Sunday, July 18, 2010

ஆனந்தபுரத்து சுவாரசியம்

வழக்கமான கமர்ஷியல் ‘அரைத்தமாவி’லிருந்து கொஞ்சம் விலகியிருப்பதாலேயே நம் பாராட்டும் லிஸ்டில் ‘ஆனந்தபுரத்து வீடு’ வருகிறது. தற்போதைய பார்க்கவேண்டிய லிஸ்டில் ‘மதராசபட்டினத்’துக்கு அடுத்த இரண்டாவதும் கடைசியுமான படம். பார்த்தாயிற்று.

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சென்ற நமக்கு ஒரு சுவாரசியமான சினிமா. பெரிய பிஸினஸ் சீட்டிங்கில் தாக்கப்பட்ட ஹீரோ, குடும்பத்துடன் ஊரிலிருக்கும் சொந்த வீட்டுக்கு தப்பிச்செல்கிறார். அங்கும் வில்லன்களின் துரத்தல். சிற்சில சுவாரசியங்களுக்குப் பின் அந்தப் பிரச்சினையிலிருந்து அவரை காப்பாற்றுகின்றனர் அந்த வீட்டில் ஆவியாக வாழ்ந்துவரும் அவரது பெற்றோர். சுபம்.

AananthapurathuVeedu2

ஆவி கதை என்றாலும் சரி, அல்லது வேறு என்ன மாதிரியான டுபாகூர் கதைகள் என்றாலும் சரி, சுவாரசியமாக சொல்லப்படுவதுதான் முக்கியம். இவ்வளவுக்கும் வில்லன்களை ரத்தம் கக்க வைப்பது, திடும் திடுமென பின்னணி இசையோடு திடுக்கென தோன்றி ரசிகர்கள் வயிற்றைக் கலக்குவது போன்ற எந்த பிரச்சினையும் இல்லை. அழகாக சமையல் செய்துவைப்பது, பால் காய்ச்சுவது, துணி துவைத்துப்போடுவது, நாற்காலியில் ஆடுவது, மிஞ்சிப்போனால் கைத்தடியை பறக்கச்செய்வது, கதவு, ஜன்னல்களை டப் டப்பென திறந்து மூடுவதோடு வேலையை சிம்பிளாக முடித்துக்கொள்கின்றன ஆவிகள். கதையின் முக்கிய சிக்கலை விடுவிப்பதே ஒரே ஒரு SMS, மற்றும் கிளைமாக்ஸில் பணப்பெட்டியை திறந்துகாட்டுவது என எளிமையாக முடிந்துவிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எந்த திடுக்கிடும் சம்பவங்களும் இல்லை.

ஆனால் இன்னொரு நல்ல விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். இந்த ஆவி விஷயத்தை கொஞ்சம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சொல்லப்படும் திரைக்கதை மிகவும் லாஜிக்கலாகவும், இயல்பாகவும் இருக்கிறது. எக்ஸ்போர்ட் ஏஜெண்டால் ஒரு மிகப்பெரிய தொகை ஏமாற்றப்பட்ட ஹீரோ செய்வதறியாது கடன்காரர்களுக்குப் பயந்து, நண்பனை சமாளிக்கச் சொல்லிவிட்டு/ பணம் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு ஓடிப்போகிறார். அதை மனைவியிடம் மறைத்து வெகேஷனில் இருப்பதைப்போல நடிக்கிறார். பின்னாலேயே பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் ஓடிவருகிறான் நண்பன். வில்லன்களும் தேடிக்கண்டு பிடித்து வந்துவிடுகிறார்கள். இவர்களை ஹவுஸ் அரெஸ்டில் வைத்துவிட்டு பணம் ஏற்பாடு செய்யச்சொல்கிறார்கள். விஷயம் தெரிந்து மனைவி முதலில் டென்ஷனாகி பின்பு ‘என் நகை, பிளாட், பாங்க் பாலன்ஸை வைத்து சமாளிக்கலாம்.. முதலில் சென்னை கிளம்பலாம் வாங்க’ என்று கிளம்பவும், அதையும் உள்ளே போட்டுவிட்டேன் என்று கூறி விழிக்கிறார். பல வழிகளில் முயற்சித்துவிட்டு இயலாமையின் ஒரு கட்டத்தில் அழுதே விடுகிறார். மிரட்டும் வில்லனிடம் ‘சார், சார்..’ என்று பின்னாலேயே செல்கிறார். பூர்வீக வீட்டை விற்பதுதான் ஒரே வழி என்று அதற்கு முயற்சித்தால் ஆவி பெற்றோரின் அழிச்சாட்டியங்கள் வேறு.

இப்படி சினிமாத்தனங்களே இல்லாமல் இயல்பாக செல்கிறது கதை. வில்லனும் கூட எப்போதாவது மனைவியை தூக்கிச் சென்றுவிடுவேன் என்று லைட்டாக சினிமா வில்லன் போல பேசினாலும், பொதுவாக ஊய் ஊய் என்று கத்துவதில்லை. பணம் ஏற்பாடு செய்ய ஓரளவு டைம் தருகிறார். சும்மா சும்மா யாரையும் அடித்துக் கொடுமைப் படுத்துவதில்லை. ரெண்டு அடியாள்தான் வைத்துக்கொண்டிருக்கிறார். வந்த இடத்தில் அங்குமிங்கும் போய்வர ஹீரோவின் காரை மட்டும் கேட்டுவிட்டு எடுத்துச் செல்கிறார். கடைசியில் பணம் கிடைத்ததும், அவர் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நல்ல பிள்ளையாக கைகொடுத்துவிட்டு போய்விடுகிறார். இவ்வளவுக்கும் அவரைப் பார்த்தாலே ஏதும் செய்துவிடுவாரோ என்று நமக்கு பயமாகவேதான் இருக்கிறது.

Anandhapurathu_Veedu_2

மெயின் காரெக்டர்களில் நந்தா சிறப்பான பங்களிப்பு. ஹீரோயின் என்றாலே இளமை கொப்பளிக்க, குத்தாட்டம் போடவேண்டும் என்றில்லாமல், பக்கத்துவீட்டுப் பெண்ணைப் போன்ற இயல்பான தோற்றத்தில் அழகாக காரெக்டரோடு பொருந்தியிருக்கிறார் சாயாசிங். இவர்களுக்கிடையே ஒரு கியூட் குழந்தை ஆனந்தாக ஆர்யன். ரசனையான வட்டாரமொழி வழக்குடன் வேலைக்காரியாக கலைராணி. கன்னக்குழியுடன், பப்ளிமாஸ் போன்ற வில்லன் மேகவர்ணபந்து (அவருக்கு அட்டகாசமாக டப்பிங் தந்திருப்பது மோகன்ராம்). நண்பனாகவும், பணத்தாசையில் டபிள்கேம் ஆடும் துரோகியாகவும் (நான் சஸ்பென்ஸை உடைக்கவில்லை, படத்திலும் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்) வரும் கிருஷ்ணா. இன்னும் சின்னச்சின்ன காரெக்டர்களில் வரும் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளன.

திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, பாடல்கள், கதைக்கு உதவாத க்ளஸ்ட்ரோபோபியா போன்ற சின்னச்சின்ன குறைகள் இல்லாமலில்லை. என்ன.. S பிக்சர்ஸில் பட்ஜெட்டில் கறாராக இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. சில காட்சிகளில் சிஜி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கொஞ்சம் சுமார் ரகமே, மேலும் பெரும்பாலும் நாற்காலி ஆடுவது, கதவு சாத்தப்படுவது, சொம்பு நகர்வது என தாத்தா காலத்து ட்ரிக்குகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்திரன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் டீமின் லேஸான கடைக்கண் பார்வை படத்தின் மேல் கொஞ்சூண்டாவது விழுந்திருக்கலாம் இந்த விஷயத்தில். :-))

தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களில் யாராவது மட்டமாக பண்ணியிருந்தால்தான் இனிமேல் ஆச்சரியப்படவேண்டும். எவ்வளவு மொக்கையான படமாக இருந்தாலும் நம் ஒளிப்பதிவாளர்கள் மட்டும் சோடை போவதேயில்லை. சமீபத்திய உதாரணம் ‘ராவணன்’. இந்தப்படத்திலும் அவ்வளவு அழகான ஒளிப்பதிவைச் செய்திருப்பவர் அருள்மணி. வித்தியாசமான, சுவாரசியமான ஒரு படத்திற்காக ‘நாகா’ மற்றும் குழுவினருக்கு நம் பாராட்டுகள்.

.

17 comments:

Anonymous said...

//வில்லன் மேகவர்ணபந்து//
பேரே அமர்க்களமா இருக்கு. பாக்கறமாதிரித்தான் இருக்குங்கறீங்க

நேசமித்ரன் said...

என்ன ஃப்ளோ ?!

தமிழ் அமுதன் said...

சரி..பார்த்துடுவோம்...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்துடுவோம்

அன்புடன் அருணா said...

அட பார்க்கலாம் போலிருக்கே!!!!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

கொழப்புரீன்களே....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஒரு தடவ பாக்கலாமா...?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//மேகவர்ணபந்து// வெள்ளை நிறத்தில் இருப்பாரோ....?

மகேஷ் : ரசிகன் said...

// அழகாக சமையல் செய்துவைப்பது, பால் காய்ச்சுவது, //

அதானே... படம் ஏன் பிடிக்காது உங்களுக்கு?

உங்கள் ஏக்கம் புரிகிறது.

டம்பி மேவீ said...

தாம்பரம் பக்கம் இன்னும் வரவில்லையே ..நீங்க எங்க பார்த்தீங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

same blood naa... :-)
padathudaiya technical crew-vin work simply superb.. from the title car, intervel card, end title card ellaam kooda nalla creativity irukkillaiyaa?

Cable Sankar said...

நான் சொன்னபடி இருந்திச்சா..? :)

வவ்வால் said...

"Bhoothnath" appadinu oru hindi film amithab hero-good ghost aga nadithiruppar, kooda juhi,sharuk ,oru kuttipayan undu.

Set max la padam potta paarkkavum.

சி.பி.செந்தில்குமார் said...

க்ளஸ்ட்ரோபோபியா கதைக்கு உதவலைனு சொல்ல முடியாது,அந்த நோய் சாயாசிங் கிட்ட இருந்து நந்தாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகறது திரைக்கதையில் முக்கியம்தான்

Thenral said...

Neththu sun tv thiraivimarsanam parthen.paarththathum nichayam padam paakkanumnu tonichu.neenga vera ivlo nalla solli irukkinga.Paathuruvom."S"pictures eppovume oru different movie koduppaanganu nambikkai orukulla....!Adhai kaapaathittaanga pola!

தராசு said...

இத்தனை படம் பார்க்க உங்களுக்கு நேரம் இருக்கா தல.????

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.