Wednesday, March 17, 2010

நினைவுகளின் ஆழத்தில்..

நடப்பு வெள்ளிநிலா மாத இதழில் வெளியாகியுள்ள‌ நினைவோடை இது. அதைக் கண்டிராத நண்பர்களுக்காக இங்கே மீண்டும்..


ண்ணீரில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நல்ல மதிய நேரமென்பதால் ஆற்றங்கரையில் குளிக்கும் ஆட்களோ, துவைக்கும் பெண்களோ யாருமே இல்லை. ஆற்றின் மறுபுறம் இருக்கும் மருதூருக்குச் செல்ல அதிகபட்சம் மார்பளவு நீரில் கடந்துசெல்லும் ஆட்கள் யாரும் கூட காணப்படவில்லை.

சைக்கிளை கரையிலிருக்கும் அந்தப் பிள்ளையார் கோவில் சுவற்றில் சாய்த்து நிறுத்தினேன். குளிக்க வசதியான ஆற்றின் நடுவே ஒரு தீவைப்போல இருக்கும் மண் திட்டுக்குச் சென்றேன். வழக்கமாக குளிக்கும் இடம்தான், திட்டின் மேற்குப்புறமாக இரண்டு பாறைகளுக்கு நடுவே போதுமான ஆழத்தில் தெளிவான, ஓடும் நீரில் உள்ளம் நனைய குளிக்கலாம். உடைகளையும் சோப்பையும் பாறைக்கு மேல் வைத்துவிட்டு துண்டை உடுத்திக்கொண்டு ஆற்றில் இறங்கினேன். இந்த சுடும் மதிய நேரத்தில் நீரின் மேலோட்டமான வெம்மையைக் கடந்து உள்ளே குளிர் ஜில்லிட்டது.

தண்ணீரில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், மார்பளவு ஆழம் குளிக்க சுகமானது. பாறையிலிருந்து ஐந்தடி தூரத்தில்தான் இருந்திருப்பேன். அடுத்த ஒரு அடியை வைத்தபோது காலுக்கடியில் பூமி இல்லை. தவறு செய்துவிட்டாய், திரும்பிவிடு ஒரு அடி பின்னே.. மூச்செடுத்துக்கொண்டு நீந்து பாறையை நோக்கி... இல்லை, நீந்துவதற்கான முதல் உந்துதலையே செய்யமுடியாமல் மூழ்கியிருக்க நீர் என்னை விநாடிகளுக்குள் நான் இருந்த இடத்திலிருந்து பல அடிகளுக்கு இழுத்துச்சென்றிருந்தது. கத்தலாமா? மனம் அடித்துக்கொண்டது. விநாடிகளிலேயே எண்ணங்கள் சுழன்றது. இன்னும் சில அடிதூரத்தில் ஆழம் குறைவான இடம் தட்டுப்படலாம், எப்படியும் மக்கள் ஆற்றைக்கடக்கும் இடத்தில் ஆழம் குறைவாக இருக்கும். அங்கே நிலைப்படுத்திக்கொண்டால் மீண்டும் வந்த வழியிலேயே பாதுகாப்பாக வந்து துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். இனி யாரும் துணையில்லாமல் இப்படி வரக்கூடாது. இல்லை, அதற்கெல்லாம் அவகாசமில்லை, கத்து.. கத்து.! முடியவில்லை, தண்ணீர் நான் விரும்பாமலே பல மிடறுகள் வயிற்றுக்குள் செல்ல, குபுக்கென்று ஒரு மிடறு மூக்கு வழியாக நுரையீரலை அடைந்தது. என் உலகமே நீரில் மூழ்கி, அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது.

அடுத்த விநாடியே ஒரு கை என் பிடறியில் அடிக்கும் வேகத்தோடு தலைமுடியைப் பிடித்து இழுத்ததை அறிந்தேன். அடுத்த நிமிடத்தில் மண் திட்டின் துவக்கத்தில் கிடந்தேன். அந்த இளம்பெண் கேட்டாள்,

“அணையில தண்ணி தொறந்து விட்டுருக்காங்களே, தண்ணியப்பாத்தா தெரியலையா லூசு, யார்டா நீ?”

நான் பதிலேதும் சொல்லாமல் எழுந்தேன். அவளும் பதிலை எதிர்பார்த்தது போல தெரியவில்லை. கொண்டு வந்த துணிகளை நனைத்து துவைக்க ஆரம்பித்தாள். எழுந்து நான் துணிகளைப் போட்ட இடத்திற்கு செல்லலானேன். நன்றி என்ற சொல்லுக்கான அர்த்தம் அந்த வயதில் எனக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. அவளிடம் அதை நான் சொல்லவில்லை.


ப்பா சொன்ன டெய்லர் கடையில் துணியை தைக்கக் கொடுத்து அளவும் கொடுத்துவிட்டு டவுண் பஸ் வரும் பஸ்ஸ்டாண்டுக்குள் நுழைந்தேன். ஊருக்குச்செல்ல எந்த பஸ் என்று நன்றாகத் தெரியும். 34, 34A, ஆகியன பஸ் எண்கள். வரவில்லையென்றால் 130 பிடிக்க ரூட் பஸ்ஸ்டாண்டுக்குத்தான் போகவேண்டும். அம்மா எத்தனை தடவைகள் சொன்னாலும் இந்த பஸ்கள் வரும் நேரம்தான் நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது.

சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்தபோது திடுக்கிட்டேன். அவசரமாக ட்ரவுஸரின் இரண்டு பைகளையும் துளாவினேன். இல்லை. மனம் படக் படக்கென அடித்துக்கொண்டது. இருந்த 5 ரூபாய்த் தாளைக் காணவில்லை. மாலை ஏழு மணியாகியிருந்தது. பகல் முடிந்துவிட்டது. இது ராத்திரி, பயம் மனதைக் கவ்வியது.

எத்தனை பஸ்கள், எத்தனை மனிதர்கள், எத்தனைக் கடைகள்.. திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் மொத்த பரபரப்பும் ஒரு பெரிய பூதத்தைப் போல என் முன் விரிந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. என்ன செய்வது.? பாளையங்கோட்டையில் பிரேமா சித்தி வீடு இருக்கிறதல்லவா? அங்கு நடந்தே போய்விட்டால் என்ன.. ஆனால் அவர்கள் வீட்டுக்கு எப்போதோ போனதல்லவா? வீடு எங்கே இருக்கிறது? போனால் வீட்டை அடையாளம் கண்டுபிடித்து விடமுடியுமா? அதுவும் நடந்தே.. கண்ணில் நீர் தளும்பியது.

ஊரில் சுந்தரபாண்டியன் மாமா வீட்டில் போன் இருக்கிறதே.. அங்கு போன் செய்து வீட்டுக்குத் தகவல் சொன்னால்? போன் பண்ண பணம்? அப்படியே போன் செய்தாலும் அப்பாவை நினைத்தால் பயம் குப்பென்று பரவியது. சுந்தபாண்டியன் மாமா வீட்டுக்கும் நமக்கும் எவ்வளவு பெரிய பகை இருக்கிறது.?

திரும்பவும் எங்கே செல்வது எனத் தெரியாமல் நடக்க ஆரம்பித்தேன். யாரைப்பார்த்தாலும் பயமாக இருந்தது. மீண்டும் நியூஸ்டைல் டெய்லர் கடைக்கே கால்கள் சென்றன. கடை வாசலில் நின்று அப்பாவுக்குத் தெரிந்த அந்த டெய்லர் இருக்கிறாரா என்று பார்த்தேன். சில மெஷின்களில் யார் யாரோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர் இல்லை. வீட்டுக்குப்போயிருப்பாரோ? அங்கேயே நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் தெரியவில்லை.

தோளில் ஒரு கை விழுந்தது. “என்ன தம்பி ரொம்ப நேரமா நின்னுக்கிட்டிருக்க? அப்பத துணி கொடுத்துட்டு போனவன்தான நீ?” அந்தக் கடையில் இருக்கும் இன்னொரு டெய்லர் என நினைக்கிறேன்.

“ஆமா, டெய்லர் மாமா இல்லையா?”

“அவர் வீட்டுக்குப்போயிட்டாரே, இனிமே நாளைக்குதான் வருவார். உனக்கு என்ன வேணும், அவருகிட்ட ஏதாவது சொல்லணுமா”

அழுகை முட்டிக்கொண்டு வர தயக்கத்தில் வார்த்தைகள் வெளிவரவே தயங்கின,

“ஒண்ணுமில்ல, ஊருக்குப்போணும்.. ரூவாய.. தொலைச்சிட்டேன்..”

சிரித்துக்கொண்டே, “இது போதுமா?” என்றபடியே பையிலிருந்து ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்துத்தந்து விட்டு திரும்பவும் கடைக்குள் போய்விட்டார்.

அப்போதும் நன்றி என்ற சொல் மனதுக்குள்ளேயே புதைந்துபோய்விட்டது, வெளிவரவேயில்லை.


ன்று சனிக்கிழமை இரவு 12 மணி. நாளை விடுமுறை. இன்னும் ஒரு நாள்தான் திங்கள் கிழமை பயிற்சி வகுப்பின் கடைசி நாள். அன்று மாலையே ஊருக்குக் கிளம்பிவிடலாம். இப்போது இந்தப் பெரிய ஹாஸ்டலின் டாய்லெட் காரிடாரில் விழுந்துகிடக்கிறேன்.

கோயமுத்தூரின் ஒரு பெரிய கல்லூரியின் ஹாஸ்டல். கல்லூரியுடன் இணைந்த ஒரு பெரிய வளாகத்தில் அமைந்திருந்தது. அது விடுமுறைக்காலம் என்பதால் யாருமே இல்லை. விடுமுறைக்கால பயிற்சியில் கலந்துகொள்ள ஒரு நிறுவனத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கும் அந்த விடுதில் நானும் திருச்சியிலிருந்து வந்த ஒரு மாணவனும் ஆக இருவர் மட்டும் ஒரு வாரமாக தங்கியிருக்கிறோம். அவனும் ஊரில் அவசர வேலையிருப்பதாகவும், திங்கள் காலை நேரே வகுப்புக்கு வந்துவிடுவதாகவும் கூறிவிட்டு இன்று மாலையே கிளம்பிவிட்டான். அவனுடன் பஸ்ஸ்டாண்ட் வரை சென்றிருந்தேன்.

அப்போதுதான் கேட்டான், “என்னங்க.. எவ்ளோ பெரிய கேம்பஸ் ஹாஸ்டல், ராத்திரி தனியா இருந்துக்குவீங்களா? பயமா இருக்காதா?”

சிரித்தேன். அப்போதுகூட நன்றாகத்தான் இருந்தேன். ஊரிலிருந்தும், பிரதான சாலைகளிலிருந்தும் தூரமாக இருந்தது இந்த ஹாஸ்டல். சுற்றிலும் கடைகளோ, மருத்துவமனைகளோ எதுவுமே இல்லை. வரும் வழியில் சாப்பிட்டதுதான் சரியில்லை என நினைக்கிறேன். முதல் தடவை வாந்தியெடுத்து, டாய்லெட் சென்று வந்தபோது கூட ஒரு இரவுதானே சமாளித்துவிடலாம், ரொம்ப முடியாவிட்டால் காலையில் ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போய்க்கொள்ளலாம் என நினைத்தேன். பெரிய மடத்தனம்.

10 மணிக்குப் பிறகு மூன்று முறை வாந்தியும், ஐந்தாறு தடவைகள் டாய்லெட்டுக்கும் போய்விட்டேன். காரிடாரின் இந்த மூலையிலிருந்த அறைக்கும் அந்த மூலையிலிருந்த டாய்லெட்டுக்கும் கூட நடக்கமுடியாமல் டாய்லெட்டின் கதவருகேயே விழுந்துகிடந்தேன்.

ஹாஸ்டலுக்கு முன் நிறைந்திருந்த பெரிய பெரிய மரங்களும் மெல்லிய நிலவொளியும் சுகமான தென்றலும் அந்த நள்ளிரவில் அவ்வளவு ரம்மியமாக இருந்த சூழலை பிரிதொரு சமயமாக இருந்தால் சில சிகரெட்டுகளுடன் உள்வாங்கி பத்திரப்படுத்தியிருப்பேன். இப்போது எதையுமே உணரமுடியாமல் இருந்தேன். எழுந்து அறைக்குச்செல்ல முயன்று வாழ்க்கையில் முதன்முறையாக மயக்கம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பில் காரிடாரின் இடதுபுறத்திட்டைப் பிடிக்கமுயன்று தோற்று சரிந்திருந்தேன்.

முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படும் உணர்வில் விழித்தபோது ஒரு மெலிந்த வயதான மனிதர் என்னைத் தூக்கும் முயற்சியிலிருந்தார். நானும் அவரைப் பிடித்துக்கொண்டு எழுந்தேன். அவர் அந்த வளாகத்தின் இரவுக்காவலர்.

“என்னாச்சு தம்பி? நான் கூட முதலில் தூங்கறீங்களோன்னு எழுப்பிப்பார்த்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது. அதான் தண்ணியத்தெளிச்சேன்.. என்ன செய்யுது உடம்புக்கு?”

சொன்னேன். இந்த ராத்திரியில் எந்த மருத்துவமனைக்கு எங்கு போவது? இப்படியே படுத்துவிடுகிறேன். காலையில் போய்க்கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு படுக்கையில் விழுந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் திறந்துகிடந்த அறைக்குள் நுழைந்து தூங்கியிருந்த என்னை எழுப்பினார். அவர் கைகளில் இரண்டு மாத்திரைகளும், ஒரு பிரெட் துண்டும், ஒரு டொரினோ பாட்டிலும் இருந்தது.

வறண்டு போன அந்த வேளையில் குடித்த அந்த டொரினோவின் சுவையை இந்த வாழ்க்கை முழுதும் என்னால் மறக்கயியலாது. திங்கள் கிழமை மாலை பேக்கை எடுத்துக்கொண்டு ஊருக்குக்கிளம்பி வெளியேறியபோது வாயிலில் அவரைத் தேடினேன். இந்த முறை நன்றியை மனமார சொல்லும் வயதிலிருந்தேன் நான். அதை பெற்றுக்கொள்ளத்தான் அந்த வயதான மனிதர் அங்கிருக்கவில்லை.


வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது.

நினைவுகளின் ஆழத்தில்.. உறைந்திருக்கும் சொல்லப்படாத சில நன்றிகள்.!

.

35 comments:

ஈரோடு கதிர் said...

சொல்லாத நன்றிகள் மனதில் கனமாகவே... காலம் முழுதும்

மதார் said...

உங்கள் திகில் தண்ணீர் அனுபவம் மீண்டும் ஒருமுறை நான் தண்ணீரில் மாட்டி மீண்டு வந்த தருணங்களை நினைவூட்டின .

பணம் தொலைந்து போன அனுபவம் , எனக்கு இதுவரை வந்ததில்லை . நான் ஒரு மூன்று இடத்திலாவது பணத்தை பிரித்து வைத்தே எங்கும் செல்வது வழக்கம் .

நல்ல நடையில் ஒவ்வொன்றும் தெளிவாய் சொன்னவிதம் அருமை .

நன்றியைப் போல் ஒரு சிறந்த வார்த்தை உண்டா ? எனக்கும் இப்படி சொல்லாமல் விட்டா நன்றிகள் பல . இப்போ நன்றிதான் வாய்ல முதல்ல வருது .

தராசு said...

//வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது.//


உண்மை தல.

நெஞ்சைத்தொடும் பதிவு.

செந்தில் நாதன் said...

நன்றி தல..இது மாதிரி நானும் சொல்லாத சில நன்றிகள் இருக்கு. பத்திரமா மனசுக்குல பாதுகாத்து வெச்சுருக்கேன்..தனி இடுகையாவே போடுறேன் ஒரு நாள்..

மோனி said...

..//வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது//..

வழக்கம்போல டச்சிங்...

கார்க்கி said...

அப்போதெ படித்து மனதுக்குள் ஓ போட்டாச்சு

♠ ராஜு ♠ said...

நடை அசத்துது..!

பாபு said...

//வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது//

அருமையான வரிகள் ,நெகிழ்ச்சியான பதிவு

முகிலன் said...

நல்லா இருக்குங்க. எனக்கும் இது மாதிரி சில சொல்லாத நன்றிகள் இருக்கு..

வி.பாலகுமார் said...

நினைவுகளின் ஆழத்தில் உள்ளவற்றை அழகாக தொகுத்துள்ளீர்கள். கோர்வையான நடை.

வழிநெடுக பூத்துக் கிடக்கிறது வாழ்க்கை.

kavisankar said...

ஆதிண்ணே நன்றி சொல்லாமல் விட்டது ஒரு வகைக்கு நல்லதுதான். இல்லையென்றால் இந்த தருணங்கள் நினைவில் இருந்திருக்காது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது//

well said.

பதிவின் நடை மிகவும் பிடித்திருந்தது.

ஜீவன்சிவம் said...

எல்லோரையும் ஒரு கணம் யோசிக்க வைத்திருக்கும். யார் யாருக்கு நன்றி சொல்ல மறந்தோமோ வாழ்வில்.

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான நினைவோடை ஆதி.

ராம்ஜி_யாஹூ said...

அருமை, விட்டுப் போன நன்றிகள்.

தலை முடியை பிடித்து உயிரை காபாற்றியவரும், இரண்டு ரூபாய் கொடுத்து கவலையை போக்கியவரும் தானே கடவுள். இறைவனின் ரூபத்தை நாம் அவர்களிடம் தானே காண்கிறோம் (நன்றி - அன்பே சிவம் சினிமா).

ஆனால் முக்கூடல் கடையம் அம்பை பேருந்தில் ஏற நீங்கள் அவ்வளவு கவலை பட்டிருக்க வேண்டாம்.
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் தேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்
வீசும் முக்கூடல் பேருந்தில் நீங்கள் ஏறி இருந்தால்
சக பயணியே டிக்கெட் எடுத்து கூட்டி கொண்டு பொய் இருப்பார்.
.

நேசமித்ரன் said...

நெகிழ்ந்து நிலத்தில் வேர் பதித்து மூன்று கண்களுள் நீர் சுரக்கும் தாவரம்
ஆனேன் வாசித்து முடித்த தருணங்களில்...

வாசிப்பின்பம்!

சே.குமார் said...

நெஞ்சைத்தொடும் பதிவு.

க.பாலாசி said...

நன்றிகள்...

ராமலக்ஷ்மி said...

//வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது.//

அழகாய் சொன்னீர்கள். நேசமித்திரன் சொன்னது போலவே அருமையான ‘வாசிப்பின்பம்’. வாழ்த்துக்கள்!

சுசி said...

//நினைவுகளின் ஆழத்தில்.. உறைந்திருக்கும் சொல்லப்படாத சில நன்றிகள்.!//

நன்றி ஆதி.. ரொம்ப நன்றி..

ஆதிமூலகிருஷ்ணன் said...

கதிர்,
மதார்,
தராசு,
செந்தில்நாதன் (நிச்சயமா எழுதுங்க),
மோனி,
கார்க்கி,
ராஜு,
பாபு,
முகிலன்,
பாலகுமார்,
கவிசங்கர்,
அமித்துஅம்மா,
ஜீவன்சிவம்,
பாரா,
ராம்ஜி (நீங்கள் சொல்வது சரியே. தெரிந்தவர்கள் கூட அந்த பஸ்களில் இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் யோசிக்க இயலாத வயது),
நேசமித்திரன்,
குமார்,
பாலாசி,
ராமலக்ஷ்மி மேடம்,
சுசி..

அனைவருக்கும் நன்றி.!!

(ஹிஹி.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு உருப்படியான பதிவு எழுதிட்டனோ? தெரியாமப் பண்ணிட்டனோ?)

அன்புடன் அருணா said...

/வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது./
நிமிடத்தில் கடவுளாகும் மனிதர்கள்!

பழமைபேசி said...

நெகிழ்ச்சியோ நெகிழ்ச்சி!

KVR said...

Excellent one aathi

வானம்பாடிகள் said...

ஆஹா! one of your best boss.

சுரேகா.. said...

/வாழ்க்கை வழி நெடுக நல்மனிதர்களை நிறுத்தி வைத்திருக்கும் அற்புதத்தால்தான் அனைத்து மனிதர்களும் சில தருணங்களைக் கடக்கமுடிகிறது. அவர்களால்தான் மனிதம் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது//

அருமையான வரிகள் ,நெகிழ்ச்சியான நினைவு ஜி! சூப்பர்!

இராமசாமி கண்ணண் said...

அருமையான நடை. நன்றி.

Sangkavi said...

அருமையிலும் அருமை...

நர்சிம் said...

வாழ்த்துகள் ஆதி.

KarthigaVasudevan said...

வாசிக்க அருமையா இருக்கு நினைவோடை .

மஞ்சூர் ராசா said...

எளிய நடையில் சிறப்பாக உங்கள் நன்றியறிதல் நினைவுகளை சொல்லியிருக்கிறீர்கள். மலரும் நினைவுகளே ஒரு சுகம் தான்.

வாழ்த்துகள்.

வணங்காமுடி...! said...

ரொம்ப டச்சிங்கா இருக்கு, ஆதி... படிச்சு முடிச்சவுடனே, எதுவும் சொல்ல முடியாம, ஒருமாதிரி நெகிழ்வா உணர்ந்தேன்.

அருமையான பதிவுக்கு நன்றி :-)

சுந்தர்
ருவாண்டா

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .
கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது .

மீண்டும் வருவான் பனித்துளி !

~~Romeo~~ said...

நன்றாக இருந்தது, பதிரிகையில் வந்த போதே உங்களுக்கு தனியாக மடல் அனுப்பனும் என்று நினைத்தேன் .. அருமை :)

ஷாசா said...

சொல்ல நினைத்து
சொல்லப்படாத
சில நன்றிகளை
பட்டாம்பூச்சிகளாக்கிப்
பறக்க விடுகிறேன்...
உரியவரின்
தோள்களிலே
அவைகள் அமரவேண்டும்
என்ற பிரார்த்தனையோடு....

நல்ல பதிவு.வாழ்த்துகள்.