Thursday, December 31, 2009

சுஜாதாவும், பொன்னியின்செல்வனும்.!

நேற்றே கோலாகலமாக ஆரம்பித்தாயிற்று '33 வது சென்னை புத்தகத்திருவிழா'. சென்ற வருடங்களில் வாங்கிய புத்தகங்களையே இன்னும் வாசித்தபாடில்லை. என் தொல்லையில்லாமல் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன அவை. இருப்பினும் எப்போது கண்காட்சிக்கு சென்றுவருவோம்.. என்ன புத்தகம் வாங்கலாம்.. இவர் சொன்னதை வாங்கலாமா? அவர் சொன்னதை வாங்கலாமா? என்று அதே எண்ணமாக இருக்கிறது. திடீரென நண்பர்களின் புத்தகங்கள் சார்ந்த விருப்பங்கள் எப்படி இருக்கிறது என்று அறிய விரும்பினேன். அப்படியே நம்மைப்போல விருப்பம் கொண்டவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடுமே என்ற எண்ணத்தில் அதையே பதிவாகவும் போட எண்ணினேன்.

மறக்க இயலாத புத்தகங்கள்..
வாங்கவிருக்கும் புத்தகங்கள்..
பிடித்தமான எழுத்தாளர்..
புத்தகம் சார்ந்த அனுபவங்கள்..

என்ற எளிமையான 4 கேள்விகளுடன் மெயில்கள் அனுப்பி பதில் கோரினேன். வழக்கம் போல 5க்கு 2 பதில்களாவது வரும் என்று எண்ணினேன். மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் சுமந்த படி பெரும்பாலான பதில்கள் வந்து சேர்ந்தன. கால அவகாசம் மிகக்குறைவாக (இரண்டே நாட்கள்) இருந்ததால் மிகச்சிலரால் கலந்துகொள்ளமுடியாது போய்விட்டது. எனக்கு இன்னும் பலரையும் கேட்கவேண்டும் என்ற ஆசை இருப்பினும் கட்டுப்படுத்திக்கொண்டேன். தொடர்பதிவுக்கு அழைக்கும்போது ஏற்படும் குழப்பம் போலவேதான் யாரைக்கேட்பது என்ற குழப்பம். வழக்கம் போல ரேண்டமாகவே தேர்வு செய்தேன். பெண்பதிவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பதிவின் சுவாரசியம் மற்றும் நீளம் கருதி நான்கே பதிவுகள் போடுவதாக முடிவு செய்தேன். அதன்படி ஏற்கனவே 4 பதிவுகளில் 16 பிரபல தமிழ்ப்பதிவர்களின் பேட்டிகளை கண்டிருப்பீர்கள்.

எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவது எதனால்? நம் எண்ணங்களை/ சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள.! புரிதல்களுடன் கூடிய நல்வாழ்க்கை வாழத் தேவையான நற்சிந்தனை எதன் தொடர்ச்சியால் எழுகிறது? நிச்சயமாக வாசிப்பு என்று சொல்லிவிடலாம். எங்கிருந்து வாசிக்கத்துவங்குவது? நீச்சல் கற்க தடாலென யாரும் கடலில் குதித்துவிடுவதில்லை. வந்த அத்தனை பதில்களிலும் அந்த ஒற்றுமையைப் பார்க்கமுடிந்தது...

அத்தனை பேரையுமே பால்ய பருவத்திலேயே புத்தகங்கள் பற்றிக்கொண்டுள்ளன. கோகுலம், அம்புலிமாமா, துளிர், பூந்தளிர், வாண்டுமாமா, சிறுவர்மலர்கள், காமிக்ஸ் என ஒவ்வொருவரையும் புத்தகங்கள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன. பின்னர் அவர்கள் அடுத்த ஈர்ப்பாக விகடன், கல்கி, குமுதம் வார இதழ்களையும், கிரைம் நாவல்களையும் கடந்திருக்கின்றனர். அடுத்து கிட்டத்தட்ட அனைவருமே தமிழின் மிகப்பெரிய ஒரு எழுத்தாளுமையின் புயலில் சிக்கித் தவித்தே பின்னர் அடுத்த தளத்தை அடைய முடிந்திருக்கிறது. அது சுஜாதா எனும் புயல். பலரும் அதைக்கடக்கமுடியவில்லை, அந்த சுகத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறார்கள் இன்னும். சிலரே அதன் பின்னும் பரந்து விரிந்திருக்கும் இலக்கியப்பரப்பில் அவரவருக்கான வாசிப்புக்களத்தை தேர்வுசெய்து கொண்டார்கள் அல்லது செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அனைவரின் நெஞ்சிலும் தங்கிவிட்ட சுஜாதாவைப்போலவே இன்னொரு பொதுத்தேர்வாக கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. தலைமுறைகள் கடந்தும் வியாபித்திருக்கும் நாவலைக்காணமுடிகிறது. அத்தனை பிரமிப்பையும், சுகானுபவத்தையும் தருவதாக அமைந்திருப்பது அதன் சிறப்பு.

அதே கேள்விகளுக்கான எனது பதில்களைக்கேட்டால்..

*******************************

பிடித்த புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் குறித்த அனுபவங்கள் (முதல் மற்றும் நான்காவது) கேள்விகளுக்கான பதிலை 'ஒரு நெல்லிமரமும் சில வாடகைப்புத்தகங்களும்..' என்ற எனது பதிவில் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

திட்டமிடும் வழக்கம் இல்லை. கண்காட்சிகளில், புத்தகக்கடைகளில் புத்தகங்களை வேடிக்கை பார்க்கும்போது முன்னமே கேள்விப்பட்டு மனதில் பதிந்துகிடக்கும் புத்தகங்கள் கண்ணில் பட்டால் பட்டென வாங்கிவிடுவதுதான்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

யாரையும் சந்திக்க எண்ணியதில்லை. பலரையும் பல சந்தர்ப்பங்களில் தூரமாய் கண்டுமகிழ்ந்திருக்கிறேன். சிலரிடம் பேசியிருக்கிறேன். மிகச்சிலரிடம் பழகியிருக்கிறேன்.

பிடித்தமான எழுத்தாளர்கள் எனில்.. கலைஞர் மு.கருணாநிதி, சுஜாதா, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், ச.தமிழ்செல்வன்.

*****************************************

படித்திராதவர்களுக்காக..

'புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி'

பேட்டியில் பங்கேற்றவர்கள்..

வெண்பூ
யுவகிருஷ்ணா
பரிசல்காரன்
நிலாரசிகன்
ஜ்யோவ்ராம் சுந்தர்
டாக்டர் புரூனோ
கார்க்கி
கேபிள் சங்கர்
ராமலக்ஷ்மி
அனுஜன்யா
சின்ன அம்மிணி
அதிஷா
அமிர்தவர்ஷினி அம்மா
வித்யா
வடகரை வேலன்
நர்சிம்

..பதில்களின் வடிவில் தாம் விரும்பும் புத்தகங்களை பட்டியலிட்டு, எழுத்தாளர் குறித்த, புத்தகங்கள் குறித்த நினைவுகளை நம்மோடு சுவைபட பகிர்ந்துகொண்ட மேற்குறித்த நண்பர்கள், பின்னூட்டத்தில் தங்கள் ரசனைக்குரிய புத்தகங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட நண்பர்கள் என அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்நன்னேரத்தில் 2 லட்சம் ஹிட்ஸ்களை தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகளுடன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்த்துகள்.!

.

Tuesday, December 29, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - இறுதிப்‍பகுதி

புத்தகங்கள் குறித்த பிரபல பதிவர்கள் பேட்டியின் நான்காவதும் இறுதியுமான பகுதி இது. சுவாரசியமாக தங்கள் அனுபவங்களையும், தாங்கள் ரசித்த, ரசிக்கும் புத்தகங்களைக் குறித்தும் பகிர்ந்துகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எவ்வகையிலேனும் புதிதாக வாசிக்கத்துவங்கியவர்களுக்கு இந்த தொகுப்பு உதவியிருக்குமேயானால் அது என் நோக்கத்திற்கான பரிசு. தொகுப்பு குறித்த என் எண்ணங்களை நாளை விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

காண்க.. பகுதி 1
காண்க.. பகுதி 2
காண்க.. பகுதி 3

*****************************

அமிர்தவர்ஷினி அம்மா (சாரதா)

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

அதென்னவோ வீட்டருகிலும் சரி, பள்ளியிலும் சரி, எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்க நான் மட்டும் சதா சர்வகாலமும் எந்த புத்தகத்தையாவது கையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா கூட இவ படிக்க ஆரம்பிச்சிடுவா என்று அக்காவின் தோழி இன்னமும் சொல்வார்கள். நான் முதன் முதல் தொட்ட புத்தகம் லிப்கோவின் தமிழ் ஆங்கில டிக்‌ஷ்னரி, ஆரம்ப காலகட்டத்தில் மாமா பிரஸ்ஸில் வேலை செய்ததால் புத்தகம் என்று அது ஒன்று மட்டுமே வீட்டில் இருந்தது. அதற்குப்பிறகு வாடகை நூல் நிலையத்தின் மூலமாக பூந்தளிர், ரத்னபாலா, காமிக்ஸ் இப்படி ஆரம்பித்து ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவல்கள் என்று பயணப்பட்டு பள்ளி நூலகத்தின் பாலகுமாரன், சுஜாதாவில் வந்து நின்றது. பிறர் புத்தகங்களைப் படித்திருந்தாலும் ஆதர்சம் பாலகுமாரனும், சுஜாதாவும் தான். பள்ளி நூலகமும், வீட்டருகே இருந்த / இருக்கும் ஈஸ்வரி வாடகை நூலகம் (அலுவலக்ம் அருகே இருந்ததால் கன்னிமரா நூலகம்)தான் நான் அதிகம் சென்ற இடங்கள்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

வலைப்பூவுக்கு வந்த பின்னர்தான் நிறைய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களும் அறிமுகமாயிற்று. எனவே திட்டமிடல் இந்த வருடத்தில் தான் ஆரம்பம். சின்னதா ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். பார்ப்போம் :)

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

பாலகுமாரனை சந்திக்க விரும்பியது உண்டு, காரணம் அவர் புத்தகத்தின் முன்னுரையில் அவரின் வீட்டு முகவரியில் லாயிட்ஸ் ரோடு என்று அச்சடிக்கப்பட்டு இருக்கும். அது எங்கள் வீட்டிலிருந்து ரொம்பவே பக்கம், பக்கம் என்ன பக்கம், ஸ்கூலுக்கு போகும் வரும் வழியே அதுதான்னு வெச்சிக்கோங்களேன்.

ஒருமுறை மாமாவிடம் அவரைப்பார்க்கவேண்டும் என்று சொன்னதிற்கு செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்ட அனுபவமிருப்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. ஆனால் நான் பள்ளி விட்டு வரும் வரை, சில சமயம் காலை நேரங்களில் அவரை என் வீட்டருகே பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடம் விட்டு வந்த

ஒரு மதிய நேரத்தில் அவரை எதிரே பார்க்க நேரிட, சட்டென்று ஒரு குருட்டு தைரியத்தில், சார், நீங்க பாலகுமாரன் தானே, உங்க புக்ஸ்லாம் நான் நெறைய படிப்பேன் சார் என்று சொல்லி, ஒரு நீல நிற டைரியில் அவரின் சாய்வான கையெழுத்தை வாங்கினேன், அவரும் சிரித்துக்கொண்டே கையெழுத்துப்போட்டுவிட்டு

நல்லா படிம்மா, ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு போனார். அன்று சந்தோஷத்தில் சாப்பாடு கூட உள்ளிறங்கவில்லை.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

எனக்கு ஆரம்பகாலத்தில் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி உடன் புத்தகங்களை பகிர்ந்த நண்பன் ஆனந்த் (இப்போது எங்கிருக்கிறாய் ?) என் வாசிப்பனுவத்தை நீட்டிக்கச்செய்து, நிறைய கவிதைகள் எழுதி, ஒரு கவிதை மாதிரி தன் வாழ்நாளை குறுக்கி வாழ்ந்துவிட்டுப்போன தோழி சுதா, சென்ற வருடம் புத்தக கண்காட்சி (ஜனவரி முதல்வாரம்)தான் நாங்கள் கடைசியாக சந்தித்தது.

அதன் பிறகு இருபது நாட்கள்தான் அவள் இந்த உலகத்தில் வாழ்ந்தாள். இப்போது புத்தககண்காட்சி என்று சொல்லும்போதே அவளின் ஞாபகமும் சற்று அதிகமாகவே வந்துவிடுகிறது.

***********************************


வித்யா


1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

பள்ளி நாட்களில் அப்பா வாங்கி வரும் டிங்கிள், கோகுலம் போன்ற புத்தகங்கள் தான் அதிகம் வாசித்தது. விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போது அண்ணா அறிமுகப்படுத்திய காமிக்ஸ்களில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. ஆல்டைம் பேவரிட்டாக இருந்தது/இருப்பது இரும்புக்கை மாயாவி தான். பின்னர் அடுத்த கட்டமாக ராஜேஷ்குமாரை அண்ணாவும், கல்கி, ஷெல்டன் மற்றும் சுஜாதைவை அப்பாவும் அறிமுகப்படுத்தி வைத்தனர். நண்பர்கள் மூலமாக வைரமுத்து. நினைவில் தங்கி விட்ட புத்தகங்கள் எனப் பார்த்தால் சுஜாதாவின் மர்மக் கதைகள் (கொலையுதிர் காலம்), வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், கல்கியின் அலை ஓசை, சிவகாமியின் சபதம், ஷெல்டனின் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ், பிளட்லைன் இன்னும் பல.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

பெரும்பாலும் இல்லை. திட்டமிட்டு வாங்குவது என்பது நண்பர்களின் பரிந்துரை அல்லது ரிவ்யூக்களின் அடிப்படையில் கண்காட்சியில் மட்டுமே நடக்கும். மற்ற தருணங்களில் கண்ணில் பட்டதை கவர்ந்திழுக்கும் தலைப்பால் கொஞ்சம் மேய்ந்துவிட்டு வாங்குவேன். இந்த புத்தகக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான ரஹோத்தமனின் ராஜிவ் கொலை வழக்கு பற்றிய புத்தகமும், சுஜாதாவின் நாவல்களின் தொகுப்பு சிலவும் வாங்கலாம் என்றிருக்கிறேன். மற்றவை அங்கேயே முடிவாகும்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சுஜாதா. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என அவரை அடையாளம் காணும் முன்னரே அவரை சந்தித்து, அவர் கையொப்பமிட்ட கற்றதும் பெற்றதும் புத்தகத்தை பரிசாக வாங்கிவிட்டேன். பள்ளியில் நடந்த அறிவியில் கண்காட்சியை காண வந்திருந்தவர் எங்கள் டிஸ்ப்ளே நன்றாக இருந்ததாக சொல்லி மேடைக்கு அழைத்து புத்தகம் தந்தார் (நால்வருக்கு ஒரு புக். சுழற்சி அடிப்படையில் வைத்துக்கொண்டிருந்தோம். கடைசியாய் வைத்திருந்தவனின் தொடர்பு அற்றுப்போய்விட்டது. புத்தகம் இப்போது இல்லாதது பெரும் வருத்தம்).

4.புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

கல்லூரி, வேலை என்றானபின் வாசிப்பு பழக்கம் பெருமளவிற்கு குறைந்தது. தமிழில் இன்னும் சுஜாதாவை தாண்டி வெளியே வரவில்லை. பா.ரா, ஆதவன் போன்றோரை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நண்பன் ஒருவன் "எத்தனை நாளைக்குத் தான் சுஜாதாவே படிப்ப. கொஞ்சம் நவீன இலக்கிய கதைகளையும் படி" எனக் கூறி ஊமைச்செந்நாயை கையில் கொடுத்தான். ஹூக்கும். இரண்டே கதை. ஒன்னுமே புரியாமல் டரியலாகி "தெய்வமே நான் பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறேன். எலக்கியவியாதி ஆவ வேணாம். பொஸ்தகத்த புடி ராசா" என கையில் திணித்தாயிற்று. நான் ஜெ.மோ வை குறை கூறவில்லை. என் சிற்றறிவுக்கு முடியவில்லை. 2010ல் என் அலமாரியில் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் முடிக்க வேண்டும். நடக்கிறதா என பார்ப்போம்.

****************************************


வடகரை வேலன்1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

படிக்கும் புத்தகங்கள் அந்தந்த வயதிற்கு தகுந்தாற்போல மாறும்.
1. வாஷிங்டனில் திருமணம் -சாவி
2. கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன்
3. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
4. ஆழி சூழ் உலகு - ஜோ.டி. க்ரூஸ்
5. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
6. அளம் - சு தமிழ்ச்செல்வி
7. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் -எம்.ஜி.சுரேஷ்
8. மணல் கடிகை - எம்.கோபால கிருஷ்ணன்
9. என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன்.
10. காடு -‍ ஜெயமோகன்

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

அப்படி வாசிக்கும் பழக்கம் இல்லை. எப்படியும் நல்ல எழுத்தாளர்களைப் பற்றிய செய்தி காதுக்கு வந்து விடும் என்பதால் அதிகம் பிரபலமாகாதவர்களைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம். நல்ல எழுத்து அங்கேதான் கிடைக்கும்.

உ-ம். கவிப் பேரரசு எழுதிய கருவாச்சி காவியத்துடன் என்னால் ஒட்டவே முடியவில்லை.
அதே சமயம் அஞ்சலை நாவல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தமிழில் நான் படித்த நாவல்களில் முதலிடத்தில் இன்றளவும் இருப்பது அதுதான்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

நான் சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் இருவர். வண்ணதாசனும், நாஞ்சில் நாடனும். இருவருமே பாசாங்கற்றவர்கள். ஒன்று விட்ட அண்ணனிடம்(உங்கள் பெரியப்பா மகன்) இருக்கும் ஒரு நேசம் இவர்களுடன் எனக்குக் கிடைத்தது. பாசாங்கற்றவர்கள்.போலவே தங்கள் எழுத்தை எந்தவித சந்தைப் படுத்துதல் மற்றும் விற்பனைத் திறன் இல்
லாமல் வாழ்கின்றவர்கள்.

நான் சந்திக்க விரும்புவது கண்மனி குணசேகரனை.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

உன் சம்பாத்யத்தில் 10% புத்தகங்களுக்காகச் செலவிட வேண்டுமென்ற என் தந்தையின் அறிவுரைதான். புத்தகங்களைப் பார்க்கும்போது ஞாபகம் வரும். சென்னை வரும்போதெல்லம் உடன் வந்தவரை ஆட்டோவில் ஏற்றி மெரினாவிற்கு அனுப்பி விட்டு பழைய புத்தகக் கடைகளில் மேய்வது எனக்குப் பிடிக்கும். ஒரு வகை தொகை இல்லாமல் வாங்குவதும் உண்டு.

**************************************

நர்சிம்1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் மனதோடு தங்கிவிட்ட புத்தகங்கள் என்றே தோன்றுகிறது. காரணம் அந்தக் காலகட்டம் மட்டுமே மனதில் தங்கிவிட்டதாலும் இருக்கலாம், அதன் பின்னர் வந்த காலங்கள் எல்லாம் பொருளாதார, தார
அக்கப்போர்ளுக்கு இடையில் சிக்கிவிட்டதாலும் இருக்கலாம்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

ஒவ்வொருமுறை நல்ல புத்தகங்களைப் பற்றி கேள்விப்படும்பொழுதும் உடனே வாங்க வேண்டும் என்று குறித்து வைத்து உடனே மறந்தும் போய் விடுவது வழக்கம்.

புத்தகத்தை திறந்து ஓரிரண்டு பக்கங்கள் படித்துப் பார்த்து வாங்குவதும் வாங்கியவுடன் அதை முகர்ந்துபார்ப்பதும் வழக்கம்.
இந்த முறை நிறைய லிஸ்டில் இருக்கிறது.. ராஜீவ் மேட்டர்.கிழக்கு பதிப்பகம். வா.மு.கோமு. என ..

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சுஜாதா.. நிறைவேறியது. ஆனால் நான் பார்த்தது அவருக்குத் தெரியாது. படுத்திருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள்.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

ம். இது குறித்து நிறைய சுவாசிப்பு என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். என்றாலும்

பதிவு எழுதுவதற்கு முன்னும் பின்னும் என இரு வகைகளாக வாசிப்பைப் பிரிக்க வேண்டி இருக்கிறது. பதிவு எழுத வருவதற்கு முன்னர் வாசித்த பல புத்தகங்கள் இப்பொழுது மீள்வாசிப்பில் வேறு கோணங்களில் இருக்கிறது. மோக முள்ளை அப்பொழுது வாசிப்பதற்கும் இப்பொழுது வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உணர்கிறேன்.போலவே மரப்பசு.

ரமேஷ் ப்ரேமின் கடுங்காவல் பெருக்கம் என்ற இரண்டு ப்ரெஞ்ச் நாடகங்கள் குறித்த புத்தகம் மனதை பாதித்த ஒன்று

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் சில கதைகளும் நாவல்களும், எப்பொழுது சோர்வாக உணர்ந்தாலும் கண்ணதாசனின் வனவாசம், சா.கந்தசாமியின் சாயாவனம், மயிலை சீனிவேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை போன்றவை மீள் வாசிப்புகளுக்கு சிறந்தவையாக இருக்கின்றன. சாருவின் ராஸலீலாவும் பிடித்த ஒன்று.

சுஜாதாவின் மேகத்தைத் துரத்தியவனில் ஒரு இளைஞன் இன்னொருவர் வீட்டில் தங்கிப் படும் வேதனையை சொல்லிய விதம் மறக்க முடியாத ஒன்று. நிலாநிழல் என்ற கதையிலும் கிரிக்கெட்டைப் பிரதானமாக வைத்து ஆனால் கிரிக்கெட் தவிர விடலைப் பருவத்தின் மாற்றங்கள் என கதை சொல்லும் விதம் போன்றவை மனதில் பதிந்தவை.

இப்பொழுது தீட்டுப்பட்ட நிலா என்ற சுகுணாதிவாகரின் கவிதைத் தொகுப்பும் மனதை பாதித்தது. அதில் உள்ள ஒரு கவிதை..

இறக்கைகள் அறுந்து வீழ்ந்த
தேவதையொருத்தியை
எடுத்து வளர்த்தேன்

நிலவின் சுவர்களில்
எழுதப்பட்ட பாடலைப்
பாடிக்காட்டுவாளெனக்கு

காலை எழுகையில்
என் மார்புக் காம்புகளில்
பனியொத்த முத்தம் ஈவாள்

செடிகளில்
பட்டாம்பூச்சிகளை பறித்துத் தருகிற
அவளைப் படுக்கையில் தள்ளி
வலுக்கட்டாயமாகய் குறியைத்
திணித்தபோதுதான் பார்த்தேன்

யோனியில் முளைத்திருந்தது
குறுவாளொன்று.

நன்றி ஆதி.

(பதிவர்களுக்கு : முதலில் வெகு சாதாரணமாக இரண்டு வரிகளில் பதில் அனுப்பி இருந்தேன்.. வெண்பூவின் பேட்டியைப் பார்த்து டரியல் ஆகி இந்த பதில்களைத் தந்திருக்கிறேன்.. ஏதேனும் எக்ஸ்ட்ராவாக உணர்ந்தால் அதற்கு வெண்பூதான் பொறுப்பு.)

.

புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - ‍பகுதி 3

காண்க.. பகுதி 1
காண்க.. பகுதி 2

முன்குறிப்பு : சென்னை புத்தகக்கண்காட்சி துவங்கவிருக்கும் இவ்வேளையில் புத்தகங்கள் குறித்த வலையுலக நண்பர்களின் ஒரு சிறிய பேட்டியின் தொகுப்புத்தொடர் இது. இது மூன்றாவது பகுதி. இறுதியும் நான்காவதுமான பகுதி இன்று மாலை வெளியாகும்.


*******************************************


ராமலக்ஷ்மி


1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

என்னுடைய வாசிப்பு என்பது பகிர்ந்திடும் அளவுக்கு அத்தனை விசாலமானது அல்ல என்றாலும் 'ஒவ்வொரு காலக் கட்டங்களின் போதும்' எனகிற வார்த்தைகள் தந்த ஈர்ப்பு என்னையும் பேச வைக்கிறது. தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது பைண்டு செய்து தரப்பட்ட சிறுவருக்கான சித்திரக் கதைகள்தான்[Fairy Tales] முதல் வாசிப்பின்பம். அடுத்து அறிமுகமானது எழுபதுகளில் வெளிவந்த அத்தனை சிறுவர் மலர்களும் குறிப்பாக கல்கி நிறுவனம் வெளியிட்ட கோகுலம். அதன் முதல் இதழை தந்தை கையில் தந்த தினம் இன்னும் நினைவில். அவரது வழிகாட்டல் ஒன்பது வயதுக்குமேல் கிடைக்காது போனதென்றாலும், கூட்டுக் குடும்பத்தில் பெரியதந்தையாரால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களும் வாங்கப் பட்டதால் வாசிப்பு தொடர்ந்தது.

இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் ஒரு புதிய மாய உலகத்துக்குள் வைத்திருந்தது அப்போதைய சிறுவர்களை. இரும்புக்கை மாயாவி, ரிப் கெர்பி, மாண்ட்ரேக்-லொதார், வேதாளம்-டயானா [நாங்கள் வளர்த்த பிரிய நாய்க்கு ‘ரெக்ஸ்’ என வேதாளம் கதையில் வரும் பொன்னிற முடிச் சிறுவனின் பெயரை வைதது மகிழ்ந்தது வரையிலாக இருந்தது அதன் தாக்கம்] ஆகிய கதாபாத்திரங்கள் இன்றளவிலும் மறக்க முடியாதவை. அப்புசாமியும் சீதாப்பாட்டியும் பீமாராவ் ரசகுண்டுவுடன் அசத்தினார்கள் சிலகாலம். துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் பிடித்தமானவர்களாய் இருந்ததற்கு கதைகளில் வரும் செந்தமிழ் பெயர்களும் தமிழ்வாணனின் அழகான எழுத்து நடையும் முக்கிய காரணமாக இருந்தன. அப்புறம் எண்பதுகளில் தொடர்களாய் வந்த ஸ்டெல்லா ப்ரூஸ், சுஜாதா, பாலகுமாரனின் ஆரம்பக்கால நாவல்கள் ஆகியவை. பள்ளி காலத்தில் கமல்-ரஜனிக்கு இருந்தது போல சிவசங்கரி-இந்துமதிக்குத் தீவிர ரசிகைகள் இருந்தார்கள் அனல் பறக்கும் விவாதங்கள் செய்தபடி. ஆனால் விதிவிலக்காக சுஜாதா எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார்.. சமீபகாலத்தில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் எஸ்.ரா, நாஞ்சில் நாடன் ஆகியோர்.


2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

பெங்களூர் புத்தகத் திருவிழாவில் குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே ஸ்டால் வைக்கிறார்கள். வாங்க நினைக்கும் எல்லா புத்தகங்களும் கிடைப்பதில்லை. நம் பதிவர்களின் புத்தகங்கள் சிலவற்றை வாங்க ஆவல். அடுத்த கண்காட்சிக்குக் காத்திருக்கிறேன்.

கன்னிங்ஹாம் ரோடில் அமைந்துள்ள ரிலையன்ஸ் டைம் அவுட்டின் புதிய வளாகத்தில் தமிழ் புத்தகங்களுக்கென சிறிய அளவில் தனிப்பிரிவு உள்ளது. அடிக்கடி செல்லும் வழக்கம் உள்ளதால் இங்கு வாங்குவதே அதிகமென்றாகி விட்டது. சமீபத்தில் வாங்கியதில் படித்து ரசித்தவை ‘மாலன் சிறுகதைகள்’ ’சுப்ரமணிய ராஜு கதைகள்’.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

இதெல்லாம் சாத்தியமா என்ன என்கிற நினைப்பில் அப்படிப்பட்ட ஆசை ஏற்பட்டதில்லை:)!

இப்போது சாத்தியமெனும் சூழலில் சந்தர்ப்பம் வாய்க்கையில் வாசித்து வியந்த வலைப்பதிவர் சிலரைச் சந்திக்க ஆவல்:)!

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

எண்ணங்கள் எனில், ஒவ்வொரு காலத்தில் மனதோடு ஒன்றிப் போகும் புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை. ஆனால் சில, காலங்கள் கடந்து முதல் வாசிப்பின்போது ஏற்படுத்திய தாக்கத்துக்கு எள்ளளவும் குறையாமல்..


****************************************


அனுஜன்யா1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

முதலில் வாண்டு மாமா, அம்புலி மாமா, இரும்புக்கை மாயாவி. பிறகு கல்கண்டு; குறிப்பாக துப்பறியும் சங்கர்லால்.

நான் தமிழில் படித்த முதல் நாவலே தமிழின் மிகப்பெரிய சரித்திர நாவலாகிய 'பொன்னியின் செல்வன்' தான். என் அக்காவும் அப்பாவும் 'பழுவேட்டரையர், மதுராந்தகன், அருள்மொழி' என்று மணிக்கணக்கில் சுவாரஸ்யம் குறையாமல் விவாதம் செய்வது பொறுக்காமல் 'இதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்' என்ற வீம்பில் படிக்கத் துவங்கி, என்னை மறந்தேன். அந்தத் தாக்கத்தில் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு கதைகளையும் படித்து முடித்தாலும், பொ.செ. ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை. அலைஓசை பின்பு படித்தாலும் ஒ.கே. என்ற நினைவு மட்டுமே.

இதற்குள் என் அக்காவின் provocation என்னை சுஜாதாவை நோக்கித் திரும்ப வைத்தது. முதலில் படித்தது 'நிர்வாண நகரம்'. அடுத்தடுத்து, 'நைலான் கயிறு, கொலையுதிர்காலம், பிரிவோம் சந்திப்போம், கனவுத் தொழிற்சாலை, காயத்ரி, நடுப்பகல் மரணம், ஏறக்குறைய சொர்க்கம், சொர்கத்தீவு, காகிதச் சங்கிலிகள்' என்று கட்டம் கட்டி, துரத்தி துரத்திப் படித்தேன். அவருடைய அறிவியல் புனைவுகள் என்னை முற்றிலும் வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. பிறகு கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவ்வப்போது கணையாழியிலேயே படிக்கத் தொடங்கினேன்.

அப்படி என்றால் வேறு எதுவுமே படிக்கவில்லையா என்றால், எப்போதோ ஜானகி ராமன் (மரப்பசு, மோகமுள்) படித்தேன். லா.ச.ரா, கி.ரா., ஜெயகாந்தன், வண்ணதாசன், பிரபஞ்சன் இவர்களின் சிறுகதைகளை அவ்வப்போது வெகு ஜனப் பதிரிகைகைகளில் படித்து அவர்களின் வீச்சைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதில் பிரபஞ்சன் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். எஸ்ராவின் தொடர்களை ஆனந்த விகடனில் படித்து அவருக்குப் பெரிய விசிறியானேன். சமீப காலங்களில் படித்த புத்தகங்களில் யாமம், உறுபசி (எஸ்ரா), கருக்கு (பாமா), ஜெமோவின் குறுநாவல்கள் இரண்டு (ஊமைச் செந்நாய், மத்தகம்) போன்றவை மனத்தைக் கவர்ந்தன.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

திட்டம் போட்டெல்லாம் வாங்குவது இல்லை. மும்பையில் ஆ.வி., குமுதம் கிடைப்பதே கஷ்டம். அதனால் இலக்கியப் புத்தகங்கள் சென்னை வந்தால் மட்டுமே வாங்க முடியும். எனக்கு ஆன்-லைன் சமாச்சாரங்களில் அவநம்பிக்கை அதிகம். போன வருடம் (நவம்பர் 2008) வாங்கிய ஏராளமான புத்தகங்களையே இன்னும் படிக்காததால், இப்போதைக்கு எதுவும் வாங்கும் உத்தேசம் இல்லை.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா தான். அவரை நன்கு தெரிந்த நண்பன் அவரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறியும் மறுத்து விட்டேன். நிச்சயமா அடுத்த வாரம் நாமளும் ஒரு கதா பாத்திரமாக வந்துவிடுவோம் என்னும் பயம்/தயக்கம். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் எனக்கு அலுக்காது.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

அனுபவம்னு பெரிசா ஒண்ணும் இல்லை. ஜ்யோவுடன் சென்ற வருடம் (2008) நவம்பரில் நிறைய புத்தகங்கள் வாங்கியது ஒரு மறக்க முடியாத அனுபவம். தி.நகரில் நியூ புக் லேண்ட்ஸ் கடையில் அவர் பொறுமையாக தேர்வு செய்து கொடுத்த புத்தகங்கள் புது வாசனை மாறாமல் இன்னும் என் வீட்டில் காட்சிப் பொருளாக மட்டும் இருக்கின்றன. அது போலவே பரிசல் வண்ணதாசன் கடிதங்கள் புத்தகத்தை அனுப்பியது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சி. வேலன் மும்பை வந்தால் அவர் புத்தகங்கள் பற்றி பேசுவதைக் கேட்பதே ஒரு அலாதியான அனுபவம்.

ஒரு எழுத்தாளருடன் நேரிடையான அனுபவம் என்று பார்த்தால் இந்த முறை சென்னை வந்தபோது, நர்சிம் எனக்கு மட்டும் பிரத்யேகமாக கொடுத்த 'அய்யனார் கம்மா' புத்தகம். முதல் ரேங்க் வாங்கிய ஒரு சிறு குழந்தையின் பெருமிதம் அவர் முகத்தில் பார்த்தது ஒரு தனி பரவசம். அதே போல், அகநாழிகை வாசுவின் முயற்சியில் எனக்குப் பிரியமான நண்பர்களான பா.ராஜாராம், காந்தி, லாவண்யா மற்றும் விநாயக முருகன் இவர்கள் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது மிக மிக உற்சாகம் தந்த நிகழ்வு.


************************************************

சின்ன அம்மிணி

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

சின்னவயதில் பக்கத்து வீட்டில் ஓசியில் அம்மா அப்பா படித்த குமுதம், ஆனந்தவிகடன் தான் நானும் படிக்க ஆரம்பித்தது. அண்ணன் வாங்கி வரும் பாக்கெட் நாவல் படிக்க ஆரம்பித்தேன். பின்னர் என்னைக்கவர்ந்தவர்கள் பாலகுமாரனும் சுஜாதாவும். பின்னாள் பாலகுமாரன் எழுத்து பிடிக்காமல் போய்விட்டதால் அவரை படிப்பதில்லை. இன்றைக்கும் பாலகுமாரனின் பல கதாநாயகிகள்/நாயகர்கள் மனதோடு நெருக்கமே.

ஆண்டவன் வந்தான் என்ற நாவல் படித்திருக்கிறேன். அருமையான பேண்டஸி கதை. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சொந்தமாக வாங்க தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை.

என் தோழியுடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்வாள். அவளுடன் படித்த ஒரு பெண் Pride and Prejudiceல் வரும் Darcy மாதிரி ஒருவனைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக. பல பெண்களுக்கு பிடித்த கதாபாத்திரம் Darcy.

மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்கள்

1. பொன்னியின் செல்வன்.
2. பந்தயப்புறா
3. ரத்தம் ஒரே நிறம்
4. டாவின்சி கோட்
5. Pride and Prejudice
6. பயணிகள் கவனிக்கவும்
7.கண்ணாடி கோபுரங்கள்
8.பதவிக்காக
9. இரும்புக்குதிரைகள்

இவற்றில் பல சொந்தமாக வைத்திருக்கிறேன். மீதி வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

நண்பர்கள் யாராவது பரிந்துரைத்தால் அந்தப்புத்தகங்களை வாங்குவேன். புத்தகவிழாவுக்கு என்னால் போகவியலாத காரணத்தால் என் அண்ணனிடம் சில புத்தகங்கள் சொல்லியிருக்கிறேன்.

1. என் பெயர் ராமசேஷன் - கிழக்குப்பதிப்பகம்னு நினைக்கிறேன். ஆதவன் எழுதியது.
2.நீர்ப்பறவைகளின் தியானம் - சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர்
3. நகுலன் வீட்டில் யாருமில்லை - சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
4. சேத்தன் பகத்தின் 2 states.

இரா. முருகனின் கதைகள் எதுவும் படித்ததில்லை. கிடைத்தால் வாங்கி அனுப்பசொல்லியிருக்கிறேன்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

அப்படி யாரையும் சந்திக்க ஆசைப்பட்டதில்லை. (அவர்கள் பற்றிய பிம்பம் குலைய வாய்ப்பு இருப்பதால்.) நேரில் பார்த்துப்பேசிய ஒரே எழுத்தாளர் சுதேசமித்திரன். ஆனால் அவர் எழுத்தாளராகும் முன்பே பழக்கமானவராதலால் எழுத்தாளர் என்று பழகியது குறைவு.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை கடன் கொடுப்பதுதான் எனக்கு கடினமான விஷயம். வாங்கிக்கொண்டு செல்பவர்கள் நல்லபடியாக வைத்திருப்பார்களா, புத்தகம் திரும்ப வருமா என்ற கவலைதான்.

*******************************************

அதிஷா


1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

சிறுவயதில் படித்த மதனகாமராஜன் கதை புத்தகம் தலைகாணி சைஸில் இருக்கும்,முழுதுமாக ஒரு தேர்வு விடுமுறையில் படித்து முடித்தேன். சுஜாதாவின் 'ஆ' நான் வாசித்த அவருடைய முதல் கதை , நாவல் அல்லது புத்தகம் எல்லாமே. இரண்டு வருடங்களுக்கு முன் படித்த ஓஷோவின் நாரதரின் பக்தி சூத்திரம் என்னை மாற்றிய ஒன்று. என்னுடைய நண்பனின் புத்தகம் என்கிற கர்வத்துடன் எந்த புத்தகத்தையாவது படித்திருக்கிறீர்களா?யுவகிருஷ்ணாவின் விளம்பர உலகம் என் மனதில் அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கிய புத்தகம்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

அப்படி எந்த திட்டங்களையும் வைத்துக் கொண்டு இதுவரை வாங்கியதில்லை. ஆனால் இந்த ஆண்டு என் வாசிப்பு கணிசமாக கூடியிருக்கிறது. தமிழ்மகனின் வெட்டுப்புலி , கிழக்கில் வெளியாகவிருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம் (ராஜிவ் கொலை வழக்கு அல்ல! அதை படித்து விட்டேன்) , சாருவின் கெட்ட வார்த்தை, நாலாயிர திவ்ய பிரபந்தம் , கிரியாவின் தற்கால தமிழ் அகராதி.. இப்போதைக்கு இதுதான் மஸ்ட் வான்டட் புத்தகங்கள்

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சாருநிவேதிதா,ஞானி,பாலகுமாரன் மூவரும் பதின்ம வயதுகளில் இருந்தே என்னுடைய மனம் கவர்ந்தவர்கள். சாரு, ஞானி இருவருடனும் இப்போதும் எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து நட்பு பாராட்டும் அளவுக்கு நெருக்கம் உண்டாகியிருக்கிறது. பாலகுமாரனை சில கூட்டங்களில் சந்திக்க நேர்ந்தாலும் பேச முடியவில்லை. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் எப்போதும் கலைஞர்தான். அவரை நிச்சயம் 2010ல் சந்தித்து விடுவேன்.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

நான் வளர்ந்தததே புத்தக கடையின் அடுக்குகளுக்கு நடுவில்தான். என் மாமா பழைய புத்தக கடை வைத்திருந்தார். என் சித்திக்கு கோவையின் முக்கியமான புத்தக கடையில் வேலை. சிறு வயது முதலே என்னுடைய பெரும்பாலான நேரம் புத்தக கடைகளின் பலவித புத்தகங்களுக்கு இடையேதான்.பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியிலும் புத்தக கடையில் பணியாற்றியிருக்கிறேன். இதனால் இதுதான் என்றில்லாமல் சிவ் கேராவின் யூ கேன் வின் தொடங்கி ஆர்.எஸ்.தத் என்பவருடைய உடற்கல்வி முறையும் பயிற்சியும் கூட படித்திருக்கிறேன். வளர்ந்த பின்னும் புத்தக கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் நான்கு வருடம் பணியாற்ற நேர்ந்தது. அப்போது படித்த வரிவிதிப்பு தொடர்பான வினோத் சிங்கானியாவின் புத்தகங்கள் கூட மறக்க முடியாது. மாமாவின் பழைய புத்தக கடையில் படித்த பூந்தளிரும் ராணி காமிக்ஸ்களும் பழைய வாரமலரும் சிறுவர் மலரும் அழியாத நினைவுகள்.

Monday, December 28, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 2

காண்க பகுதி-1.

முன்குறிப்பு : அன்பு நண்பர்களே.. இந்தத்தொகுப்பு இன்னும் 2 பகுதிகள்(அதாவது மொத்தம் 4) இன்றும் நாளையும் வெளியாகலாம். பின்னூட்டமிடும் நண்பர்கள் அவர்களால் மறக்க இயலாத புத்தகங்களை பகிர்ந்துகொண்டால் அவற்றை இறுதிப்பாகத்தில் தனியாக நோட் செய்துவிடுகிறேன். அது புதிதாக வாசிக்கத்துவங்கியவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். நன்றி.

************************************

ஜ்யோவ்ராம் சுந்தர்


1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

அப்படி நிறைய நிறைய புத்தகங்கள். ஒரு சில மட்டும் இங்கே : பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள், வண்ணதாசனின் தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், வண்ணநிலவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு, சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி, நகுலனின் வாக்குமூலம், சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் (1990களில் வந்த முழுத் தொகுதி), Ayn Randன் The Fountain Head, புதுமைப் பித்தனின் காஞ்சனை, குபராவின் நூருன்னிஸா (அ) விடியுமா, விக்ரமாதித்யனின் பல கவிதைத் , தொகுதிகள், நாகார்ஜுனன் எழுதிய 'கலாச்சாரம், அ கலாச்சாரம், எதிர் கலாச்சாரம்' ... ம்ம்ம் இன்னும் நிறைய நிறைய.!

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

பொதுவாக எழுத்தாளர் சார்ந்தே புத்தகங்களைத் தேர்வு செய்பவன் நான். நண்பர்களின் சிபாரிசின் பேரிலும், புத்தக மதிப்புரைகள் காரணமாகவும் சில புத்தகங்களை வாங்க வேண்டுமென்று முன் தீர்மானித்துக் கொள்வேன். ஆனாலும், பல புத்தகங்களை அங்கே பார்க்கும்போதே வாங்குவது வழக்கம். இந்த வருடம் குறிப்பாக வா மு கோமுவின் சாந்தாமணியின் காதல்கள், சாருவின் சில புத்தகங்கள், தமிழினி வெளியீடாக வரும் ஜெமோவின் புனைவுத் தொகுதியொன்று, அ மார்க்ஸ், ஃபிரான்ஸிஸ் கிருபா போன்றோர் எழுதியிருக்கும் குடி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பொன்று, கோபிகிருஷ்ணனின் முழுத் தொகுதி (வெளியாகியிருந்தால்), மற்றும் இன்னும் சில.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சின்ன வயதில் பாலகுமாரனைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறேன். சென்னை பெரம்பூர் - செம்பியத்தில் இருக்கும் சிம்சன் நிறுவனத்தில் டாஃபேயில் வேலை செய்து கொண்டிருந்தார் பாலகுமாரன். என்னுடைய அப்பா வேலை செய்ததும் அதற்கு முன் இருக்கும் சிம்சன் - ஷார்ட்லோவில். அப்பாவைப் பார்க்கப் போவது போல் செக்யூரிட்டியில் அனுமதி வாங்கிக் கொண்டு சைக்கிளை அங்கிருக்கும் ஒரு பூங்கா புல் வெளியில் நிறுத்திவிட்டுக் காத்திருப்பேன். பாலகுமாரன் ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்தவுடன் ஒரு திருப்தி. அப்போது எனக்கு 12 வயதிருக்கலாம். எந்த எழுத்தாளரையும் சந்திக்க வேண்டுமென்று முனைந்தது கிடையாது. சுந்தர ராமசாமியைப் பார்க்க காகங்கள் கூட்டத்திற்கு நாகர்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் போய்ப் பேசியது கிடையாது. மனதிற்குப் பிடித்த பல எழுத்தாளர்களைப் பார்த்திருந்தாலும், அவர்களுடன் நேர் அறிமுகம் வைத்துக் கொண்டதில்லை.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

புத்தகங்களைப் படித்த அனுபவங்களா அல்லது புத்தகங்களைப் பற்றிய நினைவுகளா என்ற குழப்பமேற்படுகிறது. அனுபவமென்றால் மிகச் சிறிய வயதில் (6 அல்லது 7 வயதில்) மாதவரம் கிளை நூலகத்தில் அமர்ந்து தினசரிகளையும் அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற பத்திரிகைகளைப் படித்தது நினைவிருக்கிறது. 10-11 வயதில் 5 ரூபாய் கட்டி அதே நூலகத்தில் உறுப்பினராகி, தமிழ்வாணன் (சங்கர்லால் மேஜை மேல் காலைத் தூக்கிப் போட்டு அமர்ந்தபடி ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தொலைபேசி மணி டிரிங் டிரிங் என அடித்தது!), பிறகு சுஜாதா பாலகுமாரன் என வாசிப்பைத் தொடர்ந்தது நினைவிருக்கிறது. 19-20 வயதிற்குப் பின்னர் சிறுபத்திரிகை உலகமும், குமார்ஜி என்ற நண்பரின் மூலம் நிறைய புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. என்னுடைய 21-22 வயதில் வெறி கொண்டு நிறைய புத்தகங்களைப் படித்ததும், அது குறித்து குமார்ஜி, பா ராஜாராம், தெய்வா போன்ற நண்பர்களுக்கு முழ நீளத்திற்குக் கடிதங்கள் எழுதியதும்... ஆஹா... அப்போதெல்லாம் விடுமுறை தினமென்றால் விழுந்து கிடந்து படித்துக் கொண்டிருப்பேன். இப்போது தொடர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் படிப்பதற்குக்கூட உடம்பு வணங்க மாட்டேன் என்கிறது :(--

*****************************************

டாக்டர் புரூனோ1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

பெரும்பாலும் பாடபுத்தகங்களே இந்த பட்டியலில் நினைவிற்கு வருகின்றன. அவற்றின் பட்டியலை எழுதினால் உங்களுக்கு ரசிக்காதே !!

அது தவிர என்று பார்த்தால் இரும்பு குதிரைகள். நான் ஊர் ஊராக சுற்ற வேண்டிய ஒரு வேலையில் இருந்த காலகட்டத்தில், பல ஊர், பலவகைப்பட்ட மக்களூடன் சேர்ந்து பணி புரியும் ஒரு வேலையில் இருந்த நேரம், சென்னையிலிருந்து மதுரைக்கு வைகை விரைவு வண்டியில் செல்லும் போது வாசித்தது. பல வரிகள் அப்படியே மனதில் தங்கியதற்கு எனது பணி சூழல் காரணமாக இருக்கலாம். அந்த புத்தகத்திற்கு மாலன் எழுதிய முன்னுரை காவியம் !!

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

ஆம். சில நேரங்களில் வார இதழ்களில் வரும் தொடர்கள் புத்தகமாக வருகிறதா என்று காத்திருந்து வாங்குவேன். சுமார் 14 வருடம் காத்திருந்து வாங்கியது காந்தளூர் வசந்த குமாரன் கதை. இந்த முறை, அகம் புறம் அந்தப்புறம். புத்தக விழாவிற்கு பிறகு வெளிவரும் பெரியாரின் சிந்தனைகள்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

எந்த எழுத்தாளரையும் சந்திக்க வேண்டும் என்பதை எனது லட்சியம் என்று இருந்தது கிடையாது!! எழுத்துக்களின் மூலம் சந்திப்பது நடந்து கொண்டு தானே இருக்கிறது

ஆதர்ச எழுத்தாளர் என்று ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. கேனாங், ராபின்ஸ் என்று பெரிய பட்டியலே வரும். தமிழில் நான் அதிகம் வாசித்தது என்றால் சுபா, இந்திரா சௌந்திரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா தான். இவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் சேத்தன் பகத் போன்றவர்களை விட அதிகம் விற்கக்கூடும் என்பது எனது கருத்து.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

இங்கும் பாட புத்தகங்களே முதலில் வருகின்றன :):) துறை சார் புத்தகங்களை வைத்து நீங்கள் இந்த கேள்விகளை கேட்க வில்லை என்றே நினைக்கிறேன். அதனால் விரிவாக பதிலளிக்க முடியவில்லை. ஒரு வேளை துறை சார் புத்தகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றால் கூறுங்கள். விரிவான பதில் கூறுகிறேன் :) :)

************************************

கார்க்கி1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

நான் ஒரு வெண்மேகம் (ஓஷோ), 16 வயதில்..
சிற்பியே உன்னை செதுக்குகிறேன் (வைரமுத்து), 17 வயதில்..
நட்புக்காலம் (அறிவுமதி), 20 வயதில்..
மோகமுள் (தி.ஜா), 21 வயதில்..
வெண்ணிற இரவுகள் (தஸ்தாயெவ்ஸ்கி), 22 வயதில்..
நான்..நீ..காதல் (கார்க்கி..ஹிஹிஹி. இன்னும் வெளிவரவில்லை), 23 வயதில்..
The alchemist (paulo cohelo), 25 வயதில்..
அய்யனார் கம்மா (நர்சிம்), 26 வயதில்..

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

உலக இலக்கியங்களை தேடித்தேடி வாங்குவேன். இந்த வருடம் அதிகம் வாங்கும் ஆவலில்லை. ஏனென்றும் தெரியவில்லை.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

முகில். ஆம் லொள்ளு தர்பார் முகில்தான். இன்னும் நிறைவேறவில்லை. என் ஆதர்ச எழுத்தாளாராக சுஜாதாவை நினைத்துக் கொண்டுதான் பதிவெழுதவே வந்தேன். இப்போது அவரும் இல்லை :))

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

கார்க்கியின் (அந்த கார்க்கிப்பா) வாழ்க்கை வரலாறு. ஆறு வயதிலே சாக வேண்டியவர். தப்பித்து 68 வயது வரை வாழ்ந்தார். அவர் வாழ்வில் சந்தோஷம் என்பது போன்ற நிகழ்வுகளே கிடையாது. ஆனால் அவர் வாழ்க்கையை அவர் முழுமையாய் உணர்ந்திருக்க கூடும். லைஃப் கஷ்டம்டா என்றோ, போரடிக்குது மச்சி என்றோ யாராவ்து சொன்னால் இவர் வாழ்க்கை வரலாற்றை படிக்கட்டும். என் ராயல் சல்யூட் இவருக்கும் சேவுக்கும் மட்டும்தான். ஒன்றும் புரியாத வயதில் அவர் பேர் வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக படித்தேன். இன்னும் படித்துக் கொண்டேயிருக்கிறேன். என் தந்தை எனக்களித்த மிகப் பெரிய சொத்து, என் பெயர்.

***********************************

கேபிள் சங்கர் (பி. சங்கர நாராயண்)1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே என் அம்மா தான். ஆபீஸிலிருந்து வரும் போதே சர்குலேஷனில் வரும் குமுதம், விகடன், கல்கி என்று ஆரம்பித்த பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாய் முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா, ரத்னபாலா என்று வளர்ந்து ஒரு கட்டத்தில் சுஜாதாவை படிக்க ஆரம்பித்ததும் அப்படியே ஸ்டென் ஆகி.. பாலகுமாரன், சுபா, ராஜேஷ்குமார், பிகேபி என்று படிக்க ஆரம்பித்து, மெல்ல ஆங்கிலத்துக்கு தாவி, ஜெப்ரி ஆர்ச்சர்ரையும், இர்வின் வாலசையும், அர்தர் ஹெய்லி, எரிக் சீகலையும், ஐயன் ராண்டை, என்று ஓடி, இப்போதைய சேட்டன் பகத் வரைக்கும் படிப்பது முடியவில்லை. தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

அப்படியெல்லாம் முன் கூட்டியே முடிவு செய்து கொள்வதில்லை. ரேண்டமாய் ஒரு பார்வை பார்த்து பிடித்திருந்தால் கையிலிருக்கும் பட்ஜெட்டை பொறுத்து வாங்குவதுதான். ஆனால் இம்முறை வ.மு.கோமுவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு அவரது கள்ளியை ஏற்கனவே படித்து பிடித்து போனதால் அவரது சாந்தாமணியும், இன்ன பிற காதல் கதைகளை வாங்க ஆவலாய் உள்ளேன்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

நிறைய பேருடைய அனுபவம் போல் எழுத்தாளர்களை பற்றி எந்த விதமான பெரிய எக்ஸ்பக்டேஷனை வைத்து கொள்ள விரும்பமாட்டேன். திரைத்துறையில் உள்ளதால் பெரிய நடிகர்களை, இயக்குனர்களை கூடவே இருந்து பார்ப்பதால் அவர்களின் ப்ளஸ், மைனஸ் எலலாம் தெரியுமாதலால் பிரம்மிப்பு இருக்காது. அப்படி சந்தித்தவர்களில் சுஜாதா, பாலகுமாரன், சாரு, எஸ்.ரா, வா.மு.கோமு இதில் பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்து கொண்டிருந்த காலத்தில் ஓரளவுக்கு நட்பு இருந்தது. பழகிய பின்பு எழுத்தும் , அவரும் வேறு என்று புரிந்தது. என்றைக்கும் எனக்கு, தமிழ் இலக்கியத்தை அறிமுக படுத்திய சுஜாதா ஒருவரே ஆதர்ச எழுத்தாளர்..

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

ஒரு முறை முத்து காமிக்ஸை சயன்ஸ் புத்தகத்தின் நடுவில் வைத்து படித்து மாட்டிக் கொண்டு உதை வாங்கியதும். செலவுக்கு கிடைக்கும் காசையெல்லாம் சேர்த்துவைத்து புத்தகப்பித்தனின் குமரி பதிப்பகம் வெளியீடும் சுஜாதாவின் அத்தனை புத்தகங்களையும் திருட்டு தனமாய் வாங்கி ஒளித்து வைத்து படித்தது. பின்னாளில் ஒளித்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்துவிட்டு என் அப்பா இனிமே ஒளிக்காம படி.. என்றதும். இன்றளவில் என்னால் மறக்க முடியாத அனுபவம். நடுவே பத்தாவது படிக்கும் போது ஸ்கூலில் கூட படிக்கும் பெண்ணிற்கு சுஜாதாவை பிடிக்கும் ஆனால் வீட்டில் படிக்க முடியாது என்றதனால், வீட்டிலிருந்து தினமும் புத்தகத்தை எடுத்து போய் அவளுக்கு கொடுத்ததையும் அதன்பின்பு நடந்த சம்பவங்களையும் மறக்கவே முடியாது.


காண்க பகுதி-3.
காண்க.. பகுதி 4 (இறுதி)

.

Sunday, December 27, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 1 (300வது பதிவு)

சில புதிய நண்பர்கள் சில நேரங்களில் நான் எந்த புத்தகங்களில் இருந்து வாசிப்பைத் துவங்குவது? நீங்கள் ஏதாவது சிபாரிசு பண்ணுங்களேன் என்று கேட்பதுண்டு. இது ஆகக்கடினமான கேள்விகளில் ஒன்று. மனிதனின் அடிப்படைத் தேவைகள் தவிர்த்து வாழ்க்கையை முழுமையாக வாழ அடுத்த பிரதான தேவையாக இருப்பது கதைகள் என்று நான் நினைக்கிறேன். மொத்த தேவையையும் அனுபவம் மூலமாக மனிதனால் தெரிந்துகொண்டுவிட முடிவதில்லை. ஆகவே கதைகளின் மூலமாகவே அனுபவங்களைப் பெறவேண்டியதிருக்கிறது. அது மிக சுவாரசியமான ஒன்றாகவுமிருக்கிறது. உயிர்ப்பான கலைகள் பெரும்பாலும் கதைகளையே சொல்கின்றன. இருப்பினும் நமக்கு கதை சொல்ல வந்த புத்தகங்களே அந்தப்பணியைச் சிறப்பாகச் செய்யும் ஒரு அற்புத ஊடகம் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அது இதுவென நோக்கமற்றுத் துவங்கும் வாசிப்பு ஒரு கட்டத்தில் நம்மை நமது ரசனை நோக்கி கொண்டு செல்கிறது. அதன் பின் விஷயங்களாகட்டும், வடிவங்களாகட்டும் நமக்குத் தேவையானதைத் தேடிப்பெறுகிறோம். அவ்வாறே ஒவ்வொருவரும் தனக்கான புத்தகங்களை தேடிச்செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன்.

இருப்பினும், சென்னை புத்தகத்திருவிழா கோலாகலமாக தொடங்கவிருக்கும் இவ்வேளையில் நண்பர்களிடம் புத்தகங்கள் குறித்து சில கேள்விகள் கேட்டிருந்தேன். அவர்களையும், அவர்கள் படிக்கும் புத்தகங்களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்கள் தந்த பதிலை அனுமதியுடன் இங்கே தருகிறேன். நண்பர்களுக்கு நன்றி.!

-அன்புடன் ஆதிமூலகிருஷ்ணன்.

****************************************

வெண்பூ (வெங்கட்)
1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா? ?

சிறுவயதில் குமுதம், விகடனோடு என் வாசிப்பு முடிந்துவிட்டது. பதின்ம வயதுகளில் என் உறவினர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட துப்பறியும் கதைகள்தான் (ராஜேஷ்குமார், சுபா & பிகேபி) என் உலகம். 2004ம் வருடம் ஹைதைக்கு சென்ற பிறகு, ஹாஸ்டலில் பொழுது போக்க ஆங்கில புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தது என் வாசிப்பனுபவத்தில் ஒரு டர்னிங் பாய்ண்ட். தமிழில் துப்பறியும் கதைகளுக்கு வெளியே தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தது, பதிவுலகிற்கு வந்த பிறகே. அதற்காக பதிவுலகிற்கு ஒரு பெரிய நன்றி.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

ஒரு சில புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடி படிப்பதும் பார்ப்பதும் உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் கடைக்கு (அ) இணைய புத்தக விற்பனை தளங்களுக்கு சின்ன விசிட் அடிக்கச் சென்று அப்படியே வாங்குவதுதான் அதிகம். அதனாலேயே அந்த விசிட்களை தவிர்க்கின்ற அளவுக்கு அடிக்ட். இந்த விழாவில் கண்டிப்பாக வாங்கப்போகும் புத்தகங்கள்:

1. கல்கியின் பொன்னியின் செல்வன்

2. இரா.முருகவேள் மொழிபெயர்த்துள்ள விடியல் பதிப்பகத்தின் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்"

3. ரஹோத்தமன் எழுதிய கிழக்கு வெளியீடான "ராஜிவ்காந்தி படுகொலை வழக்கு"

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சிறு வயதுகளில் நான் படிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு.

ஆனால் எழுத்தாளர் தன் எழுத்துகளின் மூலம் கட்டமைக்கும் பிம்பத்திற்கும் உண்மைக்கும் தொலைவு பெரும்பாலும் அதிகம் என்பது புரிந்தபின் இப்போதெல்லாம் ஆசைப்படுவதில்லை.

ஆதர்ச எழுத்தாளர் என்று யாரும் இல்லை. சுவாரசியமாக எழுதும் அனைவரையும் பிடிக்கும், வலையுலக எழுத்தாளர்கள் உட்பட.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

சமீபத்தில் படித்த பொன்னியின் செல்வன். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுடன் கற்பனையைக் கலந்து கொஞ்சமும் சுவாரசியம் குன்றாமல் 2500 பக்கங்களுக்கு ஒரு கதையை தமிழில் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.மற்றபடி மறக்கவியலாத நினைவு என்பது விகடன் இதழில் என் முதல் சிறுகதை வந்ததை சொல்லலாம்.

*******************************************

யுவகிருஷ்ணா (லக்கிலுக்)


1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

‘மிட்டாய் பாப்பா,' ‘பாட்டனார் வீட்டில்' போன்ற வாண்டுமாமா ரக புத்தகங்கள் என் சிறுவயதில் வாசிக்க அப்பாவால் வற்புறுத்தப்பட்டு திணிக்கப்பட்டது. இருபது வருடங்கள் கழிந்தும் அப்புத்தகங்கள் என் நினைவடுக்குகளில் கல்வெட்டுகளாய் பதிந்துப் போயிருக்கின்றன. பின்னர் நானாக முயற்சித்து வாசித்த காமிக்ஸ் புத்தகங்கள். செவ்விந்தியர்களும், மாயாவிகளும் இன்னமும் என் கனவுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். வயசுக்கு வந்தபிறகு எல்லோரையும் போல குமுதமும், ஆனந்தவிகடனுமே துணை.

2001 அல்லது 2002 ஆக இருக்கலாம். ஒரு நண்பர் மூலமாக ‘எக்சிஸ்டென்ஷியலிஸமும், பேன்சி பனியனும்' கிடைத்தது. இலக்கிய வாசிப்பு மீது லேசான போதை ஏற்படுத்திய புத்தகம். அதைத் தொடர்ந்தே சாரு எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றாக தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கினேன். சாருவுக்கு முன்பாகவே ஜெயமோகனின் அறிமுகம் அப்பா மூலமாக கிடைத்தது. ரப்பரிலிருந்து அப்பா ஜெயமோகன் ரசிகர். ஆனாலும் சாரு லெவலுக்கு ஜெமோவால் என்னைக் கவர முடியவில்லை. சாரு புதுமைப்பித்தனை பிடிக்காது என்ற சொன்னபிறகே புதுமைப்பித்தனை வாசித்தேன். அவர் யாரையெல்லாம் பிடிக்காது என்று சொல்கிறாரோ அவர்களையும் தேடி வாசிப்பது கூடுதல் சுவாரஸ்யம்.

மனதோடு தங்கிவிட்ட நூல் என்று குறிப்பிட வேண்டுமானால் உயிர்மை ஆரம்ப காலத்தில் வெளியிட்ட ‘ஜெயமோகனின் குறுநாவல்களை' குறிப்பிடலாம். கிளிக்காலம், டார்த்தீனியம் என்று ஜெமோவின் மாஸ்டர் பீஸ் கதைகளை கொண்ட நூல் அது.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

எந்தப் புத்தகத்தையுமே புரட்டிப் பார்த்து பிடித்திருந்தால் மட்டுமே வாங்குவது வழக்கம். முன்கூட்டிய திட்டமிடுதல் எதுவும் இதுவரை எந்த விஷயத்திலும் என்
வாழ்க்கையில் இருந்ததில்லை.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

'சாரு'வை ஆதர்ச எழுத்தாளர் என்று சொல்லமாட்டேன். அவர் கடவுள். சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் ஒரு சிலரே. ராஜூமுருகன். அவரை ஓரிரு சந்தர்ப்பங்களில் சந்தித்துவிட்டேன். குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனை சந்திக்க வேண்டும் என்று ஆவல்.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

பாராவின் புத்தகங்கள் என் எழுத்தின் மீது வன்முறையாக ஆதிக்கம் செலுத்துகின்றன. நான்-பிக்ஸனுக்கு அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சொல்வேன். சிக்கலான அரசியல் விவகாரங்களை எளிமையான எழுத்துகளில் வெளிபடுத்தும் அவரது பாணி அடுத்த தலைமுறை வரை தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அவர் எழுதிய ‘என் பெயர் எஸ்கோபர்' என்ற நூலின் பயன்படுத்திய எழுத்து தொழில்நுட்பத்தையே நான் அப்பட்டமாக காப்பி அடித்து வருகிறேன். - இது எண்ணங்கள் கேட்டகிரியில் வரும்.

நினைவுகள்/அனுபவங்கள் எதுவும் நினைவுக்கு வந்து தொலையமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது :-(

********************************************

பரிசல்காரன் (கே.பி.கிருஷ்ணகுமார்)1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

பலமுறை பல இடங்களில் இதுபற்றிச் சொல்லியிருக்கிறேன். சென்றமுறை அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில் பேசும்போது கூட.... (ஐயையோ, அடிக்க வராதீங்க)

கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ மற்றும் கவிதைகள்

ஆதவனின் என் பெயர் ராமசேஷன்

இன்னொரு புத்தகம்: லிஃப்கோவின் ஆங்கில-தமிழ் அகராதி

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

வருடா வருடம் நடக்கும்போதும் போக ஆசை. டிசம்பர்தான் எனக்கு இங்கே பிஸியென்பதால் வரமுடிவதில்லை.

அப்படி வருவதாயின் உயிர்மையின் புதிய புத்தகங்களை அலசி வாங்க ஆசை. அப்புறம் நம் பதிவுலக நண்பர்களின் புத்தகங்களை, புத்தக ஸ்டால்களில் பார்க்க (வாங்கவும்தான்) ஆசை. அந்தப் பரவசமே தனி. இதை பாலபாரதியின் புத்தகம் வந்தபோது ஈரோடு திருவிழாவிலும், லக்கியின் புத்தகம் வந்தபோது திருப்பூரிலும் உணர்ந்திருக்கிறேன். இப்போது நர்சிம்.

அப்புறம் நகுலன் கவிதைகள் முழுத்தொகுப்பு.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

எழுதும் எல்லாரிடமும் ஏதாவதொன்றைக் கற்றுக் கொண்டே வருகிறேன். சந்திக்க விரும்பிய எழுத்தாளரென்று ஒருவர் இருந்தார். சந்திக்கவில்லை. இனியும் சந்திக்க இயலாது. :-( அவர்தான் என் ஆதர்ச எழுத்தாளர். அவரை ஆதர்ச எழுத்தாளராய் ஏற்றுக் கொள்ள அவரது எழுத்து மட்டுமின்றி அவர் குடும்பம், எழுத்து, தன் பணி என எல்லாவற்றையும் வெகு நேர்த்தியாய்க் கையாண்டதும் ஒரு காரணம்.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

புத்தகங்கள் மீதான காதல் தீராக்காதலாகவே இருக்கிறது. சில புத்தகங்களை வாங்க நெடுநாளாகிறது. எளிதில் கிடைப்பதில்லை. அப்படி ஒரு புத்தகம் ’கோட்ஸ்டாண்ட் கவிதைகள்’ உட்பட நகுலனின் கவிதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு. இரண்டு வருடங்களாக பல நண்பர்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். சென்னை சென்றிருந்தபோது ஒரு நண்பரை இந்தப் புத்தகம் தேடியலைய அழைத்தபோது ‘அடுத்த வாரம் வந்து சேரும்’ என்று ரயிலேற்றினார். ம்ஹூம். சென்ற வாரம் ஈரோடு வந்திருந்த நண்பரும் பதிப்பாளருமான அகநாழிகை வாசுதேவன் வாங்கி அனுப்புவதாய் என் தலைமேலடித்து சத்தியம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். பார்ப்போம்.

*****************************************************

நிலாரசிகன்

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

பால்ய வயதில்:

முதன் முதலில் நான் வாசித்த கதைப்புத்தகம் "சிறுவர்மலர்". எங்கள் வீட்டில் அப்போது செய்தித்தாள் வாங்குவதில்லை. பக்கத்துவீட்டிற்கு வரும் சிறுவர்மலரை படிக்க எனக்கும் என் அண்ணனுக்கும் பெரிய போட்டியே நடக்கும்.வெள்ளிக்கிழமை என்றாலே சிறுவர்மலரும் "ஒலியும் ஒளியும்" தான் அப்போதைய பேரானந்தங்கள்.

பதின்ம வயதில்:

இரும்புக்கை மாயாவியும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்து எங்கள்வீட்டிற்கு வந்த ஒரு ருஷிய காமிக்ஸும். பெயர் நினைவில் இல்லை.

கல்லூரிக்காலங்களில்:

தீவிர இலக்கிய வாசிப்பு அறிமுகமானது கல்லூரியில்தான். ஜெயகாந்தன்,கல்கி,புதுமைப்பித்
தன்,அசோகமித்திரன்,செக்காவ்,அப்துல் ரகுமான்,நா.காமராசன்,கலாப்ரியா,கல்யாண்ஜி,ச.தமிழ்செல்வன்,சுஜாதா..... மிகப்பெர்ர்ர்ர்ரிய பட்டியல். இதில் மனதில் தங்கிய புத்தகமாக பொன்னியின் செல்வன்,கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்,கல்யாண்ஜியின் நிலாபார்த்தல்,

பணிபுரியும் தற்காலத்தில்:

வெகு நாட்களாக வாசிக்க நினைத்து முடியாமல் போன வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" நாவலும்,கி.ரா வின் "பிஞ்சுகள்" நாவலும் மனதை கவர்ந்த படைப்புகள். மனதில் தங்கிய படைப்பாக கண்மணி குணசேகரனின் "அஞ்சலை"யும் யுவன் சந்திரசேகரனின் "ஒளி விலகலும்"

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

ஆம். இந்த புத்தக கண்காட்சியில் கீழ்கண்ட நூல்களை வாங்க திட்டமிட்டிருக்கிறேன்.

உயிர்மை பதிப்பகம்:

1. நகரத்திற்கு வெளியே - சிறுகதைகள் - விஜய் மகேந்திரன்
2.நீலநதி - சிறுகதைகள் - லஷ்மி சரவணக்குமார்
3.புதியகாலம் - கட்டுரைகள் - ஜெயமோகன்
4.வாசக பர்வம் - கட்டுரைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
5.நகுலன் வீட்டில் யாருமில்லை - சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
6.கெட்ட வார்த்தை - கட்டுரைகள் - சாரு நிவேதிதா
7.வேட்கையின் நிறம் - கவிதைகள் - உமா சக்தி
8.மஞ்சணத்தி - கவிதைகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
9.சைபர் சாத்தான்கள் - கட்டுரைகள் - வா.மணிகண்டன்
10.சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - நாவல் - வா.மு.கோமு
11.கானல் வரி - குறுநாவல் - தமிழ்நதி
12.அதீதத்தின் ருசி - கவிதைகள் - மனுஷ்ய புத்திரன்
13.ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு - மொழிபெயர்ப்பு கவிதைகள் - யமுனா ராஜேந்திரன்
14.நீர்ப்பறவைகளின் தியானம் - சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர்

வம்சி பதிப்பகம்:

15.கிளிஞ்சல்கள் பறக்கின்றன - கவிதைகள் - வலைப்பதிவர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்புநூல்
16.மரப்பாச்சியின் சில ஆடைகள் - சிறுகதைகள் - வலைப்பதிவர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புநூல்
17.தனிமையின் இசை - அய்யனார்

காலச்சுவடு பதிப்பகம்:

சில புத்தகங்கள்

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

மிகவும் விரும்பியவர் ஜெயகாந்தன். கடந்தவருடன் இருமுறை அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. கடைசிவரை நேரில் சந்திக்க இயலாமல் போனவர் சுஜாதா.

ஆதர்ச எழுத்தாளர் தமிழில் எஸ்.ரா, வண்ணதாசன் ஆங்கிலத்தில் ஓ.ஹென்றி. (இவை தற்காலிகமானது. வாசிப்பனுபவத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் )

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

என் முதல் கவிதை நூல் வெளியான கல்லூரிப்பருவத்தில் அதை விற்பதற்காக பட்ட பாடுகள். சமீபத்தில் வெளியான என் சிறுகதை நூலை பெற வந்திருந்த ஒரு அறிமுகமில்லாத பெரியவரின் நெகிழ்வான பாராட்டு...இப்படி வலியும் புன்னகையும் கலந்த வாழ்க்கைபோலவே புத்தகங்கள் குறித்தான அனுபவங்களும் தொடர்கின்றன.