Thursday, April 29, 2010

ஏ.கே. கங்குலி Vs கேதன் தேசாய்

நேற்றைய நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிதாக கட்டம் கட்டி, முக்கியத்துவம் தரப்பட்டு ஒரு செய்தி வெளியாகியிருந்தது. எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்த அந்தச்செய்தி அப்படி வெளியாவதற்கான அத்தனை தகுதியும் வாய்ந்ததுதான். என் ஆச்சரியம் ஏனெனில் அதற்கு எப்படி இவர்கள் முக்கியத்துவம் தந்து முதல் பக்கத்தில் வெளியிட்டுத் தொலைத்தார்கள் என்பதுதான்.

அது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 2008ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சில மாதங்கள் பணியாற்றி அதே ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெற்றுச் சென்றுவிட்ட திரு. ஏ.கே. கங்குலியை பற்றிய செய்தி. இவர் தமக்கிருக்கும் இருதய நோய்க்காக 2008ம் ஆண்டிலிருந்தே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அடிக்கடி இவர் இங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் எப்படி வந்து போகிறார்? விமானத்திலா.. ட்ரெயினிலா.. என்பது தெரியவில்லை. அந்தச்செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அவரது வருகையின் போது அவர் தங்குவது சிஎம்சி அருகே உள்ள ஒரு லாட்ஜில். வாடகை எவ்வளவு தெரியுமா? மயக்கம் போட்டுவிடவேண்டாம்.. ரூ.125 தான். லாட்ஜிலிருந்து மருத்துவமனைக்குப்போவது நடந்தேதான்.

அவர் வந்து செல்வது பாதுகாப்புக்கான எந்த உயரதிகரிகளுக்கோ, லோக்கல் அதிகாரிகளுக்கோ தெரியவில்லை. சிகிச்சை தரும் டாக்டரிடமாவது சொன்னாரோ என்னவோ? இந்த முறை விபரம் தெரிந்து பத்திரிகையாளர்கள், வேலூர் டிஎஸ்பி ஆகியோர் காணச் சென்றபோது, ‘சொந்த வேலையாக வந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கப்போகலாம்’ என்று அனுப்பி விட்டாராம்.

இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் ஆட்கள் இருந்தால் அதைத் தாங்கும் அளவுக்கு நமக்கு மனத்திடம் இல்லை.

(பிற்சேர்க்கை : இந்தத் தகவல் 28.04.10 தினகரன் பத்திரிகைச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் இது தவறான தகவல் என்று அறிய வருகிறோம். சென்னையில் பணிபுரிந்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கும் திரு. ஏகே. கங்குலியும்.. வேலூர் சிஎம்சி வந்து செல்லும் ஓய்வுபெற்ற கொல்கத்தாவைச் சேர்ந்த நீதிபதி திரு. ஏகே. கங்குலியும் வேறு வேறு நபர்களாவர்)

~~~~~~~~~~~~~~~~

நாலு நாள் கூட ஆகவில்லை அதற்குள் 2000 கோடி லஞ்சம் வாங்கி நம்மை மலைக்கவைத்த ‘கேதன் தேசாய்’ செய்தியை ஏழாவது பக்கத்துக்கு ஒரு ஓரச்செய்தியாக தள்ளியாகிவிட்டது. இன்னும் சில தினங்களில் காணாமல் போய்விடும்.

கேதன் தேசாய் இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவர். இவர் லஞ்சம் வாங்கிக்குவித்தது, நாடு முழுவதும் துவக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து. அவை தகுந்த கல்விக்கூட வசதிகளைப்பெற்றிருந்தனவா? இல்லையா? எதையும் பார்க்காமல் அனைவரிடமிருந்தும் வாங்கப்பட்டிருக்கிறது. அப்படியாயின் அவை எத்தனை லட்சக்கணக்கான மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருக்கும்? அவர்கள் படிப்பு முடிந்ததும் எத்தனை அளவு சேவை மனதுடன் தொழில் புரிய வெளியே வருவார்கள். அவர்களின் மூலம் சிகிச்சை பெறப்போகும் மக்கள் எத்தனைக் கோடி பேர்? இந்த ‘கேதன் தேசாய்’ என்ற ஒரு மனிதனால் மட்டுமே அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு கோடிக்கணக்கான மக்களுக்கு நிகழப்போகும் அநீதி தயாராக இருக்கிறது. பிற குற்றங்களை விட லஞ்ச ஊழலில் வீச்சு மிகப்பெரியது என நான் நினைக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~

எவ்வளவு பெரிய கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கத்தான் செய்கிறது. நித்யானந்தா வெளிநாடுகளுக்குச் செல்லும் போது செப்பு மாலைகள், செப்புக்காப்புகளுடன் போய் திரும்பி வரும்போது தங்கமாலைகள், தங்கக் காப்புகளுடன் வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்தத் தங்கக்கடத்தல் விவகாரமாக மார்ச் 18ல் சுங்க இலாகா அவரக்கு வலை விரித்திருந்ததாம். பார்ட்டி அதற்குள் மார்ச் 2லேயே பாலியல் மற்றும் தொடர்ந்த மோசடி வழக்குகளில் சிக்கி நாறிப்போய்விட்டது. வீடியோ, யார் என கண்டுபிடியுங்கள் போட்டி, கொந்தளிப்பு, அப்டேட் தகவல்கள் என விறுவிறுப்பான நிகழ்வுக்கு முன்னால் தங்கக்கடத்தல் நமக்கு அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காதுதான்.

~~~~~~~~~~~~~~~~~~

பிடித்த விஷயங்களையும், பிடித்த நபர்களையும் தகுதிக்கு மீறி உச்சத்துக்கே கொண்டு சென்று கொண்டாடுவது நம்மிடம் இருக்கும் ஒரு பெரிய கோளாறு. ஒரு பெரிய உதாரணம் கிரிக்கெட். ஒரு விளையாட்டு என்ற தகுதியையும் மீறி போதையாக அது போனதால்தான் இவ்வளவு ஊழல், சூதாட்டம், மோசடி. இந்த ஐபிஎல்லின் தொடர்ச்சியாக நிழலுலகில் ஆயிரக்கணக்கான கோடிகளில் சூதாட்டம் நிகழ்த்தப்பட்டு தாவூத் இப்ராகிம் பல ஆயிரம் கோடிகள் குவித்திருக்கிறார். போட்டிகளின் முடிவு உட்பட அவரது கரம் நீண்டிருக்கும் என நாம் சந்தேகித்தால், அதில் ஒன்றும் தவறில்லை.

கிரிக்கெட் மீதான மோகத்தைக் கொஞ்சம் நாம் குறைத்துக்கொள்ள முன்வந்தால் இந்த மோசடிகள், ஏமாற்றுவேலைகள் குறைவதோடு, கொஞ்சம் பிற விளையாட்டுகளின் மீதும் தன்னிச்சையாக கவனம் விழ வாய்ப்பிருக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~

கடந்த நான்கு வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்த குஷ்பு மீதான 22 வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை விடுவித்திருக்கிறது. கருத்துச் சுதந்திரத்துக்கான ஒரு குட்டி மகிழ்ச்சி.

குஷ்பு சொன்னது, “தனக்கு வரப்போகும் மனைவி கன்னியாக இருக்கவேண்டும் என்று எந்த படித்த ஆணும் எதிர்பார்க்கமாட்டார்” வசதியாக இதற்கு முன்னும் பின்னுமாக அவர் சொன்ன பகுதிகள் மறக்கப்பட்டன.

இப்போது இதன் மீது நீதிபதிகள் கூறியது, “குஷ்பு தெரிவித்த கருத்துகள் ஒரு தனிப்பட்ட நபரின் கருத்துகளாகும். அதனால் யாருக்கும் பாதிப்பு நிகழ்ந்திருக்கின்றனவா? சட்டப்படி மேஜரான ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். திருமணத்துக்கு முன் உறவு கொள்வதை எந்தச்சட்டமும் தடுக்கவில்லை, அரசியல் சட்டப்பிரிவு 21 வாழ்வதற்கான உரிமையை வழங்குகிறது.”

~~~~~~~~~~~~~~~~~

தெருவில் செல்லும் அழகிய ஒரு பெண்ணை வேடிக்கை பார்க்கவும் (சைட் அடிக்க?), அவள் தமிழ் பேசும் அழகையும் கேட்க.. மறுத்துவிடாதே உடனே வா என்று சமைத்துக்கொண்டிருக்கும் தன் இல்லாளை அழைக்கிறான் காதல் கணவன்.

‘இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள்’
வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்?
அவ்விதழ் அசைந்தசைந் தசைந்து கனியோடு
பிசைந்த தேன் கேள் கேள் அதனை
இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே!

-பாவேந்தர்

bharathidasan

(இன்று பாவேந்தரின் 120வது பிறந்தநாள்)

.

Monday, April 26, 2010

பதிவுலக அரசியல்!

இன்னும் கண்ணன் வருவதற்கு நேரமிருக்கிறது. அதற்குள் ஒரு பதிவு போட்டாலென்ன? என்ன எழுதலாம். வழக்கமான மைல்டான பதிவுகள் தவிர சீரியஸான ஒன்றிரண்டு விஷயங்களும் எப்போதாவது எழுத வேண்டுமென்றும் பிளான் வைத்திருக்கிறேன். எழுதினால் எங்கே நீங்களும் சீரியஸாகி விடுவீர்களோ என்றுதான் பயந்துகொண்டு தள்ளிப்போட்டு வருகிறேன். அதில் ஒரு விஷயம்தான் பதிவுலக அரசியல்.

சீச்சீ.. சீரியஸ் டாபிக்கே வாணாம்.. அந்தப்பழம் புளிக்கும். ஆகவே மைல்டாகவே அந்த விஷயத்தைப்பற்றி நான் நினைப்பதைச் சொல்லிவிடுகிறேன். (சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும், மெயில்களையும் பார்த்தபிறகு தோன்றிய சப்ஜெக்ட் இது)

* சினிமா தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அதி தீவிர மீடியா. மேலும் ஏராளமான பணம் புரளக்கூடிய துறை. ஆனால் நம்மூரில் எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய படைப்புகளுக்கும் உள்ள வரவேற்புதான் நல்லா தெரியுமே நமக்கு. ஆகவே சிலர் தவிர்த்து பிறர் சினிமாவுக்குத்தாவுகிற வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். அல்லது யாருக்கும் தெரியாவண்ணம் ஏங்கிக்கொள்கிறார்கள். அல்லது ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்கிறார்கள். ஒருவழியாக அதை அடைந்தவர்கள் பெருமை பேசிக்கொள்கிறார்கள். காரணம் இலக்கியச்சேவையா? எந்தத்துறையிலும் வாய்க்காத அளவில் நிரம்ப நிரம்ப புகழ், நிரம்ப நிரம்ப பணம். அதில் என்ன தவறு இருக்கிறது?

* பதிவுலகம் எப்படியிருக்கிறது? பத்திரிகைகளுக்கு தாவ நேரம் பார்த்துக்கொண்டு உறுமீனுக்காக‌ போல காத்துக்கொண்டிருக்கிறது. (எனக்கு ஒரு குட்டி மீன் கிடைச்சாக்கூட போதும்). எழுத்தாளர்களுக்கு எப்படி சினிமாவோ அதைப்போலவே பதிவர்களுக்கு பிரின்ட் மீடியா. அல்லது முதலில் வில்லன், அப்புறம் ஹீரோ, அப்புறம் சிஎம் என்பது போலாகவும் இருக்கலாம். காரணம் இலக்கியச்சேவையா? முதலில் குமுதத்தில் ஐந்து பக்க சிறுகதை, பின்னர் உயிர்மையில் 200 பக்க நாவல், பின்னர் விகடனில் எட்டு பக்க பேட்டி. எப்பேர்ப்பட்ட கனவு அது. அதில் என்ன தவறு இருக்கிறது? சிலர் பிரின்ட் மீடியாவை விடவும் வலையுலகம் பிரம்மாண்டமானது. இதன் எதிர்கால சாத்தியங்கள் அளப்பறியதாக இருக்கும் என்கிறார்கள். ஊகங்களால் பயனில்லை.

* வேறெந்த கலைகளை விடவும் அதிகபட்சமாய் மக்களை அடைவதில் சினிமாவும் எழுத்தும் முன்னிற்கிறது. ஆகவேதான் அதைப்பற்றி மேலே பார்த்தோம்.ஆனால் பிற கலைகளை விடவும் எழுத்துத்துறை பற்றி மட்டும்தான் நாம் விவாதிக்க முடியும் (நாம் செய்வதைப்பற்றிதானே பேச முடியும்). மேலே "அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று சொன்னோமே, அது சுயநலமாக அல்லவா இருக்கிறது. அப்படியானால் இலக்கியச்சேவையை யார்தான் செய்வது. அது சுயமாக இயங்கும். சமூகத்தின் (பெரும்பாலான மக்களின்) நேர்மையான ரசனையை ஒட்டியதாகவே இலக்கியம் இருக்கமுடியும். ஒன்றை விடுத்து இன்னொன்று ஆளாகிவிடமுடியாது. சமூகத்தின் அத்தனைத் தளங்களிலிருந்தும் படைப்பாளிகள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள், வருகிறார்கள், வருவார்கள். அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த ரசனையையும், இலக்கியத்தையும் தீர்மானிப்பார்கள்.

அய்யய்யோ கிரைம் நாவல் பிச்சிக்கிட்டு போகுதே?

அய்யய்யோ சுறா படம் வசூல் அள்ளுதே?

அய்யய்யோ மொக்கைப்பதிவு இப்பிடி ஹிட்டாவுதே?

((புலம்பினா ஒண்ணியும் நடக்காது. நீ மட்டும் 'என்னா ரசனை இது? நா எழுதுன பின்நவீனத்துவ கவுஜய ஒர்த்தனும் படிக்கமாட்றானுவோ'னு புலம்பிகினுருந்தா.. உன் ரசனை சராசரிக்கு உசந்தது, ஸாரிபா.. மாறுபட்டதுனு வெச்சிகோனு நா சொல்லிருவேன். உன் வேலையை மட்டும் பார். நேரம் வரும்போது பின்ந‌வீனத்துவம் தன்னால முன்னால வரும். அப்பாலயும் வந்து புதுசா 'பின்னுக்கும்பின்னாடிநவீனத்துவத்துல' ஒரு கவுஜ எழுதிவெச்சுகினு இத்த குறை சொல்லிக்கினுருப்பே..))

* எழுத்தாளர்களைப்பற்றி எழுதும் போது பொறாமை வேண்டாம். கிண்டல் வேண்டாம். எழுத்தில் தகுந்த மரியாதை தருவோம். உனக்கு பிடிக்காதா அவரை, அவரைப்பற்றி படிக்கவேண்டாம். மாற்றுக்கருத்தை மரியாதையான முறையில் தெரிவிக்கலாம். (இதையே அரசியல்வாதிகளைப் பற்றியும், பிற துறையினரையும் பற்றி எழுதும்போது கடைபிடிக்கலாம்). தகுந்த நேரம் வரும்போது நாமும் எழுத்தாளராகக்கூடும். மாறாக மாறுபட்ட சாத்தியங்களால் அவர்களைவிடவும் நாம் மேலேறிச்செல்ல அவர்கள் நம்மைப்பற்றி இதைப்போலவே எழுதவேண்டிய சூழல் ஏற்படும். இதையே சக பதிவர்களுக்கிடையேயான கருத்துமோதலிலும் கைக்கொள்ளலாம். தகாத வார்த்தைகளைக்கூறி சகதி வாரியிறைப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இனிய சொற்களிலும் மாற்றுக்கருத்தை தெரிவிக்கமுடியும். ஆகவே கனியிருப்ப காய்களைக்கொள்ள வேண்டாம்.

ஒரே மொக்கைப்பதிவுகளாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா?..

சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள், ரெண்டு படம் நல்லாயிருந்தா பத்து படம் நமக்கு பிடிக்க மாட்டேங்குது. பிடிச்ச படத்திலேயும் ஏதோ பாட்டோ, சீனோ மொக்கையாக‌ போயிடுது. ஒரு இயக்குனரையே எடுத்துக்குங்க ஒரு படத்துல அள்ளிக்கொண்டு போய்விடுகிறார், இன்னொன்றில் காத்துவாங்கிவிடுகிறார். விகடன் எடுத்துக்கங்க.. ரெண்டு பகுதி நல்லாருக்குது. ரெண்டு பகுதி மொக்கையாக இருக்குது. அதுவும் யாருக்கோ பிடிக்கும். ஒரு எழுத்தாளர எடுத்துக்கங்க, ஒரு கதை இப்பிடி இன்னொன்று உண்டுமா? என்ற அளவில் இருக்கிறது. அடுத்த கதையில் பேஸ்த் அடிக்கவைக்கிறார். அதை மாதிரிதான் பதிவுலகமும் என எனக்கு பிடிக்காத பதிவுகளைப் பார்த்து க்கொள்ளும்போது நினைத்துக்கொள்கிறேன். எல்லா வலைப்பூக்களுமே சிறப்பாக இருக்கவேண்டியது என்ற அவசியமுமில்லை, ஒரே பதிவரின் எல்லா பதிவுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற‌ அவசியமுமில்லை.

என்னாபா இது எங்கியோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்திட்டேனே.? பொழச்சுப்போங்க.. இத்தோட விடுறேன்.

(டிஸ்கி :ரொம்ப முன்னாடி எழுதிய ஒரு பதிவு. நேரமின்மையால் ரிப்பீட்டாகிறது)

.

Wednesday, April 21, 2010

நீ என்றால் அது நான்

உன் கண்களில் தெரியும் ஏமாற்றம்தான் வேதனையின் இடுபொருளாகிறது, காரணம் நானெனில் நொடிப்பொழுதில் ரணமாகிறேன். உனது கோபமோ அழகைக்கூட்டிச் செய்யப்பட்டது, ரசித்துக்கொண்டேயிருக்கலாம். எனது கோபமோ குறுகுறுப்பான ஒற்றைப்பார்வையில் நெகிழ்ந்து தொடரும் உன் சிரிப்பில் உருகிப்போகின்றது. அந்தப்பல் வரிசையை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். எந்தச் செயல்களில் எந்தப் பொருட்களில் ஒளிந்திருக்கின்றன வாழ்க்கைக்கான மகிழ்ச்சி எனும் தேவரகசியங்களை நீதான் கற்றுத்தருகிறாய். உன் முத்தங்கள் பசியாற்றுவதாய் ஒருபோதும் இருப்பதில்லை, அதை மேலும் கிளறிக்கொண்டேயிருப்பதாயிருக்கின்றன. நீ என்னில் கொண்டிருக்கும் காதல் என்னிலும் தூயது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன். உன் நலம் அது எனது, நீ எனில் அது நான் என்றிருக்க நான் எண்ணத்தான் செய்கிறேன். ஆனால் நீ அதை சொல்லியே விடுகின்றாய் உன் மழலையில்..

ஐஸ்கிரீமின் எனக்கான முதல் ஸ்பூனுக்கு நீ சொல்வது,

'அப்பா.. அப்பா.. அப்பா'

உனக்கான இரண்டாவது ஸ்பூனுக்கு நீ சொல்வது,

'நீ.. நீ.. நீ'

.

Monday, April 19, 2010

யட்சியும், விரலியும்

நண்பர் செல்வா தன் வீட்டுக்கு வந்து மண்பாண்டத்துக்குள் குடியேறிய 'யட்சி'யை கொசுக்களிடமிருந்து காப்பாற்றி பாதுகாத்துவருகிறார் என்பது தாங்கள் அறிந்ததே. அதைப் பார்த்ததிலிருந்து எனக்கு செல்வா மீது கடும் பொறாமை எழுந்தது. எனக்கும் ஒரு யட்சி வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏன் என்று கேட்கிறீர்களா? யட்சியின் பயன்கள் பற்றி கேள்வியுற்றால் இப்படிக் கேட்கமாட்டீர்கள். முடிவு செய்த படிக்கு பாவூர்சத்திரம் கோணமண்டை ஒண்டிப்புலி தாத்தா சொல்படி ஒரு யட்சியைப் பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டேன். அது நான் நினைத்தபடிக்கு அப்படியொன்றும் எளிதான வேலையாக இருக்கவில்லை.

சிங்கவல்லி பூவிதழ் மூணு, கூவிளம்பட்டை ஒரு இணுக்கு, கொடுக்காப்புளி விதை இரண்டு, குப்பைமேனி ஒரு ஈரு, பேர்சொல்லா ஒரு துண்டு, திப்பிலி விரல்நுனி இத்தனையையும் இன்னிக்கு எடுத்த கூட்டுத்தேன் ரெண்டு சொட்டையும் விட்டு, இளந்தென்னைத் தலைக்காயின் தண்ணீரைச் சேர்த்து அரைத்து ரெண்டு உருண்டையாக்க வேண்டும். அதை குட்டியூண்டு பானையில் வைத்து யாரும் பார்க்காம நடு ராத்திரியில் வீட்டு தலைவாசலில் புதைச்சு 13 நாள் கழிச்சு எடுத்து ஒன்றை நாக்கில் படாமல் விழுங்கிவிட்டு இன்னொன்றை மஞ்சத்துணியில் கட்டி அமாவாசை அன்னிக்கு ஊருக்கு தெற்கே சுடுகாட்டுக்கு போற வழியில வீசிவிட்டு வந்து விடவேண்டும். அன்னிக்கு ராத்திரியே ஒத்தை நாட்டுக்கோழி முட்டையை மஞ்சப்பூசி குளிப்பாட்டி குங்குமம் வச்சி புறவாசல் வடக்கு மூலையில் புதைச்சு வச்சுடணும். அதிலிருந்து 27வது நாள் யட்சி அந்த முட்டைக்குள் குடிவந்துவிடுவாள்.

இது விவரங்களை ஒண்டிப்புலி தாத்தா சொன்னதும் பயபக்தியுடன் விரதமிருந்து இதையெல்லாம் செய்தேன். சொன்னபடிக்கு 27 வது நாள், புதைத்துவைத்த முட்டையை தோண்டி எடுத்துப்பார்த்தால் முட்டைக்கு உள்ளே என் விரலளவுக்கு ஒருத்தி தலைவிரி கோலமாய் ஆங்காரமாய் இருந்தாள். 'அட அறிவுகெட்டப்பயலே, என்னை எதுக்கு கூப்பிட்டே?' என்று நாக்கைத்துருத்திக்கொண்டு கத்தினாள். இவள் யட்சி போல இல்லையே.. பயந்துபோய் அவள் வெளிவருவதற்குள் அங்கிருந்த ஒரு பானையை எடுத்து டப்பென்று அவள் மேல் கவிழ்த்து மூடினேன்.

பின்னர் தாத்தாவைக் கேட்டபோது அவர் கேட்ட விபரங்களைக்கூறியபின் 'அட முட்டாப்பயலே, முட்டையை ஒரு மண் கலயத்துக்குள்ளப் போட்டுதான பொதைக்கச்சொன்னேன். நீ வெறும் முட்டையை அப்படியே புதைச்சிருக்கயே.. அதான் விரலி வந்துருக்கா. பயப்புடாத, அவ யட்சிக்கு ஒண்ணுவிட்ட அக்காதான். பயங்கர கோவக்காரி. ஆனா ரொம்ப நல்லவ.. புடிச்சுப்போச்சுன்னா என்ன சொன்னாலும் செய்வா. என்ன ஒண்ணு, அவளுக்கு மண்பானையே புடிக்காது. முதலில் போய் பானையிலிருந்து எடுத்து ஏதாவது கண்ணாடிக் குடுவைக்குள் போட்டு யாரும்பாக்காம வய்யி. நாலைஞ்சு நாளு கழிச்சுப் பேச்சுக்குடு, கோவந்தணிஞ்சிருக்கும்'

அதுபடியே செய்தேன். கண்ணாடிக்குடுவை கிடைக்காமல் காலியாக இருந்த ஒரு குவார்டர் பாட்டிலில் போட்டு மூடி பீரோவுக்கு பின் புறமாய் வைத்தேன். ஆர்வத்தை அடக்கமுடியாமல் ஐந்தாவது நாள் வீட்டில் யாரும் இல்லாத போது பாட்டிலை எடுத்துப்பார்த்தால் அமைதியாகியிருந்தாள். தூங்கி எழுந்திருப்பாள் போலயிருக்கிறது. என்னைப்பார்த்ததும், 'எங்கேடா போயிட்டே? என்னா பாட்டில்டா இது? நல்லா இருக்குதே வாசம். இதுல இருந்த பானத்தை எனக்கு கொஞ்சம் தர்றீயா? இல்லைன்னா உன் மண்டையை பிடிச்சு உலுக்கிருவேன்' என்றாள். பின்னர் அவள் கேட்டதை எல்லாம் செய்தேன். பிறகு நிதானமாக 'என்ன வேணும் ஒனக்கு?' என்று கேட்டாள் விரலி.

'அதையெல்லாம் டீடெய்லா அடுத்த பதிவுல சொல்றேன். இப்போதைக்கு இந்த பதிவுக்குப் பின்னூட்டம் போடாதவங்க கனவுல போயி அவுங்க காதை கடிச்சு வைச்சுட்டு வந்துடுறியா?'

.

ஒரு ஆள், ஒரு காரியம்.

அரசின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் சந்தேகம். மாற்று இல்லை. யாரை நம்புவது.? ஒன்றும் புரியவில்லை. எங்கெங்கும் ஊழல். அதனாலேயே எழும் ஏற்றத்தாழ்வுகள். அநீதி பெருகுகிறது. மனித நேயம் இன்னும் குற்றுயிராகவாவது பிழைத்துக் கிடக்கிறதா தெரியவில்லை. அரசு எந்திரங்களின் கடமை தவறல்கள் தவிர பணநோய் பீடித்த ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள். அதனால்.. பதுக்கல்கள், விலையேற்றம், பரமாரிப்பின்மை, விபத்துகள், போலிகள், கலப்படம், பலியாகும் உயிர்கள், ரௌடியிசம், கொலைகள், கொள்ளைகள், உழைப்புச்சுரண்டல்.. மேலும் கொழுத்துப்பெருக்கும் சுயநலம்.. நிலம், நீர், காற்று அனைத்தையும் போட்டியிட்டுக்கொண்டு மாசுபடுத்துகிறோம்.

எல்லாவற்றையும் எல்லோரும் செய்கிறார்கள். நான் மட்டும் என்ன செய்வது? ஏன் இப்படி இருக்கிறது இந்தச் சமூகம்?

யாருக்காவது லஞ்சம் கொடுக்காமல் இருக்கமுடிகிறதா? இந்த ஒருமுறைதானே.. வேலையாகவேண்டும். எந்த அநீதியையாவது தட்டிக்கேட்க முடிகிறதா? ஏன் வம்பு? உதை வாங்கவோ.. போலீஸ், கோர்ட் என அலைவதோ என்னால் ஆகாது. இந்த இயற்கைக்காவது ஏதாவது செய்து மன ஆறுதல் பெறலாம்தான். இதுவரை ஒரு செடியை நட்டிருக்கிறோமா? டிவி பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. யாராவது செய்வார்கள். நான் பெண்டாட்டி, பிள்ளையோடு வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு உட்கார்ந்துகொள்கிறேன்.

ஒரு ஆள். ஒரு காரியம். ஒரே ஒரு உருப்படியான காரியம். மாற்றங்கள் நம் கைகளில்தான் இருக்கின்றன..


.

Saturday, April 17, 2010

மிக்ஸியில் அடித்த கவிதை ஒன்று..

கொஞ்சம் பிஸி. அதனால கடையை சரியாகக் கவனிக்கமுடியவில்லை, மற்றவர்கள் பக்கமும் வரமுடியவில்லை. விரைவில் சூழல் சரியாகும் என நினைக்கிறேன். பார்க்கலாம். இந்த அழகில் கடந்த வாரம் ஒரு எழுத்தாள நண்பர் நான்கைந்து தடவைகள் போனிலும், மெயிலிலும் அழைத்தும் சிட்டிக்குள் போகமுடியவில்லை. ஏதோ சுவாரசியமான விஷயம் இருப்பின் பகிர்ந்துகொள்ளத்தான் அழைத்திருப்பார். ஒவ்வொரு முறையும் 'ட்ராஃபிக்கில் இருக்கிறேன்', 'மீட்டிங்கில் இருக்கிறேன்', 'லஞ்சில் இருக்கிறேன்', 'சுபா அழுதிட்டிருக்கான்', என்று சொன்னால் உண்மையாகவே இருந்தாலும் எத்தனை தடவைகள் சொல்வது.? மனிதர் கடுப்பாகமாட்டாரா.. கடைசி தடவை போனைக் கட் பண்ணும் முன்னாடி இப்படிக் கத்தினார்,

"யோவ்.. இந்த மாசச்சம்பளக்காரனுங்க, குடும்பம் குட்டின்னு இருக்கறவனுங்கல்லாம் எழுத்தாளன் இல்ல, எழுத்தாளனுக்கு ஃபிரெண்ட் கூட ஆகமுடியாது..!!"

********************

நண்பர் ஒருவர் "எனக்கு இந்த ஜிமெயிலில் 'இன்பாக்ஸை' விட 'பஸ்'தான் ரொம்பப் பிடித்திருக்கிறது" என்றார். ஏன்னு கேட்டதற்கு இப்படிச்சொன்னார், "அதில்தானே ஒரே கிளிக்கில் படிக்கவேண்டிய லிஸ்ட் காலியாகிவிடுகிறது"

********************

சுயபரிசோதனை இல்லாத ஒரு மனிதன் பணம், புகழ், மதிப்பு இழந்து எந்த அளவில் தரம் தாழ்ந்துபோவான் என்பதற்கு ஒரு உதாரணத்தை சமீபத்தில் காணமுடிந்தது.

நேற்று டிவியில் 'வித்த கவிஞர் பா.விஜய்' நடித்த 'ஞாபகங்கள்' படம் பார்த்தேன். இது போன்ற அரிய படங்களை லிஸ்ட் போட்டு சேகரித்து அவற்றை ஏதாவது மியூஸியத்தில் போட்டு பூட்டி வைத்துவிடுவது இந்த உலகத்துக்கு நல்லது. பாதிக்கு மேல்தான் பார்க்கமுடிந்தது. சொல்கிறேன் கேளுங்கள்.

வேலை வெட்டியில்லாத காதலனுக்கு கவிதையில் ஆர்வம். காதலியும் நன்றாக காதலிக்கிறார். ஒரு நாள் சந்தேகக் கேஸில் போலீஸ் இவரைப் பிடித்துச்சென்று உதைக்க அந்தக்கேப்பில் 'அவரது ஆர்வம், லட்சியம், வேலையில்லாத தன்மை' எல்லாவற்றையும் ரியலைஸ் பண்ணிப்பார்த்து வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிவிடுகிறார் காதலி. வீட்டில் உதை வாங்கி படுத்துக்கிடக்கும் இவரிடம் வந்து விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் 'நீ லட்சியவாதி. கவிஞனாகி, பாடலாசிரியராகி, பெரியாளாகி.. இப்படி பல ஆகியாகி முன்னேற வேண்டும். நாம் கல்யாணம் செய்துகொண்டால் உன் கனவு அழிந்துவிடும்' என்று செண்டிமெண்டாக பேத்திவிட்டு சென்றுவிடுகிறார். இவரது லட்சியம் என்னவென்று சொல்லவில்லையே, 'பாடலாசிரியருக்கான தேசிய விருது' வாங்குவதுதான் அது. அப்படியே அப்படியாகி, இப்படியாகி 'தேசியவிருதை'யும் வாங்கி விடுகிறார். அதை சமர்ப்பிக்க காதலியை தேடிப்போகிறார். அங்கே கணவர் இறந்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் காதலி அதை இவரிடம் மறைத்து சந்தோஷமாக இருப்பதாக நடிக்க, இது அவருக்குப் புரிந்தும் அதை நம்புவது போல நடித்துவிட்டு வந்துவிடுகிறார். டெல்லி தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் விழாவில் ரசிகர்கள் இவரது பழைய லவ்வைப்பற்றியே துளைத்துத் துளைத்துக் கேட்க இவர் மேடையிலேயே ஒரு பாடல் பாடுகிறார். அதை பார்வையாளர்கள் பக்கமிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் ஹீரோயினுக்கு எல்லாம் புரிந்து அவருடனே சேர முடிவெடுத்து வீட்டுக்குப்போய் டிரெஸ் மாத்திவர போய் வரும் கேப்பில் பங்க்ஷன் முடிந்து கவிஞர் தாஜ்மாஹால் பார்க்க ஆக்ரா சென்றுவிட, ஹீரோயினும் ஆக்ரா போகிறார். பெஞ்சில் உட்கார்ந்து கவிதை எழுதிக்கொண்டிருக்கும் கவிஞரின் முதுகுக்குப் பின்னால் 10 நிமிஷத்துக்கு வசனம் பேசிவிட்டு அவரைத்தொட்டால் கவிஞரின் தலை 'சொய்ங்'கென்று சாய்ந்துவிடுகிறது. போய்ச் சேர்ந்துவிட்டாராம். அதாவது லட்சியத்தை அடைந்துவிட்டு, அதை காதலிக்கு அர்ப்பணித்துவிட்டதால், தாஜ்மஹால் முன்னால் வந்து ஒரு பஞ்ச் கவிதையை எழுதிவிட்டு மண்டையை போட்டுவிட்டாராம். 10 நிமிஷத்துக்கு முன்னாடிதான் நல்லா ஸ்ட்ராங் டீ குடித்து விட்டு தெம்பாக தாஜ்மஹால் முன்னால் கவிதை எழுத ஆரம்பிப்பதாக காட்டுவார்கள்.

Pa.V

நடிப்பின் புதிய பரிணாமத்தையே விஜய் தொட்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. குப்பை மேடுகளில் 'இளைஞனே எழுந்துவா' டைப்பில் ஒரு பாடல் பாடுவதாகட்டும், பிளாஷ்பேக் கண்ணாடி போடாத இளமையாகட்டும், லவ்வரைப்பிரியும் போது அவர் தரும் ஆஃபரை மறுத்து, 'நீ ஒரு குழந்தை, உன்னைப்போய் நான் எப்படி.?' என்று கண்கள் துடிக்க, நாக்கு தழுதழுக்க புழியப் புழிய அழுவதாகட்டும், நல்ல முற்றிய கொப்பரைத்தேங்காய் போன்ற மண்டை ஸ்பெஷல் கெட்டப் (மேக்கப் மேன் கையில் கிடைத்தால்.. நறநற..) ஆகட்டும், லட்சியம் நிறைவேறியவுடன் தாஜ்மஹால் முன்னால் மண்டையை போடுவதாகட்டும் பின்னி பின்னி எடுத்திருக்கிறார்.

டெல்லியில் ஒரு நண்பர் என்ற பெயரில் ஒரு ஜந்து, புருவத்தைத் தூக்கிக்கொண்டு வாயைக்கோணிக்கொண்டு படத்தையும் மீறி பில்டப் பண்ணிக்கொண்டிருக்கிறது. அனேகமாக அது படத்தின் இயக்குனராக இருக்கலாம். கவிஞர் செத்தபின் மூஞ்சியில் இருந்து கண்ணாடி நழுவி விழுகிறது, கையிலிருந்து மோதிரம் நழுவி விழுகிறது.. இயக்குனர் டச்சாம். விட்டால் இன்னும் என்னல்லாமோ கழன்று விழுவதைப்போலவும் காண்பிப்பார்கள். படம் பார்த்துமுடித்ததும் ஈரம் காயாத சாணியை மிதித்துவிட்டதைப்போல இருந்தது. சை.!

********************

சமீபத்தில் ரசித்த ஒரு ஃபிரெஷ்ஷான எழுத்து. பெண்பார்க்கும் படலத்தின் அத்தனைச் சாரங்களையும் மெல்லிய நகைச்சுவை இழையோட கவர் செய்திருக்கிறார். சப்ஜெக்ட் எதுவாக இருந்தாலும் அதன் முழுமை, விவரணை, நடை இவையே ஒரு படைப்பு பிடித்துப்போக போதுமானதாக இருக்கிறது. வாழ்த்துகள் பாலா.

********************

ஒரு பத்துக் குட்டிக்கவிதைகளை மிக்ஸியில் போட்டு அடித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும். அலுவலகத்தில் நண்பர் ஒருவருக்கு கல்யாணம். வாழ்த்துமடலுக்கு கவிதை கேட்டார்கள். அதுவும் கொஞ்சம் அவசரம். ஒன்றும் வந்து தொலையவில்லை. முதல் முத்தம் வலையை ஓபன் பண்ணி வைத்துக்கொண்டு மிக்ஸியை ஓட்டினேன். ஏற்கனவே இந்தக்கவிதைகளை படித்தவர்கள் அடிக்கவராதீர்கள்..!! எனக்கே சிரிப்புத்தாங்கவில்லை. கவிஞர்கள் டென்ஷனாகவேண்டாம். வாசிக்க ஒரு ரிதம் கிடைப்பதற்காக கமா, புள்ளி வைத்தெல்லாம் எழுதியிருக்கிறேன். புண்ணியவான்கள் கமா, புள்ளி வைத்தார்கள் என்றால் பல கவிதைகள் புரியும் போலத்தான் இருக்கிறது.

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
காதல் ஒன்று
சேகரமாகிக்கொண்டேயிருக்கும்.
வாழ்வின் வழிநெடுக
தவிக்கின்ற தாகத்தைத்
தீர்க்கின்ற மழை அது.
சுழலும் காந்த ஊசிகளுக்கான
வடக்கைப்போல
அது
உற்று நோக்கிக்கொண்டேயிருக்கும்.
ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல
இன்னொன்று இருப்பதில்லை,
நித்தமும் அந்தக் காதலின் நிறம்
புதிது புதிதாய் பூத்துக்கொண்டேயிருக்கும்.
ஒளி ஊடுருவும்..
மலர்கள் மிதந்துவரும்..
தென்றலுடன் சலசலக்கும்..
அந்தக் காதல்
நீரைப்போலவே
நீங்கள் நீடித்திருக்க உயிர்ப்பொருளாகும்.!

நல்வாழ்த்துகள்.!

.

Thursday, April 15, 2010

திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை -44

சில வாரங்களுக்கு முன்பாக..

சுபா ஒழுங்காக சாப்பிடுவதேயில்லை. ஒரு இட்லியை ஒன்றரை மணி நேரமாக கொடுப்பது, அரை தோசை சாப்பிட வைக்க அரை கிலோமீட்டர் ரவுண்ட் செல்வது என தலையால் தண்ணி குடித்துக்கொண்டிருந்தார் ரமா. கொஞ்சம் பாவமாக இருந்தாலும் உள்ளூர 'என்னை என்ன பாடு படுத்தியிருப்ப.. நல்லா வேணும்.. கடவுள்னு ஒருத்தன் இருக்கத்தான் செய்றாண்டா' என நினைத்துக்கொள்வேன். பிறகு மருந்து கொடுத்தல், பால் தருவதை நிறுத்துதல் (தூங்கும் போது), வெரைட்டி செய்தல், கூட்டமாக சாப்பிடுதல் (பக்கத்து வீடுகளுடன்) என டாக்டரின் யோசனைப்படி என்னென்னவோ செய்து பார்த்தோம். ஹூம்.. ஒரு ஸ்பூன் சாதத்தை வாயில் திணித்தாலும் அதை நமது மூஞ்சியிலேயே துப்பிவிடுவதோடு மட்டுமல்லாமல் ஏழு வீட்டுக்கு கேட்கிறமாதிரி அழுது வைத்தான். ரெண்டு பேரும் கடுப்பாகியிருந்தோம். சில நாட்களில் ஏதோ முனிவர்கள் போல வெறும் தண்ணீர் குடித்தே வாழ்ந்துகொண்டிருந்தான். அன்போடு பேசுவதும் சொல்லிக்கொடுப்பதும் சைக்கலாஜிகலாக நல்ல பலனைத் தரும் என்று டாக்டர் அடுத்த ஐடியாவை எடுத்துவிடவும் அதையும் டிரை பண்ணினோம்.

ஒரு நாள் தூக்கி வைத்துக்கொண்டு மெல்லிய குரலில், "என்னடா தம்பி, இட்லி வேணுமா? தோசை வேணுமா? பூரி சூப்பரா இருக்கும் தெரியுமா.. எல்லோரும் சாப்பிடுவமா? சாப்பிட்டாத்தானே நல்ல பலசாலியாக முடியும்.? இப்ப அப்பாவைப் பாரு.. ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிடுறேன்னு. இதுக்குப்போயா அழுவாங்க.? நீ குட் பாய்தானே?.."

அதற்கு ஏதும் பலன் இருந்ததா என்பதை அப்புறம் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன்பாக..

என்ன பிரச்சினையோ தெரியவில்லை, ஒழுங்காக ஆய் போகாமல் படுத்திக்கொண்டிருந்தான். அதோடு போகும் போதும், சுத்தம் பண்ணும் போதும் பயங்கர அழுகை வேறு. டாக்டரோ அப்படியேதும் பிரச்சினை இருக்கறா மாதிரி தெரியலையே என்று சொல்லிவிட்டார். திடீரென ஏதும் அசிங்கப்பட ஆரம்பித்துவிட்டானோ என நினைத்தபடி என் சைக்கலாஜிகல் ட்ரீட்மெண்டை கையிலெடுத்தேன்.

"தம்பி, எதுக்கு அழுகிற.. இதுக்குப்போயா அழுவாங்க. எல்லோரும் போறதுதானே.. ஒழுங்கா போக வேண்டியதுதானே.. இப்ப அப்பாவைப் பாரு.. ஒரு நாளைக்கு எத்தனை.."

அடச்சே..!!!!

.

Monday, April 12, 2010

ரங்கநாதன் தெரு : ஒரு எச்சரிக்கை

 

Ranganathan st   

சென்னை தி.நகர் 'ரங்கநாதன் தெரு' அதன் தனிப்பட்ட அடையாளங்களுக்காக புகழ்பெற்ற இந்தியாவின் முக்கியமான ஒரு கடைத்தெரு என்பதை நாம் அறிவோம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை இத்தனை பரபரப்பான ஜனத்திரளில் சிக்கித்தவிக்கும் வேறு கடைத்தெருக்கள் வேறெங்கும் இருக்குமா என்பது சந்தேகமே. அங்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பிருப்பவர்கள் இதை உணர்ந்திருக்கலாம், ஒவ்வொரு காலகட்டத்திலும் இங்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் மாலை வேளைகளில் நிகழும் மக்கள் நெருக்கடியும் ஆபத்தான வகையில் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

   இந்தியாவில் மக்களைக் கூட்டம் கூட்டமாக கொல்லும் தீவிரவாதம், வாகன விபத்துகள் போன்ற காரணிகளில் 'கூட்டநெரிசலு'ம் முக்கியமான ஒரு இடத்தைப்பெறுகிறது. இதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு நண்பரோடு ரங்கநாதன் தெருவுக்கு சென்ற போது நான் கண்ட நெரிசல் அசாத்தியமானது. அப்போது யாரேனும் பிக்பாக்கெட் திருடர்கள் போன்ற விஷமிகள் ஏதேனும் அசம்பாவிதத்தை நிகழ்த்தியோ, வதந்திகளை கிளப்பியோ 'தள்ளு முள்ளு' ஏற்பட காரணமானார்கள் எனில் பெருத்த உயிரழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

    அத்தகு கோர நிகழ்வு நிகழும் முன்பே அரசு விழித்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும் என்பதே நம் ஆசை. இந்தத் தெருவின் நெருக்கடிக்கான மிக முக்கியமான காரணம் அங்கிருக்கும் பல்பொருள் அங்காடிகளை விடவும் மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகருக்கான முதல் மற்றும் ஒரே வாயிலாகவும் இந்தத்தெரு அமைந்திருப்பதுதான். இதை மாற்றி ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பாதைகளை ஒன்றுக்கு மேற்பட்டதாக முந்தைய, பிந்தைய தெருக்களோடு இணைக்க வேண்டும். அப்படிச்செய்தால் ரங்கநாதன் தெருவுக்குள் வரவேண்டிய அவசியமில்லாதவர்கள் பிற பாதைகளை பயன்படுத்துவார்கள். மேலும் ரங்கநாதன் தெருவுக்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், அவர்கள் சிறு வியாபாரிகளேயானாலும் இது தவிர்க்க இயலாத ஒன்று. வாகனப் போக்குவரத்தைக் கையாளும் முறைகளைப் போலவே தெருவுக்குள் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்கள் எந்நேரமும் பணியாற்றவேண்டும். நெருக்கடிக்காலங்களில் மக்கள் வெளியேற ரங்கநாதன் தெருவை அருகிருக்கும் தெருக்களோடு இணைக்கும் குறுக்குத் தெருக்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே இருப்பவை ஆக்கிரமிப்புகளின்றி  நேர்த்தி செய்யப்படவேண்டும். அதோடு நடுத்தட்டு மக்களும் விளம்பரங்களுக்கு மயங்காமல் ரங்கநாதன் தெருவின் மீதிருக்கும் மோகத்தை  விட்டொழிக்க முன்வரவேண்டும்.

    இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், ரங்கநாதன் தெருவில் நிகழ்ந்த நெரிசலில் இத்தனை பேர் பலி என்ற தலைப்புச்செய்திகளை நாம் காணும் நாள்  தூரமில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி : நண்பர் கண்ணன்

Tuesday, April 6, 2010

ஸ்டோரி டிஸ்கஷன்

சினிமாத்துறையில் ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வஸ்து இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமக்கு அதைப்பற்றியெல்லாம் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன். இது வேற மாதிரி. ஒரு சில மொக்கைப்பதிவுகள் போட்டவுடன் இடையிடையே ஒரு கதை அல்லது ஒருகவிதை எழுதவேண்டும் என்று திட்டமிடுவேன். பாருங்கள், உங்கள் நல்ல நேரம் சமீப காலமாக கவிதை என்ற ஒன்று சிந்தனையில் வந்தே தொலையமாட்டேன் என்கிறது. இந்த கதை இருக்கிறதே அது கொஞ்சம் சிக்கலானது. உங்கள் நேரேஷன் பிரமாதம் என சிலர் சீண்டிவைத்திருக்கிறார்கள். ஆனால் முக்கிய சில புள்ளிகளோ இனிமே நீ கதை எழுதினால் விரலை ஒடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகவெல்லாம் பயந்தால் தொழில் பண்ணமுடியுமா? ஆகவே அடுத்த கதையொன்றை எழுதிவிடலாம் என முடிவு செய்தேன். இந்தக் கிராமத்துக் கதைகளை அதே ஸ்லாங்கில் எத்தனை தடவைதான் எழுதிக்கொண்டிருப்பது? ஏதாவது வித்தியாசமாக கமர்ஷியல் சினிமா மாதிரி ஆக்ஷன் கதை எழுதலாம். ஹீரோவுக்கும், வில்லனுக்கும் சும்மா பரபரன்னு பத்திக்கணும்.

ஆகவே கண்ணனுடன் டிஸ்கஸ் பண்ணி ஒரு கருவை ரெடி பண்ணிக்கொண்டால் நேரேஷனில் நாம் கலக்கிவிடலாம் என்று எண்ணி போன் போட்டேன். விளக்கமாக விபரத்தைச் சொன்னேன். இனி டிஸ்கஷன்..

'முதல்ல ஹீரோ யாரு? என்ன பண்றாருன்னு முடிவு பண்ணிட்டோம்னா அப்பாலிக்கா வில்லன் யாரு என்ன பண்றாருன்னு முடிவு பண்ணிடலாம். அப்புறமா அவங்களுக்குள்ள என்ன நடக்குது? முக்கியமான ஆக்ஷன்ஸ் என்னன்னு பின்னிட்டோம்னா முடிஞ்சது. கடைசியா பாட்டு எங்க வைக்கிறது.. பைட்டு எங்க வைக்கிறது.. ஹீரோயின் என்ன பண்றாங்கன்னு பாத்துட்டோம்னா ஃபினிஷ்ட்'

'டேய். நாம சினிமா கதையா டிஸ்கஷனா பண்ணிகிட்டிருக்கோம்.? ஒரு சிறுகதை எழுதலாம்னு ஐடியா கேட்டா என்ன நக்கல் பண்றியா?'

'அட, பண்றது பண்றோம். பெருசா பண்ணிவைப்போமே. நாளைக்கே தேவைப்படாதா என்ன? முடிச்சப்புறம் சுருக்கி கதையா எழுதிடு..'

'என்ன கதை எழுதுறதுன்னா உனக்கு அவ்ளோ கிண்டலா இருக்குதா? நீ எழுதிப்பார்டா அப்போ தெரியும். முட்டை போடுற கோழிக்குதான்..'

'மீரா இன்னிக்கு கோழிக்குழம்பு வைச்சிருக்கா. வர்றியா இங்க? அப்படியே கதையும் டிஸ்கஸ் பண்ணலாம்'

'பேச்ச மாத்தாத..'

'சரி விடு. கதையைப் பார்ப்போம். இப்போ என்ன கிரைம் கதைதானே வேணும். ஹீரோவும் வில்லனும் மோதிக்கணும்.. அவ்வளவுதானே'

'ஆமா..'

'ஹீரோ போலீஸ் ஆபீஸர், ஓகேவா?'

'வேணாம். கிரைம் கதைன்னா உடனே போலீஸா? போலீஸ்னா.. துப்பாக்கி, கொலை, கடத்தல், தங்கம், வைரம், ரவுடி வில்லன் ஹீரோயினை வேற புடிச்சுட்டுப்போயிருவான்.. போர்..'

'வாணாமா? சரி. அப்போ காலேஜ் ஸ்டூடண்ட்? அப்போதான் குத்து ஸாங். லவ் ஸீன்ஸ், ஹாஸ்டல், ஃபுட்பால் கிரவுண்ட் ஆக்ஷன், ஹாஸ்டல் சீக்வன்ஸ்னு நிறைய ஸ்கோப் இருக்குது..'

'வேணாம்'

'சரி விடு. ஒரு பெரிய பில்டிங். அதுல நிறைய கம்பெனி இருக்குது. நம்ப ஹீரோ அதுல வேல பாக்குற ஸாஃப்ட்வேர் பார்ட்டி. அந்த பில்டிங்குக்கு ஒரு பிரச்சினை வருது. பில்டிங் உள்ள பரபரப்பான காட்சிகள்'

'பில்டிங்குக்கு என்ன பிரச்சினை வருது?'

'பில்டிங்குக்கு என்ன பிரச்சினை வரும்? ம்ம்ம்.. ஆங்.. தீவிரவாதி பாம் வச்சுடுறான்.!!'

'தீவிரவாதியா? டேய்.. பாவம்டா.. விட்டுர்றா அவனை. அவனுக்கு வேற வேலயே இல்லையா?'

'அப்ப தீவிரவாதி வேணாமா? பில்டிங்குக்கு வேற என்னதாண்டா பிரச்சினை வர்றா மாதிரி பண்ணமுடியும். நிலநடுக்கம்? அதுக்கு வில்லன் எப்படி பொறுப்பாகமுடியும்? ஹூம். சரி விடு. பில்டிங்கே வேண்டாம். சிவில் என்ஜினியர் ஓகேயா? சைட் ஒர்க். புதுசா இருக்கும். யாரும் காமிச்சதில்லை. அங்க அவனுக்கு கீழ வேலபாக்குறவங்க ஒவ்வொருத்தரா சாவுராங்க. கடைசியில பாத்தா அதுக்கு காரணம் ஒரு பேயி..'

'சாவுறதுக்கு காரணம் பேயா? இது புதுசா? பேயி கூட ஹீரோ எப்பிடி சண்டை போடுவாரு? மந்திரவாதி வேணும். கிராபிக்ஸெல்லாம் கதையில எப்படி பண்றது? மண்டையில போட்டம்னா.. வேற சொல்லுடா'

'வேலைதேடுற இளைஞர்?'

'ஏன் வயசானவங்க வேலை தேட மாட்டாங்களாமா?'

'சும்மா எதச்சொன்னாலும் கொற கண்டுபிடிச்சுக்கிட்டு? அப்படின்னா ஹீரோ என்ன பண்றாருன்னு நீ சொல்லு. மிச்சத நான் சொல்றேன்..'

'அரசியல்வாதி?'

'என்ன ஊழல் பண்றாரா?'

'பிஸினெஸ்மேன்?'

'என்ன தொழில்பண்றாராம்? ஸ்பின்னிங் மில் வச்சிருக்காரா? தையல் மெஷின் வச்சிருக்காரா?'

'ப்ரொஃபஸர்?'

'கெமிஸ்ட்ரி புரொபஸர்தானே? லேப்.. ஆஸிட்.. கெமிக்கல்.. கண்டுபிடிப்புலாம் வருமே?'

'ஹீரோ ஒரு ரைட்டர்?'

'ஹிஹி.. ஊட்டுக்காரி பேரு ரமாவா? தங்கமணி கதையா?'

'அப்போ என்னதாண்டா பண்ணச்சொல்ற? சரி நீயே சொல்லு. நான் மறுத்துப்பேசல..'

'ஹீரோ ஒரு ஆர்மி வீரன். பாம் டிஃப்யூஸர். திரில்லிங்கா நிறைய பாமை அவர் டிஃப்யூஸ் பண்றதக் காமிக்கிறோம். ஹீரோயின் அங்கேயே பாமர் ஹெலிகாப்டர் பைலட்.. வார் ஃபீல்ட்.. இவுங்க பாம் போடுறாங்க, அவர் டிஃப்யூஸ் பண்றாரு. காண்ட்ரவர்ஸி. உலகத்தரத்துக்குப் பண்ணிடலாம்'

'கோழிக்குழம்பைக் காலிபண்ணிடாதீங்க.. அங்கயே வந்துடறேன் சாப்பிடறதுக்கு. இனிமே உன்கிட்ட கதை கேட்டம்னு வச்சிக்கயேன். பிஞ்ச சப்பல்ஸாலயே என்ன அடி..'

.

Sunday, April 4, 2010

மர்மதேசத்தில் பையா

மர்மதேசம்

நம்ப ஆளுங்க இம்சை பண்றதுல பயங்கர கெட்டிக்காரங்க என்பது போல இந்த ஹாலிவுட்காரங்க டுபாகூர் விடுறதுல பயங்கர கெட்டி. அவங்களும் என்னதான் செய்வாங்க பாவம்? எப்படித்தான் வித்தியாசமான கதைகள் சொல்றது? இந்தப்படத்துல கடவுள்கள் குரூப்புக்கும் (அவங்களுக்குள்ளேயிருக்கும் பிரச்சினைகள் தனி) மனிதர்கள் குரூப்புக்கும் சண்டை.. மனிதர்கள் சைடுக்கு கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த ஹீரோ தலைவன்.. எப்பூடி?

clash_of_the_titans_poster02

வித்தியாசமாக சுவாரசியமாக திங்க் பண்ணாவிட்டால் எவ்வளவுதான் டெக்னிகல் சைடில், கிராஃபிக்ஸில் கலக்கினாலும் பிரயோஜனம் இல்லை. படத்தில் சொல்லிக்கொள்கிற மாதிரி சுவாரசியமாக ஏதும் இல்லை. பறக்கும் குதிரை, பெரிய்ய்ய்ய தேள், பிரம்மாண்டமான க்ராக்கன் எல்லாம் ஏற்கனவே பார்த்தவைதான். அதிலும் மெட்யூஸா, அதன் குட்டிப்பாம்புகள் ஹேர்ஸ்டைல் உடைய தலை, பார்ப்பவர்களைக் கல்லாக்கும் திறன், அது இருந்தால்தான் அடுத்த கட்டம் என்ற திரைக்கதை, கிளைமாக்ஸில் பிரம்மாண்ட கிராக்கன் குறிப்பாக கிளைமாக்ஸ் நிகழும் கடல்முகம் பார்த்த பில்டிங் உட்பட என அத்தனையையும் அப்படியே ‘காட் ஆஃப் வார்’ ப்ளேஸ்டேஷன் கேம் சீரிஸிலிருந்து லவட்டியிருக்கிறார்கள். மே பி அவர்கள் அனுமதி வாங்கி செய்திருப்பார்களாயிருக்கும்.

ஃப்ரீயா இருந்தா இவங்களின் டுபாகூரும் எந்த அளவுக்குதான் போகுதுன்னு பார்க்க ஒரு தடவை பார்த்துவையுங்கள்.

*******************

பையா

விஜய், அஜித்களுக்கு கடும் போட்டியாக சூர்யா இருப்பது போல அடுத்து கார்த்தியும் உருவாகியிருக்கிறார். வயசாகிவிட்டதால் அப்படியாவது அவர்கள் இருவரும் ரிடையர் ஆகித் தொலையமாட்டார்களா என்ற ஆசை ஒருபுறம். அவர்கள் இருப்பது பத்தாதா நீங்களுமாய்யா என்ற எரிச்சல் மறுபுறம்.

ரொம்பப் புதுமை என்றில்லாவிட்டாலும் தமிழுக்கு ஓரளவு புதிய கதைக்களம். ஜிவ்வுன்னு லாஜிக் மீறாமல் (கலைத்தன்மையோடேயே, கமர்ஷியலாகவே கூட) கொண்டு போயிருக்கலாம்தான். ஆனால் அவ்வளவு ஈஸியா திருந்திட்டாங்கன்னா அதெப்படி? ‘நிக்கிற பஸ்ஸில் ஏறமாட்டார், ஓடுற பஸ்ஸில்தான் ஏறுவார்’ என்று நண்பர் வசனம் பேச ஹீரோ ஓடி வந்து பஸ் ஏறுகிறார். இப்படி 20 வருடங்களுக்கு முன்னால் உள்ள காட்சியுடன் படம் துவங்க நாம் முதல் கொட்டாவி விடுகிறோம்.

paiya-movie-wallpapers-posters-01

அப்புறம் சற்றுநேரத்தில் பரபரப்புடன் கார் கிளம்பவும் நாம் நிமிர்ந்து உடகாருகிறோம். சண்டையைத் தவிர உருப்படியாக பண்ணுவார், வேறெதுவாவது மும்பையில் நிகழும் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க அப்படி எதுவும் கடைசி வரை நிகழவேயில்லை. முதல் காட்சியில் ஹீரோயினைக் கண்டவுடனேயே வெறித்தனமான காதல் வந்து விடுகிறது ஹீரோவுக்கு. கடைசிக் காட்சியில் டைட்டில் போடும் போது நண்பர்கள் வந்து சொல்லும் வரை ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வந்து தொலையவில்லை. என்ன அநியாயம் இது.? இவ்வளவுக்கும் அவர் இவருக்காக என்ன மண்ணாங்கட்டியெல்லாம் செய்துதொலைக்கிறார். ஹூம்.!

எதிர்புறம் நிற்கும் வில்லன்கள் வரிசையிலிருந்து ஒரு அடியாள் மட்டும் கத்தியுடன் ‘குடுகுடு’ வென முதலில் ஓடிவந்து ஒத்தையில் நின்று கொண்டிருக்கும் ஹீரோவின் முஷ்டியால் ‘டும்’மென குத்து வாங்கி வேரறுந்த மரமாய் சாய்வது நன்றாகத்தான் இருந்தது முதல் படத்தில். ஆனால் அதையே எல்லாப் படத்திலும் வைத்தால் எப்படி? இந்தப்படத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக எல்லா சண்டைக்காட்சிகளையும் அப்படித்தான் துவங்கியிருக்கிறார்கள். ஆக்ஷன் கொரியோகிராபர்ஸ் கொஞ்சமாவது புதுசா சிந்திங்கப்பா.. முடியல.. ஆஃப்ட்ரால் மானாட மயிலாட புரொகிராமுக்குக்கூட எப்படில்லாம் புதுசு புதுசா திங்க் பண்றாங்க தெரியுமா?

தமன்னாவின் காஸ்ட்யூம் டிஸைனர் நிச்சயமாக ஒரு ஃபேஷன் டிஸைனராகத்தான் இருக்கவேண்டும். ஏன்னா வித விதமான டிரெஸ்கள், ஆனால் ஒண்ணு கூட நல்லாயில்லையே..!! படத்தின் பிளஸ் ஒளிப்பதிவும், ம்யூஸிக்கும்தான். அழகழகான பாடல்களும், அவை படமாக்கப்பட்ட விதமும் கொள்ளை அழகு.

********************

போனஸ் : ரேனிகுண்டா

பார்க்கவேண்டிய லிஸ்டில் இருந்தும் தியேட்டரில் தவறவிட்டு, திருட்டு டிவிடி கூட கிடைக்காமல் கடைசியாக இன்று விஜய் டிவியில்தான் பார்த்தேன். மிகச்சிறப்பான படம். வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் இளம் குற்றவாளிகளின் நாம் அறிந்திராத பரபரப்பான பக்கங்கள். மிகச்சில இடங்களில் தொய்வு மற்றும் சினிமாத்தனம் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி படம் நிறைவாக செய்யப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது.

ranikunda

நடிகர்கள் தேர்வு, அவர்களின் நடிப்பு, லாஜிக் மீறாத இயல்பான காட்சிகள், திரைக்கதை, ஒளிப்பதிவு, காமிராக்கோணங்கள், இசை, கலை என அத்தனையும் சிறப்பு.. இன்னும் இன்னும்.. சொல்லத்தெரியாத ஏதோ ஒரு பர்ஃபெக்ஷன் படமெங்கும் நிறைந்திருக்கிறது. அதுதான் தேர்ந்த இயக்கத்தின் விளைவா என்ன.? கிண்டல் இல்லாமல் சீரியஸாகத்தான் சொல்கிறேன், இன்றைய நிலையில் ஓரளவு நல்ல படைப்புகளைத் தரும் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஜனநாதன், சிம்பு தேவன், பாண்டியராஜ், சமுத்திரக்கனி, சசிகுமார் போன்ற யாருடைய படத்திலும் இல்லாத ஒரு உணர்வை உணரமுடிந்தது. அவர்கள் ஈகோ பார்க்காமல் ‘ரேனிகுண்டா’ R.பன்னீர்செல்வத்திடம் இயக்கம் குறித்து இணைந்து பணிபுரிந்து தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்சினிமாவுக்கும் அது நல்லது. A worthy fellow.!

.

Friday, April 2, 2010

சபாபதி – திரை விமர்சனம்

சில பழைய படங்கள் மிகவும் ரசனையானவை. 1941ல் வெளியான சபாபதி என்ற படம் அதில் ஒன்று. இந்தப்படம் எனக்கும் என் தங்கைக்கும் எவர்க்ரீன் பேவரிட். எத்தனை முறை பார்த்திருப்போம் என சொல்லிவிடமுடியாது. எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் மிஸ் பண்ணவே மாட்டோம்.

எந்த முக்கியமான சமூகக் கருத்துக்களோ, அந்தக் காலத்துக்கே உரிய திருப்பங்களுடன் கூடிய நீண்ட கதைப்பின்னலோ இல்லாத மிக எளிய கதை. பத்தாவது படிக்கும் ஹீரோ, பணக்காரர். வகுப்பில் பெயில் ஆகிறார். அப்பா படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்த அம்மாவின் ஏற்பாட்டில் கல்யாணம் ஆகிறது. பத்தாவதில் பாஸாகிவிட்டு இவருக்காகவே கல்லூரி போகாமல் இருக்கும் ஹீரோயின். ஹீரோவின் பெயரிலேயே அவருக்கு ஒரு வேலைக்காரர். ஹீரோயின் பக்கம் ஒரு வேலைக்காரி. இப்படியாக கதை நகர்ந்து அவர் பாஸாவதில் முடிகிறது. வேறெந்த அழுத்தமான விஷயமும் இல்லை. ஆனால் படம் நம் மனதில் நீங்காமல் இடம்பெற நிறைய காரணங்கள்.

சகுந்தலை, ஆர்யமாலா, திருமங்கையாழ்வார், பூலோக ரம்பை, சாவித்திரி, விஷ்ணுலீலா மாதிரியான படங்கள் வெளியான காலகட்டங்களில் இயல்பான நம்மிடையே உலவிக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றிய இயல்பான கதை எனில் எப்பேர்ப்பட்ட ஒரு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அப்போதைய பார்வையாளர்களுக்கு இந்தப்படம் தந்திருக்கும்.? சென்னையில் வாழும் உயர் குடும்ப வாழ்க்கை முறை. பாத்திரங்கள் பேசும் வசனங்களில் சென்னைத் தமிழின் வாசம். அதுவும் கார் வைத்திருக்கும் பணக்காரக்குடும்பம். வித்தியாசமான ரகளை பண்ணியிருக்கிறார்கள் படத்தை உருவாக்கியவர்கள்.

ஹீரோவாக டிஆர் ராமச்சந்திரன். என்ன.. அப்போது அவருக்கு ஒரு 18 வயதிருந்திருக்குமா? அவரது முட்டாள் வேலைக்காரராக காளி.என்.ரத்தினம். இருவரது பெயரும் சபாபதி. இந்தப் படத்திலிடம்பெற்ற பல காமெடிக்காட்சிகள் பல தடவைகள் தமிழில் காப்பி செய்யப்பட்டிருக்கின்றன. சோடா பாட்டிலை உடைத்துத்தருவது, இரண்டு நாலணாக்களில் எந்த நாலணாவுக்கு அல்வா வாங்குவது? போன்ற பல காட்சிகளின் ஒரிஜினல் இந்தப்படம்தான்.

ஹீரோ பள்ளியில் படிக்கிறார். வாத்தியாரைக் கலாட்டா செய்கிறார். சக மாணவர்களிடம் ‘மியூஸிக் கேட்கலாம் பிரதர், கார்ட்ஸ் விளையாடலாம் பிரதர்’ என ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார். ஆனால் படிப்புதான் வரமாட்டேன் என்கிறது. மாப்பிள்ளை பார்க்க வரும் மாமியிடம் ஆங்கிலப் பேப்பர் என்று தினமணியைப் வைத்துக்கொண்டு நான்கு வரி ஆங்கிலம் வாசித்து அதற்கு அர்த்தமாக நாற்பது வரிகள் (தற்போதைய வடிவேலு ஜோக்) சொல்லி சபாபதியிடம் சமாளிக்கிறார். பெண் பார்க்க அம்மாவைக்கெஞ்சி டிரைவராக மாறுவேடத்தில் போகிறார். குட்டு உடைகிறது. கல்யாணம் ஆகிறது. (ஹீரோயின் பத்மா) வகுப்பில் பெயில் ஆகிறார். கண்டிக்கும் அப்பாவிடம் இவருக்காக அம்மா ‘நீங்க படிச்சு கிழிச்சுட்டீங்களாக்கும். இப்ப நல்லாயில்ல?’ என்று சண்டைக்குப்போகிறார். தலைப்பொங்கலுக்கு மச்சினனின் குறும்பு விளையாட்டு. இடையே வேலைக்கார சபாபதிக்கும், ஹீரோயின் வீட்டு வேலைக்காரி ‘குண்டுமுத்து’வுக்கும் காதல். இடையில் வயதான தமிழ் வாத்தியாருக்கும் (கே.சாரங்கபாணி) அவரது இளம் மனைவிக்கும் இடையேயான சுவாரசியங்கள். அட்டம்ட் எழுத மனைவி தடையாக இருப்பாள் என மாமனார் தடை சொல்ல அது அப்படியல்ல என்று இறுதியில் நிரூபிக்கிறார் ஹீரோயின்.

Sabapathi

இவையெல்லாவற்றையும் விட ஒவ்வொருவரும் சென்னைத்தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசிக்கொள்ளும் அழகுக்காகவே இன்னும் பல தடவைகள் பார்க்கலாம். இரண்டு சம்பந்திமார்களும் ஒருவரையொருவர் ‘மச்சி’ என்றழைத்துக்கொள்கிறார்கள். ‘குண்டுமுத்தே’ என்றி ஹீரோயின் அழைக்கும் அழகு. பையன் ‘ரயில் குப் குப்பென்று சென்று கொண்டிருப்பது’ பற்றி 18 பக்கம் கட்டுரை எழுதியிருக்கும் அழகினைச் சொல்லி வாத்தியாரைக் கண்டிக்கும் அப்பா. பின்பு தேர்தலில் நிற்கும் அவரே வாத்தியாரிடம் ஓட்டுக்காக பணம் (அப்போவே) கொடுத்து வழிகிறார். ரசனையான காட்சிகளைச் சொல்லவேண்டும் என்றால் அத்தனைக் காட்சிகளையும்தான் சொல்லவேண்டும். பாடல்கள் இருந்தாலும் பல பாடல்கள் மிகச்சிறிதாகவே உள்ளன. சந்தர்ப்பம் கிடைத்தால் காணத் தவறாதீர்கள்.

Thursday, April 1, 2010

ஆபரேஷன் மஸ்கிட்டோஸ்

அனைத்து ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. கொசுவிரட்டி (வேப்பரைஸர்) ஆன் செய்யப்பட்டிருந்தது. கும்மிருட்டு. மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. (என்ன.. திகில் கதையும் நல்லா வரும்போல இருக்கே ராசா..). இருப்பினும் நேற்று என்னவென்று தெரியவில்லை, நள்ளிரவில் கொசுத்தாக்குதல் மிக அதிகமாக இருந்தது. என்ன காரணம் என்று புரியவில்லை, வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்தாள் ரமா.

அதுதான் கொசுமருந்து என நான் அழைக்கும் ஓடமாஸ். எடுத்து ஒரு இடம் பாக்கியில்லாமல் மேனியெங்கும் பூசிக்கொண்டோம். இதனால் ஒரே ஒரு பிரச்சினை என்னவெனில் தூங்க மட்டும்தான் முடியும். அப்படி இப்படி கூட டச் பண்ணிக்க முடியாது. மீண்டும் தூங்க முயற்சிக்கையில் ஓடமாஸ் குறித்த ஒரு .;பிளாஷ்பேக் (கொசுவத்தி?) நினைவுக்கு வ‌ந்தது. கேட்க நீங்கள் தயாராக இருக்கும் போது நான் சொல்லாவிட்டால் எப்படி?

ஆறேழு வருடங்களுக்கு முன்னர், அம்பத்தூரில் ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக இருந்தபோது இரண்டாவது ஷிப்டில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பணிபுரிவேன். சுமார் முப்பது ஆபரேட்டர்கள், மூன்று சூப்பர்வைஸர்கள். மாலை ஆறு மணியிலிருந்து இரவு இரண்டு மணிவரை பணி. முடிந்ததும் அனைவரும் கம்பெனிக்குள்ளேயே ஆங்காங்கே படுத்துறங்கிவிடுவோம். அப்போதே வீடு செல்லலாம் எனில் பக்கத்திலிருந்து வருபவர்களுக்கு நாய்கள் தொல்லை, தூரத்திலிருந்து வருபவர்களுக்கு கூடுதலாக‌ போலீஸ் தொல்லை (இப்போது ஐடி கார்டு வந்துவிட்டதாம்). எனது அறை பக்கத்தில் ஒரு கிலோமீட்டரில்தான் இருந்தது. ஆகவே ஆரம்பத்தில் ஒரு நாள் 'நாய்க்கெல்லாம் பயப்படுவதா? அதுவும் நானா.. ஹிஹி..' என்று வீரவசனம் பேசிவிட்டு இரவே கிளம்பினேன். என் வீரத்தைப்பார்த்து இன்னொரு நண்பரும் கிளம்பினார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் பக்கத்துத் தெருவில் அலறிப்புடைத்துக்கொண்டு ஆறேழு நாய்கள் கொலைவெறியுடன் துரத்த ஓடிக்கொண்டிருந்தோம். ஒருவழியாக தப்பி அங்கிருந்த இன்னொரு கம்பெனிக்குள் அடைக்கலம் புகுந்தோம். அங்கு நல்ல அறிவுரைகள் கிடத்தன, நண்பனின் கொலைவெறியை சமாளித்தது தனி கதை. ஆகவே அதன்பின்னர் அந்த முயற்சியை கைவிட்டு நானும் கம்பெனியிலேயே இரவு தங்கத்துவங்கினேன், கவனிக்கவும் 'தூங்க' அல்ல 'தங்க'. அங்குதான் அந்த புதிய சோதனை ஆரம்பித்தது. கொசுக்கள்.

சாதாரண காலங்களிலேயே சமாளிக்கமுடியாமல் திணறுவோம். அது ஒரு கொசுக்காலம். ஷிப்ட் முடிந்த பின்னர் படையெடுத்துவரும் கொசுக்களை விரட்ட எத்தனையெத்தனையோ முயற்சிகள்.

ஓரிடத்தில் ஒவ்வொரு சேர்களுக்கு அடியிலும் ஒரு டப்பாவில் ஏதேதோ புகையும் சமாச்சாரங்களை போட்டுக்கொண்டு சேர்களில் நான்கு பேர் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் அந்த டப்பாவின் மீதே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் உயிர் நீத்தவர்களின் தலைமாட்டில் ஒரு தீபம் வைத்திருப்பதைப்போல பல கொசுவத்திகளை உடம்பைச்சுற்றிலும் வைத்துவிட்டு ஆடாமல் அசையாமல் படுத்திருப்பார்கள், இதில் ஒரு ஆபத்து லேசாக புரண்டாலும் போச்சு, விழுப்புண்கள் ஏற்பட்டுவிடும். சிலர் தூக்கமாவது ஒண்ணாவது என்று கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓரிடத்தில் நிற்காமல் உலாத்திக்கொண்டிருப்பார்கள், கால் வலித்து நிற்கும் போது புகைபிடித்து ஒருவர் மீது ஒருவர் ஊதிக்கொள்வார்கள் (புகைபிடிப்பதில் இப்படியும் ஒரு நன்மை). இன்னும் சிலர் உற்பத்திப்பொருட்களை பேக் செய்ய வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர திக்கான பாலிதீன் பைகளுக்குள் நுழைந்துகொண்டு கழுத்துவரை மூடிக்கொண்டு வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் கடிக்கும் கொசுவை விரட்டிவிட்டு டப்பென்று கையை உள்ளுக்கு இழுத்துக்கொள்வார்கள். அப்போது எலக்ட்ரிக் பேட் அவ்வளவு பிரபலம் கிடையாது. இருந்திருந்தால் விடிய விடிய டென்னிஸ் டிப் டிப்பென்று விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள். எங்களுக்கு உறங்குவதற்கு ஒரு அருமையான இடம் இருந்தது. அது அட்டைக்குடோன். அந்த இடம் கொசுக்களின் முழு ஆக்கிரமிப்பில் இருந்ததால் வேறு வழியில்லாமல் மெஷின்களுக்கு நடுவாகவும், ஆபீஸிலும், போர்டிகோவிலுமாய் நாங்கள் சிதறிக்கிடந்தோம். இந்த இடங்களில்தான் மேற்சொன்ன விஷயங்கள் நடந்துகொண்டிருந்தன. குடோனுக்குள் போக எந்த தைரியசாலியும் இல்லை.

பலநாட்கள் இந்த சித்திரவதைகளை நானும் அனுபவித்துக்கொண்டிருந்தேன். இமைகளுக்கு தூக்கமென்பதே இம்மியளவும் கிடையாது. நாளுக்கு நாள் கொசுக்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் கூட்டப்பட்ட மானேஜ்மென்ட் கூட்டத்தில் தொழிலாளர்கள் சார்பில் இந்த பிரச்சினையை பேசி பலத்த கைத்தட்டல் வாங்கினேன். (பாராளுமன்றத்தில் எம்பிக்கள் பேசுவது போல) ஆனால் பலன் ஒன்றுமில்லை.

கடைசியில் ஒருநாள் ஓடமாஸ் விளம்பரத்தைக் கண்ணுற்று ஆகா இப்படி ஓர் விஷயம் இருப்பது தெரியாமல் போய்விட்டதேயென்று அன்று பல ட்யூபுகள் வாங்கிக்கொண்டு போனேன். என் திட்டம் ஜெயித்தது. ஓடமாஸை உடலெங்கும் (ஒரு குண்டுமணி இடம் பாக்கியிருக்கக்கூடாது, உள்ளங்கால் உட்பட நல்ல திக்காக .:பேர்&லவ்லி போல‌) பூசிக்கொண்டேன். இப்போது ஆயுதம் தரித்திருப்பதால் தைரியமாக இததனை நாட்களாக கொசுக்கள் ஆக்ரமிப்பில் இருந்த எங்கள் இடமான கொசுக்குடோனுக்குள்ளேயே ஸாரி, அட்டைக்குடோனுக்குள்ளேயே நுழைந்தேன்.
பரபரப்பான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. உடலெங்கும் ஓடமாஸ் பூசிக்கொண்டிருந்ததால் கொசுக்கள் என்னை நோக்கி பேரிரைச்சலுடன் அலைபாய்ந்து வருவதும் பின்னர் உடம்பிலிருந்து ஒரு அரையடி தூரத்தில் திரும்பிச்செல்வதுமாய் போராட்டம் தொடர்ந்தது, நேரம் செல்லச்செல்ல அந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்ததும் பயங்கர திரில் அனுபவமாய் இருந்தது. ஓடமாஸைக் கொஞ்சம் பிதுக்கி அதில் சில கொசுக்களை பிடித்து ஒட்டிவைத்து பழி தீர்த்துக்கொண்டேன். பின்னர் அங்கிருந்த‌ அட்டைகளை விரித்து (மிக வசதியானது, மெத்தைபோல) நிம்மதியாக உறங்கிக்காட்டினேன். இதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் 2.30 மணி நேரத்திற்கு பின்னர் எழுந்து இன்னொரு கோட்டிங் பூசிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் தெரியும் சேதி.

அன்றிலிருந்து சிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் அதைவென்று காட்டிய வீரன் என அனைவராலும் புகழப்பட்டேன்.

(டிஸ்கி :நேரமின்மையால் இன்னொரு மீள்பதிவு)

.