Wednesday, June 30, 2010

சிறந்த பல்புகள் –டாப் 10

10. நமது ஞாயிற்றுக்கிழமைக்கும் சேர்த்து வேட்டு வைக்கிறமாதிரி ஆபீஸில் ஃபீல்டு விசிட்டுக்கு ‘வெள்ளிக்கிழமை கிளம்பி திங்கள் கிழமை திரும்பறோம்’ ங்கற மாதிரி தேதி குறிக்கும்போது.

9. பலராலும் கொண்டாடப்பட்டு நாம் ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளரின் ஆகச்சிறந்த(?) ஒரு படைப்பு நம் கையில் முதல்முறையாக கிடைக்க, விபரம் தெரியாமல் அதைப் படித்து டரியலாகும் போது.

8. பலவித தடங்கல்களுக்குப் பிறகும் ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி சென்று உட்கார்ந்ததும், நாயகன் அறிமுகமாகும் போதோ, அறிமுகமாகி ஐந்து நிமிடத்திலோ அது எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் அந்த நாயகன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தெருவில் ஆண், பெண் கூட்டத்தோடு கும்மாங்குத்து போடும்போது.

7. சரியாக டியூ நாளில் அமவுண்டை கட்டிய பிறகும், ஆட்டோ டெபிட்டில் அதே அமவுண்டை பிடித்து கிரெடிட்கார்ட் கடங்காரன் நம்ப பட்ஜெட்டில் குழப்பம் விளைவிக்கும் போது.

6. ரிப்போர்ட் தர ரெண்டு மணி நேரம் தாமதமானதால் மானேஜர் தரும் மூன்று மணி நேர அறிவுரைகளை கேட்க நேரும் போது.

5. பெட்ரோல் போட மறந்து பாதிவழியில் வண்டி நின்று அவஸ்தைக்குள்ளாகி, பிரம்மப்பிரயத்தனம் செய்து பெட்ரோலுடன் ஆளை வரவைத்து, கிளம்பிய பின்னர் ஒரே கிலோமீட்டரில் பஞ்சரும் ஆகித்தொலைக்கும் போது.

4. நேற்றைய சண்டையை சமாதானப்படுத்தும் பொருட்டு இன்று மார்னிங் ஷோ போய்விட்டு, மதியம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு முகத்தில் சிறிது புன்னகை வரத்துவங்கியிருக்கும் நேரத்தில் ரமாவின் கண்களில் நல்லி சில்க்ஸ் பட்டுத்தொலைக்கும் போது.

3. ஒருவாரம் கழித்து பதிவெழுதி அது நல்லா(?) வந்திருப்பதை கண்டு மகிழ்ந்துவிட்டு ஏற்றப்போகையில் கரண்ட் போய் தொலைக்கும்போது.. அல்லது அது செம ஹிட்டாகி 50 ஹிட்ஸும், ரெண்டு பின்னூட்டமும் வாங்கி சாதனை படைக்கும் போது.

2. இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.

1. தவறாமல் ஒவ்வொரு அப்ரைஸலின் போதும்..

(உங்களுக்கான தற்போதைய பல்பு : இது மீள்பதிவு வேறு தலைப்பில்.. ஹிஹி)

.

Monday, June 28, 2010

சில புத்தகங்களும், ஒரு ஊமைச்செந்நாயும்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான ‘சீவக சிந்தாமணி’ யை எளிய தமிழில் அதுவும் நாவல் வடிவில் தருவது என்பதை ஒரு அசாத்தியமான பணியாகவே நான் கருதுகிறேன். அதைச் சாதித்திருப்பது நம் சக பதிவர் ராம்சுரேஷ் (அன்புக்குரிய பினாத்தல் சுரேஷ்). தமிழறிஞர்களுக்கு அல்லாது தமிழ் இலக்கியங்களை எட்டாக்கனியாக கருதும் இன்றைய இளைய தலைமுறையினருக்காக என்ற முகப்புடன் ராம் சுரேஷ் செய்திருக்கும் இந்தப் பணிக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள்.

Seevakan

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

*****

சினிமாவின் கிரியேடிவ் பக்கத்தின் செய்திகளையே பார்த்தும் படித்தும் வந்திருக்கும் நமக்கு அந்த பிரமாண்டக் கனவுத்தொழிலின் இன்னொரு பக்கமான வியாபார செய்திகள் குறித்த புத்தகம் புதிய அனுபவமாக இருக்கிறது. முன்னர் இதுபோன்ற ஒரு புத்தகம் வந்ததாகத் தெரியவில்லை. தன் வலையில் நீண்டதொரு தொடராகத் தந்த ‘சினிமா வியாபாரத்’தை புத்தகமாக்கியிருக்கிறார் சக பதிவர் சங்கர் நாராயண் (பிரியத்துக்குரிய கேபிள் சங்கர்). அவருக்கு நம் வாழ்த்துகள்.

Cinema Viyabaram

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

*****

தற்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சிறப்புகளை நாம் அறிவோம். அவரை விடவும் ‘பல்கலை வித்தகர்’ என்ற பதத்துக்கு உதாரணமாக வேறொருவர் இருந்துவிட முடியாது. அவரது அத்தனை முகங்களையும் பதித்துவிடுவது ஒரு எளிய காரியம் இல்லை எனினும் தமிழ் சினிமா சார்ந்து அவர் இயங்கிய பகுதியை புத்தகமாக்கியிருக்கிறார் சக  பதிவர் நம் மரியாதைக்குரிய டி.வி.ராதாகிருஷ்ணன். நமது அன்பான வாழ்த்துகள் அவருக்கு உரியதாகட்டும்.

TVR wrapper final

வெளியீடு : நயினார் பதிப்பகம்

*************************

ஊமைச்செந்நாய்

கடைசியாக வாசித்த புத்தகம் ஜெயமோகனின் ஊமைச்செந்நாய். இது ஜெயமோகனின் சிறப்பான சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்று என நண்பர்கள் பலரும் பிரமித்தது. இது புத்தகம் குறித்த விமர்சனமோ, பகிர்வோ அல்ல. மீள் வாசிப்பிற்கு பின்னர் இயன்றால் அதைச்செய்கிறேன். இப்போது என் பிரமிப்பைப் பதிவு செய்தாக வேண்டும். புத்தகத்தை முடித்ததும் நாமும் அவ்வப்போது சிறுகதை எழுத முயல்கிறோம் என்ற உண்மை முதுகைச் சுரண்டியது. ‘போய்யா.. அதெல்லாம் ஒண்ணும் தப்பில்லை.. அப்புறம் நாங்களும் எப்பதான் எழுதறதாம்..’ என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஊமைச்செந்நாய் என்ற தலைப்புக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டாலே எத்தனை பிரம்மாண்டம், எத்தனைத் தகவல்கள், எத்தனை உட்செய்திகள், எத்தனை அடர்த்தி, என்ன ஒரு நடை, வாசிப்புக்குப் பின்னால் கிளர்ந்தெழும் தொடர் சிந்தனை, அத்தனையும் விறுவிறுப்புக் குறையாத நடையில். படித்து முடித்தால், எழுத எத்தனை உழைப்பும், பொறுப்பும், திறனும் தேவையென்ற உண்மையும் கொஞ்சம் அதிகமாகவே சுடத்தான் செய்கிறது. என் வீட்டில் ஒரு செஸ் போர்ட் இருக்கிறது. நான் செஸ் விளையாடுகிறேன். விஸ்வநாதன் ஆனந்தும்தான் செஸ் விளையாடுகிறார்.

.

Thursday, June 24, 2010

பல்பு வாங்க மறக்காதீங்க..

அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். காலையிலிருந்தே ஒரு விஷயத்தை நினைவுக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சித்தும் நினைவுக்கு வராமல் படுத்திக்கொண்டிருந்தது. அது மூன்று நாட்களுக்கு முன்னால் ரமாவும் நானும் எந்த விஷயத்துக்காக சண்டை போட்டுக்கொண்டோம் என்பதுதான். இரண்டு நாட்களாக அவருடன் பேசவில்லை. இரண்டு நாட்கள் பேசவில்லை என்றாலே இந்தக் காதல் எங்கேதான் ஒளிந்திருக்குமோ டப்பென்று பூக்கத் துவங்கிவிடுகிறது. நான் அடுக்களைக்குள் எட்டிப்பார்ப்பதும், அவர் புரிந்துகொண்டு சாப்பாடு கொண்டு வந்து டக்கென்று வைப்பதும் ரெண்டு நாட்களுக்கு மேல் சகிக்காது. ஆனால் எதற்கு சண்டை போட்டோம் என்பது தெரிந்தால்தானே பேச்சைத்துவங்க வசதியாக இருக்கும். ஒரு தடவை இரண்டு தடவை சண்டை போட்டாலல்லவா காரணம் ஞாபகமிருப்பதற்கு. இந்த மறதியினால் இது போன்ற சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ம்ஹூம்.. நினைவுக்கு வரவில்லை.

பேசவேண்டும் என்று முடிவு செய்தாயிற்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது? இதை விட எத்தனையோ கொலைவெறி சம்பவங்களையே கடந்துவந்திருக்கிறோம். இதிலென்ன காரணம் பெரிதாக இருந்துவிடப்போகிறது? காலையில் பேப்பரை கீழிருந்து எடுத்து வரும்போதே ரமா காதில் விழும்படி புலம்பலை ஆரம்பித்துவிட்டேன்.

பேப்பரை எடுத்து வந்ததற்காக, "எல்லா வேலையும் நாமே செய்யவேண்டியிருக்கிறது, ஹும்.. யாரிருக்கா இந்த வீட்டில்.?"

ரிமோட்டை கட்டிலுக்கு அடியிலிருந்து தேடியெடுத்துவிட்டு, "இந்த வீட்டில் யாருக்கு பொறுப்பிருக்கிறது. ஒரு பொருளும் இருக்கவேண்டிய இடத்தில் இருக்காதே.."

சுபா, நடு வீட்டில் ஒன் பாத்ரூம் போய் வைத்திருந்தமைக்கு மேட்டை எடுத்துப்போட்டுவிட்டு, "கிளீனிங் வேலையைக் கூட நாமதான் பாக்குறோம். யாரு நம்மை ரெஸ்பெக்ட் பண்றா இந்த வீட்டில்?"

பாதி குளித்துக் கொண்டிருக்கும்போது பாத்ரூமில் தண்ணீர் போய்விட மோட்டர் போடச் சொல்வதற்காக டுபாக்கூராக கத்தினேன், "அய்யய்யோ யாராவது காப்பாத்துங்களேன், சோப்பு கண்ணு எரியுதே.."

கிளம்பிய பின்னர் மேஜையிலிருந்த ஓட்ஸ் கஞ்சியைப் பார்த்தபடி, "ஹூம்.. டெய்லி கஞ்சிதானா? ஒரு டிபன் பண்ணித்தரக்கூட நாதியில்லை.."

இதிலெல்லாம் ஒரு ரிஸ்க் இருக்கிறது. ஏதாவது ஒன்றில் அவர் கடுப்பாகிவிட்டால் மீண்டும் ஒரு போர்க்களம் காணவேண்டியது வரலாம். அல்லது ஏதாவது ஒரு கமெண்டிற்காக 'களுக்'கென சிரித்துவிட்டால் ஆட்டம் ஓவர், ராசியாகிவிடலாம். ஆகவே கவனமாகவே கமெண்டுகளை அடித்துக்கொண்டிருந்தேன். சுபா இப்போதுதான், பெயர்ச் சொற்களைத்தாண்டி வினைச்சொற்களையும் பேசத்துவங்கியிருக்கிறான். அந்த ஆர்வத்தில்,

தலையணையில் இருந்து தரையில் குதித்துவிட்டு, "அப்பா.. குடிச்சுட்டேன்.."

அதிலேயே கொஞ்சம் தடுமாறிவிட்டால், "அப்பா.. டொம்னு உழுன்டுட்டேன்.."

டம்ளர் தண்ணீரை கொட்டிவிட்டு, "அப்பா.. தண்ணி கொட்டிட்டேன்.."

சேரில் ஏறிவிட்டு, "அப்பா.. ஏறிட்டேன்.."

ஃபிரிட்ஜை வம்படியாக திறந்து மூடிவிட்டு, "அம்..ப்பா.. மூடிட்டேன்.." (வழக்கம் போல அம்மா என்று ஆரம்பித்து, உடனே ரியலைஸ் செய்துகொண்டு வருவதுதான்.. அம்..ப்பா.)

மீண்டும் தலையணை, "அப்பா.. டொம்னு உழுன்டுட்டேன்.."

அவன் விழுந்ததற்கு சத்தமாக சிரிக்கவேண்டும். "ஓஓஓவ்வ்.. தம்பி டொம்னு உழுந்துட்டான்.." என்று ஒவ்வொரு முறை விழும் போதும் சத்தமாகச் சொல்லிக்கொண்டு சிரிக்கவேண்டும். அவனும் கண்ணில் நீர் வர சிரித்துவிட்டு மீண்டும் தலையணையிலிருந்து குதிக்க தயாராவான்.

இவ்வாறாக அவனுக்கும் கம்பெனி கொடுத்துக்கொண்டு ரமாவுடனும் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தேன்.

கடைசியாக அயர்ன் செய்த சட்டைகள் ஏதுமில்லாமல் அவசரமாக ஒரு சட்டையை அயர்ன் செய்துகொண்டு, "என்ன அநியாயம்? ஒரு அயர்ன் பண்ணித்தரக்கூட ஆளில்லையா? இல்லைன்னா முன்னாடியே சொல்லித்தொலைக்கலாம் இல்லையா.. இப்போ ஆஃபீஸ்க்கு டைமாயிடுச்சே.?"

பட்சி வலையில் விழுந்தது. "முதலிலேயே சொல்லியிருந்தா அயர்ன் பண்ணிக்கிழிச்சுட்டுதான் மறுவேலை பாப்பீங்களா? இல்லைன்னா ஆஃபீஸ்க்குதான் டெய்லியும் டைமுக்கு போய்க்கிழிக்கிறீங்களா.?"

பதிலை யோசித்துக்கொண்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டிருந்ததில் அவர் சிரித்துவிட நானும் சிரிக்க சுபாவும் ஹிஹுஹிஹு என்று சிரிக்க பிரச்சினை தீர்ந்து சுபமானது சூழல். கிளம்பியபின் கிடைத்த வாசல் முத்தம் ஒரு போனஸ்.

******

(ஹேப்பி எண்டிங் தேவைப்படுவோர் அதோடு முடித்துக்கொள்ளவும்.)

தி ரியல் கிளைமாக்ஸ் :

முத்தத்துக்குப் பின் வண்டியை ஸ்டார்ட் செய்ததும் அவர் சொன்னது, "வரும் போது மொளகாப்பொடி, தோசைமாவு, ஆப்பிள் பழம், ஐஸ்கிரீம், நைட் லாம்ப், பீடியாஷ்யூர் வாங்கிட்டு வந்துடுங்க, எதையாவது மறந்துடாதீங்க.. அப்படியே சீக்கிரம் வந்துடுங்க, ஹாஸ்பிடல் போகணும்.."

"டமால்.."

(ஒரு கடைக்குப்போவதே எரிச்சல் கிளப்பும் ஒரு செயல். சொல்லப்பட்டுள்ள பொருட்களை வாங்க எத்தனைக் கடைகளுக்குப் போகவேண்டும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். எச்சரிக்கைச் செய்வது என் கடமை. அப்புறம் உங்கள் இஷ்டம்.)

.

Monday, June 21, 2010

+2 மாணவர்களுக்கு மேற்படிப்புக்கான உதவி

நண்பர்களின் தொடர் மெயிலில் வந்த செய்தி. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் +2 முடித்த மாணவர்களுக்கான மேற்படிப்புக்கான உதவி குறித்த ஒரு அறிவிப்பு.

Scholarship for Higher Education

Friday, June 18, 2010

நெருப்பைச் சிறை வைத்த தி.க.

புத்தகச் சந்தைகளிலும், கடைகளிலும் புத்தகங்களை வாங்கும் பொழுதுகளில் அவ்வப்போது சிறிய அளவில் பெரியார் புத்தகங்களையும் வாங்குவதுண்டு. அப்போதெல்லாம் ஏதோ நெருடுவதைப்போல இருக்கும். இது வரையில் அந்த விஷயம் இந்த மரமண்டையில் ஏறவேயில்லை. சென்ற வார ஜூனியர் விகடனில் பெரியார் கருத்தாக்கங்களின் பிரசுர உரிமை குறித்த வழக்கைப் பற்றிய செய்தியைப் படித்த பின்பே இந்த மண்டைக்கு உறைக்கிறது.. இன்னும் பெரியார் கருத்தாக்கங்கள் பொதுவுடைமை ஆக்கப்படவில்லை என்று. என்ன மகா கேவலம்.!

இது விஷயத்தில் தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் நம் கடும் கண்டனங்கள். 1989ல் கலைஞர் அரசு பெரியாரின் கருத்தாக்கங்களை பொதுவுடைமை ஆக்க முயற்சித்த போது கி.வீரமணி நீதிமன்றத் தடையாணை பெற்றார். அப்படி என்ன வாரிசுதாரருக்கான சாட்சியங்களை அவர் முன் வைத்திருக்கமுடியும்? என்ன அபத்தம் இது? அதை உடைக்க அரசு அதன்பின் முயலவில்லையா? மக்களுக்கான பெரியாரின் கருத்துக்களையே மக்களுக்குத் தர முன்வராத கி.வீரமணியா பெரியாரின் கொள்கை பரப்ப வந்த சீடர்? கடுஞ்சொல் என் எழுத்தில் வந்துவிடாமலிருக்க கைகளைக் கட்டிக்கொள்கிறேன்.

evr-with-periyar

நூற்றாண்டுகளின் மனத்தளையைப் போக்க வந்த அருமருந்து பெரியாரின் கருத்தாக்கங்கள். நிகழ்த்தப்பட்டது எந்த ஒரு தனிமனிதனும் அவன் வாழ்நாளில் நிகழ்த்தமுடியாத அருஞ்சாதனை. விஸ்வரூபமெடுத்து முன்நிற்கும் மதப்பேய்கள், மூடப்பிசாசுகள், ஆணாதிக்க அவலங்கள்.. தனி மனிதனாய் எதிர் நின்று அவற்றையெல்லாம் சோர்வு கொள்ளச்செய்தவன். உடன் நின்று ஓங்கிப்பிடித்து அவற்றை வேரறுத்திருக்க வேண்டும். ஆனால் நாம் செய்தது என்ன? இந்த 35 வருடங்களில் மீண்டும் அவையெல்லாம் உண்டு கொழுத்திருக்கச் செய்திருக்கிறோம். மீண்டும் ஒரு பெரியார் பிறந்து வரப்போவதில்லை. சமூக அநீதிகளை எதிர்த்து நிற்க நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டுமென்றால் இருக்கும் ஒரே ஆயுதமும் அவரது கருத்தாக்கங்கள் மட்டுமே.

தற்போது பெரியார் திராவிடர் கழகத்துக்கும், திராவிடர் கழகத்துக்கும் இடையே 2008 லிருந்து நிகழ்ந்து வந்த வழக்கில் தி.கவின் எதிர்மனுவைத் தள்ளுபடி செய்து, "பெரியாரின் எழுத்தும் பேச்சும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். சாதியற்ற சமத்துவமான சமுதாயம் உருவாக அவருடைய எழுத்துகளும் பேச்சுகளும் முழுமையாகப் பயன்படவேண்டும்" என்ற குறிப்புகளுடன் பெரியாரின் கருத்தாக்கங்களை மக்கள் சொத்தாக அறிவித்திருக்கிறது நீதிமன்றம். (செய்தி : ஜூவி, 16.06.10). இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு, தமிழ்மண்ணின் இணையற்ற புரட்சிவீரனின் கருத்தாக்கங்களை பொதுவுடைமையாக அறிவிக்கவேண்டும்.

தீர்ப்புக்காக காத்திருந்த பெரியார் தி.க இயக்கத் தோழர்கள், பெரியாரின் 'குடியரசு' பத்திரிகையின் தொகுப்பான 27 பாகங்களையும் சமீபத்தில் புத்தகங்களாக வெளியிட்டனர். அதோடு அந்தத் தொகுதி முழுமையும் மின்கோப்புகளாக இலவசமாகக் கிடைக்கும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். வேண்டுவோர் periyardk@gmail.com என்ற முகவரியை அணுகலாம். இனி தடையில்லை, அவை மட்டுமல்லாது, அனைத்து பிற பெரியாரின் கருத்தாக்கங்களும், உரைகளும் புத்தகங்களாக அனைத்து பதிப்பகங்களாலும் அச்சாக்கம் செய்யப்படவேண்டும், எங்கெங்கும் புத்தகங்கள் காணக் கிடைக்கவேண்டும் என்பது நமது ஆசை.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெரியார் தி.க செயலாளர் திரு. கோவை ராமகிருஷ்ணன் கருத்துக்கூறுகையில் சொன்னது இது. "நான் மாணவனாக இருந்தபோது விடுதலை பத்திரிகையில் பெரியார் ஒரு தலையங்கம் எழுதினார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதைத் துண்டுப் பிரசுரமாகப் போடலாமா என்று பெரியாரிடம் கேட்டேன். 'தாராளமாப் பண்ணுங்க. என் கொள்கையைப் பரப்புறதுக்காக யாரு எதைச் செய்தாலும் அதுக்குத் தடையே இல்ல தம்பி' என்றார். 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் அளித்த தீர்ப்பு இது."

Thursday, June 17, 2010

ஸாரி, திவ்யா.!

ந்த நேரமும் போனும் கையுமாக என்பதை விட குறுஞ்செய்தியும் கையுமாக என்றால் சரியாக இருக்கும், இது ஷ்யாம்ஷண்முகத்தின் அடையாளம் எனலாம். வேலை நேரத்தில் கலாய்ப்பும், கலகலப்பாகவும் இருக்கும் அந்த டீமின் முக்கியமான ஆள். ரொம்பக் கவனமான ஆள்தான் எனினும் அவனுடைய திவ்யாவுக்குப் போகவேண்டிய ஒரு குறுஞ்செய்தியை அவசரத்தில் டீமின் இன்னொரு நபர் ஜெய்க்குத் தவறுதலாக அனுப்பியதில் வந்தது வினை. எதிர்பாராத நேரத்தில் எலி சிக்கியது பொறியில் என்பதாக ஆகிவிட்டது ஷ்யாமின் நிலை.

யாரு திவ்யா? என்ன வயசு? எந்த ஊரு? எங்க வேலை? ஸ்டூடண்டா? எந்த காலெஜு? அத்தை பெண்ணா? இல்ல ஓமனப்பெண்ணா? ரெண்டு பேருக்கும் இடையில் என்ன கசமுசா?  இவ்ளோ நாள் விஷயத்தை மறைச்சதுக்கு என்ன காரணம்? ஏன் திருட்டுத்தனம்? எல்லாம் ஓகேன்னா எப்போ ட்ரீட்? இரண்டு நாட்களாக இதே பேச்சுதான். டீ பிரேக், லஞ்ச் பிரேக், ஷட்டில் டைம்.. ஏன்.. மீட்டிங்கில் கூட சைலண்ட் டிஸ்கஷனாக இந்த டாபிக்தான் ஓடிக்கொண்டிருந்தது.

ஷ்யாம் ஒரு வழியாகியிருந்தான். முக்கியத் தடயமாக அந்த குறுஞ்செய்தி இருந்தது.

‘Really I’m Sorry for the Yesterday’s issue Divu’

அப்படி என்ன இஷ்யூ? அது முதலில் தெரியணும். மண்டை வெடித்துவிடும் போலிருந்தது ஜெய்க்கு. கூடவே பாண்டியன், மாதவ், அஜய், உமா என அனைவரும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்க ஷ்யாமுக்கு உண்மையைச் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

வெளச்சேரி ஷ்யாம் தங்கியிருக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனரின் பெண். ‘ஹேய்ய்.. ஓமனப் பெண்ணேதானா.?’ அதெல்லாமில்லை. சென்னை ஆட்கள்தான். ஆக்ஸென்ச்சர். ‘ஹேய்ய்.. ஓமனா போலாரிஸ், திவ்யா ஆக்ஸென்ச்சரா? டேய் இதுக்குதான் உன் ரூமில் வேறு யாரையும் சேத்துக்கலியா.?' எவ்ளோ நாளா போயிக்கிட்டிருக்குது?’ இப்ப ஒரு ஆறு மாசமாத்தான், வீட்ல சொல்லத்தான் நாள் பார்த்துக்கிட்டிருக்கேன். அவங்களும் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருக்காங்க, சரியா இருக்கும். ‘ஹேய்ய்.. ட்ரீட்டு ட்ரீட்டு..’

‘ட்ரீட்டு இருக்கட்டும் ஒரு பக்கம், அதை சண்டே பாத்துக்கலாம். நேத்திக்கு என்ன பிரச்சினை அதச்சொல்லு முதல்ல? நடந்தது என்ன? குற்றம்..’

பாண்டியன் கேட்டுக்கொண்டிருக்க ஏதோ நினைவிலிருந்த ஜெய் கேட்டான், ‘அப்புறம் என்ன ஆச்சு?’

ஷ்யாம் நேற்று மாலை அறைக்கு மாடியேறிச் செல்லும் போதே கவனித்துவிட்டான், கீழே வீட்டில் யாருமேயில்லை. பூட்டியிருந்தது. ஏற்கனவே திவ்யா சொன்னது போல அவளது பேரண்ட்ஸ் கோவை போயிருக்காங்க.. இவன் மேலே சென்ற அடுத்த அரைமணிக்கெல்லாம் வெளிகேட்டின் கதவுகள் திறப்பதும் திவ்யாவின் ஸ்கூட்டி உள்ளே வரும் சத்தத்தையும் கேட்டான். ஏனோ உள்ளே குறுகுறுப்பு துவங்கியது. அடுத்த பத்தாவது நிமிடம் ஷ்யாம் டிஷர்ட், ஷார்ட்ஸில் கீழே வந்தான். ‘திவூ’ என்றவாறே ஹாலில் காலை வைக்கவும் திவ்யா பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு ஃபிரெஷ்ஷாகி வருவதற்கும் சரியாக இருந்தது.

அப்போதுதான் குளித்திருக்க வேண்டும். நீல நிறப் பூக்கள் சிதறியிருந்த கைகளில்லாத வெள்ளை நைட்டியில் ஈரம் ஆங்காங்கே படர்ந்திருந்தது. இன்னும் காயாத கூந்தல் அலைபாயமுடியாமல் தளர்ந்திருந்தது. இளமைத் துள்ளலாக இருந்தாள் திவ்யா. திவ்யாவின் கால்களுக்காகவே அவளை காதலிக்க ஆரம்பித்தோமோ என்ற சந்தேகம் ஷ்யாமுக்கு அவ்வப்போது வரும். இவள் நடக்கிறாளா? மிதக்கிறாளா? பாதத்தின் தோல்நிறமும் கால்களின் தோல்நிறமும் எந்த இடத்தில் கலக்கின்றன என்று தெரியாமலே கலந்திருந்தது. இவ்வளவு அழகான கணுக்கால் பகுதி, மேல் பாதம், விரல்கள் மிகவும் அரிதான ஒன்றுதான். அவள் அருகிலிருந்தால் அவள் காலைத் தொட்டுக்கொண்டு பேசிகொண்டிருப்பான். கால்களிலிருந்து துவங்கிப் பயணித்து மேலே வந்த போது கடுகடுப்பான முகம் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.

‘என்ன.?’

‘சாப்பாடு கிடைக்குமா? இல்ல ஹோட்டலுக்குதான் போகணுமான்னு கேட்க வந்தேன்’

‘என்ன இது புது பழக்கம். நேற்றே சொன்னேன்ல அவங்க இல்லாத ரெண்டு நாளும் மறந்தும் கீழ வரக்கூடாதுன்னு.. ஓடிப்போயிரு..’

‘ஓகே விரட்டாத, போயிடுறேன்.. ஒரே ஒரு நிமிஷம் உன்னைப் பார்த்துட்டுப் போயிடுறேன்’

‘ஒண்ணும் பாத்துக் கிழிக்கவேண்டாம், கிளம்பு முதல்ல..’

மிரட்டும் பெரிய பெரிய கண்கள் இவனை மேலும் கிறக்கியது. அவள் உதட்டழகிற்கு ஒப்பு சொல்ல ஒரு வாழ்வு வேண்டும். பாயிண்டை முன்வைத்தான் ஷ்யாம்.

‘ஒரே ஒரு முத்தம் குடு. போயிடறேன்’

விறுவிறுவென இவனை நோக்கி வந்தவள் எந்த பேரமும் இல்லாமல் தழுவுவதைப்போல நெருங்கி அவன் உதடுகளோடு தன் உதடுகளைப் பதித்தாள். அவளை இடுப்போடு பிடித்து அணைத்தபடியே சோபாவின் அருகிலிருந்த சுவற்றோடு சாய்ந்தான் ஷ்யாம். அடுத்த சில நிமிடங்களில் ஷ்யாமின் நோக்கத்தை, அவனது கைகளும், மூச்சுக்காற்றும் காட்டிக்கொடுத்தன. திவ்யா அவனை பலம்கொண்ட மட்டும் விலக்கித் தள்ளினாள்.

‘திஸிஸ் டூ மச்.. இதுக்குதான் கொஞ்சமும் இடம் குடுக்கக்கூடாதுங்கிறது. இல்லைன்னா இப்பிடித்தான் ஆகும்..’

‘இப்ப என்ன? இதுனால என்ன? நாம எந்த காலத்துல இருக்கோம்? உங்க பாட்டி காலத்துலயா? கல்சுரல் மண்ணாங்கட்டியா? ஒய் நாட்? இல்ல எம்மேல நம்பிக்கையில்லையா?’ ஏமாற்றத்தில் கேள்விகள் கிளம்பின ஷ்யாமிடமிருந்து.

‘உம்மேல நம்பிக்கையில்லாமல்லாம் இல்ல.. அப்பிடியே நீ போய்த் தொலைஞ்சாத்தான் என்ன பண்ணமுடியும்? .:ப்ராடு பையன்கிட்டல்லாம் நியாயம் எதிர்பார்த்துக்கிட்டிருக்க முடியாது என்னால.. போடான்னு போயிக்கிட்டேயிருப்பேன். அப்புறம் இந்த கல்சுரல் மண்ணாங்கட்டி வேற பல விஷயங்கள்ல நான் பாத்தாலும் இந்த விஷயத்துல  கிடையாது. தி ரீஸன் இஸ் வெரி சிம்பிள். செல்ப் கண்ட்ரோல். அதீத ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்துக்காக நான் கட்டுப்பாடு சிதறுவேனா என்பது நான் என்னைக் கேட்கும் கேள்வி. அதற்காக முயற்சிக்கிறேன் நான். முடிஞ்சா இன்னும் என்னை டெம்ட் பண்ணாம எனக்கு ஹெல்ப் பண்ணு.. அவ்ளோதான்’

‘ஸாரி திவ்யா..’ இப்போது ஷ்யாம் திவ்யாவுக்கு தந்த முத்தம் சில்லென்றிருந்திருக்கவேண்டும். அதோடு வெளியேறினான்.

ஜெய் கேட்டான், ‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘என்னது நொப்புறம் என்ன ஆச்சு? நான் இன்னும் ஒண்ணும் சொல்லவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள நீங்களா எதுனா கற்பனை பண்ணிக்கிட்டு அப்புறம் என்னாச்சு? இப்புறம் என்னாச்சுன்னா என்ன அர்த்தம்? நேத்து நீங்க நினைக்கிறா மாதிரில்லாம் ஒண்ணும் நடக்கலை. முந்தாநாளு அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு வைக்கச்சொன்னா. மறந்துட்டேன். ஆஃபீஸ் போகும் போது பாதி வழியில ட்ரை ஆகி தள்ளிகிட்டு போகும்படி ஆயிடுச்சாம். அதான் அவ கத்த, நான் கத்தன்னு ஒரு சின்ன சண்டையாகிப்போச்சு. அதுக்குதான் ஸாரி சொல்லி எஸ்ஸெம்மெஸ் பண்ணினேன். போதுமா.?’

ஷ்யாம் முடித்துவிட்டு டீயை சுவாரசியமாக குடிக்க ஆரம்பிக்க, டீமுக்கு கொஞ்சம் சுவாரசியம் கம்மியாக்தான் போயிருக்கும். இல்லையா.?

.

Monday, June 14, 2010

எதிர் திசையில் பயணிக்கும் பெஞ்சமின்

ஒவ்வொரு காலகட்டங்களிலும் இது போல விபரீதங்கள் நிகழத்தான் செய்கின்றன. குனிஞ்சு மண்ணெடுக்க முடியாமல் கிட்டத்தட்ட வெண்பூ போல தொப்பை வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதால் அலுவலக நண்பர்கள் போனவாரம் குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு ஆஃபீஸ் ஜிம்முக்குள் கொண்டு போய்விட்டனர். அந்த மெஷினரிஸுடன் அவர்கள் மல்லுக்கட்டுவதைப் பார்த்தே எனக்கு வியர்த்துவழிந்தது. சுயமாக ஆர்வத்தை உண்டுபண்ணிக்கொள்ள புதிய விளையாட்டுச் சப்பாத்துகளெல்லாம் (குசும்பன் கவனிக்க.. சப்பாத்தி இல்ல, சப்பாத்து) கூட வாங்கப்பட்டுள்ளது. மெதுவாக மேல் வலிக்காமல் டேபிள் டென்னிஸில் துவங்கியிருக்கிறேன். பார்ப்போம் இது எத்தனை நாளைக்கு என்று.. ஏற்கனவே நமது 'நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்' பதிவைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதல் நாள் சக்ஸஸ்ஃபுல்லாக விளையாடியதால் அதைக்கொண்டாட தாம்பரம் அஞ்சப்பர் போய் சிக்கன் டிக்கோ, மட்டன் கபோப், பிரிங் ரோல், டக்கீலோ என கட்டு கட்டு என கட்டியது இங்கு தேவையில்லாத விஷயம் என நினைக்கிறேன்.

*******************

சுபாவை ப்ரிகேஜி சேர்க்க அப்ளிகேஷன் வாங்கப்போனேன். அப்போது பிள்ளை ப்ளேஸ்கூல் போறானா என்று கேள்வி வந்தது. இப்போதே இரண்டரை வயதுதான் ஆகிறது. இன்னும் ஒன்று, இரண்டு எல்லாமே ட்ரஸில்தான் போய்க்கொண்டிருக்கிறான். இந்த அழகில் ப்ரிகேஜிக்கும் முன்னதாக ப்ளேஸ்கூல் என்றால் எந்த வயதில்தான் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள்? நான் வேறு எல்கேஜி, யுகேஜிக்கு முன்னதாக இருப்பதால் ப்ரிகேஜிதான் ப்ளேஸ்கூலும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

*******************

banjaminbuttonart

The Curious Case of Benjamin Button.. பழுத்த கிழமாக பிறக்கும் ஒரு குழந்தை வளர வளர ரிவர்ஸில் இளமையை நோக்கி பயணித்து சிறுவனாகி குழந்தையாகி இறக்கிறது. மிக வித்தியாசமான அல்லது அபத்தமான கதைகளை அல்லது சிந்தனைகளைக் கூட, இந்த ஹாலிவுட்காரர்கள் மக்கள் ஏற்பார்களா இல்லையா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் படமாக எடுக்க இறங்கிவிடுகிறார்கள். ஆனால் அதையும் அதற்குரிய லாஜிக்குகளுடன், உணர்வைத்தொடுமளவு சிறப்பாக எடுக்க அவர்களால்தான் முடிகிறது. இளமையை நோக்கி வளரும் பெஞ்சமின் காரக்டரில் பிராட் பிட் (Brad Pitt) வியப்பூட்டுகிறார். அவர் முதியவராக இருக்கையில் சின்னஞ்சிறுமியாய் சந்திக்கும் டெய்ஸியுடன், அவரவர் நடுவயதில் காதலாகி இணைகின்றார். பின்னர் சிறிது காலத்தில் சிக்கல் கருதி பெஞ்சமின் பிரிந்து செல்கிறார். பின்னர் சில வருடங்களில் டெய்ஸி நாற்பதைக் கடந்திருக்க, ஒரு முறை டெய்ஸியையும் குழந்தையையும் பார்த்துச்செல்ல மிக இளைஞராய் (இருபதுகளைப் போல) பெஞ்சமின் வரும் காட்சி அனைத்திலும் உச்சம். பிராட் பிட்டை விடவும் டெய்ஸியாக வரும் கேட் பிளான்ஷெ (Cate blanchett) ஒருபடி மேல் எனுமளவு அவரது 20 வயதிலிருந்து 40 வயது வரையான காட்சியமைப்புகளில் நடிப்பில் பிரமிக்கவைக்கிறார். மேக் அப் கேட்கவும் வேண்டுமா? படம் ஆர்ட், மேக் அப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது. அதானே.. இல்லையென்றால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

*********************

கொஞ்ச நாட்களாக அர்ச்சனை ரொம்ப ஓவராக போய்க்கொண்டிருந்ததால் வம்படியாக இன்டெர்நெட்டை மூடிவைத்துவிட்டு இந்த சனி, ஞாயிறு ரமாவுக்கு ஹெல்ப் பண்ணியே தீருவது என்று இருந்தேன். ஒட்டடை அடித்தல், .:பிரிட்ஜ் கிளீன் செய்தல், குழாய் அடைப்புகளை சரிசெய்தல், .:பேன் கழற்றி மாட்டுதல் என வேலைகள் பென்ட் நிமிர்ந்தன. அடுத்து வேண்டாத வேலையாக இன்றைக்கு நான் சமைக்கிறேன் பார் என்று இன்னொரு பதிவுலக நண்பர் தந்த ஒரு ரெஸிபியைத் முயற்சித்தேன். வந்தது வினை. அடுக்களை இரண்டானது ஒருபுறமிருக்க ரெஸிபியில் ஏதோ கோளாறாகி அரிசி முதலான அனைத்தும் வீணானது இரண்டாம் புறமிருக்க, மீண்டும் அவர் சமைத்து சாப்பிட ஆகிவிட்ட தாமதத்தில் அவர் ஏதோ சொல்ல நான் ஏதோ சொல்ல தகராறு வளர்ந்து வாய்ச்சண்டையாகி பிறகு கத்திச்சண்டை வரை போய்விட்டது. ஒழுக்கமாக இண்டெர்நெட்டிலாவது உட்கார்ந்து தொலைத்திருக்கலாம்.

.

Sunday, June 13, 2010

குறும்படம் எடுப்பது எப்படி?

பரிசல், செல்வேந்திரன், வெயிலான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் விருட்டென எழுந்து ஒரே குரலில், “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர், எதிரணி வழக்கறிஞர் என்ன தகுதியிருக்கிறது என இந்த வழக்கில் இப்படியொரு அரிய வாதத்தை துவக்குகிறார் எனத் தெரியவில்லை. ஆகவே அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.

நீதிபதி வடகரை வேலன், “அப்ஜக்ஷன் ஓவர் ரீல். தாமிரா புதியவராக இருந்தாலும், மிக இளமையானவராகவும் இருப்பதால் அவரை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையாகிறது. நீங்கள் துவங்குங்கள் தாமிரா”

இப்போ அவுரு இளமையைப் பற்றி யாரு பேசினது? இப்பிடித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவாரய்யா இவுரு என்று முனகியவாறு தாமிராவை முறைத்தவாறே வெயிலான் அமர்கிறார். பார்வையாளர் பகுதியில் விசிலடிக்காத குறையாக அப்துலும், வெண்பூவும் அமர்ந்திருக்கின்றனர். வெண்பூ கையில் சமோசா பொட்டலம் இருக்கிறது.

தாமிரா, “தேங்க்யூ யுவர் ஹானர்”... வழக்கு தொடர்கிறது.

************

நமக்கு என்ன அடிப்படைத்தகுதி இருக்கிறது என்று இறுதியில் பார்த்துக்கொள்ளலாம். முதலில் விஷயத்துக்குள் போகலாம்.

டெக்னிகல் :    முதலும் முக்கியமானதும் ஆன டெக்னிகல் தேவை என்று ஒன்று உள்ளது. அதுதான் காமிரா மற்றும் கம்ப்யூட்டர். ஆபீஸ் கம்ப்யூட்டரை நம்ப முடியாது. ஏனெனில் ஏற்கனவே பாதி நேரம் பிளாக்கை நோண்டிக்கொண்டிருப்பதால் நம்மைக் கட்டம் கட்டி வைத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இந்த வேலையையும் ஆபீஸில் திட்டமிட்டீர்கள் என்றால் முழு நேரமும் பொங்கலாகிவிட சீட்டு ‘டும்மா’வாகிவிடும்.

ஆகவே வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ கம்ப்யூட்டரை பயன்படுத்த ஏற்பாடுசெய்துகொண்டுதான் களத்திலேயே இறங்கவேண்டும். எடுத்த கிளிப்பிங்குகளை வெட்டி ஒட்டி, பின்னணி இசை, ஒலி சேர்க்கப்போகிறோம் என்பதால் அதில் குறைந்த பட்சமாக ‘நீரோஸ்மார்ட்’டோ, ‘வின்மூவிமேக்கரோ’ இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு காமிரா. நம்மிடம் இருக்கும் சொம்பை ‘H3’ யில் போட்டோதான் புடிக்கமுடியும் என்பதால் எப்பிடியாவது ஆட்டையைப் போட்டு நண்பரிடமிருந்து ஒரு நல்ல ‘மூவிகேமை’ பத்து நாளைக்கு இரவல் வாங்கிவிடுங்கள். குறிப்பாக உங்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் சக ஊழியர்களை விசாரித்தால் தண்டத்துக்கு வாங்கி பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதை படம்பிடித்துவிட்டு தூசியடைய போட்டிருப்பார்கள். எதற்கு என்று கேட்டால் ஏதாவது சொல்லி சமாளியுங்கள். உண்மையைச்சொன்னால் அவர்களுக்கும் நடிக்க சான்ஸ் கொடுக்கவேண்டியது நேரலாம்.

பார்ட்னர் : நடிகர்கள் தவிர பெரும்பாலும் கூட்டம் சேர்க்காதீர்கள். ஒரே ஒருவரை மட்டும் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்வது நலம். உங்கள் நெருங்கிய நண்பராக (மேலே கம்ப்யூட்டருக்கு நாடினோமே அவராக இருந்தால் நலம்) கொஞ்சம் சமோசா, டீ, செலவு பாராதவராக பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒண்ணும் திரைக்கதை அறிவோ, ஆர்வமோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தால் நீங்கள் அசிஸ்டெண்டாக மாறிவிடக்கூடிய ஆபத்திருக்கிறது. ஆனாலும் அவருடனும் அவ்வப்போது கதைவிவாதம் பண்ணுங்கள். நம்மைவிட உருப்படியான யோசனைகள் வந்தாலும் வரலாம்.

கதை : உண்மையிலேயே இந்த ஏரியா மிகவும் சிக்கலானது. உங்கள் மனதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நீங்காத கதை இருக்கும். அது வேண்டாம், அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். எப்படியாவது குப்புறப்படுத்து யோசித்தாவது ஒரு கதையை பிடித்துவிடுங்கள். வேறு யாரிடமும் நாம் காண்பிக்கப்போவதில்லை என்பதால் ஏதாவது பழைய எழுத்தாளர்களின் கதையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள் அவர்கள் கதையை நாம் எடுத்துமுடித்திருக்கும்போது நமக்கே குற்ற உணர்ச்சி வந்துவிடக்கூடாது. டிவியிலிருந்தோ, வார இதழ்களிலிருந்தோ சுடலாம் என்று பார்த்தால் அதைவிட நீங்கள் யோசித்துவைத்திருப்பதே நல்ல கதையாக தோணும்.

கதையை முடிவு செய்யும் முன்னர் நான் கூறும் விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஹீரோ பிளைட்டில் இருந்து இறங்கி, பென்ஸ் காரில் கிளம்பி வீட்டுக்குப்போகிறார் என்பது போல காட்சிகள் இருக்கக்கூடாது. பட்ஜெட் தாங்காது. அதற்காக பஸ்ஸில் போகிறார் என்பதாகவும் வேண்டாம். அது முன்னதைவிடவும் ரொம்பக்கஷ்டம். காதல் கதையாக இருந்தால் நடிக்க ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். இல்லை உங்கள்/அல்லது நண்பரின் காதலி இருக்கிறார் என்றால் அவரின் அழகு உங்கள் கதைக்கு போதுமானதா என்பது சிக்கலாகிவிடும். மேலும் நீங்களோ, உங்கள் நண்பரோ ஹீரோவாக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். நமது பிரதான குறிக்கோள் இயக்கமே தவிர நடிப்பது அல்ல, ஏனெனில் அது எவ்வளவு சிரமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணத்துக்கு ஏதாவது விஷால் படத்தைப் பார்த்துக்கொள்ளவும். கவனம், அதைப்பார்த்து நாமும் நடித்தால் என்ன என்ற தைரியம் வந்துவிடக்கூடாது. பெரும்பாலும் ஆண்களும், தேவைப்பட்டால் குழந்தைகளும் வருவது போன்ற, மொத்தத்தில் நான்கைந்து கேரக்டர்கள் கொண்ட ஒரு கதையை அமைத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு கண்டிஷன் போட்டதால் பெரும்பாலும் கமர்ஷியல் கதையாக இல்லாமல், ஒரு ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு கதை வந்திருக்கும். ஒருவழியாக கதை முடிவு செய்தபின்னர் நண்பருடன் அமர்ந்து திரைக்கதை எழுதுங்கள். அதற்கும் முன்னதாக சில வெற்றிபெற்ற திரைப்படங்களின் திரைக்கதைப்புத்தகங்களை வாசித்துவிடாதீர்கள். பிறகு திரைக்கதை என்றால் என்ன என்ற பெருத்த சந்தேகம் வந்து விட்டால் கதை கந்தலாகிவிடும்.. அதோடு வசனங்களையும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

லொக்கேஷன் : பெரும்பாலும் உங்கள் வீடு, தோட்டம்(இருந்தால்), மொட்டைமாடி, அதிகபட்சம் உங்கள் தெரு இதற்குள்ளாகவே கதை நிகழும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மகாபலிபுரத்தில் சில காட்சிகள் வைத்துக்கொள்ளலாம். ஒரே நாளில் அந்தப்பகுதியை ஷூட்டிங் முடித்து வந்திடலாம் என குறுக்கு வழியில் சிந்திக்காதீர்கள். பின்னால் மேலும் இரண்டு தடவை போக வேண்டி வந்து பிராஜக்ட் பாதியிலேயே நின்று வருத்தப்படும்படி ஆகிவிடும்.

நடிப்பு : நான் சொல்லும் முன்னரே நண்பர்களையோ, உறவினர்களையோ அரை நாள்தான், ஒருநாள்தான் என்று கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க வைத்திருப்பீர்கள்.. நமக்கும் அவர்களை விட்டால் வேறு கதியில்லை என்றாலும் ரொம்ப இறங்கிப்போக வேண்டியதில்லை. முதலிலேயே 'கொஞ்சம் கோபப்படுங்கள், சோகமாக இருங்கள்' என்று நடிக்கச்சொல்லி சாம்பிள் பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் பின்னர் சிக்கலாகிவிடும். கொஞ்ச காட்சிகள் லாங் ஷாட்டில் ஒப்பேற்றிவைத்திருப்பீர்கள், பின்னர் குளோஸப் வரும்போது சொதப்பி, பாலாவைப்போல வேறு நடிகரைப் போட்டு ரீஷூட் பண்ண வேண்டியநிலை வந்துவிடும். கதையெல்லாம் அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. சொன்னால் ஓடிவிடக்கூடும். ஆகவே சொன்னதைச்செய்தால் போதும் என்று ஸ்ட்ரிக்ட் ஆன இயக்குனர் போல நடந்துகொள்ளுங்கள். குழந்தைகள் சினிமாவில் அழகாக நடிப்பதைப்பார்த்திருப்பீர்கள். நிஜத்தில் அது ரொம்ப கஷ்டம், படுத்திவிடுவார்கள். ஆகவே குழந்தை காரெக்டர் கதையில் இருந்தால் ஜாக்கிரதை.

ஷூட்டிங் : எல்லாம் தயாராகிவிட்டதால் அடுத்து ஷூட்டிங்தான்..

(ரிப்பீட்டு போடுகையில் எல்லா பாகங்களையுமா போடமுடியும்.? பிச்சுடப்போறாங்க.. இது பிடிச்சிருந்ததுன்னா நீங்களே போய் மற்றதையும் படிச்சுக்கங்க..)

பாகம் 2 , பாகம் 3.

.

Wednesday, June 9, 2010

ஒற்றைச் சொல் கவிதைகள்

தம்பி இது என்னது?

டுண்டு (துண்டு)

இது?

அம்மா சேல

அது என்னது?

அப்பா சட்ட

இது?

தலானி (தலையணை)

இது?

போவர (போர்வை)

அது?

கன்னானி (கண்ணாடி)

அது?

டீப்ரைட்டு (ட்யூப் லைட்)

இது என்னது?

முக்கு (மூக்கு)

இது?

கண்ணு

இது?

காது

தம்பி காதை அப்பா கடிக்கட்டுமா?

கடிவ்வேண்டா (கடிக்க வேண்டாம்)

டிவி பார்க்க போலாமா? உனக்கு என்ன வைக்கணும்?

சுட்டிட்டீ (சுட்டி டிவி)

உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்?

அடதா மழதா (அடடா மழைடா)

இது என்னது சொல்லு?

சொல்லும்மா?

சொல்லு தம்பி?

சொல்லு புஸ்தகம். புஸ்தகம்னு சொல்லு.?

எவ்ளோ நேரமா கத்திக்கிட்டிருக்கேன். வர்ற கோவத்துக்கு முதுகுல ரெண்டு போட்டம்னா.. மரியாதையா சொல்லிரு. புஸ்தகம்..

ஆள்காட்டி விரலை உயர்த்தியவாறே சத்தமுச்சு.. (சத்தம் மூச்.!)

அவ்வ்வ்வ்வ்..

.

கற்பகம்

பிரகாஷ் தனது திருமணம் குறித்த செய்தியைச்சொல்ல போனில் அழைத்தபோது சென்னைக்கு கிளம்பும் பரபரப்பிலிருந்தேன். அவனது திருமண தேதியை கேட்டுக்கொண்டேன். நல்ல வேளையாக நான் சென்னையில் இருக்கும் நாட்களில் ஒன்றாகவே இருந்தது. மெனக்கெட வேண்டியிருக்காது. கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். நமக்குள் எத்தனையோ முக்கியத்துவமுள்ள அல்லது முக்கியத்துவமற்ற பல ரகசியங்கள் கிடக்கின்றன. அவை எந்தெந்த சூழலில் நிகழ்ந்தவையோ அந்தந்த சூழலில் நம்மை நெருங்கியிருந்த மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம். கால ஓட்டத்தில் பல முக்கியத்துவமிழந்து நினைவின் ஆழத்திற்கு சென்று விடுகின்றன.

முதல் முதலாக அவளைப்பார்த்த நாள் எல்லோரையும் போலவே எனக்கும் நன்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு பிங்க் நிற தாவணியில் செல்வியுடன் பேசிக்கொண்டே அலுவலகத்திற்குள் வந்தாள். அவளது கண்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றில் முதன்முதலாக வேலைக்கு வரும் பயமும் சிறிது பதற்றமும் இருந்தது. செல்வியின் சிபாரிசிலேயே அவள் வேலைக்கு எடுக்கப்பட்டிருந்தாள்.

அங்கே பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் அனைவரும் பெரும்பாலும் சுடிதாரிலும் மிகச்சிலர் சேலையிலும் இருந்தனர். அவள் மட்டும் தாவணியில் இருந்ததால் வித்தியாசமாக இருந்தது. அவளுக்கும் அது வித்தியாசமாக தோன்றி மேலும் பதற்றமாக இருந்திருக்கவேண்டும். என்னிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது அவள் என்னை நிமிர்ந்தும் பார்த்திடவில்லை. அலைபாயும் விழிகளுடன் உறுதியற்ற ஒரு குரலில் குட்மார்னிங் சொன்னாள். நான் சிரித்துக்கொண்டே செல்வியின் அருகிலேயேயிருந்து ஒரு வாரத்திற்கு வேலை கற்றுக்கொள்ளும்படி பணித்துவிட்டு எனது பணியில் மூழ்கினேன். நான் அந்த நிறுவனத்தில் உயரதிகாரியாக எல்லாம் இல்லை எனினும் அந்தக்குழுவை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்தேன்.

மறுநாளில் இருந்து அவளும் சுடிதாரில் வரத்தொடங்கியிருந்தாள். பிற பெண்கள் பத்தே நாட்களில் இடமும் ஆட்களும் பழக்கப்பட்டு கொஞ்சம் சகஜமான பேச்சுக்களும், லஞ்ச் நேர அரட்டைகளும் என சுதந்திரமான‌ உணர்வுக்கு திரும்பிவிடுவார்கள். அவள் இருக்குமிடமே தெரியவில்லை. வேலையை கவனமாக கற்றுக்கொண்டு கடமையே கண்ணாக இருப்பது தெரிந்தது. யாருடனும் பேசிப்பழகுவதாகவும்‌ தெரியவில்லை. குறிப்பாக ஆண்கள் பக்கம் திரும்புவதாகவும் தெரியவில்லை. ஆண்கள் பிரிவிலிருந்து தேவைப்படும் உதவிகளையும், கருவிகளையும் சில சீனியர் பெண்களைக்கொண்டே பெற்று வேலையை கவனித்துக்கொண்டிருந்தாள். ஆண்களைப் பார்த்து வெட்கப்படும் மற்ற சில பெண்களைப் பார்த்து அப்படி கற்றுக்கொண்டிருப்பாள்.

செல்வி இல்லாத சமயங்களில் வேலைக்கான திட்டத்தை தெரிந்துகொள்ள என்னிடம் வரும் பெண்கள் நாணிக்கோணி தாளை வாங்கிச்செல்வார்கள். பல சமயங்களில் அவற்றை செயற்கையாக உணர்ந்திருக்கிறேன். சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளும் போதும் அவ்வாறே நடக்கும். ஆனால் செல்வி அப்படியல்ல. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என அங்கிருக்கும் ஆண்களுடன் சகஜமாக பழகிக்கொண்டிருந்தாள். தெளிவான பேச்சும், கச்சிதமாக வேலையை முடிக்கும் திறனும் வாய்த்தவள். அவளோ செல்வியைத்தவிர வேறு யாருடனும் பழகுவது போல தெரியவில்லை. ஆனால் சிறிய முன்னேற்றமாக‌ அவள் இப்போது எல்லோருடனும் சிரித்த முகமாக இருப்பதைக் காணமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தேன். சராசரிக்கும் குறைவான உயரம். கறுப்பு என்று சொல்லலாமா? மாநிறம் என்று சொல்வதா? ஒரு மிகச்சிறிய மூக்குத்தி வேறு அணிந்திருந்தாள். கூந்தல் அடர்த்தியாகவும் மிக நீளமாகவும் இருந்தது. எப்போதும் ஒற்றை ஜடையே பின்னிக்கொண்டிருந்தாள். செல்வி எனது மேஜைக்கு வரும்போது சில சமயங்களில் அவளும் இவள் தோளை ஒட்டியவாறு வருவதுண்டு. கண்கள் பளபளப்பாக ஒரு ஆர்வத்தில் மிதந்துகொண்டிருக்கும். உங்கள் பிரெண்ட் பேசமாட்டாங்களா என்று நான் செல்வியை கிண்டலாக கேட்கும் போது செல்வி சிரிப்பாள், அவள் மெலிதாக வெட்குவாள். அந்த வெட்கத்தை உணர்ந்தேன்.

இதுவரை ஒரு வார்த்தையும் அவளுடன் பேசியிருக்கவில்லை. மெலிதாக எங்கள் கண்கள் பார்த்துக்கொண்டன. எனது அறையில். அவர்களது அறையில். இடைவேளைகளில். வாயில்களில். அவள் எங்கிருந்து வருகிறாள்? முகவரி என்ன? குடும்பம் எப்படிப்பட்டது? அவள் என்ன எண்ணுகிறாள்? பெயரைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் என் கண்களை கண்டவுடன் கவிழ்ந்துகொண்ட அவளது கண்கள் மெல்ல என்னுடன் போட்டியிடத்துவங்கியிருந்தன. அந்த பார்வை விளையாட்டை நான் மிக ரசித்தேன். அந்தக்கண்களை பார்த்துக்கொண்டே இருந்துவிடமாட்டோமா என தோன்றிக்கொண்டேயிருக்கும். ஊடாக அவளது மெலிதான சிரிப்பு என்னை என்னவோ செய்தது.

ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது துவங்கிய விளையாட்டின் விநாடிகள் நிமிடமாகியிருந்தன‌. யார் முதலில் கண்களைத் தழைப்பது என்ற சொல்லப்படாத போட்டி துவங்கியிருந்தது. கண்களாலேயே விழுங்கிவிடுவதைப்போல தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தாள். யாரும் பார்த்துவிட்டால் என்ன ஆகும்? எத்தனை நிமிடங்கள் ஆகின்றன? இந்தப்பெண்ணுக்குள்ளா இவ்வளவு தைரியம்? கண்களில் கண்ணீர் பொங்க நான்தான் அன்று முதலில் கண்களை தழைப்பதாக ஆயிற்று. அடுத்து வந்த சில நாட்களில் இந்தப்பார்வை விளையாட்டை பிரகாஷ் கவனித்துவிட்டான். ‘கலக்கிட்டீங்க பாஸ், எக்கச்சக்கமாய் போட்டி அவங்களுக்கு.. நீங்க புடிச்சிட்டீங்க போல..’ என்று பகடி செய்தான். ‘அப்படி இல்லப்பா, சும்மாதான்’ என்று சமாளித்தேன். பின்னர் அவள் குறித்து பேசும்போதெல்லாம் உங்க ஆளு, உங்க ஆளு.. என்று கிண்டல் செய்யலானான். மேலும் அவள் குறித்த மேல் தகவல்களை அவனிடம் கேட்டேன். அறிந்துவந்து சொல்வதாய் சொன்னான். பிரிதொரு நாள் செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தாவணி குறித்து ஏதோ பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.. ஞாபகமில்லை...

தொடர்ந்து வந்த ஒரு புத்தாண்டு தினத்தில், இளநீல நிற‌ தாவணியில் வந்திருந்தாள்.

பிரகாஷிடம் அவன் திருமணத்திற்கு கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். அவசரமாக பதிலளித்தான், "நான் சொல்ல மறந்திட்டேனா பாஸ்? உங்க ஆளுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாச்சே.. இன்னும் இங்கதான் ஒர்க் பண்றாங்க‌.."

.

Monday, June 7, 2010

நான் ரசித்த பாடல்கள் : டாப் 5

எனது இசையார்வத்தின் அதிகபட்ச உயரம் தமிழ் திரைப்பாடல்கள் மட்டுமே. அதுவும் எனக்கு பிடிக்கவேண்டுமானால் அந்தப்பாடல் இசை தவிர மேலும் சில ரசனையான விஷயங்களையும் கொண்டிருக்கவேண்டும். ஏராளமான பாடல்களுக்கிடையே சில விதி முறைகளை வைத்துக்கொண்டு நான் ரசித்த, ரசிக்கும் டாப் 5 பாடல்களைத் தருகிறேன். மிக முக்கியமான விஷயம் 2009-10 ல் வந்த பாடல்கள் மட்டுமே ஆட்டத்துக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரசனையான ஒளிப்பதிவு, ரகளையான ஹீரோ, ஹீரோயின், அழகான இசை, கவிதைத்தனமான பாடல் வரிகள், உணர்வைத்தொடும் குரல், கொஞ்சம் காதல் என பல விஷயங்களையும் கணக்கில் கொண்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன். சேம் பிளட்டாக இருந்தால் ஒரு பின்னூட்டத்தைப் போட்டு வையுங்கள்.

5. ஒரு கல் ஒரு கண்ணாடி..

sms-1

ப‌ட‌ம் : சிவாமனசுலசக்தி இய‌க்க‌ம் : எம்.ராஜேஷ் ஜோடி : ஜீவா, அனுயா ஒளிப்ப‌திவு : சக்திசரவணன் இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா.முத்துக்குமார் குர‌ல் : யுவன்ஷங்கர்ராஜா

4. மழை பெய்யும் நேரம்..

Renigunda

ப‌ட‌ம் : ரேனிகுண்டா இய‌க்க‌ம் : ஆர்.பன்னீர்செல்வம் ஜோடி : ஜானி, சனுஷா ஒளிப்ப‌திவு : சக்தி இசை : கணேஷ்ராகவேந்திரா பாட‌ல் : யுகபாரதி குர‌ல் : ஹரிஷ்ராகவேந்திரா

3. மழையே மழையே..

eeram_movie_vijay_tv_telecast

ப‌ட‌ம் : ஈரம் இய‌க்கம் : அறிவழகன் ஜோடி : ஆதி, சிந்துமேனன்  ஒளிப்ப‌திவு : மனோஜ்பரமஹம்ஸா இசை : எஸ்.தமன் பாட‌ல் : விவேகா குர‌ல் : ரஞ்சித்

2. மன்னிப்பாயா..

VV150110_1

ப‌ட‌ம் : விண்ணைத்தாண்டி வருவாயா இய‌க்க‌ம் : கௌதம்வாசுதேவ்மேனன் ஜோடி : சிலம்பரசன், திரிஷா ஒளிப்ப‌திவு : மனோஜ்பரமஹம்ஸா இசை : ஏஆர்.ரஹ்மான் பாட‌ல் : தாமரை குர‌ல் : ஏஆர்.ரஹ்மான், ஷ்ரேயாகோஷல்

1. ஒரு தேவதை பார்க்கும் நேரமிது..

vamananorg

ப‌ட‌ம் : வாமனன் இய‌க்க‌ம் : ஐ.அகமது ஜோடி : ஜெய், பிரியா ஒளிப்ப‌திவு : அரவிந்த்கிருஷ்ணா இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா.முத்துக்குமார் குர‌ல் : ரூப்குமார்ரதோட்

.

(முந்தைய டாப் 5 பாடல்கள்)

.

Thursday, June 3, 2010

சிங்கம் : விமர்சனம்

பொதுவாக ரமா சினிமா பார்க்க அவ்வளவாக விரும்புவதில்லை. இருப்பினும் எப்போதாவது நான் கொஞ்சம் நச்சரித்தால் ஒப்புக்கொள்வார். அவ்வாறு நாங்கள் தேர்வு செய்யும் படங்கள் பெரும்பாலும் அயன், ஆதவன் போன்ற படங்களாகத்தான் இருக்கும். சுபா வந்த பிறகு கூட இந்த இரண்டு வருடங்களில் இரண்டல்லது மூன்று படங்கள் அவனோடு போயிருக்கிறோம். பாதியில் அழுது வெளியேற வைத்துவிடுவானோ என்ற பயமிருந்தாலும் அவ்வளவாக படுத்தாமல் பாதியைத் தூங்கியும், மீதியை சகித்துக்கொண்டும் பார்த்துவிடுவான். ஆகவே தயக்கமின்றி அவனையும் தூக்கிக் கொண்டே சென்றோம்.

டைட்டில் துவங்கியது. டமா டுமா.. சன் பிக்சர்ஸ்.. கடா முடா கலாநிதி மாறன், சொய்ங் பொய்ங் தடபுடா தடபுடா வழங்கும் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வ்வோஓஓஓ க்க்க்வோர்ர்ர்ர்ர் சிங்கம் என்று துவங்கி கிராஃபிக்ஸ் சிங்கம் பாய, காமிரா ஒரு இடம்னு இல்லாமல் சொய்ங் சொய்ங் என பறக்க க்க்கோர்ர்ர்ர்ர்ர் என சூர்யா சிங்கம் போல பறந்து படம் துவங்கிய ஐந்து நிமிடத்துக்கு ஃபைட்டர்களை பறக்கவிட.. தியேட்டர் அலற.. கண்டும் காணாததற்கு ரசிகர்கள் வேறு துவக்கக்கூச்சலிட நமக்கே எங்கோ கலவரத்தில் சிக்கிக்கொண்டோமோ என்ற பயம் ஏற்படுகிறது. பாவம் இரண்டரை வயதுதான் ஆகிறது சுபாவுக்கு. அழுது அலறிவிட்டான். ஒழுங்கா படம் பார்க்க வந்துகொண்டிருந்த பிள்ளையை இப்படிப் பண்ணிவிட்டீங்களே, அடப்பாவிகளா.. பின்னணி இசை பண்ணிய புண்ணியவான்களா.. நீங்க நல்லாவேயிருங்க.!

நல்லவேளையாக வீடு பக்கத்திலிருந்ததால் ஆட்டோ பிடித்து ரமாவையும், அவனையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் படத்தைத் தொடர்ந்தேன். ஹூம்.!

*****************

சிங்கம்

சொத்தையான கிளைமாக்ஸைத் தவிர படம் பரபரன்னு போகுது. செமையான ஹீரோவும் செமத்தியான வில்லனும் மோதிக்கொள்கிறார்கள். ஓரளவு புத்திசாலித்தனமான இயல்பான (? அதாவது மற்ற ஹீரோக்களை ஒப்பிடுகையில் இதுவே பெட்டரான இயல்பு என்று எண்ணும் நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டார்கள்) ஹீரோ, வலுவான வில்லன் (கொஞ்சம் மொக்கை போட்டாலும்) இருவருக்குமான பரபரவென லாஜிக் மீறாத (? அதாவது.. என்ன போதுமா? சரி.) திரைக்கதை என விறுவிறுவென செல்கிறது படம். தூத்துக்குடியில் துடிப்பான SI ஆக இருக்கும் சூர்யா, பெயிலுக்கான போலிக்கையெழுத்து பிரச்சினையில் பிரகாஷ்ராஜை ஒரு காட்டு காட்டிவிட தீப்பற்றுகிறது. சென்னை மாற்றலான பின் வில்லன் இம்சையில் தயங்கி ஊருக்கு ஓடிப்போக முடிவெடுப்பது, பின் (? ஹீரோயின் புண்ணியத்தில்) மாற்றிக்கொள்வது இயல்பாக இருக்கிறது. இதைப்போன்ற காட்சிகள்தான் படத்துடன் நாம் ஒன்ற காரணமாகின்றன. இருவருக்குமிடையேயான அடுத்தடுத்த அதிரடி மூவ்கள் சுவாரசியம்.

singam

கதையெல்லாம் விடுங்க.. ஹீரோவின் பராக்கிரமங்கள், தூள் பறக்கும் சண்டைக்காட்சிகள், அனுஷ்கா பிடிக்குமென்றால் தாராளமாக பார்க்கலாம். சூர்யாவும் அழகாகவே இருக்கிறார். மைனஸ் என்றால் விவேக் மற்றும் பாடல்கள். அதுவும் ஒரு பாடல் வருகிறது பாருங்கள். ‘என் இதயம் இப்போ துடிக்கிறது..’ ட்யூன், குரல்கள் எல்லாம் ஓகேதான், ஆனால் லிரிக்ஸ் பாருங்கள், அடப்பாவிகளா.. அநியாயம்.! கபிலனாக இருப்பாரோ என்று சந்தேகித்தால் நா. முத்துக்குமாராம். சத்தியமாக நம்பமுடியவில்லை. முந்தின சீட்டில் இருந்தவர் தலையில் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.

நம்பிக்கைக்குரிய மிகச்சிலரில் ஒருவரான சூர்யாவும் கமர்ஷியல் திசையில் ஆழமாக கால்பதிப்பது வருத்தமாகவே இருக்கிறது. நீங்கள் இன்னும் நிறைய பண்ணவேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் விஜய் வகையறாக்களிடம் விட்டுவிடுங்களேன் சூர்யா. இந்தக்கதை விஜய் நிராகரித்ததாம். இந்தக் கமர்ஷியல் ஹிட் விஜய் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாகயிருந்திருக்குமே என எண்ணினேன். அடுத்த கணமே ஹீரோ போலீஸ்யா என்ற எண்ணம் வந்தது. விஜயே அதை எண்ணித்தான் மறுத்திருப்பாரோ.? ஹிஹி.!

.