Monday, March 29, 2010

பதிவர் சந்திப்பும் கொசுத் தொல்லையும்

வலையில் எழுதுவதால் ஒத்த ரசனையுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. எத்தனை நாட்கள்தான் மெயில் / பின்னூட்டங்களிலேயே பேசிக்கொண்டிருப்பது.? நேரில் சந்திக்கலாம் என்ற ஆசை. பதிவர் சந்திப்பொன்றில் முதல் முறை சந்திக்கிறோம். நான் சில வார்த்தைகளின் தொடர்ச்சியாக சிரிக்கத் தொடங்கினாலே அந்த முழு வாக்கியத்தையும் அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. செல்லமாக தலையிலடித்துக் கொள்கிறார், உடன் சிரிக்கத் துவங்குகிறார். அது ஒத்த ரசனை. நட்பு.

நிறைய வேலைகள். தவிர்க்கவே முடியாதவற்றையும் தவிர்த்துவிட்டுத்தான் சந்திப்புக்குச் செல்கிறோம். அது போன்ற நட்பினைக் காணத்தானே தவிர காரணம் வேறென்ன.? ஒவ்வாத நபர்களிடம் ஒதுங்கிச் செல்கிறோம். பீச்சில் நடைபெறும் சந்திப்புகளில் அது அழகாக நடைபெறும். அந்தக் குறைந்த பட்சதேவையும் கூட கேகே நகர் சந்திப்பில் (27.03.10) நிகழவில்லை. பதிவர் குழுமம் அமைப்பதற்கான ஆலோசனை என்ற பெயரில் இரண்டு மணி நேரம் மொக்கை போடப்பட்டது.

யார் இப்போது பதிவெழுதிக் கொண்டிருப்பது.? எழுத்து, அதற்கான வாசிப்பு, சிந்தனை, பயிற்சி, சமூகப்பொறுப்பு இது எதுபற்றியும் கவலைகொள்ளாத அல்லது தெரியாத ஜிமெயிலர்கள்தான் என்றால் அது முழுதுமாக தவறாகிவிடாது. மேலும் அப்படி எழுதிக்கொண்டிருப்பது தவறான காரியம் ஒன்றுமில்லை. செய்யத் தகுந்ததே.! ஓய்வு நேரத்தை பயனுள்ளதாய் கழிக்க, மனவழுத்தத்தைப் போக்க நல்லதொரு வடிகாலாக வலைப்பூ இருக்கிறது. பின்னூட்டங்கள், பின் தொடர்புகள், ஹிட்ஸ் கணக்குகள், கூட்டம் சேர்த்தல் இவற்றைக் கொண்டு நாம் எழுத்தாளராகிவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்படத்தொடங்கும் புள்ளியே பிரச்சினைக்கான ஆரம்பம். தகுந்த சுயபரிசோதனைகள் இல்லாமல் அதை நம்புவதோடு மட்டுமல்லாமல் ‘என் வாசகர்கள்..’ என்று பேசத்துவங்குவதில் அது இன்னும் நகைப்புக்கு உள்ளாகிறது. நாளடைவில் அவர்களை உண்மை சுடும் போது வலையுலகை விட்டு பறந்துபோகிறார்கள். இந்தப்பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாதவர்கள் பலரும் கூட மாறும் வாழ்க்கைச் சூழலில் வலையுலகை விட்டு விலகிச்செல்வதும் நிகழ்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கும்பல் கும்பலாக உள்ளே வருபவர்களில் எஞ்சும் மிகச்சிலரே தொடர்ந்து எழுத தலைப்படுகின்றனர். இவ்வாறான சிலருள் மிகச்சிலர் அரிதாய் எழுதவும் செய்கிறார்கள். அவர்களையே நான் ‘பதிவர்கள்’ எனக் கொள்கிறேன். இவர்களிலும் கூட பலர் இந்தப் புதிதாய் உள்வரும் ஜிமெயிலர்களின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாமல் இதுவா களம்? என்று ஓடிவிடுகிறார்கள். சில மூத்த நண்பர்கள் மகிழ்வுடன் நினைவு கூறும் பலரும் ஏன் இப்போது எழுதுவதில்லை என துவக்கத்தில் நான் சிந்தித்ததுண்டு.

எழுத்து இவ்வாறான கடினச் செயல் என்பதைப்போலவே பேசுவதும் ஒரு அரிய கலை. நினைப்பதைச் சுருங்கவும், தெளிவாகவும் (?) பேசி கேட்பவர்களின் காதில் ரத்தம் வரவைப்பதும் கூட ஒரு கலைதான் போலிருக்கிறது. நேற்றைய ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் நடந்த பதிவர் சந்திப்பிலும் இது நிகழ்ந்தது. அதெப்படி ஒருவர் பேசியதை அப்படியே திரும்பவும் ரிப்பீட்டு போடுகிறீர்கள்? நாம் நினைத்ததையே ஒருவர் ஏற்கனவே சொல்லிவிட்டாலும் கூட கருத்து பகிரப்பட்டுவிட்டதால் அமைதியாக இருக்கலாமே. அப்படியென்ன இருக்கிறது அந்த மைக்கில்? மைக்கின் வசீகரம் அப்படி. பதிவர்கள் மட்டும் தப்பிவிடமுடியுமா என்ன? நேற்றைய நிகழ்வில் அஜெண்டா தெளிவில்லாததால் வாலண்டியராக கருத்துச்சொல்ல விரும்புவர்கள் மைக்கைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் மைக் புண்ணாவது தவிர்க்க இயலாதது, அது நிகழ்ந்தது.

நான் அனைவரையும் கூறவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

விஷயம் என்ன? பதிவர்களுக்காக குழுமம் தேவை என்றே நான் கருதுகிறேன்.

ஏன்?

“விழாக்காலங்களில் எல்லோருக்குமே புத்தகங்கள் மீது 10% கழிவு தரும் புத்தகக்கடைகள், வெளியீட்டாளர்கள், இவ்வாறான எழுத்து சம்பந்தப்பட்ட குழுமத்திலிருப்பவர்களுக்கு 15% ஆகவோ, அல்லது அந்த 10% த்தையே எல்லாக்காலங்களிலும் நீட்டித்துத்தரும்படியோ கோரிக்கை வைக்கலாம்.” என நான் நினைக்கிறேன். இது என் எண்ணம்தான். இதைப்போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள்.

எனக்கு நினைவிருந்த வரை சந்திப்பில் சங்கம் அமைக்கப்பட்டால் அதன் பயனாக நண்பர்கள் பகிர்ந்த விஷயங்களைக் கீழே தருகிறேன். (இவையும் மைக் சொற்பொழிவின் இடையிடையே கிடைத்தவைதான்)

*காப்பிரைட் குற்றங்கள், போலிப்பதிவர்கள் பிரச்சினை போன்ற இணையக் குற்றங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளுக்கு.

*சில சமயங்களில் நேரும் தீவிரமான தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு ‘கூகுள்’ போன்ற நிறுவனங்களை அணுகுவதற்கு.

*கற்போம், கற்பிப்போம் போல வலை நுட்பங்களை கூட்டாக கற்பதற்கு, கற்பிப்பதற்கு.

*ஆங்கில வலைத்தளங்கள் இயங்குவதைப்போல நிபுணத்துவத்துடன் வலைப்பூவை அணுகுவதற்கு.. மேலும் அதன் மூலம் வருமானத்திற்கான வழிவகைகளை காண்பதற்கு.

*வாசிப்பது, எழுதுவது மற்றும் படைப்பிலக்கியம் குறித்து அறிந்து கொள்ள உதவும் ‘பயிற்சிப்பட்டறைகளை’ நிகழ்த்துவதற்கு.

*படைப்புகளுக்கான போட்டிகள் நிகழ்த்துவதற்கு.

*குற்றங்கள் மட்டுமில்லாது பிற சூழ்நிலைத்தேவைகளின் போது அரசாங்கம் போன்ற நிறுவனங்களை அணுகுவதற்கு.

*சேவை நோக்கத்திற்காக. (வறுமை, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், ரத்த தானம், கண் தானம் போன்றவற்றை ஊக்குவித்தல், பங்கு பெறுதல்)

*சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் உரத்த குரலில் ஓங்கி ஒலிக்க.

*உற்சாக விருந்துகள், குழுச்சுற்றுலா முதலான கேளிக்கை மற்றும் பிறவற்றுக்காக.

பெரும்பாலும் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நபர்களால் பரிந்துரைக்கப்பட்டவை. இவையனைத்தையுமே ஒரு பதிவு செய்யப்பட்ட குழுமத்தால் செய்யமுடியுமா என்றால் முடியாது என்றே நான் எண்ணுகிறேன். எந்த விதிமுறைகளின் கீழ் குழுமத்தைப் பதிவு செய்வது? ஆர்கனைசேஷன்? ரிக்ரியேஷன் கிளப்? சாரிட்டிபிள் சொசைட்டி? ட்ரஸ்ட்? இன்னும்?

பேசியவர்களில் சிலர் தலைவர், செயலாளர் இப்படி பதவிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றனர். தலைவரோ, செயல் உறுப்பினர்களோ இல்லாமல் மேற்கண்ட எந்த வகையிலும் சங்கத்தைப் பதிவு செய்யமுடியுமா என்ன? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். ஏன் இந்தச் சிக்கல்? எதற்குப் சங்கத்தைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்பவர்கள் யாரும் இருக்கிறீர்களா என்ன? அப்படியொரு ‘சொப்புக் குழுமம்’ நடத்தவா இவ்வளவு ஏற்பாடுகள்? ஆலோசனைகள்?

ஜிமெயிலர்களாக இல்லாமல், கொஞ்சமேனும் பதிவர்களாக பரிமளித்தவர்களிடம் / பரிமளித்துக்கொண்டிருப்பவர்களிடம் போனில் மெயிலில் ஆலோசனை பெற்று, ட்ராஃப்ட் திட்டங்கள் தீட்டப்பட்டபின்னர் அவற்றின் மீதான விவாதத்திற்கே அனைவரும் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் கூட மெயில்களில், பதிவுகளில் பல்நிலை விவாதங்களுக்குப் பின்னர்.

சந்திப்பில் நிகழ்ந்தவற்றில் தவறேதுமில்லை. ஆனால் சரிசெய்துகொள்ளாமல், ‘மெயில் ஐடி கிரியேட் பண்ணியாகிவிட்டது’, ‘தலைப்பெல்லாம் முடிவு செய்தாகிவிட்டது’, ‘யார் சொன்னால் என்ன? சங்கம்னா சங்கம்தான். யார் தடுப்பது? பார்த்துவிடலாம்’, என்று முண்டாவைத் தட்டிக்கொண்டு இறங்கினால் வாசகர்களும் ‘பதிவர்’களும் சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.?

பி.கு :

இப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ள சில கருத்துகளையும், எனது மொக்கைப்பதிவுகளையும் ஒப்பிட்டு யாராவது நக்கல் பண்ணலாம் என்று ஐடியா வைத்திருந்தால், ஸாரி. நானும் ஜிமெயிலர்தான். ரெண்டு வருஷம் ஆச்சு எழுத வந்து. எப்போ ஓடிப்போவேன்னு எனக்கேத் தெரியாது. நன்றி.

31 comments:

Cable Sankar said...

அருமையா பதிவு.. உங்கள் கருத்துக்கள் ஏற்க்கப்பட்டு பதிவர் குழுமம் ஆரம்பிக்க எல்லோரும் இசைந்த தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று முடிவெடுக்க படுகிறது.. மற்றவை அடுத்தடுத்த நிகழ்வுகளில்

செந்தில் நாதன் said...

சரியான பதிவு!!

நம்ம கருத்து இங்க:

http://blogsenthilnathan.blogspot.com/2010/03/blog-post_28.html

அரவிந்தன் said...

ஜிமெயிலர்--இந்த சொல்லை மிகவும் இரசித்தேன்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

இராகவன் நைஜிரியா said...

// எப்போ ஓடிப்போவேன்னு எனக்கேத் தெரியாது. நன்றி.//


ஆஹா... நீங்களே இப்படிச் சொன்னா நானெல்லாம் என்னத்தச் சொல்வது.

வற்றாத நதியெல்லாம்...

இராகவன் நைஜிரியா said...

// ஸாரி. நானும் ஜிமெயிலர்தான். //

உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்... இந்த பாட்டு ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க இயலவில்லை..

துபாய் ராஜா said...

அழகாக ஆரம்பித்து அருமையாக முடித்துள்ளீர்கள் ஆதி. சீக்கிரம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

பிரியமுடன்...வசந்த் said...

ஸாரி. நானும் ஜிமெயிலர்தான்..

:)))))))


கருத்துகள் நறுக்.....
..........................................................................

இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கோங்கண்ணே...

1.வலைப்பதிவர்கள் எடுக்கும் குறும்படங்களை மாதம் ஒருநாள் கூடும் சங்க கூட்டத்தில் போட்டுக்காட்டலாம்...(சங்கத்துக்கு Projector வாங்கித்தர நான் ரெடி)

2.சினிமா ப்ரிவியூ சோ மாதிரி மாதம் ஒரு நாள் பதிவர்கள் தங்களுடைய சிறந்த பதிவுகளை திரையில் வாசிக்கலாம் மற்ற பதிவர்களுக்கு தன்னுடைய பதிவுகளை அறிமுகப்படுத்தலாம்...

3. சம காலத்தில் சமூகத்தில் நடக்கும் மனதை பாதிக்கும் விஷயங்களை படம்பிடித்து அதையும் பதிவர்களிடம் படங்காட்டி அதுபற்றி தீர்வுகளுக்கு விவாதிக்கலாம்...

4.தமிழ் பதிவுகள் இணையம் வைத்திருக்கும் அனைத்து தமிழர்களையும் சென்றடைய என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதிக்கலாம்...

5.தமிழில் இன்னும் எப்படியெல்லாம் பதிவுகளை டெக்னிக்கலாக வெளியிடுவது என்பது பற்றி கணிணி துறை பதிவர்கள் மற்ற சக பதிவர்களுக்கு ஆலோச்னைகள் வழங்கலாம்...

இன்னும் பலா .. லாம் ஆனால் சின்னப்பையனனான என் கோரிக்கை நிராகரிக்கப்படும்...

:(

pappu said...

இது என்ன அமெச்சூர் நாடக சங்கம் மாதிரியா?

இங்க வர்றதே ஒரு டைம் பாஸ். அதில் நட்பு சிக்குது. சங்கம் கொஞ்சம் சீரியஸ் மேட்டரில்லை? என்னவோ போங்க..

ராம்ஜி_யாஹூ said...

only when a blog do not have target, purpose- blog will be fun.

when we have purpose, target, aims, agendas blog will be boredom soon.

MANO said...

நன்கு யோசிக்க வைக்கும் பதிவு.

மனோ

ஆயில்யன் said...

//எப்போ ஓடிப்போவேன்னு எனக்கேத் தெரியாது. நன்றி.///


யாரு எப்ப ஓடிப்போவான்னு யாருக்குமே தெரியாது பாஸ்:) அதான் வாழ்க்கை - திஙகள் கிழமை காலையில யாருக்கிட்டயாச்சும் இப்படி பேசலைன்னா நானெல்லாம் ஒரு ப்ளாக்கரு :) (ஜிமெயிலரை விட ஏன் ப்ளாக்கரு ரொம்ப ஒர்த் இல்லாம போச்சு பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?)

கருத்துக்கள் அருமை!

தராசு said...

தல,

இறகால் வருடவும் செய்து, சாட்டையால் அடித்தும் இருக்கிறீர்கள்.

இன்னும் ஓரிருமுறை சந்தித்து கூடிப் பேசி தெளிவு பெறுவது அவசியமென நினைக்கிறேன்.

நர்சிம் said...

ஆமென்.

அதிஷா said...

;-) அவரு நாதஸ்வரம் வாசிக்கறதும் இந்தம்மா ஆடறதையும் பாக்கும்போது அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்துல வர சிவாஜி கணேசன் பத்மினி மாதிரியே இருக்கு..ஆஹா..

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

ஏறக்குறைய இதே விசயங்களை ( குழுமம், சுற்றுலா, நட்பு வட்டம், மாநாடு,) ஜனவரி 16ம் தேதி ஒரு பெரிய நீண்ட மெய்லாக பிரபல பதிவர்களுக்கு அனுப்பி இருந்தேன்., மெயில் பெற்ற அனைவர்க்கும் என்னைப்பற்றி எந்த ஒரு விசயமும் அந்த சூழலில் தெரியாது, ஆகவே அந்த மெய்லை பற்றி யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, நானும் அப்படி கண்டுகொள்ளாததை கண்டுகொள்ளவில்லை.

கேபிளின் புத்தக வெளியிட்டு விழாவில், எல்லோரும் போன பின்பு ,பலாபற்றை ஷங்கரும், கேபிளும், நானும் பேசிகொண்டிருந்த பொழுது "அது" எவ்வளவு கஷ்டமானது என்பதை கோடிட்டு காட்டினார். ஆணி புடுங்கும் நோக்கத்தை அங்கேயே குழிதோண்டி புதைத்து போட்டுவிட்டேன். கேபிள் போன்றவர்களே தலையிட்டு முடியாத ஒரு காரியத்தை ., நான் செய்ய துணிந்ததை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

ஒத்த அலைவரிசை நண்பர்கள் கிடைக்கும் என்பதை தவிர வேற எதையும் இந்த பதிவுலகில் ( இப்போதைக்கு) நம்ப தயாராக இல்லை., நம்ப வைக்க வேண்டியது பதிவுலகின் ( என்னையும் சேர்த்து) பொறுப்பு!

பார்க்கலாம்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரைட்டுங்க..:)

நாய்க்குட்டி மனசு said...

நாம் நினைத்ததையே ஒருவர் ஏற்கனவே சொல்லிவிட்டலும் கூட கருத்து பகிரப்பட்டுவிட்டதால் அமைதியாக இருக்கலாமே. அப்படியென்ன இருக்கிறது அந்த மைக்கில்? மைக்கின் வசீகரம் அப்படி.//
நீங்கள் சொல்வது, தான் சொல்லும் 'கருத்து' பதிவாகணும்னு நினைப்பவர் செய்வது. 'தான்' சொல்லும் கருத்து பதிவாகணும்னு நினைச்சா அப்படித்தான். எல்லாம் சரி ஆகும்

தேவன் மாயம் said...

நல்ல கருத்துக்கள்!!

சென்ஷி said...

சந்திப்பில் நிகழ்ந்தவற்றில் தவறேதுமில்லை. ஆனால் சரிசெய்துகொள்ளாமல், ‘மெயில் ஐடி கிரியேட் பண்ணியாகிவிட்டது’, ‘தலைப்பெல்லாம் முடிவு செய்தாகிவிட்டது’, ‘யார் சொன்னால் என்ன? சங்கம்னா சங்கம்தான். யார் தடுப்பது? பார்த்துவிடலாம்’, என்று முண்டாவைத் தட்டிக்கொண்டு இறங்கினால் வாசகர்களும் ‘பதிவர்’களும் சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.? ///


................ம்ம்ம்ம்ம்ம்ம்

KVR said...

//பேசியவர்களில் சிலர் தலைவர், செயலாளர் இப்படி பதவிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றனர். தலைவரோ, செயல் உறுப்பினர்களோ இல்லாமல் மேற்கண்ட எந்த வகையிலும் சங்கத்தைப் பதிவு செய்யமுடியுமா என்ன? எனக்குத் தெரியவில்லை.//

முடியாது. இது பற்றி டிவிஆர் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

//பின்னூட்டங்கள், பின் தொடர்புகள், ஹிட்ஸ் கணக்குகள், கூட்டம் சேர்த்தல் இவற்றைக் கொண்டு நாம் எழுத்தாளராகிவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்படத்தொடங்கும் புள்ளியே பிரச்சினைக்கான ஆரம்பம்//

சிறந்த அவதானிப்பு ஆதி.

அக்பர் said...

nice one

கே.ரவிஷங்கர் said...

//பதிவர் குழுமம் அமைப்பதற்கான ஆலோசனை என்ற பெயரில் இரண்டு மணி நேரம் மொக்கை போடப்பட்டது//

”மைக்”கின் சதிதான் முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

மோனி said...

ப்ரசென்ட் சார்...

_____ One of the G Mailer...

கே.ரவிஷங்கர் said...

அதிஷா said...
//அவரு நாதஸ்வரம் வாசிக்கறதும் இந்தம்மா ஆடறதையும் பாக்கும்போது அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்துல வர சிவாஜி கணேசன் பத்மினி மாதிரியே இருக்கு..ஆஹா..//

நலந்தானா...! பெப்பி பீ...!நலந்தானாஆஆஆஅ! பெப்பி பீ...உடலும் உள்ளமும் நலந்தானா.ஆஆஅதிஷா?

ஹிஹிஹிஹிஹிஹிஹி (ஆதி ஸ்டைல்)

V.Radhakrishnan said...

நல்லதொரு ஆதங்கம், அமைதியாக செய்ய வேண்டிய விஷயத்தை கொஞ்சமல்ல நிறையவே அவசரப்பட்டு செய்கிறார்கள். உங்கள் பதிவில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது, ஒன்றும் பிரச்சினை இல்லை, நிதானமாக செய்யலாம். ஒரு அமைப்பின் கொள்கைகள் திட்டங்கள் என வரையறுக்காமல் செய்வது அமைப்பிற்கு ஒரு சரியான அடித்தளம் இல்லாமலே போகும்

ஆதிமூலகிருஷ்ணன் said...

கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.!

@அதிஷா : இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஆஹா... நீங்களே இப்படிச் சொன்னா
இந்த புது ஜிமெயிலர் என்னத்த சொல்றது........

சதீஷ் said...

இங்க ஒரு ஆளு இந்த மாதிரி பதிவுக்கு பின்னூட்டத்த எடுத்துட்டாருப்பா...

வெண்பூ said...

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

பின்னோக்கி said...

அப்பாடி... ஒரு சங்கத்துக்கே இவ்வளவு பிரச்சினைன்னா எப்படித்தான் கட்சி நடத்துறாங்களோ ?. அதுக்காக தி.மு.க. அ.தி.மு.க வ பாராட்ட வேண்டும்

ராஜ நடராஜன் said...

இப்படியான பதிவுகளுக்கான சிந்தனைகளே படிக்க நன்றாக இருக்கிறது.தனிக்கட்ட கருத்துகள் இன்னும் சிறப்பு.