Tuesday, October 27, 2009

தாழம்பூ நாகம்

டுத்த சில நிமிடங்களில் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் நடராஜன் வடக்குத்தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். வழக்கம் போல வெள்ளை வேட்டி, முக்கால் வாசிக்கு ஏனோதானோவென்று மடித்துவிடப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டை, தோளில் நீளவாக்கில் சிவப்பும், பச்சையுமாய் பெரிய கோடுகளிட்ட பூத்துண்டு. கன்னத்தில் வைக்கப்படாத ஆனால் கன்னத்தில் பாதியைத் தாண்டியவாறு பெரிய மீசை. அதை திருகிவிட்டுக்கொண்டார். இந்த 40 வயதிலும் வயல் வேலைகளால் உடல் உறுதியானவராக இருந்தார். நிச்சயமாய் பட்டையான பச்சைநிற பெல்ட் அணிந்திருப்பார், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டிருப்பதால் இப்போது அது தெரியவில்லை. கால்களில் ஏனோ வழக்கமாக அணிந்திருக்கும் செருப்பு இல்லை. மெயின்ரோட்டுக்கு தென்திசையில் ஒன்றரை கிமீ தூரத்தில் இருக்கும் அவரது வயற்காட்டிற்கு சென்றுகொண்டிருந்தாலோ அல்லது போய்த் திரும்பிக்கொண்டிருந்தாலோ கையில் ஒரு பெரிய அரிவாள் இருக்கும். அதை அழகாக திருப்பிப்பிடித்திருப்பார். கைப்பிடியை தலைகீழாக உள்ளங்கை பிடித்திருக்க மறுபுறம் புறங்கையின் பின்புறம் கையை ஒட்டி மேல் நோக்கி இருக்கும். இன்று அது கையில் இல்லை. ஒரு வேளை வயலுக்குப்போகாமல் தன் வயதொத்தவர்களுடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்து பொழுதுபோக்க மெயின் ரோட்டுக்கு வந்துகொண்டிருக்கலாம்.

சாலையை கடக்கும் ஒரு சிறிய ஓடைக்காக கட்டப்பட்ட ஒரு சிறிய பாலம். அதைத்தாண்டிய தென்புறம் நல்ல அகன்ற முற்றத்துடன் கூடிய கருப்பசாமி கோயில். கோயில் என்றால் முழுதுமான கோயில் இல்லை, பீடங்கள் மட்டும்தான். கோயில் மற்றும் முற்றத்தையும் சேர்த்து சுற்றிலும் நீள்வட்டமாக பெரிய பிரம்மாண்டமான பத்துப்பன்னிரண்டு மரங்கள். அவற்றின் வயது நிச்சயம் பல தசாப்தங்களை கடந்திருக்கும். இரண்டு ஆலமரங்கள். அதில் ஒன்று மிகப்பிரமாண்டமாய் அடர்ந்து விரிந்து பல விழுதுகளும் ஊன்றத்துவங்கியிருந்தது. மற்றவை பெரும்பாலும் மிக அகன்றும், உயர்ந்தும் இருந்த அரசமரங்கள். செதில் செதிலாக பல அடுக்குகளாய் உரிந்திருக்கும் அதன் பட்டைகளிலிருந்து அவற்றின் வயதைக்கணிக்கலாம். இந்த அந்திக் கருக்கல் நேரத்தில் மரங்களால் கோவிலின் முற்றம் விரைவாகவே இருட்டிக்கொண்டிருந்தது. கோயிலை அடுத்து ஒரு கல் பவுண்டி (பவுண்டரி : கள்ளத்தனமாய் வயல்களில் இறக்கப்படும் மாடுகளுக்கான சிறை). ஒரே நேரத்தில் சுமார் 50 மாடுகளை அடைத்துவைக்குமளவில் கற்களால் கட்டப்பட்ட ஆளுயர சுவர்களால் ஆனது அது. அதையடுத்துதான் இரண்டுபுறமும் கடைகள் ஆரம்பிக்கின்றன. ஓலைச்சாய்ப்புகளில் டீக்கடைகள் மூன்று. அதில் ஒன்றில் காலை மற்றும் இரவு டிபன் கிடைக்கும். இரண்டு மளிகைக்கடைகள், நான்கு பெட்டிக்கடைகள். இரண்டு சைக்கிள் கடைகள், ஒரு டெய்லர் கடை, ஒரு சலூன், ஒரு பருத்தி குடோன்.. மொத்த மெயின்ரோடும் அவ்வளவுதான். அதையும் தாண்டிச்சென்றால் ஒரு தரைப்பாலம். அதன் வலது புறம் சிறிது தூரத்தில் காவல் நிலையம். அதன் பின்னர் இருபுறமும் துவங்கும் வயற்காடுகள்.

வடக்குத்தெரு சரியாக கருப்பசாமி கோயிலில் மெயின்ரோட்டைச் சந்திக்கிறது. மெயின் ரோட்டை அடைந்த நடராஜன் வலது புறமாக திரும்பி கல்யாணி டீக்கடையை நோக்கி நடக்கத்துவங்கினார். கை அனிச்சையாய் இடதுபுறமிருந்த கருப்பசாமியை வணங்கிக்கொண்டது. அப்போதுதான் அது நிகழ்ந்தது.

"ஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்.." என்ற மிகப்பெரிய அலறல் இடது புறம் காதுகளில் செவிப்பறையை கிழிக்க, சிந்திக்க விநாடி நேரமுமில்லாமல் விபரீதத்தை அனிச்சையாய் அவர் மனம் உணர்ந்து இடது புறம் திரும்பினார். அவர் கழுத்தைக்குறிவைத்து வந்துகொண்டிருந்த அரிவாளுக்காக வலது புறம் மேலும் ஒதுங்கியும் தப்பமுடியவில்லை. அந்த முதல் வெட்டு இடது புஜத்தில் விழுந்தது மிக ஆழமாய். நிலைதடுமாறியும் உடல் பலம் உதவ வலது கையினால் அடுத்த வெட்டு விழாமல் அந்த அரிவாளை வெட்டியவனின் கையோடு சிக்கென பிடித்தார். அவன் கோவில் மரமொன்றின் பின்னாலிருந்து ஓடி வந்திருக்கவேண்டும். விநாடிகள் நேரம்தான். பரிதாபம், பவுண்டியின் சுவரிலிருந்து வெளிக்குதித்து வந்த இன்னொருவனை இவர் முழுவதுமாக கவனிக்குமுன்பாகவே அடுத்த வீச்சு அவர் கழுத்தை குறிவைத்து தவறாக இடது புறமாக அவரது தலையில் விழுந்து காது, கன்னம், தாடையை சிதைத்தது. ரத்தம் பீய்ச்சியடிக்க வலியை உணரும் முன்பே அனிச்சையாய் ஓட முயன்று நினைவு தப்ப, கால்கள் இரண்டடி வைத்த நிலையில் மடங்கிச்சரிந்தார் நடராஜன். இரண்டாமவன் காரியம் முடிந்ததென அந்த பதற்றத்திலும் உணர்ந்து "ஓடுறா மாப்ள.." என்று கத்திக்கொண்டே கிழக்குத்திசையில் ஓட ஆரம்பித்தான். முதலாமவன் இன்னுமொரு வெட்டுக்கு முயன்று நடராஜன் நகர்ந்ததில் அவரது பின்பாகம் துவங்கி, இடது தொடை வரை நீண்டு ஒரு ரத்தக்கோட்டை போட்டு அதற்கும்மேல் அவகாசமில்லாமல் ஓட ஆரம்பித்தான். இதற்குச்சில விநாடிகள் முன்னதாகவே நூறடி தொலைவில் இருந்த கல்யாணி டீக்கடை மற்றும் சுந்தரபாண்டி பெட்டிக்கடையின் முன்னால் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் நடராஜன் தாக்கப்படுவதைக்கண்டு ஒரு பெருத்த கூச்சலோடு இவர்களை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கும் பின்னால் இன்னும் பலர்.

சில நூறடி தூரத்தில் ஒரு காவல் நிலையம் இருந்தும் இந்த மாலை நேரத்தில் இந்த கொடும் சம்பவம் நிகழ்ந்துமுடிந்திருந்தது. சிலர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நடராஜனை கவனிக்க, சிலர் அரிவாள்களுடன் ஓடிச்சென்றவர்களை துரத்திச்சென்றிருந்தனர். நடராஜனின் அருகிலிருந்தவர்கள் அவர் கிடந்த நிலையைக் கண்டு அவர் இனியும் பிழைப்பார் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் வந்த போலீஸ் ஏட்டு முத்துவேல் நடராஜனுக்கு துடிப்பு இருப்பதை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு போலீஸ் ஜீப்பிலேயே திருநெல்வேலி மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சேர்த்தார். ஊரிலிருந்து ஆண்கள் பெண்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையில் திரண்டிருந்தனர். ஊரில் அவ்வளவு மரியாதையை அவர் சம்பாதித்திருந்தார். மூன்று நாட்களுக்குப்பின்னர் அவர் மருத்துவமனையில் கண்விழித்தபோதுதான் ஊரே நிம்மதியடைந்தது. ஆனால் அவர் முழுதும் குணமடைந்து ஊர் திரும்பத்தான் பல மாதங்கள் ஆகிவிட்டன.

இரண்டரை மாதங்கள் கழித்து அவர் வீட்டிற்கு வந்த போது தொடர்சிகிச்சைக்காக மொட்டையடிக்கப்பட்டிருந்தார். மீசையும் மழிக்கப்பட்டிருந்தது. இடதுகால், தொடைப்பகுதி ஓரளவு குணமடைந்திருந்தாலும் இடது கைதான் இன்னும் குணமாகவில்லை. கையில் உணர்வு இருந்தாலும் அந்தக்கையினால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. சரியாக இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவரால் தெளிவாக பேசமுடியவில்லை. இடது புற, முன்பக்கப்பற்கள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் அவை நீக்கப்பட்டிருந்தன. மேலும் சிறிதுகாலம் கழித்து செயற்கைப்பற்கள் கட்டப்பட்ட பிறகே அவரால் ஓரளவு பேசமுடிந்தது.

இடையிடையே நிகழ்ந்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்தார். மிகவும் அமைதியாக காணப்பட்டார். சாதாரணமாகவே கொஞ்சம் கோபக்காரரான அவருக்கு இப்போது யார் மீதும் கோபம் இருப்பது போல தெரியவில்லை.

"யாரா இருக்கும்னு நினைக்கிறீங்க.." ஏட்டு முத்துவேல் கேட்டபோது,

"தெரில சார். சேர்மாதேவி தோப்பு குத்தகைல ராசுபாண்டியன் கூட பிரச்சினை இருக்கு. ஆனா அவுரு இப்பிடிலாம் பண்ணக்கூடிய மனுசமில்ல. ஏன் ஒண்ணுவிட்ட தங்கச்சி ஒருத்திய அம்பாசமுத்ரத்துல கட்டிக்குடுத்துருக்கேன். ஒங்களுக்கு கூட தெரியுமே. பிச்சம்மா. அவா புருசம் அவளப்போட்டு அடிக்காம்ன்னு ஒரு நா அவன நாலு பேரு மின்னாடி ரெண்டு இழுப்பு இழுத்துட்டேன். இதுக்கெல்லாம் போயி இப்பிடி பண்ணுவானா தெரில. மத்தபடி நமக்கு ஒர்த்தர்கூடயும் பிரச்னை கெடையாது. என்னா.. அடிக்கடி நம்ம வயான்னு பாக்காம யாரு வயல்ல மேஞ்சாலும் மாடுவள புடிச்சுட்டு வந்து பவுண்டில பூட்டிருவேன். பஞ்சாயத்துல பணங்கட்டிதான் மாடுவள மீக்கணும். அதுல பக்கத்தூருக்காரங்களுக்கு ஏம்மேல கோவம் இருந்துருக்கும். ஆனா இதுவரைக்கும் எவனும் நேர்ல சொல்லல.."

"அன்னிக்கி வெட்டுனது யார்னு அடையாளம் பாத்தீங்களா?"

"மரத்துக்குபின்னால ஒளிஞ்சிருந்து பின்னாலயிருந்து வந்து வெட்டிட்டானுவோ. அப்போவே நல்லா இருட்டி வேறப்போச்சா.. அடையாளந் தெரில.. ஆனா சின்னப்பயலுவதான், இருவது இருவத்திரண்டு வயசிருக்கும் அவ்ளதான்.."

வெட்டப்பட்ட அன்று அவர்களைத் துரத்திச்சென்றவர்கள் வெறுங்கையோடு திரும்பியிருந்தனர். ஓடியவர்கள் கிழக்கே ஒரு அரைகிலோமீட்டர் ஓடி தெற்குப்பக்கமாய் வேலிக்கருவை காடுகளுக்குள் இறங்கி ஓடி அதற்கும் அப்பால் இருந்த சிற்றாற்றில் இறங்கி அதன் மறுபுறம் அடர்ந்த தாழம்புதர்களில் விழுந்து கடந்து ஓடிவிட்டனர். துரத்திச்சென்றவர்கள் சிற்றாறு வரை சென்றுவிட்டு இருட்டிய தாழம்புதர்களுக்கும், அதன் பாம்புகளுக்கும் பயந்து திரும்பவேண்டியதாயிற்று. தொடர்ந்த விசாரணையால் போலீஸால் ஒன்றும் பண்ணமுடியவில்லை.

ல்யாணி டீக்கடையில் சேக்காளிகள் சுந்தரமூர்த்தி, ராமையாவுடன் பேசிக்கொண்டிருந்தார் நடராஜன். அதிகாலை நேரமென்பதால் தலைக்கு பூத்துவாலையை தலைப்பாகை கட்டியிருந்தார். அருகில் அவரது சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. சைக்கிள் ஹாண்டில் பாரில் ஒன்றரை அடி நீள அரிவாள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் வயலுக்குப் போகாவிட்டாலும் கூட அவரது சைக்கிளில் எப்போதும் இந்த அரிவாள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாதுகாப்புக்காக இருக்கலாம்.

'நடந்த சம்பவத்துக்கு நடராஜனாக்குள்ள இவ்ள சீக்கிரம் எழுந்து நடமாடிக்கிட்டிருக்காரு. வேற எவனாவதுன்னா போன எடம் புல்லு மொளச்சிருக்கும். வெட்னவன ஆளப்பாக்காம போயிட்டாரே.. பாத்திருந்தார்னா இந்நேரத்துக்கு என்னாயிருக்கும்..' னு ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

அடுத்த சில மாதங்களில், தன்னிடமிருந்த சுமார் 40 மாடுகளில் பாதியை மந்தை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் வயல்வெளிகளில் இறக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீழூர் நாராயணன் ஒரு நல்ல வளர்பிறை நாளில் கருங்குளத்துக்கரையில் இறந்துகிடக்க, நடராஜன் குளத்துக்குள் இறங்கி நிதானமாக அரிவாளை கழுவிக்கொண்டிருந்தார். அதற்கு சாட்சியாக இருந்தது மேகங்களுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த பிறைநிலவு மட்டும்தான்.
.

40 comments:

Cable Sankar said...

நடராஜனை வெட்டும் காட்சியின் வர்ணனைகள் அருமை. கண் முன்னே ஓடுகிறது காட்சி.. ஆனால் முடிவில் ஏதோ. மிஸ்ஸிங்.. இல்லை அந்த முடிவுக்கான ஆரம்பம... இது இல்லை என்று தோன்றுகிறது.

தண்டோரா ...... said...

ஆதி..அருமையான நேரேஷன்

அப்பாவி முரு said...

முப்பது, நாற்பது வருசத்துக்கும் முன் நடந்த சம்பவம் (அ) கதையாக இருக்கும். இடங்களின் விவரிப்பும், சம்பவத்தின் விவரிப்பும் ஆ .மு. கி-யின் பா. கே. ப அனுபவத்தை விளக்குகிறது.

அருமை.

தராசு said...

தாழம்பூ நாகம் - தலைப்பு சூப்பர் தல.

உங்க ரேஞ்சுக்கு அந்த வட்டார வழக்கு மொழியில கலக்குவீங்க, ஆனா இதுல ஏனோ டயலாக்கே இல்ல. அது மட்டும் மிஸ்ஸிங்.

இருந்தாலும் கதை டச்சிங்.

Anonymous said...

மோட்டிவ் கொஞ்சம் சொல்லியிருந்தால் இன்னும் effective- ஆ இருந்திருக்குமோ.(ஏதோ தோணினதை சொன்னேன்)

நாஞ்சில் நாதம் said...

:))

அனுஜன்யா said...

நல்லா வந்திருக்கு ஆதி. சிறுகதையில் ஒரு action thriller.

அனுஜன்யா

கே.ரவிஷங்கர் said...

வருணனைகள் நல்லா இருக்கு. ஆனால் சுருக்கி இருக்கலாம்.சுருக்கி கதைக்குள் வந்தால் சுவராசியம் கூடும்.
கடைசியிலும் அப்படியே.

முடிவு? சரியா ஹோம் ஒர்க் செய்யமா
“அனுப்பு”வை அழுத்தி விட்டீர்களோ?

RR said...

நன்றாக உள்ளது ஆதி.....

கார்க்கி said...

அடுத்த சிறுகதை வந்துடுச்சு..

சிலர் சொன்னது போல சில குறைகள் இருந்தாலும், உங்களின் முன் முய்ற்சிகளை விட நல்லா வந்திருக்குன்னு தோணுது சகா.. உங்க உடம்பு அடிக்கடி சரியில்லாம போகட்டும்ன்னு வேண்டிக்கிறேன்

பச்சிலை புடுங்கி எங்கிருந்தாலும் வரவும்.. இதை போய் நல்லா இருக்குன்னு சொல்றாங்க..

இளவட்டம் said...

நல்லா இருக்கு ஆதி சார். ஆனா முடிவில் எதோ மிஸ்ஸிங்.

இளவட்டம் said...

///ஆனால் அவர் முழுதும் குணமடைந்து ஊர் திரும்பத்தான் பல மாதங்கள் ஆகிவிட்டன.

இரண்டரை மாதங்கள் கழித்து அவர் வீட்டிற்கு வந்த போது தொடர்சிகிச்சைக்காக மொட்டையடிக்கப்பட்டிருந்தார். மீசையும் மழிக்கப்பட்டிருந்தது.///

இடிக்குதே?

velji said...

/நிச்சயமாய் பட்டையான பச்சைநிற பெல்ட் அணிந்திருப்பார், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டிருப்பதால் இப்போது அது தெரியவில்லை./

சட்டென்று நம்பகத்தன்மை கொண்டு வரும் உத்தி.

நடராஜன் டீக்கடைக்கு வரும் வரை வர்ணனை கொஞ்சம் அதிகம்.

அப்புறம்...அருமை!

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இறுதியில்.
நல்ல வளர்பிறை நாளில் என்ற சொற்பதம் வேறு!

நல்லாயிருக்கு நண்பரே.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேபிள்.! (கதைன்னா முதல் ஆளா வந்துடறீங்க.. அங்க நிக்கிறீங்க நீங்க)

நன்றி தண்டோரா.!

நன்றி முரு.! (இல்லைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க.? ஏன் நாங்கெல்லாம் கற்பனையா எழுதமாட்டோமா? அவ்வ்.. நீங்க சொன்னது கரெக்டு. வருஷம்தாம் அவ்வளவு அதிகம் கிடையாது. ஜஸ்ட் 20 ஒன்லி)

நன்றி தராசு.! (நானும் நினைச்சேன். என்ன பண்றது.. கதை அப்படி -ஹிஹி.. எழுத்தாள்ளர் மாதிரி பதில் சொல்லிட்டனா-)

நன்றி அம்மிணி.! (பல தடவைகள் நாராயணனின் மாடுகள் சிறை பிடிக்கப்பட்டதுதான் மோட்டீவ். தெளிவா இல்லையோ? நீங்கதான் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை தவறாது வரும் எனது ஒரே வாசகர். உங்களை நினைச்சா.. அவ்வ்..கண்ணு கலங்குது)

நன்றி நாஞ்சில்.!

நன்றி அங்கிள்.! (அப்பாடி.!)

நன்றி ரவிஷங்கர்.! (நானும் நல்லா ரோசிச்சு பாத்தேன். பல கிளைமாக்ஸ்ல இதுதான் கொஞ்சம் பரவால்லன்னு தோணிச்சு. ஹிஹி..)

நன்றி RR.!

நன்றி கார்க்கி.! (ஏன் இப்பிடி?)

நன்றி இளவட்டம்.!

நன்றி வெல்ஜி.! ((ஹிஹி.. ரொம்ப புகழறீங்க)

அ.மு.செய்யது said...

நல்ல முயற்சி !!! பாராட்டுகள் !!!!

சில இடங்களில் எழுத்தோட்டம் சூடுபிடிக்கிறது.

கதையை காட்சிப் படுத்த, விவரணைகளுக்கு இரண்டு பெரும் பத்திகளை செலவிட்டது கொஞ்சம் அதிகம்
தான்.( அதுவும் ஒரு பக்க கதைக்கு )

தொடக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறீர்கள்.ஆனால் எதிர்பார்த்த‌
முடிவு கிடைக்கவில்லை ???!?!?!?!

ஸ்ரீமதி said...

அருமை அண்ணா.

வெண்பூ said...

ஆதி,

கதையின் விவரணைகள் அற்புதம். ஒரு சினிமா பார்ப்பதைப் போல ஒவ்வொன்றும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் ஒரே பிரச்சினை என்னைப் பொறுத்தவரை தலைப்புதான். பொருத்தமான தலைப்பென்றாலும் கதையின் முடிவை முன்பே சுலபமாக யூகிக்க முடிகிறது.

☼ வெயிலான் said...

நல்லாருக்கு ஆதி!

பத்தி பிரிப்பதை சரி செய்தால், இடையில் வரும் குழப்பம் இருக்காது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.! (தொடக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறீர்கள்.ஆனால் எதிர்பார்த்த‌
முடிவு கிடைக்கவில்லை ??//

சரியான அவதானிப்பு)

நன்ற்றி ஸ்ரீமதி.!

நன்றி வெண்பூ.! (நல்ல தலைப்பு கிடைக்கிறது எம்மா கஸ்டம்னு தெரிஞ்சும் என்னவோய் சொல்லுதீரு?)

நன்றி வெயில்.! (டாய்.. ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொன்னா எதைன்னு அடுத்த கதைல திருத்திக்கிறதுனு வேணாம்? அட சே..!)

KVR said...

ஆதி, சில விஷயங்கள் subtleஆ இருக்கிற வரை தான் சுவாரசியம். உங்க கதையின் பலமே மோட்டிவ் & முடிவு போற போக்கிலே சொல்லப்படுறது தான். நல்ல நேட்டிவிட்டி கதை.

நடராஜன் - ம்ம் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு நடராஜன் இருக்க தான் செய்றான் :-).

தலைப்பு சூப்பர்

நிகழ்காலத்தில்... said...

\\நடராஜன் - ம்ம் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு நடராஜன் இருக்க தான் செய்றான் :-)\\

கதை அருமை, நடராசனை சுற்றி கதை அமைந்த விதம் அருமை,

ஏன் கொலை செய்தான் என்பதை விட ஏன் யார் என சொல்லாமல் மறைத்தார் என்பதே கதையின் மையக்கருத்தாக நான் நினைக்கிறேன்

நிறைவான கதை

வாழ்த்துக்கள்

மணிகண்டன் said...

சூப்பரு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நடராஜனைப் பற்றியதும், தொடரும் வர்ணிப்புகளும் காட்சிகளை கண் முன்னர் நிறுத்தியது.

ஆனால் இந்தக் கதைக்கான முடிவில் ஏதோ ஒன்று இல்லை.

சிறுகதை முயற்சிகள் செவ்வனே தொடரட்டும் :)

அன்புடன்-மணிகண்டன் said...

அதிகப்படியான காட்சி விவரிப்புகளால் கதையின் கரு பிடிபட நேரமாகிறது.. மற்றபடி, வழக்கம் போல அருமையான நடை..

அன்புடன் மணிகண்டன்

pappu said...

நோ கரெக்ஷன்.
செம!

அறிவிலி said...

//(டாய்.. ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொன்னா எதைன்னு அடுத்த கதைல திருத்திக்கிறதுனு வேணாம்? அட சே..!)//

வலம்புரி ஜான் டிவியில, வாரம் இரு முறை இந்த கீரைய தின்னா உடல் ஆரோக்கியமா இருக்கும்னு தெனமும் ஒரு கீரைய சொல்லுவாரு. அவரு சொல்றா மாதிரி திங்க ஆரம்பிச்சா நாள் பூரா மென்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்.

பட்டறைக்கு அப்புறமா கதை எழுதறவங்க குறைஞ்சு போய் விமர்சகர்கள் அதிகமாயிட்டாங்க போல.

KVR said...

//பட்டறைக்கு அப்புறமா கதை எழுதறவங்க குறைஞ்சு போய் விமர்சகர்கள் அதிகமாயிட்டாங்க போல.
//

i like it :-)

Karthik said...

நல்லாருக்குங்ணா.. :)

மங்களூர் சிவா said...

நல்லாருக்கு.

அமர பாரதி said...

ஆதி,

கதை நன்றாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை. அதிக பட்ச வன்முறை எழுத்துகளில். சமூகத்துக்கு இந்த அளவு வன்முறை தேவையில்லை. சில இயக்குனர்கள் சினிமாக்களில் காட்டும் ரத்தம் தெறிக்கும் வன்முறையை எழுத்துகளில் வடித்திருக்கிறீர்கள். இதன் மூலம் உங்கள் பதிவு பிரபலமடையலாம். ஆனால் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. நான் நினைப்பது உங்களுக்கு தவறாக தெரிந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேவிஆர்.!

நன்றி நிகழ்காலம்.! (கரெக்ட்டாக சொன்னீர்கள்)

நன்றி மணிகண்டன் & அன்பு மணிகண்டன்.!

நன்றி அமித்துஅம்மா.!
நன்றி பப்பு.!
நன்றி அறிவிலி.!
நன்றி கார்த்திக்.!
நன்றி மங்களூர்.!

நன்றி அமரபாரதி.! (சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். என் மனதிலிருந்த கதையைச்சொல்லும் ஆர்வத்தில் எழுதிவிட்டேன். வன்முறை எழுதி கவரவேண்டும் உள்நோக்கம் எதுவுமில்லை. நான்காவது பாராவில் நடராஜன் தாக்கப்படும் காட்சி மிகவும் அதிகபட்ச வன்முறையாக எழுதப்பட்டுள்ளதை மீள்வாசிப்பிலேயே கண்டுகொண்டேன். சில நண்பர்களும் போனில் இதை கோடிட்டனர். அதற்காக வருந்துகிறேன். உண்மையில் கதையோடு ஒட்டிய வன்முறையைக்கூட சினிமாவில் மறைபொருளாய் எடுக்கமுடியும் என நம்புபவன். நான் குறைந்தபட்ச வன்முறைக் காட்சிகளுக்குக் கூட எதிரானவனே. இந்தக்கதையில் அந்த பாராவை நீக்கினால் கதை முழுதுமாக சிதைந்துவிடுமென நான் கருதுகிறேன். இனி தொடரும் பதிவுகளில் இது நேராமல் இருக்க கவனம் கொள்கிறேன். அக்கறைக்கு நன்றி)

வெயிலான் said...

(டாய்.. ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொன்னா எதைன்னு அடுத்த கதைல திருத்திக்கிறதுனு வேணாம்? அட சே..!)

:)))))

பச்சிலை புடுங்கி said...

//பச்சிலை புடுங்கி எங்கிருந்தாலும் வரவும்.. இதை போய் நல்லா இருக்குன்னு சொல்றாங்க.//
தோ வந்துட்டேன் ...........................
ஆரம்பத்துல இருக்க ஓவர் வர்ணனைய தவிர மத்ததெல்லாம் நல்லாருக்கு ...................

@கார்க்கி -- உங்க போஸ்ட்ல என்னோட பின்னூட்டத்தை டெலிட் செஞ்சிட்டீங்க போலருக்கு ........................ ஒருவேளை உங்களை புகழ்ந்து எழுதுற பின்னூட்டத்தை மட்டும் தான் பப்ளிஷ் பண்ணுவீங்களோ ..............................

அது சரி said...

ஆதி,

உங்க கடைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சி...தமிழிஷ்ல உங்க கதை பிரபலமான இடுகைல இருக்கு...அப்பிடியே என்னுதும் :0)))

உங்க முந்திய கதைகளை விட, ரொம்ப நல்லாருக்கு....தேவையில்லாத சம்பவங்கள், டயலாக் இல்லாம இறுக்கமா கட்டின பொட்டலம் மாதிரி...அழகா....

எனக்கு தெரிஞ்சி ஒரே குறைன்னா,

"அடுத்த சில நிமிடங்களில் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் நடராஜன் வடக்குத்தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்"

கதையை ஆரம்பிக்கும் போதே ஒரு விபரீதம் நடக்கப் போகுதுன்னு நீங்களே சொல்றது அவ்வளவு நல்லா உத்தியான்னு தெரியலை...இப்படி ஆரம்பிச்சதுனால அவரை வெட்டும் போது "நினைச்சேன்"ன்னு சொல்ற மாதிரி ஆயிடுது இல்லியா? படிக்கிறவங்களுக்கே அப்படி ஒரு உணர்வு வர்ற மாதிரி எழுதியிருந்தா நல்லா இருக்குமோ??

அப்படியே நடராஜன்னு பேர் சொல்றதும்....படிக்கிறவங்க தேர்ட் பார்ட்டி தான....அவங்களுக்கு எப்படி அவர் பேர் தெரியும்....எதுக்கு தெரியணும்...அந்த பெயரை வேறு விதமாக கொண்டு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்....

அப்புறம் கதையை யார் ஆங்கிள்ல யார் சொல்றது?? நீங்களா நடராஜனா இல்லை பார்த்த வேறு யாராவதா இல்லை படிப்பவர்களேவா? சிச்சுவேஷன்ல இருக்கது யாருன்னு தெரியலை.....இதனால படிக்கிறவங்களுக்கும் (அட்லீஸ்ட் எனக்கு) கதைக்கும் ஒரு இடைவெளிய ஏற்படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்....ஒரு வேளை...சிறுகதையை ரொம்ப எழுதுனா படிக்க மாட்டாங்கன்னு ரொம்ப சுருக்கிட்டீங்களோ??

மத்தபடி தாழம்பூ நாகம்....கதைக்கு ரொம்ப பொருத்தமான ஆழமான தலைப்பு...எத்தினி பேருக்கு தாழம்பூ நாகம்கிறதோட அர்த்தம் புரிஞ்சுதுன்னு தெரியலை....கதையோட மோட்டிவ் ரொம்ப தெளிவாவே தெரியுது....நடராஜனுக்கு பதிலா நாகராஜன்னு பேர் வச்சிருக்கலாம்...:0)))

ஏதோ கதையை படிச்சதும் எனக்கு தோணியதை சொன்னேன்..தப்பாக்கூட இருக்கலாம்...என்னடா..இவன் எப்ப வந்தாலும் எதுனா குறை சொல்லிக்கிட்டு இருக்கான்னு நினைக்காதீங்க....நீங்க ரொம்ப நல்லா எழுதுறதுனால சொல்லணும்னு தோணிச்சி...அவ்வளவு தான்....

(அப்புறம்...இங்க கதைல வன்முறையை பத்தி நிறைய பேரு சொல்லியிருக்காங்க...நான் கூட நேத்தி ஒரு கதை எழுதுனேன்...டைம் கிடைச்சா வந்து பாருங்க....)

துளசி கோபால் said...

அருமையான நடையும் விவரிப்பும்.

'நடராஜன்.............. 'நின்று' பழிவாங்கிட்டார்.'

இனிய பாராட்டுகள்.

நர்சிம் said...

ஆரம்ப வரிகளில் இருந்த ஆர்வம்..கடைசி வரை தொடர்ந்தது ஆதி.

நீங்கள் ஓய்வெடுத்ததன் அர்த்தம் உணரவைத்து விட்டீர்கள்.

மிகப் பிடித்திருந்தது..முடிவும்.

கார்க்கி said...

//@கார்க்கி -- உங்க போஸ்ட்ல என்னோட பின்னூட்டத்தை டெலிட் செஞ்சிட்டீங்க போலருக்கு ........................ ஒருவேளை உங்களை புகழ்ந்து எழுதுற பின்னூட்டத்தை மட்டும் தான் பப்ளிஷ் பண்ணுவீங்களோ//

என்னா பாஸ்? என்னை பத்தி தெரியாதா? நான் அப்படித்தான்.. என்னை திட்டினா புடிக்காது. அதுக்காக அனானியா எல்லாம் திட்ட மாட்டேன்..டெலீட் செஞ்சிடுவேன்..

பச்சிலை புடுங்கி said...

@கார்க்கி -- அந்த பின்னூட்டத்தை நல்லா படிச்சு பாத்தீங்களா ? அதுல உங்களை எங்க திட்டி இருக்கேன் ................... உங்களோட பதிவ பத்திதான் சொல்லிருக்கேன் ..................

துபாய் ராஜா said...

எல்லாம் சரியாய் இருந்தாலும் ஏதோ ஒரு குறை இருக்குது ஆதி....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பச்சிலை.!

நன்றி அதுசரி.! (நீங்கள் சொல்வது கதையை எப்படியெல்லாம் எழுதலாம் என்பது பற்றி. இது இப்படி எழுதப்பட்டுள்ளது அவ்வளவுதான். பார்த்து ரொம்ப நாளாச்சு. அடிக்கடி கடைப்பக்கம் வாங்க ஃபிரெண்ட்.!)

நன்றி துபாய்ராஜா.!