Thursday, February 25, 2010

அண்ணன்

அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது, வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறான், அப்பா கூட்டிவரச்சொன்னார் என்று மூர்த்தி சொன்னபோது கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். எப்படி சமாளிக்கப்போகிறேன்? வீட்டுக்குப் போகாமல் இப்படியே எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று கூட தோன்றியது. அப்பாவை சமாளிப்பதே பெரிய விஷயம். இந்த அழகில் அண்ணனை எப்படி சமாளிப்பது? அவன் முன்னால் நிற்பதே ஆகாத காரியம். அவன் கண்களைச் சந்திப்பதைவிட கொம்பு சீவிய அடங்காத காளையின் முன் நிற்பது எளிது. ஒரே அயர்ச்சியாக இருந்தது.

“எப்படிரா அவனுக்கு தெரிஞ்சுது?”

“அப்பா காதுக்கு விசியம் போனதுமே முத வேலையா அவரு பண்ணுனதே அவனுக்கு போன் பண்ணிச்சொன்னதுதான்”

நானும் மூர்த்தியும் நின்றுகொண்டிருந்தது சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் ரயில்வே பாலத்தின் அடிப்புறம். மூர்த்தி என் தம்பி. இங்கிருந்து சிறிது தூரத்தில்தான் எங்கள் வாழை வயல் இருந்தது. அங்கு தண்ணீர் பாய்ச்ச வந்தவனிடம்தான் மூர்த்தி வந்து இந்த விஷயத்தைக்கூறினான். ஆசுவாசமாக உட்கார்ந்து பேசத்தான் இந்த பாலத்துக்கு அடியில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். எப்படியும் இது போல ஒரு சூழல் ஏற்படத்தான் போகிறது என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதுவும் இப்படி திடுமென‌ எதிர்பார்க்கவில்லை. எப்படி யோசித்தும் என்ன செய்வது என்று ஒன்றும் புலப்படவில்லை.

எப்போதுமே பிரச்சினைகளுக்கு எதிராக ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அது அதை எதிர்கொண்டுவிடுவதுதான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

“வீட்டுக்கு போயிர‌லாமாடா?”

“செருப்பால அடிப்பான்”

“ஏண்டா நீ வேற.. நானே என்ன பண்ணுத‌துன்னு பயந்துபோயிருக்கேன்.. பீடி சிகரெட் ஏதாவது வச்சிருக்கியா?”

அவன் குடிப்பது எனக்கும் நான் குடிப்பது அவனுக்கும் தெரியும் என்றாலும் நேருக்கு நேராக இப்படிக்கேட்பேன் என்று எதிர்பாராததால் மூர்த்தி முதலில் ஆச்சரியமாகி பின் தயக்கத்துடனே தன்னிடமிருந்த சிகரெட்டைத் தந்தான். அதைப்பற்றவைத்துக்கொண்டே இந்த பிரச்சினைக்கிடையிலும் விளையாட்டாய்,

“இதுக்கே ஒரு நா அவன்கிட்ட போட்டுக்குடுக்கணும்டா உன்னிய‌” என்றேன்.

“மொதல்ல உம் பிரச்சினைய‌ பாரு ராசா.. அப்புறம் பாக்கலாம் என்னிய‌..”

“யார்றா போட்டுக்குடுத்தது? எப்படிரா தெரிஞ்சுது?”

“தேசிங் சார் பார்த்திருக்காரு. சேர்மாதேவி பஸ்ஸ்டாண்ட்ல.. நேத்து.”

காயத்ரி.

காயத்ரி மனதில் வந்தாள். எப்படி நிகழ்ந்தது இது? அழகில் மயங்கித்தான் அவள் பின் சுற்றத்துவங்கினேன். அவள் அழகி மட்டும்தானா? தேவதை. இந்த கரடுமுரடான குடும்பத்துக்குள் காயத்ரியை கொண்டு வந்து ஒரு வீணை போல வைக்கவேண்டும். வைத்துவிட்டால் பின்னர் அப்பா, அம்மா அனைவரும் அந்த அதிர்வை உணர்ந்துதான் தீரவேண்டும். நிச்சயம் அவள் வருகையின் அற்புதத்தை உணர்வார்கள் அனைவரும். ஆனால் கொண்டு வருவது எப்படி? இது சாத்தியமா? இதை நிகழ்த்த முடியுமா?

முடிந்தாகவேண்டும். நிகழ வேண்டும். வெண்ணை போன்ற காயத்ரியின் தேகம் இந்த கருத்த தேகத்தை ஏற்றதை அனைவரும் அறியச்செய்யவேண்டும். காதலை மனதில் எழுதினால் அழகு. உடலில் எழுதினால் பேரழகு.!

"போயிராலாம்டா. வேற என்னதான் பண்ணுதது. என்ன பண்றாங்கன்னு பாத்துருவ‌ம்"

"என்னிய மாட்டிவிட்டுறாத. கேட்டா எனக்கே இப்பதான் தெரியும்னுருவேன், சரியா?"

சொல்லிவிட்டேனே தவிர மனம் கிடந்து அடித்துக்கொண்டது. வீட்டில் காத்துக்கொண்டிருப்பது அப்பா மற்றும் அண்ண‌ன். அண்ணன் என்றால் எங்கள் பெரியப்பா மகன். ஆனால் ஆலமரமாய் விரிந்து கிட‌க்கும் குடும்பங்களுக்கு அவன் மூத்த வாரிசு. அப்பா, பெரியப்பாக்களை விடவும் அவன் சொல்லே வேதம் எங்கள் குடும்பங்களுக்கு. அவனுக்கே எங்கும் முதல் மரியாதை. அதற்குத் தகுதியான ஆள்தான் அவன். அத்தனை பேர் மீதும் அவ்வளவு பாசம் வைத்திருப்பவன். அத்தனை தம்பி தங்கைகளில் இதுவரை அதிகம் படித்தவன். படித்தும் வேறு வேலைகளுக்குப் போக மனமில்லாமல் இயற்கை விவசாயத்தில் ஆர்வமாகி இன்று, வயலிலேயே கிடந்து வளர்ந்த எங்களைவிடவும் சிறப்பாக வயல்களையும், தோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊரிலும் நல்ல பெயர். விவசாயம் சார்ந்த, மற்றும் பிற‌ தொழில் செய்வோர் இவனது ஆலோசனை கேளாமல் ஏதும் செய்வதில்லை. அவ்வளவு அன்பானவன், ஆனால் கோபம் வந்தாலோ.. போச்சு.! அவனுக்கே இன்னும் கல்யாணமாகவில்லை. இந்த அழகில் இன்னும் இரண்டு வருடம் மறைத்து வைக்கலாம் என்று எண்ணிய என் கதை இதோ வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. என் உடன்பிறந்தவர்களே மூர்த்தியையும் சேர்த்து நான்கு பேர். அதில் இரண்டாமவள், எனக்கு இளையவள் கல்யாண வயதில் காத்திருக்கிறாள்.

வீட்டை நெருங்கியிருந்தோம். என் படபடப்பு இன்னும் ஏகத்துக்கு எகிறியிருந்தது. தெருவிலிருந்த வேலிக்கதவை ஓசைப்படாமல் திற‌ந்து இருவரும் உள்நுழைந்தோம். செம்பருத்திச் செடிக்கருகில் அவனது பைக் நின்றிருந்தது. ஒற்றை வாசல்கதவு முழுதும் மூடப்படாமலிருந்தது. முன்னறையில்தான் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மாவின் குரல் கேட்டது. இப்போதுதான் வந்திருக்கிறான் போலிருக்கிறது. உன்னிப்பாக கேட்டேன்.

"யய்யா, காப்பி போடவா?"

"அம்மா, நா திருநவேலிக்கு பேயிட்டு வர்ற வழிக்கி நேரா வாறேன் இங்க.. இன்னும் சாப்பிடல, இருக்க சோத்தப்போடுங்க.."

"புளிக்கொழம்புதான வச்சிருக்கேன், செத்த இருக்கியா.. இவள இந்தக்கோழிய அடிக்கச்சொல்லுதேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா, இருக்கத வைங்க.. சித்தப்பா நீங்க சாப்பிட்டிய‌ளா, எங்கூட உக்காருதியளா? உக்காருங்க, அந்தப்பய வரட்டும் நாங்கேக்கேன். நீங்க முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசிக்குவம்"

சாப்பிட உட்கார்ந்திருக்கிறான். மூர்த்தியை மறித்தேன்.

"கொஞ்சதேரம் கழிச்சு போலாம்டா, சாப்பிட உக்காந்துட்டான்"

அப்படியே சத்தமிடாமல் வாசலுக்கு வந்து சுடலை கடைக்குச்சென்று இருந்துவிட்டு ஒரு அரைமணி நேரம் கழித்து வீட்டுக்குச்சென்றோம். உள்ளே நுழைந்ததுமே தெரிந்தது நடுவீட்டில் அப்பா சேரில் உட்கார்ந்திருக்க அருகே தூணில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். இருவரையும் பார்க்க தயங்கியபடியே உள்நுழைந்தேன். பின்னாலயே மூர்த்தி நுழைந்தான்.

"வாண்ணே"

"ஆமாடே"

பின் பேச வார்த்தைகளில்லாமல் அனைவரும் தயங்கியபடியே சில நிமிடங்கள் கழிய, மூர்த்தி அடுத்த அறைக்கு நழுவினான்.

"அப்பா என்னுமோ சொல்லுது.. என்னடே விசியம், நெசந்தனா?" நேரடியாக கேட்டுவிட்டான். குரலில் இருந்து அவன் கோபத்திலிருக்கிறானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

தயங்கியபடியே, "என்னண்ண.. வி..சி..ய..ம்?"

"என்னடே மழுப்புத?"

அப்பா கோபமாக கத்தினார், "பெரிதம்பி, கண்டதுண்டமா வெட்டிப்போட்டுருவேன் சொல்லிரு.. கண்ட செறுக்கியவும் இந்த வீட்டுக்குள்ள கொண்டுவந்துருலாம்னு மட்டும் கனவு கண்டுக்கிட்டு இருக்க வேண்டாம். அப்பிடியெதுவும் கேக்கல, வீட்டவிட்டு அடிச்சுப்பத்திருவேன்.. சொல்லிட்டேன்"

"இருங்கப்பா, அதெல்லாம் கேப்பான்.. நாஞ்சொல்லுதன்"

மற்ற நேரம் என்றால் ஏதாவது எதிர்பேச்சு பேசியிருப்பேன். இவன் இருக்கும்போது பேச முடியாது. பெரியவங்களை எதிர்த்துப் பேசினால் கடும் கோபமாகிவிடுவான். அமைதியாக இருந்தேன். மூர்த்தியும் அவனுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டான்.

"என்னடே சொல்லுத? இதெல்லாம் ஆவாதுன்னு தெரியாதா ஒனக்கு. அடுத்து இந்தப்பிள்ளைக்கு மாப்ள பாக்கணும். நல்லாருக்கா நீ பண்றது?"

ஆரம்பித்தேன், மெதுவாக ஆனால் உறுதியாக, "இல்லண்ண.. ஒனக்கே தெரியும், ஊரு ஒலகத்துல என்ன நடந்துகிட்டிருக்குன்னு. மொதல்ல ஒங்கல்யாணமும், தங்கச்சி கல்யாணமும் முடியட்டும்னு பாத்தேன். அதுக்குள்ள‌ தெரிஞ்சிபோச்சி"

அப்பா சேரைவிட்டு ஆத்திரமாக எழுந்தார். அவரை கையைப்பிடித்து அமரச்செய்து விட்டு என்னை நோக்கி கத்தினான்,

"சொன்னா கேட்கமாட்ட? பிச்சுப்புடுவன் ர‌ஸ்கல்.." என்றவாறே அப்பாவிடம் திரும்பினான்,

"இல்லப்பா, இது சொல்பேச்சு கேக்குறமாதிரி தெரியலை.. எங்கியாவது இழுத்துட்டுப்போயி கேவலப்படுத்துறதுக்கு மின்னால நம்மளே ஒத்துக்கிடவேண்டியதுதான். நெறைய பாத்தாச்சு.. இப்ப ஊருக்கு ஊரு இதான் நடந்துகிட்டுருக்கு, நாம என்னதான் கழுதயா கத்தி தொண்டத்தண்ணி வத்துனாலும் கடசில ஒண்ணும் ஆவாது. இவுனுவ அனுவவப்படாம திருந்தமாட்டானுவ. என்ன பண்ணச்சொல்லுதிய? இன்னமயும் சாதிய கட்டிக்கிட்டு அழுது என்ன பண்ணப்போறம்? நம்ம குடும்பத்தயே எடுத்துக்கங்க‌ சத்திவேலு தாத்தாவுந்தான் முப்பது வருசத்துக்கு முன்னயே பண்ணினாரு, நீங்க சொல்லித்தான் ஆச்சியப்பத்தி எங்குளுக்கே தெரியும். இப்ப என்ன ஆயிப்போச்சு? அதோட விதய மாத்திப்போட்டாத்தாம்ப்பா பயிர் நல்லாருக்கும்.."

இப்படி திடுமென எனக்கு ஆதரவாக பேசுவான் என எதிர்பாராமல் அப்பா அதிர்ச்சியடைய, நான் உள்ளூர குதூகலிக்க.. எங்களை நோக்கி திரும்பி,

"பேசிக்கிட்டிருக்கம்ல.. போங்கடா வெளில, அவன கூட்டுட்டு போடா.."

மூர்த்தியும், நானும் வெளியேறுவதைப்போல வாசல் கத‌வுக்குப்பின்னால் பம்மினோம். உள்ளே காதுகொடுத்தோம். அப்பாவிடம் தொடர்ந்துகொண்டிருந்தான்.

"என்ன பண்ணச்சொல்லுதிய? இந்தக்கதயில மட்டும் ஒண்ணும் பண்ணமுடியாது. ஒருத்தனும் கேக்கமாட்டான். ஒங்க காலமெல்லாம் வேற.. மெதுவா யோசிச்சுப்பாருங்க. நா சாந்திரம் அப்பாகிட்ட பேசிட்டு நாளைக்கு வாறேன். அடுத்தா என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.. என்னக்கேட்டா தங்கத்துக்கு வயசு இருவதுதான் ஆவுது. இந்தப்பயலுக்குதான் 25 ஆவுதே, எதுக்கு வெயிட் பண்ணுனும்? எனக்கு ஒண்ணும் அவசரமில்ல இருவத்தெட்டுதான ஆவுது. அடுத்த வருசம் பாக்கலாம். ஊரு ஒலகத்துல நடக்காததா?"

அப்பா சிலையாகியிருக்க தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். நான் மனம் பறக்க ஜிவ்வென உணர்ந்தேன். இனிமேல் யாராலும் ஒன்றும் பண்ணமுடியாது.

சற்று நேரத்துல வெளியே வந்தவன் என்னிடம்,

"கொஞ்சம் பொறுங்கப்பா.. பேசுதேன். அதுக்குள்ள நாலுவேரு கண்ணுகாங்க சுத்துதமாதி தெரிஞ்சுது தொலைச்சுப்புடுவன்" என்றவாறே பைக்கை நோக்கி கிளம்பியவன், மூர்த்தியிடம் திரும்பினான்.

"இன்னோரு தடவ சீரெட் குடிக்கத பாத்தேன், வாயில சூடு வச்சிருவன் பாத்துக்க.." நிஜமான கோபம் தெறித்தது.

.

46 comments:

முகிலன் said...

நல்ல அண்ணன்..

ஆமா உங்க ஊருல வாழைத் தோப்பை வாழை வயல்னுதான் சொல்லுவீங்களா?

தராசு said...

//காதலை மனதில் எழுதினால் அழகு. உடலில் எழுதினால் பேரழகு.!//

உங்க எழுத்துல இந்த நடையும் ஒரு அழகு.

அடிச்சு ஆடறீங்க தல.

வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

//உங்க எழுத்துல இந்த நடையும் ஒரு அழகு.

அடிச்சு ஆடறீங்க தல.

வாழ்த்துக்கள்/

இந்த டூப்ளிகேட் யூத்துங்க தொல்லை தாங்கலப்பா.

அப்பாலிக்கா படிச்சிட்டு கமெண்டறேன்

Dr.Srishiv said...

முதல் முறையாக உங்கள் வலைப்பூவினை வாசிக்கின்றேன், நல்ல ஒரு ஓட்டம் உயிரோட்டம் தெரிகின்றது கதையோட்டத்தினில், இன்னும் எழுதுங்கள், வாழ்க வளமுடன்
ஸ்ரீஷிவ்..

புதுகைத் தென்றல் said...

ப்ளூக்கலரில் வலைப்பூ திறந்ததுமே மனசுக்கு இதமாச்சு ஃப்ரெண்ட்.

படிச்சிட்டு அப்புறமா வர்றேன்,.

ஜோதி said...

//"யய்யா, காப்பி போடவா?"

"அம்மா, நா திருநவேலிக்கு பேயிட்டு வர்ற வழிக்கி நேரா வாறேன் இங்க.. இன்னும் சாப்பிடல, இருக்க சோத்தப்போடுங்க.."

"புளிக்கொழம்புதான வச்சிருக்கேன், செத்த இருக்கியா.. இவள இந்தக்கோழிய அடிக்கச்சொல்லுதேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா, இருக்கத வைங்க.. சித்தப்பா நீங்க சாப்பிட்டிய‌ளா, எங்கூட உக்காருதியளா? உக்காருங்க, அந்தப்பய வரட்டும் நாங்கேக்கேன். நீங்க முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசிக்குவம்"

சாப்பிட உட்கார்ந்திருக்கிறான். மூர்த்தியை மறித்தேன்.

"கொஞ்சதேரம் கழிச்சு போலாம்டா, சாப்பிட உக்காந்துட்டான்"
//

அருமையான நடை ஆதி


வாழ்த்துக்கள்

Anonymous said...

//சேரன்மாகதேவி தாமிரபரணி//

தாமிரா பேரை விட மனசில்லை உங்களுக்குன்னு நினைக்கிறேன். ஆமா அது சேரன்மாதேவிதானே

புதுகைத் தென்றல் said...

அண்ணனுக்கு எப்பவுமே அப்பா ஸ்தானம். அருமையா இருக்கு.

மதார் said...

இது உங்க சொந்தக் கதையா? நிஜமாலுமே ரொம்ப நல்ல அண்ணா . கூடப் பிறந்த அண்ணனுக்கே மரியாதையை குடுக்காத உலகமிது . அண்ணன் மரியாதையை பார்த்து ..............என் அண்ணாவ நினைக்க வச்சுடீங்க .

மதார் said...

@ முகிலன்

//ஆமா உங்க ஊருல வாழைத் தோப்பை வாழை வயல்னுதான் சொல்லுவீங்களா?//

வயலில் நெல்லோ ,வாழையோ என்ன போட்டாலும் வயலுன்னுதான் சொல்லுவோம் . தென்னந்தோப்பு மட்டுமே தோப்பு என்று சொல்லப்படும் .

மதார் said...

@ சின்ன அம்மிணி

//சேரன்மாதேவிதானே//

செரன்மகாதேவிதானே ??

அப்பாவி முரு said...

சொந்த - கதையா?

அனுஜன்யா said...

என்னய்யா கதை இது? சக்திவேல் தாத்தாவுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? இருவதா இல்ல முப்பது வருடங்கள் முன்னாலா? அப்பா, பெரியப்பாக்களுக்கே கல்யாணம் ஆகி இருபத்தஞ்சு, முப்பது வருடங்கள் ஆகியிருக்குமே? கணக்குல ரொம்ப வீக்!

"இந்தப் பயலுக்கு 25 ஆவுதே! (உடனே கல்யாணம் பண்ணிடனும்); எனக்கு 28 தானே ஆவுது (அடுத்த வருஷம் பார்க்கலாம்)" - என்னய்யா லாஜிக் இது?

என்ன ரொம்ப திட்டுகிறேனா? ஆமா, நான் பாட்டுக்கு "வட்டார நடையில் அழகான
கதை'னு 'ஊக்கம்' தந்தால் 'பெண்களை இழிவு செய்கிறீர்கள்'னு பின்னூட்டம் வருது. அதுக்குத்தான் எதுக்கும் திட்டி வைப்போம்னு. எதையும் பிளான் பண்ணி செய்யணும்.

அனுஜன்யா

ரிஷி said...

நல்ல அண்ணன் !! நல்ல தம்பி !! நல்ல கதை !!

புனைவு தானே ??

RR said...

Template மற்றும் தீம் கலர் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு ஆதி..............கதையும் நல்ல இருக்கு

Anonymous said...

டெம்ப்ளெட் நல்லாருக்கு :))

ஈரோடு கதிர் said...

வாசிக்கும் போதே... கதாபாத்திரங்கள் கண் முன்னே தெரிகிறது...

மண்வாசம் அருமை

//வாயில சூடு வச்சிருவன் //
உரிமை - பாசம் ... அருமை

எம்.எம்.அப்துல்லா said...

தலைப்ப பாத்தவுடன என்னைப்பத்திதான் எழுதியிருக்கியளோன்னு நினைச்சேன் :)//

காயத்ரி.

//

அதென்ன அழகாயிருக்கும் பெண்களுக்கெல்லாம் காயத்ரின்னு பெயர் இருக்கு.இல்லாட்டி காயத்ரின்னு பெயர் இருக்கும் பெண்கள்லாம் அழகா இருக்காங்க :)

தமிழ் பிரியன் said...

கதை நல்லா இருக்கு! நான் கூட அண்ணன் தம்பிகளிடம் தன் காதலைச் சொல்லி பம்முவாரோன்னு ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்த்தேன்..;-))

Cable Sankar said...

ஆதி.. ஸ்டார்ட் மீசிக்.

தராசு said...

கேபிள் அண்ணே,

யூத்துங்களை ஒருத்தர் கேவலமா பேசியிருக்கார், அவரை ஒண்ணும் சொல்லாம போயிருக்கீங்களே, என்னா தலைவா, பொறுத்தது போதும், பொங்கி எழு தலைவா.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

வட்டார வழக்குடன் படிப்பதற்கு நன்றாக உள்ளது..

☀நான் ஆதவன்☀ said...

ஏன் தாத்தா வயசுல குழப்பம்?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முகிலன்.! (அது வாழைவயல்தான். சொல்வழக்கில் 'வாழவயா')

நன்றி தராசு.! (அதுமட்டும் கரெக்டா கண்ணூல பட்டுடுமே)

நன்றி கார்க்கி.! (இப்ப என்ன திடீர்னு யூத்து பிரச்சினை? :‍))

நன்றி ஸ்ரீஷிவ்.!

நன்றி தென்றல்.! (உங்களுக்கு இந்த அண்ணன் காரெக்டர் பிடிக்கும்னு நினைச்சேன்)

நன்றி ஜோதி.!

நன்றி அம்மிணி.! (நானும் ஸ்பெல்லிங் மிஸ்டேக். திருத்திட்டேன். அது சேரன்மகாதேவி அல்லது சேரன்மாதேவி. சொல்வழக்கில் சேர்மாதேவி அல்லது சேர்மாதி)

நன்றி மதார்.! (முழுக்கவும் கற்பனைக்கதைதான். அண்ணன்மாருக்கு அப்பாவைப்போல (சமயங்களில் அதற்கும் மேலாக) மரியாதை தருவது எங்கள் ஊர்ப்பக்கம் / குடும்ப வழக்கம்)

நன்றி முரு.! (இல்லை)

நன்றி அனுஜன்யா.! (பிளான் அருமை. உங்கள் லாஜிக்கை படித்து சிரித்துக்கொண்டிருக்கிறேன். அப்படியும் அர்த்தம் வருகிறதுதான். ஆனால் அவரது சூழலில் அவரது ஸ்லாங்கில் சொல்லிப்பாருங்கள். அப்புறம் தாத்தா வயசுப்பிரச்சினை. கதையிலயும் ஒரு தாத்தா வந்துடக்கூடாதே. யூத்துகளுக்கு எந்நேரமும் வயசு கால்குலேஷன்தான். எங்கள் குடும்பங்களில் அப்பா வயசு (அதுக்கும் குறைந்த) தாத்தாக்கள்லாம் ரொம்பவும் சாதாரண விஷயம்)

நன்றி ரிஷி.!

நன்றி RR.! (என்ன ஆளையே காணோம் பாஸ்)

நன்றி மயில்.!

நன்றி கதிர்.!

நன்றி அப்துல்லா.! (ஒரு அண்ணன் கதை சொன்னா அதைப்பாக்காம காயத்ரி பற்றி என்ன ஆராய்ச்சி? :))

நன்றி தமிழ்ப்ரியன்.!

நன்றி கேபிள்.!

நன்றி சம்பத்.!

நன்றி ஆதவன்.! (அனுஜன்யாவிற்கான பதிலைக்காணவும்)

புதுகைத் தென்றல் said...

உங்களுக்கு இந்த அண்ணன் காரெக்டர் பிடிக்கும்னு நினைச்சேன்//

ஆஹா அம்புட்டு தூரம் யோசிப்பீங்களா.

சந்தோஷம்

pappu said...

நல்லாருக்குன்னு தவறாம அட்டெண்டன்ஸ் குடுக்க விரும்புகிறேன்.

LK said...

மண் மனம் மாறாத கதை .

விக்னேஷ்வரி said...

கதை ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க. ஆனா ஏன் நம்மூருப் பாச(பாஷை) சரியா வரல? அடுத்தாட்டி சரி பண்ணிப்புடுங்க அண்ணாச்சி.

இராகவன் நைஜிரியா said...

யதார்த்தம் தெரிஞ்ச, உலகம் புரிஞ்ச, தம்பியைப் பற்றி நன்கு அறிந்த அண்ணனின் கதை

வெண்பூ said...

இயல்பான கதை ஆதி... அவ்வளவு கோபக்காரனானான‌ அண்ணன் ஏன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்னு கடைசி வரைக்கும் சொல்லாம அதை படிக்குறவங்களையே யூகிக்க வெச்சிருக்குறது நல்லா இருக்கு.. பாராட்டுகள் ஆதி.

"உழவன்" "Uzhavan" said...

கதை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை (உங்களிடமிருந்து கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்துவிட்டதால் கூட இருக்கலாம்)
இந்த அழகில் - என்பதற்குப் பதிலாக இந்த லட்சணத்துல என்று சொல்லியிருக்கலாம் என்று கூட தோணுகிறது.

அத்திரி said...

அண்ணே அருமை .அப்படியே நம்ம ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு

வானம்பாடிகள் said...

ம்ம்.அபாரம்.:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அதுக்கப்புறமாச்சும் வாய்ல சூடு வைச்சாரா இல்லியா..?

PPattian : புபட்டியன் said...

கதை நல்லாருக்குங்க.. வட்டார வழக்குதான் இந்த கதையின் ஹைலைட்.. கலக்குங்க.

க.இராமசாமி said...

நல்லாருக்கு இந்த கதை.

பா.ராஜாராம் said...

அருமையான நடை ஆதி.ரொம்ப பிடிச்சிருக்கு பேராண்டி! :-)

.

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

நல்ல கதை - காதாபாத்திரங்கல் படைப்பு - இயல்பான நடை - பேசுகிற சொற்கள் - முடிவு - அனைத்துமே அருமை

நல்வாழ்த்துகள் ஆதி

vanila said...

நெல்-வயல், கரும்புக்காடு, காய்கறித்தோட்டம், வாழைத்தோப்பு.. சரியா?. எங்க திரும்ப சொல்லுங்க பார்க்கலாம்..
வாழைத்தோப்பு..

நர்சிம் said...

அருமை அண்ணன்.

நிலாரசிகன் said...

அருமையான நடை ஆதி. கதையும் :)

அமுதா கிருஷ்ணா said...

அருமை தம்பி....

KVR said...

//அதென்ன அழகாயிருக்கும் பெண்களுக்கெல்லாம் காயத்ரின்னு பெயர் இருக்கு.இல்லாட்டி காயத்ரின்னு பெயர் இருக்கும் பெண்கள்லாம் அழகா இருக்காங்க :)
//

கன்னாபின்னான்னு ரிப்பீட்டிங் :-)

கதை இயல்பா இருக்கு ஆதி

Senthil said...

Truly Excellent!!!!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

பப்பு, எல்கே, விக்னேஷ்வரி, இராகவன், வெண்பூ, உழவன், அத்திரி, வானம்பாடிகள், உண்மைத்தமிழன், புபட்டியன், இராமசாமி, பாராஜாராம், சீனா, வனிலா, நர்சிம், நிலாரசிகன், அமுதா, கேவிஆர், செந்தில்..

சிறுகதை முயற்சிக்கு, தொடரும் ஆதரவு மகிழ்வைத் தருகிறது.

அனைவருக்கும் நன்றி.!!

நேசமித்ரன் said...

கதை இயல்பா இருக்கு

அடிச்சு ஆடறீங்க ஆதி

:)