Wednesday, January 27, 2010

கரிகாலன் காலழகு

'கரிகாலன் காலப்போல..' பாடலுக்காக கபிலனுக்கு விகடனின் சிறந்த பாடலாசிரியர் விருது. என்ன கொடுமை இது? தலையில் அடித்துக்கொண்டேன். கரிகாலன் பாடலின் லிஸ்ட் ஃபார்மெட் என்பது பொதுவாக கவிஞர்கள் சிக்ஸர் அடிக்கிற களம். அதில் இவ்வளவு சொத்தையாக ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதேயில்லை. அந்தப்பாடலில் தப்பித்தவறியாவது ஒரு வரி அழகாக எழுதியிருப்பாரா கவிஞர் என உற்றுக்கேட்டதிலும் ஏமாற்றமே..

கரிகாலனின் கருத்த காலென்பது எப்பேர்ப்பட்டதொரு அரிய விஷயம். நிகரில்லா வீரத்துக்கு சொல்லத்தகுந்த உவமையல்லவா அது? அதையெப்படி ஒரு பெண்ணின் கூந்தலுடன் ஒப்பிடமுடியும்? அடுத்தவரியாக 'சேவலோட கொண்டை மாதிரி உதடு'ன்னா உடனே உதடில்ல.. மந்திரிச்ச தகடாம். 'வலம்புரிசங்கப்போல கழுத்து'ன்னா கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்தாம். கண்ணதாசன் எழுத்துக்கும் கழுத்துக்கும் என்னய்யா தொடர்பு? இன்னும் மேம்பால வளைவு போல மூக்கு, ஜல்லிக்கட்டு காளை.. என பாடல் முழுதுமே அரிய கவிதையாக மலர்ந்திருக்கிறது. கபிலன் 'புலி உறுமுது, நாய் குரைக்குது, கொசு கடிக்குது' போன்ற பாடல்களோடு தன் கலைச்சேவையை நிறுத்திக்கொள்வது நலம். இந்தப்பாடலுக்குப் பதிலாக 'ஒரு சின்னத்தாமரை'க்காவது விருது தந்திருக்கலாம்.

**********************

கடந்த சூரிய கிரகணத்தின் போது அம்மா வாசலில் நின்றுகொண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். என்னவென்று வெளியே சென்று பார்த்தபோது பக்கத்துவீட்டு பெண்மணி ஒரு உலக்கையை முற்றத்தில் செங்குத்தாக நிறுத்திவிட்டு என் அம்மாவிடம், "பாத்தியாக்கா.. எப்பிடி நிக்கிதுன்னு.." என்று வியந்துகொண்டிருந்தார். அவர் நிறுத்தியிருந்தது அகலமான பெரிய பூண் இருந்த மேல்பாகத்தை அடியில் வைத்து.

பொதுவாக ஒரு ஓரமாக சந்திரன் ஈஷிக்கொண்டு போவதைப் பார்த்துப் பார்த்து கிரகணம் என்றால் நான் அவ்வளவாக ஆர்வம் காண்பிப்பதில்லை. தற்செயலாக பக்கத்துவீட்டு பையன் எக்ஸ்ரே பிலிம் வழியாக பார்த்துக்கொண்டிருக்க நானும் வாங்கிப்பார்த்தேன்.. வியந்தேன்.! தங்க வளையமாக ஒரே தகத்தகாயம். இயற்கை பெரியது, அரியது.! எப்போதும் ஓலைக்கீற்றுகளைத் தாண்டி குட்டி குட்டி வட்டங்களாக விழும் சூரிய வெளிச்சம், அப்போது குட்டி குட்டி பிறைகளாக விழுந்தது பெரும் வியப்பு. போட்டோ எடுக்க மிஸ் பண்ணிவிட்டேன்.

அப்புறம் இன்னொரு செய்தி. அன்றைய தினம் டிவி செய்திகளில் ஒருவர் இனி இதுபோன்ற கிரகணம் 2019ல்தான் தெரியும் என்றார். அடுத்த சானலில் 2084ல்தான் தெரியும் என, இன்னொன்றில் 2118ல்தான் என்று கூற.. அடுத்தும் ஒன்றில் 3010ல்தான் தெரியும் என்றார்கள். என்னாங்கடா இது.?
**********************

போன தடவை மாதிரி இந்தமுறையும் டெக்னிகல் பதிவுக்கு விருது கிடைக்கும் என நப்பாசையுடன் இருந்தேன். தமிழ்மண விருதுகள் 2009ல் ஒரு நல்ல பெரிய பல்பு கிடைத்தது. இருப்பினும் பதிவு டாப் 10ல் வந்தது ஒரு குட்டி ஆறுதல். உண்மைத்தமிழன் அண்ணனும், டாக்டர் புரூனோவும் போட்டியில் எந்தமாதிரி இடுகைகளை பரிந்துரைக்க வேண்டும் என முன்னதாக பதிவுகள் இட்டிருந்தார்கள். அவர்கள் சொல்லாத இன்னொரு ஆலோசனை ஒன்றையும் கண்டுகொண்டேன். அது, உண்மைத்தமிழன், டாக்டர் புரூனோ, குசும்பன், ராமலக்ஷ்மி போன்றோர் போட்டியிடும் பிரிவுகளில் நாம் போட்டியிடாமல் இருப்பதுதான். அப்படி இருந்தாலே பாதி ஜெயித்தாமாதிரிதான். ஹிஹி..

வெற்றிபெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.!

**********************

சின்ன வயதில் படித்தும் இன்னும் மறக்காத ஒரு ஜோக்.

25வது திருமணநாளைக் கொண்டாட மனைவியை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறார் ஒரு கணவர். அமர்ந்து ஆர்டர் செய்யும்போது எடுத்தவுடனேயே மனைவியிடம், 'இன்னொரு பாதாம் ஹல்வா சாப்பிடுகிறாயா கமலா?' என்கிறார். இப்போதுதானே உள்ளே வந்து அமர்ந்திருக்கிறோம்.. அதென்ன இன்னொரு பாதாம் ஹல்வா என விழிக்கிறார் மனைவி.

'முதல் கல்யாணநாளுக்கு வந்து சாப்பிட்டமே, மறந்துட்டியா.. கமலா?'

***********************

சமீபத்தில் ஒரு எழுத்தாள நண்பருடன் ஒரு மாலையைக் கழித்தபோது நான் உடன் கொண்டு சென்றிருந்த 'மரப்பாச்சியின் சில ஆடைகள்' புத்தகத்தை கவனித்தார். அவர் முழிக்கிற முழியிலேயே நான், "ஊஹூம், பயப்பிடாதீங்க.. என் கதையெல்லாம் வரலை. தைரியமா பாருங்க" என்று சொல்லி புத்தகத்தைத் தந்தேன்.

புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்தவர் வேகவேகமாக சில கதைகளை படித்துவிட்டு 'புத்தகம் வேண்டும், மீதத்தையும் படிக்கவேண்டும்' என்றார். நம் நண்பர்கள் கதைகளாயிற்றே.. 'ஆஹா.. பேஷாக தந்துவிட்டால் போகிறது' என்று கொடுத்தேன்.

படித்தவரையில் கருத்து கேட்டபோது, சென்ஷியின் 'கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதியபடம்' தன்னை மிகவும் கவர்ந்ததாக சொன்னார். எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் ஆக முழுமையாக, அழகாக, புதிதாக சொல்லப்பட்டிருக்கிறது என்றார். இந்தக்கதையை எழுதியவர் ஒரு சிறந்த சிறுகதையாளராக ஜொலிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லி வாழ்த்தினார் அவர். 'நாங்கூட பூக்களைக்கடத்திச்செல்பவன்னு ஒரு கதை எழுதியி..' நான் முடிக்கவில்லை.. அதற்குள்ளாக, 'உங்களுக்கு ரொம்ப ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன். பாருங்க உளற ஆரம்பிட்டீங்க.. படுத்துக்கறீங்களா' என்றார்.

(வயிற்றெரிச்சலோடு).. வாழ்த்துகள் சென்ஷி.

************************

இதுவும் அதே சந்திப்பில் நடந்ததுதான்.

முன்னுரையை படித்த அவர், 'பதிவர்கள் உங்களுக்கெல்லாம் ரோஷமே கிடையாதா.?' என்றார். 'ஏன் கேட்கிறீங்க? அதெல்லாம் எங்களுக்கு ரொம்பவே இருக்குதே' என்றேன்.

'இல்ல, மாதவ்ராஜ்னு ஒருத்தர் உங்களையெல்லாம் குழந்தைப்பசங்கன்னு முன்னுரையில் இவ்வளவு தெளிவா நக்கல் பண்ணியிருக்காரே.. ஒண்ணும் சொல்ல மாட்டீங்களான்னு கேட்டேன்..'

'இப்பதான் புரியுது, எழுத்துலகம் ஏன் ரத்தபூமியா இருக்குதுன்னு. ஒரு மனுஷன் அழகா ஒரு உவமை சொல்லியிருக்கானேன்னு போவீங்களா? அத விட்டுட்டு.. இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம், ஏன்.. அவரு கதையும்தான் இந்த புக்ல‌ வந்திருக்குது, அவரும் எங்கள்ல ஒருத்தர்தான்' என்று கோபப்பட்டேன் (நம்பாதவர்கள் சமாளித்தேன் என்று திருத்தி வாசிக்கவும்).

.

Friday, January 8, 2010

வேட்டைக்காரன் : ஒரு உரையாடல்

நான்கு நாட்கள் விடுப்பில், ஊர்ப்பயணத்தையெல்லாம் முடித்து காலையில் சென்னை வந்து இறங்கினேன். மீண்டும் அதே ஆஃபீஸுக்கா என்ற மலைப்பில் சலித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கிளம்பிக்கொண்டிருந்தபோது சரியாக கண்ணனிடமிருந்து போன் வந்தது.

'இன்னிக்கு போலாமா வேட்டைக்காரன்?'

'பாத்துட்டனே'

'ஊருக்குப்போறேன்னு சொல்லிட்டிருந்தயே'

'ஊர்லதான் பாத்தேன்'

'போன வேலையை விட்டுட்டு இந்த வேலையுமா? ஓஹோ.. நீங்கதான் பிளாகராச்சே.. அதுனாலயா?'

'...'

'சரி, விடு அந்தக் கருமத்தை.. படம் எப்பிடி இருந்துச்சு? கத சொல்லு'

'டமால் டுமீல்னு என்கவுண்டர் பண்ற ஒரு போலீஸப்பாத்து விஜயும் போலீஸ் ஆக ஆசைப்படுறாரு.. அவ்ருதான் ரோல் மாடல்'

'அடடே, அப்புறம்?'

'அதுனால காலேஜ் படிக்க சென்னைக்கு வர்றாரு..'

'எதுக்கு?'

'போலீஸாவுணும்ல..'

'ஓஹோ, எங்கேர்ந்து வர்றாராம்? மதுரையா.?'

'இல்லை, தூத்துக்குடி'

'ரொம்ப வித்தியாசமாயிருக்கே.. அப்புறம்?'

'கொஞ்ச நேரம் குறுக்க பேசாம கேட்டின்னா, கதை சொல்றேன்..'

'சரி கோவப்படாத.. சொல்லு'

'அவுரு வண்டில ஏறம்போதே அனுஷ்காவை பாத்து ஜொள்விட்டு அவர் திராட்சைப்பழம் சாப்புடுற அழகுல லவ்வு பண்ண ஆரம்பிச்சுடுறாரு..'

'ஊம்'

'அப்படியே சென்னைக்கு வந்ததும் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறாரு'

'காலேஜிக்கு போலியா?'

'இல்ல, பார்ட் டைம்.. படிக்க பைசா வேணும்ல..'

'அப்ப சரி'

'ஆட்டோ ஓட்டுற நேரம்போக மிச்ச நேரம் அனுஷ்கா வீட்ல செட்டிலாகிடுறாரு'

'அதெப்படி சேத்துக்கிட்டாங்க'

'ட்ரெயின்ல அனுஷ்காவோட பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு உதவி பண்ணுறாரு. அனுஷ்கா ஸ்கூட்டிய கண்டுபிடிச்சு தர்றாரு.. இப்பிடி நிறைய பண்றாரு. இப்பிடி இருக்கும்போது ஒரு வில்லன் ரோட்டுல போற வார பொண்ணுங்களையெல்லாம் தூக்கிட்டு போயிடுவாரு. தட்டிக்கேட்டா வெட்டிப்போட்டுடுவாரு'

'அவுரு அனுஷ்காவை தூக்கிட்டுப்போயிடுறாரா?'

'அதெல்லாமில்லை. அனுஷ்கா சைஸ்க்கு அது ஆவுற கதையில்லை என்பதால் விஜயுடன் காலெஜில் கூட படிக்கும் ஒரு பொண்ணை, அதற்குள் சிஸ்டர் மாதிரி பழ‌கிட்டாங்கன்னு வச்சுக்க‌யேன், அவர தூக்கப் பிளான் பண்றார். அது தெரிஞ்சி விஜய் அவர நல்லா மொத்தி விட்டுடறார். இத்தனைக்கும் டாடாசுமோக்கள், கூட பத்து பரட்டைத்தலை ரவுடிகள்னு எந்நேரமும் சுத்திக்கினுதான் இருக்கார்.'

'அடடா.. அவுருதான் மெயின் வில்லனா?'

'இல்ல, அவுரு மெயின் வில்லனோட பையன். மெயின் வில்லன் ஒரு பெரிய தாதா, தொழிலதிபர் வேற. அரசியல்வாதி, போலீஸ்னு எல்லோரும் அவுரு முதுகுக்கு பின்னாடி இருக்காங்க..'

'தாதான்னு சொன்னா போறாதா, ஏன் இப்படி நீட்டி முழக்குற?'

'அவுரு இவரை போலீஸ்ல புடிச்சு குடுத்துடறாரு'

'ரொம்ப நல்லவரா இருக்காரே, பையன் ஒண்ணும் சொல்லலியாமா?'

'இல்ல, அடிபட்ட‌ பையன் ஆஸ்பத்திரில மயக்கமா இருக்காரு. டாக்டர்லாம் இதுமாதிரி அடியை பாத்ததே கிடையாது. அடிச்சது சாதா ஆளு கிடையாது, பெஸல் சாதான்னு சொல்லிடறாங்க. அப்பறம்தான் தெரியுது. வில்லன் இவரை போலீஸ்ல புடிச்சுக்குடுத்ததே என்கவுன்டர் பண்ணத்தான் அப்படின்னு. விஜய் என்ன பண்றாரு எஃப்ஐஆர் போட்டா வேலைக்கு சிக்கலாயிடுமேனு போலீஸை அடி பின்னிடுறாரு. அடி வாங்கின போலீஸ் கண்டிப்பா என்கவுன்டர் பண்ணிடவேண்டியதுதான்னு முடிவு பண்ணி இவரை நல்லா மொத்தி ஒரு வேன்ல கூட்டிட்டுப்போறாங்க..'

'எங்க?'

'என்கவுன்டர் பண்ண. இவுர் என்ன பண்றார், அடடா எப்படியும் படிப்பு போச்சு, நாமளும் பேசாம தாதாவாயிடவேண்டியதுதான்னு அங்கனயே முடிவுபண்ணி வேன்ல இருந்த போலீஸை த‌ள்ளிவிட்டு கீழ இறங்கி அங்கேயிருந்த‌ நயாகரா மாதிரி ஒரு ஃபால்ஸ்லயிருந்து குதிச்சு தப்பிச்சுடுறாரு..'

'ஆமா அனுஷ்கா என்ன ஆனாங்க?'

'அவுங்க என்ன பண்றாங்கன்னா இவரு ரோல்மாடலா இருந்த போலீஸ்கிட்ட உதவிகேட்டு போறாங்க. அங்க என்னாடான்னா அவுரு கண்ணு தெரியாம தண்ணியடிச்சுக்கிட்டிருக்காரு. கேட்டா அவரையும் முன்னாடி நம்ப வில்லன் அப்படி பண்ணிவிட்டிருக்காரு.'

'அடடா'

'திரும்ப ஊருக்குள்ள வந்து ரோல்மாடலை பாத்து விஜய் பேசுறாரு. ரெண்டு பேரும் பேசி முடிவுபண்ணி ரெண்டு பேருக்கும் வேலை போச்சு, பேசாம ஒண்ணா மண்ணா சேந்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தலாம்னு முடிவுபண்ணி நடத்துறாங்க. அது நடத்துனா கோட்டு, ஜெர்கின்தான் போடணுமாமே.. போட்டுக்கறாரு. அப்புறம் வில்லனையும் பாத்து பேசுறாரு. அவுரு தனக்கு இன்னின்ன பிஸினெஸ் இருக்குதுன்னு விலாவாரியா எடுத்துச் சொல்றாரு. உடனே இவுரு அதுக்கெலாம் குண்டு வச்சு இடிச்சு தரைமட்டமாக்கிடுறாரு.'

'அடடா'

'வில்லனுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம திரும்பவும் போலீஸை கூப்பிடுறாரு. ஆனால் அந்த போலீஸ் வரமாட்டேங்குறாரு.'

'ஏனாம்?'

'ஏன்னா இந்த நேரத்துக்குள்ள ஆஸ்பத்திரியில இருந்து வெளிய வந்த குட்டி வில்லன், அந்த போலீஸ் 'வச்சிருந்த' ஒரு பொண்ணை இவுரு 'வச்சிக்கிட' கூட்டிக்கிட்டு வந்துடுறாரு. அந்த கோவத்துல அந்த போலீஸ் வரமாட்டேங்குறாரு'

'அச்சச்சோ'

'அரசியல்வாதிகளும் உதவி பண்ணாம போக வில்லன் கோவத்துல அமைச்சராயிடுறாரு..'

'ஆஹா.. ஆச்சுடா'

'பதவியேத்துட்டா ஒன்னும் பண்ணமுடியாதுங்கிறதால, அதுக்கு முன்னாடியே பதவியேற்க போக வீட்லயிருந்து கார்ல ஏறும்போதே கொல்லத் திட்டம்போட்டு அவர கொல்லப்போனா இவர போலீஸ் புடிச்சுக்குது.'
'ஏன்'

'இவுரு மேலதான் எஃப்ஐஆர் இருக்கே..'

'ஓஹோ'

'புடிச்சு உடனே ஸ்டேஷனுக்கு கொண்டுபோகாம அங்கேயே நின்னுக்கிட்டிருக்காங்களா.. பக்கத்துல நின்ன கண்ணு தெரியாத பார்ட்னர்கிட்ட 'சைரன் சத்தம் கேட்குதா.. அமைச்சர் கார்கிட்ட போயிட்டார், கதவத்தொறந்துட்டார்'னு பொதுஜனம் சத்தம் போடுற மாதிரி சத்தமா போட்டுக்குடுக்கிறார். அதக் கப்புனு புடிச்சிக்கிட்டு அவுரு வில்லனை சுட்டுடுறாரு. முடிஞ்சது கதை.'

'அப்புறம், குட்டிவில்லன் என்ன ஆனாரு? அனுஷ்கா என்ன ஆனாங்க? சத்யன் போஸ்டர்ல இருக்காரே, அவுரு யாரு.?'

'அதெல்லாம் சொல்லமுடியாது. வேணும்னா நீயே போய் பாத்துக்கோ..'

'போடா, கதை நல்லாத்தான் இருக்குது.. நானே பாத்துக்குறேன்'

'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா'

.

Thursday, January 7, 2010

மிச்செலின் கண்கள்

3Dயில்தான் பார்க்கவேண்டும் என்று ஒரு முடிவோடு இருந்தாலும், டிக்கெட் கிடைக்காததாலும், ஆர்வம் காரணமாகவும் வந்த சில நாட்களிலேயே 'அவதார்' படத்தைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் 3Dயில் பார்த்த பிறகுதான் படத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று வைராக்கியமாக இருந்துவிட்டேன். அதற்குள் விமர்சனம், டெக்னிகல் பிரமிப்பு என அனைவரும் எழுதிமுடித்துவிட்டார்கள். நல்ல தகவல்களுக்கு ஹா.பாலாவின் 'அவதார்' பதிவைக்காணலாம். டெக்னிகல் விஷயத்தில் சினிமாவின் அடுத்த கட்டம் அல்லது இன்னொரு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறார்கள் என்று எளிதில் சொல்லிவிடலாம். பிரமிப்பூட்டும் காட்சிகள்.


குறிப்பாக நான் என்ன சொல்ல ஆசைப்படுகிறேன் என்றால் ஹீரோயின் 'நேத்ரி' (Neytiri) காரெக்டர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ஸ்டைல், எக்ஸ்பிரஷன் என மனதை அள்ளிக்கொண்டு போகிறார் நேத்ரி.. ஹூம் நாம கொடுத்துவச்சது அவ்வளவுதான், நாம என்ன 'நவி'யா? இல்ல குறைந்த பட்சம் வால்தான் இருக்குதா?. இந்தக் காரெக்டரின் ஒரிஜினல் நடிகை ஜோ சல்தானா (Zoe saldana) வுக்கே பாராட்டுகள் சேர வேண்டியது. மேக்கிங் வீடியோக்களில் இவர் நடிக்கும் சில காட்சிகளைக் காணும் போதே பிரமிப்பாக இருந்தது.


அப்புறம் ன்னொருவர் ஹெலிகாப்டர் பைலட்டாக வரும் 'மிச்செல்' (Michelle Rodriguez). அவரது கண்களை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். கனவிலே மிதக்கும் கண்கள். காரெக்டரைசேஷன், கம்பீரம் என குறைவாக வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். இவரை ஏற்கனவே Resident evil, Fast & Furious பார்த்து ஜொள் விட்டிருக்கிறேன். அவர் இறந்துபோவதான காட்சி என் பர்சனல் சோகம்.


******************************

வேட்டைக்காரன் படமும் பார்த்தாயிற்று. அதுபற்றி பின்னர் கண்ணனுடன் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக எழுதியும் வைத்திருந்தேன். அவுட் டேட் ஆகிவிட்டதால் அது வேண்டாம். சுறா வரட்டும் மொத்தமாக எழுதிக்கொள்ளலாம், ஒண்ணும் அவசரமில்லை. நேற்று 'ஜக்குபாய்' சிடி வெளியானதால் சினிமா உலகமே பரபரப்பாக இருப்பதாக செய்தி படித்தேன். திருட்டு விசிடியை ஒழிக்காவிட்டால் சினிமா அழியும் என்று கூக்குரல் வேறு. எப்போதாவது சில படங்களை சிடியில் பார்க்க நேர்ந்தால் அதைப்பார்ப்பதை விடவும் பக்கத்தில் சுவற்றில் போய் முட்டிக்கொள்ளலாம் போலத்தான் இருக்கிறது. ஒன்று அதில் தெரியும் படத்தின் லட்சணம். அல்லது சினிமாவின் லட்சணம். வேட்டைக்காரன் மாதிரி இன்னும் நான்கு படங்கள் வந்தால் சினிமாவே ஒழிந்துவிடும் என்பதால் திருட்டு விசிடியும் தன்னாலேயே அழிந்துபோய்விடும். யாரும் மெனக்கெட வேண்டியிருக்காது. முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?

தாம்பரத்தில் படம் வந்த மறுநாளே பிளாட்பாரத்தில் திருட்டி சிடிக்கள் விற்பனைக்கு இருந்ததைப் பார்த்தேன். படம் இன்னும் ஜோராகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ரேணிகுண்டா, அவதார் போன்ற படங்களைத்தான் சொல்கிறேன்.

*******************************

சமீபத்தில் ஓர்நாள் கொஞ்சமே கொஞ்சமான அளவு துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு என்ன செய்தேன் எனத் தெரியவில்லை, கவனித்த போது மெஷின் கழுத்து வரை தண்ணீரை எடுத்துக்கொண்டிருந்தது. என்னடா இது வம்பாக போயிற்று என்று மெஷினை ஆஃப் செய்து ப்ரொகிராமை கேன்சல் செய்தேன். அதன் பிறகுதான் பிரச்சினையே.. திரும்ப ஆன் செய்தால் இருக்கும் தண்ணீர் எடையையும் சேர்த்து துணியாக கற்பனை செய்துகொண்டு நிறைய சோப் பவுடர் கேட்டதுமல்லாமல் இன்னும் தண்ணீரை எடுக்க ஆரம்பித்துவிட்டது மெஷின். 'டாய்.. யாருகிட்ட வேலையை காட்டுற..?' என்று எவ்வளவோ போராடியும் வேலைக்காகவில்லை. அப்புறம் என்ன பண்ணித்தொலையுறது? பின்னர் ஒவ்வொரு மக்'காக தண்ணீரை அள்ளி வெளியே எடுத்து முதலில் இருந்து ஒழுங்காக வேலையை ஆரம்பித்தேன்.

இடையில் தண்ணீரை வெளியேற்ற வேறெதுவும் வழியிருக்கிறதா என்று ஒரு பிரபல பதிவரை போனில் அழைத்து கேட்டபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருப்பதை கவனித்த அவரது தங்கமணி விழுந்து விழுந்து சிரித்ததோடு அல்லாமல் 'உங்ககிட்டயா ஐடியா கேக்குறாரு? ஜோக் ஆஃப் தி இயர்..' என்று ஆரவாரம் செய்து பல்பு கொடுத்தார் எங்கள் இருவருக்கும். ஹூம்.!

*********************************

நாளை முதல் மாதக்கடைசி வரை பொங்கலை ஒட்டிய நீள்விடுப்பில் ஊர் செல்லவிருப்பதால் அனேகமாக இணையம் பக்கம் வர இயலாது (நீள்விடுப்பு கண்டு சிலருக்கு காதில் புகை வருவது தெரிகிறது). அதுவரை கடையை காத்தாட விடாமல் பழைய பதிவுகளை படித்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் படி அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். யாரார் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான பதிவுகளை குறிப்பிடுகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் பரிசு காத்திருக்கிறது (கண்ணைத் தொடச்சுக்கங்க). சரியாக பிப்ரவரி 1ல் வந்துவிடுவேன். வரும்போது பயணக்கட்டுரைகள், புகைப்படங்கள், குறும்படங்கள் என்று வழக்கமான விருந்துகளுடன் வருவேன் (ஊம்.. திரும்பவும் அழக்கூடாது) என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************

விடுமுறையின் துவக்கமாக ஈரோடு, கோவை நண்பர்களை சந்திக்க வருகிறேன். வரும் 9, 10 தேதிகளில் அங்குதான் சுற்றிக்கொண்டிருப்பேன். சந்தித்துத் தொலைவோம் என்ற எண்ணமிருப்பவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளலாம். அலைபேசி எண் : 9789066498.

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர்திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்த்துகள்.! பிப்ரவரியில் சந்திக்கலாம்.. பை பை.! (அலோ அலோ.. ரொம்ப சந்தோஷப்படவேண்டாம். நாளைக்கு வருவேன், இடையிடையே வாரம் ஒரு முறை எட்டிப்பார்த்தாலும் பார்ப்பேன். உங்களையெல்லாம் பிரிஞ்சு ரொம்ப நாள் தாங்காது எனக்கு. பாசம் பொங்கிரும்)


.

Wednesday, January 6, 2010

நூடுல்ஸ் கதை

தலைப்பில் தேங்காயெண்ணெய் கதை இருப்பதாக பார்த்து வந்தீர்களா? அதை பலமுறை பார்த்துவிட்டதால் ஒரு நூடுல்ஸ் கதை படிக்கலாம் வாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கிறது 'மயில்'?

********************************

11.08.09 காலை 8 மணி.
'காலையில டி.:பன் பண்ண முடியாத நேரத்தில யூஸ் ஆகும், சாய்ந்திரம் வரும்போது நூடுல்ஸ் வாங்கிட்டு வாங்க..'
'சரிம்மா'

11.08.09 மாலை 7 மணி.
'டெய்லி சொல்லணுமாங்க உங்களுக்கு. எப்படி மறக்குது உங்களுக்கு?'
'நாளைக்கு வாங்கிடலாம்மா'

12.08.09 மாலை 7 மணி.
'என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க.. இது பாஸ்தா, நான் கேட்டது நூடுல்ஸ்.'
'பாக்க அழகா இருந்துச்சு, ஒரு சேஞ்சா இருக்க‌ட்டுமேனு..'
'இத‌ xxx கூட‌ திங்காது'
'ச‌ரிம்மா, நா சாப்டுக்க‌றேன். உன‌க்கு நூடுல்ஸ் நாளைக்கு வாங்கிட்டு வ‌ந்துட‌றேன்'

13.08.09 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இதைப்போய் வாங்கிட்டு வ‌ந்திருக்கீங்க‌.. 20 ரூபா த‌ண்ட‌ம். இதுல காய்கறிலாம் சேந்திருக்குதுனு நினைக்கிறேன். நான் கேட்ட‌து 5 ரூபா பாக்கெட் பிளெய்ன் நூடுல்ஸ்.'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

14.08.08 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இது? வேற‌ பிராண்ட் போய் வாங்கியிருக்கீங்க‌, நல்லாவேயிருக்காதே.! மேகிதான் ந‌ல்லாயிருக்கும்'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

15.08.09 காலை 10 ம‌ணி.
'ஏங்க‌ த‌ண்ட‌த்துக்கு நாலு பாக்கெட் வாங்கியிருக்கீங்க‌. ஒண்ணு போறாதா?'
'என்ன‌ விளையாடுறயா.. நானும் பாத்துட்டேயிருக்கேன். என்ன‌ ப‌ண்ணிணாலும் குறை க‌ண்டுபிடிச்சுகிட்டு.. இனிமே எதாவ‌து வாங்க‌ச்சொன்னே ... எதுனாலும் நீயே போயி வாங்கிக்கோ, @#@#&%#@ #$@ #% @#'
'*&^%$#$#% @#@#&%#@ #$@ '
'$#$#% @#@#&%'
'ம்ம்ம்..ஊம்..ம்.. ஹும்'
'இப்ப‌ என்னாச்சுன்னு இப்பிடி ஒப்பாரி வெக்கிறே..'

15.08.09 காலை 11 ம‌ணி.
'சாருக்கு மேகி நூடுல்ஸ் எடுத்துக்குடுப்பா, எத்த‌னை பாக்கெட் சார்.?'
'நூடுல்ஸ் வேணாம்பா.. க‌ருப்ப‌ட்டி இருக்குதா?'
'இல்லையே சார்'
'இங்கே வேறெங்க‌ கிடைக்கும்னு தெரியுமா?'

*************

டிஸ்கி : நான் பதிவுலகம் வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு இது. ரெகுலராக வரும் வலைகளுக்கும் கூட வரமுடியவில்லை. எதிர்பாராதவிதமாக அலுவலகம், வீடு ரெண்டிலும் கொஞ்சம் பிஸியாகிவிட்டதால் இதை மீள் பதிவாக்கியுள்ளேன்.. பொறுத்துக்கொள்ளவும்.

.

Monday, January 4, 2010

அறுவடைக்காலம்

இன்னும் புத்தக ஃபீவர் முடிந்தபாடில்லை. இதோ இன்னுமொரு புத்தகம் குறித்த‌ பதிவு. வழக்கமாக சென்னை புத்தக கண்காட்சிக்கு இரண்டு மூன்று தடவைகளாக போவது வழக்கம். ஏனெனில் இருக்கும் ஸ்டால்களை ஒரே நாளில் பார்ப்பதென்றால் அது ஆவுற கதையில்லை. ஆனால் இந்த முறை வேறு வழியில்லை இந்த ஞாயிறு மட்டும்தான் கிடைத்த ஒரே நாள். 12 மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ஆஜராகிவிட்டேன். இரவு 9 மணிக்கு இன்னொரு நண்பரை செண்ட்ரலில் சந்திக்கவேண்டியிருந்ததால் சீக்கிரமெல்லாம் கிளம்ப வேண்டிய அவசியமில்லாமல் கண்காட்சி முடிந்து அவர்களே வெளியே துரத்தும் வரை அங்கேயே இருந்து பார்த்துவிட்டுவரலாம் என்ற ஐடியா. நண்பர்கள் யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லை. நானும் யாரையும் அழைக்கவில்லை. இதுமாதிரி இடங்களில் தனியே தன்னந்தனியே என்பது ஒரு வசதி.

நுழைவாயிலிலேயே குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. இந்தமுறை கொஞ்சம் புத்தகங்கள் வாங்க திட்டமிருந்ததால் நிரப்புவதற்கு வசதியாக முதுகுப்பையை காலியாக கொண்டுவந்திருந்தேன் (ஹிஹி.. கோணிப்பை கிடைக்கவில்லை).

சுந்தரபுருஷன் என்ற ஒரு படத்தில் வடிவேலு திருடனாக நடித்திருப்பார். ஒரு பூட்டியிருக்கும் வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருக்கும் பொருட்களைப் பார்த்து வியந்து, பரபரப்பாவார். "ஹையோ.. கட்டிலு கட்டிலு, அதுக்குமேல மெத்தை மெத்தை.. பீரோலு பீரோலு.. உள்ள சிலுவர் பேட்டிரி சிலுவர் பேட்டிரி, ஹையோ காத்தாடி காத்தாடி, உள்ள பித்தாள ரெக்கை ரெக்கை.." கிட்டத்தட்ட அந்த நிலைமையில்தான் இருந்தேன். 'ஹையோ இந்தப்பதிப்பகம், அந்த பதிப்பகம், இந்த ரைட்டர், அந்த ரைட்டர், இந்த புக்கு, அந்த புக்கு..'

அறுவடைக்குத்தயாரான வயல் போல கண்காட்சி. நெற்சுமையால் தலைதாழ்ந்திருக்கும் கதிர்களைப்போல காட்சியரங்குகள். நெல்மணிகளாய் புத்தகங்கள். சுமார் 500 காட்சியரங்குகள், கோடிக்கும் மேலான புத்தகங்கள் என இந்தப்பெருங்கடலில் தேவையான புத்தகங்களை நிச்சயமாய் நிதானமாக தேர்ந்தெடுக்கவே முடியாது. மலைப்பும், வியப்பும் மட்டுமே மிஞ்சியது. (நகுலன் கவிதைகள் என்ற நெல்மணியை வாங்கவில்லை என்பதற்குத்தான் இந்த பில்ட் அப், புரிகிற‌தா பரிசல்?) முதலில் இருந்து துவங்கி ஒரு ரவுண்ட் வந்துவிட்டு பின்னர் ரெஸ்ட் எடுத்துவிட்டு உணவுக்குப்பின்னர் முடிவு செய்த பதிப்பகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்க திட்டமிட்டேன்.

ஆனால் திட்டமிட்டபடி என்று நாம் நடந்திருக்கிறோம்? ஒவ்வொரு தெருவாக 'யு' டர்ன் அடித்து அடித்து பாதியை கடப்பதற்குள் பாதி பையை நிரப்பியிருந்தேன். டயர்டாகிவிட்டதுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. வெளியே வந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சாம்பார் சாதத்தை விழுங்கிவிட்டு பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு இரண்டாவது ரவுண்டை துவக்கவும் சிங்கைப்பதிவர் விஜய் ஆனந்த் மற்றும் கார்க்கி ஆகியோரிடமிருந்து அழைப்பு. முதல் முறையாக விஜயுடன் சந்திப்பு. அவரும் அவரது நண்பரும் நிஜமாகவே கோணிப்பை பிடிக்காத அளவில் புத்தகங்களை அள்ளி வைத்திருந்தனர். மேலும் எறும்பு செல்லும் பாதையை அழித்துவிடுவது போல டீ குடிக்கப்போகலாம், கிழக்கு போகலாம், உயிர்மை போகலாம் என இடது வலதாக, முன்னும் பின்னுமாக என்னை குழப்பிவிட்டு அவர்கள் நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர்.

அதன் பின்னர் திருவிழாவில் தொலைந்த குழந்தைப்போல ஏற்கனவே வந்த பாதையிலேயே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தேன். கூட்டம் பெரும்பாலும் விஐபி பதிப்பகங்களான உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, விகடன் ஆகியவற்றையே மொய்த்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே சில முக்கிய எழுத்தாளர்களும் கூட்டத்தோடு கூட்டமாய் உலாத்திக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. பெண்கள் பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும், ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகளிலும், வெளியே காண்டீனுலுமே காணப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை, கார்க்கி சொன்னான். அதற்கு நான் மத்தியமாக தலையாட்டிவைத்தேன். ஒருவழியாக வழிகண்டுபிடித்து மீத வரிசைகளையும் பார்த்துவிட்டு, பட்ஜெட்டைத்தாண்டி பையையும் நிரப்பிக்கொண்டு அக்கடா (கால்வலியில் கடைசி சில தெருக்கள் சும்மா ஒப்புக்காச்சும் ரன்னிங்கிலேயே பார்த்தேன்) என்று உட்காரவும் பளபளா வெள்ளைச்சிரிப்போடு வெள்ளைச்சட்டையில் அப்துல்லா வரவும் சரியாக இருந்தது. அவரோடு கொஞ்சம் அளவளாவிவிட்டு கிளம்பினேன்.

வாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும் ஆபத்திருந்தாலும் எவ்வளவோ பண்ணிவிட்டோம்.. இதைப் பண்ணமாட்டோமா என்ன.?

சாம்பல் நிற தேவதை ‍: ஜீ.முருகன்
கண்ணாடியில் நகரும் வெயில் ‍: வா.மணிகண்டன்
சிகரங்களில் உறைகிற‌து காலம் : கனிமொழி
கிளிஞ்சல்கள் பறக்கின்றன : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு
மரப்பாச்சியின் சில ஆடைகள் : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு
உரையாடலினி : அய்யனார் விஸ்வநாத்
சினிமாவின் மூன்று முகங்கள் : சுதேசமித்திரன்
தாழப்பறக்காத பரத்தைய‌ர் கொடி : பிரபஞ்சன்
நாஞ்சில்நாடன் கதைகள் : நாஞ்சில்நாடன்
சூடிய பூ சூடற்க : நாஞ்சில்நாடன்
ரத்தம் ஒரே நிறம் : சுஜாதா
சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் : வா.மு.கோமு
கருவேல நிழல் : பா.ராஜாராம்
அய்யனார் கம்மா : நர்சிம்
பெண்மணம் : கி.ராஜநாராயணன்
கோபல்ல கிராமம் : கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் : கி.ராஜநாராயணன்
பாரதியின் கட்டுரைகள் : பாரதியார்
பாரதியின் கதைகள் : பாரதியார்

இறுதியாக இன்னும் வாசிக்கவில்லையே இந்த பெருநாவலை, காலங்களைக் கடந்து நிற்பதற்கான காரணம் அறியும் ஆவலில்..

பொன்னியின் செல்வன் : கல்கி


.