Tuesday, December 29, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - இறுதிப்‍பகுதி

புத்தகங்கள் குறித்த பிரபல பதிவர்கள் பேட்டியின் நான்காவதும் இறுதியுமான பகுதி இது. சுவாரசியமாக தங்கள் அனுபவங்களையும், தாங்கள் ரசித்த, ரசிக்கும் புத்தகங்களைக் குறித்தும் பகிர்ந்துகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எவ்வகையிலேனும் புதிதாக வாசிக்கத்துவங்கியவர்களுக்கு இந்த தொகுப்பு உதவியிருக்குமேயானால் அது என் நோக்கத்திற்கான பரிசு. தொகுப்பு குறித்த என் எண்ணங்களை நாளை விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

காண்க.. பகுதி 1
காண்க.. பகுதி 2
காண்க.. பகுதி 3

*****************************

அமிர்தவர்ஷினி அம்மா (சாரதா)

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

அதென்னவோ வீட்டருகிலும் சரி, பள்ளியிலும் சரி, எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்க நான் மட்டும் சதா சர்வகாலமும் எந்த புத்தகத்தையாவது கையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா கூட இவ படிக்க ஆரம்பிச்சிடுவா என்று அக்காவின் தோழி இன்னமும் சொல்வார்கள். நான் முதன் முதல் தொட்ட புத்தகம் லிப்கோவின் தமிழ் ஆங்கில டிக்‌ஷ்னரி, ஆரம்ப காலகட்டத்தில் மாமா பிரஸ்ஸில் வேலை செய்ததால் புத்தகம் என்று அது ஒன்று மட்டுமே வீட்டில் இருந்தது. அதற்குப்பிறகு வாடகை நூல் நிலையத்தின் மூலமாக பூந்தளிர், ரத்னபாலா, காமிக்ஸ் இப்படி ஆரம்பித்து ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவல்கள் என்று பயணப்பட்டு பள்ளி நூலகத்தின் பாலகுமாரன், சுஜாதாவில் வந்து நின்றது. பிறர் புத்தகங்களைப் படித்திருந்தாலும் ஆதர்சம் பாலகுமாரனும், சுஜாதாவும் தான். பள்ளி நூலகமும், வீட்டருகே இருந்த / இருக்கும் ஈஸ்வரி வாடகை நூலகம் (அலுவலக்ம் அருகே இருந்ததால் கன்னிமரா நூலகம்)தான் நான் அதிகம் சென்ற இடங்கள்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

வலைப்பூவுக்கு வந்த பின்னர்தான் நிறைய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களும் அறிமுகமாயிற்று. எனவே திட்டமிடல் இந்த வருடத்தில் தான் ஆரம்பம். சின்னதா ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். பார்ப்போம் :)

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

பாலகுமாரனை சந்திக்க விரும்பியது உண்டு, காரணம் அவர் புத்தகத்தின் முன்னுரையில் அவரின் வீட்டு முகவரியில் லாயிட்ஸ் ரோடு என்று அச்சடிக்கப்பட்டு இருக்கும். அது எங்கள் வீட்டிலிருந்து ரொம்பவே பக்கம், பக்கம் என்ன பக்கம், ஸ்கூலுக்கு போகும் வரும் வழியே அதுதான்னு வெச்சிக்கோங்களேன்.

ஒருமுறை மாமாவிடம் அவரைப்பார்க்கவேண்டும் என்று சொன்னதிற்கு செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்ட அனுபவமிருப்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. ஆனால் நான் பள்ளி விட்டு வரும் வரை, சில சமயம் காலை நேரங்களில் அவரை என் வீட்டருகே பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடம் விட்டு வந்த

ஒரு மதிய நேரத்தில் அவரை எதிரே பார்க்க நேரிட, சட்டென்று ஒரு குருட்டு தைரியத்தில், சார், நீங்க பாலகுமாரன் தானே, உங்க புக்ஸ்லாம் நான் நெறைய படிப்பேன் சார் என்று சொல்லி, ஒரு நீல நிற டைரியில் அவரின் சாய்வான கையெழுத்தை வாங்கினேன், அவரும் சிரித்துக்கொண்டே கையெழுத்துப்போட்டுவிட்டு

நல்லா படிம்மா, ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு போனார். அன்று சந்தோஷத்தில் சாப்பாடு கூட உள்ளிறங்கவில்லை.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

எனக்கு ஆரம்பகாலத்தில் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி உடன் புத்தகங்களை பகிர்ந்த நண்பன் ஆனந்த் (இப்போது எங்கிருக்கிறாய் ?) என் வாசிப்பனுவத்தை நீட்டிக்கச்செய்து, நிறைய கவிதைகள் எழுதி, ஒரு கவிதை மாதிரி தன் வாழ்நாளை குறுக்கி வாழ்ந்துவிட்டுப்போன தோழி சுதா, சென்ற வருடம் புத்தக கண்காட்சி (ஜனவரி முதல்வாரம்)தான் நாங்கள் கடைசியாக சந்தித்தது.

அதன் பிறகு இருபது நாட்கள்தான் அவள் இந்த உலகத்தில் வாழ்ந்தாள். இப்போது புத்தககண்காட்சி என்று சொல்லும்போதே அவளின் ஞாபகமும் சற்று அதிகமாகவே வந்துவிடுகிறது.

***********************************


வித்யா


1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

பள்ளி நாட்களில் அப்பா வாங்கி வரும் டிங்கிள், கோகுலம் போன்ற புத்தகங்கள் தான் அதிகம் வாசித்தது. விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போது அண்ணா அறிமுகப்படுத்திய காமிக்ஸ்களில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. ஆல்டைம் பேவரிட்டாக இருந்தது/இருப்பது இரும்புக்கை மாயாவி தான். பின்னர் அடுத்த கட்டமாக ராஜேஷ்குமாரை அண்ணாவும், கல்கி, ஷெல்டன் மற்றும் சுஜாதைவை அப்பாவும் அறிமுகப்படுத்தி வைத்தனர். நண்பர்கள் மூலமாக வைரமுத்து. நினைவில் தங்கி விட்ட புத்தகங்கள் எனப் பார்த்தால் சுஜாதாவின் மர்மக் கதைகள் (கொலையுதிர் காலம்), வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், கல்கியின் அலை ஓசை, சிவகாமியின் சபதம், ஷெல்டனின் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ், பிளட்லைன் இன்னும் பல.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

பெரும்பாலும் இல்லை. திட்டமிட்டு வாங்குவது என்பது நண்பர்களின் பரிந்துரை அல்லது ரிவ்யூக்களின் அடிப்படையில் கண்காட்சியில் மட்டுமே நடக்கும். மற்ற தருணங்களில் கண்ணில் பட்டதை கவர்ந்திழுக்கும் தலைப்பால் கொஞ்சம் மேய்ந்துவிட்டு வாங்குவேன். இந்த புத்தகக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான ரஹோத்தமனின் ராஜிவ் கொலை வழக்கு பற்றிய புத்தகமும், சுஜாதாவின் நாவல்களின் தொகுப்பு சிலவும் வாங்கலாம் என்றிருக்கிறேன். மற்றவை அங்கேயே முடிவாகும்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சுஜாதா. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என அவரை அடையாளம் காணும் முன்னரே அவரை சந்தித்து, அவர் கையொப்பமிட்ட கற்றதும் பெற்றதும் புத்தகத்தை பரிசாக வாங்கிவிட்டேன். பள்ளியில் நடந்த அறிவியில் கண்காட்சியை காண வந்திருந்தவர் எங்கள் டிஸ்ப்ளே நன்றாக இருந்ததாக சொல்லி மேடைக்கு அழைத்து புத்தகம் தந்தார் (நால்வருக்கு ஒரு புக். சுழற்சி அடிப்படையில் வைத்துக்கொண்டிருந்தோம். கடைசியாய் வைத்திருந்தவனின் தொடர்பு அற்றுப்போய்விட்டது. புத்தகம் இப்போது இல்லாதது பெரும் வருத்தம்).

4.புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

கல்லூரி, வேலை என்றானபின் வாசிப்பு பழக்கம் பெருமளவிற்கு குறைந்தது. தமிழில் இன்னும் சுஜாதாவை தாண்டி வெளியே வரவில்லை. பா.ரா, ஆதவன் போன்றோரை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நண்பன் ஒருவன் "எத்தனை நாளைக்குத் தான் சுஜாதாவே படிப்ப. கொஞ்சம் நவீன இலக்கிய கதைகளையும் படி" எனக் கூறி ஊமைச்செந்நாயை கையில் கொடுத்தான். ஹூக்கும். இரண்டே கதை. ஒன்னுமே புரியாமல் டரியலாகி "தெய்வமே நான் பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறேன். எலக்கியவியாதி ஆவ வேணாம். பொஸ்தகத்த புடி ராசா" என கையில் திணித்தாயிற்று. நான் ஜெ.மோ வை குறை கூறவில்லை. என் சிற்றறிவுக்கு முடியவில்லை. 2010ல் என் அலமாரியில் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் முடிக்க வேண்டும். நடக்கிறதா என பார்ப்போம்.

****************************************


வடகரை வேலன்1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

படிக்கும் புத்தகங்கள் அந்தந்த வயதிற்கு தகுந்தாற்போல மாறும்.
1. வாஷிங்டனில் திருமணம் -சாவி
2. கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன்
3. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
4. ஆழி சூழ் உலகு - ஜோ.டி. க்ரூஸ்
5. அஞ்சலை - கண்மணி குணசேகரன்
6. அளம் - சு தமிழ்ச்செல்வி
7. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் -எம்.ஜி.சுரேஷ்
8. மணல் கடிகை - எம்.கோபால கிருஷ்ணன்
9. என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன்.
10. காடு -‍ ஜெயமோகன்

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

அப்படி வாசிக்கும் பழக்கம் இல்லை. எப்படியும் நல்ல எழுத்தாளர்களைப் பற்றிய செய்தி காதுக்கு வந்து விடும் என்பதால் அதிகம் பிரபலமாகாதவர்களைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம். நல்ல எழுத்து அங்கேதான் கிடைக்கும்.

உ-ம். கவிப் பேரரசு எழுதிய கருவாச்சி காவியத்துடன் என்னால் ஒட்டவே முடியவில்லை.
அதே சமயம் அஞ்சலை நாவல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தமிழில் நான் படித்த நாவல்களில் முதலிடத்தில் இன்றளவும் இருப்பது அதுதான்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

நான் சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் இருவர். வண்ணதாசனும், நாஞ்சில் நாடனும். இருவருமே பாசாங்கற்றவர்கள். ஒன்று விட்ட அண்ணனிடம்(உங்கள் பெரியப்பா மகன்) இருக்கும் ஒரு நேசம் இவர்களுடன் எனக்குக் கிடைத்தது. பாசாங்கற்றவர்கள்.போலவே தங்கள் எழுத்தை எந்தவித சந்தைப் படுத்துதல் மற்றும் விற்பனைத் திறன் இல்
லாமல் வாழ்கின்றவர்கள்.

நான் சந்திக்க விரும்புவது கண்மனி குணசேகரனை.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

உன் சம்பாத்யத்தில் 10% புத்தகங்களுக்காகச் செலவிட வேண்டுமென்ற என் தந்தையின் அறிவுரைதான். புத்தகங்களைப் பார்க்கும்போது ஞாபகம் வரும். சென்னை வரும்போதெல்லம் உடன் வந்தவரை ஆட்டோவில் ஏற்றி மெரினாவிற்கு அனுப்பி விட்டு பழைய புத்தகக் கடைகளில் மேய்வது எனக்குப் பிடிக்கும். ஒரு வகை தொகை இல்லாமல் வாங்குவதும் உண்டு.

**************************************

நர்சிம்1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?

அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் மனதோடு தங்கிவிட்ட புத்தகங்கள் என்றே தோன்றுகிறது. காரணம் அந்தக் காலகட்டம் மட்டுமே மனதில் தங்கிவிட்டதாலும் இருக்கலாம், அதன் பின்னர் வந்த காலங்கள் எல்லாம் பொருளாதார, தார
அக்கப்போர்ளுக்கு இடையில் சிக்கிவிட்டதாலும் இருக்கலாம்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

ஒவ்வொருமுறை நல்ல புத்தகங்களைப் பற்றி கேள்விப்படும்பொழுதும் உடனே வாங்க வேண்டும் என்று குறித்து வைத்து உடனே மறந்தும் போய் விடுவது வழக்கம்.

புத்தகத்தை திறந்து ஓரிரண்டு பக்கங்கள் படித்துப் பார்த்து வாங்குவதும் வாங்கியவுடன் அதை முகர்ந்துபார்ப்பதும் வழக்கம்.
இந்த முறை நிறைய லிஸ்டில் இருக்கிறது.. ராஜீவ் மேட்டர்.கிழக்கு பதிப்பகம். வா.மு.கோமு. என ..

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சுஜாதா.. நிறைவேறியது. ஆனால் நான் பார்த்தது அவருக்குத் தெரியாது. படுத்திருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள்.

4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

ம். இது குறித்து நிறைய சுவாசிப்பு என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். என்றாலும்

பதிவு எழுதுவதற்கு முன்னும் பின்னும் என இரு வகைகளாக வாசிப்பைப் பிரிக்க வேண்டி இருக்கிறது. பதிவு எழுத வருவதற்கு முன்னர் வாசித்த பல புத்தகங்கள் இப்பொழுது மீள்வாசிப்பில் வேறு கோணங்களில் இருக்கிறது. மோக முள்ளை அப்பொழுது வாசிப்பதற்கும் இப்பொழுது வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உணர்கிறேன்.போலவே மரப்பசு.

ரமேஷ் ப்ரேமின் கடுங்காவல் பெருக்கம் என்ற இரண்டு ப்ரெஞ்ச் நாடகங்கள் குறித்த புத்தகம் மனதை பாதித்த ஒன்று

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் சில கதைகளும் நாவல்களும், எப்பொழுது சோர்வாக உணர்ந்தாலும் கண்ணதாசனின் வனவாசம், சா.கந்தசாமியின் சாயாவனம், மயிலை சீனிவேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை போன்றவை மீள் வாசிப்புகளுக்கு சிறந்தவையாக இருக்கின்றன. சாருவின் ராஸலீலாவும் பிடித்த ஒன்று.

சுஜாதாவின் மேகத்தைத் துரத்தியவனில் ஒரு இளைஞன் இன்னொருவர் வீட்டில் தங்கிப் படும் வேதனையை சொல்லிய விதம் மறக்க முடியாத ஒன்று. நிலாநிழல் என்ற கதையிலும் கிரிக்கெட்டைப் பிரதானமாக வைத்து ஆனால் கிரிக்கெட் தவிர விடலைப் பருவத்தின் மாற்றங்கள் என கதை சொல்லும் விதம் போன்றவை மனதில் பதிந்தவை.

இப்பொழுது தீட்டுப்பட்ட நிலா என்ற சுகுணாதிவாகரின் கவிதைத் தொகுப்பும் மனதை பாதித்தது. அதில் உள்ள ஒரு கவிதை..

இறக்கைகள் அறுந்து வீழ்ந்த
தேவதையொருத்தியை
எடுத்து வளர்த்தேன்

நிலவின் சுவர்களில்
எழுதப்பட்ட பாடலைப்
பாடிக்காட்டுவாளெனக்கு

காலை எழுகையில்
என் மார்புக் காம்புகளில்
பனியொத்த முத்தம் ஈவாள்

செடிகளில்
பட்டாம்பூச்சிகளை பறித்துத் தருகிற
அவளைப் படுக்கையில் தள்ளி
வலுக்கட்டாயமாகய் குறியைத்
திணித்தபோதுதான் பார்த்தேன்

யோனியில் முளைத்திருந்தது
குறுவாளொன்று.

நன்றி ஆதி.

(பதிவர்களுக்கு : முதலில் வெகு சாதாரணமாக இரண்டு வரிகளில் பதில் அனுப்பி இருந்தேன்.. வெண்பூவின் பேட்டியைப் பார்த்து டரியல் ஆகி இந்த பதில்களைத் தந்திருக்கிறேன்.. ஏதேனும் எக்ஸ்ட்ராவாக உணர்ந்தால் அதற்கு வெண்பூதான் பொறுப்பு.)

.

24 comments:

குசும்பன் said...

//முதலில் வெகு சாதாரணமாக இரண்டு வரிகளில் பதில் அனுப்பி இருந்தேன்.. வெண்பூவின் பேட்டியைப் பார்த்து டரியல் //

வெண்பூ போட்டோவை பார்த்துதான் டரியள் ஆகி புது போட்டோவும் அனுப்பியதாக ஆதி சொன்னார்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரெண்டு நாட்களில் 4 பதிவு.. அதுவும் அலைன்ட்மென்ட் பிரச்சினைகளில் தாவு தீர்ந்து டரியலாகிவிட்டேன்.! அவ்வ்வ்வ்..

வேட்டைக்காரன், அவதார் பதிவுகளெல்லாம் ட்ராஃப்டில் பழசாகிப்போய்விட்டன..

இப்ப நான் என்ன செய்ய.. குசும்பன்?

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒன்றுதிரண்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.!

KaveriGanesh said...

ஆதியின் இந்த முயற்சி பாராட்டதக்கது.

ராமலக்ஷ்மி said...

அனைவரின் பகிர்வும் வெகு சுவாரஸ்யம்.

உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் ஆதி!

குசும்பன் said...

//வேட்டைக்காரன், அவதார் பதிவுகளெல்லாம் ட்ராஃப்டில் பழசாகிப்போய்விட்டன..
இப்ப நான் என்ன செய்ய.. குசும்பன்? //

ம்ம்ம் உயிர்மை பதிப்பகத்துல சொல்லி புக் அடிகவா சொல்லமுடியும்?

விதி! அதையும் ரிலீஸ் செய்யும். படிச்சிடுறோம். எவ்வளோவோ தாங்கிட்டோம் இத தாங்கமாட்டோமா?

பா.ராஜாராம் said...

அருமையான விஷயம் ஆதி இது.மனிதர்கள் முகத்தில் கிடைக்கிற சுவராசியம் போலவே,ஆதி முதல் அவர்கள் வாசிப்பு பரிணாமங்களை பார்க்க,உணர வெகு சுவராசியமாக இருந்தது.நல்ல உழைப்பு!மிக்க நன்றி மக்கா!

செல்வேந்திரன் said...

@நர்சிம்: அது என்ன கானா உலகநாதன் மாதிரி எல்லா படங்களிலும் திக்கை நோக்கியே இருக்கிறீர்கள்?! :))

RAMYA said...

நல்ல முயற்சி ஆதி, புதுமைக்கு பெயர்தான் ஆதி :)

அலைன்ட்மென்ட் பிரச்னைக்கு கொஞ்சம் "HTML CODING" கத்துக்கோங்க!

ஜெயந்தி said...

எல்லார் பேட்டியையும் வாங்கிப்போட்டுவிட்டு நீங்க எஸ்கேப் ஆகியிருக்கிறீங்க! ஓ! நீங்க பேட்டி எடுப்பவர் மட்டுமா?

துபாய் ராஜா said...

நல்லதொரு வித்தியாசமான முயற்சி.

கும்க்கி said...

ஜெயந்தி said...

எல்லார் பேட்டியையும் வாங்கிப்போட்டுவிட்டு நீங்க எஸ்கேப் ஆகியிருக்கிறீங்க! ஓ! நீங்க பேட்டி எடுப்பவர் மட்டுமா?

ராணுவ ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பார்கள்.....

கும்க்கி said...

செல்வேந்திரன் said...

@நர்சிம்: அது என்ன கானா உலகநாதன் மாதிரி எல்லா படங்களிலும் திக்கை நோக்கியே இருக்கிறீர்கள்?! :))

திரைப்படம் தயாரிக்கும் எண்ணம் ஏதேனும் உண்டா....?

Anonymous said...

//சுஜாதா.. நிறைவேறியது. ஆனால் நான் பார்த்தது அவருக்குத் தெரியாது. படுத்திருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள்.//
:(

கார்க்கி said...

////வேட்டைக்காரன், அவதார் பதிவுகளெல்லாம் ட்ராஃப்டில் பழசாகிப்போய்விட்டன..
இப்ப நான் என்ன செய்ய.. குசும்பன்? //

ம்ம்ம் உயிர்மை பதிப்பகத்துல சொல்லி புக் அடிகவா சொல்லமுடியு/

அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை சகா.. போட்ருவோமா?

பரிசல்காரன் said...

YOU DONE IT AATHI!

ஸ்ரீமதி said...

நல்லதொரு முயற்சி அண்ணா. என்னைப்போல் அனா, ஆவன்னா படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வேட்டைக்காரன் பதிவை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

வித்யா said...

நல்ல முயற்சி ஆதி. வாழ்த்துகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பலரது புத்தக ரசனைகளைத் தொகுத்தது ஒரு வித்தியாசமான முயற்சி.

நல்லா வந்திருக்கு பேட்டிகள். நன்றி ஆதி.

பாபு said...

வாழ்த்துக்கள் ஆதி!
wish you a very happy new year

Rithu`s Dad said...

நல்லா இருக்கு ஆதி..

என்னைப்போல் புத்தகம் படிக்க ஆரம்பித்துள்ள வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது...

இதிலிருந்து உங்கள் தேர்வாக..

புத்தகம்
எழுதியவர்
பதிப்பகம்
விலை

அப்படினு மொத்தமா ஒரு லிஸ்ட் போட்டால் இன்னும் நல்லா இருக்கும்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் ஆதி

ஆதிமூலகிருஷ்ணன் said...

கணேஷ்,
ராமலக்ஷ்மி,
குசும்பன் (அடுத்த வாரம் வரும்யா),
பா.ராஜாராம் (நேரம் கிடைப்பதுதான் கொஞ்சம் சிரமமாகிவிட்டது..ஹிஹி),
செல்வா,
ரம்யா (நீங்கதான் கத்துக்குடுங்களேன்),
ஜெயந்தி (நாளைக்கு பெஸலா போடலாம்னு இருக்கேன்),
ராஜா,
கும்க்கி,
அம்மிணி,
கார்க்கி,
பரிசல்,
ஸ்ரீமதி,
வித்யா,
சுந்தர்ஜி,
பாபு,
ரிதுஸ் டாட் (என்னை ஒரு வழியாக்கலாம்னு பார்க்கிறீங்களா? போய் படிச்சுப்பார்த்து லிஸ்ட்டு போட்டுக்கங்கையா :-)),
அமித்து அம்மா..

அனைவருக்கும் நன்றி.!

Karthik said...

உண்மையிலேயே நல்ல முயற்சி. நன்றிங்ணா. :)