Thursday, February 25, 2010

அண்ணன்

அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது, வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறான், அப்பா கூட்டிவரச்சொன்னார் என்று மூர்த்தி சொன்னபோது கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். எப்படி சமாளிக்கப்போகிறேன்? வீட்டுக்குப் போகாமல் இப்படியே எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று கூட தோன்றியது. அப்பாவை சமாளிப்பதே பெரிய விஷயம். இந்த அழகில் அண்ணனை எப்படி சமாளிப்பது? அவன் முன்னால் நிற்பதே ஆகாத காரியம். அவன் கண்களைச் சந்திப்பதைவிட கொம்பு சீவிய அடங்காத காளையின் முன் நிற்பது எளிது. ஒரே அயர்ச்சியாக இருந்தது.

“எப்படிரா அவனுக்கு தெரிஞ்சுது?”

“அப்பா காதுக்கு விசியம் போனதுமே முத வேலையா அவரு பண்ணுனதே அவனுக்கு போன் பண்ணிச்சொன்னதுதான்”

நானும் மூர்த்தியும் நின்றுகொண்டிருந்தது சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் ரயில்வே பாலத்தின் அடிப்புறம். மூர்த்தி என் தம்பி. இங்கிருந்து சிறிது தூரத்தில்தான் எங்கள் வாழை வயல் இருந்தது. அங்கு தண்ணீர் பாய்ச்ச வந்தவனிடம்தான் மூர்த்தி வந்து இந்த விஷயத்தைக்கூறினான். ஆசுவாசமாக உட்கார்ந்து பேசத்தான் இந்த பாலத்துக்கு அடியில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். எப்படியும் இது போல ஒரு சூழல் ஏற்படத்தான் போகிறது என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதுவும் இப்படி திடுமென‌ எதிர்பார்க்கவில்லை. எப்படி யோசித்தும் என்ன செய்வது என்று ஒன்றும் புலப்படவில்லை.

எப்போதுமே பிரச்சினைகளுக்கு எதிராக ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அது அதை எதிர்கொண்டுவிடுவதுதான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

“வீட்டுக்கு போயிர‌லாமாடா?”

“செருப்பால அடிப்பான்”

“ஏண்டா நீ வேற.. நானே என்ன பண்ணுத‌துன்னு பயந்துபோயிருக்கேன்.. பீடி சிகரெட் ஏதாவது வச்சிருக்கியா?”

அவன் குடிப்பது எனக்கும் நான் குடிப்பது அவனுக்கும் தெரியும் என்றாலும் நேருக்கு நேராக இப்படிக்கேட்பேன் என்று எதிர்பாராததால் மூர்த்தி முதலில் ஆச்சரியமாகி பின் தயக்கத்துடனே தன்னிடமிருந்த சிகரெட்டைத் தந்தான். அதைப்பற்றவைத்துக்கொண்டே இந்த பிரச்சினைக்கிடையிலும் விளையாட்டாய்,

“இதுக்கே ஒரு நா அவன்கிட்ட போட்டுக்குடுக்கணும்டா உன்னிய‌” என்றேன்.

“மொதல்ல உம் பிரச்சினைய‌ பாரு ராசா.. அப்புறம் பாக்கலாம் என்னிய‌..”

“யார்றா போட்டுக்குடுத்தது? எப்படிரா தெரிஞ்சுது?”

“தேசிங் சார் பார்த்திருக்காரு. சேர்மாதேவி பஸ்ஸ்டாண்ட்ல.. நேத்து.”

காயத்ரி.

காயத்ரி மனதில் வந்தாள். எப்படி நிகழ்ந்தது இது? அழகில் மயங்கித்தான் அவள் பின் சுற்றத்துவங்கினேன். அவள் அழகி மட்டும்தானா? தேவதை. இந்த கரடுமுரடான குடும்பத்துக்குள் காயத்ரியை கொண்டு வந்து ஒரு வீணை போல வைக்கவேண்டும். வைத்துவிட்டால் பின்னர் அப்பா, அம்மா அனைவரும் அந்த அதிர்வை உணர்ந்துதான் தீரவேண்டும். நிச்சயம் அவள் வருகையின் அற்புதத்தை உணர்வார்கள் அனைவரும். ஆனால் கொண்டு வருவது எப்படி? இது சாத்தியமா? இதை நிகழ்த்த முடியுமா?

முடிந்தாகவேண்டும். நிகழ வேண்டும். வெண்ணை போன்ற காயத்ரியின் தேகம் இந்த கருத்த தேகத்தை ஏற்றதை அனைவரும் அறியச்செய்யவேண்டும். காதலை மனதில் எழுதினால் அழகு. உடலில் எழுதினால் பேரழகு.!

"போயிராலாம்டா. வேற என்னதான் பண்ணுதது. என்ன பண்றாங்கன்னு பாத்துருவ‌ம்"

"என்னிய மாட்டிவிட்டுறாத. கேட்டா எனக்கே இப்பதான் தெரியும்னுருவேன், சரியா?"

சொல்லிவிட்டேனே தவிர மனம் கிடந்து அடித்துக்கொண்டது. வீட்டில் காத்துக்கொண்டிருப்பது அப்பா மற்றும் அண்ண‌ன். அண்ணன் என்றால் எங்கள் பெரியப்பா மகன். ஆனால் ஆலமரமாய் விரிந்து கிட‌க்கும் குடும்பங்களுக்கு அவன் மூத்த வாரிசு. அப்பா, பெரியப்பாக்களை விடவும் அவன் சொல்லே வேதம் எங்கள் குடும்பங்களுக்கு. அவனுக்கே எங்கும் முதல் மரியாதை. அதற்குத் தகுதியான ஆள்தான் அவன். அத்தனை பேர் மீதும் அவ்வளவு பாசம் வைத்திருப்பவன். அத்தனை தம்பி தங்கைகளில் இதுவரை அதிகம் படித்தவன். படித்தும் வேறு வேலைகளுக்குப் போக மனமில்லாமல் இயற்கை விவசாயத்தில் ஆர்வமாகி இன்று, வயலிலேயே கிடந்து வளர்ந்த எங்களைவிடவும் சிறப்பாக வயல்களையும், தோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊரிலும் நல்ல பெயர். விவசாயம் சார்ந்த, மற்றும் பிற‌ தொழில் செய்வோர் இவனது ஆலோசனை கேளாமல் ஏதும் செய்வதில்லை. அவ்வளவு அன்பானவன், ஆனால் கோபம் வந்தாலோ.. போச்சு.! அவனுக்கே இன்னும் கல்யாணமாகவில்லை. இந்த அழகில் இன்னும் இரண்டு வருடம் மறைத்து வைக்கலாம் என்று எண்ணிய என் கதை இதோ வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. என் உடன்பிறந்தவர்களே மூர்த்தியையும் சேர்த்து நான்கு பேர். அதில் இரண்டாமவள், எனக்கு இளையவள் கல்யாண வயதில் காத்திருக்கிறாள்.

வீட்டை நெருங்கியிருந்தோம். என் படபடப்பு இன்னும் ஏகத்துக்கு எகிறியிருந்தது. தெருவிலிருந்த வேலிக்கதவை ஓசைப்படாமல் திற‌ந்து இருவரும் உள்நுழைந்தோம். செம்பருத்திச் செடிக்கருகில் அவனது பைக் நின்றிருந்தது. ஒற்றை வாசல்கதவு முழுதும் மூடப்படாமலிருந்தது. முன்னறையில்தான் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மாவின் குரல் கேட்டது. இப்போதுதான் வந்திருக்கிறான் போலிருக்கிறது. உன்னிப்பாக கேட்டேன்.

"யய்யா, காப்பி போடவா?"

"அம்மா, நா திருநவேலிக்கு பேயிட்டு வர்ற வழிக்கி நேரா வாறேன் இங்க.. இன்னும் சாப்பிடல, இருக்க சோத்தப்போடுங்க.."

"புளிக்கொழம்புதான வச்சிருக்கேன், செத்த இருக்கியா.. இவள இந்தக்கோழிய அடிக்கச்சொல்லுதேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா, இருக்கத வைங்க.. சித்தப்பா நீங்க சாப்பிட்டிய‌ளா, எங்கூட உக்காருதியளா? உக்காருங்க, அந்தப்பய வரட்டும் நாங்கேக்கேன். நீங்க முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசிக்குவம்"

சாப்பிட உட்கார்ந்திருக்கிறான். மூர்த்தியை மறித்தேன்.

"கொஞ்சதேரம் கழிச்சு போலாம்டா, சாப்பிட உக்காந்துட்டான்"

அப்படியே சத்தமிடாமல் வாசலுக்கு வந்து சுடலை கடைக்குச்சென்று இருந்துவிட்டு ஒரு அரைமணி நேரம் கழித்து வீட்டுக்குச்சென்றோம். உள்ளே நுழைந்ததுமே தெரிந்தது நடுவீட்டில் அப்பா சேரில் உட்கார்ந்திருக்க அருகே தூணில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். இருவரையும் பார்க்க தயங்கியபடியே உள்நுழைந்தேன். பின்னாலயே மூர்த்தி நுழைந்தான்.

"வாண்ணே"

"ஆமாடே"

பின் பேச வார்த்தைகளில்லாமல் அனைவரும் தயங்கியபடியே சில நிமிடங்கள் கழிய, மூர்த்தி அடுத்த அறைக்கு நழுவினான்.

"அப்பா என்னுமோ சொல்லுது.. என்னடே விசியம், நெசந்தனா?" நேரடியாக கேட்டுவிட்டான். குரலில் இருந்து அவன் கோபத்திலிருக்கிறானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

தயங்கியபடியே, "என்னண்ண.. வி..சி..ய..ம்?"

"என்னடே மழுப்புத?"

அப்பா கோபமாக கத்தினார், "பெரிதம்பி, கண்டதுண்டமா வெட்டிப்போட்டுருவேன் சொல்லிரு.. கண்ட செறுக்கியவும் இந்த வீட்டுக்குள்ள கொண்டுவந்துருலாம்னு மட்டும் கனவு கண்டுக்கிட்டு இருக்க வேண்டாம். அப்பிடியெதுவும் கேக்கல, வீட்டவிட்டு அடிச்சுப்பத்திருவேன்.. சொல்லிட்டேன்"

"இருங்கப்பா, அதெல்லாம் கேப்பான்.. நாஞ்சொல்லுதன்"

மற்ற நேரம் என்றால் ஏதாவது எதிர்பேச்சு பேசியிருப்பேன். இவன் இருக்கும்போது பேச முடியாது. பெரியவங்களை எதிர்த்துப் பேசினால் கடும் கோபமாகிவிடுவான். அமைதியாக இருந்தேன். மூர்த்தியும் அவனுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டான்.

"என்னடே சொல்லுத? இதெல்லாம் ஆவாதுன்னு தெரியாதா ஒனக்கு. அடுத்து இந்தப்பிள்ளைக்கு மாப்ள பாக்கணும். நல்லாருக்கா நீ பண்றது?"

ஆரம்பித்தேன், மெதுவாக ஆனால் உறுதியாக, "இல்லண்ண.. ஒனக்கே தெரியும், ஊரு ஒலகத்துல என்ன நடந்துகிட்டிருக்குன்னு. மொதல்ல ஒங்கல்யாணமும், தங்கச்சி கல்யாணமும் முடியட்டும்னு பாத்தேன். அதுக்குள்ள‌ தெரிஞ்சிபோச்சி"

அப்பா சேரைவிட்டு ஆத்திரமாக எழுந்தார். அவரை கையைப்பிடித்து அமரச்செய்து விட்டு என்னை நோக்கி கத்தினான்,

"சொன்னா கேட்கமாட்ட? பிச்சுப்புடுவன் ர‌ஸ்கல்.." என்றவாறே அப்பாவிடம் திரும்பினான்,

"இல்லப்பா, இது சொல்பேச்சு கேக்குறமாதிரி தெரியலை.. எங்கியாவது இழுத்துட்டுப்போயி கேவலப்படுத்துறதுக்கு மின்னால நம்மளே ஒத்துக்கிடவேண்டியதுதான். நெறைய பாத்தாச்சு.. இப்ப ஊருக்கு ஊரு இதான் நடந்துகிட்டுருக்கு, நாம என்னதான் கழுதயா கத்தி தொண்டத்தண்ணி வத்துனாலும் கடசில ஒண்ணும் ஆவாது. இவுனுவ அனுவவப்படாம திருந்தமாட்டானுவ. என்ன பண்ணச்சொல்லுதிய? இன்னமயும் சாதிய கட்டிக்கிட்டு அழுது என்ன பண்ணப்போறம்? நம்ம குடும்பத்தயே எடுத்துக்கங்க‌ சத்திவேலு தாத்தாவுந்தான் முப்பது வருசத்துக்கு முன்னயே பண்ணினாரு, நீங்க சொல்லித்தான் ஆச்சியப்பத்தி எங்குளுக்கே தெரியும். இப்ப என்ன ஆயிப்போச்சு? அதோட விதய மாத்திப்போட்டாத்தாம்ப்பா பயிர் நல்லாருக்கும்.."

இப்படி திடுமென எனக்கு ஆதரவாக பேசுவான் என எதிர்பாராமல் அப்பா அதிர்ச்சியடைய, நான் உள்ளூர குதூகலிக்க.. எங்களை நோக்கி திரும்பி,

"பேசிக்கிட்டிருக்கம்ல.. போங்கடா வெளில, அவன கூட்டுட்டு போடா.."

மூர்த்தியும், நானும் வெளியேறுவதைப்போல வாசல் கத‌வுக்குப்பின்னால் பம்மினோம். உள்ளே காதுகொடுத்தோம். அப்பாவிடம் தொடர்ந்துகொண்டிருந்தான்.

"என்ன பண்ணச்சொல்லுதிய? இந்தக்கதயில மட்டும் ஒண்ணும் பண்ணமுடியாது. ஒருத்தனும் கேக்கமாட்டான். ஒங்க காலமெல்லாம் வேற.. மெதுவா யோசிச்சுப்பாருங்க. நா சாந்திரம் அப்பாகிட்ட பேசிட்டு நாளைக்கு வாறேன். அடுத்தா என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.. என்னக்கேட்டா தங்கத்துக்கு வயசு இருவதுதான் ஆவுது. இந்தப்பயலுக்குதான் 25 ஆவுதே, எதுக்கு வெயிட் பண்ணுனும்? எனக்கு ஒண்ணும் அவசரமில்ல இருவத்தெட்டுதான ஆவுது. அடுத்த வருசம் பாக்கலாம். ஊரு ஒலகத்துல நடக்காததா?"

அப்பா சிலையாகியிருக்க தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். நான் மனம் பறக்க ஜிவ்வென உணர்ந்தேன். இனிமேல் யாராலும் ஒன்றும் பண்ணமுடியாது.

சற்று நேரத்துல வெளியே வந்தவன் என்னிடம்,

"கொஞ்சம் பொறுங்கப்பா.. பேசுதேன். அதுக்குள்ள நாலுவேரு கண்ணுகாங்க சுத்துதமாதி தெரிஞ்சுது தொலைச்சுப்புடுவன்" என்றவாறே பைக்கை நோக்கி கிளம்பியவன், மூர்த்தியிடம் திரும்பினான்.

"இன்னோரு தடவ சீரெட் குடிக்கத பாத்தேன், வாயில சூடு வச்சிருவன் பாத்துக்க.." நிஜமான கோபம் தெறித்தது.

.

Tuesday, February 23, 2010

துரத்தும் துரதிருஷ்டம்

அதிர்ஷ்டம் ஒருவரைத் துரத்திச்சென்று அடைகிறதோ இல்லையோ, துரதிருஷ்டம் மட்டும் இலக்கை அடையாமல் விடுவதில்லை என நினைக்கிறேன்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் சரி செய்த மறுநாளே நெட் வேலை செய்யவில்லை. கால் புக் பண்ணிவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கலாம் நான். கையை வைத்துக்கொண்டு எங்கே சும்மா இருக்கமுடிகிறது? மூன்று நாள் ஆகியும் இன்னும் ஒரு நாதியைக்காணோம், இதை முன்பே எதிர்பார்த்து பக்கத்து வீட்டு கனெக்ஷனில் மோடம் வேலை செய்கிறதா என பார்க்கும் ஆவலில் அவர்கள் வீட்டிலிருந்த இணைப்பில் மாட்டினேன். டுப்பென்ற சத்தத்துடன் பக்திமணம் கமழ ஒரே நேரத்தில் நான்கு பத்திகளை கொளுத்தியதைப்போல புகை எழும்பியது. அந்தச்சின்ன மோடத்திலிருந்துதான் எவ்வளவு புகை? அவர்கள் வீட்டிலிருந்தது வோல்டேஜ் வித்தியாசம் கொண்ட பவர் கனெக்டர் போலிருக்கிறது. இப்போது BSNL ஆள் வந்து கேட்டால் என்ன சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமை எப்படி பொழுது ஓட்டுவது? ரமா இருந்தாலாவது சுமாரான சுபமாகவாவது பொழுது கழியும். இப்போது என்ன பண்ணலாம்? பார்க்கவேண்டியிருந்த சில டிவிடிக்களை எடுத்து வைத்துக்கொண்டு ஒன்றை கம்ப்யூட்டருக்குள் திணித்தால் 'ஹிஹி.. எனக்கு டிகோடிங் பண்ணத்தெரியவில்லை' என்று அது பல்லிளித்தது. முந்தின நாள் வந்து போன கம்ப்யூட்டர் பிரகஸ்பதி இந்த அழகில் வேலை செய்து வைத்திருக்கிறது.

கடுப்பாகி விட்டு டிவியை ஆன் செய்யலாம் என ரிமோட்டை எடுத்தால்.. நம்புங்கள் அது கை தவறி கீழே விழுந்தது. எதுவும் உடைந்தது போல தெரியவில்லை, ஆனால் வேலை செய்யவில்லை. இது ஏதோ உள்நாட்டு சதி, ஊஹூம் இதற்கெல்லாம் அசரக்கூடாது என முடிவு செய்து பொங்கிவந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு (ரமா இல்லாத நாளில் கூட கடைக்குப் போக நேர்ந்தால்) தாம்பரத்துக்குக் கிளம்பினேன்.

அலைந்து திரிந்து அதே மாடல் ரிமோட்டை வாங்கிக்கொண்டு திரும்பினேன். ஞாபகமாக பழைய ரிமோட்டில் இருந்து பாட்டிரிகளைப் போட்டு முயற்சித்தால் நம்புங்கள் அதுவும் வேலை செய்யவில்லை. திடீரென ஞானம் வந்தது. ஒருவேளை பாட்டிரி தீர்ந்திருந்தால்.. இல்லையே இப்படி திடுமென தீராதே.! கையை நீட்டி, எக்கி, தலைகீழாக நின்று, பக்கத்தில் டிவியுடன் ஒட்டிவைத்து என பல பிரயத்தனங்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாட்டிரி தீரும். இருப்பினும் சந்தேகத்தின் பலனை பாட்டிரிக்கு வழங்கி மீண்டும் கடைக்குப் போய்விட்டு திரும்பினால் அப்போதும் டிவி பல்லைக் காட்டியது. அப்போதுதான் உறைக்கிறது இந்த டெக்னிகல் மண்டைக்கு, டிவியின் சிக்னல் ரிஸீவரில் கோளாறு.

மீண்டும் ஒரு கால் புக் பண்ணிவிட்டு டிவியில் இருக்கும் பட்டன்களால் இயக்கி படம் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். ஒரே நிமிடம்தான். எல்லாம் முடிந்தது. மெனுவை அழுத்தினால் சானல் ரிவர்ஸில் சென்றது, சானல் அப் செய்தால் மெனு வந்தது. சவுன்ட்டைக் குறைத்தால் கூடியது. கூட்டினால் இன்னும் கூடியது.. ஏதோ ஹிந்திச்சானலில் வீடே அலற டப்பென்று மெயினை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்தேன்.

ஏதாவது சினிமாவுக்குப்போய்விட வேண்டியதுதான். பேப்பரை எடுத்தேன். ஊஹூம் ஒன்றும் வேலைக்காகவில்லை. பாவனா மனதில் வந்து அசலுக்குப் போகலாமா என்று ஒரு கணம் தோன்றியது. அடுத்த கணமே டிவி விளம்பரங்களில் வந்த குண்டு குண்டான ஆட்களும் (இரண்டு அஜித், சம்பத், சுரேஷ், பிரபு, இன்னும் பலர்) அவர்களின் மண்டைகளும், டிஸைனர் தாடிகளும் நினைவுக்கு வந்து அந்த எண்ணத்தை அடியோடு ரப்பர் வைத்து அழித்தேன். என்னதான் பண்ணுவது? துரதிருஷ்டம் பயங்கரமானது, கேபிளின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.

.

Monday, February 22, 2010

I Promise..

சிறிய சாலை விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பரும் சக பதிவருமான பரிசல்காரன் விரைந்து குணம்பெற வாழ்த்துவோம். நெற்றியில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. பிறவகையில் பரிசல் நலமுடன் உள்ளார். நண்பர்கள் பதற்றம் கொள்ளத்தேவையில்லை.

இதே வேளையில் டூவீலர், கார்கள் பயன்படுத்தும் அனைவரும் பாதுகாப்பின் அவசியத்தை நினைவுகூர்வோம். விபத்துகள் கொடுமையானவை. அவை நேர்ந்தபின் நம்மை திருத்திக்கொள்ள வாய்ப்புகளே கிடைக்காமல் போகலாம்.

*தவறாது ஹெல்மெட் அணியுங்கள்.
*சாலையின் மீது விழிப்புடன் கவனமாக இருங்கள்.
*அதிக சோர்வில் இருக்கும் போது வாகனங்களை இயக்காதீர்கள்.
*தவறாது சீட் பெல்ட் அணியுங்கள்.
*சாலையின் போக்குவரத்தை உணராத வண்ணம் ஹெட்போன்களை உபயோகிக்காதீர்கள். கார்களிலும் கூட இசை பொழுதுபோக்குக்காக மட்டுமே இருக்கட்டும். இசையில் லயிக்க சாலை சிறந்த இடமல்ல.
*மதுவருந்திவிட்டு வண்டியை இயக்காதீர்கள்.
*தகுந்த வேளைகளில் வண்டியை சர்வீஸ் செய்து கன்டிஷனாக வைத்திருங்கள்.
*கண்டிப்பாக செல்போனைத் தவிருங்கள்.

I Promise.. நான் மேற்குறித்த விதிகளை கடைபிடிக்கிறேன்.

.

Friday, February 19, 2010

திரிபுகளின் வேர்

வேலம்மாளின் ஓலம் தெருவெங்கும் அசாதாரணமாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தெருவிளக்கின் அடியில் கூடியிருந்த நான்கைந்து பெண்களின் கைகள், சுற்றிக்கொண்டிருந்த பீடியின் அடுத்த சுற்றை கவனிக்காமல் தயங்கிக்கொண்டிருந்தன. அவர்களின் காதுகள் இயல்பாகவே நடந்துக் கொண்டிருப்பதை அறியும் ஆர்வத்தில் கூர்மையாயின. ஒருத்தி அவர்களின் அருகே மெலிதாகப் பாடிக்கொண்டிருந்த ரேடியோவின் ஒலியளவை இன்னும் குறைத்தாள்.

தொடர்ந்து கூக்குரலாய் வெளிப்பட்ட வேலம்மாளின் அழுகுரல் இன்னும் வெடிக்கத்துவங்கியிருந்தது. அழுகையினூடாக பேரிரைச்சலாய் தகாத வார்த்தைகளால் ஏசத் துவங்கியிருந்தாள். எப்போதுமில்லாத அளவில் முருகனின் குரலும் மிக ஆவேசமாக‌ கேட்கத்துவங்கியிருந்தது.

“கிஸ்ணமாக்கா, என்னான்னு போயி பாக்குறயா.. முருகண்ண அவளப்போட்டு அடிக்கித மாதி இருக்கு..”

“நீ சும்மா கிட. இதென்னா புதுசா.. ஒன்றாடம் நடக்குததுதான..”

“இன்னிக்கி ரொம்பல்லா சத்தம் கேக்குத மாதி இருக்கு”

“என்னத்த பாக்கச்சொல்லுத? குடிச்சிருந்தாம்னு வய்யி.. நம்முள நாக்கப்புடுங்குத மாதி என்னதாது கேக்குறதுக்கா..”

இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இரண்டாவது வீடுதான் வேலம்மாளுடையது. இது போன்ற‌ ச‌ண்டை, சச்சரவுகள் ஒன்றும் இவர்களுக்குப் புதிதில்லைதான். முருகன் குடித்துவிட்டு வந்த சில நாட்களில் வீட்டுக்குள்ளிருந்து ஒருவருக்கொருவர் ஏசிக்கொள்ளும் சத்தமும், அவன் அவளைப்போட்டு அடிக்கும் சத்தமும், இன்னும் வினோதமான சத்தங்களும் கேட்டவாறுதான் இருக்கும். சிறிது நேரத்தில் சத்தங்கள் அடங்க இவர்கள் பீடித்தட்டைத் தூக்கிக்கொண்டு கிளம்பும் சமயத்தில் வீங்கிய முகத்தோடு அவளது பீடித்தட்டை எடுத்துக்கொண்டு பீடி சுற்ற தெருவிளக்கடிக்கு வருவாள். அவளுக்காக இவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் பீடி சுற்றத் துவங்குவார்கள். மறுநாள் காலை சீக்கிரமே முருகன் மில் வேலைக்கு கிளம்பிச்செல்வதையும் காணலாம். அந்தச்சமயங்களிலெல்லாம் இவனா நேற்று அவ்வளவு ஆத்திரமாக கத்திக்கொண்டிருந்தான் என்று ஆச்சரியமாக இருக்கும். என்ன பிரச்சினை என்று அவளைக் கேட்டாலும் இவர்களிடம் வாயைத் திறந்து ஒருவார்த்தை பேசமாட்டாள்.

“ஒங்க வீட்ல அவ்வொ இருந்தா போயி பாக்கச்சொல்லேன்..”

கிருஷ்ணம்மாளுக்கும் இன்று ஏனோ இந்தச்சண்டை கொஞ்சம் அசாதாரணமாகத்தான் தோன்றியது. செல்வியை நோக்கி,

“போயி எங்கவீட்ல அவ்வொ அப்பாக்கு சத்தங்குடேன்..”

இவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வேலம்மாள் தூக்கியெறியப்பட்டதைப்போல வாசலிலிருந்து தெருவில் வந்துவிழுந்தாள். தலைவிரி கோலமாய் ஆவேசமாய் கத்தத்துவங்கினாள்,

“பேதீல போறவன்.. என்னிய போட்டு அடிச்சிக்கொல்லு.. கைகாலு வெளங்காம நாசமாத்தான் போப்போறே நீ..”

பின்னாலேயே வெளியே வந்த முருகன் வெறிபிடித்தவனைப்போல கத்தினான்.

“நீ இருந்த நாப் போதும்.. பாரு இன்னிக்கி என்ன நடக்குதுனு”

ஆவேசமாக வந்தவன் அவளை மிதித்துத் தள்ளியதில் எதிர்ப்புறமிருந்த முற்றத்தில் விழுந்தாள். வலியில் ஓ’வென அழத்துவங்கினாள் வேலம்மாள். செல்வி இன்னும் இரண்டு வீடு தள்ளியிருந்த கிருஷ்ணம்மாளின் வீட்டிற்கு அவளது கணவனிடம் விபரம் சொல்லி அழைத்துவர ஓடினாள். முருகனை இவ்வளவு ஆவேசமாக பார்த்திருக்காத இந்தப் பெண்கள் மனசு படபடக்க‌ ஓடிப்போய் விழுந்து கிடந்த வேலம்மாளைத் தூக்க முயன்றனர்.

“யக்கா.. இவளப்பத்தி ஒங்குளுக்கு தெரியாது. தூரப்போங்க.. செறுக்கி முண்ட.. ஒன்னிய ரெண்டு துண்டா வெட்டிப்போட்டுட்டு நா செயிலுக்கு போகல..”

என்று கத்தியவாறே மீண்டும் வீட்டிற்குள் ஓடினான். சில விநாடிகளிலேயே வெளியே வந்தவன் கைகளில் அரிவாள் ஒன்று இருந்தது.

அதற்குள்ளாக ஓடிவந்திருந்த கிருஷ்ணம்மாளின் கணவன் கந்தசாமி, முருகனை அழுத்திப் பிடித்து அங்கிருந்து தள்ளிக்கொண்டு போக முனைந்தான்.

“யேய்ய்.. என்னப்பா இது? என்னான்னாலும் கேக்கதுக்கு ஆளில்லையா.. இப்பிடியா தெருல போட்டு பொண்டாட்டிய அடிப்பான்?”

“அதெல்லா நல்லவங்களுதாம்ணே.. விடுண்ணே என்னிய.. இவள..” கந்தசாமியின் பிடியிலிருந்தபடியே திமிறி அவளை மிதிக்க காலை வீசினான் முருகன். இதற்கு மேல் பேசி பயனில்லை என்று எண்ணிய கந்தசாமி அப்படியே அவனைத் தள்ளிக்கொண்டு சென்றான். சிறிது தூரத்தில் சென்றதும் அவன் கைகளிலிருந்த அரிவாளைப் பிடுங்கி இவர்களைநோக்கி அதை மெதுவாக வீசி,

“ஏ தாயிகளா, இத தூக்கி உள்ளப்போடுங்கம்மா.. அப்பிடியே அவக்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருங்க..”

என்று சொல்லிவிட்டு அவனைப் பிடித்த பிடியை விடாமல் இழுத்துக்கொண்டு சென்றான். இதற்குள் சத்தம் கேட்டு மேலும்சில பெண்கள் கூடியிருந்தனர். வாசலுக்கு வந்த சில ஆண்கள் என்ன செய்வதென தயங்கிய‌படியிருக்க, இன்னும் வேலம்மாள் அழுது கொண்டிருந்ததோடு அவனை கெட்டக்கெட்ட வார்த்தைகளால் ஏசியபடியே இருந்தாள். செல்வி,

“என்னக்கா இப்பிடிலாம் பேசுத.. சண்ட போட்டா இல்லன்னா ஆயிரப்போவுது.? இப்பிடிப்போட்டு ஏசுனன்னா அண்ண அடிக்காம என்ன செய்யும்.? நீயாவது பேசாம இருக்கலாமுல்லா.?”

முருகனும் தெருவெங்கும் தகாத வார்த்தைகளால் கத்திக்கொண்டே போனான். அந்தத்தெருவில் ஒழுங்கே இல்லாத வரிசையில் பெரிதும் சிறிதுமாக‌ சுமார் 20 வீடுகள் இருந்தன. தெருமுடிவில் வலது புறம் திரும்பினால் சற்று தூரத்தில் வயல்வெளிகள் ஆரம்பித்திருந்தது. சற்றுதூரம் நடந்து சிறிது தூரத்தில் இருந்த அரசமரத்தடிக்கு வந்தனர். அப்போதும் கந்தசாமி இறுக்கிப்பிடித்த அவன் வலது கையை விட்டிருக்கவில்லை. அப்போது அவன் கையில் இருந்து தன் கையைத் திமிறி விடுவித்துக்கொண்ட முருகன்,

“எங்கண்ண கூட்டுட்டுபோற? உடுண்ணே..” என்றவாறே மரத்தடியில் கிடந்த பெரிய கல்லொன்றில் உட்கார்ந்தான். கோபமும், அழுகையும், ஆற்றாமையுமாய் முருகன் தத்தளித்துக்கொண்டிருந்தான். அவனருகே அமர்ந்த கந்தசாமி,

“யேய், நீயாப்பா இப்பிடி பண்ணுதது. ஏதாது பிரச்சினைன்னா பெரியவங்ககிட்ட ரெண்டு வார்த்த சொன்னா கேக்கமாட்டாங்களா? இது பாக்க நல்லாவாயிருக்கு? அப்பிடி என்ன பிரச்சினை?”

“என்னத்தண்ண சொல்லச்சொல்லுத?”

“எதுனாலும் வீட்டுக்குள்ள நாலு சொவுத்துக்குள்ள வச்சிக்கணும்பா.. இப்பிடி நடுத்தெருவுல போட்டாஅடிப்பாங்க.. வெளியில போட்டு அடிச்சா என்னா அர்த்தம் தெரியுமா ஒனக்கு? பண்ணக்குடாதுப்பா..”

“தெரிஞ்சிதாம்ணே பண்ணுனேன்.."

“ஏ.. என்ன சொல்லுத..” அதிர்ந்த கந்தசாமிக்கு அடுத்துப்பேச வார்த்தையில்லாமல் போனது..

"நீயே சொல்லு, நா என்னைக்காது அப்பிடி பண்ணிருக்கனா.. அவள எப்பிடி வச்சிருக்கேன். கொழுப்பெடுத்தவ.. மானத்த வாங்காம போமாட்டா போலருக்கே.. அவள மட்டும் கொன்னா பத்தாதுண்ணே.. இன்னும் கொள்ளப்பேத்த கழுத்தறுக்கணும்ண்ணே..” அவனது இறுதி வரிகள் அழுத்தமாக காற்றில் பரவத்துவங்கின.

தெருவிளக்கையும் விஞ்சி வெளிச்சத்தை பொழிந்துகொண்டிருந்த மேகங்களற்ற வெண்ணிலவு களங்கங்கள் மிகுந்ததாய் இருந்தது அன்று.

.

Thursday, February 18, 2010

டைரியும் டக்கீலாவும் காதலும் குறிப்பும் லெமனும்..

14.02.10 அன்று மாலை சென்னை கேகே நகர், டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற பிரபல பதிவர்கள் பரிசல்காரன், கேபிள்சங்கர் ஆகியோரின் புத்தக வெளியீட்டுவிழா நிகழ்வை அனைவரும் அறிவீர்கள். ஏற்கனவே கிளியர் கட் நிகழ்ச்சி விவரங்களும், புகைப்படங்களும் வெளியாகிவிட்ட நிலையில் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு.

ஒரே உம் உம்னு படிச்சதால வந்த கொளப்பத்துல தலைப்பு இப்படியாகிவிட்டது. ஹிஹி.. அப்புறம் இவ்வளவு சொதப்பலாக நான் இதுவரை போட்டோஸ் எடுத்ததே இல்லைன்னு நினைக்குறேன். வந்து சிஸ்டமில் ஏற்றிப்பார்த்தால் ரெட் ஐஸ், அவுட் ஆஃப் போகஸ், ப்ளர், முதுகு, பின்மண்டை என எடுத்த அத்தனை படங்களிலும் கோளாறுகள். நான் நினைக்குறேன்.. புத்தக வெளியீட்டு அரங்கின் வாஸ்து சரியில்லைன்னு. எடுத்ததுல கொஞ்சம் தேறுனது மட்டும் இங்கே..

 

DSC09390 

வெளியிடப்பட்ட புத்தகங்கள் - லெமன் ட்ரீ : சங்கர்நாராயண் (கேபிள்சங்கர்), டைரிக்குறிப்பு : பரிசல்கிருஷ்ணா (பரிசல்காரன்)

DSC09368

அரங்கின் பிரதான போட்டோகிராஃபர் பரிசல் மேகா

DSC09342

புத்தக வெளியீடு

DSC09291

தொகுப்புரையில்.. சுரேகா

 DSC09298

நர்சிம், மணிகண்டன், கார்க்கி, பரிசல்கிருஷ்ணா

 DSC09311

ஜ்யோவ்ராம் சுந்தர்

 DSC09333

யுவஅதிஷ்ணா

 DSC09359

குட்டிப்பூ, வெண்பூ, அப்துல்லா

 DSC09363

அத்திரி

 DSC09364

திருப்பூரின் வலைத்தூண் சாமிநாதன்

 DSC09325

விருந்தினர்களின் ஒருபகுதி

 DSC09293

இன்னொரு பகுதி

 DSC09372

பிரமிட் நடராஜன்

 DSC09323

அஜயன் பாலா

 DSC09379

C.S.அமுதன்

 DSC09385

பொன்.வாசுதேவன்

 DSC09389

கார்க்கி

_MG_2533

ஆதிமூலகிருஷ்ணன் (விழாவில் என் போட்டோவை நானே எடுக்கமுடியாததால் ஒரு பழைய போட்டோ ஒன்று. அதெப்படி என் பதிவில் இத்தனை பேர் போட்டோ போட்டுட்டு என் போட்டோ போடலைன்னா என் மனசு கேட்காதில்லையா?)

DSC09281

லாஸ்ட்.. பட் நாட் லீஸ்ட்.. ஹிஹி.. அந்த ஃபேஸ் எக்ஸ்பிரஷனைத்தான் கொஞ்சம் பாருங்களேன்.!

Wednesday, February 17, 2010

சில பாராட்டுகள்

சில அருமையான பதிவுகளைப் பார்க்கும் போது அடடா என்ன பிரமாதம் என்று வியந்துவிட்டு அவர்களை எப்படியும் பாராட்டவேண்டும் என்று போனிலோ, மெயிலிலோ பாராட்டைத்தெரிவிக்க முயல்கிறோம். அது என்னவோ எனக்கு திருப்தியாகவே இருப்பதில்லை. இனி இது போன்ற தொகுப்புப்பதிவுகளிலேயே தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன்.

ஒரு அருமையான கவிதை அனுபவத்துக்காக சரவணகுமார் MSK

ஒரு பயனுள்ள பகிர்வுக்காக ஆரூரன் விஸ்வநாதன்

தெறிக்கும் நகைச்சுவைக்காக ச்சின்னப்பையன், குசும்பன்

ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.. (அரைமணி நேரம் தொலைபேசியில் புகழ்ந்ததாய் கொள்ளுங்கள்) தொடருங்கள் நற்பணி.!

**********************

எழுத்தாளர்களாகிவிட்ட (ஒரு முட்டை ஆம்லெட்டாகிறது.. ஹிஹி) கேபிள்சங்கர், பரிசல்காரனுக்கு வாழ்த்துகள். புத்தக வெளியீட்டுவிழா குறித்த பதிவு, போட்டோக்கள், ஊருக்குச்சென்று வந்த பயணக்கட்டுரை (கட்டாயம் போட்டாக வேண்டுமாமே), போட்டோக்கள், விடியோக்கள் எல்லாம் ஸ்டாக்கிலிருக்கின்றன. நேரமின்மையால் பதிவிடமுடியவில்லை. அதெப்படி விடமுடியும்? கண்டிப்பாக எல்லாம் வரும்.

**********************

மணவாழ்க்கையில் களமிறங்கியிருக்கும் பதிவர்கள், அன்பு நண்பர்கள் அதிஷா, யாத்ரா, சேரல், அதிபிரதாபன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.! (ஊஹூம், சிரிக்கக்கூடாது. நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது?)

**********************

அரிதாக சிலர் நேரிலும், மெயிலிலும் நம் எழுத்துகளைச் சிலாகிக்கும் போது கொஞ்சம் மிதப்பது போலத்தான் இருக்கிறது. சமீபத்தில் மிதக்கச்செய்தவர் 'மறத்தமிழன்'. மேலும் உண்மையிலேயே புதிய பதிவுகளேதும் இருக்கிறதா என சிலர் அடிக்கடி வந்து பார்ப்பதாக தெரிய வரும்போது 'இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது?' என்று தோன்றி அப்படியே கொஞ்சம் புல்லும் அரிக்கிறது. உங்களைச் சோதனை எலிகளாய்க் கருதி பல கவிதை, சிறுகதை முயற்சிகள் எல்லாம் செய்ய பலத்த திட்டமிருப்பதால், பயப்படவேண்டாம், எழுதாமலிருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஏதுமில்லை.

எனினும் கொஞ்ச நாளாக சில பிரச்சினைகளால் தொடர்ந்து ஏதும் அதுவும் உருப்படியாக ஏதும் எழுத இயலாமலிருக்கிறது. மேலும் பிளாகரோடு போராடமுடியாமல் விண்டோஸ் லைவ் ரைட்டருக்குப் பதிலாக (ரைட்டருக்கு என்ன பிரச்சினையோ என் கம்ப்யூட்டருக்கு வரமாட்டேன் என்கிறது) ஏதோ ஒரு சாஃப்ட்வேரை (பிளாக்டெஸ்க்) இறக்கும் முயற்சியில் கம்ப்யூட்டர் கோமா ஸ்டேஜுக்கு போய்விட்டது. அதைச் சரிபண்ண இன்னும் சில நாட்கள் ஆகுமென்பதால் இன்னும் சில நாட்கள் இதே நிலை தொடரும். அதுவரை என்ஜாய்.!

*************************

சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.

Sunday, February 14, 2010

தீராதது

யாரையும் பார்ப்பதேயில்லை
கண்களில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது கள்ளம்
கனவெங்கும் பளபளக்கும் உடல்கள்
சதசதவென சகதியாகிவிடுகிறது நொடியில் மனம்
தடக் தடக்கென இதயம் துடிக்க
ஒரு தோற்றம் (Posture) போதுமானதாயிருக்கிறது நான் மோகிக்க
இப்படியே நல்லவனாய் வேஷம் கொண்டிருக்க..
துருப்பாய் நீயொருத்தி மட்டும்
வெட்கம் பிடுங்கித்தின்கிறது
நீயில்லாத நாளெல்லாம்.!


.

Thursday, February 11, 2010

பதின்மத்தின் ஒரு சேதி

தொடர்பதிவுகள் எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பதின்ம வயதுகளில் எழுதப்பட்ட டைரிக்குறிப்புகளை பகிரும் இந்தத்தொடருக்கு அழைத்த தோழி 'சின்ன அம்மிணி'க்கு நன்றி. சுவாரசியமான டாபிக்தான் இல்லையா? எனக்கு டைரி எழுதும் வழக்கமிருந்ததில்லை. சில வருடங்களில் ஆர்வத்தோடு ஆரம்பித்து தொடராமலே போயிருக்கும் டைரிகள் பரணில் கிடக்கின்றன. அந்த வயதுகளில் நிகழ்ந்த பகிரத்தக்க விஷயங்கள் பல இருப்பினும் ஒரு காதல் பகுதியை மட்டும் பார்க்கலாம். (மற்றது யாருக்கு வேணும்கிறீங்களா? அதுவும் சரிதான்)

**********

சினிமாக்களும், புத்தகங்களும், நண்பர்களும் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்பட்டதல்ல என் காதல், நிச்சயமாக சொல்வேன். சின்னஞ்சிறுமியாய் இருக்கும் போதே என் பிளாக் அன்ட் வொயிட் உலகத்தின் வண்ணமாக இருந்தவள் அவள். புரியாத வயதிலேயும் இவள் சக மனுஷி அல்ல என்பதை உணர்ந்தே தவித்தவன் நான். ஆகவே இந்த பைத்தியக்காரத்தனத்தை வர்ணித்து பத்தாம் வகுப்பிலேயே நண்பர்களைக் கெடுத்தவன் நானாக இருக்கக்கூடும்.

காதலின் மொத்தமும் அல்லது பெரும்பான்மைப்பகுதியும் காமம் என்ற கூற்றை எந்த அறிவியல் சொன்னாலும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் நான் உணர்ந்த நிஜம் இது. பின்னாளில் தாளமுடியாமல் வெடித்துக்கிடந்ததை ஒப்புக்கொள்ளும் அதே நேரம் காமத்தை அறியாத ஏன் உறவுகளையே அறியாத பால்ய வயதிலும் அவள் தலைக்கு மேல் நான் மட்டுமே அறிய, சுழன்ற ஒளிவட்டத்தை கண்டு.. இவளிடம் மட்டும் எப்படி என்று பொருள்விளங்காத குழப்பத்தில் வளர்ந்தவன் நான்.

பதின்மத்தில்தான் அந்த உணர்வுக்குக் காதல் என்ற பெயர் வழங்கப்படுவதைக் கண்டுகொண்டேன். எப்படிச்சொல்வது.. அதை.. அவளிடம்.? தூக்கமற்ற இரவுகளின் அறிமுகம். நெருப்பு சுடுகிறது என்றால் சுடுகிறது என்றுதான் சொல்லமுடியும். லட்சம் தடவைகள் பயன்படுத்தப்பட்டாலும் கூரிய விழிகள் என்றால் கூரிய விழிகள்தான். நீர்த்துளிகள் அவள் முகமெங்கும் பூத்திருக்க அவள் அன்று பார்த்த பார்வை என் எழுபிறப்புக்குமானது என்றால் உங்களால் மறுக்கமுடியுமா? காற்றையும், மழையையும் போல பல்வேறு வடிவங்கள் கொண்டவள் அவள். பிரமிப்பானவள்.

கண்ட கட்டுப்பாடுகள், ஒழுக்கம், நாகரீகம், புண்ணாக்கு அத்தனையையும் தொலைத்துவிட்டால்தான் என்ன? நான் தொலைக்கவில்லை. முடிந்துபோனவற்றில் இன்னும் முடிவுக்கு வரமுடியாத நான் செய்த தவறுகளில் முதன்மையானது அது.

ஒரு சில முத்தங்களோடு முடிந்து போன முடிவுறாத எண்ணங்களின் பயணம் அது, நினைவுகளின் நீட்சி அது. இன்னும் சொல்வேன் இதுபற்றிப் பின்னர். இப்போது தொடரமுடியாமல் விக்கித்து நிற்கிறேன்... நன்றி.

நீ இருந்தால் இருப்பேன்
அழிந்தால் அழிவேன்
நீயறியாமல் உன்னைத் துரத்திக்கொண்டேயிருப்பேன்
ஒரு ஒற்றனைப்போல.!

*************

இந்தத்தொடரை (பதின்ம வயதுகளின் டைரிக்குறிப்புகள்) தொடர நான் ஆசையோடு அழைப்பது..


Wednesday, February 10, 2010

ரெண்டு ஷாட் டக்கீலா

 

lemontree28withoutimage10

வீரிய விதைகள் எழுந்தேதான் தீரும். பெருந்திரளான பதிவர்கூட்டத்தில் நல்ல எழுத்துக்கள் நட்சத்திரங்களுக்கிடையேயான நிலவைப் போல பளிச்சென தெரிந்துவிடத்தான் செய்கின்றன. பதிவர்கள் பலரின் புத்தகங்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நண்பர் நர்சிமைத் தொடர்ந்து பரிசல்காரன், கேபிள்சங்கர் ஆகியோரின் முதல் புத்தகங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு நல்விழாவில் வெளியாகவிருக்கின்றன. இன்னும் பல சிகரங்கள் தொட அவர்களுக்கு இது ஒரு நல்தொடக்கமாக அமைந்திட நம் நல்வாழ்த்துகள். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்க நண்பர்களின் சார்பில் வேண்டுகிறேன்.

parisalwithcontent12

சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துகொள்ளும் இவ்விழாவினைப்பற்றி மேலதிக தகவல்கள் இதோ:

நிகழ்ச்சி நிரல்
தேதி : 14.02.10
நேரம் : மாலை 5.30
விருந்தினர்கள் : பிரமிட் நடராஜன், நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா, எழுத்தாளர்
பொன்.வாசுதேவன், பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78

அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894747014
குகன் : 9940448599

(பி.கு : மறக்காமல் டைரி கொண்டுவரவும். ஆட்டோகிராப் போட்டுத்தருகிறேன். கேட்க கூச்சப்படவேண்டாம்)

Monday, February 8, 2010

தங்கமணி அப்டேட்ஸ்

சமீபத்தில் குடும்பத்தோடு ஒரு ரிஸப்ஷனுக்குப் போயிருந்தோம். பஃபே சிஸ்டத்தில் ஜிலேபி, வெஜ் பிரியாணி, சப்பாத்தி குருமா, தயிர்சாதம், சைட் டிஷ்ஷஸ் என அத்தனை ஐட்டமும் அவ்வளவு டேஸ்டியாக இருந்தது. நல்ல சாப்பாடுங்கிறது அரிதிலும் அரிதான எங்கள் குடும்பமே (அம்மா, தங்கை, ரமா, மைத்துனி எல்லோருமே சமையலில் அவ்வளவு அழகு) ஏதோ காணாததை கண்டது போல சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பிரியாணியில் இருந்து அடுத்த ஐட்டத்துக்குப் போகாமல் அதையே மாறி மாறி எடுத்துப்போட்டுக்கொண்டு இருந்தனர். 'மானத்த வாங்காதீங்கடி சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க'ன்னு நான் சொன்னபோது தங்கை நைஸாக 'பார்சல் கேட்டா தருவாங்களாடா?'னு கேட்டப்போ ஏதோ விளையாட்டுக்குதான் கேட்கிறான்னு நினைத்துக்கொண்டு 'அப்படித்தாண்டி பண்ணனும், நைட்டுக்கு உங்க சாப்பாட்ட சாப்பிடுறதுக்கு இவனுங்ககிட்டயே பார்சல் வாங்கிட்டுப்போகலாம்' என்றேன்.

ரமா பக்கத்தில் வந்து காதைக்கடித்த பின்னர்தான் புரிந்தது, இவங்க நிஜமாகவே பார்சலுக்குப் பிளான் போடுவது. 'அடிப்பாவிகளா.. வாயிக்கு ருசியா ஒரு தயிர் சாதம் பண்ணத் துப்பில்லாம இப்படி பண்றீங்களே.. இதென்ன ஹோட்டலா? வீட்டுக்கு வாங்க உங்கள வச்சிக்கிறேன்'னு அடுத்தாளுக்குத் தெரியாம விழுந்து பிடுங்கிய பிறகுதான் ஒழுக்கமா சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள்.

*************

சமீபத்தில் ஒரு நண்பர் அவரது தங்கமணியோடு வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டு முடிந்து ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப ஆதங்கத்தோடு பேசினார்.

"அந்தக்காலத்துல எங்கம்மா மீன் குழம்பு வைச்சாங்கன்னா தெருவே மணக்கும். யேய்ய்.. என்னப்பா ஊட்ல விசேஷமான்னு ரெண்டு பேரு விசாரிச்சுட்டுப்போவாங்க. இப்பல்லாம் எங்க.. இவள் வைக்கிற குழம்பு, சட்டிக்குள்ள மண்டைய விட்டு மோந்து பாத்தாலும் வாசத்தை காணோம்.."

ரமாவும், அவர் தங்கமணியும் பக்கத்தில் வந்து அதற்கு மாற்றுக்கருத்து சொல்லத்தயாராக இவர் அவர்களை நோக்கி, "நாஞ்சொல்றது சரிதானே நீங்களே சொல்லுங்க.. அந்தக்காலத்துல உங்க பாட்டி எப்படி சமைச்சாங்க? தெருவே மணத்துதா இல்லையா?"

"ஆமா.."

"உங்க அம்மா எப்படி சமைச்சாங்க? வீடே மணத்துதா இல்லையா?"

"ஆமா.."

"அப்ப இப்ப மட்டும் ஏன் இப்படி? அப்படி என்னதான் பிரச்சினை உங்களுக்கு?"

சீரியஸாகவே ரமா பதில் சொன்னார், "நாங்களும் சீரியஸாகத்தான் பண்றோம். மணக்க மாட்டேங்குதுன்னா நாங்க என்ன பண்றது.. மீன்லதான் ஏதோ பிரச்சினைன்னு நினைக்குறேன்.."

நண்பர் பேஸ்த்தடித்துப்போய் என்னைப்பார்க்க நானும் சொன்னேன், "அதானே பாவம், இவுங்க என்ன பண்ணுவாங்க.. மீன்லதான் ஏதாவது பிரச்சினையா இருக்கும்".

**************

ஆபீஸில் எங்கள் டீமில் ஒரு தங்கமணி இருக்கிறார். டீமாக வெளியில் போய் சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டபடியால் ஒரு மாலை நேரத்தில் தாம்பரம் அஞ்சப்பரில் டின்னருக்குப் பிளான் பிளான் பண்ணினோம். மாதக்கடைசி மற்றும் 10 பேர் ஆகையால் செலவை ஷேர் செய்துகொள்ளலாம் என முடிவாகியது. அவரிடம் திட்டத்தைச் சொல்லியபோது 'இல்லையில்லை, எங்க வீட்டுக்காரரிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்' என்றார். நாங்களும் பண விஷயத்தில் ரொம்ப கறார் பேர்வழி போல என நினைத்துக்கொண்டு 'சரி கேளுங்கள்' என்றோம்.

அவர் போனில் பேசிவிட்டு வந்து, "ஓகே" என்றார். நாங்களும் 'என்ன பட்ஜெட்டுக்குத்தானே?' என்றோம்.

"என்னது பட்ஜெட்டுக்கா.. நான் சாப்பிடுறதுக்குத்தான் பர்மிஷன் கேட்கப்போனேன். அதுக்கு ஓகே சொல்லிட்டார்"

.

Thursday, February 4, 2010

பெண்ணியம் : துளி பார்வை

அவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப் போல சிந்தனையைச் சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும் காட்டிய பகுத்தறிவுப் பகலவன்.

அவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக் குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் ஒரு சோறு பதம்தானே. இந்த நேரத்தில் வலைச்சர வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் நாம் நினைக்கும் டாப்பிக்கில் பதிவுகளைத் தேடும் பணியில் ஒன்றின் பின் ஒன்றாக சுட்டிகளின் மூலமாக பயணிக்கும் அனுபவம் புதிது. வழியெங்கும் வித விதமான பதிவுகள். அதில் பல முத்துக்கள்.

புதிய‌ க‌லாச்சார‌ம் இத‌ழில் வெளியான‌ ஒரு க‌ட்டுரை 'வின‌வு' வ‌லைப்பூவில் அனும‌தியுட‌ன் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆரோக்கிய‌மான‌ சிந்தனை, அதே நேர‌ம் அது வ‌ள‌மான‌ மொழிநடையில் சொல்ல‌ப்ப‌ட வேண்டும். எப்படி உன் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாய்? என்று கேட்டால் இப்ப‌டித்தான் என்பேன். ஆணாதிக்கம் எங்கே துவங்குகிறது, அறியாமலே அதில் இருபாலரும் உழன்றது எவ்வாறு என்பது குறித்த‌ ஒரு சிறு பார்வை.‌ என்னை சமீபத்தில் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌ட்டுரை இது. இது குறித்து மூத்த பதிவர் சேவிய‌ரின் அழ‌கான‌ ந‌டையில் லைட்டான‌, ஆனால் சிந்த‌னைக்குரிய‌ ப‌திவு ஒன்றையும் காணுங்க‌ள்.

பெண்விடுதலை குறித்து எழுதியிருக்கிறாரா என‌ தெரிய‌வில்லை, எனினும் வேறு சில பிரமாதமான விஷ‌ய‌ங்க‌ள் TBCD யின் ப‌திவுக‌ளில் அழ‌கான‌ ந‌டையில் க‌ண்டேன். கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய மேலும் ஒரு ம‌திப்புக்குரிய‌ க‌ட்டுரையை த‌மிழ் ஓவியாவின் இந்த‌ப்பக்க‌த்தில் காண‌லாம்.

இன்னும் பல அற்புதமான பதிவுகளை இந்தத் தேடல் நீட்சியில் தொடர்ந்து நான் காண்கிறேன். அதில் தோழி புதியமாதவி எழுதிய 'ஊடகங்களும் ஊடறு பெண்களும்' என்ற பதிவும் முக்கிய இடத்தை பெறவேண்டிய பதிவாகும். இந்தப்பதிவு உண்மையில் கவிதையில் ஆரம்பித்து கட்டுரையாகி.. முடியாமல் நிற்கிறது. இதில் பல வழக்குகள் குறித்த செய்திகளும் இருக்கின்றன. இவரது பல பதிவுகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளன. பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் இன்னொரு அதிர்ச்சிகர விஷயத்தைப்பற்றி தோழர் மாதவராஜின் இந்த இணைப்புக்கும் தொடர்ந்து அதில் தரப்பட்டுள்ள‌ இணைப்புக்கும் செல்லுங்கள். இவரின் பிற நல்ல பதிவுகளையும் வாசியுங்கள்.

இவர்கள் அனைவரையும் என் பதிவில் அறிமுகம் செய்வது நான் பெருமை கொள்வதற்காகத்தான் என்பதை அறிவீர்கள்.

மேலும் தேடிய‌றிவோம் அறிவுச்செல்வ‌த்தை.! பெண்க‌ளுக்கான‌ ச‌ம‌ உரிமையும், சுத‌ந்திர‌மும் பெரிய‌ ம‌ன‌தோடு ஆண்க‌ள் வ‌ழ‌ங்குவ‌து என்றோ, அவ‌ர்க‌ள் போராடிப்பெற‌வேண்டிய‌து என்றோ அல்லாம‌ல் கால‌ங்கால‌மாய் அதைச்செய்த‌ ஆண்க‌ள் ம‌ற்றும் அதை ஒப்புக்கொண்ட‌ பெண்க‌ள் இருவ‌ர‌து த‌வ‌றேயென‌ அறிந்து அன்பும் ஒழுக்க‌மும் ஆன‌ அற‌வாழ்வை, ச‌ம‌வாழ்வை வாழ்வோம்.. (ஹைய்ய்ய்யா.. ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ஒரு அறிவுரை சொல்லிட்டீனே..‌‌) வாழ்த்துக‌ள்.. நாளைக்குச்ச‌ந்திப்போமா?


டிஸ்கி: நேரமின்மையால் டிஸம்பர்'08 ல் வலைச்சரத்தில் எழுதிய ஒரு அறிமுகத்தொகுப்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

.

Tuesday, February 2, 2010

தமிழ்ப்படம், கோவா, ஆயிரத்தில் ஒருவன் : விமர்சனங்கள்

தமிழ்ப்படம்

எதிர்பார்ப்புகளை வீணடிக்காத படம். தமிழ் சினிமாவின் கிளிஷேக்கள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி. கொஞ்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். இந்த வகையில் தமிழில் இது முதல் படம் என்பதால் கடந்த 30 வருட சினிமாக்களில் அங்கேயும் இங்கேயுமாய் அல்லாடியிருக்கிறார்கள். ஏதாவது 5 அல்லது 10 வருடத்தை மட்டும் குறிவைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் களைகட்டியிருக்கும். ஸ்பூஃப்தானே என்று அலட்சியம் காட்டாமல் முடிந்த வரை சின்சியராக பண்ணியிருக்கிறார்கள்.

ரஜினி, கமல், விஜய் என சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணியிருந்தாலும் கொஞ்சம் அளவோடுதான் பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வசதியான பேனர் என்பதால் இன்னும் கொஞ்சம் சீண்டியிருக்கலாம். என்னை மிகக்கவர்ந்த காட்சிகளில் ஒன்று, பாட்ஷா ரகுவரன் 'அங்கே பார்..' என்று நம் ரஜினியை கலாய்க்க, நம்மவர் 'இங்கே பார்..' என்று இந்தப்பக்கம் காட்டும் போது காட்சி வரும்முன்னரே ஆவல் எகிறுகிற‌து. அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள், ரகுவரன் கோஷ்டி தலைதெறிக்க ஓடுவது கலக்கல். மனதை லேசாக்கும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பது நம் ஆசை.

************

கோவா

சகலகலாவல்லவன் துவக்கப்பாடலுடன் (சாயல் என்ன சாயல்.. அப்படியே) படம் துவங்கி அப்படியே 80களின் கிராமத்து சினிமா போலவே கொஞ்ச நேரம் பயணிக்கிறது. படத்தின் டோன் கூட அப்படியே.. ஹீரோக்கள் குழு கோவாவுக்கு ஒரு உயர்ந்த லட்சியத்துடன் எஸ்கேப் ஆனவுடன் அப்படியே படத்தின் டோன் ரிச்சாக மாறுவதை உறுத்தாமல் உணரமுடிகிறது. கிளாமர் பெண்களை சமயங்களில் நிஜத்தில் பார்க்க நேரும் போது கண்குளிர சைட் அடிக்கலாம் என்றால் இந்த வெட்கம் வந்து பிடுங்கித்தொலைக்கிறது. அது போன்ற பையன்கள் சினிமாதான் என்பதால் வெட்கத்தை ஓரம் வைத்துவிட்டு கொஞ்சம் ஜொள் விட்டுக்கொள்ளலாம். கோவாவின் இயற்கை அழகுடன் இளமை அழகையும் தாராளமாக படம் பிடித்துத் தந்திருக்கிறார்கள்.

சில பல லாஜிக்குகளை மறந்துவிட்டு பார்த்தால் படத்தில் இரண்டு மூன்று காதல்கள், அவை ஒட்டிய அழகிய காதல் காட்சிகள் வருகின்றன. குறிப்பிடத்தகுந்தது பிரேம்ஜியின் பகுதி. ஆனால் காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று காதல் காட்சிகளின் அழுத்தத்தைக் தேவையேயில்லாமல் குறைத்திருக்கிறார்கள். இதுபோன்ற கதையை கிளைமாக்ஸில் சுவாரசியமாக முடித்து வைப்பது சிரமம்தான். ஏதேதோ ஷோ காண்பித்து சிரமப்பட்டு முடித்துவைக்கிறார்கள்.

படத்தின் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம் ஆகாஷ், சம்பத் இடையிலான ஓரினக்காதல்.. சர்ப்ரைஸ், ஒரு முழு பாடல் கூட இருக்கிறது. தமிழில் இதைப்பேசும் முதல் படமாக இது இருக்கலாம். பயந்துகொண்டே அதையும் அழகாகச்சொல்லாமல் காமெடி கலக்கிறேன் பேர்வழி என்று அழுத்தத்தைக் குறைத்துவைக்கிறார் இயக்குனர். இது போன்ற ஜோடியில் இருவரில் ஒருவர் பெண் பாகத்தை ஏற்பவராக இருப்பர். அதை ஏற்றிருப்பவர்.. நம்புங்கள் ஆகாஷ் அல்ல, சம்பத். சம்பத்தை ஒரு வில்லனாக, கரடுமுரடான பாத்திரங்களிலேயே இதுவரை கண்டிருக்கிறோம். அவரது தோற்றமும் அவ்வாறானதே. ஆனால் ஒரு நல்ல நடிகன் எவ்வாறான பாத்திரத்திலும் ஜொலிப்பான் என்பதற்கான உதாரணமாய் வியக்கவைத்திருக்கிறார் சம்பத்.

தலையெழுத்து.. நம் ஹீரோக்கள்தான் மொக்கையாக இருக்கிறார்கள். குறைந்த பட்சம் சம்பத், கிஷோர் (வெண்ணிலா கபடிக்குழு) போன்ற தேர்ந்த குணச்சித்திர நடிகர்களாவது நமக்கு வாய்த்திருக்கிறார்களே என நாம் மகிழலாம்.

***************

ஆயிரத்தில் ஒருவன்

நான் கடவுள், உ.போ.ஒருவன் படங்களுக்குப்பிறகு ஏராளமான வலைப்பூ விமர்சனங்களை பெற்ற படமாக ஆயிரத்தில் ஒருவன் இருக்கலாம் என நண்பர்கள் கூறினார்கள் (ஹிஹி.. கொஞ்ச நாளாக ஊரிலில்லை). நம் கருத்தையும் சொல்லிவைப்போம் என (ஹிஹி.. என் பிரத்யேக வாச‌கர்கள் எதிர்பார்த்துத் தொலைத்திருந்தால் என்ன செய்ய என்பதற்காக) எழுதுகிறேன்.

நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள், கலைஞர்களின் அரிய உழைப்பு படம் நெடுக தெரிவதால் குறை சொல்லவே மனம் வரமாட்டேன்கிறது. ஆனாலும் என்ன பண்ண? அழகான ஒரு ஃபேன்டஸி கதை. அதை எவ்வளவு மகா மொக்கையாக சொல்லமுடியுமோ அப்படிச்சொல்லி வெறுப்பேற்றியிருக்கிறார் செல்வராகவன். படத்தின் மிகப்பெரிய மைனஸ் செல்வராகவன். இவ்வளவுக்கும் அவர் எனக்குப் பிடித்தமான இயக்குனர்தான். அவரது புதுப்பேட்டை எனது ஃபேவரிட்.

செல்வராகவனுக்கே தெரியாத சாதா, பெஸல்சாதா பின்நவீனக்கூறுகள் படத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். ஆனால் ஒரு படைப்பின் தரமே அதில் உருவாக்கப்பட்டுள்ள காரெக்டர்கள் தங்கள் குணம், சூழல், உணர்வு சார்ந்து தங்களை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. இவ்வளவு ஆக மொக்கையான காரெக்டர்களை செல்வராகவன் படத்தில் எதிர்பார்க்கவில்லை, மேலும் அந்தக் காரெக்டர்களைச் செய்த நடிகர்களின் பங்கு அதைவிடவும் கொடுமை.

பார்த்திபன் காரெக்டரிலிருந்து வெளியே துருத்திக்கொண்டிருக்கிறார். பின்னணியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மட்டும் இல்லாவிட்டால் அழகம்பெருமாள் நைட் வாட்ச்மேன் மாதிரி இருப்பார் என நினைக்கிறேன். இந்த அழகில் அவர் ஆர்மி ஆஃபீசராம், அவருக்கு கோபம் வேறு வருகிறது. ரீமாவின் லாராகிராஃப்ட் காட்சிகளைப் பார்த்தால் கடுப்பாக இருக்கிறது. கார்த்தி ஓகே ரகம். நேரத்துக்கு ஒரு நிறத்தில் வருகிறார். அவர் அழுக்காக இருக்கிறார் என்று இயக்குனர் சொல்கிறாரா அல்லது அவர் நிறம் கறுப்பு என்று சொல்கிறாரா தெரியவில்லை. ஆனானப்பட்ட கமல்ஹாஸனே கறுப்பு மேக்கப்பில் பல்பு வாங்கியவர்.

தவிர, சப்பையான காட்சியமைப்புகள் பல படம் நெடுக.. பட்டியலிட்டால் இந்த இடுகை பத்தாது. இரண்டுபுறமும் ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்டு மோதவிட்டு ஆங்கிலப்படங்களைப் போல காட்சிப்படுத்த ஆசைதான். ஆனால் அது நம்மால் முடியுமா? நூற்றுக்கணக்கான ஆட்களைத்தான் பயன்படுத்தமுடியும், நமது ஆக்ஷன் கொரியோகிராஃபரின் லட்சணமும் நமக்குத்தெரியும். நம் பட்ஜெட் அப்படி. பிறகேன் அந்த முயற்சி? முடியவில்லை என்றால் விட்டுவிடவேண்டும். ஆங்கிலப்படங்கள் உசத்தி என்று நான் சொல்லவரவில்லை. ஆனை ஆனைதான். புலி புலிதான். புலி ஆனையாக ஆசைப்பட்டால் இப்படித்தான் இருக்கும். பர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம், நாங்கள் என்ன அதை பாபுசிவன் படத்திலேயா எதிர்பார்க்கிறோம்?

என்னவாயினும் வித்தியாசமான கதைக்களங்களுக்கான உதாரணமாக படம் இருப்பதால் செல்வராகவனுக்கு நம் நன்றிகளும், வாழ்த்துகளும்.!

.