Tuesday, November 17, 2009

விடைகளற்ற தருணங்கள்

சில வருடங்களுக்கு முன்னால் தென்காசி அருகேயுள்ள புகழ்மிக்க ஒரு உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதன் நிறுவனர் என் வாழ்க்கையில் நான் மிக மதிக்கும் ஒரு மாமனிதர். அவர் ஒரு விபத்தில் அபூர்வத்திலும் அபூர்வமான பிரச்சினையான ஸ்பைனல்கார்ட் பாதிக்கப்பட்டவர் ஆவார். (ஹேராம் படத்தில் அதுல் குல்கர்னி குதிரை விளையாட்டு விபத்தில் இப்படியான உடற்பாதிப்புக்கு ஆளாவார்). அவரது அன்பைப் பெற்ற வகையிலும் நான் ஒரு அதிர்ஷ்டசாலியே.

அங்கே நான் ஏற்றுக்கொண்டிருந்த பணி, அப்போது முழுமையான இயக்கத்தில் இல்லாதிருந்ததால் பெரும்பாலான சமயத்தில் மற்ற பொதுவான வேலைகளைச் செய்துகொண்டிருப்பேன். அங்கே எட்டாம் வகுப்பு வரையிலான ஒரு பள்ளிக்கூடமும் போலியோ மற்றும் இதர நோய்களினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிக் கூடங்களும், பிற வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. தொழிற்கூடங்கள் மட்டுமின்றி பள்ளியிலும் ஊனமுற்ற பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்கிந்தனர். அவர்களில் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் பலர் உள்ளேயே இயங்கிக்கொண்டிருந்த ஒரு இல்லத்தில் தங்கியிருந்தனர்.

பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என ஊனமுற்ற பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள்.

துவக்கத்தில் அவர்களை காணும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் ஓடிச்சென்று உதவுவேன். ஒரு நாள் இதைக்கண்ட நிறுவனர் என்னை அழைத்து ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக்குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.

இப்போது இங்கே சென்னையில் ஓர் அனுபவம். எங்கள் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு அழகிய பெண்குழந்தை ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு 10 வயதிருக்கலாம். அவளது கால்கள் இரண்டும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பெரிய சைஸ் காலிபர்கள் மட்டுமல்லாமல் இரண்டு கைகளிலும் இரண்டு வீல்கள் பொருத்திய பாலன்ஸர்கள் கொண்டு தெருவில் நடைபயிலுவாள். மாலை நேரங்களில் இந்தக்காட்சியைக் காணலாம். நடக்கும் போது ஒவ்வொரு அடியையும் கால்களும், கைகளும் மிகுந்த நடுக்கத்துடனும் சிரமத்துடனும் எடுத்து வைக்கும். அவளது தந்தை மிகுந்த கண்டிப்பான முகத்துடன் ‘உம்.. ஆகட்டும்’ என சுடு சொற்களைச் சொன்னவாறே உடன் நடப்பார்.

இளகிய மனம் கொண்டவர்கள் இந்தக்காட்சியை கண்டுவிட்டு உள்ளுக்குள் அழாமல் தாண்டிச் சென்றுவிடமுடியாது. உண்மையில் பயிற்சி செய்ய அடம்பிடிக்கும் அந்தக்குழந்தையின் எதிர்காலம் கருதியே அந்தத் தந்தை அவ்வாறு செய்துகொண்டிருக்கக்கூடும். இப்படிக் கடும் பயிற்சி மேற்கொள்வதால் அவள் நாளை வெறும் காலிபர்களுடனோ, சிறிய சப்போர்ட்டினுடனோ நடக்க நேரலாம். ஆனால் பயிற்சி இல்லாவிட்டால் அவள் தவழ்ந்து மட்டுமே செல்லக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவாள் என்பது நிச்சயம்.

எனக்கு இவற்றைப் பார்த்துப் பழக்கமிருப்பதால் அவள் என்னைப்பார்க்கும் சமயங்களில் சிறிது சிநேகமாய் புன்னகைத்துவிட்டுச் சென்றுவிடுவேன், அவ்வளவுதான். ஆனாலும் உள்ளுக்குள் ஏராளமான குழப்பங்கள் வந்து அலைக்கழிக்கும். இதே என் குழந்தைக்கோ, உறவினர் குழந்தைகளுக்கோ நேர்ந்தால் நான் எவ்வளவு மனமொடிந்துபோவேன்.? ஏன் இந்தக்குழந்தைகள் தன் பால்யத்தை பிறரைப்போல வாழ இயலாமல் கழிக்கின்றன.? வாழும் காலமுழுதும் இந்தப் போராட்டம் அவர்களுக்கு ஏன்.?

காது கேட்காத, வாய் பேச இயலாதவர்கள் ஒரு மொழியை அறிந்திருக்கவில்லை, அவ்வளவுதான். கண்கள் இல்லாதவர்களுக்கு குரல்களால் ஆனது உலகம். கை, கால்கள் பழுதுபட்டவர்களும் அவர்களைப்போலத்தான். நார்மலான நம்மால் இயலாத காரியங்கள் எத்தனையோ உள்ளன, அதைப்போலவே மற்றுமொரு காரியம் அவர்களால் இயலவில்லை, அவ்வளவுதான். உலகமும், வாழ்க்கையும் அனைவருக்கும் பொதுவானதே..

..என்று அறிவு சொல்கிறது. உணர்வுகளால் முடியவில்லை. என்ன மாதிரியான டிஸைன் இது.?

.

45 comments:

Anonymous said...

அவர்களாக வாழ்க்கையை கற்றுக்கொள்ளட்டும் என்று விடுங்கள்.. உதவி தேவையா என்று கேளுங்கள். வேண்டாவிட்டால் அவர்களே தங்கள் சொந்தக்காலில் நிற்பார்கள்.
இரக்கம் அவர்களது சுயநம்பிக்கையை குலைக்கும்.

ஜீவன் said...

உண்மையை சொன்னால் பதிவை படித்துவிட்டு என்ன கருத்து சொல்லுவது?என்ற
குழப்பபமே ஏற்படுகிறது ..!
பாசத்தை எல்லாம் அதட்டலாக்கி மகளுக்கு நடை பயிற்றுவிக்கும் தந்தை...!
வலி ;;(

///நார்மலான நம்மால் இயலாத காரியங்கள் எத்தனையோ உள்ளன, அதைப்போலவே மற்றுமொரு
காரியம் அவர்களால் இயலவில்லை, அவ்வளவுதான். உலகமும், வாழ்க்கையும்
அனைவருக்கும் பொதுவானதே..///

ம்ம்ம்ம் இப்படி சொல்லி நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்..!
வேறன்ன செய்வது ??

Anonymous said...

//அவளது தந்தை மிகுந்த கண்டிப்பான முகத்துடன் ‘உம்.. ஆகட்டும்’ என சுடு சொற்களைச் சொன்னவாறே உடன் நடப்பார். //

இல்லாவிட்டால் வாழ்க்கையில் அந்தக்குழந்தை என்றென்றும் மற்றவர்களைச்சார்ந்தே இருக்க நேரிடும். நமக்கு மனம் கேட்காது. ஆனால் அதுதான் சரி

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணன் ஜீவன் சொன்னதுபோல குழப்பமே ஏற்படுகின்றது.

மனமுதிர்ச்சியற்ற குழந்தைகளைக் கண்டிருக்கின்றீர்களா? வளரவளர அவர்கள் நமக்கு பெரியவர்களாகத் தெரிவார்கள்.ஆனால் மேலும்மேலும் குழந்தைகளாகிக்கொண்டு போவார்கள். :(

தேவன் மாயம் said...

துவக்கத்தில் அவர்களை காணும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் ஓடிச்சென்று உதவுவேன். ஒரு நாள் இதைக்கண்ட நிறுவனர் என்னை அழைத்து ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். ///


அவர்கள் மீது இரக்கப்படுவதை பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லைதான்!!

தேவன் மாயம் said...

ஆயினும் இளம் குழந்தைப்பருவத்தில் விட்டுவிட்டால் பின்னர் ஊனங்களைச் சரிசெய்வது சிரமம்!!

தராசு said...

விவிலியம் வாசித்திருக்கிறீர்களா,

ஒரு குருடனை இயேசுவிடம் கொண்டு வந்து, இவன் குருடனாகப் பிறந்தது இவன் பாவமோ அல்லது முன்னோர்கள் பாவமோ எனக் கேட்பார்கள். அதற்கு இயேசு, அதெல்லாமில்லை, இறைவனின் கருணை இவனுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான் எனச் சொல்லி அவனுக்கு பார்வையளித்தாராம்.
அப்படித்தான், மனிதருக்குள் நேயம் வளர, தன்னம்பிக்கை வளர இத்தகைய நிகழ்வுகள் அவசியமோ என்னவோ??

முரளிகுமார் பத்மநாபன் said...

இரக்க சுபாவம் கொண்டவர்களுக்கு இதுபோல கேள்விகள் எழுவது சகஜம். ஆனால் உண்மையை சொன்னால் அவை அனைத்திற்கும் பதிலேதுமில்லைதான். அதனால் நாம் என்ன உணர்கிறோமோ அதுவே அதன் பதிலாகிறது.

தத்துபித்து said...

// தென்காசி அருகேயுள்ள புகழ்மிக்க ஒரு உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையமொன்றில்//

ஆ.அ.சே. ச. ?
.
//அவர்கள் மீது இரக்கப்படுவதை பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லைதான்!!
இரக்கம் அவர்களது சுயநம்பிக்கையை குலைக்கும்.
.///
உண்மைதான் .

புதுகைத் தென்றல் said...

எந்த கருத்தையும் சொல்ல முடியாத மனநிலைதான் பதிவை படிச்சதும் ஏற்படுது ஃப்ரெண்ட்.

புதுகைத் தென்றல் said...

சின்ன அம்மிணி சொல்லியிருப்பது இரக்கம் அவர்களது சுயநம்பிக்கையை குலைக்கும். அவர்களையும் சாதாரணமனிதர்களாக பார்க்கும் பக்குவம் நமக்கு வர வேண்டும். அந்த முதிர்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு இருக்கு???

அப்பாவி முரு said...

அவர்கள்,

மாடர்ன் ஆர்ட் வரையும் ஓவியர்களைப் போன்றவர்கள்.

ஒவ்வொரு பார்வைக்கும் ஒவ்வொரு அர்த்தம்/உணர்ச்சி. நாம் நல்ல விதமாய் புரிந்துகொண்ட அர்த்தம்/உணர்ச்சிகளின் மூலம் அவர்களுக்கு தன்நம்பிக்கையை சிறிது, சிறிதாக வலுவாக்கலாம்.

அதுவே அவர்களை நல்ல ஓவியராக்கி வாழ்க்கையை சிறப்பாக கடக்க உதவும்

Vidhoosh said...

உண்மைதான். நேற்று என் பெண்ணை பேருந்து நிறுத்தத்திற்குப் பின்னால் உள்ள ஒரு சாட் கடைக்குக் கூட்டிப் போயிருந்தேன். அவள் பானிபூரியை ருசித்துகொண்டிருக்கும் போது எப்போதும் அவள் ரசித்து சாப்பிடும் அழகையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

நேற்றோ என்னையும் மீறி பேருந்துக்காக காத்திருந்த சிலர் என் கவனத்தைக் கவர்ந்தனர். வாய் பேச முடியாத இளைங்கர்கள் இளைங்கிகள் ஆறு பேர் சைகையிலேயே ஏறத்தாழ கால் மணிநேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருவர் சொல்லியதை மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர் ஒருவரின் கை துண்டானதின் காட்சி அது. அந்தப் பெண்கள் அதிர்ந்து வாயில் கை வைத்து பொத்திக் கொண்டதையும் ஆண்கள் ஓவென்ற ஓர் ஆயாச உணவைக் காட்டியதும், அவர்கள் தன் குறையை குறையாக நினைக்காமல் வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள் என்பதை உணர்த்தியது. நாம் பேச்சால் communicate செய்வதை விட வேகமாக பேசிக் கொண்டார்கள் அவர்கள்.

நானும் அசந்து போன தருணங்கள் இது போன்று நிறைய உண்டுங்க. :)

பகிர்ந்ததற்கு நன்றி.

--வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவைப் படித்தபின் கடைசியில் உங்களின் தலைப்புத்தான் வந்து முன் நிற்கிறது.

விடைகளற்ற தருணங்கள் :((((((((

கை, கால் நன்றாகவே இருந்தாலும் தன் அன்றாடத்தேவைகளுக்காக தினந்தோறும் இரயிலில் காசுக்காக பிச்சை எடுக்கிறேன் பேர்வழி என்று சில குழந்தைகள் படும் பாடு இருக்கி
றதே, இதை எழுதும் போது கூட கண்கள் கலங்குகிறது.

மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷன் படிக்கட்டில், அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கலாம், தலையில் ரத்தக்கசிவுடன் கூடிய கட்டு, மயக்கநிலை போன்ற தூக்கம், அதனைக் காட்டி பரிதாபம் சம்பாதித்து காசு கேட்கும் பெண்.

ஆத்திரம் பொங்கி வந்து கூட, ஒன்றும் செய்யத்தோன்றவில்லை இது போன்ற தருணங்களில்.

நர்சிம் said...

நல்ல பதிவு ஆதி.

Rajeswari said...

என்ன சொல்லவென்று தெரியவில்லை..

நல்ல பதிவு ஆதி சார்

♠ ராஜு ♠ said...

அருமையான பதிவு ..!

விக்னேஷ்வரி said...

மனம் கனக்கிறது உங்கள் பதிவு படித்த பின்.
உங்கள் பதிவிலேயே உள்ளது போல் அவர்கள் மீதான இரக்கம் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்து அவர்களை Dependent ஆக மாற்றிவிடும். அதனால் அவர்களை சக மனிதராக நேசியுங்கள். இரக்கப்பட்டு உதவ முயலாதீர்கள் தேவைப்படும் வரை. அவர்களை புண்படுத்தும் நம் இரக்கப் பார்வை கூட நியாயமானதாகாது..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அம்மிணி (அதைத்தான் நானும் சொல்ல விழைந்திருக்கிறேன்), ஜீவன், அப்துல், தேவன், தராசு, முரளிகுமார், தத்துபித்து (ஆம்), தென்றல், முரு, விதூஷ், அமித்து, நர்சிம், ராஜேஸ்வரி, ராஜு, விக்னேஷ்வரி..

அனைவரின் கருத்துப்பகிர்தலுக்கும் நன்றி.!

pappu said...

என்ன மாதிரியான டிஸைன் இது.?

///////

:|
எனக்கும் தோணும்.ஆனாலும் Defectless system இருக்க முடியாதுல? ஏதாவது ஒரு இடத்துல வீக் இருக்கத் தான செய்யும்.

ஆனா இந்த வார்த்தைகள் அன்பே சிவம்ல இதே மாதிரியான சமயத்தில மாதவன் யூஸ் பண்ணுவாருல?

பாலகுமார் said...

//‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். //

முற்றிலும் உண்மை...

துபாய் ராஜா said...

ஆதி, அமர்சேவா சங்கத்திற்கு நானும் பலமுறை சென்றுள்ளேன். நீங்கள் அங்கு பணிபுரிந்தவர் என்பதால் பல விவரங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் சேவை மற்றும் தேவை பற்றி எல்லோரும் அறிய இன்னும் நிறைய எழுதுங்கள். விருப்பமுள்ளவர்கள் உதவுவார்கள் அல்லவா....

ஈரோடு கதிர் said...

//உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’//

மனதில் சுருக்கென தைத்த வரிகள்....

velji said...

மரணத்தைக் கூட எல்லோருக்கும் பொதுவானது என்ற நியதியுடன் ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த ஊனமும்,அவஸ்தையும்...என்ன மாதிரி டிசைன் இது?

KVR said...

//என்ன மாதிரியான டிஸைன் இது.? //

விடை தெரியாத கேள்வி ஆதி. ஆனால், உடலில் சிறு ஊனம் இருந்தாலும் அதைப் பற்றிச் சிந்திக்காமல் முயற்சிதன் மெய்வருத்த அவர்கள் செய்யும் சாதனைகளுக்கு தலை வணங்குகிறேன்.

ரியாத்தில் என் மனைவி சிறிது காலம் ஒரு பள்ளியில் வேலைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் நீங்கள் குறிப்பிட்டது போல ஊனமுற்றோர்க்கான பிரிவு ஒன்று உண்டு. அதற்கென சிறப்புப் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் & மருத்துவர்களும். அங்கே மருத்துவராக வேலைப் பார்க்கும் பெண்ணுக்கு ஒரு மகன். குறைந்தது 15 வயது இருக்கலாம், உடலளவில் இருந்த வளர்ச்சி மனதளவில் இல்லை. மூன்று வயது குழந்தையாய் மட்டுமே பார்க்க முடியும். அவனுடைய ஒவ்வொரு தேவைக்கும் அந்தத் தாய் அவசியப்பட்டார். ஆனால், தன்னம்பிக்கை இழக்காமல் மகனை உற்சாகமாகப் பார்த்துக்கொள்கிறார்.

அதே பள்ளி சார்ந்த வேறொரு நிகழ்வு. என் மனைவியின் தோழி எந்தப் பள்ளியில் மகனைச் சேர்ப்பது என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போது தான் வேலைப் பார்க்கும் பள்ளியில் சேர்க்கச் சொல்ல என் மனைவி பரிந்துரைக்க (ரியாத்தில் சிறப்பாக செயல்படும் இந்தியப் பள்ளிகளில் இந்தப் பள்ளி முக்கியமானது), “அங்கே வேண்டாம், அங்கே ஊனமான பசங்களெல்லாம் வருவாங்க, அது என் பையன் மனசைப் பாதிக்கும்” என்று சொன்னார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் சிறப்புப்பயிற்சி தனிப்பிரிவாகவே செயல்படுகிறது. இப்படியும் சில/பல மனிதர்கள்.

Vijayashankar said...

கண்ணாடி அணிவதே ஊனம் என்று கருதும் நாளை நான் சந்தித்திருக்கிறேன்! ( சோடா புட்டி என்று பட்டம் வேறு! )

உலகில் மனிதர்கள் எதாவது வகையில் உடலளவிலோ மனதளிவிலோ ஊனம் கொண்டு தான் உள்ளார்கள்.

- விஜயஷங்கர், பெங்களூரு
http://www.vijayashankar.in

மங்களூர் சிவா said...

:(((

அ.மு.செய்யது said...

ஆழ்ந்த சலனத்தையும் நெருடலையும் ஏற்படுத்துகிறது பதிவு.

நல்லதொரு இடுகை !!!!

வலைச்சரம் பாருங்கள்.நீங்களும் இருக்கிறீர்கள் இன்று.

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...

//சில வருடங்களுக்கு முன்னால் தென்காசி அருகேயுள்ள புகழ்மிக்க ஒரு உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். //

கோபாலசமுத்திரம் ஆய்க்குடியிலா

விந்தைமனிதன் said...

பதிலற்ற கேள்விளை எழுப்பி தூங்கவிடாமல் செய்துவிட்டீர்கள்

சுசி said...

அருமையா எழுதி இருக்கீங்க. படித்ததும் மனம் கனத்துப் போச்சு.

அப்படியே என் உறவுக்காரப் பெண் ஒருவரை கண்முன்னே கொண்டு வந்திடுச்சு. அவங்க அப்பா கூட நான் சண்டை கூட போட்டிருக்கேன். இது சம்பந்தமா. அவரும் இதைத்தான் சொன்னார். வேறு வார்த்தைகளால்...

//அறிவு சொல்கிறது. உணர்வுகளால் முடியவில்லை. //

அறிவிலி said...

ஹ்ம்ம்ம்....

அன்புடன் அருணா said...

உங்கள் பதிவுக்கு ஏதோ ஒருவகையில் என் பதிவு பதில் போல் தெரிகிறது......ம்ம்ம் விடைகளற்ற தருணங்கள்தான்..........

Mahesh said...

இம்மாதிரியான விடையற்ற கேள்விகளுக்கு விடையாக (அல்லது விடை போல) இந்து தர்மத்தில் "கர்மா" சொல்லப்படுகிறது. ஆனால் அது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம். மேலைநாடுகளிலும் "கர்மா தியரி" புழக்கத்தில் உள்ளது.

எதுவாக இருந்தாலும் Nothing is perfect... Nature inclusive...

தியாவின் பேனா said...

ஆகா

மணிநரேன் said...

என்ன கூறுவது என தெரியவில்லை..;(

செந்தில் நாதன் said...

//இரக்கம் அவர்களது சுயநம்பிக்கையை குலைக்கும்//

இதுக்கு ஒரு ரீபிட்டு..

நல்ல பதிவு...ஆனா எனக்கும் இந்த டிசைன் பத்தின பதில் தெரியாது!! இங்க US-la physically challenged people எல்லாரயும் மாதிரி தினசரி வேலைகள் செய பல கருவிகள் இருக்கு..முடிஞ்சவர அவங்க சொந்த முயற்சில தான் எல்லாத்தையும் பண்றாங்க...அடுத்தவங்கள நம்பி வாழ்றது இல்ல...நான் ஒரு தடவ உதவ போய் என்ன பல பேர் மேல கீழ பார்த்தாங்க...

ஸ்ரீமதி said...

எல்லாவற்றிலும் உணர்வுகளுக்கே முதலிடம் கொடுக்க பழக்கப்பட்டிருக்கிறோம்... :(((

புன்னகை said...

http://kanavumeippadavaendum.blogspot.com/2008/12/blog-post.html
என்னை வெகுவாக பாதித்த ஒரு சம்பவம். நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்களேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பப்பு, பாலகுமார், துபாய் ராஜா (செய்யவேண்டும் தோழர்), கதிர், வெல்ஜி, கேவிஆர், விஜயஷங்கர், மங்களூர், செய்யது, டாக்டர் (ஆய்குடி அமர் சேவா சங்கம். நிறுவனர் திரு, எஸ். ராமகிருஷ்ணன்), விந்தைமனிதன், அறிவிலி, சுசி, அருணா, மகேஷ் (சரியான இறுதி வரிகள்), தியா, நரேன், செந்தில், ஸ்ரீமதி, புன்னகை..

அனைவரின் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.!

பின்னோக்கி said...

பதிலில்லாத சில கேள்விகளில் இதுவும் ஒன்று

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

நல்ல இடுகை - உதவி கோரப்பட்டாலே உதவ வேண்டும் - தானாகச் சென்று உதவி செய்தால் அவர்கள் வருத்தப்பட வாய்ப்புண்டு - கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று

நல்ல இடுகை நண்பா

நல்வாழ்த்துகள்

+Ve Anthony Muthu said...

மிக நுண்ணிய உணர்வுகளை, கூர்மையுடனும், நுணுக்கத்துடனும், அதே சமயம் சிறப்பாகவும் எழுதியுள்ளீர்கள் சகோதரமே! வாழ்த்துகள்.

Selva Lingam said...

ஐயா ஆதி தாமிரா அவர்களே, என் பெயர் சா.லிங்கம்.அமர்சேவ சங்கத்தைப் பற்றியும் தண்டுவடம் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப் படும் மறுவாழ்வு பயிற்சிகள் பற்றியும் சொல்லி உதவ முடியுமா?
நான் கடந்த 6 வருடங்களாக தண்டுவடம் பாதிக்கப் பட்டு இடுப்புக்கு கீழே செயலற்று படுக்கையிலேயே உள்ளேன். நான் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்துக்கு அருகில்தான் இருக்கிறேன். இருந்தாலும் இந்த மறுவாழ்வு மையத்தைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது பதில் சொல்லி உதவவும். நன்றி. lingambsfnsg@gmail.com
மொபைல்-99521 30530