Friday, June 18, 2010

நெருப்பைச் சிறை வைத்த தி.க.

புத்தகச் சந்தைகளிலும், கடைகளிலும் புத்தகங்களை வாங்கும் பொழுதுகளில் அவ்வப்போது சிறிய அளவில் பெரியார் புத்தகங்களையும் வாங்குவதுண்டு. அப்போதெல்லாம் ஏதோ நெருடுவதைப்போல இருக்கும். இது வரையில் அந்த விஷயம் இந்த மரமண்டையில் ஏறவேயில்லை. சென்ற வார ஜூனியர் விகடனில் பெரியார் கருத்தாக்கங்களின் பிரசுர உரிமை குறித்த வழக்கைப் பற்றிய செய்தியைப் படித்த பின்பே இந்த மண்டைக்கு உறைக்கிறது.. இன்னும் பெரியார் கருத்தாக்கங்கள் பொதுவுடைமை ஆக்கப்படவில்லை என்று. என்ன மகா கேவலம்.!

இது விஷயத்தில் தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் நம் கடும் கண்டனங்கள். 1989ல் கலைஞர் அரசு பெரியாரின் கருத்தாக்கங்களை பொதுவுடைமை ஆக்க முயற்சித்த போது கி.வீரமணி நீதிமன்றத் தடையாணை பெற்றார். அப்படி என்ன வாரிசுதாரருக்கான சாட்சியங்களை அவர் முன் வைத்திருக்கமுடியும்? என்ன அபத்தம் இது? அதை உடைக்க அரசு அதன்பின் முயலவில்லையா? மக்களுக்கான பெரியாரின் கருத்துக்களையே மக்களுக்குத் தர முன்வராத கி.வீரமணியா பெரியாரின் கொள்கை பரப்ப வந்த சீடர்? கடுஞ்சொல் என் எழுத்தில் வந்துவிடாமலிருக்க கைகளைக் கட்டிக்கொள்கிறேன்.

evr-with-periyar

நூற்றாண்டுகளின் மனத்தளையைப் போக்க வந்த அருமருந்து பெரியாரின் கருத்தாக்கங்கள். நிகழ்த்தப்பட்டது எந்த ஒரு தனிமனிதனும் அவன் வாழ்நாளில் நிகழ்த்தமுடியாத அருஞ்சாதனை. விஸ்வரூபமெடுத்து முன்நிற்கும் மதப்பேய்கள், மூடப்பிசாசுகள், ஆணாதிக்க அவலங்கள்.. தனி மனிதனாய் எதிர் நின்று அவற்றையெல்லாம் சோர்வு கொள்ளச்செய்தவன். உடன் நின்று ஓங்கிப்பிடித்து அவற்றை வேரறுத்திருக்க வேண்டும். ஆனால் நாம் செய்தது என்ன? இந்த 35 வருடங்களில் மீண்டும் அவையெல்லாம் உண்டு கொழுத்திருக்கச் செய்திருக்கிறோம். மீண்டும் ஒரு பெரியார் பிறந்து வரப்போவதில்லை. சமூக அநீதிகளை எதிர்த்து நிற்க நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டுமென்றால் இருக்கும் ஒரே ஆயுதமும் அவரது கருத்தாக்கங்கள் மட்டுமே.

தற்போது பெரியார் திராவிடர் கழகத்துக்கும், திராவிடர் கழகத்துக்கும் இடையே 2008 லிருந்து நிகழ்ந்து வந்த வழக்கில் தி.கவின் எதிர்மனுவைத் தள்ளுபடி செய்து, "பெரியாரின் எழுத்தும் பேச்சும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். சாதியற்ற சமத்துவமான சமுதாயம் உருவாக அவருடைய எழுத்துகளும் பேச்சுகளும் முழுமையாகப் பயன்படவேண்டும்" என்ற குறிப்புகளுடன் பெரியாரின் கருத்தாக்கங்களை மக்கள் சொத்தாக அறிவித்திருக்கிறது நீதிமன்றம். (செய்தி : ஜூவி, 16.06.10). இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு, தமிழ்மண்ணின் இணையற்ற புரட்சிவீரனின் கருத்தாக்கங்களை பொதுவுடைமையாக அறிவிக்கவேண்டும்.

தீர்ப்புக்காக காத்திருந்த பெரியார் தி.க இயக்கத் தோழர்கள், பெரியாரின் 'குடியரசு' பத்திரிகையின் தொகுப்பான 27 பாகங்களையும் சமீபத்தில் புத்தகங்களாக வெளியிட்டனர். அதோடு அந்தத் தொகுதி முழுமையும் மின்கோப்புகளாக இலவசமாகக் கிடைக்கும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். வேண்டுவோர் periyardk@gmail.com என்ற முகவரியை அணுகலாம். இனி தடையில்லை, அவை மட்டுமல்லாது, அனைத்து பிற பெரியாரின் கருத்தாக்கங்களும், உரைகளும் புத்தகங்களாக அனைத்து பதிப்பகங்களாலும் அச்சாக்கம் செய்யப்படவேண்டும், எங்கெங்கும் புத்தகங்கள் காணக் கிடைக்கவேண்டும் என்பது நமது ஆசை.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெரியார் தி.க செயலாளர் திரு. கோவை ராமகிருஷ்ணன் கருத்துக்கூறுகையில் சொன்னது இது. "நான் மாணவனாக இருந்தபோது விடுதலை பத்திரிகையில் பெரியார் ஒரு தலையங்கம் எழுதினார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதைத் துண்டுப் பிரசுரமாகப் போடலாமா என்று பெரியாரிடம் கேட்டேன். 'தாராளமாப் பண்ணுங்க. என் கொள்கையைப் பரப்புறதுக்காக யாரு எதைச் செய்தாலும் அதுக்குத் தடையே இல்ல தம்பி' என்றார். 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் அளித்த தீர்ப்பு இது."

17 comments:

Ibrahim A said...

நல்ல பதிவு...இது போல நிறைய எதிர் பார்கிறேன் உங்களிடம்.....


http://www.rojavinkadhalan.blogspot.com/

சுசி said...

நல்ல பதிவு ஆதி.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிந்திக்கத் தூண்டுகிறது . சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி

சாந்தப்பன் said...

நல்லாயிருக்குண்ணே!

வானம்பாடிகள் said...

good share aadhi. ty.

கபிலன் said...

பெரியார்....அவர் என்றும்.
பிழைப்பு வாதிகளுக்கு
அதெல்லாம் எதெற்கு.
அளவில்லா வரும்படி வேண்டி
எதிர் திசையில் ஓடி....
நல்லாய்த்தான் இருக்கிறார்....
நாம் தான் எதாவது செய்யவேண்டும்.
குறைந்த பட்சம் இது போன்ற பதிவாவது.

அதி அசுரன் said...

மிக்க நன்றி தோழர்

தி.தாமரைக்கண்ணன்
பெரியார் திராவிடர் கழகம்

அமுதா கிருஷ்ணா said...

பெரியார் பெரியார் தான்..நல்ல தீர்ப்பு,,நல்ல பதிவு...

கார்க்கி said...

அடிக்கடி எழுதலாம் சகா

Robin said...

//இன்னும் பெரியார் கருத்தாக்கங்கள் பொதுவுடைமை ஆக்கப்படவில்லை என்று. என்ன மகா கேவலம்.// கேவலம்தான். எல்லாம் சிலரின் சுயநலத்திற்காகாக.

புன்னகை said...

நல்ல பகிர்வு ஆதி!

வால்பையன் said...

நிறுவனமாகிவிட்ட கட்சிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது, பெரியார் மூலம் என்ன சம்பாதிக்கலாம் என நினைத்த வீரமணி பெரியாருக்கு அடுத்த சிறந்த தலைவர் என சில சொம்புதூக்கிகள் சொல்லும் பொழுது உலககோவம் வருகிறது, பெரியார் கொள்கையே எங்கள் கொள்கை என அறிவித்து கொண்ட திராவிட கட்சிகளும், அதை கோவணத்தில் பறக்க விட்டது மகா கேவலம்!, தி.க என்ற இயக்கம் முற்றிலுமாக கலைக்கப்பட வேண்டியது, அதில் ஒருவருக்கும் பெரியார் பெயர் சொல்ல தகுதியில்லை!

பாலா அறம்வளர்த்தான் said...

நல்ல பதிவு ஆதி!!!

பெரியார் எழுதிய பல விஷயங்கள் கைக்கு கிடைக்காமல் போனதாலேயே, நம்மில் பலரும் அவரை வெறும் நாத்திகவாதியாகவே நாம் பார்க்கிறோம். பெரியாரை இதுவரை படிக்காதவர்கள் "பெண் ஏன் அடிமையானாள்?" ல் துவக்கலாம். இது 1936 ல் எழுதியது என்றால் நம்புவது கஷ்டமாகத்தான் இருக்கும்.

அவரை படிக்கும்போது அவருடைய காலக் கட்டத்தில் இருந்த சமூக சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் - இருந்தாலும், சில பல விஷயங்களில் அவருடைய கருத்தையும் அவருடய வழிமுறைகளையும் நாம் ஒத்துக்கொள்ள முடியாமல் போகலாம். நாம் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றே விரும்பியவர். எங்கே தன்னையும் பூஜிக்க ஆரம்பித்து விடுவார்களோ என்றெல்லாம் யோசித்தவர்.

அவ்வப்போது அவருடைய எழுத்து, புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள் ஆதி!!!

எம்.எம்.அப்துல்லா said...

பதிவை வரிக்கு வரி வழி மொழிகின்றேன், கலைஞர் பற்றியக் குறிப்பைத் தவிர. இன்னும் சற்று விசாரித்து விட்டு அதைப் போட்டிருக்கலாம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இப்ரஹிம்.
நன்றி சுசி.
நன்றி பனித்துளி.
நன்றி சாந்தப்பன்.
நன்றி வானம்பாடிகள்.
நன்றி கபிலன்.
நன்றி அதி அசுரன்.
நன்றி அமுதா.
நன்றி கார்க்கி.
நன்றி ராபின்.
நன்றி புன்னகை.
நன்றி வால்பையன்.
நன்றி பாலா. (இணைந்து செய்வோம்)
நன்றி அப்துல்லா.

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

Mahesh said...

நெருப்பை சிறை வைக்க முடியுமா என்ன?