Thursday, April 30, 2009

மிக்ஸ்டு ஊறுகாய்

ஊரோடு ஒத்துவாழ்.! கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுமே அவியல், துவையல், இட்லி, சாம்பார்னு தொகுப்பு பதிவுகளைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்க நான் மட்டும் பண்ணலைன்னா நல்லா இருக்காது. நானும் ‘த்ரீ இன் ஒன்’ அப்படின்னு எழுதிக்கிட்டுதான் இருந்தேன். தலைப்பைப் பார்த்து ஏதும் டெக்னிகல் பதிவுன்னு நினைக்கிறாங்களோ தெரியலை, ஒரு நாதியும் வர்றதில்லை. ஆகவே பெயர் மாற்றிவிடலாம் (பெயர் மாத்துறது நமக்கு புதுசா என்ன?).

‘மிக்ஸ்டு ஊறுகாய்’ .. எப்பிடி? நாங்களும் திங்க் பண்ணுவோமில்ல..

()()()()()()()()

முதல் பதிவை ஹிட்டாக்கணும்னா வேற வழி.? குசுகுசுதான்.. சே.. கிசுகிசுதான்.

ஏற்கனவே பதிவுலகை பிரபல பத்திரிகைகள் இப்போது கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதை அறிவீர்கள். பலரது படைப்புகளையும் ஏற்கனவே பிரிண்டில் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். இனி இது மேலும் அதிகரிக்கும் என்று பச்சிகள் (கரெக்டா? இல்ல பஜ்ஜியா?) சொல்கின்றன. விரைவில் நம்ம செட்டு (அதான் பெரிய சேவிங் செட்டு ஒண்ணு இருக்கோம்ல) பதிவர்களை பிரபல வார இதழ்களில் பார்க்கலாம். தயாரா இருங்கப்போவ்..

()()()()()()()()

‘சொல்லச் சொல்ல இனிக்கும்’ படத்தில் ஒரு செம்ம்ம்ம குத்துப் பாடலைப் பாடி பிரிண்ட் என்ன சினிமாவையும் உட்டு வைக்கமாட்டோம் என்று கேட்கக்கேட்க இனிக்கவைத்து ஒரு நல்ல துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கும் அண்ணன் எம்.எம்.அப்துல்லாவை வாழ்த்துவதில் அகமிக மகிழ்கிறோம். இதைத்தொடர்ந்து ஒரு சீனியர் பதிவர் முதலில் வெளிநாட்டுமாப்பிள்ளை, அடுத்து வில்லன், அடுத்து ஹீரோ, அடுத்து சிஎம் என கனவில் புலம்பிக்கொண்டிருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

()()()()()()()()

ஏற்கனவே பல தோழிகள் பதிவுலகில் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், மேலும் ஆண் பதிவர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ‘ரமா’ தலைமையில் பிரபல பதிவர்களின் தங்கமணிகளும் பதிவுலகம் நோக்கி படையெடுப்பதாய் தகவல்கள் வருகின்றன. இந்த செய்தி ஒரு அழகான வீடு கட்டி குடிபுகுந்திருக்கும் அண்ணாச்சி வடகரை வேலனுக்கு வாழ்த்துச்சொல்ல அழைத்த போது அவர் பயந்துகொண்டே தெரிவித்த தகவல் அல்ல. ஏற்கனவே என் தலைமையில் சொம்பைத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கும் ‘ஆண்கள் பாதுகாப்பு சங்கம்’ தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்படவேண்டும் எனவும், மாற்று தலைவருக்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது எனவும் சங்கத்தில் பேச்சு அடிபடுகிறது. ‘திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கைப்பதிவுகள்’ முன் போல வீரியமாக எழுதப்படுவதில்லை என என் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 24 பதிவுகள் எழுதிய நிலையில் விரைவில் 25வது பதிவு வெளியாகும் என்றாலும் யாராவது வீரமான தலைவர்கள் கிடைத்தால் நானும் பதவியை ராஜினாமா செய்ய காத்திருக்கிறேன்.

()()()()()()()()

சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவைக்கண்டு ஒரு பத்திரிகைப்பிரபலம், வெளியான அடுத்த 5 நிமிடத்திலேயே தொலைபேசியில் அழைத்துப்பாராட்டியதால் ஒரு ‘முக்கிய’ பதிவர் புளகாங்கிதம் (காகிதம் இல்லைப்பா..) அடைந்து தலைகால் புரியாமல் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது உபரிச்செய்தி.

()()()()()()()()

ரொம்ப நாளாக எனக்கு இன்னொரு விஷயத்தில் சந்தேகம்.! அதேதான்.. விஷயத்தில்தான் சந்தேகமே.. அனுஜன்யா முதலானோர் விஷயத்தை ‘விதயம்’ என்கிறார்கள். அதிஷா போன்றோர் அதை ‘விடயம்’ என்கிறார்கள். ஏராளமான ஆங்கிலச்சொற்களும், பிறமொழிச்சொற்களும் வழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை எந்த தயக்கமும் இல்லாமல் நாம் (மேற்குறித்த அதே பதிவர்கள் உட்பட) பயன் படுத்திவரும் சூழலில், இந்த ‘விஷயம்’ மட்டும் என்ன பாவம் செய்தது? தமிழ் வளர்த்தல் என்றால் ‘செய்தி’ என்ற சொல்லை பயன்படுத்தலாம். மாறாக ஒலிதான் பிரச்சினையென்றால் ‘ஷ’ வின் மிக நெருங்கிய தமிழ் ஒலி வடிவான ‘ச’ வை பயன்படுத்தலாம். அதை விடுத்து ஏன் இப்படி? புரியவில்லை.. விளக்குங்கள்.

அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?

()()()()()()()()

இது மாதிரி தொகுப்புப்பதிவில் இறுதியில் ஒரு கவிதையோ, ஜோக்கோ போடணுமாமே.. யாருபா இந்த ரூல்ஸெல்லாம் கொண்டுவந்தது.?

இதோ ஒரு விஐபி பதிவர் எழுதிய கவிதை..

நான் உனக்கு
SMS அனுப்பினேன்
வானம் இருட்டிக்கொண்டிருந்தது
நீ பதில் அனுப்பியிருந்தாய்
மழை பெய்துகொண்டிருந்தது.

.

Wednesday, April 29, 2009

(மூத்த) பதிவர் புகைப்படங்கள்

முன்குறிப்பு : யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நாமெல்லாம் நன்கறிந்த சில மூத்த பதிவர்களின் புகைப்படங்களை வெளியிடுகிறேன். யாருக்கேனும் ஆட்சேபணையிருப்பின் முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். தெரிவித்தால் உடன்  பதிவிலிருந்தும் நீக்கிவிடுகிறேன். இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட, எனது ஸ்டாக்கில் உள்ள புகைப்படங்கள் மட்டுமே.

இது கலக்கல் ஸோலோ..

DSC05281DSC05302DSC04632 DSC03985DSC05320DSC04838DSC05260 DSC05266DSC04724 DSC02223DSC04081DSC02200DSC04269DSC04900DSC05336DSC04008    DSC03956    DSC04639 DSC04577 DSC04600  DSC04693 DSC04827

இனி சில குழு புகைப்படங்கள்..

DSC04727DSC04854DSC04594DSC05292 DSC05286 DSC05288

DSC02234 DSC02205

DSC04160  DSC04754

இது டிஸ்கி :

DSC04952

போட்டோ போட்டதுக்கே எங்க வெச்சு உதைக்க போறாங்கன்னு தெரியலை.. இந்த லட்சணத்துல பேர வேற கேக்குறீங்களே.? இது நாயமா.?

.

Monday, April 27, 2009

பேசித்தீராத ஒன்று.!

காதல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது.. காமம் அதிலிருந்து வண்ணங்களை விசிறியடிக்கிறது..

இந்தக்கவிதையை படித்துவிட்டு என்னை அழைக்கிறாய். ‘எத்தனை ரசனையானவன் நீ..?’ தொடர உன்னிடம் வார்த்தைகளில்லை. என்னிடமும் பதிலாகத் தர ஏதுமில்லை. நாம் பேசி எத்தனை மாதங்களிருக்கும்.. ஸாரி, வருடங்களிருக்கும்? இல்லை. யுகங்களாகிவிட்டன தோழி. அது வேறு உலகம், வேறு காலம். அங்கிருந்தது நீயல்ல.. அவள் இறந்து போய்விட்டாள்.

காமம் வேறு. நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் பெண்களிடத்தெல்லாம் கண்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது. காமம் தீராத பசி. யாரையும் உண்ண அது எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆனால் என்னுள் தோன்றிய நாள் முதல் உன்னைத்தின்று வளர்ந்த காதல்.. வேறு உணவின்றி பசியோடு அலறித்துடித்தே ஓர் நாள் இறந்துபட்டது. அது ஆயிற்று எத்தனையோ வருடங்கள். உறவிருப்பதாய் எண்ணினால் அதன் கல்லறையின் மேல் ஒரு ரோஜா மலரை வேண்டுமானால் இப்போது நீ வைத்துப் போகலாம்.

Love_by_LadybirdM

காரணங்களா? அதன் தேவையென்ன இப்போது? விந்தையானது இந்த வாழ்க்கை.! அற்புதங்களையெல்லாம் அற்பங்களே அடித்துச் சிதறச்செய்கின்றன.

இந்தக்கவிதை எப்படி உன்னில் என்னை நினைவூட்டியது? உன்னுடன் காதலைச் செய்துகொண்டிருந்த போது காமம் ஓர் தளிராகத்தான் இருந்தது. முத்தங்கள் இரண்டு வகைப்படலாம். காதலின் பனித்துளியாகவும் அது இருக்கிறது, காமத்தின் துளிதணலாகவும் அது இருக்கிறது. அப்போது பனித்துளியை மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். காதல் காமத்தை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் உன்னால் காதல் கொல்லப்பட்டபோது நான் உன்னைக்கொன்றேன். காமம் தனித்துவிடப்பட்டது. உடலில் வேர் பிடித்து காமம் தனித்தே திரண்டு வளர்ந்திருக்கும் இப்போது உனது அழைப்பு.. கண்ணியமா? அப்படியென்றால்.?

நான் உன் கண் பார்த்தே பேசுவேன்..

“ஆகாஷ், நடக்க ஆரம்பிச்சுட்டானா.?”

(Photo courtesy : Deviantart).

சென்னை பதிவர் சந்திப்பு (25.04.09)

இந்த முறை பதிவர் சந்திப்பு மிகுந்த ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. உள்ளூர் மட்டுமில்லாமல் சில முக்கிய வெளியூர் பதிவர்களும் வருவதான திட்டத்தால் வழக்கத்தை விட அதிகபட்ச கூட்டம் கூடலாம் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்தது நடந்தது. அலைகடலென திரண்டுவிட்டனர்.

நான் வழக்கம் போல தாமதமாகவே (ஆப்பிஸ்ல லேட்டாயிருச்சு.. ஆப்பிஸுக்கு லேட்டானா வீட்டுல லேட்டயிருச்சுன்னு சொல்றதில்லையா, அதுமாதிரி..) சென்றேன். பலரையும் ஒரு ‘ஹாய்’ கூட சொல்லாமல் மிஸ் பண்ணுமளவுக்குக் கூட்டம். ஒரு 50 பேர் இருக்கமாட்டாங்களா டோண்டு சார்.?

வழக்கம் போல உள்ளூர் தலை(வர்)களான யெஸ்.பாலபாரதி, லக்கிலுக், நர்சிம், சுந்தர்ஜி, பைத்தியக்காரன், ரமேஷ்வைத்யா, அதிஷா, புதுகை அப்துல்லா, டாக்டர் புரூனோ, கேபிள்சங்கர் போன்றோர் கூடியிருக்க சீனியர்(வயசுல மட்டுமில்லைங்க) பதிவர்கள் டோண்டு ராகவன், சிவஞானம்ஜி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய விருந்தினரான மூத்த(நிஜமாகவே மூத்த) பதிவர் அனைவரின் அன்பு அண்ணாச்சி ஆசிஃப்மீரான் விழா நாயகராக இருந்தார். அதுமட்டுமில்லாமல் சிறப்பு விருந்தினராக வெளியூர்களில் இருந்து செல்வேந்திரன், கார்க்கி (ஹிஹி..), வெயிலான், வால்பையன் ஆகியோர் வந்து கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

முன்னாள் முக்கிய பதிவரான இளவஞ்சியுடன் பேச வாய்ப்புக்கிடைத்தது. தண்டோரா வலிய வந்து அறிமுகம் செய்துகொண்டார் (நம்மையும் ஊர் நம்புது பாருங்களேன்). தாமிரா என்ற பெயரின் வீச்சிலிருந்து மீள இன்னும் சிறிது காலமாகலாம் என எண்ணுகிறேன். கட்டியணைத்துப் பகிரும் பைத்தியக்காரனின் அன்பே அன்பு. மேலும் பலரையும் அறிமுகம் செய்துகொண்டேன்.

காவேரிகணேஷ், ஹசன், அக்னிபார்வை, தமிழ்குரல், ஜாக்கிசேகர், ரௌத்ரன், ஊர்சுற்றி, ஸ்ரீவத்சன் இன்னும் பலரையும் கண்டேன். மேலும் பலரையும் அறிமுகம் செய்துகொள்ள இயலாமல் மிஸ் செய்தேன். வழக்கம் போல குழுக்களாக பேசி மகிழ்ந்திருந்தோம். தொடர்ந்த தேனீர் விருந்தும் அமர்க்களப்பட்டது. ரெகுலராக சந்திப்புக்கு வந்துவிடும் வெண்பூ, மற்றும் முரளிகண்ணன் இல்லாதது ஒரு சிறிய குறை. புகைப்படங்கள் எடுத்தேன். காமிராவில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றுவதில் சிக்கல். ஆகவே அவை பின்னர்..

அதிஷாவும் நானும் குசுகுசுவென என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதையோ, சந்திப்பு முடிந்து தொடர்ந்து வேறெங்கோ நிகழ்ந்த தேனீர் விருந்தைப்பற்றியோ, செல்வேந்திரன் சொன்ன A ஜோக்கையோ, வெயிலான் தந்த கிஃப்டைப்பற்றியோ, இந்தமுறையும் பின்நவீனம் குறித்து ஆராய்ச்சி நிகழ்ந்தது பற்றியோ நான் மூச்சு விடமாட்டேன்பா..

டிஸ்கி : என்னோட பதிவெழுதவந்தவர்கள், பின்னர் வந்தவர்கள் என எல்லோரும் எக்கச்சக்க ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் என பின்னிப்போய்க் கொண்டிருக்க.. ஹிட்ஸை விடுங்க, ஃபாலோயர்ஸ் லிஸ்டை மட்டும் பாருங்க.. வயித்தெரிச்சல்.! மீட்டர் ரிப்பேராகிவிட்டதென நினைக்கிறேன். 120லிருந்து 123 வருவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. ஆகவே சில சிறப்பு பரிசுத்திட்டம் அறிவிக்கலாம் என உள்ளேன். பம்பர் பரிசு : 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. 200வது நபருக்கு சூப்பர் பம்பர் காத்திருக்கிறது. இப்போதைக்கு சஸ்பென்ஸ்.!

.

Wednesday, April 22, 2009

எனக்குப்பிடித்த ஹீரோக்கள் : நிஜ டாப் 10

முந்தைய ‘போங்கு டாப் 10’ போட்டதிலிருந்தே எனக்கு உண்மையிலேயே மிகவும் பிடித்தமான டாப் 10 தமிழ் ஹீரோக்கள் பற்றி பதிவு போட வேண்டும் என ஆசையிருந்தது. இப்போதுதான் அதற்கு நேரம் கிடைத்து, எழுதத்துவங்கிய பின்னர்தான் தெரிகிறது அப்படிப் பிடித்தமானவர்கள் 10 பேர் கூட இல்லையென்று. என்ன செய்ய.? குறைந்தபட்சம் கொஞ்சூண்டாவது எதிர்கால நம்பிக்கையை தருபவர்களையும் லிஸ்ட்டில் சேர்த்து 10 பேரை ஒப்பேற்றிவிட்டேன்.

இதில் காலத்தையெல்லாம் கணக்கில் கொள்ளவில்லை. 80க்குப் பிந்தைய அத்தனை பேரையும் போட்டு கலக்கி ஒரு முடிவுக்கு வந்தேன். மூத்த கலைஞர்கள் லிஸ்ட்டில் இருந்தாலும் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட கார்த்திக், பிரபு போன்றவர்களை கணக்கில் கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட விருப்பம் மட்டுமே.!

10. விக்ரம்

டெடிகேஷன், உழைப்பு மற்றும் நடிப்பில் கவர்கிறார். நானும் விஷால் போல கைகளை முறுக்கிக் கொண்டு எதிரிகளை சுட்டு வீழ்த்தத்தான் செய்வேன் என்று இன்னும் பிடிவாதம் பிடித்தால் ஸாரி.. விக்ரம்.! இன்னும் வெரைட்டி நிறைய செய்யவேண்டியுள்ளது நீங்கள், கொஞ்சம் வேகம் பிளீஸ்.!

bheemaa170108_6

09. தனுஷ்

தனிப்பட்ட குரல், இளமைத்துள்ளல்.. கமர்ஷியல் பண்ணினாலும் ‘பொல்லாதவன்’ போல லாஜிக்கோடு முடிந்தவரை இயல்பாக இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். அந்தரத்தில் பல்லி சண்டையெல்லாம் வேண்டாமே.!

polladhavan291007_23

08. ஜீவா

ஈ’ என்ற ஒரு படத்தினால் உங்களுக்கு இந்த இடம். கமர்ஷியல் பண்ண பரத், சிம்பு என நிறையபேர் இருக்காங்க.. நீங்க கொஞ்சம் இந்தப்பக்கம் வரலாமே.!

jee031006_2

07. ஜெயம்ரவி

உங்களுக்கு ஏன் இந்த இடம்னு எனக்கே தெரியலை. குமரன், தாம்தூம், சந்தோஷ் என விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இருக்கிறீர்கள். இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.

dhaamdhoom140408_41

06. ஆர்யா

நான் கடவுளுக்கு முன்பே உங்களிடம் ஒரு ஈர்ப்பைக்காண முடிந்தது. அது நான் கடவுளிலும் முழுமையடையவில்லை. ஏதாவது பண்ணுங்க..

lrg-26345-naan-kadavul-stills-061

05. மாதவன்

என்ன மாதிரி ஒரு அறிமுகம்ங்க உங்களுக்கு, யாருக்காவது அமைஞ்சிருக்கா அந்தமாதிரி? ரன்’ னில் என்ன ஒரு வேகம். ‘அன்பே சிவம்’ல என்ன ஒரு சான்ஸ்.. எவ்ளோ லக்கி நீங்க.. ஆனா இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்னு ஆசைதான், வேற படம்தான் இல்லை.

Madhavan3

04. கார்த்தி

ஒரு படத்துக்காகவெல்லாம் இந்த இடம் உண்மையிலேயே கொஞ்சம் ஓவர்னுதான் தோணுது. பரவாயில்லை, நான் சமாளிச்சுக்கிடுறேன். அதக் காப்பாற்றுகிற மாதிரி அடுத்தடுத்து பண்ணிடுவீங்கதானே.?

paiya261208_13 03. சூர்யா

தவறுகளை திருத்திக்கொண்டு எழுந்துவந்தவர்ங்கிற மரியாதை உண்டு. பில்டிங்குக்கு பில்டிங் தவ்வுறது, அரிவாள் வெச்சுக்கிட்டு மெரட்டுறது, பஞ்ச் டயலாக் உடுறது, பத்து பேர பொரட்டி பொரட்டி எடுக்குறது, எந்த எண்ணை எப்படி எரியும்னு கிளாஸ் எடுக்குறது இதுக்கெல்லாம் நாங்க தனியா ரெண்டு பேர வெச்சிருக்கோம்.. பிளீஸ், உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கோம். ஏதோ பாத்துப் போட்டுக்குடுங்க சாமி.!

ayan_05

02. ரஜினிகாந்த்

தலைவா.. உனக்கெதுக்கு கமெண்ட்ஸ்? உனக்கெதுக்கு ஓய்வு.? நீ என்ன பண்ணினாலும் கிரேஸ்தான். நினைச்சதெல்லாம் பண்ணு, பார்க்க நாங்க இருக்கோம். எண்ணை கொட்டிக் கிடப்பதைக்கண்டு எச்சரிக்கும் வேலையாளை ‘நீ.. ப்ப்பாத்துப்போடா..’ என்று அள்ளும் காமெடி உன்னைத்தவிர வேறு யாருக்குப்பொருந்தும்? காமெடிக்கு இன்னும் கொஞ்சம் இடம் வேண்டும் என்பது சிறிய வேண்டுகோள்.

sivajii020407_21

01. கமல்ஹாசன்

ஒன்றா இரண்டா மொக்கைகள் எடுத்துச்சொல்ல உங்கள் படங்களில்? அப்படித்தான் பூதக்கண்ணாடி வெச்சுத்தான் பார்ப்போம்.. வேறு யாரு இருக்கா எங்களுக்கு? உங்களுக்கு பொருத்தமான வேடங்களை நீங்கள் பண்ணுவது ஒருபுறமிருக்க, மேற்கூறிய இளைஞர் படையை வைத்து நீங்கள் வெரைட்டியான படங்களை இயக்கவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்காதா? எனது விருமாண்டி, கமல்ஹாசனைப்போல சிவப்பான நிறம் கொண்டவனல்ல என்று பேட்டிகளில் சொன்னால் மட்டும் போதுமா? டெக்னிகல் எக்ஸெலன்ஸை மட்டுமே அறிமுகப்படுத்தினால் போதுமா? சின்னச்சின்ன பட்ஜெட்டுகளில் விதவிதமான களம், திரைக்கதை உத்திகளையும் செய்துபார்க்கக்கூடாதா?.. ஹும்.!

anbe-sivam-kamal-hassan

.

Monday, April 20, 2009

கார்க்கி நடித்த ‘நீ எங்கே.?’ -குறும்படம்

அன்பு நண்பர்களே, ஏற்கனவே குறும்படம் பற்றி எழுதிய முந்தைய மூன்று பதிவுகளையும்  ( பதிவு:1, பதிவு:2, பதிவு:3 ) இமாலய ஹிட் ஆக்கினீர்கள். அதன் இறுதிப்பகுதி பாக்கி இருந்ததையும் அறிவீர்கள். அதில் நாம் ஒரு குறும்படம் ஒன்றையும் இணைக்கத்திட்டமிட்டதால், அதன் பிற்தயாரிப்புப் பணிகள் நிறைவடைய காலதாமதமாகிவிட்டது.

கதை, மற்றும் இயக்குனர் தயாராக இருந்தபோதும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கொஞ்சம் தாமதம் செய்துவிட்டார்கள். அனைத்துப்பணிகளும் முடிந்து இதோ உங்கள் பார்வைக்கு ‘நீ எங்கே?’..

முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் :

1. இது காமெடி படமல்ல, ஆகவே சிரிக்கத்தயாராக உள்ளே வரக்கூடாது.

2. படத்தைவிட பிற்சேர்க்கைகள் அதிகமாக இருப்பதால் பொறுமையாக காணவும்.

3. பிற்சேர்க்கையில் இருக்கும் வசனங்கள் நடிகர் பொறுப்பு என்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல..

4. எதற்கும் பெண்கள், இதயபலவீனமானவர்கள் படத்தைத் தவிர்க்கலாம்.

டிஸ்கி :  தமிழ் ஃபான்ட் பிரச்சினையால் படத்தில் டைட்டில் ஆங்கிலத்தில் உள்ளது. மன்னிக்கவும்.  பிற்சேர்க்கைகளை விமர்சிக்க குசும்பன் வாலண்டியராக அழைக்கப்படுகிறார். படத்தைக்காண்பதில் டெக்னிகல் சிக்கல்கள் இருப்போர் நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளலாம். கூரியரில் டிவிடி அனுப்பிவைக்கப்படும். (தமிழ்நாடு : 99/ மட்டும், வெளிமாநிலம் : 199/ மட்டும், வெளிநாடு : 499/ மட்டும். )

நடிகர், இயக்குனர் 2011 வரை பிஸியாக இருப்பதால்  தயாரிப்பாளர்கள்  யாரும்  கால்ஷீட்டுக்கு  தற்போது  முயற்சிக்கவேண்டாம் என  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   நன்றி.

.

Saturday, April 18, 2009

ரமா : காஃபி சாப்பிடப்போலாமா?

இந்தத் தொடரைத் தொடங்கியவரின் விதிமுறைகள் அடுத்த பதிவிலேயே மீறப்படுகின்றன. இணைப்புகள் தரப்படவில்லை. கொஞ்சம் சிரமத்திற்குப்பிறகு கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால்..

தொடங்கியவர் : நிலாவும் அம்மாவும்.

அவரின் விதிகள் : சங்கிலியின் முந்தைய ஐவருக்கு இணைப்புகள், ஒருவருக்கு மட்டுமே அழைப்பு. அவரது கேள்விக்கே தொடர் பதில்கள்.

ஆரம்பத்திலேயே முதலிரண்டு விதிகள் பணால் ஆகிவிட்டன. நான் என்ன செய்ய இருக்கிறேன் என்றால் அந்த முதலிரண்டைக் காப்பாற்றி மூன்றாவதை உடைக்கிறேன்.. ஹிஹி.. நம்ப பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா.?

என்னை அழைத்தவர் : அத்திரி.

இடைப்பட்ட சங்கிலியில் உள்ளோர்.. ஹேமா, இரவீ, கடையம்ஆனந்த். (5 பேரு கணக்கு சரியாப்போச்சா.?)

நான் அழைப்பது : கார்க்கி (முதல் விதியையும் காப்பாற்றியாச்சு)

மூன்றாம் விதி உடைக்கப்படக்காரணம் அத்திரியின்  ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்ற தலைப்பினால் கவரப்பட்டே இந்தப்பதிவைத் தொடர்கிறேன். ஆகவே நிலாவின்அம்மா மன்னிக்கலாம்.

இனி கேள்விகள்..

1. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க பெயர் என்ன?

ஹிஹி.. கண்.. நோ, தாமி.. நோ நோ.. ஆதி.

2. பெயர்லயே ஏன் இப்பிடி? சரி, உங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியுமாமே, அப்படியா?

ஹிஹி.. ரொம்ப புகழறீங்க..

3. என்ன சம்பளம் வாங்குறீங்க?

ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்..

4. தைரியம்தான். சரி, உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?

ஹிஹி...

5. காஃபி சாப்பிடப்போலாமா?

ஹிஹி.. யாராவது பாத்துட்டாங்கன்னா..

டிஸ்கி :

இந்தக்கேள்விகள் திருமணத்துக்கு முன்னர் கல்லூரி சென்று கொண்டிருந்த ரமாவின் பின்னால் பயந்து பயந்து(அப்பவும் அப்படித்தான்) சுற்றிக்கொண்டிருந்த போது, ஒருநாள் என்னை மடக்கிப்பிடித்து அவர் கேட்ட கேள்விகள் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு நான் பொறுப்பல்ல..

.

Friday, April 17, 2009

ஊடல் காலம்..

20080829_LonelyBoy

உனது கிசுகிசுப்புகள் இல்லாத
இரவுகள்
வலி மிகுந்ததாய் இருக்கின்றன
உனது துப்பட்டாவை
துணைக்கழைத்துக் கொள்கிறேன்
உன்னை நீங்கி
ஒரு விநாடியும்
தனித்து இருந்துவிட முடியாது இங்கே
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நீ நிரம்பியிருக்கிறாய்
கண்ணாடியில்
நீ ஒட்டிவைத்துப் போயிருக்கும்
உனது சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு
நாள் தவறாது என்னை ஏளனம் செய்கிறது
உனது தடயங்களாலோ
இந்தக் கவிதைகளாலோ
இந்நேரத்துக்கான ஆறுதலை
எப்போதுமே தரமுடிவதில்லை.!

(யூத்ஃபுல்விகடனில் வெளியானது)

.

Thursday, April 16, 2009

உச்சத்தைத் தொட்ட தினம்.!

மாலை 4 மணிக்குரிய வெளிச்சமில்லை அது. கருமேகங்கள் வேக வேகமாக திரண்டுகொண்டிருந்தன. எந்நேரமும் மனதை நிறைக்கும் அந்த மழை வந்துவிடலாம். இரண்டு புறமும் ஒரு கூண்டைப்போல சாலையை மறைக்க முயலும் அடர்ந்த மரங்கள். கொஞ்சம் பலத்த காற்றும் கூட. காற்றிலே கிளம்ப இங்கே புழுதியே இல்லையா? இலைகளே சுற்றிச்சுற்றி பறந்தன.. இலைகளே முகம் வந்து மோதின. என்ன விந்தையிது இன்று? காற்றும், மழையும், மரங்களும்.. என்ன அற்புதம்.!

ஜீவா அந்த சாலையின் ஓரம் நடந்துகொண்டிருந்தான், பேருந்து நிறுத்தம் நோக்கி. நடந்தானா? மிதந்தானா? முதல் முறையாக காற்றுடன் பேசிக்கொண்டே வந்தான். யாரும் கவனித்தாலென்ன? பேசிக்கொண்டா.. இல்லையில்லை, ஒரு நண்பனோடு கலகலப்பதைப்போன்று காற்றோடு சத்தமாக சிரித்துப்பேசிக்கொண்டு என்பதுதான் சரி. கொண்டாட்டங்களின் தருணத்தைப்போல ஆர்வமான தலையசைப்புகள், சைகைகள். துள்ளல் மிகுந்த கால்கள் செல்வது பேருந்து நிறுத்தத்தை நோக்கி மட்டுமா.. வாழ்க்கையின் தொடக்கத்தை நோக்கியா?

மழைக்காக ஒதுங்கும் மனதோ, அதில் பேருந்தைப் பிடிக்கும் எண்ணமோ இன்றில்லை. திசைகளற்ற பயணம் இன்றைக்கானது.

என்னவாயிற்று.?

எப்போது விழுந்த விதை? அவஸ்தைகள் நிரம்பிய வருடங்கள்.. நெஞ்சுக்குள் அடைகாத்து வளர்த்த காதல். காதலைச்சொல்வதை விடவுமா பிரசவித்தல் வேதனை பெரிது.? ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வதற்கா இத்தனை வெட்கம்? ஒவ்வொரு எழுத்தாக வெளியாகி வார்த்தைகளாக கோர்த்து ப்ரியாவிடம் சொல்லிமுடித்திருந்த அந்த நிமிடங்கள் வாழ்வெங்கும் இனி இந்த நெஞ்சோடு உறைந்து கிடக்கப்போகின்றன. சொல்லச் சொல்லவே இதயத்துடிப்பு அதிகமாகி காத்திருந்த அந்நாள் இதுவென்ற அதிர்வில் வார்த்தைகளில்லாத வெளுத்துப்போன உதடுகளுடன் அவன் கைகளை இறுக்கப்பற்றினாள் ப்ரியா.  இப்போது நடுங்கிக் கொண்டிருக்கும் கைகள் யாருடையது? கனவா இது?

Redemption_by_zemotion

இந்த ஏற்பு இத்தனை சாதாரணமானதாகவா நிகழ்கிறது.? அவனால் நம்பவே முடியவில்லை. இல்லை.. நான் கத்திக்கூப்பாடு போடவேண்டும். நான் கிளம்புறேன் ப்ரியா.. இந்த அற்புத நாளை வெறும் வார்த்தைகளோடு முடித்துக்கொள்ள வேண்டாம். இழுத்துக்கட்டப்பட்ட வீணையின் நரம்புகளை தெறித்துத் துண்டாகும் விநாடிக்கு முந்தைய விநாடியில் நிறுத்தும் வண்ணம் இன்னும் இறுக்கு. கிளம்பும் இந்த தருணத்தில் இந்தப் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டுவிடு. எதிர்பாராத இறுதி விநாடிகளில் ஜீவாவின் நோக்கமறிந்த ப்ரியா விலக அந்த முதல் முத்தம் அவளது பாதிக்கண்ணிலும் இமையிலுமாக பதிகிறது.

பின்வந்த பெருமழையின் முதல் துளி, பேருந்து நிறுத்தம் தவிர்த்து பக்கத்து மரக்கிளையுடன் பேசிக்கொண்டிருந்த ஜீவாவின் முகத்தில் விழுந்தது.

(Photo courtesy : Deviantart)

**************

பின்குறிப்பு :

வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் நம் மனதில் கிடக்கின்றன. அதில் மிக உச்சமானதாக எது இருக்கக்கூடும் என யாரோ (ஹிஹி..) யோசித்ததில் எழுதப்பட்டதே மேற்கண்ட நிகழ்ச்சி. பெயர்கள் கற்பனையே. இதே போல உங்களின் மகிழ்வுகளையும் தெரிந்து கொள்ளும் ஆவலில்   இதை தொடர்பதிவாக்குகிறேன். நிகழ்வு காதல் சார்ந்துதான் இருக்க வேண்டுமென்பதில்லை, உங்கள் வாழ்வின் உச்சமானதாக இருக்கவேண்டும்.

புதியவர்கள் பக்கமிருந்து நான் அழைப்பது அ.மு.செய்யது.

எங்கள் (அங்கிள்ஸ் அல்ல) பக்கமிருந்து வேறொருவரை அழைக்க முதலில் முடிவு செய்திருந்தாலும் தொடர்பதிவுகள் என்றால் கொள்ளைப்பிரியம் காட்டும் காரணத்தால் பரிசல்காரன்.

.

Tuesday, April 14, 2009

மனதைத்தொட்ட பாடல்கள்

பாடல்களுக்கென்று தனியாக நூற்றியெட்டு தமிழ் சானல்கள் இருந்தாலும் பகல் நேரங்களில் போட்டி போட்டுக்கொண்டு குத்துப்பாடல்கள் போட்டு நம்மை டிவி பார்ப்பதில் இருந்து எப்படியாவது விரட்டிவிடுகிறார்கள்.. முதலில் அதற்காக நாம் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். எப்படியாவது அசந்து மறந்தாவது கேட்கிறமாதிரி போட்டுவிடுவார்களா என்றால் ம்ஹூம்.. சான்ஸே இல்லை.

பேய்களும், கோட்டான்களும் கூட உறங்கிவிடும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அவர்களை அறியாமல் ஒவ்வொருவராய் மெலடி, காதல், சென்டிமென்ட் என மெதுவாக போட ஆரம்பிப்பார்கள். நானும் நேற்றிரவு சில சொந்த சோகங்கள் மிகுதியாகவிட (நிஜமாப்பா..) அதை தணிக்கவேண்டி தனியாவர்த்தனமாய் வாங்கி வந்திருந்த நைண்டியை ஆரம்பித்திருந்தேன்.

சும்மாவே காதல் கவிதைகள்னா கொஞ்சம் புல்லரிச்சுக்குவேன், அதிலும் 90 உள்ளே போய்விட்டால் வரிக்கு வரி புல்லரிக்க ரெடியாகிவிடுவேன். நேற்று சன் ம்யூசிக்கிலேயும், இசையருவியிலும் மாறி மாறி காதல் மற்றும் அழகழகான பாடல்களாக போட்டு தாளித்துவிட்டார்கள்.

நினைவிலிருக்கும்  சில பாடல்களிலிருந்து சில சாம்பிள் வரிகள் மட்டும்..

டிஷ்யூம் : பூ மீது யானை.. பூ வலியைத்தாங்குமோ..

தீபாவளி : சிரித்தாய்.. இசை அறிந்தேன், நடந்தாய்.. திசை அறிந்தேன்..

12102006-THN14image1

மாயாவி : கடவுள் தந்த அழகிய வாழ்வு.. உலகம் முழுதும் அவனது வீடு..

மொழி : காதல் பேசும்போது மொழிகள் கிடையாது..

காதலர்தினம் : நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும்..

ஆயுதஎழுத்து : யாக்கைத் திரி.. காதல் சுடர்..

யாரடிநீ.. : ஆண் மனதை அழிக்க வந்த சாபம், அறிவை மயக்கும் மாய தாகம்..

சினிமாவே டுபாகூர், அதிலும் பாடல்கள் இன்னும் டுபாகூர்.. இருப்பினும் ரசிக்கிறோம். அழகிய ஒரு கிராமத்து ஃபோக் ‘எம்டன்மகன்’ படத்தில் ‘கோலிக்குண்டு கண்ணு, கோவப்பழ உதடு..’ பாடல் எடுக்கப்பட்ட விதமும், பரத், கோபிகாவின் நடிப்பும் பிரமாதப்பட.. ரசிக்கமுடிந்தது. இடையிடையே இது போல பாடல்களும் வருகின்றன.

எதற்கும் சனிக்கிழமை இரவுகளில் ட்ரை பண்ணலாம். மற்ற நாட்களென்றால்  மறுநாள் ஆப்பிஸில் மதிய மீட்டிங்கில் வழக்கமாக கொட்டாவி விடுபவர்கள், குறட்டைவிட நேரிடும்.. ஏற்கனவே சிச்சுவேஷன் சரியில்லை, அப்புறம் சீட்டுக்கு வேட்டு வரக்கூடும்.!

.

Saturday, April 11, 2009

என்னோட ட்வின் பிரதர்..

இவ்வளவு நாட்களாக பல பதிவர்களோடு நேரில் பழகிருப்பினும் என்னைப்பற்றி அவர்களுக்குத் தெரியாத ஒரு ரகசியம் உண்டு. எந்தப்பதிவிலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டதுமில்லை. அது எனக்கு என்னைப்போலவே அச்சு அசலாக இருக்கும் ஒரு ட்வின் பிரதர் உண்டு என்பதுதான்.

அது ஒரு சுவாரசியமான அவஸ்தை. ஒரு தடவை என் அலுவலகத்தில் என்னைக் காணவந்து ரிஸப்ஷனில் காத்திருந்த போது என் மானேஜர் அவனிடம் ‘நேத்திக்கு ரிப்போர்ட் இன்னும் அனுப்பலையே.. இங்க உட்கார்ந்துகிட்டு என்ன பண்றீங்க.?’ என்று கேட்டது மறக்கமுடியாத ஒரு அனுபவம். ஏனோ இன்று அதை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றியது.. இதோ நாங்கள் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படம்..

தொப்பையை வைத்து இதில் நான் யார் என்பதை கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

.

Thursday, April 9, 2009

டவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10

10. நமது ஞாயிற்றுக்கிழமைக்கும் சேர்த்து வேட்டு வைக்கிறமாதிரி ஆபீஸில் ஃபீல்டு விசிட்டுக்கு தேதி குறிக்கும்போது.

9. பலராலும் கொண்டாடப்பட்டு நாம் ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளரின் ஆகச்சிறந்த(?) ஒரு படைப்பு நம் கையில் முதல்முறையாக கிடைக்க, விபரம் தெரியாமல் அதைப் படித்து டரியலாகும் போது.

8. பலவித தடங்கல்களுக்குப் பிறகும் ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி சென்று உட்கார்ந்ததும், நாயகன் அறிமுகமாகும் போதோ, அறிமுகமாகி ஐந்து நிமிடத்திலோ அது எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் அந்த நாயகன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தெருவில் ஆண், பெண் கூட்டத்தோடு கும்மாங்குத்து போடும்போது.

7. சரியாக டியூ நாளில் அமவுண்டை கட்டிய பிறகும், ஆட்டோ டெபிட்டில் அதே அமவுண்டை பிடித்து கிரெடிட்கார்ட் கடங்காரன் நம்ப பட்ஜெட்டில் குழப்பம் விழைவிக்கும் போது.

6. ரிப்போர்ட் தர ரெண்டு மணி நேரம் தாமதமானதால் மானேஜர் தரும் மூன்று மணி நேர அறிவுரைகளை கேட்க நேரும் போது.

5. பெட்ரோல் போட மறந்து பாதிவழியில் வண்டி நின்று அவஸ்தைக்குள்ளாகி, பிரம்மப்பிரயத்தனம் செய்து பெட்ரோலுடன் ஆள் வரவைத்தபின்னர், கிளம்பிய ஒரே கிலோமீட்டரில் பஞ்சரும் ஆகித்தொலைக்கும் போது.

4. நேற்றைய சண்டையை சமாதானப்படுத்தும் பொருட்டு இன்று மார்னிங் ஷோ போய்விட்டு, மதியம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு முகத்தில் சிறிது புன்னகை வரத்துவங்கியிருக்கும் நேரத்தில் ரமாவின் கண்களில் நல்லி சில்க்ஸ் பட்டுத்தொலைக்கும் போது.

3. ஒருவாரம் கழித்து பதிவெழுதி அது நல்லா(?) வந்திருப்பதை கண்டு மகிழ்ந்துவிட்டு ஏற்றப்போகையில் கரண்ட் போய் தொலைக்கும்போது.. அல்லது அது செம ஹிட்டாகி 50 ஹிட்ஸும், ரெண்டு பின்னூட்டமும் வாங்கி சாதனை படைக்கும் போது.

2. இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.

1. தவறாமல் ஒவ்வொரு அப்ரைஸலின் போதும்..

.

Wednesday, April 8, 2009

'உண்மையில் CAPA என்ற ஒன்று இருக்கிறதா?‘

முன்குறிப்பு 1 : தலைப்பைப் பார்த்து இது கும்மிப்பதிவென ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.. இது ஒரு துறைசார்ந்த டெக்னிகல் பதிவு (லேபிளை கவனிக்கவும்).

முன்குறிப்பு 2 : துறை சார்ந்த பதிவுகளில் பிராக்கெட்டுகளில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டுமென்பது எழுதப்படாத விதி(Rule). அது இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

முன்குறிப்பு 3 : பயன்படுத்தப்பட்டுள்ள தமிழாக்கங்கள் தமிழை வளர்க்கும் முயற்சியில் செய்யப்பட்டவை அல்ல. சரியானவற்றை ஏற்றுக்கொள்ளவும், கொஞ்சம் ஓவராக இருப்பனவற்றுக்கு சிரித்துக் கொள்ளவும் உங்களுக்கு உரிமை உண்டு. தமிழாக்கத்துக்கு புத்தக உதவிகள் நாடப்படவில்லை. சொந்த அறிவே(?) பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்குறிப்பு 4 : துறைசார்ந்த பதிவுகள் வெறும் அறிவுரையாக அல்லது புலம்பல்களாக மட்டுமே வழங்கப்படுவதல்ல.. ஆகவே தவறுகளையும், மேல்தகவல்களையும் பின்னூட்டங்களில் தரலாம்.

முன்குறிப்பு 5 : முதலில் இந்தப்பதிவு ‘ஆடிட்டிங்குக்கு அல்வா கொடுப்பது எப்படி?’, ‘இவ்விடம் தரமான பிரியாணி கிடைக்கும்.’ என்ற இரு வேறு பதிவுகளாக எழுதப்பட திட்டமிட்டு பின்னர் உங்கள் மேல் கொஞ்சம் இரக்க உணர்வு தோன்றி சுருக்கமாக ஒரே பதிவாக போட முடிவு செய்யப்பட்டது.

முன்குறிப்பு 6 : எனது முந்தைய துறைசார்ந்த.. என்ன.. முன்குறிப்புகள் போதுமா? ஊஹூம்.. முடியாது.! இன்னும் ஒரு மிக முக்கியமான முன்குறிப்பு உள்ளது. அதாவது இந்தப்பதிவு மற்ற ஆடிட்டிங்குகளில் சிக்கிக்கொள்பவர்களுக்கும் ஓரளவு பொருந்தும் எனினும் குறிப்பாக ISO சிஸ்டத்துக்கு ஆட்பட்டுக்கிடக்கும் எண்ணற்ற பரிதாப ஜீவன்களுக்காகவே எழுதப்படுகிறது. என்ன.? ISO என்றாலே என்னவா? உங்களைப் போன்ற அதிர்ஷ்டப்பேர்வழிகள் இதை தொடர்ந்து வாசிக்க வேண்டியதில்லை.

இனி..

சரி செய்தலும், தொடரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்.. (CAPA)

அப்படி என்றால் என்ன? ISO சிஸ்டம் என்ன சொல்கிறது? முதலில் ஒவ்வொரு நிறுவனத்திலும் இந்த குவாலிடி பிரிவு என்று ஒன்று ஏன் இருக்கிறது? அவர்கள் ஏன் பிற பிரிவுகளில் உள்ளோரை நோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்? பதில் மிக எளிதானது. இங்கு எந்தச்செயலுமே கச்சிதமாக (Perfection) நிகழ்வதில்லை, யாருமே தவறு செய்யாதவண்ணம் கச்சிதமாக செயல்படுவதில்லை, எந்த எந்திரமுமே கச்சிதமாக நீடித்து இயங்குவதில்லை. ஆகவேதான் குவாலிடி என்ற ஓர் பிரிவு. அவர்களின் கச்சிதத்தை அல்லது கழுத்தைப்பிடிக்கத்தான் ISO சிஸ்டம், ஆடிட்டிங் இதெல்லாம். அவர்களின் கச்சிதத்தை சோதிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். ரொம்ப ஓவராக போக வேண்டாம். ஆனானப்பட்ட நல்லெண்ணையையே ‘டபுள் ரீஃபைண்ட்’தானே செய்கிறோம்.. இப்போதைக்கு இது போதும் நமக்கு.

சரி.. இந்த ஆடிட்டிங்கில்.. ம்ஹூம். இது சரிப்படாது. இங்கே ஆரம்பிச்சா முடிக்கிறதுக்குள்ள விடிஞ்சிரும். அதோடு நமது இப்போதைய பிரதான எண்ணம் ஆடிட்டிங் பற்றி தெரிந்துகொள்வதல்ல. ஆடிட்டர் தரும் NCR என்ற வஸ்துவை CAPA என்ற வஸ்து மூலமாக எப்படி அட்டாக் செய்வது என்பதைப்பற்றி மட்டும்தான். ஆகவே அதை மட்டும் பார்க்கலாம்.

ஆடிட்டர் என்பவர் லங்கேஸ்வரன் மாதிரி ஆடிட்டிங் என்ற ஆரம்பக்கட்ட போரையெல்லாம் முடித்துவிட்டு இறுதியாக உங்கள் மீது NCR என்ற பாணங்களை தொடுப்பார். அதை நீங்கள் ராமன் மாதிரி சாமர்த்தியமாக CAPA என்ற எதிர்பாணங்கள் கொண்டு தடுத்துவிடவேண்டும். இல்லாவிட்டால் ஆடிட்டிங்குக்கு மறுநாள் உங்கள் மானேஜர் அறையில் காது புளிக்க புளிக்க உங்களுக்கு அறிவுரைகள் கிடைக்கும், சிலருக்கு அல்வாவும் கிடைக்கலாம்.

‘பிழை அறிக்கை’ (NCR - Non Conformity Report) என்றால் என்ன? அதற்கு முன்னால் சிஸ்டம் என்றால் என்ன? என்ற கேள்வியைப் பார்த்துவிடலாம். நீங்கள் ஒரு செயலை எப்படிச் செய்யப்போகிறீர்கள் என்று நீங்களே முன்னரே கச்சிதமாக எழுதிவைத்திருப்பதுதான் சிஸ்டம். நாம் எழுதியத அதைப் வைத்துக்கொண்டு நம்மையே அதைச் சரியாக செய்தாயா? இதைச் சரியாக செய்தாயா? என்று கேட்பதுதான் ஆடிட்டிங்.

உதாரணம் பார்க்காவிட்டால் சரியாக வராது. ஞாயிறு மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு விருந்தினர் (Customer) வரவிருக்கிறார்கள். நீங்கள் பிரியாணி பண்ணித்தரலாம் என்று காலையில் முடிவு செய்கிறீர்கள். இப்போது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை ஒரு செயல்திட்டமாக (Operating procedure) எழுதச்சொன்னால் என்ன பண்ணுவீர்கள்?

நானென்றால் என்ன பண்ணுவேன்? 11 மணி வாக்கில் ரமாவைக் கூப்பிட்டு ‘ரெண்டு பேர் வர்றாங்கம்மா.. பிரியாணி பண்ணிடு இன்னிக்கு’ என்று சிம்பிளாக சொல்லிவிடுவேன். காரியம் நடந்துவிடும். ஆனால் இது வெண்பூவினால் முடியுமா? அவர் இவ்வாறு எழுதுகிறார்...

முதலில் அடுக்களையில், ஃபிரிட்ஜில் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா? (Source, Raw materials etc.,) அவை தரமானவையா? இல்லாவிட்டால் என்ன செய்வது? (Quality) மனைவியின் உதவி (Production capacity) கிடைக்குமா? கிடைக்காவிட்டால் என்ன செய்வது? உதவியில்லாவிட்டாலும் இரண்டு மணிநேரத்தில் (Lead time) முடித்துவிடலாமா? இல்லாவிட்டால்..? பாத்திரங்கள், அடுப்பு, கருவிகள் தயாராக இருக்கின்றனவா? இல்லாவிட்டால்.? என எல்லாவற்றையும் பார்த்துவிட்டபிறகே விருந்தினர்களை நான் அழைப்பேன் என்கிறார்.

சரி. ஆடிட்டர் வருகிறார். எங்கே எல்லாவற்றையும் காண்பியுங்கள் என்கிறார். காண்பிக்கிறீர்கள். ‘கருவிகள் பிரிவில் மொத்தம் மிக்ஸி, கத்தி, அரிவாள்மனை, தேங்காய் துருவி போன்ற 7 ஐட்டங்கள் இருக்கவேண்டுமே? எங்கே தேங்காய் துருவியைக் காணவில்லையே.?’ என்கிறார்.

போச்சா.. மாட்டிக்கொண்டீர்களா? முதல் NCR. ‘உங்கள் கணக்குப்படி நான்கு விருந்தினர் வருகிறார்களே.. இருப்பது ஒரு கிலோ அரிசிதான் யாரை டபாய்க்கிறாய்?’ இரண்டாவது NCR.

நீங்கள் புத்திசாலித்தனமாக ‘இதுபோல சூழலில் பக்கத்து கடையில் அரிசி வாங்கிக்குவோம் சார்.. இதோ இருக்குது பாருங்க இத்தனாம் பக்கத்துல ப்ரொசிஜர்ல எழுதியிருக்கோம்’ என்பீர்கள். அவர் பதிலுக்கு, ‘கடை அடைச்சிருந்துதுன்னா என்ன பண்ணுவே?’ என்று உங்களை மடக்கிவிட்டு கொலைவெறியாய் சிரிப்பார். பிறகு ‘பிரியாணியும், ரெய்தாவும் ஓகே.. ஆனால் குருமாவை வாயில் வைக்கமுடியவில்லையே.. நண்பர்கள் என்ன கஷ்டப்படுவார்கள்?’ போச்சு, அடுத்த NCR.

சரி ஒருவழியாக இரண்டு NCR களையும், இரண்டு AFI (Area for Improvements - அதாவது அறிவுரை) களையும் வாங்கியிருப்பீர்கள். அப்படியே விட்டுவிட்டால் ஆடிட் முடியாது. நீங்கள் அந்த NCR களை நீக்கும் முயற்சியாக ‘சரி செய்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிக்கை’ (CAPA - Corrective Action and Preventive Actions) யை தாக்கல் செய்யவேண்டும். அதெல்லாம் முடியாது, எனக்கு ஆடிட்டிங்கே தேவையில்லை என்றால் அது உங்க இஷ்டம்.. என்ன ஒன்று.. ‘இவ்விடம் தரமான பிரியாணி கிடைக்கும், நண்பர்கள் நம்பி வரலாம்.. நாங்கள் கேரண்டி.!’ என்ற (ISO9001 : 2000 Certification) போர்டை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், அவ்வளவுதான்.

CAPA வை விட்டுவிட்டு எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறோம். எப்படி ஓர் CAPA அறிக்கையை தயார் செய்வது? என பார்க்கலாம்.. ‘சொல்லுக சொல்லை பிறிதோர் சொல்..’ ரேஞ்சுக்கு தயார் செய்ய வேண்டும். உதாரணமாக ‘தேங்காய் துருவி’ NCR ஐ பார்ப்போம். அது ஏன் வந்தது.? நேற்றுதான் மேடையிலிருந்து கீழே விழுந்து உடைந்திருக்கும். நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள். அதைச்சொல்லியிருந்தாலும் சிக்கல்தான். எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தது? இந்த உயரத்திலிருந்து விழுந்தால் பொதுவாக தேங்காய் துருவி உடையாதே. அப்படியென்றால் மட்டமான துருவியை வாங்கிவைத்திருந்தீர்களா? அது தேனிரும்பா? வார்ப்பிரும்பா? தேங்காயை சுழற்றுவது போன்ற மாடலா? அல்லது துருவியை சுழற்றுவது போன்ற மாடலா? என்று ஆயிரம் கேள்விகள் வந்திருக்கும். இதற்கு எப்படி CAPA எழுதுவது?

வேர்க்காரணம் (Rout cause) : ‘காணாமல் போய்விட்டது’

சரிசெய்தல் (Corrective Action) : ‘புதுசு வாங்கிவிடுகிறோம்’

முன்னெச்சரிக்கை (Preventive Action) : ‘இனி கவனமாக இருக்கிறோம்’

ம்ஹூம்.. இதில் பிரச்சினை இருக்கிறது. ‘காணாமல் போய்விட்டது’ எனில் உங்கள் நிறுவனத்தின் அடிப்படை விஷயத்திலேயே கோளாறு இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இதைப்போலவே ஒவ்வொன்றும் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. ‘புதுசு வாங்கிவிடுகிறோம்’ இந்தக்கேஸைப் பொறுத்தவரை ஓரளவுக்கே ஏற்புடையதாகிறது. ‘இனி கவனமாக இருக்கிறோம்’ என்பதை நிச்சயம் ஏற்கமுடியாது. அப்படியாயின் எல்லா பிரச்சினைகளுக்குமே இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொல்லமுடியும். இப்படிப் பொத்தாம் பொதுவாக கூறாமல் ‘எப்படி? எப்போதிலிருந்து? யாரால்?’ என்று தெள்ளத்தெளிவாக கூறவேண்டும். மேலும் அது, இது போல சிஸ்டத்தில் வேறு எங்கெல்லாம் தவறுகள் இருக்கிறதோ அவற்றையும் சேர்த்துக் களைவதாக இருக்கவேண்டும், மீண்டும் குறிப்பிட்ட வேர்க்காரணம் ஏற்படாதவாறு அறவே தவிர்ப்பதாக இருக்கவேண்டும்.

அப்படின்னா மேற்கண்ட உதாரணத்துக்கு எப்படி CAPA எழுதலாம்? ம்ஹூம் முதலில் இதை திருத்திக்கோங்க.. எப்படி CAPA எழுதலாம் இல்லை., எப்படி CAPA எடுக்கலாம்.? இவ்வளவு மூச்சுவாங்க பாடம் நடத்தியிருக்கேன்ல.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.!

.

Monday, April 6, 2009

த்ரீ இன் ஒன் (06.04.09)

பதிவர் சந்திப்பு

நாலு நாள்னு சொல்லிட்டு பத்து நாளைக்கும் மேலாக கடையை கவனிக்காம விட்டதுல கடை காத்தாடிவிட்டது. கூட்டத்தையும் காங்கலை, பின்னூட்டத்தையும் காங்கலை. மற்ற கடைகளுக்கும் போய் படித்து பின்னூட்டம் போட்டால் அல்லவா நம்ம கடைக்கும் நாலு பேரு வருவாங்க.. நம்ம கடையை தொறந்து வைக்கவே நேரமில்லையாம், இதுல மற்ற கடைகளுக்கு போக எங்க நேரமிருக்குது? இதச்சொன்னா யாரு நம்புறா.? இந்த லட்சணத்துல கடை சும்மாதானே கெடக்குது.. நமக்கு வேணா லீஸுக்கு தந்துடறீங்களான்னு நேத்து பதிவர் சந்திப்புல என்னை ஒரு பிரபல பதிவர் கேட்டபோது அவரை முறைத்தேன். வழக்கம் போல கடைசியாக சென்றதால் எதிர்பார்த்தபடி புதிய பதிவர்கள் வந்தார்களா என தெரியவில்லை.. ஆனால் சந்திப்பு களைகட்டவில்லை என்பது நிஜம். இருப்பினும் இதுவரை பார்த்திராத டி.வி.ஆர், பாலராஜன்கீதா போன்ற இளம்(?)பதிவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்தேன். பிற விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இருக்கவே இருக்கிறார் நம்ப டோண்டு சார்.! என்னைப்போய் ‘நம்ப’ கணேஷ் என்று கூட்டத்தில் புரளி கிளப்பிக் கொண்டிருந்த தல.பாலபாரதியை நேரில் கண்டித்தால், மூக்கிலேயே குத்துவார் போல தோன்றியதால் இங்கே வன்மையாக கண்டித்துக் கொள்கிறேன்.

********

ரயில் புறத்தில்..

அடிக்கடி ரயிலில் செல்லும் சூழல் ஏற்படுவதால் சில பல காட்சிகளை காணநேர்கிறது. நேற்று ஹைதராபாத்திலிருந்து சார்மினார் கிளம்பும் நிமிடங்களில் நடக்க இயலாமலிருந்த மிக வயதான ஒரு பெண்மணி, உறவினர் ஒருவரின் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு வண்டிக்குள் வந்தார். பழுத்த பழமாக இருந்த வரை அலேக்காக தூக்காத குறையாக தோளில் தாங்கி உள்ளே அழைத்து வந்தது ஒரு இருபது வயது கூட நெருங்கியிருக்காத அல்ட்ராமாடர்ன் ‘ஸ்ட்ராங்’ இளம்பெண். அவரை இருக்கையில் அமரவைத்துவிட்டு படபடவென ‘வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்கோ, மாத்திரையை மறக்காதேங்கோ.. நா இன்னும் பத்து நாள்ளே வருவேன் அங்க..’ என்று பொரிந்துவிட்டு அவரின் கால்களை தொட்டு வணங்கியபோது வண்டி கிளம்பியிருந்தது. இவருக்கு துணையாக வந்த இன்னொரு நடுத்தரவயது பெண்ணை நோக்கி ‘அம்மா.. நன்னா பாத்துக்கோ.. போன் பண்ணுவேன்’ என்று கூறியவாறே ஓடிப்போய் மூவிங்கில் ஸ்டைலாக இறங்கி கையசைத்தார். அவர் அந்த வயதான பெண்மணியின் பேத்தியாக இருக்கவேண்டும். இந்த சின்னவயதில் இவ்வளவு பொறுப்போடும், வாஞ்சையோடும் அவர் நடந்துகொண்டது மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது. நம்புங்கள்.. இப்படியும்கூட பெரியவர்கள் மீது அன்பு கொண்டுள்ள அதுவும் அழகான இளம்பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

********

ஐமாக்ஸ் 3D

சென்னை ஐனாக்ஸ் அல்ல இது ஹைதை ஐமாக்ஸ். ஏற்கனவே அனிமேஷன் ‘டாம் ஹாங்க்ஸ்’ நடித்த, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் பின்னி எடுக்கப்பட்ட ‘போலார் எக்ஸ்ப்ரஸ்’ என்ற படத்தை இந்த அரங்கில் கண்டிருந்தாலும் இந்த முறை பார்த்த ‘ஸ்பேஸ் ஸ்டேஷன்’ ஒரு பிரம்மாண்டமான, அற்புதமான அனுபவத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பலதடவைகள் 3D படங்களை நாம் கண்டிருந்தாலும்.. இது இன்னும் துல்லியமான உருவாக்கத்தில் நம்மை பிரமிக்கவைக்கிறது. இது போன்ற படங்களின் தரம் குறையாமல் தரப்பட திரையரங்கில் பயன்படுத்தப்படும்  தொழில்நுட்பமும், அவற்றின் பராமரிப்பும் முக்கிய காரணிகள் என்பதை உணர்ந்தேன். 50 நிமிடங்களே ஓடும் சிறிய படமென்றாலும் ஹைதராபாத் செல்பவர்களும், முக்கியமாக குழந்தைகளும் தவறவிடக்கூடாத படமாக இதை நான் கருதுகிறேன்.

.

Thursday, April 2, 2009

ரத்தம்

நேற்று காலை அலுவலகத்தில் இருந்த போது சக ஊழியர் ஒருவரின் தந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்காக O பாஸிடிவ் வகை ரத்தவகையினரைத் தேடிக்கொண்டிருந்த HR தோழி அவசரமாக என்னைப்பிடித்து காரில் அடைத்து அனுப்பி வைத்தார்.. என்னுடன் இன்னும் சிலரும்.

எத்தனையோ நாட்களாக ரத்ததானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் தன்முயற்சியில் ஈடுபட்டதில்லை. நேற்று அந்த வாய்ப்பு கிடைத்த போது மிக மகிழ்ந்தேன். அந்த பிரபல மருத்துவமனையில் நாங்கள் ரத்தம் தந்துவிட்டு மீண்டும் அலுவலகம் திரும்ப எத்தனித்துக் கொண்டிருந்த போது அந்த சக ஊழியர் எங்களைத்தேடி வந்து கைகொடுத்து வழியனுப்பி வைத்தபோது அவர் கண்களில் தெரிந்த நன்றியுணர்வை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். என்னாலும் உருப்படியான காரியம் ஒன்றைச் செய்யமுடியும் என்ற எண்ணம் பெருமை கொள்ளச்செய்தது.

இது மிகவும் சாதாரண ஒரு நிகழ்ச்சியேயாயினும், உணர்வுப்பூர்வமான இதை ஒரு விழிப்புணர்வு நோக்கத்துக்காக பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

blood2

தயக்கங்களை விட்டொழிப்போம். இது போல இயன்ற காரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். உங்களை ஒரு டோனராக பதிவு செய்துகொள்ளுங்கள். அவசியம் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தகுந்த கால இடைவெளிகளில் தன்முனைப்பாக தானம் செய்ய முன்வருவோம். பிறந்தநாள் போன்ற கொண்டாட்ட நாட்களில் டொனேட் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம். நம்மிடம் இருக்கும் ஒரு உயிர்காக்கும் மருந்தை பயனுள்ளதாக்குவோம்.

சில செய்திகள் :

  1. நல்ல உடல்நிலையில் இருப்போர் குறைந்தபட்சம் மூன்று மாத இடைவெளிகளில் ரத்ததானம் செய்யலாம்.
  2. தானம் தருவதற்கு முந்தைய குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் மதுவருந்தியோர் ரத்ததான தகுதியை இழக்கின்றனர். பிந்தைய 24 மணி நேரத்திலும் மதுவருந்துவதை தவிர்க்கலாம்.
  3. தானத்துக்கு முந்தைய ஒரு நாள், பிந்தைய குறைந்த பட்சம் ஆறு மணி நேரங்கள் புகைபிடிப்பதை தவிர்க்கலாம்.
  4. சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் நல்ல உணவை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கவேண்டும். தானத்திற்குப் பின்னரும் நல்லதொரு உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.
  5. ரத்ததானத்தினால் வலியோ, சோர்வோ ஏற்படுவதில்லை. அரைமணி நேரத்திலேயே உங்கள் வழக்கமான வேலையை கவனிக்கத்துவங்கலாம்.

எனது ரத்தவகை O+ve. மிகப்பரவலான ஒரு ரத்த வகை. அரிய வகை அல்ல. அதனால் நாமெல்லாம் தானம் செய்யவேண்டிய அவசியமில்லை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த மருத்துவமனையில் ஒரு பேனரைக் கண்டேன். எவ்வளவு சிம்பிள் லாஜிக். எனது மதியீனத்தை நினைத்து வெட்கினேன். அது..

"My blood is common. I don't think there will be demand for it" - That is why the demand for your type is greater than for rare types.

இரவு படுக்கையில் விழுந்த போது வலது கையில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் மிச்சமிருந்த பசை உறுத்தியது. இடது கையினால் அதை தேய்த்து விட்டுக்கொண்டபோது சொல்லவொண்ணாத ஒரு மகிழ்ச்சியும், பெருமையும் என் மனதில் பரவியது.

.

Wednesday, April 1, 2009

டாஸ்மாக்கைத் தேடி..

முன்குறிப்பு : ஒரு வாரமாக கடையைச் சாத்திவிட்டு போய்விட்டதால் ரெகுலர் கஸ்டமர்கள் சரக்கு கிடைக்காமல் அவதிப்பட்டதாக தெரிகிறது. விரைவில் வந்து ஜோதியில் ஐக்கியமாவேன். இருப்பினும் இடைக்கால நிவாரணமாய் இந்தப் பழைய கள்ளை புதிய மொந்தையில் (தலைப்பு மட்டும் புதிதுங்க..) தருகிறேன்.  அ(ப)டித்து மகிழவும்.

தண்ணியடிப்பதை விட்டுவிட்டேன்

பத்து நாட்களுக்கு முன்னர் ரமா வீட்டிலில்லாத ஓர் நாள். அவள் வீட்டிலில்லை என்றாலே இன்று நைன்டிதான் எனக் காலையிலிருந்தே கற்பனைக்குதிரைகள் பறக்கத்துவங்கிவிடும். யாரைக் கூப்பிடலாம்? தனிமையிலேயே இனிமையை கண்டுவிட‌லாமா? கண்ணனை மட்டும் கூப்பிடலாம் என்றால் கோவை போயிருக்கிறான், வர ரெண்டு நாளாகும். ச‌ங்குவைக்கூப்பிட்டு ரொம்ப நாளாகுது. கூப்பிடலாமா? ம்ஹும் வேண்டாம். நாம 90 அடிக்கிறதுக்குள்ள 900 அடிச்சுட்டு இன்னும் வேணும் கிளம்புன்னுவான், 'நடு ராத்திரி டாஸ்மாக்கைத்தேடி' அப்பிடின்னு பதிவு போட வேண்டியதாகிவிடும்.

கிருஷ்ணாவை வரச்சொல்லிவிட்டு 'மான்ஹாட்டன்' போகலாமா என்று யோசனை வந்தவுடனே அதை தவிர்த்தேன். சரிப்படாது. அங்கே பர்ஸ் பழுத்துவிடுவது மட்டுமல்ல, அலைச்சல், ஆட்டோ என பல பிரச்சினைகள். அப்ப வேற வழியில்லை. தனி ஆவர்த்தனம்தான்.

whisk

ஆ.:பீஸிலிருந்து சீக்கிரம் கிளம்பலாம்னு பார்த்தா அன்னிக்குன்னு பார்த்து ஒரு கம்ப்ளைன்ட். கிளம்ப எட்டு மணிக்கு மேல ஆயிட்டுது.

ஒரு வழியா கிளம்பி வீட்டுக்கு போற வழியில இருக்குற டாஸ்மாக்குல நின்னேன். சோதனை ஆரம்பமாச்சு. கூட்டம் கடையை நெருங்கவிடாமல் தேனீக்கள் போல அப்பிக்கொண்டிருந்தது. ஐந்து நிமிடமாயிற்று. கூட்டம் குறைவதைப்போலவோ, யாராவது வாங்கிவிட்டு வெளியேறுவதைப்போலவோ தெரியவில்லை. ஷூக்கள், டக் இன் செய்யப்பட்ட எனது வெள்ளை சட்டை என என் தோற்றத்தையும், அங்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தையும் பார்த்துக்கொண்டேன். யோசித்துக்கொண்டிருந்தால் ச‌ரிப்ப‌டாது என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். ஒருவ‌ழியாக‌ @#/%$# போன்ற‌ ப‌ல‌ வார்த்தைக‌ளையும், வாச‌னைக‌ளையும் க‌ட‌ந்து க‌டைக்கார‌ரை நெருங்கினேன். ப‌ண‌த்தை கையில் வைத்துக்கொண்டு கோட்ட‌ர், கோட்ட‌ர் என‌ கூவிக்கொண்டிருந்தேன். என்னைப்போல‌வே ப‌ல‌ரும் கூவிக்கொண்டிருந்தனர். ஆனால் விற்ப‌னைப்பிர‌திநிதியோ யாருடைய‌ குர‌லையும் கேட்ட‌து போல‌வே தெரிய‌வில்லை. அவர் மிக‌வும் நிதான‌மாக‌ பின்புற‌மாக‌ திரும்பி இன்னொரு ஊழிய‌ரோடு பேசிக்கொண்டிருந்தார். கூட்ட‌மும் க‌த்துவ‌தை விடுவ‌தாக‌ தெரிய‌வில்லை, நானும்தான்.

கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர் 'ஏய் #$%/@!, எம்மா நேர‌மா கூவிக்கினுறோம், ஒரு கோட்ட‌ர் குடுறா' என்றார். இந்தக்குரலுக்கு அவர் திரும்பினார். நானும் ம‌கிழ்ந்தேன். ஆனால் அவ‌ரோ ப‌திலுக்கு, 'அடிங் # &&*%$#, பீரு ம‌ட்டும்தான் இருக்குனு எத்தினா த‌பா சொல்ற‌து, க‌ம்முனாட்டி' என்றார். என‌க்கு அதிர்ச்சியாகிவிட்ட‌து. ஐய‌ய்யோ, இவ்ளோ நேர‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுவிட்டு ஒண்ணும் வாங்காம‌ல் திரும்புவ‌தா, பிய‌ர் ந‌ம‌க்கு ஒத்துக்காதே! என்று அங்கேயே குழ‌ம்பிய‌வாறு யோசித்துக்கொண்டிருந்தேன். அத‌ற்குள், 'வாங்காத‌வ‌ன்லாம், தூர‌ப்போடா @#$%$#^&$' என்ற‌தும் வெளியே வ‌ந்தேன். வேறு க‌டைக்கு போலாம்னா இன்னும் அஞ்சு கிலோமீட்ட‌ர் போணுமே என்று யோசித்துவிட்டு திட்ட‌த்தை அரைம‌ன‌தோடு கைவிட்டேன். நாளைக்கு பாத்துக்க‌லாம் என்று முடிவு செய்துவிட்டு வ‌ண்டியை நோக்கி போனேன், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.. ஹெல்மெட்டை காண‌வில்லை.சுற்றுமுற்றும் பார்க்கிறேன், ஏராள‌மான‌ வ‌ண்டிக‌ள். உட‌னேயே புரிந்துவிட்ட‌து சான்ஸேயில்லை. முன்னர் எப்போதும் கையிலேதான் வைத்துக்கொண்டிருப்பேன். இப்போதுதான் முன்னைமாதிரி போலீஸ் ஹெல்மெட்டுக்கெல்லாம் பிடிப்ப‌தில்லையே, திருடுபோக‌ சான்ஸ் இல்லை என்று கொஞ்ச‌நாளாக‌வே வ‌ண்டியிலேயே வைத்துவிடுகிறேன். போச்சுது, மூட் அவுட்! எப்பிடியும் இன்னிக்கு அடிச்சே ஆக‌ணும், விடு வ‌ண்டியை கார‌ப்பாக்க‌த்துக்கு.

அங்கேயும் இத‌ற்கு ச‌ற்றும் குறைவில்லாத‌ அனுப‌வ‌த்திற்குப் பின்ன‌ர், ஏதோ முக‌ம்தெரியாத‌ ஒரு கோட்ட‌ரை வாங்கிவ‌ந்தேன். கேட்ட‌து எப்போதுமே கிடைக்காது எனினும் இன்று ரொம்ப‌ சோத‌னையாக‌ விஸ்கிகூட‌ கிடைக்காத‌து என்னை ரொம்ப‌வும் விர‌க்திய‌டைய‌ வைத்த‌து. ட‌ச்ச‌ராவ‌து ம‌ன‌துக்கு திருப்தியாக‌ வாங்கிக்கொள்வோம் என‌ 'க‌.:பே செட்டிநாட்டில்' நின்றேன். வ‌ழ‌க்க‌த்தைவிட‌ கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து. ஒரு 'பிங்க‌ர்பிஷ்' பார்ச‌ல் சொல்லிவிட்டு காத்திருந்தேன். 20 நிமிட‌ங்க‌ள். பின்ன‌ர் கூலாக‌ வ‌ந்த‌ ச‌ர்வ‌ர் 'ஸாரி ச‌ர், பிஷ் ஐட்ட‌ம் எதுவுமே இல்லை, வேறென்ன‌ வேண்டும்' என்றார். 'டாய்.. யாரைப்பார்த்து இல்லைன்னே, முதல்லேயே சொல்லவேண்டியதுதானே..' என்று குதிக்க‌ ஆர‌ம்பித்தேன். டாஸ்மாக்கில் காண்பிக்க‌ முடியாத‌ கோப‌த்தையெல்லாம் இங்கேதானே காண்பிக்க‌ முடியும். க‌டைசியில் மானேஜ‌ர் போன்ற‌ தோற்ற‌முடைய‌வ‌ர் வ‌ந்து ச‌மாதான‌ம் செய்த‌வுட‌ன் ச‌மாதான‌மானேன். பின்ன‌ர் 'சிக்க‌ன்65' சொன்னேன். ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், 35 நிமிட‌ங்க‌ள். வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்ட‌து. பின்ன‌ர் பில்லிங்கிலும் சோத‌னை. 'ஸாரி ச‌ர், 150 ரூபாய்க்கெல்லாம் கார்டு அக்செப்ட் ப‌ண்ண‌மாட்டோம்'. திரும்ப‌வும் ர‌க‌ளை.

சோடா வகையறாக்களை வாங்க வீட்டினருகே வழக்கமாக நூடுல்ஸ் வாங்கும் கடையில் நின்றேன். ம‌ணி 10.15. 'சோடா இல்ல‌ சார், வேறென்ன‌ வேணும்?'. வ‌ண்டியைத்திருப்பினேன். மேலும் சில கடைகள் அடைத்திருக்க ரெண்டு கிலோமீட்டரில் இன்னொரு கடை. 'கூலிங் இல்ல, ப‌ர‌வால்லையா.?' வாங்கிக்கொண்டேன்.

வீட்டுக்கு வ‌ந்த‌ போது ம‌ணி 10.30. ப‌சித்த‌தில் வாங்கிவ‌ந்த‌ சிக்க‌னை கொஞ்ச‌ம் சாப்பிட‌லாம் என‌ பார்ச‌லைத்திற‌ந்தேன். ஆனிய‌ன், லெம‌ன் ஏதுமில்லாம‌ல் சில‌ க‌ருகிய‌ சிக்க‌ன் துண்டுக‌ள் முழித்துக்கொண்டிருந்த‌ன‌, ப‌ழிவாங்கிவிட்டான்க‌ள். ஒரு துண்டை எடுத்து தின்று பார்த்தேன். ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ துப்பிவிட்டு ஏதாவ‌து ஊறுகாயாவ‌து தேறுமா என‌ அடுக்க‌ளைக்குள் புகுந்தேன். ஊறுகாயைத்தேடிக் க‌ளைத்தேன்.

முக‌ம், கைகால் அல‌ம்பி ரெடியாகிவிட்டு .:பிரிட்ஜைத் திற‌‌ந்தேன். .:ப்ரீஸ‌ர் காலியாக‌ இருந்த‌து. பின்ன‌ர்தான் க‌வ‌னித்தேன் ஐஸ்டிரேக்க‌ள் கழுவி காய‌வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன .:பிரிட்ஜின் மீதே. அட்லீஸ்ட் த‌ண்ணீர்? ம்ஹும். ப‌ர‌வாயில்லை ப‌த்து நிமிஷ‌ம் வெயிட் ப‌ண்ண‌லாம். த‌ண்ணீரை பாட்டில்க‌ளில் பிடித்து .:பிரீஸ‌ருக்குள்ளேயே போட்டேன், சோடா பாட்டிலையும் உள்ளே போட்டு .:பிரிட்ஜின் க‌த‌வைச்சாத்தினேன்.

க‌ர‌ண்ட் க‌ட் ஆன‌து, இருள் சூழ்ந்த‌து.

.