Wednesday, June 9, 2010

கற்பகம்

பிரகாஷ் தனது திருமணம் குறித்த செய்தியைச்சொல்ல போனில் அழைத்தபோது சென்னைக்கு கிளம்பும் பரபரப்பிலிருந்தேன். அவனது திருமண தேதியை கேட்டுக்கொண்டேன். நல்ல வேளையாக நான் சென்னையில் இருக்கும் நாட்களில் ஒன்றாகவே இருந்தது. மெனக்கெட வேண்டியிருக்காது. கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். நமக்குள் எத்தனையோ முக்கியத்துவமுள்ள அல்லது முக்கியத்துவமற்ற பல ரகசியங்கள் கிடக்கின்றன. அவை எந்தெந்த சூழலில் நிகழ்ந்தவையோ அந்தந்த சூழலில் நம்மை நெருங்கியிருந்த மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம். கால ஓட்டத்தில் பல முக்கியத்துவமிழந்து நினைவின் ஆழத்திற்கு சென்று விடுகின்றன.

முதல் முதலாக அவளைப்பார்த்த நாள் எல்லோரையும் போலவே எனக்கும் நன்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு பிங்க் நிற தாவணியில் செல்வியுடன் பேசிக்கொண்டே அலுவலகத்திற்குள் வந்தாள். அவளது கண்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றில் முதன்முதலாக வேலைக்கு வரும் பயமும் சிறிது பதற்றமும் இருந்தது. செல்வியின் சிபாரிசிலேயே அவள் வேலைக்கு எடுக்கப்பட்டிருந்தாள்.

அங்கே பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் அனைவரும் பெரும்பாலும் சுடிதாரிலும் மிகச்சிலர் சேலையிலும் இருந்தனர். அவள் மட்டும் தாவணியில் இருந்ததால் வித்தியாசமாக இருந்தது. அவளுக்கும் அது வித்தியாசமாக தோன்றி மேலும் பதற்றமாக இருந்திருக்கவேண்டும். என்னிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது அவள் என்னை நிமிர்ந்தும் பார்த்திடவில்லை. அலைபாயும் விழிகளுடன் உறுதியற்ற ஒரு குரலில் குட்மார்னிங் சொன்னாள். நான் சிரித்துக்கொண்டே செல்வியின் அருகிலேயேயிருந்து ஒரு வாரத்திற்கு வேலை கற்றுக்கொள்ளும்படி பணித்துவிட்டு எனது பணியில் மூழ்கினேன். நான் அந்த நிறுவனத்தில் உயரதிகாரியாக எல்லாம் இல்லை எனினும் அந்தக்குழுவை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்தேன்.

மறுநாளில் இருந்து அவளும் சுடிதாரில் வரத்தொடங்கியிருந்தாள். பிற பெண்கள் பத்தே நாட்களில் இடமும் ஆட்களும் பழக்கப்பட்டு கொஞ்சம் சகஜமான பேச்சுக்களும், லஞ்ச் நேர அரட்டைகளும் என சுதந்திரமான‌ உணர்வுக்கு திரும்பிவிடுவார்கள். அவள் இருக்குமிடமே தெரியவில்லை. வேலையை கவனமாக கற்றுக்கொண்டு கடமையே கண்ணாக இருப்பது தெரிந்தது. யாருடனும் பேசிப்பழகுவதாகவும்‌ தெரியவில்லை. குறிப்பாக ஆண்கள் பக்கம் திரும்புவதாகவும் தெரியவில்லை. ஆண்கள் பிரிவிலிருந்து தேவைப்படும் உதவிகளையும், கருவிகளையும் சில சீனியர் பெண்களைக்கொண்டே பெற்று வேலையை கவனித்துக்கொண்டிருந்தாள். ஆண்களைப் பார்த்து வெட்கப்படும் மற்ற சில பெண்களைப் பார்த்து அப்படி கற்றுக்கொண்டிருப்பாள்.

செல்வி இல்லாத சமயங்களில் வேலைக்கான திட்டத்தை தெரிந்துகொள்ள என்னிடம் வரும் பெண்கள் நாணிக்கோணி தாளை வாங்கிச்செல்வார்கள். பல சமயங்களில் அவற்றை செயற்கையாக உணர்ந்திருக்கிறேன். சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளும் போதும் அவ்வாறே நடக்கும். ஆனால் செல்வி அப்படியல்ல. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என அங்கிருக்கும் ஆண்களுடன் சகஜமாக பழகிக்கொண்டிருந்தாள். தெளிவான பேச்சும், கச்சிதமாக வேலையை முடிக்கும் திறனும் வாய்த்தவள். அவளோ செல்வியைத்தவிர வேறு யாருடனும் பழகுவது போல தெரியவில்லை. ஆனால் சிறிய முன்னேற்றமாக‌ அவள் இப்போது எல்லோருடனும் சிரித்த முகமாக இருப்பதைக் காணமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தேன். சராசரிக்கும் குறைவான உயரம். கறுப்பு என்று சொல்லலாமா? மாநிறம் என்று சொல்வதா? ஒரு மிகச்சிறிய மூக்குத்தி வேறு அணிந்திருந்தாள். கூந்தல் அடர்த்தியாகவும் மிக நீளமாகவும் இருந்தது. எப்போதும் ஒற்றை ஜடையே பின்னிக்கொண்டிருந்தாள். செல்வி எனது மேஜைக்கு வரும்போது சில சமயங்களில் அவளும் இவள் தோளை ஒட்டியவாறு வருவதுண்டு. கண்கள் பளபளப்பாக ஒரு ஆர்வத்தில் மிதந்துகொண்டிருக்கும். உங்கள் பிரெண்ட் பேசமாட்டாங்களா என்று நான் செல்வியை கிண்டலாக கேட்கும் போது செல்வி சிரிப்பாள், அவள் மெலிதாக வெட்குவாள். அந்த வெட்கத்தை உணர்ந்தேன்.

இதுவரை ஒரு வார்த்தையும் அவளுடன் பேசியிருக்கவில்லை. மெலிதாக எங்கள் கண்கள் பார்த்துக்கொண்டன. எனது அறையில். அவர்களது அறையில். இடைவேளைகளில். வாயில்களில். அவள் எங்கிருந்து வருகிறாள்? முகவரி என்ன? குடும்பம் எப்படிப்பட்டது? அவள் என்ன எண்ணுகிறாள்? பெயரைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் என் கண்களை கண்டவுடன் கவிழ்ந்துகொண்ட அவளது கண்கள் மெல்ல என்னுடன் போட்டியிடத்துவங்கியிருந்தன. அந்த பார்வை விளையாட்டை நான் மிக ரசித்தேன். அந்தக்கண்களை பார்த்துக்கொண்டே இருந்துவிடமாட்டோமா என தோன்றிக்கொண்டேயிருக்கும். ஊடாக அவளது மெலிதான சிரிப்பு என்னை என்னவோ செய்தது.

ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது துவங்கிய விளையாட்டின் விநாடிகள் நிமிடமாகியிருந்தன‌. யார் முதலில் கண்களைத் தழைப்பது என்ற சொல்லப்படாத போட்டி துவங்கியிருந்தது. கண்களாலேயே விழுங்கிவிடுவதைப்போல தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தாள். யாரும் பார்த்துவிட்டால் என்ன ஆகும்? எத்தனை நிமிடங்கள் ஆகின்றன? இந்தப்பெண்ணுக்குள்ளா இவ்வளவு தைரியம்? கண்களில் கண்ணீர் பொங்க நான்தான் அன்று முதலில் கண்களை தழைப்பதாக ஆயிற்று. அடுத்து வந்த சில நாட்களில் இந்தப்பார்வை விளையாட்டை பிரகாஷ் கவனித்துவிட்டான். ‘கலக்கிட்டீங்க பாஸ், எக்கச்சக்கமாய் போட்டி அவங்களுக்கு.. நீங்க புடிச்சிட்டீங்க போல..’ என்று பகடி செய்தான். ‘அப்படி இல்லப்பா, சும்மாதான்’ என்று சமாளித்தேன். பின்னர் அவள் குறித்து பேசும்போதெல்லாம் உங்க ஆளு, உங்க ஆளு.. என்று கிண்டல் செய்யலானான். மேலும் அவள் குறித்த மேல் தகவல்களை அவனிடம் கேட்டேன். அறிந்துவந்து சொல்வதாய் சொன்னான். பிரிதொரு நாள் செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தாவணி குறித்து ஏதோ பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.. ஞாபகமில்லை...

தொடர்ந்து வந்த ஒரு புத்தாண்டு தினத்தில், இளநீல நிற‌ தாவணியில் வந்திருந்தாள்.

பிரகாஷிடம் அவன் திருமணத்திற்கு கண்டிப்பாக வந்து விடுவதாக கூறி வாழ்த்துச்சொல்லிவிட்டு மறக்காமல் அதையும் கேட்டேன். அவசரமாக பதிலளித்தான், "நான் சொல்ல மறந்திட்டேனா பாஸ்? உங்க ஆளுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாச்சே.. இன்னும் இங்கதான் ஒர்க் பண்றாங்க‌.."

.

16 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏற்கனவே படிக்காதவர்களுக்காக முதல் முறையாக முயற்சித்த சிறுகதை இங்கே மீண்டும்.

(வாணாம், கொலவெறியாவக்கூடாது.. அது ஆருக்கும் நல்லதில்ல.. ஆஃபீஸ்ல பிஸி, அதுனாலதான் இப்பிடி.!)

பரிசல்காரன் said...

நல்லாருக்கு. படிக்க படிக்க உள்ளிழுக்குது.

ஒரு குறை, கதை சொல்லி இப்ப அந்த ஆஃபீஸ்ல வேலை செய்யலங்கறது கடைசி பாரா படிக்கறப்பதான் தெரியுது. முதல் பாராவிலேயே அதை சொல்லிருக்கலாம்.

அலுவலகத்தில் நடக்கும் அந்த காதல் (அ) அகாதல் சார்ந்த விளையாட்டுகள் ரசிப்புத்தன்மையோடு எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் பிரியன் said...

same blood.. ;-)

மின்னுது மின்னல் said...

செம..

தராசு said...

இது முதல் முறையா முயற்சித்த சிறுகதையா தல....

ஹூம்,,, எப்படி இருந்த நீங்க.....

மாதேவி said...

கதை நல்லா இருக்கு.

சு.சிவக்குமார். said...

இந்தக் கதையில் இருக்கற flow முக்கியமான இடத்தில் மிஸ் ஆகறமாதிரி இருக்கு. அந்த தகவல்கள் கேக்கற இடத்திலிருந்து பிரகாஷின் திருமண வாழ்த்துச் சொல்லும்போது விசாரிக்கிற இடத்துக்கும் உண்டான கால இடைவெளியில் அந்த flow மிஸ் ஆகற மாதிரி இருக்கு. இல்லைன்னா ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியை ஞாபகபடுத்தும் விதமாக ( 3 மாசத்திற்கு அப்பறம் பிரகாசோட கால்,அப்படீன்னு) ஆரம்பத்திருக்கலாம்.பொதுவாக இந்த மாதிரியான கதைகளில் காலம் முக்கியம் அப்படீங்கிறது என்னோட கருத்து.

Sabarinathan Arthanari said...

//ஏற்கனவே படிக்காதவர்களுக்காக முதல் முறையாக முயற்சித்த சிறுகதை இங்கே மீண்டும். //

நல்லா இருக்குங்க

வானம்பாடிகள் said...

(வாணாம், கொலவெறியாவக்கூடாது.. அது ஆருக்கும் நல்லதில்ல.. ஆஃபீஸ்ல பிஸி, அதுனாலதான் இப்பிடி.!)//

நெஜம்மாவா:)))))

புன்னகை said...

சொந்தக் கதையா??? ;-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்னது வெறும் 10 பின்னூட்டங்கள்தானா? இதுக்குதான் இந்தக் கதையே எழுதறதில்ல, எவண்டா அது பரிசல், என்னக் கதை எழுதச்சொன்னவன்? இந்தா வர்றேன்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பரிசல்.!
நன்றி தமிழ்.!
நன்றி மின்னல்.!
நன்றி தராசு.!
நன்றி மாதேவி.!
நன்றி சிவக்குமார்.! (கருத்து ஏற்புடையது)
நன்றி சபரிநாதன்.!
நன்றி வானம்பாடிகள்.!
நன்றி புன்னகை.!

Mahesh said...

முதல் முறையா முயற்சித்த சிறுகதையா? பரவால்ல,... இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா என் அளவுக்கு வரலாம்.. உங்களால் முடியும்... :)))))))))))))))))))))))))))))))))))))))))

Karthik said...

நல்லாருக்குங்ணா. எல்லோருமே முதல் கதைய முதல் காதலை நினைச்சுதான் எழுதுவாங்க போல? :)

ராமலக்ஷ்மி said...

முதல் கதையா:)? நன்று.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ், :-)

நன்றி கார்த்திக், (அதெல்லாம் முதல் இல்லை)

நன்றி ராமலக்ஷ்மி (ஆமா, முதல்தான்)