்குதானே? போலீஸ் வந்தாச்சா? எந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்காங்க? யாரு கூட போயிருக்கா? முதல்ல என்ன நடந்தது, அதச்சொல்லுங்க? எத்தனை பேரு ஸ்பாட்ல இருந்தீங்க? எதையாவது சொல்லித்தொலைங்க.." கோபம் தெறித்தது என் வார்த்தைகளில்.

மணி சொல்லத்துவங்கினார், "போலீஸ் 10 நிமிஷத்துக்கு முன்னாடிதான் வந்தாங்க ஸார். எல்லாத்தையும் அப்படியே சொல்லிட்டேன் ஸார். ஸ்பாட்லதான் இருக்காங்க. சம்பவம் நடந்தப்போ நான், நரசிம்மன் அப்புறம் நாலு சித்தாளுங்க மட்டும்தான் இருந்தோம் ஸார். அப்புறம் செக்யூரிட்டி இருந்தாரு. மற்ற எல்லாரையுமே நீங்க சொன்ன மாதிரி ஆறு மணிக்கே வேலையை முடிச்சு அனுப்பிச்சிட்டேன் ஸார். நாங்களுந்தான் கிளம்பிக்கிட்டிருந்தோம். கிளம்புறப்போ செக்யூரிடி மூணாவது பிளாக்கில லைட் எரியலை பாக்கணும்னு சொன்னார். நேத்தே சொல்லியிருந்தார், பாக்காம போயிட்டோம். அதான் பாத்துடலாமேனு குமாரைப்போயி பாக்கச்சொல்லிட்டு மத்தெல்லாரும் கேட்லதான் வெயிட் பண்ணிக்கிட்டிருந்தோம். அங்கே மூணாவது ஃப்ளோர் வேலை நடந்துகிட்டிருக்கிறதால சாரத்துல ஏறிப் பார்த்திருக்கான் ஸார். சாரம் சரிஞ்சி கீழ இருந்த பைப்ல விழுந்து வயிறு கிழிஞ்சு போச்சு. சத்தமே கேக்கல ஸார். ஆளக்காணோமின்னு நாங்கதான் அஞ்சு நிமிஷம் கழிச்சு போய் பாத்தோம். உடனே தூக்கிட்டு ஆட்டோ பிடிச்சு பக்கத்துல சூர்யா ஹாஸ்பிடலுக்கு அனுப்பிச்சேன் ஸார். நரசிம்மனும், இன்னொரு பையனையும் கூட அனுப்பிச்சுட்டு போலீஸுக்கு தகவல் குடுத்தேன் ஸார். அதுக்குள்ள நரசிம்மன் போன் பண்ணினார். முடிஞ்சுபோச்சாம் சார். ஜிஹெச்சுக்கு கொண்டுபோகச்சொன்னதால அங்க கொண்டு போயிருக்காராம்."

ஸ்பாட்டை நெருங்கியிருந்தேன். 4 போலீஸ்காரர்களும் இன்னும் நான்கு பேரும் அங்கே சூழ்ந்திருந்தனர். அருகே சென்றபோது கவனித்தேன் அந்த இடமே ரத்தக்களறியாக மாறியிருந்தது. பச்சை நிற புற்களின் மீதெல்லாம் காவியை கரைத்து ஊற்றினாற்போல கருஞ்சாந்து நிறம் அப்பியிருந்தது.

ன்றிலிருந்து ஆறாவது நாள். சைட் ஆஃபீஸில் உட்கார்ந்திருந்தேன். என் முன்னால் மணி அமர்ந்திருந்தார். அந்த சைட்டுக்கான முழு பொறுப்பில் இருக்கும் என் மீதான கைது நடவடிக்கையில் இருந்து என்னை காப்பாற்ற எம்டி கொஞ்சம் மெனக்கெட்டதில் மணி கைது செய்யப்பட்டு நான் தப்பியிருந்தேன். மணியும் உடனே பெயிலில் எடுக்கப்பட்டிருந்தார். வேலை தடைபட்டிருந்தது. எம்டியிடமிருந்து போன் வந்த வண்ணமிருந்தன. போலீஸ் ஃபார்மாலிடீஸ் முடிந்திருந்தாலும் இன்னும் வேலையை ஆரம்பிக்க முடியாமல் பாதுகாப்பு இயக்ககத்திலிருந்து இன்றைக்கு சோதனைக்கு ஆள் வருவதாக இருந்தது. இறந்து போனவர் லோக்கல் ஆள் என்பதால் கொஞ்சம் பிரச்சினை அதிகம் ஆயிருந்தது.

"நாளைக்காவது வேலையை ஆரம்பிச்சுடலாமா ஸார்?" மணி கேட்டார்.

"இன்னிக்கு இன்ஸ்பெக்ஷன் ஒழுங்கா முடிஞ்சுதுன்னா நாளைக்கு ஆரம்பிச்சுடலாம். நீங்க எதுக்கும் ஆளுங்களை ரெடியா வெச்சிருங்க" சொல்லிவிட்டு தொடர்ந்தேன், "உள்ள ரொம்ப கஷ்டமாயிடுச்சா மணி. நா போயிருக்கவேண்டியது.. ஸாரி மணி".

"பரவாயில்ல ஸார். யார் போனா என்ன? நீங்களுந்தான் என்ன பண்ணமுடியும்? எத்தனை வருஷமா உங்கள பாத்துக்கிட்டிருக்கேன்.. கிளீன் கேஸ்ங்கறதால உள்ளயும் அவ்வளவா ஒண்ணும் பிரச்சினையில்ல.."

மேல்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருந்தேன். மணி தொடர்ந்தார்.

"ஆனா இன்னொரு பிரச்சினை இருக்கு ஸார்.."

"என்ன பிரச்சினை?"

"இல்ல.. போன மாசம் நடந்த ஆக்ஸிடெண்டும் இதே மூணாவது பிளாக்தான். அதுவும் ஞாயித்துக்கிழம சாய்ந்தரம்தான் ஸார்."

"அதுனால.."

"நம்மாளுங்கல்லாம் ஆறுமணிக்கு மேல மூணாவது பிளாக்ல வேல பாக்க பயப்பிடுறாங்க.."

"என்ன மணி சொல்றீங்க..ஏற்கனவே இதப்பத்தி கேள்விப்பட்டேன். நீங்களுமா பயப்படுறீங்க?"

"நீங்களே சொல்லுங்க.. முதல்ல நடந்தது போன மாசம் முதல் ஞாயித்துக்கிழம சாய்ந்தரம் 7 மணிக்கு. அப்பவே சில ஆளுங்க பயந்துகிட்டிருந்தாங்க.. இப்ப ரெண்டாவ்து நடந்ததும் முதல் ஞாயித்துக்கிழம சாய்ந்தரம் 7 மணிக்குதான். அதே இடம். ரெண்டு கேஸ்லயுமே சாரம்தான் சரிஞ்சிருக்குது. வயித்துல அடிபட்டுதான் செத்துப்போயிருக்காங்க.. அதான் எல்லாரும் பயப்பிடுறாங்க. நாம எதுக்கும் ஏதும் சாமியாரக்கூப்பிட்டு பாத்திரலாம்னு.."

"நிறுத்துங்க மணி. எனக்கு நிறைய வேலையிருக்கு. சும்மா டைம் வேஸ்ட் பண்ணாதிங்க. பத்து வருஷமா கூடத்தான இருக்கீங்க எத்தனி கேஸ் பாத்துருக்கோம். சும்மா யாரோ ஏதோ பேசுனாங்கன்னு நீங்களும் வந்து கத விட்டுக்கிட்டு.. ரெண்டு நாளைக்கு பயப்பிடுவாங்க, அப்புறம் சரியாப்போயிரும்"

"ஸார்.. எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு.."

"பாப்போம், கிளம்புங்க.."

சற்று நேரத்தில் எம்டி வரவும் இன்ஸ்பெக்டர்கள் வரவும் சரியாக இருந்தது. கிளியரன்ஸ் முடிஞ்சு இன்று மாலையே வேலை துவங்க முடிவு செய்தோம். எம்டி கிளம்புகையில்,

"ரொம்ப டிலே ஆயிடுச்சு கேகே, என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கரெக்டா 60 நாள்தான். பிரேக் வேண்டாம். டபிள் பண்ணுங்க, நைட் பிளான் பண்ணுங்க. டார்கெட்டுக்குள்ள முடிக்கிறோம்.. பிளஸ் 4 இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே.. முடிச்சிரலாமா?"

"ஒண்ணும், ரெண்டும் அல்மோஸ்ட் முடிஞ்சது மாதிரிதான். பிளாக் மூணும், நாலும் மட்டும்தான் சார்.. பண்ணிடலாம் சார்.!"

"யு'ர் மை ஹோப்"

அடுத்த 10 நாட்களுக்கு வீட்டுக்கே போக முடியவில்லை. அதன் பின்னர்தான் குறித்த தேதிக்குள் முடிக்கமுடியும் என்று நம்பிக்கையே வந்தது. மணி, நரசிம்மன் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை பிரச்சினையேயில்லை. அடுத்தடுத்த வாரங்களில் கட்டிடம் வேகமாக வளர ஆரம்பித்திருந்தது. ஆனாலும் இந்த பிராஜக்ட் கொஞ்சம் ஓவராகத்தான் படுத்துகிறது. கிளம்ப தினமும் எட்டு மணியாகிவிடுகிறது. இது நான் தனியாக கையாளும் மூன்றாவது பிராஜக்ட். அதுவும் இவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரி எனக்கு முதல். என் கேரியரில் முக்கியமான பில்டிங். எம்டி என் மீதுள்ள நம்பிக்கையால் தந்தது இது. சில இடங்களில் சந்தேகம் இருந்தன, கொஞ்சம் பாபுவை வரச்சொல்லி பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

பாபு இன்னொரு பிராஜக்டை பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் நிறுவனத்தின் இன்னொரு பிஎம். என் நண்பன். கமெண்ட் பண்ண வரச்சொல்லி ஒரு மாசமாக அழைத்துக்கொண்டிருக்கிறேன். வர நேரமில்லாமலிருக்கிறான். உதவி தேவைப்படும் போதெல்லாம் போனிலேயே கன்சல்ட் செய்து பிளான் பண்ணிக்கொண்டிருந்தேன். பில்டிங் வளர்ந்து கொண்டிருந்தது.

அன்று நான்காவது பிளாகில் ஐந்தாவது மாடியில் நின்றுகொண்டிருந்தேன். பீம்களே இல்லாமல் அந்த பெரிய ஹால் முடியும் தருவாயில் இருந்தது. பக்கத்தில் பாபு.

"ஃபெண்டாஸ்டிக்டா, பிரமாதமா பண்ணியிருக்கே. எங்கே முடிக்கப்போறீங்கன்னு நானே கொஞ்சம் பயந்துக்கிட்டிருந்தேன். இந்த ஸ்பீட்ல போனா கண்டிப்பா பண்ணிடலாம். உன் கேரியர்ல ஒரு அழுத்தமான கிரீன் மார்க்"

மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே பேசிக்கொண்டே கீழே இறங்கி மற்ற பிளாக்குகளையும் சுற்றிப்பார்க்க அவனை அழைத்துச்சென்றேன். பேசிக்கொண்டே சென்றோம். இரண்டாவது தளத்தில் வேலை கிட்டத்தட்ட வேலைகள் முடிந்து பூச்சு வேலைகள் நடந்துகொண்டிருந்தது. இதன் வலது புற வெளிப்பக்க சுவரில்தான் அந்த பெரிய ரேஜிங் கிரேட்ஸ் வருகிறது. அதைக்காண விரும்பி அந்த ஃபுல் விண்டோவின் வழியே இரும்பு பைப்புகளால் அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் இறங்கினேன். பாபுவையும் அழைத்தேன்.

"டைம் ஆகுதுடா.. சீக்கிரம் வா" என்றவாறே ஒரு போன்காலை அட்டண்ட் செய்யத்துவங்கினான்.

"என்ன அவசரம், போகலாம்" என்றவாறே இன்னும் இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன். என்ன இந்தப்பக்கம் யாரும் வேலை பார்க்கவில்லையா? என்ன ஆச்சு? மணியை செல்போனில் அழைக்க டயல் செய்தேன். பாபு என்னிடம்,

"என்ன அவசரமா? 7 மணிக்கெல்லாம் வர்றேன்னு சொல்லியிருந்தேன், தேடிக்கிட்டிருப்பா. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை வேற.."

எங்கோ உறைக்க சடாரென வாட்சைப்பார்த்தேன். மணி 7.10. ஞாயிற்றுக்கிழமை. நான் நின்றுகொண்டிருப்பது மூன்றாவது பிளாக். இந்த லைட் இன்னுமா சரியாகவில்லை. நேற்று கூட இந்தப்பக்கம் வந்தேனே? எரிந்துகொண்டிருந்ததே. சாரம் ஆடுகிறதா என்ன? விருட்டென கீழே நோக்கினேன்.

அந்த இருளிலும் பளீரென தெரிந்தது.

மசமசவென வெள்ளையாய் ஒரு உருவம் சாரத்தின் கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டிருந்தது.
.