Friday, May 28, 2010

ரசி

சமயங்களில் நனைந்த இறகைப் போல மனசு கனமாக உணர்கிறேன். அகமும் புறமும் அழுத்துகிறது. நான் தனிமை விரும்பிதான். ஆனால் ஆச்சரியகரமாக இப்போதெல்லாம் அப்படி இல்லை. நீ இல்லாத தருணங்கள் பெரும்பான்மையும் கனமாகத்தான் போய்விடுகின்றன. காற்றிலே மிதக்க நீ வேண்டும்.

உள்ளிழுக்கும் புத்தகம் ஒன்று. ஊதி விளையாடும் ஒரு கவிதை. கவனம் மொத்தத்தையும் குவித்துக்கொள்ளும் ஓவியம். வெள்ளைப் பேப்பரில் பரவும் பென்சிலின் கார்பைட் படலம். ஜன்னலின் ஒருபுறம் சாரல், மறுபுறம் புகைந்துகொண்டிருக்கும் ஒற்றைச் சிகரெட். எதிர்பாராத ஒரு தருணத்தில் உறையச்செய்யும் வான்நிலா. அஃறிணைகள் அள்ளிக்கொள்ளும் ரசனைகளுக்கான பட்டியல் மிகப்பெரிது. ஒற்றை உயர்திணையாய் இப்போது உயர இருப்பது நீ மட்டுமே..

நீ முந்திக் கொண்டது எப்படி? எண்ண எண்ண வியப்புதான். நீயே ஒரு வியப்பு.

Rosy

உன் அழகா இழுத்தது என்னை? இருக்கும். வேறெங்கும் காணக்கிடைக்காத ஒரு புதுவழகாய் இருக்கிறது உனது. முன்னமே நான் தூங்கிப்போன ரகசிய இரவுகளின் இருட்டிலிருந்து உனக்கான அழகை வடித்தெடுப்பதாய் நான் சந்தேகிக்கிறேன். ஒருநாள் ரகசியமாய் விழித்திருந்து உன்னைப்பிடிப்பேன். கூந்தலில் துவங்கி உன்னழகை விவரிக்கத்துவங்கினேன் என்றால் அவை விரிந்துகொண்டேபோகும். என்னால் முடியாது. அப்புறம் உன் விழிகள். அவற்றில் இருப்பது பேரழகென என்னால் சொல்லிவிடமுடியாது. அது வேறு. அதற்காக ஒரு புதிய சொல்லைத்தான் நான் வார்த்தெடுக்க வேண்டும். அது உன்னாலே என்னால் செய்யப்பட்ட தமிழின் புதிய சொல்லாக இருக்கும். ஒவ்வொன்றுக்குமான தனித்தனியான உன் சிரிப்புக்களையும் கூட நான் அழகில் சேர்த்துவிடமுடியாது. அது இன்னொரு மொழி. அதற்கு அர்த்தம் சொல்ல விளைவது கவிதைகளுக்கு அர்த்தம் சொல்வதாய் அறியாமையில் முடியும். திளைத்துக்கொண்டேயிருக்கலாம் போன்ற சுகம் அது.

உன் துள்ளல் என் ரசனை. அது பெண்களுக்குரியதாய்ப் படவில்லை எனக்கு. ஒருவேளை தேவதைகளுக்குரியதாய் இருக்கலாம், தவறி உனக்குத் தரப்பட்டிருக்கவேண்டும். உன்னிடமிருந்து நீயிருக்கும் இடங்களைச் சிதறிப்பற்றுகிறது அது. உன் அறிவின் அற்புதப் பக்கங்களும் சரி, அலட்சியப் பக்கங்களும் சரி இரண்டுமே ஒன்றாகத்தான் படுகிறது எனக்கு. உன் அன்பு மழையைப்போல.. தயக்கமின்றி யாரையும் தொட்டுப்பரவுகிறது. பாரபட்சமில்லாத அதனாலேயே நான் உன்னிடம் வீழ்ந்திருக்கிறேன். நான் நல்லவனில்லை, உள்ளூர அத்தனையையும் எனக்கே பொழிந்துவிடேன் என்று எண்ணியிருக்கிறேன், சமயங்களில். உன்னைத் தழுவுவது என்பது பெருங்கருணையில் புதைதல். கோபம், குரோதம், வன்மை, அதிகாரம் போன்ற அகப்பிணிகளுக்கான ஔடதம் அது. அவை கரைவதை பல சமயங்களிலும் உணர்ந்திருக்கிறேன்.

உன் காமம் என்பது எனக்கானது. இப்போது உன்னைத் தழுவுவது என்பது அதீதம். உனது இதழ்களிலிருந்து வெளியாகும் சொற்களற்ற ஒலிக்குறிப்புகள் என் வாழ்வின் உச்சம். அதிலிருந்து விளைகின்ற முத்தமோ என் மொத்தம்.

நீ வந்திருக்கவில்லையெனின் இல்லாத ஒன்றிற்கான தேடலாகவே என் வாழ்வு முடிந்திருக்கும். அதற்காக நித்தமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.. நன்றி.!

.

Tuesday, May 25, 2010

தரமான ஒரு பதிவு

எழுத வந்து இரண்டு வருடமாகிவிட்டது, 2.5 லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 350 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவும் ஆகியாச்சு (எவ்வளவு வாங்கிக்கட்டினாலும் உரைக்காதாப்பா உங்களுக்கு?), பல விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கியாச்சு (இது எப்போ நடந்தது?).. இப்பேர்ப்பட்ட நேரத்தில் நமக்கு பொறுப்பு கூடிவிட்டது என்பதை உணர்வதால் இனி முன்போல அவ்வப்போது கூட‌ மொக்கைப்பதிவுகள் போடமுடியாது போல தெரிகிறது. மீறிச்செய்தால் நாலு பேரின் கேள்விக்கு ஆளாகிவிடும் சூழல் தெரிகிறது. ஆகவே இனி தரமான பதிவுகள் மட்டும்தான் எழுதுவது என்று முடிவு செய்தாயிற்று. ஆகவே அப்படிப்பட்ட தரமான பதிவுகளை எப்படி எழுதலாம் என்ற ஒரு சின்ன முன்னேற்பாடுதான் இந்தப்பதிவு.

முதலில் நாம் அப்படியான பதிவுகள் ஏதாவது எழுதியிருக்கிறோமா என்ற வரலாறைத் திரும்பிப்பார்த்தோமானால் கடந்துவந்த பாதை காய்ந்து போய் கிடப்பதைக் காணமுடிகிறது. பிறகு ஏன் நம்மிடம் போய் அதை எதிர்பார்க்கிறார்கள்.?

அந்தப்படம் சரியில்லை, இந்தப்படம் நொள்ளை, ஏன் இந்த ஹீரோ ஷேவ் பண்றதேயில்லை என்றவாறு சினிமா குறித்து கருத்தோ, விமர்சனமோ எழுதலாம் என்று பார்த்தால் அதை யாரும் விரும்புவதில்லையாம் (சினிமா பதிவுகள் யாருக்குமே புடிக்காதாமே, ஒரு புள்ளி விவரம் சொல்லுது). ஆகவே அதுகுறித்து எழுதமுடியாது.

அனுபவம் என்ற பெயரில் சின்ன வயசு சம்பவங்கள், ஊர், கல்லூரி நினைவுகளை கொசுவத்தியாக சுத்த‌லாம் என்று பார்த்தால் இந்த சப்ஜெக்டில் நம்ப பதிவர்கள் பழம் தின்று கொட்டையைப் போட்டுவிட்டார்கள். என்ன எழுதினாலும் முன்னமே யாரோ எழுதியதைப்போலவே இருக்கிறது. சரி படிக்கும் புத்தகங்களைப்பற்றி (அப்படியே படிக்கிறோம் என்று பீலா விட்டுக்கலாம்) எதையாவது எழுதிவைக்கலாம் (வேறென்ன விமர்சனம்தான்.. தடியெடுத்தவன்லாம் தண்டல்காரன்கிற மாதிரி பிளாக் இருக்கிறது. ச.தமிழ்செல்வனைக்கூட சக பதிவர் என்றோ, எஸ்ராவை சக எழுத்தாளர் என்றோகூட டப்பென்று சொல்லிவிடலாம். கேட்க யார் இருக்கிறார்கள்?) என்று பார்த்தால் எதையாவது படித்தால்தானே ஆச்சு? புத்தகமா.. பேப்பர்ல பிரின்ட் பண்ணி பைன்ட் பண்ணியிருப்பாங்களே அதுதானே? என்று கேட்கக்கூடிய நிலைமை.

சரி விடு. இருக்கவே இருக்கு தங்கமணி பதிவுகள், டெக்னிகல் பதிவுகள் என்று பார்த்தால் அட என்னப்பா இவன் கேஸட்டை திருப்பி திருப்பி போட்டுகிட்டிருக்கான் என்று முனகல் சத்தம் கேட்கிறது. எவ்வளவுதான் நைஸாக அரைத்தாலும் அரைச்ச மாவு என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். சரி நாம்தான் காதலைப் புழிவதில் கொஞ்சம் அனுபவம் வைத்திருக்கிறோமே அதில் இன்னும் கொஞ்சம் புழிந்தால் என்ன என்று யோசித்தால் வீட்டில் நிலைமை எப்படியிருக்கிறது.? போராட்டக்களத்தில் பூங்குயில் கூவுவதா? சான்ஸேயில்லை.

ஒரே வழி சிறுகதைதான். புனைந்து தள்ளிவிடலாம், ஒரு பய தரமற்ற பதிவுன்னு சொல்லமுடியாது. வேண்டுமானால் நல்லாயிருக்கு, நல்லாயில்லை அவ்வளவுதான் சொல்லமுடியும் அப்படின்னு யோசிச்சு சிறுகதை எழுதலாம்னு உட்கார்ந்தா அதுக்கு ஏதோ 'நாட்' வேணுமாமே. நானும் எவ்வளவோ ரோசனை பண்ணி பார்க்குறேன், அப்படி ஒண்ணு வந்து விழுந்து தொலைக்கமாட்டேங்குது. நான் என்ன பண்றது? சரிதான், பதிவர் வம்புதும்பு, கிசுகிசுக்கள், அறுவை ஜோக், பத்திரிகை செய்திகள், சுண்டல் செய்வது எப்படி போன்று மொக்கை போடலாம் என்று பார்த்தால் அவையெல்லாம் தரமான பதிவுகள் இல்லையாமே..

என்னதான் பண்றது? எழுத வந்து இரண்டு வருடமாகிவிட்டது, 2.5 லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 350 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவு…… (திரும்பவும் முதல்லேர்ந்தா.. சை.!)

Sunday, May 23, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

குறள்- 972

அரசியல் கருத்து மாறுபாடுகள், காழ்ப்புணர்ச்சிகள் ஆகியவற்றை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு இது கொண்டாட்டத்திற்கான நேரம் என்பதை நாம் அனைவருமே உணர்வோம் என நம்புகிறேன். ஒரு பெரிய நிகழ்வின் போது நிகழும் சிறு பிழைகளை ஊதிப் பெரிதாக்கி ஒரு சார்போடு, முன் முடிவோடு அணுகாமல் நேர்பார்வையில் கொள்வோம்.

உலகத் தமிழாய்வு நிறுவனத்தால் துவக்கத்திலும் பின் அதனுடன் தமிழக அரசு இணைந்தும் உலகளாவிய தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன் முதன் மாநாடு ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பெயரில் முதன் முறையாக 1966ல் கோலாலம்பூரில் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மாநாடு 1968ல் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் காலத்தில் நடத்தப்பட்டது. அதன் நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் சென்னை கடற்கரையில் தமிழறிஞர் சிலைகள் நிறுவப்பட்டன. மூன்றாவது (1970) பாரிஸ் நகரிலும், நான்காவது (1974) யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது. ஐந்தாவது மாநாடு எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 1981ல் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஆறாவது மாநாடு (1987) கோலாலம்பூரிலும், ஏழாவது (1989) மொரீஷியஸிலும் நிகழ்த்தப்பட, எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1995ல் நிகழ்ந்தது.

இந்நிலையில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு –2010’ வரும் சூன் 23ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரையில் கோவையில் நடைபெற இருக்கிறது.

எந்த இரு மாநாடுகளுக்கும் இடையே இவ்வளவு கால இடைவெளி இருக்கவில்லை. மேலும் வரலாற்றில் அரிதாகவே காணப்படும் ஆட்சி அதிகாரமும் மொழியார்வமும் ஒருங்கே பெற்ற தலைவர்களில் ஒருவரான கலைஞர் ஐந்து முறைகள், 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்காலத்திலிருந்தும் அவரது காலத்தில் இதுவரை தமிழ் மாநாடுகள் நிகழவில்லை என்பது வியப்பே.! அதன் முற்றாக பிரமாண்டமான முறையிலே மாநாட்டு ஏற்பாடுகளும் நிகழ்வுகளும் இருக்கப்போகின்றன என்பதை அறிய வருகிறோம். இதுகாறும் இருந்த ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பெயர்ப் பதம், ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ என்பதாக மாற்றம் கொண்டுள்ளது.

மேலும் 1997லிருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் இணைய மாநாட்டின் ஒன்பதாவது நிகழ்வும் இப்பெரு நிகழ்வின் ஒரு பகுதியாக அமைகிறது.

தமிழ் இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள் முதலான தலைப்புகளில் முதன்மை அரங்கங்களும், பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள், பொழிவரங்கங்கள், 50க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அமர்வரங்கங்களும் நிகழ இருக்கின்றன. பேரணி, கலை நிகழ்ச்சிகளும் விழா நிகழ்ச்சி நிரல்களில் உள்ளன. மேலும் இதுகுறித்த தகவல்களை அறிந்துகொள்ள ‘உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு’க்கான தனித் தளத்திற்குச் செல்லலாம்.

இணையத் தளம் : www.ulakathamizhchemmozhi.org

இவ்விணையத்தளத்தில் தமிழின் வரலாற்றுச்சிறப்புகளும்  மாநாடு நிகழவிருக்கும் கோவையின் சிறப்புகளும் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. மேலும் படைப்பு மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து விழாவில் நாம் பங்கேற்கவும் இத்தளம் வாய்ப்பினை வழங்குகிறது. 

மாநாட்டுக்கான இலச்சினை.

World_Tamil_Conferance_Logo(Tamil)

மாநாட்டுக்கான மைய நோக்கப்பாடல் :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளீர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி -
நம் மொழி - நம் மொழி - அதுவே
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

-மு.கருணாநிதி

பாடலின் இசை வடிவம் இங்கே. காணொளி வடிவம் யாரிடமாவது இருப்பின் பகிர்ந்துகொள்ளலாம்.

இசையமைத்தவர் : ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள் : 30க்கும் மேற்பட்ட தென்னிந்தியாவைச் சார்ந்த மூத்த மற்றும் இளைய திரையிசைப் பாடகர்கள்.

பெருமைக்குரிய பெருவிழா சிறப்போடு நிகழ்ந்திட, பயன் மிகுந்ததாய் அமைந்திட நம் விருப்பங்களும் வாழ்த்துகளும்.!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

-பாரதி

.

Friday, May 21, 2010

காதலிக்க நேரமில்லை

சமீபத்தில் டிவியில் ஒரு பிளாக்&ஒயிட் படம் ஓடிக்கொண்டிருந்தது. சானல் மாற்றும் முன்னர் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது. ஹீரோயின் படித்த, பணக்கார கர்வத்தில் ஹீரோவை பிரிந்து வாழ்கிறார் என்ற முன்கதையை புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் மழைக்காக ஒரு வீட்டில் ஒதுங்க அந்த வீட்டுப்பெண் அன்போடு மழைவிடும் வரை வீட்டுக்குள் வந்து உட்காரச்சொல்ல இவரும் உட்செல்கிறார். இவரை ஹாலில் அமரவைத்துவிட்டு பக்கத்து அறையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கும் அவரது கணவருக்கு பணிவிடைகள் செய்கிறார் அவர். சட்டை மாட்டிவிடுகிறார், காபி தருகிறார், பை, மற்றும் மதிய உணவு எடுத்துத்தந்து அன்பொழுக காதல் வார்த்தை கூறி அனுப்பி வைக்கிறார். வாசல் வந்தவருக்கு ‘அடடா மறந்துட்டீங்களே, குடை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று குடை எடுத்துத்தருகிறார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹீரோயின், அவரது கணவர் சென்றவுடன் அந்தப்பெண்ணிடம், ‘ஏதேது உங்கள் கணவர் என்ன குழந்தையா? நீங்கள்தான் வேலைக்காரியா? இப்படி பணிவிடை செய்கிறீர்களே..’ என்று கேட்க அவர் இப்படி பதிலளிக்கிறார்,

“ஆமம்மா, என்னை பொறுத்தவரை என் கணவர் ஒரு குழந்தைதான். மேலும், வெளியே வேலைக்குச் செல்லும் ஆண்கள் அங்கே ஒரு வேலைக்காரரைப்போல நடத்தப்படுகிறார்கள் எல்லாவிதத்திலும். பாவம், குறைந்த பட்சம் வீட்டிலாவது ஒரு எஜமானரைப்போல இருக்கட்டுமே..”

இதெதற்கு இப்போ என்கிறீர்களா? ஏதோ சொல்லணும்னு தோணுச்சுது. ஹும்.!

**************************

சகோதரனின் திருமணத்தில் இருக்கும் பரபரப்பு மற்றும் பணிகள் சகோதரியின் திருமணத்தில் இந்தப்பெண்களுக்கு இருக்காது போலும். ரமா தன் சகோதரியின் திருமணத்தில் ஒரு விருந்தினரைப்போல பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னருகிலேயே நிறைய நேரம் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தார்.  காலையில் எனக்கு மாட்டிவிடப்பட்டிருந்த செயின் வெளியே தெரியும்படி இருக்கிறதா, ப்ரேஸ்லெட்டின் கொக்கி சரியாக மாட்டியிருக்கிறதா, சட்டையை ஒழுங்காக இன் செய்திருக்கிறேனா என்று என்னைச் செக் பண்ணுவதிலேயே அவருக்கு பாதி நேரம் கழிந்திருந்தது.

சிவப்புப் பட்டுப்புடவையிலும், தளர்த்திக்கட்டப்பட்டிருந்த கூந்தலில் நிறைந்திருந்த மல்லிகையிலும் ரொம்ப நாளைக்குப் பின்னர் அவர் ரொம்ப அழகாக இருந்ததாக எனக்குப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் காதலித்துக்கொண்டிருக்க முடியாமல் நான்தான் அன்று மாலையே கிளம்பவேண்டியதாயிற்று. ஹும்.!

**************************

நண்பரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை டு கோவைக்கு தரை, வான், தண்ணீர் எந்த வழியிலும் டிக்கெட் கிடைக்காத கடுப்பில் சென்னையிலிருந்து இன்னும் 20 ரயில்கள் கோவைக்கு விடப்பட்டாலும் இந்தக்கூட்டத்துக்கு பற்றாது என புலம்பிக்கொண்டிருந்தார். நான் என்ன சொல்கிறேன் என்றால் சென்னையிலிருந்து இன்னும் 40 ரயில்கள் தென்திசைக்கு (மதுரை, நெல்லை, கன்யாகுமரி) விடப்பட்டாலும் பற்றாது. தட்கலில் எடுத்துக்கொள்ளலாம் என இருந்தவனுக்கு காலை 8 லிருந்து 8.10க்குள் லைன் கிடைக்காமல் திணறி, பின் லைன் கிடைத்தவுடன் ஸ்டேடஸ் சொல்கிறது வெயிடிங் லிஸ்ட் 100க்கு மேல். அப்புறம் பிரைவேட் பஸ்களிலும் கூட இடம் கிடைக்காமல் நான் ஊர் போய் செல்வதற்குள் விளங்கிவிட்டது.

மேலும் ரயில்களை வரவிடாமல் செய்வதில் இந்த பிரைவேட் பஸ் நிறுவனங்களின் பங்கு பெருமளவு இருப்பதாக விஷயம் தெரிந்த ஒரு நண்பர் புலம்பிக்கொண்டிருந்தார். அது சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஹும்.!

****************************

ஏராளமான தமிழ் வலைப்பூ திரட்டிகளின் மத்தியில் இன்னுமொரு திரட்டி ‘தமிழ்பிளாகர்’ (www.tamilblogger.com) உருவாகியிருக்கிறது. இதன் முகப்பு மற்றும் வடிவமைப்பு பிறவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுவதாலேயே நன்றாக இருக்கிறது எனலாம். அனைவருக்குமான இடமாக அல்லாமல் 101 பிரபல வலைப்பூக்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கின்றன. அதென்ன பிரபலம் என்கிறீர்களா? அதெல்லாம் அவர்களுடைய சொந்தத்தேர்வாக இருக்கலாம்.

போய்ப்பாருங்கள், என்னுடையது 101 வது இடத்திலிருக்கிறது. ஹும்.!

.

Monday, May 10, 2010

பன் பிக்சர்ஸ்.. குசும்பன் நடிக்கும் ‘எறா’

தி.நகர் அருணா உணவகத்தில் ஒரு பெரும் பதிவர் கூட்டமே காத்திருந்தது. அனைவரின் கண்களிலும் சோகம். பல முக்கிய பதிவரைக் காணாமல் ஏரியாவே அல்லோல கல்லோல பட்டது. பார்ட்டிக்கு மிகவும் தாமதமாகிவிட்டதால் பீச்சில் காந்திசிலை அருகே நடந்த பதிவர் சந்திப்பு முடிந்து வேறு வேறு திசைகளில் போயிருந்தனர் பதிவர்கள். அவர்களை தேடிப்பிடித்து பலரையும் பைக்குகளிலும், கார்களிலும் பிடித்துவந்துகொண்டிருந்தனர் மீட்புக்குழுவினர். ஒரு கட்டத்தில் எல்லோரும் வந்துவிட்டார்கள் என்று நினைத்தபோதுதான் வெங்கி 'எறா' இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்து, உணர்ச்சிப்பெருக்கோடு அப்துல்லாவிடம் கெஞ்சினார்.

"ஐயா வேண்டிய‌வ‌ங்க‌ எல்லோரும் வ‌ந்துட்டாங்க‌, ஆனா முக்கிய‌மான‌ ஒருத்த‌ர் ம‌ட்டும் இன்னும் வ‌ர‌லைங்கையா.."

"விட்டுடுங்க வெங்கி. எல்லோரும் வந்தாச்சுல்ல.. ஒரு பதிவருக்காக பிரச்சினையை பெருசாக்காதீங்க. இத்தனை பேர் வந்தத நினைச்சு சந்தோசப்படுங்க. ட்ரிங்க்ஸுல்லாம் வேற ஆர்டர் பண்ணிட்டோம்."

அப்போது சஞ்சய், சந்தோஷ், ஆதவன் அனைவரும் கண்ணீரோடு அப்துலிடம் முறையிட்டனர், "ஐயா, எறா இல்லாமல் எங்களுக்கு இந்த பார்ட்டியே தேவையில்லை ஐயா, உங்க‌ளுக்கு அவ‌ன‌ப்ப‌த்தி தெரியாதுங்க‌ ஐயா.. அவ‌ன் மொக்கை போடுற‌துல 10 கார்க்கிக்கு ச‌ம‌ம். கும்மிய‌டிக்குற‌துல 20 வெண்பூவுக்கு ச‌ம‌ம். க‌லாய்க்கிற‌துல 30 அதிஷாவுக்கு ச‌ம‌ம். சாப்பிடுற‌துல 40 வெங்கிக்கு ச‌மம்ங்கையா.. அவ‌ன் எங்க‌ளுக்கு வேணும்ங்கையா.. வேற மாதிரி சொல்றதுன்னா திங்கிறதுல அவன் 10 யானைக்கு சமம். சுறுசுறுப்புல 20 எருமைக்கு சமம். அறிவுல 30 வாத்துக்கு சமம்ங்கையா.. அவ‌ன் எங்க‌ளுக்கு வேணும்ங்கையா.."

அப்துல் ஆன‌ந்த‌க்க‌ண்ணீர் வ‌டித்து, "உங்க‌ளிட‌மெல்லாம் இவ்வ‌ள‌வு அன்பையும், ப‌ண்பையும், புண்ணாக்கையும், கிழிஞ்ச டவுசர்களையும் ச‌ம்பாதித்து வைத்திருப்ப‌வனை ஒரு நாய் கூட நெருங்கமுடியாது, நீங்க க‌வ‌லைப்ப‌டாதீங்க, நான் ஹெலிகாப்டரை விட்டு சே, ஆஃபீஸ் காரை அனுப்பி தேடச்சொல்றேன். வ‌ந்துருவான். நீங்க‌ போய் ஆர‌ம்பிங்க.." என்கிறார்.

உள்ளே போய் எல்லோரும் விருந்தை ஆரம்பிக்க எத்த‌னித்த‌ விநாடியில் 'ட‌மார்'என்று பாத்ரூம் க‌த‌வுக‌ளை திற‌‌ந்துகொண்டு சொய்ங்கென்று வெளியே வ‌ருகிறார் ந‌ம் குசும்ப‌ன் என்ற‌ 'எறா'. அவர் வெளிவந்த‌‌ அதிர்ச்சியில் தாமிராவின் கையிலிருந்த‌ ட‌ம்ள‌ர் குலுங்கி அதிலிருந்த 90 சித‌றுகிற‌து. வெண்பூ வாயில் போட்ட‌ சுண்ட‌லில் ரெண்டு கீழே விழுகிற‌து. கார்க்கியின் டிஷர்ட் டர்ர்ராகிற‌து. ந‌ர்சிம்மின் கூலிங் கிளாஸ் ந‌ழுவுகிற‌து. பைத்திய‌க்கார‌ன் கையில் வைத்திருந்த 'ஃபூக்கோ : ஒரு ஆய்வும் மண்டைக்குடைச்சலும்' புத்த‌க‌ம் ப‌ற‌க்கிற‌து. ஜ்யோவ்ராமின் பின் ம‌ண்டை முடியிலிருந்து ந‌டும‌ண்டைக்கு ஏற‌முய‌ன்ற‌ பேன் ஒன்று வ‌ழுக்கி மீண்டும் பின் ம‌ண்டைக்கே செல்கிற‌து. ஹோ... என்று உற்சாக‌க்கூச்ச‌ல் எழுப்புகின்ற‌ன‌ர் ச‌ந்தோஷ், ஆத‌வன், மின்னல் கூட்ட‌ணி.

"நான் வ‌ந்து ஒண்ணேமுக்கா ம‌ணிநேர‌ம் ஆவுது. கொஞ்ச‌ம் வயிறு சரியில்ல‌.. அதான் உள்ள‌ உக்காந்திருந்தேன்..ஹிஹி" தொட‌ர்ந்து ப‌ஞ்ச் ட‌ய‌லாக்.

"நான் வ‌ர‌வேண்டிய‌ நேர‌த்துல‌யும் க‌ரெக்டா வரமாட்டேன். நேரங்காலம் தெரியாம வரக்கூடாதது வந்தாலும் கரெக்டா‌ போயிடுவேன்" என்று டாய்லெட்டைப்பார்க்க, அதிஷா மூக்கைப் பொத்திக்கொள்கிறார்.

தொட‌ர்ந்து அனைவ‌ரும் உற்சாக‌மாக‌ விருந்தைத் துவ‌க்குகின்ற‌ன‌ர்.

Sura4

சில நாட்களுக்குப்பின்னர்..

தண்டோரா ஆபீஸில் கூட்டம் அலைகடலென திரண்டிருக்கிறது. உ.த அண்ணாச்சி தலைமை வகிக்கிறார். பதிவர் கூட்டமே அழுது புலம்பிக்கொண்டிருக்கிறது.

"அய்யகோ.. எங்கள் பதிவெல்லாம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதே. ஒரே நாளில் 1340 குடிசைகள், சே.. பிளாக்குகள் ஹேக் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டதே.. நாங்களெல்லாம் என்ன செய்யப்போகிறோம்.? ஒரு வழியுமில்லாம சுவத்துல எழுதிக்கிட்டிருக்கோமுங்கய்யா.. ஏதாவது வழி சொல்லுங்க.."

கூட்டத்தில் கடைசியாக நின்று கொண்டிருந்த ஜோஸப்பும், ஜீவ்ஸும் ‘ங்கொய்யால, இப்பதாண்டா மக்கள் நிம்மதியா இருக்காங்க, இப்படியே தொலைஞ்ச பிளாக்குகள் கிடைக்காம போய்த்தொலையட்டும்” என்று யாருக்கும் கேட்டுவிடாமல் முணும்ணுக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் முழங்குகிறார், "இதுக்குதான் பிளாகர் குழுமம் உண்டாக்கி என்னைத் தலைவராக போடுங்கள் என்று சொன்னேன். யாரு கேட்டீங்க? அன்னிக்கு கேள்வி மேல கேள்வியா கேட்டு என்னை வாயடைச்சிட்டீங்க.. எம்பேச்ச கேட்காம அந்த எறா பின்னாடி போனீங்கள்ல.. நல்லா வேணும் உங்களுக்கு.."

ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர் போல‌ கேபிள், "உங்க‌ எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன். ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்துப்போச்சுது. பேசாம‌ என் செல‌வுல‌ ஒரு சைட் கிரியேட் ப‌ண்ணித்தாரேன். அதுல‌ வேணும்னா எல்லோரும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் குரூப்பா எழுதிக்குங்க‌? பிளாக்கை ம‌ற‌ந்துடுங்க‌.." என்கிறார். (த‌ன் பிளாகை போட்டியில்லாமல் த‌னிப்பெரும் புகழ் பெற‌வைக்க‌ ச‌தித்திட்ட‌ம் தீட்டிய இவ‌ர்தான் வில்ல‌ன்).

இதுவாவது கிடைத்ததே என்று எல்லோரும் மகிழ்ந்து "நீங்க‌ ந‌ல்லாருக்க‌ணும்யா.." என்று சொல்லிவிட்டு புதிய தளத்தின் ஐடி, பாஸ்வேர்டை வாங்கிக்கொண்டு வெளியே வ‌ருகிறார்க‌ள். அதுவ‌ரை காணாம‌ல் போய் விட்ட‌தாக‌ நினைத்த‌ 'எறா' எதிரே வ‌ருகிறார். ஹேக்கிங்கை த‌டுப்ப‌த‌ற்காக‌ தாம்ப‌ர‌த்துக்கும், அண்ணாந‌க‌ருக்கும் ந‌டையாக‌ ந‌ட‌ந்து ப‌திவ‌ர்க‌ள் வீட்டுக்கு சென்ற‌தில் ட‌ய‌ர்டாகியிருந்தார். இவ‌ர்க‌ளைப்பார்த்து கொதிக்கிறார்,

"அவ‌ன் ஒத்தை சைட் த‌ர்றான்ன‌தும் எல்லோரும் ஒத்துக்கிட்டீங்க‌ளே, எல்லோரும் ஒண்ணை யோசிச்சீங்க‌ளா? இனிமே எப்பிடி மொக்கை போடுவீங்க‌? எங்கே போய் கும்மிய‌டிப்பீங்க? பின்னூட்டம் போடமுடியுமா? அவ‌ச‌ர‌த்துக்கு ஒரு அனானி க‌மென்டுதான் போட‌முடியுமா உங்க‌ளால‌.?"

எல்லோருக்கும் அறிவு வந்துவிட‌ மீண்டும் ஆபீஸுக்குள்ளே போய் ஐடி பாஸ்வேர்டை கேபிளின் மூஞ்சியிலேயே போட்டுவிட்டு வ‌ந்துவிடுகிறார்க‌ள்.

கேபிளும், எறாவும் நேருக்கு நேர்.

"டாய்.. என் திட்ட‌த்தையெல்லாம் த‌விடுபொடியாக்கிட்ட‌யில்ல‌.. உன்ன‌ என்ன‌ ப‌ண்ற‌ன் பாருடா லூசுப்பயலே.."

"ஒரு முறை திட்ட‌ற‌துக்கு முன்னாடி 100 தடவை ந‌ல்லா யோசிச்சு திட்டு. ஒரு த‌பா திட்டீட்டேன்னா.. அப்புற‌ம் ங்கொய்யால பதிலுக்கு கெட்டவார்த்தையில 1000 பின்னூட்டம் போடுவேன்”

பப்ளிக் இருந்ததால் கேபிள் அமைதியாகிவிடுகிறார். மேலும், “நான் குடுக்குற சைட்டு கூட வேண்டாம்னா என்னடா பண்ணப்போறீங்க, சுவத்துல எழுதிட்டு திரியப்போறீங்களா?” என்று கேட்க.. ஆவேசமாக கண்கள் சிவக்க ‘எறா’ சபதமெடுக்கிறார்.

“இன்னும் மூணே நாளுல 3000 பிளாக் ஓபன் பண்ணி எங்க பதிவர்களுக்கு இலவசமா கொடுக்கல.. எம்பேரு ‘எறா’ இல்லடா..” ஹோய்.. ஹோய்ய்.. என்று கத்திவிட்டு போய்விடுகிறார்.

றாவின் அப்பா வயதான வடகரை வேலன், சர்ச் ஃபாதர் அனுஜன்யாவிடம் பிள்ளையைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்க ஃபாதர் அனுஜன்யா அவரைத் தேற்றுகிறார்.

“ஐயா, ஊரு உலகத்துல அவங்களுக்குன்னு ஒரு பிளாக் வச்சுக்கிட்டு நாலு பின்னூட்டம், நாப்பது ஹிட்ஸுன்னு சந்தோஷமா வாழத்தான் ஆசப்படுவாங்க. ஆனா உங்கப் பிள்ளை கேடியில ஒருத்தன். ஊர்ல இருக்குற எல்லாத்துக்கும் பிளாக் கிடைக்கணும்னு நினைக்கிறான். அவன் உறுதியில இரும்பு மாதிரி. நாளைக்கு என்னாவான்னு யாருக்கும் தெரியாது. கம்ப்யூட்டரும் கிடையாது, இன்டர்நெட்டும் கிடையாது. ஆனாலும் எப்பிடி 3000 பிளாக் ஓபன் பண்றான்னு பாக்கலாம்.. அவன் சாதிப்பான்யா.. நீங்க வயசான காலத்துல கீழ விழுந்து வைக்காமல் வீட்டுக்குப்போற வழியப்பாருங்க.. லொக் லொக்..”

தொடரும்..

(சும்மனாச்சுக்கும். அதெல்லாம் தொடராது. மொக்கை போடுறதுக்கும் ஒரு அளவு இருக்குதுல்ல.. ஹிஹி)

கோடைக் கொண்டாட்டம்

தற்போது ஏதோ ஒரு டிவி சானலில் ஏறத்தாழ இப்படியொரு விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

“கோடைமழை கொண்டாட்டம்.. தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 12 மணி வரை ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். நிகழ்ச்சிகளின் இடையிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் எழுதுங்கள். அதிர்ஷ்டசாலிகளுக்குக் கிடைக்கும் சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா, தவறவிடாதீர்கள் கோடைமழை கொண்டாட்டம்..”

எனக்கு என்ன ஆச்சரியம் என்னவென்றால் இரவு 12 மணியிலிருந்து காலை 6 மணி வரைக்காவது மக்கள் தூங்கித்தொலையட்டும் என்ற நல்லெண்ணமாவது இவர்களுக்கு மிச்சமிருக்கிறதே என்பதுதான்.

*********************

நண்பனொருவன் இருக்கிறான். நான் ஒரு நாலு பக்க சிறுகதையை படித்து முடிப்பதற்குள் நானூறு பக்க நாவலை/ புத்தகத்தை வாசித்து முடித்து தூக்கிப்போட்டுவிடுவான். ‘என்னடா டுபாகூர் விடுறியா’ என்று புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டாலோ, கதையைச் சொல்லச்சொன்னாலோ கரெக்டாகச் சொல்லிவிடுவான். நமக்கும் இப்படி வாசிக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக்கொள்வேன்.

அப்புறம் மேலும் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, அவன் சொய்ங்கென்று போய்க்கொண்டிருக்கும் போது சில வரிகளை, சில பாராக்களை, தேவைப்பட்டால் சில பக்கங்களையே ஜம்ப் செய்துவிடுகிறான் என்று. நானோ ஒவ்வொரு எழுத்தாக, வரியாக ரசித்து உள்வாங்கிப் படிப்பவன். தேவைப்பட்டால் சில வரிகளில் தொடர் சிந்தனையில் வீழ்ந்து பின் எழுந்து வாசித்து முடிப்பேன். சில வரிகளோ, பாராக்களோ, அத்தியாயங்களோ புரியாமலோ, படு போராகவோ இருந்தால் முழுமையற்ற உணர்வு கிடைக்கும் என்பதால் தொடர்ந்து வாசிக்காமல் விட்டுவிடுவேன். இப்படி பாதியில் நிற்கும் புத்தகங்களும் அனேகம் உண்டு.

இந்நிலையில் அவன் செய்வது சரியல்ல என்று சொன்னால் அவன் சொல்கிறான், “படைப்புகளின் லட்சணத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை. அப்படி நிதானித்துக்கொண்டிருந்தால் லிஸ்டில் இருக்கும் புத்தகங்களை என்றைக்கு வாசித்து முடிப்பது?”. இது சரியா.?

********************

அவரது விகடன் காலத்திலிருந்தே சிம்புதேவனின் ரசிகன் நான். ‘முரட்டுச்சிங்கத்தை’ ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எனது எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி ஏமாற்றியிருக்கிறார் சிம்புதேவன்.

விதம்விதமான ரசனையான காரெக்டர்கள், வித்தியாசமான கதைக்களம், இரண்டு கிராமங்கள், வில்லன்கள், புதையல் வேட்டை, வைரம் என ஸ்கோப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தும் மகா மட்டமான திரைக்கதையால் தியேட்டரில் இருந்து பாதியிலேயே வெளியே போய்த்தொலைவோமா, எப்போ படம் முடிந்து தொலையும் என்று எண்ணவைத்துவிட்டார். ஆங்காங்கே தெரியும் ரசனையான காட்சிகள் அத்தனையும் படத்தால் வேஸ்ட்டாகித் தொலைகிறது. பெருத்த ஏமாற்றம்.

**********************

கிழக்கு வெளியீடான சிபி.கே.சாலமன் எழுதிய டெக்னிகல் ஆட்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான அனைவருக்குமான ‘6 சிக்மா’, ‘TQM’ போன்ற நூல்களை சமீபத்தில் வாங்கினேன். இவற்றைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் வாங்கவோ, படிக்கவோ நான் ஆர்வம் காண்பித்ததில்லை. ஏனெனில் பொதுவாக இவை எனக்கு படிக்க போரடிக்கக்கூடியவை. ஆனால் சில மாற்றங்கள் நிகழும் நேரத்தில் தெரிந்தவையானாலும் ஒரு முறை வாசித்து வைப்போம் என்ற எண்ணத்திலும் தமிழில் எப்படி இவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று திடீரென எழுந்த ஆவலிலும் வாங்கினேன். முழுதுமாக வாசிக்கவில்லை. ஒரு பறவைப்பார்வை பார்த்த நிலையில் எனக்குத் தோன்றுவது யாதெனில், இந்தப் புத்தகங்களை வாசித்த யாராவது எனது டெக்னிகல் பதிவுகளை வாசிக்க நேர்ந்தால், ‘ஆஹா, என்னமா லவட்டியிருக்கான்யா..’ என்று நினைக்கபோவது நிச்சயம். அவ்வளவு ஆர்டராக இருக்கின்றன டாப்பிக்ஸ்.! அது சரி, ‘அஞ்சையும், அஞ்சையும் கூட்டினா எவ்ளோ’னு கேட்டா சிபி.கே.சாலமன் சொல்வதைத்தானே நானும் சொல்லமுடியும். இருந்தாலும் அவ்வ்வ்வ்வ்..

சில நண்பர்கள் சொல்வதுண்டு. உங்கள் டெக்னிகல் பதிவுகளைப் புத்தகமாக்கலாமே என்று. அதற்கு அவசியமேயில்லாமல் செய்துவிட்டன இந்தப்புத்தகங்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். முழுவதும் வாசித்தபின் தனிப்பதிவாக பகிர்ந்துகொள்கிறேன்.

**********************

நீ ஒன்றுமே செய்யவேண்டாம்

சம்மதம் மட்டும் சொல்

உனக்கும் சேர்த்து

நானே காதலிக்கிறேன்.

-தபூ சங்கர்

**********************

கிரியேடிவ்வான ஆனால் பதறவைக்கும் ஒரு விளம்பரம், யார் செய்தது எனத் தெரியவில்லை. மெயிலில் வந்தது. வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசாதீர்கள் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லும் படம்.

Drive

.

Saturday, May 8, 2010

சேரிடம் சேராதவை


08.05.2010

எஸ்ஜி,

எண்களுக்கும் எனக்குமான விளையாட்டு என்றுமே ஓயாத ஒன்று. யாவுமே என் நினைவுத்திறனைக் கேலி செய்பவை. ஆனால் இன்று 'மே 8'. இது வெறும் எண்ணாகவோ, ஒரு தேதியாகவோ மட்டும் இருந்துவிடமுடியாது.

நான் என்னவெல்லாமாகவோ இருந்துகொண்டிருக்கிறேன். என்னை நானாக உணர வரும் சந்தர்ப்பங்கள் அரிதானவை. நீ அரிதானவள். என் உலக கோபத்தையும் உன் மீது மட்டுமே நான் கொண்டிருக்க என்னிடமிருக்கும் காரணங்கள் போதுமானவைதான். ஆனால் அது என்னால்தான் முடிவதில்லை. கோபத்தில் என் கன்னத்தைக் கீறிய நகங்கள் என் பிள்ளையின் பிஞ்சு விரல்களுடையவை. அவன் மீது நான் கொண்ட அளவிலேயே என் கோபம் உன் மீதானதும்.

ஸ்டிக்கர் பொட்டினை தன் குட்டிக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு அடிக்கடி எடுத்துப்பார்த்துக் கொள்ளும் ஒரு சின்னஞ்சிறுமியின் ஆர்வத்தை ஒத்ததாக இருக்கிறது, உன் நினைவுகள் எனக்கு. காலம் அடித்துச் சென்றுவிடாமல் அடிக்கடி எடுத்துத் துடைத்துப் பார்த்துக் கொள்கிறேன். குறுகுறுவென ஏதோ உள்ளுக்குள் ஓடும் அந்த சுகம் போதையாக இருக்கிறது.

வெடித்துக்கிடந்த பூமியில் விழும் முதல் துளியைப் போல எதற்காக இப்போதைய உனது அரிதான அலைபேசி அழைப்புகள்? எதைச் சொல்ல விழைகிறாய்? என்னிடம் கேள்விகளே இல்லாத போது.

இப்படியே இருக்கவிடு இறக்கும் வரையிலும். இன்றைக்கான வாழ்த்துகள் எஸ்ஜி.!

-கேகே.

எஸ்ஜி எழுதிய ஒரு கடிதம் இங்கே.
இன்னொரு 'மே 8' நினைவோடை இங்கே.
ஒப்புமை கொண்ட இன்னொரு புலம்பல் இங்கே.

Thursday, May 6, 2010

வேங்கை

பூதச்சாமி, வடக்குவாச்செல்லியம்மன் கோயிலைத் தாண்டி கருங்குளத்துக் கரை மீது ஏறியபோது நன்றாக இருட்டியிருந்தது. கரையின் வலது புறம் பெரிய கரும்பனைகள் வரிசையில் நின்றிருந்தன. அதற்குக்கீழே துவங்கியிருந்தன கண்ணுக்கெட்டிய தூரம் வரை விளை நிலங்கள். அது நடவு முடிந்திருந்த காலம். இடதுபுறம் கரைமுட்ட தண்ணீர் நிரம்பியிருந்த கருங்குளம். குளத்துக்கரை மாட்டு வண்டி செல்லுமளவில் நல்ல அகலமானது. இருபுறமும் புதர்கள் மண்டிக்கிடந்தன. இடையிடையே இருந்த ஆலமரங்கள் அந்நேரத்துக்கு பெரும் அச்சத்தைத் தருவதாக இருந்தன. பூதச்சாமி இதற்கெல்லாம் அஞ்சுகிறவனில்லை. இடைகாலுக்கு சென்று திரும்பும்போது தாமதமாகிவிட்டால் இந்த வழியாக நடந்து திரும்புவது வழக்கமான ஒன்றுதான். இந்தக்கரையில் இரவு நேரங்களில் நரிகள் நடமாட்டம் இருப்பதாக பேச்சு இருந்தது. இவன் கண்டதில்லை எனினும் இடுப்பைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். வலுவான மடக்குக்கத்தியொன்று தோல் பெல்டுக்குள் சிக்கியிருந்தது. அவனது வலது கையில் உரச்சாக்கு ஒன்றை கொத்தாக பிடித்துக்கொண்டிருந்தான். அதனுள் உருண்டையாக எதுவோ இருந்தது.

மாலையில் பெய்திருந்த மழையில் வழியெங்கும் சேறும் சகதியுமாயிருந்தது. அதனால் அவனால் வேகமாக நடக்கமுடியவில்லை. அமாவாசையை நெருங்கிக்கொண்டிருந்த நாளெனினும் தேய்ந்த நிலவையும் கூட அன்று காணமுடியவில்லை. இருட்டு அசாத்தியமாக இருந்தது. சரியாக கரைப்பாதையில் நடுவில் வலது புற சரிவில் பொலிமாடன் கோவில் ஒன்று இருந்தது. கோவில் என்பதைவிட புதர்களுக்கு நடுவே ஓர் ஒற்றைப்பீடம் என்று சொல்லலாம். அதை நெருங்கியதும் சரிவில் இறங்காமல் பாதையிலிருந்த படியே கையிலிருந்த சாக்குப்பையை பீடத்தினருகே விழுமாறு வீசினான் பூதச்சாமி. பை அதையும் தாண்டி கீழே விழுந்தது. அது சரிவில் புதர்களில் சிக்கிக்கொண்டதா? அல்லது அதையும் தாண்டி கீழே முதல் வயலிலேயே விழுந்துவிட்டதா தெரியவில்லை. அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லாமல் பூதச்சாமி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

சற்று தூரம் கூட சென்றிருக்கமாட்டான், திடீரென என்ன நினைத்துக்கொண்டானோ இடது புறம் குளத்துக்குள் இறங்கினான். சகதியில் கால்கள் புதைய சற்று தூரம் நடந்து நீந்தத்துவங்கியவன், கரைக்கு இணையாக சற்று தூரத்தில் நீந்தி ஒரு வளைவில் மீண்டும் கரையேறினான். வேட்டியை அவிழ்த்துப் பிழிந்து தலையைத் துவட்டிக்கொண்டே ஊரை நோக்கி நடக்கத் துவங்கினான்.

ன்றிலிருந்து ஆறு நாட்களுக்கு முன்னர்..

பொலபொலவென பொழுது விடிந்துகொண்டிருக்கும் ஒரு அதிகாலை நேரத்தில் பரமசிவமும், பூதச்சாமியும் கிழக்கே பனங்காட்டுக்குள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். ஏற்கனவே கலயத்திலிருந்த பாதிக் கள்ளைக் குடித்திருந்தனர். 'யண்ணே.. போதுமா இன்னொன்னு தரவா?' என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் மற்றவர்களைக் கவனிக்கப் போனான் வியாபாரி. அவனைக் கண்டுகொள்ளும் நிலையில் இவர்கள் இருவருமே இல்லை. பரமசிவம் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். பூதச்சாமிக்கு அந்த பழக்கம் இல்லை ஆதலால் அவன் இவனை கேட்கவும் இல்லை.

பரமசிவத்தின் கடும்கோபம் அவன் முகத்திலேயே தெரிந்தது. பதற்றமாக இருந்தான். கலயத்திலிருந்த மிச்சத்தை காலி செய்யத்துவங்கினான். ஏற்கனவே அவன் கோபத்துக்கான காரணத்தைச் சொல்லியிருந்ததால் பூதச்சாமியும் அதிர்ச்சியிலிருந்தான். இருப்பினும்,

"என்ன மாப்ள நீயி, மெதுவாக் குடி.."

"என்னல நாயம் இது.? நா மூணு பிள்ளையள வச்சிக்கிட்டு நாயி படாத பாடு படுதேன். கொஞ்ச கூட ஈவு எரக்கமே இல்லாம இப்பிடி பண்ணிப்புட்டானுவளே.."

"பொறுமையா இரு மாப்ள.. என்ன பண்ணுததுன்னு பாக்கலாம்"

"என்னத்த பொறுமையா இருக்கச்சொல்லுத.. நா என்ன பூராத்தையுமா கேட்டேன். எனக்கு வாழ வழியா ஒத்த வீடும், குறுணி வரப்பாடுந்தானே.. அதக்கூட குடுக்க மனசில்லன்னா என்னல மனுசங்க இவுங்க.. எல்லாத்துக்கு காரணம் அந்த மெட்ராஸ்காரந்தான்.. தாயோளி ஒத்தப்பைசா தராம ஏமாத்திட்டானே.." மனசு கொப்பளிக்க குபுக்கென கண்ணீர் பொங்கியது பரமசிவத்துக்கு.

"பொறுடா.." அவனை சமாதானப்படுத்த வார்த்தைகளில்லாமல் திணறினான் பூதச்சாமி.

"எல்லாவனையும் அந்தாளு படிக்கவச்சான், எக்கச்சக்கமா சொத்து சேத்து வச்சான். அவம் இருக்கும் போதே எங்களுக்கும் எதையாவது செஞ்சுட்டு போயிருக்கலாம்.. ஒரு எழவும் இல்ல.. எங்காத்தா, மூதேவிக்கி பொறந்தவ சாவுத வரைக்கிம் அவங்கிட்ட ஒத்த பேச்சு பேச மாட்டேனுட்டா.. இவுனுங்க பாத்து பண்ணுவானுங்கன்னு அவனும் போய்ச்சேந்துட்டான். அவம் இருக்கும் போதும் ஒண்ணும் பண்ணல.. செத்தும் ஒரு மண்ணும் கெடக்கல.. அவம் இருந்த இருப்புக்கு அவம் புள்ளன்னு நா சொல்லிகிட்டு இருக்குததுக்கு பிள்ளயளுக்கு மருந்த அரச்சிக் குடுத்துட்டு நானும் போய்ச்சேந்திரலாமான்னு இருக்கு.."

"என்ன பேச்சு பேசுத? எவன நம்பி நாம இருக்கோம்? நம்ம கையில நாம பொழச்சிருக்கணும் மாப்ள.."

"நா எதுக்கு சாவணும். திரும்பவும் போயிக் கேக்கேன், நானும் அவங்கப்பனுக்கு பொறந்தவந்தானே.. என்னமாது தரல, தாயோளி போட்டுத்தள்ளிட்டு வந்துருதேன். என்ன நடக்குதுன்னு பாத்துரலாம்"

"அவசரப்படாத மாப்ள.. யோசிச்சு செய்வோம். அத்தாளநல்லூர் பெரியவர வச்சி பேசுவம்.."

"அதெல்லாம் ஒண்ணும் வேலையாவாது.. அதுவே சாவக்கெடக்குது. அது வந்து பேசி என்னாவப்போவுது? அதும் பேச்சயும் இவுனுவ கேக்கமாட்டானுவ.. பாத்தாச்சி, நா சொல்லுததுதான் ஒரே வழி.." குமுறினான் பரமசிவம்.

எட்டூருக்கும் தெரிய வாழ்ந்தவர் பரமசிவத்தின் அப்பா சிவனு பாண்டியன். அவரின் சேத்துக்கிட்டவளுக்கு பிறந்தவர்கள்தான் இந்த பரமசிவமும் அவன் தங்கை சண்முகத்தாயும். சிவனு பாண்டியனின் மூத்த சம்சாரத்திற்கு பிறந்த ஆறு ஆண்பிள்ளைகள் செய்த துரோகத்தால்தான் பரமசிவம் இன்று கொதித்திக்கொண்டிருக்கிறான். சிவனு போய்ச்சேர்ந்து வருடம் பத்தாயிற்று. சில வருசங்களிலேயே பரமசிவத்தின் அம்மாவும் போய்ச்சேர்ந்துவிட சொத்துப்பிரச்சினையில் இவனுக்கும், இவன் தங்கைக்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள் மூத்தாள் பிள்ளைகள். ஒருத்தன் வெளிநாட்டில் இருக்க, ஒருத்தன் சென்னையில் வக்கீலாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தான். ஏனைய நால்வரும் சிவனு எங்கெல்லாம் தோட்டம் துரவென்று பெருக்கிவைத்திருந்தாரோ அங்கெல்லாம் விகே புரம், இடைகால், ஆலங்குளத்தில் என பரவியிருந்தனர் குடும்பம் குட்டிகளோடு.

இது நாள் வரை இழுத்துப்பிடித்தவர்கள் இதோ சென்ற வாரம் தங்களுக்குள் பாகம் பிரித்துக்கொண்டுவிட்டிருந்தனர். இவன் விஷயம் பற்றி பேச்சு வந்தபோது, 'எங்கப்பந்தான் ஊருக்கு ஒருத்தியன்னு வச்சிக்கிட்டு திரிஞ்சாரு, அத்தனப் பேத்துக்கும் பிரிச்சிக்குடுத்துட்டு நாங்க என்ன மணியாட்டிட்டு போறதா..' என்று மெட்ராஸ்காரன் சொல்லிவிட்டிருந்தான். அது விஷயமே இன்றுதான் பரமசிவத்துக்கு தெரியவந்தது. பத்து வருஷ போராட்டமும் தோல்வியில் முடிந்த ஆற்றாமையில் அழுதுகொண்டிருக்கிறான் இப்போது.

"மெட்ராஸ்காரன் வந்து பத்து நாளாச்சு, இன்னும் போகல.. எடகால்காரன் வீட்லதான் இருக்கான். என்னன்னு பாத்துருதுதேன் இன்னிக்கு.." பரமசிவத்தின் கோபம் அனைத்தும் ஆத்திரமாக அவன் கண்களில் மின்னியது.

ன்ன நடந்ததென பூதச்சாமிக்கு தெரியவில்லை. அன்றிலிருந்து ஐந்தாவது நாள் பரமசிவம் இடைகால் கல்குவாரி குட்டையில் செத்துக்கிடந்தான். காலம் பூராவும் கூட வந்தவன். புழுதித்தெருக்களிலும், சகதிக்காடுகளிலும் சுற்றித்திரிந்த நட்பு, தண்ணீரில் ஊதி உடல் பெருத்துக்கிடந்தது. எதற்குமே கலங்காத பூதச்சாமியின் கல்நெஞ்சம் கண்ணீர் கோத்தது. எட்டு வயதிலும், பத்து வயதிலும் அநாதையான அவன் பிள்ளைகள் அழுது அரற்றியதைக் காணச் சகியாமல் இறுதிச்சடங்கிலும் கூட நிற்காமல் கோபாலசமுத்திரம் வழியாக இடைகால் நோக்கி நடக்கத்துவங்கினான். தன்னிச்சையாக அவன் இடுப்பைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். அவனது மடக்குக்கத்தி பசியோடு திமிறிக்கொண்டிருந்தது தோல் பெல்டுக்குள்.

.

Tuesday, May 4, 2010

பிரேக்ஃபாஸ்ட் வித் ரொமான்ஸ்

இந்தக் காலை உணவு பெரிய தொல்லையான ஒரு விஷயம். காலையில்தான் அதிகமாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவம் சொன்னாலும் அந்நேர பரபரப்பு, அவசரம், மற்றும் காலகாலமான பழக்கம் என அது முடிவதில்லை. பெரும்பாலும் ரமா தரும் ஹார்லிக்ஸையோ, காம்ப்ளானையோ (சுபா மொழியில் காமுலா) குடித்து விட்டு ஓடிவிடுவேன் (சேர்த்து வைத்து மதியம், மாலையில் கட்டிவிடுவேன் என்பது வேறு விஷயம்). சில நாட்களில் பொங்கல், தோசை என நாம் ரெடியாகும் முன்பே உணவு ரெடியாகிவிட்டால் வேறு வழியில்லை லேட்டானாலும் பரவாயில்லை என சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும், இல்லையெனில் பிரச்சினை வேறு மாதிரி இருக்கும் (மாலையில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட அதே பொங்கலை சாப்பிடவேண்டி வரும்).

இப்போதைய பிரச்சினை என்னவெனில் இரண்டுக்கும் நடுவாக சில பதார்த்தங்கள் இருக்கின்றன. அவைதான் இந்த நூடுல்ஸ், உப்புமா, இடியாப்பம், புட்டு வகையறாக்கள். எனக்கு அப்புறம் எழுந்தாலும் நான் ரெடியாவதற்குள் ரமா கைங்கர்யத்தில் இவை ரெடியாகியிருக்கும். திங்கவும் முடியாமல், எஸ்கேப்பாகவும் முடியாமல் பிரச்சினைக்குரியவை இவை. இந்த ஐட்டங்கள் சுபா சாப்பிடும் அதே கிண்ணத்தில் ஸ்பூனுடன் நமக்காக மேஜையில் காத்துக்கொண்டிருக்கும். இரண்டு ஸ்பூனை விழுங்கிவிட்டு வெளியே ஓடிப்போய் பால்கனியில் அவசர அவசரமாக ஷூக்களை போட்டுக்கொண்டிருந்தால் மிச்சம் வைத்த கிண்ணத்துடன் ரமா துரத்திக்கொண்டு வந்துவிடுவார்.

நேற்று அப்படித்தான் சேரோடு கால்களை கால்களால் இடுக்கிப்பிடி போட்டு பிடித்துக்கொண்டு புட்டுக்கிண்ணத்தோடு அரஸ்ட் செய்துவிட்டார் என்னை. அது ஆஹா.. மணாளன் சாப்பிடாமல் வேலைக்குப்போகிறாரே என்ற கரிசனமா அல்லது புட்டு வீணாகிப்போகுமே என்ற கவலையா என்று கண்டுபிடிக்கமுடியாது. அப்படியே லாக் செய்த பொஸிஷனில் கிண்ணத்தை முகத்துக்கு நேரே பிடித்துக்கொண்டு ஸ்பூனால் வாய்க்குள் திணித்துவிடுவார். வேறு வழியே இல்லை, விழுங்கித்தான் ஆகவேண்டும், இல்லையானால் முகம், சட்டை, பேண்ட் என புட்டு மயமாகிவிடும். அவருக்கென்ன கவலை. திரும்ப உடை மாற்றி, லேட்டாகும் அவஸ்தை எனக்குத்தானே. சில ஸ்கூப்கள் தாடை, முகமெங்கும் ஆக அப்படியே அதையும் ஸ்பூனால் வழித்து வாய்க்குள் திணிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு செரிலாக்கை குழைத்து திணிக்கும் அழகை பார்த்திருக்கிறீர்கள்தானே.. கன்னம், தாடையில் வழியும் செரிலாக்கை வழித்து திரும்பவும் ஊட்டிவிடுவார்கள். அதைப்போல நடந்துகொண்டிருந்தது எனக்கும், என் கதறலையும் பொருட்படுத்தாமல். “நேழமாச்சுதுமா, காலயிலயே மீழ்ழிங் இழுக்குது போவணும்”. பக்கத்திலிருந்து சுபா உய் உய்யென்று சிரித்துக்கொண்டிருந்தான். அதானே, ‘ரெண்டு பேரும் சேர்ந்து என்னை என்ன பாடு படுத்துறீங்க தினமும்’ என எண்ணிக்கொண்டிருப்பானாயிருக்கும்.

ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின் அப்படியே, முந்தானை என்றால் கூட பரவாயில்லை, நைட்டியிலேயே வாயைத் துடைத்துவிட்டு “போகலாம், அல்லது இங்கேயே இருக்கலாம்” என்றவர் திடீரென என்ன தோன்றியதோ, “இந்தச் சட்டையை போடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், மரியாதையா கழற்றிவிட்டு வேற போட்டுவிட்டு போங்கள்” என்று எச்சரிக்க, நான் நேரமானதை காரணம் காட்டி எஸ்கேப்பாக முயல, டம்ளரில் மிச்சமிருந்த காம்ப்ளான் துளிகள் என் சட்டையில் விசிறப்பட்டது. என் பிடிவாதம்தான் பெரிது என்று பல சமயங்களில் கேனை மாதிரி நான் நினைப்பதுண்டு. சட்டை வெளிறிப்போய்விட்டதாம், போடக்கூடாதாம். அது எனக்குப்பிடித்த வெள்ளைச் சட்டை. போச்ச்ச்… கோபப்பட்டுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை.

பின்னர் ரமாவால் எடுத்துத்தரப்பட்ட சிவப்பும், ஊதாவும் கலந்த ஒரு நிறத்தில் ஒரு சட்டையை போட்டுக்கொண்டு “பச்சை, சிவப்பு, மஞ்சள் தமிழன் நானடா..” என்று பாடிக்கொண்டே அரைமணி நேரம் தாமதமாக ஆபீஸ் சென்றடைந்தேன்.

பி.கு :

என்ன திடீர்னு இப்படி ஒரு பதிவு? மேற்கூறிய நிகழ்ச்சியை இம்சை என்று புரிபவர்கள் புத்திசாலிகள். ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ?’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.

.

Monday, May 3, 2010

கொஞ்ச‌ம் டெக்னிகல் : TQM

முன்குறிப்பு :

‘என்ன இருந்தாலும் டெக்னிகல் பதிவுகள் எழுதி நிரம்ப நாட்களாகிவிட்டன’ என குறைப்பட்டுக்கொண்ட நண்பர்களின் ஆர்வத்துக்கு நன்றி. நான் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் எனக்கு முழு திருப்தியே இருப்பதில்லை. இந்த டெக்னிகல் பதிவுகளிலும் அதே நிலைதான் எனினும், கொஞ்சமாக இருந்தாலும் அவற்றை நான் கையாளும் விதம் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒத்த ரசனையுள்ள நண்பர்களுக்கும் ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றி. உங்களாலேயே நான் தொடர்ந்து இயங்க முடிகிறது.

புதிய நண்பர்களுக்காக சில குறிப்புகள். உற்பத்தித் தொழிற்துறையின் தர மேலாண் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருப்பவன் நான். என்னளவில் என் துறை சார்ந்து எனக்குத் தெரிந்தவற்றை விதிமுறைகள் மீறாது பகிர்ந்து கொள்ளக்கூடியவைகளை முடிந்த வரை எளிமையாக 'டெக்னிகல்' என்ற லேபிளில் அவ்வப்போது எழுதிவருகிறேன். அவை நிச்சயமாக குவாலிடியில் பணிபுரிபவர்களுக்காக மட்டுமே அல்ல. அவர்களுக்கு டெடிகேடட் ஆக‌ பாட‌ம் ந‌ட‌த்த‌ என‌க்கு த‌குதியும் இல்லை, அத‌ற்கு இது சரியான இட‌மும் இல்லை. என‌து க‌ட்டுரைக‌ள் அனைத்து துறைக‌ள் சார்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் அல்ல‌து பொது வாச‌க‌ர்க‌ளுக்கும் பொருத்த‌மான‌தாக‌வும், ஒரு ப‌கிர்த‌லாக‌வும், சுவார‌சிய‌மான‌தாக‌வும் இருக்க‌வேண்டும் என‌ விரும்புகிறேன். அதற்கு பொருந்துகின்ற‌ செய்திக‌ளை ம‌ட்டுமே எழுதிவ‌ருகிறேன். இந்தக் கட்டுரைகளில் இடம்பெறும் வார்த்தைகள், அவற்றிற்கான விளக்கங்கள் முந்தைய கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் வாய்ப்பிருப்பதால் முந்தைய கட்டுரைகளையும் பார்த்துவிடுவது இன்னும் எளிமையாக இருக்கக்கூடும்.

எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் எனது அனுபவம் சார்ந்தே இருப்பதால் ‘டெக்னிகல்’ தகவல்களில் தவறுகள் இருக்கலாம். அவ்வாறான சமயங்களில் தயைகூர்ந்து திருத்துங்கள். அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

TQM

அந்த‌ வ‌ரிசையில் இன்று TQM (Total Quality Management) என்ற‌ ச‌ப்ஜெக்ட் குறித்துப் பார்ப்போம். மிகப்பழமையான இந்த விஷயத்தைப் பற்றி இன்னும் தெளிவில்லாத நிலையில் பலரும் வேறு விஷயங்களைப் பற்றி பேசுகையில் இதையும் நினைவு கூறுகிறார்கள். ‘என்னது?’ ன்னு கேட்டா ‘இன்னது’ என்று பதில் சொல்லிவிடமுடியாதபடிக்கு இதுவும் ஒரு வழிமுறையியலே (Methodology) என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். இது முன்னெப்போதோ கருக்கொள்ளப்பட்டு 1980 களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் பலராலும் கைவிடப்பட்ட, இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் பின்பற்றப்படுவதாகும். இது எட்வர்ட் டெமிங் (W. Edwards Deming) மற்றும் சில குவாலிடி குருக்களால் முன்மொழியப்பட்ட வழிமுறையியலாகும். இவ்வளவு பழமையான விஷயத்தைப்பற்றி இப்போது என் பேசுகிறோம்.? இன்னும் இது குறித்த தெளிவின்மையால் புதுசா, பழசா, இருக்கா, போச்சா என்பதே தெரியாமல் இது பற்றி மக்கள் இன்னும் பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பிக்கொண்டேயிருக்கின்றனர். அதைக்கொஞ்சம் கிளியர் பண்ணலாமேன்னுதான் இது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே சொன்னதுபோல ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள், மற்றும் சில என TQM கான்செப்டுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வழக்கம் போல ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் இதைப்பற்றி பெரிதாக கவலை கொள்வதில்லை என்றே நான் எண்ணுகிறேன். மேலும் குவாலிடியைப் பொறுத்தவரை முழுதுமாக அடாப்ட் செய்துகொள்ளவேண்டிய அல்லது விலக்கவேண்டிய என்பது போல தத்துவங்கள் கிட்டத்தட்ட கிடையாது. ஒன்றின் தேர்ந்த இன்னொரு / முன்னேறிய வடிவமாகத்தான் இன்னொன்று இருக்கும். தரக் கட்டுப்பாடு (Quality Control) என்பது பழமை, தர உறுதிப்பாடே (Quality Assurance) சிறந்தது, ஆகவே நாம் இன்றிலிருந்து இதற்கு மாறுகிறோம் என்று சொல்லிவிட்டு பழைய கம்ப்யூட்டரை தூக்கிப்போட்டுவிட்டு புதிது வாங்கிவைத்து விடுவதைப் போல டப்பென்றெல்லாம் செய்துவிடுகிற காரியங்களில்லை இவை. ஒன்றோடு ஒன்று பிணைந்தவை.

மேலும் ஏதாவ‌து ஆங்கில‌ எழுத்துக்க‌ளின் கூட்டைச்சொல்லி நாளுக்கு நாள் ப‌ர‌ப‌ர‌ப்பைக் கிள‌ப்புவ‌து குவாலிடி துறையின் வாடிக்கைதான். அவ‌ற்றை ப‌த‌ற்ற‌மில்லாம‌ல் அணுகினால் அவை பெரும்பாலும் ச‌ப்பை மேட்ட‌ராக‌த்தான் இருக்கும். ஆக‌வே இதுபோன்ற‌ சொற்க‌ளைக் கேட்கும் போது பிர‌மிக்காம‌ல் 'அப்பிடின்னா?' என்று எதிர்கேள்வி கேட்க‌த்துவ‌ங்குங்க‌ள். அத்த‌னையும் புரித‌லுக்கு எளிமையாக‌த்தான் இருக்கும் அல்ல‌து விஜ‌ய் ப‌ட‌ம் போல‌ ஏற்க‌ன‌வே அரைத்த‌ மாவாக‌த்தான் இருக்கும்.

குவாலிடி துறையின் அரிச்சுவ‌டி சோதித்த‌ல் (Quality Inspection) என்பதாகும். தொட‌ர்ந்த‌து, த‌ர‌க்க‌ட்டுப்பாடு (Quality Control). அத‌ற்கும் அடுத்து விளைந்த‌து த‌ர‌ உறுதிப்பாடு (Quality Assurance). அத‌ற்கும் அடுத்த‌ வெர்ஷ‌ன்தான் முழுமையான‌ த‌ர‌ ஆளுமை (Total Quality Management -TQM) எனப்படுகிறது. கீழ்வருமாறு நான் முறுக்கு சுற்றுகிறேன், உங்களுக்கு புரிகிறதா பாருங்கள்.

Inspection என்ப‌து ஒரு பொருளை சோதித்‌து ச‌ரியான‌வை, த‌வ‌றான‌வை என‌ப் பிரித்த‌ல் (Seggregation) ஆகும். அதாவ‌து அந்த‌ப்பொருள் அத‌ற்காக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அள‌வுக‌ளுட‌ன், த‌குதிக‌ளுட‌னும் இருக்கிற‌தா என்ப‌தை உறுதிசெய்து கொள்ளும் ந‌ட‌வ‌டிக்கை ம‌ட்டுமே. இத‌ற்கு அடுத்த‌ நிலையான‌ Quality Control என்ப‌து த‌வ‌றான‌ பொருட்க‌ளை க‌ண்டு ஒதுக்குவ‌தோடு நில்லாம‌ல் அத‌ற்கான‌ கார‌ண‌த்தையும் ஆய்ந்து அதைக் க‌ளையும் வேலையையும் (Correction) செய்கிற‌து. அடுத்த‌தான‌ Quality Assurance என்ப‌து அந்த‌த் த‌வ‌றுக‌ளை மீண்டும் ஏற்ப‌டாம‌ல் பார்த்துக்கொள்வ‌து (Prevention), மற்றும் அதை ஒத்த‌ இட‌ங்க‌ளுக்கு ப‌ர‌வ‌ச்செய்த‌ல் (Horizontal deployment) ஆகிய‌வ‌ற்றையும் த‌லையாய‌ க‌ட‌னாக‌க்கொள்கிற‌து.

மேற்க‌ண்ட‌ அனைத்தோடு கூட‌ தொட‌ர் முன்னேற்ற‌த்துக்கான (Continuous Improvement) வாய்ப்புக‌ளை ஆய்ந்த‌றிந்து அவ‌ற்றை ந‌டைமுறைப்ப‌டுத்துத‌ல் (Implementation), அவ‌ற்றை நிலைக்க‌ச்செய்த‌ல் (Continual Improvement) ஆகிய‌ ப‌ணிக‌ளையும் கொண்டுள்ள‌ அமைப்பே TQM என‌ப்ப‌டுகிற‌து என ஒரு மாதிரியாக TQM க்கு விளக்கம் சொல்லலாம்.

இன்னும் சிம்பிளாக சொல்வதானால் நான் எழுதுகிற 10 பதிவுகளை எடுத்துக்கொண்டு 8 தான் எக்ஸலண்டாக இருக்கிறது (ஹிஹி), 2 மோசமாக இருக்கிறது என நீங்கள் அடையாளம் கொண்டு அவற்றை ஒதுக்கிவிடுவது ஜஸ்ட் இன்ஸ்பெக்ஷன் (Inspection). அதற்கும் பின்னூட்டம் போட்டு என்னை நீங்கள் திருத்த முயன்றால் என்னை கண்ட்ரோல் (Control) செய்கிறீர்கள் எனலாம். வலுக்கட்டாயமாக போன் செய்து, மெயில் போட்டு இனி அது போல பதிவு வந்தால் நேரில் வந்து மூக்கில் குத்துவேன் என்று என்னைக் கட்டுக்குள் வைத்து அதுபோன்ற பதிவுகள் வராமல் செய்தீர்கள் என்றால் அது தர உறுதிப்பாடு (Assurance) எனலாம். அதற்கும் மேலே சென்று நேரிலேயே வந்து புத்தகங்கள், சிடிக்கள், மேற்படி விஷயங்களை எனக்கு பிரசண்ட் பண்ணி என் ரசனையை, படிப்பறிவை உயர்த்தி, என்னை தொடர்ந்து ஊக்குவித்து எல்லா பதிவுகளையும் தரமானதாக எழுத வைப்பீர்களானால் அதை TQM என்று சொல்லலாம். ஹிஹி..

இன்னும் விளக்கம் வேண்டும் எனில் TQM என்பது டெமிங்கினால் வரையறுக்கப்பட்ட ‘அனைத்துப்பகுதிகளிலும் தொடர் முன்னேற்றம்’, ‘டார்கெட்ஸ், கோல்ஸ் என எண்ணிக்கையினாலான விஷயங்களை குழுக்கள் மீது திணிக்காமலிருத்தல்’, ‘கோட்பாடுகளுடன் இயைந்திருத்தல்’, ‘நம்பிக்கை மற்றும் தலைமைப்பண்புகளை பரவலாக்குதல்’.. போன்ற 14 விதிகளை நடைமுறைப்படுத்துதலை சேர்த்துக் கொள்ளலாம். குவாலிடி என்பது அந்த டிபார்ட்மெண்டின் வேலை மட்டுமே இல்லை என்பதும், ஒவ்வொரு டிபார்ட்மெண்டின் பணிகளும் வரையறுக்கப்பட்டு, காரணகாரியத்தோடு அமைக்கப்பட்டு ஒத்திசைந்து இயங்கவேண்டும் என்ற பண்பாட்டையும் (Culture) TQM வலியுறுத்துகிறது.

இல்லை சப்ஜெக்டிவாக சொல்லவேண்டும் என்றால் ‘வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து உருவாகும் நிறுவனத்தின் உள்ளமைப்புகளின் தேவையுடன் சரியாக பொருந்திப்போகும் (Conformance) பொருளை, சேவையை உறுதி செய்வதே TQM’ எனலாம். புரிஞ்சுதா.?

TQM Vs Six Sigma

சிக்ஸ் சிக்மா இங்கே எங்கே வந்தது என்கிறீர்களா? இரண்டுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. TQM ம்மின் திருத்தப்பட்ட மறுபதிப்புதான் சிக்ஸ் சிக்மா என்று சொல்லிவிடமுடியாது எனினும் சொல்லவும் செய்யலாம். ஹிஹி.. தேவையுடன் பொருந்திப்போதலால் (Conformance to the Requirements) குவாலிடியை உயர்த்துவது TQM என்றால், வீணாவதை குறைப்பதால்/ தடுப்பதால் (Reduction in Rejection) குவாலிடியை உயர்த்துவது சிக்ஸ் சிக்மா. நோக்கம் ஒன்றுதானே.. TQM மொத்தத்துக்குமானது எனில் Six Sigma ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கானது அல்லது ஒரு பிராஜக்ட் போல தனித்தியங்கக்கூடியது எனவும் சொல்லாம். ஆனால் இரண்டிலும் பயன்படுத்தப்படக்கூடிய கருவிகள் என்னவோ பொதுவானவைதான்.

TQM Vs TPM

நிறுவனத்தின் எல்லா பிரிவுகளின் வேலைகளிலும் குவாலிடி இருக்கவேண்டும் என்ற வகையில் குவாலிடிக்கும் TPM க்கும் இருக்கும் தொடர்பைத் தவிர வேறில்லை என்பதால் இது அவுட் ஆஃப் சிலபஸ் என விட்டுவிடலாம். ஆனால் சொற்கள், கேட்க ஒரே மாதிரி இருப்பதால் இதைப்பேசும் போது அதையும் பேசி குழப்பிக்கொள்வது நம் வாடிக்கை. பணியாளர்கள், அவர்களின் ஊக்கம், எந்திரங்கள், கருவிகள் அவற்றின் திறன், தகுதி, பராமரிப்பு, செயல்கள் அவற்றின் விதிமுறைகள் இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு குறையற்ற பொருட்களை நிறைவாக (Productive) உற்பத்தி செய்வது குறித்த இன்னொரு வழிமுறையியலே TPM (Total Productive Maintenance) என்று மட்டும் நினைவில் கொண்டு இந்தக்கட்டுரையை நிறைவு செய்வோம். சுபம்.. சுபம்.!

யேய்ய்ய்.. யாருபா அது குறட்டை விட்டு தூங்குறது.? பாடம் முடிஞ்சு போச்சுது, எழுந்திருங்கப்பா. கொஞ்சம் ட்ரை சப்ஜெக்டுதான், அதுக்காக.? அடுத்த முறை தூங்கினா மண்டையில் கொட்டிப்புடுவேன்.!