Friday, February 19, 2010

திரிபுகளின் வேர்

வேலம்மாளின் ஓலம் தெருவெங்கும் அசாதாரணமாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தெருவிளக்கின் அடியில் கூடியிருந்த நான்கைந்து பெண்களின் கைகள், சுற்றிக்கொண்டிருந்த பீடியின் அடுத்த சுற்றை கவனிக்காமல் தயங்கிக்கொண்டிருந்தன. அவர்களின் காதுகள் இயல்பாகவே நடந்துக் கொண்டிருப்பதை அறியும் ஆர்வத்தில் கூர்மையாயின. ஒருத்தி அவர்களின் அருகே மெலிதாகப் பாடிக்கொண்டிருந்த ரேடியோவின் ஒலியளவை இன்னும் குறைத்தாள்.

தொடர்ந்து கூக்குரலாய் வெளிப்பட்ட வேலம்மாளின் அழுகுரல் இன்னும் வெடிக்கத்துவங்கியிருந்தது. அழுகையினூடாக பேரிரைச்சலாய் தகாத வார்த்தைகளால் ஏசத் துவங்கியிருந்தாள். எப்போதுமில்லாத அளவில் முருகனின் குரலும் மிக ஆவேசமாக‌ கேட்கத்துவங்கியிருந்தது.

“கிஸ்ணமாக்கா, என்னான்னு போயி பாக்குறயா.. முருகண்ண அவளப்போட்டு அடிக்கித மாதி இருக்கு..”

“நீ சும்மா கிட. இதென்னா புதுசா.. ஒன்றாடம் நடக்குததுதான..”

“இன்னிக்கி ரொம்பல்லா சத்தம் கேக்குத மாதி இருக்கு”

“என்னத்த பாக்கச்சொல்லுத? குடிச்சிருந்தாம்னு வய்யி.. நம்முள நாக்கப்புடுங்குத மாதி என்னதாது கேக்குறதுக்கா..”

இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இரண்டாவது வீடுதான் வேலம்மாளுடையது. இது போன்ற‌ ச‌ண்டை, சச்சரவுகள் ஒன்றும் இவர்களுக்குப் புதிதில்லைதான். முருகன் குடித்துவிட்டு வந்த சில நாட்களில் வீட்டுக்குள்ளிருந்து ஒருவருக்கொருவர் ஏசிக்கொள்ளும் சத்தமும், அவன் அவளைப்போட்டு அடிக்கும் சத்தமும், இன்னும் வினோதமான சத்தங்களும் கேட்டவாறுதான் இருக்கும். சிறிது நேரத்தில் சத்தங்கள் அடங்க இவர்கள் பீடித்தட்டைத் தூக்கிக்கொண்டு கிளம்பும் சமயத்தில் வீங்கிய முகத்தோடு அவளது பீடித்தட்டை எடுத்துக்கொண்டு பீடி சுற்ற தெருவிளக்கடிக்கு வருவாள். அவளுக்காக இவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் பீடி சுற்றத் துவங்குவார்கள். மறுநாள் காலை சீக்கிரமே முருகன் மில் வேலைக்கு கிளம்பிச்செல்வதையும் காணலாம். அந்தச்சமயங்களிலெல்லாம் இவனா நேற்று அவ்வளவு ஆத்திரமாக கத்திக்கொண்டிருந்தான் என்று ஆச்சரியமாக இருக்கும். என்ன பிரச்சினை என்று அவளைக் கேட்டாலும் இவர்களிடம் வாயைத் திறந்து ஒருவார்த்தை பேசமாட்டாள்.

“ஒங்க வீட்ல அவ்வொ இருந்தா போயி பாக்கச்சொல்லேன்..”

கிருஷ்ணம்மாளுக்கும் இன்று ஏனோ இந்தச்சண்டை கொஞ்சம் அசாதாரணமாகத்தான் தோன்றியது. செல்வியை நோக்கி,

“போயி எங்கவீட்ல அவ்வொ அப்பாக்கு சத்தங்குடேன்..”

இவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வேலம்மாள் தூக்கியெறியப்பட்டதைப்போல வாசலிலிருந்து தெருவில் வந்துவிழுந்தாள். தலைவிரி கோலமாய் ஆவேசமாய் கத்தத்துவங்கினாள்,

“பேதீல போறவன்.. என்னிய போட்டு அடிச்சிக்கொல்லு.. கைகாலு வெளங்காம நாசமாத்தான் போப்போறே நீ..”

பின்னாலேயே வெளியே வந்த முருகன் வெறிபிடித்தவனைப்போல கத்தினான்.

“நீ இருந்த நாப் போதும்.. பாரு இன்னிக்கி என்ன நடக்குதுனு”

ஆவேசமாக வந்தவன் அவளை மிதித்துத் தள்ளியதில் எதிர்ப்புறமிருந்த முற்றத்தில் விழுந்தாள். வலியில் ஓ’வென அழத்துவங்கினாள் வேலம்மாள். செல்வி இன்னும் இரண்டு வீடு தள்ளியிருந்த கிருஷ்ணம்மாளின் வீட்டிற்கு அவளது கணவனிடம் விபரம் சொல்லி அழைத்துவர ஓடினாள். முருகனை இவ்வளவு ஆவேசமாக பார்த்திருக்காத இந்தப் பெண்கள் மனசு படபடக்க‌ ஓடிப்போய் விழுந்து கிடந்த வேலம்மாளைத் தூக்க முயன்றனர்.

“யக்கா.. இவளப்பத்தி ஒங்குளுக்கு தெரியாது. தூரப்போங்க.. செறுக்கி முண்ட.. ஒன்னிய ரெண்டு துண்டா வெட்டிப்போட்டுட்டு நா செயிலுக்கு போகல..”

என்று கத்தியவாறே மீண்டும் வீட்டிற்குள் ஓடினான். சில விநாடிகளிலேயே வெளியே வந்தவன் கைகளில் அரிவாள் ஒன்று இருந்தது.

அதற்குள்ளாக ஓடிவந்திருந்த கிருஷ்ணம்மாளின் கணவன் கந்தசாமி, முருகனை அழுத்திப் பிடித்து அங்கிருந்து தள்ளிக்கொண்டு போக முனைந்தான்.

“யேய்ய்.. என்னப்பா இது? என்னான்னாலும் கேக்கதுக்கு ஆளில்லையா.. இப்பிடியா தெருல போட்டு பொண்டாட்டிய அடிப்பான்?”

“அதெல்லா நல்லவங்களுதாம்ணே.. விடுண்ணே என்னிய.. இவள..” கந்தசாமியின் பிடியிலிருந்தபடியே திமிறி அவளை மிதிக்க காலை வீசினான் முருகன். இதற்கு மேல் பேசி பயனில்லை என்று எண்ணிய கந்தசாமி அப்படியே அவனைத் தள்ளிக்கொண்டு சென்றான். சிறிது தூரத்தில் சென்றதும் அவன் கைகளிலிருந்த அரிவாளைப் பிடுங்கி இவர்களைநோக்கி அதை மெதுவாக வீசி,

“ஏ தாயிகளா, இத தூக்கி உள்ளப்போடுங்கம்மா.. அப்பிடியே அவக்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருங்க..”

என்று சொல்லிவிட்டு அவனைப் பிடித்த பிடியை விடாமல் இழுத்துக்கொண்டு சென்றான். இதற்குள் சத்தம் கேட்டு மேலும்சில பெண்கள் கூடியிருந்தனர். வாசலுக்கு வந்த சில ஆண்கள் என்ன செய்வதென தயங்கிய‌படியிருக்க, இன்னும் வேலம்மாள் அழுது கொண்டிருந்ததோடு அவனை கெட்டக்கெட்ட வார்த்தைகளால் ஏசியபடியே இருந்தாள். செல்வி,

“என்னக்கா இப்பிடிலாம் பேசுத.. சண்ட போட்டா இல்லன்னா ஆயிரப்போவுது.? இப்பிடிப்போட்டு ஏசுனன்னா அண்ண அடிக்காம என்ன செய்யும்.? நீயாவது பேசாம இருக்கலாமுல்லா.?”

முருகனும் தெருவெங்கும் தகாத வார்த்தைகளால் கத்திக்கொண்டே போனான். அந்தத்தெருவில் ஒழுங்கே இல்லாத வரிசையில் பெரிதும் சிறிதுமாக‌ சுமார் 20 வீடுகள் இருந்தன. தெருமுடிவில் வலது புறம் திரும்பினால் சற்று தூரத்தில் வயல்வெளிகள் ஆரம்பித்திருந்தது. சற்றுதூரம் நடந்து சிறிது தூரத்தில் இருந்த அரசமரத்தடிக்கு வந்தனர். அப்போதும் கந்தசாமி இறுக்கிப்பிடித்த அவன் வலது கையை விட்டிருக்கவில்லை. அப்போது அவன் கையில் இருந்து தன் கையைத் திமிறி விடுவித்துக்கொண்ட முருகன்,

“எங்கண்ண கூட்டுட்டுபோற? உடுண்ணே..” என்றவாறே மரத்தடியில் கிடந்த பெரிய கல்லொன்றில் உட்கார்ந்தான். கோபமும், அழுகையும், ஆற்றாமையுமாய் முருகன் தத்தளித்துக்கொண்டிருந்தான். அவனருகே அமர்ந்த கந்தசாமி,

“யேய், நீயாப்பா இப்பிடி பண்ணுதது. ஏதாது பிரச்சினைன்னா பெரியவங்ககிட்ட ரெண்டு வார்த்த சொன்னா கேக்கமாட்டாங்களா? இது பாக்க நல்லாவாயிருக்கு? அப்பிடி என்ன பிரச்சினை?”

“என்னத்தண்ண சொல்லச்சொல்லுத?”

“எதுனாலும் வீட்டுக்குள்ள நாலு சொவுத்துக்குள்ள வச்சிக்கணும்பா.. இப்பிடி நடுத்தெருவுல போட்டாஅடிப்பாங்க.. வெளியில போட்டு அடிச்சா என்னா அர்த்தம் தெரியுமா ஒனக்கு? பண்ணக்குடாதுப்பா..”

“தெரிஞ்சிதாம்ணே பண்ணுனேன்.."

“ஏ.. என்ன சொல்லுத..” அதிர்ந்த கந்தசாமிக்கு அடுத்துப்பேச வார்த்தையில்லாமல் போனது..

"நீயே சொல்லு, நா என்னைக்காது அப்பிடி பண்ணிருக்கனா.. அவள எப்பிடி வச்சிருக்கேன். கொழுப்பெடுத்தவ.. மானத்த வாங்காம போமாட்டா போலருக்கே.. அவள மட்டும் கொன்னா பத்தாதுண்ணே.. இன்னும் கொள்ளப்பேத்த கழுத்தறுக்கணும்ண்ணே..” அவனது இறுதி வரிகள் அழுத்தமாக காற்றில் பரவத்துவங்கின.

தெருவிளக்கையும் விஞ்சி வெளிச்சத்தை பொழிந்துகொண்டிருந்த மேகங்களற்ற வெண்ணிலவு களங்கங்கள் மிகுந்ததாய் இருந்தது அன்று.

.

37 comments:

வானம்பாடிகள் said...

யப்பா சாமி! இப்படியும் கதை சொல்லலாமோ. அருமை ஆதி!

நர்சிம் said...

களங்கமற்ற கதை ஆதி. சொல்லிய நடை பிடித்திருந்தது.

shiva said...

அண்ணே சூப்பர்னே! நிலா பஞ்ச் அருமையா இருந்துச்சு.

தராசு said...

கலக்கல் நடை தல,

இங்கதான் முடிப்பீங்கன்னு யூகிக்க முடியல.

ஜெனோவா said...

அண்ணே , நல்லாதான் சொல்லிரிக்கீங்க .. ஊரு வாட எங்கோ தள்ளி இருக்குற இந்த அலுவலகத்துக்குள்ளேயும் வந்துட்டுல்லா .. அதுதான் வெற்றியே ;-)

அப்புறம் அது , ஒன்றவாட்டமா ? ஒன்றாடமா ? னே ( எங்கூரு பக்கம் ஒன்றாடம்னு சொல்லுவாங்க )

வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

வாசகன் முடிவை ஊகிக்கனுமா? ;-)

☀நான் ஆதவன்☀ said...

நல்ல கதை

முடிவு....அதிர்ச்சி!

SanjaiGandhi™ said...

சூப்பர் கதை

வெண்பூ said...

பினா நனா துனா எழுத்தாளர் ஆனா தினா வாழ்க வாழ்க...

சட சடவென்று ஆரம்பித்து சட்டுன்னு முடிச்சிட்டீங்க.. நல்லா இருக்கு கதை..

அகநாழிகை said...

கதை நல்லாயிருக்கு ஆதி. ஸ்லாங் பயன்படுத்திய விதமும் அருமை. வாழ்த்துகள். அடுத்த சிறுகதை எழுத்தாளர் தயாராகிட்டார்.

SanjaiGandhi™ said...

//அகநாழிகை said...

கதை நல்லாயிருக்கு ஆதி. ஸ்லாங் பயன்படுத்திய விதமும் அருமை. வாழ்த்துகள். அடுத்த சிறுகதை எழுத்தாளர் தயாராகிட்டார்.//

ஆதி மாம்ஸ்.. பப்ளிஷர் ரெடி.. ஹ்ம்ம்ம்.. ஆகட்டும் அடுத்த ஏற்பாடுகள்.. :)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வானம்பாடிகள்.!
நன்றி நர்சிம்.!
நன்றி சிவா.!
நன்றி தராசு.!

நன்றி ஜெனோவா.! (கவனிக்கவில்லை. அது 'ஒன்றாடம்'தான். நன்றி)

நன்றி தமிழ்பிரியன்.! (முடிவுதான் கிளியரா இருக்கில்ல.??)

நன்றி ஆதவன்.!
நன்றி சஞ்சய்.!
நன்றி வெண்பூ.!

நன்றி வாசுதேவன்.! (யப்பாடி.!)

ஆதிமூலகிருஷ்ணன் said...

எனக்கு ஏற்கனவே மானம் கொஞ்சம் குறைவாக இருப்பதால் அதையும் நீங்கள் வாங்கிவிடாமல் தமிழிஷில் ஒண்ணு ரெண்டு ஓட்டை போட்டுவைக்கவும். ஹிஹி..

ரிஷி said...

எழுத்து நடை நன்று .

ராமலக்ஷ்மி said...

அருமை.

Vijay said...

மனிதர்கள், உறவுகள், மனங்கள், விருப்பங்கள், வெறுப்புகள், சரிகள், தவறுக்ள், இவைகளோடு வாழ்க்கை எனும் பயணம்.......ஆதீ....ந்ன்று.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இலை மறை காயா பொருள்படும்படி புரியவச்சிட்டீங்க.

கதையின் நடை மிகவும் பிடித்திருந்தது உடன் தலைப்பும்.

தண்டோரா ...... said...

நல்லாயிருக்கு ஆதி!

Rajeswari said...

super!

pappu said...

நடத்துங்கள்!

Anonymous said...

நல்லா இருக்கு

மதார் said...

நல்ல கிராமத்து பேச்சு வழக்கு , நல்ல இருக்கு . பேச்சுல தூத்துக்குடி வாட வீசுதே ?

SanjaiGandhi™ said...

மாம்ஸ்.. எல்லாரும் படிச்சிட்டு தான் கமெண்ட் போடறாங்களா இல்லை என்னை மாதிரியேவான்னு செக் பண்ணிடுங்க..

பிரபாகர் said...

ஒரு நிஜ சண்டய பாக்குற மாதிரி இருந்துச்சி, பகீர்னு. முடிவ படிச்சிட்டு இன்னமும் பகீர்னு ஆயிடுச்சி. கலக்கல் ஆதி. ஒன் ஆஃப் த மாஸ்டர் பீஸ்...

பிரபாகர்.

அன்புடன் அருணா said...

அட! இது நல்லாருக்கே!

Kathir said...

நல்லா இருந்ததுங்க.

வாழ்த்துக்கள்.

அனுஜன்யா said...

ரொம்ப நல்லா இருக்கு ஆதி. வட்டார நடை என்று நினைக்கிறேன். உங்க strength இதுதான் (சிறுகதைகள், அதுவும் வட்டார மொழியில்) என்பது என் எண்ணம். இதே முனைப்போடு நிறைய கதை எழுத முயலுங்கள்.

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பத்தான் எழுதியிருக்கீரு

:)

SanjaiGandhi™ said...

// எம்.எம்.அப்துல்லா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பத்தான் எழுதியிருக்கீரு

:)//

ரொம்ப நாளைக்கப்புறமாச்சும் நீர் படித்தீரா என்பது தான் மேட்டர்..

Cable Sankar said...

அருமையான வட்டார நடை.. திடுக் திருப்பம்..:)

மாதவராஜ் said...

வட்டார வழக்கு எல்லாம் ஓ.கே. ஒரு ஆணாக மட்டுமே எழுதி இருக்கீக!படைப்பாளி ஆண் மட்டுமில்ல.
கதை நல்லாயில்ல.
ஸாரி.

முகிலன் said...

கதையின் நடை நல்லாருக்கு.. கதை சொன்ன விதமும் நல்லாருக்கு..

ப்ச்.. கதையின் கரு எனக்குப் பிடிக்கலை..

வெண்பூ said...

தோழர் மாதவராஜ்,

ஆதியின் இந்த கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு பாஸ்

க.இராமசாமி said...

நல்ல கதை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ரிஷி.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி விஜய்.!
நன்றி அமித்து.!
நன்றி தண்டோரா.!
நன்றி ராஜேஸ்வரி.!
நன்றி பப்பு.!
நன்றி அம்மிணி.!
நன்றி மதார்.!
நன்றி பிரபாகர்.!
நன்றி அருணா.!
நன்றி கதிர்.!

நன்றி அனுஜன்யா.! (ஊக்கம்)

நன்றி அப்துல்.!
நன்றி கேபிள்.!

நன்றி மாதவ்ராஜ்.! (ட்ரெய்னிங் பீரியட்லதானண்ணே இருக்கேன்.. மன்னிக்கலாம்)

நன்றி முகிலன்.!
நன்றி வெண்பூ.!
நன்றி உழவன்.!
நன்றி இராமசாமி.!

Bharathi said...

// ஜெனோவா said...

ஊரு வாட எங்கோ தள்ளி இருக்குற இந்த அலுவலகத்துக்குள்ளேயும் வந்துட்டுல்லா .. அதுதான் வெற்றியே ;-)
//
Very True..