Saturday, October 31, 2009

ஒளி விளையாட்டு (விடியோ)

இதோ மீண்டும் ஒரு படக்காட்சி. (குறும்படம்னு சொன்னா உதைக்க ஆள் ரெடியா நின்னுக்கிட்டேயிருக்காங்கப்பா.. அதான் படக்காட்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது) சீரியஸா ஒண்ணுமில்ல, தீபாவளியன்று பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்த காட்சிகளை சுருக்கமா ரெண்டு நிமிஷம் வர்ற மாதிரி தொகுத்தேன். நேரம் போகலைன்னா பாத்துடுங்க.. இதில் வரும் நீண்ட சரவெடி காட்சி பக்கத்துவீட்டு இளைஞர்கள் காரியம். இறுதியில் வரும் வானவேடிக்கை பக்கத்து தெரு கைங்கர்யம். மற்றவை நமது கூத்து..


.

Friday, October 30, 2009

மூக்குத்திப் பூ

எழுத நேரமில்லாத பொழுதுகளில் உப்புமாவாய் நமக்கு உதவுவது கவிதைகளும், புகைப்படங்களும்தான். கவிதைகள் எவை ஏற்கனவே பதிவேற்றியவை எவை ஏற்றாதவை என தெரியாமல் ரிப்பீட்டு போட்டு உங்களிடம் பாட்டு வாங்க விருப்பில்லாததால் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் காணக்கிடைக்கும் சில காட்சிகளின் புகைப்படங்களை ஏற்றி எஸ்கேப்பாகிறேன்.Wednesday, October 28, 2009

ஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..

எதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது. அந்த மொட்டை மாடியின் விளிம்புச்சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் அவ‌னுக்கு 23 வ‌ய‌து இருக்கலாம். நில‌வு இவ்வ‌ள‌வு வெளிச்ச‌மாக‌வும் கூட‌ இருக்குமா? இந்த‌ வெளிச்ச‌த்தில் த‌டையின்றி புத்த‌கம் வாசிக்க‌லாம் போல‌ இருக்கிற‌தே? இந்த‌ ம‌ய‌க்கும் ம‌ண‌ம் எங்கிருந்து வ‌ருகிற‌து?

அவ‌ள் சாப்பிடக் கீழே போக‌லாம் என்று அவ‌னை அழைத்த‌போது மெலிதாக‌ ம‌றுத்தான். கொஞ்ச‌ம் நேர‌ம் ஆக‌ட்டும். அவ‌னுக்குப் ப‌சியில்லை.. இர‌வு முழுதும் இப்ப‌டியே இருந்துவிட்டாலும் கூட‌ அவ‌னுக்கு ப‌சியெடுக்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே. இன்னொரு விதத்தில் இந்த மகிழ்ச்சியை இழக்க அவனுக்கு மனமில்லை. இந்த குளிர்ந்த இரவில், தென்றல் தீண்டியதால் அலைபாயும் கூந்தலுடன் அவனருகே இருக்கும் அவளுடன் கழியும் இந்த பொழுதை, கீழே சென்றால் மீண்டும் தொடர இயலாமல் போகலாம். உண்மையில் அவ‌ளுக்கும் ப‌சியில்லை. அவ‌னுட‌ன் மிக‌ மெலிதாக கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த‌ நேர‌த்தின் அரிய‌ த‌ன்மையை அறிந்திருந்தாள்.

மேக‌ங்க‌ளே இல்லாத‌ வான‌ம். என்ன‌ இன்று இந்த‌ முழு நிலா இவ்வ‌ள‌வு பெரிதாக‌ இருக்கிற‌து? இவ‌ள் இந்த நிலவொளியில் நின்று கொண்டிருக்கும் இந்த‌க் காட்சியை ஓவியமாக வ‌ரையும‌ள‌வில் ந‌ம‌க்கு திற‌னிருக்கிற‌தா என்று அவனுள் ஒரு எண்ண‌ம் வ‌ந்து சென்ற‌து. தொட்டுக்கொள்ள‌முடியாத‌ இடைவெளி அவ‌ர்க‌ளுக்கிடையே இருந்த‌து. ஆனால் மெலிதாக‌ பேசிக்கொள்வது தெளிவாக கேட்கும் இடைவெளியாக அது இருந்த‌து.

அவ‌ளுக்கு 20 வ‌ய‌து நிர‌ம்பியிருக்கலாம். அரிதாக‌ இன்று இந்த‌ நீல‌நிற‌ தாவ‌ணியை அணிந்திருக்கிறாள். இவ‌ன் வ‌ந்திருப்ப‌தால் கூட‌ இருக்க‌லாம். மாலையில் வ‌ந்த‌வ‌ன் இன்று இர‌வு இங்கேயே த‌ங்க‌ நேரிடும் என்று அவ‌னும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ளும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ள‌து தாவ‌ணியின் நிற‌ம் இந்த‌ இர‌வோடு க‌ல‌ந்திருந்த‌து. க‌றுப்பு வெள்ளை ஓவிய‌ம் போல‌ இருந்தாள். அந்த‌ச்சூழ‌லிலேயே எந்த‌ வ‌ண்ண‌ங்க‌ளும் க‌வ‌ன‌ம் க‌லைப்ப‌தைப்போல‌ இல்லாதிருந்த‌தை உண‌ர்ந்தான். நிமிட‌ங்க‌ளாக‌ மௌன‌ம் நில‌விக்கொண்டிருந்த‌து. க‌டைசியாக‌ என்ன‌ பேசினாள்? அவ‌ன் கைக‌ளை மார்புக்குக் குறுக்காக‌ இறுக்கிக்க‌ட்டிக்கொண்டு பெருமூச்சொன்றை வெளிப்ப‌டுத்தினான். என்ன‌ என்ப‌தைப்போல‌ அவ‌ள் அவ‌னைப் பார்த்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் ப‌ளப‌ள‌வென‌ மின்னுகிற‌து. அந்த‌க்க‌ண்க‌ளில் குறிப்பு எதுவும் உள்ள‌தா?

இப்படியே இவனை இறுக்கி அணைத்து ஒரு முத்தம் தந்தாலென்ன? ஏன் இவ‌ன் மீது என‌க்கு இந்த‌ ஈர்ப்பு? அவ‌ளுக்குள்ளும் இவ‌ன் ம‌ன‌தின் அதே எண்ண‌ங்க‌ளே ஓடிக்கொண்டிருந்த‌து. எது இவ‌ன்பால் என்னை ம‌ய‌க்கி இழுக்கிற‌து. புரிய‌வில்லை அவ‌ளுக்கு. யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும் வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு? இவ்வளவில்தானா இந்த உறவு? ம்ஹூம்.. ச‌மாதான‌மாக‌வில்லை அவ‌ள் ம‌ன‌து.

'சாப்பிட‌ப்போக‌லாம் பாஸ்கர்' என்றபடி அவள் அவ‌ன் கைக‌ளைப் ப‌ற்றினாள்.

.

Tuesday, October 27, 2009

தாழம்பூ நாகம்

டுத்த சில நிமிடங்களில் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் நடராஜன் வடக்குத்தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். வழக்கம் போல வெள்ளை வேட்டி, முக்கால் வாசிக்கு ஏனோதானோவென்று மடித்துவிடப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டை, தோளில் நீளவாக்கில் சிவப்பும், பச்சையுமாய் பெரிய கோடுகளிட்ட பூத்துண்டு. கன்னத்தில் வைக்கப்படாத ஆனால் கன்னத்தில் பாதியைத் தாண்டியவாறு பெரிய மீசை. அதை திருகிவிட்டுக்கொண்டார். இந்த 40 வயதிலும் வயல் வேலைகளால் உடல் உறுதியானவராக இருந்தார். நிச்சயமாய் பட்டையான பச்சைநிற பெல்ட் அணிந்திருப்பார், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டிருப்பதால் இப்போது அது தெரியவில்லை. கால்களில் ஏனோ வழக்கமாக அணிந்திருக்கும் செருப்பு இல்லை. மெயின்ரோட்டுக்கு தென்திசையில் ஒன்றரை கிமீ தூரத்தில் இருக்கும் அவரது வயற்காட்டிற்கு சென்றுகொண்டிருந்தாலோ அல்லது போய்த் திரும்பிக்கொண்டிருந்தாலோ கையில் ஒரு பெரிய அரிவாள் இருக்கும். அதை அழகாக திருப்பிப்பிடித்திருப்பார். கைப்பிடியை தலைகீழாக உள்ளங்கை பிடித்திருக்க மறுபுறம் புறங்கையின் பின்புறம் கையை ஒட்டி மேல் நோக்கி இருக்கும். இன்று அது கையில் இல்லை. ஒரு வேளை வயலுக்குப்போகாமல் தன் வயதொத்தவர்களுடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்து பொழுதுபோக்க மெயின் ரோட்டுக்கு வந்துகொண்டிருக்கலாம்.

சாலையை கடக்கும் ஒரு சிறிய ஓடைக்காக கட்டப்பட்ட ஒரு சிறிய பாலம். அதைத்தாண்டிய தென்புறம் நல்ல அகன்ற முற்றத்துடன் கூடிய கருப்பசாமி கோயில். கோயில் என்றால் முழுதுமான கோயில் இல்லை, பீடங்கள் மட்டும்தான். கோயில் மற்றும் முற்றத்தையும் சேர்த்து சுற்றிலும் நீள்வட்டமாக பெரிய பிரம்மாண்டமான பத்துப்பன்னிரண்டு மரங்கள். அவற்றின் வயது நிச்சயம் பல தசாப்தங்களை கடந்திருக்கும். இரண்டு ஆலமரங்கள். அதில் ஒன்று மிகப்பிரமாண்டமாய் அடர்ந்து விரிந்து பல விழுதுகளும் ஊன்றத்துவங்கியிருந்தது. மற்றவை பெரும்பாலும் மிக அகன்றும், உயர்ந்தும் இருந்த அரசமரங்கள். செதில் செதிலாக பல அடுக்குகளாய் உரிந்திருக்கும் அதன் பட்டைகளிலிருந்து அவற்றின் வயதைக்கணிக்கலாம். இந்த அந்திக் கருக்கல் நேரத்தில் மரங்களால் கோவிலின் முற்றம் விரைவாகவே இருட்டிக்கொண்டிருந்தது. கோயிலை அடுத்து ஒரு கல் பவுண்டி (பவுண்டரி : கள்ளத்தனமாய் வயல்களில் இறக்கப்படும் மாடுகளுக்கான சிறை). ஒரே நேரத்தில் சுமார் 50 மாடுகளை அடைத்துவைக்குமளவில் கற்களால் கட்டப்பட்ட ஆளுயர சுவர்களால் ஆனது அது. அதையடுத்துதான் இரண்டுபுறமும் கடைகள் ஆரம்பிக்கின்றன. ஓலைச்சாய்ப்புகளில் டீக்கடைகள் மூன்று. அதில் ஒன்றில் காலை மற்றும் இரவு டிபன் கிடைக்கும். இரண்டு மளிகைக்கடைகள், நான்கு பெட்டிக்கடைகள். இரண்டு சைக்கிள் கடைகள், ஒரு டெய்லர் கடை, ஒரு சலூன், ஒரு பருத்தி குடோன்.. மொத்த மெயின்ரோடும் அவ்வளவுதான். அதையும் தாண்டிச்சென்றால் ஒரு தரைப்பாலம். அதன் வலது புறம் சிறிது தூரத்தில் காவல் நிலையம். அதன் பின்னர் இருபுறமும் துவங்கும் வயற்காடுகள்.

வடக்குத்தெரு சரியாக கருப்பசாமி கோயிலில் மெயின்ரோட்டைச் சந்திக்கிறது. மெயின் ரோட்டை அடைந்த நடராஜன் வலது புறமாக திரும்பி கல்யாணி டீக்கடையை நோக்கி நடக்கத்துவங்கினார். கை அனிச்சையாய் இடதுபுறமிருந்த கருப்பசாமியை வணங்கிக்கொண்டது. அப்போதுதான் அது நிகழ்ந்தது.

"ஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்.." என்ற மிகப்பெரிய அலறல் இடது புறம் காதுகளில் செவிப்பறையை கிழிக்க, சிந்திக்க விநாடி நேரமுமில்லாமல் விபரீதத்தை அனிச்சையாய் அவர் மனம் உணர்ந்து இடது புறம் திரும்பினார். அவர் கழுத்தைக்குறிவைத்து வந்துகொண்டிருந்த அரிவாளுக்காக வலது புறம் மேலும் ஒதுங்கியும் தப்பமுடியவில்லை. அந்த முதல் வெட்டு இடது புஜத்தில் விழுந்தது மிக ஆழமாய். நிலைதடுமாறியும் உடல் பலம் உதவ வலது கையினால் அடுத்த வெட்டு விழாமல் அந்த அரிவாளை வெட்டியவனின் கையோடு சிக்கென பிடித்தார். அவன் கோவில் மரமொன்றின் பின்னாலிருந்து ஓடி வந்திருக்கவேண்டும். விநாடிகள் நேரம்தான். பரிதாபம், பவுண்டியின் சுவரிலிருந்து வெளிக்குதித்து வந்த இன்னொருவனை இவர் முழுவதுமாக கவனிக்குமுன்பாகவே அடுத்த வீச்சு அவர் கழுத்தை குறிவைத்து தவறாக இடது புறமாக அவரது தலையில் விழுந்து காது, கன்னம், தாடையை சிதைத்தது. ரத்தம் பீய்ச்சியடிக்க வலியை உணரும் முன்பே அனிச்சையாய் ஓட முயன்று நினைவு தப்ப, கால்கள் இரண்டடி வைத்த நிலையில் மடங்கிச்சரிந்தார் நடராஜன். இரண்டாமவன் காரியம் முடிந்ததென அந்த பதற்றத்திலும் உணர்ந்து "ஓடுறா மாப்ள.." என்று கத்திக்கொண்டே கிழக்குத்திசையில் ஓட ஆரம்பித்தான். முதலாமவன் இன்னுமொரு வெட்டுக்கு முயன்று நடராஜன் நகர்ந்ததில் அவரது பின்பாகம் துவங்கி, இடது தொடை வரை நீண்டு ஒரு ரத்தக்கோட்டை போட்டு அதற்கும்மேல் அவகாசமில்லாமல் ஓட ஆரம்பித்தான். இதற்குச்சில விநாடிகள் முன்னதாகவே நூறடி தொலைவில் இருந்த கல்யாணி டீக்கடை மற்றும் சுந்தரபாண்டி பெட்டிக்கடையின் முன்னால் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் நடராஜன் தாக்கப்படுவதைக்கண்டு ஒரு பெருத்த கூச்சலோடு இவர்களை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கும் பின்னால் இன்னும் பலர்.

சில நூறடி தூரத்தில் ஒரு காவல் நிலையம் இருந்தும் இந்த மாலை நேரத்தில் இந்த கொடும் சம்பவம் நிகழ்ந்துமுடிந்திருந்தது. சிலர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நடராஜனை கவனிக்க, சிலர் அரிவாள்களுடன் ஓடிச்சென்றவர்களை துரத்திச்சென்றிருந்தனர். நடராஜனின் அருகிலிருந்தவர்கள் அவர் கிடந்த நிலையைக் கண்டு அவர் இனியும் பிழைப்பார் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் வந்த போலீஸ் ஏட்டு முத்துவேல் நடராஜனுக்கு துடிப்பு இருப்பதை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு போலீஸ் ஜீப்பிலேயே திருநெல்வேலி மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சேர்த்தார். ஊரிலிருந்து ஆண்கள் பெண்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையில் திரண்டிருந்தனர். ஊரில் அவ்வளவு மரியாதையை அவர் சம்பாதித்திருந்தார். மூன்று நாட்களுக்குப்பின்னர் அவர் மருத்துவமனையில் கண்விழித்தபோதுதான் ஊரே நிம்மதியடைந்தது. ஆனால் அவர் முழுதும் குணமடைந்து ஊர் திரும்பத்தான் பல மாதங்கள் ஆகிவிட்டன.

இரண்டரை மாதங்கள் கழித்து அவர் வீட்டிற்கு வந்த போது தொடர்சிகிச்சைக்காக மொட்டையடிக்கப்பட்டிருந்தார். மீசையும் மழிக்கப்பட்டிருந்தது. இடதுகால், தொடைப்பகுதி ஓரளவு குணமடைந்திருந்தாலும் இடது கைதான் இன்னும் குணமாகவில்லை. கையில் உணர்வு இருந்தாலும் அந்தக்கையினால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. சரியாக இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவரால் தெளிவாக பேசமுடியவில்லை. இடது புற, முன்பக்கப்பற்கள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் அவை நீக்கப்பட்டிருந்தன. மேலும் சிறிதுகாலம் கழித்து செயற்கைப்பற்கள் கட்டப்பட்ட பிறகே அவரால் ஓரளவு பேசமுடிந்தது.

இடையிடையே நிகழ்ந்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்தார். மிகவும் அமைதியாக காணப்பட்டார். சாதாரணமாகவே கொஞ்சம் கோபக்காரரான அவருக்கு இப்போது யார் மீதும் கோபம் இருப்பது போல தெரியவில்லை.

"யாரா இருக்கும்னு நினைக்கிறீங்க.." ஏட்டு முத்துவேல் கேட்டபோது,

"தெரில சார். சேர்மாதேவி தோப்பு குத்தகைல ராசுபாண்டியன் கூட பிரச்சினை இருக்கு. ஆனா அவுரு இப்பிடிலாம் பண்ணக்கூடிய மனுசமில்ல. ஏன் ஒண்ணுவிட்ட தங்கச்சி ஒருத்திய அம்பாசமுத்ரத்துல கட்டிக்குடுத்துருக்கேன். ஒங்களுக்கு கூட தெரியுமே. பிச்சம்மா. அவா புருசம் அவளப்போட்டு அடிக்காம்ன்னு ஒரு நா அவன நாலு பேரு மின்னாடி ரெண்டு இழுப்பு இழுத்துட்டேன். இதுக்கெல்லாம் போயி இப்பிடி பண்ணுவானா தெரில. மத்தபடி நமக்கு ஒர்த்தர்கூடயும் பிரச்னை கெடையாது. என்னா.. அடிக்கடி நம்ம வயான்னு பாக்காம யாரு வயல்ல மேஞ்சாலும் மாடுவள புடிச்சுட்டு வந்து பவுண்டில பூட்டிருவேன். பஞ்சாயத்துல பணங்கட்டிதான் மாடுவள மீக்கணும். அதுல பக்கத்தூருக்காரங்களுக்கு ஏம்மேல கோவம் இருந்துருக்கும். ஆனா இதுவரைக்கும் எவனும் நேர்ல சொல்லல.."

"அன்னிக்கி வெட்டுனது யார்னு அடையாளம் பாத்தீங்களா?"

"மரத்துக்குபின்னால ஒளிஞ்சிருந்து பின்னாலயிருந்து வந்து வெட்டிட்டானுவோ. அப்போவே நல்லா இருட்டி வேறப்போச்சா.. அடையாளந் தெரில.. ஆனா சின்னப்பயலுவதான், இருவது இருவத்திரண்டு வயசிருக்கும் அவ்ளதான்.."

வெட்டப்பட்ட அன்று அவர்களைத் துரத்திச்சென்றவர்கள் வெறுங்கையோடு திரும்பியிருந்தனர். ஓடியவர்கள் கிழக்கே ஒரு அரைகிலோமீட்டர் ஓடி தெற்குப்பக்கமாய் வேலிக்கருவை காடுகளுக்குள் இறங்கி ஓடி அதற்கும் அப்பால் இருந்த சிற்றாற்றில் இறங்கி அதன் மறுபுறம் அடர்ந்த தாழம்புதர்களில் விழுந்து கடந்து ஓடிவிட்டனர். துரத்திச்சென்றவர்கள் சிற்றாறு வரை சென்றுவிட்டு இருட்டிய தாழம்புதர்களுக்கும், அதன் பாம்புகளுக்கும் பயந்து திரும்பவேண்டியதாயிற்று. தொடர்ந்த விசாரணையால் போலீஸால் ஒன்றும் பண்ணமுடியவில்லை.

ல்யாணி டீக்கடையில் சேக்காளிகள் சுந்தரமூர்த்தி, ராமையாவுடன் பேசிக்கொண்டிருந்தார் நடராஜன். அதிகாலை நேரமென்பதால் தலைக்கு பூத்துவாலையை தலைப்பாகை கட்டியிருந்தார். அருகில் அவரது சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. சைக்கிள் ஹாண்டில் பாரில் ஒன்றரை அடி நீள அரிவாள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் வயலுக்குப் போகாவிட்டாலும் கூட அவரது சைக்கிளில் எப்போதும் இந்த அரிவாள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாதுகாப்புக்காக இருக்கலாம்.

'நடந்த சம்பவத்துக்கு நடராஜனாக்குள்ள இவ்ள சீக்கிரம் எழுந்து நடமாடிக்கிட்டிருக்காரு. வேற எவனாவதுன்னா போன எடம் புல்லு மொளச்சிருக்கும். வெட்னவன ஆளப்பாக்காம போயிட்டாரே.. பாத்திருந்தார்னா இந்நேரத்துக்கு என்னாயிருக்கும்..' னு ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

அடுத்த சில மாதங்களில், தன்னிடமிருந்த சுமார் 40 மாடுகளில் பாதியை மந்தை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் வயல்வெளிகளில் இறக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீழூர் நாராயணன் ஒரு நல்ல வளர்பிறை நாளில் கருங்குளத்துக்கரையில் இறந்துகிடக்க, நடராஜன் குளத்துக்குள் இறங்கி நிதானமாக அரிவாளை கழுவிக்கொண்டிருந்தார். அதற்கு சாட்சியாக இருந்தது மேகங்களுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த பிறைநிலவு மட்டும்தான்.
.

Monday, October 26, 2009

ஒரு சிறுகதையும்.. நான் ஸ்டிக் தவாவும்..

ஹாய்..

கொஞ்சம் உடல் நலம் சரியில்லாததால் மல்லாக்க படுத்துக்கொண்டு புத்தகத்தை கூட தூக்கி படிக்கமுடியாமல் விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்ததில் நான்கு நாட்கள் காலியானது. பின்னர் அலுவலகத்தில் நான்கு இன்ச் இடைவெளியில் நின்றுகொண்டு நான்கு பேர் நான்கு திசையிலும் இழுத்துக்கொண்டிருந்ததில் வேலை பார்த்தேனோ இல்லையோ நாட்கள் உருண்டன. வீட்டில் கதை புதுமையாக ஒன்றுமில்லையாயினும் தலை மேல் அமர்ந்துகொண்டு பிறாண்டிக்கொண்டிருக்கும் எஃபெக்டை ரமாவால் எந்நேரமும் தந்துகொண்டிருக்க முடியும் என்பதை அறிவீர்கள் ஆயினும் அதே அனுபவத்தை வெறும் எஃபெக்டாக இல்லாமல் நிஜமாகவே சுபா தந்துகொண்டிருப்பதாலும் மற்றும் சரியாக 10 வருட இந்த சென்னை வாழ்க்கையில் முதல் சென்னைத் தீபாவளியை பெற்றோருடன் கொண்டாடிக்களித்ததாலும் வலைக்கடையை சிறிது நாட்கள் சார்த்தியிருக்க நேர்ந்தது.! ஆனாலும், ஓவரா ரெஸ்ட் எடுத்தா ஒடம்புக்கு ஆவாதுன்னு.. இதோ வந்துவிட்டேன். (ஆமா, இவ்வளவு நீளமாக விளக்கிக்கொண்டிருக்கிறேனே.. யாராவது என்னை தேடினீர்கள்தானே?)

மற்றபடி ஓரிரு வருடங்கள் இயங்கிவிட்டு போரடித்து ஓடிவிடுபவர்கள் வரிசையில் என்னையும் யாராவது எண்ணியிருந்தீர்கள் எனின்.. ஸாரி, எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவு சீக்கிரமாய் ஓடிவிடுவதாக ஐடியா இல்லை, மேலும் பல திட்டங்கள் வேறு இருக்கின்றன. அப்புறம் இன்னொரு கோணத்தில் பார்த்தால் மேற்குறித்தவை போன்ற பல பிரச்சினைகளிலிருந்தும் தப்பி மகிழ்ந்திருக்க வலைதானே சரியான மாற்றாக இருக்கமுடியும்.?

இனி வழக்கமான வழக்கமாய் வாரம் நான்கென பதிவுகள் தொடரும்.

***************

வெளியான சிறுகதைக்கு சன்மானமாக அந்த பிரபல பத்திரிகையில் இருந்து வந்திருந்த செக்கை பத்திரமாக வைத்திருந்தேன். தீபாவளிக்குச் சென்னை வந்திருந்த அம்மாவிடம் கொஞ்சம் பெருமையுடன் ஆசையாக காட்டியபோது அம்மா இப்படிச்சொன்னார், "ஒரு நான்ஸ்டிக் தவா வாங்கக்கூட பத்தாது போலருக்கே..!"

களுக்கென சிரித்த ரமாவை கொஞ்சம் கடுப்பாக திரும்பிப்பார்த்தேன். செக் வந்த போது அவர் சொன்ன அதே வார்த்தைகளின் ரிப்பீட்டுதான் அம்மா சொன்னதும்.

***************

காய்ச்சலில் படுத்திருந்த துவக்க நாளில் மருத்துவரைக் காணச்சென்றபோது செக்கிங் முடிந்து மருந்துமாத்திரைகள் எழுதித்தந்துவிட்டு பின்வருமாறு கூறினார் மருத்துவர்,

"சாதாரண வைரல் ஃபீவர்தான். இந்த டேப்லட்ஸ் எடுத்துக்குங்க.."

"டயட்.." என்று இழுத்தேன்.

"வெந்நீரில் ஒரு நாளைக்கு மூணு வாட்டி பல்லு தேய்ங்க.. நாலு வாட்டி உப்பு போட்டு வாய்கொப்பளிங்க.. மணிக்கொருவாட்டி எலக்ட்ரால் குடிங்க.. ஜாம் இல்லாமல் ப்ரெட் சாப்பிடுங்க.. ரஸ்க் சாப்பிடுங்க.. ரைஸ் வடிச்ச தண்ணி குடிங்க.. ஓட்ஸ் கஞ்சி குடிங்க.." என்று சொல்லிக்கொண்டே போனார்.

இப்படியெல்லாம் டயட் பண்ணினால் நம் உடம்பு குணமாகுமா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம், ஆனால் இதற்குக் காரணமான வைரஸ்கள் மட்டும் 'இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' என்று முடிவு செய்துகொண்டு ஓடிப்போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்.

***************

Mr.Bean உங்களுக்குப்பிடிக்குமா?

நான் ரோவன் அட்கின்சனின் ரசிகன். சும்மாவே அவரது நடிப்பும் முகபாவங்களும் அள்ளிக்கொண்டு செல்லும். அந்த அழகில் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி அவர் ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக இருந்தால் எப்படியிருக்கும்? ஒரு பார்ட்டியில் அவர் துப்பறியும் அழகும், ஆக்ஷன் காட்சிகளும், கையில் மதுக்கோப்பையை பிடிக்கும் லட்சணமும்... JOHNNY ENGLISH சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது.. ரசனை.!

***************

நேற்று ரமா மற்றும் சுபாவுடன் தாம்பரம் வித்யாவில் ஆதவன். இந்த நான்கு வருடத்தில் நாங்கள் ஜோடியாக பார்க்கும் நான்காவது படம். இரண்டு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சுபாவுக்கு இது முதலோ முதல் படம். சுபா எங்கே படுத்திவிடுவானோ என்று பயந்துகொண்டே போனோம். நாங்கள் பயந்ததுபோலல்லாமல் சுபா ஒழுங்காக படம் பார்க்க படம்தான் படுத்திவிட்டது. சரி விடுங்க..

சூர்யாவின் அறிமுகம் மற்றும் பாடலில் ஓவர் பில்டப் உடம்புக்காவாது என்று தோன்றியது. ஆரம்ப 5 நிமிட ஃபாரின் காட்சிகள், சேஸிங், பிளாஷ்பேக் குட்டி சூர்யா, இன்னும் பல விஷயங்களை பார்த்த போது கே.எஸ். ரவிக்குமார் தசாவதாரத்தில் நல்ல டிரெயினிங் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. குட்டி சூர்யாவில் பர்ஃபெக்ஷன் கொஞ்சம் குறைவென்றாலும் இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியவை. ஒரு துவக்கம்தான்.. பல வளர்ச்சிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இரண்டு நிமிடங்கள் என்றாலும் கிளைமாக்ஸில் ரெட்ஜெயண்டைப் பார்த்தபோது நன்றாகத்தானிருந்தது. விரைவில் முழுநீளமாய் காணக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மற்றவங்கள்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையப்போவ்..

***************

சமீபத்தில் அழகியதொரு ஆண்குழந்தைக்கு த‌ந்தையாகியிருக்கும் நண்பர் குசும்பனுக்கும், இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நண்பர் கடையம் ஆனந்துக்கும்.. மனமார்ந்த வாழ்த்துகள்.!

.

Tuesday, October 13, 2009

புலம்பல்கள் விருது : புதுகை அப்துல்லா


புலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :

1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.
2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.
3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.
5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.
6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.
7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.
8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.
9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.
10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.! துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.!
.

Monday, October 12, 2009

புலம்பல்கள் விருது : பரிசல்காரன்


புலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :

1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.
2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.
3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.
5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.
6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.
7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.
8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.
9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.
10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.! துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.!

பி.கு :
உடல்நலம், சூழ்நலம் கொஞ்சம் தகராறு செய்துகொண்டிருப்பதால் பதிவெழுத ஒருமாதம் விடுமுறை விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது முன்னேற்பாடு செய்யப்பட்ட பதிவுகளென்பதால் கணக்கில் வராது. ஹிஹி.!
.

Sunday, October 11, 2009

புலம்பல்கள் விருது : கார்க்கி


புலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :

1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.
2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.
3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.
5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.
6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.
7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.
8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.
9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.
10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.! துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.!

பி.கு :
விருதின் நோக்கத்தை பாராட்டி விருதுக்கமிட்டியாருக்கு யாராவது ஏதும் பணமுடிப்பு வழங்க விருப்பப்பட்டால் மெயிலுக்கு வரவும்.. ஹிஹி.!
.

Monday, October 5, 2009

ஒரு அளுவாச்சி கதை

இந்தா போறாரே அவுரு ஊட்டாண்டதான் என்கடையை போட்டுருக்கேன். மனுசன் தங்கமானவரு, இஞ்சினியரு வேல பாக்குறாரு. துணி அயன் பண்ண வரச்சொல்லோ எங்கிட்ட பொலம்பிக்கிட்டிருப்பாரு. பேருதான் என்னான்னு தெர்ல.. ஒரு தபா போன்ல ஆருகிட்டயோ பேசச்சொல்லோ ஆதின்னாரு, உன்னொரு தபா தாமிரான்னாரு, உன்னொருக்கா கிஸ்ணன்னாரு.. அத்த வுடு, நல்ல மனுஷன். பாத்துக்கோ.. ஊட்ல எல்லா வேலையும் அதுதாம் செய்யுமின்னு நினைக்கேன். பக்கத்துலதான இருக்கேன் எனக்குத்தெரியாதா? பிள்ளயும், பையும் எட்த்துக்கினு கடைக்கு போய் வாறதா நானும் பாத்துக்கினேதான் இருக்கேன். மாடில துணிகாயப்போடும்போதும் பாத்திருக்கேன். ஆனா பாரு செல நாளு மாடீல ஒரே சத்தமா கேக்கும், டம்மா டும்மூன்னு பாத்திரம் உருளுத சத்தமெல்லாம் கேட்க்கும். அப்பால அந்த மனுஷன் மூஞ்சி வீங்கிப்போயி வெளிய வந்து எங்கடையாண்ட தம்மடிச்சிக்கினுப்பாரு. பாக்க பாவமா இருக்கும். 'இன்னாபா ஊட்ல ஏதா பிரச்சினயா?'னு கேட்டா சொம்மா இளிச்சிகினு போயிருவாரு.

இப்பிடித்தான் ஒரு நாளு டூட்டி முட்ச்சினு வண்டிய எட்த்து வெச்சினு பக்கத்துல டாஸ்மாக்குல போயி உக்காந்தா.. பக்கத்துல இந்த மனுஷன். கண்ணுல்லாம் அளுவுன மாதிரி வீங்கிப்போயி கெடந்துது. நா பாத்து, 'இன்னா சார் கடைக்கிலாம் வந்துகினே? இந்தப்பயக்கம் வேற இர்க்கா' னு கேட்டு சிரிச்சப்போ லேஸா சிரிச்சார். ஒரு கோட்டர் பாட்டிலும், அதுக்கு சேத்துக்க நாலு கூல்டிரிங்ஸும் பக்கத்துல இர்ந்துச்சு. நா சிர்ச்சுப்புட்டு அப்பாலிக்கா என் வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

கொஞ்ச நேரம் களிச்சு அவருகிட்ட பேச்சுக்குட்த்தேன். அப்போதைக்கு ஒரு கட்டிங்குதான் உள்ளப்போயிருந்தது, பாவம் அதுக்கு மேல முடியலன்னு நெனக்கேன். ஆனா கூல்டிரிங்ஸெல்லாம் காலியாயிருந்தது. முதல்ல சொல்லமாட்டேன்னு அளுத்தமா இர்ந்தவர் பாசமா கேக்கச்சொல்லோ முடியல. மனுஷனுக்கு அளுவாச்சியா வந்துடுச்சி. 'அளுவாத சார், எல்லா ஊட்லயும் அப்பிடிதான். காலயில கூட எம்பொண்ணாட்டி சோறு போட மாட்டேன்னுட்டா.. நா இன்னா ஒன்னமாதிரி அளுதுக்கினா இருக்கேன்'னு சமாதானம் பண்ணி அனுப்பிச்சி வெச்சேன். 'கூட வர்னுமா சார், போயிடுவியா? எங்கனயாவது உளுந்து மண்டையை ஒடைச்சிக்காத' ன்னப்போ மண்டையை ஆட்டிக்கினே போயிட்டார்.

நானும் ரோசனை பண்ணிக்கிட்டே அவுரு முடியாத மிச்சம் வெச்சினு போன நைண்டியை அட்ச்சேன். இந்தப்பொம்பளைகளே மோசம்ப்பா.. இப்போ அல்லாரும் பட்ச்சி வேலைக்கி போறமின்னு திமிரு வந்துட்சுப்பா, ஆம்பிளைகளை மதிக்கிறதேயில்ல. இருவது நுப்பது வர்சம்மின்னாடிலாம் எப்பிடி சோக்காயிர்ந்தது.. நைனா, அவுரோட நைனான்னு பார்த்து வளந்தவங்கதான நாம. இவுளுக கேக்கிறது நாயம்தான், ஆரு இல்லன்னு சொன்னா இப்போ? ஆனா இப்பிடி வெச்சடில மாறச்சொன்னா எப்பிடி? இவுளுங்க ஆட்டம் தாங்கமுடியலயே. அடங்கிப்போவாட்டாலும் அடங்கிப்போவுறா மேரி நடிச்சா இன்னா கொறஞ்சா பூடுவாளுங்க.. அவுளுங்க நெனக்கிறமாதிரி முளுசா மாற நமக்கும் கொஞ்சம் டயம் வேண்டாமா? எப்பிடியும் நம்ப பசங்க காலத்துல முளுசா அடங்கித்தான் போவப்போறானுங்கோ.. இன்னா சொல்ற நீயி?

இன்னா சொல்லு சாரே.. எங்க நைனா இர்க்கச்சொல்லோ இர்ந்தா மேரி இப்போ இல்லனுவேன். அப்போ நா சின்னக் கொயந்தையா இர்ந்தப்போ எங்க நைனா டெய்லி குட்ச்சினு வந்து எங்க அம்மாவையும் ஆயாவையும் இஸ்த்துபோட்டு அடிப்பாரு.. கேக்க ஒரு நாதி கெடியாது. இப்போ பாரு, எம்பொண்டாட்டி என்ன போட்டு இந்த மாத்து மாத்துறா.. கேக்குறதுக்கு ஒரு நாதி இல்ல. ஒலகம் மாறிப்போச்சு வாத்யாரே.. சரி, எங்க ஊட்டுக்காரி சைதாப்பேட்டை அவுங்க ஆத்தா ஊட்டுக்கு போயிக்கீறா, நா டாஸ்மாக்கு போவுணும், டயமாச்சி.. வர்ட்டா?
.

Saturday, October 3, 2009

எனக்கொரு பரிசு

சமீபத்தில் நிகழ்ந்த பதிவர் சந்திப்புக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த போது நீண்ட நாட்களாக திரைமறைவில் இருந்த (நெம்ப வேலையாம்ப்பா) ஒரு யூத் பதிவர் போன் பண்ணினார். நான் விபரங்கள் சொல்ல தானும் வருவதாகவும் அருகிலிருப்பதால் என்னையும் பிக்கப் செய்துகொள்வதாகவும் கூறினார்.ரயில், பஸ்ஸைத் தவிர்க்கலாமே என்ற மகிழ்ச்சி எனக்கு. ஆனால் அது தவறு என்பது சிறிது நேரத்திலேயே விளங்கிவிட்டது. அவருடைய பைக்கை பைக் என்றும் சொல்லலாம், லாரி என்றும் சொல்லலாம். அவ்வளவு நீள அகலத்துடன் யூத்கள் ஓட்டக்கூடிய வண்டி (தண்டர் பேர்டோ என்னவோ அடையாளம் தெரியாத அளவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது) அது.

அது தடாதடாவென்று கிளம்பியதும் காரில் உட்கார்வது போல வசதியாக உட்கார்ந்துகொண்டேன். தாம்பரம் வரை டிராஃபிக்கில் மெதுவாக சென்ற அது பின்னர் மெயின் ரோட்டிற்கு வந்ததும் டிராஃபிக்கை பொருட்படுத்தாமல் மின்னல் வேகம் எடுத்தது. மீனம்பாக்கம் பாலத்தின் மீது வேகம் 120தைத்தொட்டபோது எங்கே அப்படியே டேக் ஆஃப் பண்ணப்போகிறாரோ என்ற பயம் எனக்கு. பின்னர் புள்ளைக்குட்டிக்காரன்யா என்று கெஞ்சிய பிறகே கொஞ்சம் வேகம் குறைந்தது. என் டி ஷர்ட்டையும், கூலிங்கிளாஸையும் பார்த்துக்கொண்டு பின்னர் நினைத்துக்கொண்டேன்.. நாமெல்லாம் யூத் மாதிரி, ஆனால் யூத் இல்ல என்று. இதே கேபிளோ, அனுஜன்யாவாகவோ இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். ஊஹூம், ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

**********

சமீபத்தில் ரசித்த அழகான விளம்பரம் நிப்பான் பெயிண்ட்ஸ். அதில் ஒரு லாரியிலிருந்து கொட்டிப்போகும் பெயிண்ட்கள் பெயிண்ட் குட்டிகளாக உருவெடுத்து ஒரு பெரும் படையைப்போல குதித்துக் குதித்து ஓடி கார்கள், வீடுகள் என கண்ணில் படும் பொருட்கள் மீதெல்லாம் மோதி வண்ண மயமான டிஸைன்களாக உருவெடுக்கின்றன. ரசனை.

**********

பதிவுலகில் பெரும்பாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறோம். என்ன இருந்தாலும் உள்ளூர இது சும்மா ஃபார்மாலிடி பாராட்டா இருக்குமோ என்ற சந்தேகம் எழுதுவதை தவிர்க்கமுடியாது. எழுத்தாளர்களுக்குதான் ஃபேன்ஸ் இருப்பாங்க. அதெல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவருல்ல என்று சமயங்களில் நினைத்துக்கொள்வேன். ஆனாலும் ஒருநாளும் பின்னூட்டமிட்டிராத, மெயிலுக்கு வராத நம்மீது மரியாதை கொண்ட வாசகர்களும் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். அவ்வாறான நபர்களில் மெதுவாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் நாஞ்சில்நாதம், வனம் ராஜராஜன் போன்றோர். சமீபத்தில் யுஎஸ்ஸிலிருந்து RR எனும் நண்பர் தமிழகம் வந்த போது நேரில் சந்திக்க பெரும் ஆவல் கொண்டார். கடைசியில் இயலவில்லை எனினும் சிலருக்காக கொண்டு வந்த பரிசுகள் என்னைச்சேருமாறு பார்த்துக்கொண்டார். பிறருக்கு புத்தகங்களும், செண்ட் பாட்டில்களும் கொண்டு வந்தவர் எனக்கு கொண்டுவந்தது என்ன என்று கேட்காதீர்கள்.. அவ்வ்வ்வ்வ்..

நேரம் எடுத்து எழுதுவது பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. அது சிலருக்கு எந்தவகையிலாவது மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது. பெரும்பாலும் வெளிப்படாமலேயே இருப்பினும், பதிலாக அவர்கள் நமக்கு அளவற்ற அன்பைத் தருகிறார்கள். (சமயங்களில் இதுபோல ஏதாவது பரிசும் கிடைக்கலாம்.. ஹிஹி.!)

**********

எனக்கு ஃபேண்டஸி கதைகள் பிடிக்கும் என்பதால் சமீபத்தில் 'X மென் 4 : வோல்வரின்' பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு வித விசேஷ, வினோத சக்திகள். ஒருவருக்கு கைகளிலிருந்து நீளமாக கத்தி வருகிறது, இன்னொருவருக்கு நகம் நீளமாக வருகிறது, அடுத்து ஒருவருக்கு கண்களிலிருந்து லேசர் பாய்கிறது. இன்னொருவருக்கு மறையும் சக்தி இருக்கிறது. மற்றொருவர் மெஷின் கன்னிலிருந்து வரும் குண்டுகளைவிடவும் வேகமாக கத்தி சுழற்றுகிறார். பாவம் இந்த ஆங்கிலப்பட இயக்குனர்கள், படத்தை சுவாரசியப்படுத்த ஒவ்வொரு முறையும் எப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்திக்கவேண்டிதிருக்கிறது. இந்த முறை வில்லனுக்கு என்ன சக்தி இருக்கிறது என்று காண ஆவலாக இருந்தேன். ஆச்சுடா.. ஒரு விஞ்ஞானி, மேற்சொன்ன அத்தனை சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு நபரை உருவாக்கிவிடுகிறார். எப்பூடி?

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நான் மிகவும் ரசிக்கும் நுட்பமான ஒரு கலை. அசத்தலான சேஸிங், ஆக்ஷன் என பின்னியிருக்கிறார்கள். ஒரு ஹெலிகாப்டரை கைகளினால் கிறிச் சென வெட்டி வீழ்த்திவிட்டு பின்னணியில் அது வெடித்துச்சிதற நம்ப ரஜினிகாந்த் மாதிரி ஹோய் ஹோய் என நடந்துவருகிறார் ஹீரோ. காது மணக்க மணக்க படம் பார்க்கலாம்.

**********

ஒரு கவிதை(தான் நம்புங்க..)

ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டிருந்தேன்
நீ வந்தாய்
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்

**********
.

Thursday, October 1, 2009

எஸ்ஜியின் ஒரு கடிதம்


கேகே,

எப்படிச்சொல்லி உன்னை விளிப்பது என்ற குழப்பத்துடனும், இந்த மடலை உனக்குச் சேர்ப்பேனா என்ற சந்தேகத்துடனும், எப்படி இதை துவங்குவது என்ற சிரமத்துடனும், பலப்பல உணர்வுகள் உந்தித்தள்ள இதை ஆரம்பிக்கிறேன்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு ஏன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன் என்பதும் தெரியவில்லை. இப்போது இல்லாவிட்டால் நான் நினைத்துக்கொண்டிருப்பதை இனி எப்போதுமே முடியாதோ எனவும் தோன்றுகிறது. வெளிநாட்டுக்குத்தானே செல்லப்போகிறேன். பிறகேன் மொத்தமாகச் செல்வதைப்போல பல விஷயங்களையும் சொல்ல விழைகிறேன் என்பதும் புரியவில்லை.

நான் செய்தது துரோகம்தானா என்பது இன்றைக்கு வரைக்கும் புரியாமலே அவதியுற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு வேளை அந்த அவதியிலிருந்து விடுபடும் சுயநோக்கத்துடன் கூட இந்த மடலை நான் எழுதிக்கொண்டிருக்கலாம். இப்போது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களுக்கான காரணமாக எதைச் சொல்லப்போகிறேன்.? அவை இப்போது உனக்கு என்ன மாதிரியான ஆறுதலைத் தர முடியும், அல்லது எனக்கு?

காலம் எல்லாவற்றையும் கடக்கச்செய்கிறதுதான், காதலைத் தவிர.. அதில் நிகழ்ந்த துரோகங்களைத் தவிர. நீ என்னிடம் எப்படியெல்லாம் பேசினாய், என்னைப்பார்க்கும் போது உன் கண்கள் எத்தனை மலர்ந்தன என்பதையெல்லாம் உன்னைப் பிரிந்த பல மாதங்களுக்குப்பின் நினைக்கத்துவங்கினேன். பின் அந்த நினைவுகள் என்னை நீங்காது தங்கிவிட்டன. உண்மைதான் கேகே, அந்தப் பொழுதுகளில் உன் உணர்வுகளை நான் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். உன்னுடன் பழகுவது குறுகுறுப்பாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் தொட்டுக்கொள்வதில் ஒரு பரபரப்பு, அதுதான் எத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்காகத்தான் உன்னுடன் பழகியிருக்க வேண்டும். இல்லையானால் ஏற்பட்ட அந்த சின்ன சலசலப்புகளுக்காக உன்னை இழக்க சம்மதித்திருக்கமாட்டேன். உன் வலி பெரிதென்பதை பின் உணர்ந்தேன்.

காலம் கடந்துவிட்டது. உன் தீவிரம் என்னைச் சுட்டது. பின் உன்னை நெருங்கும் அருகதையும் எனக்கில்லாமல் இருந்தது, அந்தத் துணிச்சலும் இல்லை. ஒரு அழகிய நாளில் என் திருமணம் நிகழ்ந்தபோது அன்று முழுதும் உன் நினைவாகவே இருந்தேன். எங்கே திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிடுவாயோ என பதறிய நாட்கள் அவை. உன்னைப்போலவே நானும் உன் திருமணத்துக்கு வரமலிருந்துவிட்டாலும், உன் திருமணப்பத்திரிகை எனக்குத் தந்த ஆறுதலை நீ என்னை மனமுவந்து மன்னித்துவிட்டாலும் கிடைத்துவிடாது கேகே.

இந்த மடல் தந்த ஆச்சரியத்தைவிடவும் இப்போதைய என் தமிழ் உனக்கு ஆச்சரியமாக இருக்கும் என நினைக்கிறேன். உன்னைப்போலவே சில விஷயங்களில் மாற நான் ஆசைப்பட்டேன் கேகே. அன்று உன் கைகளில் நான் பார்த்த புத்தகங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன. நிறைய வாசிக்கிறேன் கேகே. ஒரு வேளை அந்த தைரியம்தான் இந்த மடலோ என்னவோ?

சொல்லவந்ததை சொல்லிவிட்டேனா? இந்த உறவைத்தொடர வேண்டுமா? உன்னிடம் நான் மன்னிப்பு கேட்கவேண்டுமா? காலத்தில் மூழ்கிக்கிடந்த உணர்வுகளை தேவையேயில்லாமல் எழுப்பிவிட்டேனா? எல்லாமே தீர்ந்துபோய்விட்டதா? அல்லது இது தீரவே தீராததா? எதுவுமே தெரியவில்லை கேகே. நீ அன்பானவன் என்பது மட்டும் தெரியும்.

சில கண்ணீர்த்துளிகள்.. உனக்காகவும், சில முத்தங்கள்.. உன் குழந்தைக்காகவும்.!

-எஸ்ஜி
.