Thursday, December 24, 2009

செண்பகக்காடு

நான்கு நாட்கள் விடுப்பில் ஊருக்குப்போவதாக முன்பே பிளான் இருந்தாலும், எதிர்பாராத விதமாக சென்ற இடத்தில் செல்போனை வேறு சுபா ஒரு வாளி தண்ணீருக்குள் போட்டுவைத்து அதை பரலோகம் அனுப்பி வைத்துவிட்டதால் நண்பர்களிடம் தொடர்பு கொண்டு சொல்லமுடியவில்லை. மெயில் தொடர்பும் கிடையாது. தொடர்பு கொள்ள முயன்று சிலர் கடுப்பாகியிருப்பதாக தெரிகிறது. பொறுத்துக்கொள்ளவும், ஹிஹி.! மற்றபடி போன் இல்லாததால் கூடுதல் நிம்மதியுடன் செந்தூர்வாழ் வேலனையும் கண்டுகளித்து (குடும்பம் தரிசிக்க, நாம் குதூகலிக்க) சுபமாக கழிந்தது விடுமுறை. ஒரே ஒரு பல்பு வாங்கினேன் என்றால் அதுவும் தெரிந்தே வாங்கியதுதான், வேட்டைக்காரனிடம். அது பற்றி நாளை.

***************

அலுவலகத்தில் அவ்வப்போது சில சுவாரசியங்கள் நடப்பதுண்டு. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அத்தனை ஊழியர்களின் பெயர்களும் சீட்டுக்குலுக்கிப் போடப்பட்டது. ஆளுக்கு ஒரு பெயரைத்தேர்வு செய்ய வேண்டும். அவர்களைத் தம் குழந்தைகளாக (Chris Child) பாவித்து தினம் ஒரு பரிசு தரவேண்டும். தாம் யாரென்பதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் மற்றொரு ஊழியரை போஸ்ட்மேனாக பாவித்துக்கொள்ளவேண்டும். கடந்த ஒரு வாரமாக தினமும் ஒரு பரிசாக ஏழு பரிசுகள். கடைசிக் கொண்டாட்ட தினத்தன்று பெற்றோர் குழந்தைகளுடன் அறிமுகம் செய்துகொள்ளலாம். நான் ஊரிலில்லாததால் வழங்குதலில் இருந்து எஸ்கேப்பாகிவிட்டேன். எனக்குரிய பரிசுகள் என் மேஜையில் காத்திருந்தது. பேனா, சாக்லெட்ஸ், புத்தகம், கீ செயின் என அழகான பரிசுகளை வழங்கிய என் கிறிஸ்துமஸ் தந்தை யார்? பெயர் கூட தெரியாத சமீபத்தில் வந்த புதிய ஊழியரா? என் தோள் மீது கைபோட்டுப் பழகும் என் நண்பரா? எங்கள் கடுவன் மானேஜர்களில் ஒருவரா? தெரியவில்லை. இது சக ஊழியருடனான நட்பையும், அன்பையும் வளர்க்க.. மனத்தடைகளை தகர்க்க.. இன்னுமொரு சுவாரசியமான விளையாட்டுதான் இல்லையா.?

***************

புத்தகங்கள் வாங்குகிறேனோ இல்லையோ, சுமார் 10 வருடங்களாக தவறாது ஜனவரி மாத சென்னை புத்தகத் திருவிழாவை வேடிக்கை பார்க்கவாவது சென்றுவிடுவேன். புத்தகங்களையும், வாங்க வருபவர்களையும் வேடிக்கை பார்ப்பதில் அப்படியொரு சுவாரசியம். புத்தகப்பிரியர்கள் அவ்வளவு பெரிய புத்தகக்கடலில் எந்த புத்தகத்தை வாங்குவது, எதை விடுவது என்று மூச்சுத் திணறிப்போய்விடுவார்கள் என்பது நிச்சயம். இந்த முறை சற்று முன்னதாகவே டிஸம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை '33வது சென்னை புத்தகக் கண்காட்சி' நடக்கவிருக்கிறது. அரங்கம் அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள வழக்கமான அதே 'செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி' வளாகம்தான். மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

***************

'கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்'.. என்ன இது மடத்தனம்? இப்படியொரு இலக்கணப்பிழையோடு கொட்டை கொட்டையாக எழுதிவைத்திருக்கிறார்களே ஊரெங்கும் இந்தக் கிறித்தவர்கள் என்றுதான் இந்த 30 வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று நெல்லையில் ஒரு கடையின் சுவற்றில் நீளவாக்கில் எழுதப்படாமல் இடப்பற்றாக்குறையால் அந்த வார்த்தைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக கவிதைபோல எழுதப்பட்டிருந்தன. அப்போதுதான் சட்டென தோன்றியது ஒரு கவிதையைப்போல முன்னும் பின்னுமாக உணரவேண்டிய விஷயங்கள் மறைந்தல்லவா கிடக்கின்றன இந்த வரிகளில்.. ஒரே ஒரு வார்த்தையை இணைத்துப்பாருங்கள் அதனுடன்.. இப்படி,

'..ஆனால், கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்'

நன்றாகத்தான் இருக்கிறது இல்லையா? இப்படித்தான் புலப்படாத விஷயங்கள் பல என்றாவது ஒருநாள் எந்தப் புள்ளியிலாவது சட்டென இருள் விலகி பளிச்சென புலர்ந்துவிடுகிறது. நமக்குப்புரியாத கவிதைகளும் கூட அப்படித்தான் போல என்று நினைத்துக்கொண்டேன்.

***************

விக்ரமாதித்யனின் 'கனவில்வரும் செண்பகக்காடு' கவிதை

தீயின்
அழகு

கண்கள்பற்றிய பயமின்றி
மின்னல்வெட்டைக் கவனி

கூண்டுப்புலிகளின் விழிகளையேனும்
கொஞ்சநேரம் உற்றுப்பார்

எந்த
யோனிமுகம்?

கனவில்வரும் செண்பகக்காடு.

***************

தமிழ்மண தேர்தலில் நைஸாக கூட்டம் வராத தொகுதிகள் எதுவாக இருக்கும் என கணித்து அதன்படி 'தொழில்நுட்பப்பிரிவு' (கொஞ்சம் தியரி படிக்கலாமா?) மற்றும் 'சுயதேடல்(?)' (மோகம் 30 நாள்) ஆகியவற்றில் நாமினேஷன் தாக்கல் செய்துள்ளேன். சென்ற தடவை மாதிரி இல்லாமல் பாவம் பார்த்து வாக்களித்து இரண்டு பிரிவுகளிலுமே என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். பிற தொகுதிகளில் நாம் யாரையும் ஆதரிக்கவில்லை என்பதால் ஜனநாயகமுறைப்படி நீங்களே யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். ஹிஹி..

அப்படியே பின் தொடரும் 300க்கும் அதிகமான நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

.

31 comments:

Anonymous said...

//இன்னுமொரு சுவாரசியமான விளையாட்டுதான் இல்லையா.?//

Secret Santa விளையாடினீங்களா, நல்லாத்தான் இருக்கும் ஒருவாரம்னா பர்ஸைப்பதம் பாத்துரும் :)

அ.மு.செய்யது said...

பள்ளிக்காலத்திலிருந்து வருடாவருடம் Chrisma Chrischild விளையாடி வருகிறோம்.ஐ.டி வந்தவுடன் ஒரு வருடம் தொடர்ந்தது.

ஒரு முறை எனக்கு Chrischildஆக வந்த ஒரு பெண்ணின் கேபினில்,அந்த பெண் அலுவலகம் வந்து சேருமுன் அதிகாலையில் "அமுதன் இளமாறன்" ஸ்டைலில் கோதுமை மாவில் விரல் போல் செய்து,மார்க்கரால் சிகப்புச்சாயமேற்றி,இரண்டு பச்சமிளகாய்,எலுமிச்சையோடு கட்டி தொங்கவிட்டு டெர்ரர் ஆக்கியது நினைவுக்கு வருகிறது.

அதே பெண்ணை ஜொள்ளிக்கொண்டிருந்த ஒரு அங்கிளை அண்ணா என்று கூப்பிடுமாறு கட்டளையிட்டு மறுநாள் லெட்டர் வேறு எழுதிவைத்தோம்.

அதெல்லாம் சென்னையில் ஒரு மழைக்காலம் !!!

அ.மு.செய்யது said...

அருமையான தொகுப்பு !!! சொல்ல மறந்து விட்டேன்.

ராஜகோபால் (எறும்பு) said...

//ஒரே ஒரு பல்பு வாங்கினேன் என்றால் அதுவும் தெரிந்தே வாங்கியதுதான், வேட்டைக்காரனிடம்.//

பல்பா அது.. கொடுமை... நானும் போன வாரம் ஊருக்கு போய் இருந்தேன்..நம்மவூர் பாலஜிலதான் பார்த்தேன்.. பெரிய விசை ஆடுறது பத்தாதுன்னு, சின்ன விசை வேற ஒரு ஆட்டத்த போடுறாரு.. அத பெரிய விசை பெருமிதத்தோட பாக்குறாரு.... இவங்க எனக்கு சூன்யம் வச்சது பத்தாதுன்னு என் பிள்ளைக்கும் வைக்க பாக்றாங்க... ;))

ராஜகோபால் (எறும்பு) said...

//மனத்தடைகளை தகர்க்க.. இன்னுமொரு சுவாரசியமான விளையாட்டுதான் இல்லையா.?//
அண்ணாச்சி நான் கூட என் வீடு அட்ரஸ் தாரேன்... நீங்க கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி வந்து கிப்ட் வச்சிட்டு போங்க.. என் கிறிஸ்துமஸ் தந்தை யாருன்னு நான் கேக்கவே மாட்டேன்...;))
பதிவர்களுக்கு உள்ள மன தடையை நீக்க இது உதவும் ;))

குசும்பன் said...

// மனத்தடைகளை தகர்க்க.. இன்னுமொரு சுவாரசியமான விளையாட்டுதான் இல்லையா.?//

சுவாரசியமான விளையாட்டுதான் ஆனா உம்மை எல்லாம் குழந்தையா நினைச்சுக்கனும் என்ற ரூல் பெரும் தண்டனையாச்சே!

குசும்பன் said...

//செல்போனை வேறு சுபா ஒரு வாளி தண்ணீருக்குள் போட்டுவைத்து அதை பரலோகம் அனுப்பி வைத்துவிட்டதால் //

சுபா உங்க லேப்டாப்பையும் இப்படி ஒரு கருணை கொலை செய்தால் நாங்கள் எல்லாம் மகிழ்வோம்:)

pappu said...

அந்த விளையாட்டு கூட நல்லாதான் இருக்கு, வாங்குற வரைக்கும்! :)

இப்படியெல்லாம் கவித போட்டு தான் நாங்களும் விட்டத்த நோக்கிட்டு பேனா வோட உட்கார்ந்திருக்கோம். எழுதிப் பப்ளிஷ் பண்ணா எல்லாரும் வெறிக்குறாங்க. நீங்க நால சின்ன பசங்கள் கெடுத்துட்டீங்க :)

குசும்பன் said...

//Secret Santa விளையாடினீங்களா, நல்லாத்தான் இருக்கும் ஒருவாரம்னா பர்ஸைப்பதம் பாத்துரும் :)
//

அட நீங்க வேற இவரு, பொண்ணு வெச்சுருக்கும் பாதி பென்சில், உடைஞ்ச சிலேட்டு குச்சு, தீர்ந்துபோன பேனா ரீபில் என்று எல்லாத்தையும் ஒவ்வொருநாள் கலர்கலர் பேப்பரி சுத்திட்டு கடைசியா அதை எல்லாம் நினைவு சின்னங்கள் என்று ஒரு கவிதையும் எழுதிடுவார்..இவர் பர்ஸாவது பழுக்கிறதாவது:)))

Cable Sankar said...

நீங்க ஊர்ல இல்லாத போது ஒரு கவிதையும்? சிறுகதையும் எழுதியிருக்கேன். சாக்குரதை.. படிச்சிட்டு சொல்லுங்க

நாடோடி இலக்கியன் said...

நல்ல தொகுப்பு ஆதி.

முகிலன் said...

இப்பிடி சொல்லிப்பாருங்க..

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்?

ஒரே ஒரு கேள்விக்குறி அர்த்தத்தையே மாற்றிவிடுகிறதல்லவா?

வானம்பாடிகள் said...

=)). மசாலா மிக்ஸ் அருமை.

ஆரூரன் விசுவநாதன் said...

மிக ரசிக்கும்படியான பதிவு...

சுவராஸ்யம் கொஞ்சமும் குறையாமல் கடைசிவரை தொடர்கிறது ஆதி....

அன்புடன்
ஆரூரன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

hai, chrismasis எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு, அதில் கிடைத்தவற்றையெல்லாம் இன்னமும் நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறேன்.

புத்தகங்களையும், வாங்க வருபவர்களையும் வேடிக்கை பார்ப்பதில் அப்படியொரு சுவாரசியம் //

ரொம்ப சரி.

சென்ற தடவை மாதிரி இல்லாமல் பாவம் பார்த்து வாக்களித்து //

பாவம் பார்த்துலாம் யாரும் வாக்களிக்க மாட்டாங்க, கொஞ்சம் பர்ஸிலிருந்து எடுத்து செலவு செய்யுங்க :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

குசும்பன் said...
// மனத்தடைகளை தகர்க்க.. இன்னுமொரு சுவாரசியமான விளையாட்டுதான் இல்லையா.?//

சுவாரசியமான விளையாட்டுதான் ஆனா உம்மை எல்லாம் குழந்தையா நினைச்சுக்கனும் என்ற ரூல் பெரும் தண்டனையாச்சே!

வழக்கம் போல :)))))))))))))

தண்டோரா ...... said...

சிங்ககுட்டிகள் பட்டினியாயிருக்கின்றன....

அகநாழிகை said...

சரி, நடத்துங்க.
..
ஆதி, புத்தக கண்காட்சியில் சந்திப்போம்.

அகநாழிகை said...

விக்ரமாதித்யனின் கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீமதி said...

சுவாரஸ்யம் :))

Sangkavi said...

எங்க ஆபிஸ்லயும் இதே விளையாட்டுதாங்க ஆனா இங்க இதற்குப் பெயர்....
Secret Friend...

தாரணி பிரியா said...

இந்த விளையாட்டு எல்லாம் ஸ்கூல் காலேஜ்ல விளையாடினது :). நல்லாருக்குங்க‌

பரிசல்காரன் said...

நானும் உங்களை அழைத்தேன் ஆதி!

(செல்ஃபோன் டரியலானது உண்மைதானே? )

அலுவலக மேட்டர் அருமை. ஒரு விளக்கம் தேவை. அழைக்கிறேன்.

வெகு சுவாரஸ்யமான எழுத்து ஆதி.

வெல்கம் பேக்!

ஜெட்லி said...

// புத்தகங்களையும், வாங்க வருபவர்களையும் வேடிக்கை பார்ப்பதில் அப்படியொரு சுவாரசியம்//

:)....நானும் உங்க கட்சிதான்

ராமலக்ஷ்மி said...

//இப்படித்தான் புலப்படாத விஷயங்கள் பல என்றாவது ஒருநாள் எந்தப் புள்ளியிலாவது சட்டென இருள் விலகி பளிச்சென புலர்ந்துவிடுகிறது. நமக்குப்புரியாத கவிதைகளும் கூட//

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

//கண்கள்பற்றிய பயமின்றிமின்னல்வெட்டைக் கவனி//

அற்புதம். நல்ல பகிர்வு.

Kathir said...

//செல்போனை வேறு சுபா ஒரு வாளி தண்ணீருக்குள் போட்டுவைத்து அதை பரலோகம் அனுப்பி வைத்துவிட்டதால் //

அது வேற சுபா வா பாஸ்?
உங்க சுபா சமத்தாச்சே. இதெல்லாம் செய்ய மாட்டாறே..

RVC said...

எஸ்.ரா எழுதிய 'விக்ரமாதித்யன் எனும் பெருநகரப் பாணன்' கட்டுரையை படித்துமுடித்துவிட்டு தமிழ்மணம் வந்தால், உங்கள் பதிவில் விக்ரமாதித்யன் கவிதை..! பகிர்வுக்கு நன்றி.

இதெல்லாம் இஸ்கூல்லயே வெளாண்டாச்சு, unfortunately- boys school. காலேஜ் டேஸ்லதான் Secret Friend ஜாலியா இருந்துச்சு.
Chris Child, Secret Santa, Chrisma Chrischild, chrismasis, Secret Friend - ஒரு கேமுக்கு இத்தன பேர் இருக்குன்றத தெரிஞ்சுக்கிட்டேன். :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அம்மிணி.!

நன்றி செய்யது.! (இதென்ன டெரர் கேமாக அல்லவா இருக்கிறது?)

நன்றி எறும்பு.! (பதிவர்களுக்குள்ள மனத்தடையை போக்கவா? என்னப்பாத்தா என்ன இளிச்சவாயி மாதிரியா தெரியுது?)

நன்றி குசும்பன்.! (கொலவெறிப் பின்னூட்டங்கள். நேரில் மாட்டினீர்கள் என்றால் கடித்துவைக்கப்படுவீர்கள்)

நன்றி கேபிள்.! (நான் ஊரில் இல்லைன்னா உங்களுக்கு குளிர்விட்டுப்போயிருமே)

நன்றி இலக்கியன்.!

நன்றி முகிலன்.!

நன்றி வானம்பாடிகள்.!

நன்றி ஆரூரன்.!

நன்றி அமித்து.! (குசும்பன் என்னை கலாய்ப்பதை வேடிக்கை பார்க்கவே என் பதிவுக்கு வருவீங்களோ? :-)

நன்றி தண்டோரா.! (ஏன் சோறு போடுறதுதானே..)

நன்றி வாசுதேவன்.! (கண்டிப்பாக..)

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி சங்கவி.!

நன்றி தாரணி.!

நன்றி பரிசல்.! (தம்பி இன்னும் போன் வரல..*தம்பி இன்னும் டீ வர்ல ஸ்டைலில் படிக்கவும்*)

நன்றி ஜெட்லி.!

நன்றி ராமலக்ஷ்மி.!

நன்றி கதிர்.! ((யாரு? சுபா? சமத்து?.. சரிதான்)

நன்றி RVC.!

Romeoboy said...

எங்க ஆபீஸ்ல chrisma, chris child கேம் விளையாடினோம். ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு ..

அறிவிலி said...

தமிழ்மணம் போட்டில நீங்க ஜெயிக்கணும்னு குடும்பத்தாரை வேண்டிக்க சொன்னீங்களா?

அன்புடன் அருணா said...

/ஆளுக்கு ஒரு பெயரைத்தேர்வு செய்ய வேண்டும். அவர்களைத் தம் குழந்தைகளாக (Chris Child) பாவித்து தினம் ஒரு பரிசு தரவேண்டும்./
அட! நாங்களும் விளையாடியிருக்கோமே!!