Monday, December 28, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 2

காண்க பகுதி-1.

முன்குறிப்பு : அன்பு நண்பர்களே.. இந்தத்தொகுப்பு இன்னும் 2 பகுதிகள்(அதாவது மொத்தம் 4) இன்றும் நாளையும் வெளியாகலாம். பின்னூட்டமிடும் நண்பர்கள் அவர்களால் மறக்க இயலாத புத்தகங்களை பகிர்ந்துகொண்டால் அவற்றை இறுதிப்பாகத்தில் தனியாக நோட் செய்துவிடுகிறேன். அது புதிதாக வாசிக்கத்துவங்கியவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். நன்றி.

************************************

ஜ்யோவ்ராம் சுந்தர்


1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

அப்படி நிறைய நிறைய புத்தகங்கள். ஒரு சில மட்டும் இங்கே : பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள், வண்ணதாசனின் தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், வண்ணநிலவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு, சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி, நகுலனின் வாக்குமூலம், சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் (1990களில் வந்த முழுத் தொகுதி), Ayn Randன் The Fountain Head, புதுமைப் பித்தனின் காஞ்சனை, குபராவின் நூருன்னிஸா (அ) விடியுமா, விக்ரமாதித்யனின் பல கவிதைத் , தொகுதிகள், நாகார்ஜுனன் எழுதிய 'கலாச்சாரம், அ கலாச்சாரம், எதிர் கலாச்சாரம்' ... ம்ம்ம் இன்னும் நிறைய நிறைய.!

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

பொதுவாக எழுத்தாளர் சார்ந்தே புத்தகங்களைத் தேர்வு செய்பவன் நான். நண்பர்களின் சிபாரிசின் பேரிலும், புத்தக மதிப்புரைகள் காரணமாகவும் சில புத்தகங்களை வாங்க வேண்டுமென்று முன் தீர்மானித்துக் கொள்வேன். ஆனாலும், பல புத்தகங்களை அங்கே பார்க்கும்போதே வாங்குவது வழக்கம். இந்த வருடம் குறிப்பாக வா மு கோமுவின் சாந்தாமணியின் காதல்கள், சாருவின் சில புத்தகங்கள், தமிழினி வெளியீடாக வரும் ஜெமோவின் புனைவுத் தொகுதியொன்று, அ மார்க்ஸ், ஃபிரான்ஸிஸ் கிருபா போன்றோர் எழுதியிருக்கும் குடி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பொன்று, கோபிகிருஷ்ணனின் முழுத் தொகுதி (வெளியாகியிருந்தால்), மற்றும் இன்னும் சில.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சின்ன வயதில் பாலகுமாரனைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறேன். சென்னை பெரம்பூர் - செம்பியத்தில் இருக்கும் சிம்சன் நிறுவனத்தில் டாஃபேயில் வேலை செய்து கொண்டிருந்தார் பாலகுமாரன். என்னுடைய அப்பா வேலை செய்ததும் அதற்கு முன் இருக்கும் சிம்சன் - ஷார்ட்லோவில். அப்பாவைப் பார்க்கப் போவது போல் செக்யூரிட்டியில் அனுமதி வாங்கிக் கொண்டு சைக்கிளை அங்கிருக்கும் ஒரு பூங்கா புல் வெளியில் நிறுத்திவிட்டுக் காத்திருப்பேன். பாலகுமாரன் ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்தவுடன் ஒரு திருப்தி. அப்போது எனக்கு 12 வயதிருக்கலாம். எந்த எழுத்தாளரையும் சந்திக்க வேண்டுமென்று முனைந்தது கிடையாது. சுந்தர ராமசாமியைப் பார்க்க காகங்கள் கூட்டத்திற்கு நாகர்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் போய்ப் பேசியது கிடையாது. மனதிற்குப் பிடித்த பல எழுத்தாளர்களைப் பார்த்திருந்தாலும், அவர்களுடன் நேர் அறிமுகம் வைத்துக் கொண்டதில்லை.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

புத்தகங்களைப் படித்த அனுபவங்களா அல்லது புத்தகங்களைப் பற்றிய நினைவுகளா என்ற குழப்பமேற்படுகிறது. அனுபவமென்றால் மிகச் சிறிய வயதில் (6 அல்லது 7 வயதில்) மாதவரம் கிளை நூலகத்தில் அமர்ந்து தினசரிகளையும் அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற பத்திரிகைகளைப் படித்தது நினைவிருக்கிறது. 10-11 வயதில் 5 ரூபாய் கட்டி அதே நூலகத்தில் உறுப்பினராகி, தமிழ்வாணன் (சங்கர்லால் மேஜை மேல் காலைத் தூக்கிப் போட்டு அமர்ந்தபடி ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தொலைபேசி மணி டிரிங் டிரிங் என அடித்தது!), பிறகு சுஜாதா பாலகுமாரன் என வாசிப்பைத் தொடர்ந்தது நினைவிருக்கிறது. 19-20 வயதிற்குப் பின்னர் சிறுபத்திரிகை உலகமும், குமார்ஜி என்ற நண்பரின் மூலம் நிறைய புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. என்னுடைய 21-22 வயதில் வெறி கொண்டு நிறைய புத்தகங்களைப் படித்ததும், அது குறித்து குமார்ஜி, பா ராஜாராம், தெய்வா போன்ற நண்பர்களுக்கு முழ நீளத்திற்குக் கடிதங்கள் எழுதியதும்... ஆஹா... அப்போதெல்லாம் விடுமுறை தினமென்றால் விழுந்து கிடந்து படித்துக் கொண்டிருப்பேன். இப்போது தொடர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் படிப்பதற்குக்கூட உடம்பு வணங்க மாட்டேன் என்கிறது :(--

*****************************************

டாக்டர் புரூனோ1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

பெரும்பாலும் பாடபுத்தகங்களே இந்த பட்டியலில் நினைவிற்கு வருகின்றன. அவற்றின் பட்டியலை எழுதினால் உங்களுக்கு ரசிக்காதே !!

அது தவிர என்று பார்த்தால் இரும்பு குதிரைகள். நான் ஊர் ஊராக சுற்ற வேண்டிய ஒரு வேலையில் இருந்த காலகட்டத்தில், பல ஊர், பலவகைப்பட்ட மக்களூடன் சேர்ந்து பணி புரியும் ஒரு வேலையில் இருந்த நேரம், சென்னையிலிருந்து மதுரைக்கு வைகை விரைவு வண்டியில் செல்லும் போது வாசித்தது. பல வரிகள் அப்படியே மனதில் தங்கியதற்கு எனது பணி சூழல் காரணமாக இருக்கலாம். அந்த புத்தகத்திற்கு மாலன் எழுதிய முன்னுரை காவியம் !!

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

ஆம். சில நேரங்களில் வார இதழ்களில் வரும் தொடர்கள் புத்தகமாக வருகிறதா என்று காத்திருந்து வாங்குவேன். சுமார் 14 வருடம் காத்திருந்து வாங்கியது காந்தளூர் வசந்த குமாரன் கதை. இந்த முறை, அகம் புறம் அந்தப்புறம். புத்தக விழாவிற்கு பிறகு வெளிவரும் பெரியாரின் சிந்தனைகள்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

எந்த எழுத்தாளரையும் சந்திக்க வேண்டும் என்பதை எனது லட்சியம் என்று இருந்தது கிடையாது!! எழுத்துக்களின் மூலம் சந்திப்பது நடந்து கொண்டு தானே இருக்கிறது

ஆதர்ச எழுத்தாளர் என்று ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. கேனாங், ராபின்ஸ் என்று பெரிய பட்டியலே வரும். தமிழில் நான் அதிகம் வாசித்தது என்றால் சுபா, இந்திரா சௌந்திரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா தான். இவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் சேத்தன் பகத் போன்றவர்களை விட அதிகம் விற்கக்கூடும் என்பது எனது கருத்து.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

இங்கும் பாட புத்தகங்களே முதலில் வருகின்றன :):) துறை சார் புத்தகங்களை வைத்து நீங்கள் இந்த கேள்விகளை கேட்க வில்லை என்றே நினைக்கிறேன். அதனால் விரிவாக பதிலளிக்க முடியவில்லை. ஒரு வேளை துறை சார் புத்தகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றால் கூறுங்கள். விரிவான பதில் கூறுகிறேன் :) :)

************************************

கார்க்கி1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

நான் ஒரு வெண்மேகம் (ஓஷோ), 16 வயதில்..
சிற்பியே உன்னை செதுக்குகிறேன் (வைரமுத்து), 17 வயதில்..
நட்புக்காலம் (அறிவுமதி), 20 வயதில்..
மோகமுள் (தி.ஜா), 21 வயதில்..
வெண்ணிற இரவுகள் (தஸ்தாயெவ்ஸ்கி), 22 வயதில்..
நான்..நீ..காதல் (கார்க்கி..ஹிஹிஹி. இன்னும் வெளிவரவில்லை), 23 வயதில்..
The alchemist (paulo cohelo), 25 வயதில்..
அய்யனார் கம்மா (நர்சிம்), 26 வயதில்..

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

உலக இலக்கியங்களை தேடித்தேடி வாங்குவேன். இந்த வருடம் அதிகம் வாங்கும் ஆவலில்லை. ஏனென்றும் தெரியவில்லை.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

முகில். ஆம் லொள்ளு தர்பார் முகில்தான். இன்னும் நிறைவேறவில்லை. என் ஆதர்ச எழுத்தாளாராக சுஜாதாவை நினைத்துக் கொண்டுதான் பதிவெழுதவே வந்தேன். இப்போது அவரும் இல்லை :))

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

கார்க்கியின் (அந்த கார்க்கிப்பா) வாழ்க்கை வரலாறு. ஆறு வயதிலே சாக வேண்டியவர். தப்பித்து 68 வயது வரை வாழ்ந்தார். அவர் வாழ்வில் சந்தோஷம் என்பது போன்ற நிகழ்வுகளே கிடையாது. ஆனால் அவர் வாழ்க்கையை அவர் முழுமையாய் உணர்ந்திருக்க கூடும். லைஃப் கஷ்டம்டா என்றோ, போரடிக்குது மச்சி என்றோ யாராவ்து சொன்னால் இவர் வாழ்க்கை வரலாற்றை படிக்கட்டும். என் ராயல் சல்யூட் இவருக்கும் சேவுக்கும் மட்டும்தான். ஒன்றும் புரியாத வயதில் அவர் பேர் வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக படித்தேன். இன்னும் படித்துக் கொண்டேயிருக்கிறேன். என் தந்தை எனக்களித்த மிகப் பெரிய சொத்து, என் பெயர்.

***********************************

கேபிள் சங்கர் (பி. சங்கர நாராயண்)1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே என் அம்மா தான். ஆபீஸிலிருந்து வரும் போதே சர்குலேஷனில் வரும் குமுதம், விகடன், கல்கி என்று ஆரம்பித்த பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாய் முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா, ரத்னபாலா என்று வளர்ந்து ஒரு கட்டத்தில் சுஜாதாவை படிக்க ஆரம்பித்ததும் அப்படியே ஸ்டென் ஆகி.. பாலகுமாரன், சுபா, ராஜேஷ்குமார், பிகேபி என்று படிக்க ஆரம்பித்து, மெல்ல ஆங்கிலத்துக்கு தாவி, ஜெப்ரி ஆர்ச்சர்ரையும், இர்வின் வாலசையும், அர்தர் ஹெய்லி, எரிக் சீகலையும், ஐயன் ராண்டை, என்று ஓடி, இப்போதைய சேட்டன் பகத் வரைக்கும் படிப்பது முடியவில்லை. தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

அப்படியெல்லாம் முன் கூட்டியே முடிவு செய்து கொள்வதில்லை. ரேண்டமாய் ஒரு பார்வை பார்த்து பிடித்திருந்தால் கையிலிருக்கும் பட்ஜெட்டை பொறுத்து வாங்குவதுதான். ஆனால் இம்முறை வ.மு.கோமுவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு அவரது கள்ளியை ஏற்கனவே படித்து பிடித்து போனதால் அவரது சாந்தாமணியும், இன்ன பிற காதல் கதைகளை வாங்க ஆவலாய் உள்ளேன்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

நிறைய பேருடைய அனுபவம் போல் எழுத்தாளர்களை பற்றி எந்த விதமான பெரிய எக்ஸ்பக்டேஷனை வைத்து கொள்ள விரும்பமாட்டேன். திரைத்துறையில் உள்ளதால் பெரிய நடிகர்களை, இயக்குனர்களை கூடவே இருந்து பார்ப்பதால் அவர்களின் ப்ளஸ், மைனஸ் எலலாம் தெரியுமாதலால் பிரம்மிப்பு இருக்காது. அப்படி சந்தித்தவர்களில் சுஜாதா, பாலகுமாரன், சாரு, எஸ்.ரா, வா.மு.கோமு இதில் பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்து கொண்டிருந்த காலத்தில் ஓரளவுக்கு நட்பு இருந்தது. பழகிய பின்பு எழுத்தும் , அவரும் வேறு என்று புரிந்தது. என்றைக்கும் எனக்கு, தமிழ் இலக்கியத்தை அறிமுக படுத்திய சுஜாதா ஒருவரே ஆதர்ச எழுத்தாளர்..

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

ஒரு முறை முத்து காமிக்ஸை சயன்ஸ் புத்தகத்தின் நடுவில் வைத்து படித்து மாட்டிக் கொண்டு உதை வாங்கியதும். செலவுக்கு கிடைக்கும் காசையெல்லாம் சேர்த்துவைத்து புத்தகப்பித்தனின் குமரி பதிப்பகம் வெளியீடும் சுஜாதாவின் அத்தனை புத்தகங்களையும் திருட்டு தனமாய் வாங்கி ஒளித்து வைத்து படித்தது. பின்னாளில் ஒளித்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்துவிட்டு என் அப்பா இனிமே ஒளிக்காம படி.. என்றதும். இன்றளவில் என்னால் மறக்க முடியாத அனுபவம். நடுவே பத்தாவது படிக்கும் போது ஸ்கூலில் கூட படிக்கும் பெண்ணிற்கு சுஜாதாவை பிடிக்கும் ஆனால் வீட்டில் படிக்க முடியாது என்றதனால், வீட்டிலிருந்து தினமும் புத்தகத்தை எடுத்து போய் அவளுக்கு கொடுத்ததையும் அதன்பின்பு நடந்த சம்பவங்களையும் மறக்கவே முடியாது.


காண்க பகுதி-3.
காண்க.. பகுதி 4 (இறுதி)

.

16 comments:

குசும்பன் said...

//ஒரு முறை முத்து காமிக்ஸை சயன்ஸ் புத்தகத்தின் நடுவில் வைத்து படித்து மாட்டிக் கொண்டு உதை வாங்கியதும். //

கேபிள் பபிதா காமிக்ஸ் தானே?:))

குசும்பன் said...

முதல் இரு போட்டோகாரர்களுக்கு இருக்கும் தைரியம் கார்க்கிக்கு இல்லையே:)))

அன்புடன் அருணா said...

தொடர்ந்து கலக்குங்க!

பிரபாகர் said...

கலக்குங்க பாஸ்,

எல்லோருடைய பேட்டியும் அருமையாய் இருக்கு.

பிரபாகர்.

Saravana Kumar MSK said...

அன்பின் ஆதி அண்ணா, மடல் படிக்க முடிந்தது. பதில் அனுப்ப முடியவில்லை. அதனால்தான் பின்னூட்டமாக போட்டுவிட்டேன். இதையும் சேர்த்துக்கோங்க. நன்றி. :)

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூறமுடியுமா?
நான் வாசிக்க ஆரம்பிச்சதே கடந்த வருடம் தான்.. அதுக்கு முன்னாடி, சில ராஜேஷ் குமார் க்ரைம் நாவல்கள் கொஞ்சம் படிச்சிருக்கேன். ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொகுப்பு pdf-ஆக இணையத்தில் கிடைத்தபோது இரண்டு pdfகள் படிச்சிருக்கேன். கடந்த வருடம் சில புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் படித்ததில், பிரேம் ரமேஷின் சொல் என்றொரு சொல், கனவில் பெய்த மழையை பற்றிய இசை குறிப்புகள், குருவிக்கார சீமாட்டி; சாருவின் எக்சிஸ்டென்ஷியலிஸமும், பேன்சி பனியனும், ராசலீலா, ஜீரோ டிகிரி; ஜே.பி.சாணக்யாவின் கனவுப் புத்தகம், கோபிகிருஷ்ணனின் தூயோன் போன்றவை குறிப்பானவை.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
இந்த வருடம், அய்யனாரின் மூன்று புத்தகங்களும், ரமேஷ் பிரேம், சாரு, ஜே.பி.சாணக்யாவின் சில புத்தகங்கள் வாங்கவேண்டும்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
படித்ததே வெகு சில எழுத்தாளர்களின் சில புத்தகங்கள் என்பதால், ஆதர்ச எழுத்தாளர்கள் அவர்களே, இப்போதைக்கு. (பிரேம் ரமேஷ், சாரு, ஜே.பி.சாணக்யா, அய்யனார்). இவர்களில் யாரையெல்லாம் பார்க்க முடியுமென்று தெரியவில்லை. அய்யனாரை சந்திக்க முடியும் என்றுதோன்றுகிறது.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
ஒரு மாதத்திற்கு முன்பு படிக்கதுவங்கி சமீபத்தில் படித்து முடித்த 'சொல் என்றொரு சொல்', படித்த அத்தனை நாட்களும் மாய போதை, மாயக்கனவுகள். really enjoyed it.. :)

தமிழ்ப்பறவை said...

300 அடிச்சு ஆடுறீங்க...
300 அடிச்சும் ஸ்டெடியா இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....
பெரும் தலைகளாப் பேசி இருக்காங்க...
இன்னும் ரெண்டு பதிவு கழிச்சு வந்து மீட் பண்றேன்...

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்தல் ஆதி.நன்றி.

தமிழ் வெங்கட் said...

இப்பதான் முந்திய பதிவுக்கு பின்னூட்டம் போட்டேன் அதற்குள் அடுத்ததா..!மின்னல் வேகம் தோழரே(எப்போதும் கம்பியூட்டரிலே உட்காந்துட்டு இருந்தா வீட்டிலே திட்ட மாட்டாங்களா..?)என் மனைவி ஊருக்கு போயாச்சு..அதுதான் 2 நாளா பின்னூட்டம் போட முடியுது..!

sriram said...

யாருமே சரோஜா தேவி புத்தகங்களைப் பத்தி சொல்லவே இல்லயே??
நீங்க சரியான ஆளுங்களை செலக்ட் பண்ணலன்னு நெனைக்கிறேன்

என்றும் அன்புட்ன
பாஸ்டன் ஸ்ரீராம்

சுசி said...

நல்ல முயற்சி ஆதி.. வாழ்த்துக்கள்.

பகுதி ஒண்ணும் கண்டாச்சு (படிச்சாச்சு)

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு ஆதி. நன்றியும் வாழ்த்துக்களும்.

ராஜகோபால் (எறும்பு) said...

//என் ராயல் சல்யூட் இவருக்கும் சேவுக்கும் மட்டும்தான்//

கார்க்கி, "சே"வா, நான் "சோ" வோன்னு படிச்சு அப்படியே ஷாக் ஆயிட்டேன்..
;))

அமுதா கிருஷ்ணா said...

கேபிள் சாரின் புத்தக அனுபவம் நல்லயிருக்கு..

கடைக்குட்டி said...

ம்ம்.. ஒன்னும் பிரியல..

இவ்ளோ பேரா எழுதுறாங்க...

நா(ன்)ம இன்னும் கேபிளோட முதல் ஸ்டேஜ்லதான் இருக்கோம்.. ம்ம்ம்.. 2010 ல பாப்பொம்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.!
நன்றி அருணா.!
நன்றி பிரபாகர்.!

நன்றி சரவணகுமார்.! (வட போச்சே.. மிஸ் பண்ணிட்டேன், கலந்துக்குறவங்க ரூல்ஸை மீறினா அப்பிடித்தான் ஆகும்னு நான் சமாதானப்படுத்திக்கிறேன் என்னை)

நன்றி தமிழ்பறவை.!
நன்றி பா.ரா.!

நன்றி வெங்கட்.! (நான் வாரத்துக்கு 3 பதிவு போடுற ஆளுங்க. இதுக்கே தாவு தீந்து போயிடுச்சு. நீங்க வேற எண்ணை ஊத்தாதீங்க)

நன்றி ஸ்ரீராம்.! (அதுக்கு தனியா ஒரு பதிவு போடுவோம். நீங்க முதல்ல எழுதிக்குடுங்க, ஏதாவது சொல்லிறப்போறேன்)

நன்றி சுசி.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி எறும்பு.!
நன்றி அமுதா.!
நன்றி கடைக்குட்டி.!

Karthik said...

மறுபடியும் அதேதான். மாதிரி எனக்கு பிடிச்ச பதிவர்கள் என்ன படிக்கிறாங்கனு தெரிஞ்சது சந்தோஷம். :) சரவணக்குமார் அண்ணா கலக்குறார். :)