காண்க.. பகுதி 2
முன்குறிப்பு : சென்னை புத்தகக்கண்காட்சி துவங்கவிருக்கும் இவ்வேளையில் புத்தகங்கள் குறித்த வலையுலக நண்பர்களின் ஒரு சிறிய பேட்டியின் தொகுப்புத்தொடர் இது. இது மூன்றாவது பகுதி. இறுதியும் நான்காவதுமான பகுதி இன்று மாலை வெளியாகும்.
*******************************************
ராமலக்ஷ்மி

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
என்னுடைய வாசிப்பு என்பது பகிர்ந்திடும் அளவுக்கு அத்தனை விசாலமானது அல்ல என்றாலும் 'ஒவ்வொரு காலக் கட்டங்களின் போதும்' எனகிற வார்த்தைகள் தந்த ஈர்ப்பு என்னையும் பேச வைக்கிறது. தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது பைண்டு செய்து தரப்பட்ட சிறுவருக்கான சித்திரக் கதைகள்தான்[Fairy Tales] முதல் வாசிப்பின்பம். அடுத்து அறிமுகமானது எழுபதுகளில் வெளிவந்த அத்தனை சிறுவர் மலர்களும் குறிப்பாக கல்கி நிறுவனம் வெளியிட்ட கோகுலம். அதன் முதல் இதழை தந்தை கையில் தந்த தினம் இன்னும் நினைவில். அவரது வழிகாட்டல் ஒன்பது வயதுக்குமேல் கிடைக்காது போனதென்றாலும், கூட்டுக் குடும்பத்தில் பெரியதந்தையாரால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களும் வாங்கப் பட்டதால் வாசிப்பு தொடர்ந்தது.
இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் ஒரு புதிய மாய உலகத்துக்குள் வைத்திருந்தது அப்போதைய சிறுவர்களை. இரும்புக்கை மாயாவி, ரிப் கெர்பி, மாண்ட்ரேக்-லொதார், வேதாளம்-டயானா [நாங்கள் வளர்த்த பிரிய நாய்க்கு ‘ரெக்ஸ்’ என வேதாளம் கதையில் வரும் பொன்னிற முடிச் சிறுவனின் பெயரை வைதது மகிழ்ந்தது வரையிலாக இருந்தது அதன் தாக்கம்] ஆகிய கதாபாத்திரங்கள் இன்றளவிலும் மறக்க முடியாதவை. அப்புசாமியும் சீதாப்பாட்டியும் பீமாராவ் ரசகுண்டுவுடன் அசத்தினார்கள் சிலகாலம். துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் பிடித்தமானவர்களாய் இருந்ததற்கு கதைகளில் வரும் செந்தமிழ் பெயர்களும் தமிழ்வாணனின் அழகான எழுத்து நடையும் முக்கிய காரணமாக இருந்தன. அப்புறம் எண்பதுகளில் தொடர்களாய் வந்த ஸ்டெல்லா ப்ரூஸ், சுஜாதா, பாலகுமாரனின் ஆரம்பக்கால நாவல்கள் ஆகியவை. பள்ளி காலத்தில் கமல்-ரஜனிக்கு இருந்தது போல சிவசங்கரி-இந்துமதிக்குத் தீவிர ரசிகைகள் இருந்தார்கள் அனல் பறக்கும் விவாதங்கள் செய்தபடி. ஆனால் விதிவிலக்காக சுஜாதா எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார்.. சமீபகாலத்தில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் எஸ்.ரா, நாஞ்சில் நாடன் ஆகியோர்.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
பெங்களூர் புத்தகத் திருவிழாவில் குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே ஸ்டால் வைக்கிறார்கள். வாங்க நினைக்கும் எல்லா புத்தகங்களும் கிடைப்பதில்லை. நம் பதிவர்களின் புத்தகங்கள் சிலவற்றை வாங்க ஆவல். அடுத்த கண்காட்சிக்குக் காத்திருக்கிறேன்.
கன்னிங்ஹாம் ரோடில் அமைந்துள்ள ரிலையன்ஸ் டைம் அவுட்டின் புதிய வளாகத்தில் தமிழ் புத்தகங்களுக்கென சிறிய அளவில் தனிப்பிரிவு உள்ளது. அடிக்கடி செல்லும் வழக்கம் உள்ளதால் இங்கு வாங்குவதே அதிகமென்றாகி விட்டது. சமீபத்தில் வாங்கியதில் படித்து ரசித்தவை ‘மாலன் சிறுகதைகள்’ ’சுப்ரமணிய ராஜு கதைகள்’.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
இதெல்லாம் சாத்தியமா என்ன என்கிற நினைப்பில் அப்படிப்பட்ட ஆசை ஏற்பட்டதில்லை:)!
இப்போது சாத்தியமெனும் சூழலில் சந்தர்ப்பம் வாய்க்கையில் வாசித்து வியந்த வலைப்பதிவர் சிலரைச் சந்திக்க ஆவல்:)!
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
எண்ணங்கள் எனில், ஒவ்வொரு காலத்தில் மனதோடு ஒன்றிப் போகும் புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை. ஆனால் சில, காலங்கள் கடந்து முதல் வாசிப்பின்போது ஏற்படுத்திய தாக்கத்துக்கு எள்ளளவும் குறையாமல்..
****************************************
அனுஜன்யா
1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
முதலில் வாண்டு மாமா, அம்புலி மாமா, இரும்புக்கை மாயாவி. பிறகு கல்கண்டு; குறிப்பாக துப்பறியும் சங்கர்லால்.
நான் தமிழில் படித்த முதல் நாவலே தமிழின் மிகப்பெரிய சரித்திர நாவலாகிய 'பொன்னியின் செல்வன்' தான். என் அக்காவும் அப்பாவும் 'பழுவேட்டரையர், மதுராந்தகன், அருள்மொழி' என்று மணிக்கணக்கில் சுவாரஸ்யம் குறையாமல் விவாதம் செய்வது பொறுக்காமல் 'இதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்' என்ற வீம்பில் படிக்கத் துவங்கி, என்னை மறந்தேன். அந்தத் தாக்கத்தில் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு கதைகளையும் படித்து முடித்தாலும், பொ.செ. ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை. அலைஓசை பின்பு படித்தாலும் ஒ.கே. என்ற நினைவு மட்டுமே.
இதற்குள் என் அக்காவின் provocation என்னை சுஜாதாவை நோக்கித் திரும்ப வைத்தது. முதலில் படித்தது 'நிர்வாண நகரம்'. அடுத்தடுத்து, 'நைலான் கயிறு, கொலையுதிர்காலம், பிரிவோம் சந்திப்போம், கனவுத் தொழிற்சாலை, காயத்ரி, நடுப்பகல் மரணம், ஏறக்குறைய சொர்க்கம், சொர்கத்தீவு, காகிதச் சங்கிலிகள்' என்று கட்டம் கட்டி, துரத்தி துரத்திப் படித்தேன். அவருடைய அறிவியல் புனைவுகள் என்னை முற்றிலும் வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. பிறகு கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவ்வப்போது கணையாழியிலேயே படிக்கத் தொடங்கினேன்.
அப்படி என்றால் வேறு எதுவுமே படிக்கவில்லையா என்றால், எப்போதோ ஜானகி ராமன் (மரப்பசு, மோகமுள்) படித்தேன். லா.ச.ரா, கி.ரா., ஜெயகாந்தன், வண்ணதாசன், பிரபஞ்சன் இவர்களின் சிறுகதைகளை அவ்வப்போது வெகு ஜனப் பதிரிகைகைகளில் படித்து அவர்களின் வீச்சைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதில் பிரபஞ்சன் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். எஸ்ராவின் தொடர்களை ஆனந்த விகடனில் படித்து அவருக்குப் பெரிய விசிறியானேன். சமீப காலங்களில் படித்த புத்தகங்களில் யாமம், உறுபசி (எஸ்ரா), கருக்கு (பாமா), ஜெமோவின் குறுநாவல்கள் இரண்டு (ஊமைச் செந்நாய், மத்தகம்) போன்றவை மனத்தைக் கவர்ந்தன.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
திட்டம் போட்டெல்லாம் வாங்குவது இல்லை. மும்பையில் ஆ.வி., குமுதம் கிடைப்பதே கஷ்டம். அதனால் இலக்கியப் புத்தகங்கள் சென்னை வந்தால் மட்டுமே வாங்க முடியும். எனக்கு ஆன்-லைன் சமாச்சாரங்களில் அவநம்பிக்கை அதிகம். போன வருடம் (நவம்பர் 2008) வாங்கிய ஏராளமான புத்தகங்களையே இன்னும் படிக்காததால், இப்போதைக்கு எதுவும் வாங்கும் உத்தேசம் இல்லை.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா தான். அவரை நன்கு தெரிந்த நண்பன் அவரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறியும் மறுத்து விட்டேன். நிச்சயமா அடுத்த வாரம் நாமளும் ஒரு கதா பாத்திரமாக வந்துவிடுவோம் என்னும் பயம்/தயக்கம். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் எனக்கு அலுக்காது.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
அனுபவம்னு பெரிசா ஒண்ணும் இல்லை. ஜ்யோவுடன் சென்ற வருடம் (2008) நவம்பரில் நிறைய புத்தகங்கள் வாங்கியது ஒரு மறக்க முடியாத அனுபவம். தி.நகரில் நியூ புக் லேண்ட்ஸ் கடையில் அவர் பொறுமையாக தேர்வு செய்து கொடுத்த புத்தகங்கள் புது வாசனை மாறாமல் இன்னும் என் வீட்டில் காட்சிப் பொருளாக மட்டும் இருக்கின்றன. அது போலவே பரிசல் வண்ணதாசன் கடிதங்கள் புத்தகத்தை அனுப்பியது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சி. வேலன் மும்பை வந்தால் அவர் புத்தகங்கள் பற்றி பேசுவதைக் கேட்பதே ஒரு அலாதியான அனுபவம்.
ஒரு எழுத்தாளருடன் நேரிடையான அனுபவம் என்று பார்த்தால் இந்த முறை சென்னை வந்தபோது, நர்சிம் எனக்கு மட்டும் பிரத்யேகமாக கொடுத்த 'அய்யனார் கம்மா' புத்தகம். முதல் ரேங்க் வாங்கிய ஒரு சிறு குழந்தையின் பெருமிதம் அவர் முகத்தில் பார்த்தது ஒரு தனி பரவசம். அதே போல், அகநாழிகை வாசுவின் முயற்சியில் எனக்குப் பிரியமான நண்பர்களான பா.ராஜாராம், காந்தி, லாவண்யா மற்றும் விநாயக முருகன் இவர்கள் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது மிக மிக உற்சாகம் தந்த நிகழ்வு.
************************************************
சின்ன அம்மிணி

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
ஆண்டவன் வந்தான் என்ற நாவல் படித்திருக்கிறேன். அருமையான பேண்டஸி கதை. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சொந்தமாக வாங்க தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை.
என் தோழியுடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்வாள். அவளுடன் படித்த ஒரு பெண் Pride and Prejudiceல் வரும் Darcy மாதிரி ஒருவனைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக. பல பெண்களுக்கு பிடித்த கதாபாத்திரம் Darcy.
மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்கள்
1. பொன்னியின் செல்வன்.
2. பந்தயப்புறா
3. ரத்தம் ஒரே நிறம்
4. டாவின்சி கோட்
5. Pride and Prejudice
6. பயணிகள் கவனிக்கவும்
7.கண்ணாடி கோபுரங்கள்
8.பதவிக்காக
9. இரும்புக்குதிரைகள்
இவற்றில் பல சொந்தமாக வைத்திருக்கிறேன். மீதி வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
நண்பர்கள் யாராவது பரிந்துரைத்தால் அந்தப்புத்தகங்களை வாங்குவேன். புத்தகவிழாவுக்கு என்னால் போகவியலாத காரணத்தால் என் அண்ணனிடம் சில புத்தகங்கள் சொல்லியிருக்கிறேன்.
1. என் பெயர் ராமசேஷன் - கிழக்குப்பதிப்பகம்னு நினைக்கிறேன். ஆதவன் எழுதியது.
2.நீர்ப்பறவைகளின் தியானம் - சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர்
3. நகுலன் வீட்டில் யாருமில்லை - சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
4. சேத்தன் பகத்தின் 2 states.
இரா. முருகனின் கதைகள் எதுவும் படித்ததில்லை. கிடைத்தால் வாங்கி அனுப்பசொல்லியிருக்கிறேன்.
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
அப்படி யாரையும் சந்திக்க ஆசைப்பட்டதில்லை. (அவர்கள் பற்றிய பிம்பம் குலைய வாய்ப்பு இருப்பதால்.) நேரில் பார்த்துப்பேசிய ஒரே எழுத்தாளர் சுதேசமித்திரன். ஆனால் அவர் எழுத்தாளராகும் முன்பே பழக்கமானவராதலால் எழுத்தாளர் என்று பழகியது குறைவு.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை கடன் கொடுப்பதுதான் எனக்கு கடினமான விஷயம். வாங்கிக்கொண்டு செல்பவர்கள் நல்லபடியாக வைத்திருப்பார்களா, புத்தகம் திரும்ப வருமா என்ற கவலைதான்.
*******************************************
அதிஷா
1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?
சிறுவயதில் படித்த மதனகாமராஜன் கதை புத்தகம் தலைகாணி சைஸில் இருக்கும்,முழுதுமாக ஒரு தேர்வு விடுமுறையில் படித்து முடித்தேன். சுஜாதாவின் 'ஆ' நான் வாசித்த அவருடைய முதல் கதை , நாவல் அல்லது புத்தகம் எல்லாமே. இரண்டு வருடங்களுக்கு முன் படித்த ஓஷோவின் நாரதரின் பக்தி சூத்திரம் என்னை மாற்றிய ஒன்று. என்னுடைய நண்பனின் புத்தகம் என்கிற கர்வத்துடன் எந்த புத்தகத்தையாவது படித்திருக்கிறீர்களா?யுவகிருஷ்ணாவின் விளம்பர உலகம் என் மனதில் அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கிய புத்தகம்.2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
.
15 comments:
அதிஷாவின் பதிலகள் கவர்ந்தன.
\\சாரு,நிவேதிதா இருவருடனும் இப்போதும் எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து நட்பு பாராட்டும் அளவுக்கு நெருக்கம் உண்டாகியிருக்கிறது\\
இதுதான் புரியவில்லை.
நன்றி ஆதி. அனுஜன்யா குறிப்பிட்டிருக்கும் சுஜாதாவின் நாவல்களுடன் நான் வாசித்ததில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வும் சேர்த்தி. பாலகுமரனின் இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது. ஸ்டெல்லா புரூஸின் ‘அது ஒரு நிலாக்காலம்’. சொல்ல விட்டுப் போனவை:)!
மற்றவர்களின் பகிர்வுகள் அருமை.
//சாரு,நிவேதிதா இருவருடனும் இப்போதும் எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து நட்பு பாராட்டும் அளவுக்கு நெருக்கம் உண்டாகியிருக்கிறது.//
சாரு நிவேதிதா இரண்டு பேர் இருக்காங்களா.இல்லை ஞாநி சாரு அல்லது நிவேதிதா என்ற பெயரில் ஒளிந்து இருக்கிறாரா.
//இரா. முருகனின் கதைகள் எதுவும் படித்ததில்லை. கிடைத்தால் வாங்கி அனுப்பசொல்லியிருக்கிறேன்.//
இரா.முருகனின் சிறுகதைகள் முழுத் தொகுப்பு கிழக்கு வெளியிட்டது. worth reading.
ஒரு சிலரின் பதில்கள் படிக்கும்போது மனதிற்குள் ஒரு சின்ன பொறாமை வரும். அதிஷாவின் கடைசி பதில் படித்தபோது அப்படி தான். விதவிதமாகப் படிக்க இதை விட வேறு என்ன சூழல் வேண்டும்?
சாரு,ஞானி னு வந்திருக்க வேண்டியது சின்ன தவறு! மன்னிக்கவும் நண்பர்களே!
You are Doing a Great Job ..Thanks
TAMIL CAFE.NET என்ற வலைத்தளத்தில் பல தமிழ் நூல்கள் ஈ புக்ககாக தொகுக்கப்பட்டுள்ளன...
எல்லோருக்கும் பிடித்ததாய் பொன்னியின் செல்வன் உள்ளது.அப்புத்தகம்தான் என் வாழ்கையையே புரட்டி போட்டு விட்டது..!
@அதிஷா
முதலில் படிக்கும் போது கவனித்தவன், போனில் கேட்டுவிட்டு திருத்தவேண்டும் என நினைத்து மறந்துவிட்டேன் அதிஷா. தவறு என்னுடையதும்தான், ஸாரி.! இப்போது திருத்திவிட்டேன்.
பலருக்கும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகள் - பாலகுமாரன், சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் விருப்பம் பொதுவாக இருக்கிறது.
நல்ல முயற்சி ஆதி.
மூன்றையும் இப்போதுதான் படித்தேன்...
படித்ததில் விடுபட்டவை குறித்து அறிந்து கொள்ள ஏராளம் இருக்கிறது.
மிக்க நன்றி.
எல்லார் பதில்களுமே அருமை. எவ்ளோ மெச்சூர்டா இருக்காங்க.
//இப்போது சாத்தியமெனும் சூழலில் சந்தர்ப்பம் வாய்க்கையில் வாசித்து வியந்த வலைப்பதிவர் சிலரைச் சந்திக்க ஆவல்:)!//
லக்ஷ்மியக்கா உங்களுக்கு சீக்றமே அப்பான்மெண்ட் தரேன்.. :))
//கதை புத்தகம் தலைகாணி சைஸில் இருக்கும்,முழுதுமாக ஒரு தேர்வு விடுமுறையில் படித்து முடித்தேன். //
பயபுள்ள எப்டி புருடா விடுது பாருங்க.. தெரியாம, தேர்வுக்கே இதைத் தான் படிச்சார் இவர்.. :))
இந்தப்பகுதியில்தான் எவ்வளவு முயன்றும் ஃபான்ட்ஸ் ஒன்றுபோல செய்யமுடியவில்லை. படுத்திவிட்டது. மற்றபகுதிகள் ஓகே.!
நன்றி ராஜு, அர்விந்த்.! (சரி பண்ணியாச்சு, பாருங்கள்)
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி கேவிஆர்.!
நன்றி அதிஷா.!
நன்றி அகினிபார்வை.!
நன்றி வெங்கட்.!
நன்றி அம்மிணி.!
நன்றி கும்க்கி.!
நன்றி சஞ்சய்.!
உங்களின் பதிவு மீண்டும் ஞாபகப் படுத்தியது இழந்த எழுத்தின் சிகரங்களை வாழ்த்துகள் .
பகிர்வுக்கு நன்றி .
என்றும் அன்புடன்
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/
Athisha rocks! so do others! :))
Post a Comment