Monday, November 30, 2009

கலர்

அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ரௌடிகளும், தாதாக்களும் பின்புலமாக இயங்குகிறார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். இவர்கள் அடிதடி, வெட்டுகுத்து மூலமாக எதிரிகளை போட்டியிடாமல் செய்வது, மிரட்டல், பணப்பட்டுவாடா மூலமாக மக்களை ஓட்டுப்போடச்செய்வது, கள்ள ஓட்டுப்போடுதல், பூத் கேப்சரிங், கலவரங்கள் போன்ற பல முக்கிய காரியங்களைச்செய்து அவர்களை தேர்தலில் வெற்றி பெறச்செய்து எம்பியாகவோ, எம்எல்ஏவாகவோ ஆக்குகிறார்கள். அதன் பின் என்னவாகிறது? எல்லா காரியத்துக்கும் அவர்களையே இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாகிறது. உழைப்பை இவர்கள் போட பணம், பதவி, அதிகாரம் எல்லாத்தையும் அவர்கள் அடைகிறார்கள். என்ன அநியாயம் இது? ஆகவே அவர்களே நேரடியாக தேர்தலில் குதிக்கிறது என்று முடிவு செய்தால் என்னவாகும்? இதைப்போல ஒரு காட்சி ஏதோ ஒரு படத்தில் வருகிறது.

இந்த தமிழ்ப்பட இயக்குனர்கள் ஹீரோவாக ஆகியே தீருவது என்று முடிவு செய்து படையெடுத்திருப்பதை நினைத்தால் எனக்கு இந்தக்கதைதான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. கேட்டால் இந்தக்கதைக்கேற்ற மூஞ்சி கிடைக்கவில்லை என்று விஞ்ஞானம் பேசுவது.. இந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ரௌடி அமீர்.

*********************************

'டீலா நோடீலா' என்று ஒரு மொக்கை நிகழ்ச்சி சன் டிவியில் வருகிறது. அதைக்கூட பார்க்கவில்லை, அதன் விளம்பரத்தைத்தான் நேற்று பார்த்தேன். ஒரு பெண்மணி குடும்பக் கஷ்டத்தில் தங்கள் காரை விற்றுவிட்டதாகவும், சாண்ட்ரோ கார் வேண்டாம்.. அதை விடவும் பெரிய்ய கார் அவருக்கு வாங்கித்தரவேண்டும் என்று புலம்பியபடி அழுதுகொண்டிருந்தார். ஆசையென்னவோ நல்ல ஆசைதான், ஆனால் என்னாங்கடா இது? இதைப்பற்றி என்ன சொல்றதுன்னே எனக்குப் புரியவில்லை. கருமம்.

*********************************

அடுத்து விஜய் டிவியில் 'அணுவளவும் பயமில்லை' என்று பெண்கள் தங்கள் வீரத்தைக்காட்டும் நிகழ்ச்சி. அனு நடத்திய முதல் பாகம் என்னவோ கொஞ்சம் ஆர்வமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது 'பெப்பே பெப்பே' என லட்சுமி ராயின் அழகுத்தமிழ் சகிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் எனக்கு பிடித்தமான நடிகைதான். ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்த தமிழ் தெரியாவிட்டால்கூட பரவாயில்லை, குறைந்தபட்சம் கலகலவென பேசுவதுதான் (அர்த்தமில்லாத உளறலாக இருந்தாலும் கூட) அடிப்படைத்தேவை என்ற லாஜிக் கூட இல்லாமல் இவரையெல்லாம் யார் செலக்ட் செய்தது என்றுதான் புரியவில்லை. ஜீன்ஸும், டாப்ஸும் போட்டுக்கொண்டு உயரமாக இருந்தால் போதும் என முடிவுசெய்திருக்கிறார்களோ என்னவோ?

அதோடு நேற்றைய நிகழ்ச்சியில் கண்ணாடித்தொட்டிக்குள் இடுப்பளவு குளிர்ந்த நீரில் ஒரு பெண்ணை இறக்கி விட்டு கேமை ஆரம்பித்தார்கள். அதிலிருக்கும் ஏணி வழியாக ஏறி வெளியே வந்து ஒரு ஐஸ்தூள் குவியலில் ஒளித்துவைக்கப்பட்டுள்ள கோடரியை கைகளால் ஐஸை தோண்டி வெளியே எடுத்துவிட்டு, அந்தக்கோடரியால் ஒரு பெரிய ஐஸ் கியூபை உடைத்து உள்ளிருக்கும் ஒரு கல்லை எடுக்கவேண்டும். நன்றாகத்தான் இருக்கிறது, கைகள் குளிரத்தான் செய்யும். ஆனால் இந்தப்பெண்கள் அதைச்செய்து முடித்துவிட்டு வந்து பண்ணும் அலப்பறைகள் இருக்கிறதே.. ஒருவர் தரையில் படுத்து உருளுகிறார், இன்னொருவர் உட்கார்ந்து அழுகிறார். ஏதோ அண்டார்டிகாவில் புதைந்துகிடக்கும் கப்பலை ஒத்தையாளாக வெளியே கொண்டு வந்ததைப்போல எக்ஸெலண்ட், மார்வலெஸ், இன்கிரிடிபிள் என பாராட்டி.. ஏதோ இந்தமுறை பரவாயில்லை, இனிமே உங்க வாழ்க்கையிலேயே இந்த மாதிரி ரிஸ்க் எடுக்காதீங்க என எச்சரித்து.. முடியல..

*********************************

கலர் (கவிதை)

அடிப்படை வண்ணங்கள் மூன்று
அதிலிருந்து எழுபவை ஏழு
இன்னும் இன்னுமென கூடுபவை கோடி
எங்களால் உணரமுடிவது சில நூறு
உங்களால் முடிவது சில ஆயிரம்
எது எப்படியாயினும்
சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

(இந்தக்கவிதைக்கும், உரையாடல் கவிதைப்போட்டி அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கவிதையென்றாலே காதல், தாய்மை, வறுமை, போராட்டம் என மெல்லுணர்வுகளும், வல்லுணர்வுகளும் மட்டும்தானா.. நகைச்சுவை கிடையாதா என்ற எண்ணத்தில் நான் செய்த சிறு முயற்சி இது.. ஹிஹி.!)

.

Wednesday, November 25, 2009

தங்க(மணி)மொழிகள்

முன்குறிப்பு :

தயவுசெய்து பெண்கள் எஸ்கேப்பாகி விடுங்கள். டேமேஜ் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும், அப்புறம் கோபத்தில் என்னை டேமேஜ் ஆக்கிவிடாதீர்கள்.! சமீபத்தில் நான் ரசித்த ஒரு ஃபார்வேர்டட் மெயிலின் எனது தமிழாக்கம் இந்தப்பதிவு. சில உலகளாவிய அறிஞர்களின் தத்துவ மொழிகளை இங்கே தருகிறேன். லிஸ்டில் கடைசியாக இருக்கும் நபர் யாரென உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். ஹிஹி..


Socrates

கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள். ஒன்று நீங்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடும், அல்லது ஒரு நல்ல தத்துவவாதி உருவாகக்க்கூடும்.

Dumas

இதுவரை விடைதெரியாத ஒரு பெரிய கேள்வி என்னிடம் உள்ளது. 'இந்தப் பெண்களுக்கு என்னதான் வேண்டுமாம்?'

Sigmund Freud

என் மனனவியிடம் சில வார்த்தைகளில் கேட்டேன். அவள் பல பத்திகளில் பதிலளித்தாள்.

David Bissonette

உனது மனைவியை ஒருவன் அபகரித்துக்கொண்டானானால் நீ சும்மா இருந்துவிடுவதை விட பெரிய பழிவாங்கல் வேறெதுவுமிருக்கமுடியாது.

Sam Kinison

பணத்தை நெட் பேங்கிங்கை விடவும் மிக வேகமாக செலவு செய்யும் வழியொன்றை நான் அறிந்தேன். அது கல்யாணம் செய்துகொள்வது.

James Holt McGavran

கல்யாணத்தைப் பொறுத்த வரை நான் மிகவும் துரதிருஷ்டசாலி. என் முதல் மனைவி என்னை பிரிந்து சென்றுவிட்டாள். இரண்டாவது மனைவி அதைச் செய்யவில்லை.

Sacha Guitry

கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றாகவேதான் இருக்க நேரிடுகிறது, ஒருவரை ஒருவர் ஃபேஸ் பண்ணவே முடியாவிட்டாலும்.

Patrick Murray

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு இரண்டு ரகசியங்களை நினைவில் கொள்ளுங்கள் ஆண்களே.! நீங்கள் காரியங்களில் தவறு செய்கின்ற போதெல்லாம் அதை ஒப்புக்கொண்டுவிடுங்கள். சரியாக செய்கின்ற போதெல்லாம் அமைதியாக இருந்துவிடுங்கள்.

Nash

உங்கள் மனைவியின் பிறந்தநாளை தவறாது நினைவில் கொள்ள ஒரு வழி உள்ளது. ஒரே ஒரு முறை மறந்துவிட்டால் போதும்.

Henny Youngman

நானும் என் மனைவியும் 20 வருடங்களுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். அதன் பின்னர்தான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம்.

Anonymous

திருமணத்துக்கு முன்னர் நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வாழ்ந்துகொண்டிருந்தேன்.

Anonymous

சிலர் எங்கள் மணவாழ்க்கையின் வெற்றியின் ரகசியத்தைக்கேட்கின்றனர். நானும் என் மனைவியும் தவறாமல் வாரம் ஒரு முறை மகிழ்வாக வெளியே ஊர்சுற்றச் செல்கிறோம், தனித்தனியாக.!

Thamira

உங்கள் மனைவியைத் தேர்ந்தெடுக்க அவர் நல்லவரா, கெட்டவரா என்ற குழப்பமெல்லாம் உங்களுக்குத் தேவையேயில்லை. உங்களுக்கு இருப்பது அவர் பிரச்சினைக்குரியவர் என்ற ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும்தான்.!

.

Tuesday, November 24, 2009

ஹாலிடேஸ்.! (முடிவு)


ஒத்த ரசனையின் விளைவா தெரியவில்லை. விஜயைப்போலவே மற்ற இருவருமே அவளது அழகில் பிரமித்துப்போயிருந்தனர். அவள் நெருங்கிவந்ததும் பார்வையை தழைத்துக்கொண்டு இயல்பாக கேட்பது போல விஜய் அவளது நலம் விசாரித்தான். அவள் நிஜமாகவே இயல்பாக பதிலளித்தாள். கூடுதலாக சென்னையிலிருந்து வந்தது எப்போது, மீண்டும் எப்போது திரும்புகிறான், அம்மா எப்படி இருக்கிறார் என்றெல்லாம் கேட்டுக்கொண்டாள். பிறகு அருகிலேயே சில வாழையிலைகளை அறுத்துத்தந்து சாப்பாட்டை எடுத்துப்போட்டு சாப்பிடும் படியும், சிறிது நேரம் கழித்து வந்து பாத்திரங்களை எடுத்துச்செல்வதாகவும் சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றாள்.

சசியின் மனது இப்போது அவனிடம் இல்லை. 'எத்தனை பேரை கல்லூரியிலும், ஆஃபீஸிலும் பார்த்திருக்கிறோம்.. இவளிடம் என்ன இருக்கிறது.. வாவ், கல்யாணம் பண்ணிக்கொண்டால் இவளைமாதிரி ஒருத்தியை பண்ணிக்கொள்ளவேண்டும்' மனதுக்குள் விசிலடித்துக்கொண்டான். சாப்பாட்டை மறந்து மூவரும் சிந்தனையில் மூழ்கியிருக்க மாடசாமி சாப்பாட்டை எடுத்து வைக்க பின்னர் நினைவு திரும்ப சாப்பிட ஆரம்பித்தனர்.

அகிலா ஒரு தளத்தில் அவர்களை மிதக்கச்செய்திருக்க அவர்கள் இது வரை பார்த்திராத சுவையில் உணவு அடுத்த தளத்தில் மிதக்கச்செய்திருந்தது.

"நெவர் டேஸ்டட் ஒன், கிரேட்" என்றவாறே காரத்தில் கண்கள் சிவக்க ஹிமான் சாப்பிட்டுமுடித்தான்.

கிளம்பலாமா என்று கேட்ட விஜயை மறித்து சிறிது நேரம் இங்கேயே ரெஸ்ட் எடுத்துவிட்டு மாலையில் செல்லலாம் என இருவருமே சொல்ல, அதையே எதிர்பார்த்திருந்த விஜயும் சரி என்றான். மீண்டும் அவளை ஒரு முறை பார்த்துவிடும் ஆசை. தென்னைமர நிழலில் படுக்க சில பாய்களை பம்ப்செட் அறையிலிருந்து எடுத்துவந்து தந்தான் மாடசாமி. இருந்த மனநிலையிலும், களைப்பிலும் மூவரும் படுத்தனர்.

"ஷெல் வீ கம் அகெய்ன் டுமாரோ, விஜி?" என்ற ஹிமானின் கேள்விக்கு, "வீ வில் ட்ரை" என பதிலளித்தான் விஜய்.

ஹிமான் கற்பனைக்கோட்டைகளை மனதில் கட்டிக்கொண்டிருந்தான். 'இவளைக் கல்யாணம் செய்துகொண்டால் எப்படியிருக்கும்? இவளைப்போன்ற ஒரு தமிழ்ப்பெண்ணை நம் பேரண்ட்ஸ் ஏற்பார்களா? இவள் சம்மதிப்பாளா முதலில்? எவ்வளவு அழகான கண்கள் அவளுக்கு.." இன்னும் பல கற்பனைகளில் மூழ்கியிருந்தவன் அப்படியே சிறிது நேரத்தில் தூங்கிப்போனான்.

ஏதோ சலசலப்பில் சட்டென விழித்துக்கொண்ட ஹிமான் எழுந்தான். விஜய், சசி இருவரையுமே காணவில்லை. மாடசாமி எங்கே? அந்த பாத்திரங்கள் இன்னும் எடுக்கப்படாமல் அங்கேயே கிணற்றடியில் கிடந்தன. எழுந்தவன் சுற்றிலும் பார்த்துவிட்டு மொபைலைத் தேடினான். பின்னர் சுற்றிலும் தோப்பினுள் கூர்ந்து கவனித்துவிட்டு பம்ப் செட் அறையைப் பார்த்துவிட்டு அங்கு யாருமில்லையென்றால் போனில் அழைக்கலாம் என்று முடிவு செய்தவன் அந்த அறையை நோக்கி இடது புறமாக சென்றான். அவன் நினைத்தது சரி. சசியும், விஜயும் அங்கே இருந்த சிறிய ஜன்னல் வழியாக அந்த அறைக்குள் எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். இவனும் ஆர்வமாகி அவர்களின் அருகே சென்று எட்டிப்பார்த்தான். அதிர்ந்தான்.

அங்கே..

மாடசாமியின் மெல்லிய அணைப்பில் நின்று கொண்டிருந்த அகிலா அவனிடம் முகத்தோடு முகமாக சொல்லிக்கொண்டிருந்தாள், "எப்போதான் தைரியம் வந்து அப்பாகிட்ட பேசப்போறேனோ தெரியவில்லை. நினைச்சாலே பயம்மா இருக்குது. சரி விடுங்க முதல்ல.. அவங்க எழுந்திருச்சுக்க போறாங்க, நா கிளம்புறேன்.. நேரமாச்சு."

****************

பி.கு : சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்? ஹிஹி.. எழுதுவதோ, கதை எழுதுவதோ எவ்வளவு சிரமமானது என்பதை ஒவ்வொரு முறையும் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். ஏதோ ஒரு அழகான மெல்லிய காதல் கதையை சொல்லலாம் என எண்ணி இந்தக்கதையை எழுதத்துவங்கினேன். எங்கே ஒரு கதையை ஆரம்பிக்கக்கூடாது என்பதற்கு இந்தக்கதை ஒரு உதாரணமாக அமையலாம். தவறான துவக்கத்தால் அங்கங்கே தாவி, எங்கோ வந்து நான் சொல்லவிழைந்ததை கொஞ்சமும் சொல்லமுடியாத நிலையில் கதையை டிரமேடிக்காக முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவேதான் உங்களையும் உள்ளே இழுத்து விளையாட நேரிட்டது. ஆர்வத்துடன் கதையின் முடிவைக் கண்டுபிடிப்பதில் பங்கேற்ற முகிலன், சீனா, அ.மு.செய்யது, செந்தில்நாதன், தராசு, கேபிள்சங்கர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
.

ஹாலிடேஸ்.!

ரைமணி நேரம் தாமதமாக திருநெல்வேலி சந்திப்பை அடைந்தது நெல்லை எக்ஸ்பிரஸ். அதில் இருந்து இறங்கிய சில விநாடிகளிலெல்லாம் மறக்காமல் கேட்டான் ஹிமான்,

"ஹே.. விஜி, டோன்ட் பர்கெட் டு பை தெ ஹாட் ஹல்வா"

சசிகுமார் சிரித்துக்கொண்டிருக்கும் போதே விஜய் ஹிமானுக்கு பதிலளித்தான், "வீ 'வ் இனஃப் டைம் யார், தட் வில் பி சம் அதர் டைம். நவ் வியார் மூவிங் டு மை வில்லேஜ்"

ஹிமானின் லக்கேஜை குமார் எடுத்துக்கொள்ள நால்வரும் ரயில்நிலையம் விட்டு வெளிவந்தனர். விஜயின் வண்டி ஒன்று, குமாரின் வண்டி ஒன்றென இரண்டு டூவீலர்கள் இருந்தபோதும் கார் ஒன்றை எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்ட விஜயை தடுத்து டவுன் பஸ்ஸில் போகலாம் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தான் ஹிமான். தாமதமாகி விடும் என்று சொல்லியும் பிடிவாதம் செய்தான் அவன். குமார் வண்டிகளையும் சில லக்கேஜ்களையும் தான் கொண்டு வந்துவிடுகிறதாக சொன்னதில் ஹிமானின் விருப்பப்படி தடதடவென கிளம்பிக்கொண்டிருந்த டவுன்பஸ்ஸில் ஓடி ஏறி மிச்சமிருந்த இருவர் சீட்டில் மூவராக நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்து கல்லூரை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தனர் அவர்கள்.

சென்னையிலிருந்து வந்த சசிகுமார், ஹிமான் இருவரையும் வரவேற்க நண்பன் குமாருடன் வந்திருந்த விஜய் அவர்களுடன் சென்னையில் பணிபுரியும் ஒரு ஸாஃப்ட்வேர் என்ஜினியர். அவன் இவர்களுக்கு முன்னதாகவே ஊருக்கு வந்துவிட்டிருந்தான். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஒரு நீண்ட விடுப்பு எடுப்பது அவனது வழக்கம். இந்த முறையும் திட்டப்படி 20 நாட்கள் லீவ் எடுத்திருந்தான். அதில் சரிபாதி கழிந்த நிலையில்தான் சசி, மற்றும் ஹிமானின் வரவு. விஜய் சென்னை வந்த ஆரம்ப காலத்திலேயே சசியுடனான நட்பு துவங்கியிருந்தது. ரசனைகள் ஒத்துப்போனதில் மெல்ல மெல்ல குடும்ப நண்பர்களாகிவிட்டிருந்தனர். பல நேரங்களில் சசியின் வீட்டிலேயே உணவு, தங்கல் என நெருங்கியிருந்தனர். சசியின் அம்மா விஜயை இன்னொரு பிள்ளையாகவே பார்த்தார்.

ஹிமான் டெல்லியிலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் இவர்களுடைய பிராஞ்சுக்கு வந்து இவர்களுடன் இணைந்துகொண்டிருந்தான். கூடுதலாக துவக்கத்தில் தங்குவதற்கு வசதியான அறை கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த ஹிமானுடன் தனது அறையைப் பங்கிட்டுக்கொண்டிருந்தான் விஜய். கலகலப்பான ஹிமானை இருவருக்குமே பிடித்திருந்தது. இருவர், மூவராக விஜய் அறையில் மதுவுடன் கூடிய ரசனையான இரவுகள் அவர்களது நட்பை வளர்த்ததுடன், வேலையின் இறுக்கத்தை போக்கிக்கொள்ளவும் உதவியது. அந்த நட்பின் தொடர்ச்சியாகவே இந்த விடுமுறையின் சில நாட்களை ஒன்றாக கழிக்கவே இருவரும் நெல்லை வந்திருந்தனர்.

ழிநெடுக வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தான் ஹிமான். பக்கத்து சீட்களில் இருந்தவர்கள் இவனை வழிநெடுக வித்தியாசமாக பார்த்துக்கொண்டே வந்தனர். பஸ்ஸில் கரகரவென்ற இரைச்சலுடன் கூடிய எஃப் எம்மைவிட ஹிந்தி வாடையுடன் அவன் பேசிய ஆங்கிலம் அவர்களுக்கு சுவாரசியமாக இருந்திருக்கவேண்டும்.

கல்லூரில் அவர்கள் இறங்கியபோது நல்ல வெயில் கொளுத்தத்துவங்கியிருந்தது. வீட்டை அடைந்து காலை உணவை முடித்துக்கொண்டதும் ஓய்வெடுக்கலாமா என்ற விஜயை இருவருமே முறைத்தனர். ஹிமான் துவங்கினான்,

"நோ, வீ 'வ் ஒன்லி 5 டேஸ். விதின் தட் வீ ஷுட் ஸீ ஸோமெனி பிளேஸஸ்.. வாட்ஸ் தட் சசி? கூர்ட்டாலம்.. அன்ட்.."

நினைவுபடுத்திக்கொண்டவன் போல சசி தொடர்ந்தான், "ஆமாடா அவன் சொல்றது சரிதான், கன்யாகுமரி, குற்றாலம், பாபநாசம், கிருஷ்ணாபுரம்.. அப்புறம் கள்ளு வாங்கித்தரேன்னு சொல்லியிருக்கே.. உங்க தோப்புக்கு வேற போலாம்னு சொல்லியிருக்கே, இன்னும்.."

அது புரிந்தவன் போல ஹிமான், "ஆமாதா, யூ கமிட்டிட்" என்றான்.

"எனக்கு ஒண்ணுமில்ல, நீங்க ரெஸ்ட் எடுக்கணும்னுதான் சொன்னேன், அப்ப இப்பவே கிளம்பலாம். அப்புறம் எங்க தோப்புன்னு எப்ப சொன்னேன். எங்க காட்டுல ஒரு நாலஞ்சு மரம்தாண்டா இருக்கு. நான் சொன்னது எங்க அப்பாவோட ஃபிரெண்ட் தோப்பு. நானே சின்ன வயசுல போனது. டீப் இண்டீரியர் வில்லேஜ். மதிய சாப்பாட்டுக்கு போலாமா இன்னைக்கே? யூ ரெடி.?"

"நாங்க ரெடி. அங்க கள்ளு கிடைக்குமா?"

"ஷூ. சத்தம்போடாதே, அப்பா காதுல விழுந்துடப்போவுது. அதெல்லாம் வேற இடம். அதுவும் காலையிலயே சீக்கிரமே ஆத்துக்கு குளிக்கப்போறோம்னு சொல்லிட்டு போனாத்தான் கிடைக்கும். அதை நாளைக்கு இல்லன்னா நாளைக்கழிச்சு பாத்துக்கலாம். இப்போ இங்க போறதுக்கு எதுவும் வேண்டாம், வந்து நைட்டு பாத்துக்கலாம்."

"எனி பிராப்ளம் டு டேக் டிரிங்க்ஸ் தேர்?"

"நோ.. பட்.." என்று விஜய் முடிப்பதற்குள்

"தென், வி நீட் தெட்" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.

வர்கள் அந்தப் பிரமாண்டமான கிணற்றடியிலிருந்த பம்ப் செட் கால்வாயில் உட்கார்ந்திருந்தனர். மூவருக்காகவும் இளநீர்க்காய்கள் பறித்துப்போடப்பட்டிருந்தன. ஒரு வேலையாள் வெட்டித்தந்துகொண்டிருந்தான். 70 க்கும் மேற்பட்ட தென்னைகள் இருந்த அந்தத் தோப்பின் முன்புறமாக கிணற்றைச்சுற்றிலும் பல கட்டங்களாக வாழை பயிரிடப்பட்டிருந்தது. ஹிமானும், சசியும் கிணற்றைப்பார்த்து பிரமித்திருந்தனர்.

"வீட்டுக்குப்போயி கோழிக்கறியும், சோறும் குடுத்துவிடுதேன் தம்பி. நீங்க குளிச்சுகிட்டிருங்க.. பாத்து விசய், இவுனுகளுக்கு நீச்ச தெரியுமா? இல்லன்னா குளிக்க மோட்டார போட்டுக்கிடு என்னா? எலே மாடசாமி, இவுங்க போற வரைக்கி இவுங்க கூடயே இருந்து பாத்துக்க.." என்று சொல்லிவிட்டு கிளம்பினார் துரை மாமா.

"சரி மாமா" என்று சொல்லிவிட்டு அவர் தலை மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்திருந்தான் விஜய்.

அதற்குள்ளாகவே பாட்டிலை ஓப்பன் பண்ணி இளநீருடன் கலக்கத்துவங்கியிருந்தான் சசி, "எத்தனை படத்துல பாத்துருக்கேன்."

அடுத்த ஒரு மணி நேரத்தில் சிறிது மது அருந்தி விட்டு, மரமேறுகிறேன் பேர்வழி என்று நெஞ்சில் சிராய்த்துக்கொண்டும், வாழைத்தோப்புக்குள் ஓட்டப்பந்தயம் நிகழ்த்தியும் விளையாடிவிட்டு குளிக்க ஆயத்தமாகினர். விஜய் பம்ப் செட் அறையின் சுவற்றுக்கு ஏறி அங்கிருந்து கிணற்றுக்குள் டைவ் அடித்தபோது ஹிமான் பிரமிப்பில் கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். சசி, ஹிமான் இருவருக்குமே கிணற்றில் இறங்க தைரியம் வரவில்லை. மாடசாமி கயிற்றில் கட்டிக்கொண்டு இறங்குங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற போது துணிச்சலில்லை. மோட்டாரைப் போட்டு ஆனந்தமாக குளித்துமுடித்தபோது பசி வயிற்றைக்கிள்ள நேரம் மதியம் மூன்று மணியாகியிருந்தது.

"ஐம் ஸோ ஹங்க்ரி யார்.." என்று கத்திய ஹிமானுக்குப் பதிலாக,

"மீ ட்டூ" என்று சசி சொல்லிக்கொண்டிருக்கும் போதே விஜய் கிணற்றிலிருந்து மேலேறி வந்தான். அவனும் பசியை ஒப்புக்கொண்டு தலை துவட்டிக்கொண்டிருக்கவும் உணவு வந்துசேரவும் சரியாக இருந்தது.

ஒரு பெரிய தூக்குச்சட்டியில் சோற்றைச் சுமந்துவந்து கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண். எண்ணையிட்டு படிய வாரிய தலையுடன் சாதாரணத் தாவணியில் அலங்காரங்கள் ஏதுமில்லாதிருந்தாள். தெளிவான முகம், கவரும் கறுப்பு நிறம், கைகளில் கண்ணாடி வளையல், சத்தமிடும் கொலுசுக்கால்களில் ரப்பர் செருப்புகள், உறுதியான நடை, பளீர் இளமை. 'பாவாடை, சட்டையில் அப்பாவின் வேட்டியைப் பிடித்துக்கொண்டு, இடது கையில் பிளாஸ்டிக் கிளியை வைத்துக்கொண்டிருந்த அகிலாவா இது?'.. கிக் அத்தனையும் இறங்கிவிட அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் விஜய்.!

..........

(பி.கு : முடிவு நாளை. இந்தக்கதைக்கு நான் யோசித்து வைத்திருக்கும் முடிவைவிட சிறப்பான முடிவை பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு பரிசு தரலாமென்று இருக்கிறேன். நிஜமாகவேங்க.. சில பிரபல எழுத்தாளர்கள் கையொப்பமிட்ட நான் பாதுகாத்து வைத்திருக்கும் அவர்களது புத்தகங்கள், எனக்குப் பிடித்தமான முதல் மூன்று முடிவுகளுக்கு.!)

.

Sunday, November 22, 2009

பதிவர் சந்திப்பு (21.11.09) : புகைப்படங்கள்

கடந்த வாரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட சென்னை பதிவர் சந்திப்புகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட, திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட நேற்றைய (21.11.09) பதிவர் சந்திப்பு வழக்கத்தை விடவும் சிறப்பாகவே நடைபெற்றது.

வழக்கமாக எந்த நேரத்திலாவது ஆரம்பித்து எந்த நேரத்திலாவது முடிந்துவிடும். இந்த முறை சந்திப்பு குறித்த 5.30 ‍டு 7.00 நடந்ததும் இன்னொரு ஆச்சரியம். திடீரென அறிவிப்பு செய்யப்பட்டதால் கூட்டம் குறைவாக இருந்தது என எண்ணுகிறேன். மேலும் வழக்கமாக வந்துவிடுகிற சில நண்பர்களையும் காணமுடியவில்லை. இருப்பினும் ஜ்யோவ்ராம், பைத்தியக்காரன், லக்கிலுக், புரூனோ, கேபிள் போன்ற முக்கிய தலைகளையும் பல புதியவர்களையும் (அதாவது எனக்கு) காணமுடிந்தது. அனுஜன்யா மும்பையிலிருந்து வந்து கூட்டத்தை சிறப்பு செய்திருந்தார்.

எல்லோரும் மாலைக்காற்றில் சுகமாக பேசிக்கொண்டிருக்க, மழையை எதிர்பார்த்து ரெயின்கோட்டுடன் வந்திருந்த நான் மட்டும் புழுக்கத்துடன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏன் கழற்றி கையில் வைத்துக்கொள்வதுதானே என்கிறீர்களா? ஊஹூம், அதில் ஒரு பிரச்சினை, அதை இங்கெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. சரி, விஷயத்துக்குப்போகலாம்.

சிறப்பு விருந்தினர் வா.மணிகண்டனுடன் கவிதை இலக்கியம் குறித்தான விவாதம் நிகழ்ந்தது (உரையாடலின் அடர்த்தியை அறிய நர்சிம் பதிவுக்குச் செல்லலாம்). பின்னர் நரன் டெம்பிளேட் பின்னூட்டங்கள் குறித்த எரிச்சலைச்சொல்லி பின்னூட்ட வாய்ப்பு என்பது வாசகர்கள் மற்றும் படைப்பாளி அந்தப்படைப்பு குறித்த தொடர் விவாதங்களை நிகழ்த்தக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்றும் அது கிட்டத்தட்ட நிகழ்வதே இல்லை என்றும் கருத்து தெரிவித்தார். இல்லை இல்லையென்று சிலர் மறுக்க அதற்குள் பேச்சு திசைமாறியது. எனக்கும் அதுகுறித்து பல கருத்துகள் இருந்தாலும் அங்கு பேசினால் வாய் வலிக்கும் என்பதால் பேசவில்லை, இங்கு எழுதினால் கைவலிக்கும் என்பதால் இங்கும் வேண்டாம்.. ஹிஹி.!

இடையிடையே நானும், அதிஷாவும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து சோவாறிவிட்டு வந்தோம். (சீரியஸாக நாலு பேரு பேசிக்கொண்டிருக்கும் போது வெளிநடப்பு செய்து கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கவில்லை என்றால் அதுவும் ஒரு கூட்டமா என்ன.?). பின்னர் நல்லதொரு தேநீருடன் டீக்கடையில் சந்திப்பு இனிதே நிறைவுற்றது. கிளம்பும் முன்னதாக இனி தீவிரமாக கவிதைகள் எழுதலாம் என்று முடிவு செய்திருப்பதாக நான் அனுஜன்யாவிடம் கூறியபோது அவரது முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவியதை காணமுடிந்தது.

********

இனி புகைப்படங்கள்..

துவக்கச்செவ்வான பேக்ட்ராப்பில் காந்தி சிலை.


கூட்டத்தின் ஒரு பகுதி.


பைத்தியக்காரன்.


அதிஷாவின் தீரம்.


கடற்கரைச்சாலையின் ஒளிவெள்ளம்.


முரளிகண்ணன்.


காவேரிகணேஷ்.


கூட்டத்தின் இன்னொரு பகுதி.

யுவகிருஷ்ணா.

ஜ்யோவ்ராம்சுந்தர்.


பேக்ட்ராப் லைட்டிங்கில் விழாநாயகன் வா.மணிகண்டன்.


கிட்டத்தட்ட கூட்டத்தின் முழுப்பகுதி.


டாக்டர் புரூனோ, அதியமான்.


அனுஜன்யா அங்கிள்.நர்சிம்.


விடைதந்த பிறைநிலா.


.

Thursday, November 19, 2009

ஆயுதம் (ஆவணப்படம்)

என்னாச்சு.. குறும்படமே நம்மக்கிட்ட சிக்கிக்கிட்டு குண்டாங்குதிரையாக பட்டுக்கொண்டிருக்கிறது.. இந்த அழகில் ஆவணப்படம் வேறேயா.? என்று அதிர்ச்சியடைய வேண்டாம் தோழர்களே. காலத்தின் கட்டாயம்.. நாம் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டிய அவசியத்தில் உள்ளோம். ஆகவே இது வரை யாரும் பேசத்துணியாத இந்தப் பொருளில் இந்த அதிமுக்கியமான ஆவணப்படத்தை எடுக்கும் சூழல் எனக்குக் வாய்த்தமைக்கு நான் பெருமை கொள்கிறேன்.

பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் படத்தைப்பற்றிய மேற்குறிப்புகளோ,

படத்தில் வரும் ஆயுதம் எப்படி, யாரால் செய்யப்பட்டது என்பது பற்றிய மேல் தகவல்களோ..

சொல்லமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம். மேலும் இந்தப்படத்திற்கு பெண்கள் பக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு வரலாம். உண்மையை உரக்கக்கூற வேண்டிய கடமையும் நமக்கிருப்பதால் அதற்கெல்லாம் கவலைப்பட நமக்கு நேரமில்லை.. இனி,


.

Wednesday, November 18, 2009

காரணம்


ist2_7730636-woman-wearing-white-dress-with-wings

அப்போது அவர்கள் வெண்மை நிற உடைகளை அணிந்திருக்கவில்லை

பின்புறத் தோள்களில் இறக்கைகளும் கூட இருக்கவில்லை

ரத்தம் சொட்டும் பற்களுடன்

இரையின் சுவையை சிலாகித்தபடி

அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒரு தருணத்தில்தான்

நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு

வேறு வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்தோம்.!

.

Tuesday, November 17, 2009

விடைகளற்ற தருணங்கள்

சில வருடங்களுக்கு முன்னால் தென்காசி அருகேயுள்ள புகழ்மிக்க ஒரு உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதன் நிறுவனர் என் வாழ்க்கையில் நான் மிக மதிக்கும் ஒரு மாமனிதர். அவர் ஒரு விபத்தில் அபூர்வத்திலும் அபூர்வமான பிரச்சினையான ஸ்பைனல்கார்ட் பாதிக்கப்பட்டவர் ஆவார். (ஹேராம் படத்தில் அதுல் குல்கர்னி குதிரை விளையாட்டு விபத்தில் இப்படியான உடற்பாதிப்புக்கு ஆளாவார்). அவரது அன்பைப் பெற்ற வகையிலும் நான் ஒரு அதிர்ஷ்டசாலியே.

அங்கே நான் ஏற்றுக்கொண்டிருந்த பணி, அப்போது முழுமையான இயக்கத்தில் இல்லாதிருந்ததால் பெரும்பாலான சமயத்தில் மற்ற பொதுவான வேலைகளைச் செய்துகொண்டிருப்பேன். அங்கே எட்டாம் வகுப்பு வரையிலான ஒரு பள்ளிக்கூடமும் போலியோ மற்றும் இதர நோய்களினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிக் கூடங்களும், பிற வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. தொழிற்கூடங்கள் மட்டுமின்றி பள்ளியிலும் ஊனமுற்ற பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்கிந்தனர். அவர்களில் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் பலர் உள்ளேயே இயங்கிக்கொண்டிருந்த ஒரு இல்லத்தில் தங்கியிருந்தனர்.

பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என ஊனமுற்ற பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள்.

துவக்கத்தில் அவர்களை காணும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் ஓடிச்சென்று உதவுவேன். ஒரு நாள் இதைக்கண்ட நிறுவனர் என்னை அழைத்து ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக்குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.

இப்போது இங்கே சென்னையில் ஓர் அனுபவம். எங்கள் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு அழகிய பெண்குழந்தை ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு 10 வயதிருக்கலாம். அவளது கால்கள் இரண்டும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பெரிய சைஸ் காலிபர்கள் மட்டுமல்லாமல் இரண்டு கைகளிலும் இரண்டு வீல்கள் பொருத்திய பாலன்ஸர்கள் கொண்டு தெருவில் நடைபயிலுவாள். மாலை நேரங்களில் இந்தக்காட்சியைக் காணலாம். நடக்கும் போது ஒவ்வொரு அடியையும் கால்களும், கைகளும் மிகுந்த நடுக்கத்துடனும் சிரமத்துடனும் எடுத்து வைக்கும். அவளது தந்தை மிகுந்த கண்டிப்பான முகத்துடன் ‘உம்.. ஆகட்டும்’ என சுடு சொற்களைச் சொன்னவாறே உடன் நடப்பார்.

இளகிய மனம் கொண்டவர்கள் இந்தக்காட்சியை கண்டுவிட்டு உள்ளுக்குள் அழாமல் தாண்டிச் சென்றுவிடமுடியாது. உண்மையில் பயிற்சி செய்ய அடம்பிடிக்கும் அந்தக்குழந்தையின் எதிர்காலம் கருதியே அந்தத் தந்தை அவ்வாறு செய்துகொண்டிருக்கக்கூடும். இப்படிக் கடும் பயிற்சி மேற்கொள்வதால் அவள் நாளை வெறும் காலிபர்களுடனோ, சிறிய சப்போர்ட்டினுடனோ நடக்க நேரலாம். ஆனால் பயிற்சி இல்லாவிட்டால் அவள் தவழ்ந்து மட்டுமே செல்லக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவாள் என்பது நிச்சயம்.

எனக்கு இவற்றைப் பார்த்துப் பழக்கமிருப்பதால் அவள் என்னைப்பார்க்கும் சமயங்களில் சிறிது சிநேகமாய் புன்னகைத்துவிட்டுச் சென்றுவிடுவேன், அவ்வளவுதான். ஆனாலும் உள்ளுக்குள் ஏராளமான குழப்பங்கள் வந்து அலைக்கழிக்கும். இதே என் குழந்தைக்கோ, உறவினர் குழந்தைகளுக்கோ நேர்ந்தால் நான் எவ்வளவு மனமொடிந்துபோவேன்.? ஏன் இந்தக்குழந்தைகள் தன் பால்யத்தை பிறரைப்போல வாழ இயலாமல் கழிக்கின்றன.? வாழும் காலமுழுதும் இந்தப் போராட்டம் அவர்களுக்கு ஏன்.?

காது கேட்காத, வாய் பேச இயலாதவர்கள் ஒரு மொழியை அறிந்திருக்கவில்லை, அவ்வளவுதான். கண்கள் இல்லாதவர்களுக்கு குரல்களால் ஆனது உலகம். கை, கால்கள் பழுதுபட்டவர்களும் அவர்களைப்போலத்தான். நார்மலான நம்மால் இயலாத காரியங்கள் எத்தனையோ உள்ளன, அதைப்போலவே மற்றுமொரு காரியம் அவர்களால் இயலவில்லை, அவ்வளவுதான். உலகமும், வாழ்க்கையும் அனைவருக்கும் பொதுவானதே..

..என்று அறிவு சொல்கிறது. உணர்வுகளால் முடியவில்லை. என்ன மாதிரியான டிஸைன் இது.?

.

Wednesday, November 11, 2009

புளிக்கும் திராட்சை (பதிவர் ஸ்பெஷல்)

சமீபத்தில் பிரபல பதிவர் அனுஜன்யாவுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது இந்த ஃபாலோயர்ஸ் பற்றி பேச்சு வந்தது. 'என்ன அங்கிள், நம்ப கூட வந்த எல்லோரும் 500ஐத் தாண்டி போய்க்கிட்டிருக்காங்க.. நம்ப இந்த ஸ்பீட்ல போனா எப்ப அவுங்களைத் தொடுறது?' எனக்கேட்டேன்.

அதற்கு இப்படிச்சொன்னார், "இந்த ஃபாலோயர்ஸ்னால என்ன பிரயோஜன்ம்ங்கிற நீ? ஊஹூம், நோ யூஸ்.!, ஃபாலோ பண்றவங்க எல்லோருமே பதிவு படிக்கிறதில்ல.. அப்புறம், குவாலிடியா எழுதுறவங்களுக்கு ஃபாலோயர்ஸ் கம்மியாத்தான் இருப்பாங்க, பாரு.. இப்ப நாம இல்லையா?"

அதற்கு நானும் உடனடியா மண்டையை ஆட்டிக்கொண்டு சொன்னேன், "ஆமா அங்கிள், ஆமா".

அன்றைக்குத்தான் பரிசலின் சமீபத்திய பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் போட்டேன்..

தமிழ்ப் பதிவுலகில் முதல்முறையாக (சரி, இவ்வளவு விரைவாக-ன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கறேன்) 500 ஃபாலோயர்களை தொட்டுக்கொண்டிருக்கும் பரிசல்காரனுக்கு என் முதல் வாழ்த்துகளை பதிவுசெய்கிறேன். வாழ்த்துகள் பரிசல்.!

(அனுஜன்யா : அதோ அந்த உச்சாணிக்கிளையில் நமக்கு எட்டாம தொங்குது பாருங்க அந்த திராட்சைப்பழம். அது பயங்கரமா புளிச்சுக்கொடுவும்..
ஆதி, மகேஷ் (கோரஸாக) : ஆமா அங்கிள், ஆமா.!!)

**********

குறிப்பாக ஆங்கிலத்திரைப்படங்கள் மற்றும் விடியோ கேம்களில் சிறப்பாக பயன்படுத்தப்படும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அனிமேஷன், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்றவற்றை ஒரு தொழில்நுட்ப மேதைமை என்று மட்டுமே பார்க்காமல் மிகச்சிறப்பான கலைவடிவமாக‌வும் நான் காண்கிறேன். அது போன்ற படங்களை ஃபிரேம் பை ஃபிரேம் நான் ரசித்துப் பார்ப்பதுண்டு.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான உலக சினிமாக்களைப் பற்றி தமிழ் எழுத்துகள் பேசத்துவங்கியுள்ளன. இந்நிலையில் இது போன்ற படங்களைப்பற்றிய கட்டுரைகள் தமிழில் இல்லை என அடித்துச்சொல்லிவிடலாம். முழுமையாக இதுபோன்ற படங்களைப்பற்றி என்று இல்லாவிட்டாலும் தொடர்புடைய முக்கிய பகுதியான 'டிஸ்னி (Disney)' மற்றும் 'பிக்ஸார் (Pixar)' நிறுவனங்கள் இந்த அனிமேஷன் துறையில் எப்படி துவக்க சவால்களை சந்தித்து இன்று கோலோச்சிக் கொண்டிருக்கின்றன என்ற பெரும் வரலாற்றினை சுருக்கமான, சுவாரசியமான எழுத்தில் முக்கிய குறும்பட இணைப்புகளோடு கூடிய ஒரு கட்டுரைத்தொடராக‌ ஒரு வலைப்பூவில் கண்டேன்.


அது, நண்பர் ஹாலிவுட் பாலா எழுதிய 'தி பிக்ஸார் ஸ்டோரி'. நன்றி மற்றும் வாழ்த்துகள் பாலா.

**********

நீண்ட நாட்களாகவே எனக்கு இந்தப்பதிவுலகம் குறித்து ஒரு ஆதங்கம் உண்டு. அது இந்தப் புனைபெயர் சூடிக்கொள்வது குறித்தது. வித்தியாசமாக வைத்துக்கொள்கிறேன் பேர்வழி என்று 'நீயும் நானும் ஊருக்குப்போனோம்', 'லட்டு தின்னலாமா', 'கொத்தும் கோழி', வால் முளைத்த வண்டு' 'உடைந்த முட்டை' என ரொம்பவும் படுத்தலாக வைத்துக்கொள்கிறார்கள். (இந்த உதாரணப்பெயர்களை(??) சொல்லவும் கூட பயமாக இருக்கிறது, யாராவது வைத்துக்கொண்டிருப்பார்களோ என)

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் உங்களுக்கு ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி எழுதுவதோ, பத்திரிகை முயற்சிகளோ நோக்கமில்லாமல், பொழுதுபோக்கு மட்டுமே குறிக்கோளாக இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் உங்கள் கருத்துகளை பொருட்படுத்த அல்லது உங்களை யாராவது குறிப்பிட்டு பேச விரும்பினால் எழும் சிறிய சங்கடத்தை நினைத்துப்பார்க்கலாம்.

சமீபத்திய உதாரணமாக, நண்பர் மாதவராஜின் ஒரு பதிவில் நண்பர் 'நிகழ்காலத்தில்' ஒரு பின்னூட்டம் இடுகிறார். அவர் கருத்தை ஏற்ற மாதவராஜ் பதிவிலும் மாற்றம் செய்து பின்னூட்டத்திலும் பதில் கருத்து தெரிவிக்கிறார். நானாக இருந்தால் எப்படி எழுதியிருக்கக்கூடும்?

எதிர்காலத்தில் பதிவெழுதுகையில் நிகழ்காலத்திலின் கருத்துகளை கவனத்தில் கொள்கிறேன். நன்றி நிகழ்காலத்தில்.!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கேற்ப நல்ல படைப்புகளை நாளை நாம் தரும் சூழல் நேரும் என்ற நம்பிக்கையுடன் அழகான பெயர்களை சூடிக்கொள்ளுங்கள். தமிழிலா அழகுப்பெயர்களுக்குப் பஞ்சம்? இது என் வேண்டுகோள் மட்டுமே. மாற்றுக்கருத்து இருப்பின் மன்னியுங்கள்.

**********

சமயங்களில் சில நல்ல பதிவுகள், நம்மை அது சொன்ன விஷயங்களையும் தாண்டி சிந்தனையில் ஆழ்த்திவிடுகின்றன. ஒரு சமூக அக்கறை கொண்ட போராட்ட வாழ்வு வாழ்ந்து மறைந்த ஒரு பெரியவரை நினைவு கூறும் நண்பர் எம்.எம்.அப்துல்லாவின் சமீபத்திய இந்தப்பதிவு, பதிவு சொன்ன விஷயங்களையும் தாண்டி என்னை நாள் முழுதும் ஆக்ரமித்திருந்தது.

'போராட்டமேயில்லாத சுக வாழ்வு வாழும் நீ, உன்னைச்சுற்றி நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப்போட்டிருக்கிறாயா.? உனக்கெல்லாம் இருப்பதற்குப்பெயர் சமூகக்கோபமா? அப்படியொன்று உனக்கிருக்க ஏதேனும் தகுதியிருக்கிறதா உனக்கு? முதுகெலும்பு என்று ஒன்று உனக்கிருப்பதை நீ அறிவாயா?'

வெட்கம் பிடுங்கித்தின்ன மனசாட்சி இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது என்னை. பதிவுகள் ரசனை சார்ந்தவை மட்டுமல்ல.. சிந்தனைகளையும், வாழ்க்கை முறைமைகளையும் மாற்றும் சக்தி வாய்ந்தவை என்பது இன்னுமொருமுறை விளங்கியது எனக்கு.

**********

அப்புறம், தமிழில் பிழைகள்.

எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் என பிழைகளின் கூடாரம் இந்தப்பதிவுலகம். (இதைச்சொல்வதில் எனக்கு எந்தத்தயக்கமுமில்லை). என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

பிழையை அறியாமலிருந்தால் அவமானம். அறிந்தும் செய்தால் (கவனக்குறைவாக.. டைப்பிங் எரர்) அயோக்கியத்தனம். கருத்துக்கள், சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்லும் அதே நேரம் ஈரிழைப்பின்னலாக மொழியையும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியமும் பொறுப்புமிருக்கிறது நமக்கு. பிழைகள் களைய முயல்வோம்.

ஆர்வமிருப்பின் ஒற்றுப்பிழைகள் குறித்த நண்பர் கேவிஆரின் பதிவு மற்றும் தொடர்புடைய சுட்டிகளுக்குச் செல்லுங்கள்.

**********

அப்புறம் எழுத்தில் கண்ணியம்.

மொத்த மக்கள்தொகையில் 0.01 சதவீதத்துக்கும் குறைவான கூட்டமே பதிவுலகம். மொழி சார்ந்த கலை, இலக்கிய பங்களிப்புகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல் உறங்கும் ஊடகங்கள் சொல்லாத, தயங்கும் எழுத்தாளர்கள் பேசாத பல சமூக, அரசியல் விஷயங்களை, கருத்துகளை, செய்திகளை.. சிந்திக்கவும், உரையாடவும், பரப்பவும் கிடைத்த அறிவியல் அற்புதமே இந்தப்பதிவுலகம். இந்தச்சிறிய சதவீதம் படித்தது, அறிவார்ந்தது, வசதியானது, தொழில்நுட்பம் அறிந்தது. ஆனால் இவைதான் எந்தப்பாமரருக்கும் குறைவில்லாத, பேசப்படுகிற கருத்தை ஒட்டியதாக இல்லாத, மேம்போக்குத்தனமான, கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.

நண்பர் ஜீவனின் சமூக அக்கறையுள்ள இந்தப்பதிவில் நண்பர் ரோஸ்விக்கின் பின்னூட்டம் ஒரு உதாரணம் மட்டுமே. தமிழக முதல்வர் குறித்த ஆதாரமற்ற வெற்றுக்கூச்சல். ஊழல், சுயலாபம், பொறுப்பின்மை அனைத்தையும் கண்டிக்கிற உரிமை நமக்கிருக்கிறது. ஆனால் அது நம்பகத்தன்மையுள்ள செய்தியின் மீதான விமர்சனமாக‌ இருக்கவேண்டும், கருத்துப்பொதிந்ததாக இருக்கவேண்டும்.

பல லட்சம் மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களை.. அது கலைஞரோ, ஜெயலலிதாவோ, ராமதாஸோ.. கண்ணியமற்ற முறையில் விமர்சிப்போமானால் நமக்கும் அவர்களின் தேர்தல் நேர மேடைப்பேச்சாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.

**********

தோழி ஸ்ரீமதி மற்றும் நண்ப‌ர் முரளிகுமார் பத்மநாபன் இருவரும் 'Scrumptiuos blog (ருசிகர வலைப்பூ)' என்றொரு விருதை நம் புலம்பல்களுக்கு வழங்கியுள்ளார்கள். இருவருக்கும் என் நன்றி.


இந்த விருதை

கேவிஆர் ட்ரூத் சின்னஅம்மிணி அப்பாவிமுரு அறிவிலி

ஆகியோருக்கு வழங்கி மகிழ்கிறேன்.

**********

சென்ற வாரம் மழையினால் ஒத்திவைக்கப்பட்ட பதிவர் சந்திப்பு இந்த சனிக்கிழமை நிச்சயமாக நடக்கவிருக்கிறது. வாய்ப்பிருக்கும் அனைவரும் கலந்துகொள்ளுங்கள், சந்திக்கலாம். குறிப்பாக நான், பதிவர்களுக்கு எல்லா பதிப்பகங்களும் சலுகை விலையில் புத்தகங்கள் தந்தாக வேண்டும் என்று ஏதாவது தனிநபர் தீர்மானம் போடலாம் என்றிருக்கிறேன்.. ஹிஹி.!

விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்.
.

எப்பிடி இருந்த நான்.?

முன்பெல்லாம் லவ், டெக்னிகல் என சீரியஸாக எவ்வளவு அழகாக எழுதுவீர்கள்.? இப்போ ஏன் இப்படி மொக்கை போடுறீங்க.? என சில மெயில்கள் வருந்துகின்றன. நியாயம்தான். என்ன பண்றது.? மண்டையை பிச்சுக்கிற சூழலில் இதுவாவது முடிகிறதே என நான் மகிழ்ந்துகொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். சரி இன்றைய மொக்கைக்கு போகலாம்.

கீழே கல்யாணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டங்களில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.

எங்கே இரண்டுக்குமிடையே குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.நீங்க கலாய்க்கும் முன்னாடி நானே சொல்லிடுறேன்.

1. கையில் வில்லன் நம்பர் 1.
2. தொப்பை.
3. இடது கையில் பால் புட்டி.
4. படத்தில் சரியாக தெரியாத பத்துப்பதினைந்து நரைமுடிகள்.
5. 24 மணி நேர லக்கேஜ்கள்.
6. கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையைப் போல மொத்த பிக்சரே அவுட் ஆஃப் போகஸ்.. அவ்வ்வ்வ்வ்..

.

Tuesday, November 10, 2009

கற்பனைக் குதிரை

ரு பிரபல எழுத்தாளரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த போது..

'அன்னிக்கு சொன்னேனே அந்தக்கதையை படிச்சீங்களா? பிளாக்ல போட்டுருக்கேனே..' என்று நைஸாக ஆரம்பித்தேன். பதிலுக்கு விமர்சனமாக நாக்கு பிடுங்கிக்கிற மாதிரி அவர் கேட்டதை... ம்ம்ம், சை.! இங்கு எழுதமுடியாததால் இப்போது வேற எதுவாவது பேசலாம்..

ரு பிரபல பதிவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த போது..

'என்னால் பார்த்த நபர்கள், பார்த்த சம்பவங்கள் பற்றிதான் அப்படியே வர்ணிக்கமுடிகிறது. அதைத்தான் கதையாக எழுதி ஓரளவு ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறேன். சுத்தமாக கற்பனையே வரமாட்டேங்குது. ஒரு அவசரத்துக்கு கதையின் ஏதாவது ஒரு இடத்தைக் கற்பனை செய்து எழுதலாம்னு பார்த்தாக்கூட‌ முடிவதில்லை. நீங்கல்லாம் எப்படிப்பண்றீங்க.?' என்றார். யாரைப்பாத்து என்னக்கேள்வி சின்னப்புள்ளத்தனமானு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு 'நாங்கள்லாம்..'ம்னு ஆரம்பிச்சு என்னத்தையோ பேசி சமாளித்தேன்.

என்னதான் இந்தக்காலத்தில் கதை லைவ்வாக இருக்கவேண்டும் என எல்லோரும் சொல்லிக்கொண்டாலும் ஒரு எழுத்தாளன் என்று ஆகிவிட்டபடியால் (இதுவே எவ்வளவு அழகான கற்பனை இல்ல?) கற்பனை என்பது மிகவும் அவசியமாகிறது. நிஜமான வாழ்க்கை இருந்தால்தான் கதையில் ஒரு உயிரோட்டம் கிடைக்கிறது. ஆனால் அதை சுவாரசியப்படுத்த தேவையான இடங்களில் கொஞ்சம் கற்பனை கலந்தாக வேண்டும். அப்போதுதான் கதை முழுமையடைகிறது. என்ன ஒன்று, இரண்டும் தண்ணீரும் பாலும் போல இரண்டறக்கலந்து எது கற்பனை என்று கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கவேண்டும். (என்ன சீரியஸாக அட்வைஸ் போய்க்கொண்டிருக்கிறது? நமக்கென்ன அந்தத்தகுதி இருக்கிறது? அதுவும் ஒவ்வொரு சிறுகதைப்போட்டியிலும் லபக்கென்று மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கும் நமக்கு? என்கிறீர்களா.. கொஞ்சம் பொறுங்களேன்).

உங்களுக்கும் அந்த பிரபல பதிவரைப்போல அந்த மாதிரி ஏதாவது சந்தேகமிருந்தால் வாருங்கள் கொஞ்சம் டிரெயினிங் எடுத்துக்கொள்வோம். நான் கற்பனை செய்துகொண்டே போவேன். நீங்களும் உங்களைப்பற்றி கூடவே கற்பனை செய்துகொண்டே வரவேண்டும்.. சரிதானா?

நீங்கள் வழக்கம் போல வேண்டாவெறுப்பாக 8.30 மணி ஆஃபீஸுக்கு 8.50க்குப்போகிறீர்கள் (இது மட்டும் கற்பனை இல்லை). போனவுடனே மானேஜர் கூப்பிட்டு 'வாங்க கேகே, நேத்துதான் டிஸைட் பண்ணினாங்க.. உடனே கொடுக்கச்சொல்லி உத்தரவு. வழக்கமானது தவிர்த்து எக்ஸ்ட்ரா 20% விபி சாங்ஷன் ஆகியிருக்குது' என்று சொல்லி கவரை நீட்டுகிறார். அப்படியே, 'ஈஸ்டெர்ன் கன்ட்ரீஸ் 15 டேஸ் கம்பெனி டூருக்கு நம்ப பிளான்ட்லயிருந்து ரெண்டு பேர் கேட்டிருக்காங்க. நம்ப டிபார்ட்மென்ட்ல உங்க பேர குடுத்திருக்கேன். பிராஜக்ட்லாம் கிடையாது. சும்மா ரிஃப்ரெஷ்மென்ட், இந்த வருஷத்துல இருந்து ஆரம்பிச்சிருக்காங்க. கிளம்ப இன்னும் ஒரு வாரம் இருக்குது. இன்னிலிருந்தே நீங்க ஆபீஸ் வரவேண்டாம். வீட்லயிருந்தே டூர் வேலையை, விசாவைக்கவனிங்க.. அப்படியே எல்லோர் லாப்டாப்புக்கும் யுஎஸ்பி மோடம் கேட்டிருந்தோம்ல, அன்லிமிடட் 3 mbps வந்திருக்கு. உங்களோடதை வாங்கிக்குங்க..' என்கிறார் (லாப்டாப்பே நமக்கு கிடையாதே என லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது. கற்பனைதானே.. வாங்கிக்குங்க) எல்லாத்துக்கும் சரியென்று தலையாட்டிவிட்டு ஏன் 5 mbps இன்னும் வரலையாமா என்று கேட்டுவிட்டு வாங்கிக்கொள்கிறீர்கள்.

அப்படியே கிளம்பலாம்னு பார்த்தா HR லிருந்து ஆள் வந்து உங்க‌ளை பிடித்துக்கொள்கிறான். 'சார் நம்ப கம்பெனியிலயே நீங்கள் ஒருத்தர்தான் சார் ரைட்டரா இருக்கீங்க, உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் ஹால்ல சின்ன செலிப்ரேஷன் பார்ட்டி இருக்குது. உங்களை கண்டிப்பா இருக்கச்சொன்னார் ராம், டைரக்டரே வரேன்னிருக்காராம்'. ஏன்ப்பா இதெல்லாம் பெரிசு பண்றீங்க.. நான் என் கடமையைத்தானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வழியில்லாமல் இருக்கிறீர்கள்.

சீட்டில் உட்கார்ந்ததும் போன் வருகிறது. புது நம்பராக இருக்கிறது. எடுக்கிறீர்கள். 'நாங்கள் விகடன்ல இருந்து பேசறோம், நீங்க ஒரு கதை அனுப்பினீங்கள்ல சார், 'சமூக நீதி' (ஞாபகம் இருக்கா?) அந்தக்கதையை அடுத்த வாரம் பிரசுரம் பண்றோம் சார். அதோட அந்தக்கதையை அசோகன் சார் படிச்சுட்டு உங்களை பார்க்கணும்னு வரச்சொல்லியிருக்கார். உங்களுக்கு எப்ப டைம் கிடைக்கும்னு சொன்னீங்கன்னா.. வசதியா இருக்கும்'. ஒரு டேட் சொல்லிவிட்டு வைக்கிறீர்கள்.

இன்னொரு கால்.

உங்கள் நண்பரும், திரைப்பட உதவி இயக்குனருமான பிரியன் செல்லத்துரை போன் பண்ணுகிறார். 'நாம அன்னிக்கு பேசிக்கொண்டிருந்தோம்ல கேகே, அந்த சுண்ணாம்பு விக்கிறவன் கதை. அதை ஷங்கர் பிக்சர்ஸ்ல சொன்னேன். அசந்துட்டாங்க.. உடனே பண்ணனும்னுட்டாங்க. நான் நேர்மையா டைரக்ஷன் மட்டும்தான் நான் பண்ணுவேன். கதை என் பிரண்டோடது. திரைக்கதை அவந்தான் பண்ணுவான்னு சொல்லிட்டேன். உன்னைப்பார்க்கணும்னாங்க.. நெட்ல இருந்த படத்தை காண்பிச்சேனா? திரும்பவும் அசந்துட்டாங்க, நீயே ஹீரோவா பண்ணமுடியுமான்னு கேட்குறாங்க.. உன்னைப்பார்க்கணும்னு உடனே சொல்றாங்க. நான் ஷங்கர் ஆஃபீஸ்லதான் இருக்கேன், இப்பவே கார அனுப்பவா?' என்று கேட்கிறார். கொஞ்சம் அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை. எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க.. வேற வழி சமாளிச்சுதான் ஆகணும். சாய்ந்தரம்தான் வரமுடியும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிவிடுகிறீர்கள். பின்னர் பார்ட்டியை முடித்துவிட்டு மதியமே வீட்டுக்கு வருகிறீர்கள்.

வந்ததும் விபரங்களை சொல்ல தங்கமணியிடம் வாயெடுக்கிறீர்கள். அதற்கு முன்னதாக அவர் உங்களை மடக்குகிறார், "என்ன ஆஃபீஸுக்கு பாதிநாள் மட்டும் போட்டுட்டீங்களா? சரி, அது கிடக்கட்டும். வரம்போது முட்டையும், ஊறுகாயும் வாங்கிட்டு வரச்சொன்னேனே.. வாங்கிட்டு வந்தீங்களா.?" (என்னதான் கற்பனைன்னாலும் சில விஷயங்களை மாற்றமுடியாது. அவை கற்பனைக்கும் அப்பாற்பட்டவை).

அதுக்கப்புறம் அடுத்த மாசம் வரப்போற உங்க பிறந்த நாளுக்காக உங்கள் இனிய நண்பர் ஒருவர் நீங்கள் பார்த்திராத நீங்கள் விரும்பிக்கொண்டிருந்த ஒரு 50 படங்களின் டிவிடிக்களை பரிசாக கொரியரில் அனுப்பி வைத்தது, இன்னொரு நண்பர் அதுபோல டாப் 100 புத்தகங்களை அனுப்பி வைத்தது, இன்னொரு குறும்புக்கார நண்பர் நல்ல ஸ்காட்சுனதா பார்த்து 10 ஃபுல்களை அனுப்பியது, உங்கள் பழைய (அல்லது புதிய) கேர்ள்பிரண்ட் போனில் அழைத்தது (இதை அவங்கங்க கற்பனைக்கு ஏற்றவாறு வைடாக மாற்றிக்கொள்ளலாம். சப்ஜெக்ட் ரொம்ப பெரிசு) என பட்டியல் நீண்டு கொண்டே போவதால் அவற்றையெல்லாம் சாவகாசமாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்..

..இப்போ.. கற்பனை போதும். மீட்டிங்குக்கு டைமாயிடுச்சு, போய் (கண்ணைத்தொடைச்சுக்கிட்டு) வேலையைப் பாக்குற வழியைப் பாருங்க.!

.

Monday, November 9, 2009

கறுப்பு ஞாபகம் (சர்வேசன் சிறுகதைப்போட்டிக்கு)

ஏதோ கற்பனை உலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக்கொண்டிருந்தது போல இருந்தது எனக்கு. ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தவனின் நினைவுகள் அறுபட ஒரு விஷயம் உறுத்தியது. கொஞ்ச நேரமாகவே ஏதோ சரியில்லை. என்ன ஆச்சு? பேலன்ஸ் இல்லாம இழுக்குதே.. கம்ஃபர்டபிளா இல்லையே.. நாம் ஓட்டிக்கொண்டிருப்பது நமது வண்டி போல இல்லையே.. சட்.! இது நம் வண்டி இல்லை.

வேகத்தைக்குறைத்து சாலையின் ஓரமாக நிறுத்தினேன். இன்னும் தலையில் சிக்னேச்சரின் கிறுகிறுப்புக் குறையவில்லை. சுந்தருடன் போகும் போதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. போதுமென்றால் கேட்கிறானா.. அதெல்லாம் அப்புறம். முதலில் வண்டியைப்பார். இறங்கி சைட்ஸ்டான்ட் போட்டுவிட்டு சுற்றி முன்னால் வந்து முகப்பையும், நம்பரையும் பார்த்தேன். புத்தம் புதிய ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். சுத்தம். வேறு யாரோட வண்டியையோ எடுத்துவந்துவிட்டோம்.

என்ன பண்ணப்போறோம்.? சட்டென மனதில் பயம் கவிழ்ந்தது.

இங்கிருந்து நான்கு கிமீயில் மேலூர் போலீஸ்ஸ்டேஷன் இருக்கிறது. போய் விபரம் சொல்லிட்டால் என்ன? விளங்கிவிடும். இவ்வளவு தண்ணியடித்துவிட்டு இந்த மப்பில் ஸ்டேஷனுக்கா? என்ன நடக்கும் தெரியுமில்ல? வண்டி எங்கே கை மாறியது? பாரில் இருந்து கிளம்பும் போதே மாற்றி எடுத்துவிட்டோமா? இல்லையே.. இருக்குமோ?

ப்ளாங்க்..

சுந்தருடன் பாருக்குள் போய் ஒரு ஹாஃப் சிக்னேச்சர் சொன்னோம். இரண்டாவது ரவுன்டுக்கு சிக்கன் சொன்னோம். அப்புறம்? என்னாச்சு.. சுத்தமாக துடைத்துவிட்டதைப்போல மறந்துபோயிருந்தது. பாரில் இருக்கும் போது மணிபார்த்தோம். அப்போது மணி 7. அதற்குப்பிறகு மூணு மணிநேரம் என்ன நடந்தது? ப்ளாங்க்.. சுத்தமாக நினைவிலில்லை. சுந்தர் என்ன ஆனான்? அவன் வீடு பக்கத்தில்தானே.. போயிருப்பானா? என்னாச்சு.. நன்றாக யோசித்தும் நினைவுக்கு ஒன்றுமே வந்து தொலைய மாட்டேன்கிறது. யாரு பில் கொடுத்தது? நம் வண்டியைத்தான் எடுத்தோமா? 12 கிமீ வந்திருக்கிறோமே.. வழியில் எங்காவது நின்றோமா?

பேன்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டேன். இந்த சிகரெட் பாக்கெட் எப்படி வந்தது. பாரில் வைத்து இது நம்மிடம் இல்லையே.. சரி, இப்ப என்ன பண்றது? மணியைப் பார்த்தேன். இரவு 9.50. நல்ல இருட்டு. இது யாரு வண்டி? யாராவது வண்டி திருடுபோச்சுன்னு இதுக்குள்ள யாராவது கம்ப்ளெயின்ட் பண்ணியிருப்பாங்களோ. எடுத்துட்டு வீட்டுக்கு போனாலும் சிக்கல். வீட்டுல நம்ப வண்டியை எங்கன்னு காலையில அப்பா குடைஞ்சிருவாங்க.. எப்படி சமாளிக்கிறது? நம் வண்டி எங்கே போச்சுது? யாராவது மாற்றி எடுத்துட்டு போயிருப்பாங்களா? இல்ல, திருடு போயிருக்குமா? திருட்டு போயிருக்கும்னு நினைச்சாலே கதிகலங்குது. சுந்தருக்கு டயல் செய்தேன். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. எடுக்கவில்லை. ம்ஹூம், ஏதோ பிரச்சினை.

இன்னும் 6 கிமீ போகணும் வீட்டுக்கு. வண்டியை இங்கேயே போட்டுவிட்டு விலக்கு வரைக்கும் நடந்துபோய் ஏதாவது பஸ்ஸில் போயிடலாமா? ஒன்றரை கிமீ நடக்கணுமே.. லேட்டாயிருச்சே, பஸ் இருக்குமா? அப்படியே போனாலும் ட்ரேஸ் பண்ணி போலீஸ் காலையில் வீட்டுக்கு வந்திட்டாங்கன்னா.? நினைக்க நினைக்க திகில் பற்றிக்கொண்டது. என்னதான் நடந்துச்சு.. நினைக்க நினைக்க பயமாகவும் எரிச்சலாகவும் வந்தது. அதெப்படி மறக்கும்? இதுக்கு முன்னாடி எத்தனை தடவை அளவுமீறி குடிச்சு எவ்ளோ பிரச்சினை வந்திருக்குது. அப்பல்லாம் கூட இப்பிடி சுத்தமா மறந்துபோனதில்லையே. தலை சுற்றிக்கொண்டு வந்தது. திரும்பவும் சுந்தருக்கு டயல் செய்தேன். முழுசாய் ரிங் போய் கட்டானது.

எத்தனை பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டோம்? என்ன சிக்கல்னே புரியாமல் இருப்பதில் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. போலீஸைக் கூட சமாளிச்சிடலாம். இந்த அப்பாவை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். வண்டியோட வீட்டுக்கு போயிடவேண்டியதுதான். காலையில்னா தண்ணியடிச்ச பிராப்ளம் கிடையாது. மறந்து போய் ஏதோ கடையில் மாற்றி வண்டியை எடுத்திட்டு வந்திட்டோம்னு போலீஸ்ல சொல்லிட வேண்டியதுதான்.

போன் அடித்தது. பரபரப்பாக போனை எடுத்தேன். சுந்தர்தான்.

விபரங்களைச் சொன்னேன்.

"லூசுப்பயலே, நேர்ல வந்தேன்னா என்ன நடக்கும்னு தெரியாது. உன் வண்டி பஞ்சர்னு பார்லயே போட்டுட்டு என் வீட்டுக்கு வந்து என் தம்பி வண்டியை எடுத்துக்கிட்டு போனதுமில்லாம, இப்ப போலீஸ்ல குடுக்கிறேங்கிறயா? நா அப்பயே சொன்னேன், அம்மா இல்ல.. இருந்துட்டு காலையில போடான்னு. போனதுமில்லாமல் ராத்திரி போல லந்து குடுத்துக்கிட்டிருக்கியா? காலையில பஞ்சர் போட்டு வச்சிருக்கேன். ஒழுங்கா மரியாதயா வந்து வண்டிய குடுத்துட்டுப்போயிரு.. வர்ற ஆத்திரத்துக்கு வந்தேன்னா மிதிச்சு நவுட்டிருவேன்.."

.

(சர்வேசன்500 நச்'09 சிறுகதைப்போட்டிக்காக)

.