Friday, July 30, 2010

சைக்கிள்

நான் எழுந்திருக்க மாட்டேன் என்றே சனிக்கிழமை இரவு மட்டும் செல்போனை எடுத்து படுக்கையிலிருந்து தூரமாய் ஷெல்பில் வைத்துவிடுகிறாள் நந்தினி. அதுவும் நாள் தவறாது காலை 5.30 க்கெல்லாம் சரியாக அலாரம் அடித்துத் தொலைக்கிறது. அதை அணைத்துத் தொலைப்பதற்கென்றே எழ வேண்டியதாகப் போய்விடுகிறது.

‘ஆஃபீஸ் கூட லீவு விடறான். ஞாயிற்றுக்கிழமைதானேம்மா வாக்கிங்குக்கும் வாரம் ஒரு நாள் லீவு விடக்கூடாதா’ன்னா காதில் விழாத மாதிரியே போய்விடுவாள். அது சரி, இவள் விட்டாலும் கீழ் வீட்டில் உள்ள ரமணன் விட்டால்தானே ஆச்சு? 5.45 க்கெல்லாம் கீழே வரவில்லையென்றால் அவரே மேலே வந்துவிடுவார். மனிதனுக்கு காலங்கார்த்தாலே என்னைத் தொல்லை செய்யவில்லை என்றால் அன்றிரவு தூக்கமே வராது போல. சொல்லப்போனால் இந்த வாக்கிங் பிரச்சினையெல்லாம் அவராலே வந்ததுதான்.

நந்தினியைப் பார்த்தேன். ‘எழுந்து காபியாவது போட்டுக்குடும்மா, ரிடர்ன் வர்றதுக்குள்ள வயிற்றைப் பிசையும்டி..’ என்ற என் புலம்பலைக் கேட்காமல், ‘மற்ற நாள்தான் படுத்தறீங்க, ஞாயித்துக் கிழமையாவது தூங்கவிடுங்க..’ என்று இழுத்துப் போர்த்திக்கொண்டாள். முகம் கழுவி ரெடியாகி ஷூக்களைப் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேலே படிகளில் ஏறி வந்தபடியே.. ரமணனின், ‘லோகேஷ்’ என்ற சத்தம் கேட்டது.

‘அதான் வந்துட்டனே, அதுக்குள்ள வந்துடுவீங்களே.. இறங்குங்க போலாம்..’

இருவரும் கீழே இறங்கினோம். நாங்கள் இருப்பது அழகிய காம்பவுண்ட் சுவற்றுடன் கூடிய தனி வீடு. இருவருமே வாடகைக்குதான் குடியிருக்கிறோம். கீழே அவரும், மாடி போர்ஷனில் நாங்களும். ரமணன் திருமங்கலத்தில் ஏதோ பாங்கில் வேலை செய்கிறார். எனது அலுவலகமோ நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. அவர் என்னை விட வயதில் ஐந்தாறு வயது மூத்தவர், அன்பானவர். என்ன.. ஒரு பிரச்சினை, மனிதர் கதை சொல்ல ஆரம்பித்தால் காதில் ரத்தம் வந்துவிடும். இராமாயணம் துவங்கி, குட்டிக்கதைகளில் பயணித்து, நேற்றைய வார இதழ்க்கதைகள் வரைக்கும் பின்னு பின்னு என பின்னிவிடுவார். தமிழார்வம் மிக்கவர், அவர் மூத்த மகனுக்குக்கூட அவரது தந்தையார் பெயரான ‘வில்லாளன்’ என்ற பெயரையே வைத்திருக்கிறார். ஆனால் பழக இனிமையானவர், அவர் இல்லாவிட்டால் நானெல்லாம் எங்கே இவ்வளவு காலையில் எழுந்திருக்க? அல்லது வாக்கிங் பழக.?

கீழே வந்து மெயின் கேட்டின் பூட்டை அவர் திறக்கவுமே ஏதோ ஒரு வித்தியாசம் உறைக்க இயல்பாக அவரைக்கேட்டேன், ‘ரமணன், வில்லுவோட சைக்கிள் எங்க.? எங்காச்சும் ஃபிரண்ட் வீட்ல போட்டுட்டானா.?’ ரமணன் சட்டெனத் திரும்பி வழக்கமாக சைக்கிள் நிற்கும் இடத்தைப் பார்த்துவிட்டு என்னை நோக்கித் திரும்பினார். அவர் முகத்தில் குழப்பம். கீழே மெயின் கேட்டைத் திறந்தவுடன் ஐந்தடியில் அவர் வீட்டுக் கதவு. இடது புறம் மேலே மாடிக்கு எங்கள் போர்ஷனுக்குச் செல்வதற்கான படிக்கட்டு. வலது புறம் போர்டிகோ. அதில் அவரது காரும், முன்னதாக எனது பைக்கும் வழக்கம் போல நின்றுகொண்டிருந்தன. வாசலுக்கும், மாடிப்படிக்கும் இடைப்பட்ட இடத்தில் வழக்கமாக நிற்கும் சுவரை ஒட்டிய இடத்தில் வில்லாளனின் சைக்கிள் இப்போது இல்லை. அது ஒரு அழகிய ஹீரோ ரேஞ்சர். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வில்லு, ரமணனை தொல்லை செய்து வாங்கியிருந்தான்.

வில்லுவுக்கு பக்கத்தில் நண்பர்கள் யாரும் இல்லை, மேலும் எங்கள் இருவருக்குமே நேற்று மாலை அங்கே சைக்கிளை பார்த்த ஒரு ஞாபகம். பின்னர் வரிசையாக நிகழ்ந்தன இவை. வில்லாளனை எழுப்பினோம். கேட்டோம். முதலில் விழித்தவன் பின்னர் ‘அப்பா.. என் சைக்கிள்’ என்று அழத்துவங்கினான். வில்லுவின் அம்மா எழுந்து வந்தார். நந்தினி எழுந்து வந்தாள். சரிதான், சைக்கிள் இரவில் திருடு போய்விட்டது. யாரோ இரவில் மார்பளவு இருக்கும் இந்த சுவர் ஏறிக்குதித்து தூக்கிப் போய்விட்டனர். எல்லோரையும் விட வில்லு கலங்கிப் போய்விட்டான். அழுகை அவன் கண்களை முட்டியது. ஆசை ஆசையாய் அவன் வாங்கியது. மாலை நேரங்களில் ஒரு பறவையைப்போல அதில் அவன் வலம் வருவான். அவன் துக்கம் என்னை மிகவும் பாதித்தது. இந்த பிரச்சினையில் எங்கள் அன்றைய வாக்கிங் தடைபட்டது. பத்து மணிக்கு மேல் நானும் ரமணனும் போய் பக்கத்து காவல் நிலையத்தில் புகார் செய்வதாய் முடிவு செய்தோம். முதலில் சைக்கிள்தானே இதெற்கெல்லாம் புகாரா? யார் கவனிக்கப்போகிறார்கள், அவனவன் கொலை, கொள்ளைன்னு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறான். இந்த சைக்கிள் மிஸ்ஸிங் கேஸை போலீசே எடுத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே என்று கூறி, சைக்கிள் 5000 ரூபாய்தான், போய்த் தொலைகிறது என விட்டு விடலாமா? என்றார் ரமணன். எது எப்படி இருப்பினும், நாம் அலட்சியப்படுத்தக்கூடாது.. சைக்கிளானாலும் குற்றம் குற்றம்தான். குறைந்தபட்சம் நம்மைப் போன்றவர்கள் குற்றத்தைப்பதிவு செய்யவாவது வேண்டும்தான், அப்போதுதான் இது போன்ற சிறிய குற்றங்களின் மீதும் போலீஸ் கவனம் கொள்வார்கள் என்று நான் நியாயம் பேசியதில் ரமணன் ஒப்புக்கொண்டார்.   

10.10 க்கெல்லாம் காவல் நிலையத்தின் வாசலில் இருந்தோம். வாசலிலேயே ஒரு காவலர் எங்களை மறித்தார்.

‘என்னையா விசயம்.?’

‘இல்ல சார், சைக்கிள் தொலைஞ்சுபோச்சுது, கம்ளைண்ட் குடுக்க வந்தோம்.’

‘சைக்கிளா? எங்க வச்சிருந்தீங்க.?’

‘வீட்லதான் சார்..’

‘வீட்லன்னா? வீட்டுக்குள்ள பீரோவிலயா?’

‘இல்ல சார். காம்பவுண்ட் வீடு. உள்ளதான் நிப்பாட்டியிருந்தோம்’

‘உள்ளன்னா? காம்பவுண்டுக்கு கேட்டு இருக்கா? காம்பவுண்டுன்னா என்ன பெரிய கோட்டையா.? அதப் பூட்டினீங்களா? வேற எதும் காணாமப் போச்சா.?’

அவருடைய பேச்சு எங்களை மிகவும் சோர்வடைய வைத்தது. சைக்கிளாம், பெரிய சைக்கிள், வந்துட்டானுங்க கம்ப்ளைண்ட் கொடுக்க என்பதைப்போல அவரது கேள்விகள் இருந்தன.

‘கேட்டு இருக்கு சார், பூட்டியிருந்தோம். கார், பைக் கூடத்தான் நிறுத்தியிருந்தோம். மத்தது ஒண்ணும் ஆவல..’

‘சரி சரி, அந்தா உக்காந்துருக்காரு பாருங்க, அவருகிட்ட கம்ளைண்ட் குடுங்க..’

அடடா, அவருகிட்டயும் இதே மாதிரி புலம்பணுமா.? இதுக்குதான் வேண்டாம்னு சொன்னேன் என்பது போல ரமணன் என்னைப் பார்த்தார். நான் அவரை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். நல்லவேளை, அந்த ரைட்டர் முன்னவரைப் போலில்லாமல் கொஞ்சம் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர், முகவரி, விபரம், சைக்கிள் ஃபிரேம் நம்பர் எல்லாவற்றையும் எழுதி ஒரு கம்ளைண்டாகக் கொடுக்கச் சொன்னார். வேண்டுமானால் மாலை வந்து எஃப்ஐஆர் காப்பி வாங்கிக் கொள்ளும்படியும், சைக்கிள் கிடைத்தால் சொல்லியனுப்புவோம் என்று சொன்னார். கொஞ்சம் ஆசுவாசமடைந்து, நாங்கள் கொண்டு சென்ற பேப்பரில் நானே அத்தனையையும் எழுதத் துவங்கினேன். சமீபத்தில் வாங்கிய சைக்கிளென்பதால் பில்லைப் பார்த்து ஃபிரேம் நம்பரை SMS அனுப்பும் படி அவர் மனைவிக்கு ரமணன் செல்போனில் செய்தி அனுப்பினார். அதற்குள் நான் எழுதிமுடித்து ரமணனை கையெழுத்துப் போடச்சொன்னேன். அவரும் போட்டார். பின்னர் இருவருக்கும் அலுவலக மூளை வேலை செய்ய இதை ஒரு காப்பி எடுத்துக்கொண்டு கொடுத்தால் என்ன என்று தோன்ற, அதற்குள் அந்த ரைட்டரும் டேபிளை விட்டு எழுந்து வெளியே போய்விட, நாங்களும் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

அடுத்த பத்து நிமிடங்கள் காவல் நிலையத்துக்கு இடப்புறமும், வலப்புறமும் அலைந்தும் ஒரு ஜெராக்ஸ் கடையைக் காணமுடியவில்லை. இருந்த ஒரே ஒரு கடையும் அடைத்திருந்தது, ஞாயிற்றுக்கிழமையென்பதால் இருக்கலாம்.

‘அப்படியே கொடுத்திடலாம் ரமணன், காப்பி வச்சு நாம் என்ன பண்ணப்போறோம்?’ என நான் சொல்ல, ‘என்னக்கேட்டா கம்ளைண்டே கொடுக்க வேண்டாம்ப்பேன், பாத்தீங்கள்ல அங்க எப்பிடி மரியாதைன்னு.. முதல்லயே 100 ரூபாயைத் திணித்திருந்தோம்னா மரியாதையா பேசியிருப்பான்..’ என அவர் சொல்ல, நாங்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்தோம். ஒரு குரல் எங்களை வழி மறிக்க திரும்பினோம். காவல் நிலையத்தில் பார்த்த அதே காவலர்தான்.

‘என்னையா பண்றீங்க? கம்ளைண்ட் குடுத்தாச்சா?’

‘அதான் சார், எழுதிட்டோம். ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்னு..’

‘ஜெராக்ஸ் எடுத்து என்ன பண்ணப்போறீங்க? அது இருக்கட்டும். உங்க செல்போன் எங்க?’

ரமணன் சடாரென தன் பாண்ட், சட்டை பாக்கெட்டுகளில் துழாவ, அந்த காவலர் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து ஒரு செல்போனை எடுத்து எங்கள் முன்னால் உயர்த்தி ஆட்டினார். பதினான்காயிரம் மதிப்புள்ள ரமணனின் புதிய சோனி எரிக்ஸன் மொபைல். அந்த மொபைலை என் கைகளில் திணித்துவிட்டு, என் கையிலிருந்த கம்ளைண்ட் பேப்பரை பிடுங்கிக்கொண்டு,

‘இத நான் ஃபைல் பண்ணிடுறேன். சைக்கிள் கிடைச்சா போன் பண்ணுவாங்க. முதல்ல இருக்கற பொருள்கள பத்திரமா, கவனமா வச்சுக்கங்கையா, போங்க.. போங்க..’

அலட்சியமாக ஆனால் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு திரும்பி காவல் நிலையத்தை நோக்கி செல்லத் துவங்கினார்.

.

Wednesday, July 28, 2010

ஏலகிரி -புகைப்படங்கள்

ஏலகிரி உலா மிகவும் எளிமையாக, வித்தியாசமாக இருந்தது. மூவரே சென்றிருந்ததால் கூட்டாக ரசித்த மாதிரியும் இருந்தது, அதே நேரம் கும்மாளமில்லாமல் இருந்ததால் ஒருவர் இன்னொருவரின் தனிமையில் தலையிடாமல் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததைப்போலவும் இருந்தது. இது பொதுவாக நண்பர்களோடு செல்லும் சுற்றுலாவில் கிடைப்பது அரிதிலும் அரிது. கும்மாளம் ஒரு வகை மகிழ்ச்சி எனில் இது இன்னொரு வகையானது. மேலும் எழுத நேரமின்மையால் ஏலகிரி உலாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். இந்தப் பயணம் குறித்த அழகானதொரு கார்க்கியின் பகிர்வைக் காணலாம்.

DSC00695 DSC00447 DSC00496 DSC00561 DSC00667  DSC00465 DSC00466  DSC00562 DSC00585 DSC00644 DSC09193 DSC00663 DSC00705 DSC00448 DSC00457 DSC00468 DSC00437 DSC00781 DSC00664 DSC00709 DSC00725DSC00538

குறிப்பு : நானில்லாத படங்கள் நானெடுத்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள் (நம் திறமைதான் ஊரறிஞ்சதாச்சே.. ஹிஹி). என் படங்களுக்காக கார்க்கிக்கு நன்றி.

.

Monday, July 26, 2010

கொடுங்கனவு

நேற்று ஒரு கனவு கண்டேன். சொன்னால் நிச்சயமாக அடிக்க வருவீர்கள்.

அது யாதெனின், நான் வரும் 31ம் தேதி மாலை ஊதிய அறிக்கையை (ஹிஹி.. Salary Alert) வழக்கம் போல ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறைய ஒதுக்கீடுகள் செய்யவேண்டியதிருக்கிறது. ஒரு வழியாக அறிக்கைக் குறுஞ்செய்தியும் வந்து சேர்கிறது அந்த இடிச்செய்தியோடு. ஆம் ஐயா, மிகச்சரியாக பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. என்ன கூத்து இது? பாங்க் கடங்காரன் ஏதாவது செய்துவிட்டானா? எந்த பாக்கியும் வைக்கவில்லையே. அலுவலகத்தில் நிதித்துறையில் ஏதும் கோளாறு செய்துவிட்டார்களா? ஐயகோ என்று அலறிவிட்டு, சரி ஏதும் தவறுதான் நடந்திருக்கவேண்டும் நாளை அலுவலகம் போய் அறிந்துகொள்ளலாம் என்று ஆறுதலடைந்தேன்.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் போன் கால்கள், SMS, டிவி செய்திகள் என நாடே அல்லோலகல்லோலப் படுகிறது. முதலில் எனக்கும் நண்பர்களுக்கும்தான் இந்தப் பிரச்சினை என நான் நினைக்க, அடுத்த கொஞ்ச நேரத்தில் நாடு முழுதும் இந்தப் பிரச்சினை எனத் தெரிகிறது. அப்படி என்ன காரணம் எனக்கேட்க யாரோ சொல்கிறார்கள், 'ஐயா, அரசாங்கத்துக்கு ஏதோ ஒரு பெரும் நெருக்கடியாம். அதனால்தான் இந்த ஒரு மாதம் மட்டும் இப்படி 50 சதவீதத்தை மக்களிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டுச் செய்திருக்கிறார்களாம். முன்னமே அறிவித்திருந்தால் பெரும் குழப்பம் நேர்ந்திருக்கும் எனவும், இந்த எதிர்பாராத காரியத்துக்காக அரசு வருந்துவதாகவும் அறிக்கை வந்துள்ளது' என்கிறார். அதன் பின் மக்கள் கொந்தளித்தார்களா? போராட்டம் ஏதும் நடந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. கனவு அதற்குள் முடிந்துவிட்டது.

இந்த மாதிரி ஏதும் நடந்தா என்னை தேடி வந்து உதைக்கமாட்டீங்க.?

***************

வலையுலகம் வந்து (நல்லா கவனிக்கவும் எழுத வந்து இல்ல) சுமார் இரண்டு வருடங்கள் கழிந்த இவ்வேளையில் 3 லட்சம் ஹிட்டுகளைத் தந்து, வெளியே சொல்லிக்கும் படியான எண்ணிக்கையில் ஃபாலோவும் செய்து ஆதரவளித்து வரும் அன்பு நண்பர்களனைவருக்கும் என் நன்றி.

****************

சுயபுகழ்ச்சிக்காக அல்லாது ஒரு விழிப்புணர்வுப் பகிர்தலுக்காக மட்டுமே இந்தச்செய்தி. சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமில் நானும் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தேன். நம்மைப் போல அல்லாமல் ஆஜானுபாகுவாக இருக்கும் நண்பர் ஒருவர் மட்டும் ரத்தம் கொடுத்து முடித்து படுக்கையிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் படுக்கையிலேயே 'சொய்ய்ங்' என விழுந்தது ஒரு சுவாரசியம். மனதில் எழுந்த குழப்பங்கள் காரணமாக இருக்கலாம்.

என்னுடையது O+. பரவலான வகை என்பதாலேயே முன்பு நான் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை. ஆனால்..

"My blood is common. I don't think there will be demand for it" - That is why the demand for your type is greater than for rare types.

*****************

டிவியில் சில ரியல் எஸ்டேட் விளம்பரங்களைப் பார்க்கும் போது எனக்கு இப்படித் தோன்றுகிறது. இது நிஜமாக இருக்குமா என்று நீங்களே கூறுங்கள்.

'சென்னையிலிருந்து சில நூறு கிமீக்கள் தொலைவில் ஏதோ ஒரு கிளைச்சாலையின் அருகே சில ஏக்கர் நிலங்களை வாங்க வேண்டியது. கட்டம் பிரித்து மஞ்சள் கற்களை நடவேண்டியது. தெருக்கள் போல தோற்றமளிக்க ரெண்டு லாரி மணலை கொட்டி சமன்படுத்த வேண்டியது. ஏதோ ஒரு பாபா நகர் என்று பெயர்ப்பலகையை வைத்து மாலையை போட்டுவிடவேண்டியது. இதற்கு அப்புறம்தான் சுவாரசியமே. ஒரு அழகான டிவி காம்பியரை அழைத்துக்கொண்டு போய், அகேலா கிரேன் கொண்டு சும்மா சுற்றிச் சுற்றி படம் பிடித்துவிட்டு, சென்னையிலிருந்து 123 நிமிட பயணநேரம் (பந்தயக்காரில் போனால் அவ்வளவு நேரமாயிருக்கும்), 17 கிமீயில் ஒரு கல்யாணமண்டபம் இருக்கிறது (நாம் ஏதோ மாதம் ஒருவாட்டி கல்யாணம் செய்துக்கப்போவதைப் போல) அப்புறம் இஷ்டத்துக்கு.. 17 கிமீயில் உங்களுக்கு ஆட்டோ வசதி கிடைக்கும், 34 கிமீயில் ஒரு பப்ளிக் டாய்லெட் இருக்கிறது, 23 கிமீயில் ஒரு அடிபம்பு இருக்கிறது என்று அடித்துவிட்டு அரைகிரவுண்டு மூன்றே லட்சம்தான். முன்பதிவு செய்தால், பத்திரம் இலவசம், தங்கக்காசு இலவசம், கார், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின், கிரைண்டர், கம்யூட்டர்.. போன்ற நிச்சயப்பரிசுகள்'

.

Wednesday, July 21, 2010

பிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்

1. போனில் எப்போ பேசினாலும் 'மெயில் படித்துக்கொண்டே.. சாப்பிட்டுக்கொண்டே.. கதை டைப் பண்ணிக்கொண்டே..' உனக்கு இவ்வளவு கவனம் போதும்டா என்பது போல பேசும் பரிசல்காரன் கையில் மாட்டினால் விழும் முதல் குத்து.. (அவ்வப்போது பதிவுலகில் பத்தோமேனியா, குத்தோமேனியா என்று எதையாவது உருவாக்குவதற்காக எக்ஸ்ட்ராவாக ஒரு ஸ்பெஷல் குத்து)

2. சாய்ங்கால நேரமா கூப்பிடுறாங்களேன்னு அரக்கப்பறக்க பீச்சுக்கோ ஹோட்டலுக்கோ கசங்கிய சட்டையில், முடி கலைந்து, தாடியோடு பக்கி எஃபெக்டில் நாம் போய் சேர்ந்த பின்பு நிதானமாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பாவில் ஈ என்று இளித்தபடி ஃபிரெஷ்ஷாக வந்து கடுப்பேற்றும் அப்துலுக்கு விழுகிறது இரண்டாவது குத்து.. (எல்லாவற்றிலும் தாராள பிரபு என்பார்களே என்று அவர் கையிலிருக்கும் நாம் ரொம்ப நாளாக வாங்க ஆசைப்பட்ட புத்தகத்தை ஏக்கத்தோடு பார்த்தால் புக்கை டாஷ்போர்டில் போட்டு பூட்டிவிட்டு ‘அப்புறம்’ எனும் சந்தர்ப்பங்களுக்காக விழுகிறது எக்ஸ்ட்ரா குத்து)

3. எப்போ எங்கே கூப்பிட்டாலும் 'ஆஃபீஸுக்கு போகணும், அம்மா பால் வாங்கச் சொன்னாங்க, பப்லுவுக்கு பானிபூரி வாங்கணும்..' என்று எஸ்கேப்பாகும் சகா கார்க்கிக்கு விழுகிறது மூன்றாவது குத்து.. (தோழிக்கு சுடிதார் வாங்கப்போவது போன்ற ஸ்பெஷல் காரணங்களுக்கு ஸ்பெஷல் குத்து ஒன்று)

4. உணர்வதுதான் முக்கியம், கூடிச் செல்வோம் வாருங்கள் என்றால் இன்னும் பிகு பண்ணிக்கொண்டிருக்கும் நர்சிம்முக்கு ஓங்கி விழுகிறது அடுத்த குத்து.. (சவுண்டு விடுதல் போன்ற ஆஃபீஸ் மேனரிஸங்களை அவ்வப்போது நண்பர்களிடமும் காண்பிப்பதற்காக விழுவது ஒரு ஸ்பெஷல் குத்து)

5. 'யு நோ.. எங்க வீட்ல சிக்கன் பிரியாணியும், இஞ்சித் துகையலும் ரொம்ப நல்லாப் பண்ணுவாங்க..' என்று நாக்கில் ஜலம் வரவைத்துவிட்டு, 'வீட்டுக்கு வாங்களேன், இந்த சண்டே' என்று சொல்லமாட்டாரா என் மூஞ்சியையே பார்க்க வைக்கும் வெண்பூவுக்கு விழுகிறது மற்றொரு குத்து.. (கையை மோந்து பாக்கறீங்களா என ஆதாரமும் காண்பிக்கும் சமயங்களுக்காக ஒரு எக்ஸ்ட்ரா குத்து)

6. 'விகடன்ல கதை வந்துருக்கு, கல்கியில வந்துருக்கு, இவுங்க என்னோட புக்க போட்டாங்களா? அடுத்து அவுங்க போடப்போறாங்க. நாளைக்கு ஜெயாடிவில வர்றேன் யு நோ. அப்புறம் கிழக்குல இன்னைக்கு காலையில கூப்பிட்டு..' என்று எப்போதும் வயித்தெரிச்சல் நியூஸ்களை முதல் ஆளாக கூப்பிட்டு சொல்லும் கேபிள்சங்கருக்கு விழுகிறது ஒரு குத்து.. (நீங்களும் நல்லாத்தான் எழுதறீங்க, இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா பெரியாளா வருவீங்க என்று அப்படியே மருந்தும் போடுவதற்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

7. பதிவில், மெயிலில், குழுமத்தில் கலாய்ப்பது பத்தாதென்று குரல் அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியாத ஏதோ ஒரு ஃபோபியா இருக்கிறது என்று தெரிந்தும் போனில் யார் யாரையோ போல் பேசி கலாய்க்கும் குசும்பனின் கரிய மூக்கில் ஓங்கி விழுகிறது அடுத்த குத்து.. (நல்ல அரசியல் பார்வை இருந்தும் அவற்றை பகிர்ந்துகொள்ளாமல் கலாய்த்தலே கதியென இருப்பதற்காக விழுவது எக்ஸ்ட்ரா)

8. பதிவுக்கும் வர்றது கிடையாது, பின்னூட்டமும் போடறது கிடையாது. போனும் கிடையாது, மெயிலும் கிடையாது. ஆனால் நேர்ல பார்க்கும் போது மட்டும் 'நீதான் செல்லம் என் ஆதர்சம்' என்று பாசம் பொழியும் அதிஷாவுக்கு விழுகிறது ஒரு வலுவான குத்து.. (காரணமே இல்லாவிட்டாலும் அந்த அழகிய வழுக்கை மண்டைக்காக ஒரு எக்ஸ்ட்ரா குத்து)

9. கமர்ஷியல் எழுதாம பிரபலமாவதா? சான்ஸே இல்லை என்ற நினைப்புக்காக வெட்கம் வரவைத்து கிட்டத்தட்ட எல்லா பதிவுகளையுமே சமூக அக்கறையுடன் எழுத முடியும் என்று காட்டிக்கொண்டிருக்கும் ஈரோடு கதிருக்கு விழுகிறது வீங்கும்படியாக ஒரு குத்து.. (வயதில் மூத்திருந்தும் பதிவுலகில் இளைஞர்களான எங்களை சீனியராக்கி ஒதுக்கி புதிய பதிவுலகக் குழுமத்தை உருவாக்கிய சாதனைக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

10. 'ஜெமோவின் மத்தகம் படிச்சீங்களா? நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க படிச்சீங்களா? மனோஜின் புனைவின் நிழல் படிச்சீங்களா? ஜீ முருகன் படிச்சீங்களா? பிரபஞ்சன் படிச்சீங்களா? எழில்வரதன் படிச்சீங்களா? எம்ஜி சுரேஷ் படிச்சீங்களா?..' என்று கேட்டு கேட்டு அதன் உள்ளர்த்தமாய் ..நீயெல்லாம் கதையெழுதறேன்னு கீ போர்டை தூக்கிட்டு அலையுறே.. ன்னு கேட்காமல் கேட்கும் செல்வேந்திரனுக்கு விழுகிறது ஒரு கும்மாங்குத்து.. (அவ்வப்போது ஏதாவது ஒரு கதையை விளக்கவும் செய்து நம்மை குற்ற உணர்வுக்கு ஆளாக்கச் செய்யும் தருணங்களுக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

இன்னும் நிறைய குத்துகள் பாக்கியிருக்கின்றன, இருப்பினும் எனது ஸ்பெஷலைசேஷன் தங்கமணி குத்து பதிவை போடவிடாமல் முந்திக்கொண்டு குத்திவிட்ட வடகரை வேலன் மூஞ்சியில் அதற்காக ஒரு சிறப்புக் குத்தை குத்திவிட்டு.. இதுக்கு மேலும் இழுத்துக்கொண்டு போனால் விழப்போகும் உங்கள் குத்துக்கு பயந்து பத்தோடு எஸ்கேப்புகிறேன். மீ பாவம்.!

பனிக் கத்தி

அமானுஷ்யமான ஒரு குரலால் திடுக்கிட்டு விழித்தேன். என்ன சத்தம் அது? எப்போதும் எனது தலையணையருகே என் மொபைல் போன் இருக்கும். தூங்கும் போது எப்போதும் மொபைலை சைலண்டில் போட்டுவிடுவேன். எழுந்த பிறகு மிஸ்டு கால்களைப் பார்த்து தேவைப்பட்டால் பேசிக்கொள்வேன். என்னைத் தெரிந்தவர்கள் யாரும் ஒருமுறைக்கு மேல் என்னை அழைக்கமாட்டார்கள். ஆயினும் மொபைல் போனை அருகில் வைத்துக்கொள்வதற்குக் காரணம் நேரம் பார்த்துக் கொள்ளவே. சரியாக தூங்கும் நேரம், காலையில் விழிக்கும் நேரம், இடையில் எக்காரணம் கொண்டும் விழித்தால் அப்போதும் உடனே எனக்கு நேரம் பார்த்துக்கொண்டாக வேண்டும். அப்படியொரு பழக்கம். என்ன சத்தம் அது? வயிற்றுக்குள் என்னவோ செய்தது அந்தச் சத்தம். இப்போது நேரம் என்ன? இருளில் துழாவி பக்கத்திலிருந்த இன்னொரு தலையணைக்குள் நழுவியிருந்த போனை எடுத்து நேரம் பார்த்தேன். பளீரென்ற நீல நிறத்தில் மணி சரியாக இரண்டு என்பதைக் காட்டியது. அதன் வெளிச்சம் கண்களைக் கூசச்செய்ததில் டிஸ்பிளேவை மறுபக்கம் திருப்பியபடி படுக்கையிலேயே எழுந்து அமர்ந்தேன்.

இரவு விளக்கு எரியவில்லை, மின் விசிறியும் நின்று போயிருந்தது. குளிர் காலமோ, வெயிற்காலமோ மின்விசிறி இல்லையென்றால் குப்பென்று வியர்த்துவிடுகிறதுதான். தொட்டிற்பழக்கம். என்ன சத்தம் அது? என்ன ஒரு அமானுஷ்யம்? சிலிர்த்தது எனக்கு. ஒரு வேட்டை நாயின் அடிவயிற்றிலிருந்து துவக்கத்தில் கிளம்பும் உறுமலைப்போல இருந்தது அது. நிச்சயம் வீட்டின் பின் பக்கமிருந்துதான் வருகிறது.

கொஞ்சம் கூட வெளிச்சமில்லாத இரவு. என் வீடு புதிதுதான், ஆனால் பழங்கால பாணியில் நீளவாக்கில் சிறிய முன்னறை, ஒரு ஹால், அடுத்து ஒரு படுக்கையறை, அடுத்து சமையலறை என அமைந்திருக்கிறது. சமையலறைக்கதவைத் திறந்தால்தான் பின்முற்றத்துக்குச் செல்லமுடியும். அது மொத்தமாக என் வீட்டிற்கு வலப்புறமுள்ள இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கட்டப்பட்ட சுற்றுச்சுவருடன் அமைந்திருக்கும். இடது புறம் காலி மனையாகையால் சுற்றுச்சுவர் வீட்டின் இடது சுவற்றுடன் முடிந்திருக்கும். உட்புறச்சுவரோரம் ஒரு பெரிய செம்பருத்திச் செடி. பின்முற்றம் தளமிடப்பட்டு துவைக்க, புழங்க, மாலை நேரங்களில் பேசிக்கொண்டிருக்கவென ஒரு வசதியான இடம். சுற்றுச்சுவரோ மார்பளவு உயரத்தில் தேவைப்பட்டால் ஏறிக்குதித்துவிடும் படியே அமைந்திருந்தது. சத்தம் இப்போது இன்னும் அதிகமாகியிருந்தது.

அந்தச் சத்தம் இது வரையில் என் வாழ்க்கையில் நான் கேட்டிராத வகையில் அமானுஷ்யமாக இருந்தது. அது ஒரு விலங்கினுடையதா? இல்லையா? இன்னும் வேகமாக மூச்சிரைப்பதைப்போல இருந்தது. நான் எப்போதும் எதற்கும் அஞ்சியவனில்லை. படுக்கையறையில் இருக்கமுடியவில்லை. பயம் ஒரு பனிக் கத்தியைப்போல முதுகில் ஊர்ந்தது. சமையலறைக் கதவுகளைத் திறந்து பார்த்துவிடலாமா? திறக்காமல் சமையலறைக் கதவுகளுக்கு உட்புறமாக நின்றுகொண்டு அந்தச் சத்தத்தைக் கேட்கவே உடல் சிலிர்த்தது. ஒலி இன்னும் அதிகமாகி ஒரு சிறிய ஓலமாக மாறியது. அங்கு நிற்கவே பயந்து மீண்டும் படுக்கையறைக்குள் வந்து சமையலறைக்கும், படுக்கையறைக்கும் நடுவேயிருந்த பயன்படுத்தப்படாது இருந்த இன்னொரு கதவையும் சேர்த்து சார்த்திக்கொண்டேன்.

அந்த ஒலி பல்வேறு வடிவங்களில் உருவெடுத்தது. உறுமல்.. ஓலமாகி, இப்போது முதுகுத்தண்டைச் சில்லிடச்செய்யும் இன்னொரு விலங்கோடு கூடிய மோதலாக மாறியிருந்தது. அது சுவரேறிக் குதித்திருக்கும் இரண்டு நாய்களின் சண்டையோ? இல்லை, அது நாய்களின் சத்தமேயல்ல. வேறு ஏதும் விலங்கின் சத்தமா? இல்லவேயில்லை. இதுவரை இந்த ஓலத்தைக் கேட்டதேயில்லை. நெஞ்சு தடக் தடக்கென்று அடித்துக்கொண்டது. ஓநாயின் குரல் இப்படியிருக்குமோ? ஓநாய்கள் எப்படி இந்த நகரத்துக்குள்.? அந்த பயத்திலும் தலையிலடித்துக்கொண்டேன். நானா பயந்துகொண்டிருக்கிறேன்? அதுவும் வெறும் குரல்களுக்காகவா.? கொஞ்சம் வெட்கமாக இருந்தது. முன்வாசல் வழியாக கேட்டைத் திறந்துகொண்டு இடது புற காலிமனையிலிருந்து டார்ச் அடித்துப்பார்த்தால் என்ன? வேண்டுமானால் வலப்புற வீட்டிலிருந்து ராஜுவை எழுப்பலாம். அவனுக்கும் இந்தச்சத்தம் கேட்காமலா இருக்கும்.?

எதுவோ சமையலறை வெளிக்கதவில் மோதுகிறதோ? இல்லை, கதவில் இல்லை. சுற்றுச் சுவரிலும், வீட்டுச்சுவரிலும் மோதிக்கொள்ளும் திண்ணென்ற உணர்வு. ஆனால் கிறீச்சிடும் சத்தமோ குறையவில்லை. இதயம் படபடக்க வியர்த்துக்கொட்டியது. இப்படியொரு அதீத அமானுஷ்யத்தன்மையை இதற்கு முன்னால் சந்தித்திருக்கிறோமா? இல்லை. வெளியே செல்லும் திட்டத்தைத் தவிர்த்துவிட்டு கொஞ்சம் திறந்திருந்த இடப்புற படுக்கையறை சன்னலை அழுத்தி மூடி தாளிட்டுவிட்டு படுக்கையில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன். மணி 2.40. அதன் பின் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. அடிவயிற்றில் பயம் ஒரு பாம்பைப்போல ஊர்ந்துகொண்டிருக்க அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

காலையில் கண்விழித்து சாவகாசமாக மணியைப்பார்த்த போது காலை மணி 7.50. விருட்டென நள்ளிரவு சம்பவம் நினைவுக்கு வர சடாரென எழுந்து சன்னல் , நடுக்கதவுகளைத் திறந்தேன். பின்னர் அடுக்களையிலிருந்து பின் கதவுகளைத் திறந்துகொண்டு மெதுவே வெளியே வந்தேன். இங்கேயாயிருந்தா அவ்வளவு பயங்கரமான ஒலிகள் வந்துகொண்டிருந்தன.? வழக்கம் போலத்தான் இருந்தது அந்த இடம். தரையை கவனித்தேன். ச்ச்ச்ச்ச்ச்.. சில மெல்லிய ரத்தக்கோடுகள் இருந்தன, சுவரின் அடிப்பகுதிகளிலும் ரத்தம் மிகச்சிறிய அளவில். இன்னும் கவனித்த போது ஒற்றைத்தூணின் பின் புறம் ஒன்றும், செம்பருத்திச்செடியின் வேர்ப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு அணில்கள் கோரமாக கிழிபட்டு இறந்துகிடந்ததைப் பார்த்தேன்.

.

Monday, July 19, 2010

சென்ற வார குற்றாலம்

முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் சொந்த ஊர்க்காரன் சீசன் டைமில் குற்றாலத்துக்கு குளிக்கப் போகவேமாட்டான். அவ்வளவு கொடுமையான அனுபவமாக இருக்கும். ஊர், சாரல், அருவி எல்லாம் நல்லாத்தான் இருக்கும், ஆனால் இந்த மக்கள்ஸ் இருக்காங்களே.. போதும்டா சாமீன்னு ஓட வச்சுடுவாங்க. எனக்கு சொந்த ஊர் குற்றாலம் இல்லையெனினும் தென்காசியில் பல ஆண்டுகள் வாழ்ந்த அனுபவம் உண்டு. மேலும் சொந்த ஊரே கிழக்கே 30 கிமீ தூரத்தில்தான் இருப்பதால் நானும் ஊர்க்காரன் என்றே சொல்லிக் கொள்ளலாம். நாங்களெல்லாம் சீசன் நேரத்தில் குற்றாலத்தின் திசைக்கே தலைவைத்தும் படுக்கமாட்டோம். எங்களுக்கென இருக்கிறது ஆஃப் சீசன் அருவியின் கொந்தளிப்புகள். அப்படியே ஆசை வந்தாலும் மிட் நைட் குளியல்தான்.

ஆனால் அந்த அனுபவங்களையெல்லாம் இழந்து பல வருடங்களாகின்றன. சும்மாவாச்சும் அங்கு சென்றே சில வருடங்கள் ஆகின்றன. ரமாவை இதுவரை ஒருமுறை கூட அழைத்துப்போனதில்லை. நச்சரித்துக்கொண்டிருந்தார். ஆகவே இந்த விடுமுறையில் திட்டமிடப்பட்டது. குடும்பத்தோடு ஹிஹி.. ஒற்றைக் குடும்பமாக இருந்த நாங்கள் நான்கு குடும்பங்கள் சேர்ந்த மெகா குடும்பமாகிவிட்டோம் இந்தச் சில ஆண்டுகளில். மூன்று குட்டீஸோடு அனைவரையும் அடைத்துக்கொண்டு ஒரு சுமோவில் ஒரு அழகான அதிகாலையில் கிளம்பிவிட்டோம். நான் முன் திட்டமாக வீட்டிலேயே குளித்துவிட்டு போகலாம் என நினைத்தாலும் சோம்பேறித்தனத்தில் மிஸ் பண்ணிவிட்டேன்.

DSC00074(பழைய குற்றால அருவி)

முதலில் பழைய குற்றால அருவி. பெரும் பாறையின் ஒரே மட்டமான விளிம்பில் சிதறி விழுந்துகொண்டிருந்த இந்த அருவி பிற்காலத்தில் படிகளாக செதுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். அனேகமாக ஆங்கிலேயர் காலத்தில் இருக்கலாம். அது எப்போது நிகழ்ந்தது என்ற வரலாறு தெரியவில்லை. இங்கு நாங்கள் நுழையவுமே இன்றைய குற்றால அனுபவம் எப்படி இருக்கப்போகிறது என கணித்துவிட்டேன். அவ்வளவு கூட்டம், போலீஸின் கண்காணிப்பில் வரிசைப்படி செல்லவேண்டும். எண்ணை பூசிக்கொண்டு அதை நம்மீதும் உரசிக்கொண்டு, நசநசப்பாக வரிசையில் நின்றுகொண்டு, அரைநிமிடம் குளித்து வருவதுதான் குற்றாலக் குளியல் அனுபவமா? என்ன செய்ய.. பெரும்பாலான சுற்றுலாப்பயணியருக்குக் கிடைப்பது இவ்வாறான அனுபவம்தான். நான் அங்கு குளிக்கவில்லை. ரமாவும் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களும் ஆவலாக குளித்து வர அங்கிருந்து கிளம்பினோம்.

DSC00093(புலியருவி – கண்ணுக்குத் தெரிகிறதா? :-))

அடுத்த ஸ்டாப்பிங் புலியருவி. இது வீட்டில் மாடியிலிருந்து தண்ணீரைக் கொட்டிக்கொண்டு குளிப்பதைப்போல அனுபவம் தரும். அதையும் சிமெண்ட் பூசி கிட்டத்தட்ட வீராணம் குழாய் எஃபெக்ட் கொண்டுவந்துவிட்டார்கள்.

DSC00117(பூங்காவில் வீட்டுக்குழந்தைகள் – சறுக்கிக்கொண்டிருப்பவர்கள்)

அடுத்து குற்றால மாநகராட்சிப் பூங்கா, சாப்பிடுவதற்காக. கொண்டு சென்ற இட்லிகளையும், புளியோதரையையும் சாப்பிட்டோம். (அது மட்டும் புரியவில்லை, கட்டுச்சோற்றுக்கு எப்படி இவ்வளவு சுவை எங்கிருந்து வருகிறதென்று.?) கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வண்டி கிளம்பிச் சென்றது ஐந்தருவிக்கு. இதன் மூன்று கிளைகள் ஆண்களுக்காகவும், இரண்டு பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கும் ஒரே கூட்டம். வெளியே ஓடிவந்துவிட்டேன். காரில் காத்திருந்த நேரத்தில் பெயர் தெரியாத விநோதமான பழங்களை வாங்கி தின்று பார்த்தேன். நுங்கைப் போன்ற பதத்துடன் ஒரு சிறிய பழம். வாயில் போட்டால் கரையவும் இல்லை, கடிக்கவும் முடியவில்லை. வாய்க்குள்ளேயே நழுவிக்கொண்டிருந்தது. சூப்பர் என்று சொல்லி தங்கையிடமும் தர கொஞ்ச நேரம் கன்னங்களிலேயே வைத்திருந்தோம்.

DSC00150 (குற்றால படகு குழாமில் நான்)

அங்கிருந்து கிளம்பி பேரருவிக்கு வருமுன்னரே அதை வேடிக்கை மட்டும்தான் பார்க்கப்போகிறோம் என்ற மனநிலைக்கு எல்லோரும் வந்து ஆடைகளை திருத்தமாக அணிந்துகொண்டுவிட்டோம். முன்னதாக படகு குழாமில் நிறுத்தி சவாரி போகலாம் என வம்படியாக எல்லோரையும் இழுத்துச்சென்றேன். எல்லோரும் நால்வர் மிதி படகுகளில் செல்ல நான் மட்டும் தனிநபர் துடுப்புப்படகில் பயணித்து சாகசம் செய்தேன். ஹிஹி.. இந்த தடவையின் மொத்த குற்றால அனுபவத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் இங்கு செலவழித்த ஒரு மணி நேரமே.

DSC00243(பேரருவி)

பின்னர் கடைத்தெருக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே பேரருவிக்கு வந்து அதன் பிரம்மாண்டத்தை அருகேயுள்ள பாலத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அப்புறமாகக் கிளம்பினோம். அன்றைய தினத்தின் தண்ணீர் வரத்து கொஞ்சம் குறைவுதான். காமிரா இல்லாத இளமைக்கால குற்றால நினைவுகள் இன்னும் மனதில் நீங்காமல் உள்ளன. பேரருவிக்கென்றே ஒரு தனிப்பிரமாண்டம் உண்டு. இங்கு குறிப்பிட்ட அருவிகள் தவிர்த்து சிற்றருவி மற்றும் மலைமேல் இருக்கும் செண்பகாதேவி அருவிக்கும் மக்கள் அனைவரும் சென்று குளித்துவரமுடியும். ஆனால் குழந்தைகளுடன் நீண்டதூரம் மலைமேல் நடந்து செல்வது கடினம் என்பதால் போகவில்லை. ஆனால் முன்பு எங்கள் சாய்ஸில் எப்போதுமே இருந்தது செண்பகாதேவி அருவி மட்டுமே. அப்போது பிற அருவிகளுக்கெல்லாம் வரவே மாட்டோம். அதற்கும் மேலே உள்ள தேனருவிக்கு சென்ற அனுபவம் எனக்குக் கிடையாது. இப்போது மக்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. என் தந்தை அவரது இளமைக்காலத்தில் அங்கெல்லாம் சென்று குளித்திருப்பதாக நினைவுகூர்ந்தார்.

DSC00094 (சுபா - புலியருவியின் ஓடையில்)

சுபாவும், என் தம்பி, தங்கை பிள்ளைகளும் (ஆளுக்கு ஒரு குழந்தை) குதூகலமாக இந்த நிகழ்வைக் கழித்தனர். பெற்றோருக்கு எங்களுடன் இருந்த மகிழ்ச்சி, எங்களுக்கு அவர்களுடன் இருந்த மகிழ்ச்சி. மொத்தத்தில் விடுமுறை மகிழ்வாக கழிந்தது.

.

Sunday, July 18, 2010

ஆனந்தபுரத்து சுவாரசியம்

வழக்கமான கமர்ஷியல் ‘அரைத்தமாவி’லிருந்து கொஞ்சம் விலகியிருப்பதாலேயே நம் பாராட்டும் லிஸ்டில் ‘ஆனந்தபுரத்து வீடு’ வருகிறது. தற்போதைய பார்க்கவேண்டிய லிஸ்டில் ‘மதராசபட்டினத்’துக்கு அடுத்த இரண்டாவதும் கடைசியுமான படம். பார்த்தாயிற்று.

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சென்ற நமக்கு ஒரு சுவாரசியமான சினிமா. பெரிய பிஸினஸ் சீட்டிங்கில் தாக்கப்பட்ட ஹீரோ, குடும்பத்துடன் ஊரிலிருக்கும் சொந்த வீட்டுக்கு தப்பிச்செல்கிறார். அங்கும் வில்லன்களின் துரத்தல். சிற்சில சுவாரசியங்களுக்குப் பின் அந்தப் பிரச்சினையிலிருந்து அவரை காப்பாற்றுகின்றனர் அந்த வீட்டில் ஆவியாக வாழ்ந்துவரும் அவரது பெற்றோர். சுபம்.

AananthapurathuVeedu2

ஆவி கதை என்றாலும் சரி, அல்லது வேறு என்ன மாதிரியான டுபாகூர் கதைகள் என்றாலும் சரி, சுவாரசியமாக சொல்லப்படுவதுதான் முக்கியம். இவ்வளவுக்கும் வில்லன்களை ரத்தம் கக்க வைப்பது, திடும் திடுமென பின்னணி இசையோடு திடுக்கென தோன்றி ரசிகர்கள் வயிற்றைக் கலக்குவது போன்ற எந்த பிரச்சினையும் இல்லை. அழகாக சமையல் செய்துவைப்பது, பால் காய்ச்சுவது, துணி துவைத்துப்போடுவது, நாற்காலியில் ஆடுவது, மிஞ்சிப்போனால் கைத்தடியை பறக்கச்செய்வது, கதவு, ஜன்னல்களை டப் டப்பென திறந்து மூடுவதோடு வேலையை சிம்பிளாக முடித்துக்கொள்கின்றன ஆவிகள். கதையின் முக்கிய சிக்கலை விடுவிப்பதே ஒரே ஒரு SMS, மற்றும் கிளைமாக்ஸில் பணப்பெட்டியை திறந்துகாட்டுவது என எளிமையாக முடிந்துவிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எந்த திடுக்கிடும் சம்பவங்களும் இல்லை.

ஆனால் இன்னொரு நல்ல விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். இந்த ஆவி விஷயத்தை கொஞ்சம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சொல்லப்படும் திரைக்கதை மிகவும் லாஜிக்கலாகவும், இயல்பாகவும் இருக்கிறது. எக்ஸ்போர்ட் ஏஜெண்டால் ஒரு மிகப்பெரிய தொகை ஏமாற்றப்பட்ட ஹீரோ செய்வதறியாது கடன்காரர்களுக்குப் பயந்து, நண்பனை சமாளிக்கச் சொல்லிவிட்டு/ பணம் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு ஓடிப்போகிறார். அதை மனைவியிடம் மறைத்து வெகேஷனில் இருப்பதைப்போல நடிக்கிறார். பின்னாலேயே பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் ஓடிவருகிறான் நண்பன். வில்லன்களும் தேடிக்கண்டு பிடித்து வந்துவிடுகிறார்கள். இவர்களை ஹவுஸ் அரெஸ்டில் வைத்துவிட்டு பணம் ஏற்பாடு செய்யச்சொல்கிறார்கள். விஷயம் தெரிந்து மனைவி முதலில் டென்ஷனாகி பின்பு ‘என் நகை, பிளாட், பாங்க் பாலன்ஸை வைத்து சமாளிக்கலாம்.. முதலில் சென்னை கிளம்பலாம் வாங்க’ என்று கிளம்பவும், அதையும் உள்ளே போட்டுவிட்டேன் என்று கூறி விழிக்கிறார். பல வழிகளில் முயற்சித்துவிட்டு இயலாமையின் ஒரு கட்டத்தில் அழுதே விடுகிறார். மிரட்டும் வில்லனிடம் ‘சார், சார்..’ என்று பின்னாலேயே செல்கிறார். பூர்வீக வீட்டை விற்பதுதான் ஒரே வழி என்று அதற்கு முயற்சித்தால் ஆவி பெற்றோரின் அழிச்சாட்டியங்கள் வேறு.

இப்படி சினிமாத்தனங்களே இல்லாமல் இயல்பாக செல்கிறது கதை. வில்லனும் கூட எப்போதாவது மனைவியை தூக்கிச் சென்றுவிடுவேன் என்று லைட்டாக சினிமா வில்லன் போல பேசினாலும், பொதுவாக ஊய் ஊய் என்று கத்துவதில்லை. பணம் ஏற்பாடு செய்ய ஓரளவு டைம் தருகிறார். சும்மா சும்மா யாரையும் அடித்துக் கொடுமைப் படுத்துவதில்லை. ரெண்டு அடியாள்தான் வைத்துக்கொண்டிருக்கிறார். வந்த இடத்தில் அங்குமிங்கும் போய்வர ஹீரோவின் காரை மட்டும் கேட்டுவிட்டு எடுத்துச் செல்கிறார். கடைசியில் பணம் கிடைத்ததும், அவர் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நல்ல பிள்ளையாக கைகொடுத்துவிட்டு போய்விடுகிறார். இவ்வளவுக்கும் அவரைப் பார்த்தாலே ஏதும் செய்துவிடுவாரோ என்று நமக்கு பயமாகவேதான் இருக்கிறது.

Anandhapurathu_Veedu_2

மெயின் காரெக்டர்களில் நந்தா சிறப்பான பங்களிப்பு. ஹீரோயின் என்றாலே இளமை கொப்பளிக்க, குத்தாட்டம் போடவேண்டும் என்றில்லாமல், பக்கத்துவீட்டுப் பெண்ணைப் போன்ற இயல்பான தோற்றத்தில் அழகாக காரெக்டரோடு பொருந்தியிருக்கிறார் சாயாசிங். இவர்களுக்கிடையே ஒரு கியூட் குழந்தை ஆனந்தாக ஆர்யன். ரசனையான வட்டாரமொழி வழக்குடன் வேலைக்காரியாக கலைராணி. கன்னக்குழியுடன், பப்ளிமாஸ் போன்ற வில்லன் மேகவர்ணபந்து (அவருக்கு அட்டகாசமாக டப்பிங் தந்திருப்பது மோகன்ராம்). நண்பனாகவும், பணத்தாசையில் டபிள்கேம் ஆடும் துரோகியாகவும் (நான் சஸ்பென்ஸை உடைக்கவில்லை, படத்திலும் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்) வரும் கிருஷ்ணா. இன்னும் சின்னச்சின்ன காரெக்டர்களில் வரும் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளன.

திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, பாடல்கள், கதைக்கு உதவாத க்ளஸ்ட்ரோபோபியா போன்ற சின்னச்சின்ன குறைகள் இல்லாமலில்லை. என்ன.. S பிக்சர்ஸில் பட்ஜெட்டில் கறாராக இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. சில காட்சிகளில் சிஜி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கொஞ்சம் சுமார் ரகமே, மேலும் பெரும்பாலும் நாற்காலி ஆடுவது, கதவு சாத்தப்படுவது, சொம்பு நகர்வது என தாத்தா காலத்து ட்ரிக்குகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்திரன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் டீமின் லேஸான கடைக்கண் பார்வை படத்தின் மேல் கொஞ்சூண்டாவது விழுந்திருக்கலாம் இந்த விஷயத்தில். :-))

தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களில் யாராவது மட்டமாக பண்ணியிருந்தால்தான் இனிமேல் ஆச்சரியப்படவேண்டும். எவ்வளவு மொக்கையான படமாக இருந்தாலும் நம் ஒளிப்பதிவாளர்கள் மட்டும் சோடை போவதேயில்லை. சமீபத்திய உதாரணம் ‘ராவணன்’. இந்தப்படத்திலும் அவ்வளவு அழகான ஒளிப்பதிவைச் செய்திருப்பவர் அருள்மணி. வித்தியாசமான, சுவாரசியமான ஒரு படத்திற்காக ‘நாகா’ மற்றும் குழுவினருக்கு நம் பாராட்டுகள்.

.

Thursday, July 15, 2010

மதராசபட்டினம் : வியப்பு

தமிழில் பீரியட் படம் என்ற விஷயத்தில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. ஏனெனில் நம்மவர்களின் திறமை மேல் அப்படியொரு நம்பிக்கை. மேலும் நம் பட்ஜெட்டும் அப்படி. அந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது இந்தப்படம். 1940 களின் சென்னையில் நிகழும் ஒரு அழகிய காதல் கதையை படமாக்கியிருக்கிறார்கள், மனதைத் தொடும்படியாக. குறைந்த பட்ஜெட்டில் பீரியட் படமென்றால் ரிஸ்க் அதிகம்தான். பிசிறடித்துவிடும். அதனால் மற்ற பிளஸ் பாயிண்டுகளும் கூட அடிபட்டுப்போய்விட வாய்ப்பிருக்கிறது. அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை இங்கே. எதிர்காலத்தில் நம்மவர்கள் இன்னும் கூட பிரமாதம் பண்ணுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தப்படம்.

லண்டனில் இருந்து சென்னை வரும் ‘சென்னை மாகாண’ கவர்னரின் பெண் எமி (எமிஜாக்சன்), ஒரு சாதாரண சலவைத் தொழிலாளியான பரிதி (ஆர்யா) மீது ஈர்ப்பாகிறார். பெரும் போராட்டத்துக்குப்பின் பிரிகிறது ஜோடி. பின்னர் 60 ஆண்டுகளுக்குப் பின் மரணம் துரத்தும் நிலையில் முன்னாள் காதலனைத் தேடி சென்னை வருகிறார் எமி. அதற்கு ஒரு அழகிய காரணம். இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற லாஜிக்கை மட்டும் விட்டுவிடலாம். அவர்களுக்கே தெரியாமல்தான் ‘விதி’ என்று சிம்பிளாக எமியின் வாயாலேயே சொல்லிவிடுகிறார்கள். பரிதியை அவர் சந்தித்தாரா? வேறென்ன நிகழ்ந்தது? என்பதை அழகாக சொல்லுகிறது படம்.

madharasapattinam-movie-stills054 

சென்ட்ரல் ரயில் நிலையம், கூவம் நதி, சில காட்சிகளில் மவுண்ட் ரோடு, கார்கள், ட்ராம்ஸ்.. இன்னும் நுண்ணிய சித்தரிப்புகள் என இயன்றவரை 40 களின் சென்னையை கண்முன் தந்திருக்கிறார்கள். கூடுமானவரை குறைவான அவுட்டோர், காமிரா கோணங்கள், கொஞ்சம் சிஜி, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் என கலந்துகட்டி இயக்குனர், ஆர்ட் டைரக்டர், காமிராமேன் கூட்டணி இதைச் சாதித்திருக்கிறது. நிகழ்வுகளை மெல்லிய நீலத்திலும், வின்டேஜ் காட்சிகளை பிரவுன் டோனிலும் படமாக்கியிருப்பது சிறப்பு. படத்தின் இன்னொரு பெரிய பலமாக எமி, பரிதியின் உயிரோட்டமான காதல் காட்சிகள். அவ்வளவு அழகாக காட்சிகள் வந்திருக்கின்றன. மொழி தெரியாத சிக்கல்கள் காதலில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விஷயம்தான். காதலுக்கு ஏது மொழி? கண்டம் தாண்டியும் மலரும் காதல் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. எமி அவ்வளவு அழகாக இருக்கிறார். ஆர்யா அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார். ஆர்யா, எமியின் நடிப்பு சிறப்பான பங்களிப்பு.

amy-jackson-wallpaper04

இன்னும் படம் நெடுக சின்னச் சின்னதாய் ஏராளமான காரெக்டர்கள் பக்குவமாக செதுக்கப்பட்டிருப்பது, ரசனை. இடைவேளைக்குப் பின்னான சேஸிங் காட்சிகளில் படம் கொஞ்சம் தொய்வடைகிறது, அவ்வாறே சில பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் புதிய அனுபவத்தைக் கொஞ்சம் சிதைப்பதாக உள்ளன. ஹீரோயின் காரெக்டரும், கதை சொல்லும் ஸ்டைலும் லேசாக ‘டைட்டானிக்’ ஸ்மெல் தருவதை தவிர்க்கமுடியாதுதான். மற்றபடி படம் நிறைவைத் தருகிறது.

மொத்தத்தில் லாஜிக்கலான நல்ல ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்தது போன்ற உணர்வு. கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத படம்.

.

Wednesday, July 14, 2010

யார் கல்யாணம் பண்ணிப்பாங்க.?

விடுமுறையில் போனதில் அலுவலகத்தில் நிறைய வேலைகள் பாக்கி இருந்தன. நேற்று காலையில் அலுவலகம் போய் வேலையில் மூழ்கிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன் வந்தது கண்ணனிடமிருந்து. எடுத்த எடுப்பிலேயே,

“அறிவு கெட்ட முண்டங்கள், லூசு மண்டையனுங்க, பைத்தியக்கார மடப்பசங்க, மற கழண்டவனுங்க..”

“நீ சொன்ன எல்லாத்துக்கும் ஒரே அர்த்தம்தான், விஷயத்தச் சொல்லுடா.. நிறைய வேலையிருக்குது”

“இவுனுங்க எல்லாம்தான் கல்யாணம் பண்ணிப்பானுங்க..”

“மரியாதையாப் பேசு, நீயும் நானுமே கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கிறோம்”

“அதிலென்னடா சந்தேகம்? நீ ஒரு மாங்கா மண்டையன், நா ஒரு தேங்கா மண்டையன்”

“மெதுவா பேசுடா.. ஏன் கத்துற? ஆபீஸ்ல இருக்கியா? வீட்லயா? மீரா பக்கத்துல இருக்கப்போறா..”

“எவ பக்கத்துல இருந்தா எனக்கென்ன? உண்மையைச் சொல்றதுல என்னடா தயக்கம்? நான் என்ன உன்ன மாதிரி பிளாகரா? நீயும் நானும் லூசுப்பசங்க.. கல்யாணம் பண்ணிக்கிட்டவனுங்க எல்லாரும் லூசுப்பசங்க.. லவ் பண்றவனுங்க அதவிட மோசம்.. என்ன இப்ப? இல்லேன்னுடுவியா நீயி.?”

“நான் எப்ப சொன்னேன் இல்லேன்னு.? எங்கடா இருக்க? காலையிலயே தண்ணி போட்டுருக்கியா?”

“போடா லூசுப்பயலே.. உண்மையைச் சொல்றதுக்கு தண்ணி போடணுமா என்ன?”

“அதச் சொல்லலடா, உண்மையெல்லாம் ரொம்பப் பெரிய விசயம். அதெதுக்கு நமக்குன்னுதான்.?”

“நா அப்பிடித்தான் சொல்லுவேன், இப்ப என்னாங்குறே?”

“இல்லடா.. இப்ப என்ன நடந்துச்சு? அதச் சொல்லாம குதிச்சேன்னா என்ன அர்த்தம்?”

“..த்த்தூ..”

“ஆங்.. இப்பதான் தெரிஞ்சுதா? நீ ரொம்ப லேட்டுடா.. அப்பிடி துப்பிட்டு ஆக வேண்டிய வேலையப் பாரு. சாய்ங்காலம் கால் பண்றேன்.!”

லைனைக் கட் பண்ணிவிட்டு வேலையில் மூழ்கினேன்.

.

Friday, July 9, 2010

மோகம் 30 நாள்

டிஸ்கி : எனக்கே கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. தலைப்பு கொஞ்சம் டூ மச்சாக இருக்கிறதோ? நமக்கு ஒழுங்கா நூறடி ரோட்டிலேயே சலம்பாம நடக்கத்தெரியாது. இந்த லட்சணத்துல கயித்து மேல பயணமா? பார்ப்போம்..


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(குறள் : 1092)

என்ன சொல்கிறது வள்ளுவம்? தலைவன் அறியாமல் அவனை விழுங்கும் தலைவியின் சிறு பார்வை மட்டுமே காமத்தின் பாதியளவு கூட இல்லை.. அதை விடவும் பெரிது என்கிறது. வெறும் பார்வைக்கு மட்டுமே இவ்வளவு எனில்.. அடுத்து.. அதற்கடுத்து.. எவ்வளவு பெரிய விஷயம் இது.!

‘இத்தப்போயி எவண்டா 30 நாள்னு சொல்லிக்கினான்? கையில கெடச்சான்னா தாராந்துடுவான் மவனே.?’

‘லூஸ்ல வுடு மாமே.. இதுல வேறெதுனாக் கீதானு பாக்குணும்.. ஏதா பொடி வெச்சி சொல்லிட்டிருப்பானுங்கோ..’ என்று கண்ணன் என்னை அமைதிப்படுத்தினான்.

என்ன இந்த காமம்? 60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.? இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.?

நேற்று நான் 90யை நெருங்கிக்கொண்டிருந்த போது 270யை தாண்டிக்கொண்டிருந்த கண்ணனின் சொற்பொழிவு இதோ..

‘மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா? ஆவுதுன்னு வெச்சுக்கோ.. அன்னிக்கிருந்தே கணக்குல வெய்யி.. ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.. நுப்பதாவது நாளே உண்டாயிட்டான்னு வெச்சுக்கோ.. போச்சா.. அப்பாலிக்கு டாக்டரு, டெஸ்ட்டுக்குன்னு அலைவியா? அவன் முத மூணு மாசம் வாணாம், கடேசி மூணு மாசம் வாணாம்பானா? நடுவாலிக்கா நீயே பக்கத்துல போக மாட்டியா.. புள்ள பொறந்தப்பொறவு எவுனும் சொல்லாமலே மூணு மாசம் போ மாட்டியா? அப்பாலிக்கா ரெண்டாவுது இப்ப வாணானு அவ சொல்லுவாளா.? அப்போ அதச்செய்யி, இதச்செய்யாத, அதப்பண்ணு, இதப்பண்ணாத ஒரு பெரிய லிஸ்டே இருக்குமா? என்னத்த.. அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்போயிருமா? இன்னொண்ணு பிளான் பண்ணினன்னு வெய்யி அடுத்தால இன்னும் மூணு வருசம் ஓடிருமா? எல்லாம் முடிஞ்சு பாக்கும் போது நீ ஓஞ்சி போயிடுவயா? அது கெடக்குது கழுதன்னு ஆயிப்போயிடுமா? இப்ப கணக்குப் பாரு.. எவ்ளோ நாளு.. அந்த முத நுப்பது நாளுதானே.. அதான் மோகம் நுப்பது நாளு.. அதுனால ‘போனா வராது, விடிஞ்சா இருக்காது.’ கவனமா இருந்துக்கோ.. அப்பயே ஜாலி பண்ணிக்கோன்றேன் நா.. இப்டிதான் நா திங்க் பண்ணிகினுருக்கேன்.. நீ இன்னா சொல்ற.?’

விட்டால் ஆன்மீக உரையைத் தொடரக்கூடும் என்பதால் கைத்தாங்கலாக அவனை படுக்க வைத்துவிட்டு நானும் சோபாவிலேயே சரிந்தேன்..

இவன் கூறும் நாள் கணக்குதான் அந்த பழமொழிக்குப் பொருத்தமாக இருக்கிறது. எனினும் இன்னொரு கோணமும் இருக்கிறது. அது ‘தேவை’ என்ற பசி நோக்கில் மட்டுமே இருக்குமானால் முப்பது நாளென்ன, மூன்றே நாட்களில் கூட வடிந்துபோகலாம். ஆனால் ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே..

kaamam[3]

ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன்.

.

Sunday, July 4, 2010

டிஸ்கவரி தமிழ்

குறும்படங்கள் எடுத்து ரொம்ப நாட்களாகிறதாகையால் எதையாவது செய்து உங்கள் பொறுமையை சோதிக்கலாம் என்று ஒரு ஐடியா. இந்த சினிமாக்காரர்கள் மாதிரி எல்லா பொறுப்புகளையும் நாமே பார்ப்பதைவிடுத்து, அட்லீஸ்ட் கதையையாவது பிரெஷ்ஷா உன் பிரண்ட்ஸ்கிட்டயிருந்து வாங்குடா.. அப்பதான் ஒரு ப்ரொபஷனல் லுக் கிடைக்கும் என்றான் கண்ணன். சரிதான் என்று நண்பர், பிரபல எழுத்தாளர், சக பதிவர் ஒருவருக்கு போனைப் போட்டேன். ஐயா இந்த மாதிரி, இந்தமாதிரி விஷயம்.. கதை வேணும் என்றேன். சடாரென்று அவர் பதில் தந்தார்.

“எந்த மாதிரி வேணும்? லவ்? ஆக்ஷன்? கிரைம்? காமெடி? இல்லன்னா சமூகத்துக்கு நீதி சொல்லணுமா?”

யோவ்.. இன்னா? எந்த ஸ்டாப்பிங்க்ல இறங்கணும்ங்கிற மாதிரி சமூகத்துக்கு நீதி சொல்றதுல்லாம் அவ்வளவு ஈஸியாப்போச்சா உமக்கு.?

********************

நான் கொஞ்சம் டிவி பைத்தியம். எல்லா தமிழ் டிவிக்களும் சேர்ந்து நல்ல நல்ல நிகழ்ச்சிகளாக போட்டு என்னை டிவி பார்க்கவிடாமல் செய்து காப்பாற்றி வைத்திருந்தார்கள். எப்போதாவது காமெடி சானல்கள் பார்ப்பதோடு சரி. இப்போது புதிதாக ‘டிஸ்கவரி தமிழ்’ பார்க்கத் துவங்கியுள்ளேன். எத்தனை எத்தனை விதமான அறிவியல்பூர்வமான நிகழ்ச்சிகள். முன்னமே பரிச்சயம் எனினும் தமிழில் பார்ப்பது இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது. நிச்சயமாகச் சொல்லலாம், வேறெந்த சானலிலும் இல்லாத அளவில் நிகழ்ச்சியின் தமிழாக்கம் மற்றும் டப்பிங் இருக்கிறது. தமிழ் சானல்களில் கூட இல்லாத அளவில் மிகக்குறைவான ஆங்கிலக்கலப்பில் ஆனால் பேச்சு மொழியில் டப்பிங் கேட்க இதமாக இருக்கிறது.

போலீஸால் தாக்கப்பட்ட ஒரு பெண் தரும் பேட்டி இவ்வாறு டப் செய்யப்பட்டிருக்கிறது, “நான் கூட்டத்திலருந்து ஓரமாத்தான் நின்னுட்டிருந்தேன். ஆனாலும் ஒரு காவலர் பலமா என்னத் தாக்கிட்டாரு, நான் காயம் பட்டு விழுந்துட்டேன். அப்புறம் மருத்துவமனைலதான் கண்விழிச்சேன்”

*********************

அன்பு நண்பர்களே.. நான் நேரமின்மையால் பிளாக் தவிர ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற வேறெந்த பொதுத்தளங்களிலும் இயங்குவதில்லை. டிவிட்டரில் மட்டும் இயங்க முயற்சித்துவருகிறேன். ஆகவே மெயிலுக்கு வரும் பல கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டியதிருக்கிறது. தவறாகக் கொள்ளவேண்டாம்.

*********************

puthagam

பதிவுலகிலிருந்து புத்தகங்கள் வரவு அதிகரித்திருப்பது மகிழ்வான செய்தி. அதில் லேட்டஸ்ட், நண்பர் பழமைபேசியின் “ஊர்ப் பழமை..”. அவருக்கும், அதைப் புத்தகமாக்கிய பதிவர் 'ஆரூர் விசுவநாதனு’க்கும் நம் நல்வாழ்த்துகள். புத்தகத்தின் அட்டைகளை அலங்கரிப்பது நம் PIT குழும நண்பர்களில் ஒருவரான சுரேஷ்பாபுவின் (கருவாயன்) படங்கள். அவருக்கு நம் நன்றிகள். அட்டை உருவாக்கத்துக்கு பெரும்பாலும் எங்கோ நெட்டில் கிடைக்கும் படங்களை எடுத்து முடிந்தவரை போட்டோஷாப் வேலைகளை செய்து பயன்படுத்துகிறோம். அதனால் ஒரிஜினாலிடி இல்லாது போகிறது. பதிலாக PIT கலைஞர்களின், நம் நண்பர்களின் சிறப்பான படைப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம், அவர்கள் அனுமதியுடன். அதற்கு இது ஒரு நல்ல துவக்கமாக அமையட்டும்.

*********************

கல்யாணம் ஆனால் அடுத்து என்ன.? அதேதான். அதை மட்டும் கரெக்டாக செய்துவிடுகிறார்கள். மீரா பிரசவத்துக்காக தாய்வீடு சென்றுவிட்டாள். அம்மா வேறு அக்காவைப் பார்க்க ஊருக்குப் போய்விட்டதால் நீண்ட சுதந்திரத்தில் கண்ணன் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கிறான். காலை ஒன்பது மணிக்கெல்லாம் SMS வருகிறது.

“ஷேவ் பண்ணி குளிச்சு பிரெஷ்ஷா ரெடியாகியாச்சு? பூஜை சாமான்லாம் ரெடி. ஒவன்ல சிக்கன் 65 பொறிஞ்சிக்கிட்டிருக்கு. எதற்கா? மார்னிங் பூஜைக்குதான். வர்றியா? ஹெஹே..”

*********************

வெகு சமீபத்தில் மணவிழா கண்டிருக்கும் நண்பர் நாடோடி இலக்கியனுக்கு நம் நல்வாழ்த்துகள்.

*********************

ரமா இரண்டு நாட்களாக இடது கன்னத்தில் ஒரு பருவோடு அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறார். அது அவரது பிற பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. நான் பாட்டுக்கு நிம்மதியாக என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நேற்று அழகாக ஷேவ் செய்துகொண்டு ஆஃபீஸ் கிளப்பிக்கொண்டிருந்தேன். எதற்கோ அருகில் வந்தவர், ஒரு மாதிரியான தொனியில், ‘ஏங்க உங்களுக்கெல்லாம் பருவே வரமாட்டேங்குது.?’

நான் அதிர்ந்தேன். இதிலென்ன அதிர்ச்சி வேண்டியிருக்கிறது என்கிறீர்களா? வார்த்தைகள்தான் அப்படியிருந்தன. அதன் உள்ளர்த்தமாக எனக்குத் தோன்றியது என்ன தெரியுமா? ‘நான் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் போது உங்களுக்கென்ன பளபளப்பு வேண்டிக்கிடக்குது? என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது. இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கும் பரு வந்தாகணும்.!’

.

Friday, July 2, 2010

காற்று உன்னைத் தூக்கிச் செல்லுமா?

“ஊஊஊஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… காத்து உங்கம்மாவ தூக்கிட்டுப் போவப்போவுது.. ஐய்ய்யோ..”

காற்றும் கொஞ்சம் வேகமாகத்தான் அடிக்கிறது. அந்த வார்த்தையிலிருந்த அர்த்தம் புரிந்ததோ, உணர்வு புரிந்ததோ, அல்லது நிஜமாகவே பயம்தானோ.. சொன்னவரை அடிக்க கையை வீசியபடியே அம்மாவின் இடுப்பிலிருந்தபடியே சத்தமாக அழத்துவங்குகிறேன்.

ந்த வயதிலிருந்து இந்த நான் என்ற நினைவுகள் ஞாபகக்கூட்டில் தங்கத்துவங்கின என்று யோசித்தால்.. ஏழாம் வகுப்பிலிருந்து? ஆறாம் வகுப்பிலிருந்து? இல்லையில்லை நன்றாக யோசித்தால் ஐந்தாம் வகுப்பிலிருந்து கூட சில விஷயங்களை நினைவுகூர முடிகிறது. ஐந்து பைசா பாக்கெட் மணி, அதை வழக்கமாக ஒருவன் பிடுங்கிக்கொள்வது, பயங்கர ஸ்ட்ரிக்டான ‘அஞ்சாப்பு சார்’, ஒரு மாடு வகுப்புக்குள் வந்தது.. இன்னும் இன்னுமென நிறையவே சொல்லமுடியும். அதற்கும் முன்னால்தான் சிக்கலாகிறது..

கடைசி சித்தப்பா பூச்சி மருந்துகுடித்தது, மாமா ஒருத்தர் ஆச்சியுடன் சண்டை போட்டுவிட்டு எதிர்வரிசையில் வாடகைக்கு குடியிருந்தது, மிகுந்த மேடான பகுதியிலிருந்த எங்கள் வீட்டையே ஒரு மழைக்கால வெள்ளம் சூழ்ந்தது, தாத்தா ஒருவர் இறந்து போனது என நான் மிகப்பழமையான நினைவுகள் என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்களும் கூட ஐந்தாம் வகுப்புக்குப் பின்னர் நடந்தவைதான் என தெரிகிறது. இப்போது நான் முயற்சிப்பது அதற்கும் முந்தைய விஷயங்கள் ஏதாவது..

மெல்ல மெல்ல பயணிக்கிறேன் பின்னோக்கி.. எதெல்லாம் நினைவுக்கு வருகின்றது என பார்க்கலாம். மூன்றாவதா, இரண்டாவதா நினைவில்லை ஒரு முறை வகுப்பு நேரத்தில் என் மாமா வந்து எதற்காகவோ பாதியில் அழைத்துச் சென்றார். அந்தக் காலகட்டங்களில் வீட்டு வாழ்க்கை எப்படி இருந்தது? ஐந்தாம் வகுப்பிலிருந்து இதோ இப்போது வரை உடனிருக்கும் சுந்தரும், முத்துவும் கூட அப்போதும் உடன்தான் படித்திருக்கிறார்கள். அவர்கள் குறித்தும் எதுவும் ஞாபகமில்லை. வீடு மட்டும் இப்போதைய கல் சுற்றுச்சுவரில்லாமல் மண்ணால் ஆனது என்றும், உட்புறமாக ஒரு வேப்பமரமிருந்ததும் நினைவுக்கு வருகிறது. அதே காலகட்டங்களில் சித்தப்பா வீடு கட்டியிருக்கிறார். அதற்காகவே அந்த மரம் பயன்பட்டிருக்கிறது என்பதையும், அப்போதே அவர் கல் சுற்றுச்சுவரையும் கட்டியிருக்கிறார் என்பதையும் ஊகிக்கமுடிகிறது. ஆனால் சம்பவங்கள் ஏதும் ஞாபகமில்லை. அதற்கும் முன்னால்..

ஒரு சரஸ்வதி பூஜையின் போது பள்ளியில் தட்டு நிறைய பரப்பிவைக்கப்பட்ட நெல்லில் ‘அ’ எழுதுகிறேன். மடியில் வைத்து என் விரல் பிடித்து எழுதியது என் அப்பா. ஒரு ஜோல்னா பையுடன் முதல் வகுப்பில் என்னை யாரோ விட்டுச்செல்ல அழாமல் வாத்தியார் உட்காரச்சொன்ன இடத்தில், தரையில் போடப்பட்டிருந்த பலகையில் உட்காருகிறேன். அவ்வளவுதான். அதற்கும் முன்னால்..

நான், அமர்ந்திருக்கும் அம்மாவின் கைகளில் இருந்து விடுபட்டு நான்கடி தள்ளி அமர்ந்திருக்கும் என் ஆச்சியின் நீட்டிய கைகளில் தள்ளாடி நடந்து சேர்கிறேன். எதையோ சாதிப்பது போன்ற சிரிப்புடன் மீண்டும் அவரிடமிருந்து அம்மாவின் கைகளுக்கு. அவர்களும் கூட ஆர்ப்பரித்ததாய் ஞாபகம். ஆமாம், அதற்கும் முன்னால் என்றோ ஓர்நாள்.. அது நினைவிலிருக்கிறது,

“ஊஊஊஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… காத்து உங்கம்மாவ தூக்கிட்டுப் போவப்போவுது.. ஐய்ய்யோ..”

காற்றும் கொஞ்சம் வேகமாகத்தான் அடிக்கிறது. அந்த வார்த்தையிலிருந்த அர்த்தம் புரிந்ததோ, உணர்வு புரிந்ததோ, அல்லது நிஜமாகவே பயம்தானோ.. சொன்னவரை அடிக்க கையை வீசியபடியே அம்மாவின் இடுப்பிலிருந்தபடியே சத்தமாக அழத்துவங்குகிறேன்.

.