Friday, July 2, 2010

காற்று உன்னைத் தூக்கிச் செல்லுமா?

“ஊஊஊஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… காத்து உங்கம்மாவ தூக்கிட்டுப் போவப்போவுது.. ஐய்ய்யோ..”

காற்றும் கொஞ்சம் வேகமாகத்தான் அடிக்கிறது. அந்த வார்த்தையிலிருந்த அர்த்தம் புரிந்ததோ, உணர்வு புரிந்ததோ, அல்லது நிஜமாகவே பயம்தானோ.. சொன்னவரை அடிக்க கையை வீசியபடியே அம்மாவின் இடுப்பிலிருந்தபடியே சத்தமாக அழத்துவங்குகிறேன்.

ந்த வயதிலிருந்து இந்த நான் என்ற நினைவுகள் ஞாபகக்கூட்டில் தங்கத்துவங்கின என்று யோசித்தால்.. ஏழாம் வகுப்பிலிருந்து? ஆறாம் வகுப்பிலிருந்து? இல்லையில்லை நன்றாக யோசித்தால் ஐந்தாம் வகுப்பிலிருந்து கூட சில விஷயங்களை நினைவுகூர முடிகிறது. ஐந்து பைசா பாக்கெட் மணி, அதை வழக்கமாக ஒருவன் பிடுங்கிக்கொள்வது, பயங்கர ஸ்ட்ரிக்டான ‘அஞ்சாப்பு சார்’, ஒரு மாடு வகுப்புக்குள் வந்தது.. இன்னும் இன்னுமென நிறையவே சொல்லமுடியும். அதற்கும் முன்னால்தான் சிக்கலாகிறது..

கடைசி சித்தப்பா பூச்சி மருந்துகுடித்தது, மாமா ஒருத்தர் ஆச்சியுடன் சண்டை போட்டுவிட்டு எதிர்வரிசையில் வாடகைக்கு குடியிருந்தது, மிகுந்த மேடான பகுதியிலிருந்த எங்கள் வீட்டையே ஒரு மழைக்கால வெள்ளம் சூழ்ந்தது, தாத்தா ஒருவர் இறந்து போனது என நான் மிகப்பழமையான நினைவுகள் என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்களும் கூட ஐந்தாம் வகுப்புக்குப் பின்னர் நடந்தவைதான் என தெரிகிறது. இப்போது நான் முயற்சிப்பது அதற்கும் முந்தைய விஷயங்கள் ஏதாவது..

மெல்ல மெல்ல பயணிக்கிறேன் பின்னோக்கி.. எதெல்லாம் நினைவுக்கு வருகின்றது என பார்க்கலாம். மூன்றாவதா, இரண்டாவதா நினைவில்லை ஒரு முறை வகுப்பு நேரத்தில் என் மாமா வந்து எதற்காகவோ பாதியில் அழைத்துச் சென்றார். அந்தக் காலகட்டங்களில் வீட்டு வாழ்க்கை எப்படி இருந்தது? ஐந்தாம் வகுப்பிலிருந்து இதோ இப்போது வரை உடனிருக்கும் சுந்தரும், முத்துவும் கூட அப்போதும் உடன்தான் படித்திருக்கிறார்கள். அவர்கள் குறித்தும் எதுவும் ஞாபகமில்லை. வீடு மட்டும் இப்போதைய கல் சுற்றுச்சுவரில்லாமல் மண்ணால் ஆனது என்றும், உட்புறமாக ஒரு வேப்பமரமிருந்ததும் நினைவுக்கு வருகிறது. அதே காலகட்டங்களில் சித்தப்பா வீடு கட்டியிருக்கிறார். அதற்காகவே அந்த மரம் பயன்பட்டிருக்கிறது என்பதையும், அப்போதே அவர் கல் சுற்றுச்சுவரையும் கட்டியிருக்கிறார் என்பதையும் ஊகிக்கமுடிகிறது. ஆனால் சம்பவங்கள் ஏதும் ஞாபகமில்லை. அதற்கும் முன்னால்..

ஒரு சரஸ்வதி பூஜையின் போது பள்ளியில் தட்டு நிறைய பரப்பிவைக்கப்பட்ட நெல்லில் ‘அ’ எழுதுகிறேன். மடியில் வைத்து என் விரல் பிடித்து எழுதியது என் அப்பா. ஒரு ஜோல்னா பையுடன் முதல் வகுப்பில் என்னை யாரோ விட்டுச்செல்ல அழாமல் வாத்தியார் உட்காரச்சொன்ன இடத்தில், தரையில் போடப்பட்டிருந்த பலகையில் உட்காருகிறேன். அவ்வளவுதான். அதற்கும் முன்னால்..

நான், அமர்ந்திருக்கும் அம்மாவின் கைகளில் இருந்து விடுபட்டு நான்கடி தள்ளி அமர்ந்திருக்கும் என் ஆச்சியின் நீட்டிய கைகளில் தள்ளாடி நடந்து சேர்கிறேன். எதையோ சாதிப்பது போன்ற சிரிப்புடன் மீண்டும் அவரிடமிருந்து அம்மாவின் கைகளுக்கு. அவர்களும் கூட ஆர்ப்பரித்ததாய் ஞாபகம். ஆமாம், அதற்கும் முன்னால் என்றோ ஓர்நாள்.. அது நினைவிலிருக்கிறது,

“ஊஊஊஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… காத்து உங்கம்மாவ தூக்கிட்டுப் போவப்போவுது.. ஐய்ய்யோ..”

காற்றும் கொஞ்சம் வேகமாகத்தான் அடிக்கிறது. அந்த வார்த்தையிலிருந்த அர்த்தம் புரிந்ததோ, உணர்வு புரிந்ததோ, அல்லது நிஜமாகவே பயம்தானோ.. சொன்னவரை அடிக்க கையை வீசியபடியே அம்மாவின் இடுப்பிலிருந்தபடியே சத்தமாக அழத்துவங்குகிறேன்.

.

20 comments:

ILA(@)இளா said...

பொஸ்தவம் போடப்போறீங்களா?

மதுரை சரவணன் said...

நினைவலைகள் நிஜமாகத்தான் உங்கள் எழுத்துக்களைப் படித்தவுடன் பின் நோக்கிச் செல்கிறது. வாழ்த்துக்கள்

சுசி said...

சுபா தரும் மலரும் நினைவுகளா ஆதி..

ராமலக்ஷ்மி said...

நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடிந்திருப்பது அருமை.

நாய்க்குட்டி மனசு said...

ஆதி, நல்லா எழுதி இருக்கிறீங்க, வாழ்த்துக்கள்
எனக்கும் கூட மூன்றாம் வகுப்பில் (நானும் என் தாய் மாமனும் ஒரே வகுப்பில் ) படிக்கும் போது எங்கள் சித்தி பிரசவத்தில் இறந்து விட்டார்கள் என்று வகுப்பில் இருந்து கூட்டிப் போனதும் மலர்களுடன் சித்தியை படுக்க வைத்திருந்ததும் ஞாபகம் இருக்கு. அதுக்கு முன்னாடி ம்ம்ம்கும்

Cable Sankar said...

நைஸ்..மேன்.. குட்..

Cable Sankar said...

ஏன் இளா பொஸ்தவம் போடக்கூடாதுங்களா..?:)

Mohan said...

உங்கள் நினைவலைகளை அம்மாவின் வயிற்றுக்குள் இருப்பது வரை பின்னோக்கி சென்றது நன்றாக இருக்கிறது. கடைசியில் இடுப்பு என்பதற்கு பதில் வயிறு என்றிருந்தால் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்குமோ? இல்லை நான் தான் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறானே என்று தெரியவில்லை. உங்கள் மொழி நடை மிகவும் நன்றாக இருக்கிறது.

வானம்பாடிகள் said...

எல்லாரையும் இப்படி நினைத்துப் பார்க்க வைக்கும். குட் ஆதி:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இளா (ஆனாலும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்திங்க).

நன்றி சரவணன்.
நன்றி சுசி.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி கேபிள்.

நன்றி மோகன். (யாரோ மிரட்டுவது, இடுப்பில் இருந்தபடி அவர்களை அடிக்கமுயல்வது, அழுவது எனத் தெளிவாகத்தானே எழுதியிருக்கிறேன்? நான் கற்பனை கலக்காமல் பதிவுகளெழுதுவது அரிது. இது அதிலொன்று. நிஜமாகவே என் நினைவில் 8 வயதுக்கு முன்னால் என்னவெல்லாம் நினைவிலிருக்கிறது என யோசித்ததில் முதல் கட்டமாக தோன்றியது இவை மட்டும்தான். கைக்குழந்தையாக இருந்தபோது நடந்தது எப்படி ஞாபகம் இருக்கும்? டுபாகூராக தோன்றினாலும் ஆச்சரியம், உண்மை.)

நன்றி வானம்பாடிகள்.

தராசு said...

நாஸ்டால்ஜியா!!!!!

ரசித்தேன் தல. ஆனா அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருப்பது வரையா???

பாலா அறம்வளர்த்தான் said...

படிப்பவர்களையும் நினைக்க வைத்து விட்டீர்கள்.
மிகச் சிறிய வயதில் நடந்த சில விஷயங்கள் ஞாபகம் இருப்பதாக ஜெயமோகன் கூட சமீபத்தில் எழுதி இருந்தார்.

புன்னகை said...

Nice one! :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை ஆதி.

வி.பாலகுமார் said...

நல்லா இருக்குங்க.

அன்புடன் அருணா said...

நானும் கொஞ்சம் பின்னால் பயணித்துத் திரும்ப முடிந்தது!

விக்னேஷ்வரி said...

‘நச்’ நடை

Karthik said...

ரொம்ப நல்லாருக்கு. நிறைய சின்ன வயசு ஞாபகங்கள் சின்னச்சின்ன ஸ்னாப்ஷாட் போல இருப்பது ஆச்சர்யம்தான். ஒரு காட்சி சில சமயம் ஒற்றைத் துண்டு வசனம். மறுபடியும், ரொம்ப நல்லாருக்கு.

மறத்தமிழன் said...

ஆதி,

டார்டாய்சை சுத்தீட்டங்க...

நல்ல முயற்சி...

அப்பா பத்தி எதுவும் நினைவலைகளில் வரவில்லையா ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தராசு.
நன்றி பாலா.
நன்றி புன்னகை.
நன்றி டிவிஆர்.
நன்றி பாலகுமார்.
நன்றி அருணா.
நன்றி விக்கி.

நன்றி கார்த்திக். (சரியாச் சொன்னீங்க.)

நன்றி மறத்தமிழன்.