Tuesday, March 30, 2010

கடைத் தெரு

பதிவுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கும் இன்னொரு படம், அதற்கு ஆகத்தகுதியுள்ள படம்தான். வசந்தபாலன் நம்பிக்கையூட்டுகிறார்.

இது சினிமாடிக்கான கிளைமாக்ஸா என்றால்.. இல்லை, ரியல் இப்படித்தான் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் மனதைத்தொட்ட ஒரு படம், சமூகத்தை ஒரு புகைப்படமாய்ப் பதிவு செய்யும் ஒரு முயற்சி இன்னும் கொஞ்சம் ஹேப்பி எண்டிங்கில் முடிந்திருந்தால் மகிழ்ச்சியும், கொஞ்சம் பாஸிடிவ் நம்பிக்கையுமாக வெளிவந்திருக்கலாம். தியேட்டரிலிருந்து கனத்த மனதோடு வெளியேறவேண்டியிருக்கிறது.

Angadi-Theru-Stills-4

பல காட்சிகளில் மனம் குபுக்கென்று பொங்கிவிடுகிறது. எதிர்பாராத ஒரு நேரத்தில் சாலையோர மனிதர்கள் மீது விபத்துக்குள்ளான லாரி ஒன்று பாயும் போது திரையிலிருந்து கண்களை விலக்கி சில விநாடிகள் தலையில் கை வைத்துக்கொண்டு ‘ஐயோ’ என்று உட்காரவேண்டியதாயிருக்கிறது. அந்த அளவுக்கு காட்சி லைவ்வாக இருக்கிறது. இன்னொரு காட்சியில் குள்ள மனிதர் ஒருவரின் மனைவி அதே குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை முன்னிறுத்தி தன் மனவுணர்வுகளைப் பகிரும் காட்சியில் பொங்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

படத்தில் இன்னும் பல சிறப்புகள். காணத் தவறாதீர்கள். தொடர்ச்சியாக அய்யனார் விஸ்வநாத் எழுதிய இந்தப்படத்தின் விமர்சனத்தைக் காணுங்கள்.

*****************

நேற்று ‘பதிவர் குழுமம்’ பற்றிய பதிவைக் கொஞ்சம் சீரியஸாகத்தான் எழுதிவிட்டேன் போலிருக்கிறது. இரண்டு மெயில்கள், நான்கைந்து போன்கால்கள் (இரண்டு ஐஎஸ்டி வேறு) என பரபரப்பாகிவிட்டது. அதில் என்ன புதியவர்களை இப்படி வாரியிருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வி. என்ன அநியாயம் அப்படி அர்த்தம் வரும்படிக்கு எதையும் நான் எழுதவில்லையே. எழுதாததையும் புரிந்துகொள்ளும்படிக்கு நம் பின்னவீனத்துவவாதிகளின் டிரெயினிங் பலமாகத்தான் இருக்கிறது போலிருக்கிறது. ஹிஹி.

நான் புதியவர்கள், பழையவர்கள் என்று பிரித்து எழுதவேயில்லை. நான் சொன்ன கருத்துகள் பொதுவானவைதான். நிறைகுடங்கள் தளும்பாமல் இருக்கும் போது அதிரும் குறைகுடங்களின் கூத்துகளைத்தான் ‘முடியல’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

நேற்று கொஞ்சம் சீரியஸாக எழுதியதால் சந்திப்பில் எடுத்த புகைப்படங்களை போட மறந்துவிட்டேன். இதோ ஒரு முக்கியமான புகைப்படம். சந்திப்பில் கலந்துகொண்ட யூத்துகள் இருவர். ஹிஹி.!

DSC09456

****************

சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் குற்றாலம் மலை மேல் செண்பகாதேவி அருவி அருகில் ஒரு பாட்டி 50 வருடங்களாக தன்னந்தனியாக வாழ்ந்துவருவது குறித்து ஒளிபரப்பினார்கள். எல்லாம் சரிதான். உள்ளூர்காரர்கள் முதல், சுற்றுலாப் பயணிகள் வரை தாராளமாக சென்று வரக்கூடிய செண்பகாதேவி அருவிக்குப் போவதை ஏதோ இமயமலை உச்சிக்கு சென்று வருவதைப்போல ‘பயங்ங்ங்கர காடு, கொடும் மலைப்பாதை, பல கிலோமீட்டர்கள், கொடிய விலங்குகள்.. உயிரைப்பணயம் வைத்து நம் குழு உங்களுக்காக அங்கே சென்று வந்தது’ என்ற பில்ட் அப்பைத்தான் தாங்கமுடியவில்லை. பல வருடங்களாக அங்கே வாழ்ந்தவன். பளிங்கு நீர், வானளாவிய மரங்கள், துள்ளித்திரியும் குரங்குகள், பறவைகள் என இயற்கை கொஞ்சும் இடங்கள் அவை. ஆஃப் சீஸனில் போனால் கூட ஒரு காட்டுப்பன்றியைக்கூட பார்க்கமுடியாது அங்கே.. ஏதோ கொடிய விலங்குகளாம். ஹும்.! அப்பளத்தைக்கூட சுத்தியல் கொண்டு உடைப்பார்கள் போல..

****************

சென்ற ஞாயிறன்று ரொம்ப அக்கறையோடு இரண்டு போன் கால்கள். ரொம்ப சோகமாக ‘தாமிரா, இன்னிக்கு மாஹாவீர் ஜெயந்தி.. கடைப்பக்கம் போய் ஏமாந்திடாதீங்க.. சும்மா ஞாபகப்படுத்தலாமேன்னுதான் ஹும்’ என்றார்கள். டாய்.. என்னாங்கடா இது? ஒரு குடும்பஸ்தனைப்போய் இப்படிக் கலாய்க்கிறாங்களேன்னு கடுப்பாகிப் போய் உட்கார்ந்திருந்தேன். சும்மா இருந்தவனை சீண்டிவிட்டால் எப்படி இருக்கும்? அதுவும் கிடைக்காது என்று தெரிந்த பின்னர்.. ஒரே 90 ஞாபகமாகவே இருந்தது. ஏற்கனவே காலையிலிருந்து ஏனோ கடுப்பாக இருந்த ரமாவை நினைத்து 90 ஞாபகத்தை விரட்டிக்கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு போன்கால்.

‘தாமிரா, இன்னிக்கு ஏதோ லீவாம். ரொம்ப அர்ஜண்ட். கைவசம் ஏதாவது ஸ்டாக் இருக்குமா?’

*****************

கண்ணன் போன் பண்ணினான்.

‘சைக்யாட்ரிஸ்ட், டாக்டர் ஷாலினியும் பிளாகராமே. தெரியுமா அவங்களை?’

‘பர்சனலாத் தெரியாது. போன் நம்பர் இருக்குது. வேணுமானா அறிமுகப்படுத்திக்லாம். ஏண்டா கேட்குறே?’

‘ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும்’

‘யாருக்கு? என்ன விஷயம்?’

‘எனக்குதான். ஏன்னு கேட்டியா? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு’

‘ஏண்டா.. ஒரு மாசம்தான ஆச்சுது. அதுக்குள்ளயா? பாரு 4 வருஷம் ஆச்சு. நான்லாம் சமாளிச்சு இருக்கலியா..’ நான் தொடர்வதற்குள் போன் கட்டாகிவிட்டது. ஆஸ்பத்திரிக்கு கிளம்பிக்கிட்டிருப்பானோ என்னவோ..

.

Monday, March 29, 2010

பதிவர் சந்திப்பும் கொசுத் தொல்லையும்

வலையில் எழுதுவதால் ஒத்த ரசனையுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. எத்தனை நாட்கள்தான் மெயில் / பின்னூட்டங்களிலேயே பேசிக்கொண்டிருப்பது.? நேரில் சந்திக்கலாம் என்ற ஆசை. பதிவர் சந்திப்பொன்றில் முதல் முறை சந்திக்கிறோம். நான் சில வார்த்தைகளின் தொடர்ச்சியாக சிரிக்கத் தொடங்கினாலே அந்த முழு வாக்கியத்தையும் அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. செல்லமாக தலையிலடித்துக் கொள்கிறார், உடன் சிரிக்கத் துவங்குகிறார். அது ஒத்த ரசனை. நட்பு.

நிறைய வேலைகள். தவிர்க்கவே முடியாதவற்றையும் தவிர்த்துவிட்டுத்தான் சந்திப்புக்குச் செல்கிறோம். அது போன்ற நட்பினைக் காணத்தானே தவிர காரணம் வேறென்ன.? ஒவ்வாத நபர்களிடம் ஒதுங்கிச் செல்கிறோம். பீச்சில் நடைபெறும் சந்திப்புகளில் அது அழகாக நடைபெறும். அந்தக் குறைந்த பட்சதேவையும் கூட கேகே நகர் சந்திப்பில் (27.03.10) நிகழவில்லை. பதிவர் குழுமம் அமைப்பதற்கான ஆலோசனை என்ற பெயரில் இரண்டு மணி நேரம் மொக்கை போடப்பட்டது.

யார் இப்போது பதிவெழுதிக் கொண்டிருப்பது.? எழுத்து, அதற்கான வாசிப்பு, சிந்தனை, பயிற்சி, சமூகப்பொறுப்பு இது எதுபற்றியும் கவலைகொள்ளாத அல்லது தெரியாத ஜிமெயிலர்கள்தான் என்றால் அது முழுதுமாக தவறாகிவிடாது. மேலும் அப்படி எழுதிக்கொண்டிருப்பது தவறான காரியம் ஒன்றுமில்லை. செய்யத் தகுந்ததே.! ஓய்வு நேரத்தை பயனுள்ளதாய் கழிக்க, மனவழுத்தத்தைப் போக்க நல்லதொரு வடிகாலாக வலைப்பூ இருக்கிறது. பின்னூட்டங்கள், பின் தொடர்புகள், ஹிட்ஸ் கணக்குகள், கூட்டம் சேர்த்தல் இவற்றைக் கொண்டு நாம் எழுத்தாளராகிவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்படத்தொடங்கும் புள்ளியே பிரச்சினைக்கான ஆரம்பம். தகுந்த சுயபரிசோதனைகள் இல்லாமல் அதை நம்புவதோடு மட்டுமல்லாமல் ‘என் வாசகர்கள்..’ என்று பேசத்துவங்குவதில் அது இன்னும் நகைப்புக்கு உள்ளாகிறது. நாளடைவில் அவர்களை உண்மை சுடும் போது வலையுலகை விட்டு பறந்துபோகிறார்கள். இந்தப்பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாதவர்கள் பலரும் கூட மாறும் வாழ்க்கைச் சூழலில் வலையுலகை விட்டு விலகிச்செல்வதும் நிகழ்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கும்பல் கும்பலாக உள்ளே வருபவர்களில் எஞ்சும் மிகச்சிலரே தொடர்ந்து எழுத தலைப்படுகின்றனர். இவ்வாறான சிலருள் மிகச்சிலர் அரிதாய் எழுதவும் செய்கிறார்கள். அவர்களையே நான் ‘பதிவர்கள்’ எனக் கொள்கிறேன். இவர்களிலும் கூட பலர் இந்தப் புதிதாய் உள்வரும் ஜிமெயிலர்களின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாமல் இதுவா களம்? என்று ஓடிவிடுகிறார்கள். சில மூத்த நண்பர்கள் மகிழ்வுடன் நினைவு கூறும் பலரும் ஏன் இப்போது எழுதுவதில்லை என துவக்கத்தில் நான் சிந்தித்ததுண்டு.

எழுத்து இவ்வாறான கடினச் செயல் என்பதைப்போலவே பேசுவதும் ஒரு அரிய கலை. நினைப்பதைச் சுருங்கவும், தெளிவாகவும் (?) பேசி கேட்பவர்களின் காதில் ரத்தம் வரவைப்பதும் கூட ஒரு கலைதான் போலிருக்கிறது. நேற்றைய ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் நடந்த பதிவர் சந்திப்பிலும் இது நிகழ்ந்தது. அதெப்படி ஒருவர் பேசியதை அப்படியே திரும்பவும் ரிப்பீட்டு போடுகிறீர்கள்? நாம் நினைத்ததையே ஒருவர் ஏற்கனவே சொல்லிவிட்டாலும் கூட கருத்து பகிரப்பட்டுவிட்டதால் அமைதியாக இருக்கலாமே. அப்படியென்ன இருக்கிறது அந்த மைக்கில்? மைக்கின் வசீகரம் அப்படி. பதிவர்கள் மட்டும் தப்பிவிடமுடியுமா என்ன? நேற்றைய நிகழ்வில் அஜெண்டா தெளிவில்லாததால் வாலண்டியராக கருத்துச்சொல்ல விரும்புவர்கள் மைக்கைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் மைக் புண்ணாவது தவிர்க்க இயலாதது, அது நிகழ்ந்தது.

நான் அனைவரையும் கூறவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

விஷயம் என்ன? பதிவர்களுக்காக குழுமம் தேவை என்றே நான் கருதுகிறேன்.

ஏன்?

“விழாக்காலங்களில் எல்லோருக்குமே புத்தகங்கள் மீது 10% கழிவு தரும் புத்தகக்கடைகள், வெளியீட்டாளர்கள், இவ்வாறான எழுத்து சம்பந்தப்பட்ட குழுமத்திலிருப்பவர்களுக்கு 15% ஆகவோ, அல்லது அந்த 10% த்தையே எல்லாக்காலங்களிலும் நீட்டித்துத்தரும்படியோ கோரிக்கை வைக்கலாம்.” என நான் நினைக்கிறேன். இது என் எண்ணம்தான். இதைப்போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள்.

எனக்கு நினைவிருந்த வரை சந்திப்பில் சங்கம் அமைக்கப்பட்டால் அதன் பயனாக நண்பர்கள் பகிர்ந்த விஷயங்களைக் கீழே தருகிறேன். (இவையும் மைக் சொற்பொழிவின் இடையிடையே கிடைத்தவைதான்)

*காப்பிரைட் குற்றங்கள், போலிப்பதிவர்கள் பிரச்சினை போன்ற இணையக் குற்றங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளுக்கு.

*சில சமயங்களில் நேரும் தீவிரமான தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு ‘கூகுள்’ போன்ற நிறுவனங்களை அணுகுவதற்கு.

*கற்போம், கற்பிப்போம் போல வலை நுட்பங்களை கூட்டாக கற்பதற்கு, கற்பிப்பதற்கு.

*ஆங்கில வலைத்தளங்கள் இயங்குவதைப்போல நிபுணத்துவத்துடன் வலைப்பூவை அணுகுவதற்கு.. மேலும் அதன் மூலம் வருமானத்திற்கான வழிவகைகளை காண்பதற்கு.

*வாசிப்பது, எழுதுவது மற்றும் படைப்பிலக்கியம் குறித்து அறிந்து கொள்ள உதவும் ‘பயிற்சிப்பட்டறைகளை’ நிகழ்த்துவதற்கு.

*படைப்புகளுக்கான போட்டிகள் நிகழ்த்துவதற்கு.

*குற்றங்கள் மட்டுமில்லாது பிற சூழ்நிலைத்தேவைகளின் போது அரசாங்கம் போன்ற நிறுவனங்களை அணுகுவதற்கு.

*சேவை நோக்கத்திற்காக. (வறுமை, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், ரத்த தானம், கண் தானம் போன்றவற்றை ஊக்குவித்தல், பங்கு பெறுதல்)

*சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் உரத்த குரலில் ஓங்கி ஒலிக்க.

*உற்சாக விருந்துகள், குழுச்சுற்றுலா முதலான கேளிக்கை மற்றும் பிறவற்றுக்காக.

பெரும்பாலும் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நபர்களால் பரிந்துரைக்கப்பட்டவை. இவையனைத்தையுமே ஒரு பதிவு செய்யப்பட்ட குழுமத்தால் செய்யமுடியுமா என்றால் முடியாது என்றே நான் எண்ணுகிறேன். எந்த விதிமுறைகளின் கீழ் குழுமத்தைப் பதிவு செய்வது? ஆர்கனைசேஷன்? ரிக்ரியேஷன் கிளப்? சாரிட்டிபிள் சொசைட்டி? ட்ரஸ்ட்? இன்னும்?

பேசியவர்களில் சிலர் தலைவர், செயலாளர் இப்படி பதவிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றனர். தலைவரோ, செயல் உறுப்பினர்களோ இல்லாமல் மேற்கண்ட எந்த வகையிலும் சங்கத்தைப் பதிவு செய்யமுடியுமா என்ன? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். ஏன் இந்தச் சிக்கல்? எதற்குப் சங்கத்தைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்பவர்கள் யாரும் இருக்கிறீர்களா என்ன? அப்படியொரு ‘சொப்புக் குழுமம்’ நடத்தவா இவ்வளவு ஏற்பாடுகள்? ஆலோசனைகள்?

ஜிமெயிலர்களாக இல்லாமல், கொஞ்சமேனும் பதிவர்களாக பரிமளித்தவர்களிடம் / பரிமளித்துக்கொண்டிருப்பவர்களிடம் போனில் மெயிலில் ஆலோசனை பெற்று, ட்ராஃப்ட் திட்டங்கள் தீட்டப்பட்டபின்னர் அவற்றின் மீதான விவாதத்திற்கே அனைவரும் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் கூட மெயில்களில், பதிவுகளில் பல்நிலை விவாதங்களுக்குப் பின்னர்.

சந்திப்பில் நிகழ்ந்தவற்றில் தவறேதுமில்லை. ஆனால் சரிசெய்துகொள்ளாமல், ‘மெயில் ஐடி கிரியேட் பண்ணியாகிவிட்டது’, ‘தலைப்பெல்லாம் முடிவு செய்தாகிவிட்டது’, ‘யார் சொன்னால் என்ன? சங்கம்னா சங்கம்தான். யார் தடுப்பது? பார்த்துவிடலாம்’, என்று முண்டாவைத் தட்டிக்கொண்டு இறங்கினால் வாசகர்களும் ‘பதிவர்’களும் சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.?

பி.கு :

இப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ள சில கருத்துகளையும், எனது மொக்கைப்பதிவுகளையும் ஒப்பிட்டு யாராவது நக்கல் பண்ணலாம் என்று ஐடியா வைத்திருந்தால், ஸாரி. நானும் ஜிமெயிலர்தான். ரெண்டு வருஷம் ஆச்சு எழுத வந்து. எப்போ ஓடிப்போவேன்னு எனக்கேத் தெரியாது. நன்றி.

Thursday, March 25, 2010

சென்னை பதிவர் குழுமம்

நீண்ட நாட்களாக நண்பர்கள் பலராலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த ‘சென்னை பதிவர்களுக்கான குழு’ அமைப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்குவதற்கான சமிக்கைகள் (நீ திருந்தவே மாட்டியாடா?) தெரிகின்றன. (அதென்ன திருப்பூர், கோவைன்னு சங்கம் அமைச்சு கலக்குறாங்க, நாம இன்னா இளிச்சாவாயான்னு யாரோ சீனியர் பதிவர் புலம்பினாராம்) அதைப்பற்றிப் பேசவும் அல்லது வழக்கம் போல கூடிக்குலாவவும் வரும் சனிக்கிழமை மாலை ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக வலைப்பூவிற்கு வந்து புகழ்ந்து வைக்கும் நண்பர்களைக் காண ஆவலாகயிருக்கிறது. அது எப்படி நீங்கள் மட்டும் என் சிறப்பைக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான்.! வாருங்கள், அனைவரும் ஒன்று கூடுவோம். தமிழ்த் தொண்டாற்றுவோம் (அப்பிடின்னா இனிமே பதிவெழுதப் போறதில்லையா? ன்னெல்லாம் கேட்கக்கூடாது).. அட்லீஸ்ட் மகிழ்ந்திருப்போம்.!

பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர் : ‘சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம்’

பரிந்துரைக்கப்பட்டுள்ள லோகோ :

type 2[2]

இரண்டிலும் மாற்றமிருக்கலாம்.

சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு

நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை:

தொடர்புக்கு..


மணிஜி : 9340089989
M.M.அப்துல்லா : 9381377888
கேபிள்சங்கர் : 9840332666
லக்கிலுக் : 9841354308
நர்சிம் : 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010

Wednesday, March 24, 2010

பிரபல பதிவர் அவஸ்தை

ஒரு ஊர்ல.. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காத நண்பர் ஒருத்தர், கல்யாணம் பண்ணிக்கிட்டார். அது ஆனது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. அவர் இப்போ ஒட்டகம் மேய்க்கிற ஊர்ல வேல பாக்குறார். இப்போதைக்கு ஒரு ப்ப்பிரபல பதிவர்னு சொன்னா உங்களால கண்டு பிடிக்கமுடியமா? சரி என்ன நடந்துச்சுன்னாவது பாப்போம். தன்னோட தங்கமணியை டெலிவரிக்காக ஊருக்கு அனுப்பிவிட்டு கடந்த ஒரு வருஷமா ஜாலியா இருந்தவர், நீண்ட பிரிவின் முடிவாக காதலோடு தங்கமணியையும், காதல் பரிசாக தங்கக்குட்டியையும் ஊருக்கு வந்து அழைத்துக்கொண்டு மீண்டும் ஒட்டகம் மேய்க்கத் திரும்பிவிட்டார்.

அவர் ஊரிலிருக்கும் போது தங்கமணியுடன் போனில் ஒவ்வொரு முறை
அளவளாவும் போதும் அவரது தங்கமணி தங்கக்குட்டியைப் பற்றிய பிரச்சினைகளை
எடுத்துரைத்த போது, 'அட என்ன டார்லிங். ஊரிலில்லாத அதிசயமாகவா நாம் பிள்ளை பெற்றிருக்கிறோம். பிள்ளைன்னா அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்யும். நாமதான்
அஜ்ஜிஸ் செய்து வளர்க்கணும்' என்று தத்துவம் பேசியிருக்கிறார். ஆனால் ஒரு
மாதமாக நிஜத்தில் சில சிக்கல்களை அனுபவிக்கையில்தான் நமது ஞாபகம் அண்ணனுக்கு வந்திருக்கிறது. நம்மால் முடிந்தது ஆறுதல்தான் என்பதால் அதைச்சொல்லி அவரைத் தேற்றினோம். பின்னே.. நம்ம கஷ்டத்தைச் சொல்லும் போது 'அடடா, நாம தனியாள் இல்ல..'ன்னு ஒரு ஆறுதல் கிடைக்கும்தானே.. அவருக்கு நேர்ந்த சில அனுபவங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். ஆள் யாரென்றெல்லாம் கேட்காதீங்க, சொல்லமாட்டேன்.

*பகல் பூராவும் நல்லாத் தூங்கிவிட்டு இரவு பூரா கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறாராம் ஜூனியர். புருஷனும் பெண்டாட்டியும் ஷிப்ட் முறையில் விழித்துக் கொண்டிருக்கிறார்களாம். பின்னே தொட்டிலில் போட்டால் அழும் பிள்ளையை பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கவா முடியும்.? ஒரு வேளை இந்திய, இப்போதைய நேர மாறுபாடுதான் பிரச்சினைக்கு காரணமாக இருக்குமோ என்ற குழப்பமாம் நம்மவருக்கு.

*ஒரு நாள் ராத்திரி 1 மணியிலிருந்து ஜூனியர் அழ ஆரம்பித்திருக்கிறார். தங்கமணி
கொஞ்ச நேரம் சமாதானம் பண்ணிப்பார்த்து முடியாததால் தூங்கிக்கொண்டிருந்த இவரை முகத்தில் சொம்புத் தண்ணீரை ஊற்றி எழுப்பியிருக்கிறார். பசிக்கிறதோ? வயிற்றை கியிற்றை வலிக்கிறதோ? இல்ல எறும்பு கடித்திருக்குமோ? என்று அத்தனை சோதனைகளையும் முடித்தபின்னும் அழுகை நிற்கவில்லை. மூன்று மணிக்கு மேல் பதறிப்போய் காரை எடுத்துக்கொண்டு 24 hrs ஹாஸ்பிடலைத் தேடிப்போய் டாக்டரைப்பார்க்க உட்கார்ந்தபோது நடந்தது என்ன தெரியுமா? மடியிலிருந்த ஜூனியர் அழகாக நம்மவரின் முகம் பார்த்து ஹிஹின்னு சிரித்திருக்கிறார்.

*ஆபிஸிலிருந்து ஓடி வந்ததும் ஜூனியரைத் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறாராம். இல்லையானால் சமையல், துணி தோய்த்தல், பாத்திரம் தேய்த்தல் போன்ற வேலைகளை அதுவும் முகம் கோணாமல் பார்க்கவேண்டியதிருக்கிறதாம். சமயங்களில் எவ்வளவுதான் கொஞ்சிக்கொண்டிருந்தாலும் ஜூனியர் அதை ரசிக்காமல் அழுது வைக்க குழந்தை கைமாறி இவர் பாத்திரம் தேய்ப்பதும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதாம்.

*ஒருநாள் ஆஃபீஸ் மீட்டிங் முடித்து கொஞ்சம் டென்ஷனாக உட்கார்ந்திருக்கும் போது தங்கமணியிடமிருந்து அவசரமாக போன். “காலையிலிருந்து 5 வாட்டி போயிட்டான்க.. தண்ணியா போகுது. பயம்மா இருக்குது, உடனே ஓடியாங்க..” ஓடிப்போயிருக்கிறார் நம்மவர். ஹாஸ்பிடல். மருந்து.

*அன்றிலிருந்து நான்காவது நாள் ஜூனியரோடு மீண்டும் ஹாஸ்பிடலில் உட்கார்ந்திருக்கிறார் நம்மவர். பக்கத்திலிருந்தவர் என்னன்னு கேட்டபோது.. குழப்பமான முகத்தோடு சொன்னாராம், “ஆயி போயி நாலு நாளு ஆவுது. நாங்களும் இப்போ வந்துடும், அப்போ வந்துடும்னு பார்த்துக்கிட்டிருந்தோம். வரல.. அதான்” நிலைமை பரிதாபம்தான் இல்ல.?

பரிதாபமாக எனக்கு போன் செய்து புலம்பினார், “இப்ப கைப்பிள்ளையாக இருக்கப்போயிதான் இவ்வளவு பிரச்சினை இல்ல. கொஞ்சம் வளந்துட்டா சரியாப்போயிடுமில்ல..” என்றவரிடம் “யோவ், இனிமேத்தான்யா இருக்குது..” என்று ஆரம்பித்துத் தொடரமுடியாமல் அரைமணி நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

Monday, March 22, 2010

பிரமாத குருவும் 11 சீடர்களும்

ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ஆசிரமம் இருந்தது. ஆசிரமம்னா எல்லா இடத்திலயும் இருக்குற மாதிரி இல்லை, இது கொஞ்சம் வித்தியாசமானது. எப்படின்னா இங்க நிறைய சாமியாருங்க இருப்பாங்க. ஆசிரமத்துக்குள்ளயே ஒவ்வொரு சாமியாரும் ஏரியா பிரிச்சிக்கிட்டு தனி குடில் போட்டுக்கிட்டு அவங்கவங்க சீடருங்கள வச்சிக்கிட்டு பொழப்பு நடத்திக்கிட்டிருப்பாங்க. அப்படின்னா ஒரு சாமியார் மட்டும் இருக்கிற ஏரியாவை ஆசிரமம்னு சொல்லுவீங்களா? இல்ல இருக்குற ஏழெட்டு சாமியாருங்களின் மொத்த ஏரியாவையும் சேத்து ஆசிரமம்னு சொல்லுவீங்களா? அதனாலதான் வித்தியாசம்னு சொன்னேன். சமயங்கள்ள ரெண்டு ஏரியா சாமியாருங்களுக்குள்ள சண்ட வந்து கசமுசன்னு ஆகுறதும் நடக்கும்.

இதையெல்லாம் தவிர மொத்த ஆசிரமத்துக்கும் சேர்த்து ஒரு தலைமை குருவும் உண்டு. அவருக்கு மொத்தத்தையும் மேய்க்கிற அளவுக்கு அவ்வளவு பவர் இருக்கா? இல்லையா? அல்லது இருக்குற மாதிரி இருக்கா? என்பதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு அவர் பெயர் சீனிச்சாமின்னு வச்சுக்குங்க. அதான் சீனியர் சாமி.!

ஆசிரமத்த நீங்க பாத்தீங்கன்னா அசந்து போயிடுவீங்க. ஊரைவிட்டுத் தள்ளி தூரமா மலையடிவாரத்துல சூப்பரா இருக்கும். ஒரே மரம் செடி கொடின்னு பச்சைப்பசேல்னு இருக்கும். பக்கத்துல குளுகுளுனு ஒரு ஆறு வேற ஓடிக்கிட்டிருக்கும். ஆசிரமத்துக்குள்ள பூஞ்செடிகள்லாம் வச்சி தோட்டமெல்லாம் போட்டு அழகா இருக்கும். தோட்டவேல பாக்குறது, மத்த பொது காரியங்கள், ஜாலியா பொழுதுபோக்குறது என ஏரியா வித்தியாசமில்லாமல் இந்த சீடப்பசங்க மட்டும் பல நேரம் ஒண்ணுமண்ணா இருப்பாங்க. சரி வாங்க நம்ப ஏரியாக்கு போவோம்.

ஆசிரமத்துக்குள்ள நுழைஞ்சி நாலைஞ்சு ஏரியாக்களை கடந்து போனீங்கன்னா நம்ப பிரமாதரோட ஏரியா வரும். பிரமாத குருவைப்பத்தி நிறைய கதகதயா சொல்லுவாங்க அவரோட சீடர்கள். அங்க இருக்கற மற்ற குருக்களயெல்லாம் விட அவருதான் திறமசாலின்னும், ஞானமிக்கவர்னும் சொல்லுவாங்க. அதையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் அவர் எந்த குருவுமே இல்லாம சுயம்புவா ஞானமடைஞ்சார்ங்கிறதுதான். இமயமலையில தன்னந்தனியா 7 வருசம் தவமிருந்திட்டு வந்திருக்கார்னும் சொல்லுவாங்க. அவருக்கு ஏன் பிரமாதர்னு பேரு வந்ததுங்கிறதுக்கே தனிக்கதை இருக்கு. அவரப்பத்தியும், அவரோட 11 சீடர்களப் பத்தியும், பக்கத்து ஆசிரமங்களைப் பற்றியும், அவைகளுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றியும் போகப்போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.. இப்ப இன்னைக்கு கதையப் பாக்கலாம்.

பிரமாத குரு தன்னோட 8 வது சீடன் ஜெயேந்திரனை கூப்பிட்டு, ஆசிரம வாசலில் அன்றாட நிகழ்ச்சி நிரலை வரும் பக்தர்கள் எளிதாக தெரிந்துகொள்ள வசதியாக ஒரு அறிவிப்புப்பலகை தொங்க விடுமாறு பணித்தார். பணித்தார் என்றால், "ஆசிரம அஜெண்டாவை பக்தர்கள் தெரிந்துகொள்ளும் படிக்கு வாசலில் ஒரு போர்ட் வை ஜெயேந்திரா.." என்று சொன்னார் என்று நினைக்கிறீர்களா, அதுதான் இல்லை. இவ்வாறு சொல்கிறார்,

"குழந்தாய் ஜெயேந்திரா, நான் இமயத்திலிருந்து திரும்பியதிலிருந்து சுமார் 13 வருடங்கள் நாடெங்கும் சுற்றியலைந்து கியூஸி பகவான் புகழ் பரப்பி வந்திருக்கிறேன் என்பதை நீ அறிவாய். அந்தக்கால கட்டங்களில் நான் சுமார் ஏழாயிரம் ஆசிரமங்களைச் சந்தித்திருக்கிறேன். அதிலே எழுபதாயிரம் போர்டுகளைப் பார்த்திருக்கிறேன். பகவான் ஸ்லோகனுக்கு ஒன்று, குருவின் புகழ் பரப்ப ஒன்று, தலபுராணத்துக்கு ஒன்று, வேண்டுகோளாக ஒன்று, அறிவிப்பாக ஒன்று என அவை ஏராளம் ஏராளம். போர்ட் என்பது ஆசிரமத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். வரும் பக்தர்களின் அறியாமையை விளக்கி, அவர்களை அலைக்கழிக்காமல் திசைகாட்டும் விஷயங்களை குறித்திட அறிவிப்புப்பலகைகள் அவசியம். இந்த அடிப்படை விஷயம் கூட உங்கள் சிந்தைக்கு உதிக்காத விந்தையை நான் என்னென்று சொல்வேன்.."

'இம்மா நாளு இன்னா பண்ணிக்கினுருந்த.. மின்னாலயே கூவினுருந்தா பண்ணிக்கிடாசியிருப்பேன்ல..' என்று மனதுக்குள் நினைத்த ஜெயேந்திரன் வெளியே, "இப்ப இன்னா போர்ட் வெக்குனூன்றியா குரு.?"

"ஆம் ஜெயேந்திரன், போர்ட் என்றால் என்னவென்று தெரியுமெனினும் நான் அது எப்படியிருக்கும் என்று உனக்கு விளக்கி.."

'வாணா.. வுட்டுரு, என்ன கொலகாரனா ஆக்காத..' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, "தெரியும் குரு, வெச்சிர்றேன்" என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வெளியே ஓடினான் ஜெயேந்திரன். இப்போது தெரிந்திருக்குமே பிரமாதர் எவ்வளவு சுருக்கமாக பேசுவார் என்று. அவரது பல தனிச்சிறப்புகளில் இதுவும் ஒன்று.

மாலை சிறப்புப்பூஜைக்காக நந்தவனத்திலே பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அஜயேந்திரனும், விஜயேந்திரனும் குடிலுக்குள்ளிருந்து வெளியே ஓடிவந்த ஜெயேந்திரனை பிடித்து விசாரித்தனர். இவன் விபரத்தைக்கூறி இது போல போர்ட் வைக்கவேண்டுமாம் உதவுங்கள், எதை எப்படி வைப்பதென புரியவில்லை என்று சொல்ல, நானே பூ பறிச்சு டயர்டா போய் கிடக்குறேன் வேற ஆளப்பாரு என்று சொல்லிவிட்டான் விஜயேந்திரன். அஜயேந்திரனோ காலையிலிருந்து எனக்கு வயித்தவலி என்னால முடியாது என்று சொல்லிவிட, ஜெயேந்திரன் தனியாகவே வேலையைத் துவங்கி பாதியைத்தான் முடிக்கமுடிந்தது. மறுநாளும் வேறு வேலையிருந்ததால் இதை மறந்துவிட்டான். இப்படியாக நாட்கள் சென்றன.

பின்னொரு நாள் பிரமாதர் அஜயேந்திரனைக் கூப்பிட்டு, "குழந்தாய் அஜயேந்திரா, நான் இமயத்திலிருந்து திரும்பியதிலிருந்து.." என்றதில் அஜயேந்திரன் காதில் ஸேம் பிளட்டுடன் விஜயேந்திரன், ஜெயேந்திரன் இருவரிடமும் வந்து சொல்லி திரும்பவும் வேலையைத் துவங்கினார்கள். இப்போதும் அவர்களிடமிருந்த பலகை அறுக்கும் கருவி பழுதுபட்டதால் வேலை தடைபட, பின்னர் அதை மறந்து போய்விட்டார்கள். 

அன்றிலிருந்து ஒரு மண்டலத்தில் நிகழ்ந்த ஒரு மகா யக்ஞ சொற்பொழிவில் தொடர்ந்து மூன்று மணிநேரம் சொற்பொழிவாற்றிவிட்டு மற்ற சாமியார்களும் பேச வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக உரையை சுருக்கமாக முடித்து அமர்ந்தார் பிரமாதர். அன்றைய நிகழ்ச்சி முடிவில் கேள்வி நேரத்தில் ஒரு சாதாரண பக்தர் எழுந்து பிரமாதரை நோக்கி சொன்னார்,

"சாமி, ஒரு சின்ன யோஜனை. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதேங்கோ, எப்பப்ப பூஜை, புனஸ்காரம் நடக்கும்? எப்போ சாமியை பக்தாள்லாம் பார்க்கலாம், பஜனை எப்போன்னெல்லாம் வாசலிலே ஒரு போர்டிலே எழுதிவச்சுட்டேள்னா வர்றவாளுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்குமோன்னோ.."

கூட்டத்தில் சீடர்களைத் தேடிய பிரமாதரின் கண்களுக்குத் தட்டுப்படாமல் அதற்குள் எஸ்கேப்பாகியிருந்தனர் ஜெயேந்திரன், அஜயேந்திரன், விஜயேந்திரன் மூவரும்.

.

Friday, March 19, 2010

பெருவெடிப்பு

அழகியலுடன் கூடிய கலையம்சமான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்கள் இருக்கின்றன. பிரமிப்பைத் தரக்கூடிய விறுவிறுப்பான காட்சியமைப்புகள் கொண்ட படங்கள் இருக்கின்றன. மீள முடியாத தாக்கத்தையும் தொடர் சிந்தனைகளையும் ஏற்படுத்தும் திரைப்படங்கள் இருக்கின்றன. மனதைத்தொடும் நிகழ்வுகளுடன் கண்ணீரை வரவழைக்கும் படங்கள் இருக்கின்றன. சமூக அவலங்களை, வாழ்வியலை உயிர்ப்போடு தரக்கூடிய படங்கள் இருக்கின்றன…. (நிறுத்து, இதெல்லாம் எங்கே? என்று கேட்கிறீர்களா? 'நான் ஆங்கிலப்படங்களைச் சொல்கிறேன்'.. அதானேப் பார்த்தேன்)

பெரும்பாலும் கனத்த விஷயங்களையும், மெல்லிய மன உணர்வுகளையும் பேசும் கதைகள் விறுவிறுப்பாகவோ, பிரம்மாண்டமாகவோ இருப்பதில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட கதைகளையும் திறமைசாலிகளால் விறுவிறுப்பாக சொல்லமுடிகிறது என்பதற்கான சாட்சிதான் ‘தி ஹர்ட் லாக்கர்’.

பிரம்மாண்டம் என்பது நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்கள் மோதிக்கொள்வதும், புவிப்பிரளயங்களைக் காட்சிப்படுத்துவதும் மட்டும்தானா? ஒரு புல்லட் கேஸ் துப்பாக்கியிலிருந்து தெறித்து விழும் காட்சி, நம் விழிகள் விரியச்செய்கின்றதே.. டாப் ஆங்கிளில், இழுக்கப்படும் வயர்களைப் பற்றிக்கொண்டு சங்கிலித்தொடராய், புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் சுற்றிலும் மேலெழுகின்றன.. நடுவில் ஒரு மனிதன். நமக்கு ஒரு விநாடி மூச்சு நின்று போகிறது. மரணத்தில் விளிம்பில் நின்றுகொண்டு 'இது என் வாழ்வு' என்று நம்மை நோக்கி கூக்குரலிடும் ஹீரோ.!!

hurt_locker_ver3

சமீபத்தில் இவ்வளவு ஆழமான உணர்வுகளை தொட்டுச்செல்லக்கூடிய, அதே நேரம் விறுவிறுப்பான ஒரு சினிமாவைப் பார்க்கவில்லை. போர்க்களத்திலிருக்கும் ஒரு வெடிகுண்டு செயலிழக்கச்செய்யும் நிபுணனின் கதை.

ஹீரோவுக்கு ‘போர் ஒரு போதை’ என்பது போல இப்படத்தின் மீதான சில விமர்சனங்கள் சொல்கின்றன. நான் அப்படி உணரவில்லை. வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் காதல் கொண்டவனாகவும், நம்பிக்கை கொண்டவனாகவும்தான் அவனை நான் உணர்கிறேன். வாழ்விற்கான அர்த்தம் தேடும் நோக்கிலேயே மிக சின்சியராக, மரணத்தின் தோள் மீது கைகளைப் போட்டுக்கொண்டு உலாத்தும் ஒரு உன்னத வீரனாகவே அவன் இருக்கிறான். அவனது வீரம் அளப்பரியது. சில சமயங்களில் எழும் உணர்வுகளை எளிதில் எழுதிவிடமுடிவதில்லைதான்.

hurt-locker-boom

இறுதிக்காட்சியில் அவன் தன் கைக்குழந்தையுடன் ஏறத்தாழ இவ்வாறாக பேசிக்கொண்டிருக்கிறான்.

“நீ இந்த பொம்மையை நேசிக்கிறாய்.. இந்த தொட்டிலை நேசிக்கிறாய்.. நீ அணிந்திருக்கும் உடையை.. என்னை.. இந்தக் கிலுக்கலை.. உன்னைச்சுற்றியிருக்கும் அனைத்தையும் நேசிக்கிறாய். நீ வளர்கையில் இந்த பொம்மை வெறும் பஞ்சுப்பொதியென்பதை உணர்வாய். உன் விருப்பங்கள் குறுகக்கூடும். நீ நேசிக்கும் மனிதர்களும், பொருட்களும், செயல்களும் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போகும். ஒரு கட்டத்தில் அது ஒன்றிரண்டாக மாறவும் நேரலாம்…. ஒரு வேளை.. அது ஒன்றேயாகவும் கூட ஆகலாம், என்னைப்போல..”

அடுத்த காட்சியில் அவன் இருப்பது களத்தில்.

.

Wednesday, March 17, 2010

நினைவுகளின் ஆழத்தில்..

நடப்பு வெள்ளிநிலா மாத இதழில் வெளியாகியுள்ள‌ நினைவோடை இது. அதைக் கண்டிராத நண்பர்களுக்காக இங்கே மீண்டும்..


ண்ணீரில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நல்ல மதிய நேரமென்பதால் ஆற்றங்கரையில் குளிக்கும் ஆட்களோ, துவைக்கும் பெண்களோ யாருமே இல்லை. ஆற்றின் மறுபுறம் இருக்கும் மருதூருக்குச் செல்ல அதிகபட்சம் மார்பளவு நீரில் கடந்துசெல்லும் ஆட்கள் யாரும் கூட காணப்படவில்லை.

சைக்கிளை கரையிலிருக்கும் அந்தப் பிள்ளையார் கோவில் சுவற்றில் சாய்த்து நிறுத்தினேன். குளிக்க வசதியான ஆற்றின் நடுவே ஒரு தீவைப்போல இருக்கும் மண் திட்டுக்குச் சென்றேன். வழக்கமாக குளிக்கும் இடம்தான், திட்டின் மேற்குப்புறமாக இரண்டு பாறைகளுக்கு நடுவே போதுமான ஆழத்தில் தெளிவான, ஓடும் நீரில் உள்ளம் நனைய குளிக்கலாம். உடைகளையும் சோப்பையும் பாறைக்கு மேல் வைத்துவிட்டு துண்டை உடுத்திக்கொண்டு ஆற்றில் இறங்கினேன். இந்த சுடும் மதிய நேரத்தில் நீரின் மேலோட்டமான வெம்மையைக் கடந்து உள்ளே குளிர் ஜில்லிட்டது.

தண்ணீரில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், மார்பளவு ஆழம் குளிக்க சுகமானது. பாறையிலிருந்து ஐந்தடி தூரத்தில்தான் இருந்திருப்பேன். அடுத்த ஒரு அடியை வைத்தபோது காலுக்கடியில் பூமி இல்லை. தவறு செய்துவிட்டாய், திரும்பிவிடு ஒரு அடி பின்னே.. மூச்செடுத்துக்கொண்டு நீந்து பாறையை நோக்கி... இல்லை, நீந்துவதற்கான முதல் உந்துதலையே செய்யமுடியாமல் மூழ்கியிருக்க நீர் என்னை விநாடிகளுக்குள் நான் இருந்த இடத்திலிருந்து பல அடிகளுக்கு இழுத்துச்சென்றிருந்தது. கத்தலாமா? மனம் அடித்துக்கொண்டது. விநாடிகளிலேயே எண்ணங்கள் சுழன்றது. இன்னும் சில அடிதூரத்தில் ஆழம் குறைவான இடம் தட்டுப்படலாம், எப்படியும் மக்கள் ஆற்றைக்கடக்கும் இடத்தில் ஆழம் குறைவாக இருக்கும். அங்கே நிலைப்படுத்திக்கொண்டால் மீண்டும் வந்த வழியிலேயே பாதுகாப்பாக வந்து துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். இனி யாரும் துணையில்லாமல் இப்படி வரக்கூடாது. இல்லை, அதற்கெல்லாம் அவகாசமில்லை, கத்து.. கத்து.! முடியவில்லை, தண்ணீர் நான் விரும்பாமலே பல மிடறுகள் வயிற்றுக்குள் செல்ல, குபுக்கென்று ஒரு மிடறு மூக்கு வழியாக நுரையீரலை அடைந்தது. என் உலகமே நீரில் மூழ்கி, அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது.

அடுத்த விநாடியே ஒரு கை என் பிடறியில் அடிக்கும் வேகத்தோடு தலைமுடியைப் பிடித்து இழுத்ததை அறிந்தேன். அடுத்த நிமிடத்தில் மண் திட்டின் துவக்கத்தில் கிடந்தேன். அந்த இளம்பெண் கேட்டாள்,

“அணையில தண்ணி தொறந்து விட்டுருக்காங்களே, தண்ணியப்பாத்தா தெரியலையா லூசு, யார்டா நீ?”

நான் பதிலேதும் சொல்லாமல் எழுந்தேன். அவளும் பதிலை எதிர்பார்த்தது போல தெரியவில்லை. கொண்டு வந்த துணிகளை நனைத்து துவைக்க ஆரம்பித்தாள். எழுந்து நான் துணிகளைப் போட்ட இடத்திற்கு செல்லலானேன். நன்றி என்ற சொல்லுக்கான அர்த்தம் அந்த வயதில் எனக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. அவளிடம் அதை நான் சொல்லவில்லை.


ப்பா சொன்ன டெய்லர் கடையில் துணியை தைக்கக் கொடுத்து அளவும் கொடுத்துவிட்டு டவுண் பஸ் வரும் பஸ்ஸ்டாண்டுக்குள் நுழைந்தேன். ஊருக்குச்செல்ல எந்த பஸ் என்று நன்றாகத் தெரியும். 34, 34A, ஆகியன பஸ் எண்கள். வரவில்லையென்றால் 130 பிடிக்க ரூட் பஸ்ஸ்டாண்டுக்குத்தான் போகவேண்டும். அம்மா எத்தனை தடவைகள் சொன்னாலும் இந்த பஸ்கள் வரும் நேரம்தான் நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது.

சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்தபோது திடுக்கிட்டேன். அவசரமாக ட்ரவுஸரின் இரண்டு பைகளையும் துளாவினேன். இல்லை. மனம் படக் படக்கென அடித்துக்கொண்டது. இருந்த 5 ரூபாய்த் தாளைக் காணவில்லை. மாலை ஏழு மணியாகியிருந்தது. பகல் முடிந்துவிட்டது. இது ராத்திரி, பயம் மனதைக் கவ்வியது.

எத்தனை பஸ்கள், எத்தனை மனிதர்கள், எத்தனைக் கடைகள்.. திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் மொத்த பரபரப்பும் ஒரு பெரிய பூதத்தைப் போல என் முன் விரிந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. என்ன செய்வது.? பாளையங்கோட்டையில் பிரேமா சித்தி வீடு இருக்கிறதல்லவா? அங்கு நடந்தே போய்விட்டால் என்ன.. ஆனால் அவர்கள் வீட்டுக்கு எப்போதோ போனதல்லவா? வீடு எங்கே இருக்கிறது? போனால் வீட்டை அடையாளம் கண்டுபிடித்து விடமுடியுமா? அதுவும் நடந்தே.. கண்ணில் நீர் தளும்பியது.

ஊரில் சுந்தரபாண்டியன் மாமா வீட்டில் போன் இருக்கிறதே.. அங்கு போன் செய்து வீட்டுக்குத் தகவல் சொன்னால்? போன் பண்ண பணம்? அப்படியே போன் செய்தாலும் அப்பாவை நினைத்தால் பயம் குப்பென்று பரவியது. சுந்தபாண்டியன் மாமா வீட்டுக்கும் நமக்கும் எவ்வளவு பெரிய பகை இருக்கிறது.?

திரும்பவும் எங்கே செல்வது எனத் தெரியாமல் நடக்க ஆரம்பித்தேன். யாரைப்பார்த்தாலும் பயமாக இருந்தது. மீண்டும் நியூஸ்டைல் டெய்லர் கடைக்கே கால்கள் சென்றன. கடை வாசலில் நின்று அப்பாவுக்குத் தெரிந்த அந்த டெய்லர் இருக்கிறாரா என்று பார்த்தேன். சில மெஷின்களில் யார் யாரோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர் இல்லை. வீட்டுக்குப்போயிருப்பாரோ? அங்கேயே நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் தெரியவில்லை.

தோளில் ஒரு கை விழுந்தது. “என்ன தம்பி ரொம்ப நேரமா நின்னுக்கிட்டிருக்க? அப்பத துணி கொடுத்துட்டு போனவன்தான நீ?” அந்தக் கடையில் இருக்கும் இன்னொரு டெய்லர் என நினைக்கிறேன்.

“ஆமா, டெய்லர் மாமா இல்லையா?”

“அவர் வீட்டுக்குப்போயிட்டாரே, இனிமே நாளைக்குதான் வருவார். உனக்கு என்ன வேணும், அவருகிட்ட ஏதாவது சொல்லணுமா”

அழுகை முட்டிக்கொண்டு வர தயக்கத்தில் வார்த்தைகள் வெளிவரவே தயங்கின,

“ஒண்ணுமில்ல, ஊருக்குப்போணும்.. ரூவாய.. தொலைச்சிட்டேன்..”

சிரித்துக்கொண்டே, “இது போதுமா?” என்றபடியே பையிலிருந்து ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்துத்தந்து விட்டு திரும்பவும் கடைக்குள் போய்விட்டார்.

அப்போதும் நன்றி என்ற சொல் மனதுக்குள்ளேயே புதைந்துபோய்விட்டது, வெளிவரவேயில்லை.


ன்று சனிக்கிழமை இரவு 12 மணி. நாளை விடுமுறை. இன்னும் ஒரு நாள்தான் திங்கள் கிழமை பயிற்சி வகுப்பின் கடைசி நாள். அன்று மாலையே ஊருக்குக் கிளம்பிவிடலாம். இப்போது இந்தப் பெரிய ஹாஸ்டலின் டாய்லெட் காரிடாரில் விழுந்துகிடக்கிறேன்.

கோயமுத்தூரின் ஒரு பெரிய கல்லூரியின் ஹாஸ்டல். கல்லூரியுடன் இணைந்த ஒரு பெரிய வளாகத்தில் அமைந்திருந்தது. அது விடுமுறைக்காலம் என்பதால் யாருமே இல்லை. விடுமுறைக்கால பயிற்சியில் கலந்துகொள்ள ஒரு நிறுவனத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கும் அந்த விடுதில் நானும் திருச்சியிலிருந்து வந்த ஒரு மாணவனும் ஆக இருவர் மட்டும் ஒரு வாரமாக தங்கியிருக்கிறோம். அவனும் ஊரில் அவசர வேலையிருப்பதாகவும், திங்கள் காலை நேரே வகுப்புக்கு வந்துவிடுவதாகவும் கூறிவிட்டு இன்று மாலையே கிளம்பிவிட்டான். அவனுடன் பஸ்ஸ்டாண்ட் வரை சென்றிருந்தேன்.

அப்போதுதான் கேட்டான், “என்னங்க.. எவ்ளோ பெரிய கேம்பஸ் ஹாஸ்டல், ராத்திரி தனியா இருந்துக்குவீங்களா? பயமா இருக்காதா?”

சிரித்தேன். அப்போதுகூட நன்றாகத்தான் இருந்தேன். ஊரிலிருந்தும், பிரதான சாலைகளிலிருந்தும் தூரமாக இருந்தது இந்த ஹாஸ்டல். சுற்றிலும் கடைகளோ, மருத்துவமனைகளோ எதுவுமே இல்லை. வரும் வழியில் சாப்பிட்டதுதான் சரியில்லை என நினைக்கிறேன். முதல் தடவை வாந்தியெடுத்து, டாய்லெட் சென்று வந்தபோது கூட ஒரு இரவுதானே சமாளித்துவிடலாம், ரொம்ப முடியாவிட்டால் காலையில் ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போய்க்கொள்ளலாம் என நினைத்தேன். பெரிய மடத்தனம்.

10 மணிக்குப் பிறகு மூன்று முறை வாந்தியும், ஐந்தாறு தடவைகள் டாய்லெட்டுக்கும் போய்விட்டேன். காரிடாரின் இந்த மூலையிலிருந்த அறைக்கும் அந்த மூலையிலிருந்த டாய்லெட்டுக்கும் கூட நடக்கமுடியாமல் டாய்லெட்டின் கதவருகேயே விழுந்துகிடந்தேன்.

ஹாஸ்டலுக்கு முன் நிறைந்திருந்த பெரிய பெரிய மரங்களும் மெல்லிய நிலவொளியும் சுகமான தென்றலும் அந்த நள்ளிரவில் அவ்வளவு ரம்மியமாக இருந்த சூழலை பிரிதொரு சமயமாக இருந்தால் சில சிகரெட்டுகளுடன் உள்வாங்கி பத்திரப்படுத்தியிருப்பேன். இப்போது எதையுமே உணரமுடியாமல் இருந்தேன். எழுந்து அறைக்குச்செல்ல முயன்று வாழ்க்கையில் முதன்முறையாக மயக்கம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பில் காரிடாரின் இடதுபுறத்திட்டைப் பிடிக்கமுயன்று தோற்று சரிந்திருந்தேன்.

முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படும் உணர்வில் விழித்தபோது ஒரு மெலிந்த வயதான மனிதர் என்னைத் தூக்கும் முயற்சியிலிருந்தார். நானும் அவரைப் பிடித்துக்கொண்டு எழுந்தேன். அவர் அந்த வளாகத்தின் இரவுக்காவலர்.

“என்னாச்சு தம்பி? நான் கூட முதலில் தூங்கறீங்களோன்னு எழுப்பிப்பார்த்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது. அதான் தண்ணியத்தெளிச்சேன்.. என்ன செய்யுது உடம்புக்கு?”

சொன்னேன். இந்த ராத்திரியில் எந்த மருத்துவமனைக்கு எங்கு போவது? இப்படியே படுத்துவிடுகிறேன். காலையில் போய்க்கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு படுக்கையில் விழுந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் திறந்துகிடந்த அறைக்குள் நுழைந்து தூங்கியிருந்த என்னை எழுப்பினார். அவர் கைகளில் இரண்டு மாத்திரைகளும், ஒரு பிரெட் துண்டும், ஒரு டொரினோ பாட்டிலும் இருந்தது.

வறண்டு போன அந்த வேளையில் குடித்த அந்த டொரினோவின் சுவையை இந்த வாழ்க்கை முழுதும் என்னால் மறக்கயியலாது. திங்கள் கிழமை மாலை பேக்கை எடுத்துக்கொண்டு ஊருக்குக்கிளம்பி வெளியேறியபோது வாயிலில் அவரைத் தேடினேன். இந்த முறை நன்றியை மனமார சொல்லும் வயதிலிருந்தேன் நான். அதை பெற்றுக்கொள்ளத்தான் அந்த வயதான மனிதர் அங்கிருக்கவில்லை.


வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது.

நினைவுகளின் ஆழத்தில்.. உறைந்திருக்கும் சொல்லப்படாத சில நன்றிகள்.!

.

Tuesday, March 16, 2010

கண்ணனும் மீராவும்

கொஞ்ச நாளாகவே கண்ணன் பற்றிய தகவல்கள் ஏதும் நமது பதிவுகளில் பார்த்திருக்கமாட்டீர்கள்.. அதான் ஏன்னு கேட்கிறீர்களா? சொல்றேன். அவன் கொஞ்சநாளா ரொம்ப பிஸியா இருந்தான், அதான் எழுதமுடியலை. (எப்பிடி நம்ம லாஜிக்.? ஹிஹி..) கண்ணனுக்கு சமீபத்தில்தான் கல்யாணம் ஆனது. அதுவும் ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த லவ் மேரேஜ் என்பதால் 'கண்ணன் கதை' என்ன, 'கண்ணன் நாவலே' எழுதலாம் என்ற அளவுக்கு சுவாரசியங்கள். அதைப்பற்றி மெதுவாகப் பார்ப்போம். பரபரப்பு, சண்டை, சச்சரவு, விருந்து மருந்தெல்லாம் ஓய்ந்து, ஓஞ்சு போனபிறகு வீட்டுக்குக் கூப்பிடலாம் என பிளான் செய்திருந்தோம். அதன் படி கண்ணனையும், மீராவையும் போன வாரம் ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு அழைத்திருந்தோம்.

சுபா உய் உய்யென கத்தியபடியே சுவரில் எனது புதிய பால் பாயிண்ட் பேனாவால் முட்டை முட்டையாய் வரைந்து கொண்டிருந்தான். தடுத்தால் 'ஒரு சூறாவளி கிளம்பியதே..' ரேஞ்சுக்கு படுத்திவிடுவான். பிடிவாதத்தில் அப்படியே அம்மா எங்கே என்று வந்திருக்கிறான். அவன் ஒன்றைச்செய்யும் போது தடுத்தாலோ, கேட்டபொருள் கொடுக்கப்படாவிட்டாலோ வீடு ரெண்டாகிவிடுகிறது. இருப்பது பத்தாதென்று அவனும் முடிந்த அளவுக்கு எங்களுக்கிடையே தகறாறு உண்டுபண்ணிக்கொண்டிருந்தான். பேனாதானே போனால் போகிறது வெங்காயம் என்று அழுதுகொண்டே வெங்காயம் அரிந்துகொண்டிருந்தேன்.

ரமா கிச்சனில் மும்முரமாக இருந்தார். "முட்டைக்குழம்பு வைக்கிறியாம்மா?" என்று ஐடியா கொடுத்து, "முட்டை யாருக்கு? உங்களுக்கா.. கொலஸ்ட்ரால் எங்கயிருக்குன்னு தெரியும்ல.. அதோட விருந்துக்கு கூப்பிட்டு புளிக்குழம்பு, முட்டைக்குழம்புன்னு யாராவது பண்ணுவாங்களா? சாம்பார்தான்.." என்று பதில் வாங்கிக்கட்டிகொண்டேன்.

மீராவைப்பற்றி பேச்சு வந்தது. "அவ எப்பிடிங்க சமைக்கிறாளாம்?"

"எனக்கு என்ன தெரியும்? கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போகவேயில்லையே.."

"நீங்க கண்ணன்ட கேட்டிருப்பீங்களே.."

"ஆமா, இதான் எனக்கு வேல பாரு? அவனே குடும்பத்து ஆளுகள சமாளிக்கிறது பத்தாதுனு அவளயும் வேற சமாளிச்சி ஓஞ்சி போய் கிடப்பான்.. நாங்க பேசியே ரொம்ப நாளாவுது"

"வேலைக்காங்க போறா?"

"ஆமா, இந்த பிரச்சினைக்காக கொஞ்ச நாள் ரிசைன் பண்ணிருந்தா.. இப்ப திரும்பவும் ஜாயின் பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன்"

அவர்கள் இருவரும் பைக்கில் 11 மணிவாக்கில் வந்து சேர்ந்தார்கள். வந்ததிலிருந்து சுபாவை தூக்கிவைத்துக்கொண்டு அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். வெளியாள் யாரும் வந்தால் ஏதோ உலகத்திலேயே ஒழுக்கமான பிள்ளை என்பது போல சாந்த சொரூபியாய் இருப்பவன், ஏதோ அதிசயமாக மீராவுடன் சேர்ந்துகொண்டான். புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு அவளிடம் படம் பார்த்து பெயர் சொல்லிக்கொண்டிருந்தான். "பலோம்" (பழம்), "நாயி" (நாய்), "மியோ" (பூனை), "ஞானி" (யானை).. என்று விளக்கங்கள் தொடர்ந்துகொண்டிருந்தது. சிரிப்பும், மகிழ்ச்சியும் பொங்க அவனோடு பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் அளவளாவலுடன் உணவு உண்டு முடித்தோம்.

"சாப்பாடு பிரமாதம்க்கா.. இந்தப்பச்சடி எப்படி வெச்சீங்க, சூப்பராயிருந்தது" மீரா ஒரு ஸ்விங்கரை லாவகமாக வீசினாள். ரமா கிளீன் போல்ட்.

நான் கண்ணனிடம் காதில் கிசுகிசுத்தேன். 'இப்பிடி அள்ளிவிடுறாளே, இதுக்குள்ள வீட்ல எல்லா பிரச்சினையும் சால்வாயிருக்குமே..'.

அவன் பதிலுக்கு கிசுகிசுத்தான், 'இப்பல்லாம் காய்கறி வாங்கவே அம்மாவும் இவளும் ஜோடி போட்டுக்கிட்டுதான் போறாங்கன்னா பாத்துக்கயேன்'.

கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு ஒத்தைக்கால்ல நின்னவங்க அவங்க அம்மா. நான் சொன்னேன், 'நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோடா..'

.

Sunday, March 14, 2010

விடுமுறைப்பயணம் : ஒரே பாகம்

திட்டப்படி முதலில் ஈரோடு பால்ய நண்பன் வீடு. குழந்தைப்பருவத்தை இருவரும் எவ்வாறெல்லாம் கழித்தோம் என்பது அலையலையாய் எழுந்தது மகிழ்ச்சியாய் அல்லது ஏக்கமாய். அவனை மனைவி, குழந்தைகுட்டிகளோடு பார்ப்பதுதான் எத்தனை மகிழ்ச்சி.

DSC08308

'வெளியே போய்ட்டு வர்றோம்மா கொஞ்ச நேரம்..' என்று அவளிடம் நான் சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பியபோது முகம் நிறைய சிரிப்புடன் 'சரிங்ண்ணா..' என்றவளின் கண்கள் அவனை நோக்கி 'கோக்கு மாக்கா வந்தீங்கன்னா, தெரியும் சேதி' என்று மிரட்டியதையும், இவன் பொட்டிப்பாம்பாக கண்ணாலேயே பதில் சொல்லிவிட்டு வந்ததையும் நான் கவனிக்கத்தவறவில்லை. அடங்காத வல்லூறாய்த் திரிந்தவன். சிரித்துக்கொண்டேன்.

*

மதியமே நண்பனின் வீட்டருகேயே இருந்த பதிவர் நண்பர் 'ஈரோடு கதிர்' அலுவலகத்துக்கு சென்றேன். அவரை சந்தித்து மகிழ்வுடன் பேசிக்கொண்டிருந்த சற்றைக்கெல்லாம் ஆரூரன் விஸ்வநாதன், க.பாலாசி தொடர்ந்து வால்பையன் ஆகியோர் வர அனைவருடனும் அளவளாவ முடிந்தது. கதிர், விஸ்வநாதன் ஆகியோர் பதிவுகளில் எப்படி சீரிய சிந்தனைகளோடு தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்களோ அவ்வாறே நேரிலும் உணரமுடிந்தது.

erode.jpeg

தொடர்ந்த சிறுவிருந்தில் நண்பர் கார்த்திக், ராதாமணாளன் ஆகியோர் கலந்துகொண்டனர். அன்றுமாலையே நான் திருப்பூர் கிளம்ப இருந்த நிலையைச்சொல்ல திருப்பூர் நண்பர்களைக் காணும் பொருட்டு உற்சாகத்தோடு கார்த்திக்கும், வால்பையனும் தங்கள் காரிலேயே என்னை டிராப் செய்துவிடுவதாகக்கூற எனக்கு டபுள் மகிழ்ச்சி.

*

நீண்ட பயணத்தில் ராதாமணாளனை அவரது ஊரில் டிராப் செய்துவிட்டு திருப்பூரை நாங்கள் அடைந்தோம். விடுதிக்குச் செல்லுமுன்பே வழியில் மடக்கியது பரிசல், முரளிகுமார், செந்தில் கூட்டணி. அதில் முரளிகுமார் மட்டும் இரவு விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லிப்போவதற்காகவே காத்திருந்திருக்கிறார். அவர் கிளம்பி விட மற்ற அனைவரும் வெயிலானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதி அறைக்குச் சென்றோம். சிறிது நேரத்துக்கெல்லாம் வெயிலான் வந்துவிட பேரரசன் மற்றும் சில பதிவர்களும் கலந்துகொள்ள விருந்து விடிகாலை வரை நீண்டது. பூபதி, தினேஷ் ஆகிய பதிவரல்லாத நண்பர்கள் விருந்தை கலகலப்பாக்கினர். நள்ளிரவில் திருப்பூரின் ஓரிடத்தில் கிடைக்கும் சூடான பொங்கலின் சிறப்பை செந்தில் நினைவுகூர்ந்து பெருமைப்பட்டுக்கொள்ள நான் ஜொள்ளுடன் 'எங்கே, வாங்கி வாருங்கள் பார்க்கலாம்' என்று தூண்டிவிட்டேன். பின்னர் மறுத்தும் கேட்காமல்  சொன்னதை நிரூபித்தார். நன்றி செந்தில்.

*

மறுநாள் கிளம்புகையில் அன்புக்குரிய நண்பர் சாமிநாதன் வந்து சந்தித்தார். பின்னர் பரிசல், வெயிலானுடன் எண்பதுகளின் டிபிகல் டச் புகைப்படத்தை எடுத்துக்கொண்டேன்.

DSC08357

அடுத்து பரிசலின் வீட்டில் காலை உணவு ஆனால் உண்டது மதியவேளையில். எழுந்தது அந்த லட்சணத்தில். பரிசலின் பெண்பிள்ளைகள் அவ்வளவு அழகு. மிஸஸ் பரிசலை பார்த்த பின்னர்தான் அந்த அழகு எங்கிருந்து வந்திருக்கிறது என்று விளங்கிக்கொண்டேன். மேலும் பரிசல் பணியாற்றும் தொழிற்சாலை விசிட்டும் மேற்கொள்ளப்பட்டது. ஆயத்த ஆடை உற்பத்தியைப்பற்றி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

*

கோவையின் பேருந்து நிலையத்தில் காத்திருந்து பைக்கில் என்னை அள்ளிச்சென்றது அன்புக்குரிய சஞ்சய். அங்கிருந்து நாங்கள் சென்றோம்.. சென்றோம்.. கோவையையே தாண்டி ஒரு சிற்றூரில் ஒளிந்துகொண்டிருந்த அண்ணாச்சி வடகரை வேலன் வீட்டுக்கு. அப்படியே கிராமங்களின் விழாக்காலங்களை நினைவூட்டும் கறிக்குழம்பும், உளுந்தஞ்சோறும் மணக்க மணக்க. உண்டு முடித்து மூவரும் கிளம்பியது நண்பர் செல்வேந்திரனின் புதிய அறைக்கு (இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த அறை வீடாக மாறிவிடும்). போகும்போதே தயாராக பூஜைப்பொருட்களுடன் சென்றதால் உடனேயே அடுத்த விருந்து துவங்கியது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவமாய் இருந்தது அன்றைய இளநீருடன் காக்டெயில். நன்றி அண்ணாச்சி.

*

சற்று நேரம் வேலன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது (அதாவது பிளாட் ஆகிவிட்டபோது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்) நானும் செல்வேந்திரனும் அடுத்து வரும் வருடங்களில் மருதூர் மாசனமுத்துவிற்குப்பிறகு ஆளற்றுப்போய் வதங்கியிருக்கும் தமிழ் சிறுகதை உலகத்தை இருவரும் சேர்ந்து எப்படி ஆளப்போகிறோம் என்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் பல திட்டங்கள் இருக்கின்றன போலத் தெரிகிறது.

Kovai 

*

பின்னர் விரைந்து கழிந்தன சேரன்மாகாதேவி, மணிமுத்தாறு, பாளையங்கோட்டை என அழகிய விடுமுறை நாட்கள். சுபாவுடன் அப்பாவின் பழைய காலத்து டக்குமோட்டாரில் வயலுக்குப் போய்விட்டு திரும்பியபோது எடுத்த படம்.

MOV08769_0001 

சம்பவங்கள் நிகழ்ந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் பதிவர்சந்திப்புகளில் நினைவில் இருந்ததை மட்டுமே எழுதியுள்ளேன். ஆனாலும் நீங்க ரொம்பத்தான் ஸ்பீடு என்று பின்னூட்டம் போடக்கூடாது. அது தெரிஞ்சதுதானே.!! விடுமுறைநாட்களில் எடுத்த நெல்லை மண்ணின் இயற்கைக்காட்சிகளின் ஒரு சிறிய விடியோ தொகுப்பு இதோ உங்களுக்காக..

*

Friday, March 12, 2010

ஐஸ்..!

இன்று காலை வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்திற்குள் நுழைந்தேன். வழக்கமான அதே உடைதான், பாலிஷ் பார்த்து மாதங்கள் ஆகிவிட்ட அதே ஷூக்கள்தான். பிரச்சினைகளின் தீவிரம் இன்னும் குறையவில்லை, அந்த டென்ஷனும் முகத்திலிருக்கிறது. வியர்த்து வழிந்ததற்கான காரணம் பைக் பஞ்சராகிவிட்டதால் மெயின் ரோட்டிலிருந்து உள்ளே அரை கிலோமீட்டர் நடந்து வந்தேன். அறைக்குள் வந்த போது ஏசி வேலை செய்யவில்லை. சந்தைக்கடை போல பொருட்கள், ஆட்கள், பிரச்சினைகள். ..

சிறிது நேரத்தில் டீ குடிப்பதற்காக வெளியே வந்தேன். ஒரு போன் வந்ததால் ஆ.:பீஸுக்கும் கேண்டீனுக்கும் நடுவிலிருக்கும் மரநிழலில் ஒதுங்கினேன். அப்போது ஒரு புதிய டெக்னீஷியன் என்னை நெருங்கி 'ஒரு கேஸ்டிங்கில் சந்தேகமா இருக்குது. நீங்க பாத்துட்டீங்கன்னா நல்லது' என்றார். சரி வாங்க போகலாம் என்று போனில் பேசிக்கொண்டே அவ‌ருட‌ன் சென்றேன். அவ‌ருக்கு 20 வ‌ய‌திருக்க‌லாம். அவ‌ர் என்னை மேலும் கீழும் பார்க்கிறார், லேசாக‌ புன்ன‌கைக்கிறார். இத‌ற்கு முன்ன‌ரும் க‌வ‌னித்திருக்கிறேன். தூர‌த்தில் இருந்து கூர்மையாக அவர் க‌வ‌னிப்ப‌தை நான் க‌வ‌னித்திருக்கிறேன். என்ன‌ பிர‌ச்சினை ந‌ம்மிட‌ம் இன்று? ஸிப் போடவில்லையா? செக் பண்ணிக்கொண்டேன். நேர‌மின்மையால் முடிகூட‌ வெட்டிக்கொள்ளாத‌தால் ரொம்ப‌தான் க‌ண்றாவியாகி விட்டோமோ? என்று நினைத்துக்கொண்டு அவ‌ரிட‌மே கேட்டுவிட்டேன், 'என்ன‌ த‌ம்பி, ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறீங்க‌?'

"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"

ட‌மால்...!


(எங்கேயும் தட்டுப்படாமல் இருப்பதிலேயே உணர்ந்திருப்பீர்கள். கொஞ்சம் பிஸி. அதான் மீள்பதிவு, அதிலும் ஒரு நியாயம் வேண்டும் என்பதால்தான் இப்படி ஒரு குட்டிப்பதிவு. விரைவில் சந்திப்போம்)

.

Monday, March 8, 2010

நான் கட்டபொம்மன் -விடியோ

விடுமுறைப் பயணத்தில் சிக்கிய ஒரு கியூட் விடியோ.. உங்களுக்காக.!

Wednesday, March 3, 2010

அவன் பெயர் மீரா கதிரவன்

சமீபத்தில் ஒரு நாள் கண்ணனிடம் இருந்து போன் வந்தது. மானேஜர் கூப்பிட்டாக்கூட 5 நிமிஷம் கழிச்சுப்போகலாம், இவன் கூப்பிட்டுப்போகலைன்னா டான்ஸ் ஆடிவிடுவான். வீட்டுக்குப்போனால் தாடி வைத்த ஒரு அழகான நபருடன் பேசிக்கொண்டிருந்தான். நான் போகவும் 'இவன்தான் பிரபல பிளாகர் ஆதி' என்று வேண்டுமென்றே 'பிரபல'வை அழுத்திச்சொல்லி அறிமுகம் செய்துவைத்தான். கடுப்பாகும் போதே அடுத்து 'இது யாருன்னு சொல்லு பாக்கலாம்' என்று கேள்வி வேறு. எனக்குப் பிடிக்காததையே செய்வதில் பரம திருப்தியடையும் இரண்டாவது நபர்.

ஹிஹி என்று நான் இளித்துக்கொண்டிருக்கும்போதே ரொம்ப சிரமம் வைக்காமல் 'நான் மீரா கதிரவன்' என்று சிரித்தார் அவர். அட, எத்தனை தடவை போனில் பேசியிருக்கிறோம் என்று பின்னர் சகஜமானேன். அவர் இதோ வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் இயக்குனர். அவர் கையில் ஒரு சிடி இருந்தது. ஆஹா.. படம் வெளியாகும் முன்பே பார்த்துவிடலாம், அதுவும் தியேட்டர் அலைச்சல், செலவு இல்லாமலேயே என்று நான் மகிழவும், 'முதல்ல படத்தை பார்த்துடலாம், அப்புறம் பேசுவோம்' என்று கண்ணன் சொல்லவும் ஆர்வமாகித்தலையாட்டினேன்.

ஒரு அழகிய 5 நிமிடங்கள். அதற்குள் முடிந்துபோய்விட்டது. அதானே பார்த்தேன்.. பில்ட் அப் இல்லாமல் என்னைக்கு நாம் நினைத்தது நடந்திருக்கிறது.? அவர் கொண்டு வந்திருந்தது ட்ரெயிலர்தான். இவங்கள்லாம் படம் தியேட்டர்ல ரிலீஸாகுறதுக்கு முன்னால் லவ்வருக்குக்கூட படத்தைப் போட்டுக்காண்பிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அவ்வளவு அழுத்தம். நிறைய பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே இந்தப்படத்திற்காக படம் துவங்கப்படும் முன்பே முன்னால் மீரா எடுத்த இதே படத்துக்கான முன்னோட்டத்தைப் பார்த்திருக்கிறேன். 10 நிமிடங்கள் ஓடும் அதிலேயே பல ஆச்சரியங்கள் நிறைந்திருந்தன. ஒரு முன்னோட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட கடும் உழைப்பே என்னை வியக்கச்செய்தது. சினிமா எளிய வேலை அல்ல. மீரா ஒரு எழுத்தாளர், சிறுகதைகள் எழுதியிருக்கிறார். லோகித்தாஸிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த அவரது அன்புக்குரிய சீடர்களில் முக்கியமானவர். பாலுமகேந்திராவின் நண்பர். அவரது பல படங்களின் திரைக்கதைப் புத்தகங்களை உருவாக்கியவர் மீராகதிரவனே.

meera

சில வருடங்களுக்கு முன்னமே துவக்கப்பட்ட பிராஜக்ட் 'தமிழரசி'. சரியான நேரத்தில் பணிகள் நிறைவடைந்திருந்தால் நாம் பாராட்டிய பல படங்களுக்கு முந்தைய படமாக இது இருந்திருக்கும். படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் காதல், பயணம் குறித்து டிரெயிலரிலிருந்து முழுமையாக அறிந்துகொள்ளமுடியவில்லை எனினும் பெய்த அதிகாலை மழையின் ஈரம் காயாமலேயே திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தை உயிர்த்தன்மையோடு திரையில் மொழிபெயர்த்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம். இலக்கியப்பரிச்சயமும், தொடர்பங்களிப்பும், இயல்பு சினிமாவின் மீதான நம்பிக்கையும் கொண்டவர்களின் வரவு மகிழ்வான சேதி. நாடோடிகள், பசங்க.. போன்ற வெற்றிப்படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம்பெறவேண்டும் என்பது நம் ஆசை. அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் இயல்பான சினிமாக்களின் வரவு பெருகி ஆரோக்கியமான சூழல் உருவாகும்.

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்கயிலாத இடத்தைப்பெற மீரா கதிரவனுக்கு நம் வாழ்த்துகள்.

தமிழரசியின் இசை குறித்து நண்பர் கார்க்கியின் ஒரு பதிவைக் காணுங்கள்.

படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பேட்டிகள் மற்றும் படம் குறித்த தகவல்களுக்கு படத்திற்கான இந்த பிரத்யேக வலைப்பூவுக்கு செல்லுங்கள்.

பி.கு : படத்தின் முழு தலைப்பு கேப்ஷனுடன் சேர்த்து 'அவள் பெயர் தமிழரசி, வயது 18 மாநிறம்' என்பதாகும். கிளம்புகையில் கண்ணன் கேட்டான், "அடுத்து நாம ஒரு குறும்படம் எடுக்கலாமாடா? பெயர் கூட முடிவு பண்ணிட்டேன்.. 'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."

.