Tuesday, September 29, 2009

ஈ எஸ் பி

எங்கள் வீட்டு ஹாலில் சுவருடன் ஒட்டிய ஒரு பெரிய அழகிய ரேக்ஸ் உள்ளது. அதை ஷோகேஸ் மாதிரியோ, புத்தக அலமாரியாகவோ பயன்படுத்தலாம். அதன் மேல் தளம் நீள அகலத்தில் நல்ல விசாலமானதாக இருந்தது. புத்தகங்களுக்கு தனியாக ரேக்ஸ் இருந்ததாலும் பூஜை அறை என்று தனியாக ஒன்று இல்லாததாலும் நிச்சயமாக இது சாமி படங்களையும், விளக்கையும் வைத்துக்கொள்ளத்தான் பயன்படப்போகிறது என எண்ணினேன். வீடு ஷிஃப்ட் பண்ணும்போது ரமா ஊரிலிருந்ததால் வசதியாக அந்த ரேக்கில் என்னிடமிருந்த ஒரு பெரிய பெரியாரின் படத்தை ஒட்டி அழகுபடுத்திக்கொண்டேன். நான் எண்ணியது போலவே ரமா வந்தவுடன் விளக்கு, பூஜைப்பொருட்கள் பெரியாருக்கு முன்பாக இடம்பிடித்தன. ரமா சில விஷயங்களில் ஆச்சரியகரமாக ஒப்புதல் தந்துவிடுவார். பெரியார் படம் உங்களுக்கு, சாமி படம், விளக்கு எனக்கு.. இடைஞ்சல் பண்ணாமல் இருந்தால் சரிதான் என்று சொல்லிவிட்டார். வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தால் முதல் பார்வையில் பெரியார் படத்துக்குதான் பூஜை நடக்கிறது என தவறாக புரிந்துகொண்டுவிடுவார்கள்.

ரமா அப்படி ஒன்றும் பெரிய பக்திமான் இல்லைதானாயினும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென பக்தி பெருகியதாலோ என்னவோ வீட்டிலே சரஸ்வதி பூஜை கொண்டாட சரஸ்வதி படம் இல்லையென்பதை அறிந்து (வீட்டில் இருந்தவை இரண்டு விளக்குகளும், ஒரு பிள்ளையார் படமும்தான்) உடனடியாக வாங்கி வர பணித்தார் (கவனிக்கவும் பணிந்தார் இல்லை பணித்தார். பணித்தல் என்பதற்கு கட்டளையிடுதல் என்பது பொருளாகும்).

நல்லவேளையாக தாம்பரம் போக வேண்டிய அவசியமில்லாமல் பக்கத்திலேயே ஒரு கடை இருந்தது. அங்கே பத்து வருஷத்துக்கு முந்தைய டிஸைன்களில் சாமி படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. சரஸ்வதி தவிர அனைத்து கடவுளர்களும் தொங்கிக்கொண்டிருந்தனர். அடடா, வேறு கடை பார்க்கவேண்டுமா என நினைத்தபோது கடைக்காரர்,

'சைஸ் மட்டும் பாருங்க சார், ரெண்டே நிமிஷத்தில் படத்தை மாத்திக் கொடுத்துர்றேன்' என்றார்.

'அப்பாடி' என்று வேண்டிய சைஸை சொல்லிவிட்டு, அவரது ஃபைலில் இருந்து கையில் வீணையுடன் வெள்ளைத்தாமரைப்பூவில் அமர்ந்திருந்த ஒரு அழகிய சரஸ்வதி படத்தையும் செலக்ட் செய்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். (வரும்போதே ரமா அடையாளம் சொல்லியிருந்தார். செந்தாமரையில் அமர்ந்துகொண்டு கையிலிருந்து கோல்ட்காயின் வரவைக்கிறது லட்சுமி, அதுவே வெள்ளைத்தாமரையில் கைகளில் வீணையுடன் இருந்தால் சரஸ்வதி).

கடைக்காரர் படத்தை மாற்றும் செயலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் ஆணிகளைப் பிடுங்கும் அழகிலேயே தெரிந்துவிட்டது, இது ரெண்டு நிமிடத்தில் நடக்கக்கூடிய வேலையல்ல என்று. அவ்வளவு நிதானம், பர்ஃபெக்ஷன். ஆணிகளை பிடுங்குதல், படத்தைச் சரியாக கத்தரித்தல், கண்ணாடியை மூன்று கட்டமாக சுத்தம் செய்தல், பேக் செய்வது, மீண்டும் பினிஷ் செய்தல் என ஒவ்வொன்றையும் தனித்தனி கருவிகள் கொண்டு வேலை நடந்துகொண்டிருந்தது. அப்போது ஏனோ தெரியவில்லை.. மனதில் தோன்றியது, இந்தக்கண்ணாடி உடையப்போகிறது.

வேலை முடிய அரைமணி நேரம் ஆனது. முடிந்து படத்தைக்கையில் வாங்கும் போதே நினைத்தேன். இதை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். நன்கு பேப்பரில் சுற்றப்பட்டு கவரில் வைக்கப்பட்டிருந்தது. வழக்கத்தைவிடவும் கவனமெடுத்துக்கொண்டேன். வீட்டுக்கு கொண்டு சென்று ரமாவிடம் கொடுத்தேன். அவர் அதைப்பிரித்த போது.. நம்புங்கள் கண்ணாடி உடைந்துபோயிருந்தது.

'ஒரு வேலையை ஒழுங்கா பார்க்க துப்பிருக்கா? இப்டி உடைச்சு கொண்டுவந்திருக்கீங்க.. நீங்க வரும்போது உடைச்சீங்களா? இல்லை உடைஞ்சதை கடக்காரன் உங்க தலையில கட்டிவிட்டுட்டானா?'

ரமா புலம்பத்துவங்கியிருக்க அவரது அர்ச்சனை என் காதில் விழவேயில்லை.. நான் ஒரு பெரும் வியப்பிலிருந்தேன்.
.

47 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. கும்முறதுக்கு வசதியான பதிவு. நடத்துங்க.!

(ஃபாலோ அப் கமெண்ட்)

அப்பாவி முரு said...

ஈ எஸ் பி?

ஓ அழகிய தமிழ் மகன் மேட்டரா? இருங்க படிச்சிட்டு வர்றேன்...

அப்பாவி முரு said...

//பெரியார் படத்துக்குதான் பூஜை நடக்கிறது என தவறாக புரிந்துகொண்டுவிடுவார்கள்//

இதுல என்ன தவறிருக்கு?

பல இடங்களில், தேங்காய், பழம் தவிர்த்து மாலை, மரியாதை, பூசை, புனஸ்காரம் எல்லாம் ஒரே மாதிரிதான் நடக்கும்.

Anonymous said...

:)

கடைசீல சரஸ்வதிக்கு பூசை நடக்கலை.
உங்களுக்கு தான் நடந்துருக்கு.

அப்பாவி முரு said...

//கண்ணாடியை மூன்று கட்டமாக சுத்தம் செய்தல், பேக் செய்வது, மீண்டும் பினிஷ் செய்தல் என ஒவ்வொன்றையும் தனித்தனி கருவிகள் கொண்டு வேலை நடந்துகொண்டிருந்தது. அப்போது ஏனோ தெரியவில்லை.. மனதில் தோன்றியது, இந்தக்கண்ணாடி உடையப்போகிறது.//

அவரு அழுத்தி தொடைச்சதுல கண்ணாடி தேஞ்சு போயிருக்குமோ?

அன்புடன் அருணா said...

:(............:)

கார்க்கி said...

இது அழகிய தமிழ் மகன் இல்லை. புதிய கீதை. மனிதனின் எண்ணத்திற்கு ஒரு சக்தி உண்டுங்கண்ணா

தராசு said...

தலைப்பு புரியல தல,

ஆமா, பணித்தார்னா வேண்டினார்னு ஒரு பொருள் வராதா?????

ஆயில்யன் said...

//பெரியார் படம் உங்களுக்கு, சாமி படம், விளக்கு எனக்கு.. இடைஞ்சல் பண்ணாமல் இருந்தால் சரிதான் என்று சொல்லிவிட்டார்//

பொருத்தமான ஜோடி :))

ஆயில்யன் said...

//முதல் பார்வையில் பெரியார் படத்துக்குதான் பூஜை நடக்கிறது என தவறாக புரிந்துகொண்டுவிடுவார்கள். //

ஆஹா ஆப்பு வைச்சுக்கிட்டு காத்துக்கிடக்குறீங்க யார் வந்து கும்மப்போறாங்களோ அவ்வ்வ் :))

ஆயில்யன் said...

//மனதில் தோன்றியது, இந்தக்கண்ணாடி உடையப்போகிறது.///

அவ்வ்வ்வ்வ் டெரரா நீங்க இம்புட்டு நாளும் இது தெரியாம போச்சே...! :)

ஆயில்யன் said...

//வழக்கத்தைவிடவும் கவனமெடுத்துக்கொண்டேன்//

டூ ரமா அண்ணி

நோட் திஸ் பாயிண்ட் பெரியார் பார்ட்டீ நன்கு கவனமெடுத்துகொண்டார்ன்னா இன்னா அர்த்தம்? :))))

ஆயில்யன் said...

//நீங்க வரும்போது உடைச்சீங்களா?///

அட கண்டுபுடிச்சிட்டாங்கப்பா கண்டுபுடிச்சிட்டாங்க! :)

ஆயில்யன் said...

//ரமா புலம்பத்துவங்கியிருக்க அவரது அர்ச்சனை என் காதில் விழவேயில்லை.. நான் ஒரு பெரும் வியப்பிலிருந்தேன்..///

திட்டியது கண்டு வியப்பா அல்லது எப்படி பர்பெக்டா உடைச்சு கொண்டுவந்தோம்ன்னு அதை பத்தின வியப்பா பாஸ் ? :))))

தத்துபித்து said...

\\\இது அழகிய தமிழ் மகன் இல்லை. புதிய கீதை. மனிதனின் எண்ணத்திற்கு ஒரு சக்தி உண்டுங்கண்ணா \\\
enna sakthiyo,annanuku adi vilumumnu nenachen. nadakaliyae...

பித்தன் said...

// 'ஒரு வேலையை ஒழுங்கா பார்க்க துப்பிருக்கா? இப்டி உடைச்சு கொண்டுவந்திருக்கீங்க.. நீங்க வரும்போது உடைச்சீங்களா? இல்லை உடைஞ்சதை கடக்காரன் உங்க தலையில கட்டிவிட்டுட்டானா //

சில நேரங்களிள் மட்டும் இவர்களிள் அறிவு சரியாக வேலை செய்கிறது. ஆனா அதுக்கு கூட இவர்கள் எல்லாரும் ரெடிமேட் வாசகம் தான் பயன்படுத்துகிறார்கள். இம்ம் வீட்டுக்கு வீடு வாசப்படி.என்ன பண்றது, அறிவு இல்லைனு (என்ன மாதிரியே) மொளனமா ஒத்துக்க வேண்டியதுதான், பின்ன பகுத்தறிவ இங்க காட்டுனா அப்புறம் தட்டுல சேறு யாரு போடுவா?

பித்தன் said...

// ரமா சில விஷயங்களில் ஆச்சரியகரமாக ஒப்புதல் தந்துவிடுவார். பெரியார் படம் உங்களுக்கு, சாமி படம், விளக்கு எனக்கு.. இடைஞ்சல் பண்ணாமல் இருந்தால் சரிதான் என்று சொல்லிவிட்டார். வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தால் முதல் பார்வையில் பெரியார் படத்துக்குதான் பூஜை நடக்கிறது என தவறாக புரிந்துகொண்டுவிடுவார்கள். //
அவங்க ரொம்ப புத்திசாலி, இரண்டு எதிர்வினைகளையும் ஒன்னா விட்டுட்டாங்க. ஒருவேளை எதைக் கும்பிடனும் சாமி படமும்,எதைக் கும்பிடக்கூடாதுனு அந்த படமும் வச்சுருக்கலாம். எதுக்கும் சந்தெகத்தை அவங்க கிட்ட கேட்டுருங்க.

செல்வேந்திரன் said...

பணித்தல் என்பதற்கு கட்டளையிடுதல் என்பது பொருளாகும்). // யோவ் கோனார் தமிழ் உரையா எழுதறீர்... வாசகன் புரிஞ்சுப்பாம்யா...

ஸ்ரீமதி said...

ஹ்ம்ம் எனக்கும் சில (பல) முறை இந்த மாதிரி நடந்திருக்கு... குறிப்பா ரோட் க்ராஸ் பண்ணும்போது இன்னைக்கு சரியா பண்ண மாட்டேன்னு நினைப்பேன் அப்படியே... இதுவும் Positive thoughts, negative thoughts சம்பந்தப்பட்டதுதான்...

//மனிதனின் எண்ணத்திற்கு ஒரு சக்தி உண்டுங்கண்ணா//

ரொம்ப சரி...

திருக்குறளே உண்டே...

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு.

ஸ்ரீமதி said...

இது கும்மி பதிவா?? நாந்தான் கொஞ்சம் சீரியஸா கமெண்டிட்டனோ??

கார்ல்ஸ்பெர்க் said...

//வடிவேலு - நாங்கெல்லாம் கொடூரமா பார்த்தா குடிசை எரியும்//

இவரோட சேர்ந்தவரா நீங்க?? :)

புதுகைத் தென்றல் said...

பாவம் ஃப்ரெண்ட் நீங்க.

:(((((

pappu said...

அலோ, ஹீரோ(வோட) பேனா ஒண்ணு காணாம போயிருச்சு, கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

same blood :)))))))

பணித்தார் (கவனிக்கவும் பணிந்தார் இல்லை பணித்தார்.

நீங்க கவனிக்கவும்னு போடலைன்னாலும் நாங்க பணித்தார்னு தான் படிப்போம், அங்கே பணிந்தார்னு இருந்தாக் கூட :)

கார்க்கி said...

/திருக்குறளே உண்டே...

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்//

கல்யாணம் ஆன உடனே தைரியம் வந்துடுச்சா? எங்க ஆதியண்ணனையே திட்டுற.. ஜாக்கிரதை..

அமுதா கிருஷ்ணா said...

ஃபோன் அப்புறம் ஒழுங்கா வேலை செய்ததா...நண்பர் ஒருவர் நீங்கள் கதற கதற உங்கள் போனில் மழையில் நனைந்துக் கொண்டே யாருடனோ பேசினாரே(எதிரியா)

Truth said...

இதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லுங்க.

ராஜா | KVR said...

//நீங்க கவனிக்கவும்னு போடலைன்னாலும் நாங்க பணித்தார்னு தான் படிப்போம், அங்கே பணிந்தார்னு இருந்தாக் கூட :)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அனுஜன்யா said...

//செந்தாமரையில் அமர்ந்துகொண்டு கையிலிருந்து கோல்ட்காயின் வரவைக்கிறது லட்சுமி, அதுவே வெள்ளைத்தாமரையில் கைகளில் வீணையுடன் இருந்தால் சரஸ்வதி).//

அக்மார்க் ஆதி. ரசித்தேன்.

அனுஜன்யா

♠புதுவை சிவா♠ said...

ஆதி
பைனல் டிஸ்டின்நெஸ்சன் (Final Destinations) படம் பார்த்த விளைவா??

சக்கரை விலை எப்ப குறையும் என உங்க ஈ எஸ் பி யை பயன்படுத்தி
சொல்லவும்.

பின் குறிப்பு :

ஆதிமூலகிருஷ்ணனின் அருள் வாக்கு தனி நபருக்கு ரூ50\- மொத்த குடும்பத்துக்கு ரூ 250\- வாக்கு சொல்லும் நேரம் வாரம் தோறும் வெள்ளி இரவு 10.00 மணிக்கு மேல். முன் பதிவுக்கு தொடர்புக்கு 100025479 அயல்வாழ் தமிழருக்கு www.அருள் வாக்கு.காம்.

:-)))))))

Cable Sankar said...

அது ஒண்ணுமில்லீங்கோ.. பெரியார் படத்துக்கும் சேர்த்து விளக்கேத்தினதுனால.. பெரியார் கண்ணை குத்திட்டார்..:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முரு.! (வாங்கும் போது செக் பண்ணித்தானே வாங்கினேன்)

நன்றி அம்மிணி.!

நன்றி அருணா.! (என்னாச்சு, கொளம்பிட்டீங்களா?)

நன்றி கார்க்கி.! (என்ன படமா இருந்தா என்ன? படம் எப்பிடி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஈ எஸ் பியெல்லாம் தேவையேயில்லையே.. ஹிஹி)

நன்றி தராசு.! (வந்துட்டாருய்யா.. தமிழறிஞரு.!)

நன்றி ஆயில்யன்.! (திட்டியது கண்டு வியப்பா// யோவ் இன்னா லூசா நீயி? இதுக்கெல்லாம் வியந்துகிட்டிருந்தா வாய் தொறந்தமானிக்கே போயிராது?)

நன்றி தத்துபித்து.! (நல்ல எண்ணம்யா.!)

நன்றி பித்தன்.! (உங்க பேருக்கேத்த மாதிரியே எழுதறீங்களே.. ஒண்ணும் புரியல.. ஹிஹி)

நன்றி செல்வா.! (சில விஷயங்களை தேளிவு படுத்த வேண்டியது எள்ளுத்தாளனின் கடமை செல்வா)

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி கார்ல்ஸ்.! (ஹிஹி, ஆமா)

நன்றி தென்றல்.!

நன்றி பப்பு.! (கீழே புதுவை சிவா பின்னூட்டத்தைக் காணவும்)

நன்றி அமித்துஅம்மா.! (ஹிஹி)

நன்றி அமுதா.! (ஏன் கதறல்னா.. அதுக்குப்பின்னாடி ஒரு கதை இருக்குது.. ஏய்ய் சரி, கதை சொல்லலை, ஆரம்பிச்சாவே பின்னூட்டப்பெட்டியை மொதக்கொண்டு மூடிட்டு ஓடிடுறானுவோ..)

நன்றி ட்ரூத்.!

நன்றி ராஜா.!

நன்றி அனுஜன்யா.! (இப்பதான் வழி தெரியுதா?)

நன்றி புதுவை சிவா.! (பெஸ்ட் பின்னூட்டம் ஆஃப் திஸ் பதிவு. ரூ 25பரிசு பெறுகிறது)

நன்றி கேபிள்.!

வித்யா said...

:)

இரும்புத்திரை அரவிந்த் said...

இது "ஈ எஸ் பி" இல்ல வெறும் எஸ் தான்

எஸ் - எஸ்கேப்..

//அவரது அர்ச்சனை என் காதில் விழவேயில்லை.. //

தள்ளி வாங்க புரிக்கட்டை வந்துரும்

எவனோ ஒருவன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நீங்க கவனிக்கவும்னு போடலைன்னாலும் நாங்க பணித்தார்னு தான் படிப்போம், அங்கே பணிந்தார்னு இருந்தாக் கூட :)//

:)))))

---

மொத பாரா எனக்குப் பிடிக்கல அண்ணே.

T.V.Radhakrishnan said...

:-))))

ராஜராஜன் said...

"ஈ எஸ் பி"

இது எல்லோருக்கும் நடக்கும் .. சிலர் அதை சும்மா என்று விலகி சென்றுவிடுகிறார்கள் , சிலர் சீரியஸ் அக எடுத்து கொள்கிறார்கள் ..

நீங்க எந்த ரகம் ??

பட்டிக்காட்டான்.. said...

//.. மனதில் தோன்றியது, இந்தக்கண்ணாடி உடையப்போகிறது. ..//

நம்ம மனசுல என்னைக்கு நல்லவிதமா ..........??!!

பிரியமுடன்...வசந்த் said...

தலைவா நீங்க தெய்வம்

கடவுளுக்கு கண்ணாடி உடைஞ்ச பொறவு இந்த தலைவருக்கு அட்லீஸ்ட் மூக்குனாவது உடைஞ்சுருக்கணும்ன்னு கடவுளை வேண்டிக்கேறேன்...

:)))

தமிழ்ப்பறவை said...

:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வித்யா.!

நன்றி அரவிந்த்.!

நன்றி எவனோ ஒருவன்.! (என்ன நமக்கு பக்தி கொஞ்சம் ஜாஸ்தியோ?)

நன்றி டிவிஆர்.!

நன்றி ராஜராஜன்.! (2)

நன்றி பட்டிக்காட்டான்.! (ஹிஹி)

நன்றி வசந்த்.! (அடுத்து ஒரு ரிப்பீட்டு பதிவு வரப்போகுது.. கார்க்கியும், வசந்தையும் நினைச்சாதான்..)

நன்றி தமிழ்பறவை.!

அ.மு.செய்யது said...

எங்க வீட்டில எல்லாரும் இந்த பதிவ படிச்சுட்டாங்கண்ணே !!

மங்களூர் சிவா said...

உடைச்சு கொண்டுபோயிட்டு ESP அது இதுன்னுகிட்டு வெண்ணை
:))))))))))))

மங்களூர் சிவா said...

/
பணித்தல் என்பதற்கு கட்டளையிடுதல் என்பது பொருளாகும்).
/

என்னைக்கு வேண்டுகோள்விடுத்திருக்காங்க அவங்க சொல்றது எல்லாமே கட்டளைதானே இது எதுக்கு தனியா சொல்லிகிட்டு
:))))))))))

ராமலக்ஷ்மி said...

//கவனிக்கவும் பணிந்தார் இல்லை பணித்தார்.//

:))!

ஜோசப் பால்ராஜ் said...

ஒரு கண்ணாடி உடையாம ஒழுங்கா கொண்டு வந்து சேர்க்காம பேச்சப் பாரு, பதிவ பாரு, அதுல கோணார் தமிழ் உறை பணித்தார், பணிந்தாருக்கு விளக்கத்த பாரு .

( இப்டி தானே அண்ணி இந்தப் பதிவ படிச்சா திட்டுவாங்க?)

Vidhoosh said...

///வரும்போதே ரமா அடையாளம் சொல்லியிருந்தார். செந்தாமரையில் அமர்ந்துகொண்டு கையிலிருந்து கோல்ட்காயின் வரவைக்கிறது லட்சுமி, அதுவே வெள்ளைத்தாமரையில் கைகளில் வீணையுடன் இருந்தால் சரஸ்வதி).///
இவ்வளோ அப்பிராணியாங்க நீங்க.. நம்பிட்டோம்..

-வித்யா